Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

3 posters

Page 1 of 16 1, 2, 3 ... 8 ... 16  Next

Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை Empty குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Jul 18, 2017 6:38 pm

#949
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்


இன்னும் சில அருமையான மருத்துவக்கூறுகள் இந்தக்குறளில் காண்கிறோம். (அதாவது, நம்முடைய நாளில் மேற்கத்திய மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் அதே முறைகள் இங்கே).

உற்றான் அளவும்
நோயுற்றவனின் அளவும் (வயது, உயரம், எடை போன்றவை)

பிணியளவும்
பிணியின் அளவும் (எவ்வளவு கொடுமை, எங்கெங்கு பரவியிருக்கிறது போன்ற ஆராய்ச்சிகள்)

காலமும்
கால அளவும் (எத்தனை நாளாக நோய், இது சரியாக எவ்வளவு நாளுக்கு மருந்து வேண்டும் போன்றவை)

கற்றான் கருதிச்செயல்
(மருத்துவம்) கற்றவன் கருதிச்செயல்பட வேண்டும்

எளிமையான சில நோய்களுக்கு நாமே (அல்லது மருத்துவக்கல்வியறிவு இல்லாதோரும்) தீர்வுகள் காண முடியும். என்றாலும், கல்வியறிவு உள்ளோர் மட்டுமே கையாள வேண்டிய சூழல்களே பல நோய்களுக்கும் வேண்டியிருக்கிறது.

அதாவது, "கற்றான்" வேண்டும்!

காலம் என்பதில், நம் காலம் என்றும் கொள்ளலாம். அதாவது, சுற்றுச்சூழல் கெட்டுப்போயிருக்கும் காலம்.Smile
(அல்லது இயற்கையில் பல விளையாட்டுகள் நடந்து கொண்டிருக்கும், கிருமிகள் நிறைய உலவிக்கொண்டிருக்கும் என்றெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்)


Last edited by app_engine on Tue Feb 16, 2021 5:34 pm; edited 255 times in total

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Jul 19, 2017 5:59 pm

#950
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து


மருத்துவம் பேரளவினதாக இல்லாத காலத்தில் எழுதப்பட்ட எளிய பகுப்பு.
(ஒப்பிட சராசரியாக எல்லோரும் இன்றைவிட நல்ல  உடல்நலத்தோடு இருந்த காலம் என்று கொள்ளலாம், அறிவியல் / பொருளாதாரம் அவ்வளவாக வளராத நிலை என்றும் சொல்லலாம்).

அதாவது, மருத்துவத்தை வெறும் நான்கு கூறுகளாக விளக்குகிறார்.

1. நோயாளி
2. மருத்துவர்
3. மருந்து
4. மருந்தைக்கொடுப்பவர் (தயாரிப்பவர் என்றும் சில உரைகள் சேர்க்கின்றன).

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
நோயுற்றவன், அதைத்தீர்ப்பவன் (மருத்துவர்), மருந்து, அதைச்செலுத்துபவன் என்று

அப்பால் நாற்கூற்றே மருந்து
அவ்வகையிலான நான்கு கூறுகளே மருத்துவம்

காப்பீட்டுக்கழங்கள், "காரணம்" கண்டுபிடிக்க எண்ணற்ற கழகங்கள் என்றெல்லாம் இல்லாதிருந்த எளிமையான காலம் / வாழ்க்கை. தமிழ்நாட்டில் தற்போது நடுவயதினராய் (30-60 வயது) இருப்போர் பலரின் இளமைக்காலத்தில் கூட நாட்டின் பல பகுதிகளிலும் இந்த அளவில் தான் மருத்துவம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. (மருந்து கொடுப்பவர் என்பதில் தயாரிப்பவர் / செவிலியர் எல்லோரும் அடக்கம்).

சில ஆண்டுகளிலேயே என்னென்ன மாற்றங்கள் என்று பார்க்கையில் மலைப்பாக இருக்கிறது. அமெரிக்காவைப் பொறுத்த மட்டில் தற்பொழுது நாட்டின் #1 செலவினம் உடல்நலத்துக்கான கருதல் தான். படைகளுக்கான செலவினத்தையும் மிஞ்சிப் பறந்து கொண்டிருக்கும் துறை! (பண அளவிலும் "மொத்த  உள்நாட்டு உற்பத்தியின் விழுக்காடு"  என்ற அளவிலும் இதுவே உச்சம். மனஉளைச்சல் அளவில் அவற்றையெல்லாம் விட இன்னும் கூடுதல் )

இந்த இணைப்பைப்பாருங்கள்:
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jul 20, 2017 12:33 am

#951
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு

(பொருட்பால், குடியியல், குடிமை அதிகாரம்)

புதிய இயலும் அதிகாரமும் தொடங்குகிறது. குடி - குடும்பம் அல்லது குடும்பங்களின் கூட்டம் / கூடி வாழும் குழு என்று எடுத்துக்கொள்ளலாம்.

(குலம் என்றும் வருகிறது - அப்படியாக, உறவினர்கள் எல்லாரும் கூடிய ஒரு கூட்டம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். கண்டிப்பாக இந்தச்சொல் மரபணுக்களின் வழியே வரும் பண்புகள் - அதாவது பிறப்பின் அடிப்படையில் வருவன - குறித்த சிறப்பு / பெருமைகள் பேசத்தான் செய்யும். அதை அவ்வாறே எடுத்துக்கொள்ள வேண்டும்.)

செப்பமும் நாணும் ஒருங்கு இயல்பாக
செம்மையும் (அல்லது நடுநிலை / நேர்மை) நாணமும் ஒன்றாக மற்றும் இயல்பாக

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை
(நல்ல) குடியில் பிறந்தவர்களிடம் மட்டுமே இருக்கும், அல்லாதவர்களிடம் இருக்காது

குடி என்பதற்கு அவர் பயன்படுத்தும் சொல் "இல்" - இல்லம். மூதாதையர்களின் வீட்டின் பெயரைத்தத்தம் பெயரோடு சேர்ந்து வழங்கும் வழக்கம் இன்று வரையும் கேரளத்தில் இருக்கிறது. தமிழக நாட்டுப்புறங்களிலும் "நீ எந்த வீட்டுப்பையன் / பெண்" என்று கேட்கும் வழக்கம் என் இளையவயதில் கண்டதே.

இல்லத்தின் அடிப்படையில் ஒருவருக்கு இன்னின்ன பண்புகள் இருக்கும் என்று எதிர்பார்ப்பது இங்கு மட்டுமல்ல, உலக முழுவதுமே உள்ள ஒன்று தான். அது இங்கே ஆவணப்படுத்தப்படுகிறது.

அதற்காக, ஏற்கனவே நல்ல பெயர் இல்லாத குடியில் பிறந்தால் கெட்டுத்தான் போக வேண்டுமென்றில்லை. தனி ஆளின் முயற்சி நல்ல பண்புகளையும் வெற்றிகளையும் பெற்றுத்தரும். அதாவது, "இயல்பாக" (மரபணு மற்றும் வளர்ப்புச்சூழல் கொண்டு) இல்லாவிட்டாலும், முயற்சியால் ஈட்ட முடியும்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jul 20, 2017 3:58 pm

#952
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந்தார்


நல்ல குடியில் பிறந்தவர்களுக்கான வரையறை தொடர்கிறது.

இந்தப்பட்டியலில் மூன்று பண்புகள் சொல்லப்படுகின்றன.

முன் குறளில் செப்பம் & நாணம் கண்டோம், அதிலுள்ள நாணம் இங்கும் வருகிறது. அதாவது, "மற்றவர்கள் தவறாக நினைத்து விடக்கூடாதே" என்ற வெட்கம் / அச்சம் எல்லாம் நல்ல குடிக்கு அடையாளமாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. அதோடு ஒழுக்கம் / வாய்மை என்று கூட்டிச்சேர்க்கிறார் வள்ளுவர்.

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்
ஒழுக்கம், வாய்மை, நாணம் எனும் நற்பண்புகள்

குடிப்பிறந்தார் இம்மூன்றும் இழுக்கார்
நல்ல குடியில் பிறந்தவர்கள் இம்மூன்றையும் தவற விட மாட்டார்கள்

பொய் சொல்லாத (ஏமாற்றாத) குடும்பம் என்று பெயர் வாங்குவது மிக நல்லது என்பதில் ஐயமில்லை. இது வெறும் பிறப்பின் அடிப்படையில் வருவதில்லை என்பது குடும்பங்களை ஆராய்பவர்கள் காணத்தக்கதே. "வளர்ப்பு" என்பதே அதில் பெரும்பங்கு வகிக்கிறது.

எடுத்துக்காட்டாக, நல்ல பெற்றோர் இருந்தாலும் அவரிடமிருந்து நீங்கி, வேறொரு தீய சூழலில் (உறவினர் வீடு, பள்ளி விடுதி) வளரும் பிள்ளை பொய்யும் புரட்டும் உள்ளவனாக வருவது அரிதில்லை! இதனுடைய மறுபுறமும் நடப்பில் காண்பதே. (நெறியற்ற பெற்றோர் அல்லது சூழலில் இருந்து விலகி நல்ல சூழலில் வளருவோரையும் நிறையக்காண்டிருக்கிறேன்).

எனவே நல்ல குடிச்சிறப்பு என்பது கடுமையான ஒழுக்கநெறியோடு வளர்ப்பதைச் சார்ந்தே இருக்கிறது.

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jul 20, 2017 5:50 pm

#953
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு


பட்டியலில் இப்போது நான்கு பண்புகள். (2,3,4 என்று எண்ணிக்கை கூடிக்கூடி வருகிறது Smile )

எளிதில் பொருள் கொள்ளத்தக்க நேரடியான திருக்குறள்.

நகைஈகை இன்சொல் இகழாமை
(புன்)நகை, ஈகை, இனிமையான பேச்சு, (மற்றவரை) இகழாமை

நான்கும் வாய்மைக்குடிக்கு வகையென்ப
(எனப்படும்) நான்கு பண்புகளும் உண்மையான (நல்ல) குடிக்கு உரியவை

ஒட்டு மொத்தமாகப்பார்த்தால், மற்றவர்களோடு இனிமையாக / மனிதநேயத்துடன் பழகுபவர்கள் தான் நல்ல குடியில் பிறந்தவர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். மலர்ந்த முகம், கொடுக்கும் பண்பு, இனிய பேச்சு, தூற்றிப்பேசாத அடக்கம் இவையெல்லாம் கொடுமையும் ஆணவமும் உள்ளோரிடம் காண இயலாது.

அவ்விதத்தில், "நாங்கள் தான் உயர்ந்தோர் - நீங்கள் தாழ்ந்தோர்" என்ற எண்ணம் உள்ள யாரும் "வாய்மைக்குடிகள்" என்று உரிமை கொண்டாட முடியாது. (வள்ளுவரின் கருத்துப்படி).

நல்ல இயல்புகள் தான் நல்ல குடியின் அடையாளம்.

வேறுபடுத்திக்காட்டும் உடை (இன்ன பிற வெளிப்படையான அணிகள் / குறியீடுகள்) அல்ல Smile

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jul 20, 2017 7:06 pm

#954
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்


"கோடிகள் கொடுத்தால் என்னவும் நடக்கும்" என்ற நாட்களில் நாம் வாழ்கிறோம்.

ஊழல் மலிந்து விட்ட உலகில் இந்தக்குறள் குறிப்பிடத்தக்கது.

அடுக்கிய கோடி பெறினும்
கோடிகளை (பெரும் பணத்தை, செல்வங்களை) அடுக்கிக்கொடுத்தாலும்

குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்
நல்ல குடியில் பிறந்தவர் (அதன் சிறப்பைக்) கெடுக்கும் செயலைச் செய்ய மாட்டார்

முற்காலங்களில் "குடிப்பிறப்பு" என்ற அடிப்படையிலேயே பண்புகள் அளக்கப்பட்டன என்பது இது போன்ற செய்யுள்களில் இருந்து தெரிகிறது. என்றாலும், இதைக்காலத்துக்கு ஏற்ற வண்ணம் மாற்றிப்புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. உயர்ந்த பண்புகள் கொண்ட குழுக்களில் உள்ளோர் ஈனமான செயல்களை எவ்வளவு பணம் கொடுத்தாலும் செய்ய மாட்டார்கள் என்பது தான் இதன் அடிப்படைப்பொருள்.

ஒரு வேளை அப்படிச்செய்தால், இரண்டில் ஒன்று நடக்கும் :

1. இனிமேலும் அந்தக்குழுவில் இருக்கும் தகுதியை அவன் இழக்கிறான். (அந்தக்குடும்பம் / குடி / குழு அத்தகையவனை நீக்க வேண்டும்)

இல்லாவிடில்,

2. அந்தக்குடிக்கு இனிமேலும் சிறப்பு ஒன்றுமில்லை. அது குன்றி விட்டது என்று பொருள்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Jul 21, 2017 6:37 pm

#955
வழங்குவதுள் வீழ்ந்தக்கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று


"கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே" என்ற பழமொழியை நினைவுபடுத்தும் திருக்குறள்!

ஈகைக்குணம் உள்ளவர்கள் வறுமையை (அல்லது செல்வக்குறைவை) நேரிடும்போது நொந்து போவார்கள். "தங்களுக்கு இல்லையே" என்ற எண்ணமல்ல, "கொடுக்க முடியவில்லையே" என்றே இருக்கும் அவர்களது துயரம். அப்பேர்ப்பட்ட பண்பாளர்களைப் போற்றும் செய்யுள். அத்தகையோரே நற்குடியினர் என்று சொல்ல வருகிறார். (பழங்குடி என்பதை பழம்பெருமை உள்ள குடி என்று விளக்குகிறார்கள்.)

பழங்குடி வழங்குவதுள் வீழ்ந்தக்கண்ணும்
பழமைச்சிறப்பு வாய்ந்த குடியில் உள்ளோர் (பொருட்குறைவால்) வழங்குவதைக்குறைக்க வேண்டிய நிலையிலும்

பண்பில் தலைப்பிரிதல் இன்று
நல்ல பண்புகளை விடாதிருப்பார்கள்

ஈகை என்பதை "இல்லாதோருக்குக் கொடுப்பது" என்ற அளவிலேயே கொள்ள வேண்டும். (ஏற்கனவே நிறைய இருப்பவருக்குக் கொடுக்கும் அன்பளிப்புகள் எல்லாம் இந்தக்கணக்கில் வராது). "இல்லை" என்று வருபவருக்கு நாமும் "இல்லை" என்று சொல்லி அனுப்புவது தாங்க முடியாத கொடுமை.

அதுவும் முன்பு செல்வம் இருந்து கொடுத்துக்கொடுத்து மகிழ்ந்த உயர்ந்த பண்புகள் உள்ளோருக்கு அது மிகக்கடினம்.

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Jul 24, 2017 6:10 pm

#956
சலம்பற்றிச் சால்பில செய்யார் மாசற்ற
குலம்பற்றி வாழ்தும் என்பார்


சலம் - தீமை / வஞ்சனை
சால்பு - மேன்மை, நற்பண்பு, சான்றாண்மை

வஞ்சகச்செயல்களை நல்ல குடியில் வாழ விரும்புவோர் செய்ய மாட்டார் என்கிறார் வள்ளுவர்.

மாசற்ற குலம்பற்றி வாழ்தும் என்பார்
குறைகள் இல்லாத குலத்தின் பெருமை காத்து வாழ விரும்புவோர்

சலம்பற்றிச் சால்பில செய்யார்
வஞ்சனை / தீமை என்பன பற்றிக்கொண்டு கீழான செயல்களைச் செய்ய மாட்டார்கள்

சில நாட்களுக்கு முன் வட அமெரிக்கப்பழங்குடி மற்றும் ஆப்பிரிக்க மூதாதையர் வழி வந்த ஒரு பெண்ணிடம் இந்தியாவில் பொதுவாக மணமுறிவு குறைவாக இருப்பதன் காரணங்கள் குறித்து உரையாட நேர்ந்தது.

பேசப்பட்ட பலவற்றுள் ஒன்று இந்தக் "குடிப்பெருமை" என்ற காரணம்.

மணமுறிவு "சால்பில" என்றே (பொதுவாக) இன்றும் கருதப்படுகிறது. அதன் விளைவாகத்தான் படித்து / தன் காலில் நிற்கும் திறனுள்ள பெண்கள் கூட சிலபல அடக்குமுறைகளைப் பொறுத்துக்கொண்டு தற்போதுள்ள மணவாழ்வில் நீடிக்கிறார்கள் என்பதைச்சொல்ல வேண்டியிருந்தது. எடுத்துக்காட்டாக, "இன்னும் திருமணம் ஆகாதிருக்கும் என் தங்கையைப் பெண் பார்க்க ஆட்கள் வராதபடி இது முட்டுக்கட்டை ஆகிவிடுமோ?" என்பது போன்ற "மாசற்ற குடி"யாக்க எண்ணங்கள் Wink

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Jul 24, 2017 8:07 pm

#957
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து


விசும்பு = வானம்

பால் நிலா என்றெல்லாம் பாடப்பட்டாலும், அதில் "மறு"  (குற்றம் / மச்சம்)  உள்ளது தெரிந்ததே.
(அதைக்காட்டி, அங்கே யாரோ இருப்பதாகவெல்லாம் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் வழக்கம் முன்பு இருந்தது).

உயரே இருப்பதால் அனைவரும் பார்த்துச்சுட்டும் அளவில் இருக்கிற அந்த "மறு" தான் இங்கே அழகான உவமை.

நல்குடியில் பிறந்தோரின் குற்றம் நிலவின் மறு போல் எல்லோருக்கும் தெரியும் என்பது மிகப்பொருத்தம்!

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம்
(மேன்மையான) குடியில் பிறந்தவர்களிடம் குற்றம் இருந்தால்

விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து
(அக்குற்றம்) வானத்தின் நிலவில் உள்ள மறுவினைப் போல் காட்சிப்பொருளாய்த் தெரியும்

"மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றெல்லாம் கவலைப்படாதே" என்பது ஒரு விதமான வாழ்வு.

"மற்றவர்கள் நம் மீது குறை காணக்கூடாது, நாம் காட்சிப்பொருள், புகழ் பெற்ற நிலையிலேயே எப்போதும் நிற்க வேண்டும்" என்பது இங்கே வலியுறுத்தப்படும் மேன்மையான வாழ்வு!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Jul 24, 2017 11:11 pm

#958
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப்படும்


நார் என்றால் இழை என்று உடனே சொல்லிவிடுவோம். (நார்க்கயிறு / பூவோடு சேர்ந்த நார்)

இங்கே அதை அன்பின் இழையாக, ஒருவரை மற்றவரோடு பிணைக்கும் பண்பிற்கான சொல்லாக வள்ளுவர் பயன்படுத்துகிறார். அவ்வண்ணமே அகராதியும் இந்தக்குறளை மேற்கோள் காட்டி, நார் = அன்பு (அதாவது, பிணைப்பு) என்று பொருள் சொல்லுகிறது.

அப்படிப்பட்ட உள்ளத்தின் இழை இல்லாமல் நடந்து கொள்பவன் உயர் குடியில் உள்ளவன் அல்ல என்று அழகாகச் சொல்கிறார்.

அதுவும் எப்படி? "இவன் உண்மையிலேயே இந்தக்குடும்பத்தான் தானா? " என்று ஐயப்படுவார்களாம்!

"நீங்கள் ஒருவரில் ஒருவர் அன்பு கூர்ந்தால், அதன் வழியாக என் சீடர் என்று எல்லோரும் தெரிந்து கொள்வார்கள்" என்று தம்முடைய "குடும்பம் / குடிக்கு" அடையாளமாக இயேசு சொன்ன கருத்து நினைவுக்கு வருகிறது.

அதனுடைய மறுபுறம் - ஒருவருக்கொருவர் அன்பு காட்டாதவர்கள், அவரது சீடர் அல்ல Smile
(கிருத்துவ நாடுகள் என்று பேர் வைத்துக்கொண்டு அவற்றுக்குள்ளேயே அடித்துக்கொண்டு உலகப்போர்களில் கோடிக்கணக்கானோரைக் கொன்றது அண்மைக்கால வரலாறு).

நலத்தின்கண் நாரின்மை தோன்றின்
(ஒருவன் செய்யும்) நன்மையானவற்றின் இடையில் அன்பின் இழை இல்லாமை தென்பட்டால்

அவனைக் குலத்தின்கண் ஐயப்படும்
அவன் (நல்ல) குலத்தவன் தானா என்று ஐயம் வரும்

அப்படியாக, யோவான் 13:35-ன் அடிப்படையில், "தமக்குள்ளே அன்பு காட்டாத எந்தக்கூட்டத்தினரும் இயேசுவின் குடியில் இல்லை" என்பதை வள்ளுவரும் மேற்கோள் காட்டுகிறார் Wink

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Jul 25, 2017 5:37 pm

#959
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்


கால் என்பதற்குள்ள பல பொருள்களில் இங்கே பொருத்தமானது முளை / கன்று என்பதே.
(நிலத்தின் இயல்பை அதிலிருந்து முளைத்து வரும் பயிர் சொல்லிவிடும் என்ற உவமை, ஒருவரது குடியின் இயல்பு அவர்களது வாயிலிருந்து வெளிப்படும் சொல்லில் தெரியும் என்பதற்கு மிகப்பொருத்தம்).

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்
நிலத்தின் இயல்பை அதிலிருந்து வெளி வரும் முளை காட்டிக்கொடுக்கும்

காட்டும் குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்
(அது போல, ஒருவர்) வாயிலிருந்து வெளிவரும் சொல் அவர் எப்படிப்பட்ட குடியில் பிறந்தவர் என்று காட்டி விடும்

இதே கருத்தை விதவிதமான உவமைகளால் நாம் பல இடங்களிலும் கேட்டிருக்கிறோம். (எடுத்துக்காட்டு : நூலைப்போல சேலை ; நல்ல மரம் நல்ல கனிகளைக்கொடுக்கும் போன்றவை)

வள்ளுவர் இங்கே சொல்ல வருவது சில குறிப்பிட்ட சொற்களின் பயன்பாட்டை அல்ல (அதாவது, "ஏனுங்கோ = பொள்ளாச்சி, மக்கா = நெல்லை" என்பது போன்ற கண்டுபிடித்தல் அல்ல).

அவர் சொல்ல வருவது, ஒருவரது வாய் வழியே வெளிப்படும் கருத்துக்கள் அவரது குடியின் பண்பை வெளிப்படுத்தும் என்பதே! (எ-டு : அடாவடித்தனம், பெருமை பீற்றல், மற்றவரை இழிவு செய்தல் போன்ற பேச்சுக்கள் நிறைந்திருக்கும் ஒருவரை "நல்ல குடியில் பிறந்தவர்" என்று யாரும் சொல்ல மாட்டார்கள்).

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Jul 25, 2017 5:58 pm

#960
நலம்வேண்டினாணுடைமை வேண்டுங் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு


நலம்-குலம் எதுகை இரண்டாம் முறையாக இந்த அதிகாரத்தில்.
(இவையல்லாமல், சலம்-குலம் மற்றும் நிலம்-குலம் என்பனவும் வந்ததைக்கண்டோம் Smile ).

மற்றபடி, எளிமையான பொருள். எப்போதும் உயர்த்திக்காட்டப்படும் பண்பான "பணிவு" இங்கே குடிமைச்சிறப்பிலும் சொல்லப்படுகிறது.

நலம்வேண்டினாணுடைமை வேண்டும்
நன்மை வேண்டும் என்றால் நாணம் என்ற பண்பு வேண்டும்
(நாணத்தில் அடக்கம், வெட்கம், அச்சம், நற்பெயர் எல்லாம் உட்படுகின்றன. குடிப்பெயருக்கு இழுக்கு வரக்கூடாது என்ற நாணம் என்று கொள்ளலாம்).

குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு
குடிக்குச் சிறப்பு வேண்டுமென்றால், எல்லோரிடத்தும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்

ஆக மொத்தம், நிறைய நீதிக்கருத்துகள் உள்ள ஒரு அருமையான அதிகாரம்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Jul 26, 2017 8:37 pm

#961
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்

(பொருட்பால், குடியியல், மானம்)

தமிழர் மரபில் உயிரினும் பெரிதாக மதிக்கப்படுவது மானம். தனிப்பட்டவருடையது மட்டுமல்ல, குடும்பத்தின் மானம் / கூட்டத்தின் மானம் என்று பல அடுக்குகளாகப் போற்றிக்காக்கப்படும் சொத்து.

அதற்கு இழுக்கு வரும் எண்ணம், பேச்சு, செயல் எல்லாமே கூடுதல் அளவில் உணர்ச்சிகளைத்தூண்டுவதும், சில நேரங்களில் சமநிலையற்ற அளவுகளுக்குப் போவதும் நாம் அடிக்கடி காண்பது / கேட்பது.

இந்த அதிகாரத்தில் இப்படிப்பட்ட உணர்ச்சிகரமான ஒன்றை வள்ளுவர் எப்படிக்கையாளுகிறார் என மிகக்கூர்ந்து நோக்க வேண்டியிருக்கிறது. தொடங்கலாம் Smile

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
இன்றியமையாத சிறப்பைக்கொண்டவை என்றாலும்
(கட்டாயம் வேண்டியவை, தவிர்க்க முடியாதவை, கண்டிப்பாகத்தேவை - இப்படிப்பட்டவைகள்)

குன்ற வருப விடல்
(குடியின் மானத்தைக்) குறைக்க வருபவை என்றால், அவற்றை விட்டு விட வேண்டும்!

மிக எளிய எடுத்துக்காட்டு பொருளுக்கான தேவை. "இன்றியமையாதது" உணவு / உடை / இருப்பிடம் - இவற்றை அடைவதற்கான பணம் (அல்லது வழி) கட்டாயத்தேவை.

இன்றைய உலகில் இந்த அடிப்படைத்தேவைகளை அடைய "எதையும் செய்யலாம், எதையும் இழந்து பொருள் ஈட்டு" போன்ற மனநிலையில் உள்ளோர் / அதற்குத்தள்ளப்பட்டோர் ஏராளம்.

என்றாலும், "எதையும்" என்பதில் ஒவ்வொருவருக்கும் சில விலக்குகள் இருந்தே தீரும். அவை தாம் அவரைப்பொறுத்த வரையில் (அல்லது அந்தக்குடி, குழு) "மானம்".

எடுத்துக்காட்டாக, 90%-க்கும் அதிகமானோர் "பிச்சை எடுக்கக்கூடாது" என்றே நினைப்பார்கள்.  செய்தால், "மானம் போய் விடும்".

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Jul 26, 2017 11:11 pm

#962
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டுபவர்


பேராண்மை என்றால் மானம் என்று இந்தக்குறளை மேற்கோள் காட்டி அகராதி பொருள் சொல்கிறது. (இந்தச்சொல்லுக்கு மிகுந்த வீரம் என்றும் பொருளைக்காணலாம்).

புகழும் மானமும் ஒன்றோடொன்று இணைந்தவை என்றாலும் ரெண்டும் ஒன்றல்ல. மானமிழந்த ஒருவருக்குக்கூட சில இடங்களில் மதிப்பும் புகழும் உண்டாகலாம் என்று புரிந்து கொள்கிறோம்.

சீர் என்ற சொல்லுக்கு ஏராளமான பொருள்கள் உள்ளன (புகழ், செல்வம், ஒழுங்கு, நேர்மை என்றெல்லாம்) - நமக்கு வேண்டியதை அங்கங்கே எடுத்துக்கொள்ளலாம்.

சீரொடு பேராண்மை வேண்டுபவர்
புகழ் அடைவதோடு மானமும் காக்க விரும்புவோர்

சீரினும் சீரல்ல செய்யாரே
புகழுக்கென்று ஒழுங்கற்ற செயல்களைச் செய்ய மாட்டார்கள்

நமது நாளுக்கு மிகப்பொருத்தம். எப்படியாவது எல்லோரும் அறியும் ஆளாக வேண்டும், புகழ் (சீரும் சிறப்பும்) பெற வேண்டும் என்று கடும் முயற்சி செய்வோரில் நிறையப்பேர் ஒழுக்கம் இல்லாமல் ஆகி விடுவது நடைமுறை.

இப்படிப்பட்டோருக்கு ஒரு வேளை மக்கள் நடுவில் புகழ் கிடைத்தாலும், தன்மானம் இழந்த உணர்வு உள்ளே குமைந்து கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

புகழ் - வேண்டும். ஆனால், ஒழுக்கமும் மானமும் அதைவிடக்கூடுதல் வேண்டும்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Jul 26, 2017 11:26 pm

#963
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு


எளிதில் பொருள் புரியும் செய்யுள்.

உயர்ந்த கருத்தும் சொல்லிப்புகழ் பெறுகிறது.

பெருக்கத்து வேண்டும் பணிதல்
(பொருள்) பெருகும் போது பணிவு வேண்டும்

சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு
குறைந்து சுருங்கும் நிலையிலோ (மான உணர்வில்) நிமிர்ந்து / உயர்ந்து நிற்க வேண்டும்

நடைமுறையில் காண்பதற்கு நேரெதிரான அறிவுரை. பணம் மிஞ்ச மிஞ்ச அகந்தையும் மற்றவர்களை விட உயர்ந்திருப்பதான தோரணையும் பெரும்பாலோருக்கு வருவது கண்கூடு. ("அற்பனுக்குப் பவிசு வந்தால்..." என்று சொல்லி இப்படிப்பட்டோரை சிறுமையானவர் கூட்டத்தில் சேர்க்கிறது பழமொழி).

அதே போல வறுமையில் வாடும்போது (தான் விரும்பாவிட்டாலும் சார்ந்திருப்போருக்காக) வளைந்து கொடுத்து வழங்கிப்போவதும் பல நேரங்களில் காண்பதே.

ஆனால், மேன்மையானவர்கள் வள்ளுவர் சொல்லும் சரியான பணிவு மற்றும் உயர்வைக் கொண்டிருப்பார்கள்.

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jul 27, 2017 5:01 pm

#964
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை


"நிலையின் இழிந்த = தலையின் இழிந்த" !

என்ன ஒரு அழகான, ஓசை நயத்துடன் கூடிய, உவமை!

மானமிழந்த நிலையில் உள்ள மாந்தர் தலையிலிருந்து உதிர்ந்த மயிர் போன்றவர்!
(சில ஆண்டுகளுக்கு முன்னர் தம் கழகத்தில் இருந்து வெளியேறிய அல்லது விரட்டப்பட்ட சில "மூத்த" தலைவர்கள் குறித்து செயலலிதா சொன்னது நினைவுக்கு வரலாம் Laughing )

உதிர்ந்த மயிர் குப்பையில் போடப்படும். (வெட்டி எடுக்கும் முடிக்கு நிறையப்பயன்பாடு இருக்கிறது, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் ஒன்று அது! டெட்ராயிட் நகரில் அதற்கு மிகத்தேவை இருக்கிறது, நல்ல விலைக்கு இறக்குமதி செய்கிறார்கள். ஆனால், இங்கே சொல்லப்படுவது "இழிந்த / உதிர்ந்த மயிர்" - அது வெறும் குப்பையே!)

மாந்தர் நிலையின் இழிந்தக் கடை
மாந்தர் தமது (உயர்ந்த / மானமிக்க) நிலையிலிருந்து தாழ்ந்து கீழாகும் போது

தலையின் இழிந்த மயிரனையர்
தலையிலிருந்து உதிர்ந்து போன மயிரைப்போன்றே கருதப்படுவார்கள்.
(ஒரு மதிப்புமற்ற குப்பை ஆவார்கள்)

மயிர் என்ற சொல் குறித்துக் கொஞ்சம் எழுத வேண்டி இருக்கிறது. அதைத் தற்போது தள்ளிப்போடுகிறேன் Smile இதே அதிகாரத்தில் இன்னொரு புகழ் பெற்ற குறளிலும் அச்சொல் வருகிறது (மயிர் நீப்பின் உயிர் வாழா...), அப்போது பார்த்துக்கொள்வோம்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jul 27, 2017 11:41 pm

#965
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்


குன்று / குன்றி - சொற்சிலம்பம் இங்கே Smile

ஒரே சொல்லின் பல பொருள்கள் மற்றும் கிட்டத்தட்ட ஒரே போல் ஒலிக்கும் சொற்கள் கொண்டுள்ள விளையாட்டு இவை எல்லா மொழிகளிலும் உள்ள இன்பங்கள். வள்ளுவர் அடிக்கடி இதில் இறங்குவது நாம் அறிந்ததே. (இரண்டாம் அதிகாரத்தின் துப்பு முதற்கொண்டு பல எடுத்துக்காட்டுகள் கண்டிருக்கிறோம் Smile )

குன்று - உயர்ந்த இடம், குன்றம், மலை

குன்று - குறுகிப்போ, குறைந்து போ, குனி

குன்றி - குன்றிமணி, சிறிய அழகான விதை - கருப்பும் சிவப்பும் கொண்டு மயக்கும் அழகு. நாட்டுப்புறத்து வேலிகளில் உள்ள கொடியின் விதை. சிறுவயதில் இந்தக்காயைக்கொடியில் இருந்து பறித்து / உரித்துச் சேர்த்து வைக்கும் பழக்கம் இருந்தது Smile "தின்னாதே, நஞ்சு" என்று பெரியவர்கள் சொன்னதால் சுவைத்ததில்லை Wink

இந்த மூன்று சொற்களைப்பின்னி அவ்வழியே தாம் சொல்ல வந்த கருத்தை அழகாக வடிவமைக்கிறார் புலவர்!

குன்றுவ குன்றி அனைய செயின்
குன்றிமணி போன்ற மிகச்சிறிய அளவில் இழிவான (குன்றிய) செயல் புரிந்தாலே

குன்றின் அனையாரும் குன்றுவ
மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளோரும் தாழ்ந்து விடுவார்கள்

சிறிய இழி செயல் செய்வதே எவ்வளவு மதிப்பு மிக்கவரின் மானத்தையும் வாங்கி விடும் என்பதற்கான அழகிய உவமைகள் - குன்றியும் குன்றும்!

வரலாற்றில் நோக்கினால் இதற்கான எடுத்துக்காட்டுகள் நிறையக்கிடைக்கும்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Jul 28, 2017 9:49 pm

#966
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை


"மானம் இழந்தால் இம்மையும் இல்லை மறுமையும் இல்லை" என்று சொல்லும் குறள்.
(புத்தேள் உலகு என்றால் தேவர்கள் வாழும் வானுலகு என்று முன்பே கண்டிருக்கிறோம். இங்கு புத்தேள் "நாடு" என்று வருகிறது)

"இல்லாத சொர்க்கமா கிடைக்கும்" என்று மு.க. இதற்கு நையாண்டியாக உரை எழுதி இருக்கிறார் - "இல்லாத" என்பது வள்ளுவர் சொல்லாத கருத்து என்றாலும் இறை மறுப்பாளரின் கிண்டலிலும் சுவை உண்டு Smile

இகழ்வார்பின் சென்று நிலை
(தன்மானத்தை இழந்து) தம்மை இகழ்வாரின் பின் செல்லும் நிலையினால் ஒருவருக்கு

புகழ்இன்றால்
(அதன் வழியே) புகழ் கிடைக்கப்போவதில்லை

புத்தேள்நாட்டு உய்யாதால்
(இதன் வழியாக) வானவர் உலகிற்கும் செல்ல இயலாது

என்மற்று
(அப்படியிருக்க) ஏன் அப்படிச்செய்ய வேண்டும்?

தன்னை அவமதிப்பவரின் பின் செல்வது எதற்காக என்பது நல்ல கேள்வியே. புகழோ, புண்ணியமோ அவ்வழியே கிடைக்கப்போவதில்லை.

அப்படியிருந்தும் ஏன் பலரும் அப்படிச்செய்கிறார்கள்?

1. கைமேல் பலன் கிடைக்க வேண்டும் என்ற பொறுமையின்மை. (புகழ், புத்தேள் உலகு எல்லாம் மிகுந்த உழைப்புக்குப்பின் எதிர்காலத்தில் எப்போதோ வருமென்று எதிர்ப்பார்ப்பவை. "கையில காசு-வாயில தோசை" வகை அல்ல)

2. வாழ வேறு வழியில்லாமல் தள்ளப்படுதல் (அல்லது அவ்வாறு நினைத்துக்கொள்ளுதல்)

3. புகழ், வானுலகு , எதிர்காலம் - இப்படியெல்லாம் எண்ணவே எண்ணாத முட்டாள் தனம் அல்லது சோம்பேறித்தனம்

4. அடிப்படையிலேயே கெட்டுப்போன தன்மை (வெட்கங்கெட்ட கொடுமைக்காரர்)

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Jul 28, 2017 10:56 pm

#967
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று


"உயிரா-மானமா?" என்ற கேள்விக்கு வள்ளுவர் தெளிவாக அளிக்கும் விடை இங்கே.

"அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று" என்று நேரடியாக அடித்துச்சொல்கிறார்.

பொருள் பார்ப்போம் :

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின்
ஒருவன் தன்னோடு ஒட்டாதவர் பின்னால் சென்று வாழ்வதை விட
( ஒட்டார் = மதிக்காதவர் / விரும்பாதவர் / இகழுபவர், அப்படிப்பட்டோரை அண்டி மானங்கெட்டு வாழ்தல்)

அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று
(முன்பிருந்த, மானமுள்ள) அந்த நிலையிலேயே அழிந்து போனான் எனப்படுதல் நல்லது

"செத்தாலும் இந்த வாசலில் காலடி வைக்க மாட்டேன்" என்று சூளுரைக்கும் காட்சிகள் பல நாம் கண்டதே.

மானமிழந்து, கொடியோரை வணங்கிப்பிழைப்பது உடலளவில் "வாழ்தல்" என்றாலும் சாவை விட இழிவானது!

அப்படிப்பட்டோர் பிணத்தை விட இழிந்தவர்கள் என்று சுருக்கம்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Jul 31, 2017 5:06 pm

#968
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து


"எல்லாமே ஒரு சாண் வயிற்றுக்குத்தான்" என்ற ஒரு எண்ணம் பரவலாக முன்னாட்களில் சமுதாயத்தில் உலவியது கண்டிருக்கிறோம். (இப்போதும் அத்தகைய எண்ணம் உள்ளவர்கள் நிறையப்பேர் பல இடங்களிலும் உண்டு. உணவு வாழ்வின் அடிப்படைத்தேவை என்பது உண்மை; ஆனால். வாழ்வில் ஒருவன் செய்வது எல்லாமே அதை அடையத்தான் என்ற எண்ணம் முன்பிருந்து போல் தற்காலம் இல்லை என்பதும் உண்மை Smile )

இந்தக்குறளின் காலத்திலும் அத்தகைய எண்ணம் உள்ளோர் பலர் இருந்திருக்க வேண்டும். "வயிற்றுப்பிழைப்புக்காக மானம் இழப்பது மூடத்தனம்" என்று இங்கே விளக்குகிறார்.

"மானங்கெட்ட பிழைப்பு" குறித்த இந்த உரையாடலில், ஒரு அரிய கருத்து அழகாக உட்புகுத்தப்பட்டிருக்கிறது - "மருந்தோ மற்று"!

உடல் / உயிரின் நிலையாமை குறித்த ஆழ்ந்த எண்ணம்!

பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து
பெருந்தகைமை (அதாவது, ஒருவனது குடியின் மானம்) அதன் சிறப்பு (பீடு) இழக்கும் சூழ்நிலையில்
(மானங்கெடும் சூழலில் என்று புரிந்து கொள்ளலாம்)

ஊன்ஓம்பும் வாழ்க்கை
உடம்பைப்போற்றும் வாழ்க்கை
(உடம்பின் அடிப்படைத்தேவைகளுக்காக - அதாவது, உணவுக்காக - மானமிழந்து வாழ்தல்)

மருந்தோமற்று
(அழியாதிருக்க) மருந்தாகி விடுமா?

வயிற்றுப்பிழைப்புக்காக ஈனச்செயல் செய்து மானமிழப்பவன், என்றென்றுமா வாழப்போகிறான்? மிக ஆழ்ந்த கருத்து - இங்கே அலட்டிக்கொள்ளாமல் சொல்லி இருக்கிறார்.

உயர்ந்த கொள்கைகளை அடகு வைத்து விட்டு உயிரைக்காப்பாற்றிக்கொள்பவன் அதன் பின் எவ்வளவு காலம் வாழுவான்? மிஞ்சிப்போனால் இன்னும் உடலில் எஞ்சி இருக்கும் சில ஆண்டுகள் மட்டுமே. (எ-டு : ஒருவன் 50 வயதில் மானம் இழந்து உயிரைக்காப்பாற்றிக்கொள்கிறான் என்று வைத்துக்கொள்வோம் - அதன் பின் மிஞ்சிப்போனால் 20-30 வருடம் வாழ்வான், அதன் பின் சாவு வருவது உறுதி தானே? என்றென்றும் வாழவா போகிறான் என்கிறார்!)

"கொள்கைகள் (மானம்) காத்து வாழ்வோருக்கு இறைவன் முடிவில்லா வாழ்வு தருவான்" என்பது அன்றும் இன்றும் பலரிடத்தும் உள்ள நம்பிக்கை.

அத்தகையோர், "இன்னும் கொஞ்ச நாள் இந்த வயிற்றுக்குச்சோறு போட வேண்டாமா?" என்ற அளவிலான எண்ணம் கொண்டு, வெறும் சில ஆண்டுகளுக்காக இழிந்த செயல் செய்து, (இறைவனுக்கு முன்னால்) தகைமை கெட்டு, "முடிவில்லா வாழ்வு" என்றும் பரிசை இழக்க மாட்டார்கள்.

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Jul 31, 2017 11:35 pm

#969
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் 
உயிர்நீப்பர் மானம் வரின்

பலருக்கும் நன்கு அறிமுகமான திருக்குறள். "உயிரா மானமா' என்ற கேள்வி வரும்போதெல்லாம் மேற்கோள் காட்டப்படும் செய்யுள்.

"கவரிமா என்பது முற்காலத்தில் வாழ்ந்த, நாமறியாத ஒரு வித மான்" (அதாவது, கவரிமா = கவரிமான்) என்றும் அது "மயிர் நீத்தால் நொந்து போய் உயிரை விட்டு விடும்" என்றெல்லாம் பள்ளிக்காலத்தில் கேள்விப்பட்டிருப்போம். 

வலையில் இது குறித்துத் தேடினால் அது கவரி+ மா, சவுரி முடி போல் நீண்ட மயிருள்ள விலங்கு (கவரி = சவுரி, மா = விலங்கு) என்று விளக்கி, இமயமலையில் வாழும் யாக் எனும் எருமையே அது; மயிர் இல்லாவிடில் குளிரால் செத்துப்போகும், என்று விளக்கம் இருக்கிறது. (மானம் = உடை போல் அல்லவா? மாட்டுக்கு மயிர் தான் உடை). வேறு சிலர் "மொட்டையடிப்பதை மனிதரே அவமானமாகக் கருதுவதில்லையா?" என்றும் விளக்க முயல்கிறார்கள்.

எப்படியானாலும், "கவரிமா"வுக்கு உயிர் வாழ மயிர் எவ்வளவு தேவையோ அதே போல் தான் சிறந்த மாந்தருக்கு மானமும் என்று புரிந்து கொள்வது எளிதே. 

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
மயிர் நீங்கினால் வாழாத (இறந்து போகும்) கவரிமா போன்றோர்

மானம் வரின் உயிர்நீப்பர்
மானத்துக்கு இழுக்கு வந்தால் உயிரையே விட்டு விடுவார்கள்

மன அழுத்தத்தால் நடக்கும் தற்கொலைகள், ஆணவக்கொலைகள் போன்றவற்றையும் கொள்கை அடிப்படையில் உயிரை இழப்பதையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. (பாலியல் வன்முறை வழியே மானமிழப்பதைத் தவிர்க்க மகளிர் தம் இன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் கொடுமை ஒரு வருத்தப்படுத்தும் எடுத்துக்காட்டு).

இந்த அதிகாரத்தில் முன்பொரு குறளில் கண்டது போல் இக்குறளிலும் "மயிர்" என்ற அழகான தமிழ்ச்சொல் பயன்படுவதைக்காணலாம். என்ன அடிப்படையில் இதைக் கேரளத்தில் "தெறி" (வசைச்சொல்)  ஆக்கினார்கள் என்பது புதிரே. 

அது போகட்டும். வேறு மாநிலம் / வேறு மொழி என்று விட்டு விடலாம்.

தமிழ்நாட்டில் ஏன் சிலர் இதன் பயன்பாட்டைத் தவிர்க்கிறார்கள் என்று புரியவில்லை Sad   

மு.க. கூட இந்தக்குறளின் உரையில் ஏன் "உரோமம்" என்று வடமொழிச்சொல் பயன்படுத்தும் நிலைக்குத்தள்ளப்பட்டார் என்பது வியப்புக்குரியது. "சாப்பாட்டில் கெட்ட வார்த்தை கிடக்குது" என்று பள்ளி  வயதில் உறவினர் ஒருவர் வீட்டில் கேட்ட போது எனக்கு அதிர்ச்சி - அப்படியென்ன இந்தச்சொல்லில் குழப்பம்? அவர் வீட்டிலுள்ள தமிழ் பைபிளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ள சொல் தானே என்று சுட்டிக்காட்டின நினைவு இருக்கிறது Smile

இப்போதும் சிலர் "டேஷ்" என்றும் "கூந்தல்" என்றுமெல்லாம் பேசுவது கண்டால் எரிச்சல் வரும். ஒரு அழகிய தமிழ்ச்சொல், பழம்பெரும் நூல்கள் / மொழிபெயர்ப்புகளில் எல்லாம் நல்ல பொருளில் வரும் சொல்.  (இந்தக்குறளில் மானத்துக்கே உவமை!)

இதைப்போய் வசைச்சொல் ஆக்கி விட்டது எந்தக்கூட்டம்?

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Aug 01, 2017 8:57 pm

#970
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு


இளி என்பதற்கு நகைப்பு என்ற பொருள் இருப்பது பொதுவாக எல்லோருக்கும் தெரியும். ("இஞ்சி தின்ற குரங்கு போல் இளித்தான்").

ஊரே ஒருவரைப்பார்த்துச் சிரிப்பது என்பது அவருக்கு மகிழத்தக்க ஒன்றல்ல. இகழ்ச்சி தரும் அத்தகைய நிகழ்வு வழியாக அவரது "மானம் பறிபோய்விட்டது" என்றே பொருள் படும்.

ஆக, இளிவரவு = இகழ்ச்சி / இழிவு / மானம்போன நிலை Sad

இளிவரின் வாழாத மானம் உடையார்
(எல்லோரும்) இகழ்ந்து நகைக்கும் நிலை வந்தால் இனிமேலும் வாழாத (தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும்) மானம் உடையவர்கள்

ஒளிதொழுது ஏத்தும் உலகு
புகழை உலகே தொழுது / வியந்து போற்றும்

"தற்கொலைக்குத்தூண்டுகிறார்" என்று வள்ளுவரை இங்கே திட்டுவது முறையாகுமா?

உண்மையில் அதுவல்ல அவர் சொல்ல வருவது. "உயிரினும் மானம் பெரிது" என்று பலமுறை ஏற்கனவே சொன்ன கருத்தின் இன்னொரு வடிவம் மட்டுமே இது.

எந்த அளவுக்கு மானத்தை உயர்த்திக்காக்க வேண்டும், மற்றவர்கள் இகழத்தக்க எண்ணம் / சொல் / செயல் ஆகியவற்றைத் தவிர்த்து மானமுடன் வாழ்வோம் என்று தான் அவர் சொல்ல வருகிறார்.

அப்படி, நேர்மறையான கருத்திலேயே இந்தக்குறள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். தற்கொலை எண்ணத்தை ஊக்குவிப்பதாக அல்ல!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Aug 01, 2017 10:35 pm

#971
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்

(பொருட்பால், குடியியல், பெருமை அதிகாரம்)

பெருமை என்பதை இங்கே "குடிப்பெருமை" என்று கொள்ள வேண்டும். ஏனென்றால், பொதுவாக ஒருவர் ஈட்டும் பெயர் / புகழ் / சிறப்பு குறித்து வேறு பல இடங்களில் வள்ளுவர் எழுதியாகி விட்டது. (எடுத்துக்காட்டு : தோன்றிற் புகழொடு தோன்றுக - குறள் 236).

ஆக, இங்கே ஒருவரது குடும்பம் / கூட்டம் / குழுவுக்கான பெருமையை எப்படிக்காத்துக்கொள்வது என்ற கருத்துக்களை எதிர்பார்க்கலாம். (ஏற்கனவே குடிமை, மானம் எல்லாம் பார்த்திருக்கிறோம். அவற்றுக்கும் பெருமைக்கும் உள்ள வேறுபாட்டையும் படிப்போம் என்று நினைக்கிறேன்).

பல உரைகளும் "வெறுக்கை" என்பதை ஊக்கம் / ஊக்கமிகுதி என்று பொருள் சொல்கின்றன. ஆனால், அகராதி சொல்லும் பொருள் "மிகுதி" என்று மட்டுமே. (அதாவது, வெறுப்பு / அருவருப்பு போன்ற பொருள்களை விட்டு விட்டுப்பார்த்தால்).

அப்படியாக, ஒரு குடியில் இருக்கும் "மிகுதி" (குறிப்பாக பொருட்செல்வம்) அவர்களுக்குப் பெருமை தருகிறது. அந்த மிகுதியின் விளைவாகப் புகழ் வருகிறது. அது இல்லாமை, இகழத்தக்க நிலை என்றும் பொதுவாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

இவ்வளவே இந்தக்குறள் - அல்லாமல் ஊக்க மிகுதி / ஊக்கக்குறைவு என்றெல்லாம் எனக்குப்படவில்லை

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை
ஒருவருக்கு உள்ள மிகுதி (ஏராளமான வளம்) தான் அவருக்குப்பெருமை / ஒளி

அஃதிறந்து வாழ்தும் எனல் ஒருவற்கு இளி
அஃது (அதாவது, மிகுதி) இல்லாமல் வாழ்வோம் என்பது அவருக்கு இகழத்தக்க நிலையே

ஊக்க மிகுதி என்று வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நேரடியான பொருளில் அது இல்லை என்பது தெளிவு.

நடைமுறை உண்மை தான். "பணம் இல்லாதவன் பிணம்" என்பது இன்றைய உலகில் உண்மை. அது எவ்வளவு மிகுதியோ அவ்வளவு "ஒளி" என்பதும் அன்றாடம் காண்பதே!.


app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Aug 02, 2017 7:14 pm

#972
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்


"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" - புகழ்பெற்ற இந்த வரி பழந்தமிழர் குறித்த பல ஆராய்ச்சிகளுக்கு வித்து என்று சொல்லத்தக்க சிறப்புடையது.

பலரும் இதைப்பலவிதத்திலும் புரிந்தும் புரியாமலும் நிறைய எழுதித்தள்ளி இருக்கிறார்கள். (தமிழர் குறித்த வரலாறு மற்றும் மொழிகள் பற்றிய முனைவருக்கான ஆய்வுகள் பலவற்றில் இவ்வரி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை).

அவ்வளவு சிறப்புள்ள இதனை நமது பாமரக்கண்ணோட்டத்தில் இப்போது படித்துப்பார்க்கலாம் Smile இதைக் "குடியியல் + பெருமை" என்ற அடிப்படையிலேயே தற்போது பார்க்கப்போகிறோம்.

நேரடியான பொருள் புரிதல் கடினமல்ல - பள்ளிக்காலத்தில் படித்தது தான்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
எல்லா உயிர்களுக்கும் (மாந்தருக்கும்) பிறப்பு என்பது ஒரே போல் தாம்

செய்தொழில் வேற்றுமையான் சிறப்பொவ்வா
(அதன் பின் வரும் வாழ்வில்) அவர்கள் செய்யும் செயல்கள் / நிறைவேற்றும் வேலைகளில் உள்ள வேறுபாட்டின் அடிப்படையிலேயே பெருமையும் சிறப்பும் மாறி வரும்.
(ஒருவருக்கொருவர் , அல்லது ஒரு குடிக்கும் மற்ற குடிக்கும் வேறுபடும்).

எளிய சொற்களில் சொன்னால் - ஒரு குடியில் பிறந்ததால் பெருமை / சிறப்பு ஒன்றும் இல்லை. அவரவர் செயல்களே பெருமையை அல்லது சிறுமையைத் தரும்.

அம்மா பிள்ளையைப் பெற அப்பனைப்  "பெருமை மிகுந்த அப்பன்" என்று சொல்வதை நம் நாளில் காண முடியும். இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது என்று இந்தக்குறளில் காண முடியும்.

மட்டுமல்ல, மன்னரின் குடி அல்லது உயர்சாதி போன்றவற்றில் பிறந்தால் / ஆணாகப்பிறந்தால் / தோல் வெளுத்துப்பிறந்தால் /  இன்ன பிற பிறப்புரிமைகளால் -  கூடுதல் பெருமை என்று அன்றும் இன்றும் சமூகங்கள் எண்ணி வருவது தெரிந்ததே.

அவற்றை எல்லாம் ஒரே வரியில் தட்டி விடுகிறார் - எல்லாரும் பிறப்பில் சமன்.

ஆடையின்றி அம்மையின் வயிற்றினின்று வெளி வந்தோம். ஆயுள் தீருகையில் மண்ணுக்கு உரமாவோம்! அவ்வளவே! அதனிடையில் உள்ள ஆண்டுகள் சிலதில் அருமையான செயல்கள் செய்தால் மட்டுமே சிறப்படைவோம்.

ஒரு உயிரியல் நிகழ்வை, அதுவும் குறிப்பாகத் தான் உடல் இன்பமடைவதற்கு வேண்டி, ஒரு அப்பன் நடத்தினானே ஒழிய அவனுக்கு அந்தப்பிறப்பில் பெருமைப்பட ஒன்றுமில்லை Smile பிள்ளையை நல்ல விதத்தில் வளர்த்து, அது நற்செயல்களால் பெயர் எடுக்கப் பல ஆண்டுகள் ஆகும். அதன் பின் தானே அவனுக்குப் பெருமை?  

அது போன்றே சமூக அளவிலும் பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பித்தல் தவறு என்று இங்கே வள்ளுவர் கண்டிக்கிறார். ஒருவரது செயல்களே அவரது சிறப்பை மற்றும் அவர் குடியின் சிறப்பை (உயர்வு அல்லது தாழ்வை) எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டும்!

மிகச்சிறப்பான, விண்மீன் குறள்!


Last edited by app_engine on Wed Apr 29, 2020 1:09 am; edited 1 time in total

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Aug 02, 2017 9:31 pm

#973
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல்லவர்


"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்றாலும் மனித சமுதாயம் பல்லாயிரம் ஆண்டுகளாகப் "பல அடுக்கு" முறையிலேயே இயங்கி வருவதை நாம் காண முடியும். பொருளியல் அடிப்படையில் பார்த்தால், "மேல் தட்டு-அடித்தட்டு-நடுத்தரம்" என்று மேம்போக்காக இந்தப்பிரிவினையை விளக்க முடியும்.

இந்தக்குறளை அந்த அடிப்படையில் - அதாவது செல்வப்பெருக்கில் மேல் இடத்தில் உள்ளோர் மற்றும் கீழிடத்தில் உள்ளோர் - என்று எளிமையாகப்புரிந்து கொள்ளலாம். உண்மையில் அதைத்தான் வள்ளுவர் எண்ணினாரா அல்லது அவரது காலத்தில் மேல்-கீழ் என்பது வேறெந்த வகையிலெல்லாம் பகுக்கப்பட்டது என்று இன்று அடித்துச் சொல்ல இயலாது.
(மு.க. உயர்பதவி = மேல் நிலை என்கிறார். மணக்குடவர் செல்வத்தின் அடிப்படை என்கிறார். மேல் சாதி - கீழ்ச்சாதி போன்ற சமூக அடுக்குகள் அன்றும் இருந்திருக்கலாம், நம் காலத்தில் பீற்றிக்கொள்வது போல் சாதி அடிப்படையில் "மேம்பட்ட குடி" என்று அன்றும் சொல்லிக்கொண்டார்களா தெரியாது)

எந்தக்கணக்கில் பார்த்தாலும், சமுதாயம் என்றுமே "மேல்-கீழ்" என்று சமத்துவம் இல்லாமல் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. அவ்விதத்தில், வள்ளுவர் உண்மையிலேயே யார் மேல், யார் கீழ் என்று விளக்குவது மிகத்தேவை!

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்
மேல்நிலையில் இருந்தாலும் மேலான பண்புகள் இல்லாதோர் பெருமை மிக்கவரல்லர்

கீழிருந்தும் கீழல்லார் கீழல்லவர்
(அது போன்றே) கீழ்நிலையில் இருந்தாலும் இழிவான பண்புகள் இல்லாதோர் பெருமை குன்றியவர் அல்லர்

ஆக ஒருவருக்குப்பெருமை / சிறப்பு அவரது பண்புநலன்களால் தானே ஒழிய, சமுதாயத்தின் எந்தத்தட்டில் குடியிருக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் அல்ல!

மிகச்சிறப்பான கருத்தை அழகான சொல் விளையாட்டோடு தரும் இந்தச்செய்யுளும் ஒரு விண்மீன் தான்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

ஆதன் likes this post

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 16 1, 2, 3 ... 8 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum