Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 40 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jun 29, 2017 5:56 am

#933
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்


"போஒய்ப் புறமே" என்று இனிமையான அளபெடையின் ஓசை நயத்துடன் உள்ள செய்யுள்!

இதிலுள்ள புறமே என்பதைச் சில உரையாசிரியர்கள் பகைவர் என்றும் மற்றவர்கள் பிறர் / அடுத்தவர் என்றும் பொழிப்பதைக் காண முடிகிறது. மற்றவர்கள் என்பதே நம் நாளைப்பொறுத்தவரை சரியென்று படுகிறது. (பகை என்று உரை எழுதியோருக்குப் பாஞ்சாலி நினைவில் வந்திருக்கலாம் Laughing )

உருளாயம் ஓவாது கூறின்
(எப்போதோ) சூதாடி வந்த வருவாய் பற்றி ஓயாமல் கூறித் (தொடர்ந்து சூதாடுபவனுடைய)
(ஆயம் = வருவாய் ; ஆயக்காரன் - வரி வாங்குபவன், வருவாய்த்துறை)

பொருளாயம் போஒய்ப் புறமே படும்
பொருள் வருவாய் ஒழிந்து மற்றவர்களுக்குப் போய் விடும்

"முன்பெல்லாம் வென்றிருக்கிறேன், இழந்த பொருளை அடுத்த முறை மீட்பேன்" என்ற மூட நம்பிக்கையில் நடப்பதே சூதாட்டம். பேதைகளின் இந்த மனநிலை தான் இப்படிப்பட்ட கேளிக்கை வணிகம் நடத்துவோருக்கு மிகவும் வேண்டியது!

கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டிய எண்ணம். அதாவது, முட்டாள் தனமான / மூட நம்பிக்கை!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 40 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Sun Jul 02, 2017 3:03 am

#934
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்


எளிமையான மற்றும் நேரடியான பொருள் கொண்ட அழகிய குறள்!

சீரழிவு என்று இன்று வரையும் பயன்பாட்டில் இருக்கும் சொற்கூறு இந்தக்குறளில் வருவது குறிப்பிடத்தக்கது. புகழை அழிப்பது / நன்கு அமைந்திருக்கும் ஒன்றைக் குலைப்பது என்று நமக்கு மிகவும் அறிமுகமான ஒரு சொல்லாடல்.

ஒருவருடைய முறைப்படியான வாழ்வை அழிப்பதில் சூது எப்பேர்ப்பட்ட ஒன்று என்று சொல்லும் செய்யுள்!

சிறுமை பலசெய்து சீரழிக்கும்
(ஒருவருக்குப்) பலவிதமான இழிவுகளையும் தந்து (துன்பங்களை / சிறுமைகளை உண்டாக்கி) சீரழித்து விடுகின்ற

சூதின் வறுமை தருவதொன்று இல்
சூதை விடவும் (கூடுதலாய்) வறுமை தரத்தக்க ஒன்றுமில்லை!

இயற்கையாக மற்றும் செயற்கையாக வரும் பேரழிவுகள் ஒருவரது வாழ்வை ஒன்றுமில்லாமல் செய்யக்கூடும் என்பது நாம் நேரடியாகக்காண்பது. அது போலத்தான் விபத்துகளும் - ஒருவரது வாழ்க்கையை நொடியில் புரட்டிப்போடும் வலிமை வாய்ந்தவை.

என்றாலும், பொதுவாக இப்படிப்பட்டவை தவிர்க்க இயலாதவை. (முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒரு சில சூழல்களில் காப்பாற்றலாம் - என்றாலும் பல நேரங்களிலும் இவற்றைக் கட்டுப்படுத்துவது நம் கையில் இல்லை).

ஆனால், சூதாட்டம் 100% நம்மால் கட்டுப்படுத்தவல்ல ஒன்றே!

நம் கைக்குள் இருந்து கொண்டே நம்மை அழிக்கும் வல்லமை வாய்ந்தவற்றில் சூதாட்டத்தை விடப்பெரிய கெடுதல் இல்லை என்பதை உணர்வோம்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 40 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Sun Jul 02, 2017 9:16 pm

#935
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகியார்


கவறு = சூதாடும் கருவி (இன்றைக்கு எண்ணற்ற சூதாடும் எந்திரங்கள் உள்ளன, என்றாலும் பகடை எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. வள்ளுவரின் நாட்களில் இருந்த கருவியைக் கவறு என்கிறார்).

இதோடு எதுகையாய் வருவதும் ஒரு புதிய சொல்லே - இவறு(தல்) என்றால் "விரும்புதல்" என்று பொருள் இருப்பதாக அகராதி சொல்லுகிறது. (ஒரு வேடிக்கை தெரியுமா - இந்தச்சொல்லுக்கு "மறத்தல்" என்றும் அதே அகராதி பொருள் சொல்லுகிறது. Laughing )

இனி இந்தச்செய்யுளைப் படிப்பது எளிதே!

கவறும் கழகமும் கையும் தருக்கி
சூதாடும் கருவியும், அதற்கான கழகமும் (இடம் / கூட்டம்), ஆடுங்கையும் பெரிதென்று எண்ணி

இவறியார் இல்லாகியார்
விரும்பி இருப்போர், இல்லாதவர் ஆகி விடுவார்கள். (உள்ளதை எல்லாம் இழந்து நிற்பார்கள்)

தருக்கி இவறியார்  = பெருமையான ஒன்றாக எண்ணிக் காதல் கொள்வோர். "நான் எப்படியெல்லாம் பகடை சுழற்றுவேன் தெரியுமா?" என்று அகந்தையுடன் இருப்போர்.

அதையே விரும்பி (அல்லது விடமுடியாமல் அடிமையாகி) வாழ்வோர், மற்ற எல்லாவற்றையும் இழந்து நிற்பர். (பாண்டவரும் பாஞ்சாலியும் நினைவுக்கு வரலாம்).

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 40 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jul 05, 2017 4:17 am

#936
அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும் 
முகடியான் மூடப்பட்டார்

617ஆம் குறளில் கண்டு, பின்னர் மறந்து போய் விட்ட "முகடி" என்னும் மூதேவியை இங்கு மீண்டும் நினைவு படுத்துகிறார் வள்ளுவர் - சூதாடிகள் வறுமையில் வீழ்ந்து மூதேவியால் மூடப்படுவார்கள் என்று விவரிக்கும் செய்யுள்.

அகடு என்றால் வயிறு என்றும் அகராதியில் காண்கிறோம். (வழக்கம் போல அங்கே இந்தக்குறள் தான் மேற்கோள்).

சூதென்னும் முகடியான் மூடப்பட்டார்
சூது எனப்படும் மூதேவியால் மூடப்பட்டவர்கள்
(விழுங்கப்பட்டவர்கள் / அணைக்கப்பட்டவர்கள் என்றெல்லாம் உரைகள்)

அகடாரார் அல்லல் உழப்பர்
வயிறார உண்ணமுடியாத அளவுக்குத் துன்பங்களில் மூழ்குவார்கள்

சாப்பாட்டுக்கே வழியில்லாமல் போவார்கள் என்று கொள்ளலாம். 

அவ்வளவு கொடியநிலைக்குச் செல்லாவிடினும் கடன் போன்ற தொல்லைகள் நிறைந்து உணவு உள்ளே செல்லாத அளவுக்குத் துன்பமான மனநிலையில் கிடப்பார்கள் என்றும் கொள்ளலாம்.

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 40 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jul 06, 2017 12:09 am

#937
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் 
கழகத்துக் காலை புகின்

கழகம் Wink 

சூதாடச்செல்லும் இடத்திற்கு இந்தப்பெயரை வள்ளுவர் பயன்படுத்துவதை இரண்டாம் முறையாகக் காண்கிறோம்.

அங்கே புகுந்து காலத்தைக் கழிப்பவனை விட்டு செல்வமும் நல்ல பண்புகளும் ஓடிப்போய் விடும் என்று நினைவுறுத்தும் செய்யுள் தான் இது.

கழகத்துக் காலை புகின்
(சூதாடும்) கழகத்தில் காலத்தைப் போக்கப்புகுந்தால்

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
பழமையாக வந்த செல்வமும் (வழிவழியாக வந்த பொருள் உடைமைகள்) நல்ல பண்புகளும் அழிந்து விரும் 

காலை என்பதை மற்ற உரைகள் சொல்வது போன்று காலம் என்று மேலே இட்டிருக்கிறேன். 

இவற்றோடு மணக்குடவரின் "காலைப்பொழுது" என்ற கருத்தையும் சேர்த்துப்புரிந்து கொள்ள வேண்டும். 

மனமகிழ்வுக்கு என்று வேலை முடிந்த பின் மாலைப்பொழுதில் செல்லுவதும், தீய பழக்கங்களில்நேரத்தையும் பொருளையும் செலவழிப்பதும் உலக வழக்கம். 

ஆனால், காலையிலேயே அப்படிப்பட்ட இடங்களுக்குச் செல்லும் நிலையை அடைபவன் அப்பழக்கத்தின் "அடிமை" என்ற அழிவு நிலையில் இருப்பவன் என்று உணரமுடியும். (அதாவது, அது இல்லாமல் அவனால் வாழவே முடியாது என்ற அளவிலான அடிமைத்தனம் / போதை).

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 40 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jul 07, 2017 5:09 pm

#938
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து 
அல்லல் உழப்பிக்கும் சூது


சூதை மேற்கொள்ளுவோருக்கு அடுத்தடுத்து என்னென்ன "தொடர்" விளைவுகள் வரும் எனச்சொல்லும் செய்யுள்.

1.பொருள் கெடுக்கும் 
2. பொய் சொல்ல வைக்கும் (நேர்மையற்ற வாழ்வுக்கு வழிவகுக்கும்)
3. அருள் கெடுக்கும்

அன்றாட வாழ்வுக்குப் பொருள் வேண்டும் (உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத்தேவைகள்). ஏதாவது ஒரு வழியில் அது கெட்டால் அடுத்து என்ன செய்வதென்று எண்ணத்தொடங்குவோம்.

ஒரு வேளை நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சூழலில் பொருள் கெட்டால் (எ-டு: இயற்கைப்பேரிடர்) அப்போதும் நம் நல்ல பண்புகள் நம்மை வழிநடத்தலாம். அதாவது, மற்றவரிடம் உதவி கேட்டல், மீண்டும் எப்படி அதை ஈட்டலாம் / உழைக்கலாம் என்ற உந்துதல் எல்லாம் உண்டாகும்.

ஆனால், சூதில் பொருளை விட்டவன் பண்பையும் இழந்த நிலையில் இருப்பான். அவனுக்கு நல்ல வழிகளில் எண்ணங்கள் செல்லாமல் பொய் / ஏமாற்றுதல் போன்ற நேர்மையற்ற வழிகள் தான் கண்ணில் படும் என்று இங்கே வள்ளுவர் சொல்வது நடைமுறையில் காண்பதே. 

அப்படியாக, சங்கிலித்தொடர் - சூது -> பொருள் இழப்பு -> நேர்மையற்ற வாழ்வு -> அருள் இழப்பு (தன்னிடம் மிச்சமுள்ள நல்ல பண்புகள் இழப்பு, மற்றவரிடம் நற்பெயர் இழப்பு, இறைவனது அருள் இழப்பு என்றெல்லாம் கொள்ளலாம்).

சூது பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ
சூது பொருளை அழித்துப் பொய் மேற்கொள்ளும்படிச்செய்யும் (அவ்வழியே) 

அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும்
அருளையும் அழித்துத் துன்பங்களில் உழல வைக்கும்

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 40 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jul 07, 2017 5:26 pm

#939
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்


நேரடியான, எளிய குறள்.

சூதில் உழலுபவன் என்னவெல்லாம் இழப்பான் என்ற பட்டியல்.

ஆயங் கொளின்
சூதாட்டத்தை மேற்கொண்டால்

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் அடையாவாம்
உடை, பொருட்செல்வம், உணவு, புகழ், கல்வி என்ற ஐந்தையும் அடைய மாட்டோம்

இந்தப்பட்டியலின் வரிசையைச் சற்றே மாற்றினால் மிகப்பொருத்தம்:

உணவு
உடை
(மற்ற) பொருட்செல்வங்கள்
கல்வி
புகழ் / பெயர் (ஒளி)

இவை எல்லாவற்றையும் சூதில் ஈடுபடுபவன் அடைய மாட்டான்.

ஒருவேளை இவையெல்லாம் முன்னமேயே இருந்தால், சூதின் வழியே அவற்றையெல்லாம் இழந்தும் போவான்!


app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 40 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jul 07, 2017 5:57 pm

#940
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்


அளபெடையின் ஓசை நயத்துடன் உள்ள அதிகாரத்தின் இறுதிக்குறளில் சற்றே மாறுபட்ட பொருள்.

சூதால் வரும் துன்பங்களின் பட்டியலை முடித்து விட்டு ஒரு வழியாகத் தத்துவம் பேசத்தொடங்குகிறார் Smile

தத்துவம் என்றாலே குழப்பம் தானே? பொருள் பார்க்கலாம்.

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல்
(பொருளை) இழக்கும் தோறும் மேலும் மேலும் விரும்பும் சூது போன்றது

துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர்
துன்பத்தில் உழலும் தோறும் உயிர் மீது வரும் காதல்

துன்பம் பெருகும் போது உயிர் மீது விருப்பம் வருமா வெறுப்பு வருமா என்பது எளிதில் விடை சொல்லத்தக்க கேள்வி அல்ல. துன்பத்தின் உச்சமாகத்தான் மனப்பிறழ்வு நோய்களும், தற்கொலைகளும் என்பது நடைமுறை. குறைந்தது கள்ளுண்ணுதல் போன்ற அடிமையாகும் பழக்கங்களுக்குப் பலரும் வாழ்வின் துன்பங்களையே காரணம் காட்டுவதுண்டு.

அப்படிப்பார்த்தால், துன்பம் பெருகப்பெருக்க உயிர் மீது காதல் குறையத்தானே செய்கிறது என்ற கேள்வி எழுகிறது.

ஆனால், இங்கே வள்ளுவர் "காதல் கூடும்" என்கிறார் Smile சரி சரி, தத்துவம் என்றால் அப்படித்தானே?

எது எப்படியோ, பொருள் இழக்க இழக்க "எப்படியாவது அடுத்த முறை வெல்ல வேண்டும்" என்ற தவறான உந்துதல் ஒருவருக்குச் சூதின் மீது காதல் உண்டாக்குகிறது என்பது உண்மையே Smile

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 40 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jul 10, 2017 6:23 pm

#941
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று

(பொருட்பால், நட்பியல், மருந்து)

தீமையான பழக்கங்கள் குறித்த அதிகாரங்களை முடித்து விட்டு மருந்துக்கு வந்திருக்கிறார் வள்ளுவர். (முந்தைய அதிகாரங்களின் பழக்கங்களில் உழல்வோருக்குக் கூடுதல் வேண்டி வரும் என்ற எண்ணத்திலா தெரியாது - எப்படி இருந்தாலும் நோய்கள் தாக்காதோர் யாரும் இலர் என்பதே உண்மை. அப்படியாக எல்லோருக்குமான அறிவுரைகள் வருகின்றன).

ஏன் இதை நட்பியலில் வைத்தார்கள் என்று தெரியவில்லை - "அந்த மருந்து நல்லது, இது நல்லது" என்று நண்பர்கள் அறிவுரை சொல்லி அறுத்து விடுவார்கள் என்று தெரிந்து செய்ததோ தெரியாது. Laughing

நோயே வராமல் தடுப்பது நடவாத ஒன்று என்றாலும், உடல்நலம் காப்பதில் ஒருவரது உணவு மற்றும் பழக்கங்களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது என்பது தெரிந்ததே. (மரபு வழி வரும் நோய்களையும் எதிர்கொள்ள இவற்றைக் கட்டுப்படுத்தும் தேவை இருக்கலாம்).

மருந்து எனும் இந்த அதிகாரத்தில் இவற்றையெல்லாம் பற்றி என்னென்ன வருகிறது என்று பார்ப்போம்,

நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று
கற்ற அறிஞர்கள் (நூலோர்) வளி முதலாக எண்ணிய மூன்று கூறுகளும்
(சித்த மருத்துவர் ஒருவரது கட்டுரையின் அடிப்படையில், "வளி-அழல்-ஐயம்" என்னும் மூன்று கூறுகள்! உடலில் உள்ள காற்று / வெப்பம் / (நீர்க்)கோழை என்று எளிமையாகச்சொல்லலாம்; வாதம் / பித்தம் / கபம் என்று பழைய சொற்களிலும் சொல்லலாம்)

மிகினும் குறையினும் நோய்செய்யும்
(உடலில்) மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்

முன்னோர்களின் மருத்துவமுறைகளின் அடிப்படைக்கொள்கையை இங்கே முன்வைக்கிறார்.

இந்தக்கூறுகள் உடலில் கூடினாலோ குறைந்தாலோ நோய்கள் வருமென்பதால், இவற்றைச் சமநிலையில் காத்து வருவதற்கே மருந்துகள் / உணவு / பழக்கங்கள் இருக்க வேண்டும் என்று சொல்ல வருகிறார்.

நல்ல தொடக்கம்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 40 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jul 10, 2017 10:46 pm

#942
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்


சிறுவயது முதலே சொல்லிக்கொடுக்கப்பட்ட பாடம் "முன்பு உண்டது செரித்த பின்னரே அடுத்த உணவு" Smile

அந்த எளிமையான கருத்தை நேரடியாகச் சொல்லும் குறள்.

அருந்தியது அற்றது போற்றி உணின்
சாப்பிட்ட உணவு செரித்து விட்டதை அறிந்து (அதன் பின் மட்டுமே) உண்டால்

யாக்கைக்கு மருந்தென வேண்டாவாம்
உடலுக்கு "மருந்து" என்று ஒன்றும் வேண்டியதில்லை

பெரும்பாலான நோய்களுக்குக்காரணம் செரிக்காமல் இருத்தல், அளவுகடந்து உண்ணுதல் மற்றும் உடலோடு ஒவ்வாமை. அப்படிப்பட்ட நிலையில் "அற்றுப்போகச்" செய்யாமல் மேலும் மேலும் உண்ணுதல் கூடுதல் குழப்பத்தையே உண்டாக்கும்.

மருத்துவர்கள் இன்று கற்பிக்கும் இக்கருத்தை மிக எளிதான சொற்களில் வள்ளுவர் விளக்கி இருக்கிறார்.

என்றாலும், "மருந்தென வேண்டாவாம்" கொஞ்சம் உயர்வு நவிற்சியே!

எப்பேர்ப்பட்ட நிலையிலும் நோய் வரலாம் என்பது தான் நம் நாளைய உண்மை நடைமுறை Sad

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 40 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jul 11, 2017 5:04 pm

#943
அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு


இதற்கு முந்தைய குறளின் அதே கருத்து.

கொஞ்சம் விரிவு படுத்தி ("அளவறிந்து") இங்கே மீண்டும் பகிருகிறார். சாப்பிட வாருங்கள் Wink

அற்றால் அளவறிந்து உண்க
(முன்பு உண்ட உணவு) செரித்து விட்டால் பின்னர் அளவு அறிந்து உண்ணுங்கள்
(பசியெடுத்தாலும் அளவோடு உண்ணுங்கள்)

அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு
அதுவே உடம்பு பெற்றவன் நீண்ட நாள் வாழுவதற்கான வழியாகும்

மருந்து என்ற கருத்தில் மட்டும் பார்த்தால், எளிய / தெளிவான அறிவுரை. அதில் ஐயமில்லை.

அதிலிருந்து சற்றே விலகி, அது என்ன "உடம்பு பெற்றான்" என்று கொஞ்சம் ஆராயலாமா? என்ன பொருளில் அப்படிப்பட்ட ஒரு சொல்லாடல்?

நாம் எல்லோருமே "உடம்பு" என்று ஒன்று உள்ளவர்கள் தானே? அப்படி ஒன்று இல்லாதோர் எதற்கு மருந்து / உணவு என்றெல்லாம் கவலைப்படப்போகிறார்கள்? (அதுவும் மூளை என்று ஒன்று இல்லாவிட்டால் "கவலை" என்ற ஒன்றும் இல்லை தானே? உடம்பே இல்லை - பிறகு என்ன உணவு, மருந்து, கவலை எல்லாம்?) புரியவில்லை. ஒரு வேளை வெண்பா வரையறைக்கு வேண்டி ஒரு சொல் இட்டதாக எடுத்துக்கொள்ளலாம்.

சில உரையாசிரியர்கள் "உயர்வான மானிடப்பிறவி எடுத்திருப்பவன்" என்று இதற்கு விளக்கம் சொல்லுவதைக்காணலாம். வள்ளுவர் மறுபிறவிக்கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர் என்பது முன்னமேயே பல குறள்களிலும் கண்டது. அந்த அடிப்படையில் பார்த்தால், அப்படியும் இருக்கலாம் தான். Embarassed

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 40 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jul 11, 2017 5:49 pm

#944
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து


"உணவே மருந்து" என்ற கோட்பாடு நம் முன்னோர்களிடம் இருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. இங்கே திருக்குறளில், மருந்து என்ற தலைப்பில் மீண்டும் மீண்டும் உணவு குறித்தே எழுதப்படுவது அதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.

அதாவது, வள்ளுவர் எழுதினது நோய்க்கான வேறு சில காரணங்கள் (மரபு வழிக்கடத்தல்கள், கிருமிகள் போன்றவை) குறிப்பிடத்தக்க அளவில் ஆராயப்படாத காலம் என்பதாக எடுத்துக்கொள்ளலாம். இந்த அதிகாரம் முழுவதிலும் அப்படிப்பட்ட காரணிகள் குறிப்பிடப்படவில்லை எனலாம்.

சிறிய அளவில் சுற்றுச்சூழல் குறித்து உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம் (முதல் குறளில் "வளி-அழல்-ஐயம்" என்று வருகிறது.) என்றாலும், இந்த அதிகாரத்தில் பெருமளவில் பசி, உணவு, செரிப்பு என்ற அளவில் தான் மருந்து குறித்த கருத்துக்கள் என்று புரிந்து கொள்வதில் தவறில்லை. மற்றபடி நாடி பிடித்தல், நோய்க்கான மருத்துவம் போன்ற சில குறிப்புகள் உள்ளன. ஆனால், "நோய்க்கான காரணம்" என்ற அளவில் பார்த்தால் உணவே விஞ்சி நிற்கிறது!

அற்றது அறிந்து
(முன்பு உண்டது) செரித்ததை அறிந்து

மாறல்ல கடைப்பிடித்து
மாறுபாடில்லாத உணவு வகைகளைக் கடைப்பிடித்து
(உடலுக்கு ஒத்துக்கொள்ளும் உணவு ; மேலும், ஒன்றோடொன்று ஒத்துக்கொள்ளும் உணவுகள். மணக்குடவர் சொல்லும் படி, சம அளவில் தேனும் நெய்யும் கலந்தால் நஞ்சாகுமாம்)

துய்க்க துவரப் பசித்து
நன்றாகப்பசித்த பின்னரே உண்ணுங்கள்!

முன்பு உண்டது "அற்றால்" தான் பசி வரும் என்று நினைக்கிறேன். அப்படியாக, ஒரே கருத்தை இரண்டு முறை சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம் Wink


app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 40 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jul 12, 2017 6:42 pm

#945
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு


மாறுபாடு - ஊறுபாடு என்று அழகான எதுகை ஓசை நயம் உள்ள பாடல். அதை விடுத்துப்பார்த்தால், நாம் இது வரை படித்த அதே கருத்துக்கள் தாம்.

1. உடலுக்கும் தமக்குள்ளும் மாறுபாடு இல்லாத உணவு வகைகளை மட்டுமே உண்ணவேண்டும். (நீரிழிவு உள்ளோர் சர்க்கரை சேர்க்காதீர், அல்லாதோரும் நெய்யும் தேனும் கலந்து உண்ணாதீர் போன்றவை)
2. அவற்றையும் அளவாகவே உண்ணுங்கள்

மாறுபாடு இல்லாத உண்டி
மாறுபாடுகள் இல்லாத உணவுப்பொருட்களை மட்டும்

மறுத்துண்ணின்
அளவாக உண்டால்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு
உயிர்களுக்கு நோய்கள் (துன்பங்கள்) வருவதில்லை

"மறுத்துண்ணின்" - இந்தச்சொல்லாடல் நம் மக்களிடம் பொதுவே காணப்படும் ஒரு பழக்கத்தை நினைவூட்டுகிறது. அதாவது, "சாப்பிடுங்க" என்று யாராவது சொல்லும்போது "இல்லீங்க, பரவால்லீங்க" என்று மறுப்பது தான் அழகு / பண்பு / மேம்பட்ட தன்மை என்பது.

உண்மையிலேயே பசி வயிற்றைக்கிள்ளும் போதும், அடக்கமாக "மறுப்பது" ஒரு தென்னிந்தியப்பழக்கமாகத் தென்படுகிறது. (தமிழில் "உண்ணீர், உண்ணீர் என்று ஊட்டாதார் தம்மனையில் உண்ணாமை" என்று இதை ஒரு சிறந்த பண்பாகவே வைத்திருக்கிறார்கள்).

மேற்கத்தியர்களிடம் இவ்விதமான மறுத்தல் உதவாது. "சரி" என்று நம் மறுப்பை ஏற்றிக்கொண்டு அவர்கள் வேலையைப்பார்க்கப் போய் விடுவார்கள். மீண்டும் மீண்டும் 'உங்களை சாப்பிடாமல் விடமாட்டேன்' என்று வலியுறுத்திக் கொஞ்சுவதெல்லாம் நம்ம வீடுகளில் தான்!
(அதாவது, அவர்களிடம் வெட்கப்பட்டுக்கொண்டு மறுத்தால் நமக்கு வயிறு காய்வது உறுதி Laughing )

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 40 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jul 17, 2017 9:52 pm

#946
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்


உண்ணும் உணவின் அளவு குறித்த அறிவுரை இங்கே! எதிரெதிராக இரண்டை ஒப்பீடு செய்து இங்கே அறிவுறுத்துகிறார்.

இழிவு (குறைவு, அதாவது அளவான தீனி) X கழிபேர் (பெருந்திண்டி - உண்ணுவதற்கென்றே வாழ்வோர்)

ஐயமே இல்லை யாருக்கு நல்ல உடல்நலம் இருக்கும், யாருக்கு நோய் பெருகும் என்பதில். மட்டுப்படுத்தாமல் உண்ணுவோருக்கு வரும் நோய்களுக்குக் கணக்கே இல்லை.

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல்
குறைவான அளவில் உண்ணுபவனுக்கு இன்பம் வருவது போன்றே

கழிபேர் இரையான்கண் நோய்
மிகப்பெரிய அளவில் உண்ணுபவனுக்கு நோயும் வரும்!

கூடுதல் எடையின் விளைவாக வரும் உடல்நலக்குறைவுகள் / நோய் குறித்த உண்மைகளை வலையில் தேடினால் கிடைக்கும் புள்ளிவிவரங்கள் நம்மை மலைக்க வைக்கும்!
(குறிப்பாக அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இது குறிப்பிடத்தக்க ஒன்று, நான் தற்போது வாழும் பகுதியெல்லாம் இதில் மிகவும் கொடுமையான நிலையில் உள்ளது!)

அளவொரு உண்டு வளமோடு வாழ்வோம்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 40 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jul 17, 2017 10:04 pm

#947
தீயளவன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயளவின்றிப்படும்


"தீயாப்பசிக்குது" என்று சொல்வதைக்கேட்டிருப்போம். தீயைப்பசிக்கு உருவகமாக்குதல் வள்ளுவர் காலத்திலேயே இருக்கிறது என்று காட்டும் குறள் Smile

மற்றபடி இதுவரை தொடர்ந்து சொல்லப்படும் "பசிக்கு மட்டும் புசி" என்ற அதே அறிவுரை தான் இந்தக்குறளிலும்!

தீயளவன்றித் தெரியான்
பசியின் அளவு என்ன என்று புரிந்து கொள்ளாமல்

பெரிதுண்ணின்
கூடுதலாக (அளவின்றி) உண்டால்

நோயளவின்றிப்படும்
நோயும் அளவின்றி (நிறைய) வரும்!

நல்ல அறிவியல் உண்மை இங்கே.

பசியின் அளவுக்கு உண்டால் நன்றாகச்செரித்து உடலுக்கு நலம் செய்யும். அந்த அளவை மிஞ்சி உள்ளே தள்ளப்படும் எதுவும் உடலுக்குள் குழப்பம் / நோய் மட்டுமே உண்டாக்கும் என்பது மிக எளிய ஆனால் குறிப்பிடத்த உண்மை!

"அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு" என்பது அடையாளமாக மட்டுமல்ல, நேரடியாகவும் உண்மை தானே?)

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 40 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jul 18, 2017 5:45 pm

#948
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச்செயல்


தமிழ்நாட்டில் படித்த எல்லோருக்கும் நன்கு அறிமுகமான குறள் Smile

அதனால் இதன் பொருள் எல்லோருக்கும் ஏற்கனவே நன்கு தெரிந்த ஒன்று தான்! அருமையாகவும் கோர்வையாகவும் ஓசை நயத்தோடும் மொழிநயத்தோடும் மருத்துவத்தின் அடிப்படைப்படிகளைச் சொல்லும் செய்யுள்.

நோய்நாடி
(வெளிப்படையாகத்தெரியும்) நோயினை ஆராய்ந்து

நோய்முதல் நாடி
(அந்த) நோய்க்கான காரணத்தை ஆராய்ந்து

அதுதணிக்கும் வாய்நாடி
அதைத் தணிக்கும் (குறைக்கும் / நீக்கும்) வழியினை ஆராய்ந்து

வாய்ப்பச்செயல்
(மருத்துவத்தை) சரியான / பொருத்தமான விதத்தில் செயல்படுத்த வேண்டும்

(முட்டாள்களைத்தவிர மற்ற) எல்லோருமே கிட்டத்தட்ட இந்த நான்கு படிகளாகத்தான் தமக்கு வரும் நோயைக் கையாளுகிறார்கள்.

"குழந்தை வாந்தி எடுத்துருச்சா, காலைல என்ன சாப்பாடு கொடுத்த, ஓ அதுவா, செமிச்சுருக்காது, கொஞ்சம் இதை அரைச்சு சங்கில் ஊத்து, சரியாயிடும்"

பெரும்பாலும் அப்படியே சரியாய் விடும். இல்லாவிட்டால் மட்டும் மருத்துவரை நாடினால் போதும்.

இதற்கான மு.க.வின் உரையில் அவர் சேர்த்திருக்கும் ஒன்று குறிப்பிடத்தக்கது. " உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்" applause


-------

https://ilayaraja.forumms.net/viewtopic.forum?t=288

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 40 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Oct 19, 2017 8:08 pm

#1057
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து


இரப்பாரை எள்ளுவது என்பது சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் ஒன்று. சொல்லப்போனால், "பிச்சக்காரப்பய", "கடங்காரன்" என்பனவெல்லாம் வசைச்சொற்களாக மற்றவர்களையும் ஏசுவதற்குப் பயன்படுவது எப்போதும் காணும் ஒன்று. அந்த அளவுக்கு இரப்போர் மீதான இகழ்ச்சி பொதுவில் உள்ள ஒன்று.

இந்த அடிப்படையில் தான் அரசாங்கம் ஏழைகளுக்கென்று சலுகைகள் கொடுக்கும்போது பொருமுவது (இலவசம் கொடுத்தே சோம்பேறியாக்கீட்டாங்க, அரசுக்கு இதனால் தான் கடன் தொல்லை).

அதே நேரத்தில்,  நிறுவனங்களுக்கும் பெரும்பணக்காரர்களுக்கும் அதை விடக்கூடுதல் சலுகைகள் கொடுக்கப்படும்போது புகழ்வதும் (வளர்ச்சிக்காக வரிச்சலுகை, வேலைவாய்ப்புகள் பெருகும், ஆகா ஓகோ, இன்ன பிற)  பொதுவெளியில் நிகழ்கிறது.

அற்பமான சில சலுகைகளை வாங்கிக்கொண்டு ஏழை மீண்டும் உழைத்துக்கொண்டு தான் இருக்கிறான் என்பதும், சலுகை வாங்கிய பணக்காரனோ மீண்டும் வங்கிகளை வஞ்சித்து வாராக்கடன் / தள்ளுபடி  என்றெல்லாம் ஏய்த்து விட்டுப் பின் நிறுவனங்களைப்பூட்டுவதும் அடிக்கடி காண்பதே!

இரப்போரை இகழ்ந்து எள்ளாதிருக்க ஊக்குவிக்கும் செய்யுள் இது!

இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின்
இகழ்ந்து ஏளனம் செய்யாமல் கொடுக்கும் பண்புள்ளோரைக்கண்டால்

மகிழ்ந்துள்ளம்  உள்ளுள் உவப்பது உடைத்து
(இரப்பவரின்) உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள் இன்பம் அடையும்

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948 - Page 40 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum