Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 37 of 40 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 37 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Feb 20, 2017 8:44 pm

#862
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் 
என்பரியும் ஏதிலான் துப்பு

பகைமாட்சிக்கு என்னவெல்லாம் வேண்டும் என்பதை நேர்மறையாகச் சொல்லாமல், "இவையெல்லாம் இல்லாவிடில் தோற்பாய்" என்று எதிர்மறையில் சொல்லும் குறள்

அன்பிலன்
(நண்பர்களிடம், உறவுகளிடம், தன்னோடு உள்ளவர்களிடம், ) அன்பு இல்லாதவன்

ஆன்ற துணையிலன்
சிறப்பான (வலிமையாய் அமைந்த) துணை இல்லாதவன்

தான்துவ்வான்
( மற்றும்) தானும் நல்ல திறன் / வலிமை அற்றவன் 

ஏதிலான் துப்பு என்பரியும்
பகைவரின் திறமையை எப்படி அறுப்பான்?
(பரித்தல் = அறுத்தல் ; இங்கே, நீக்குதல் / அழித்தல் / மேற்கொள்தல்)

இதையே தலைகீழாகப் படித்தால், இப்படிப்புரிந்து கொள்ளலாம் :

பகையை மேற்கொள்ளத்தக்க சிறப்பு நமக்கு இருக்க வேண்டுமென்றால், என்னென்ன வேண்டும்?

1. முதலாவது நம் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். 

2. நட்பு / உறவு என்று திறனுள்ளோரை நம்மோடு துணையாகச் சேர்ப்போம் 

3. நம்மோடு உள்ளவர்களிடம் அன்புடன் நடந்து கொள்வோம் - அப்போது தான் ஒற்றுமை / ஒத்துழைப்பு ஓங்கும் 

இவையெல்லாம் செய்தால், பகையை எதிர்த்து நிற்கும் வலிமை அடைவோம்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 37 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Feb 20, 2017 9:05 pm

#863
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் 
தஞ்சம் எளியன் பகைக்கு

மீண்டும் ஒரு எதிர்மறைக்குறள் - என்னவெல்லாம் இருந்தால் பகைவனுக்கு அடங்கி ஒடுங்க நேரிடும் என்று எச்சரிக்கும் குறள்.

பகை என்பதே ஓர் எதிர்மறை உணர்வு என்பதால் இந்த அதிகாரத்தில் எதிர்மறை தூக்கலாக வருகிறது என்று நினைக்கிறேன். 

(இப்படியெல்லாம் தீயோர் உள்ளதால் நாமும் எதிர்ப்பு உணர்வுடன் வாழ்த்து தொலைக்க வேண்டியிருக்கிறதே என்ற வெறுப்புணர்வினால் வந்ததாக இருக்கலாம். அரசியலில் உள்ளோர் குறித்துப் பொதுவாக நாட்டு மக்களின் இன்றைய உணர்வு இதோடு ஒப்பிடத்தக்கது)

அஞ்சும்
அச்சம் மிகுந்தவன் (தொடை நடுங்கி)

அறியான்
அறிவில்லாதவன் (கற்றும் கேட்டும் உணர்ந்தும் தெளியாத முட்டாள்)

அமைவிலன்
(யாரோடும்) ஒத்துப்போகாதவன் (சிடு மூஞ்சி)

ஈகலான்
கொடுக்கும் பண்பு இல்லாதவன்  (எச்சில் கையால் காக்காய் ஓட்ட மாட்டான்)

தஞ்சம் எளியன் பகைக்கு
(இப்படியெல்லாம் உள்ளவன்) எளிதில் பகைவரிடம் அடங்கி ஒடுங்குவான்  / பகைவரிடம் தஞ்சம் அடைவான் 

இங்கேயும் பட்டியலைத் தலைகீழாகப் படித்து பகைமாட்சிக்கு என்னென்ன தேவை எனப்புரிந்து கொள்ளலாம். 
(சென்ற குறள் போன்றே நேர்மறைப் படுத்துவது படிப்பவரின் வேலை Smile )

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 37 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Feb 21, 2017 7:59 pm

#864
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் 
யாங்கணும் யார்க்கும் எளிது

எதிர்மறைப்பட்டியல் தொடர்கிறது. 

என்னவெல்லாம் இருந்தால் எளிதில் பகையிடம் தோற்றுப்போவான் என்று வள்ளுவர் அறிவுறுத்துகிறார்.

வெகுளி நீங்கான்
சினம் குறையாதவன் (அதைக்கட்டுப்படுத்த  அறியாதவன்)

நிறையிலன்
மனதை அடக்க முடியாதவன் (நிறை = நிறுத்து என்ற பொருளில் இங்கே)

எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது
(அப்படிப்பட்டவனை) எப்போது வேண்டுமானாலும், எங்கே வைத்தும், யாரும் எளிதில் (தோற்கடிக்க) முடியும்

சினத்தையும் மனதையும் அடக்கும், நிறுத்தும் வலிமை இல்லாதவன் எளிதில் தோற்றுப்போவான். இந்தக்குறள் சொல்லுகிறபடி, யாரும் / எங்கும் / எப்போதும் இப்படிப்பட்டவனை எளிதில் வெல்லுவார்கள் என்பதால், இவனது பகை மாட்சி = 0 Smile

மனநிறைவு இல்லாதவர்களுக்கு ஆசையை அடக்க இயலாது. தவறான ஆசை / விருப்பம் எல்லாவிதமான துன்பத்துக்கும் வழிநடத்தும் என்பது வரலாற்றிலும் அன்றாட வாழ்விலும் காணும் உண்மை.

அப்படிப்பட்ட அடக்கமின்மையின் ஒரு விளைவு சினம். சினம் வரும்போதாவது புரிந்து கொண்டு அடக்கத்தின் தேவையை உணரவேண்டும்.

அப்போதும் கடிவாளம் போடவில்லை என்றால், பள்ளம் நோக்கிய பாய்ச்சல் தான். தோல்வி சட்டென வரும்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 37 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Feb 22, 2017 12:00 am

#865
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் 
பண்பிலன் பற்றார்க்கு இனிது

இன்னொரு "வேண்டாதவை" பட்டியல். அதாவது, நமக்கு. 

பகைவருக்கு "வேண்டியவை" என்று சொல்லி விளக்குகிறார். அதுவும், அவர்களுக்கு ரொம்ப இனிப்பானவையாம்.

பொருள் எளிது, நேரடியானது.

வழிநோக்கான்
சரியான வழியை / ஒழுக்கத்தைப் பின்பற்றாதவன்

வாய்ப்பன செய்யான்
தகுதியானவற்றை / பொருத்தமானவற்றைச் செய்யாதவன்
(வாய்ப்பன = பொருந்துபவை, "வந்து மாட்டியவை" என்று நினைக்கக்கூடாது)

பழிநோக்கான்
பழிக்கு அஞ்சாதவன் 
(நேர்மையற்றவன் - "நமக்கு ஏதாவது குற்றம் வந்து விடுமோ" என்றெல்லாம் கவலைப்படாத முட்டாள்)

பண்பிலன்
(நல்ல) பண்பற்றவன்

பற்றார்க்கு இனிது
(இப்படிப்பட்டவன்) பகைவர்க்கு இனிமையானவன் 
 (அதாவது, அவர்களால் எளிதில் வெல்லத்தக்கவன், தோத்தாங்குளி) 

நேர்மையான வழியில் சென்று பழிக்கு அஞ்சி வாழும் பண்பாளனை வெல்வது எளிதல்ல!

குறிப்பாக அவன் செயலிலும் வீரனாய் இருக்கும்போது!


Last edited by app_engine on Thu Apr 13, 2017 10:55 pm; edited 1 time in total

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 37 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Feb 22, 2017 9:37 pm

#866
காணாச்சினத்தான் கழிபெருங்காமத்தான் 
பேணாமை பேணப்படும்

பேணுதல் என்ற சொல்லுக்குள்ள விரும்புதல் என்ற பொருள் கொண்டு "விரும்பாததை விரும்பு"  என்று சிறிய விளையாட்டு. 

மற்றபடி, இதுவரை அதிகாரத்தில் நாம் காணும் அதே  எதிர்மறைப்போக்கில் தொடர்கிறார். பட்டியல் போடுதலும் தான், நீண்டு கொண்டே போகிறது Smile

காணாச்சினத்தான்
ஆராயாமல் சினம் அடைபவன் 
("கண்மண் தெரியாமல் கோபம் வந்துச்சு" என்று சொல்வார்களே, அப்படிப்பட்ட அடிப்படையில்லாமல் சினந்து கொதிப்போர்)


கழிபெருங்காமத்தான்
மிகப்பெரும் ஆசை உடையவன் 
(பேராசை / பெண்ணாசை இவற்றின் அளவுக்கு மீறிய தன்மை உடையவன்)

பேணாமை பேணப்படும்
(இப்படிப்பட்டவனின்) பகைமை மிகவும் விரும்பப்படும் 
(பேணாமை = விரும்பாமை, அதாவது பகைமை)

உண்மை என்ன என்று காணாமலேயே சினப்படுவது முட்டாள்களின் செயல். மற்றவர்கள் கோள் மூட்டுவதை நம்புவதாலும் இது நடக்கலாம். அப்படிப்பட்டோருக்கு நாள்தோறும் வலிமை குன்றும். 

பிறகென்ன ? பகைவருக்குக் கொண்டாட்டம் தானே? 

எளிதில் இரை கிடைத்தால் விரும்பாத விலங்கு எங்கே இருக்கிறது?

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 37 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Feb 24, 2017 6:17 pm

#867
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து 
மாணாத செய்வான் பகை

இந்தக்குறளை இரண்டு விதத்தில் பொருத்தலாம்.

ஒன்று, நாம் என்ன செய்யக்கூடாது என்பதற்கு!
(அதாவது, முந்தைய எல்லாக்குறள்களிலும் இந்த அதிகாரத்தில் படித்தது போல் - "நமது பகைமாட்சிக்கு என்ன கூடாது" என்ற அளவில்).

இன்னொன்று, எப்படிப்பட்டவரின் நட்பைத்தவிர்க்க வேண்டும் என்றும். அதாவது, இந்தக்குறளில் வருகின்ற ஆளை விட்டு ஏன் விலக வேண்டும். அவரை என் பகைக்க வேண்டும் என்றும் கற்கிறோம்.

அடுத்திருந்து மாணாத செய்வான் 
தன்னோடு கூட இருந்து கொண்டு மாண்பற்றது செய்பவனின் 

பகை கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற
பகையை, (பொருள்) கொடுத்தாவது பெற்றுக்கொள்ள வேண்டும் 

அடுத்துக்கெடுப்பவனின் நட்பு கூடாது, பகையே நல்லது என்பது நேரடியான கருத்து.  அப்படிப்பட்டவரின் பகை கொண்டிருப்பது "பகை மாட்சி".

நமக்குப் பொருத்தினால், நம்மோடு இருப்பவருக்கு உண்மையாக இருக்க வேண்டும். அவருக்கு மாண்பற்ற செய்யும் செயல்களில் ஈடுபடக்கூடாது. செய்தால், பகையை வலிந்து வரவழைக்கிறோம் என்று பொருள்.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 37 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Feb 27, 2017 11:01 pm

#868
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு 
இனனிலனாம் ஏமாப்புடைத்து

"எதிரிகளுக்குப் பாதுகாப்பு" (மாற்றார்க்கு ஏமாப்பு) என்று வள்ளுவர் ஏளனம் செய்யும் நிலை இந்தக்குறளில் Smile

ஒருவன் எப்படி இவ்விதமான நிலைக்குச்செல்ல இயலும்? குணம் இல்லாமல், குற்றம் பல செய்யும்போது!

எளிய, நேரடியான அறிவுரை. "மாற்றாருக்கு ஏமாப்பு" என்பது மட்டுமே கவித்துவ எழுத்து.

குணனிலனாய்
நல்ல பண்புகள் இல்லாதவனாய் 

குற்றம் பலவாயின்
குற்றங்கள் நிறைய உள்ளவனாக இருப்பவனுக்கு 

இனனிலனாம்
துணையாக யாரும் இருக்க மாட்டார்கள் 

மாற்றார்க்கு ஏமாப்புடைத்து
(இது) பகைவருக்கு நல்ல (பாதுகாப்பான) சூழலை உண்டாக்கி விடும்!

அதாவது, ஒரு கவலையும் இல்லாமல் பகைவன் வந்து இப்படிப்பட்டவனை அடிப்பான் / அழிப்பான்.

நமக்கு நல்ல துணை வேண்டுமா? நற்பண்புகளும் குற்றமற்ற நடத்தையும் அதை ஈன்று தரும்!

இல்லாத நிலையில், பகைவருக்குத்தான் நன்று!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 37 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Mar 01, 2017 8:29 pm

#869
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா 
அஞ்சும் பகைவர்ப் பெறின்

சேண் = தொலைவு (அண்மை X சேய்மை)

இகத்தல் = நீங்குதல், இகவா = நீங்க மாட்டாது 

இவை மட்டுமே நாம் அடிக்கடி காணாத சொற்கள். மற்றபடி பொருள் கொள்வது எளிது. 

அறிவிலா அஞ்சும் பகைவர்ப்பெறின்
அறிவு இல்லாத, அச்சம் நிறைந்த பகைவர்கள் இருந்தால்

செறுவார்க்குச் சேணிகவா இன்பம்
(அப்படிப்பட்டோரை) எதிர்ப்பவருக்கு இன்பம் தொலைவில் நீங்காது (எப்போதும் கூடவே இருக்கும்)!

அறிவுமில்லை துணிவுமில்லை - பின் எப்படிப்பகைவரை எதிர்க்க இயலும்? ஓடி ஒளிவதை விட்டால் வேறு வழியில்லை இப்படிப்பட்ட முட்டாள் கோழைகளுக்கு! அப்படிப்பட்டோர் தாம் நமது எதிரிகள் என்றால் நமக்கு வாழ்வில் ஏன் இன்பம் பொங்காது?

தலைகீழாகப் பார்த்தால், முட்டாள் கோழைகள் எப்போதும் துன்பத்தில் உழல்வர். 

அஞ்சி அஞ்சிச்சாகும் நிலையில் பகைவருக்குக் கீழடங்காது வேறு வழியில்லையே?

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 37 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Mar 03, 2017 11:12 pm

#870
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் 
ஒல்லானை ஒல்லா தொளி

இருவிதமான பொருட்கள் இந்தக்குறளுக்குச் சொல்லப்படுகின்றன.

முதலில் நேரடியானதைப்பார்ப்போம்.

கல்லான் வெகுளும் சிறுபொருள்
கல்லாதவனுக்கெதிராகச் சினமடையும் சிறிய பொருளை 
(அறிவு இல்லாதவனைப் பகைக்கும் எளிய செயலை)

எஞ்ஞான்றும் ஒல்லானை
ஒருபோதும் செய்ய இயலாதவனுக்கு

ஒல்லா தொளி
புகழ் சேராது 

அதாவது, திறனற்றவனைப் பகைக்கும் சின்ன வேலை செய்யாதவன் புகழ் அடைய மாட்டான்.

இவ்விதம் பொருள் காண்பதில் சின்னக்குழப்பம் இருக்கிறது. "படிப்பற்ற / அறிவற்ற ஒருவனைச் சினந்து பகைப்பதில் என்ன பகை மாட்சி வாழ்கிறது"?  Embarassed

இப்படிப்புரிந்து கொண்டால் குழப்பம் இல்லை :

அறிவு இல்லாத / திறமையற்ற ஒருவனையே பகைத்து வெல்லும் திறன் இல்லாதவனுக்கு எப்படிப்புகழ் வரும்? 

படித்த / திறனுள்ள / இன்னும் வலிமையாவர்களை அவன் எப்படி வெல்ல முடியும்?

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 37 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Mar 06, 2017 11:48 pm

#871
பகைஎன்னும் பண்பிலதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று

(பொருட்பால், நட்பியல், பகைத்திறந்தெரிதல் அதிகாரம்)

பகையின் திறனை அறிந்து கொள்ளுதல் - இப்படித்தான் இந்த அதிகாரத்தின் பொருள் இருக்குமென நினைக்கிறேன்.

முதல் குறளில் அவ்விதமான பொருள் காணப்படவில்லை. பொதுவான ஒரு அறிவுரை மட்டுமே இங்கு காண்கிறோம். அதாவது, பகை என்ற தன்மை பண்பற்றது, விளையாட்டுக்குக்கூட அது இருக்கக்கூடாது என்றெல்லாம் அன்பாகச் சொல்லுகிறது.

போகப்போக என்ன சொல்ல வருகிறார் என்று தெரிந்து கொள்ளலாம். இப்போதைக்கு முதல் குறளின்  நேரடிப்பொருள் :

பகை என்னும் பண்பிலதனை
"பகை" (வெறுப்பு / சண்டை உணர்வு) என்ற பண்பற்ற தன்மையை

ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று
ஒருவன் நகைப்புக்காகக் கூட (வேடிக்கைக்காக / விளையாட்டாக) விரும்பக்கூடாது

பல வழிகளில் உடைந்தும் பிரிந்தும் போயிருக்கும் இன்றைய உலகில் இது மிகக்கடினமான அறிவுரை என்பதில் ஐயமில்லை.

"விளையாட்டாகக்கூட வேண்டாம்"  என்று இங்கே சொல்கிறார். மாறாக, விளையாட்டில் கூட இன்று பகை நிறைந்து வழிவதை நாம் காண முடியும் Sad

அண்மையில், போரில் தந்தையை இழந்த ஒரு கல்லூரி மாணவி, "எதிரி நாடல்ல என் அப்பாவைக்கொன்றது, போர் தான்" (அதாவது, "பகை / வெறுப்பு இவை வளர்ந்திருப்பதால் தான் தேவையற்ற உயிர்ப்பலிகள் - அன்பையும் அமைதியையும் நாடுவோம்" என்ற அழகான கருத்து) சொன்னாள்.

அவளுக்கு நடந்தது என்ன? புகழ் பெற்ற கிரிக்கெட் விளையாட்டு வீரர் உட்படப்பலரும் எள்ளியது மட்டுமல்ல, "நாட்டுக்கு எதிரி" என்றும் இன்னபிற தகாத சொற்கள் கொண்டும் பொதுவெளியில் குத்தினர். "பாலியல் வன்முறை செய்வோம்" என்று குதறிய விலங்குகளும் உண்டு.

பகை - உயிரைக்கொல்லும். எதிரியின் உயிரை மட்டுமல்ல, நம் உயிரையும் தான் - தேவையின்றி!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 37 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Mar 07, 2017 5:47 pm

#872
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை


'பகையின் திறன் வில்லாக இருந்தாலும் குழப்பமில்லை - ஆனால் சொல்லாக இருந்தால் ஒதுங்கிப் போய் விடுங்கள்" என்று அறிவுறுத்தும் குறள்.

அதாவது, போர்க்கருவிகளை விடவும் வலியது நாக்கு / சொல் / எழுத்து என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்னமே சொன்ன செய்யுள் - இன்று வரை இது தான் உண்மை எனக்கண்டு வருகிறோம்.

வில்லேர் உழவர் பகைகொளினும்
வில்லைத் தம் ஏராகக் கொண்ட உழவரின் (போர் வீரர்களின்) பகை கொண்டாலும்

சொல்லேர் உழவர் பகை கொள்ளற்க
சொல்லால் ஏர் உழுவோரின் (சொல் வீரரின்) பகை கொள்ளாதீர்கள்!

"சொல்லேருழவர்களின் தலைவர்" என்று வள்ளுவரைச் சொல்லலாம் Smile எத்தனை சொற்சிலம்பங்கள் இதுவரை நாம் கண்டிருக்கிறோம்!

அப்படிப்பட்ட அறிஞர்களின் பகை நமக்கு நல்லதன்று! (சொல்லேருழவர் என்ற நிலை நன்கு ஆழ்ந்து கற்று அறிந்த வல்லுநர்களை இங்கே குறிப்பிடுகிறது. வெறுமென 'தம்பி-கம்பி-வெம்பி' என்றெல்லாம் பேசுவதை அல்ல Laughing )

ஏர் உழுதல் - அருமையான உவமை. உழவுத்தொழிலின் அடையாளம். நிலத்தைச் சரி செய்தால் விளைச்சல் கிட்டும். சொற்களால் மக்களது மனங்களை உழுவோர் மாபெரும் விளைவுகளை ஏற்படுத்துவர் - வில்லேந்தும் வீரர்களால் இயலாதவற்றையும் செய்து விடுவார்கள்.

அத்தகையோரைப் பகைத்தால் கேடு உறுதி!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 37 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Mar 07, 2017 7:49 pm

#873
ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள்பவன்


ஏம் / ஏமம் / ஏமுறுதல் / ஏமம் உறுதல் - இதற்கு இன்பம் என்றும் பித்து என்றும் பொருள் உண்டு.

அகராதி இங்கே "பித்து / பைத்தியம் / மனப்பிறழ்வு" என்று பொருள் சொல்லி இந்தக்குறளைச் சுட்டுகிறது.

ஆக, "ஏமுற்றவரினும் ஏழை" = மனநலம் இழந்தவனை விடவும் கீழான நிலையில் இருப்பவன்.

தமியன் = தனியன், தனிமையில் உள்ளவன், துணை / கூட்டு இல்லாதவன்.

இனி இதன் பொருள் கொள்வது எளிது - நேரடியான அறிவுரை.

தமியனாய்ப் பல்லார் பகைகொள்பவன்
தனி ஆளாக இருந்து பலரோடும் பகை கொள்பவன்
(மற்றவர்களோடு ஒத்துப்போகாத, சண்டை போடும் தன்மையுள்ளவன்)

ஏமுற்றவரினும் ஏழை
பித்துப்பிடித்தவனையும் விடக்கீழானவன்

இங்கே ஏழை என்பது குறைபாடு என்ற அளவில் - பொருளில்லா நிலை அல்ல.
(அறிவில்லா நிலை என்று சில உரைகள் கூறுகின்றன, மனநலம் இல்லாதவனை விடவும் அறிவு குன்றியவன் - சரி தான்)

ஆக மொத்தம், எல்லோரோடும் பகை கொண்டு தனியனாய் நிற்பது மனப்பிறழ்வு என்கிறார் வள்ளுவர். ஊரோடு ஒத்து வாழ் என்ற பழமொழிக்குச் சமமான குறள்.

எல்லா நேரத்திலும் இது சரியா என்பது ஆராயத்தக்கது.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 37 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Mar 09, 2017 7:39 pm

#874
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடையாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு


தகைமை என்பதைத் தகுதி / பெருமை / பெருந்தன்மை என்றெல்லாம் பொருள் கொள்ளலாம்.

பகைவரையும் நட்புக்கொள்ள வைக்கும் பண்பு இங்கே புகழப்படுகிறது - மனதுக்கு மிகவும் உவப்பான ஒன்று. (எல்லா நேரத்திலும் / சூழலிலும் இது இயலாது என்றாலும் அதற்கான முயற்சி எப்போதும் வேண்டியதே).

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடையாளன்
பகையினரையும் நட்பாக ஆக்கி நடக்கும் பண்புடையவன்
(அல்லது பகையையும் நட்போடு நடத்தும் பண்பாளன்)

தகைமைக்கண் தங்கிற்று உலகு
பெருமையில் / பெருந்தன்மையில் தான் உலகம் தங்கி நிற்கிறது!

நம்மில் பலருக்கும் தெரியும் - இவ்வுலகில் கொலைக்கருவிகளுக்குச் செலவிடப்படும் பொருள் வளத்தில் வெறும் மிகச்சிறிய பகுதி கொண்டு முழு மானிடக்குடும்பத்தில் பசி-பட்டினி இல்லாமல் செய்ய இயலும்.

ஆனால், பகையும் பேராசையும் அவ்வாறு செய்ய விடாமல் தடுத்து, பலருடைய துன்பத்தை நிலைத்திருக்க வைத்திருக்கின்றன Sad

என்றாலும், ஓரளவுக்கேனும் உலகில் அமைதியும் வாழ்வும் தொடர "பகையோடும் நட்பு" காட்டும் ஒரு தன்மையும் காரணம் தான்.

குறைந்தது, அணுகுண்டு இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இன்று வரை கொலைக்குப் பயன்படுத்தப்படவில்லை என்பது "உலகு தங்க" வழி செய்து கொண்டிருக்கும் "தகைமை" தானே?

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 37 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Mar 09, 2017 11:31 pm

#875
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று


அதிகாரத்தின் பெயருக்கேற்ற ஒரு குறள்.

தான் தனியாகவும், இரண்டு கூட்டம் பகைவரும் இருக்கும் நிலையில் அவற்றுள் ஒன்றை நட்பாக்கிக் கொள்ளச்சொல்கிறார்.

அப்படியாக, ஒரு துணை கிடைத்து விட்டால் மற்றும் ஒரு பகை குறைந்தால், மிச்சமிருக்கும் பகையை எதிர்ப்பது முன்பை விட எளிது.

தன்துணை இன்றால்
தனக்குத்துணை இல்லாத நிலையில்

பகையிரண்டால்
இரண்டு (வகையான) பகைவர் வரும் போது

தான்ஒருவன்
தனித்திருக்கும் ஒருவன்

இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று
அவற்றில் ஒன்றை (அதாவது அந்த இரண்டு பகைகளில் ஒன்றை) இனிய துணையாக்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டோடும் பகைக்காமல் ஒன்றை நட்பாக்கிக்கொள்ளச் சொல்கிறார். இதற்கு முந்தைய குறளில் எல்லாப்பகையையும் நட்பாக்கி ஒழுகினால் உலகமே அவனுக்குள் தங்கும் என்றார்.

அப்படிப்பட்ட நிலை இயலாத போது, குறைந்தது உள்ள பகைகளைக் குறைப்பது மற்றும் தோழமைகளைக் கூட்டுவது அறிவுள்ள செயல்.

அதாவது, நடைமுறை அறிவு.
(தேர்தல் கூட்டணிகள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை Embarassed )

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 37 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Mar 10, 2017 9:32 pm

#876
தேறினும் தேறாவிடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்


மிகவும் குழப்பமான குறள் Smile

ஒருவேளை "பகை திறன் தெரிதல்" எந்தச்சூழலில் பயனற்றது என்று சொல்ல வருகிறாரோ?

பொருள் பார்ப்போம்.

தேறினும் தேறாவிடினும்
(பகையின் திறன் குறித்து முன்பே) தெளிவடைந்திருந்தாலும் இல்லாவிட்டாலும்

அழிவின்கண்
நமக்கு அழிவு வரும்போது
(சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கும் நிலையில்)

தேறான் பகாஅன் விடல்
(அந்தப்பகைவனை) நெருங்குவதோ பிரிவதோ செய்யாமல் விட்டு விட வேண்டும்
இங்கே "தேறுதல்" என்பதற்கு "நெருங்குதல்" என்று பொருள் சொல்கிறது அகராதி.

சுருக்கமாகச்சொன்னால், "நம் அழிவின் நேரத்தில் அது பகைவனுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று சொல்ல வருகிறார் என நினைக்கிறேன்.

அந்நேரத்தில் அவனை நெருங்கினாலும் "ஏன் இப்போ வந்து ஒட்டிக்கிறான், அவனுக்கு என்னமோ சிக்கலோ" என்று எள்ளக்கூடும்.

கூடுதல் விலகி ஓட முயன்றாலும், "என்னவோ குழப்பம், அடிக்க நல்ல நேரம்" என்று புரிந்து கொண்டு அவனும் சேர்ந்து அடிக்க வரலாம்.

ஆகவே, அழிவு நேரத்தில் பகைவனோடு நெருங்கவோ பிரியவோ வேண்டாம் என்கிறார், (அவனது திறன் தெரிந்து வைத்திருப்பது இங்கே ஒன்றுமில்லை என்கிறார்).

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 37 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Mar 10, 2017 9:48 pm

#877
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து


என்ன ஒரு அழகான குறள்!

அதாவது, எனக்கு ரொம்பப்பிடித்த கருத்து Smile

சிலரைப்பார்க்கவே நமக்கு அச்சமாக இருக்கும். ("ஐயோ, இன்று என்ன சொல்லிப்புலம்புவாரோ" என்று).

நண்பர்கள் என்றாலும், அவ்வளவு நெருக்கம் இல்லாதவர்களிடமும், பகைவர்களிடமும் நம் துன்பநிலை / மெலிவு குறித்துச்சொல்வது உயர்ந்தவர்களின் பண்பல்ல.

என்றாலும், கடினமான சூழ்நிலையில் உதவியே கேட்காமல் அகந்தையுடன் இருந்து அழிவதை நான் மெச்சவில்லை. அதே நேரத்தில், யாரிடம் அதை வெளிப்படுத்தவேண்டும் என்பதில் தான் ஒருவரது உயர்வு / தாழ்வு நேரிடுகிறது.

நொந்தது அறியார்க்கு நோவற்க
தமக்கு வந்துள்ள துன்பத்தை அறியாதவர்களிடம் அதைச்சொல்லிப்புலம்ப வேண்டாம்

மென்மை பகைவர் அகத்து மேவற்க
தமக்கு இருக்கும் குறையை / மெலிவை / மென்மையை எதிரிகளிடம் காட்டிக்கொள்ளக்கூடாது

அதாவது, இது "பகை திறம் தெரிதல்" அல்ல - "நம் திறம் பகைவருக்குத் தெரியாமல் இருத்தல்" என்று புரிந்து கொள்ளலாம் Smile

இந்தக்குறளின் முதல் பகுதியை உரையாசிரியர்கள் "நண்பருக்கும்" பொருத்துகிறார்கள். அவ்வளவு நெருக்கம் இல்லாதவர்களுக்கு அது பொருந்தும். என்றாலும், நெருங்கிய நண்பர்களிடம் நமது நோவு பகிர்ந்து கொள்வதே அறிவுடைமை.

இல்லாவிடில் நட்பு எதற்காம்?

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 37 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Mar 13, 2017 6:35 pm

#878
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் 
பகைவர்கண் பட்ட செருக்கு

இவ்வளவு எளிமையாக இருக்கிறதே, ஏதாவது மறைபொருள் இருக்குமோ என்றெல்லாம் உன்னித்துப்பார்த்தேன். மற்றும் பல உரைகளையும் தேடினேன்.

நேரடியான, எளிய பொருள் தான். குறிப்பாக / உட்பொதிந்த ஒன்றுமில்லை. Embarassed

பகைவர்கண் பட்ட செருக்கு
பகைவருக்கு இருக்கும் பெருமை 

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
(நாம்) சரியான வழிவகைகளைத் தெரிந்துகொண்டு, வலிமைப்படுத்தி, நம்மைக்காத்துக்கொண்டால் காணாமல் போய் விடும் 

இது என்ன - சிறுபிள்ளைத்தனமான, அடிப்படையான கருத்தாக இருக்கிறதே - பெரிய சொற்சுவை / சிலம்பம் என்றும் ஒன்றுமில்லையே என்று தோன்றுகிறது.

சரி, இப்படியும் சில குறள்கள் இருக்கத்தான் செய்கின்றன Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 37 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Mar 13, 2017 6:49 pm

#879
இளைதாக முள்மரம் கொல்க களையுநர் 
கைகொல்லும் காழ்த்த இடத்து

அட, அட - என்ன அழகாக உவமை! 

சென்ற குறளின் சலிப்பை இங்கே பலமடங்கு சரிக்கட்டி விடுகிறார் புலவர் Smile

பகையை முளையிலேயே களைய வேண்டும் - இல்லையேல் நம்மை அழிக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கும் என்பதற்கு முள்மரம் மிகப்பொருத்தமான உவமை!

இளைதாக முள்மரம் கொல்க
முள் மரத்தை இளையதாக (சிறிய செடியாக) இருக்கும் போதே (வேரோடு பிடுங்கி) அழிக்க வேண்டும்

களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து
(இல்லையேல்) அது வைரம் ஏறி முற்றிய நிலையில் களைய முயல்பவரின் கையை அழிக்கும்!
(காழ்த்த = முற்றிய / முதிர்ந்த / வைரமேறிய)

புரியவில்லை என்றால் தமிழ்நாட்டில் சீமைக்கருவேல மரத்தை அழிக்க முயல்வோரிடம் கேட்டுப்பாருங்கள் - கதைகதையாகச் சொல்லுவார்கள் Smile

திறமில்லாமல் தொடக்கநிலையில் இருக்கும்போதே அடையாளம் கண்டு, பகையைக் களைய வேண்டும். (அழிப்பதோ / நட்பால் பகையை இல்லாமல் செய்வதோ அவரவர் உத்தி. எப்படி இருந்தாலும், வளர மட்டும் விடக்கூடாது.)

அல்லாவிடில், பிற்காலத்தில் பெரும் தலைவலி - நம்முடைய உயிரை (அல்லது வாழ்வாதாரத்தை) இல்லாமல் செய்யும் அளவுக்கு அந்தப்பகையின் திறன் வளரக்கூடும்.

கணக்கு வழக்கில்லாமல் வரலாற்று எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 37 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Mar 14, 2017 4:51 pm

#880
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் 
செம்மல் சிதைக்கலாதார்

அதிகாரத்தை அழகாக நிறைவு செய்யும் செய்யுள்.

இதில் வரும் "உயிர்ப்ப" என்பதற்குப் பல விளக்கங்கள் உரைகளில் காண முடிகிறது. எல்லாமே பொருத்தமாகத்தான் இருக்கின்றன.

பொருள் பார்ப்போம் 

செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார்
பகைவருடைய பெருமையைச் சிதைக்க இயலாதவர்கள் 
(செயிர்ப்பு - சினம் அடைதல், நம்மோடு சினப்பவர் பகைவர் என்ற பொருளில். அவர்களது படைத்திறனை அறிந்து அழிக்க முடியாதவர்கள்)

உயிர்ப்ப உளரல்லர் மன்ற
உயிரோடு இருப்பதாக தெளிவாகச் சொல்ல இயலாது 
(இப்போதே செத்த நிலையில் ஆகிவிட்டார்கள் ; மன்ற = தெளிவாக / உறுதியாக  )

"உயிர்ப்ப" என்பதற்கு மூச்சு விடுதல் என்ற பொருளும் உள்ளது. (உயிரும் மூச்சும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை தானே?)

அப்படியாக, இதற்குப்பொருத்தமான இன்னும் சில விளக்கங்கள் :

- மூச்சு விட்டாலும் (உயிரோடு) இருப்பதாகத் தெளிவில்லை 

- உறுதியாக மூச்சு விடக்கூட முடியாத நிலையில் இருப்பார்கள் 

-பகைவர் நம்மை மூச்சு விடும் நேரத்தில் அழித்து விடுவார்கள் 

மிக வேடிக்கையான விளக்கம் இது தான்:

-பகைவர் மூச்சு விட்டாலே இல்லாமல் போய் விடுவோம் 
(நான் மூச்சு விட்டாலே நீ செத்துருவ) Laughing 

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 37 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Mar 15, 2017 7:13 pm

#881
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் 
இன்னாவாம் இன்னா செயின்

(பொருட்பால், நட்பியல், உட்பகை அதிகாரம்)

உட்பகை - நம்மோடிருப்பவரே நமக்குப்பகைவர் ஆதல். 

எதிரிகளிடமிருந்து வரும் தீமையை விடவும் கொடிய தீமை இது. 

ஏன் என்பது வெளிப்படை Smile 

1. நாம் எதிர்பாராதது. நம்பி ஏமாறும் நிலை.
2. நம்முடைய உணர்ச்சிகள் (முன்பிருந்த நட்புணர்வின் ஆழம்) இவர்களை முழு வீச்சோடு தாக்காமல் தடை செய்யலாம்.
3. நம்முடைய உண்மை நிலை (குறைபாடுகள்) மிக நன்கு அறிந்தவர்கள் ஆதலால், பகைவரை விடவும் மிகுந்த வலிமையுடன் அடிக்கும் நிலையில் இருப்பார்கள். 

ஆக, இதைக்குறித்து அறிவுறுத்தும் இந்தப்பகுதி இன்றியமையாதது!

நிழல்நீரும் இன்னாத இன்னா
நிழலும் நீரும் (அல்லது நிழலில் உள்ள நீரும்) துன்பம் தந்தால் தீயதே

தமர்நீரும் இன்னா செயின் இன்னாவாம்
தம்மோடுள்ளவர் (நண்பர் / சுற்றம்) தன்மைகளும் துன்பம் செய்யுமாயின் தீமையானவையே!

பொதுவாக "நிழலின் அருமை வெயிலில் தெரியும்" என்பது உண்மை. அருமையான உவமையாக, நிழல் என்பது துன்பத்தின் / பகையின் வெம்மையில் இருந்து நம்மைக்காக்கும் சுற்றத்தோடு ஒப்பிடலாம். 

அதே போல் தான் நீரும் - உயிர் வாழத்தேவை, வெம்மையில் காப்பது. பகைக்கெதிரான நட்பின் காக்கும் தன்மைக்கு நல்ல உவமை.

என்றாலும், அறிவியல் மற்றும் மருத்துவம் நமக்குச் சொல்வது - கதிரும் நம் உடல்நலத்துக்கு நிழல் போலவே தேவை. துருவப்பகுதிகளில் வாழ்வோருக்குப் பனிக்காலத்தில் வரும் நோய்கள் பற்றி எண்ணுங்கள். அந்நேரங்களில் நிழல் நன்மை அல்ல. அதே போல், நச்சு அல்லது கிருமிகள் உள்ள நீரால் வரும் தீமைகள் தெரிந்ததே.

உட்பகை அப்படி நோய் தரும் நிழல் மற்றும் நீர். 

(நிழலில் உள்ள நீரில் கிருமிகள் பெருகும் / நச்சுத்தன்மை நிறையும் என்ற விளக்கமும் பொருத்தம் தான், ஆனால் வள்ளுவர் அதை வைத்து எழுதினாரா தெரியாது).

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 37 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Mar 15, 2017 9:12 pm

#882
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு


கேள் = உறவு (யாதும் ஊரே யாவரும் கேளிர்)

அப்படியாக, உறவு என்று வெளியில் சொல்லிக்கொண்டு உள்ளே பகை கொண்டிருப்போர் மிகவும் அஞ்சத்தக்கவர்கள்!

வெளிப்படையான பகைவரை வாளுக்கு உவமிக்கிறார், பொருத்தமாக! வீரன் வாளுக்கு அஞ்சுவதில்லை - அதைக்கண்டால் உடனே தனது வாளைச் சுழற்றத்தொடங்குவான்!

ஆனால், இளவயதிலேயே நஞ்சுக்காய்ச்சலில் மாண்ட அலெக்சாண்டர் போன்ற மாவீரனும் உடலுக்குள் இருக்கும் கிருமிக்கு அஞ்சித்தான் ஆக வேண்டும் Smile

வாள்போல பகைவரை அஞ்சற்க
வாள் போன்ற (வெளிப்படையான) பகைவருக்கு அஞ்ச வேண்டாம்

அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு
(ஆனால்) உறவினர் போன்ற தோற்றத்தில் உள்ள பகைவரின் தொடர்புக்குத்தான் அஞ்ச வேண்டும்

உறவு / நட்பு என்ற வடிவில் வந்த பகையால் மாண்டவர்கள் / அழிந்தவர்கள் வரலாற்றில் ஏராளம்.

ஆனால், அவர்களுக்கு "அஞ்சுக" என்ற இந்த அறிவுரையை எப்படி நடப்பில் ஆக்குவது?

சொல்லுதல் எளிய, செயல்அரியவாம் Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 37 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Mar 17, 2017 6:17 pm

#883
உட்பகை அஞ்சித் தற்காக்க உலைவிடத்து 
மட்பகையின் மாணத்தெறும்

தந்தையின் ஊர்ப் பெயர் கொசவபட்டி (குயவர் பட்டி) என்றாலும் இன்று தான் முதல் முறையாக "மட்பகை" என்ற கருவி பற்றிப்படிக்கிறேன். 
(சொல்ல வெட்கமாக இருக்கிறது என்றாலும் மட்பாண்டம் உருவாக்குவதை மிக நுணுக்கமாக நோக்கியதில்லை, மேலோட்டமாகப் பார்த்ததோடு சரி).

மண் இன்னும் பச்சையாக இருக்கையில் மட்கலத்தை அறுக்கும் கருவி. 

ஓசை இன்றித்தன் வேலையைச் செய்யும் Smile

அது தான் இங்கே உட்பகைக்கு எதுகை மற்றும் உவமை!

உட்பகை அஞ்சித் தற்காக்க
உட்பகைக்கு அஞ்சித் தன்னைக் காத்துக்கொள்க

உலைவிடத்து
(இல்லாவிட்டால்) நாம் தளர்ந்திருக்கும் நிலையில்

மட்பகையின் மாணத்தெறும்
(பச்சை மண்ணை எளிதில் அறுக்கும்) மண்பாண்டத்தை அறுக்கும் கருவி போல தவறாமல் அறுத்து அழிக்கும் 

மீண்டும் இங்கே உட்பகையின் வலிமை குறித்து மிகத்தெளிவாக இருக்கிறது. 

அது குயவரின் கையில் இருக்கும் அறுக்கும் கருவி, நாம் வெறும் பச்சை மண்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 37 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Mar 24, 2017 9:32 pm

#884
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா 
ஏதம் பலவும் தரும்


உட்பகை தோன்றினால் குற்றம் / துன்பம் பலதும் வரும் என்ற அடிப்படையான பொருளைச் சொல்லும் குறள்.

 "மனமாணா / இனமாணா" என்பது இதிலுள்ள சிறிய சுழற்சி. (மனதில் முதலில் குழப்பம், அதனால் உறவோடு ஒவ்வாமல் போய், அவ்வழியாகவே துன்பங்கள் வருமாம்).

மனமாணா உட்பகை தோன்றின்
மனதில் நல்ல நிலை இல்லாமல் உட்பகை தோன்றினால் 
(வேண்டியவர்களுக்கு எதிரான பகையுணர்வு நம் மனதில் வந்து, அதை நாம் திருத்தவில்லை என்றால்)

இனமாணா ஏதம் பலவும் தரும்
இனத்தோரோடு நல்ல நட்பு இல்லாமல் போய், பல குற்றங்கள் / துன்பங்களில் விளைவடையும்

மனதில் பகையுணர்வு தோன்றும் போதே அதைச் சரி செய்ய வேண்டும். 

குறிப்பாக, நம்மோடு சேர்ந்தவர்களது ஏதோ ஒன்று (உடல் மொழி / வாய்மொழி / கைமொழி இப்படி எதுவானாலும்) நம்மை உறுத்தினால், என்ன செய்யலாம்?

1. மறக்கத்தக்கது என்றால் உடனே மறந்து களைய வேண்டும் 

2. மறக்க இயலாது என்றாலும் மன்னிக்க முடியும் என்றால் மன்னித்து விட்டு அதன் பின் மனதின் கணக்கில் இருந்து நீக்கி வாழ வேண்டும். அதாவது, "மனம் மாண"  வேண்டும்.

மேல் சொன்ன ரெண்டும் இயலாத சூழல்கள் வரலாம். (நேர்மையற்ற விதத்தில் நண்பன் நடந்து கொண்டு அதனால் பெரிய பொருள் இழப்பு! வாழ்வுக்கான வழியே அடைக்கப்பட்ட நிலையில் ஒருவரை "மற / மன்னி" என்றெல்லாம் அறிவுறுத்துவது கொடுமை அல்லவா?)

அப்போது என்ன செய்ய?

"பகை வரட்டும், துன்பம் வரட்டும்" என்று மனதில் புகைந்து வாழலாமா? அது மூடத்தனம். நம் உடல்நலம் தான் கெடும்.

செய்யக்கூடிய நடைமுறை வழிகள் :

1. நேரடியாகச் சென்று தனிமையில் தவறை உணர்த்த முயல்வது. ஒத்துக்கொண்டு பிழை திருத்தப்பட்டால் இருவருக்கும் நன்று.

2. தனிமையில் சொல்லிக்கேட்கவில்லை என்றால், உண்மை தெரிந்த ஓரிரு நண்பர்கள் கூட இருக்க, இதைப்பேசித்தீர்ப்பது. பலரும் இவ்வழிக்கு ஒத்து வருவது நடைமுறை தான்.

3. மேற்சொன்ன இரண்டும் நடக்காத நிலையில், இனக்குழுவில் உள்ள பெரியோர் ("ஊர்ப் பெரியதனம்" போன்றோர்) வழியாக முயற்சி செய்யலாம்.

இவ்விதமான நடவடிக்கைகள் எல்லாமே பகையில்லாமல் வாழ, ஒற்றுமை விளங்க வேண்டும் என்ற மனநிலையில் செய்யப்படும் முயற்சிகள். 

எல்லாம் செய்தும் நேர் வழியில் ஒருவன் வரவில்லை / மாறவில்லை என்றால், பிறகென்ன, பகையும் வழக்குமன்றமும் தான் வழி! 

(மேற்சொன்ன நடவடிக்கைகள்  எல்லாம் எனது சொந்தக்கருத்துகள் அல்ல, அவற்றுக்குக்  "காப்பிரைட்" உரிமையாளர் இயேசு Smile )

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 37 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Mar 27, 2017 5:55 pm

#885
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்

உறல் /  இறல் என்று எதுகைச்சுவையுடன் அழகாக எழுதப்பட்டிருக்கும் பாடல்.

உறல் = உறவு கொள்ளுதல் / நெருக்கம்

இறல் = இறத்தல் / சாவு

உறல்முறையான் உட்பகை தோன்றின்
உறவு முறையோடு உட்பகை தோன்றுமானால்
(அதாவது, உறவோடு பகை அல்லது உறவு போல நடிக்கும் பகை, இரண்டும் பொருத்தமே)

இறல்முறையான் ஏதம் பலவும் தரும்
(அப்பேர்ப்பட்ட பகை) இறக்கும் படியான பல குற்றங்களையும் / துன்பங்களையும் தரும்

இப்படிப்பட்ட பகை ஒருவனை சாகடிக்கும் / அல்லது சாகும் வரை நோகடிக்கும் Sad

ஆதலினால், உட்பகைக்கும் / உறவு வழி வரத்தக்க புகைக்கும் எதிராக நம்மைக்காத்துக்கொள்ள வேண்டும் என்று சுருக்கம்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 37 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Mar 27, 2017 8:45 pm

#886
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது


பொன்றாமை = அழியாமை.

நாம் ஒழிந்து போகாமல் இருக்க வேண்டுமானால், உட்பகை கூடாது என்பதை எதுகையோடு (ஒன்றாமை X பொன்றாமை )சொல்லும் செய்யுள்.

ஒன்றாமை ஒன்றியார் கட்படின்
பகை (நமக்கு) உற்றவர்களிடம் ஏற்படுமானால்

எஞ்ஞான்றும்
எந்தக்காலத்திலும்

பொன்றாமை ஒன்றல் அரிது
அழிவைத்தவிர்க்க இயலாது
(அழியாமையோடு சேர்வது = அழிவைத்தவிர்ப்பது)

புகழ் மட்டுமே அழியாதது, மற்றவையெல்லாம் (பொருள் / உடல்) அழிவனவே என்று முன்பு எப்போதோ படித்த நினைவு. இங்கு மீண்டும் "அழியாமை" வருகிறது.

ஆக, வள்ளுவர் இங்கு புகழும் இல்லாமல் அழிவதைச் சொல்லுகிறாரோ என்று தோன்றாமலில்லை.

உட்பகை பல வழிகளிலும் நம்மை அழிக்கிறது, தற்காலத்தில் இறப்பைத்தரும். எஞ்ஞான்றும் அழிவு என்று சொல்கையில், புகழும் இல்லாமல் - நமது பெயரே விளங்காமல் - அழிக்கும் அளவுக்கு இது கொடியது என்று சொல்ல வருகிறார்.

நாம் நம் உற்றாரை அணைத்துச்செல்வோம் - முடிந்த அளவுக்கு.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 37 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 37 of 40 Previous  1 ... 20 ... 36, 37, 38, 39, 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum