Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 36 of 40 Previous  1 ... 19 ... 35, 36, 37, 38, 39, 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 36 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jan 18, 2017 7:23 pm

#837
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை 
பெருஞ்செல்வம் உற்றக் கடை

ஏதிலார் - முன்னமே பலமுறை கண்ட சொல் தான். (இணைப்பு இல்லாதவர்கள் / அந்நியர்கள் / பகைவர்கள்)

அப்படிப்பட்ட வேற்று ஆட்கள் இன்புற அதே நேரத்தில் தமது ஆட்கள் (வீட்டார் / உறவினர் / வேண்டியவர்) துன்புற வழிவகுப்பது பேதையின் செல்வம் Sad

நேரடியான, எளிய பொருள்.

பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை
பேதையிடம் பெருஞ்செல்வம் சேரும் பொழுது 

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர்
அந்நியர் (மற்றும் பகைவர்) அதனால் பயன் பெறுவர் ; ஆனால், தம்முடையோர் பசியில் உழல்வர் 

இங்கே "ஆர"  என்பதற்குப் பொருள் "நிறைவடைய" என்பதாகும். (பசியாறுதல் என்ற பொருளில் அல்ல, அதாவது, "ஆற" அல்ல).

ஏதிலார் என்பதற்குப் பாலியல் தொழிலாளிகள் என்ற பொருளும் அகராதியில் இருப்பதைக்காணலாம். பல நேரங்களிலும், தம் வாழ்க்கைத்துணையை வறுமையில் ஆழ்த்தி விட்டு வீணான வழிகளில் (சாராயம் போன்ற இன்ன பிற நெறி கேட்ட செயல்களில்) செல்வத்தைச் செலவழிக்கும் பேதையர் நாட்டில் நிறையப்பேர் உண்டு. 

காப்பியங்களிலும் உண்டு என்பது தெரிந்ததே - கோவலன் என்ற பெயர் நினைவுக்கு வரலாம்.

தம்முடையோர் பசி தீர்க்காமல் செல்வத்தை வீணடிக்கும் பேதையாக நாம் ஒரு நாளும் ஆகாதிருப்போம்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 36 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jan 18, 2017 10:33 pm

#838
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் 
கையொன்று உடைமை பெறின்

"மையல் ஒருவன் களித்து" என்பதன் பொருள் என்ன? (மிச்சம் எல்லாம் எளிதில் புரிந்து விடுகிறது).

இதற்கு உரையாசிரியர்கள் சொல்வது : "ஏற்கனவே பித்துப்பிடித்தவன் கள்ளும் குடித்து மயங்குதல்".   நினைத்துப்பார்க்கவே வேடிக்கையாக இருக்கிறது.

சொற்களின் தனிப்பட்ட பொருள் தெரிந்து கொள்ளத்தேடினேன்.

மையல் = காதல் மயக்கம் / பித்து (பைத்தியம்) / பணம் போன்றவற்றால் வரும் செருக்கு / யானையின் மதம் 

ஆக, இங்கே பொருத்தமானது பித்துப்பிடித்த நிலையில் உள்ளவன் / மனநோயாளி 
களித்தல் என்பதற்குள்ள பல பொருட்களில் "கள்ளைக்குடித்து வெறி கொள்ளுதல்" என்பதும் உள்ளது. ஐயமின்றி அதுவே இங்கு மிகப்பொருத்தம். (பொதுவாக நமக்குத்தெரிந்த 'இன்பமடைதல் / சிரித்து விளையாடுதல்" எங்கே பொருந்தாது).

பேதைதன் கையொன்று உடைமை பெறின்
பேதையின் கையில் ஒரு உடைமை (மதிப்புள்ள பொருள் / இன்றியமையாத செயல் போன்றவை) கிடைப்பது

மையல் ஒருவன் களித்தற்றால்
(மனநலம் குன்றிய) பித்தன் ஒருவன் கள்ளும் குடித்து மயங்கிய நிலை போன்றதாகும் 

'குரங்கு கையில் பூமாலை' என்ற பழமொழியும் நினைவுக்கு வரலாம். 

பேதையிடம் விலை கூடிய உடைமையை அல்லது செயலை ஒப்படைப்பது அதற்குச்சமமே!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 36 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jan 19, 2017 8:09 pm

#839
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் 
பீழை தருவதொன்றில்

அட, என்ன இது - திடீரென்று பேதையார் நட்பு பெரிது / இனிது என்றெல்லாம் சொல்கிறார் என்று நாம் அதிர்ச்சி அடையலாம் Smile

அதற்குப்பெயர் தான் "வஞ்சப்புகழ்ச்சி" Smile 
(அதாவது, புகழ்வது போலப்பழித்தல் - தமிழருக்குப் பொதுவே கைவந்த கலை. நான் பார்த்த வரை, கேரளீயருக்கும் இது மிகப்பிடித்த ஒன்றே)

பொதுவாக நட்பு என்பது ஆழமானது, உள்ளத்தின் உணர்ச்சிகளில் பதிந்தது. ஆதலால், பிரிவு கடுந்துன்பத்தையும் கண்ணீரையும் தரும்.

அதாவது, நல்ல நட்பு. அதை இழக்க விரும்ப மாட்டோம் என்பதால். அப்படிப்பட்ட நண்பர் குறைந்த காலத்துக்கு அருகில் இல்லையென்றாலும் தவித்துப்போவோம். இங்கோ "பிரிவின் கண் ஒரு துன்பமும் இல்லை" என்கிறார். 

அதனால் தான் அப்படிப்பட்ட நட்பு ரொம்ப இனிது / பெரிது என்றெல்லாம் புகழ்ச்சி. Laughing

உண்மையில், "இந்த நட்பு கொண்டு ஒரு நன்மையும் இல்லாததால் பிரிவு இனிது" என்று பொருள் கொள்ள வேண்டும். (நட்பு இனிது என்று சொல்வது வஞ்சப்புகழ்ச்சி).

பேதையார் கேண்மை பெரிதினிது 
பேதையரோடுள்ள நட்பு பெரிதும் இனிதுமானது! (ஏன் தெரியுமா?)

பிரிவின்கண் பீழை தருவதொன்றில்
பிரியும் பொழுது ஒரு துன்பமும் தராததால் தான்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 36 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jan 20, 2017 5:49 pm

#840
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் 
குழாஅத்துப் பேதை புகல்

கழுவு என்று தமிழில் சொல்வதைக் "கழுகு" என்று மலையாளத்தில் சொல்கிறார்கள். 
(கைகழுவல் = கைகழுகல்)

எதிர்மறையில் வரும்போது அந்தக்கடைசி எழுத்து தேவையில்லை என்ற ஒரு கொள்கை இருக்கிறது (ஈறு கேட்ட எதிர்மறை வினையெச்சம்) - அதன் சற்றே மாறிய வடிவம் இந்தக்குறளில். அந்தக்கூட்டத்தில் அளபெடையும் சேர்த்து - வியர்க்கிறது.

கழுவாத என்பதை "கழாஅ" என்று சொல்கிறார். (கழாஅக்கால் = கழுவாத கால்) Smile

அதற்கு எதுகை "குழாஅ" (குழாம் = கூட்டம் / அவை / குழு).

பள்ளி என்ற சொல்லுக்கு நடைமுறையில் பல பொருட்கள் இருப்பதை அறிவோம் - இந்த இடத்தில் படுக்கை (பள்ளியறை = படுக்கை அறை / பள்ளியெழுச்சி = உறங்கி எழுதல்)  

சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்
சான்றோரின் அவையில் பேதை புகுதல் 

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால்
(அழுக்காக / கழிவுகளை மிதித்து விட்டு வந்து) கழுவாத காலைப் படுக்கை மீது வைப்பதற்கு ஒப்பானது!

படுக்கை என்பது தூய நிலையில் இருக்க வேண்டும் என்பது மரபு. (படுக்கையை மணத்துணையுடன் மட்டுமே பகிர்வது இன்னொரு வகையான தூய்மை).

எங்கோ தெருவில் மனிதக்கழிவை மிதித்து விட்டு அந்தக்காலைக்கழுவாமல் அப்படிப்பட்ட தூய பள்ளியில் மிதிப்பது எவ்வளவு அருவருப்பானது!

அந்த அளவுக்கு அருவருப்புத்தான் பேதை சான்றோரின் அவைக்குள் நுழையும் போதும் வரும்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 36 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jan 20, 2017 11:28 pm

#841
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையாவையா துலகு

(பொருட்பால், நட்பியல், புல்லறிவாண்மை)

பேதைமை பற்றி இப்போது தானே படித்தோம்? அதற்கும் "புல்லறிவாண்மை (அதாவது அறிவின்மை)" என்பதற்கும் என்னய்யா வேறுபாடு?

இப்படிக்கேட்கத்தோன்றுகிறது.

என்னென்னவெல்லாம் "அறிவின்மை" என்று பார்க்கலாம். அதன் பின்னர் ஒரு வேளை அதுவும் பேதைமையும் தம்மில் உள்ள வேறுபாடு புலன்பட வழியுண்டு Smile

முதல் குறள் பொதுவாகச் சொல்லுகிறது - இல்லாமைகளிலேயே மிகவும் கேடானது அறிவு இல்லாமை என்று. (அல்லாமல், அறிவின்மை என்பதை வரையறுக்க முயலவில்லை).

அறிவின்மை இன்மையுள் இன்மை
இல்லாமைகளிலேயே மிகவும் கீழானது அறிவு இல்லாமை

பிறிதின்மை இன்மையாவையாதுலகு
பிற இல்லாமைகளை உலகம் ஒரு குறையாகக் கருதாது

பொருள் இல்லை, உடல் நலமில்லை, உரிமையில்லை என்று எவ்வளவோ கொடுமையான இல்லைகள் உலகில் உண்டு. ஆனால், அவற்றையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. அறிவு இல்லையோ, தீர்ந்தோம்.

இது தான் இந்தக்குறள் சொல்ல வருவது. உண்மை தான். அறிவில்லாவிடில் உயிர் இருந்தும் பலனில்லை - அசைவும் உணர்வும் அற்ற நிலை எனலாம்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 36 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jan 23, 2017 5:49 pm

#842
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் 
இல்லை பெறுவான் தவம்

"தவம் இருந்து பெற்ற பிள்ளை" என்று சொல்வதை அவ்வப்போது கேட்டிருக்கிறோம். பிள்ளை பெறுவது பொதுவாக உலகெங்கும் ஒவ்வொரு மணித்துளிக்கும் (பலமுறை) நடக்கும் ஒன்று. என்றாலும். ஒரு சில பிறப்புகள் மட்டும் இப்படி வியந்து சொல்லப்படுவதற்கான காரணம் அவை அவ்வளவு அரிது என்பதால் Smile

அப்படியாக, "தவம் கிடந்து" என்பது அவ்வளவு அரிதான, நடைமுறையில் எளிதில் காண இயலாத ஒன்றுக்கு மட்டுமே சொல்லப்படுவது. அதை இங்கே வள்ளுவர் பயன்படுத்துகிறார் - அறிவற்றவன் மனமுவந்து கொடை வழங்குவதை விளக்க Laughing

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல்
அறிவில்லாதவன் மனமுவந்து (கொடையாக) ஒரு பொருளைக்கொடுப்பது 

பிறிதியாதும்  இல்லை
வேறொன்றும் இல்லை

பெறுவான் தவம்
அதைப்பெற்றுக்கொள்பவன் செய்த தவத்தின் பலனே!

முனிவர்கள் காட்டில் தவம் இருப்பதை மனக்கண்ணில் கொண்டு வந்து பார்க்கலாம். அதுவே மிக அரிது (நடைமுறையில்). அதிலும் அவர்களுக்கு உண்மையில் "தவப்பலன் / வரம்" ஏதாவது கிடைத்திருக்கிறதா என்று நடைமுறையில் எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள்? Laughing 

அவ்வளவு அரிது ஒருவனுக்கு அறிவில்லாதவனிடம் இருந்து கிடைக்கும் "மனமுவந்த" நன்கொடை!  
(வேறு வழியில்லாமல் நடிப்புக்குக் கொடுக்கும் செயல்கள் இந்தக்கணக்கில் வராது! இப்படியும் கொள்ளலாம் : அப்படியே மனமுவந்து கொடுத்தாலும், அதற்கான மதிப்பை அறிவில்லாதவனுக்குக் கொடுக்கக்கூடாது. பெறுபவரின் நல்வினைக்கே / தவத்துக்கே தர வேண்டும்)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 36 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jan 24, 2017 12:00 am

#843
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை 
செறுவார்க்கும் செய்தல் அரிது

"என் எதிரிக்கும் கூட இப்படிப்பட்ட துன்பம் வரக்கூடாது" என்று சில நேரங்களில் நல்மனம் படைத்தோர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.  இதன் இன்னொரு புறம் என்னவென்றால், பொதுவாக ஒருவர் எதிரிக்குத் துன்பம் வரவேண்டும் என்றே நினைப்பார் என்பது.

சொல்லப்போனால், எதிரிக்குத் துன்பம் தர முயல்வது நாள்தோறும் நடப்பது.

இங்கு நாம் படிப்பது அதற்குத் தேவையே இல்லாத ஒரு நிலை குறித்து Smile

அதாவது, அறிவில்லாதவனுக்கு எதிரி துன்பமே தரவேண்டியதில்லை. தனக்குத்தானே அதைவிடக் கொடுமையான குழி அவனே தோண்டிக்கொள்வான் என்கிறார் Smile

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
அறிவில்லாதவர்கள் தமக்குத்தாமே வருத்திக்கொள்ளும் துன்பம் 

செறுவார்க்கும் செய்தல் அரிது
(அவர்களது) பகைவர்களால் கூடச் செய்ய முடியாத அளவுக்குக்கொடியது !

உங்களுக்கு யாராவது எதிரி இருந்தால், அவனுக்கு அறிவு இருக்கிறதா என்று பாருங்கள். 

இல்லை என்றால், அவன் வழிக்கே விட்டு விடுங்கள் - தானே துன்பம் வருத்தி ஒழிவான். நீங்கள் ஒன்றும் மெனக்கெட வேண்டியதில்லை Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 36 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jan 24, 2017 12:24 am

#844
வெண்மை எனப்படுவதியாதெனின் ஒண்மை 
உடையம்யாம் என்னும் செருக்கு

'அறிவிருக்கா?'

நம்மில் பலரும் ஒரு காணொளியில் கண்ட இந்தக்கேள்வி  நினைவுக்கு வருகிறதா?
(2015 சென்னை வெள்ளப்பேரிடர் நேரத்தில் வேண்டாத கேள்வி கேட்ட ஒரு சிறுமை படைத்தவனை இசை விற்பன்னர் இளையராசா அடிக்காமல் வெறுமென கேட்ட கேள்வி தான் அது)

கொஞ்சமும் ஆராயாமல் அவன் உடனே கொடுத்த மறுமொழி - "இருக்கு".

இனி இந்தக்குறளில் "வெண்மை" (அறிவின்மை / புல்லறிவு) என்பதற்கு வள்ளுவர் கொடுக்கும் விளக்கத்தைப் படியுங்கள் :

வெண்மை எனப்படுவதியாதெனின்
அறிவு இல்லாமை என்பது என்னவென்றால்
(வெண்மை - வெள்ளந்தி / விவரம் இல்லாமை / உள்ளிருப்பு இல்லா வெறுமை)

ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு
"யாம் அறிவுடையோம்" என்று தனக்குத்தானே மெச்சிக்கொள்ளும் செருக்கு 

அவன் சொன்ன விடைக்கு மறுகேள்வி இசை விற்பன்னர் கேட்டார்:

'இருக்குன்னு எந்த அறிவ வச்சு சொல்ற?' Laughing 

இப்போது புரிகிறது, அவனுக்கு இருந்தது "புல்லறிவு"  Laughing அதை வைத்துத்தான் அவன் சொன்னான். 

மட்டுமல்ல, அவனுக்கு நிறையப்பேர் வலையில் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு வந்தார்கள் - அவர்களுக்கும் உள்ளது புல்லறிவே - நல்லறிவு அல்ல!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 36 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jan 24, 2017 5:52 pm

#845
கல்லாத மேற்கொண்டொழுகல் கசடற 
வல்லதூஉம் ஐயம் தரும்

"புரியாததைப் புரிஞ்சதுன்னு சொன்னால் புரிஞ்சதும் புரியாமப்போகும், புரிஞ்சுதா? " என்று ஒரு நண்பர் அவ்வப்போது சொல்வார் Smile 
(இதன் மலையாள வடிவம் இன்னும் கேட்க வேடிக்கையாய் இருக்கும் - "மனசில் ஆகாதத மனசில் ஆயி-ன்னு பறஞ்சா மனசில் ஆயதும் மனசில் ஆகாதே போம், மனசில் ஆயோ?")

கிட்டத்தட்ட அதே கருத்தில் உள்ள அழகான குறள் Smile

தெரியாதவற்றைத் தெரிந்தது போலக்காட்டிக் கொள்வதற்கு எதிரான எச்சரிக்கை! 

"எனக்குத்தெரியாது" என்று சொல்வதற்கு நேர்மையும் அடக்கமும் வேண்டும். புல்லறிவுப் பேர்வழிகளுக்கு அவை கிடையாது. எல்லாம் தெரிந்தது போன்று இறுமாப்புடன் திரிவர்.

விளைவு? உண்மையிலேயே அவருக்கு நன்கு தெரிந்தவற்றையும் மற்றவர்கள் ஒத்துக்கொள்ள ஐயம் காட்டுவார்கள். (இவனுக்கு உண்மையிலேயே தெரியுமா இல்லை கதை விடறானா?)

கல்லாத மேற்கொண்டொழுகல்
அறியாதவற்றை மேற்கொண்டு நடப்பது 
(படிக்காதவற்றைச் செய்ய விழைதல், பொய் சொல்லி வேலை தேடுதல்)

கசடற வல்லதூஉம் ஐயம் தரும்
பிழையின்றித் தெரிந்தவை குறித்தும் ஐயம் உண்டாக்கும்

போலித்தனம், நடிப்பு, பொய் இவையெல்லாம் புல்லறிவுடன் தொடர்புடையவை. 

நேர்மையும் அறிவுடைமையும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 36 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jan 25, 2017 4:59 pm

#846
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் 
குற்றம் மறையா வழி

நாம் அடிக்கடி கேட்டிருக்கும் ஒரு பழமொழி இந்தக்குறளின் கருத்துக்கு ஒத்தது :

ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம் 
உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும் 

(வெளியே அழகு செய்யப்பட்டு உள்ளே அழுக்காக இருக்கும் நிலை - வெளியில் நல்லவர் போலக்காட்டிக்கொண்டு உள்ளே கேட்டிருத்தல்)

புல்லறிவு என்பதும் அப்படியே - வெளியில் அறிவுள்ளவர் போலத்தோற்றம் - உள்ளே அறிவின்மை.

தம்வயின் குற்றம் மறையா வழி
தம்மிடம் உள்ள குற்றத்தை நீக்க வழி காணாமல் 
(உள்ளே அறிவுத்தூய்மை அடையாமல்)

அற்றம் மறைத்தலோ புல்லறிவு
உடலை மட்டும் மறைக்க முயல்வது தான் புல்லறிவு 
(அற்றம் = உடையால் மறைக்க வேண்டிய உடல் பகுதிகள்)

இதன் பொருள் எல்லாவற்றையும் அவிழ்த்துப்போட்டு நடக்க வேண்டும் என்பதல்ல. அவற்றை மறைப்பது தேவையே. (உடுக்கை இழந்தவன் கை...)

என்றாலும், அதிலும் கூடுதல் தேவை உள்ளே இருக்கும் குற்றங்கள் நீக்கி வாழ்தல்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 36 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jan 25, 2017 10:16 pm

#847
அருமறை சோரும் அறிவிலான் செய்யும் 
பெருமிறை தானே தனக்கு

"சோரும்" என்ற சொல்லுக்கு மட்டும் பொருள் தெளிவாகப் புரிந்து கொண்டால், இது எளிமையான குறளாகி விடும்.

ஆனால், உரையாசிரியர்கள் வெவ்வேறு பொருள் சொல்லிக்குழப்புகிறார்கள். 
(மணக்குடவர் : சோரவிடுதல் = பிறர்க்குச் சொல்லுதல் 
 பரிமேலழகர் :  'சோரும்' என இடத்து நிகழ் பொருளின் தொழில், இடத்தின் மேல் நின்றது. Laughing  அந்தச்சொல்லே தேவலாம் என்று தோன்ற வைக்கிறார்)
 
நமக்கு எளிதில் தெரிந்தது சோர்வு (களைப்பு, மன அழுத்தம்). நேரடியாக அது பொருந்தாது. "அருமறை சோரும்" என்றால் "அரிய நீதி நூல்களால் களைப்படையும்" என்பது அவ்வளவு சரியாக வரவில்லை. என்றாலும். அதோடு சேர்ந்த பல பொருட்கள் அகராதிகள் சொல்லுகின்றன.  அவற்றுள் மிகப்பொருத்தமாக எனக்குப்படுவது "தவற விடுதல்". அதையே எடுத்துக்கொள்வோம் Smile

அருமறை சோரும் அறிவிலான்
அரிய மறை நூல்களின் நெறிகளை(க் கற்காமல்) தவற விடும் அறிவில்லாதவன்

செய்யும் பெருமிறை தானே தனக்கு
(அதனால்) தனக்குத்தானே பெருந்தீங்கு செய்கிறான்

நெறிநூல்கள் கற்பது, அவற்றில் உள்ளவற்றைத் தவற விடாமல் (நிறைய இருந்தாலும் தளர்ந்து விடாமல்) மனதில் தக்க வைத்துக்கொள்வது - இவை எல்லாம் அறிவுள்ளோர் செயல்.  

புல்லறிவாளிகள் அதற்கெல்லாம் நேரம் செலுத்தி உழைக்காமல் "எனக்கு எல்லாம் தெரியும்" என்ற நிலையில் இருப்பார்கள். அந்நிலையில் துன்பம் வருவது தவிர்க்க முடியாதது Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 36 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jan 26, 2017 6:19 pm

#848
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் 
போஒம் அளவுமோர் நோய்

மூன்று வித மாந்தர் குறித்துப் பெரியோர் பேசுவதைக்கேட்டிருக்கிறேன்.

1. தானே உணர்ந்து (அல்லது பட்டறிவில் கண்டு) திருத்திக்கொண்டு செயல்படுபவர்கள் 

2. தான் அறியாவிடினும் மற்றவர்கள் சுட்டும்போது (அல்லது திட்டும்போது) புரிந்துகொண்டு மாற்றம் செய்பவர்கள் 

3. தனக்கும் தெரியாமல், மற்றவர்கள் சொன்னாலும் கேட்காத மூடர்கள் 

இதில் வரும் மூன்றாம் கூட்டம் குறித்தே புல்லறிவு என்று இந்த அதிகாரத்தில் இது வரை படித்து வருகிறோம். இந்தக்குறளில் "அவர்கள் சமுதாயத்துக்கு நோய் (நிலத்துக்குச்சுமை என்பது போல)", சாகும் வரை தொல்லை" என்கிறார்.

தான்தேறான் ஏவவும் செய்கலான்
தானே உணர்ந்து தெளிய மாட்டான், மற்றவர்கள் ஏவினாலும் செய்ய மாட்டான்

அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய்
அப்படிப்பட்டவன் உயிர் போகுமளவும் (சமுதாயத்துக்கு) ஒரு நோய் .

மு.க. மட்டும் மற்ற உரையாசிரியர்களில் இருந்து சற்றே மாறுபட்டு, "தானாக அறியாத, மற்றவர் சொல்லியும் கேட்காத தன்மை ஒருவனுக்கு வாழ்நாள் முழுவதும் நோயாக இருக்கும்" என்பது போன்ற கருத்தைச் சொல்கிறார். 

அதாவது, நோய் அந்த ஆளுக்கே !  சாகும் வரை அவனைத் துன்புறுத்தி ஒழிக்கும் என்கிறார்.  

அதுவும் சரி தான் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 36 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jan 27, 2017 8:50 pm

#849
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்டவாறு


கீழ்க்கண்ட கருத்தை வெவ்வேறு வடிவங்களில் நாம் கேட்டிருக்கிறோம்:

முட்டாளோடு அவன் அளவுக்கு இறங்கிச்சென்று வாதிடாதே
(காண்போருக்கு நீயும் முட்டாளாகத் தோற்றமளிக்க நேரிடும்).

அதைச் சொல்லும் குறள்.

இங்கே "காணாதான்" = அறிவில்லாதவன் / முட்டாள் / புல்லறிவுப்பேர்வழி.

கொஞ்சம் சொற்சிலம்பம் உண்டு (சுற்றி வளைப்பதால் குழம்பவும் கூடும்). Smile

காணாதான் தான்கண்டவாறு கண்டானாம்
அறிவில்லாதவன் தான் அறிந்த அளவில் தான் எல்லாமே (அல்லது, தானே அறிவாளி) என்று கருதுவான்

காணாதான் காட்டுவான் தான்காணான்
(அப்படிப்பட்ட) அறிவற்றவனுக்கு விளக்க முயல்பவன் தானும் அறிவற்றவனாய்த் தோன்ற நேரிடும்!

"காட்டுவான்" என்பவன் அவனை விடவும் அறிவில் மேம்பட்டவன், அறிவாளி.

இருந்தாலும், முட்டாளிடம் சென்று வாதிட்டு விளக்க முயல்வதால், தானும் அவன் அளவுக்கு இழிந்த நிலைக்குச் செல்ல நேரிடுகிறது.

ஆதலால், ஒரு பொருளைக்குறித்து அறியாமல் முட்டாள்தனமாக வாதிடுவோரிடம் கூடுதல் உரையாடல் தவிர்ப்பது அறிந்தவர்களுக்கு நல்லது.

அதற்காக அவர்களிடம் ஒன்றுமே பேசக்கூடாது என்றல்ல (சொல்லாமல் அவன் எப்படித் தெரிந்து கொள்ளுவான்?). முயலுவதில் பெரிய தவறில்லை.

என்றாலும், ஓரளவுக்கு மேல் செல்லுகையில், வீம்புப்பிடிவாதம் செய்வோரிடம் உரையாடுவதை அறிவுடையோர் தவிர்க்க வேண்டும். இல்லாவிடில் நாமும் மூடர் கூட்டத்தில் சேர்ந்து விடுவோம் என்று பொருள்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 36 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Sat Jan 28, 2017 12:22 am

#850
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து 
அலகையா வைக்கப் படும்

அலகை என்ற சொல்லை முதன்முதலாகத் திருக்குறளில் இங்கே பார்க்கிறோம்.

ரோமன் கத்தோலிக்கர் பயன்படுத்தும் தமிழ் விவிலியத்தில் இந்தச்சொல் கண்டிருக்கிறேன் (பிசாசு / சாத்தான் போன்ற சொற்கள் மற்ற மொழிபெயர்ப்புகளில் இதே ஆளைக்குறிக்கும்). வலையில் இந்தச்சொல்லை அலசினால், கண்ணன் குறித்த சில செய்யுள்களில் "அலகையின் மார்பகத்தை உறிஞ்சியதாக" (அவ்வழியில் அவளைக்கொன்றதாக) ஒரு குறிப்பும் காண முடிகிறது.

இந்தக்குறளுக்கான உரையில், மு.க. உட்பட எல்லோருமே "பேய்" என்று பொழிப்புரை சொல்வதைக்காண முடிகிறது. 

ஆக மொத்தம், பொதுவாக எல்லோருக்கும் எதிரான / வெறுக்கத்தக்க ஒரு ஆள் தான் "அலகை".

புல்லறிவாளனுக்கு இங்கே அலகை உவமை. (இதை விடவும் கீழ்த்தரமாகத் திட்ட இயலாது).

1+1 +1 = 3 என்பது கணக்கு. (சரி சரி, 10 அடிப்படையிலான எண் கணிதம் Smile ).

1+1+1 = 1 என்று மீண்டும் மீண்டும் ஒருவன் வீம்பு பிடித்தால், அவனை "அலகை" என்றே சொல்ல வேண்டியதிருக்கும். 

அதாவது, இந்தக்குறள் அப்படிச்சொல்லுகிறது.

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான்
உலகத்தார் எல்லோரும் "உண்டு" என்பதை "இல்லை" என்பவன் 
(தெளிவிக்கப்பட்ட உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பவன்)

வையத்து அலகையா வைக்கப்படும்
உலகத்தாரால் அலகை (பேய்) என்றே கருதப்படுவான்.

உலகத்தார் எல்லோரும் தவறி ஒருவன் மட்டும் சரியாக இருந்த சூழ்நிலைகளும் உண்டு. அது இந்தக்குறளுக்கு  - அதாவது புல்லறிவு என்பதைத்திட்டும் சூழலுக்கு - சரியாகப்பொருந்தது Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 36 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jan 30, 2017 9:39 pm

#851
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் 
பண்பின்மை பாரிக்கும் நோய்
(பொருட்பால், நட்பியல், இகல் அதிகாரம்)

இகல் என்றும் பகல் என்றும் இரு சொற்கள். ஒன்றுக்கொன்று நெருங்கியவை என்று இந்த அதிகாரத்துக்குள் நுழைந்த உடனேயே புரிய வைக்கிறார்.

இகல் என்பதற்குப் "பகை" என்று நேரடியாக அகராதி பொருள் சொல்கிறது. இகல்லுதல் என்பதற்கு மாறுபடுதல், போட்டி போடுதல் போன்ற பொருட்கள் இருப்பதால், பெயர்ச்சொல் பகை, போர் போன்ற பொருட்களோடு வருவது புரிந்து கொள்ளத்தக்கதே. இன்னும் கொஞ்சம் ஆழமாகப்பார்த்தால், இகல் = பகைமை / பகையுணர்வு என்றும் சொல்லலாம்.

ஆனால், பகல் என்பதற்கு நமக்கு நன்கு தெரிந்த பொருள் இதனோடு சேர்ந்ததல்ல. (பகல் நேரம், பகலவன் - இப்படியெல்லாம் நாளின் ஒரு பகுதியோடு சேர்த்தே நம் மனதில் வருகிறது.)

பகல் = பகுத்தல் / பிரித்தல் / வேறுபடுத்துதல். அந்தப்பொருளிலேயே இந்த அதிகாரத்தில் அது பகையோடு தொடர்பு உள்ளதாக வருகிறது.

எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய்
எல்லா உயிர்களிடத்தும் பிரிவினை எனப்படும் பண்பற்ற தன்மையை வளர்க்கும் நோயை

இகலென்ப
இகல் (பகையுணர்வு / மாறுபாடு) என்பார்கள்

பிரிவினை (பகல் / பகுத்தல் / பிரித்தல் / வேறுபடுத்துதல்) எதனால் வருகிறது? ஒவ்வொருவர் உள்ளத்தில் கொண்டிருக்கும் மாறுபாடு / பகையுணர்வினால் தானே?

அந்த நோயை உண்டாக்குவது சீழ்பிடித்த / நட்பற்ற மனித உள்ளங்கள். இகல் பிடித்தவர்.

"இது என் நாடு / வீடு / இடம் -  இங்கே உள்ளே வராதே" என்று சொல்ல ஒருவனை எது தூண்டுகிறது? இகல்! அதன் விளைவு? மற்றவனும் அதையே திருப்பிச்சொல்ல, மக்கள் நடுவே பிரிவினை Sad

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 36 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jan 30, 2017 10:14 pm

#852
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி 
இன்னாசெய்யாமை தலை

"இன்னா செய்தாருக்கு நன்னயம் செய்து விடல்" என்பதோடு உடன்படும் ஒரு பண்பை இங்கே வலியுறுத்துகிறார்.

அதாவது, வேறொருவர் நமக்கும் அவருக்கும் உள்ள ஏதோ ஒரு வேறுபாட்டினால் (நிறம் / மொழி / நாடு / மதநம்பிக்கை / இனம் / சாதி இன்ன பிற) நம்மோடு வெறுப்பைக் காட்டினாலும், நாம் அவரோடு பகை கொண்டு தீமை செய்யலாகாது.

அப்படி ஒரு மேலான அறிவுரை சொல்லும் அழகான குறள். 

பகல்கருதிப் பற்றா செயினும்
(இன்னொருவர் நம்மோடு) வேறுபாட்டினை எண்ணி வெறுப்பானவற்றைச் செய்தாலும்

இகல்கருதி இன்னாசெய்யாமை தலை
(அப்படிப்பட்டவரோடு) பகையுணர்வு கொண்டு தீமை செய்யாதிருப்பது சிறந்ததாகும் 

"இந்தி படிக்காவிட்டால் நீ நாட்டுக்கு எதிரி" என்ற ஒரு வெறுப்பு அவ்வப்போது காட்டப்படுவது, குறிப்பாகத் தமிழர் மீது உமிழப்படுவது, நாம் அறிந்ததே. 

மொழி வேறுபாட்டின் அடிப்படையில் இலங்கையில் நடந்த போர் மற்றும் பேரழிவு நம் வாழ்நாளில் கண்ட பெருந்துயரங்களுள் ஒன்று. உலகெங்கிலும் இது போன்ற "வேற்றுமையில் அடிப்படையிலான வெறுப்பு" நிறைய உள்ளது.

ஆனால், "வெறுப்புக்கு வெறுப்பு / பகை" என்பது நல்ல பண்பல்ல. 

வெறுப்பை அன்பு கொண்டு வெல்வோம்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 36 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jan 31, 2017 6:57 pm

#853
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் 
தாவில் விளக்கம் தரும்

எவ்வம் என்பதற்குச் சொல்லப்படும் பல பொருட்களில் ஒன்று "ஒன்றானுந்தீராமை".

எவ்வ நோய் = தீரவே தீராமல் நீடிக்கும் நோய். அதாவது, மருந்துகள் கொண்டு கட்டுப்படுத்தலாமே ஒழிய நீக்க முடியாது, அவ்விதமான பல நோய்கள் நாம் அன்றாடம் காண்கிறோம். மூச்சுக்குழாய் நோய், நீரிழிவு நோய் என்று சிலவற்றைச் சொல்லலாம். 

இகல் என்பதும் அத்தகைய கொடுமையான நோய். என்றாலும், இது மனதில் உள்ளது என்பதால் நீக்க இயலும் என்கிறது இந்தக்குறள். அல்லது, முழுமையாகக் கட்டுப்படுத்த இயலும். 

அவ்வாறு செய்வோரே புகழ் அடைவர் என்கிறார் வள்ளுவர்.

இகலென்னும் எவ்வநோய் நீக்கின்
பகையுணர்வு என்னும் துன்பமான நோயை நீக்கி விட்டால்

தவலில்லாத்தாவில் விளக்கம் தரும்
குறையாததும் கேடற்றதுமான புகழை அடைவோம் 
(தவல் = குறைவு, தாவு = கேடு, விளக்கம் = புகழ்)

மாறுபாடான எண்ணங்கள் உள்ளே நிறைந்திருக்கையில் புகழ் தரும் செயல்கள் ஒருவனால் செய்ய இயலாது. (அதாவது, உண்மையிலேயே நீடித்த புகழ் தரும் எண்ணங்கள் - கொஞ்ச நாளைக்கு மின்னும் செயல்கள் கொடியவரும் செய்வார்கள் என்பது தெரிந்ததே).

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 36 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Feb 01, 2017 8:58 pm

#854
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் 
துன்பத்துள் துன்பங் கெடின்

பகையுணர்வு மனதில் இருந்தால் நிம்மதி இருக்கவே இருக்காது. இது யாராலும் மறுக்க முடியாத உண்மை! எவ்வளவு பொருட்செல்வம், மக்கட்செல்வம் எல்லாம் இருந்தாலும் இது உறக்கத்தை அழிக்கும் கொடிய உணர்வு!

அதை நேரடியாகச் சொல்லும் அழகான, எளிய குறள்!

இகலென்னும் துன்பத்துள் துன்பங்கெடின்
இகல் (பகை உணர்வு) என்னும் துன்பங்களிலேயே கொடிய துன்பத்தை நீக்கினால்

இன்பத்துள் இன்பம் பயக்கும்
இன்பங்களிலேயே சிறந்த இன்பத்தை அடைவோம்!

இன்பம் என்பது மனதின் ஒரு நிலை. உடல் மட்டுமே சார்ந்ததல்ல. (எடுத்துக்காட்டாக, ஒரே இசை ஒருவருக்கு வெவ்வேறு நேரங்களில் இன்பமும் துன்பமும் தர இயலும் என்பதை உணர்ந்தவர்கள் அறிவார்கள்).

அப்படியாக, இன்பத்தில் இன்பம் என்பது உள்ளத்தின் உச்ச மகிழ்ச்சி நிலை எனக்கொள்ளலாம். பலருக்கும் அது சில நொடிப்பொழுதுக்கோ அல்லது சிறிது நேரத்துக்கோ மட்டுமானதாக இருக்கிறது.

நீண்ட, நிலையான இன்ப நிலை வருவது தொல்லைகளில் இருந்து நிலைத்து நிற்கும் விடுதலை, குழப்பமில்லா அமைதி நிலை என்பனவற்றையும் நீடித்த உறவுகள் / ஒரு போதும் கைவிடாத நட்புகள் என்பனவற்றையும் சார்ந்திருக்கின்றது. சிலருக்கு இறைவனோடு உள்ள நெருங்கிய உறவாகவும் இந்த "இன்பத்துள் இன்பம்" கணக்கில் வருகிறது.

எப்படி இருப்பினும், பகைவரும் / அவரோடு உள்ள வெறுப்புணர்வும் உள்ள நிலையில் இப்படிப்பட்ட நிம்மதியான, அமைதியான, நிலையான மகிழ்ச்சி கிடைக்கவே கிடைக்காது. 

அவை துறந்தால், இகல் நீக்கினால், இன்பமோ இன்பம் என்று வள்ளுவர் சொல்லுவது மிகச்சரி!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 36 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Feb 03, 2017 8:32 pm

#855
இகலெதிர் சாய்ந்தொழுகவல்லாரை யாரே 
மிகலூக்கும் தன்மையவர்

இகல் / மிகல் என்று தொடை (எதுகை / ஒலியிசைவு) விளையாட்டு Smile 

மிகல் = மிகுந்து விடல் / வெல்லுதல் 

பகையுணர்வுக்கு எதிராகத் தம்மைக் கட்டுப்படுத்த வல்லவரை வெல்ல நினைப்பது யார்க்கும் இயலாது என்கிறார்.

அதாவது, நம் வெற்றிக்கு வழி, உள்ளிருந்து பொங்கும் பகை உணர்வை அடக்குதல்!

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை
(உள்ளே எழும்) பகையுணர்வினை அடக்கி (அதாவது, அவ்வுணர்வுக்கு எதிராகச்சாய்ந்து) நடக்க வல்லவர்களை 

மிகலூக்கும் தன்மையவர் யாரே
"வென்று விடலாம்" என்று ஊக்கம் கொள்ளும் தன்மை யாருக்கு இயலும்?

'இல்லை" என்று பொருள் வரும் இப்படியான கேள்விகள் திருக்குறளிலும் தமிழ் மொழியின் பேச்சு வழக்கிலும் நாம் எப்போதும் பார்ப்பது தானே? (எ-டு : இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?)

மொத்தத்தில் பொருள் எளிது : மனதில் பகையுணர்வு கொண்டு நடப்பவன் தோல்வியை நோக்கிச்செல்கிறான்.

அப்படிப்பட்ட உணர்வை அடக்கி, வேறு வழியில் (அமைதி / அன்பு) நடப்பவன் வெற்றிப்பாதையில். அவனை வெல்ல முடியும் என்ற ஊக்கம் கூட யாருக்கும் வராது!
(பின் எப்படி எதிர்த்துப்போர் செய்வார்கள்?)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 36 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Feb 06, 2017 9:33 pm

#856
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை 
தவலும் கெடலும் நணித்து

நணித்து என்ற சொல் எனக்குப்புதியது. நண்ணுதல் / நண்பன் என்பனவோடு தொடர்புடையதாக இருக்கலாம். அல்லது நணிதல் என்பதோடு சேர்ந்ததாகவும் இருக்கலாம்.

எப்படி இருந்தாலும், அது "நெருக்கம் / அண்மை / விரைவு" போன்ற பொருள்களில் இங்கு வருகிறது என்று காண முடிகிறது.

மற்றபடி இந்தக்குறளின் பொருள் புரிவது எளிதே.

"பகை கொண்டு வெல்வோம்" என்பது முட்டாள்தனம், அழிவுக்கு வழி வகுக்கும் என்கிறார் வள்ளுவர்.

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
"பகையுணர்வு கொண்டு வெற்றி பெறுதல் இனிமையானது" என்பவனது வாழ்க்கை

தவலும் கெடலும் நணித்து
குறைவடைதலும் அழிதலும் அண்மையில் / விரைவில் நடக்கும்

ஏன் இப்படி எச்சரிக்கிறார்?

பகையுணர்வு மனதில் குடி கொண்டால் ஆழ்ந்து அலசும் திறனை அது குறைக்கும். ஒரு வேளை சில வெற்றிகளும் கிடைத்தால் அகந்தையம் கூட வந்து இன்னும் கொஞ்சம் அறிவை மழுங்கடிக்கும்.

நீண்ட காலத்துக்குப் பயன் தராத இந்த எதிர்மறையுணர்வின் அழிவுக்கான விளைவுகள் சிறிது நாட்களுக்குள்ளேயே தெரிந்து விடும்.

அதற்கும் மேலாக, அழிவு எண்ணம் உள்ளத்தில் இருந்தால் உடல் நலம் குன்றிப்போகும் என்பது இன்னொரு உண்மை. 

பல வழிகளிலும் தமது அழிவை விரைவுபடுத்த வேண்டுமானால், பகையுணர்வு மிகக்கொள்வீர்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 36 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Feb 14, 2017 6:22 pm

#857
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் 
இன்னா அறிவினவர்

மேவல் என்ற சொல்லுக்குள்ள இரண்டு பொருட்களையும் கலக்கித்தரும் குறள் Smile 
(கலக்குதல் / பொருத்துதல் என்பது அதில் ஒன்று ; விருப்பம் என்பது மற்றது)

மற்றபடி, இது வரை இந்த அதிகாரத்தில் படித்தவற்றின் சுருக்கமே இக்குறள், புதிய கருத்து ஒன்றும் காணப்படவில்லை.

இகல்மேவல் இன்னா அறிவினவர்
பகையுணர்வை விரும்பும் அறிவு கெட்டவர்கள் 
(தீய அறிவு = கெட்ட அறிவு, இங்கே மேவல் = விருப்பம்)

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார்
வெற்றியோடு சேரும் / பொருந்தும் மெய்ப்பொருளை அறிய மாட்டார்கள்
(இங்கே மேவல் = பொருத்தம்)

அப்படியாகச் சொல் விளையாட்டு இந்தக்குறளில். 

இன்னொன்று - மெய்ப்பொருள் என்ற சொல். உண்மையான பொருள் என்பது நேரடியான புரிதல். ஆனால், எது இந்த "வெற்றியோடு பொருந்தும் உண்மைப்பொருள்"?

அது பகையுணர்வுக்கு எதிரானது என்பது தெளிவு. (ஏனென்றால், இகல் உள்ளோர் அதை அறியார்கள்). வள்ளுவர் நேரடியாகச்சொல்லா விட்டாலும், நாம் புரிந்து கொள்வது அன்பு என்னும் உயர்ந்த பண்பு தான் மெய்ப்பொருள். 

அன்பினால் வெற்றி அடைய முடியும். அதைக் காணாத குருடர் மட்டுமே பகையுணர்வு உள்ளத்தில் பொங்கி நடக்கிறார்கள்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 36 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Feb 14, 2017 11:25 pm

#858
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை 
மிகலூக்கின் ஊக்குமாம் கேடு

மீண்டும் மீண்டும் "இகல்-மிகல்" எதுகையா என்று சொல்லத்தோன்றினாலும், இந்தக்குறளில் ஒரு சின்ன வேறுபாடு கொடுத்து வள்ளுவர் விளையாடுகிறார்.

அதாவது, இங்கே "மிகல்" என்பது வெற்றி என்ற பொருளில் அல்ல Smile வெறுமென, "மிகுதி ஆதல்" (ரொம்பக்கூடுதல்) என்ற பொருளில்! 

நமக்கு இப்படி வேடிக்கை காட்டும் புலவரின் நுணுக்கம் - அழகு!

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம்
பகையுணர்வுக்கு எதிராகச் சாய்தல் (அதை விட்டு விடுதல்) ஒருவருக்கு ஆக்கம் / நன்மை தரும்

அதனை மிகலூக்கின் ஊக்குமாம் கேடு
அது மிகுதியாவதை ஊக்குவிப்பருக்கோ கேடு தான் நிறையும் 

பகையுணர்வு என்பதில் "பழிவாங்கும் உணர்வு" என்பதும் அடங்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. அவ்வாறான உணர்வோடு வாழுவோர் தங்கள் வாழ்வை அழித்துக்கொள்ளும் நிலையை நாம் பலமுறை கண்டிருக்கிறோம். (அல்லது வரலாற்றில் படித்திருக்கிறோம்.).

திரைப்படங்களில் பழிவாங்குதல் பெருமையாகக் காட்டப்பட்டாலும், உண்மை வாழ்வில் பெரும் கேட்டை மட்டுமே அது விளைவிக்கிறது என்பதை அவ்வழியில் சென்றோரின் கொடுமையான முடிவுகள் நமக்குக்காட்டுகின்றன.  
(நம்பவில்லை என்றால் அன்றாட செய்திகளை நீங்கள் படிப்பதில்லை என்றே பொருள்).

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 36 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Feb 15, 2017 8:43 pm

#859
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை 
மிகல்காணும் கேடு தரற்கு

இந்தக்குறளுக்கு இரண்டு விதமான பொருட்களை உரையாசிரியர்கள் தருவதைப்பார்க்க முடிகிறது.

முதல் பகுதியின் பொருள் கிட்டத்தட்ட ஒரே போல் எல்லோரும் சொல்கிறார்கள். ஆக்கம் வரும்போது ஒருவன் இகல் காணான் - வளம் வரும் காலத்தில், பகையுணர்வு இருக்கிறதா என்று கண்டுகொள்ள மாட்டான். இதையே, பகையுணர்வு காணாத இடத்தில் தான் ஆக்கம் வரும் என்று இன்னொரு விதத்தில் முன்னமேயே படித்திருக்கிறோம். இங்கே, பகையுணர்வு இருந்தாலும் அது வளம் வருகையில் பெரிதுபடுத்தப்படாது என்றும் கொள்ளலாம்.

இரண்டாவது பகுதியில் தான் "மிகல்" என்ற சொல்லின் இரு பொருட்கள் அடைப்படையில் கேடு காரணமா அல்லது விளைவா என்று இரு பொருட்களாக விளக்கப்படுகிறது!

அதாவது, மிகல் = வெற்றி என்று எடுத்துக்கொண்டால், கேடு காரணம். அதையே, "மிகல் = மிகுதி ஆதல்" என்று எடுத்துக்கொண்டால், கேடு விளைவு Smile

ஆக்கம் வருங்கால் இகல்காணான்
வளம் வரும்போது ஒருவன் பகையுணர்வைப் பொருட்படுத்த மாட்டான். 
(அல்லது, பகையுணர்வு காணாத இடத்தில் வளம் வரும்)

கேடு தரற்கு அதனை மிகல்காணும்
கேடு தரும்போது தான் அதை வெல்ல வேண்டும் என்று கண்டு கொள்வான் 
(அல்லது, பகையுணர்வு மிகும்போது கேடு தரும்) 

எப்படிப்பொருள் கொண்டாலும், அடிப்படைக்கருத்து மாறுவதில்லை.

அதாவது,

1. வளம் பெற வேண்டுமானால், பகையுணர்வு கூடாது.

2. ஒரு வேளை , பகையுணர்வு இருக்கும் போதே வளம் வந்து கொண்டிருந்தாலும், அப்படிப்பட்ட நல்ல நிலைமை வெகு காலம் நீடிக்காது என்று அறிந்து அவ்வுணர்வை ஒழிக்க முயல வேண்டும்.

3. இல்லையென்றால், அத்தகைய மாறுபாடான உணர்வு மிகுந்து, இறுதியில் அழிவையே தரும்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 36 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Feb 16, 2017 12:52 am

#860
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் 
நன்னயம் என்னும் செருக்கு

நகல் = நகுதல் (அப்படியென்றால் சிரித்தல் மட்டுமல்ல, நட்புக்கொள்ளுதல் என்றும் பொருளாம்)

அப்படியாக, இகலுக்கு எதிர்ச்சொல் நகல் Smile மற்றபடி, நேரடியான பொருள் - பகையுணர்வு துன்பம் தரும், நட்புணர்வு நன்மை தரும்.

இகலானாம் இன்னாத எல்லாம்
பகையுணர்வினால் எல்லாத்துன்பமும் உருவாகும் 

நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு
நட்புணர்வினாலோ நல்ல நன்மைகள் கிட்டும் ; பெருமித நிலை உண்டாகும் 

மற்றவர்களோடு பழகுவதில் நட்பு காண்பிப்பவர்களுக்கு வாழ்வில் வெற்றி. முறைத்துக்கொண்டு பகையுணர்வுடன் நடந்தால் பல வழிகளிலும் துன்பமும் அழிவுமே உண்டாகிறது.

நடைமுறை உண்மை!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 36 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Feb 16, 2017 10:15 pm

#861
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா 
மெலியார்மேல் மேக பகை
(பொருட்பால், நட்பியல், பகைமாட்சி அதிகாரம்)

ஒரு முழு அதிகாரமும் "இகல்" (பகையுணர்வு) என்ற தன்மைக்கு எதிராகப் படித்து விட்டு, உடனே இதென்ன "பகை மாட்சி" என்று தோன்ற வழியுண்டு Smile
('படிக்கிறது ராமாயணம் - இடிக்கிறது பெருமாள் கோவில்" என்று சொல்லும் பழமொழி போல).

பகையுணர்வு தீயது தான். என்றாலும், நடைமுறையில் நமக்குப் பகைவர் இருக்கத்தான் செய்வார்கள். (தீமை என்ற ஒன்று உலகில் உள்ள வரை நமக்குப் பகை இருக்கத்தான் வேண்டும். இல்லாவிடில் நாம் தீமையையும் விரும்புவதாக ஆகிவிடும். தீமையை வெறுப்பது / பகைப்பது இன்று மிகத்தேவை).

அவ்விதத்தில், நாம் எதைப்பகைப்பது மாட்சி, எத்தகையோரை வெறுக்க / பகைக்கப் பழகிக்கொள்ள  வேண்டும் என்று வள்ளுவர் இங்கே பாடம் எடுக்கிறார்!

அவர் கணக்குப்படி எவையெல்லாம் "பகை மாட்சி" என்று பார்க்கலாம். 

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக
வலிமையானவர்களுக்கு மாறான நிலையை எதிர்த்து நில்லுங்கள் 
(இரண்டு எதிர்ச்சொற்கள் - மாறு / ஏற்றல், அப்படியாக எதிருக்கு எதிர் என்று குழப்புகிறார். மொத்தத்தில், "வலிமையானோரைப் பகைக்க வேண்டாம்" என்கிறார். எல்லா உரையாசிரியர்களும் அவ்வாறே சொல்ல, மு.க. மட்டும், "வலியவரை எதிர்த்துப் பகைப்பதே மாட்சி" என்கிறார்)

மெலியார்மேல் மேக பகை ஓம்பா
(அதே நேரத்தில்) மெலியவர்கள் மேலே மேகம் போலப்பகை காட்ட வேண்டாம்

இந்த இரண்டாவது பகுதிக்கும் மு.க. மட்டும் தான் மேற்கண்ட பொருளைச்சொல்கிறார். மற்ற உரையாசிரியர்கள் எல்லோரும், மெலியவரைப் பகையுங்கள் என்கிறார்கள். அதை ஒத்துக்கொள்ள முடியாது.

நம்மை விட மெலியவனைப் பகைத்து ஒதுக்குவதில் என்ன பெரிய மாட்சிமை இருக்கிறது? அது வெறும் அகந்தை / திமிர் அல்லவா என்று தோன்றுகிறது. ஆனால், பரிமேலழகர் அப்படி எழுதப்போக மற்ற எல்லோரும் அதை ஒத்துக்கொள்கிறார்கள்.

நாம் அதை ஒத்துக்கொள்ளாவிடில், அடுத்த கேள்வி இப்படி வருகிறது - வலியவரையும் பகைக்காதே - மெலியவரையும் பகைக்காதே என்றால் பின்னர் யாரைத்தான் பகைப்பது - எப்படி மாட்சிமை காட்டுவது?

என் புரிதல் - வலிமையின் அடிப்படையில் அல்ல பகை வர வேண்டியது. 

மாறாக, நேர்மையின் அடிப்படையில் தான் வர வேண்டும்! அது தானே மாட்சி?

இவன் வலியவனா /  மெலியவனா என்று பார்த்துப்பகை காட்டுவது முட்டாள்களின் வேலை!

(இதே குறளுக்கு ஒரு வேடிக்கையான விளக்கம் இங்கே பாருங்கள்:
 அவனிவன் பக்கங்கள்  
இவர் சொல்வது : "சம அளவில்" வலிமை உள்ளோரிடம் தான் பகை கொள்ள வேண்டும்  Laughing )

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 36 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 36 of 40 Previous  1 ... 19 ... 35, 36, 37, 38, 39, 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum