Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 30 of 40 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 30 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jul 26, 2016 5:07 pm

#689
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் 
வாய்சேரா வன்கணவன்

இன்று கற்ற புதிய 'சொல்' - மாற்றம் Smile

அதாவது, இந்தச்சொல்லுக்கு "சொல்" (வார்த்தை) என்ற பொருள் இருக்கிறது என்று இந்தக்குறள் வழியாகக் கற்றுக்கொள்கிறேன். 
(அகராதியிலும் மேற்கோளாகச் சொல்லி இருக்கிறார்கள்).

இனிமேல் பொருள் புரிவது மிக எளிது!

வடுமாற்றம் வாய்சேரா வன்கணவன்
பிழையான / குற்றமான சொற்களைத் தன் வாயில் சேர விடாத வலிமை உள்ளவன் 
(எந்த ஒரு சூழ்நிலையிலும் கெட்ட பேச்சுப்பேசாத ஆற்றல் உள்ளவன்)

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான்
(தன் மன்னன்) சொல்லி விடும் சொற்களை (மாற்று) வேந்தருக்கு உரைக்கும் தகுதி உள்ளவன்.

அதாவது, தீய சொற்களைப் பேசாமல் நாவுக்குக் கடிவாளம் போடும் திறமை உடையவன் மட்டுமே தூதுவன் என்ற பொறுப்புக்கு ஏற்றவன் என்று அழகாகச் சொல்கிறார்.

"நாவுக்குக்கடிவாளம்" என்பது "சொல்லுதல் எளிய, அரியவாம் செயல்" வகையில் வரும் ஒரு பண்பு.

மிகச்சிறந்த அறிவாளிகள் கூட சில நேரங்களில் வேண்டாதது பேசி அதன் வழியே கலகம் / குழப்பம் விளைவிப்பது அன்றாடம் காண்பது. 

"வன்கணவன்" என்று சொல்வது குறிப்பிடத்தக்கது. வாயை அடக்குவது குறிப்பிடத்தக்க வலிமை!

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 30 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jul 27, 2016 5:05 pm

#690
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு 
உறுதி பயப்பதாம் தூது

கிட்டத்தட்ட எல்லா உரைகளுமே "எஞ்சாது" என்பதை "அஞ்சாது" என்றே பொருள் கொள்கின்றன. என்றாலும்,  ஒரு அகராதியிலும் "எஞ்சாது" என்பதற்கு "அச்சம் இல்லாமல்" என்று பொருள் காண முடியவில்லை Embarassed 

"மிச்சம் இல்லாமல்" என்று தான் பொருள் காண்கிறேன் Laughing

ஒரு வேளை குறள் "அஞ்சாது" என்று இருக்குமோ என்று தேடிப்பார்த்தால், எல்லா இடத்திலும் "எஞ்சாது" என்று தான் இருக்கிறது. ஆகவே, கண்டிப்பாக "அஞ்சாது" என்று மட்டும் பொருள் இல்லை - அதற்கு அப்பால் என்னமோ சொல்ல வருகிறார் என்பது என் தாழ்மையான கருத்து.

"இறுதி பயப்பினும்" என்பதன் பொருள் வெளிப்படை - இறப்பு / கொல்லப்படுதல்.

ஆகவே, இங்கே "எஞ்சாது" என்பது "தப்பிப்பிழைக்க முயலாமல்" என்று தான் பொருள் கொள்ள முடியும். (எஞ்சுதல் = மிஞ்சுதல் = கொல்லும் முயற்சியைத் தப்பி உயிரோடு இருத்தல்).

சரி தானே?

"தன்னுடைய இறைவனை / மன்னனை விட்டுக்கொடுத்து , எதிரிக்குக் கீழ்ப்பட்டு,  உயிரைக் காத்துக்கொள்ள முனைபவன் தூதன் அல்ல - அப்படிப்பட்ட கோழையை இப்பணியில் அமர்த்த வேண்டாம்"  என்று தான் இங்கே வள்ளுவர் சொல்ல வருகிறார். அச்சம் இருந்தால் தான் அப்படிச் செய்வான் என்பது உண்மையே - என்றாலும், அச்சம் என்பது உணர்வு, எச்சம் என்பது பலன், அதற்கு அடுத்த படி.

இறுதி பயப்பினும் எஞ்சாது
கொல்லப்படும் நிலையிலும் தப்பித்துக்கொள்ள முயலாமல்

இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது
(தனது) மன்னனுக்கு / தலைவனுக்கு உண்மையாக / உறுதியாக இருப்பவன் தான் தூதுவன்!

விவிலியத்தில் "திருத்தூதர்" (அப்போஸ்தலர்) என்று ஒரு நூல் இருக்கிறது. 

ஏசுவின் சீடர்கள் அவரைத் தங்கள் மன்னராகவும், தாங்கள் அவருடைய விண்ணரசுக்குத் "தூதுவராகவும்" அந்த நூல் மற்றும் அதன் பின் வரும் கடிதங்களில்  சொல்லுவதைக் காணலாம்.

தங்கள் நிலையில் உறுதியாக - அவர்களது நாடுகளின் ஆட்சியாளர்கள் கொல்லும் நிலையிலும் - மாறாதிருந்தது இங்கே நினைவுக்கு வருகிறது. 

(குறிப்பு - "தூதுவர்கள்" என்ற நிலையில், அவர்கள் வன்முறையில் ஈடுபடவோ, உள்நாட்டு அரசியலில் தலையிடவோ இல்லை.  இது  பிற்காலங்களில் கிறித்துவ மதங்களின் பெயரால் வன்முறை மற்றும் அரசியல் செய்வோரிடமிருந்து இவர்களை வேறுபடுத்துகிறது).

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 30 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jul 28, 2016 5:30 pm

#691
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க 
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார்
(பொருட்பால், அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல் அதிகாரம்)

அமைச்சர் என்றாலே மன்னரை ஒட்டி நடக்க வேண்டியிருக்கும் தானே?

அதில் என்னென்ன நல்ல பழக்கங்கள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் கையாள வேண்டும்? இதோ அவற்றுக்கென்றே ஒரு தனி அதிகாரம். 

அதிலும், முதல் குறளே "இகல் வேந்தர்" என்று சொல்லி அவ்வப்போது எடக்குமடக்காக  (இகல் = மாறுபடும்)  நடந்து கொள்ளும் மன்னரை எப்படிச் சேர்ந்தொழுகுவது என்று தொடங்குகிறார் Laughing

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார்
மாறுபடும் இயல்புடைய (அல்லது பகை முகம் காட்டும் தன்மையுள்ள) வேந்தனைச் சேர்ந்து செல்பவர்கள்

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
(அளவுக்கதிகமாய்) அகன்று விடாமலும் அருகில் செல்லாமலும் தீக்காய்பவர்கள் போல இருக்க வேண்டும் 

நெருப்பு மூட்டிக் குளிர்காய்கையில், அகன்று சென்றால் குளிர் தாக்கும். மிக அருகில் சென்றால் தீயின் வெம்மை தாக்கும். 

நல்ல அமைச்சன் முரண்பாடுகள் கொண்ட அரசனுக்கு மிகக்கிட்டவோ அல்லது ரொம்ப எட்டவோ செல்ல வேண்டாம் என்பதற்கு என்ன ஒரு அழகான உவமை!

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 30 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jul 28, 2016 10:36 pm

#692
மன்னர் விழைப விழையாமை மன்னரால் 
மன்னிய ஆக்கந்தரும்

"மன்னன் வழியாக நல்ல ஆக்கம் வேண்டுமா? அப்படியானால், அவனுக்கு வேண்டியவைகளில் உன் கையை வைக்காதே" என்று நடைமுறையான அறிவுரை சொல்லுகிறார் வள்ளுவர்.

மன்னர் அருகில், அவரை ஒட்டி வாழ்பவர்களுக்கு மிகவும் வேண்டிய பண்பு "அவர் விரும்புவதை நாம் விரும்பாமல் இருப்பது". 

நிறைய ஆக்கம் கிட்டும் என்பது மட்டுமல்ல, உடம்புக்கும் உயிருக்கும் கூட அது தான் நல்லது என்பது அவர் சொல்லாமல் விட்டிருப்பது  rotfl

மன்னர் விழைப விழையாமை
மன்னர் விரும்புகின்றவற்றை (அது எப்படிப்பட்ட உடைமையானாலும் சரி - காதலி, வேலைக்காரர், விலங்கு, நிலம், வீடு - இப்படி எதுவானாலும்) நாம் விரும்பாதிருப்பது

மன்னரால் மன்னிய ஆக்கந்தரும்
நிலையான ஆக்கத்தை மன்னரிடமிருந்து பெற்றுத்தரும்
(மன்னிய = நிலையான)

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 30 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jul 29, 2016 5:36 pm

#693
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் 
தேற்றுதல் யார்க்கும் அரிது

பொருள் கண்டுபிடிக்கக் கடினமான குறள் Embarassed

மிகவும் நடைமுறையான ஒன்றை இங்கே வள்ளுவர் முன்வைக்கிறார். 

நிறுவனங்களில் வேலை செய்வோர்க்கு 'மன்னன்' என்பதை நிறுவனர் / நிர்வாகி / மேலாளர் என்றெல்லாம் வைத்துக்கொள்ளலாம். நமக்கு மேலே உள்ள நிர்வாகிக்கு நம் மீது ஐயம் வந்து விட்டால் பின்னர் அங்கே வேலை செய்வது எளிதல்ல. அதை நீக்கி, மீண்டும் நம் மீது நன்மதிப்புக் கொண்டு வருவது மிகக்கடினம்.

அதைச்சொல்லி, அப்படிப்பட்ட நிலையை வராமலே தவிர்ப்பது நல்லது என்று சொல்லும் செய்யுள்.

கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது
(மன்னனுக்கு) ஐயம் (அல்லது வெறுப்பு) வந்த பின்னர் தெளிவிப்பது எவர்க்கும் அரிது (என்பதால்)

போற்றின் அரியவை போற்றல்
தம்மைக் காத்துக்கொள்ள அரிய பிழைகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

போற்றுதல் என்பது காத்துக்கொள்ளுதல் என்ற பொருளில் இங்கே வருகிறது.

மேலான பொறுப்புகளில் உள்ளவர்களிடமிருந்து நம்மைக் "காத்துக்கொண்டு" தான் வாழ வேண்டியிருக்கிறது என்பதால், இந்த அறிவுரை அமைச்சனுக்கு மட்டுமல்ல, எந்த வேலையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

அப்படி ஒருவேளை "கடுப்பு" வந்து விட்டால், அதை விட்டு வேறு வேலை தேடிக்கொள்வது நடைமுறையில் நல்லது Smile

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 30 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jul 29, 2016 10:00 pm

#694
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் 
ஆன்ற பெரியாரகத்து

"செவிச்சொல்" காதோடு காதாக மூன்றாம் ஆளுக்குக் கேட்காமல் கிசுகிசுப்பதற்கு என்ன ஒரு அழகான மொழி!

பெரியோருக்கு முன்னால் அப்படிப்பேசுவது அவர்களை அவதூறு செய்வது போன்றது. கூடவே "களுக்" என சிரிப்பும் இருந்தால் யாருக்கும் சினம் வரும். மன்னனோ அல்லது அதிகாரியோ உள்ள இடத்தில் இவை கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டிய பழக்கங்கள்!

இப்படி, பெரியோர் முன் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை நடத்தையை இங்கே படிக்கிறோம்.

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும்
(அடுத்துள்ளவர்) காதுக்குள் (ஒட்டிக்கொண்டு மெல்லப்) பேசுவதும், கூடச்சேர்ந்த சிரிப்பும் 

ஆன்ற பெரியாரகத்து அவித்தொழுகல்
ஆற்றல் வாய்ந்த பெரியோரின் முன்னிலையில் தவிர்த்து நடக்க வேண்டும்

"நான் அவர்களை ஒன்றும் ஏளனம் செய்யவில்லையே" என்றெல்லாம் பிடிவாதம் பிடிக்காமல், அறவே தவிர்ப்பது வலியோரை ஒட்டி நடக்கும் போது நமக்குப் பாதுகாப்பு Smile

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 30 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Aug 01, 2016 10:02 pm

#695
எப்பொருளும் ஓரார் தொடரார் மற்றப்பொருளை 
விட்டக்கால் கேட்க மறை

மன்னனின் கூட்டத்தில் நடக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய இன்னொரு தேவையான பண்பு இங்கே அழகாக வருகிறது.

மறைபொருளாக அவர் கருதுவதை அறிந்து கொள்ள முனைந்து, மூக்கை நுழைக்கக் கூடாது!

நாம் அவருக்கு முன்னால் இன்னொருவர் காதில் மறைபொருள் பேச முயலக்கூடாது. மாறாக, அவர்  பேசலாம். அப்படிப்பேசும் போது அதை ஒட்டுக்கேட்க முயல்வது வேண்டாத, கூடாத செயல். மட்டுமல்ல,  "அவரே சொன்னாலொழிய, அதைத்தெரிந்து கொள்ள முயலாதே" என்கிறார். 

"தனிமனிதனின் உரிமை" என்ற விதத்தில் கொஞ்சம் அநீதி தான். என்றாலும், மன்னனின் நிலை / பொறுப்பு ஆகியவற்றுக்கு அமைச்சன் கொடுக்க வேண்டிய போற்றுதல் மற்றும் கீழ்ப்படிதல்!

மறை எப்பொருளும் ஓரார் தொடரார்
(மன்னன்) மறைபொருளாகக் கருதும் எதையும் ஒட்டுக்கேட்கவோ, தொடர்ந்து அதைப்பற்றித் துருவவோ (கேட்கவோ) கூடாது

மற்றப்பொருளை விட்டக்கால் கேட்க
மற்றபடி, அவரே அந்தப்பொருளை வெளியில் சொன்னால் கேட்டுக்கொள்ள வேண்டும்!

Smile

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 30 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Aug 01, 2016 10:54 pm

#696
குறிப்பறிந்து காலங்கருதி வெறுப்பில 
வேண்டுப வேட்பச் சொலல்

மன்னனை ஒட்டி ஒழுகும் போது செய்ய வேண்டிய "கூழைக்கும்பிடு" விவரங்களின் பட்டியல் இந்தக்குறளில் Wink

இங்கேயும் "நடைமுறை அறிவு" என்ற அளவில் புரிந்து கொள்ள வேண்டுமே ஒழிய, "தனிமனித உரிமை" என்றெல்லாம் முழங்கக்கூடாது!

குறிப்பறிந்து
மன்னனின் மனநிலை அறிந்து 
(அவர் என்ன சொல்ல வருகிறார், அவருக்கு இப்போது என்ன தேவை, என்ன சொன்னால் பிடிக்கும் போன்றவை "குறிப்பு" என்ற சொல்லின் பல விளக்கங்கள்)

காலங்கருதி
உரிய நேரத்தில்

வெறுப்பில
(மன்னனுக்கு) வெறுப்பில்லாதவற்றை 
("பிடிக்காததைப் பேசினால் உடம்புக்கு நல்லதல்ல" என்று வாகனச்சக்கரத்தைக் கும்பிடும் அமைச்சர்களுக்கு  வள்ளுவர் சொல்லாமலே தெரியும்)

வேண்டுப வேட்பச் சொலல்
(மற்றும்) வேண்டியவற்றை விரும்பும்படியாகச் சொல்ல வேண்டும்.
("மன்னனுக்குப் பிடித்த்தைச் சொல்லும் போதும், கடூரமான ஒலியிலோ மொழியிலோ சொல்லி வாங்கிக்கட்டிக்க்கொள்ளாதே" என்கிறார்)

ஆக, முதுகு வளையாவிட்டால் மன்னனை ஒட்டி நடக்க முடியாது என்று சுருக்கம்!

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 30 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Aug 02, 2016 9:29 pm

#697
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் 
கேட்பினும் சொல்லா விடல்

மன்னன் விரும்புவதையே பேச வேண்டும் என்று மீண்டும் மீண்டும் இந்த அதிகாரத்தில் நாம் படிக்கிறோம். (இல்லையென்றால் தீமையில் விளைவடையும் என்ற நடைமுறை உண்மை).

அப்படிப்பட்ட நிலையிலும் பொறுப்புடன் நடந்து கொள்வது எப்படி என்று இங்கே அறிவுரை.

அதாவது, மன்னனே விரும்பிக்கேட்டாலும், பயனற்ற / செயலில் விளைவடையாத வெட்டிப்பேச்சை அமைச்சன் தவிர்க்க வேண்டும்.

இன்ப நுகர்வுக்கு முன்னிடம் கொடுத்து, ஒரு பொறுப்பும் இல்லாமல் வாழ்ந்த மன்னர்களைக் குறித்து நாம் வரலாற்றில் கேட்கிறோம் தானே? அப்படிப்பட்டோருக்கு வெட்டிப்பேச்சு பிடித்திருக்கலாம். பொறுப்புள்ள அமைச்சன் அதைத்தவிர்ப்பான்!

வேட்பன சொல்லி
(மன்னன்) விரும்புவதைச் சொல்லி (அதே நேரத்தில்)

கேட்பினும் வினையில எஞ்ஞான்றும் சொல்லா விடல்
(அவனே) கேட்டாலும் பயனற்றவையை ஒரு போதும் சொல்லாமல் விட்டு விட வேண்டும்

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 30 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Aug 03, 2016 1:19 am

#698
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற 
ஒளியோடு ஒழுகப்படும்

மன்னனை விட வயதிலும் (ஒரு வேளை அறிவிலும்) பெரியவராக இருந்தாலும், உறவினராக இருந்தாலும், அவனுடைய உயர்ந்த நிலைக்குத்தக்க மதிப்புக்கொடுக்க வேண்டும் என்று இங்கே அறிவுரை.

நம் நாட்களில் பெரு நிறுவனங்களை நிறுவியவர் வயதாக ஆக, "நாற்காலி மனிதர்"  Laughing என்ற நிலைக்குச்செல்வதும் வேறொருவர் (ஒரு வேளை உறவினர் - மகன் / மருமகன் போன்றோர்) தலைமை அலுவலராக வருவதும் நாம் அடிக்கடி காண்பது. 

அத்தகைய சூழ்நிலைக்கும் இந்தக்குறள் மிகப்பொருத்தம் Smile 

இளையர் இனமுறையர் என்றிகழார்
(என்னைவிட வயதில்) இளையவர் என்றோ, இன்ன முறையில் எனக்கு உறவினர் என்றோ இகழ்ச்சியாக நோக்காமல் / பேசாமல்

நின்ற ஒளியோடு ஒழுகப்படும்
தற்போது நிற்கும் (மன்னர் என்ற உயர்ந்த) நிலைக்கும் அவரது புகழுக்கும் ஏற்ப (மதித்து) நடந்து கொள்ள வேண்டும் 

மன்னர் / தலைமை அலுவலர் எல்லாம் விடுங்கள். 

நம் அளவிலேயே எடுத்துக்கொண்டாலும், நாம் பார்க்க சிறிய அளவில் இருந்த ஒருத்தர் கல்வி / உழைப்பு / உறவு / அரசியல் என்று ஏதோ ஒரு காரணத்தால் நம் மேலாளராக, முதலாளியாக வர நிறைய வாய்ப்பு இருக்கிறது. வாழ்க்கையில் இது பலரும் காணும் நடைமுறை உண்மை.

அப்படிப்பட்ட நேரத்தில் இகழாமல் போற்றி நடக்கப் பழகிக்கொள்ள வேண்டும்  Embarassed

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 30 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Aug 03, 2016 6:30 pm

#699
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் 
துளக்கற்ற காட்சியவர்

"வலிமையான நிலை ஊழல் செய்யும்படி ஆக்கும்" என்பதாக ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. ஆட்சிப்பொறுப்பின் உயர் நிலைகளில் இருப்போர் அந்த இடத்தின் வலிமையைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டு ஆட்டம் போடுவது எப்போதும் காண்பது தான்.

மன்னனுக்கு அருகில் (அமைச்சன் என்ற நிலையில்) இருப்பதை இப்படித் தன்னலமாகப் பயன்படுத்துவது  மேன்மக்கள் செய்வதல்ல என்று அறிவுறுத்தும் குறள்.

துளக்கற்ற காட்சியவர்
அசைவற்ற (தெளிந்த) அறிவுடையவர்கள் 
(துளக்கு - அசைவு, இதைத் தங்கள் தூய நிலையில் உறுதியானவர் என்றும் புரிந்து கொள்ளலாம்)

கொளப்பட்டேம் என்றெண்ணி
(மன்னனால்) ஏற்றுக்கொள்ளப்பட்டோம் / விரும்பப்பட்டோம் என்று எண்ணி 
(அதாவது, தங்கள் நிலை குறித்து இறுமாப்படைந்து)

கொள்ளாத செய்யார்
ஏற்றுக்கொள்ள முடியாத / விரும்பாத செயல்களைச்செய்ய மாட்டார்கள்

அதிகாரத்தலைப்பின் அடிப்படையில், இங்கே குறிப்பாக "மன்னனுக்குக் கொள்ளாத" என்று தான் பொருள்.  "இவனை ஏன் தூக்கி இந்த நிலையில் வைத்தோம், இவன் ஆடும் ஆட்டம் தாங்க முடியவில்லையே" என்று மன்னன் எண்ணும்படி நடந்தால், அடுத்த நாள் அங்கே இருந்து தூக்கி வீசி விடுவான்.

(ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த அண்மைக்கால செய்தி நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை)

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 30 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Aug 03, 2016 10:04 pm

#700
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் 
கெழுதகைமை கேடு தரும்

வயதில் பெரியவன், உறவினன், "கொள்ளப்பட்டவன்" என்றெல்லாம் எண்ணிக்கொண்டு இகழவோ, வேண்டாதவை செய்யவோ கூடாது என்று முன்னுள்ள குறள்களில் கருத்துக்கள் கண்டோம்.

அவற்றின் நீட்சி இங்கே - "வேந்தனோடு எனக்கு ரொம்ப நாள் பழக்கம்:" என்ற அடிப்படையில் பண்பற்ற செயல்கள் செய்யக்கூடாது என்கிறார் இந்தக் கடைசிக்குறளில்!

கெழுதகை(மை) = உரிமை , பண்பல்ல செய்யும் உரிமை 

பழையம் எனக்கருதி
(எனக்கு மன்னனோடு) நீண்ட நாள் பழக்கம் என எண்ணி (அதன் விளைவாக)

பண்பல்ல செய்யும் கெழுதகைமை
பண்பற்றவை செய்ய உரிமை எடுத்துக்கொள்வது 
("என்ன செய்தாலும் என்னை ஒன்றும் செய்ய மாட்டார், நான் பழைய ஆள்" என்று கருதித் தீமைகள் செய்தல்)

கேடு தரும்
(தனக்குக்) கேட்டைத்தரும்.

இத்தகைய அளவு மீறல், அழிவுக்குத்தான் வழி!

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 30 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Aug 04, 2016 7:20 pm

#701
கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் 
மாறாநீர் வையக் கணி
(பொருட்பால், அமைச்சியல், குறிப்பறிதல் அதிகாரம்)

குறிப்பறிதல் - "முகக்குறிப்பு அறிதல்" வாயால் சொல்லாமலேயே ஒருவர் நினைப்பதை / சொல்ல வருவதை / செய்ய விரும்புவதை அவரது முகத்தை நோக்கிப்புரிந்து கொள்ளுதல்.

முகம் மட்டுமல்ல முழு உடல்மொழி என்றும் கொள்ளலாம். தொடர்பு மேலாண்மையில் "உடல்மொழி வழியாகக் குறிப்பிடத்தக்க அளவு செய்திகள் கடத்தப்படுகின்றன" என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். அதே போன்ற வள்ளுவரின் அறிவுரைகள் இங்கே Smile

முதல் குறள் கொஞ்சம் உயர்வு நவிற்சி தான். ("குறிப்பறிவான் மாறாநீர் வையத்துக்கே அணி" என்று சொல்வது அழகான மொழி என்பது உண்மை).

எஞ்ஞான்றும் என்ற சொல் இங்கே இரண்டுக்கும் பயன்படுத்தலாம். 

1. "எஞ்ஞான்றும் மாறா நீர் வையம்" என்பது ஒரு புவியியல் உண்மை Smile ஆழியின் நீர் என்றும் வற்றாமல் இருப்பது காண்பது தானே?

2.  "குறிப்பறிவான் எப்போதும் வையத்துக்கு அணியாக விளங்குவான்" என்றும் புரிந்து கொள்ளலாம். அவ்விதத்தில் சிறப்பாகச் செயல்பட்ட அமைச்சரின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் என்று பொருள்.

கூறாமை நோக்கக் குறிப்பறிவான் 
சொல்லாமலேயே (முகம் / உடல்) நோக்கிக் குறிப்பறிந்து கொள்ளும் திறன் உள்ளவன் 

எஞ்ஞான்றும் 
என்றென்றும்

மாறாநீர் வையக் கணி
வற்றா நீர் சூழ்ந்த / உள்ள வையகத்துக்கு அணிகலன் ஆவான்!

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 30 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Aug 04, 2016 9:05 pm

#702
ஐயப்படாஅது அகத்தது உணர்வானைத் 
தெய்வத்தோடொப்பக் கொளல்

வள்ளுவருக்குத் தெய்வ நம்பிக்கை இருந்தது என்பதற்கு இன்னுமொரு சான்றாக இந்தக்குறள் Wink
("அப்படியெல்லாம் ஒன்றுமில்லை" என்று தெளிவிப்பதற்கு மு.க. தன் உரையில் முயல்வது ஒரு சின்ன நகைச்சுவை).

"மற்றவரின் உள்ளத்தில் என்ன உள்ளது" என்று கண்டுபிடிப்பது எல்லா நேரமும் செய்வது யார்க்கும் இயலாத ஒன்று. ("அது கடவுளுக்கு மட்டுமே உண்டு" என்பது இறைநம்பிக்கை உள்ளோரின் ஒரு குறிப்பிடத்தக்க கோட்பாடு). 

என்றாலும், பழக்கம், அறிவு, சூழல் இவற்றின் அடிப்படையில், குறிப்பிட்ட ஒருவர் உள்ளத்தில் என்ன உள்ளது என்பதை அவருக்கு நெருங்கியவர் சில நேரங்களில் கண்டுபிடித்து விட முடியும்.

இளம் பிள்ளையின் மனதில் இப்போது என்ன ஓடுகிறது என்று பெற்றோர் எளிதாகக் கண்டுபிடிப்பதே நாமெல்லோரும் பார்த்தும் / பட்டும் இருக்கிறோம். பிள்ளை பெரிதாகப்பெரிதாக இது கடினமாக மாறுவதும் கண்கூடு.

மற்றவரின் அகத்து உள்ளதை ஐயமின்றி உணரும் திறமை பெரிதென்பதால், அப்படிப்பட்ட உள்ள அமைச்சனை "தெய்வத்தை ஒத்தவன்" என்று வள்ளுவர் ஒப்பிடுவது சிறப்பே!

ஐயப்படாஅது அகத்தது உணர்வானை
(மற்றவர்) உள்ளத்தில் உள்ளதை ஐயமின்றி உணரும் திறமை படைத்தவனை 

தெய்வத்தோடொப்பக் கொளல்
தெய்வத்துக்கு ஒப்பானவனாகக் கொள்ள வேண்டும்!

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 30 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Aug 05, 2016 5:18 pm

#703
குறிப்பிற் குறிப்புணர்வாரை உறுப்பினுள் 
யாது கொடுத்தும் கொளல்

"யாது கொடுத்தும் கொளல்" என்பது  இனிமையான சொற்றொடர், மற்றும் அருமையான மேலாண்மை அறிவுரை! (மனிதவளத்துறைக்கு இதைச் சொல்லிக்கொடுக்க வேண்டும்)

"எள் என்றால் எண்ணெய்யுடன் நிற்பான்" என்ற பழமொழியின் திருக்குறள் வடிவம். 

சிறிய முகக்குறிப்பு அல்லது கண்ணின் சைகை கண்டதுமே என்ன வேண்டும் என்று புரிந்து கொள்ளும் திறமையுள்ளவனை நம் குழுவில் சேர்த்துக்கொள்வது எவ்வளவு நல்லது!

குறிப்பிற் குறிப்புணர்வாரை
சிறிய அங்க அசைவு / குறிப்பு வழியாக (என்ன சொல்ல வருகிறார்) என்ற உள்ளக்குறிப்பை உணர்வாரை 

யாது கொடுத்தும்
என்ன கொடுத்தும்

உறுப்பினுள் கொளல்
அங்கத்தினுள் (குழுவினுள்) சேர்த்துக்கொள்ள வேண்டும்

நல்ல வேலைக்காரர் குழுவில் இருந்தால் தான் அமைச்சன் வெற்றியடைய முடியும். 

குறிப்பறிந்து செயல்படுபவன் அப்படிப்பட்டவன்!

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 30 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Aug 05, 2016 10:16 pm

#704
குறித்தது கூறாமைக் கொள்வாரோடேனை 
உறுப்போரனையரால் வேறு

என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்ளக் கொஞ்சம் நேரம் எடுக்கும் குறள் Embarassed

அதாவது, நேரடியான பொருள் எளிது - உட்பொருள் கொள்ளக் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். அந்த விதத்தில், அழகான செய்யுள்.

உறுப்போரனையரால்
உறுப்புகள் ஒரே போன்றதாகக் கொண்டிருந்தாலும்
(தோற்றத்தில் ஒத்திருந்தாலும்)

குறித்தது கூறாமைக் கொள்வாரோடேனை வேறு
குறித்ததை (இன்னொருவர் மனதில் கருதியதை) அவர் சொல்லாமலே புரிந்து கொள்வாரும் அல்லாதவரும் வேறுபட்டவர்களே

அப்படியாக, நேரடியான பொருள் இது :  "உடல் அளவில் ஒரே போல் இருந்தாலும், குறிப்பறிபவர் <> அறியாதவர் Smile வேறுபட்டவர்". 

இதிலென்ன வியப்பு இருக்கிறது - எந்தத்திறனை எடுத்துக்கொண்டாலும் அது உள்ளவரும் அல்லாதவரும் வேறுபட்டவர் தானே?  ஆக, என்ன உட்பொருள்?

எனக்குத்தோன்றியது - "உறுப்புகள்" என்ற சொல்லின் அடிப்படையில் கொஞ்சம் கூட ஆழ்ந்து படிப்போம்.

குறிப்பறிதல் என்பது உடல்மொழி படித்தல் என்று வருகிறது. நல்ல கண் உள்ளோர் மற்றவரின் உடல் அசைவுகளை எளிதில் காணவும் அறியவும் மூளைக்குக்கடத்தவும் முடியும். 

என்றாலும், "உறுப்பு" அவ்வளவு தான் செய்யும்.  

அதற்கும் மேல், புரிதல் / சிந்தித்தல் / ஆராய்தல் / விரைவில் அதனால் சொல்லப்பட்ட கருத்தை உணருதல், அதன் அடிப்படையில் செயல்படுதல் - இவையெல்லாம் ஒரு ஆளின் அறிவு / தன்மை சார்ந்தவை. குறிப்பாக, "முடிவுக்கு வருதல்" மற்றும் அதன் "விரைவு" என்பன ஆளுக்காள் வேறுபடும்.  அதைத்தான் சொல்ல வருகிறார் என நினைக்கிறேன்.

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 30 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Aug 08, 2016 9:18 pm

#705
குறிப்பிற் குறிப்புணராவாயின் உறுப்பினுள் 
என்ன பயத்தவோ கண்

குறிப்பறிதலில் இன்றியமையாத பங்கு வகிப்பவை கண்களே. 

மிக அருகில் உள்ள சில நேரங்களில் மற்ற உடல் அங்கங்கள் வழியே குறிப்பு வரலாம் - கூட்டத்தில் இருக்கும் போது அம்மாவோ அப்பாவோ பிள்ளைக்கு ஒரு "கிள்ளு" கொடுத்துக் "குறிப்பு அறிவிக்க" வழியுண்டு. Laughing

என்றாலும் மன்னரோ அல்லது அது போன்ற உயர்நிலையில் உள்ளாரோ என்ன மனதில் நினைக்கிறார்கள் என அறிவது அவர்களது உடல் மொழியைக் கண்ணால் பார்ப்பதன் வழியாகத்தான்.

அப்படியாக, அவர்கள்  (உடல் உறுப்புகள் வழியே) அறிவிப்பதைக் காணாத / கண்டும் உணராத கண்கள் கொண்டு பயனில்லை என்று தெரிவிக்கும் செய்யுள் இது.

குறிப்பிற் குறிப்புணராவாயின்
(உடல் மொழியின்) குறிப்புகளில் வழியே உள்ளத்தின் குறிப்பை உணரவில்லை என்றால்

உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ 
உடல் உறுப்புகளில் "கண்" எனப்படுவது இருந்து என்ன பயன்?

கண்ணிருந்தும் பாராமல் / உணராமல் இருப்பவன் குருடன் என்கிறார்.

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 30 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Aug 08, 2016 9:47 pm

#706
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் 
கடுத்தது காட்டும் முகம்

"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்ற பழமொழியின் வள்ளுவர் வடிவம்.

அதற்கு இன்னும் கொஞ்சம் அழகு சேர்க்க இங்கே "பளிங்கு" என்ற உவமையும். 

பளபளப்பு, பளிச்சிடுதல் என்று ஒளியோடு உறவாடும் சொற்களில் ஒன்று "பளிங்கு". பளிங்குக்கல் என்பது எதிரொளிக்கும் அளவுக்குப் பளபளப்பான கல் என்பது நாம் அறிந்ததே. பளிங்குக்கற்களால் செய்த மாளிகைகள் / கட்டடங்கள் உலகின் வியப்புகளாகக் கொண்டாடப்படுவதும் தெரிந்ததே Smile

இங்கோ அந்தச்சொல் "படிகம்" (எதிரொளிக்கும் கண்ணாடி) என்ற பொருளில் வந்திருக்கிறது. அருகில் உள்ளதை அப்படியே எதிரொளித்துக் காட்டும் திறன் வாய்ந்த கண்ணாடி.என்று புரிந்து கொள்ளலாம். (வள்ளுவர் காலத்தில் எத்தகைய கண்ணாடி / பளிங்கு இருந்தது என்ற ஆராய்ச்சி இங்கே தேவையில்லை).

"கடுத்தது" என்பதற்கு இந்தக்குறளை எடுத்துக்காட்டாகச் சொல்லி அகராதி "மிகுதல்" (நிறைதல்) என்று பொருள் சொல்கிறது.

ஆகவே, குறிப்பறிய "முகமாகிய கண்ணாடியை" உற்று நோக்குக Smile

அடுத்தது காட்டும் பளிங்குபோல்
தன் அருகில் இருக்கும் பொருளை எதிரொளித்துக் காட்டும் கண்ணாடி (பளிங்கு) போல 

நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்
நெஞ்சில் நிறைந்திருப்பதை முகம் காட்டி விடும்

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 30 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Aug 10, 2016 10:21 pm

#707
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் 
காயினும் தான்முந் துறும்

முதுக்குறைவு என்பதற்கு அகராதி சொல்லும் பொருள் 'பேரறிவு'. 

(முது + உறை  என்று வருகிறது. முது / முதுமை என்பது அறிவு பெருகிய நிலை. அது "உறைகிறது" / "உள்ளே வாழ்கிறது" என்பது தான் "முதுக்குறைவு".) 

அப்படியாக, இங்கே "உடல் உறுப்புகளுக்கும் அறிவு இருக்கிறது" என்ற அறிவியல் பாடம் வள்ளுவரிடமிருந்து Smile

பொருள் அடிப்படையில் பார்த்தால் கடந்த குறளின் மறுபதிப்பு - அகத்தின் உணர்வு முகத்தில் வெளிப்படும் என்கிறார். 

அதுவும் முந்திரிக்கொட்டை போல முந்திக்கொண்டு வெளி வந்து விடும் (மறைப்பது எளியவருக்குக் கடினம். கல்லுளி மங்கர்களுக்கு மட்டுமே அது இயலும்).

உவப்பினும் காயினும் தான்முந்துறும்
(உள்ளத்தில் இருக்கும்) விருப்பம் / மகிழ்ச்சி என்றாலும் வெறுப்பு / சினம் என்றாலும் முந்திக்கொண்டு வெளிக்காட்டுவதில்

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ
முகத்தை விடவும் பேரறிவு கொண்டது (ஏதாவது) உண்டோ? 
(இல்லை என்ற பொருள் தொக்கி நிற்கிறது)

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 30 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Aug 12, 2016 4:51 pm

#708
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி 
உற்றதுணர்வார்ப் பெறின்

நல்ல குழுவின் பண்புகளில் ஒன்று குறிப்பறிதல். தலைமை நினைப்பதை நிறையச்சொல்லாமலேயே உணர்ந்துகொள்ளும் திறன்.

ஒவ்வொரு முறையும் தலைமை பெரிய விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கத் தேவையே இல்லாமல் வேலைகள் எளிதாகவும், விரைவாகவும் நடக்கும்.

அப்படிப்பட்ட குழு உருவாக ஒருவேளை சிறிது காலம் எடுக்கலாம். என்றாலும், அத்தகைய ஒன்றைக் கட்டி அமைப்பதே தலைவனின் நோக்கமாக இருக்க வேண்டும்!

இந்தக்குறளில் "குழுவினரின் முகத்தைத் தலைவன் வெறுமனே பார்த்தால் போதும்" என்கிறார். அவர்களது "குறிப்பறிதல்" பண்பு அவ்வளவு உயர்ந்த அளவின் இருப்பதால் Smile

அகம்நோக்கி உற்றதுணர்வார்ப் பெறின்
(தன்) உள்ளத்தில்  என்ன இருக்கிறது என்பதை நோக்கி உணர்ந்து கொள்ளுவோரைப் பெற்றால் (துணையாக / குழுவில் கொண்டிருந்தால்)

முகம்நோக்கி நிற்க அமையும்
(அவரது) முகம் நோக்கி நின்றாலே (எல்லாம்) அமையும்
(வேண்டிய செயல்கள் எல்லாம் நடந்து விடும்)

என்ன செய்ய வேண்டும் என்று மனைவி கண்ணின் வழியே காட்டி, அதன் விளைவாக மிக விரைவாகச் செயல்படும் கணவன் உங்கள் நினைவுக்கு வரலாம். 

எனக்குத்தெரிந்து அப்படி நிறையப்பேர் உண்டு Laughing

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 30 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Aug 15, 2016 5:30 pm

#709
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் 
வகைமை உணர்வார்ப் பெறின்

ஒருவர் மிகச்சிறந்த நடிகராய் இருந்தாலொழிய அவரது கண்கள் உள்ளத்தில் இருப்பது பகையா நட்பா (அல்லது அப்படிக்குறிப்பாக ஒன்றும் இல்லையா) என்று பொதுவாகக் காட்டிக் கொடுத்து விடும்.

அதுவும் குறிப்பறிதல் என்ற பண்பு உள்ளோருக்கு இவற்றைக் கண்டு கொள்வது எளிது.

அப்படிப்பட்ட நடைமுறை உண்மையை இந்தக்குறள் எதுகையுடன் சொல்லுகிறது. (பகைமை / வகைமை)

கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்
வகை வகையாகக் கண் காட்டும் குறிப்புகளை (வேறுபாடுகளை) உணரும் திறமை ஒருவர் பெற்றிருந்தால் 

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும்
(அப்படிப்பட்டவர்களுக்கு, மற்றவரது உள்ளத்தில் உள்ளது) பகைமையா நட்பா அன்று (அவர்களின்) கண்களே சொல்லிவிடும் 

வள்ளுவர் இங்கே அமைச்சர்களுக்கான குறளாக இதை எழுதி இருக்கிறார் என்று நினைவில் கொள்ள வேண்டும்.  அதாவது, தமது மன்னன் / வேற்று நாட்டு மன்னன் / தூதுவர்கள் போன்றோரது பார்வையில் உள்ளது நட்பா போரா என்று அறியும் திறன்.

(அதை விட்டு விட்டு, ஒரு பெண் உண்மையில் நட்பாகவா / காதலாகவா / எதிர்ப்பாகவா எப்படிப்பார்க்கிறாள் என்று, காதலிக்க விரும்பும் ஆண்கள் கண்டுபிடிக்க முயன்றால் வெற்றிக்கு உறுதியெல்லாம் சொல்ல முடியாது Laughing - ஆழம் தெரியாமல் காலை விடும் முயற்சி அது)


Last edited by app_engine on Wed Aug 17, 2016 8:40 pm; edited 1 time in total

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 30 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Aug 15, 2016 9:06 pm

#710
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் 
கண்ணல்லது இல்லை பிற

"சிரைக்கப்போறவன் கத்தி இல்லாமல் போவானா" - பள்ளி வகுப்பில் எழுதும் கருவிகள் இல்லாமல் வருபவனை ஆசிரியர் திட்டப்பயன்படுத்தும் உவமை Wink

அமைச்சனாக இருக்க விரும்பும் ஒருவனுக்கு அப்படிப்பட்ட அளவுகோல் / கருவிகள் என்னென்ன?

"நுண்ணியம் என்பார்" என்ற சொல் பொதுவாக "நுட்பமான அறிவு உள்ளோர்" (அல்லது அப்படி உள்ளதாக சொல்லிக்கொள்வோர்) என்று பொருள்.  என்றாலும், அகராதியில் நாம் காணும் பலபொருள்களில் அமைச்சன் என்றும் வருகிறது. அப்படியாக, அமைச்சனுக்கான குறிப்பிடத்தக்க கருவி "குறிப்பளக்கும் கண்" Smile

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
"நுண்ணறிவு உள்ளோர்" என அறியப்படுபவர் பயன்படுத்தும் அளவுகோல் என்ன என்று ஆராய்ந்தால் 

கண்ணல்லது இல்லை பிற
அது வேறொன்றுமில்லை, கண் தான் என்று புரியும்!

மற்றவர்களின் உள்ளத்தில் உள்ள குறிப்பைத் தன் கண் கொண்டு நுட்பமாக அளக்க முடிந்தவனே நல்ல அமைச்சன். 

அவனுக்கு வேறு பெரிய கருவிகள் தேவையில்லை. 
("கண் அளக்காததைக்  கை அளக்குமா?" என்ற பழமொழியும் நினைவுக்கு வரலாம் - நேரடியான பொருத்தம் இல்லை என்றாலும்)

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 30 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Aug 16, 2016 5:58 pm

#711
அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் 
தொகையறிந்த தூய்மையவர்
(பொருட்பால், அமைச்சியல், அவையறிதல் அதிகாரம்)

அவை = மாந்தர் கூட்டம் (அல்லது, அறிவுடையோர் கூட்டம்)

எப்படிப்பட்ட மாந்தர் கூட்டத்தில் தற்போது இருக்கிறோம் என்று புரிந்து கொண்டு, அதற்கேற்பப் பேசுதல் / நடந்து கொள்ளுதல் என்ற வழிமுறைகள் இந்த அதிகாரத்தில்.  

அரசவை / அமைச்சரின் நடபடிகள் என்பன குறிப்பிட்ட சிலருக்குப் பொருந்தும். என்றாலும், இங்கேயுள்ள சில அறிவுரைகள் நாம் வேலை செய்யும் இடங்களில் கூடும் "அவைகளிலும்" (அல்லது பொதுவாக நாம் செல்லும் கூட்டங்களிலும்) பின்பற்றத்தக்கனவே!

ஒவ்வொன்றாக இந்த நல்ல நெறிகளைப்படிக்கலாம்!

முதல் குறளில் "பேச்சு" என்ற பொருள் வருகிறது. அவையறிதலில், இங்கே மூன்று பண்புகள் தேவை என்கிறார்.

1. சொற்களின் "தொகை" அறிதல் (தொகை - நிறையப்பொருட்கள் உள்ள ஒரு சொல். தொகுத்தல், கூட்டம், சேர்க்கை இப்படியெல்லாம் வரும். மட்டுமல்ல, பண்புத்தொகை / வினைத்தொகை இன்ன பிற சொற்தொகைகளும் உள்ளன.)

2. மனத்தூய்மை

3. "இப்படிப்பட்டோர் நிறைந்த அவை" , மற்றும் "என்ன பேசுகிறோம்" என "ஆராய்ந்து" பேசுதல்

சொல்லின் தொகையறிந்த தூய்மையவர்
சொற்களின் தொகை அறிந்த மனத்தூய்மை உள்ளவர்கள் 

அவையறிநது ஆராய்ந்து சொல்லுக
(எப்படிப்பட்ட) அவை (என) அறிந்து,  (அதையும் , சொற்களையும்) ஆராய்ந்து பேச வேண்டும்

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 30 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Aug 17, 2016 8:25 pm

#712
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் 
நடைதெரிந்த நன்மையவர்

இடை என்ற சொல்லுக்கு "நடு"(வில்) என்ற பொருள் நமக்கு நன்கு தெரிந்தது.

அதன் அடிப்படையிலேயே உடலின் நடுப்பகுதிக்கும் "இடை" என்று பெயர் வந்ததோ தெரியாது. (அகராதி  சொல்வதைப்பார்த்தால் "இடையர்" என்ற சொல்லும் அவ்விதமாகவே வந்ததாகத் தோன்றுகிறது. அதாவது, குறிஞ்சிக்கும் மருதத்துக்கும் "இடையில்" உள்ள நிலம், மேய்ச்சலுக்கு ஏற்றது, அங்கு கால்நடைகளை வளர்ப்போர் கூடுதல், எனவே "இடையர்")

இந்தக்குறளில் வரும் இடை என்பது  வேறு இரு பொருள்கள் - அதாவது "இடம்" மற்றும் "நேரம்" -  எனப்படுபனவோடு பொருந்துகிறது.

அதாவது, அவை அறிதல் = இடம் மற்றும் நேரம் உணர்தல். "எப்படிப்பட்ட இடத்தில், எந்த நேரத்தில்" என்று புரிந்து கொள்வதை "இடை தெரிந்து" என்கிறார்.

சொல்லின் நடைதெரிந்த நன்மையவர்
சொற்களின் நடை (தன்மை / போக்கு / வழிமுறை) தெரிந்த நன்மையானவர்கள் 

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக
இடம், நேரம் அறிந்து நன்றாக உணர்ந்து (அவற்றைச்) சொல்ல வேண்டும்

இடம்-பொருள்-ஏவல் என்பது அடிக்கடி நாம் பயன்படுத்தும் ஒன்று தான், அவையறிதலில் அவற்றின் பங்கு மிகக்கூடுதல்!

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 30 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Aug 17, 2016 11:17 pm

#713
அவையறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின் 
வகையறியார் வல்லதூஉம் இல்

அறியார் அறியார் என்று இரண்டு அடிகளிலும் வரும் ஓசை நயத்துடன், கூடவே அளபெடையும் சேர்த்து இசைமயமான குறள்.

பொருள் புரியவும் விளக்கவும் எளிதானதே.

அவை குறித்த அறிவில்லாமல் பேசுவோருக்கு, பேச்சின் வகையும் தெரியாது / திறனும் இருக்காது என்கிறார். 

நேரடியாக நாம் பலமுறை கண்ட ஒன்று இது.  "எந்த இடத்தில், யார் நடுவில், என்ன பேசுவது என்று தெரியாமல் உளறுகிறான்" என்று எத்தனை பேரை எத்தனை முறை திட்டி இருக்கிறோம் என்று கணக்கே இல்லை!

வேடிக்கை என்னவென்றால், யாருக்காக இந்த அதிகாரம் குறிப்பாக எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் தாம் அடிக்கடி "அவை அறியாமை" காட்டுவதில் பேர் பெற்றிருக்கிறார்கள் (அமைச்சர்கள்) Sad

அவையறியார் சொல்லல் மேற்கொள்பவர்
அவை அறியாமல் சொற்களைப் பேசுதலை மேற்கொள்பவர்கள்

சொல்லின் வகையறியார் 
சொற்களின் வகை அறியாதவர்கள் 

வல்லதூஉம் இல்
(சொற்களைப்பயன்படுத்த) வல்லவர்களும் அல்லர் 

அமைச்சர்கள் என்றால் தமிழகத்தில் என்றில்லை, வேறெங்கு பார்த்தாலும் (சொல்லப்போனால் உலகெங்கும்) இப்படிப்பட்ட உளறல் பேர்வழிகள் தான் நிறைந்திருக்கிறார்கள் என்பது வேதனையான ஒரு உண்மை!

app_engine

Posts : 9997
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 30 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 30 of 40 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum