Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 27 of 40 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 33 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 27 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Apr 28, 2016 9:27 pm

#616
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை 
இன்மை புகுத்தி விடும்

நான் முன்னமேயே சொன்னது போல "முயற்சி திருவினை ஆக்கும்" என்பது பலருக்கும் நன்கு அறிமுகமான ஒரு மொழி.

"திருவினை" என்பதற்கு இருவகையான விளக்கங்கள் உள்ளன.

திரு + வினை (சிறப்பான செயல்) என்றோ திருவினை (செல்வத்தை) என்றோ கொள்ள இயலும். அவ்விதமாக, இந்தக்குறளின் 'இன்மை' என்பதற்கும், செயலின்மை என்றும் வறுமை என்றும் இரு பொருட்கள் உரையாசிரியர்கள் கொள்கிறார்கள் Smile

மொழியின் சிறப்பு இது தான் - பலரும் வழங்கிப் புழங்கி வரும் ஒரு சொல்லுக்கே இரண்டு வகையான விளக்கங்கள் -  என்ன ஒரு அழகு!

முயற்சி திருவினை ஆக்கும்
1. முயற்சி (ஒருவருக்கு) சிறப்பான செயல்களை நடத்தி முடிக்க உதவும் 
2. முயற்சி (ஒருவருக்கு) செல்வத்தை உண்டாக்கும் 

முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்
1. முயற்சி இல்லாவிடில் (செயல்கள்) இல்லாமையைப் புகுத்தி விடும் 
2. முயற்சி இல்லாமை வறுமை நிலையைக் கொண்டு வரும் 

செயலற்ற, வறிய நிலைக்குச் செல்ல நல்ல அறிவுள்ளவர்கள் யாரும் விரும்ப மாட்டோம்.  அதனால், நாம் முயற்சி என்னும் நல்ல பண்பை விட்டு விடாதிருப்போம்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 27 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Apr 29, 2016 10:15 pm

#617
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் 
தாளுளான் தாமரையி னாள்

மாமுகடி, தாமரையினாள் என்று இரு பெண் உருவகங்கள் இங்கே காண்கிறோம். 

மூதேவி, சீதேவி என்று நாட்டுப்புறங்களில் தேவியராக வழிபடப்படுபவரே இவர் என்று உரைகள் அறிவிக்கின்றன. ("மூதேவி போ சீதேவி வா"   என்று இறப்பு  வீட்டுச்சடங்குகளில் சொல்லுவது நாட்டுப்புற வழக்கம். இறந்த பெண்ணிடம் அன்பு கொண்டிருந்தவர்களை இன்னும் கொஞ்சம் நொந்து அழவைக்கும் கொடுமை இது என்பது சிறுவயதில் நான் கண்ட ஒன்று).

"மூத்த தேவி / மூதேவி " பொருள் இழப்புக்கு அடையாளம் என்றும் அவளது தங்கையான திருமகள் செல்வச்செழிப்பின் அடையாளம்  என்றும் தொன்மங்களில் உள்ளதாகச் சொல்லப்பட்டும் வழிபடப்பட்டும் வரும் தெய்வங்களை இங்கே முறையே மாமுகடி / தாமரையினாள்  என்று வள்ளுவர் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது

மடியுளாள் மாமுகடி என்ப
சோம்பேறியிடம் இருண்ட மூதேவி தங்குவாள்

மடியிலான் தாளுளான் தாமரையினாள்
சோம்பல் இல்லாதவனின் முயற்சியில் (அல்லது காலடியில்) தாமரையினாள் / சீதேவி இருப்பாள் 

முயற்சி உள்ளவனிடம் தான் செல்வம் சேரும் என்பதைத் தொன்மங்களுடன் சேர்த்துச் சொல்லும் குறள். இதன் வழியாக, வரலாற்றின் அக்காலத்திலேயே இந்த உருவகங்கள் இருந்தன என்றும் அறிந்து கொள்கிறோம்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 27 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Sat Apr 30, 2016 5:25 pm

#618
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி


பொறியியல் படிக்கும் போது "பொறி" என்ற சொல்லுக்கு இத்தனை பொருட்கள் உள்ளன என்று தெரியாது Smile

இங்கே பாருங்கள் :

Shocked


பொறி³ poṟi
, n. < பொறி²-. 1. Stripe, as of a tiger; வரி. பொறி யுழுவை (கலித். 46). 2. Line on the palm; இரேகை. (பிங்.) 3. Spot, as on an elephant's forehead; dot, point, speck; புள்ளி. பொறிய மடமான் (கலித். 13, 3). 4. Mark, impression; தழும்பு. நல்லா ரிளமுலைப் பொறி யும் (சீவக. 2190). 5. Sign, token; அடையாளம். (W.) 6. Letter, character, writing; எழுத்து. (பிங்.) 7. Seal, signet; இலாஞ்சனை. கோண்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி (புறநா. 58). 8. Insignia, badge; விருது. வெல்பொறியு நாடுங் . . . கொடுத்தளித்தான் (பு. வெ. 7, 2). 9. Auspicious mark on one's body; உத்தம அங்கலட்சணம். பூமியை யாடற்கொத்த பொறியினன் (சீவக. 1339). 10. Bee, beetle; வண்டு. பொறிகலந்த பொழில் (தேவா. 638, 1). 11. Peacock's tail, as spotted; பீலி. பல்பொறி மஞ்ஞை (திருமுரு. 122). 12. Beauty-spot on the body of a person; தேமல். (திவா.) 13. Form, image; பதுமை. எந்திரப்பொறி யினிற்ப (கம்பரா. கும்ப. 5). 14. Fate, destiny; விதி. அவை பொறியின் வகைவண்ணம் (சீவக. 848). 15. Temple of the head; கன்னப்பொருத்து. Colloq. 16. Joint; jointure; மூட்டுவாய். பொறி புனைவினைப் பொலங்கோதை (பரிபா. 11, 64). 17. Organs of sense, of which there are five, viz.,

-- 2946 --
mey, vāy, kaṇ, mūkku, cevi; மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐவகை இந்திரியம். பொறிவாயி லைந்தவித்தான் (குறள், 6). 18. Male organ; ஆண் குறி. Loc. 19. Mind; மனம். துள்ளும் பொறியின் னிலைசோதனைதான் (கம்பரா. இரணிய. 105). 20. Knowledge, wisdom; அறிவு. பூரணமோதிலும் பொறியிலீர் (தேவா. 1203, 6). 21. Spark, scintillation; அனற்றுகள். கூடும் வெம்பொறிக் கொடுங் கனல் (கம்பரா. வருணனை. 22). 22. Brightness; ஒளி. பொறிவரிப் புகர்முகம் (பெரும்பாண். 448). 23. Machine, mechanism, trap; எந்திரம். வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய (புறநா. 19). 24. Figure or engine on walls, as part of a fortification; மதிலுறுப்பு. (பிங்.) 25. Dhoney; மரக் கலம். (பிங்.) 26. Stratagem, device; தந்திரம். பொறியிற் பலமாயந் தரும் (கம்பரா. சூர்ப்ப. 139). 27. Diadem; நெற்றிப்பட்டம். வேந்தன் பெயராற் பொறியும் பெற்றான் (சீவக. 1792). 28. Lakṣmī; இலக்குமி. (திவா.) 29. Riches, wealth; செல்வம். பொறிகொடு நாணற்ற போழ்தே (நான்மணி. 45). 30. Splendour; பொழிவு. (பிங்.) 31. Good karma; பூர்வபுண்ணியம். பொறியறு நெஞ்சத் திறைமுறை பிழைத்தோன் (சிலப். 20, 25). 32. Roundness, rotundity; திரட்சி. முசுண்டைப் பொறிப்புற வான்பூ (நெடுநல். 13).

இந்தக்குறளில் என்ன நினைத்து எழுதினர் என்பது வள்ளுவருக்கே வெளிச்சம்!  சாலமன் பாப்பையா அவருடைய வசதிப்படி "உடல் உறுப்பு" என்று எடுத்துக்கொள்கிறார் rotfl மற்ற பல உரையாசிரியர்களும் ஊழ் / விதி என்ற பொருள் என்று சொல்லுகிறார்கள்,

முயற்சிக்கு எதிர்ச்சொல் என்ற விதத்தில் அதுவே பொருத்தமாகத் தெரிகிறது.
("எல்லாம் என் விதி / நேரம் சரியில்லை" என்று வாளாவிருத்தல் / முயற்சி கைவிடுதல்)

பொறியின்மை யார்க்கும் பழியன்று
(நல்) விதி இல்லாமை யாருக்கும் ஒரு பழியாக / குற்றமாக எண்ணப்படாது

அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி
(மாறாக) வேண்டியன அறிந்து விடா முயற்சி செய்யாதிருப்பது பழி / பெருங்குற்றம் ஆகும்

ஒருவருக்கு வேண்டிய நல்ல சூழ்நிலைமைகள் இல்லாதிருப்பது அவரது குற்றம் அல்ல. ( எ-டு : பிறப்பின் அடிப்படையில் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள எல்லோரையும் இங்கு நாம் எண்ணலாம் - அந்த அடிப்படையில் யாரையும் பழிப்பது / இழிவு செய்வது / குற்றம் காண்பது தீமை).

ஆனால், அறிவுக்காகவும், செயல்களுக்காகவும் முயற்சி செய்யாமல் இருப்பது தனி ஆளின் குற்றம் தான்.  நாம் சோம்பேறியாக இருந்தால் அதன் பழி நமக்குத்தான் - ஊழ் / சமூகம் என்று யாரையும் நாம் பழிக்க இயலாது!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 27 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon May 02, 2016 5:56 pm

#619
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் 
மெய்வருத்தக் கூலி தரும்

இறை மறுப்பாளர்களுக்கு எளிதாகப் புரியத்தக்க குறள். ("கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத" என்று மு.க. எளிதில் உரை சொல்லி விடுகிறார்).

ஆனால், இறை நம்பிக்கையாளர்கள் எப்படி "தெய்வத்தால் ஆகாத" என்பதை விளக்குவார்கள்? அதிலும் குறிப்பாக, "அவனன்றி அணுவும் அசையாது" என்று சொல்லி நடப்பவர்களுக்கு இது சோதனை அல்லவா?

அத்தகைய உரையாசிரியர்கள் உடனே "தெய்வம் = ஊழ் / விதி" என்று பொருள் சொல்லித் தப்பித்துக் கொள்வதைப்பார்க்க இயலும். (எனக்கு இங்கே ஒரு மொழியியல் ஐயம் மீண்டும் - தெய்வம் தமிழில் இருந்து வடமொழிக்குப் போனதா இல்லை அங்கிருந்து வந்ததா?)

"கடவுள் செய்ய இயலாதவை உண்டு" என்று நம்பும் என் போன்ற மூன்றாவது கூட்டத்தவர்க்கு இதை வேறு விதத்தில் புரிந்து கொள்ள முடியும். ("தான் தூக்க இயலாத கல்லை இறைவனால் படைக்க முடியுமா" என்பது போன்ற சுழற்சி வினா அல்ல Smile , மிக அடிப்படையான நம்பிக்கைகள் - "கடவுளால் அநீதி செய்ய இயலாது, பொய் சொல்ல முடியாது, ஏமாற்ற ஆகாது" போன்றவை). 

தெய்வத்தான் ஆகாதெனினும்
(ஏதோ ஒரு காரணத்தால்) தெய்வத்தால் ஆகாத செயல் என்றாலும் 

முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்
(ஒருவரது) முயற்சி அவரது உடல் உழைப்புக்கான பலனை உறுதியாகத் தரும்

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 27 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue May 03, 2016 5:00 pm

#620
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் 
தாழாது உஞற்றுபவர்

"விதியை மதியால் வெல்லலாம்" என்று சொல்லும் கதைகள் / திரைப்படங்கள் பார்த்திருக்கிறோம். 

அதாவது, "விதி என்று ஒன்று இல்லை - அப்படி முன்னமேயே எழுதி இருப்பதாகச் சொல்வதெல்லாம் பொய்" என்று கற்றுக்கொடுக்கும் முயற்சிகள் நிறைய உண்டு.

இங்கு அதிலிருந்து சற்றே வேறுபட்ட ஒரு கருத்தை முன் வைக்கிறார். 

ஊழையும் தள்ளி விட்டு வெல்ல சரியான வழி முயற்சியே என்கிறார். இக்கருத்து வள்ளுவரின் நாளில் பரவலாக இருந்த நம்பிக்கைகளுக்கு எதிரான ஒன்று என்று பொதுவாக எல்லோரும் ஒத்துக்கொள்வர். 

உலைவின்றித் தாழாது உஞற்றுபவர்
தளர்வின்றி, முயற்சியில் குறைவுமின்றி உழைப்பவர்கள்

ஊழையும் உப்பக்கம் காண்பர்
ஊழையும் தோல்வியுறச் செய்வார்கள்!

தோல்வி அடையும் என்றால் பின்னர் அது என்ன ஊழ் / விதி? 

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை / முன்பே ஒன்றும் "தலையில் எழுதி வைக்கவில்லை"  என்று தானே சொல்ல வருகிறார் Wink

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 27 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed May 04, 2016 5:42 pm

#621
இடுக்கண் வருங்கால் நகுக அதனை 
அடுத்தூர்வது அஃதொப்பதில்
(பொருட்பால், அரசியல், இடுக்கணழியாமை)

வள்ளுவர் சொன்னதை எளிமையாக "துன்பம் வரும் வேளையிலே சிரிங்க" என்று திரைப்படப்பாடலில் பலரும் கேட்டிருக்கிறோம். 

எல்லோருக்கும் நன்கு தெரிந்த குறள். என்றாலும், பெரும்பாலும் எல்லோராலுமே எளிதாகக் கடைப்பிடிக்க முடியாத அறிவுரை Smile 

என்றாலும், இடுக்கண் வரும்போது கடந்து செல்ல நகைப்பினைக் காட்டிலும் எளிதான வழிகள் குறைவே. 

பொறுத்துக்கொள்ளவும் நேர்மறை மனநிலையைக் காத்துக்கொள்ளவும் அது பெரும் உதவி!

இடுக்கண் வருங்கால் நகுக
துன்பம் வரும் நேரத்தில் சிரிக்க (நமது மகிழ்ச்சியை விடாதிருக்க) வேண்டும் 


அதனை அடுத்தூர்வது அஃதொப்பதில்
அதனை (அந்தத்துன்பத்தை) எதிர்த்துப்போராடி வெல்ல அதற்கு ஒப்பானது இல்லை

துன்பத்தை வெல்ல நகைப்புக்கு ஈடான வேறு வழி இல்லை என்கிறார். 

அதிகாரத்தின் தலைப்பினை விளக்கும் குறள் என்று கொள்ளலாம். "இடுக்கண் வரும் பொது அழியாமல், கலங்காமல் இருத்தல்" அரசியலில் / ஆட்சியாளனுக்கு வேண்டிய இன்றியமையாத பண்பு!

மகிழ்வான மனம் துன்பத்தை எதிர்த்து வெல்ல மிகத்தேவை!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 27 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu May 05, 2016 4:44 pm

#622
வெள்ளத்தனைய இடும்பை அறிவுடையான் 
உள்ளத்தின் உள்ளக் கெடும்

பொருள் புரிவது எளிது, ஆனால் அதன் வழியே வரும் வினாக்களுக்கு விடை காண்பது எளிதல்ல.

முதலில் நேரடியான பொழிப்புரை பார்ப்போம்.

வெள்ளத்தனைய இடும்பை
வெள்ளம் போன்ற துன்பம் 
(கூடுதல் அளவு, எதிர்பாராமல் சட்டென வருவது - வெள்ளம் மிக எளிய மற்றும் பொருத்தமான உவமை)

அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்
அறிவுடையவன் உள்ளத்தில் நினைத்ததும் அழிந்து விடும்

"துன்பம் எவ்வளவு பெரிதாய் திடுமென வந்தாலும், அறிவுடையவன் அதைப்பற்றி எண்ணுகையில் அது இல்லாமல் போகும்" என்பது தான் நேரடியான பொருள். 

வினாக்கள்:
1.  "உள்ளுவது / எண்ணுவது" என்றால் என்ன?
2.  எப்படி நினைத்த உடனே துன்பம் இல்லாமல் போகும்?  அது என்ன மந்திரம் மாயமா? 

விடைகள் "அறிவுடையவன்" என்ற சொல்லில் பொதிந்திருப்பதாக நான் கருதுகிறேன்.

எண்ணுவது: 

துன்பத்தினை சரியாக எடை போடுவதன் வழியாக, அளவுக்கு மீறி உடைந்து போகாமல் சமநிலை காப்பது. மற்றும் அதை எதிர்த்து வெற்றி காண உடனடியாக மாற்று வழிகள் கண்டு பிடிப்பது 

இடும்பை இல்லாமல் போவது?  

இரண்டு வழிகளில்:

1. அறிவு இல்லாதோர் போல் இந்தத்துன்பத்தால் நிலைகுலையாமல் இருப்பதன் வழியாக அந்தத்துன்பத்தை அவன் துன்பமாகவே கருதவில்லை - தன் திறனைக்காட்ட வாய்ப்பாகவே அவன் பார்க்கிறான். 

அப்படியாக, அவன் மனதில் அது துன்பமே அல்ல Smile
(இடுக்கண் அழியாமை என்பது அதிகாரத்தின் பெயர் அல்லவா?)

2. முட்டாள் வெறுமென கவலையும் அழுகையுமாகத் துன்பத்தை எதிர் கொள்வான். அறிவாளி அதை நீக்க உடனே நடவடிக்கை எடுத்து அழிப்பான். 
(தீர்வு மனதில் தெரிந்து விட்டால், யாராவது அதைத் துன்பம் என்பார்களா? )

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 27 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri May 06, 2016 6:58 pm

#623
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு 
இடும்பை படாஅதவர்

சொற்சிலம்பம் இந்தக்குறளில் - "இடும்பை" என்பது பெயர் மற்றும் வினைச்சொல்லாக இந்த விளையாட்டில் இறக்கப்படுகிறது.

மற்றபடி, என்னால் கூடுதல் ஆழமான கருத்தொன்றும் கண்டறிய இயலவில்லை.

இடும்பை / துன்பம் என்பதை ஒரு ஆளுமையாக உருவகப்படுத்தி, அதற்கு இடுக்கணழியாதோர் துன்பம் தருவர் என்று சொல்லுவது கவிதைக்கு அழகு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், கடந்த குறளில் சொன்ன அதே கருத்தே ஒழிய வேறு புதிதொன்றும் இல்லை.

இடும்பைக்கு இடும்பை படாஅதவர்
துன்பத்தால் துன்பப்படாதவர்கள் (துயரம் கொள்ளாதவர்கள் / கலங்காதவர்கள்)

இடும்பைக்கு இடும்பை படுப்பர் 
துன்பத்துக்கே துன்பம் கொடுப்பார்கள் (இல்லாமல் அழிப்பார்கள்)

முன்னமேயே நாம் பார்த்த "அறிவுடையார்" இவர்கள் என்றும் கொள்ளலாம். 

அத்தகையோர் தான் இடுக்கணால் அழியாமல் அது வரும் வழியை அடைக்க முனைந்து வெற்றியும் பெறுவார்கள்.

இப்படி மீண்டும் மீண்டும் வெல்லும்போது உள்ளத்தில் அளவற்ற தன்னம்பிக்கை வரும். அதன் பின் எந்தத்துன்பம் வந்தாலும் அவர்களை அசைக்காது!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 27 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon May 09, 2016 4:59 pm

#624
மடுத்தவாயெல்லாம் பகடன்னான் உற்ற 
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து

இந்தக்குறளுக்கான பரிமேலழகர் உரை, செய்யுளை விட உரையைப் புரிந்து கொள்ளக்கடினமாக இருப்பதற்கான எடுத்துக்காட்டு :

பரிமேலழகர் wrote:
விலங்கிய இடங்கள் எல்லாவற்றினும் சகடம் ஈர்க்கும் பகடுபோல வினையை எடுத்துக்கொண்டு உய்க்கவல்லானை வந்துற்ற இடுக்கண் தானே இடர்ப்படுதலை உடைத்து

Laughing

இது போதாதென்று கூடுதல் விளக்கம் வேறு, இப்படி :

பரிமேலழகர் wrote:
'மடுத்தவாயெல்லாம்' என்பது, பொதுப்பட நின்றமையின், சகடத்திற்கு அளற்றுநிலம் முதலியவாகவும், வினைக்கு இடையூறுகளாகவும் கொள்க. 'பகடு' மருங்கு ஒற்றியும், மூக்கூன்றியும், தாள்தவழ்ந்தும் அரிதின் உய்க்குமாறு போலத் தன் மெய்வருத்தம் நோக்காது முயன்று உய்ப்பான் என்பார், 'பகடன்னான்' என்றார்.

அடடா, அற்புதமான விளக்கம் Laughing 
(புரிய மிகக்கடினம் - சரி, வேறு வழி பார்ப்போம்)
 
மடுத்தவாயெல்லாம் பகடன்னான்
தடைகள் உள்ள வழிகளில் தளராத (அதாவது, விடாமல் இழுத்துக்கொண்டு செல்லும்) காளை மாட்டைப் போன்றவனுக்கு
(இடையூறுகள் வந்தாலும் விடா முயற்சியோடு முன் செல்பவன் ; மடுத்தல் = இடையூறு / தடை எதிர்ப்படுதல், பகடு = எருது / காளை மாடு)

உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து
வரும் துன்பத்துக்கு இடர்ப்பாடு (துன்பம்) உண்டாகும்!

மாடு போன்று (விடா முயற்சியுடன்) முன் செல்பவனைக் கண்டு துன்பம் அஞ்சி ஓடும்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 27 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue May 10, 2016 5:52 pm

#625
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற 
இடுக்கண் இடுக்கட்படும்

"துன்பத்திற்கே துன்பம்" (திருநெல்வேலிக்கே அல்வா) என்னும் வடிவில் வரும் இன்னுமொரு குறள் Smile

வெள்ளம் என்று முன்னர் சொன்னதை வேறொரு வடிவில் இங்கே "அடுக்கி" (தொடர்ந்து /  அடுத்தடுத்து / மீண்டும் மீண்டும்) என்று சொல்லுகிறார். 

அடுக்கி வரினும் அழிவிலான்
(துன்பங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத்) தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும் கலங்காதவனுக்கு


உற்ற இடுக்கண் இடுக்கட்படும்
வருகின்ற துன்பங்கள் துன்பத்துக்குள்ளாகும்!

"பட்ட காலிலே படும்" என்று பழமொழி உண்டு. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.  என்றாலும், குறிப்பான முதல் காரணம்  "படுபவனின் மனநிலை" என்பது என் கருத்து. 

அதாவது, வந்த முதல் துன்பத்திலேயே ஒடிந்து போய் விடுகிறான். அதனால், அடுத்து வரும் இயல்பான நிலையைக் கூட சமாளிக்கும் திறன் இழந்து மீண்டும் துன்பத்துள் விழுகிறான். 

வேறு விதத்தில் பார்த்தால், முதல் துன்பம் அவனது திட்டமிடும் திறனை அசைத்து விட்டதால், அடுத்து வர இருப்பதற்கான முன்னெச்சரிக்கை இல்லை / முன்கூட்டிய நடவடிக்கையும் இல்லை.

குறிப்பாக, மன்னனுக்கு / அரசியலில் அல்லது ஆட்சியில் உள்ளோருக்கு இது மிகப்பொருத்தம். இயற்கைச் சீற்றங்கள் தவிர்த்துப்பார்த்தால், பல துன்பங்களுக்கும் ஆட்சியாளர் மனநிலையே காரணம் என்று காண முடியும்.

ஆதலால், இடுக்கண் அழியாதவன் முக்கால்வாசி நேரம் இந்தப்பழமொழியை வெல்ல இயலும்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 27 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu May 12, 2016 12:10 am

#626
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றாதவர்


"அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான்" என்று ஒரு சொல் உண்டு.  அதாவது, வளம் வருகையில் கண்மூடித்தனமாக அகந்தை கொண்டு மகிழுவது /  கஞ்சனாய் இருப்பது, கீழோரின் இயல்பாகக் கருதப்படுகிறது.

கிட்டத்தட்ட அதே கருத்தில், சமநிலை காப்போரை வாழ்த்தும் குறள்.

அதாவது, "நன்மை கிடைக்கும் போது அளவுக்கு மீறி ஆடாதோர்,  வறுமை வரும் போது சோர்ந்து போகாமல் நிற்பர்" என்று சொல்லும் குறள்.

இன்னொரு கணக்கில் பார்த்தால் "ஈகை என்னும் பண்புள்ளோர் இடுக்கண் அழியாமை பெற்றிருப்பர்" என்றும் கருத்துச் சொல்லலாம்.

பெற்றேமென்று ஓம்புதல் தேற்றாதவர்
(பொருள் வளம் வருகையில்) "இதைப் பெற்று விட்டோம்" என்று கட்டிக்காக்க முயலாதோர் (கஞ்சத்தனம் / அகந்தை காட்டதோர்)

(அதாவது, வரவுக்கு மட்டும் அளவுக்கு மீறி இடம் கொடுக்காத சமநிலை உடையோர் மற்றும் வளத்தை மற்றவர்களுக்கு வழங்கி மகிழ்வோர்)

அற்றேமென்று அல்லற் படுபவோ
"இல்லாமல் போயிற்றே" என்று (வறுமைக்காக) அல்லல் படுவார்களா?

வாழ்வின் வேறு பலவற்றோடு ஒப்பிடுகையில் பொருளை ஒரு பொருட்டாக எண்ணாத சிலரை நான் கண்டிருக்கிறேன்.

வறுமை / இல்லாமை / பொருள் இழப்புகள் அவர்களுக்குத் துன்பம் தந்ததே இல்லை.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 27 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu May 12, 2016 6:11 pm

#627
இலக்கம் உடம்பிடும்பைக்கென்று கலக்கத்தைக் 
கையாறாக் கொள்ளாதாம் மேல்

சொற்சுவையும் பொருட்சுவையும் நிறைந்த குறள்.

முதலில் சொற்சுவை - இலக்கம், கையாறு என்று இரண்டு சொற்கள்.

இலக்கம் - இலக்கு / குறி (எண் என்ற பொருளில் இன்றும் இது பயன்பாட்டில் உள்ள சொல்.)

இது தமிழா வடமொழியா என்ற உரையாடல் மொழியியல் வல்லுநர்கள் இடையே உள்ளது. இலக்கியம் என்று வழங்கப்படும் இயல் தமிழின் பகுதி - அதாவது, "நூல் / புத்தகம்" - குறிக்கோள் உள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே  இப்படிப்பட்ட பெயர் என்று சொல்வோர் உள்ளார்கள்.

கையாறு - இதற்குத் துன்பம் என்றும் ஒழுக்க நெறி (வாழ்க்கை வழி) என்றும் இரண்டு பொருட்கள் அகராதி சொல்லுகிறது. உரையாசிரியர்களும் இவை இரண்டின் அடிப்படையில் இருவிதமான உரைகள் எழுதுகிறார்கள் Smile

அப்படியாக, சொற்சுவை தூக்கல் இங்கே. 

பொருள் சுவை? 

என்னை மிகவும் கவர்ந்தது "உடல் என்றாலே துன்பத்துக்கு இலக்கு தானே" என்ற பொதுவான உண்மை போகிற போக்கில் சொல்லப்படுவது! 

"காயமே இது பொய், கனவுகள் தாங்கும் பை" என்றெல்லாம் கவிஞர்கள் பாடும் உடல், நோய்களும் மற்ற துன்பங்களும் வந்து படும் இடமாக வள்ளுவர் சொல்லுவது நேரடியான கருத்து. 

தன்னைத்தானே புதுப்பிக்கும் திறன், நோய்க்கிருமிகளை எதிர்த்தழிக்கும் அமைப்பு எல்லாம் இருந்தாலும், நோய் / முதுமை / இறப்பு இவை இல்லாதவர் யாருமில்லை. "ஏன் இப்படி? நோய் மற்றும் முதுமை இன்றி என்றென்றும் வாழ்வது முடியுமா?" என்ற கேள்வி ஆழமானது! அதற்கு ஒவ்வொருவரும் சொல்லும் விதவிதமான விளக்கமும் சுவையானவை Smile

இலக்கம் உடம்பிடும்பைக்கென்று
(நம்) உடல் துன்பத்துக்கு இலக்கு தானே என்று (உணர்ந்த)


கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல்
1. மேலோர் அதற்காகக் கலங்குவதைத் தம் வழியாகக் கொள்ள மாட்டார்கள். (கையாறு = ஒழுக்க நெறி)
2. மேன்மக்கள் துன்பத்தைத் துன்பமாகக் கொள்ள மாட்டார்கள் (கையாறு = துன்பம்)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 27 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri May 13, 2016 5:26 pm

#628
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் 
துன்பம் உறுதல் இலன்

அது என்னமோ தெரியலை வள்ளுவருக்கு என் பெயர் பிடிக்கலை Smile 

எதற்கெடுத்தாலும் "இன்பம் விழையான், இன்பம் விழையான்" என்கிறார்  Laughing

நேரடியான, எளிதாகப்புரிந்து கொள்ளத்தக்க சொற்களும் பொருளும் உள்ள குறள்.

இன்பம் துன்பம் இரண்டையும் இயல்பாகக் கருதி சமநிலை காப்பவர்கள் (அதாவது அளவுக்கு மீறி உணர்ச்சியால் தூண்டப்படாத அழுத்தக்காரர்கள்) இடுக்கண் கொண்டு அழிவதில்லை. 

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
இன்பத்தை நாடித்தேடாமல், "இடுக்கண் வருவது இயல்பே" என்று சொல்பவர்கள்

துன்பம் உறுதல் இலன்
துன்பத்தினால் துவண்டு போவதில்லை

உண்மையில் "இன்பவிழைவு" என்பது எல்லா உயிர்களின் இயல்பு. 

ஆக, இங்கே வள்ளுவர் குறிப்பிடுவது அதன் பின்னாலேயே ஓடித்தேடி, எடுக்க வேண்டிய முயற்சிகள் இல்லாமல், கேளிக்கை விரும்பிகளாக / உடல் வளையாத மேனாமினுக்கிகளாக இருப்பவர்களையே என்று கொள்ளலாம் Wink அத்தகையோர் துன்பம் வந்தால் ஒடிந்து போய் விடுவர்.

உழைப்பாளி, அறிவாளி, துன்பம் பல கண்டு கடந்து வருபவன், இன்னும் ஒரு துன்பத்தால் ஒரேயடியாகத் துவள வழியில்லை தானே?

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 27 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon May 16, 2016 5:33 pm

#629
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் 
துன்பம் உறுதல் இலன்

கொஞ்சம் முன்னால் "பெற்றேம் / அற்றேம்" என்று ஒரு குறளில் சொன்னதை இங்கே "இன்பம் / துன்பம்" என்று இன்னொரு வடிவில் கொடுத்திருக்கிறார்.

பொருள் ஒன்றே - நன்மை / செல்வம் / வளம் வரும் போது அளவுக்கு மிஞ்சி இன்பம் காணாதவர்கள் இடுக்கண் / தீமை / வறுமை வரும் போது தளர்ந்து துன்பத்தில் ஆழ்ந்து போக மாட்டார்கள்.

மீண்டும் "இன்பம் விழையாதான்" என்ற பயன்பாட்டையும்  காணலாம் Wink

இன்பத்துள் இன்பம் விழையாதான்
இன்பம் வருகையில் அதை விரும்பிப்போற்றாதவன்

துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்
துன்பம் வரும்போது சோர்வில் மூழ்கித் தளர்ந்து போவது இல்லை 

அப்படியாக, நமக்கு என்ன அறிவுரை? 

"இடுக்கணை வலிமையாக எதிர்கொள்ள வேண்டுமா? "ஆம்" என்றால், நல்ல காலத்தில் கேளிக்கை செய்து திரியாமல் சமநிலையைக் காத்துக்கொள்"

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 27 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue May 17, 2016 4:57 pm

#630
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் 
ஒன்னார் விழையுஞ் சிறப்பு

விருப்பமில்லாத சூழ்நிலையிலும் மகிழ்ச்சி காத்துக்கொள்ளுதல் எளிதல்ல.

ஆனால், அத்தகைய மனநிலை கொண்டோர் மட்டுமே புகழை அடைய முடியும் என்று வலியுறுத்தும் குறள். 

ஒரு விதத்தில் பார்த்தால், இந்த அதிகாரத்தின் தொடக்கத்தில் சொன்ன "இடுக்கண் வருங்கால் நகுக" என்பதற்கு அழகான முடிவுரை. (அப்படி இருந்தால் என்ன நல்விளைவு கிடைக்கும் என்று சொல்கிறார்).

இன்னாமை இன்பம் எனக்கொளின்
துன்பத்தை  (அல்லது விரும்பத்தகாத நிலையை) இன்பமாகக் கருதினால் 

ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு
தன் பகைவரும் விரும்பிப்போற்றும் சிறப்பு உண்டாகும் 

தொன்று தொட்டே "பகைவரும் விரும்புவர் / மெச்சுவர்" என்பது சிறப்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகக் கருதப்படுகிறது. 

ஏன் அப்படி?

பொதுவாக, நண்பர்கள் நம்மை மெச்சுவார்கள், பகைவர் குறை கூறுவார்கள் / தூற்றுவார்கள் . அப்படியாக, எதிரிகளும் மெச்சும் நிலை வெகு சிலருக்கே வரும். அவ்வளவு உயர்ந்து விட்டதால், வேறு வழியின்று ஒத்துக்கொள்ளுதல் என்றும் கொள்ளலாம். 

எனவே, கூடுதல் சிறப்பு!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 27 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed May 18, 2016 4:07 pm

வேண்டுமென்று செய்வதில்லை - தானாக வருகிற ஒன்று, எனக்கு வியப்பாக இருக்கிறது.

அதாவது, நான் அவ்வப்போது படிக்கும் அதிகாரம் / குறள் தற்பொழுது நடக்கும் நிகழ்வுகளோடு உறவு கொண்டிருப்பது Smile
(முன்னொரு முறையும் இது குறித்துச் சொல்லியிருக்கிறேன்)

இதோ, இந்த இழையில் இப்போது அரசியல் முடிந்து அமைச்சியல் தொடங்குகிறது.

தமிழ்நாட்டிலும் தேர்தல் முடிந்து அமைச்சரவை சில நாட்களில் வரப்போகிறது Smile

இது நான் வேண்டுமென்றே வடிவமைத்ததல்ல - தானே இயல்பாய் இப்படி நடப்பது ஒரு வேடிக்கை / விந்தை தானே?

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 27 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed May 18, 2016 4:24 pm

#631
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு

(பொருட்பால், அமைச்சியல், அமைச்சு)

இந்த இயலின் முதல் குறள் என்ற முறையில், இயல்பாகவே "வரையறை" எதிர்பார்க்கலாம். அப்படிப்பட்ட குறள் தான் இது.

அமைச்சு / அமைச்சர் என்பவருக்கான அடிப்படை வரையறை கொடுத்துக்கொண்டு தொடங்குகிறார் வள்ளுவர்!

கருவியும் காலமும்
ஏற்ற கருவி மற்றும் தக்க காலம் ஆகியவற்றோடு

செய்கையும் செய்யும் அருவினையும்
நல்ல செயல்முறையோடு அருமையான செயல்களைச்செய்து

மாண்டது அமைச்சு
மாண்புடன் / சிறப்புடன் விளங்குவதே அமைச்சு / அமைச்சர்

அருவினை - அரிய / அருமையான செயல், அதாவது எளிதானவை அல்ல Smile

மாண்டது - மாட்சிமை பெற்றது, மாண்பு அடைந்தது.

இப்போது தெரிகிறதா எங்கிருந்து தமிழ்நாட்டின் "மாண்பு மிகு" அடைமொழி வந்ததென்று?  Laughing Laughing Laughing 

என்றாலும், பெரும்பாலான அமைச்சர்களின் வரலாறு நோக்கினால், மாண்டது என்பதற்கு எதிர்மறையான பொருள் கொள்ள வேண்டி வரலாம்.
(நீதி மாண்டது, நெறி மாண்டது, நல்வழி மாண்டது என்றெல்லாம் -அதாவது, இல்லாமல் செத்துப்போனது)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 27 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu May 19, 2016 7:11 pm

#632
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு 
ஐந்துடன் மாண்டது அமைச்சு

கணக்கில் குழப்பமோ என்று எண்ணத் தோன்றும் குறள் Embarassed

நான்கு இயல்புகள் (வன்கண், குடிகாத்தல், கற்றறிதல், ஆள்வினை) சொல்லப்பட்டு "ஐந்துடன் மாண்டது" என்று முடிக்கிறார். 

எப்படி 5 என்று எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. 

வேறு ஏதாவது 5 இருக்கிறதோ என்று தோன்றுகிறது. (அதாவது இந்த நான்கும் வேறு ஐந்தும்!  எ-டு: ஐந்து பொறிகள்?).

ஐந்து எண்ணிக்கை கொண்டுவருவதற்காக உரையாசிரியர்கள் மெனக்கெடுவதும் பார்க்க முடியும். 
(மு.வ. குடி காத்தலை, குடிப்பெருமை + காத்தல் என்று இரண்டாக்குகிறார் ; சாலமன் பாப்பையா கற்றறிதல் என்பதைக் கற்றல் + கேட்டு அறிதல்களாகப் பிரிக்கிறார்; மு.க.வும் அதே போலக் கற்றல் / அறிதல் என்று இரண்டாகப் பிரிக்கிறார்)

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு 
வீரம் (மன உறுதி), குடிமக்களைக்காத்தல், கற்று அறிதல், முயற்சி என்ற பண்புகளோடு

ஐந்துடன் மாண்டது அமைச்சு
ஐந்துடனும் மாண்பு பெற்றிருப்பதே அமைச்சு / அமைச்சர்

வன்கண் என்ற சொல் பொதுவாகக் கொடுமை / தீமையுடனே பயன்படுத்தப்படுவது. இங்கோ அது வலிமை / உறுதி என்ற நன்மையாக விதத்தில் வருவது குறிப்பிடத்தக்கது.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 27 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri May 20, 2016 5:50 pm

#633
பிரித்தலும் பேணிக்கொளலும் பிரிந்தார்ப் 
பொருத்தலும் வல்லதமைச்சு

மனிதவளத்துறை Smile

அமைச்சருக்கு (அரசு) ஊழியர்கள் மீதான மூன்று வித செயல்பாடுகளை இந்தக்குறள் தெளிவு படுத்துகிறது. 

1. பிரித்தல்  - அரசுக்கு எதிராக செயல்படுவோரைக் கண்டுபிடித்து, அவர்களைப் பொறுப்பிலிருந்து நீக்குதல் 

2. பேணுதல் - நல்ல ஊழியர்களை அக்கறையுடன் பேணி ஊக்குவித்தல்  

3. சேர்த்தல் - பலவித காரணங்களுக்காக முன்பு பிரிந்தோரை மீண்டும் சேர்த்துக்கொள்ளுதல் (தேவைக்கு ஏற்றபடி என்று சொல்லத்தேவையில்லை Smile )

பிரித்தலும்
(நாட்டுக்கு எதிரானவரை / பகைவரின் கூட்டாளிகளை) விலக்குதல்

பேணிக்கொளலும்
(நாட்டுக்கு உண்மையானோரை / தம்மிடம் உள்ளோரை) பேணிக்காத்தல்

பிரிந்தார்ப்பொருத்தலும்
(முன்னமே) பிரிந்து சென்றவர்களை (தேவை / தகுதி / மன்னிப்பு இவற்றின் அடிப்படையில்) சேர்த்தல்

வல்லதமைச்சு
ஆகிய செயல்களில் வல்லவரே (நல்ல) அமைச்சர்!

சுருக்கமாகச் சொன்னால், அமைச்சர் சுறுசுறுப்பாக செயலாற்றுவதோடு ஆட்களை சரியாக அடையாளம் கண்டு மேலாண்மை செய்ய வேண்டும்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 27 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon May 23, 2016 4:15 pm

#634
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் 
சொல்லலும் வல்லது அமைச்சு

எளிமையான குறள். அமைச்சருக்கு மிகவும் அடிப்படையான செயல்பாட்டை இங்கே சொல்லுகிறார்.

மன்னராட்சி இருந்த காலத்தில் அமைச்சருக்கு இருந்த அதே அளவான தேவை இன்றும் உண்டு.   இது ஆட்சியாளர்கள் செயல்படும் முறைகளைக் கூர்ந்து நோக்கி வருபவர்கள் அறிந்த ஒன்று தான். 

தேவையான விளம்பரங்கள் அமைச்சர் செய்தால் மட்டுமே (பல நேரங்களிலும்) பொது மக்களுக்கும் அது தெரிய வரும். ஆரவாரம் இல்லாமல் செயல்பட்டு நல்ல சாதனைகள் செய்த அமைச்சர்கள் குறித்து சில நேரங்களில் நாம் கேள்விப்பட்டிருக்க வழியுண்டு.

தெரிதலும் தேர்ந்து செயலும்
(வேண்டிய செயல்களைத்) தேர்ந்தெடுத்து, அவற்றை நன்கு ஆராய்ந்து செய்தல்

ஒருதலையாச் சொல்லலும்
(கருத்துக்களை மன்னனிடம்) உறுதியாகச் சொல்லுதல்

வல்லது அமைச்சு
ஆகிய இவற்றில் வல்லவரே அமைச்சர்

"ஒருதலையா" என்று அமைச்சருக்கு வள்ளுவர் சொல்கிறார். மன்னனின் வண்டிச்சக்கரம் / கால் பட்ட நிலம் இவற்றை எல்லாம் கும்பிட்டுக் கூன் விழுந்த வழிபாட்டாளர்களை "அமைச்சர்" என்று ஒத்துக்கொள்வாரா தெரியவில்லை Laughing

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 27 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue May 24, 2016 4:37 pm

#635
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான் எஞ்ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித்துணை


முதன் முதலாக இந்த அமைச்சு அதிகாரத்தில் "துணை" என்ற பொருள் வருவது குறிப்பிடத்தக்கது. இது வரை அமைச்சு என்பதன் வரையறை / பண்புகள் தனித்துச் சொன்ன வள்ளுவர் இப்போதோ "மன்னனுக்குத் துணை" என்று உரிய இடத்தில் வைப்பதைக் காண முடியும் Wink

அறன் - திறன் என்று எளிய எதுகையுடன் காதுக்கினிய பாடலாய் வரும் செய்யுள்.

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்
அறத்தை அறிந்து அறிவு நிறைந்த சொற்களை உடையவனும்

எஞ்ஞான்றுந் திறனறிந்தான்
எப்போதும் செயல் வன்மை உடையவனுமாய் இருப்பவனே

தேர்ச்சித்துணை
ஆராய்வதில் (மன்னனுக்குத்) துணையாகத் தகுந்தவன்!

ஆன்றமைந்த என்பதில் வரும் "அமைந்த" என்பதை "அடக்கத்துடன்" என்று சில உரையாசிரியர்கள் சொல்வதைக் காணலாம்.

ஆக மொத்தம், அறனும் திறனும் உள்ளவரையே மன்னன் அமைச்சராகத் தேர்வு செய்ய  வேண்டும்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 27 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed May 25, 2016 9:11 pm

#636
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் 
யாவுள முன்நிற்பவை

மதிநுட்பம் - எளிதில் புரிகிறது, ஆனால் "அதிநுட்பம்" என்றால் என்ன? 
(பாடலில் எதுகையாக வருகிறது என்பதற்கு அப்பால், அந்தச்சொல்லில் தான் குறிப்பிடத்தக்க பொருளும் அடங்கி இருக்கிறது)

உரையாசிரியர்களைப் படிக்கையில், "அதி மேதாவி" என்பது போன்ற, எதிர்மறையான பொருளில் வரும் சொல் என அறிந்து கொள்ளலாம்.

அப்படியாக, "அதி நுட்பம்" = கூடுதல் நுட்பம் = சூழ்ச்சி Smile

சூழ்ச்சியை வெல்லத்தக்க அறிவு அமைச்சருக்கு வேண்டும் என்று (தொன்று தொட்டே நாம் கதைகளில் படித்தும் இன்புற்றும் இருக்கும்) அடிப்படையான கருத்து.

பீர்பால், அப்பாஜி போன்ற பெயர்கள் நினைவுக்கு வரலாம் Wink

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு
(இயல்பில்) நுட்பமான அறிவோடு நூல்கள் கற்றறிந்த அறிவும் உடையோருக்கு

அதிநுட்பம்  முன்நிற்பவை யாவுள
மிகுந்த நுட்பமாக / சூழ்ச்சியாக என்ன எதிர்த்து நிற்க முடியும்?
(முடியாது - அவற்றையெல்லாம் எளிதில் கையாளுவர் என்று பொருள்)

அமைச்சருக்கு இயல்பான அறிவும் கற்றறிவும் வேண்டும்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 27 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu May 26, 2016 6:25 pm

#637
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்

"கடைத்தும்" என்பதை "என்றாலும்" என்று பொருள் படும் வினையெச்ச விகுதியாக அகராதி அடையாளம் காட்டுகிறது.

அப்படியாக, "அறிந்தக் கடைத்தும்" = அறிந்திருந்தாலும் Smile

அமைச்சரின் செயல்வழிக்கான குறள் என்றாலும் இதன் பயன்பாடு வேறு தளங்களிலும் உள்ளது என்பது வலையில் தேடும்போது தென்படுகிறது. (அதாவது, "இயற்கை" என்ற சொல்லின் அடிப்படையில்)

முதலில் பொருள் பார்ப்போம்.

செயற்கை அறிந்தக் கடைத்தும்
செயல் முறை அறிந்திருந்தாலும்
("ஏட்டுச்சுரைக்காய்" கையில் இருந்தாலும்)

உலகத்து இயற்கை அறிந்து செயல்
உலகத்தில் இயல்பு என்ன என்று நன்கு தெரிந்தே செயல்பட வேண்டும்.
(நடைமுறை விளைவுகள் குறித்து சிந்தித்து நடவடிக்கைகள் இருக்க வேண்டும்)

இயற்கை உழவு அறிவியலில் புகழ் பெற்ற நம்மாழ்வார் செயற்கை வேதிப்பொருட்கள் தவிர்க்க வேண்டும் என்று சொல்லும் ஒரு கட்டுரையில் இந்தக்குறளை மேற்கோள் காட்டி  இருப்பது குறிப்பிடத்தக்கது.

அது போன்றே வேறு சில சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்தக்குறளை மேற்கோள் காட்டுவது வலையில் ஆங்காங்கு தென்படுகிறது.

ஒரு முரண் - செயற்கை இல்லாமல் இன்றைய உலகம் இயங்காது என்பது  நடைமுறையில் நாம் காணும் இயற்கை Laughing
(பி.கு. : உழவுத்தொழில் என்பதே செயற்கை தான் என்று சொல்வோரும் உண்டு)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 27 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri May 27, 2016 5:29 pm

#638
அறிகொன்று அறியான் எனினும் உறுதி 
உழையிருந்தான் கூறல் கடன்

உழை என்பதற்கு இடம் என்றும் ஒரு பொருள் தருகிறது அகராதி.  உழையிருந்தான் - (கூட ஒரே) இடத்தில் இருப்பவன் / கூட்டாளி 

இந்த அதிகாரத்தின் அடிப்படையில், மன்னனின் கூட்டாளி = அமைச்சன் என்றும் அகராதி தெளிவு படுத்துகிறது Smile

ஏழு சீர்களுக்குள் பல சொற்களைப் புகுத்தி விடும் புலவரின் ஆற்றல் இந்தக்குறளில் இன்னொரு இடத்திலும் காணலாம்.

"அறிகொன்றான்" =  அறிவு+ கொன்றான் - அறிவினைக் கொன்றவன் (மற்றவர்கள் சொல்லும் அறிவுரையைப் புறக்கணிக்கும் மன்னன்)

அறிகொன்று
(மற்றவர்களின் நல்ல) அறிவுரைகளைப் புறக்கணிப்பதோடு

அறியான் எனினும்
(தானும்) அறிவில்லாதவன் (மன்னன்) என்றாலும் 

உழையிருந்தான் உறுதி கூறல் கடன்
உறுதியாக (வேண்டியவற்றைக்) கூற வேண்டியது அமைச்சனின் கடமை

"மன்னனின் மூத்த பிள்ளை அடுத்த மன்னன்" என்ற வழக்கம் பல நாடுகளிலும் முற்காலத்தில் இருந்ததாகப் படிக்கிறோம். அவ்விதமாக, அறிவிலிகள் மற்றும் முரடர்கள் ஆளும் நிலைக்கு வருவது இயல்பான ஒன்றே Smile

அந்நிலையில், பல நாடுகளையும் அறிவுள்ள அமைச்சர்கள் காத்து வழிநடத்திய வரலாறுகள் இருக்கின்றன.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 27 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue May 31, 2016 4:57 pm

#639
பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் 
எழுபது கோடி உறும்

மந்திரி என்ற சொல்லை வள்ளுவரே பயன்படுத்துவது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக, அமைச்சர் என்று தான் சொல்ல வேண்டும் என்றெல்லாம் வீண் வம்பு தேவையில்லை Smile

(மீண்டும் வழக்கம் போல் வரும் ஐயம் - மந்திரி தமிழில் இருந்து வடமொழிக்கா அல்லது அங்கே இருந்து இங்கேயா?  Laughing )

"தெவ்வோர்" என்றொரு புதிய சொல் இன்று படிக்கிறேன். பகைவர் என்று இதற்குப்பொருள் சொல்கிறது அகராதி.

"பழுதான எண்ணங்கள் உள்ள அமைச்சருக்குப் பகைவரே மேல்" என்று சொல்லும் குறள்!

பழுதெண்ணும் மந்திரியின்
தவறான வழிகளை எண்ணுகின்ற மந்திரியை விட

எழுபது கோடி தெவ்வோர் பக்கத்துள் உறும்
எழுபது கோடி எதிரிகளைத் தன் பக்கத்தில் வைத்துக் கொள்வது மேலானது

இந்த அதிகாரத்தின் முதல் எதிர்மறைக் குறள் - இது வரை அமைச்சருக்கு வேண்டிய பண்புகள், நல்ல அமைச்சரால் வரும் பயன் என்று மட்டுமே வந்தது. 

அப்படியாக, நம் காலத்து அமைச்சர்கள் பற்றிய முதல் குறள் எனலாம் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 27 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 27 of 40 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 33 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum