Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

3 posters

Page 2 of 16 Previous  1, 2, 3 ... 9 ... 16  Next

Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 2 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Aug 03, 2017 7:13 pm

#974
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு


"ஒருமை மகளிர்"  என்ற பயன்பாடு முதன் முறையாகப்படிக்கிறேன் என்று நினைக்கிறேன்.

கற்புடைப்பெண்டிர் என்று சொல்லப்படுவதன் வேறொரு விதம்.  ஒருமை = ஒருவனோடு மட்டும் உறவு என்ற கட்டுப்பாட்டுடன் வாழுபவர். (சில உரையாசிரியர்கள், "மனதளவிலும்" என்று சொல்வதைக்காணலாம்).

அப்படிப்பட்டோருக்கு இருக்கும் அதே பெருமை, தன்னடக்கம் உள்ளவருக்கு உண்டு என்று சொல்லும் குறள். "ஒருமை" என்பதும் தன்னடக்கம் தான் என்பதால், குறிப்பிட்ட அளவிலான இந்த ஒப்பிடல் பொதுவாகச் சமுதாயத்தில் கற்புக்கு இருக்கும் முன்னிலையை அழுத்திக்காட்டுகிறது எனக்கொள்ளலாம்.

தன்னைத்தான் கொண்டொழுகின்
தன்னைத்தான் காத்துக்கொண்டு நடந்தால்
(குடிக்குரிய வரம்புகள் மீறாமல் நடந்தால் என்றும் புரிந்து கொள்ளலாம்)

ஒருமை மகளிரே போலப் பெருமையும் உண்டு
கற்புடைய மகளிர் போன்ற பெருமை ஒருவருக்கு உண்டாகும்

"ஒருமை" என்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான ஒழுக்கமாக வைக்கும் கூட்டத்தில் உள்ளவன் என்பதால் இந்தக்குறளுக்கு முந்தையவை போல் தனிச்சிறப்பு அளிக்க மனம் வரவில்லை.

என்றாலும், "ஒழுக்கமான வரம்புகளுக்குள்ளே தன்னடக்கத்தோடு நடப்பதே பெருமை" என்று கருத்து வெகு சிறப்பான ஒன்றே!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 2 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Aug 04, 2017 6:59 pm

#975
பெருமையுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்


'ஆற்றின்' என்ற சொல்லுக்கான கூடுதல் விளக்கங்கள் தவிர மற்றபடி எளிதாகப் புரிந்துகொள்ளத்தக்க குறள்.

"பெருமை என்பது அரிய செயல்கள் ஆற்றுவதால் வருவது" என்பது ஆக மொத்தக்கருத்து. இங்கு மீண்டும் குடிப்பிறப்பு என்பதையெல்லாம் விட்டு விட்டு செயல்களின் மீது அழுத்தம் கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

நாம் என்ன செயல்கள் புரிகின்றோமோ அவையே நமது பெருமை அல்லது சிறுமை என்னவென்று உலகுக்கு அறிவிக்கும்!

பெருமையுடையவர்
பெருமை உடையவர்கள்

ஆற்றின்
சரியான வழியில் / நெறியில்
(அல்லது)
நெருக்கடியுடன் செயல்படும்போதும்
(இப்படி இருவிதமான விளக்கங்கள் படித்தேன்)

அருமை உடைய செயல் ஆற்றுவார்
செயற்கரிய செயல்களைச் செய்து முடிப்பார்கள்

கேள்வி - அருமை உடைய / செயற்கரிய செயல் என்பதை எப்படி வரையறுக்கலாம்?

ஒவ்வொருக்கும் உள்ள சூழலில் "முடியாது" என்று தோன்றவைக்கும் எதுவுமே அரிய செயல் தான்.

பத்து மைல் நடந்து சென்று தான் பள்ளிக்குப்போக வேண்டும் என்ற சூழலில், ஒரு ஏழ்மைக்குடியில் பிறந்து நித்தம் வேலைக்குப்போய் வாழ்வை ஓட்ட வேண்டிய நிலையில் அடிப்படைக்கல்வியைப் படித்து முடிக்கும் குழந்தையும் அதன் பெற்றோரும் செயற்கரிய செய்த பெருமைக்குடையவர்களே!  

அதே பள்ளிக்கு அடுத்த தெருவில் வசதியான குடியில் பிறந்த குழந்தை அதே அடிப்படைக்கல்வியை நிறைவு செய்வதை மற்ற குழந்தையைப்போன்றே "அருமையான செயல்" என்று பெருமைப்பட வழியில்லை. (குறை ஒன்றுமில்லையென்றாலும், அவ்வளவு பெருமை இல்லை - ஏனென்றால் "அருமை" என்று சொல்ல வழியில்லை).

(ஏனய்யா இப்படி ஒரு எடுத்துக்காட்டு? இன்று காலை, வேலை செய்யும் இடத்தில் குழு உறுப்பினர்களோடு நடந்த உரையாடலின் விளைவு Laughing )

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 2 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Sat Aug 05, 2017 12:02 am

#976
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள்வேம் என்னும் நோக்கு


இந்தக்குறள் ஏன் குடியியல்-பெருமை அதிகாரத்தில் இருக்கிறது என்று சட்டென நோக்கும்போது பிடிபடவில்லை.

என்றாலும், அருமையான / உண்மையான கருத்து.

குறிப்பாக, எல்லாத்தமிழருக்கும் ஒரு கணக்கில் மிகப்பொருத்தமானது. நம் நடுவில் உள்ள பெரியோரை மதிக்கும் பண்பு குறைந்து கொண்டே வருவதும், அப்படியொன்றும் அண்ணாந்து பார்க்க வேண்டாத ஆட்களை அளவுக்கு மீறிப்புகழ்வதும், மிக உயர்ந்த இடங்களில் கொண்டு வைப்பதும் அன்றாட நிகழ்வாகி வருகிறது.

உண்மையில் "யார் பெருமைப்படத்தக்க பெரியோர் என்று அறியாத அவலநிலை" என்று தோன்றச்செய்யும் நாட்கள் இவை Sad

பெரியாரைப் பேணிக்கொள்வேம் என்னும் நோக்கு
"பெருமைச்சிறப்பு உள்ளோரைப் பேணிக்கொள்வோம் (மதித்துப்போற்றுவோம்)" என்ற எண்ணம்

சிறியார் உணர்ச்சியுள் இல்லை
(அத்தகைய பெரியோரின் சிறப்பை உணராத) சிறியோரின் உணர்ச்சியில் (மனதில் / உணர்வுகளில்) இல்லை

அருமையான செயல்களை நடத்தியிருப்போரை மதிப்புடன் போற்றக்கற்றுக்கொள்வோம்.

தகுதியற்றோரை அளவுக்கு மீறித்தலையில் வைத்து ஆடும் வேலையைத்தவிர்ப்போம்.

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 2 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Aug 07, 2017 5:03 pm

#977
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல்லவர்கண் படின்


முன்பு ஒரு குறளில் (#152) கண்டது போல, இங்கே இறப்பு என்பதற்கான பொருள் "அளவு கடந்த தீங்கு" .

சிறுமை பிடித்தவர்களுக்கும் சூழல் காரணமாகச் "சிறப்பு" வந்து விடலாம்.
(நம் நாளில் பெரும்பாலும் பெரும் பதவிகளும் பணமும் செல்வாக்கும் சிறுமை பிடித்தவர்களே அடைகின்றனர் என்பது தொடர்ந்து செய்திகளைப்படித்து வருவோர் காண்பது).

"அப்படி நடந்தால், அவர்கள் பெருந்தீங்கு செய்வதையே தொழிலாகக் கொண்டிருப்பார்கள்" என்று முன்னறிவிப்பு செய்யும் செய்யுள்! நம் நாட்களில் நடப்பதை முன்னமேயே எழுதி வைத்திருக்கிறார்!

சீரல்லவர்கண் சிறப்புந்தான் படின்
சீரற்றவர்களுக்குச் சிறப்பான இடம் கிடைத்தால்

இறப்பே புரிந்த தொழிற்றாம்
அளவு கடந்த தீங்கு செய்து கொண்டிருப்பார்கள்

சீரற்றவர் = சிறுமை பிடித்தவர்கள் / ஒழுங்கு இல்லாதவர்கள் / நற்பண்புகள் அற்றவர்கள். சீரற்றவர் = சிறுமை பிடித்தவர்கள் / ஒழுங்கு இல்லாதவர்கள் / நற்பண்புகள் அற்றவர்கள். இந்த வரையறைக்கு நல்ல எடுத்துக்காட்டு நம் நாளில் காணப்படும் அரசியல் "தலைவர்கள்".

நாடும் மக்களும் இத்தகையோர் கையில் கிடந்தது அவதிப்படுவது நாள்தோறும் காணும் நிகழ்வு!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 2 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Aug 07, 2017 5:24 pm

#978
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து


புகழ் பெற்ற குறள் - பள்ளிக்காலத்தில் நாம் எல்லோரும் படித்த ஒன்று.

பொருள் புரிதல் மிகவும் எளிது - பயன்படுத்தியிருக்கும் சொற்கள் இன்று வரை புழக்கத்தில் உள்ளவை Smile

பெருமை என்றும் பணியுமாம்
பெருமை என்றும் பணிவுடன் நடந்து கொள்ளும்
(பெருமையுள்ளோர் அடக்கத்துடன் நடந்து கொள்வார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்)

சிறுமை தன்னை வியந்து அணியுமாம்
(இதற்கு மாறாக), சிறுமை எப்போதும் தன்னைத்தானே வியந்து பீற்றிக்கொள்ளும்

"தன்னை வியந்து அணிதல்" = தன்னைத்தானே விளம்பரம் செய்தல் Smile

உண்மையில் பெருமை உடையோருக்கு தன்னைத்தான் விளம்பரம் செய்வதற்கான தேவையில்லை. சிறுமை பிடித்தோர் இதற்கு நேர் எதிரானவர்கள். எப்போதும் விளம்பரம் செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிடில் மறக்கப்படுவர் Laughing

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 2 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Aug 08, 2017 6:28 pm

#979
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்


"ஊர்ந்து விடல்" என்பதைத்தவிர இந்தக்குறளில் புரிந்து கொள்ளக்கடினமாக வேறொன்றுமில்லை.

அதுவும் பொதுவான கருத்து என்ற விதத்தில் கடினம் அல்ல - குறிப்பிட்ட சொற்களின் பொருள் இந்தச்சூழலில் எப்படி வருகிறது என்று மட்டும் கொஞ்சம் குழப்பம்.

பெருமை பெருமிதம் இன்மை
பெருமை என்னது செருக்கு (தருக்கு / ஆணவம்) இல்லாமல் இருப்பதே

சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்
(மாறாகச்) சிறுமை என்பது பெருமிதம் (செருக்கு) நிறைந்து இருப்பதே

ஊர்ந்து என்பதற்குப் "படர்ந்து / பரவி" என்று ஒரு பொருள் அகராதி சொல்லுகிறது. அதுவே இங்கு பொருத்தமாக எனக்குப்படுகிறது.

செருக்கின் எல்லை வரை சென்று விடும் / எல்லையில் நின்று விடும் என்றெல்லாம் பரிமேலழகர் உரையின் அடிப்படையில் மற்ற உரைகளும் "எல்லை" என்ற கருத்தைக் கூட்டுகின்றன. எங்கிருந்து அவர் "எல்லை" கண்டார் என்று எனக்குப்பிடிபடவில்லை. அதனால் நான் அதை விட்டு விட்டேன் Wink

மற்றபடி, இதற்கு முந்தைய குறளில் சொன்ன கருத்தையே மீண்டும் சொல்கிறார்.

தன்னைக்குறித்து அளவுக்கு மீறி நினைப்பது தான் செருக்கு / திமிர். இது சிறுமை எண்ணம் உடையவருக்கான இயல்பு. உண்மையான பெருமைக்குரிய சான்றோர் அப்படிப்பட்ட செருக்கு கொண்டிருக்க மாட்டார்கள் என்பது வள்ளுவர் மீண்டும் மீண்டும் சொல்லும் ஒன்று தான்.

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 2 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Aug 08, 2017 7:37 pm

#980
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்


குறை மட்டுமே கூறிக்கொண்டிருக்கும் ஆட்களோடு இருத்தல் துன்பமான ஒன்று. ("குற்றம் கண்டுபிடித்தே வாழும் புலவர்" வகை).

அப்படிப்பட்டோர் சிறுமை இயல்பினர் என்று சொல்லி இந்த அதிகாரத்தை நிறைவு செய்கிறார். (பெருமைக்குரியவர்கள் இதற்கு மாறானவர்கள் என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை).

சிறுமைதான் குற்றமே கூறி விடும்
சிறுமை பிடித்தவர்கள் (எப்போதும்) குற்றம் மட்டுமே கூறிக்கொண்டு இருப்பார்கள்
(மற்றவர்களைச் சீண்டுவது - குறை கூறுவது - வெறுப்பை உமிழ்வது இவர்களது முழுநேரத்தொழில்)

அற்றம் மறைக்கும் பெருமை
(இதற்கு மாறாகப்) பெருமை (மற்றவர்களின்) அவமானங்களை மறைத்து விடும்

அற்றம் என்பதற்குப்பல பொருள்கள் இருந்தாலும், அகராதி இங்கே "அவமானம்" என்பதை இந்தக்குறளை மேற்கோள் காட்டிச்சொல்லுகிறது. அழிவு / இழிவு என்றெல்லாமும் சொல்லலாம்.

மற்றவரை இழிவு படுத்துவது அல்ல பெருமை. அதையும் மறைத்துக்காப்பது தான் உயர்ந்தோர் பண்பு.

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 2 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Aug 09, 2017 6:52 pm

#981
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு

(பொருட்பால், குடியியல், சான்றாண்மை அதிகாரம்)

இந்த அதிகாரம் சான்றோராக நடந்து கொள்ளுதல் குறித்துப்பேசுவதால், நம் மனநிலையை அதே உயரத்தில் வைத்துக்கொள்வோம் Smile
(சால்பு = மேன்மை / உயர்வு)

முதற்குறளில் வள்ளுவர் அவ்வப்போது நடத்தும் சொல் விளையாட்டோடு தொடங்குகிறார். கடன் என்னும் சொல்லுக்குள்ள இரண்டு பொருள்கள் இங்கே கையாளப்பட்டு சான்றாண்மை விளக்கப்படுகிறது.

கடன் (அறிந்து) = கடமை இன்னின்ன என்று தெரிந்து
கடன் (என்ப) = இயல்பு என்பார்கள் / எனப்படும்

கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு
"இவையெல்லாம் நம் கடமை" என்று அறிந்து சான்றாண்மையோடு வாழுவோருக்கு

நல்லவை எல்லாம் கடன்என்ப
நல்ல பண்புகள் எல்லாம் இயல்பே என்பர்

கடமை தவறாத சான்றோரின் இயல்பு நற்பண்புகள்.

அதாவது, சான்றோர் / சான்றாண்மை என்பதன் வரையறைகளாக இந்த இரண்டையும் எடுத்துக்கொள்ளலாம் - கடமை & நன்மை Smile

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 2 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Aug 09, 2017 9:04 pm

#982
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று


மீண்டும் சொல் விளையாட்டு, இந்தக்குறளில் நலம் / நலன்.

இதற்குள்ள ஒரு பொருள் நன்மை. (குண நலம் = நற்குணம் / நல்ல பண்பு)

இன்னொன்று அழகு. சான்றோர் நலன் = சான்றோருக்கு அழகு.

சான்றோர் நலனே குணநலம்
சான்றோருக்கு அழகு நல்ல குணம் / நற்பண்புகள் தான்

பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று
மற்ற அழகுபடுத்தல்கள் எந்த நன்மையிலும் உட்படவில்லை

புற அழகுகள் சான்றோருக்குக் கூடுதல் அணியொன்றும் சேர்ப்பதில்லை. அவருடைய அகம் நல்ல பண்புகளால் நிறைந்திருப்பதுவே போதுமானது என்று சொல்ல வருகிறாரோ? வேறு விதமாகப்பார்த்தல், நற்பண்புகள் உள்ளோர் தாம் சான்றோர். வேறு அழகுகள் ஒன்றும் ஒருவருக்குச் சான்றாண்மை தருவதில்லை என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

நம் நாளில் "நல்ல குடியினர் / சான்றோர்" என்றெல்லாம் ஒருவரை அழைக்க என்ன தகுதி வைத்திருக்கிறார்கள்? ஆழ்ந்து எண்ண வேண்டிய ஒன்று. எடுத்துக்காட்டாக, எல்லோருக்கும் நீதி சொல்லும் நிலையில் இன்று வழக்கு மன்றங்களில் உள்ளோர் எப்படிப்பட்ட சான்றோர்கள் என்று நினைத்தால் சில நேரங்களில் அச்சமாக இருக்கிறது.

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 2 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Aug 10, 2017 5:10 pm

#983
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்


சான்றாண்மைக்கு இன்னும் கூடுதல் வரையறை இங்கே.

ஐந்து அடிப்படைப்பண்புகள் படிக்கிறோம். அவை தாம் சான்றாண்மையைத்தாங்கி நிற்கும் தூண்கள் என்ற அழகான உருவகமும் உண்டு.

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
அன்பு, நாணம், ஒப்புரவு, இரக்கம், வாய்மை எனப்படும்

ஐந்துசால் ஊன்றிய தூண்
ஐந்து பண்புகள் தாம் சான்றாண்மையைத் தாங்கி நிற்கும் தூண்கள்!

இவற்றுள் அன்பை விளக்குவது தான் கடினம். மற்ற நான்கும் நேரடியான பொருள் கொண்டவை.

நாணம் - வெட்கம், அச்சம் (குறிப்பாகத் தீங்குக்கும் கெட்ட பெயருக்கும் அஞ்சுதல்)
ஒப்புரவு - ஒத்துப்போதல், மற்றவர்களோடு இணங்கிச்செல்தல்
கண்ணோட்டம் - மற்றவர்களுக்கு இரங்குதல், கருணை காட்டுதல், ஈகை, மன்னித்தல்
வாய்மை - உண்மை பேசுதல், நேர்மை

இப்படி மேற்சொன்ன நான்கும் நேரடியான, எளிதில் விளக்கத்தக்க பண்புகள். மட்டுமல்ல, ஒருவர் இவற்றைக்கொண்டிருப்பதும் அல்லாததும் விரைவில் கண்டுகொள்ள முடியும். பேரளவில் வெளிப்படையான பண்புகள். (வெளிக்காட்டுவதும் - சொல்லப்போனால் நடிப்பதும் கூட Laughing - எளிது).

ஆனால், அன்பு என்பதன் வரையறை இவ்வளவு வெளிப்படையான மற்றும் குறுகிய அளவிலான, நடித்துக்காட்டத்தக்க ஒன்று அல்ல!

மிக ஆழமாக, விரிந்து படர்ந்து மற்ற எல்லாப்பண்புகளையும் உள்ளடக்கி நிற்கும் ஒன்று அது! எளிய வரையறை ஒன்று அண்மையில் படித்தது :
அன்பு = எல்லா நற்பண்புகளையும் செயலில் காட்ட ஒருவரைத் தூண்டும் உள்ளார்வம்!

மேற்சொன்ன கருத்து திருக்குறளின் அடிப்படையில் அல்ல என்றாலும் அதோடு மிகவும் ஒத்துப்போகும் ஒன்றே Smile வள்ளுவர் அன்புடைமை அதிகாரத்தில் என்ன சொன்னார் என்று படித்து ஒப்பிட்டுக்கொள்ளுங்கள்!

#71 - #80 Smile
https://ilayaraja.forumms.net/t118p75-983#10831

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 2 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Aug 10, 2017 9:05 pm

#984
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு


நலம் என்பது இங்கே "தன்மை / பண்பு / குணம்" என்ற பொருளில் இங்கே வருகிறது.

நோன்மை (நோன்பு / தவம் / பொறுமை / வலிமை) என்பதை உவமையாக்கி சான்றாண்மையை விளக்குகிறார்.

கொல்லா நலத்தது நோன்மை
நோன்பு / தவம் என்பதன் அடிப்படையான தன்மை கொல்லாமை!
(வலிமையும் பொறுமையும் வெளிப்படுவது கொல்லாமையில் தான் என்றும் கொள்ளலாம். அதாவது, கொல்ல வலிமை இருந்தும் தவிர்ப்பது / பொறுமை காண்பிப்பது என்பது சரியான நோன்பு)

பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு
(அது போல) மற்றவர்களின் தீமையை உரக்கச்சொல்லாத (எல்லோர் முன்னும் பரப்பிக்கொண்டிருக்காத) தன்மையுடையது தான் சான்றாண்மை

மற்றவர்களின் தீமையை வெளிப்படுத்தாதவன் எப்படிச்சான்றோன் ஆவான்?

இங்கே தீமை என்பது "பெருங்குற்றம்" (கொலை / கொள்ளை / பாலியல் வன்முறை போன்றவை) என்று எண்ணக்கூடாது. அப்படிப்பட்ட கொடியவனைக்குறித்து எச்சரித்து மற்றவரைக் காக்க வேண்டியது சான்றோரின் கடமையே.

இங்கு சொல்லப்படுவது சிறுசிறு குறைபாடுகள். மிஞ்சிப்போனால் தனிப்பட்ட விதத்தில் அறிவுரை சொல்லலாமேயொழிய ஊரறியக் கூவ வேண்டாத தீமைகள். (எளிய எடுத்துக்காட்டு - சிறிய ஒரு கடன்தொகையை சொன்னதை விடக்கொஞ்சம் காலம் தள்ளித்திருப்பிக்கொடுத்தது - குற்றம் தான், ஆனால் எல்லோருக்கும் சொல்லி அவமானப்படுத்த வேண்டியதில்லை).

தனிப்பட்ட தீமைகளை மன்னிப்பதும் அது குறித்து மீண்டும் மீண்டும் பேசாமல் (மற்றவரின் மானத்துக்கு இழுக்கு வராமல்) கட்டுப்படுத்திக்கொள்வதும் உயர்ந்தோர் பண்பு!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 2 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Aug 11, 2017 4:41 pm

#985
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை


"பணிவு / மனத்தாழ்மை" என்பது திருக்குறளின் முழு நீளமும் உயர்த்தப்படும் பண்பு.

சான்றாண்மைக்கும் அது எவ்வளவு தேவை என்று இங்கே படிக்கிறோம்.

"ஆற்றுவார்" என்று செயல் புரிந்து முடிப்போரை இங்கு எடுத்துக்காட்டாகக் கொள்கிறார். "வெற்றி பெற்றவர்" என்றும் எடுத்துக்கொள்ளலாம். அப்படிப்பட்டோர் பணிவினால் தான் அந்நிலையை எட்டியிருப்பதாக இங்கே படிக்கிறோம்.

வெற்றியாளர்களுக்கு எந்த அளவுக்குப்பணிவு உதவுகிறதோ அதே போன்று சான்றோருக்குப் பகைவரைக் கூட்டாளிகள் ஆக்கவும் உதவும் என்கிறார்.

ஆற்றுவார் ஆற்றல் பணிதல்
(செயலில்) வெற்றி பெறுவோரின் ஆற்றல் பணிவு என்ற பண்பில் இருக்கிறது

அது சான்றோர் மாற்றாரை மாற்றும் படை
சான்றோருக்கு அதுவே (பணிவு தான்) பகைவரை மாற்றி விடும் வலிய கருவி!

"இறங்கிச்சென்று பகைவரையும் கூட்டாளி ஆக்குதல்" - இது சான்றாண்மையின் படைக்கருவி என்று தெரிந்து கொள்கிறோம். இது குறிப்பிடத்தக்க ஒன்று. அடித்துக்கொண்டு சாவதால் யாருக்கும் நன்மை இல்லை - அடிப்படையில் அது சான்றோரின் பண்பாகாது.

முறுக்கிக்கொண்டு முரண்பட்டு நிற்பது உயர்ந்தோர் பண்பன்று. நல்லிணக்கம் வருவதற்கு யாரவது ஒருவர் பணிவு காட்டியே தீர வேண்டும்.

அதைச்செய்வோரே சான்றோர்!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 2 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Aug 11, 2017 5:09 pm

#986
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்


துலை என்ற புதுச்சொல் படிக்கிறோம் இங்கே. (அகராதி இந்தக்குறளைச் சுட்டி "ஒப்பு" - சமன் - என்று பொருள் கூறுகிறது).

துலாக்கோல் (தராசு) நினைவுக்கு வரலாம், இரண்டு புறமும் ஒப்பா இல்லையா என்று அளக்கும் முற்காலக்கருவி.

மின்னணு எடைக்கருவிகள் மிகுந்த 2000-ங்களில் "துலை" காணும் கருவி அருங்காட்சியங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறது Smile திரைப்படங்களில் நீதிமன்றம் காட்டும்போது நீதி தேவதையின் கையில் இருப்பதாக இது வரலாம். (நான் சென்ற நீதிமன்ற அறைகளில் கண்கட்டின தேவதையோ துலாக்கோலோ கண்டதில்லை Laughing

சால்பிற்குக் கட்டளை யாதெனின்
சான்றாண்மைக்கு உரைகல் (உறுதிப்படுத்தும் கருவி) என்னவென்றால்

துலையல்லார் கண்ணும் தோல்வி கொளல்
தமக்கு ஒப்பில்லாதவர்களிடத்தும் (கீழானவர்களிடத்தும்) தோல்வியை ஒத்துக்கொள்தல்

கடந்த குறளில் படித்த பணிவு / மனத்தாழ்மை என்ற பண்பு இதற்கு மிகத்தேவை.

தன்னை விடப்பெரியவன் / வலியவனிடம் தோல்வி ஒப்புக்கொள்வது பெரிதல்ல. தன்னிலும் எளியோரிடத்தும் "ஆம், நான் தோற்று விட்டேன்" என்று இறங்கிச்செல்வது ஆழ்ந்த மனவலிமை உள்ளோருக்கே, செருக்கற்ற மேன்மக்களுக்கே உரிய பண்பு.

அது தான் "இவன் சான்றோன்" என்று கண்டுபிடிக்க அடையாளம்!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 2 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Aug 11, 2017 11:41 pm

#987
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு


சான்றாண்மை என்பதற்குக் கூடுதல் வரையறை இன்னும் வருகிறது. அன்பு என்னும் பண்போடு கூடுதல் உறவிலுள்ள ஒன்றை இங்கே முன்வைக்கிறார். அதாவது, "ஒரு கன்னத்தில் அறைந்தால்..." மீண்டும் வருகிறது இங்கே Wink

"இன்னா செய்தாருக்கும் இனியது செய்தல்".

துன்புறுத்தினவரை "ஒறுப்பதற்கு" நன்னயம் செய்யவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தவர் இங்கே அப்படிச்செய்யா விட்டால் சால்பு இல்லை என்று அடிக்கிறார்.

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
துன்பம் செய்தவருக்கும் (திருப்பி) நன்மையானத்தைச் செய்யாவிட்டால்

என்ன பயத்ததோ சால்பு
"சான்றோன்" என்று சொல்லிக்கொண்டு என்ன பயன்?
(சால்பு என்ற பண்பின் பலன் தான் என்ன?)

ஆக, மன்னிப்பு / நற்பண்பு / நன்மை செய்தல் / எதிரிக்கும் இரங்குதல் / இறங்கி வந்து இணங்குதல் என்பனவெல்லாம் சான்றாண்மையின் அடிப்படைப்பண்புகள்.

அவை இல்லாத நிலையில் ஒருவனைச் சான்றோன் என்று சொல்ல இயலாது.

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 2 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Aug 14, 2017 5:28 pm

#988
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்


"இளி" என்றால் மற்றவர்கள் நம்மைப்பார்த்து நகைக்கும் இழிநிலை என்று முன்னமேயே பார்த்திருக்கிறோம். அந்தச்சொல் மீண்டும் இந்தக்குறளில் வருகிறது.

சான்றோருக்கு வறுமை "இளி" அல்ல என்று சொல்லும் அழகான செய்யுள்

சால்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்
சான்றாண்மை எனும் உறுதி (வலிமை) ஒருவருக்கு உண்டென்றால்

இன்மை ஒருவற்கு இளிவன்று
பொருள் இல்லாமை (வறுமை) அவருக்கு இளிவல்ல (பிறர் நகைக்கும் நிலை அல்ல)

இங்கே நாம் காணும் ஒரு பொது உண்மை "பொருள் இல்லாமை மற்றவர்கள் ஏளனம் செய்யும் இழிவு நிலை" என்பது. வறுமையில் உள்ளோருக்கு யாரும் மதிப்பளிக்க மாட்டார்கள் என்பது வள்ளுவர் காலந்தொட்டே இருந்து வரும் நடைமுறை. பொருளுக்கு மிகக்கூடுதல் இடம் தரும் நம் காலத்தில் இதைக்குறித்துச் சொல்லவே வேண்டியதில்லை. பணம் இல்லாதவன் பிணம் என்பதே நடைமுறை.

ஆனாலும், பண்புகள் கொண்டு சான்றோர் எனும் உயர்ந்த நிலையில் உள்ளோருக்கு வறுமை இழிவைத்தராது என்று இங்கே படிக்கிறோம்.

உயர்ந்த கொள்கைகள் கொண்டு வாழ்வோருக்கு இன்று பொருள் ஈட்டுவது எளிதன்று என்பது இன்னொரு நடைமுறை உண்மை. மிஞ்சிப்போனால் அன்றாடத்தேவைகளை நிறைவு செய்து அமைதியான வாழ்வு வாழ முடியும். அதற்கே திணற வேண்டி இருக்கலாம். ஆனாலும், பண்பில் உயர்ந்து நிற்போரை மற்றவர்கள் பார்த்து நகைக்கும் நிலை வராது என்பது உறுதி - குறிப்பாக அவர்கள் தம் நிலையில் உறுதியோடு இருக்கையில்!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 2 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Aug 14, 2017 6:27 pm

#989
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படுவார்


எதுகையாக வரும் ஊழி , ஆழி எனும் இரண்டு சொற்களுமே கொஞ்சம் ஊர்ந்து படிக்க வேண்டியவையாக உள்ளன!

"நீடூழி வாழ்க" என்று நாம் அடிக்கடி கேட்டிருக்கும் சொல் தான் இந்த ஊழி என்றாலும் தனிச்சொல்லாக இதைக்குறித்து ஆழ்ந்து எண்ணியதில்லை. நீடூழி = நீண்ட ஊழி, எனவே ஊழி என்பது நெடுங்காலம் என்று பொருள் படும் அழகிய தமிழ்ச்சொல். (அளவற்ற காலம் என்பதற்கு இந்தச்சொல் தொல்காப்பியத்தில் பயன்படுபவதாக வலையில் காண முடிகிறது).

இந்தச்சொல்லை "நீண்ட நெடுங்காலமாக நிலைத்திருக்கும் உலகம்" என்ற பொருளில் இங்கே படிக்கிறோம். "யுகம்" என்று பொதுவாகச்சொல்லப்படும் நெடுநாள் உள்ள ஒழுங்குமுறை.

அது சட்டென்று, ஒரு வெள்ளத்தால் உலகம் அழிவது போன்று, மாறுவது / முடிவது இங்கே "ஊழி பெயரினும்" என்று வருவதாகச் சொல்கிறார்கள். அப்படியாக, ஊழி பெயரல் = உலக முடிவு வரத்தக்க கால மாற்றம்.

ஆழிக்குப்பல பொருட்கள் இருந்தாலும் இங்கே கடல் அல்லது கடற்கரை என்பதே பொருள் என்று உரைகள் சொல்கின்றன. "ஊழி = வெள்ளத்தால் உலகமுடிவு" என்று கொள்வோமானால், இந்த இரண்டு பொருள்களுமே பொருத்தம் தான்.

வெள்ளம் கடலை / கடற்கரையை என்ன செய்து விட முடியும்?

சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார்
சான்றாண்மைக்குக் கடல் (அல்லது கடற்கரை) என்று சொல்லப்படும் மேலோர்

ஊழி பெயரினும் தாம்பெயரார்
(உலகே முடிந்துபோகும்) காலமாற்றம் வந்தாலும் தாம் அசைய மாட்டார்கள். (உறுதியோடு நிற்பார்கள் / அழிவின்றி இருப்பார்கள்)

உலகமுடிவு என்பதை விடுத்து, "நீண்ட காலம் நிற்கும் மரபுகளின் பெயர்ச்சி / நீக்கம்" என்ற அளவில் பார்ப்போம்:
(ஆழி போல்) ஆழ்ந்த நற்பண்புகள் உள்ள சான்றோர், காலம் (ஊழி) எவ்வளவு மாறினாலும் தம் இயல்பில் மாறிப்போக மாட்டார்கள் Smile

அழகான சொற்கள், "ஆழமான" உவமை - சுவையான குறள்!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 2 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Aug 14, 2017 7:31 pm

#990
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை


இருநிலம் என்பது "வினைத்தொகை" என்று கொள்ளலாம். (இருந்த நிலம், இருக்கின்ற நிலம், இருக்கும் நிலம் என்ற பொருளில். "இருமை" என்பது இருத்தல், இரண்டு அல்ல).

விரிந்த உலகம், நிலம், பூமி என்றெல்லாம் அகராதியில் பொருள் காணலாம். நாம் வாழும் மண்ணுலகு. பொறுமைக்கு அடையாளமாகச் சொல்லப்படும் நிலம்!

அதன் பொறுமையும் போய் விடுமாம் - சான்றோர் தம் இயல்பில் குறைவு பட்டால்.

சான்றவர் சான்றாண்மை குன்றின்
சான்றோர்கள் தமது உயர்ந்த பண்புகளில் குறைவு பட்டால்
(அல்லது, உலகில் சான்றோர்கள் குறைந்து போனால் என்றும் புரிந்து கொள்ளலாம்)

இருநிலந்தான் பொறை தாங்காது மன்னோ
மண்ணுலகே தன் எடை தாங்காமல் (அல்லது பொறுமை இழந்து) அழிந்து விடும் அல்லவா

சான்றோரின் உயர் பண்புகளால் தாம் உலகம் நிலைத்திருக்கிறது என்று சொல்ல வருகிறார்.

வேறு பலர் கொடுமைகள் செய்தாலும், நிலம் பொறுத்துக்கொண்டு எல்லா உயிர்களும் வாழ இன்று வரை நிலைத்திருக்க நல்லோர் சிலர் உள்ளதே காரணம் என்ற கருத்து நாம் பலமுறை காண்பதே. (நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை - போன்ற கருத்துக்கள் நினைவுக்கு வரலாம்.)

அப்படிப்பட்ட நல்லோர் / சான்றோர் தம் பண்பில் குறையத் தொடங்கினால் இனியும் உலகம் நிலைத்திருக்காது என்று வருகிறது.

சான்றாண்மை குன்றின் அழிவு உறுதி!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 2 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Aug 15, 2017 4:55 pm

#991
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு

(பொருட்பால், குடியியல், பண்புடைமை அதிகாரம்)

பண்புடைமை என்ற ஒரு குறிப்பிடத்தக்க அதிகாரத்துக்கு வந்திருக்கிறோம். "இவர் பண்பாளர்" என்று ஒருவரை மற்றவர்கள் மதிப்பிடுவது எவ்வளவு அருமையானது என்று சொல்லத்தேவையில்லை.

மற்றவர்கள் மதிக்கத்தக்க பண்பாளராக நாம் எப்படி விளங்க முடியும்?

முதல் குறளிலேயே அதற்கான எளிய வழியை சொல்லிக்கொடுக்கிறார் புலவர்!

செங்கோன்மையில் படித்த எண்பதம் என்ற சொல் (குறள் #548) இங்கே மீண்டும் வருகிறது.

எளிமை, எளிய செவ்வி என்று அகராதி வழி முன்னமேயே கண்டிருக்கிறோம். மற்றவர்கள் அணுகத்தக்க / பழகத்தக்க எளிமை.

தொடர்ந்து "எளிது" என்ற சொல்லையும் பயன்படுத்தி வள்ளுவர் இங்கே விளையாடுகிறார். "எளிமையால் எய்வதே எளிது" - என்ன ஒரு அழகான கருத்து!

பண்புடைமை என்னும் வழக்கு
பண்புடைமை எனப்படும் வழக்கம்
(வழக்கு = எப்போதும் உள்ள வாழ்க்கை வழிமுறை)

யார்மாட்டும் எண்பதத்தால்
எல்லோரிடத்தும் எளிமையாகப் பழகுவதன் வழியாக

எய்தல் எளிதென்ப
எளிதாக அடைந்து விடலாம்

"அந்த ஆளைப்பார்க்கவே முடியாது, பேசுவதற்குக்கூலி கேட்பார்" என்றெல்லாம் நமக்கு மற்றவர்கள் பட்டம் கொடுத்திருக்கிறார்களா? அப்படியானால் நாம் பண்பாளர் ஆகவில்லை என்று சுருக்கம்.

பண்புடைமையின் அரிச்சுவடி எளிமை - பழகுவதற்கு அதுவே இனிமை!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 2 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Aug 15, 2017 5:53 pm

#992
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு


"ஆன்ற" என்பதற்கு நாமெல்லாரும் பொதுவாக அறிந்திருக்கும் பொருள் சிறந்த / பெருமை வாய்ந்த / மாட்சிமை பொருந்திய / உயர்ந்த என்றெல்லாம் தானே?

இருந்தும் பல உரையாசிரியர்களும் இதற்கு "உலகத்தோடு ஒத்துப்போகும்" என்று ஏன் பொருள் சொல்கிறார்கள் என்று விளங்கவில்லை Sad
(மணக்குடவர், பரிமேலழகர், சாலமன் பாப்பையா போன்றோர்).

பள்ளிக்காலத்தில் படித்த குறள் - அப்போதெல்லாம் ஆன்ற என்பதற்குச் "சால்பு மிக்க" என்று தான் பொருள் படித்தோம். (அதாவது, ஆன்றோர் = சான்றோர்). அப்படியே இன்றும் எனக்குப்புரிதல்.

என்றாலும், தற்போதைய எண்ணங்களின் படி "குடிப்பிறப்பு" என்பதில் சிறிய உறுத்தல் இருக்கத்தான் செய்கிறது. பிறப்பு மட்டுமே சிறப்பு அல்ல என்று மிக உறுதியாக நம்புவதன் விளைவாக இருக்கலாம் Smile

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
அன்புடைமை, சிறந்த குடியில் பிறந்தமை ஆகிய இரண்டும் தான்

பண்புடைமை என்னும் வழக்கு
பண்புடைமை எனும் வழக்கத்துக்கான அடிப்படை

நாம் முன்பு பார்த்தது போல அன்பு என்பது உள்ளான ஒன்று. அது வெளிப்படுவது நன்மையான செயல்களால் தாம். அன்பில்லாமல் உண்மையான பண்புடைமை இல்லை. இது அடிப்படை!

என்றாலும், மற்றவர்களும் ஒருவரது அனபைப்போற்றும் சூழல் எல்லா நேரங்களிலும் அமைவதில்லை.

அன்பான சில செயல்களும் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். ஆனால், சரியான சூழலில் வெளிப்படுகையில் (எ-டு : இந்தக்குறள் சொல்வது போல, "சிறப்பான பெயர் வாங்கிய குடியினர் வெளிக்காட்டினால்") கூடுதல் மதிக்கப்படும். "என்னே நல்ல பண்புடைமை" என்றெல்லாம் எல்லோருக்கும் தெரிய வரும்.

ஆக, நம் அன்புடைமையோடு மற்றவர்கள் மதிக்கத்தக்க வெளிப்படையான சில அடையாளங்களும் கொண்டிருப்போம். அப்போது தான் நமக்குப் "பண்பாளர்" பட்டம் கிட்டும் Wink

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 2 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Aug 15, 2017 6:21 pm

#993
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு


குடிப்பிறப்பு என்று கொஞ்சம் ஏமாற்றிய வள்ளுவர், இந்தக்குறளில் அதை உடனே சரிசெய்து விடுகிறார். "உறுப்பொத்தல் அல்ல" ஒருவருக்கு வேண்டியது என்று சொல்வது அழகு.

மானிடர் / விலங்குகள் என்று புரிந்து கொள்வதே சரி என்றாலும் அதை நாம் கொஞ்சம் விரிவு படுத்தி, உடல் தோற்றம் என்று (எனக்குப்பிடித்த விதத்தில்) எடுத்துக்கொள்ளலாம் Wink

அதாவது, உடல் தோற்றத்தில் வேண்டப்பட்டவராக இருப்பதால் மட்டுமே ஒருவரை மேலானவர் பட்டியலில் இடக்கூடாது. ("சிவப்பா இருக்கவன் பொய்சொல்ல மாட்டான்").

மற்றபடி, வெறுத்தகுதல் என்றால் செறிதல் (நிறைதல், மிகுதல்) என்று அகராதி விளக்குகிறது.

அவ்வாறாக, "வெறுத்தக்க பண்பு" = நற்பண்புகள் செறிந்து / நிறைந்து / மிகுந்து இருக்கும் நிலை Smile

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால்
(நன்)மக்களோடு ஒப்புமை என்பது உடல் உறுப்புகளால் ஒத்திருப்பது அல்ல

வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு
செறிந்திருக்கும் நற்பண்புகளால் ஓத்திருப்பதே உண்மையான ஒப்புமை

அப்படியாக, இந்தக்குறளுக்கு அடிப்படைப்புரிதல் :
கையும் காலும் மானிடன் போல் இருந்தால் போதாது, நல்ல பண்பும் வேண்டும் - இல்லாவிடில் விலங்குக்கூட்டத்தில் போவாய்!

கொஞ்சம் அகன்ற புரிதல்:
நன்மக்களோடு அவரைப்போன்ற தோற்றமுள்ளோரைச் சேர்க்காதே - அவரைப்போன்ற பண்புகள் நிறைந்தோரையே சேர்!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 2 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Aug 16, 2017 6:04 pm

#994
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பாராட்டும் உலகு


எளிய, நேரடியான குறள். பொருள் புரியக்கூடுதல் ஆராய்ச்சி தேவையில்லை Smile

நயன் என்பதற்கு நன்மை, விருப்பம் என்றெல்லாம் பொருள்கள் உண்டு என்றாலும் இங்கே "நயனோடு நன்றி" என்பதால், நீதி என்பதே பொருத்தம். (ஏனென்றால், நன்றி என்பதற்கும் நன்மை என்றே இங்கு பொருள்.)

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
நீதி வழுவாமல் நன்மை புரிந்து (மற்றவருக்குப்) பயன் உடையவர்கள்

பண்பு பாராட்டும் உலகு
பண்பினை உலகே பாராட்டும் (வியந்து புகழும்)

அப்படியாக, "நெறியோடு நன்மை செய்தல் பண்புடைமை" என்று இன்னொரு வரையறை இங்கே சொல்லுகிறார்.

நன்மை செய்வோர் எல்லாம் நெறியோடு செய்வதாகச் சொல்ல இயலாது. எடுத்துக்காட்டாக, "இலவசமாகப் பொருள் தருகிறோம்" என்று ஒரு கணக்கில் ஏழைகளுக்கு நன்மை செய்வோர், அதற்காக ஒதுக்கப்படும் பணத்தில் பாதியைத் தமக்கு சுருட்டிக்கொள்வது அரசியலில் எப்போதும் காண்பதே. அது நல்ல பண்புடைமை அல்ல. நெறி வழுவிய கொள்ளை, மற்றவர்களுக்கு நன்மை என்ற பெயரில் தமக்கு வளம் பெருக்குதல்.

மற்றவருக்கு நன்மை செய்ய வேண்டும் ஆனால் நயனுடன் / நலமுடன்.

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 2 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Aug 17, 2017 11:26 pm

#995
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு


"பாடறிவார்" (பாடு+ அறிவார்) என்று ஒரு கூட்டத்தினரை இங்கே பழக்கப்படுகிறோம்.

"பாடறியேன் படிப்பறியேன்" நினைவுக்கு வரலாம். அதே சொல் (பாடு) தான், ஆனால் அதற்குள்ள எக்கச்சக்கப் பொருள்களில் எது இங்கே பொருத்தம் இன்று ஆராய வேண்டியிருக்கிறது Smile

மொத்தச்சூழலையும் பார்க்கையில் "வருத்தம்" என்ற பொருளே மிகப்பொருத்தம். ("ஏழை படும் பாடு" போன்ற சொல்லாடல்களில் வரும் பொருள்.)

பண்பாளர்கள் மற்றவர்களின் மனதின் துயர் அறிந்து (அன்புடன்) நடந்து கொள்வார்கள் என்று சொல்ல வரும் குறள்

அதற்கு நேர் எதிரான ஒரு சூழலை முதலில் சொல்லிச் சுவை கூட்டுகிறது. எதிரெதிரான இரண்டைச்சொல்லும் இரண்டடிச்செய்யுள்கள் எல்லா மொழிகளிலும் புகழ் பெற்றவை என்று முன்னமேயே பலமுறை கண்டிருக்கிறோம் (எ-டு: வசையொழிய / இசையொழிய) , இதுவம் அப்படிப்பட்ட ஒன்று!

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி
நகைப்பதற்காக (விளையாட்டாக) இருந்தாலும் இகழ்ச்சி துன்பத்தைத்தரும்
(மறைமுகமாக இங்கே, "பண்புள்ளோர் விளையாட்டுக்கும் இகழ்ச்சி செய்ய மாட்டார்கள்" என்று சொல்ல வருகிறார்)

பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு
(அதற்கு மாறாக) மற்றவரின் பாடு அறிந்தவர்கள் பகையான சூழலிலும் பண்புள்ளவராயிருப்பர்

"என் எதிரிக்குக்கூட இந்தத்துன்பம் வரக்கூடாது" என்று சில உரையாடல்களில் கேட்பதுண்டு. அது ஒருவர் பாடுபடும் பொழுது மனம் நொந்து சொல்வது.

பண்புடையோர் பகைவருடைய பாடுகளையும் அறிந்து "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல்" கனிவுடன் நடந்து கொள்வார்கள் என்று சொல்ல வருகிறார்!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 2 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Aug 18, 2017 9:36 pm

#996
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்


பள்ளியில் படித்த குறள் - இன்று வரை அந்த "மன்" ஏன் என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது Smile

அது ஒரு அசை நிலை  என்று அகராதி சொல்கிறது - அழுத்திச்சொல்லவோ அல்லது திட்டவோ பயன்படுவது ("போ" என்பதை "போய்த்தொலை" என்று சொல்வது போல Laughing )

"ஒழியிசை" என்றும் சொல்கிறார்கள். அதாவது, அடுத்த என்ன வரும் என்பதை நாமே சேர்த்துக்கொள்வதற்காக வைக்கும் ஒரு பொருளற்ற சொல். ஆங்கிலத்தில் மூன்று புள்ளிகள் (...) வைப்பது போன்று தமிழில் மன் என்கிறார்கள்.

குறளின் பொருள் புரியக்கடினம் இல்லை

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்
பண்புடையார்களோடு பொருந்தி இருப்பதால் தான் உலகம் (உயிரோடு) இருக்கிறது

அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்
அப்படி இல்லாவிட்டால் அது மண்ணுக்குள் புகுந்து மாண்டு போவது உறுதி!

"உலகம்" என்பதை மானிடர்களின் சமுதாயம் என்று இங்கே எடுத்துக்கொள்ள வேண்டும்.  உயிரோடு இயங்க, பண்புடையோர் / அவர்களது வழிமுறைகளோடு அந்த உலகம் பொருந்தி நடப்பது தேவை.

பண்புடையார் இல்லாவிடில் அந்தச்சமுதாயம் அழிந்து போகும். மட்டுமல்ல, அப்படிப்பட்டவர்கள் சொல்வதன் படி நடக்காமல் போன உலகமும் தப்ப வழியில்லை - இன்று நாம் வாழும் உலகத்துக்கு இது ஒரு எச்சரிக்கை மணி என்று சொல்லலாம்.

என் காட்சிப்படி, பண்பாளர்கள் எண்ணிக்கை நாள் தோறும் குறைந்து வருகிறது. கொஞ்சம் மிச்சம் மீதி இருப்பவர்கள் சொல்வதையும் வலிமை மீறியவர்கள் கேட்பதாகத்தெரியவில்லை!

அழிவு நெருங்கி வருவதற்கான அடையாளம்!!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

ஆதன் likes this post

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 2 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Aug 18, 2017 11:06 pm

#997
அரம்போலும் கூர்மையரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லாதவர்


மீண்டும் பள்ளிக்காலக்குறள் - இதுவும் எனக்குப்பிடித்த பாடல் Smile

"மரம் போல்வர்" என்பது "மரமண்டை" என்று திட்டுவதை நினைவுபடுத்துவதால் புன்முறுவல் வரவழைக்கிறது. ஆனால் இங்கே அது அறிவுக்குறைவை அல்ல - அதற்கு நேர் எதிரான பொருளில் வருகிறது என்பது வேடிக்கை Smile

நேரடியான, எளிய பொருள்!

மக்கட்பண்பு இல்லாதவர்
மக்களுக்கான (மானிடருக்கு வேண்டிய) பண்புகள் இல்லாதவர்

அரம்போலும் கூர்மையரேனும்
அரம் போன்ற கூர்மையான அறிவுத்திறன் கொண்டவர் என்றாலும்

மரம்போல்வர்
மரத்தைப் போன்றவரே

இங்கே மரம் என்பது நன்மைக்கான உவமை அல்ல. (சுற்றுச்சூழல் காப்பது, பழம் / நிழல் தருவது என்றெல்லாம் குழம்பக்கூடாது.)

சிறுமைக்கான உவமை. அன்பற்ற / நற்பண்பற்ற / வெறும் மரக்கட்டை போன்று உணர்வுகளற்ற பிண்டம் என்கிறார்.

அரம் / மரம் என்று எதுகையில் வரும் இரண்டுமே அழகான உவமைகள். அந்தச்சுவை ஒரு புறமிருக்க, இதில் மிகவும் மனதுக்கு உவப்பானது கருத்துச்சுவை.

பண்புகளற்று மரக்கட்டை போல வாழுதல் இழிவான ஒன்று. நாம் யாரும் "உணர்ச்சிகளற்ற / நற்பண்பற்ற மரக்கட்டை" என்று பெயரெடுக்க விரும்ப மாட்டோம். நமக்கு என்ன கூர்மையான அறிவிருந்தாலும் பண்பில்லாவிடில் என்ன பயன்?

தலையில் தட்டி அறிவுரை சொல்கிறார் - நம் நாளின் மெத்தப்படித்தோர் / அறிவாளிகள் பலருக்கும் பொருந்துகிறது!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 2 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Aug 22, 2017 11:50 pm

#998
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும் 
பண்பாற்றார் ஆதல் கடை

அழகான கருத்தைச்சொல்லும் குறள்.

நட்புக்கொள்ளாதவர் மற்றும் நன்மை செய்யாதவர்  - அப்படிப்பட்டோருடனும் பண்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்பதே அந்தக்கருத்து.

அதை எதிர்மறையாகச்சொல்லுகிறது. (அதாவது, "பண்புடன் நடந்து கொள்ளாவிட்டால் இழிவு" என்கிறது).

"பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே" - இந்தக்கருத்தை முன்னும் பல குறள்களில் வெவ்வேறு சூழல்களில் கண்டிருக்கிறோம். பண்புடைமை என்ற தலைப்பிலும் இதை வள்ளுவர் வலியுறுத்துகிறார்!

நண்பாற்றார் ஆகி 
நட்புக்கொள்ளாதவர் ஆகி 

நயமில செய்வார்க்கும்
நன்மையற்ற செயல்கள் (தீமை) செய்கிறவர்களுக்கும்

பண்பாற்றார் ஆதல் கடை
பண்போடு நடந்து கொள்ளாமல் இருப்பது இழிவானது

"செய்வார்க்கும்" என்பதில் உள்ள "உம்" குறிப்பிடத்தக்கது. அதாவது, இப்படிப்பட்ட இழிவானவருக்கும் பண்பு காட்ட வேண்டும் என்றால், அல்லாதவருக்கு (அதாவது, நட்புடன் நன்மை செய்யும் இயல்பு உடையோருக்கு) எவ்வளவு இனிமையாக, நல்ல பண்புகளோடு நடந்து கொள்ள வேண்டும்? 

அப்படிப்பட்டோரோடு பண்புடன் பழகுவது எளிது என்றாலும் இன்றைய உலகில் பலரும் அவ்வாறு செய்வதில்லை / குறைந்து வருகிறது என்பது அன்றாடம் நேரில் காணும் இன்னொரு இழிவு Sad


Last edited by app_engine on Wed Aug 23, 2017 10:28 pm; edited 1 time in total

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 2 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 16 Previous  1, 2, 3 ... 9 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum