Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 21 of 40 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 30 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 21 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Aug 12, 2015 6:24 pm

#468
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று 
போற்றினும் பொத்துப் படும்

வருத்தம் என்பது இங்கே "முயற்சி" என்ற பொருளில். ("உடல் வருத்தித் தவம் இருந்தான்" என்பது போன்ற பயன்பாடு)

ஆறு = வழி என்று முன்னமேயே பார்த்திருக்கிறோம்.

அப்படியாக, "ஆற்றின் வருந்தா வருத்தம்" = சரியான வழியில் செய்யப்படாத முயற்சி Smile

அதாவது, "இன்ன வழி / இன்ன விளைவுகள் என்று தெரிந்து செயல்படாத முயற்சி"!

ஆற்றின் வருந்தா வருத்தம்
சரியான வழியில் செய்யப்படாத முயற்சி

பலர் நின்று போற்றினும்
பலர் நின்று துணை செய்தாலும்

பொத்துப்படும்
குறையில் தான் முடியும்

பொத்துப்படும் என்ற பயன்பாட்டைப் புரிந்து கொள்ள எளிய எடுத்துக்காட்டு :
மண் குடம் "பொத்துப்போனால்" ஒன்றுக்கும் உதவாது. நீர் வைக்க முடியாது, சமையல் செய்யவும் பயன்படாது!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 21 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Aug 14, 2015 6:57 pm

#469
நன்றாற்றலுள்ளுந் தவறுண்டு அவரவர் 
பண்பறிந்தாற்றாக் கடை

"பாத்திரம் அறிந்து பிச்சை போடு" என்று சொல்லும் குறள் Smile

"மனிதரின் பண்புகள் அறிந்து செயல் வகை" என்ற விதத்தில் இந்த அதிகாரத்துக்கு மிகவும் பொருத்தமான குறள்.

எல்லா அறநூல்களும் சொல்வது "நன்மை செய்" என்று. 

அதே நேரத்தில், அவரவர் பண்பு அறிந்து நன்மை செய்யா விட்டால் தவறு என்று சுட்டிக்காட்டுவது இந்த நூலின் சிறப்பு.

அவரவர் பண்பறிந்தாற்றாக் கடை
அவரவருடைய பண்புகள் அறிந்து செய்யாவிட்டால்

நன்றாற்றலுள்ளுந் தவுறுண்டு
நன்மை செய்வதிலும் தவறு உண்டு (தவறான விளைவுகளைத் தரும்)

"சர்க்கரை (நீரிழிவு) நோய் உள்ளவருக்கு இனிப்பு வழங்கக்கூடாது" என்கிறார். 

சரி தானே?

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 21 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Sun Aug 16, 2015 1:24 am

#470
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு 
கொள்ளாத கொள்ளாது உலகு

எள்ளாத = இகழப்படாத Smile

கொள்ளாத = பொருந்தாத - ஒப்புக்கொள்ளாத / சேர்த்துக்கொள்ளாத என்று இரு பொருள்களில் இங்கே வருகிறது!

"எண்ணிச் செயல் வேண்டும்" என்பது இந்த அதிகாரத்துக்கேற்ற கருத்து Smile

இவை மூன்றும் இந்தக்குறளில் எப்படி ஒன்று சேர்கின்றன என்பது வள்ளுவரின் இணைப்புத்திறன்!

உலகு தம்மோடு கொள்ளாத கொள்ளாது
உலகத்தவர் தமக்குப் பொருந்தாதவற்றை (கருத்துகள் / செயல்கள் போன்றன) ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் 

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும்
(ஆதலால், அது / அவர்கள்) இகழக்கூடாது என்று எண்ணிச் செயல்பட வேண்டும்.

அதாவது, உலகத்தினர் இகழத்தக்கவற்றைத் தவிர்த்து, அவர்கள் ஏற்றுக்கொள்பவை மட்டுமே செய்ய வேண்டும் என்கிறார்.  நிறைய சூழ்நிலைகளில் அது சரி என்றாலும், முழுமையான அளவில் ஏற்புடையது அல்ல!

எப்படியானாலும், விளைவு இகழ்வா ஏற்பா என்று தெரிந்து செயல்பட வேண்டும் என்ற விதத்தில் சரியே. 

யாருக்கு ஏற்பு  / யாருடைய இகழ்வு கூடாது என்பது சூழ்நிலைக்கேற்ப நாம் தீர்மானிக்கலாம். 

அதாவது, நமது உலகு நாம் தீர்மானிப்பது Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 21 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Aug 18, 2015 10:57 pm

#471
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் 
துணைவலியும் தூக்கிச் செயல்
(பொருட்பால், அரசியல், வலியறிதல் அதிகாரம்)

அதிகாரத்தலைப்பில் வரும் வலி = வலிமை (வேதனை அல்ல) Smile

இது மன்னனுக்குள்ள போர் அறிவுரை. நம் நாளிலும் அரசியலில் பயன்படுவது அறிந்ததே!

என்றாலும், நம் நாளைய சூழலில், வணிகத்துக்கும் இதைப் பொருத்த முடியும் Wink

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும்
செயலின் வலிமையும் (அளவும்), தன்னுடைய வலிமையும், எதிரியின் வலிமையும், கூட்டணியின் வலிமையும் 
(ஆகிய இவை எல்லாவற்றையும்)

தூக்கிச் செயல்
எண்ணி (ஆராய்ந்து, கணக்கில் எடுத்து, எடை போட்டு), அதற்கேற்பச் செயல் படவேண்டும். 

தூக்கம் என்ற சொல்லுக்கு மலையாளத்தில் எடை என்ற பொருள் இருப்பது நினைவுக்கு வருகிறது. (துலாக்கோலில் "தூக்கி" அளப்பதாலோ என்னவோ) Smile  மேலும், அந்த மொழியில் தூங்குதல் = தூக்குப்போடுதல் ("தூங்கி மரிச்சு") Laughing

எளிய, இனிய அறிவுரை. 

எந்த ஒரு செயலிலும் இறங்கும் முன், அதன் அளவும் செய்ய நம்மால் முடியுமா என்று நமது அளவும் அறிந்து இறங்க வேண்டும்.

("வீடு கட்டத்தொடங்கும் முன் அதைக் கட்டித்தீர்க்க முடியுமா என்று கணக்கிட்டுப் பின்னரே இறங்குக" என்பது இயேசுவின் உவமைகளில் ஒன்று)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 21 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Aug 19, 2015 8:29 pm

#472
ஒல்வதறிவது அறிந்ததன் கண்தங்கிச் 
செல்வார்க்குச் செல்லாதது இல்

ஒல்லுதல் என்பதற்கு "இயலுதல், உடன்படுதல், தகுதல், பொருந்துதல்" என்றெல்லாம் அகராதி பொருள் சொல்லுகிறது.

அதன் அடிப்படையில், ஒல்வது = உகந்தது, தக்கது, பொருத்தமானது, இயலுவது என்றெல்லாம் சொல்லாம்.

அப்படியாக, ஒல்வதறிவது =  நமக்கு என்ன பொருத்தமானதோ, அதை அறிதல் Wink
(நாட்டில் காதலிக்கும் இளைஞர் / இளைஞிகள் இதை நடப்பாக்கினால் நிறையக்குழப்பங்கள் குறையுமே Laughing )


ஒல்வதறிவது
பொருத்தமானதை அறிதல் (மற்றும்)

அறிந்ததன் கண்தங்கிச்செல்வார்க்கு
அவ்வாறு அறிந்ததில் ஆழ்ந்து (ஈடுபாட்டுடன்) செயல்படுவோருக்கு

செல்லாதது இல்
முடியாதது ஒன்றுமில்லை

இங்கே "செல்லாதது இல்" என்று சொல்லும்போது, "ஏற்கனவே அறிந்து தேர்ந்தெடுத்தவை மட்டுமே" வருகின்றன என்பது எளிதில் புரியத்தக்கதே. 

அல்லாமல், "எதையும் செய்வான்" என்று பொதுமைப்படுத்தக்கூடாது. 

அப்படி எண்ணினால், வலியறிதல் என்பதற்கு மாறாக, "வலி அறியாமை" என்று சொல்ல வேண்டி வரும் Laughing

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 21 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Aug 20, 2015 4:43 pm

#473
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி 
இடைக்கண் முரிந்தார் பலர்

புலவர்களுக்கு மொழிகள் சில கட்டுப்பாடுகள் (இலக்கணம்) வைத்தாலும், வேறு சில உரிமைகளும் தரத்தான் செய்கின்றன Smile

அதாவது, உரைநடையிலோ பேச்சு வழக்கிலோ  "தம்முடைய" எனபது  "உடைத்தம்" என்று தலைகீழாக வந்தால் "பிழை பிழை " என்பார்கள். ஆனால், செய்யுள் வடிவிலோ, அதற்கு உரிமை இருக்கிறது Smile

மற்றபடி, பேச்சு வழக்கில் சொன்னால் இந்தக்குறள் "பாதிக்கிணறு தாண்டியவர்களின் கதை" Laughing

உடைத்தம் வலியறியார் பலர்
தம்முடைய (உண்மை) வலிமையை அறியாதார் பலர்

ஊக்கத்தின் ஊக்கி
(தவறான) ஊக்கத்தினால் முனைந்து (ஒன்றைத் தொடங்கி விட்டுப்பின்னர்)

இடைக்கண் முரிந்தார்
இடையிலேயே (முடிக்காமல்) கெட்டழிந்திருக்கிறார்கள்! 

வலிமைக்கு மீறி செலவழித்துப் பிள்ளைகளின் திருமணம் செய்து கடனாளிகள் ஆன சிலரது நினைவு வருகிறது. வணிகத்தில் அதே போல் "அகலக்கால்" வைத்து மிகுந்த இழப்புக் கண்டவர்களும் நினைவுக்கு வருகிறார்கள்.

நம் வலிமை அறிந்தே எந்த ஒரு செயலையும் முனைய வேண்டும். வெறும் ஊக்கம் (குறிப்பாக மற்றவர்கள் "ஏற்றி விடும்" ஊக்கம்) உதவாது!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 21 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Aug 24, 2015 6:07 pm

#474
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை 
வியந்தான் விரைந்து கெடும்

எல்லா உரையாசிரியர்களுமே "அமைந்தாங்கொழுகான்" என்பதை, "மற்றவர்களோடு ஒத்துப்போகாதவன்" என்று பொருள் கொள்ளுகிறார்கள். 

என்ன அடிப்படையில் என்று புரியவில்லை.

பரிமேலழகர் ஒரு படி மேலே சென்று, "ஆங்கு+அமைந்து"  = "அயல் வேந்தர் + பொருந்தி" என்றெல்லாம் சொல்லுகிறார். ஆங்கு என்பது அயல் வேந்தர் என்று எங்கும் பொருள் காண முடியவில்லை. அவர் அப்படி எழுதியதாலோ என்னமோ, முக / முவ போன்றோரும் "மற்றவர்களை மதியாமல், மற்றவர்களோடு ஒத்து நடக்காமல்" என்றெல்லாம் எழுதுவதைக் காண்கிறோம். 

என்னால் ஏற்க இயலவில்லை. 

அமைந்து என்பது அடக்கம் என்ற பொருளிலும், ஆங்கு என்பது அங்கங்கே என்றுமே நேரடியாக வருகிறது. 

அப்படியாக, (இடத்துக்குத்தகுந்த) அடக்கம் இல்லாதவன் என்று தானே கொள்ள வேண்டும்?

அமைந்தாங் கொழுகான்
அடக்கமின்றி நடப்பவன்

அளவறியான்
தன் அளவு (வலிமை) என்ன என்று அறியாதவன்

தன்னை வியந்தான்
தன்னைக் குறிந்து வியப்பவன் (அளவுக்கு மிஞ்சி நினைப்பவன்)

விரைந்து கெடும்
விரைவில் அழிவான்

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 21 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Aug 25, 2015 5:00 pm

#475
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் 
சால மிகுத்துப் பெயின்

பலருக்கும் நன்கு அறிமுகமான குறள் Smile

நமக்கு இது "அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு" என்ற பொருளில் அவ்வப்போது சொல்லப்பட்டிருந்தாலும், வள்ளுவர் இங்கே வலிமை அறிதல் அதிகாரத்தில் சொல்லி இருக்கிறார் என்று உணர்ந்தது / நினைத்தது இல்லை. Embarassed

அப்படியாக, இந்தக்குறளை ஒரு புது ஒளியில் படிக்கிறேன் Smile 

மன்னர்களின் போர் சூழ்ச்சிகளில் இதற்குள்ள பங்கு இப்போது புரிகிறது Smile

பீலிபெய் சாகாடும் அச்சிறும்
(மெல்லிய, எடை குறைந்த) மயில் தோகை ஏற்றப்படும் வண்டியின் அச்சுமே முறிந்து விடும் 

அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்
அந்தப்பண்டத்தை அளவுக்கும் அதிகமாக ஏற்றினால்!

உயர்வு நவிற்சி அணி Smile

பல ஊர்களிலும் வைக்கோல் (மயிற்பீலி போன்ற எடை குறைந்த மற்றொன்று​) ஏற்றிச்செல்லும் வண்டிகளைப் பார்த்தவன் என்ற முறையில் சொல்லுகிறேன் - அச்சு முறியும் அளவுக்கு ஏற்ற இடம் இருக்காது என்ற வகையில் இது மிகைப்படுத்தல் தான் Smile

ஆனால், உள்ளே பொதிந்திருக்கும் கருத்து உண்மை / அருமை!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 21 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Aug 26, 2015 6:09 pm

#476
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்தூக்கின் 
உயிர்க்கிறுதி ஆகி விடும்

உயிர்க்கிறுதி rotfl

என்ன ஒரு நகைச்சுவை உணர்வு வள்ளுவருக்கு!

ஒருவரது வலிமைக்கு வரம்பு(கள்) உண்டு என்று சொல்லாமல் சொல்லும் குறள்! 

அங்கே சொல்லப்பட்டிருப்பது உவமை மட்டுமே, பொருள் நாமே தான் புரிந்து கொள்ள வேண்டும் - கவிதையில் இது ஒரு மிக நேர்த்தியான உத்தி!

நுனிக்கொம்பர் ஏறினார்
(மரத்தின்)) நுனிக்கிளையில் ஏறியவர்

அஃதிறந்தூக்கின்
அதையும் கடந்து (மேலே) ஏற முயன்றால் 

உயிர்க்கிறுதி ஆகி விடும்
(அவருடைய) உயிருக்கு இறுதி (முடிவு) ஆகிவிடும் 

அதாவது, செத்துப்போக வேண்டியது தான்!

வலிமையின் வரம்புகள் அறிந்து செயல்படாவிட்டால் அழிவு வரும் என்று உவமை மட்டும் சொல்லி விளங்க வைக்கும் குறள்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 21 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Aug 28, 2015 7:41 pm

#477
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் 
போற்றி வழங்கு நெறி

இந்தக்குறளைத்தான் "ஆத்துல போட்டாலும் அளந்து போடு"ன்னு நம்ம ஊரில் குழப்பி விட்டார்களோ? 

Laughing

ஆறு என்றால் "வழி" என்று முன்னமேயே பார்த்திருக்கிறோம். ஆனால், இது "வலி" அறியும் அதிகாரம், இங்கே "வழி"க்கு என்ன வேலை? சுருக்கமாகச் சொன்னால், இங்கே "வரவு" என்ற பொருளில் வருகிறது.

அதாவது, வரவின் வலிமை (வழியின் வலி) Smile

மற்றபடி, நாம் முன்னமேயே சொன்ன "வலிமைக்கு மிஞ்சி செலவு செய்யாதே" (ஈகை என்றாலும்) என்று அறிவுறுத்தும் பாடல்.

ஆற்றின் அளவறிந்து ஈக
வரவின் அளவு தெரிந்து கொண்டு (அதற்கேற்பக்) கொடுங்கள்

அதுபொருள் போற்றி வழங்கு நெறி
அது தான் பொருளைப் பாதுகாத்து வழங்கும் நெறி!

நம் (பொருள்) வலிமை அறியாமல் வழங்கினால் நெறி கேட்டு அலைகிறோம் என்று பொருள் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 21 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Aug 31, 2015 8:47 pm

#478
ஆகாறு அளவிட்டிதாயினுங் கேடில்லை 
போகாறு அகலாக்கடை

நன்கு அறிமுகமான இன்னொரு குறள்.

"பொருட்செல்வத்தின் செலவு வரவுக்கு மிஞ்சாமல் கட்டுப்படுத்த வேண்டும்" என்ற அடிப்படை அறிவுரை உள்ளடக்கிய குறள் Smile 
("வரவு எட்டணா, செலவு பத்தணா" பாடல் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை)

போகாறு அகலாக்கடை
போகும் வழி அகலமாகாத போது 
(பொருட்செல்வத்தின் செலவு கூடுதல் ஆகாத போது)

ஆகாறு அளவிட்டிதாயினுங் கேடில்லை
வரும் வழி அளவில் இடுங்கியது என்றாலும் கேடில்லை 
(வருமானம் அளவில் குறைவென்றாலும் கவலையில்லை)

நம் வலிமைக்குள் செலவுகள் நடக்கையில் மன உளைச்சல் வர வழியில்லை Smile 

ஆதலால், வரவறிந்து - வலிமை தெரிந்து - வாழ்வோமாக Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 21 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Sep 01, 2015 6:52 pm

#479
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல 
இல்லாகித் தோன்றாக் கெடும்

மூன்று முறை எதிர்மறைச்சொல் வருவதால் விதவிதமாகப் பொருள் சொல்லுகிறார்கள் Smile

அதாவது, இல்லாகி + தோன்றா + கெடும் என்று மூன்று!

இல்லாகி = இல்லாமல் போய் 
தோன்றா = தோன்றாமல் 
கெடும் = அழிந்து போகும் 

மூன்றுமே கிட்டத்தட்ட ஒரே பொருளில் வருகின்றன - சின்னச்சின்ன வேறுபாடுகள் மட்டுமே Wink

அப்படியாக, அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறார் என்று காணலாம்!

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை
தன் வலிமை (பொருள் அளவு, வருவாய் இன்ன பிறவும்) அறிந்து வாழாதவன் / செயல்படாதவன் வாழ்க்கை

உளபோல இல்லாகி
(நல்ல நிலையில்) இருப்பது போல் தோன்றினாலும் ஒன்றும் இல்லாமல் போய்

தோன்றாக் கெடும்
மீண்டும் தலைதூக்க இயலாத வண்ணம் கெட்டழியும்!

"முன்னேற்றம் இருக்காது" என்றெல்லாம் பசப்பாமல், "அழிவு உறுதி - மீண்டு வரவே முடியாது" என்று அடித்துச் சொல்லுகிறார்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 21 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Sep 02, 2015 9:16 pm

#480
உளவரை தூக்காத ஒப்புரவாண்மை 
வளவரை வல்லைக் கெடும்

வரை என்ற சொல்லுக்கு என்னவெல்லாம் பொருள் என்று பாருங்கள்!


வரை² varai
, < வரை-. n. [T. vara, M. varu, K. bare.] 1. Line; கோடு. 2. Line, as in palm of hand or on the fingers; wrinkle, as on the body; இரேகை. (சூடா.) 3. Letter; எழுத்து. (பிங்.) 4. A defect in pearls; முத்துக்குற்றத் தொன்று. (S. I. I. ii, 78.) 5. Bamboo; மூங்கில். மால்வரை நிவந்த வெற்பின் (திருமுரு. 12). 6. Mountain; மலை. பனிபடு நெடுவரை (புறநா. 6). 7. Mountain top, peak; மலைச்சிகரம். மந்திவரைவரை பாய (பரிபா. 15, 39). 8. Side-hill; slope of a hill; பக்கமலை. வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந (மதுரைக். 42). 9. Stone; கல். வரையம்பு காயெரி மாரிகளாய் (திருநூற். 34). 10. Small ridge, as of a paddy field; சிறுவரம்பு. (W.) 11. Bank, shore; நீர்க்கரை. (சூடா.) 12. Limit, boundary; எல்லை. வளவரை (குறள், 480). 13. Measure; extent; அளவு. உளவரை (குறள், 480). 14. Measure of the distance between the joints of the forefinger; விரலிறையளவு. Loc. 15. Time; காலம். சிறு வரை (பு. வெ. 12, பெண்பாற். 17). 16. Place; இடம். மலைவரை மாலை (பரிபா. 10, 1). 17. See வரைவு, 5. (W.)--adv. See வரைக்கும்.

இதில் குறிப்பிடத்தக்கது, இவற்றுள் இரண்டு இந்தக்குறளில் Smile
(அகராதி 12 & 13 ஆம் பொருட்களுக்கு இந்த ஒரே குறளைச் சுட்டுவதைப்பாருங்கள்!)

அப்படியாக, இந்தக் குறள் செய்யும் பொருள் விளையாட்டில் சொல் விளையாட்டும் இருக்கிறது Smile

உளவரை தூக்காத ஒப்புரவாண்மை
(நம்மிடம்) உள்ள செல்வத்தின் அளவு என்ன என்று ஆராயாமல் செய்யப்படும் ஒப்புரவு (கொடுத்தல் / ஈகை உள்பட)

வளவரை வல்லைக் கெடும்
(ஒருவரது) வளத்தின் எல்லையை விரைவில் அழிக்கும்

வல்லை என்பது இங்கே "வல்லே" (விரைவில்) என்ற பொருளில் வருவதாக அகராதி சொல்லுகிறது, அங்கும் இந்தக்குறள் தான் மேற்கோள் Smile

அப்படியாக, அகராதி எழுத வள்ளுவரின் இந்தச்செய்யுள் பேரளவில் உதவி இருக்கிறது Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 21 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Sep 03, 2015 11:35 pm

#481
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் 
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
(பொருட்பால், அரசியல், காலமறிதல் அதிகாரம்)

நாம் என்ன இயலில் (அரசியல்) இருக்கிறோம் என்று நினைவுறுத்த "வேந்தர்" என்று நேரடியாகச் சொல்லுகிறார் இங்கே Smile

போர்த்திறமை என்று வரும்போது காலநேரத்தின் இன்றியமையாமை இந்தக்குறளில் அழகான ஒரு உவமையுடன் சொல்லப்படுகிறது.

ஆந்தை வலிமை கூடியது என்றாலும் அதை விட நோஞ்சானான காக்கையிடம் பகலில் தோற்று விடும் என்கிறார். 

இவை இரண்டும் உண்மையில் ஒன்றுக்கொன்று சண்டை இடுமோ என்று தேடியபோது கிடைத்த ஒரு ஒளிக்காட்சி:

கோட்டானைத் துன்புறுத்தும் காகங்கள்

அதன் கீழ் உள்ள ஒரு பதிவு இன்னும் அருமை (மொழி பெயர்ப்பு) :


காக்கைகள் எப்போதும் இப்படிச்செய்யும். கோட்டான்கள் அடிக்கடி காக்கை உள்ளிட்ட சிறிய பறவைகளை இரவில் கொல்லும். அதனால் அதனைப் பகலில் கண்டால் இவை துரத்த முயல்கின்றன.

பகல்வெல்லும் கூகையைக் காக்கை
காக்கை (கூடப்) பகலில் ஆந்தையை வென்று விடும் (எனவே)

வேந்தர்க்கு வேண்டும் பொழுது இகல்வெல்லும் 
வேந்தர் பகையை (அல்லது போரில்) வெல்ல சரியான நேரத்தைத் தெரிதல் வேண்டும்

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 21 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Sep 04, 2015 8:54 pm

#482
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் 
தீராமை ஆர்க்குங் கயிறு

"பருவத்தோடு ஓட்ட ஒழுகல்" என்ற அழகாக சொற்றொடர் பலருக்கும் நன்கு அறிமுகம் :​)

"ஏற்ற வேளையில் செயல்படல்" என்று இதை விளக்கலாம். அவ்வண்ணம் இருப்போரின் செல்வம் / செல்வாக்கு என்றும் குறையாது என்று அறிவுறுத்தும் குறள்.  

ஆர் = கட்டு என்ற பொருளில் இங்கே. 

திருவினை - ஒரு கணக்கில் பார்த்தால் சிலேடை. (திரு + வினை = சிறப்பான செயல் ; ஒரே சொல்லாக எடுத்தால், திருவினை = செல்வத்தினை ; திரு = பொருட்செல்வம்.  எல்லோருக்கும் அறிந்த பயன்பாடுகள் -  திருவாளர் / திருமதி / செல்வி / செல்வன்)

பருவத்தோடு ஒட்ட ஒழுகல்
காலத்தோடு பொருந்திச் செயல்படுதல்

திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு
பொருட்செல்வம் (அல்லது சிறப்பான செயல்) தீர்ந்து போய் விடாமல் கட்டி வைக்கும் கயிறாகும்!

இங்கே பொதிந்திருக்கும் பொருள் "திரு" கரைந்து, ஓடி அல்லது பறந்து செல்லும் இயல்புடையது என்பதே. 

அதைக் கட்டி வைத்துக்காக்க வேண்டிய தேவை இருக்கிறது. 

கட்டுவதற்குச் சிறந்த "கயிறு" காலம் அறிதல் என்கிறார் வள்ளுவர்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 21 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Sep 08, 2015 5:35 pm

#483
அருவினையென்ப உளவோ கருவியான் 
காலம் அறிந்து செயின்

அருமையான மேலாண்மைக் கருத்து!

எத்தகைய உற்பத்தித் துறையிலும் உள்ளவர்களுக்கு எக்காலத்துக்குமான அறிவுரை Smile

கருவியான் காலம் அறிந்து செயின்
(உரிய) கருவிகளைக்கொண்டு ஏற்ற காலம் அறிந்து செயல்பட்டால்

அருவினையென்ப உளவோ
(செய்வதற்கு) அரிய செயல் என்று ஏதாவது உள்ளதா? 
(இல்லை என்று பொருள்)

பழைய காலத்து ஆட்களுக்கு ஒரு பழமொழி ("காற்றுள்ள போதே தூற்றிக்கொள்") நினைவுக்கு வரக்கூடும். 

புதிய தலைமுறைக்கு அதைப்புரிய வைக்க வேண்டுமென்றால் கொஞ்சம் நேரம் எடுக்கும் Smile

"உளவோ" என்பதில் "இல்லை" என்ற கருத்து பொதிந்திருந்த போதிலும், உயர்வு நவிற்சியை விடுத்துப்பார்த்தால், உண்டு என்ற விடை வரலாம் Wink 
(எ-டு : இறந்தவர் உடலில் மீண்டும் உயிர் கொண்டு வருதல் - என்ன கருவி கொண்டு என்ன காலத்திலும் நம்மால் செய்ய முடியாது)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 21 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Sep 09, 2015 5:48 pm

#484
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் 
கருதி இடத்தாற் செயின்

இன்னொரு உயர்வு நவிற்சி அணிக்குறள் Smile

முழு உலகும் வேண்டுமென்றாலும் ஒருத்தனுக்குக் கிடைக்கும் என்கிறது இது. 

தற்காலத்து நிலைமைகளில் யாருக்காவது "ஞாலம்" வேண்டுமா என்று கேட்டால், "ஆம்" என்ற விடை வருமா என்பது ஐயமே Smile

செய்யுளின் பொருள் காண்பது மிக எளிது (அரிய சொற்கள் ஒன்றுமில்லை).

காலம் கருதி இடத்தாற்செயின்
ஏற்ற காலத்தைக் கருதி, இடத்துக்கு இசைவாக செயல்பட்டால்

ஞாலம் கருதினுங் கைகூடும்
உலகமே வேண்டும் என்று விரும்பினாலும் அது கைகூடும் (வாய்க்கும் / விருப்பப்படியே நடக்கும்)

காலம் அறிந்து செயல்பட்டால் நமக்கு வேண்டியவற்றை அடையலாம் என்ற அளவில் (உயர்வு நவிற்சி தவிர்த்து விட்டுப்) பார்த்தால், குறிப்பிடத்தக்க குறள்.

கூட்டத்தில், இடம் அறிந்து செயல்படுதலும் சேர்கிறது இங்கே. 

அதாவது, நாம் இருக்கும் இடம், இருக்க / அடைய விரும்பும் இடம், எதிரிகளின் இடம் என்று பல இடங்கள். 

அவ்வளவும் கருத வேண்டியது மன்னனின் கடமை!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 21 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Sep 10, 2015 9:57 pm

#485
காலம் கருதி இருப்பர் கலங்காது 
ஞாலம் கருதுபவர்

ஞாலம் என்பதை ஒரு குறியீடாக எடுத்துக்கொண்டு இந்தக்குறளைப் படித்தால் ஏளன மனம் தவிர்க்கலாம் Smile
(இல்லாவிடில், "உனக்கெல்லாம் எதுக்கு 'ஞாலம் வேணும்' என்ற நினைப்பு?" என்று மனதில் கேள்வி வருவது இயல்பு Laughing )

அப்படியாக, ஞாலம் = உலகு என்பதற்கு மாறாக, "நாம் வெல்ல / அடைய நினைக்கும் ஒன்று" என்று வைத்துக்கொள்வோம்.

ஞாலம் கருதுபவர்
உலகை வென்றடையக் கருதுபவர்கள்
("சாதனை செய்ய விழைவோர்" என்று பொதுவாகக் கொள்ளலாம்)

கலங்காது காலம் கருதி இருப்பர்
(எதற்கும்) கலங்காமல் ஏற்ற காலத்தைக் கருதி இருப்பார்கள்

"கலங்காது" என்று வரும் பொழுதே தெரிகிறது எந்த அருஞ்செயல் செய்ய முனைவோரும் பல தடைகளையும், துன்பங்களையும் எதிர்கொள்ள நேரிடும் என்று!

மன்னர்கள் வெற்றிக்கு முனையும் பொழுது தடைகள், எதிர்ப்புகள், துன்பங்கள் ஏராளம் வரும் என்பது எதிர்பார்க்கத்தக்கதே!

(கோழைகள் கலங்கிப் பின்வாங்குவர் என்பதும் தெரிந்ததே!)

அவ்விதத்தில், "காலம் கருதி செயல்பட்டால் கலக்கம் அடைய வேண்டி வராது" என்ற கருத்தும் இங்கே உள்ளடங்கி இருக்கிறது Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 21 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Sep 11, 2015 7:29 pm

#486
ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர் 
தாக்கற்குப் பேருந்தகைத்து

திருக்குறளில் "பேருந்து" ஓடுவதை இங்கே பார்க்கிறோம் Smile

ஆனால், பொருள் வேறு Embarassed

பொதுவில் வழங்கும் பொருள் :  பேர் = பெரிய / பெருமை (பெரிய உந்து வண்டி)

இங்கு பேர் = பேர்தல், அதாவது, அகராதிப்படி, பின்வாங்குதல் Smile

பொருதல் = போர் செய்தல் & தகர் = செம்மறியாட்டுக்கடா, அப்படியாக பொருதகர் = போர் செய்யும் ஆட்டுக்கடா!

இனி இந்த செய்யுளைப் புரிந்து கொள்ளுதல் எளிது!

ஊக்கமுடையான் ஒடுக்கம்
ஊக்கம் உடையவன் (போர் செய்யாமல்) ஒடுங்குதல் / அடங்கி இருத்தல்

பொருதகர் தாக்கற்கு
போர் செய்ய வல்ல செம்மறிக்கடா, தாக்குவதற்கு (முன்னேற்பாடாக)

பேருந்தகைத்து
(சற்றே) பின்வாங்குதல் போன்றதாகும்!

அதாவது, "ஏற்ற நேரம் அறிந்து காத்திருக்கிறான்" என்று சுருக்கம்.

அழகான உவமை! 

இத்தகைய கடாக்கள் முட்டிக்கொள்வதை நேரில் பார்த்திருப்பவர்கள் ஆழ்ந்து உறிஞ்சத்தக்க இனிய செய்யுள்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 21 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Sep 14, 2015 9:21 pm

#487
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளியவர்


பொள், உள், ஒள் என எதுகை மழை பொழிகிறார் வள்ளுவர். Smile

அப்படியே நமக்குக்கொஞ்சம் அருஞ்சொற்கள் தந்து வேலை வாங்குகிறார் Embarassed

பொள் என = விரைவுக்குறிப்பு, "உடனே" என்று பொருள்.

வேரார் / வேர்ப்பர் / வேர்த்தல் = எரிச்சல் அடைதல், சூடாகுதல் Smile

ஒள்ளியவர் = ஒளி மின்னுபவர் / அறிவு ஒளி மிளிர்பவர் என்று கொள்ளலாம்.

குறளின் சூழமைவுப்படி, நமக்கு எரிச்சல் உண்டாக்கும் வண்ணம் எதிரி செயல்பட்டாலும் உடனடியாகப் பாயாமல், காலம் அறிந்து பாயும் விதத்தில் உள்ளுக்குள் சினத்தைப் புதைத்து வைப்பதே அறிவொளி என்று வருகிறது.

ஒள்ளியவர் பொள்ளென ஆங்கே புறம்வேரார்
அறிவு ஒளிர்வோர் (தாக்கப்படும் போது) உடனே சினத்தை வெளிக்காட்ட மாட்டர்

காலம்பார்த்து உள்வேர்ப்பர்
மாறாக, (திருப்பித்தாக்க) ஏற்ற காலம் நோக்கி சினத்தை உள்ளே வைத்திருப்பர்

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 21 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Sep 15, 2015 9:49 pm

#488
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை 
காணின் கிழக்காம் தலை

குறிப்பிடத்தக்க கருத்து இந்தக்குறளில் இருக்கிறது.

எழுதப்பட்ட காலத்தை வைத்துப்பார்க்கையில், பொதுவான கருத்துகளில் இருந்து வேறுபட்ட ஒன்று எனலாம் - அதுவும் அரசியல் அறிவுரை, மன்னருக்கு என்ற விதத்தில்!

"பகையை அழித்தல்" என்பது மன்னருக்குத் தேவையான பண்பு என்று வரலாறு படிக்கும் எவரும் கருத வாய்ப்புண்டு. 

போர்களில் மன்னர்களின் வெற்றிகளைப் புகழ் பாடிப்பாடி, வெற்றி / பகை அழிப்பு என்பவை மன்னருக்கு இன்றியமையாத பண்புகள் என்றே பொதுவில் கருதுகிறோம்.

இங்கோ, "சுமக்க" என்கிறார் - பொருள் பார்ப்போம் :

செறுநரைக் காணின் சுமக்க
பகைவரைக் கண்டால் பொறுத்து(தாங்கி)க் கொள்ளுங்கள் 
(ஒரு அகராதி சொல்கிறபடி, பணிந்து நில்லுங்கள் Shocked )

இறுவரை காணின் 
(அவர்கள்) அழியுங்காலம் காணும்(வரும்) பொழுது 

தலை கிழக்காம்
தலை கீழே வீழும் (முடிந்து போவார்கள்)

"பகைவர்கள் அழிவதற்கு உரிய காலம் வரை, அவர்களைத் தாங்கிக்கொள்ளுங்கள்" 
- இப்படிப்பட்ட ஒரு கருத்து மிக அரியது என்பதில் ஐயமில்லை!

கிட்டத்தட்ட "பகைவரை அழிப்பது கடவுள் கையில்! அவர் அழிக்கும் வரை பொறுமையாய் இருங்கள்" என்று சொல்லும் விவிலியம் போல உள்ளது. 
(கடவுள் இடத்தில் காலம்)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 21 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Sep 16, 2015 5:52 pm

#489
எய்தற்கரியது இயைந்தக்கால் அந்நிலையே 
செய்தற்கரிய செயல்

இசை என்பதன் இன்னொரு வடிவம் இந்தக்குறளில் காண்கிறோம். 

"இயை" Smile 

ஒத்துப்போதல், பொருந்துதல், ஏற்ற விதம் என்றெல்லாம் பொருள் படுகிறது.

மற்றபடி, எளிதான குறள். கடந்த சில குறள்களில் இருந்த "காத்திருத்தல். பொறுத்தல்" என்ற நிலை மாறி இப்போது செயல்படும் நிலை :

எய்தற்கரியது இயைந்தக்கால்
அடைவதற்கு அரிதானது (நேரம்) பொருந்தி வரும்பொழுது

அந்நிலையே செய்தற்கரிய செயல்
அப்பொழுதே செய்வதற்கு அரிய செயலைச் செய்திட வேண்டும்!

"நேரம் காலம் வாய்ப்பது அரிது என்பதால், அதை வீணாக்காமல், உடனே, செயல்பட்டு வினையை முடிக்க வேண்டும்" என்று துரிதப்படுத்தும் குறள்.

மொத்தத்தில் இந்த அதிகாரத்தில் ஓடும் இரு இழைகள் இவ்வாறு உள்ளன :

- தக்க நேரம் வரும் வரை பொறுமையுடன் இருத்தல், காத்திருத்தல் 
- உரிய நேரம் வாய்க்கும் பொழுது உடனே செயல் முடித்தல் 

இவற்றை அழகான உவமையுடன் சொல்லும் "முடிவுரைக்குறளை" அதிகாரத்தின் இறுதியில் வைத்திருக்கிறார். 

நாளை அந்தக்குறளைச் சந்திப்போம் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 21 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Sep 18, 2015 4:27 pm

#490
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் 
குத்தொக்க சீர்த்த இடத்து

காகம், கூகைக்கு அடுத்தபடியாக இன்னொரு பறவை இந்த அதிகாரத்தில்!

காலம் அறிதல் என்ற தலைப்புக்குப் பறவைகளை அழைப்பது எவ்வளவு பொருத்தம்! 

யாரையும் வியக்க வைக்கும் ஒன்று பறவைகளின் புலம் பெயர்தல் / இடம் பெயர்வு! 

ஒவ்வொரு ஆண்டும் அவை காலம் கருதிச் செய்யும் நெடும் பயணங்கள் வியக்க வைப்பவை! 

கூட்டம் கூட்டமாய், ஆங்கில எழுத்து வி வடிவில், மிக உயரத்தில் ஒவ்வொரு ஆண்டும் வரும் விசைக்காற்றுகளைப் பயன்படுத்திக்கொண்டு நெடுந்தொலைவைக் குறைந்த ஆற்றலில் கடத்தல் - என்று எவ்வளவு வியக்கத்தக்க செயல்கள்! 

அத்தகைய பறவைகளை இங்கு வள்ளுவர் பயன்படுத்துவது எவ்வளவு சிறப்பு!

நான் முன்னமே சொன்னது போல இங்கு அழகான உவமையுடன் அதிகாரத்தின் சுருக்கம்!

கொக்கொக்க கூம்பும் பருவத்து
ஊக்கம் குறைந்த / ஒடுங்கிய பருவத்தில் கொக்கு போலவும் 
(பொறுமையாகக் காத்திருத்தல்)

மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து
நேரம் வாய்க்கும் இடத்தில் அதன் குத்து போலவும் இருக்க வேண்டும்!
(சட்டென்று இரையைக் கொத்துவது போல் விரைவாய்ச் செயல்படல்)

அழகோ அழகான உவமை! மற்றும் இசை நயம்!

பள்ளிவயது முதலே இது விருப்பக்குறள்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 21 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Sep 21, 2015 8:51 pm

#491
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் 
இடங்கண்டபின் அல்லது
(பொருட்பால், அரசியல், இடனறிதல் அதிகாரம்) 

உரையாசிரியர்களின் கருத்து "மன்னன் பகைவரை வெல்ல இடம் பார்த்தல்" என்ற வழியில் செல்லுகிறது என்றாலும், எந்தச்செயலுக்கும் இந்தக்குறள் பொருந்தி வர முடியும்!

பொருள் நேரடியானதே :

முற்றும் இடங்கண்டபின் அல்லது
முழுமை அடையத்தக்க (அல்லது முடிக்கத்தக்க, அல்லது முற்றுகை இடத்தக்க) இடத்தைக் கண்டுபிடிக்காத வரை 

எவ்வினையும் தொடங்கற்க
ஒரு செயலையும் தொடங்க வேண்டாம் 
(அல்லது, "முடிக்கத்தக்க இடம் கண்டபின்னரே தொடங்கவும்" என்று நேர்மறையில் சொல்லலாம்)

எள்ளற்க
எந்தச்செயலையும் (அல்லது எந்த எதிரியையும்) இகழ்ச்சியாகக் கருத வேண்டாம்!

"எள்ளற்க" என்பதன் வழியாக, இந்த அதிகாரத்தில் இனி வர இருக்கும் சில கருத்துகளுக்கு முன்னுரை இட்டு விடுகிறார். 

அதாவது, எளிமையாகத் தோன்றும் செயல்கள் (அல்லது பகைவர்) இடத்தைப் பொறுத்து மிக வலிமையாக ஆகிவிட வழியுண்டு என்று இப்போதே எச்சரிக்கை செய்யத் தொடங்குகிறார்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 21 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Sep 22, 2015 6:57 pm

#492
முரண்சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண்சேர்ந்தாம் 
ஆக்கம் பலவுந்தரும்

மொய் என்ற சொல்லுக்கு "வலிமை" என்றும் பொருள் இருப்பதை இன்று கற்றுக்கொண்டேன் Smile

நன்கொடை என்பது நாட்டுப்புறத்தில் நன்கு அறிந்த பொருள்.

"கூட்டமாய் நெருங்குதல்" = மொய்த்தல் (எ-டு: பழத்தை ஈக்கள் மொய்த்தல்) என்பதும் எல்லோரும் அறிந்ததே!

முரண் என்பது வேறுபடுதல், எதிர்த்தல், பகைத்தல் என்றெல்லாம் பொருள் படுவது நாம் அறிந்ததே. அவ்விதத்தில், முரண் சேர்ந்த மொய் என்பது "எதிர்த்து வெல்வதற்கான வலிமை" என்று கொள்ளலாம். 

முரண்சேர்ந்த மொய்ம்பினவர்க்கும்
எதிர்த்து வெல்லும் வலிமை உடையவர்களுக்கும் 
("பகைவரை வெல்லும் திறன் உள்ள மன்னவர்க்கும்" என்றும் கொள்ளலாம்)

அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந்தரும்
அரண் சேர்ந்து இருந்தால் (பாதுகாப்பான இடத்தில் இருந்தால்) பல வித ஆக்கம் / பயன் தரும் 

படை வலிமையோடு இடமும் அறிந்தால் / இருந்தால் கூடுதல் பலன் கிடைக்கும் என்கிறார்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 21 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 21 of 40 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 30 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum