Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 29 of 40 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 34 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 29 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue 5 Jul 2016 - 14:14

#665
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப்படும்

உரையாசிரியர்களும் அகராதியும் இங்கே "வீறு" எனப்படும் சொல்லுக்கு "சிறப்பு" என்ற பொருள் சொல்வதைக்காணலாம்.

ஆனால், "மாண்டார்" என்று மீண்டும் அதே சொல் வருவதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அதாவது, கிட்டத்தட்ட, "சிறப்பு எய்தி சிறப்படைந்தார்"  Laughing அவ்வளவு உவப்பாக இல்லை Smile

உள்ள ஏழு சொற்களில் ஒன்றை வீணாக்க வள்ளுவர் விரும்புவாரா தெரியவில்லை. ஆதலால், "வீறு" என்பதற்கான இன்னொரு பொருளை - "வெற்றி" என்பதை - உரிமையோடு எடுத்துக்கொள்கிறேன்.

செயலை உறுதியுடன் செய்து முடிப்பது தானே வெற்றி? அது தானே வினைத்திட்பத்தின் விளைவு? "எய்துவதற்கான" குறி / இலக்கு?

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம்
(செயலை முடித்து, அவ்வாறாக அதில்) வெற்றி அடைந்து மாண்பு பெற்றவரின் செயல் உறுதி

வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப்படும்
வேந்தனிடத்திலும் சென்று சேரும், எண்ணப்படும்!
(அரசன் வரை பெருமை சென்றெட்டும், எல்லாராலும் மதிக்கப்படும்)

விவிலியத்தில் உள்ள ஒரு நீதிமொழி :
தம் அலுவலில் திறமை காட்டுகின்ற ஒருவரைப் பார்; அவர் பாமர மனிதரிடையே இரார்; அரசு அவையில் இருப்பார்

இன்னொரு மொழிபெயர்ப்பு :
தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்

Smile


Last edited by app_engine on Tue 5 Jul 2016 - 14:24; edited 4 times in total

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 29 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue 5 Jul 2016 - 14:19

665 என்பது எண்ணிக்கை அளவில் திருக்குறளின் "நிலநடுக்கோடு" Smile

அதாவது, பாதிக்கிணறு. அரை நூல் படித்திருக்கும் நிலை!

இதற்கு மூன்று ஆண்டுகளா என்று எண்ணினால் வெட்கமாக இருக்கிறது.

ஆகையால், இன்று முதல் நாள்தோறும் 2 அல்லது 3 குறள்கள் படிப்பதாக முடிவு! 

மீதி உள்ள 665-ஐ ஒரே ஆண்டில் முடிக்க முனைகிறேன்!

(சொல்லுதல் யார்க்கும் எளிய... rotfl )

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 29 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed 6 Jul 2016 - 11:06

#666
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் 
திண்ணியர் ஆகப் பெறின்

நம்மில்  பலருக்கும் பள்ளிக்காலத்தில் அறிமுகமான, அழகான, ஓசை நயம் கொண்ட குறள். 

மோனையும் எதுகையும் கொஞ்ச, சொற்சிலம்பமும் உண்டு.

அதே போல், அதிகாரத்தின் பொருளை வலுப்படுத்தும் கருத்தும் உண்டு.

எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்
(ஒரு செயலைச் செய்ய) எண்ணியவர் அதிலே உறுதி உள்ளவராக இருந்தால் 

எண்ணிய எண்ணியாங்கு எய்துப
நினைத்ததை நினைத்தது போலவே அடைவார்!
(எப்படி நிறைவேற வேண்டும் என்று எண்ணினாரோ அப்படியே நிறைவேறும்)

மன உறுதியும் செயல் உறுதியும் உள்ளவருக்கு மட்டுமே வினைகளைச் செயல்படுத்தி முடிக்கும் ஆற்றலும், நிறைவேற்றிய மன நிறைவும் கிடைக்கும். 

சின்னச்சின்ன முட்டுக்கட்டைக்கெல்லாம் துவண்டு போகும் ஆட்களுக்கு இப்படிப்பட்ட நிறைவு கிடைக்காது.

விடாமுயற்சியும் வினைத்திட்பமும் உடன்பிறப்புகள் Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 29 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed 6 Jul 2016 - 15:06

#667
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு 
அச்சாணி அன்னார் உடைத்து

இதுவும் நன்கு அறிமுகமான குறள். 

தேரின் படத்துடன் பாடநூலில் விளக்கம் இருந்ததாக நினைவு Smile  வண்டி எவ்வளவு பெரிதென்றாலும், சிறிய அச்சாணி இல்லையேல் ஓட இயலாது. ஆக, உருவில் சிறியது என்று அச்சாணியை இழிவாக நோக்கக்கூடாது.  (மாட்டு வண்டி என்றாலும் ஓடும்போது அச்சாணி கழன்றாலோ / உடைந்தாலோ விளைவுகள் கொடுமையாக இருக்கும்).

இந்த உவமை "சிறிய உருவத்தினன் அல்லது சிறுமையான பணி செய்கிறவன்" என்று யாரையும் இகழக்கூடாது என்ற அளவில் நேரடிப்பொருத்தமே. 

என்றாலும், "வினைத்திட்பம்" என்ற அதிகாரத்தில் ஏன் வைத்தார் என்று ஆழ்ந்து எண்ண வேண்டியிருக்கிறது.

நம் நிலை பெரிதோ சிறிதோ என்ன என்றாலும், அச்சாணி போல உறுதியுடன் இருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் அறிவுரை. 

அமைச்சருக்கு? 

செயலில் உறுதியாக இருக்க விரும்பும் அமைச்சர், எல்லா நிலைகளில் உள்ளோரையும் அரவணைக்க வேண்டும். மேலும், ஒவ்வொருவரும் ஏன் தேவை என்பதை  மிகத்துல்லியமாக அறிந்திருக்கவும் வேண்டும். 

அதுவே எடுத்த பணியை வெற்றியுடன் முடிக்க வழி!

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்
உருவத்தைப் பார்த்து (சிறியவன் என்று) இகழக்கூடாது

உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து
உருண்டோடும் பெரிய தேருக்கு (மிகத்தேவையான ஆனால் சிறிய) அச்சாணி போன்றோர் உள்ளனர்

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 29 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu 7 Jul 2016 - 12:18

#668
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது 
தூக்கங் கடிந்து செயல்

வினைத்திட்பத்தின் "வரையறைக்குறள்" இப்போது தான் வருகிறது எனலாம் Smile

"செயலில் உறுதி" என்ற இந்தப்பண்பின் அடிப்படையான பகுதிகள் :

1. முன்னெச்சரிக்கை  - செயலைத் தேர்வு செய்யும் பொழுதே ஆராய்தல்; குழப்பம் இல்லாமல் தெளிவாக இருத்தல்; வரக்கூடிய இடையூறுகள் குறித்த தெளிவான பார்வை - இன்ன பிற.

2. தொய்வின்மை / விடாமுயற்சி - செயலுக்கு வரும் முட்டுக்கட்டைகளால் தளராமல் முன் செல்தல் 

3. மனத்திட்பம் / உள்ளுக்குள்ளே இருக்கும் ஊக்கம் - காலத்தை வீணாக்காமல், தாமதம் செய்யாமல், ஊக்கத்துடன் உழைப்பது. தொடங்கும் போது இருக்கும் ஆர்வம் செயலின் முடிவு வரை விடாமல் இருப்பது Wink

இவை எல்லாமே இந்தக்குறளில் தொகுக்கிறார் - அதாவது, கிட்டத்தட்ட அதிகாரம் முடியும் பொழுதில்.

கலங்காது கண்ட வினைக்கண்
குழப்பமின்றித் தெளிவாக் கண்டறிந்த செயலில்

துளங்காது தூக்கங்கடிந்து செயல்
சோர்வில்லாமல் காலம் தாழ்த்தாமல் செயல்பட வேண்டும்

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 29 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu 7 Jul 2016 - 15:23

#669
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி 
இன்பம் பயக்கும் வினை

நேரடியான பொருள். 

"உறுதி" என்றால் என்ன என்பதன் அடிப்படையில் எழுதப்பட்ட எளிதான செய்தி.
("என்ன மழை புயல் வந்தாலும் ஆடாது" என்று கட்டிடத்தின் உறுதிக்குச் சான்றாகச் சொல்வார்கள் அல்லவா? அது போன்றது)

துன்பம் - இன்பம் என்று எதிர்ச்சொல் கொண்டுள்ள எதுகை எல்லாம்  அருவி போல் கொட்டுவது வள்ளுவத்தில் எப்போதும் பார்ப்பது தான். வியப்பொன்றும் இல்லை Smile

பொதுவாக அதைக் கரித்துக்கொட்டும் வள்ளுவர் இங்கே "இன்பம்" என்ற சொல்லை நேர்மறையாகப் பயன்படுத்தி இருக்கிறார்! 

மகிழ்ச்சி Smile

இன்பம் பயக்கும் வினை
(முடிவில்) இன்பம் தரும் வினையை

துன்பம் உறவரினும்
(செயலாற்றும் பொழுது) மிகுதியான துன்பம் வந்தாலும் 

செய்க துணிவாற்றி
துணிவுடன்  மேற்கொண்டு செய்யுங்கள் (தளர்ந்து விடாமல் உழையுங்கள்)

நற்செயலில் ஈடுபடுவோருக்கு இடையூறுகளும் துன்பங்களும் கண்டிப்பாக வரும் என்பது நடைமுறை.

ஆனால், துணிவு என்ற பண்பு இருந்தால் செயலை வெற்றிகரமாக முடிக்கவும் அப்படியாக இன்பம் காணவும் இயலும். வினைத்திட்பம் வருவது உள்ளத்தில் துணிவு உள்ளபோது தான்.  

("துணிவே துணை" - தமிழ்வாணன்)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 29 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri 8 Jul 2016 - 11:07

#670
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் 
வேண்டாரை வேண்டாது உலகு

செயல் வன்மை இல்லாதோருக்கு வேறு என்ன வலிமை / உறுதி / திட்பம் இருந்தாலும் அதற்கு மதிப்பு இருக்காது என்ற நடைமுறை உண்மையை இங்கே படிக்கிறோம்.

"வேண்டாது உலகு" - அப்படிப்பட்ட பயனற்ற திட்பங்கள் / உறுதிகள் / வலிமைகளை உலகத்துக்கு வேண்டாம்.  ஆகவே, அவற்றுக்கு விலையில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். 

"நான் அப்படியாக்கும், இப்படியாக்கும்" என்பவர்களிடம், "அதெல்லாம் சரி, இது வரை என்னென்ன செய்து முடித்திருக்கிறாய்?" என்று தான் கேட்பார்கள். இது தான் உலக நடைமுறை.

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும்
(வேறு) என்ன விதமான உறுதியை அடைந்திருந்தாலும் 

வினைத்திட்பம் வேண்டாரை
செய்யும் செயலில் உறுதி / வன்மை இல்லாதோரை 
(உறுதியாய் ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழக்கம் இல்லாதோரை)

வேண்டாது உலகு
உலகம் விரும்பாது
(அப்படிப்பட்டோரால் உலகுக்கு ஒரு பயனும் இல்லை)

அருமையான மேலாண்மைப்பாடம் இந்தக்குறள்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 29 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri 8 Jul 2016 - 17:25

#671
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு 
தாழ்ச்சியுள் தங்குதல் தீது
(பொருட்பால், அமைச்சியல், வினை செயல் வகை அதிகாரம்)

திட்டங்கள் செயல்படுத்துவதில் உள்ள இரண்டு பெரும் பகுதிகளை இந்தக்குறள் அடக்கி இருக்கிறது.

ஆராய்தல் நிலை மற்றும் செயல்படுத்துதல் நிலை.

பல திட்டங்களும் திங்கள் கணக்கிலும் ஆண்டுக்கணக்கிலும் கூட "ஆராய்தல்" நிலையியேலே உழலும் அவலம் நான் நேரடியாகக் கண்டிருக்கிறேன். ("ஆராய்ந்து ஆராய்ந்து முடிவில் செயலற்ற பக்கவாதம் போன்ற நிலை" என்று இதை ஏளனம் செய்வது ஆங்கிலத்தில் வழக்கம்)

ஒரு வழியாக இந்நிலை கடந்து திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்ற துணிவு வந்தாலும் அதன் பின் மந்த நிலையிலேயே மீண்டும் திங்கள் கணக்கில் / ஆண்டுக்கணக்கில் நகராமல் கிடப்பவையும் உள்ளன.

இவை இரண்டாலும் நல்ல பலன் இல்லை Sad 
(திட்டமிடல் குழுவினர் மட்டும் தங்களுக்குக் கொஞ்சம் வருமானம் பார்த்தார்கள் என்பதைத் தவிர Laughing )

வள்ளுவர் நேரடியாக இந்த இரண்டையும் தாக்கும் செய்யுள் தான் இது!

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்
ஆய்வுகள் (அந்த வினையை செயல்படுத்துவதற்கான) துணிவை முடிவாக அடைய வேண்டும் 
(தகுதி இல்லையென்றால் தூக்கிப்போட்டு விட்டு அடுத்த திட்டத்தை ஆராயுங்கள். செய்வதற்கான துணிவை எட்டாத ஆய்வினால் பலன் இல்லை)

அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது
அந்தத்துணிவை (செயல்படுத்தாமல்) காலந்தாழ்த்தி நின்று கொண்டிருத்தல் தீமை ஆகும்!

நேரடியாக நமது அமைச்சர்களுக்கான அறிவுரை என்று கொள்ளலாம். 
(மேலும் திட்ட மேலாளர்கள் -  குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளோர்- தலைக்கு வைக்கும் கூட்டு என்றும் புரிந்து கொள்ளலாம்)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 29 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon 11 Jul 2016 - 11:14

#672
தூங்குக தூங்கிச்செயற்பால தூங்கற்க 
தூங்காது செய்யும் வினை

தூங்குதல் = காலம் தாழ்த்துதல், காத்திருந்து அல்லது சற்றே நிறுத்தி (மீண்டும் தொடங்குதல்)
("உடல் அளவிலான உறங்குதல்" என்று இங்கே பொருள் இல்லை Laughing )

பொறுமையாகச் செய்ய வேண்டியவற்றை அவ்வாறே செய்ய வேண்டும். விரைவு கூட்டினால் விளைவுகள் உவப்பாக இருக்காது. (எ-டு : கட்டிடம் கட்டும்போது கான்க்ரீட் பதப்பட இத்தனை நாட்கள் என்ற கணக்குண்டு. அந்தக்கால அளவு கொடுக்காவிடில் அதன் வலிமை கேள்விக்குறியாகி விடும்.)

அதே நேரத்தில், விரைவாகச் செயல்பட வேண்டிய செயல்களில் காலம் தாழ்த்துதல் கொடிய விளைவுகளை உண்டாக்கும். உயிர் இழப்பு வரை தீய விளைவுகள் இருக்கலாம். 
(உரிய நேரத்தில் மதகுகள் திறக்காமல் உடைப்பு அல்லது வெள்ளம் & உயிர்கள் சேதம் - இவை அவ்வப்பொழுது உலகெங்கும் நடக்கும் அவலங்கள். அமைச்சர்களுக்கு இங்கே காலம் தாழ்த்தாமல் வினை செய்வதற்கான கடமை இருக்கிறது)

அப்படியாக, நேரடியான பொருள் தரும் இந்தக்குறள் பலருக்கும் பள்ளிப்பாடங்களில் அறிமுகமான ஒன்று தான்.

தூங்குக தூங்கிச்செயற்பால
காலம் தாழ்த்தி - நிறுத்திப்பொறுமையாகச் - செய்ய வேண்டியவற்றைக் காலம் தாழ்த்திச்செய்யுங்கள் 

தூங்கற்க தூங்காது செய்யும் வினை
காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டிய செயல்களை விரைவாகச் செய்யுங்கள் - தூங்க வேண்டாம்

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 29 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon 11 Jul 2016 - 16:01

#673
ஒல்லும்வாயெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் 
செல்லும்வாய் நோக்கிச் செயல்

கொஞ்சம் குழப்பமாக இருப்பதால் உரையாசிரியர்கள் தத்தம் மனதில் பட்ட விளக்கம் தருவதைக்காண முடிகிறது.

நேரடியான பொருளை முதலில் பார்ப்போம், பின்னர் என்ன விளக்கம் மிகப்பொருத்தம் என்று தீர்மானிக்கலாம்.

வினை செயல்வகை அதிகாரம் என்பதை மனதில் கொள்வோம்  Smile

ஒல்லும்வாயெல்லாம் வினைநன்றே
இயன்ற வழியில்  (அல்லது பொருத்தமான வழியில்) செயல் புரிவது நன்றே

ஒல்லாக்கால்
முடியா விட்டால்

செல்லும்வாய் நோக்கிச் செயல்
செல்லக்கூடிய வழியைப் பார்த்து செயல்பட வேண்டும்

பல உரையாசிரியர்களும் அகராதியும் கூட "ஒல்லுதல்" என்பதை "இயலுதல்" என்ற பொருளிலேயே எடுத்துக்கொண்டு செல்வதால், "இயலா விட்டால்" என்று வரும்போது குழப்பம் வரத்தான் செய்யும்.

ஆனால், "பொருத்தமான" என்று எடுத்துக்கொண்டால் நிலைமை உடனே மாறுகிறது! 

"செயல் புரிகையில், இயன்ற மட்டும் பொருத்தமான வழியில் செய்யுங்கள். அந்த வழி நடைமுறை இல்லாத நேரத்தில், எது நடைமுறையோ (செல்லும் வாய்), அப்படி செயல்படுத்துங்கள்." - இப்படித்தான்  வள்ளுவர் சொல்ல வருகிறார் என்று எனக்குப்படுகிறது.

அதாவது, எல்லா நேரமும் "இது தான் சரியான, மிகப்பொருத்தமான வழி" என்று சொல்லிக்கொண்டு செயலை முடக்கி, நேரத்தை அழிக்காமல் - "ஆகிற வழியைப்பார்" என்று செயல்படுவதையே அமைச்சருக்கு உகந்த பண்பாகச் சொல்கிறாரோ?

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 29 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue 12 Jul 2016 - 13:15

#674
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் 
தீயெச்சம் போலத் தெறும்

மிக அழகான ஒரு உவமை - அரை குறையாக விடப்படும் செயலை "சரியாக அணைக்காமல் விடப்பட்ட நெருப்பு போல" என்று ஒப்பிடுகிறார்.  சுட்டு விடும் Smile

இன்னொரு அழகு, சுடும் என்பதற்குப் பயன்படுத்தப்படும் சொல் - "தெறும்" என்பது வெப்பத்திற்கு எல்லோரும் பயன்படுத்தும் அறிவியல் பெயர் (தெர்மல் / தெர்மா மீட்டர்) போன்றே இருப்பது விந்தை தான்!

முழுதாக அணைக்கப்படாமல் இன்னும் கனன்று கொண்டிருக்கும் தீ, காற்று உதவும் போது மீண்டும் பரவி அழிவை உண்டாக்கும். 

முழுதாக முடிக்கப்படாத செயலும், முழுதாக அழிக்கப்படாத பகையும் அவ்வண்ணமே - தீங்குக்கு வழி.

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
செயல், பகை - இவை இரண்டிலும் இருக்கும் மிச்சத்தை ஆராய்ந்தால்

தீயெச்சம் போலத் தெறும்
(அவை) தீயின் மிச்சம் போலச் சுடும் (என்று அறியலாம்).

அதாவது, எந்தச்செயலையும் அரைகுறையாக விடாமல் முழுமையாகச் செய்து முடிப்பதே சரியான வினை செயல்வகை! 

அரைகுறையாக விட்டால் பல வழிகளிலும் தீமை விளைவிக்கும்.

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 29 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue 12 Jul 2016 - 17:15

#675
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் 
இருள்தீர எண்ணிச் செயல்

வினை செயல் வகையில் குறிப்பாகச் சிந்திக்க வேண்டிய ஐந்தை இங்கே வரிசைப்படுத்துகிறார் வள்ளுவர்!

1. பொருள்
2. கருவி
3. காலம்
4. வினை 
5. இடம்

இவற்றுள் ஏதாவது ஒன்றில் ஐயமோ குழப்பமோ இருந்தால் செயல்பாடு முடங்கும். 

(தெளிவாக இருந்தாலும் இவற்றுள் வேண்டியவை / வேண்டிய அளவு கிடைக்கவில்லை என்றாலும் முடங்கும் என்பது வேறு. Laughing ஆனால், என்னென்ன வேண்டும் என்பதில் திட்டமிடும்போது ஐயம் கூடவே கூடாது என்கிறார்)

ஆக, எளிமையான குறள்!

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
வினை செயல்படத்தேவையான பொருள் மற்றும் கருவிகள், தக்க காலம், வினையின் வரையறை, தகுந்த இடம் ஆகிய இவை ஐந்தும் குறித்து 

இருள்தீர எண்ணிச் செயல்
ஐயம் / குழப்பம்  இல்லாமல் தெளிவாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 29 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed 13 Jul 2016 - 15:09

#676
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் 
படுபயனும் பார்த்துச் செயல்

பயன் தெரியும், அது என்ன படு பயன்? 
(கொலை < படுகொலை என்பது போல "மிகையான / கொடுமையான பயன்" என்று பொருளா? Laughing )

படுதல் என்பதற்குள்ள பல பொருள்களில் "உண்டாகும் / ஏற்படும்" என்ற பொதுவான / எளிய ஒன்றும்  இருக்கிறது. (பட்டறிவு என்று சொல்கிறோமே, படுவதால் உண்டாகும் அறிவு / அனுபவம்)

அப்படியாக, செயலின் விளைவாக ஏற்படும் / உண்டாகும் / உருவாகும் பயன் என்று பொருள் கொள்ள வேண்டும்.

செயல் புரிகையில் எவற்றை எல்லாம் நன்கு உணர்ந்து ("பார்த்துப்பார்த்து") செய்ய வேண்டும் என்று சொல்லும் குறள்.

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் 
செயலை எப்படி முடிப்பது, அதற்கு என்னவெல்லாம் இடையூறுகள், முடிவை அடையும் போது அங்கே

படுபயனும் பார்த்துச் செயல்
உண்டாகும் பயன் - இவற்றை எல்லாம் நன்கு ஆய்ந்து செயல்பட வேண்டும்

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 29 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon 18 Jul 2016 - 11:36

#677
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை 
உள்ளறிவான் உள்ளம் கொளல்

நிறுவனங்கள் கோடிக்கணக்கில் செலவு செய்யும் "பயிற்சித்துறை" திருக்குறளிலும் இருக்கிறது Smile

பயிற்சிக்கென்றே இயங்கும் நிறுவனங்கள் இந்தக்குறளை வைத்து விளம்பரம் செய்யலாம் Wink

அதாவது, செயல்முறை எப்படி இருக்கவேண்டும் என்று விவரம் அறிந்தவரிடம் இருந்து கற்றுக்கொள்வது தேவை என்கிறார் வள்ளுவர். 

செய்வினை செய்வான் செயன்முறை
செயலைச் செய்கின்றவன் செய்வதற்கான முறையை 
(எப்படிச்செய்வது சரி என்று)

அவ்வினை உள்ளறிவான்
அந்தச்செயலில் உட்படுவன குறித்த அறிவுள்ளவன்

உள்ளம் கொளல்
உள்ளத்தில் இருந்து பெற வேண்டும் 
(அவனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும்)

இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை - முன்னமே செய்து அறிந்தவரிடம் கற்றுக்கொள்வது அறிவுடைமை. நிறைய நேரம் சேமிக்கவும், தவறுகள் தவிர்க்கவும் இது உதவும் என்பது நடைமுறை. 

என்றாலும், அவற்றை அப்படியே கண்மூடித்தனமாகப் பின்பற்றாமல் "இதை விடவும் உயர்ந்த வழிகள் உள்ளனவா" என்று சிந்திப்பது அதிலும் மேன்மை Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 29 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon 18 Jul 2016 - 13:55

#678
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் 
யானையால் யானை யாத்தற்று

வேதியியல் வினைகளில், "உடன்-விளை-பொருள்" இருப்பது அறிந்ததே. 

சில நேரங்களில் அது வேண்டியதாகவும் சில நேரங்களில் வேண்டாததாகவும் இருக்கலாம். 

தாவரங்கள் உணவு உண்டாக்கும் பொழுது வெளியிடும் உயிர் வளி உடன் விளை பொருள் என்றும் கொள்ளலாம், அது தான் முதல் விளை பொருள் என்றும் சொல்லலாம். அவ்வளவு இன்றியமையாத ஒன்று.

அப்படியாக, ஒரு செயல் செய்கையில் இன்னொன்றையும் செய்து விடுவதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இறைவன் வடிவமைத்த "ஒளிச்சேர்க்கை":.

திறமையான செயல் வகை என்பது, இப்படி ஒரு செயல் செய்யும்போதே வேறொரு செயலையும் நடத்தி முடிப்பது. 

அதை அழகான ஒரு உவமையுடன் வள்ளுவர் சொல்லுகிறார் இங்கே :

கன்னத்தில் மதநீர் நனைந்த யானையைக்கொண்டு இன்னொரு யானையைப் பிடித்தல் இவ்வாறு இரண்டு செயல்கள் என்பதாக வள்ளுவர் சொல்லுகிறார்.
(மதயானைக்கும் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும், உடையவனுக்கும் இன்னொரு யானை கிட்டும்).

(நனை கவுள் என்பது குறித்து வலையில் தேடியபோது தான் இப்படி "மத யானைக்குக்  கன்னத்தில் வடிதல்" குறித்துப்படித்தேன். இதற்கு முன் அறியாத ஒன்று)

வினையான் வினையாக்கிக் கோடல்
ஒரு செயல் செய்கையில் இன்னொரு செயலையும் (கூடவே) நிறைவேற்றுதல் 

நனைகவுள் யானையால் யானை யாத்தற்று
(மத நீர்) கன்னத்தில் நனைந்த யானையால் (இன்னொரு) யானை பிடிப்பது போன்றதாகும்.

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 29 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue 19 Jul 2016 - 11:09

#679
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே 
ஒட்டாரை ஒட்டிக்கொளல்

வினைசெயல் வகையில் எதற்கு முதன்மை கொடுக்க வேண்டும் என்ற அரிய தகவல் இங்கே கிடைக்கிறது.

ஆட்களைக் குறித்து இங்கே சொல்கிறார் என்றாலும் சூழ்நிலைக்கும் / எதிர்ப்படும் சிக்கல்களுக்கும் அதைப்பொருத்தலாம் - நல்ல மேலாண்மைப்பாடம் Smile

முதலில் பொருள் பார்ப்போம் :

ஒட்டாரை ஒட்டிக்கொளல்
பகைவர்களோடு (எதிர்ப்பவர்களோடு) ஒட்டிக்கொள்வது 
(பொருந்திக்கொள்வது)

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
நண்பர்களுக்கு நன்மை செய்வதை விட விரைந்து (அல்லது, அதற்கு முன்பே) செய்யப்பட வேண்டும்

அமைச்சர்கள் தங்களோடு ஒத்துப்போகாதவர்களை முதலில் சரி செய்ய வேண்டும் / பொருத்தப்பட வேண்டும். அப்போது தான் வினை செயல் நன்றாக நடக்கும். 

வேண்டியவர்களுக்கு நன்மை செய்வதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம், விரைவு தேவையில்லை என்பது அரிய கருத்து.

மேலாண்மையில், சிக்கல்கள் / எதிர்ப்பான சூழ்நிலைகள் என்பன முதலிடம் கொடுத்துத் தீர்க்கப்பட வேண்டும். எளிதில் நடப்பவற்றைச் செய்வதில் பெரிய திறமை தேவை இல்லை அல்லவா? (யாரும், எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் தானே?)


Last edited by app_engine on Tue 19 Jul 2016 - 23:34; edited 1 time in total

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 29 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue 19 Jul 2016 - 19:01

#680
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் 
கொள்வர் பெரியார்ப் பணிந்து

"கப்பம் கட்டுதல்" சில நேரம் தேவை என்பதை மன்னனுக்குச் சொல்லும் பொறுப்பு அமைச்சருக்கு உண்டு என்று வள்ளுவர் சுட்டும் குறள் Laughing

தன்னைக்கால் வலியவன் படையெடுத்து வந்தால், தோல்வி உறுதி என அறிந்து அஞ்சி நடுங்கும் வேளையில் வீம்பு வேண்டியதில்லை தான் Smile

அப்போது வேண்டிய "வினை செயல் வகை" வலியவனைப் பணிந்து கொள்ளுதல் என்று சொல்ல வருகிறார் போலிருக்கிறது.

நம் நாளுக்குப் பொருத்தினால், "இது நம்மால் முடியாத செயல்" என்று நம் குழு அஞ்சும் போது, நம்மிலும் பெரியவர்களைப் பணிந்து (குறையை ஒத்துக்கொண்டு), அவர்கள் சொல்லும் வழிமுறையை ஏற்க வேண்டும் என்று சொல்லலாம்!

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
சிறிய இடத்தில் உள்ளவர் / வலிமை குறைந்தவர் தம்மோடு இருப்பவரின் நடுக்கம் அறிந்து அஞ்சிக் குறைவடைந்தால்  

பெரியார்ப் பணிந்து கொள்வர்
வலியவரைப் பணிந்து கொள்ளுவார்கள்

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 29 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed 20 Jul 2016 - 17:28

#681
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் 
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு
(பொருட்பால், அமைச்சியல், தூது அதிகாரம்)

தூது - தமிழ் வடமொழி இரண்டுக்கும் ஒரே சொல். எங்கேயிருந்து எங்கு சென்றது என்பது வரலாறு / தொல்பொருள் ஆய்வாளர்களின் பகுதி Wink அந்த அளவில் நிறுத்திக்கொள்வோம் Laughing

அமைச்சர் முற்காலங்களில் தூதுவராகவும் செயல்பட வேண்டிய தேவைகள் அடிக்கடி இருந்திருக்கலாம். ஆகவே, அமைச்சியலில் இந்த அதிகாரம்.

தூது என்ற பண்புக்கு வரையறை சொல்லித்தொடங்குகிறார். 

("குடிப்பிறத்தல்" என்பது கொஞ்சம் குழப்பமான சொல் என்றாலும், நல்ல குடி என்ற அளவில் மட்டுப்படுத்திக் கொள்ளுவோம்)

தூதுரைப்பான் பண்பு
தூது உரைப்பவருக்கான தகுதிகள் (என்னவென்றால்)

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை
அன்புடைமை, சிறப்பான குடியில் பிறந்திருத்தல், வேந்தன் விரும்பத்தக்க பண்புடைமை 

"மன்னனுக்குப் பிடித்திருக்க வேண்டும்" - கொஞ்சம் குழப்பமான தகுதி தான், 

ஆனால் நடைமுறையில் அப்படிப்பட்டவர் தானே மன்னரின் சார்பில் இன்னொரு நாட்டில் சென்று பேச முடியும்?

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 29 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed 20 Jul 2016 - 18:12

#682
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு 
இன்றியமையாத மூன்று

வரையறை இந்தக்குறளிலும் தொடர்கிறது. (தூதர் என்றால் என்னென்ன பண்புகள் வேண்டும்..)

நேரடியான பொருள், மிக எளிமையான மொழி - இன்று வரை நாம் பயன்படுத்தும் சொற்கள்!

நூற்றுக்கணக்கான (ஆயிரக்கணக்கான?) ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கும் சொற்கள் இன்றும் இளமையோடு நடை போடுவது சிறப்பான ஒரு தானே?

தூதுரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று
தூது சென்று பேசுவோருக்கு இன்றியமையாத மூன்று (பண்புகள்)

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை
அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை

அன்பும் ஆராய்ந்து பேசும் சொல்லாற்றலும் நாம் எல்லோரும் வளர்த்துக்கொள்ள வேண்டிய பண்புகள். முயற்சி எடுத்தால் வளர்த்துக்கொள்ளவும் முடியும்.

அறிவு? அதற்கும் முயற்சி உதவும் தான். 

என்றாலும், மற்ற இரண்டையும் விட இங்கே கொஞ்சம் மரபணுக்களின் விளையாட்டு கூடுதல் இருக்குமோ என்று பலருக்கும் ஐயம் இருக்கிறது. 

வள்ளுவருக்கும்  இருந்திருக்கலாம். (அதனால் தான் முந்தைய குறளில் "குடிப்பிறத்தல்" என்று இழுத்தாரோ?)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 29 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu 21 Jul 2016 - 14:27

#683
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் 
வென்றி வினையுரைப்பான் பண்பு

தூது  சென்று பேசுபவனுக்கான ஒரு குறிப்பிட்ட தகுதி இங்கே சொல்லப்படுகிறது.

அதாவது படிப்பாளிகளிலேயே சிறந்த படிப்பாளியாக இருக்க வேண்டும் Smile

"நூலாருள் நூல் வல்லன்" - அடடா, என்ன ஒரு அழகிய சொற்கூட்டு!

வேலார் என்ற ஒரு வேறுபட்ட சொல்லும் இங்கே காண்கிறோம். "வேற்று நாட்டவர், பகை மன்னர், வேல் போன்ற போர்க்கருவிகள் உள்ள பகைவர்" என்றெல்லாம் இதற்கு உரைகள் காண முடிகிறது. 

இந்தச்சொல்லின் அடிப்படையில் பார்த்தால், படைவலிமை கொண்ட பகை மன்னனைக் கண்டு பேசி, அவ்வண்ணம் போர் வராமல் தற்காப்பு செய்யும் தூதுவன் என்றும் புரிந்து கொள்ளலாம்.
(பள்ளிக்காலத்தில் படித்த அதியமான்-தொண்டைமான்-ஒளவையார் கதை நினைவுக்கு வரலாம்)

ஆழ்ந்த கல்வியறிவு கொண்ட தூதுவனின் திறமை கடினமான / பகைமேகம் சூழ்ந்த நிலையில் நன்கு வெளிப்பட வாய்ப்புண்டு.

வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு
படை வலிமை கொண்ட வேற்று மன்னனிடம் (வந்த நோக்கத்தில்) வெற்றிபெறும் வண்ணம் பேசுபவனுக்கான தகுதி

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல்
நூல்களைக் கற்றவர்களுக்குள் (அக்கல்வியில்) வல்லவன் ஆகுதல் என்பதே!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 29 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu 21 Jul 2016 - 15:44

#684
அறிவுரு வாராய்ந்த கல்வி இம்மூன்றன் 
செறிவுடையான் செல்க வினைக்கு

இந்த அதிகாரத்தின் நான்காம் குறளும் "தூதன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்" என்று தான் சொல்கிறது. ("தூது எப்படி நடக்க வேண்டும்" என்று அல்ல Smile )

அப்படிப்பார்த்தால் இந்த அதிகாரம் முதன்மையாக மனிதவளத்துறை சார்ந்தது எனலாம்.

அமைச்சன் தூதுவனாகச் செல்ல என்னென்ன பண்புகள் வேண்டும் என்றோ அல்லது எப்படிப்பட்ட தூதனை மன்னனும் அமைச்சர்களும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றோ புரிந்து கொள்ள வழிகாட்டும் செய்யுள்கள் இவை.

இங்கும் மூன்று பண்புகள் சொல்லப்படுகின்றன. நேரடியாகவே இங்கு "உரு" என்று சொல்லி மரபணுவை இணைக்கிறார். தெளிவாகவே, குறிப்பிட்ட குடியில் உள்ளோருக்கு இந்தத்துறையில் சிறப்புரிமை வழங்குவது ஆராயவேண்டியது.

அறிவுரு வாராய்ந்த கல்வி
அறிவு, உருவம், ஆராய்ந்தறிந்த படிப்பு

இம்மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு
இவை மூன்றிலும் சிறப்புடையவன் (தூது என்னும்) செயலுக்குச் செல்ல வேண்டும் 

"விரும்பத்தக்க" தோற்றம் என்று சில உரைகள் சொல்கின்றன. அந்த அளவில் நிறுத்திக்கொள்வோம் Wink

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 29 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri 22 Jul 2016 - 11:20

#685
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி 
நன்றி பயப்பதாந் தூது

ஒரு வழியாக அதிகாரத்தின் ஐந்தாவது குறளில் தூதுவனின் தகுதியில் இருந்து முன்னேறி, வினையின் வரையறைக்கு - "தூது என்றால் என்ன" என்ற கேள்விக்கு வருகிறார்,

தூது என்ற வினையின் நான்கு மையக்கூறுகள் இங்கே சொல்லப்படுகின்றன.

ஒன்றொன்றாகப் பொருள் பார்ப்போம் :

தொகச்சொல்லி
தொகுத்துச்சொல்லி
(வளவளவென்று கூட்டிக்குழைத்துப் பேசாமல், சொல்ல வந்தது இன்னின்ன என்று எண்ணிக்கையிட்டுத்தொகுத்தல். நாம் இப்போது பொருள் காண்பது போல Smile )

தூவாத நீக்கி
வேண்டாதவற்றை நீக்கி 
(தூவாத - "தூய்மை இல்லாத" என்பது சொல்லின் நேரடியான பொருள் - ஆகவே, கெடுதல் உண்டாக்கும் பேச்சைத் தவிர்ப்பது தூதில் வேண்டிய பண்பு)

நகச்சொல்லி
மகிழத்தக்க விதத்தில் சொல்லி

நன்றி பயப்பதாந் தூது
(தன் நாட்டுக்கு, மன்னனுக்கு, மக்களுக்கு) நன்மை விளைவிப்பது தான் தூது!

வேற்று நாட்டுக்கும் அதனால் என்னென்ன நன்மை இருக்கிறது என்று புரிய வைத்தால் தான் "நகச்சொல்லி" என்ற தேவையை நிறைவேற்ற இயலும்.

மொத்தத்தில், தூது வேலை எளிதல்ல - குறிப்பாகப் பகை முற்றிய சூழலில். என்றாலும், இந்த நான்கு தேவைகளை  உட்கொண்டு தான் பேச்சுவார்த்தை இருக்க வேண்டும்.

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 29 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri 22 Jul 2016 - 17:52

#686
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் 
தக்கது அறிவதாம் தூது

இந்தக்குறள் தூதுவனின் வரையறை மற்றும் தூது என்னும் பண்புக்கான கூடுதல் விளக்கம் - அப்படி இரண்டும் சேர்ந்த கலவை.

முன்னமேயே நாம் கண்டது போல இந்த அதிகாரம் குறிப்பாக மனித வளத்துறைக்கே. (வெளியுறவு அமைச்சருக்கும் அறிவுரை உண்டு).

மட்டுமல்ல, இதுவும் ஒரு "தொகுப்பு". நான்கு கூறுகள் இந்தக்குறளிலும் காண்கிறோம். அதே வரிசையில் பார்க்கலாம்.

கற்று
1. கல்வியறிவு கொண்டு (மனிதவளத்துறை)
2. சூழ்நிலையைப் புரிந்து கொண்டு (வெளியுறவுத்துறை)

கண் அஞ்சான்
(சினத்துடன் பார்க்கும் பகைவரின்) கண் அஞ்சாதவன் / அஞ்சாமல்

செலச்சொல்லி
(யாரிடம் பேசுகிறானோ அவனது மனதில்) சென்று எட்டும்படியாகச் சொல்லி 

காலத்தால் தக்கது அறிவதாம் தூது
ஏற்ற காலத்தில் வேண்டியவற்றை அறிந்து கொள்வது தான் தூது / அறிபவனே தூதன் 

இங்கே தூது என்பது "உரைப்பது" மட்டுமல்ல, "அறிவதும்" என்ற கூடுதல் தகவல் மிக எளிதாக உள்ளே செருகப்படுகிறது! 

அதுவும் தக்க நேரத்தில் தெரிந்து கொண்டு விட வேண்டும்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 29 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon 25 Jul 2016 - 10:42

#687
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து 
எண்ணி உரைப்பான் தலை

எளிமையான குறள் - தலை என்ற சொல் இதில் சிறப்பு / குறிப்பிடத்தக்கது. (தூதுவரில் உயர்ந்தவன் / பெரியவன் / தூதில் மிகச்சிறந்த முறை என்றெல்லாம் கொள்ளலாம்).

மற்றபடி, நேரடியான பொருள். இங்கும் நான்கு கூறுகளின் தொகுப்பு Wink

கடனறிந்து
(தன்னுடைய) கடமையை அறிந்து 
(அக்கறை / கவனம் சிதறாமை)

காலங்கருதி
ஏற்ற காலத்தை ஆராய்ந்து 
(எந்த நேரத்தில் தூதுவனின் பணியை நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானிப்பது)

இடனறிந்து
பொருத்தமான இடத்தை ஆராய்ந்து

எண்ணி உரைப்பான் தலை
(சொல்ல வேண்டியதை சரியாகச்) சிந்தித்துப் பேசுபவன் தான் சிறந்த தூதுவன்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 29 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon 25 Jul 2016 - 13:53

#688
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் 
வாய்மை வழியுரைப்பான் பண்பு

"வழியுரைப்பான்" என்று தூதுவனுக்கு இங்கே பட்டம் கொடுக்கிறார் வள்ளுவர்.

இரண்டு பக்கங்களும் (நாடுகள் / அணிகள் / பிரிவுகள் போன்றவை) இசைவாகச் செயல்பட என்னென்ன வழிகள் என்று சொல்வது தானே தூதுவனின் பணி? அதனால் தான் "வழி சொல்லுபவன்" என்ற இந்த அழகிய பட்டப்பெயர் Smile

அப்படிப்பட்ட வழிகாட்டிக்கு இருக்க வேண்டிய மூன்று இன்றியமையாத பண்புகள் இந்தப்பாடலில்.

வழியுரைப்பான் பண்பு
வழி சொல்லுபவனாகிய தூதுவனின் பண்பு 
(அல்லது, இரண்டு பிரிவுக்கும் இடையே வழியாக இருப்பவனின் பண்பு)

தூய்மை துணைமை துணிவுடைமை
தூய நெறி (அப்பழுக்கற்ற ஒழுக்கம்), துணைமை (நல்ல துணை கொண்டிருத்தல்), துணிவு எனப்படும் 

இம்மூன்றின் வாய்மை
இம்மூன்றும் வாய்த்திருப்பதே! (உடையவனாக இருப்பதே).

இவற்றுள் இரண்டு நேரடியாக தனி ஆளின் பண்புகள். (தூய்மை / துணிவு).

ஆனால், துணைமை - தூதுவனின் முயற்சியும் நட்பாகப்பழகுதலும் மட்டுமே போதாது. நல்ல, திறமை வாய்ந்தோரின் துணை "வாய்க்கவும்" வேண்டும். அதனால் தான் வாய்மை என்கிறார்.

நாம் முதல் குறளில் படித்த குடிப்பிறப்பு என்பதற்கும் இதற்கும் இணைப்பு உண்டு என்று கருதுகிறேன்.

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 29 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 29 of 40 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 34 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum