Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 38 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Mar 28, 2017 4:53 pm

#887
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி


செப்பு = செம்பு, நீரெடுக்க உதவும் குடம் / நீர் குடிக்க நாம் பயன்படுத்தும் குவளை - இவற்றை இப்பெயரில் அழைப்பது செய்யுள்களிலும் காணக்கிடப்பது.

என்றாலும், அது செம்பினால் தான் செய்யப்பட வேண்டும் என்றில்லை. மரத்தில் செய்யப்பட்ட சிறுமிகளின் விளையாட்டுக்கான பாத்திரங்களும் இதே பெயரில் தான் அழைக்கப்படுகின்றன Smile

இங்கே அது மூடி போட்டு வைக்கப்படும் சிமிழைக் குறிப்பதாக அகராதியும் உரைகளும் சொல்கின்றன. அந்த மூடியும் , தாழே உள்ள பாத்திரமும் ஒன்றி இருப்பது போலத்தோன்றினாலும் ஒட்டிக்கொண்டு இருப்பதில்லை - மெல்லச்சரித்தாலும் மூடி கீழே விழுந்து விடும்.

அது தான் இங்கே "உட்பகையோடு இருப்பவர் ஒட்டாமல் இருப்பதற்கு" உவமை! (சிறுமிகள் இதை நம்மை விட எளிதாகப் புரிந்து கொள்வார்கள்)

உட்பகை உற்ற குடி
உட்பகை வந்திருக்கும் குடி (குடும்பம் / குழு)

செப்பின் புணர்ச்சிபோல்
செப்புச்சிமிழும் மூடியும் கூடியிருப்பது போல

கூடினும் கூடாதே
ஒட்டியிருப்பதாகத் தோன்றினாலும் (உண்மையில்) ஒன்றாதவையே!

அழகான உவமை - நம் கண் முன்னே அந்தப்பொருளைக் கொண்டு வந்து, சொல்ல வந்ததை மிக எளிதாக உணர்த்தி விடுகிறது!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 38 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Mar 28, 2017 7:23 pm

#888
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி


பொன்னென்றால் என்ன பொருள்?

நமக்குப்பொதுவாகத் தெரிந்தது தங்கம் என்பதே. ஆனால், அகராதி விதவிதமாகப் பொருள் சொல்கிறது (17 வகையாக - அவற்றுள் உலோகம், இரும்பு என்பவையும் அடக்கம்).

இங்கே சில உரையாசிரியர்கள் பொன்னென்றும் சிலர் இரும்பென்றும் சொல்வதைக்காணலாம்.

அது இங்கு உவமை மட்டுமே - மேலும், எப்படி எடுத்துக்கொண்டாலும் பொருந்தும். ஆகவே, பொன்னை இரும்பாக்காமல் அப்படியே விட்டு விடுவோம் Smile

உட்பகை உற்ற குடி
உட்பகை வந்திருக்கும் குடி
(சென்ற குறளுக்கும் இதற்கும் ஒரே இரண்டாமடி, அப்படியாக உட்பகை வந்த குடிக்கு இரண்டாவது அழகிய உவமை இங்கே வருகிறது)

உரம்பொருது
வலிமை இழந்து
(வலிமையான ஒன்றோடு மோதி / போரிட்டு)

அரம்பொருத பொன்போலத் தேயும்
அரத்தால் உராயப்படும் பொன்னைப் போல் தேய்ந்து போகும்

கூர்மையான அரத்தால் தேய்க்கப்படுவது பொன் / உலோகம் / இரும்பு எதுவானாலும், மெலிந்து வலுவிழக்கும். (பளபளப்பு ஒரு வேளை கூடலாம் ஆனால் உரம் போகும்).

அதே போல் தான் உட்பகை வந்த குடியும் என்று அழகாக உவமை சொல்கிறார். வலிமை இழந்து உடையும் நிலைக்கு ஆகி விடும்.
(மீண்டும் நம் மனதில் உவமை வழியாக ஒரு ஓவியத்தை நிறுவுகிறார் - அதாவது, பட்டறையில் அரத்தால் தேய்க்கப்படும் உலோகத்தகடு!)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 38 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Mar 29, 2017 9:19 pm

#889
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு


மிகச்சிறிய அளவில் உட்பகை இருந்தாலும் அழிவை விளைவிக்கும் என்று எள்ளை உவமையாக்கி வள்ளுவர் சொல்லும் கவிதை.

எட்பகவன்ன = எள்ளின் பகவு (துண்டு / பங்கு / பிளவு / வெடிப்பு) போன்ற

எள் (நல்லெண்ணெய் இந்த விதையில் இருந்து தான் கிடைக்கிறது) மிகச்சிறியது என்பது அதைப்பார்த்தவர்கள் எல்லோருக்கும் தெரியும். (பார்க்காதவர்களும் "எள்முனை" என்று சிறிய அளவைக்குறிக்கும் உவமையைக் கேள்விப்பட்டிருக்கலாம். எள்ளல் என்பது கூட "சிறுமைப்படுத்துதல்" என்று இதிலிருந்து வந்திருக்கலாம்).

அதனுடைய பிளவு / துண்டு இன்னும் சிறிதாக இருக்கும் என்பது வெளிப்படை. அருமையான உவமை.

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
எள்ளின் பகுதி போன்று மிகச்சிறிய அளவினதே ஆனாலும்

உட்பகை உள்ளதாங் கேடு
உட்பகை இருந்தால் அழிவு வரும்

ஆக, உட்பகை என்பது நஞ்சைப்போன்றது.

அளவில் சிறிதென்றாலும் அழிவு உண்டாக்கும் நஞ்சு வகைகள் பற்றி நாம் அறியாதவர் அல்லர்.

உடல்நலம் என்ற அடிப்படையில் நோக்கினாலும், இந்த "உட்பகை" (நம் உடலின் உள்ளே இருந்து கொண்டு நோய் தருவன - அவை உடலில் உள்ள நம்முடைய உயிரணுக்களாகவும் இருக்கலாம்) உயிரைக் கொல்லும் வலிமை வாய்ந்தவை என்பதை இன்னொரு உவமையாக நாம் கருத முடியும்!

உட்பகை - எள் அளவே என்றாலும் நஞ்சு / புற்று நோய்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 38 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Mar 29, 2017 9:44 pm

#890
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந்தற்று


அட, அட - இந்த அதிகாரத்தில் என்னே ஒரு உவமை மழை!

முன் குறளின் விளக்கத்தில் நான் நஞ்சை நினைவு படுத்தினேன். இங்கு வள்ளுவரே பாம்பைக்கொண்டு வந்து விட்டு விட்டார் Smile

எளிதில் புரிந்து கொண்டு மயிர்க்கூச்செரியும் அழகிய உவமை - உட்பகையோடு வாழ்வது = ஒரு குடிலுக்குள் பாம்போடு சேர்ந்து குடியிருத்தல்

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை
(உள்ளத்தில்) உடன்பாடு இல்லாதோருடன் சேர்ந்து வாழ நேர்வது

குடங்கருள் பாம்போடு உடனுறைந்தற்று
ஒரு குடிசைக்குள் பாம்போடு சேர்ந்து வாழ்வது போன்றதாகும்

குடங்கர் = குடிசை
(குடம் என்பது இந்தச்சொல்லுக்கு இன்னொரு பொருள், ஒரு குடத்துக்குள் நாமும் பாம்பும் இருப்பது இன்னும் கொடுமையானது, எண்ணியவுடன் உடல் சிலிர்க்கிறது)

எந்த நேரத்திலும் அது நம்மைக்கொத்தலாம் - நஞ்சு நம்மைக்கொல்லலாம் - என்று அஞ்சி அஞ்சி வாழ்தல் எப்படிப்பட்ட வாழ்க்கை? ("உடனே அதைத்தேடிப்பிடித்து அடித்து விட்டுத்தான் மறுவேலை" என்றே எல்லோரும் இருப்பார்கள். ஒரு உயிரையும் வதைக்கக்கூடாது என்று மற்றவர்களுக்குப்பாடம் எடுப்போரில் எத்தனை பேர் அந்த வீட்டில் மகிழ்வாகத் தொடர்ந்து வாழ்வார்கள் என்று கணக்கெடுத்துப்பார்க்கலாம் Laughing )

ஆக, உட்பகை என்பது நச்சுப்பாம்பு போன்றது!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 38 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Mar 31, 2017 8:52 pm

#891
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை

(பொருட்பால், நட்பியல், பெரியாரைப்பிழையாமை அதிகாரம்)

"செயற்கரிய செய்வார்" என்று முன்னமேயே வள்ளுவர் யாரெல்லாம் பெரியவர் என்று வரையறுத்திருக்கிறார்.

அவ்வண்ணம் உள்ள மேலோரை இகழாமல் வாழ்வது ஏன் தேவை என்று சொல்ல இங்கே ஒரு அதிகாரம்.

முன்னர் சொன்ன அதே கருத்தை "ஆற்றுவார்" என்று சொல்லி இங்கே தொடங்குகிறார். அரிதான செயல்களை ஆற்றுவார் - அதற்கான ஆற்றல் உள்ளவர் - என்று சொல்வது அழகு.

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை
செயல் ஆற்றுவதில் சிறந்தவர்களது ஆற்றலை இகழாமல் இருத்தல்

போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை

தம்மைக்காக்க விரும்புவோரின் காவல்களுள் எல்லாம் தலையாயது!
(முதன்மையானது, மிகச்சிறந்தது)

பெரியோரை இகழ்ந்தால் நமக்கு இருக்கும் காவல் எல்லாம் ஒழியும் என்றும் எதிர்மறையாக இங்கே பொருள் கொள்ளலாம்.

வருந்தத்தக்க நிலை என்னவென்றால் உண்மையிலேயே அரியவற்றைச் செய்து காட்டிய மேன்மையானோருக்கு இன்று பொதுவெளியில் மதிப்பு குறைந்து வருவதும், அவர்களை இகழ்வது / பழிப்பது / குறை கூறுவது மிகுந்து வருவதும் Sad

கண்டிப்பாக இது நமது பாதுகாப்பை நிலைகுலைத்துக் கொண்டிருக்கிறது!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 38 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Apr 03, 2017 8:43 pm

#892
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்


சற்றே நெருடலான குறள்.

அதாவது, ஒரு பெரியார் இருக்கிறார். அவரை மற்றவர்கள் பிழைத்தால் அவர்களுக்கு என்றும் நீங்காத துன்பத்தை அவர் தருவார்.

அப்படிப்பட்ட, மற்றவர்களுக்கு ஒரு காலத்தும் தப்ப இயலாத துன்பம் தரத்தக்க பெரியவர்கள் யாராவது இருக்கிறார்களா? குறிப்பாக, ஒருபோதும் பிழையே செய்யாத பெரியார்கள்?

எல்லோருமே பிழை செய்யத்தக்கவர்கள் என்றால், ஒருபோதும் நீங்காத துன்பம் தர யாருக்குத்தகுதி இருக்கிறது? தான் பிழை செய்து விட்டு மற்றவரை மட்டும் துன்பத்தில் ஆழ்த்தியால் அப்படிப்பட்டவர் உண்மையிலேயே பெரியாரா?

இப்படியெல்லாம் குழப்பங்கள். இருந்தாலும், பொருள் காண எளிய குறள் தான்.

பெரியாரைப் பேணாது ஒழுகிற்
பெரியோரை மதிக்காமல் நடந்தால்

பெரியாரால் பேரா இடும்பை தரும்
அந்தப்பெரியோரால் நீக்க முடியாத துன்பம் வரும்

"பெரியோரே விரும்பினாலும் நீக்க முடியாத துன்பம் வந்து சேரும்" என்று எடுத்துக்கொண்டால் மிகப்பொருத்தம் Smile


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 38 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Apr 04, 2017 4:32 pm

#893
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்றுபவர் கண் இழுக்கு


"வேண்டுமானால் அழிக்க வல்லவர்" என்று இங்கே பெரியாரை வரையறுக்கிறார்.

மீண்டும் நெருடுகிறது. அதுவா பெரியோர் எனப்படும் மானிடரின் பண்பு? ஒரு வேளை நாம் கதைகளில் படிக்கும் முனிவரைக் குறிக்கிறாரோ என்று ஐயம். ("ஏன் என் தவத்தைக் கலைத்தாய், இதோ இந்த நொடியிலேயே நீ எரிந்து சாம்பலாவாய்").

என்றாலும், இதில் உள்ள ஒரு நடைமுறை உண்மையை மறுப்பதற்கில்லை - அதாவது, இன்றும் நாம் காண்பது. மிகுந்த வலிமையுள்ளோரைப் பகைத்துக்கொண்டால் அவர்கள் நம்மைக் கொல்லவும் / இன்ன பிற துன்பத்தைத் தரவும் முடியும் என்பது  Sad

கெடல்வேண்டின்
"கெட்டொழிய வேண்டும்"  என்று ஆவல் கொண்டால்

அடல்வேண்டின் ஆற்றுபவர் கண் இழுக்கு
அழிக்க நினைத்தால் அவ்வண்ணமே செய்ய வல்லவருக்கு எதிரான குற்றம்

கேளாது செய்க
(யாரையும்) கேளாமல் (அதாவது, கொஞ்சமும் எண்ணாமல்) செய்யுங்கள்!

எதுகையுடன் செய்யுள் அழகாக இருக்கிறது.

சுற்றி வளைக்கும் சொற்சிலம்பத்தைக் கடந்தால், பொருளும் எளியது தான்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 38 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Apr 04, 2017 8:19 pm

#894
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்


கூற்றுவன் (எமன்) குறித்த வள்ளுவரின் நம்பிக்கை முன்னமேயே சில குறள்களில் பார்த்திருக்கிறோம். இங்கு மீண்டும்.

"பெரியாரைப்பிழைத்தல் கூற்றுவனைக் கையசைத்து அழைப்பது போல்" என்று அணியாகச் சொல்லும் குறள்.

அதாவது, நாம் சிறியவராக இருக்கும் நிலையில் பெரியோருக்கு இன்னா செய்வது, கையசைத்து சாவை அழைப்பது போன்றது. அழிவை நாமே தேடிக்கொள்கிறோம் என்று பொருள்.

ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல்
ஆற்றல் உள்ளவர்களுக்கு (பெரியாருக்கு) ஆற்றல் இல்லாதவர்கள் தீங்கு செய்வது

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்
கூற்றுவனைத் (எமனை / சாவை) தமது கையால் "வா வா" என்று அழைப்பது போன்றதே!

நல்ல மனநிலையில் இருக்கும் யாரும் சாவை அழைக்க மாட்டார்கள். எனக்குத்தெரிந்து, வயதாகி நோயால் அவதிப்படுபவர்கள் பலருங்கூட "இன்னும் ஏதாவது மருத்துவம் செய்து நல்ல உடல்நலம் கிடைக்காதா - கொஞ்சக்காலம் கூட வாழவேண்டும்" என்று தான் விரும்புகிறார்கள்.

எனவே, பெரியோரைப் பழிக்க / பகைக்க நாம் எண்ணாமல் இருப்போம்!


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 38 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Apr 04, 2017 8:51 pm

#895
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட்டவர்


இந்தக்குறளில் நேரடியாகவே "பெரியார்" என்பதற்கு "வேந்தன்" என்று பொருள் சொல்லி விடுகிறார். அதுவும், மிகுந்த ஆற்றல் உடைய வேந்தன்.

வெந்துப்பின் = "வெம்மையான துப்பு உள்ள", அழிக்கும் ஆற்றல் மிகுந்த மன்னன் என்று புரிந்து கொள்கிறோம்.

படைவலிமை உள்ள மன்னனைப் பகைத்துக்கொண்டால் எங்கு சென்றாலும் வாழ இயலாது என்ற நடைமுறை உண்மையைச் சொல்லும் திருக்குறள். (ஒசாமா - ஒபாமா நினைவுக்கு வரக்கூடும்)

வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர்
அழிக்கும் வலிமையுள்ள வேந்தனின் சினத்துக்கு ஆளானவர்
(மன்னனைப் பிழைத்ததால் பகையானவர்)

யாண்டுச்சென்று யாண்டும் உளராகார்
எங்கெங்கு சென்றாலும் எங்கும் வாழ இயலாத நிலையை அடைவார்கள்

மன்னனின் சினத்துக்கு ஆளாதல் உடம்புக்கு நல்லதல்ல என்பது பொதுவான உண்மை.

"யாண்டும்" என்பதில் கொஞ்சம் உயர்வு நவிற்சி இருக்கிறது என்றாலும், அதுவும் பல நேரங்களில் உண்மையாகி விடுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டுகள் நம் நாளிலேயே உள்ளன.

நினைத்த உடன் வேற்று நாடுகளுக்குப் பறந்து செல்ல இயலாதிருந்த வள்ளுவரின் நாட்களில் இதை உயர்வு நவிற்சி என்று சொல்ல இயலாது தான் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 38 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Apr 05, 2017 8:03 pm

#896
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகுவார்


நெருப்பு - அழிவுக்கு அடையாளமாகப் பல இடங்களிலும் பயன்படுவது.
(அதில் இடப்படும் உயிரினங்கள் இறந்து போவதால்).

இங்கே அதிலும் கேடான சூழல் பற்றிப்படிக்கிறோம் Smile

அதாவது, தீயில் சுடப்பட்டவர் கூட ஒரு வேளை தப்பிக்கலாம் - பெரியாரைப் பிழைத்தவருக்கு மீட்பே இல்லை என்று உவமையாக இங்கே வள்ளுவர் சொல்வது மிகப்பொருத்தம். எந்த அளவுக்கு அழிவு உறுதி என்று சொல்ல அருமையான ஒப்பிடல்!

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம்
நெருப்பால் சுடப்பட்டாலும் ஒருவர் பிழைக்க வழி இருக்கலாம்

உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகுவார்
(ஆனால்) பெரியாருக்குத் தீங்கு செய்யும் வழியில் நடப்பவர்கள் பிழைக்க வழியே இல்லை!

அழிவில் இருந்து உயிரைக்காக்க வேண்டுமா?

பெரியோருக்குத் தீங்கு செய்யாமல் வாழ்வோம் Smile
(இதே கருத்து மீண்டும் மீண்டும் விதவிதமாக இந்த அதிகாரத்தில் வருகிறது)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 38 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Apr 12, 2017 9:47 pm

#897
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்


"பெரியார் நம் மீது சினம் கொண்டால் நாம் அழிந்து போவோம்" என்று மீண்டும் மீண்டும் சொல்லி வரும் இந்த அதிகாரத்தில், அது குறித்த கூடுதல் விளக்கம் இங்கே.

அதாவது, "பெரியோர் சினம் நம்மை அழிக்க வரும்போது, நமக்கு இருக்கும் வாழ்க்கை வசதிகள், பணம் இவையெல்லாம் நம்மைக்காப்பாற்ற இயலாது" என்ற கூடுதல் தகவல் இக்குறளில் Smile

தகைமாண்ட தக்கார் செறின்
தகுதிகளில் சிறந்த பெரியார் (நம் மீது) சினமடைந்தால்

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
சிறந்த வகையான வாழ்க்கையும் (வசதிகளும்) வானளவான பொருளும் கொண்டு என்ன பயன்?
(அவற்றால் ஒன்றும் செய்ய இயலாது / ஒரு பயனும் இல்லை / கேடு உறுதி)

"பணம் பாதாளம் வரைக்கும் பாயும்" என்ற பழமொழி கேட்டிருக்கிறோம். நடைமுறையில் பணம் கொண்டு (அதுவும் "வானளவு" என்று உயர்வு நவிற்சியில் சொல்லப்பட்டிருக்கும் அளவு கடந்த பொருள் கொண்டு) பலவற்றையும் செய்ய முடியும் தான்.

என்றாலும், பணத்தால் நடக்காதவை எப்போதும் உலகில் உண்டு! எப்பேர்ப்பட்ட செல்வனும் இறப்பில் இருந்து என்றென்றும் தப்ப முடியாது என்பது ஒரு சிறிய எடுத்துக்காட்டு. அது போன்ற பலவும் பணத்தால் செய்ய இயலாதவை.

பெரியோரின் சினம் நம் மீது வராமல் - அவரைப்பிழைக்காமல் - இருந்தால் மட்டுமே அத்தகைய அழிவு நிலையை நாம் தவிர்க்கலாம்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 38 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Apr 13, 2017 9:27 pm

#898
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து


குன்று என்ற சொல்லின் இரு பொருட்கள் கொண்டுள்ள விளையாட்டு.

குன்று = மலை (உயர்ந்தது / பெரியது)
குன்று = சிறுத்தல் / குறையுதல்

கிட்டத்தட்ட எதிர்ப்பொருட்கள் என்றும் கொள்ளலாம். ஒன்று நம்மோடு ஒப்பிட மிகப்பெரியது. மற்றது, ஒருவர் உள்ள நிலையில் இருந்து இன்னும் சிறிதாவது.

குன்றன்னார் குன்ற மதிப்பின்
மலை போன்று உயர்ந்த பெரியோரைக் குறைவாக மதித்தால்
(பெரியாரைப்பிழைத்தால்)

நிலத்து நின்றன்னார் குடியொடு மாய்வர்
உலகில் நிலைத்து நிற்பது போன்று இருப்போரும் குடியோடு அழிவார்கள்

"நின்றன்னார்" என்பது ஒரு அழகான சொல்லாடல்.

நாமெல்லோரும் நிற்பதாக நினைத்துக்கொண்டு இருக்கிறோமே ஒழிய, எல்லோருமே நிலையாமையில் உள்ளோம் என்பது தான் உண்மை.

"நிற்பது போன்றவர்" என்பது இந்நிலையை அழகாகப் படம் பிடிக்கிறது!

இந்நிலையில், பெரியாரைப்பழித்தால் நாம் மட்டுமல்ல, நம் குடியே அழியும் என்று எச்சரிக்கப்படுகிறோம்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 38 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Apr 13, 2017 10:13 pm

#899
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்


சென்ற குறளில் நாம் கண்ட "நிலைத்து நிற்பதாக எண்ணிக்கொள்பவர்களில்" ஒரு கூட்டத்தினர் தான் ஆட்சியாளர்கள்.

வலிமை வாய்ந்த வேந்தன் "என்னை யார் என்ன செய்ய முடியும்" என்று எண்ணக்கூடும்.

என்றாலும், பெரியாரைப்பிழைத்தால் அவன் அழிந்து போவான். அந்தக்கருத்தைச்சொல்லும் குறள்.

ஏந்திய கொள்கையார் சீறின்
உயர்ந்த கொள்கைகள் உடையோர் சீறினால்
(பெரியார் சினமடைந்தால் - அவர்களுக்கு வெகுளி வரும்படியாக நடந்து கொண்டால்)

வேந்தனும் இடைமுரிந்து வேந்து கெடும்
வேந்தனும் நடுவிலேயே வலிமை கெட்டு, ஆட்சியை இழந்து அழிவான்!

ஆக, "எங்க ஆட்சி" என்ற ஆணவம் கொண்டு உயர்ந்த கொள்கையாளர்களை ஒடுக்க நினைக்கும் எந்தக்கூட்டமும் நிலைக்காது. அவர்கள் அழிவது உறுதி!

வரலாற்றில் பல எடுத்துக்காட்டுகள் இதற்கு நாம் காண இயலும். உடனே நினைவுக்கு வரும் பெயர் இட்லர்!


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 38 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Apr 13, 2017 10:49 pm

#900
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்


இறந்த என்ற சொல்லுக்கு இங்கே "கடந்த" என்ற பொருள்!
(நமக்குத்தெரிந்த ஒன்று தான், இறந்த காலம் = கடந்த காலம்).

அப்படியாக, "இறந்தமைந்த" = அளவு கடந்த, மிகுதியான, அளவற்ற.

இனி நேரடியான பொருள் பார்ப்போம்.

சிறந்தமைந்த சீரார் செறின்
சிறப்பான இயல்புகளால் பெருமையுற்றோர் சினமடைந்தால்
(பெரியோரின் சினத்துக்கு ஆளானால்)

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
அளவுகடந்த "சார்புகள்" (துணை / நட்பு / பொருள் / வலிமை) உள்ளவர்கள் என்றாலும் தப்பிப்பிழைக்க மாட்டார்கள்

இதுவரை சொல்லப்பட்ட அதே பொருள் தாம்.

ஆக, மற்ற எவ்வித உதவிகள் நமக்கு இருந்தாலும், பெரியோரின் அன்பு இல்லாவிட்டால் ஒரு பயனுமில்லை.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 38 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Apr 17, 2017 11:13 pm

#901
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது

(பொருட்பால், நட்பியல், பெண்வழிச்சேறல் அதிகாரம்)

பெண் வழிச்சேறல் என்றால், பெண்ணின் வழியில் (அவளது சொல்படி) நடத்தல் என்று பொருள்.

குறிப்பாக, "மனைவியின் கீழடங்கி இருத்தல்". அல்லது, அவள் சொன்னபடியெல்லாம் ஆடுதல் Smile
(சில குறள்களில் பொதுவாகப் பெண் என்றும் பொருள் கொள்ள முடியும் - அதாவது, காதலிக்குக் கீழ்ப்படிந்து நடத்தல்)

ஆண்கள் மேலானவர்கள் என்ற விதத்திலேயே உலகின் பெரும்பான்மையான கூட்டங்கள் கட்டியமைக்கப்பட்டிருக்கின்றன. நம் நாட்களில் கல்வியறிவு மற்றும் பலவிதமான திறமைகளையும் பெண்கள் வெளிக்காட்ட வாய்ப்புகள் கூடுதல் உள்ளன. மட்டுமல்ல,  முதன்மையான / தலைமையான இடங்களில் பெண்டிர் செயல்படுவதையும் எங்கும் காண முடிகிறது. அதே நேரத்தில், இன்றும் பெண்களை அடக்கி ஒடுக்கும் போக்கு பல நாடுகளிலும் / குழுக்களிலும் இருப்பதும் தெரிந்ததே. அவர்களுக்கும் சம உரிமை வேண்டும் என்ற போராட்டம் தொடர்வதும் அன்றாட நிகழ்வுகள்.

உடல் வலிமை மற்றும் "சுழற்சிகள்" அடிப்படையில் மற்றும் பிள்ளைகளைச் சுமக்கும் பொறுப்பின் அடிப்படையில் பெண்களுக்கு உள்ள குறிப்பிடத்த நிலை புகழவோ ("அம்மா தான் எல்லாம்") அல்லது அடக்கவோ (பாலியல் வன்முறை) பயன்படுத்தப்படுவது நாம் எப்போதும் கண்டு வருவது.

இங்கும் சிறிய அளவில் உடல் வருகிறது. ஆனால், அதோடு மற்றவர்களைக் கட்டுப்படுத்தும் உரிமை ஆண்களுக்கே என்று மனஅளவில் "ஆடவரை உயர்த்தும் நிலை" வருகிறது என்பதை மறுக்க முடியாது.

வள்ளுவரின் காலத்தில் பெண்கள் "இல்லத்தில் இருந்து கொண்டு" ஆடவருக்கும் குழந்தைகளுக்கும் வேலை செய்ய வேண்டும் என்ற வற்புறுத்தல் இருந்திருக்கலாம். குறிப்பாக, வேளாண்மையில் உழைக்கச்செல்லாத (அல்லது சென்றாலும் கீழ் அல்லது அடிமைகளாய்  இருக்க வேண்டிய) நிலையில் மகளிர் இருந்திருக்க வேண்டும்.

அந்த அடிப்படையில் தான் வள்ளுவரும் பெண்களுக்கு சமூகத்தில் இடம் கொடுக்கிறார் என்று அறிய உதவும் அதிகாரம் இது.

மனைவிழைவார் மாண்பயன் எய்தார்
மனைவியை விரும்பி (அவளுக்கு அடங்கி) நடப்பவர் சிறப்பான பயனை அடைய மாட்டார்

அது வினைவிழைவார் வேண்டாப் பொருளும்
அதுவே (அதாவது, மனை விழைதல்) செயல் ஆற்ற விரும்புவோருக்கு வேண்டாத பொருளும் ஆகும்

ஆண் - பெண் சம உரிமை என்ற கண்ணோட்டத்தைச் சற்றே நிறுத்தி விட்டு, இதில் சொல்லப்படும் ஒரு அறிவுரையை மட்டும் (அதாவது, இருபாலாருக்கும் பொருந்தும் வண்ணம்) பார்ப்போம்.

வேலை, தொழில் போன்றவற்றை விட்டு விட்டு வீட்டில் அடைந்து கிடந்தால், ஒருவருக்கு செயலும் நடக்காது / புகழும் கிடைக்காது. வீட்டில் உள்ள கொஞ்சல்கள் அதற்குரிய நேரத்திலும், வெளியில் உள்ள செயலாற்றல் அதற்குரிய நேரத்திலும் தவறாமல் நடத்துக Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 38 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Apr 19, 2017 10:26 pm

#902
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்


பெண் (அல்லது எதிர்பாலார்) பின் அலைந்து தன் செயல்களைப் பேணாமல் இருப்பவருக்கு என்ன வரும்? இரண்டு முறை நாணம் என்ற சொல்லைப்பயன்படுத்தி அதற்கு வள்ளுவர் இங்கே அழுத்தம் கொடுக்கிறார்.

இதை விதவிதமாக உரையாசிரியர்களும் விளக்க முயல்கிறார்கள். (வெட்கித்தலைகுனிதல் என்று மு.க. சொல்வது அவற்றுள் அழகு).

பேணாது பெண்விழைவான் ஆக்கம்
(கடமையை / கொள்கையை / செயல்களை / வாழ்வில் உயர்ந்த நோக்கங்களை) ஒழுங்காகப்பேணாமல் , பெண் மீதான விருப்பத்தில் செல்பவர் செல்வம்

பெரியதோர் நாணாக நாணுத் தரும்
பெரிய அளவில் நாணத்தக்க ஒன்றாகி அவருக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும்!

ஆக்கம் எப்படி நாணத்தக்க ஒன்றாகும்? இதைப் புரிந்து கொள்ள சில எடுத்துக்காட்டுகள்:

1. செல்வத்தைப் பெண்ணுக்கு வாரியிறைத்து விட்டு வேண்டியவற்றுக்கு இல்லாமல் இருக்கும் நிலை. ("மனைவிக்கு நகை வாங்கினேன், இப்போது அம்மாவுக்கு மருத்துவம் செய்யக் கடன் வாங்க வேண்டும்")

2. உள்ள ஆக்கங்களைக் கட்டிக்காக்காமல் வீட்டில் கிடப்பதால் அவற்றின் நிலை பல் இளித்தல். (பொருள் இழக்கும் நிறுவனம், சிதைந்து கொண்டிருக்கும் கட்டடம் , விளைவு இல்லாத வயல்)

நல்லதோ கெட்டதோ "மனைவி மட்டுமே தலை" என்று நடப்பவனுக்கு வீட்டுக்கு வெளியில் நாணமடையும் நிலை வருவது நடைமுறை தான்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 38 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Apr 20, 2017 8:43 pm

#903
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்


"வள்ளுவனும் வாசுகியும் போல" என்று திருமணங்களில் வாழ்த்துவதைக் கேட்டிருக்கலாம்.

வாசுகி அம்மையார் நூல் எதுவும் எழுதி இருக்கிறார்களா தெரியவில்லை. அல்லது இது போன்ற குறள்களைப் படிக்கும்போது பெண்கள் மனதில் வாசுகி பற்றிய என்ன உருவாக்கம் உண்டாகும் என்றும் புரியவில்லை.

பொருள் பாருங்கள்:

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை
மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இயலாத நிலை
(கொச்சையாகச் சொன்னால் "பெண்டாட்டிக்கு அடங்கி நடக்கும் கையாலாகாத நிலைமை")

நல்லாருள் எஞ்ஞான்றும் நாணுத் தரும்
நல்லவர்கள் முன்னிலையில் (ஒருவனுக்கு) எப்போதும் நாணத்தைத் தரும்!

இதில் இல்லாளுக்கு எதுகையாக வரும் "நல்லார்" என்பது தான் எரிச்சல் ஊட்டும் சொல்.

ஒரு ஆள் மனைவிக்கு அடங்கினவன் என்பதாலேயே அவன் நல்லவன் அல்ல என்று முடிவு கட்டுவது இழிவாக இல்லையா?

"வ.வாசுகி போல்" என்று வாழ்த்துமுன், மணப்பெண் இந்தக்குறளைப் படித்திருக்கிறாளா என்று கேட்டு விட்டுச்சொல்வது நல்லது Wink

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 38 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Apr 21, 2017 7:46 pm

சொக்கன் அவர்கள் மேற்கண்ட குறளுக்கான எனது ட்வீட்டுக்கு மறுமொழி எழுதி இருக்கிறார் இங்கே:
https://nchokkantweets.wordpress.com/2017/04/21/manaivi-sol/

அதன் கீழே எனது மறுமொழியும் இட்டிருக்கிறேன், காத்திருப்பில் இருக்கிறது, அது கீழே:


திருக்குறள் ஆணாத்திக்கச்சூழலில் எழுதப்பட்டது என்பதும் (எ-டு: கொழுநன் தொழுதெழுவாள்)  வள்ளுவர் "பெண் சம உரிமை" குறித்தெல்லாம் கவலைப்பட்டவர் கிடையாது என்பதும் (எ-டு: ஆண்வழிச்சேறல் என்றெல்லாம் அதிகாரம் கிடையாது) மறுக்க முடியாத உண்மைகளே.

அன்றைய சூழலில், ஆண்களுக்கும் கொஞ்சம் தடைகள் போட்டு  (எ-டு: பிறனில் விழையாமை) அவ்வழியே பெண்களுக்கும் கொஞ்சம் இடம் கொடுத்தார் என்ற அளவில்  தொல்காப்பியம் / பல புராணங்களைக்காட்டிலும் அவர் மேல்.

என்ன, கொஞ்சம்  அப்பட்டமாகப் பெண்ணடிமைத்தனம் இருப்பதாக இந்த அதிகாரம் படிக்கையில் உணர முடிகிறது.

இதிலுள்ள ஒவ்வொரு குறளுக்கும் பெரியாரின் சீடரான மு.க. முட்டுக்கொடுத்து உரை எழுதி இருப்பது தான் பெரும் வேடிக்கை. ஏனென்றால், இன்று நான் வலையில் தேடிப்படித்தவை அடிப்படையில், பெரியார் இந்தக்குறிப்பிட்ட கருத்தில் வள்ளுவரின் பக்கம் இல்லை Smile

சில சுட்டிகள்:

மு.க. உரை, முழுவதும் முட்டுக்கொடுக்கல் :
http://www.thirukkural.com/search/label/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D%200901-0910

பெரியார் / பெண்ணியம் / வள்ளுவர் குறித்த சில:
http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-feb17/32514-2017-02-25-04-56-50
http://www.penniyam.com/2011/03/blog-post_24.html

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 38 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Apr 21, 2017 8:10 pm

#904
மனையாளை அஞ்சும் மறுமையிலாளன்
வினையாண்மை வீறெய்தலின்று


வள்ளுவரின் "முட்டாள் வீட்டுக்காரி" தாக்குதல் தொடர்கிறது.

இங்கே மனைவிக்கு அஞ்சுபவனுக்கு "மறுமை" இல்லை என்று அடிக்கிறார் Smile அதாவது, வானுலகில் இடமில்லை. அப்படியாக, மனைவி சொல் கேட்பது "தெய்வக்குத்தம்" ஆகிறது.

பெண்வழிச்சேறல் என்ற அதிகாரத்தில் வருவதால், இதை "மனைவி வழியில் அஞ்சி / அடங்கி நடத்தல்" என்று தான் கொள்ள வேண்டுமேயொழிய, என்னவோ "தவறு செய்து விட்டு வீட்டுக்கு வர அஞ்சுபவன்" என்றோ "குடித்தனம் நடத்த வழியில்லாமல் அஞ்சுபவன்" என்றோ எண்ணக்கூடாது.
(மு.க. அப்படிச்சொல்லி வள்ளுவருக்கு முட்டுக்கொடுக்கப் பார்க்கிறார். "குடும்பம் நடத்த அஞ்சுபவன்" என்கிறார் - தவறான பொருள்).

மனையாளை அஞ்சும்
மனைவிக்கு அஞ்சும்
(இல்லாள் சொல்படி கேட்டு அஞ்சி / அடங்கி / ஒடுங்கி நடக்கும்)

மறுமையிலாளன்
மறுமை என்ற ஒன்றே இல்லாதவன்
(ஒட்டு மொத்தமாய் அழியப்போகிறவன்)

வினையாண்மை வீறெய்தலின்று
செயல் புரிதலில் சிறப்போ வெற்றியோ அடைவதில்லை

ஆக, ஒரே குறளில் "கோழி கொத்திய சேவலுக்கு" இரண்டு அடி கொடுக்கிறார் வள்ளுவர் Laughing

1. செயலில் வெற்றி கிடையாது.
2. மறுமையும் கிடையாது.

"தோற்று அழிந்து போக வேண்டுமா? பெண்டாட்டிக்கு அஞ்சுங்கள்" என்கிறார்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 38 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Apr 21, 2017 9:03 pm

#905
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற்றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்


மனைவிக்கு அஞ்சுபவனுக்கு ஏன் "மறுமை" கிடையாது என்று விளக்குவது போல் அடுத்த குறள் எழுதுகிறார்.

அப்படிப்பட்ட "வீட்டடங்கி" மற்றவர்க்கு (அதுவும் நல்லவர்களுக்கு) ஒரு நல்ல செயலும் செய்ய மாட்டானாம். மணக்குடவர் உரை, "அறம் செய்ய மாட்டான்" என்கிறது.

அறம் ஒன்றும் செய்யாமல் மனைவிக்கு மட்டும் பணிசெய்து நடந்தால் மறுமை எப்படி ஐயா கிட்டும்? புரிகிறதா? Wink

இல்லாளை அஞ்சுவான்
இல்லாளுக்கு அஞ்சி நடப்பவன்

மற்றெஞ்ஞான்றும்
மற்ற படி எப்போதும்

நல்லார்க்கு நல்ல செயல் அஞ்சும்
நல்லவர்க்கு நல்ல செயல் செய்ய அஞ்சுவான் (அறம் செய்ய மாட்டான்)

"இல்லாள் கெட்டவள், தீயவை செய்யச்சொல்பவள்" என்றெல்லாம் இங்கே வள்ளுவர் சொல்லவில்லை.

அவரவர் வசதிப்படி எடுத்துக்கொள்ளலாம். எப்படியும், வள்ளுவர் மனதை நாம் படிக்க முடியாது அல்லவா?

ஆனால், நேரடியான பொருள் பொதுவாக "இல்லாளை அஞ்சுவான்" என்று மட்டுமே சொல்கிறது Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 38 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  jaiganesh Sun Apr 23, 2017 7:56 am

திருக்குறள் சிறப்புதான்.
வள்ளுவர் நம் ஐயன் தான்.
அதற்காக முற்றும் எல்லா காலத்திலும் சரியாக இருக்கும் விஷயங்களையே அவர் சொல்லணும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
அதே சமயம்,வள்ளுவர் அப்படி ஒரு அதிகாரம் எழுதியிருக்கிறார் என்றால், பெண் வழி சமுதாயம் இங்கே இருந்திருக்கிறது,
அதன் எச்சங்களை மைய்ய ஆணாதிக்க சமூகம் எவ்வாறு வென்றிருக்கிறது என்பதன் சான்றுகளாக இந்த குறள்களை நாம் 
பார்க்க வேண்டும். அகிம்ஸாமூர்த்தியான அருக தேவனை வழிபடும் ஆசீவகமே என்றாலும், பெண்ணின் கை ஓங்காது இருக்க
 பல கட்டுப்பாடுகளை விதித்தனர் என்பத ஐம்பெரும் காப்பியங்களின் பல பக்கங்களில் நாம் காணலாம்.
நீங்கள் குறிப்பிடும் 'முட்டுக்கொடுத்தல்கள்' குறித்தும் ஆச்சரியப்படுவதற்கொன்றும் இல்லை. அதெல்லாம் காலத்துக்கேற்றார்போல் 
எழுதிக்கொள்வதே சிறந்தது,முறையானதும் கூட. முற்கால உரைகளையும் பாதுகாத்து, ஆர்வமுள்ள வாசகர்களின் சிந்தனைக்கு விட்டு விடுவதே முறையானது.

jaiganesh

Posts : 703
Reputation : 4
Join date : 2012-10-25

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 38 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Sun Apr 23, 2017 5:13 pm

"கனவு காணும் வாழ்க்கை யாவும்"  இந்திப்பாடலின் அப்பட்டமான இறக்குமதி என்று சொல்வதால் ராசாவின் மேதைமை, சாதனை இப்படிப்பட்ட வியப்புகளைக் குறைத்துச்சொல்வதாக எண்ணக்கூடாது.

அவர் முற்றும் நன்மையே நிறைந்த ஒருவர் / பிழைகளே அற்ற 100% தூய புனிதர்  என்று எண்ணிக்கொள்ள முயல்வோருக்குத்தான் (வழிபாடு மனநிலை) இப்படிப்பட்ட சில பிழைகள் சிக்கல் உண்டாக்கும்.

சிறப்பு நிறைந்த பலருக்கும் இது பொருந்தும்.

வள்ளுவர் உட்பட.

வள்ளுவரின் தமிழின் மீதோ அவர் சொன்ன பல அறிவுரைகளின் காலங்கடந்த பயன்பாடு குறித்தோ அல்லது அதற்கு உரை எழுதிய முன்னோர்களின் தமிழ்த்தொண்டு குறித்தோ இங்கு எள்ளுவதாக நினைத்துக்கொண்டு சொக்கன் சூடாகி விட்டார் Smile

அப்படி அல்ல - வள்ளுவருக்குக்கும் சில கருத்துக்களில் அந்நாளைய புரிதலே இருந்தது. ஆகவே, அவரைத் தேவையின்றி தெய்வமாக்கி, 100% புனிதர் என்று சொல்லும் மனநிலையே பிழையானது என்று சொல்கிறேன். உரையாசிரியர்களும் அப்படியே. பரிமேலழகர் சைவக்கருத்துக்களை எப்படி உள்ளே புகுத்துகிறாரோ அப்படியே கருணாநிதியும் அவரது கருத்துக்களை முன் வைக்கிறார். (இங்கே அவரது வழிகாட்டி பெரியாரோடு முரண் படவும் செய்கிறார் Laughing )

குழப்பம் அவர்களது கருத்துக்களில் அல்ல - அவற்றை வள்ளுவரின் சொற்களில் - இல்லாத போதும் - அடித்து ஏற்றுவது.

அதை நாம் ஏற்க வேண்டும் என்றில்லை!

அதற்கு அவர்களுக்கு எவ்வளவு உரிமை உண்டோ அதே அளவு நமக்கும் ஆராய்வதற்கு உண்டல்லவா?

அது தானே பகுத்தறிவு? சும்மா "முன்னோர்களைப்பழிக்காதே" என்றால் எப்படி? முன்னோர்கள் சொன்னதையே 100% நம்பிக்கொண்டு இருந்தால் இன்னும் உலகம் உருண்டை என்று தெரிந்திருக்க முடியாதே?

எப்பொருள் யார்யார் வாய்?

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 38 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Sun Apr 23, 2017 5:17 pm

சேர்ப்பது மாற்றுவது ஆகாது என்கிறார் சொக்கன் அவர்கள்.

"(யாதும் ஊரே) யாவரும் கேளிர்" என்ற செய்யுளை / அறிவுரையை எடுத்துக்கொள்வோம்.

அதோடு ஒரே ஒரு சொல் சேர்த்தால் பொருள் எப்படி மாறி விடும் என்பது என்னைப்போன்ற சிறுபிள்ளைத்தனமானவன் சொல்லித்தெரிய வேண்டியதில்லை Smile

(பரத்தையர்) யாவரும் கேளிர் என்று அதற்கு உரை எழுதினால் எப்படி இருக்கும்? rotfl

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 38 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Apr 24, 2017 6:04 pm

#906
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் 
அமையார்தோள் அஞ்சுபவர்

"அமையார் தோள்" என்றால் என்ன?

அமை என்பதற்கு உள்ள பொருட்களில் உரையாசிரியர்கள் இங்கே அமைவு (வலிமை), அழகு மற்றும் மூங்கில் என்பனவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

அதாவது, மனைவியின் "மூங்கில் போன்ற" தோள் அல்லது "அழகான / அமைவான" தோள். 

அதற்கு அஞ்சும் கணவன் வேறு என்ன சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பயனில்லை என்று சொல்லும் குறள். 

"இமையார்" - கண்ணை இமையார் என்ற பொருளில் வானில் உள்ள  "தேவர்" என்று (இந்தக்குறளைச் சுட்டிக்காட்டி) அகராதி சொல்கிறது. அப்படியே உரையாசிரியர்களும். 

இல்லாள் அமையார்தோள் அஞ்சுபவர்
மனைவியின் அழகான (மூங்கில் போன்ற) தோளுக்கு அஞ்சுபவர் 
(வீட்டுக்காரிக்கு அடங்கி நடப்பவர்)

இமையாரின் வாழினும் பாடிலரே
தேவர் போல வாழ்ந்தாலும் பெருமை இல்லாதவரே!

உயர்ந்த நிலையில், செல்வச்சிறப்போடு ஒருவன் உலகில் வாழ்ந்தாலும், மனைவிக்கு அடங்கினால் அவனுக்கு ஒரு பெருமையும் இல்லை. (அதாவது, மனைவி தான் இவனது சொல் கேட்டு, தொழுது நடக்க வேண்டும் என்று சுருக்கம்).

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 38 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Apr 24, 2017 6:32 pm

#907
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து


இங்கே "பெண்" என்று பொதுவாகக்கூறுகிறார். ( ஆக, இல்லாள் மட்டுமல்ல ; வேண்டுமென்றால், மற்ற பெண்டிரையும் சேர்த்துக்கொள்ளலாம் Laughing )

பொருள் நேரடியானது, வளைத்து நெளிப்பதெல்லாம் இல்லை. நேரடியாக, "பெண்ணேவல்" - பெண் ஏவ ஆண் வேலை செய்வது - என்று ஒரே அடி!

பெண்ணென்றால், நாணிக்கோணி, வீட்டில் சொல்படி கேட்டு, தொழுது நின்று, எல்லா ஏவல்களுக்கும் பணிந்து வேலை செய்து, பிள்ளை பெற்றுக்கொடுத்து வாழ்வதே அழகு / சிறப்பு என்ற அடிப்படை. ("நாணுடைப்பெண்").

இப்படிப்பட்ட சூழல் இன்றும் பல நாடுகளிலும், இனங்களிலும், குழுக்களிலும் உள்ளது என்பதைக்காணுகையில் பலநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதின வள்ளுவர் கால நிலை புரிந்துகொள்ளத்தக்கதே.

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின்
பெண்ணின் ஏவலுக்குப் பணிந்து நடக்கும் ஆண்மையை விட

நாணுடைப்பெண்ணே பெருமை உடைத்து
நாணம் உள்ள பெண்மையே பெருமை உடையதாகும்

அதாவது, பெண்ணுக்கு அடங்கி நடப்பவன் ஆண் என்று சொல்லிக்கொள்ளவே தகுதியற்றவன் என்கிறார்.

"உனக்கெல்லாம் மீசை எதுக்கு? இந்த நிலைக்கு நீ பூ வச்சுப் புடவை கட்டிக்கலாம்!" என்பது போன்ற எள்ளல்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 38 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 38 of 40 Previous  1 ... 20 ... 37, 38, 39, 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum