Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 28 of 40 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 28 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jun 01, 2016 5:12 pm

#640
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் 
திறப்பாடு இலாஅதவர்

மற்றும் ஒரு எதிர்மறைக் குறள்!

அரை-குறை அமைச்சர்களை அடையாளம் காட்ட வள்ளுவர் எழுதின முன்னெச்சரிக்கை Smile

"இலாஅதவர்" என்று அளபெடை கொடுத்து ஓசை நயம் உண்டாக்குவதையும் பார்க்கிறோம். 

திறப்பாடு இலாஅதவர்
திறமை இல்லாதவர்கள்
(செயல்வன்மை இல்லாத அமைச்சர்கள்)

முறைப்படச் சூழ்ந்தும்
முறையான சூழல் இருந்தாலும் 
(முன்கூட்டியே திட்டமிடல் எல்லாம் செய்திருந்தாலும்)

முடிவிலவே செய்வர்
முழுமையின்றியே செய்வார்கள். 
(எடுத்த செயலைச் சரியாகச் செய்து முடிக்க மாட்டார்கள் - அரைகுறையாக விட்டு விடுவார்கள்)

ஆரவாரத்துடன் அறிவிக்கப்படும் பல திட்டங்கள் செய்து முடிக்கப்படாமலேயே (வரிப்பணத்தின் வீணடிப்பு மட்டும் நடத்திப்பின் கைவிடப்பட்டு) இழிநிலையில் இருப்பதை நாம் பலமுறை கண்டிருக்கிறோம். 

திட்டமிடுவதும், தொடங்குவதும் கடினம் அன்று - மிகக் குறைந்த திறமை உள்ளவர்களும் இவற்றைச் செய்வார்கள். ஆனால், செய்து முடிப்பது ஆற்றல் / திறன் உள்ளவர்களுக்கே உரிய சிறப்பு!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 28 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jun 02, 2016 4:59 pm

#641
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று

(பொருட்பால், அமைச்சியல், சொல்வன்மை)

நாநலம் என்று சொல்வதை இங்கே பொதுவாக "சொல்வன்மை" என்று (அதிகாரத்தின் தலைப்பையே) உரையாசிரியர்கள் சொல்லுவதைக் காணலாம்.

என்றாலும், "நலம்" என்பதில் திறமைக்கும் அப்பால் பொருள் இருப்பதாக நினைக்கிறேன். "நன்மையான நாவு" என்று பொருள் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஏனென்றால், நலம் / நன்மை என்பது வன்மைக்கும் மேல் Smile

நாநலம் என்னும் நலனுடைமை
நன்மையான பேச்சு என்பது சிறப்பான ஒரு செல்வம் / உடைமை

அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று
இந்த நன்மை வேறு எந்தச் செல்வங்களிலும் உள்ளதல்ல

அமைச்சர் என்ற அடிப்படையில் பார்த்தால், அவருக்குள்ள பல திறன்கள் பண்புகள் எல்லாவற்றிலும் அடங்காத, தனிச்சிறப்பு உள்ள ஒன்று தான் நா நலம்.

அதாவது, பேச்சில் நன்மை விளைவிக்கும் திறமை இன்றியமையாத ஒன்று.

(தமிழ்நாட்டில் நா"வன்மை"க்குப் பஞ்சமில்லை - குறிப்பாக அரசியல் / அமைச்சியல் போன்றவற்றில்! அடுக்கு மொழிகளும், அருமையான சொற்களும் என்று விளையாடி விடுவார்கள். ஆனால், நன்மையான சொற்கள் கேட்பது நம் நாட்களில் அரிதே!)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 28 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jun 03, 2016 4:57 pm

#642
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு


எளிமையான, தெளிவான குறள்! அதோடு, அருமையான கருத்தும் Smile

நாவின் நன்மையான மற்றும் தீமையான பயன்பாடுகள் தொன்று தொட்டே அறிந்தவை. திருக்குறளிலும் நாம் அங்கங்கே பார்க்கும் ஒன்று. அமைச்சருக்கான குறிப்பான தேவைகளில் இது ஒன்றாக இருப்பதால் ஒரு முழு அதிகாரம் ஒதுக்கி விளக்குகிறார்.

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
ஆக்கமோ அல்லது கேடோ அதனால் (அதாவது பேசும் சொற்களால்) வரும் என்பதால்

காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு
சொற்களில் சோர்வு (குற்றம் / பிழை / தீமை விளைவித்தல்) இல்லாமல் காத்துக்கொள்ள வேண்டும்

"நம் சொற்கள் வாளின் குத்து போலோ அல்லது மருந்து போலோ இருக்க முடியும்" என்ற கருத்து விவிலியத்தில் காண முடியும்.

அப்படியாக, அமைச்சருக்கான இந்த நெறி எல்லோருக்கும் பொருந்தும்.

நம் பேச்சால் ஆக்கம் வருத்துவோம் - அழிவைத் தவிர்ப்போம்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 28 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jun 06, 2016 5:26 pm

#643
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் 
வேட்ப மொழிவதாம் சொல்

"கேளார்" என்ற சொல் இதில் சுவையானது. 

"வாய்மொழியால் பரவுதல்" என்ற ஒரு வழக்கத்தை இங்கே வள்ளுவர் சொல்லுகிறார் என நினைக்கிறேன். (அப்படியாக, நேரடியாகப் பார்க்காத / கேட்காதவரும், மற்றவர் சொல்லிக்கேட்டு "நாமும் இவர் பேசுவதைக் கேட்க வேண்டுமே" என்று ஏங்கச்செய்தல் என்ற பொருளாக இருக்கலாம்.).

அல்லது, "விரும்பாதவரையும் மயக்கும் பேச்சுத்திறன்" என்று சொல்கிறாரோ என்ற ஐயமும் வருகிறது.

இப்படி விதவிதமாகச் சிந்திக்க வைப்பது தானே கவிதைக்கு அழகு?

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்
கேட்பவர்களைத் தன்வயப்படுத்தும் பண்பும் ( தகுதியும் / திறமையும்)

கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்
கேளாதவர்களும் கேட்க விரும்பும் வண்ணமும் பேசுவதே சிறந்த சொல்வன்மை 

நான் மேலே சொன்ன இரண்டாவது பொருள் மு.க. போன்ற சிறந்த பேச்சாளர்களுக்குப் பொருந்தும். (அவரது நடவடிக்கைகளை விரும்பாதவர்கள் கூட நாவன்மையை விரும்புவதை முன்காலங்களில் பலமுறை கண்டிருக்கிறேன்).

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 28 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jun 07, 2016 5:02 pm

#644
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் 
பொருளும் அதனினூஉங்கு இல்

சொல்லின் வன்மை பட்டறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

சில நாடுகளில் பெரும் புரட்சி ஏற்படவும் காரணமாக இருந்திருக்கின்றன என்பது வரலாறு.

ஆகவே, அதன் திறன் அறிந்து (அதாவது, எப்பேர்ப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என முன் கூட்டியே தெரிந்து) பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தும் குறள்.

திறனறிந்து சொல்லுக சொல்லை
சொல்லை அதன் திறன் அறிந்து சொல்ல வேண்டும் 
(பேசுமுன் அதன் விளைவுகளை உணர்ந்து கொள்ள வேண்டும்)

அதனினூஉங்கு அறனும் பொருளும் இல்
அதை மிஞ்சிய அறமும் பொருளும் இல்லை 

அறம் / பொருள் என்பவை குறளின் பெரும் பகுதிகள் (பாற்கள்) என்று நினைவில் கொள்க. இவையெல்லாம் நன்மையான சொற்கள் பேசுவதாலேயே விளைவடையும். 

தீமை விளைவிக்கும் சொற்கள் வழியாக அறமும் பொருளும் அழியும்!

ஆதலால், "நா நயம்"  மனிதனுக்கு மிக மிகத்தேவை (நாணயமும் நாணயமும்  - அறமும் பொருளும் - எவ்வளவு வேண்டுமோ அந்த அளவுக்கு Smile ).

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 28 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jun 08, 2016 5:16 pm

#645
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து


"நாம் சொல்லும் சொல் இருப்பதிலேயே மிகச் சிறந்ததாக இருத்தல் வேண்டும்" என்று அறிவுறுத்தும் செய்யுள்.  (அதாவது, "இதை விட அழகாகச் சொல்ல முடியாது").

பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து
"இந்தச்சொல்லை வெல்லுவதற்கு வேறொரு சொல் இல்லை" என்று அறிந்து

சொல்லுக சொல்லை
(அப்படிப்பட்ட மிகச்சிறந்த) சொற்களையே பேச வேண்டும்!

அமைச்சர் தான் பேசுவதற்கு முன்னர் சிந்திப்பது (மற்றும் கலந்து பேசி ஆகச் சிறந்ததை அறிந்து கொள்வது) எவ்வளவு தேவை என்று வலியுறுத்தும் குறள்.

"இதை விட எவ்வளவோ நல்ல மொழிகள் / வழிகள் இருக்கின்றனவே" என்று சொல்ல முடியாத அளவுக்கு நம் பேச்சு இருந்தால் அதற்கு எவ்வளவு மதிப்பு இருக்கும்!

மேலும், ஒரு குறிப்பிட்ட பொருளில் என்னென்னவெல்லாம் சொல்ல முடியும் -  வேறுபட்ட பல வழிகள் / மொழிகள் என்னென்ன?

இப்படியெல்லாம் எண்ணவும், அவற்றுள் சிறந்ததைத் தேர்ந்தெடுக்கவும் திறமை வேண்டும் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 28 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jun 09, 2016 4:42 pm

#646
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் 
மாட்சியின் மாசற்றார் கோள்

"சொல்வன்மை" என்பது நாம் மட்டும் பேசிக்கொண்டே இருப்பதல்ல, கேட்பதும் தான் என்று வேறுபட்ட கருத்தைச் சொல்லும் குறள்.

அப்படியாக, "மற்றவரிமிருந்து சொற்களை வாங்கிப்பயன்படுத்துதல்" நன்மையான ஒன்று தான், அதற்குத்தயங்க வேண்டியதில்லை. அப்படிச்செய்வதால் நம் மாட்சிமை கூடுமே ஒழியக் குறைந்து விடாது என்கிறார்.

வேட்பத்தாஞ் சொல்லி
(மற்றவர்கள்) விரும்பத்தக்க சொற்களைத் தான் சொல்வதோடு

பிறர்சொல் பயன்கோடல்
பிறர் சொல்வதில் உள்ள பயனையும் ஆராய்தல்

மாட்சியின் மாசற்றார் கோள்
மாசற்ற சிறப்பு உள்ளோரின் கொள்கை ஆகும்

தான் + சொல்லி என்பது "தாஞ்சொல்லி" என்று சேர்வது குறிப்பிடத்தக்கது. ஒரு நாடன் தன்மையும் இசை இனிமையும் இதன் வழியே வருகிறது என்று எனக்குப்படுகிறது Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 28 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jun 10, 2016 4:17 pm

#647
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை 
இகல்வெல்லல் யார்க்கும் அரிது

பள்ளிக்காலத்திலேயே படித்த மிக அருமையான குறள்!  பலருக்கும் நன்கு அறிமுகம் - மேலாண்மை குறித்த கட்டுரைகள் , ஊக்குவிக்கும் பேச்சுகள் எனப் பலவற்றிலும் மேற்கோளாக சொல்லப்படும் ஒன்று.

யார் தலைசிறந்த வெற்றியாளனாக முடியும் என்ற வரையறை.  

மூன்று அடிப்படைப்பண்புகள் இங்கே சிறப்பிக்கப்படுகின்றன.

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
சொல்லில் வல்லவன், சோர்வு இல்லாதவன், அஞ்சாதவன்

அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது
அவனை (அப்படிப்பட்டவனை) எதிர்த்து வெல்லுவது யாருக்கும் அரிது (மிகக்கடினம் / இயலாது)

"இகல்" என்ற ஒரு சொல் மட்டுமே இன்று பொது வழக்கில் இல்லாதது. பகை / போர் என்றெல்லாம் அகராதியில் பொருள் தருகிறார்கள். 

சோர்வும் அச்சமும் இன்றி இயங்கும் சொல்வன்மை உள்ளவனை யாரும் பகைக்க விரும்ப மாட்டார்கள். அப்படி எதிர்த்தாலும் தோல்வியே வரும் என்று அறிவுறுத்தும் பாடல். 

அமைச்சராக இல்லாத பாமரனுக்கும் இந்த மூன்று பண்புகளும் மிகத்தேவை - அதாவது வாழ்வில் வெற்றி கொள்ள ஆவல் இருந்தால் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 28 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jun 13, 2016 5:20 pm

#648
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது 
சொல்லுதல் வல்லார்ப் பெறின்

இந்தக்குறளில் "எப்படிப்பட்ட பேச்சு மற்றவர்களை வேலை செய்யும்படி ஊக்குவிக்கும்" என்ற கருத்து விளக்கப்படுகிறது. 

இப்படியும் சொல்லலாம் : அமைச்சர் தனது துறையின் செயல்பாடு சிறந்த விளங்க வேண்டுமென்றால் எப்படிப்பட்ட சொல்வன்மை கொண்டிருக்க வேண்டும் Smile  

நிரந்தினிது சொல்லுதல் 
கோர்வையாகவும் இனிமையாகவும் சொல்லுதல்

வல்லார்ப் பெறின்
(என்ற) திறமை உடையவர்கள் இருந்தால்

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம்
(அப்படிப்பட்டோர் )  சொல்லும் வேலைகளை விரைவில் செய்ய உலகத்தினர் முனைவார்கள்

ஆக, வேலை சிறப்பாக நடக்க, ஆணையிடுபவரின் பேச்சில் இரண்டு அடிப்படையான தேவைகள் :

1. "நிரந்து" - கோர்வை ஆக்கி - வகைப்படுத்தி, வரிசைப்படுத்தி, முடியுமானால் பட்டியலிட்டு இன்னின்ன வேலை என்று விளக்கிப்பேசுதல். 
(திட்ட மேலாண்மை படித்தவர்கள் பட்டியலின் பெரும்பங்கை அறிந்திருப்பார்கள்)

2. "இனிது" - இனிமையாகப்பேசுதல் (கடுமை இல்லை, அறுவை இல்லை Smile சுவையான பேச்சு எங்கும் நன்மை தரும்)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 28 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jun 14, 2016 4:20 pm

#649
பல சொல்லக்காமுறுவர் மன்றமாசற்ற 
சில சொல்லல் தேற்றாதவர்

இந்தக்குறளுக்கு மிகச்சிறந்த, நல்ல எடுத்துக்காட்டு வள்ளுவர் தாம் Smile

அதாவது, "மன்ற மாசற்ற சில சொல்லல்" என்ற கலையின் உச்ச நிலையில் உள்ளோர் குறள் போல சுருங்கச்சொல்லி அரிய அறிவு தரும் பெரியோர் தானே?  (தற்கால ட்விட்டர் அளிக்கும் 140 எழுத்துகள் கூட குறளுக்கு அளவில் கூடுதல் Smile  )

மன்ற = தெளிவான

மன்றமாசற்ற சில சொல்லல் தேற்றாதவர்
தெளிவான, குற்றமற்ற சில சொற்கள் பேசி விளக்கத் தெரியாதவர்கள்

பல சொல்லக்காமுறுவர்
(வளவளவென்று) பல சொற்கள் பேச விரும்புவார்கள்

ஆக, சொல்வன்மை என்பது சுற்றி வளைத்து மணிக்கணக்கில் சொற்பொழிவு நிகழ்த்துவது அன்று.

சுருக்கமாக, சில சொற்களில் தெளிவு படுத்துதலே!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 28 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jun 15, 2016 5:04 pm

#650
இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது 
உணர விரித்துரையாதார்

சொல்வன்மை இல்லாதோர் (எவ்வளவு படித்திருந்தாலும்) மணம் இல்லாத மலர்களைப் போன்றோரே என்று சொல்லும் குறள். 

மணக்காத மலர்களும் "காட்சி அழகில்" பங்கு கொள்கின்றன என்றாலும் நறுமணம் உள்ளவற்றைப்போல் அவற்றால் மற்றவர்களை இழுக்க இயலாது. 

அப்படியாக, சொல் சிறப்பு இல்லாத படிப்பாளிகள் காகிதப்பூக்கள் போன்றோர் என்று குறைக்கிறார் Smile

அழகான உவமை!

கற்றது உணர விரித்துரையாதார்
கற்றவற்றை மற்றவர்களுக்கு விளங்கும்படி விரித்துச் சொல்ல இயலாதவர்கள்

இணரூழ்த்தும் நாறா மலரனையர்
கொத்தாய் மலர்ந்திருந்தாலும் மணம் கொடுக்காத பூக்களைப் போன்றோர்
(இணர் = பூங்கொத்து,  ஊழ்த்தல் = மலருதல், நாற்றம் = மணம் / வாசம் (நறுமணம் Smile )

பல முனைவர் பட்டங்கள் பெற்றிருந்தும் கற்பிக்கும் திறன் சற்றும் இல்லாதிருந்த ஒரு கல்லூரிப் பேராசிரியர் நினைவுக்கு வருகிறார்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 28 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jun 16, 2016 4:38 pm

#651
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் 
வேண்டிய எல்லாந்தரும்
(பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை அதிகாரம்)

எல்லா அமைச்சர்களும் இந்த அதிகாரத்தை நாள்தோறும் படித்துவிட்டு அதன் பின்னர் தங்கள் அன்றாட அலுவல்களைத் தொடங்குவது நல்லது.

சிறிய அளவிலாவது இவற்றை மனதில் கொள்ளவும் செயல்படுத்தவும் ஒரு வேளை அவர்களைத் தூண்டலாம். (எவ்வளவு கேடுகெட்ட மனிதனிடத்தும் ஆழ்மனதில் சில நல்ல பண்புகள் இருக்கத்தானே செய்கின்றன? அவற்றை ஏதோ ஒரு மூலையில் இவை தொடக்கூடும் அல்லவா?)

குறிப்பாக குறள் #656 (ஈன்றாள் பசி பற்றிய குறள்) தமிழக அமைச்சர்கள் எல்லோரும் தங்களுக்கு முன்னாள் பெரிய எழுத்தில் எழுதி மாட்டி வைத்துக்கொள்ள வேண்டியது!
(நம் எல்லோருக்கும் வேண்டிய ஒன்று தான், அமைச்சியலில் இருப்பதால் அவர்களுக்கு மிகத்தேவை)

முதல் குறளில் இரண்டு பகுதிகள். அவற்றில் முதல் பகுதியின் நன்மையை உணராத அமைச்சர்கள் / அரசியல்வாதிகள் குறைவே (சாதி முதற்கொண்டு என்னென்ன "துணை நலம்" எல்லாம் கிட்டுமோ அனைத்தையும் அள்ளிக்கொள்ளுவார்கள்) . 

இரண்டாம் பகுதியில் தான் கிட்டத்தட்ட எல்லோருமே வீழ்ந்த நிலையில் இருக்கிறார்கள் - வினை நலம்!

துணைநலம் ஆக்கம் தரூஉம் 
(ஒருவருக்குக் கிடைத்திருக்கும்) துணையின் நன்மை ஆக்கத்தைத் தரும் (செல்வம் / வலிமை)

வினைநலம் வேண்டிய எல்லாந்தரும்
(ஆனால்) வினையின் நன்மையோ (செயல் தூய்மை / அறம்) வேண்டிய எல்லாவற்றையும் தரும்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 28 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jun 17, 2016 5:24 pm

#652
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு 
நன்றி பயவா வினை

"ஒருவுதல்" என்ற சொல்லின் பொருள் தெரிந்து விட்டால் மிகவும் எளிமையான குறள் Wink

"விடுதல்" என்று அகராதி சொல்லுகிறது. உரையாசிரியர்கள் "விட்டொழித்தல்" என்று கொஞ்சம் வலிமை கூட்டிச் சொல்லுவதைக்காணலாம். 

"நன்றி" என்ற சொல்லின் பயன்பாடும் குறிப்பிடத்தக்கது. நமக்குச் சட்டெனத்தோன்றும் "செய்த உதவிக்கு நன்றி" என்ற பொருள் அல்ல.

நன்மை - அறம் என்ற பொருளில் (வினைத்தூய்மை) இங்கே "நன்றி" வருகிறது Smile

புகழொடு நன்றி பயவா வினை
புகழும் நன்மையையும் தராத செயல்களை 
(வினைத்தூய்மை அற்ற செயல்பாட்டை)

என்றும் ஒருவுதல் வேண்டும்
எப்போதுமே தவிர்த்து விட வேண்டும்

அமைச்சர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் எல்லோருக்கும் நன்மையும் அவருக்கும் அரசுக்கும் புகழும் தரும் வண்ணம் அறச்செயலாக இருத்தல் வேண்டும்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 28 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jun 20, 2016 4:10 pm

#653
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை 
ஆஅதும் என்னுமவர்

ஓஒதல் என்பது அளபெடை மட்டுமல்ல, ஒரு மரூஉ மொழியும் கூட. 
(ஓவுதல் என்பது மருவி ஓஒதல் என்று இருக்கிறதாம். இதற்குப்பொருள் "நீக்குதல்". முதலில் நான் (வேதம்) "ஓதுவது" என்று நினைத்தேன். Laughing )

இன்னொரு அளபெடை "ஆஅதும்" (ஆகுதல் / ஆவது - உயர்ந்த நிலையை அல்லது மேன்மையை அடைவது)

சொற்களின் இத்தகைய விளையாட்டை விட்டுப்பார்த்தால் எளிதாகப் படிக்கத்தக்க குறள்.

புகழைக்கெடுக்காத செயல் வினை தாம் (அதாவது, வினைத்தூய்மை) ஒருவரை உயர்த்தும். 

ஆஅதும் என்னுமவர்
"மேன்மை அடைய வேண்டும்" என்பவர்கள் 
(உயர்வை விரும்புவோர்)

ஒளிமாழ்கும் செய்வினை ஓஒதல் வேண்டும்
புகழைக்கெடுக்கும் செயல்களை நீக்க வேண்டும்

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 28 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jun 21, 2016 10:03 pm

#654
இடுக்கண் படினும் இழிவந்த செய்யார் 
நடுக்கற்ற காட்சியவர்

பல வலைத்தளங்களும் "இளிவந்த" என்று சொல்லுகின்றன. அதுவும் சரியான ஒன்றே (இளி = குற்றம் என்று ஒரு பொருள் இருக்கிறது).

வினைத்தூய்மை உள்ளவர்கள் இடுக்கண் வரும்போதும் தடுமாற்றம் இன்றி உறுதியாகவும் தெளிவாகவும் இருப்பார்கள் - இழிவான வழியில் செல்ல மாட்டார்கள்.

குறிப்பாக, அமைச்சியல் என்ற அடிப்படையில் இது மிகப்பொருத்தம். (சிறிய அளவிலான "பசித்தது - திருடினேன்" என்பதற்கும் பொருந்தும் என்றாலும், பொறுப்பில் இருப்பவர்களுக்கு இந்தப்பண்பு மிகத்தேவை).

நடுக்கற்ற காட்சியவர்
ஆட்டம் காணாத (உறுதியான), தெளிவான அறிவுள்ளவர்கள் 

இடுக்கண் படினும்
துன்பத்தில் உழலும் போதும் (அதிலிருந்து தப்புவதற்கு)

இழிவந்த செய்யார்
இழிவான வினை செய்ய மாட்டார்கள்

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 28 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jun 22, 2016 5:23 pm

#655
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று


நல்லொழுக்க வகுப்பில் ஆசிரியர் சொல்லிக்கொடுப்பது போல் தவறு செய்வதற்கு எதிராக வள்ளுவர் பாடமெடுக்கும் செய்யுள் Smile

தவறு செய்யாதே - செய்தாலும் திரும்பத்திரும்ப அதே தவறைச் செய்யாதே Smile

இசை நயத்துடன் சொல்லப்படுவது அழகு கூட்டுகிறது. (எற்றெற்று - மற்றன்ன / செய்யற்க - செய்வானேல் - செய்யாமை என்று எதுகை மோனைகள்)

எற்றென்று இரங்குவ செய்யற்க
"ஏன் செய்தோம், ஏன் செய்தோம்" என்று கவலைப்பட வைக்கும் செயல்களைச் செய்யக்கூடாது

செய்வானேல்
(முட்டாள்தனமாக ஒருவேளை அப்படிப்பட்ட செயலைச்) செய்து விட்டால்

மற்றன்ன செய்யாமை நன்று
மறுபடியும் அப்படிப்பட்ட செயலைச் செய்யாதிருப்பது நன்று

எல்லோரும் குறைபாடுகள் உள்ளவர்கள் என்பதால் தவறே செய்யாத 100%  நல்லவன் என்று இன்று யாரும் இல்லை. 

ஆனால், வேண்டுமென்றே, திரும்பத்திரும்ப, அதே போன்ற தவறுகளைச் செய்வது நல்லதல்ல!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 28 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jun 23, 2016 7:01 pm

#656
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க 
சான்றோர் பழிக்கும் வினை

மிக உணர்ச்சிகரமான, கண்களில் நீர் வரவழைக்கும் திருக்குறள்!

எப்பேர்ப்பட்ட கடினமான சூழ்நிலையிலும் செயலில் நேர்மை / தூய்மை வேண்டும் என உணர்த்த வள்ளுவர் எடுத்த "நெஞ்சைத்தொடும்" நிலைமை "ஈன்றாள் பசி" !

தாய் மீது அன்பும் பாசமும் உள்ள எல்லோரையும் உலுக்கும் வலிமை வாய்ந்த செய்யுள். 
(அதனால் தான் இந்த அதிகாரத்தின் தொடக்கத்தில் "அம்மா"வை வணங்கும் தற்போதைய தமிழக அமைச்சர்கள் இந்தக்குறளை நாள்தோறும் படிக்க வேண்டும் என்றேன் Laughing Laughing )

வினைத்தூய்மை மட்டுமல்ல, தாய்ப்பாசம் எவ்வளவு வேண்டும் என்பதையும் இந்தக்குறள் நம் காலத்து இளைஞர்களுக்குக் கற்பிக்கிறது. 

"துன்பத்திலேயே உச்சம் தாய்க்கு உணவு கொடுக்க முடியாத வறுமை" என்று இக்காலத்தில் எல்லோரும் உணருவார்களா தெரியாது - ஆனால், அது ஒரு அளவுகோலாக வள்ளுவர் காலத்தில் நம் நாட்டில் இருந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும்
பெற்றவளுக்கு உணவு தரக்கூட முடியாத சூழ்நிலையிலும் 
(வறுமையோ அல்லது இன்ன பிற சூழலோ - அவள் பசியில் இருக்கிறாள். என்ன செய்வதென்று தெரியாமல்,  இயலாமையின் உச்சத்தில் நாம் இருக்கிறோம்)

சான்றோர் பழிக்கும் வினை செய்யற்க
சான்றோர்கள் பழிக்கும் (குற்றமான) செயலைச் செய்யக்கூடாது. 
("அவளது பசியை ஆற்றத்தானே இதைச்செய்கிறேன்" என்று தீய வழியில் செல்லாதே)

ஊழல், திருட்டு, பொய், ஏமாற்று போன்ற  அழுக்கான செயல்களை எத்தகைய சூழ்நிலையிலும் செய்யக்கூடாது என்பதை இதை விட அழகாகச் சொல்ல முடியாது!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 28 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jun 24, 2016 9:32 pm

#657
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் 
கழி நல்குரவே தலை

நல்குரவு = வறுமை என்று முன்னமேயே பார்த்திருக்கிறோம். அதாவது, ஆக்கத்துக்கு எதிர் Smile

எனவே, இது ஒன்றுக்கொன்று எதிரான இரண்டை ஒப்பிடும் வகையிலான, பல மொழிகளிலும் புகழ் பெற்று விளங்கும், இரண்டடிச்செய்யுள் வகைப்பட்டது.

நேரடியான பொருள் தான் :

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின்
பழியை மேற்கொண்டு (குற்றங்கள் புரிந்து) அடையும் செல்வத்தை விட

சான்றோர் கழி நல்குரவே தலை
சான்றோர்க்கு (வினைத்தூய்மை உள்ளவர்களுக்கு) வரும் வறுமையே மேலானது

"எப்படியும் பொருள் சேர்க்க வேண்டும்" என்று நாலு கால் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருக்கும் நம் காலத்தவர்க்கு வேண்டிய அறிவுரை. குறிப்பாக அமைச்சர்கள் சான்றோராக இருக்க வேண்டிய, வினைத்தூய்மையுடன் நடக்க வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது.

நம் நாளின் நடைமுறை தெரிந்ததே - பெரிதாய் ஒன்றுமில்லாமல் அரசியலில் புகுந்து, கோடிகளில் புரளுவோர் பெரும்பாலான அமைச்சர்கள்.

அது அவர்களுக்கு சரியான வழியில் கிடைத்தது (எ-டு : சம்பளம், பாட்டன் சொத்து, முன்பே இருந்த தொழில்) என்று சொல்லக்கூடியவர்கள் இன்று எத்தனை விழுக்காடு?

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 28 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jun 27, 2016 7:19 pm

#658
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் 
முடிந்தாலும் பீழை தரும்

கடிதல்  என்பதற்குள்ள பல பொருள்களில் ஒன்று  "நீக்குதல் / விலக்குதல்".  

அந்தச்சொல் கொண்டுள்ள ஒரு விளையாட்டு இந்தக்குறளில் Smile

இன்னொரு அருஞ்சொல் "பீழை" , இதன் பொருள் துன்பம் / வருத்தம்.

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு
விலக்கப்பட்டவற்றை ("கூடாது" என்று நீக்கப்பட்ட கெட்ட செயல்களை) விட்டு விடாமல் செய்வோருக்கு

அவைதாம் முடிந்தாலும் பீழை தரும்
அப்படிப்பட்ட செயல்கள் நிறைவேறினாலும் (இறுதியில்) துன்பமே தரும்

சிறிய செயல்கள் முதல் பெரியவை வரை எதுவானாலும், "என்னால் முடியுமா?" என்பது மட்டுமல்ல சிந்திக்க வேண்டியது.

"இது நன்மையான / செம்மையான செயலா?" என்றும் சிந்திக்க வேண்டும். அல்லாத போது, வென்றாலும் வருத்தமே மிஞ்சும். 

கலிங்கப்போரில் வெற்றியடைந்த அசோக மன்னர் ஒருவேளை நினைவுக்கு வரலாம்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 28 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jun 28, 2016 5:14 pm

#659
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் 
பிற்பயக்கும் நற்பாலவை

"அழுகையில் ஒரு அழகு" - இந்தக்குறளுக்கு இப்படித்தலைப்பு வைக்கலாம் Smile

சிறிய ஒரு சொற்றொடரில் மாபெரும் உண்மையை அழகாகச் சொல்லுகிறார் : "அழக்கொண்ட எல்லாம் அழப்போம்"! 

வரலாற்றிலும் வாழ்க்கையிலும் பார்த்த மனிதர்களின் அடிப்படையில் இவ்வாறு சொல்லுகிறாரா இல்லை அவருக்கு இருந்த கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லுகிறாரா தெரியவில்லை.

சொல்லப்போனால், நம்முடைய நாட்களில் இது உண்மையா என்று உறுதியாக நம்மால் சொல்ல இயலாது. 
(கொடுமை ஓங்கி நிற்கும் இக்காலத்தில் இழந்தோருக்கு நன்மை இவ்வாழ்வில் வருவதாக நடைமுறையில் காணவில்லை - திரைப்படங்களிலும், கதைகளிலும் ஏதோ சிலரது வாழ்விலும் பார்த்திருப்போம். பெரும்பாலாருக்கு "நற்பாலவை இழந்தால்" தொடர்ந்து துன்பமாகத்தான் பார்க்கிறோம்.)

என்றாலும், "இறைவன் தரும்  இன்னொரு வாழ்வு" என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பார்த்தால் "பிற்பயக்கும் நற்பாலவை" என்பது 100% பொருந்தும். 

அழக்கொண்ட எல்லாம் அழப்போம்
பிறரை அழ வைத்துச் சேர்த்த செல்வம் எல்லாம் நம்மை அழ வைத்து விட்டு ஓடிப்போகும்
(தீய வழியில் ஈட்டும் பொருள் நிலைக்காது, துன்பமும் தரும்)

நற்பாலவை இழப்பினும் பிற்பயக்கும்
நல்ல வழியில் வந்ததோ, (தற்காலம்) இழந்தாலும் மீண்டும் (பிற்காலத்தில்) பயன் தரும் 

தூய வழியில் செயலாற்றினால் நீண்ட கால நன்மை!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 28 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jun 29, 2016 4:29 pm

#660
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று


அருமையான ஒரு உவமையோடு ஓரிரு அருஞ்சொற்கள் சேர்த்து நெய்யப்பட்ட விண்மீன் போல் மின்னும் குறள்!

முதலில் அருஞ்சொற்கள் பொருள் பார்ப்போம், பின்னர் உவமையை மெச்சுவோம்!

சலம் = தீய செயல் (வஞ்சனை, சினம், பொய்ம்மை, பிடிவாதம் என்றெல்லாம் பொருள் இருக்கிறது)
ஏமார்த்தல் = பாதுகாத்தல், வன்மைப்படுத்துதல்

உவமைக்குக் கொஞ்சம் விளக்கம் தேவை:
குயவர் சட்டி / கலம் செய்யும் இடம் சென்று கண்டவர்கள் அறிவார்கள் "பசுமையான மண்கலம்" என்ன என்று Smile  

பச்சை - அதாவது, ஈரமான - களி  மண்ணில் புனைந்து, இன்னும் காயாமல் உள்ள கலம். உலர்ந்த பின் அதை நெருப்பில் சுட்டுக் கடினமாக்கினால் தான் அது "கரையாமல்" இருக்கும்.

இன்னும் சுடாமல் பசுமையாய் இருக்கையில் நீர் ஊற்றினால், சட்டி கரைந்து வெறும் மண்குவியல் ஆகும். நீரும் ஓடிப்போகும்.

தீயவழியில் சேர்க்கும் செல்வத்துக்கு என்ன அழகான உவமை!

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல்
தீய செயல்களால் செல்வம் உண்டாக்கி அதைக்காப்பது (அல்லது, காக்க முயல்வது)

பசுமண் கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று
(சுடாத) பச்சை மண் கலத்தில் நீர் ஊற்றிச் சேமிப்பது போன்றதே! (வீண் முயற்சி)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 28 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jun 30, 2016 9:59 pm

#661
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் 
மற்றைய எல்லாம் பிற
(பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம் அதிகாரம்)

வினைத்திட்பம் - செயலில் உறுதி, அமைச்சருக்கு அடிப்படையாகத் தேவையான பண்பு!

இந்தக்குறளில் மன உறுதி தான் செயல்படுவதில் ஆட்டங்காணாமல் இருக்க ஒரே வழி என்று கற்பிக்கப்படுகிறோம். 

அதாவது, செயல் முடித்துத் தீர்க்க, மனதில் உறுதி பூண்டிருப்பது அடிப்படை Smile

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
செயலில் உறுதி என்பது ஒருவனது மனதின் உறுதியே 
(மனதில் உறுதியோடு இருப்பதன் வழியே ஒருவரது செயல் மாறாமல் நடக்கும் )

மற்றைய எல்லாம் பிற
மற்றவை எல்லாம் (மற்ற எல்லா உறுதிகளும்) இதற்கு வெளியில் தான்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 28 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jul 01, 2016 6:00 pm

#662
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் 
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்

வினைத்திட்பம் உள்ளவர்கள் - அறிந்தோர் / ஆராய்ந்தோர் என்று வள்ளுவர் இங்கே குறிப்பிடும் ஆட்கள் - என்ன இரண்டு வழிகளில் சிறப்பாக இருப்பார்கள் என்று சொல்லி, நமக்கும் அவை தேவை என அறிவுறுத்தும் குறள்.

ஊறொரால் உற்றபின் ஒல்காமை
ஊறு (பழுது / இடையூறு) வருமுன்னரே அதைத் தவிர்ப்பது, அப்படியே வந்து விட்டாலும் தளராமல் இருப்பது

இவ்விரண்டின் ஆறு ஆய்ந்தவர் கோள் என்பர்
அந்த இரண்டு வழிகள் தான் (வினைத்திட்பம் உள்ள) அறிவுடையவர்கள் கொள்கை என்பர் 

எந்தச்செயலுக்கும் இடையூறுகள் வரத்தான் செய்யும். வினைத்திட்பம் என்பது அவற்றைக்கையாள வல்ல நிலையில் இருப்பது. 

"ஊறு மேலாண்மை" என்பது திட்டமிடல் துறையில் ஒரு குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது என்பது அதில் வேலை செய்பவர்கள் அறிந்ததே. 

என்னென்ன தொல்லைகள் வரலாம் என்று முன்கூட்டியே ஆராய்ந்து அவற்றைத் தவிர்ப்பது முதல் வழி.  

வந்து விட்டால் அதை எப்படிக்கையாளுவது என்றும் ஆராய்ந்து முன்னெச்சரிக்கையாக இருப்பது இரண்டாவது வழி. 

இவை இரண்டும் தெளிவாக இருந்தால், திட்டமிட்டபடி வினைகள் நடக்கும்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 28 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jul 05, 2016 4:51 pm

#663
கடைக்கொட்கச் செய்தக்கதாண்மை இடைக்கொட்கின் 
எற்றா விழுமந்தரும்

சொற்களின் அடிப்படையில் பார்த்தால், இதைக் "குழப்பக்குறள்" எனலாம் Smile

ஏன் அப்படி?

"கொட்க" என்ற சொல் இரு முறை வருகிறது. இதற்கான பொருள் அகராதியில் எளிதில் கிடைப்பதில்லை. உரையாசிரியர்கள் சொல்லும் "வெளிப்படுத்துதல்" என்ற பொருளுக்குச் சற்றே மாறான "வெளிப்படுதல்" என்ற பொருளைக்காணலாம். (வேறொரு செய்யுளில் "ஈனுதல்" - அதாவது, "குட்டி வெளிப்படுவது" - என்ற பொருளில் இந்தச்சொல் வருகிறதாம்).

அப்படியாக, உண்மையில் தாய்மை / பெண்மை என்பதோடு தொடர்புடைய இந்தச்சொல்லை "ஆண்மை" என்று சொல்வது குழப்பம் தானே?

இன்னொரு குழப்பச்சொல் நாம் முன்னமேயே பார்த்தது. விழுமம் - "சிறப்பு" என்றும் "துன்பம்" என்றும் பொருள் உள்ள சொல். (அவரவர் வசதிப்படி, இடத்துக்குத் தகுந்தபடி எடுத்துக்கொள்ளலாம்) 

இங்கு அது துன்பம் / இடுக்கண் என்ற பொருளில் வருகிறது. அதாவது, சிறப்புக்குக் கிட்டத்தட்ட  எதிர்ச்சொல்!

கடைக்கொட்கச் செய்தக்கதாண்மை
(வினை) செய்து முடிந்த பின், அதாவது கடைசியில், வெளிப்படச்செய்யும் தகுதியே ஆண்மை

இடைக்கொட்கின் எற்றா விழுமந்தரும்
இடையிலேயே வெளிப்பட்டால் நீங்காத துன்பத்தைத் தரும்

செயலைச் செய்து முடிக்கும் வினைத்திட்பம் இருக்க வேண்டும் என்பதோடு, இறுதியில் வெளிப்படுத்துவதே (செயலாற்றுவோருக்குத்) துன்பமில்லாமல் செயல்பட உதவும் என்று அமைச்சருக்கு அறிவுரை!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 28 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jul 05, 2016 5:54 pm

#664
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்


விண்மீன் குறள் - பள்ளிக்காலம் தொட்டே நன்கு பழக்கமான ஒன்று Smile

நேரடியான, எளிய பொருள்.

"அருமையான உண்மை" என்று நமது பட்டறிவில் இருந்து உடனே சொல்லலாம்!

"இதைச்செய் - அதைச்செய்" என்று மற்றவருக்குக் கட்டளை இடுவது எளிது. வினைத்திட்பத்துடன் அதைச்செய்து முடிப்பது அவ்வளவு எளிதன்று!.

அதே போல், "நான் இதைச்செய்வேன், அதைச்செய்வேன்" என்று வாக்குகளுக்கு வேண்டி வாக்குக்கொடுப்பது அரசியலில் உள்ளோருக்கு மிக எளிது. சொன்னவற்றைப் பெரும்பாலும் செய்வதில்லை என்பதைப் பொதுமக்கள் அறிவார்கள்.

உண்மையிலேயே சொன்னபடியெல்லாம் செய்ய வேண்டும் என்ற ஆவல் உள்ள அமைச்சரும் அதற்காக முயலும் போது தான் என்னென்ன சிக்கல்கள் உள்ளன, செய்து தீர்ப்பது எவ்வளவு கடினம் என உணர்வார்.

சொல்லுதல் யார்க்கும் எளிய
சொல்லுவது யாருக்கும் எளிது தான் (ஆனால்)

சொல்லிய வண்ணம் செயல் அரியவாம்
சொன்னபடியே செய்வது மிகக்கடினம் / அரிது!

வினைத்திட்பத்துடன் சொன்னதையெல்லாம் செய்து முடிப்பவனே சிறந்த மானிடன்.
(அமைச்சனும் அப்படியே என்று சொல்லவும் வேண்டுமா?)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 28 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 28 of 40 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 34 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum