Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 26 of 40 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 26 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Mar 22, 2016 6:37 pm

#592
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்


"நிலையான உடைமை ஒருவருக்கு உள்ளத்தின் ஊக்கமே, பொருள் அல்ல" என்று "பொருட்பாலில்" வள்ளுவர் சொல்லுவது குறிப்பிடத்தக்கது Smile

உள்ளம் உடைமை உடைமை
உள்ளத்தில் ஊக்கமே ஒருவருக்கு (நிலையான) உடைமை / செல்வம் / ஆக்கம் ஆகும்

பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்
(இதற்கு மாறான)  பொருள் உடைமையோ நிலையானது அல்ல, நீங்கி விடத்தக்கது!

பொருள் நிலையானதல்ல, நீங்கி விடத்தக்கது என்ற கருத்து பழங்காலம் தொட்டே சொல்லப்பட்டு வரும் ஒன்று தான்.  

"இறக்கைகள் கொண்டு பணம் பறந்து போகும்" என்கிறது விவிலியத்தில் உள்ள நீதிமொழி.


இல்லாமற்போகும் பொருள் மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்

"நான் நம்ப மாட்டேன்" என்கிறவர்கள், 2009-ஆம் ஆண்டு வரை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் வாழ்நாள் சேமிப்பை எல்லாம் வைத்திருந்த ஆயிரக்கணக்கான எங்கள் ஊர்க்காரர்களைப் பேட்டி எடுக்குமாறு ஊக்குவிக்கிறேன் Smile

எப்படி இருந்தாலும் உள்ளத்தில் ஊக்கம் இருந்தால் போதும் - பிழைத்துக்கொள்ள மட்டுமல்ல, வெற்றியடையவும் அது தான் உடைமை!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 26 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Mar 23, 2016 6:55 pm

#593
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடையார்


'ஒருவந்தம்' என்ற சொல் இங்கே "நிலை பேறு / உறுதி" என்ற பொருளில் வருகிறது.

'அல்லாத்தல்' என்பது துன்பமுறுதல் / வருந்துதல் என்று பொருள் படுகிறது.

"நிலையான ஊக்கம் / மன உறுதி உள்ளவர்கள் பொருள் இழந்ததற்கு வருந்த மாட்டார்கள்" என்று, சென்ற குறளில் கண்ட கருத்தின் நீட்சியாக வருகிறது.

ஊக்கம் ஒருவந்தம் கைத்துடையார்
ஊக்கத்தைத் தம் கையில் உடைமையாக உறுதியாகக் கொண்டிருப்போர்

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார்
"பொருள் ஆக்கத்தை இழந்து விட்டோமே" என்று கவலை கொள்ள மாட்டார்கள்

மேலே நாம் கண்டது போலவே, பணம் / பொருளுடைமை நிலையானது அல்ல. எப்போது வேண்டுமானாலும் பறந்து போக வழியுண்டு. எவ்வளவு திறமையாகக் கட்டிக்காத்தாலும் ஏதோ ஒரு சூழலில் இழப்பு நேரிடும் என்பது பொதுவான உண்மை.

அப்படிப்பட்ட நேரங்களில், ஊக்கமில்லாதோர் வருந்தி மன உளைச்சலுக்கு ஆளாவதும் நோய்வாய்ப்படுவதும் ஒடிந்து போவதும் அன்றாடம் காணும் நிகழ்வு. பலரது வாழ்வில் மது போன்ற பழக்கங்கள் உள்ளே நுழைய இதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

மனதில் ஊக்கம் / உறுதி உள்ளோருக்கு அப்படிப்பட்ட நிலை வராது. "எதையும் தாங்கும் இதயம்" அப்படிப்பட்ட சூழலில் இருந்து மீளவும், மீண்டும் வெற்றி பெறவும் வழி காட்டும் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 26 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Mar 24, 2016 8:47 pm

#594
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கமுடையானுழை

பள்ளியில் படித்த குறள் என்றாலும் "அதர்" என்ற சொல்லின் பொருள் நினைவில் இல்லை.

அகராதி இந்தக்குறளை மேற்கோள் காட்டி "வழி" என்கிறது.

இனிப்பொருள் படிப்பது எளிதே Smile சொல்லப்போனால், இந்தக்குறளும் முன்னிரு செய்யுள்களின் நீட்சியே. முன்னிரண்டில் வேறுபடுத்திக்காட்டப்பட்ட ஊக்கமும் பொருளும் தம்மில் உள்ள தொடர்பு இங்கு சொல்லப்படுகிறது.

அசைவிலா ஊக்கமுடையானுழை
அசைவில்லாத (தளராத / உறுதியான) ஊக்கம் உள்ளவன் இடத்திற்கு

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்
பொருட்செல்வம் / ஆக்கம் வழி கேட்டுக்கொண்டு செல்லும்

"ஊக்கம் இருந்தால் பொருள் தானாக வந்து சேரும் - நாம் அதைத்தேடிப் போக வேண்டாம்" என்று வலியுறுத்தும் குறள்.

பொருளை ஒரு உயிரியாக (அல்லது வண்டியாக) உருவகப்படுத்தி, "வழி கேட்டுக்கொண்டு வரும்" என்று புனைவது கற்பனை அழகு!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 26 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Mar 28, 2016 9:50 pm

#595
வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் 
உள்ளத்தனையது உயர்வு

அருமையான உவமை மற்றும் பலருக்கும் நன்கு தெரிந்த குறள் Smile

ஆனால், இந்தக்குறளைப் பலரும் தவறாகப் பயன்படுத்திக் கேட்டிருக்கிறேன் Embarassed

அதாவது, "உள்ளத்தனையது" என்பதை "ஊக்கம்" என்று சொல்லிக்கேட்ட நினைவில்லை! 

"மனம் போல் வாழ்வு" என்று சொல்லி இதைப்பலரும் குழப்புவதும், "கனவு காண், அப்போது அடைவாய்" என்ற கலாமின் சொல்லுக்கு இணையாக்குவதும் நான் பலமுறை வாசித்திருக்கிறேன். (அதாவது, ஆங்கிலத்தில் 'attitude decides altitude' என்பது போல) 

எந்த அதிகாரத்தில் வருகிறது என்று அறியாமல், "உள்ளம்" = "மனம், அதில் நாம் நினைப்பது / கனவு காணுவது / நம் மனநிலை" என்ற அளவிலேயே பலரும் புரிந்து கொள்கிறார்கள். 

வள்ளுவர் சொன்னதோ, உள்ளம் = உள்ளத்தின் ஊக்கம் என்ற பொருளில்.  வெறுமென மனநிலை / மன நோக்கம் என்ற பொருளில் அல்ல!

வெள்ளத்தனைய மலர்நீட்டம்
நீர் எந்த அளவில் உள்ளதோ, அந்த அளவுக்கு (அல்லி / தாமரை) மலர் நீண்டு உயரும் 

மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு
(அது போல), மனிதர் தமது உள்ளத்தின் ஊக்கம் எந்த அளவில் இருக்கிறதோ அதன் அடிப்படையில் உயர்வு அடைவார்கள்  

இந்தக்குறளில் "வெள்ளம்" என்று வள்ளுவர் பயன்படுத்திய சொல் இன்றும் மலையாள மொழியில் புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது - நீர் என்ற பொருளில் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 26 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Mar 29, 2016 4:42 pm

#596
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து


நம்மை ஊக்கத்துடன் நடத்திக்கொண்டிருக்க என்ன தேவை என்று சொல்லும் குறள்.

இதன் முதல் பகுதி -"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" - பலருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று. (ஒரு விதத்தில் பார்த்தால், இது தான் கலாமின் "கனவு காணுங்கள்" - இதற்கு முந்தைய குறள் அல்ல Smile )

"உயர்வுள்ளல்" என்பதை இரு விதத்தில் எடுத்துக்கொள்ள முடியும் -

(1) உயர்வானவைகளைக் குறித்து எண்ணுங்கள் (எண்ணத்தில் மேலானவை மட்டும் இருக்கட்டும், கீழான சிந்தனைகள் வேண்டாம்)

(2) உயர்வதைக் குறித்து எண்ணுங்கள்.

"ஊக்கமுடைமை" என்ற அடிப்படையில் நோக்கினால், இரண்டாவதே மிகப்பொருத்தமானது.

அல்லது, இரண்டையும் இணைத்து "உயர்வானவைகளை அடைவதைக் குறித்து எண்ணுங்கள்" என்றால், அதுவே கலாமின் "கனவு காணுங்கள்" Wink

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
எண்ணங்கள் எல்லாமே உயர்வாக இருக்க வேண்டும்

மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து
அது நிறைவேறாமல் போனாலும் (எண்ணுவதை) விடக்கூடாது

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 26 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Mar 30, 2016 6:13 pm

#597
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பாடூன்றுங் களிறு

"இப்போது தான் கால் ஊன்றி இருக்கிறேன்" என்று சொல்லுவதைக் கேட்டிருக்கிறோம். "உறுதிப்பட்டிருக்கிறேன் / கொஞ்சம் நிலைத்தன்மை வந்திருக்கிறது" என்றெல்லாம் அங்கே "ஊன்றுதல்" என்ற சொல்லை எளிதாகப் புரிந்து கொள்கிறோம்.

இந்தக்குறளில் அதே பொருளில் "அசையாமல் உறுதியாக நிற்றல்" என்று வருகிறது.

யானையின் உறுதியை ஊக்கமுள்ளவனின் உறுதிக்கு ஒப்பிட்டு அழகான உவமையை இந்தக்குறள் நமக்கு அளிக்கிறது.
(அலெக்சாண்டர் / போரசு தம்மில் நடந்த போரில் யானைப்படை காட்டியதாகச் சொல்லப்படும் வீரம் இங்கே நினைவில் கொள்ளலாம் - வரலாற்று ஓட்டத்தில் அந்நிகழ்வு வள்ளுவருக்கு முந்தையதாக இருக்க வழியுண்டு).

புதையம்பிற் பட்டுப்பாடூன்றுங் களிறு
அம்புகளில் புதைந்த பின்னரும் யானை உறுதியுடன் நிற்கும்

சிதைவிடத்து ஒல்கார் உரவோர்
(அது போல) அழிவு வரும் இடத்திலும் ஊக்கமுள்ளவர்கள் தளர மாட்டார்கள்

அப்படியாக, ஒருவரது ஊக்கத்தின் மிகச்சிறந்த உரைகல் கடினமான சூழ்நிலைகள் / துன்பங்கள் / தோல்விகள் என நாம் புரிந்து கொள்ளலாம்.

அரசியலில் இந்த அதிகாரம் இருப்பது குறிப்பிடத்தக்கது - அழிவே வந்தாலும் நிலை குலையாமல் இருப்பதற்கு ஊக்கமுள்ளவர்களால் தான் இயலும்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 26 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Mar 31, 2016 6:44 pm

#598
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து 
வள்ளியம் என்னுஞ் செருக்கு

மீண்டும் இங்கே "உள்ளம்" எனும் சொல் "ஊக்கம்" என்னும் பயன்பாட்டில் Smile

இன்னொரு புதுச்சொல் காண்கிறேன் - "வள்ளியம்" - அப்படி என்றால் என்ன?

அகராதி நேரடியாகச் சொல்லும் பொருட்கள் இங்கே செல்லுபடியாகாது (வள்ளியம் = மிளகு, மரக்கலம், ஊதுகுழல், மெழுகு) Laughing 

இவை ஒன்றும் ஒருவனுக்கு "செருக்கு" (பெருமை) தருவன அல்லவே! கடையில் சென்று வாங்கிக்கொள்ள வேண்டியது தான் Smile ஆக, வள்ளுவர் எழுதிய வள்ளியம் இவை ஒன்றும் அல்ல!

ஊக்கம் உள்ளவருக்குத்தான் "வள்ளியம்" என்னும் பெருமை நிலையை அடைய முடியுமாம். அது என்ன நிலை?

உரையாசிரியர்கள் உதவியை நாடலாம். மு.வ. "வண்மை" என்கிறார். (வள்ளியோர் என்ற சொல் இந்தப் பொருளில் புறநானூறில் வருவதாக அகராதியும் சொல்லுகிறது).

அப்படியாக, வள்ளியம் = வண்மை = வள்ளல் தன்மை (வாரி வழங்கும் நிலை)

வள்ளியம் என்னுஞ் செருக்கு உலகத்து 
"வாரி வழங்கும் வள்ளல்" என்ற பெருமை உலகத்தில் 

உள்ளம் இலாதவர் எய்தார்
(ஊக்கமான) உள்ளம் இல்லாதவர்களால் அடைய இயலாது!

ஊக்கம் இல்லையேல் ஆக்கம் இல்லை, பிறகு எங்கே வாரி வழங்குவது? 
(சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்)

மற்றபடி, ஆக்கம் இருந்தாலும் நல்ல உள்ளம் இல்லாவிடில் வள்ளல் தன்மை இருக்காது. அப்படி ஒரு பொருளும் இங்கே "உள்ளம்" என்பதற்கு எடுக்க வழியுண்டு. 

நல்ல உள்ளம் இல்லாதோர் வாலியின் புகழ் பெற்ற இந்த வரிகளில் சேர்த்தி :
"இல்லை "என்போர் இருக்கையிலே 
இருப்பவர்கள் "இல்லை" என்பார் 
Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 26 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Apr 01, 2016 11:30 pm

#599
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை 
வெரூஉம் புலி தாக்குறின்

பள்ளி வயதில் இந்தக்குறளைப் படித்து விட்டு நான் எண்ணிக்கொண்டிருந்தது யானை புலிக்கு அஞ்சும் என்று.

உண்மையிலேயே அப்படியா என்று இப்போது உறுதியாகச் சொல்ல இயலவில்லை 

யானை மற்ற விலங்குகளுக்கு அஞ்சாது என்று சொல்லுவோர் உள்ளார்கள்.  அதிலும் கேரளத்தில் உள்ள ஆனைப்பிரியர்கள் நம்மோடு சண்டைக்கே வருவார்கள் Smile

புலியின் உறுமலுக்கு சில யானைகள் அஞ்சுவதும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

வள்ளுவர் காலத்தில் இப்போதை விடவும் கூடுதல் யானைகள் மற்றும் புலிகள் இருந்தன என்பதால், கண்டிருக்க வழியுண்டு (குறிப்பாக, கன்றுகளின் அச்சம்).

புலிக்கு யானையை விட ஊக்கம் அதிகம் என்றும் இங்கே கருத்து வருகிறது. விலங்கு ஆய்வாளர்கள் ஒத்துக்கொள்வார்களோ தெரியாது Smile

யானை பரியது கூர்ங்கோட்டது ஆயினும்
யானை பருத்தது (அளவில் பெரியது), கூர்மையான கொம்புகள் (தந்தங்கள்) உடையது என்றாலும்

புலி தாக்குறின் வெரூஉம்
புலி தாக்கினால் அஞ்சும் 

யானை அஞ்சுமோ இல்லையோ, யானைப்பாகன் உள்ளிட்ட நாம் எல்லோரும் புலிக்கு அஞ்சாமல் இருக்க முடியாது Laughing அதன் ஊக்கம் இங்கே குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது. 

நமக்கு ஊக்கத்துடன் செயல்பட நல்ல எடுத்துக்காட்டு!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 26 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Apr 05, 2016 6:11 pm

#600
உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார் 
மரம் மக்களாதலே வேறு

வெறுக்கை என்பது வேடிக்கையான ஒரு சொல். அதன் நேரடிப்பொருள் "அருவருப்பு, வெறுப்பு" என்பதே. சொல்லைப்பார்த்த உடனே இந்தப்பொருளே நம் மனதில் வரும் Smile

இன்னொரு பொருள் வளம் / செல்வம். இதற்கு சில அகராதிகள் தரும் விளக்கம் - "ஞானிகள் செல்வத்தை வெறுத்ததால், அதற்கு வெறுக்கை என்ற சொல் வந்தது"  Laughing

என்றாலும், இந்தக்குறளில் அது "மிகுதி" (அதாவது, ஊக்கத்தில் கூடுதல்) என்ற மூன்றாவது பொருளில் வருகிறது.

உரமொருவற்கு உள்ள வெறுக்கை
ஒருவருக்கு உள்ள ஊக்கத்தின் மிகுதியே அவரது வலிமை!

அஃதில்லார் மரம் 
அது இல்லாதவர்கள் (வெறும்) மரமே

மக்களாதலே வேறு
"மக்கள்" என்பது வெறும் தோற்றமே 

முன்பு ஒரு குறளில் நாம் கண்டது போலவே, இங்கும் மரம் என்பது "ஓடி நடந்து செயல்படும் திறன்" என்ற அடிப்படையில் தாழ்வாகக் கருதப்படுகிறதே ஒழிய, ஆக மொத்தப்பயன்பாட்டில் அல்ல. ஆகவே, "மரங்களின் நன்மைகள்" என்ற பட்டியலை எடுத்துக்கொண்டு இந்தக்குறளைப் படிக்கக்கூடாது.

"மரம் மாதிரி நிக்கிறான்" என்ற பொருளில் - ஊக்கமாக செயல்படாமல், ஆடாமல் அசையாமல் சோம்பேறியாக உள்ளவன் - என்று புரிந்து கொள்ள வேண்டும்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 26 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Apr 06, 2016 9:13 pm

#601
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் 
மாசூர மாய்ந்து கெடும்
(பொருட்பால், அரசியல், மடியின்மை அதிகாரம்)

மடி என்ற சொல் நம் நாளில் தமிழில்   "தாயின் மடியில் உறங்கும் குழந்தை" என்பது போன்ற பொருளில் தான் அறியப்படுகிறது. இன்னொன்று "மடியில் கனம், வழியில் பயம்". அல்லது "பசுவின் பால் மடி".  இப்படி உடல் அளவில் அந்தச்சொல் நின்று விடுகிறது.

என்றாலும், மலையாளத்தில் இதன் பயன்பாடு இங்கே வள்ளுவர் சொல்லும் பொருளில் தான். 

சோம்பேறித்தனம் Smile

தொழில் வெற்றியாளர்கள் பலரும் இப்படிச்சொல்லுவதை நான் அவ்வப்போது கேட்டிருக்கிறேன் "முட்டாளைக்கூட சேத்துக்கலாம், சோம்பேறியை மட்டும் தாங்கவே முடியாது" Smile

அறிவும் திறமையும் இருந்தாலும் மடியின் விளைவாகத் தேய்ந்து போன பலர் வரலாற்றில் (ஓரங்கட்டப்பட்ட நிலையில்) இருக்கிறார்கள். அதைச்சொல்லியே இந்த அதிகாரம் தொடங்குகிறது!

குடியென்னும் குன்றா விளக்கம்
மங்காத விளக்காக இருக்கும் ஒருவரது குடிச்சிறப்பு 
(குடி = குடும்பம்)

மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும்
சோம்பேறித்தனம் என்னும் அழுக்குப்படிவதால் கெட்டுப்போகும் 

வள்ளுவர் காலத்தில் எப்படிப்பட்ட விளக்குகள் இருந்தன என்று தெரியாது. அதை விடச்சிறப்பாக நம் நாளைய விளக்குகள் இந்த உருவகத்துக்கு நன்கு பொருத்தம். 

மாசு விளக்கின் ஒளியைக் கெடுக்கும்!
மடி குடும்பத்தின் சிறப்பைக்கெடுக்கும்!!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 26 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Apr 08, 2016 5:26 pm

#602
மடியை மடியா ஒழுகல் குடியைக் 
குடியாக வேண்டுபவர்

"ஒருவரது குடி நல்ல நிலைமையில் இருக்க வேண்டுமென்றால் மடியை விட வேண்டும்" 

இப்படியாகக் "குடி-மடி" என்று எதுகையுடனும், "குடி குடியாக இருக்க மடி மடிய வேண்டும்" என்று  ஒரே சொல்லின் இரு பொருட்களை வைத்துச் சிறிய விளையாட்டுடனும் உள்ள குறள் Smile

குடியைக் குடியாக வேண்டுபவர்
தனது குடி (குடும்பம் / கூட்டம்) குடிப்பெருமையுடன் (நல்ல நிலையில்) இருக்க விரும்புபவர் 

மடியை மடியா ஒழுகல்
சோம்பேறித்தனத்தை விட்டொழித்து வாழ வேண்டும் 

அழகான மற்றும் ஆழமான சிந்தனை உள்ள குறள். 

மடியன் தனக்கு உள்ள வளங்களைப் பாதுகாக்காமல் வீணாக்குவான். மட்டுமல்ல, புதிய வளங்கள் வருத்தவும் மாட்டான். 

அப்படிப்பட்டவனை மன்னனாக, தலைவனாகக் கொண்ட கூட்டத்தின் நிலைமை என்ன ஆகும்? இழிவான நிலைக்குச்செல்லும் என்பதில் ஐயமில்லை.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் : தூங்காதே தம்பி தூங்காதே Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 26 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Apr 11, 2016 11:12 pm

#603
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த 
குடிமடியும் தன்னினும் முந்து

மீண்டும் "மடி" என்ற சொல்லின் இரு பொருட்கள் கொண்டுள்ள விளையாட்டு - அதே நேரத்தில் ஆழ்ந்த பொருளும் பொதிந்திருக்கிறது!

மடி = 1. சாவு / அழி &  2. சோம்பல்   

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடி
அழிக்கும் தன்மையான சோம்பல் கொண்டு வாழும் மூடன் பிறந்த குடி / குடும்பம்

தன்னினும் முந்து மடியும்
அவனுக்கும் முன்பே அழிந்து போய் விடும்!

நேரடியான பொருள் எளிதே - சோம்பல் ஒருவனை அழிக்கும், அவனுக்கும் முன்னரே அவனது குடியை அழிக்கும்!

புதைந்திருக்கும் பொருள் என்ன?

"உன் குடியில் ஒருத்தனையும் சோம்பலோடு கிடக்க விடாதே" என்று முழுக்குடும்பத்துக்கும் அல்லது சமூகத்துக்கும் அல்லது நிறுவனத்துக்கும் அல்லது மன்னனுக்கும் சேர்த்து இங்கே வள்ளுவர் அறிவுரை சொல்லுகிறார்.

"அவன் அழியும் முன்பே உங்களை ஒழித்துக்கட்டி விடுவான்" என்று எச்சரிக்கிறார். 

ஆதலால், நாம் சோம்பேறியாக இல்லாதிருந்தால் போதாது. நம் கூட்டத்தில் யாரையும் சோம்பேறியாக இருக்க விடக்கூடாது என்கிறார்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 26 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Apr 12, 2016 7:01 pm

#604
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து 
மாண்ட உஞற்றி லவர்க்கு

உஞற்று - இப்படி ஒரு புதிய சொல் இந்தக்குறளில்! 
("வழக்கொழிந்த சொல்" என்பதாக விக்கி சொல்லுகிறது Laughing )

முயற்சி, தூண்டல், செய்தல் என்றெல்லாம் இந்தச்சொல்லுக்கு அகராதி பொருள் தருகிறது. 

அப்படியாக, மடிக்கு எதிர்ச்சொல். அதுவும் இன்று தமிழில் வழக்கில் இல்லை - இதுவும் இல்லை!

மற்றபடி, குறளின் பொருள் எளிது மட்டுமல்ல, மேலுள்ள மற்ற செய்யுள்களில் ஏற்கனவே சொல்லப்பட்டது தான். "குற்றம் பெருகும்" என்பது மட்டும் கூடுதல் சேர்க்கை!

மடிமடிந்து மாண்ட உஞற்றிலவர்க்கு
முயற்சியோ செயல்படுதலோ இல்லாமல் சோம்பேறித்தனத்தில் ஆழ்ந்து விட்டோருடைய 

குடிமடிந்து குற்றம் பெருகும்
குடி அழிந்து குற்றம் பெருகும்

இங்கு குடி என்பது குடிச்சிறப்பு என்று எடுத்துக்கொள்ள வேண்டும். சிறப்பான நிலை மாறிப்போய் குற்றவாளிகளாக ஆகி விடுவதற்கு சோம்பல் காரணமாக அமையும் என்று எச்சரிக்கை செய்கிறார். 

தனிப்பட்ட செயல்வன்மை, தூண்டுதல், முயற்சி இல்லாதவர்கள் மற்றவர்களை ஏய்த்துப் பிழைக்க வழி பார்ப்பார்கள் என்பது நடைமுறை. 

அப்படியாக, சோம்பல் இறுதியில் அழிவுக்கும் குற்றங்களுக்குமே வழிவகுக்கும்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 26 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Apr 13, 2016 7:38 pm

#605
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் 
கெடுநீரார் காமக் கலன்

பலருக்கும் (பள்ளிப்பாடங்கள் வழியாக) நன்கு அறிமுகமான குறள் Smile

நெடுநீர் என்றால் காலம் தாழ்த்துதல் என்று முன்னமேயே பார்த்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்.  

மற்றபடி மிக எளிதான, நேரடியான, அடித்துச்சொல்லும் விதத்திலான குறள்.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் 
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், உறக்கம் ஆகிய இவை நான்கும் 

கெடுநீரார் காமக்கலன்
அழிந்து போகிறவர்கள் மிக விரும்பி ஏறும் படகு 

படகு இங்கே "வாழ்க்கை வழி"க்கு உருவகம். 

அதே போல "உறக்கம்" என்பது நம் உடலுக்கு இன்றியமையாததான ஓய்வினைக் குறிக்க வழியில்லை. உரையாசிரியர்கள் "அளவுக்கு மீறிய தூக்கம்" என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி யாராலும் விரும்பி உறங்க முடியுமா என்பது ஐயமே. (உடல் ஒத்துழைக்காது). 

உண்மையில் இன்றைய உலகில் வேண்டிய அளவுக்கும் குறைவாக உறங்கி உடலை அழிப்போரே கூடுதல்.  (அப்படிப்பட்டவர்களில் பலரும் சோம்பேறிகள் என்பது இன்னொன்று). 

துயில் = "வேண்டியன செய்யாதிருத்தல்" என்று தான் கொள்ள வேண்டும். அதாவது, "செயலின்மை".

மொத்தத்தில், அழிவுக்கான வழியில் சோம்பேறித்தனம் ஒருவனை நடத்துகிறது - இதில் ஐயமே இல்லை!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 26 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Apr 14, 2016 9:43 pm

#606
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் 
மாண்பயன் எய்தல் அரிது

படியுடையார் - படி என்ற சொல்லுக்கு விதவிதமாய் நிறையப்பொருள் இருப்பதால் இதைப் புரிந்து கொள்ள வலையில் கொஞ்சம் அலைந்தேன் Smile

மன்னர் என்பது மிகப்பொருத்தம் எனத்தோன்றுகிறது. (நிலத்தை உடையவன் / ஆள்பவன்)

அப்படியாக, சோம்பேறிக்கு மன்னனே உறவானாலும் பலனில்லை என்று சொல்ல வருகிறார். (அரசியல் என்ற அடிப்படையிலும் இது மிகப்பொருத்தமே!)

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும்
மன்னனின் அன்பு / விருப்பம் அமைந்த போதிலும் 

மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது
சோம்பல் உடையவன் சிறப்பான பயன் அடைவது அரிது!

உறவு / உறவு வழியிலான நட்பு என்று பல வழிகளில் ஆட்சியாளருக்கு நெருக்கமாக சில சோம்பேறிகள் வர முடியும்.

என்றாலும், சோம்பல் என்ற தன்மை உள்ள வரை, அத்தகையோரால் சிறப்பை அடையவே இயலாது. (கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பை வீணடிப்பார்கள் என்று சுருக்கம்.)

"மடியனைக் கூட்டுச்சேர்க்காதே " என்று மன்னனுக்கு அறிவுரை சொல்வதாகவும் இந்தக்குறளை நாம் புரிந்து கொள்ளலாம்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 26 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Apr 15, 2016 4:29 am

600 வரையான  கருத்துகளை இங்கே PDF வடிவில் தொகுத்து இட்டிருக்கிறேன்.

http://www.mediafire.com/download/z7c6ltinsh2c1sf/kural_inbam_600.pdf

உங்கள் கணினி அல்லது மற்ற கருவிகளில் இறக்கிக்கொள்ள எந்தத்தடையும் இல்லை Smile

குறைகள் கண்டுபிடித்து (அல்லது மற்றபடியும்) சொன்னால் மிகவும் மகிழ்வேன் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 26 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Apr 15, 2016 3:16 pm

#607
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து 
மாண்ட உஞற்றிலவர்

மடிக்கு எதுகை இடி, மடி உள்ளோருக்கு வரும் பலனும் அதுவே Smile 

இந்தக்குறளில் மீண்டும் "உஞற்றி" (முயற்சி / செயல் / தூண்டல்) வருகிறது.

மற்றவர்களிடமிருந்து திட்டும் ஏளனமும் பெறுதல் மிக எளிது. அதற்கு ஒரு கடின உழைப்பும் தேவையில்லை. "சும்மா" இருந்தாலே போதும்.

மடிபுரிந்து மாண்ட உஞற்றிலவர்
முயற்சியும் தூண்டுதலும் இல்லாமல் சோம்பலில் வீழ்ந்து கிடப்பவர்கள் 

இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர்
(மற்றவர்கள்) இடித்துரைத்து எள்ளும் சொல் கேட்கும் நிலை வரும்.

அதாவது, இரண்டு விதமான தாக்குதல்கள் - இடி (கடுமையான வசவு) & எள்ளல் (ஏளனம் / இகழ்ச்சி). 

எதிர்மறையான தன்மையான சோம்பலுக்கு ஏற்ற எதிர்மறையான குறள் . 

இதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது இப்படி : 
புகழ்ச்சியும் பாராட்டுதலும் வேண்டும் என்றால் முயற்சியும் தூண்டுதலும் உழைப்பும் கொள்வோம்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 26 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Apr 18, 2016 5:25 pm

#608
மடிமை குடிமைக்கண் தங்கின் தன் ஒன்னார்க்கு 
அடிமை புகுத்தி விடும்

ஒன்னார் = பகைவர் 

சோம்பேறி கடைசியில் பகைவருக்கு அடிமை ஆகி விடுவான் (தனது குடியையே அடிமைப்படுத்தி விடுவான்) என்று எச்சரிக்கும் குறள்.

அரசியலில் இந்த அதிகாரம் இருப்பதால், ஆட்சியாளன் / மன்னனுக்கு இந்தக்குறள் குறிப்பாக மிகப்பொருத்தம்.  தலைவன் மடியனாக இருந்தால் நாட்டையும் குடிகளையும் எதிரிகளுக்கு அடிமையாக்காமல் விடமாட்டான் Sad

மடிமை குடிமைக்கண் தங்கின்
சிறந்த குடியில் உள்ளவனிடம் மடிமை (சோம்பேறித்தனம்) தங்கினால் 

தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும்
தனது பகைவருக்கு அடிமையாகும் நிலையைப் புகுத்தி விடும்!

நாடு இழிநிலைக்குச்செல்லும் / அழியும் என்பதெல்லாம் சரி - எப்படி எதிரிகளுக்கு மடியன் அடிமையாவான்? வள்ளுவர் கால நிலையில் வைத்துப்பார்த்தால், வலிமை இல்லாத நாடுகள் வெல்லப்பட்டு அடிமைகள் ஆவது பொதுவான நிகழ்வு. 

நம் நாளில் சோம்பேறி நாட்டைக் கைப்பற்ற யாரேனும் முயலுவார்களா தெரியவில்லை Laughing - பொருள் அளவில் அடிமைப்படுத்துவர் என்பது உண்மை தான்-  என்றாலும் அதிலும் ஆர்வம் இருக்குமா தெரியவில்லை.

வேறு கணக்கில் பார்த்தால், நம் நாளில் சோம்பேறி கடன்காரனாக ஆவான் என்பது நடைமுறை. "கடன் வாங்கியவன், கொடுத்தவனுக்கு அடிமை" என்ற கருத்தின் அடிப்படையில் மடியனுக்கு அடிமையாகும் வாய்ப்பு இன்றும் உண்டு தான் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 26 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Apr 19, 2016 11:56 pm

#609
குடியாண்மையுள் வந்த குற்றம் ஒருவன் 
மடியாண்மை மாற்றக் கெடும்

"குடியாண்மையுள் = குடியிலும் ஆண்மையிலும்" என்று உரையாசிரியர்கள் இதற்குப் பொருள் சொல்வது கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கிறது Smile

நேரடியாக எனக்குப்பட்டது (மேலாண்மை என்று இப்போது புழக்கத்தில் இருக்கும் சொல்லின் அடிப்படையில்) "குடி மக்களை ஆளுதல்" என்று தான்.  (தற்போது தேர்தல் நேரம் என்பதாலோ அல்லது பொருட்பாலின் இது அரசியலில் இருப்பதாலோ எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்).

ஆக, மன்னனுக்கு சோம்பலை ஒழிக்க வள்ளுவர் அறிவுறுத்துகிறார் என எடுத்துக் கொள்கிறேன்.

ஒருவன் மடியாண்மை மாற்ற
ஒருவன் மடியின் பிடியில் இருந்து விடுபட்டால் (மன்னன் சோம்பலை ஒழித்தால்)

குடியாண்மையுள் வந்த குற்றம்  கெடும்
குடிகளை ஆளுவதில் வந்திருக்கும் இழுக்கு நீங்கும்  (அல்லது, குடிப்பெருமைக்கு வந்த குற்றம் அழியும்)

ஆண்மை = ஆளுமை / ஆண் தன்மை இரண்டு விதத்திலும் பொருந்தும்!

குறிப்பான அறிவுரை - சோம்பல் இழுக்கு வருத்தும் / குற்றத்தினைக் கொண்டு வரும். 

ஆதலினால் அதைக்களைவீர்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 26 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Apr 20, 2016 8:28 pm

#610
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் 
தாஅயதெல்லாம் ஒருங்கு

அடியளந்தான் Wink

இந்தியத்தொன்மங்களின் அடிப்படையில், இது திருமாலைக் குறிப்பதாகவே பல உரையாசிரியர்களும் பொருள் புரிந்திருக்கின்றனர். 

இறைமறுப்புக் கொள்கையின் விளைவாக, மு.க. உரையில் அவ்வாறு கூறவில்லை என்பது புரிந்து கொள்ளத்தக்கதே Wink

அதே நேரத்தில், இது கதிரவனைக் குறிப்பதாகக் கருதுவோரும் உண்டு (உதயம், உச்சி, மறைவு என்று மூன்று அடிகளாம்). 
எ-டு : திரு.கணேசன்  

"யாருக்கு அறிவுரை" என்பதில்  கருத்து வேற்றுமை இல்லை - மன்னவனுக்கே Smile

அடியளந்தான் தாஅயதெல்லாம் ஒருங்கு
(தன் கால்) அடியால் (உலகை) அளந்தவன் தாவியதையெல்லாம் (கடந்ததை எல்லாம்) ஒரு சேர  
(தாஅய = தாவிய என்பதன் அளபெடை வடிவம்)

மடியிலா மன்னவன் எய்தும்
சோம்பல் இல்லாத மன்னவன் அடைவான் 

"மடி இல்லாவிடில் மன்னன் முழு உலகை ஆள்வான்" என்று ஆக மொத்தப்பொருள்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 26 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Apr 21, 2016 7:30 pm

#611
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்

(பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை)

"முயற்சி திருவினை ஆக்கும்" என்ற சொற்றொடர் தமிழகத்தில் மிகப்புகழ் பெற்றது!

இதைக் கேள்விப்படாதவர்கள் தமிழ் அறிந்தவர்களாக இருக்க வாய்ப்புகள் அரிதே! அப்படிப் புகழ்பெற்ற  சொற்றொடர் இந்த அதிகாரத்தின் ஒரு குறளின் முதல் பகுதி Smile

அப்படியாக, "ஆள்வினை" = முயற்சி.

வினையினால் (செயல்படுவதனால்) ஆளப்படுவது!  உழைப்பில் ஊக்கமாய் இருப்பது என்று புரிந்து கொள்ளலாம். எல்லோருக்கும், குறிப்பாக மன்னனுக்கு மிகத்தேவை.

இந்தக்குறளில் "அசாவாமை" என்ற சொல் குறிப்பிடத்தக்கது. (அயாவாமை / அயர்வில்லாமை / சோர்வில்லாமை).

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
(இது செய்வதற்கு) அரிது / இயலாதது என்று அயர்ந்து விடக்கூடாது

பெருமை முயற்சி தரும்
(செய்து முடிக்கும்) ஆற்றலை முயற்சி தரும்

அப்படியாக, (தன் கருத்துப்படி) "செயற்கரிய" செய்யும் பெருமையை ஒருவனுக்கு முயற்சி தரும் என்று தொடங்குகிறார்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 26 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Apr 22, 2016 5:28 pm

#612
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை 
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு

பாமரத்தனமாகப் படித்தால் குழப்பம் தரும் குறள்.

எடுத்துக்காட்டாக, "வினை கெடல் ஓம்பல்" என்பதை எப்படிப் படிப்பது? 

"செயல் கெட்டுப்போகுமாறு காத்துக்கொள்" என்று தானே நேரடிப்பொருள்? Laughing

முயற்சியை ஊக்குவிக்கும் அதிகாரத்தில் அப்படி எழுத வழி இல்லை என்பதால், மாற்றி யோசிக்க வேண்டி இருக்கிறது. 

இங்கே "வினை கெடல் ஓம்பல்" என்றால் "செயலைக்கெடுக்கும் கடினமான சூழலிலும், விடாமல் காத்துக்கொள்க" என்று பொருள். (அதாவது, கெட்ட / கடினமான நிலையிலும் செயலைச்செய், முயற்சியை விட்டு விடாதே!)

அதே போல, "வினைக்குறை தீர்ந்தார்" என்பது, பாமரத்தனமாகப் படித்தால் "செயலைக் குறை இல்லாமல் செய்பவர்" என்று தானே வரும்?  அதுவும் அப்படி இல்லையாம். 

'குறை'  என்றால் 'இன்றியமையாத பொருள்' என்று விளக்குகிறார்கள். புதுமையாக இருக்கிறது. Laughing

அப்படியாக, குழப்பங்கள் நீக்கிய பொருள் விளக்கம் :

வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு
இன்றியமையாத செயலை முழுமையாய் முடிக்காமல் கைவிட்டவரை உலகமும் கைவிட்டு விடும் 

வினைக்கண் வினைகெடல் ஓம்பல்
(ஆதலால்) செயலில் ஈடுபடுகையில் அதைக்கெடுக்கும் சூழலிலும் விட்டுவிடாமல் காத்துக்கொள் / நிறைவேற்று! 

Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 26 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Apr 25, 2016 7:04 pm

#613
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே 
வேளாண்மை என்னுஞ் செருக்கு

இந்தக்குறளைப் பொறுத்த வரை கீழ்க்கண்ட சொற்களுக்கு இப்படிப்பொருள் சொல்கிறார்கள்:
தாளாண்மை  = விடா முயற்சி  (நமக்குப் பொதுவாகத் தெரிந்த பொருள் ஒரு பள்ளியின் உரிமையாளர் / தாளாளர்)
வேளாண்மை =  உதவி செய்தல், கொடை கொடுத்தல் (இங்கும் நமக்கு நன்கு பழக்கமான பொருள் உழவுத்தொழில் / வெள்ளாமை என்று நாட்டுப்புறங்களில் சொல்லப்படும் அறுவடை)

இப்படிப்பட்ட பல்பொருள் விளங்கும் சொற்கள் தமிழில் மட்டுமல்ல, எல்லா மொழிகளிலும் உள்ளன என்பது அறிந்ததே. 

மொழி படிப்பதில் ஏற்கனவே உள்ள இடுக்கண் போதாதென்று இதுவும் சேர்ந்து கொள்வது துன்பமான இன்பம் Smile

மற்றபடி, "முயற்சியோடு செயல்படுபவன் தான் பிறருக்கு உதவி செய்யும் நிலையை அடைய முடியும்" என்ற உயர்ந்த, நடைமுறையான கருத்தை அளிக்கும் செய்யுள்!

வேளாண்மை என்னுஞ் செருக்கு
பிறருக்கு உதவும் பெருமிதமான  நிலைமை 

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
விடாமுயற்சி என்னும் பண்பில் தான் தங்கி இருக்கிறது 

சோம்பேறி எப்போதும் மற்றவர்களின் பொருள் உதவிக்காக இரந்து திரிவான். 

முயற்சியுள்ள உழைப்பாளியோ, கொடுத்துக் கொடுத்து மிக்க சிறப்படைவான்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 26 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Apr 26, 2016 4:55 pm

#614
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை 
வாளாண்மை போலக் கெடும்

சென்ற குறளின் நீட்சி. 

அப்படியாக, அதே சொற்களும் இங்கே பயன்படுத்தப்படுகின்றன Smile

மலையாளத்தில் அன்றாடம் பயன்படுவதும் தமிழில் அவ்வளவாகப் பழக்கத்தில் இல்லாததுமான ஒரு அழகான சொல்லை இந்தக்குறளில் காண முடிகிறது - "பேடி" (அஞ்சி நடப்பவன் / கோழை / பயந்தாங்குளி).

பேடி கையில் வாள் கொடுத்தால் என்ன பயன்? அச்சமுள்ள கோழை அதைத்தொடவே நடுங்குவான், கையில் எடுத்தாலும் ஒன்றும் செய்ய இயலாமல் இருப்பான் - மற்றவர்களுக்கு அவன் கையில் உள்ள வாள் கொண்டு என்ன பயன்?

முயற்சி இல்லாதோரிடம் உதவி எதிர்பார்ப்பது "பேடி வாள் சுற்றி நம்மைக்காப்பான்" என்று எண்ணுவது போல! 

வடிகட்டின முட்டாள்தனம் Smile

பேடிகை வாளாண்மை போலக் கெடும்
பேடி (அச்சமுள்ள கோழை) கையில் உள்ள வாளின் ஆளுமை எப்படிப்பயனற்றதோ அது போன்றதே 

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை
விடாமுயற்சி இல்லாதவன் உதவியாளனாக இருக்க எண்ணுவதும்!

என்ன அருமையான உவமை!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 26 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Apr 27, 2016 5:01 pm

#615
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்


இனிமையான செய்யுள், செழுமையான பொருள்!

இசை நயத்துடனும் ஓசை நயத்துடனும் இந்தக்குறள் இருப்பதை  வாய்விட்டுப் படிக்கும்போது உணர முடியும். இன்பம் துன்பம் என்ற எதுகை மட்டுமல்ல, தமிழின் சிறப்பு எழுத்தான "ழ" கொண்டுள்ள விழையான் / விழைவான் என்ற சொற்சிலம்பம் சுவை கூட்டுகிறது!

இந்த இரண்டு பயன்பாடுகளும் எதிர்ச்சொற்கள் கொண்டுள்ள கயிறு திரிக்கல் என்பது கவிநயத்தின் அழகு!

பொருள் வளத்திலும் சளைத்ததல்ல!

செயலில் முனைப்போடு இருப்பவன் தான் குடும்பத்துக்கும் சுற்றத்துக்கும் தூணாக இருப்பான். கேளிக்கை, பொழுது போக்கு என்று திரிபவனால் யாருக்கும் பயனில்லை என்பது வலிமையான அறிவுரை!

இன்பம் விழையான் வினைவிழைவான்
(தன்னலமான) இன்பத்தை விரும்பாமல் செயலில் முனைப்பாக இருப்பவனே

தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண்
தன் சுற்றத்தாரின் துன்பம் நீக்கி அவர்களுக்குத் தூண் போல இருப்பான்

"தூண்" என்று இங்கே உருவகச் சுவை இருப்பதையும் காண்கிறோம். கட்டடம் (குறிப்பாகக் கூரை) நிற்பதற்குத் தூண் வேண்டும். குடும்பம் / சுற்றம் தழைக்க ஆள்வினை உள்ளவன் வேண்டும்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 26 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 26 of 40 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum