Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 35 of 40 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 35 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Dec 12, 2016 10:28 pm

#812
உறின்நட்டு அறின் ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை 
பெறினும் இழப்பினும் என்

தமிழ் படிப்போர் பலருக்கும் நன்கு அறிமுகமான மொழி (ஒரு செய்யுளில் இருந்து எடுக்கப்பட்டது) "அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல்".

"நீர் வற்றிய குளத்தை விட்டு விட்டுப் பறவைகள் சென்று விடும் - செல்வம் இழந்தவரை விட்டு விடும் சுற்றம் / நட்பு / உறவு அப்படிப்பட்டது"  என்று பொருள் படும் இந்த மொழி பல இடங்களிலும் படித்தும் கேட்டும் இருக்கிறோம். 

அதே கருத்தை (தீய) நட்புக்குப் பொருத்தும் குறள் இங்கே. அதே சொல்லும் ("அறின்") வருவதையும் காணலாம். அதற்கு எதிர்ச்சொல் "உறின்" (அதாவது செல்வம் / வளம் உண்டாயிருக்கும் நிலை) .

உறின்நட்டு அறின் ஒரூஉம்
உள்ள நேரத்தில் நட்புக்கொண்டும் இல்லாத நேரத்தில் விட்டுச்சென்றும்
(வளம் / பொருள் / பயன் - இவற்றுள் ஏதோ ஒன்று உள்ளதும் இல்லாததுமான எதிரெதிர் நிலைகள். "ஒரூஉம்" - கடந்த அதிகாரத்தில் பார்த்த ஒருவும் / உருவும் என்பது மருவி வந்திருக்கிறது)

ஒப்பிலார் கேண்மை
பொருத்தமில்லாமல் இருப்போரது நட்பு

பெறினும் இழப்பினும் என்
பெற்றால் என்ன, இழந்தால் என்ன? (அப்படிப்பட்ட நட்பு வீண் என்கிறார்)

நிலைமைக்குத் தகுந்தாற்போல் மாறுவோரை நிறம் மாறும் பச்சோந்திக்கு ஒப்பிடுவது இயல்பே.

அப்படிப்பட்ட ஒருவரது நட்பு நன்மையை விளைவிக்காது, தீமை தான் வரும்.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 35 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Dec 13, 2016 11:29 pm

#813
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது 
கொள்வாரும் கள்வரும் நேர்

"பெறுவது கொள்வார்" = பாலியல் தொழிலாளிகள் என்பதாக உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். 
(அவர்கள் விலைமகளிர் என்று சொல்வதை நான் மாற்றி இருக்கிறேன் - ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான சொல்).

அதாவது, "கொள்வனை-கொடுப்பினை" என்பது திருமண உறவுக்காகச் சொல்லப்படும் மொழி. அதிலுள்ள "கொள்வது" (மணம் முடிப்பது),  "பெறுவதன்" - அதாவது, பணம் / பொருளின் அடிப்படையில் நடப்பதால், 'தொழில்" Smile
(பணம் வாங்கிக்கொண்டு "சட்டப்படியான" மணம் முடித்தாலும், அதையும் இதே கணக்கில் தான் சொல்ல வேண்டும் - பாலியல் தொழில் Laughing - பெறுவது கொள்வார்)

"ஒருவனுக்கு ஒருத்தி" என்ற ஒழுக்க நெறியின் அடிப்படையில் பணத்துக்கான பாலுறவு தீயது.

அதையும் களவு / திருட்டையும் இங்கே பலனுக்காக நட்புக்கொள்வதோடு ஒப்பிடுகிறார். 

அதாவது, பலன் கருதி நட்புக்கொள்வது பாலியல் தொழிலையும் திருட்டையும் போன்ற இழிந்த செயல் என்கிறார்!

உறுவது சீர்தூக்கும் நட்பும்
"இதனால் எனக்கு என்ன பலன்" என்று கணக்குப்பார்த்து நட்புக்கொள்பவர்கள்

பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர்
பணத்துக்காகப் பாலுறவு கொள்வோருக்கும் திருடருக்கும் சமமானவர்கள்!

சூழ்நிலையினால் வஞ்சிக்கப்பட்டுப் பாலியல் தொழிலில் தள்ளப்படும் பெண்களைக் குற்றப்படுத்துவதாக இதைக்கொள்ளக்கூடாது. அவர்கள் மீது கருணை கொள்ளத்தேவை இருக்கிறது.

ஆனால், ஒரு தெரிவாக, அதைத்தொழிலாகச் செய்வது இழிவானது என்பதைப் பொதுவாக எல்லோரும் ஒத்துக்கொள்வர். உலகில் இன்று திட்டுவதற்கான சொற்கள் பெரும்பாலும் இழிவான பாலுறவு குறித்தவை என்பதிலிருந்து இது குறித்த பொதுக்கருத்து தெளிவாகிறது. ("அது தேவையான தொழில்" என்று வாதிடுவோர் உண்டு, ஆனால் அவர்களிடமும்,  "உங்கள் பிள்ளைகளை அனுப்புவீர்களா" என்று நெஞ்சைத்தொட்டுச் சொல்லும்படிக்கேட்டால் என்ன விடை வரும் என்பது தெரிந்ததே Wink ).

பாலியல் தொழில் குறித்த தனிப்பட்ட கருத்து என்னவாக இருந்தாலும், திருட்டு போன்றே பலன் கருதி நட்புக்கொள்வதும் தீமையானது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 35 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Dec 14, 2016 6:44 pm

#814
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் 
தமரின் தனிமை தலை

தீ நட்பு என்ற கருத்தில் மீண்டும் மீண்டும் நாம் காணும் ஒன்று - நல்ல நேரங்களில் கூட இருந்து துன்ப நேரங்களில் விட்டு விட்டு ஓடிப்போவது.

இந்தக்குறளிலும் அதே தான் - ஒரு பொருத்தமான உவமையுடன்.

போர்க்களத்தில் கடுமை கூடும் போது, தன் மீதுள்ள வீரனை உதறித்தள்ளி விட்டு ஒரு குதிரை தப்பித்து ஓடினால் எப்படி இருக்கும்? "முட்டாள் விலங்கே" என்று திட்டுவதற்கு அப்பால் அவனால் ஒன்றும் செய்ய இயலாது. 

"இனி எப்படிப்போரிடுவது" என்ற மலைப்பும் " இப்பேர்ப்பட்ட ஒரு விலங்கை நம்பி மோசம் போனோமே" என்ற வெறுப்பும் மேலிடும்.

அதே நிலை தான் தீய நட்பு கொள்வோருக்கும். கடினமான சூழலில் அத்தகையோர் விட்டு விட்டு ஓடும் நிலையில் வெறுப்பும் சினமும் தான் மிஞ்சும். 

அத்தகைய நட்பை விடத்தனிமையே மேல் என்று சொல்லும் செய்யுள் இது!

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
களத்தில் போரின் இடையே விட்டு விட்டு (கீழே தள்ளி விட்டு) ஓடி விடும் முட்டாள் குதிரையைப்போன்றோரின்
(மா = விலங்கு ; குதிரை என்பதற்கு அகராதி இந்தக்குறளை மேற்கோள் காட்டுகிறது)

தமரின் தனிமை தலை
நட்பை விடத்தனிமையே மேலானது 
(தமர் = தம்மவர், சுற்றத்தார், நட்பு / நட்பில் உள்ளோர்)

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 35 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Dec 15, 2016 12:44 am

#815
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை 
எய்தலின் எய்தாமை நன்று

மீண்டும் அதே கருத்து.  அதாவது, "துன்பம் நேர்கையில் நமக்குப் பாதுகாப்பாக இல்லாதோரின் நட்பு வேண்டாம்" என்று மீண்டும் வலியுறுத்தும் குறள். 

அப்படியானால், இங்கே புதிதாக என்ன இருக்கிறது?  போன குறளில் விலங்கோடு ஒப்பிட்டார், இங்கே கொஞ்சம் வேறுபட்டு "சிறுமை பிடித்தவர்கள்" என்று மனிதரில் கீழானவர்களாக அப்படிப்பட்டோரை வகைப்படுத்துகிறார்.

என்றாலும், பொருள் ஒன்று தான் Smile

செய்தேமஞ் சாராச் சிறியவர்
(நன்மைகள் கொண்டு நாம்) நட்புச்செய்தாலும் நமக்குக்காவலாக இல்லாத சிறுமை பிடித்தவர்களின் 
(ஏமம் = காவல் / பாதுகாப்பு)

புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று
தீய நட்பு அடைவதை விட அடையாதிருப்பதே நல்லது

வழக்கம் போல் "செய்து / எய்து" என்று எதுகையெல்லாம் அமைந்து ஓசை நயம் இருக்கிறது என்றாலும் கருத்து மீண்டும் மீண்டும் ஒரே போல் வருவது கொஞ்சம் அலுப்புத்தான்.

தீய நட்பு என்றால், நம்மை விட்டு ஓடி விடுவது, பாதுகாப்பாக இல்லாதது என்று மட்டும் தானா? வேறு வகைகளில் அவர்கள் கூடவே இருந்து கொண்டே தீமை செய்யவும் வழியுண்டு தானே?

ஒரு வேளை மிச்சம் உள்ள ஐந்து குறள்களில் வேறு கருத்துக்கள் வரலாம். 

பார்ப்போம் Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 35 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Dec 15, 2016 7:43 pm

#816
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் 
ஏதின்மை கோடி உறும்

சென்ற குறளில் புலம்பினதற்கு உடனே விடை கிடைத்து விட்டது - அதுவும் அருமையான கவிதைச்சுவையுடன் கூடிய பொருள் மாற்றம் Smile
("அப்பாடா! " என்றிருக்கிறது)

பேதையோடு நட்புக்கொள்வது "தீநட்பு" என்கிறார். அதுவும், அறிவுடையாரின் பகையை விடவும் கெட்டதாம் Laughing 
மிகைப்படுத்திச் சொல்வது கவிதைக்கு அழகு என்ற விதத்தில், "அறிவுடையாரிடம் பகை கொள்வதே மேல்" என்பதை  அப்படியே எடுத்துக்கொள்ளாமல், "ஒப்பிட்டு வேறுபடுத்தல்" என்ற அளவில் பார்க்க வேண்டும்.

"பெருங்கெழீஇ" - இதே போன்ற ஒரு சொல் எங்கோ கேட்டிருக்கிறோமே என்ற நினைப்பில் வலையில் தேடினால், 'பயிலியது கெழீஇய நட்பின்" வந்தது Smile 
('கொங்குதேர் வாழ்க்கை' என்று தொடங்கும்  குறுந்தொகைப்பாடலில் இந்தச்சொல் வருகிறது. இறையனார் எழுதிய இந்தப்பாடல் திருவிளையாடல் என்ற திரைப்படத்தில் தருமி நகைச்சுவையில் வருவதைப்பலரும் அறிந்திருக்க வழியுண்டு. அதாவது, "கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே?" Laughing )

பேதை பெருங்கெழீஇ நட்பின்
அறிவில்லாதவனோடு நெருங்கிய நட்புக்கொள்வதை விடவும் 
(கெழி = நட்பு, கெழீஇ = நட்புக்கொள்தல்)

அறிவுடையார் ஏதின்மை கோடி உறும்
அறிவுடையோரின் பகை கோடி மடங்கு நன்மை தரும் 

தலைகீழாகப் பொருள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது, அறிவுடையோரைப் பகைப்பது தீமை தரும். பேதைகளோடு நட்புக்கொள்வது, அதை விடக் கோடி மடங்கு தீமை தரும் என்பதால் முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும்.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 35 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Dec 16, 2016 10:49 pm

#817
நகைவகையராகிய நட்பின் பகைவரால் 
பத்தடுத்த கோடி உறும்

பேதைகளுக்கு அடுத்ததாகப் பாசாங்குக்காரரைக் குறி வைக்கிறார் இங்கே.

ஒரு கணக்கில் பார்த்தால் நாமெல்லாரும் மிகவும் அஞ்ச வேண்டிய தீய நட்பு இது தான். 

வெளியில் அன்பு காட்டுவது போல நடித்து உள்ளே அப்படி ஒன்றும் இல்லாத (அல்லது கெட்ட எண்ணங்கள் உள்ள) ஆட்களின் நட்பு மிகத்தீமையானது. நம்பி மோசம் போவதற்கான வழியும் இது தான்.

எச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய இந்தக்கூட்டம் குறித்த அறிவுரை எக்காலத்துக்கும் பொருந்தும் ஒன்று. கொஞ்சம் ஏமாந்தால் உயிரையும் இழக்க நேரிடலாம்.

பகைவர் தாக்குவார்கள் என்பது தெரியும் - தீய "நண்பர்கள்" தாக்குவது எதிர்பாரா நேரத்தில் என்பதால் கூடுதல் அச்சம். 

நகைவகையராகிய நட்பின்
(உள்ளே நட்பு இல்லாமல் வெளிப்பாசாங்காக) நகைக்கும் வகையினரது நட்பை விட

பகைவரால் பத்தடுத்த கோடி உறும்
பகைவரால் வருவது (துன்பம்) பத்துக்கோடி மடங்கு நன்மை எனக்கருதலாம் 

"என்னோடு மேசையில் உணவு அருந்தினவனே எனக்கு எதிராகக் காலைத்தூக்கினான்"  என்பது பல வரலாற்று நிகழ்வுகளிலும் நாம் படிக்கும் ஒன்று. நண்பர் போல நடித்தவர்களால் பலரும் அடைந்த அழிவுகள் நாம் படித்து வருபவை, இறப்பு உள்ளிட்ட பல துயர நிகழ்வுகள் தோழர் / தோழிகளால் அடைந்தோர் எண்ணற்றவர். 

அத்தகைய தீய நட்புகளை நாம் இயன்ற வரையில் தவிர்ப்போம்.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 35 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Dec 19, 2016 8:40 pm

#818
ஒல்லும் கருமம் உடற்றுபவர்கேண்மை 
சொல்லாடார் சோர விடல்

ஆக வேண்டிய, நடத்தி முடிக்கத்தக்க ஒரு செயலைக் கெடுப்பவன் நண்பன் அல்ல.

வேண்டுமென்றே ஏதாவது செய்து நம் வேலை ஆகாத வண்ணம் கெடுக்கலாம். அல்லது, நண்பனுக்குச் செய்ய வேண்டிய ஒன்றைச் செய்யாமல் கெடுக்கலாம். சோம்பேறித்தனத்தால் அல்லது நண்பனின் நேரத்தைக்கவர்ந்து அவனது வேலை நடக்கவிடாமல் செய்யும் பேர்வழிகளும் உலகில் உண்டு.

இப்படிப்பட்ட முட்டுக்கட்டைகள் எல்லோரும் "தீ நட்பு" என்கிறார் இப்பொழுது.

ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை
இயலும் செயலை நடக்க விடாமல் செய்பவருடைய நட்பை

சொல்லாடார் சோர விடல்
(அவரிடம்) சொல்லாமலேயே தளரச் செய்து விட வேண்டும் (விட்டு விட வேண்டும்)

"சொல்லிக்கொள்ளாமலேயே"  என்பது நழுவும் வேலை என்று எனக்குத்தோன்றுகிறது. ஒரு வேளை அது பண்பின் முதிர்ச்சியான இருக்கலாம். என்றாலும், அப்படிப்பட்ட தீய நண்பர் மீண்டும் திருந்த / திருத்திக்கொள்ள "சொல்லாமல்" நட்பைத்துண்டிப்பது உதவாதே?

நேரடியாகப் பேசிய பின்னர் நட்பைத்துண்டிப்பதே இதிலும் நல்லது என்று எனக்குப் படுகிறது Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 35 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Dec 19, 2016 11:36 pm

#819
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு 
சொல்வேறு பட்டார் தொடர்பு

"செய்வதைச்சொல்வோம் - சொல்வதைச் செய்வோம்" என்று அரசியல் கழகங்கள் / கூட்டணிகள்  பரப்புரை செய்வதுண்டு.  

மக்களுடைய மறதியில் அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை! Laughing 

"சொல் வேறு செயல் வேறாய் இருப்பவனுடன் நட்புக்கொள்ளாதே" என்று இங்கே வள்ளுவர் சொல்வதை இன்றைய அரசியல் கழகங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.

பொதுவாக எல்லோரும் பயன்படுத்தும் "கனவில் கூட நினைக்க மாட்டேன்" என்ற சொல்லாடலும் இங்கே வருகிறது. (கனவில் என்ன வரும் என்பது நம் கையில் இல்லை என்றாலும், நம் கண்ட / கேட்ட / மனதில் இருத்திய / கூடுதல் எண்ணிய / மீண்டும் மீண்டும் காண விரும்பிய சிலவற்றைக் கனவில் - குறைந்தது பகல் கனவிலாவது - காண்பது இயல்பு தானே Smile )

அப்படியாக, "அறவே மறப்பது" என்ற பொருளில் "கனவிலும் நினையாதே" என்று வருகிறது!

வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு
செயல் வேறு சொல் வேறு என்பதாக இருப்போரின் (நம்ப முடியாதோரின்) தொடர்பு 

கனவினும் இன்னாது மன்னோ
கனவிலும் துன்பத்தையே தரும்
(மன்னோ - அசை நிலை, எரிச்சலில் கூட்டிச்சேர்க்கும் சொல் எனலாம்)

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 35 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Dec 20, 2016 10:28 pm

#820
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ 
மன்றில் பழிப்பார் தொடர்பு

குறுகுதல் = நெருங்குதல் (இடைவெளி குறைதல்?) / அணுகுதல் 

"கொஞ்சங்கூட நெருங்க விடாதே" என்று ஒரு கூட்டத்தினரைப் பற்றி இங்கே வள்ளுவர் எச்சரிக்கை சொல்கிறார். 

யார் அப்படிப்பட்ட தீய நட்புக்கூட்டம்?

வீட்டில் வந்து, தனிமையில் ஒட்டி உறவாடி விட்டு, பொது வெளியில் நம்மைப் பழிக்கும் இரட்டை நடிப்புக்காரர்கள்!

மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு
மனையில் (வீட்டில்) நெருங்கிப்பழகி விட்டு மன்றத்தில் (பொது அவையில்) நம்மைப்பழிப்பவர்களது நட்பு 

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் 
எந்த அளவிலும் நம்மை அணுகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் 

நல்ல நட்பு என்பதன் அடிப்படையே நம்பிக்கை தான்!  

"என் நண்பன் என்னிடம் அன்பு காட்டுகிறான், எனக்கு அறிவுரை சொல்லி நல்வழிப்படுத்துகிறான், எனக்கு இடுக்கணில் கை கொடுக்கிறான், என்னைப்பற்றி நல்ல விதத்தில் எல்லோரிடமும் சொல்கிறான், என் செயல்கள் வெற்றி பெற விரும்புகிறான் / அதற்காக உழைக்கிறான்" - இப்படிப்பட்ட நம்பிக்கைகள் இருந்தால் தான் அது நல்ல நட்பு, பொருள் உள்ள நட்பு.

நம்பிக்கை விதைக்காதவை எல்லாமே தீ நட்பு.

குறிப்பாக, நம்மைப் பலர் முன்னிலையில் பழிக்கும் ஒருவரது தொடர்பு நமக்குத் தேவையா? 

எதற்கு?

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 35 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Dec 22, 2016 8:42 pm

#821
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை 
நேரா நிரந்தவர் நட்பு
(பொருட்பால், நட்பியல், கூடா நட்பு அதிகாரம்)

கூடா நட்பு (வேண்டாத நட்பு, சேரக்கூடாத தோழைமை) - இதுவும் தீ நட்பு போன்றதே. 

நட்பில் எப்படிப்பட்டோரைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்ல இன்னும் ஒரு அதிகாரம்.

முதல் குறளை அழகான உவமையுடன் தொடங்குகிறார். அதாவது, பொருத்தமற்ற நட்பைப் "பட்டடை" போன்றது என்கிறார். அப்படி என்றால் என்ன?

எளிதாகச் சொன்னால், பட்டடை = பட்டறை Smile 
(இரும்பை அடித்துச் சரியாக்க / வெட்டித்துண்டாக்க அடியில் வைக்கும் அடை கல் தான் பட்டடை) முன்பு பலமுறை கண்டது போன்றே இங்கும் அகராதி பொருள் சொல்ல இந்தக்குறளை மேற்கோள் காட்டுகிறது. 

பட்டடை என்ற கருவியை நல்லதற்கும் உவமையாக்கலாம், அல்லாததற்கும் சொல்லலாம். 

கொல்லனைப் பொறுத்த வரை அது வேண்டிய ஒன்று, பயன்படும் கருவி. இரும்புக்கோ? அடித்து வெட்ட / நொறுக்க அடியில் இருந்து உதவும் எதிரி!  பட்டடையும் இரும்பு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 'நம் இனம் தானே' என்று பட்டடையோடு அடிக்கப்படும் இரும்பு நட்பு கொள்ளலாமா என்கிறார் Smile

நேரா நிரந்தவர் நட்பு
(உள்ளத்தில்) பொருத்தம் இல்லாமல் (வெளியில்) சேர்ந்து கலப்பவரின் நட்பு
(நேர்தல் = பொருந்துதல், நிரத்தல் = கலத்தல்)

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை 
சரியான இடம் (சூழல்) கண்டால் (நம்மை) வெட்டி எறிய உதவும் பட்டடை போன்றதே 

"அட அட, எப்படிப்பட்ட நண்பன், நான் வெட்டப்படும் போது என்னைத் தன் மேலே வைத்துத் தாங்குகிறான்" என்று இரும்பு அடைக்கல்லைக் கொஞ்சுமோ?

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 35 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Dec 27, 2016 7:47 pm

#822
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் 
மனம்போல வேறுபடும்

"மகளிர்" இந்தக்குறளில் உவமையாக வருகிறார்கள்.

கிட்டத்தட்ட எல்லா உரையாசிரியர்களுமே அதற்கு "விலை மகளிர் / பொது மகளிர் / பாலியல் தொழிலாளிகள்" என்று உரை சொல்கிறார்கள். அதாவது, பாலியல் தொழிலாளிகளின் மனம் "உள்ளொன்று / புறமொன்று" என்பதாக இருக்கும் என்கிறார்கள்.

என்ன அடிப்படையில் இப்படி உரை எழுதி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை வள்ளுவர் அப்படிச்சொல்லி இருந்தால் அவரும் என்ன அடிப்படையில் அப்படிச்சொன்னார் என்று விளங்கவில்லை. 

அதாவது, வெளிப்படையாக, "நாங்கள் விற்பனைக்கு, எங்கள் மனதில் உங்களுக்கென்று உணர்வுகள் ஒன்றுமில்லை - பணம் கொடுத்தால் உடல் விலைக்கு" என்று நேரடியாகச்சொல்லி, கெடுதல் என்றாலும் அப்படி "ஒளிவு-மறைவு" இன்றி இருப்போரை "உள்ளொன்று-புறமொன்று" என்று எப்படிச்சொல்லலாம்?  சொல்லப்போனால், குடும்பப்பாங்கானவர்களாய் வெளியில் நடித்து உள்ளே தன் துணைக்கு அப்பால் ஆவல் காட்டும் ஆண் / பெண்கள் தானே அப்படிப்பட்டவர்கள்?

வள்ளுவர் சொன்ன மகளிர் ஏன் அப்படிப்பட்ட "ஆடவரை ஏமாற்றும் மகளிர்" எனக்கொள்ளக்கூடாது?  (அதாவது, "உன்னைக்காதலிக்கிறேன்" என்று சொல்லி அலைய விட்டுப்பின்னர் "அப்பா அம்மா சொன்ன பையனைத்தான் திருமணம் செய்வேன்" என்று கைவிடும் மகளிர் Laughing )

இனம்போன்று இனமல்லார் கேண்மை
இனம் போலத் தோன்றினாலும் உண்மையில் இனமில்லாதோர் நட்பு 
(நட்பல்ல நடிப்பு)

மகளிர் மனம்போல வேறுபடும்
(ஏமாற்றும்) மகளிரின் மனம் போல (உள்ளொன்று புறமொன்றாக) வேறுபடும்

வள்ளுவருக்கு இன்றைய இளைஞர் போலக்காதல் தோல்விகள் நடந்திருக்குமோ? Laughing

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 35 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Dec 28, 2016 9:55 pm

#823
பலநல்ல கற்றக்கடைத்துமனநல்லர் 
ஆகுதல் மாணார்க்கரிது

மாணார் என்பதற்கு "மாட்சிமையற்றவர்" என்ற பொருள் மட்டுமல்ல, அகராதி சொல்கிறபடி, "பகைவர்" என்றும் வருகிறது. அதுவே இங்கு மிகப்பொருத்தம்.

அதாவது, பகைமை கொண்டு நடப்பவர்களுக்கு என்ன தான் நல்ல நல்ல நூல்கள் கற்றாலும் மற்றவரோடு மனது இசைந்து செல்லுதல் இயலாது. அத்தகைய நட்பு கூடாது என்கிறார் வள்ளுவர்.

நேரடியான எளிய பொருள் இந்தக்குறளுக்கு.

பலநல்ல கற்றக்கடைத்துமனநல்லர் ஆகுதல்
பல நல்ல நூல்கலைக்கற்ற போதும் மனதில் நல்லவர் (மனதுக்குப் பொருந்தியவர்) ஆகுதல்

மாணார்க்கரிது
பகைவர்க்கு இயலாது

நிறையப்படிப்பதன் வழியாக மட்டுமே நட்பு கூடி விடும் என்று எண்ணுவது பேதைமை. மனம் மாறுவதற்கு ஒருவர் உள்ளே இருக்கும் ஆழ்ந்த எண்ணங்களை மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. படிப்பது அதற்கு வழி வகுக்கலாம். என்றாலும், அது மட்டுமே போதாது என்று சொல்ல வருவதாக நினைக்கிறேன்.

நூல்களைக் கற்பதை அவர் குறைவாகக் கூற வழியில்லை. "அது மட்டுமே போதும் "என்ற மூட நம்பிக்கையை அடிப்பதாக எடுத்துக்கொள்கிறேன் Smile 
("படிச்சிருந்தும் அறிவில்லையே" என்று சொல்வதை நாம் கேட்டிருப்போம் - அது போல, படிப்பதாலேயே பகை உணர்வை விடமாட்டார்கள் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்).

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 35 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Dec 29, 2016 7:02 pm

#824
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா 
வஞ்சரை அஞ்சப்படும்

வஞ்சர் என்றாலே புரிந்து விடக்கூடிய ஒன்றை, "முகத்தின் இனிய அகத்து இன்னா" என்று கூடுதல் விளக்கமும் கொடுத்து, அப்படியாக நான்கு சொற்களை வீணடிக்கும் குறள் Smile  செய்யுள் என்றாலே இப்படிப்பட்ட அலங்காரங்கள், விளக்கங்கள், வர்ணனைகள், உவமைகள் எல்லாம் வருவது இயல்பு தான். ஏழே சொற்களில் பல அரிய கருத்துக்களைச் சொல்லும் திருக்குறளும் அதற்கு விலக்கல்ல Smile

முகத்தின் இனிய நகாஅ
முகத்தளவில் இனிமையாக நகைத்து

அகத்தின்னா
உள்ளத்தில் தீமையை வைத்திருக்கும்

வஞ்சரை அஞ்சப்படும்
வஞ்சகர்களோடு நட்புக்கொள்ள அஞ்ச வேண்டும்

கேள்வி - ஒருவரது அகத்து இருப்பது எப்படி ஐயா தெரியும்?  அது மட்டும் தெரிந்து விட்டால் இந்த உலகே மாறிப்போகுமே?

ஆக, இது கேட்க நன்றாக இருந்தாலும், செயல்படுத்துவது எளிது அல்ல.

என்றாலும், ஒருவரோடு நட்புக்கொள்ளுமுன்னரே அவர் குறித்த  அடிப்படையான அறிவாவது இருக்க வேண்டும் என்று எடுத்துக்கொள்ளலாம்.  மட்டுமல்ல, நட்பில் நெருங்க விரைவு உதவாது, பொறுமை வேண்டும் என்றும் புரிந்து கொள்ளலாம்.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 35 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jan 03, 2017 5:29 pm

#825
மனத்தின் அமையாதவரை எனைத்தொன்றும் 
சொல்லினால் தேறற்பாற்று அன்று

"மனதால் கூடாத நட்பை வெறும் சொற்கள் கொண்டு கூட்ட முயல்வோரை நம்பாதே" என்று எச்சரிக்கும்  திருக்குறள் Smile

நேரடியான பொருள் - ஒரு வளைவு சுழிவும் இல்லை!

மனத்தின் அமையாதவரை
மனதளவில் நட்பில் கூடாதவரை
(நம் மனநிலையோடு ஒத்துப்போகும் தன்மை இல்லாதவர்களை)

எனைத்தொன்றும்
எந்த ஒன்றிலும் 
(எந்தச்செயலிலும் / முயற்சியிலும்)

சொல்லினால் தேறற்பாற்று அன்று
(அவர்களது) சொற்கள் கொண்டு மட்டும் தெளிய / தெரிந்தெடுக்க வேண்டாம் 

இது நடைமுறையான அறிவுரை தான். என்றாலும், பல நேரங்களிலும் நம்முடைய மனதும் குழப்பத்திற்கு வழிவகுக்கலாம். (நாமும் 100% புனிதர்கள் அல்லவே?) ஆதலால், இந்தக்கருத்தோடு இன்னும் ஒன்றைக்கூட்டுவது நல்லது.

1. நம் மனதில் ஒருவருக்கு இடம் வர மாட்டேன் என்கிறதா? அதற்கு உண்மையில் அவரா / மனதா காரணம் என்று பார்த்து, நம் மனதின் பிழை என்றால் அங்கே சரி செய்ய வேண்டும் 

2. மற்றவர் தான் காரணம் என்றால், அவருடைய நட்பு கூடாநட்பு என்று முடிவு செய்யலாம்.

3. அதன் பின் அவர் என்ன தான் சொற்கள் கொண்டு நிரப்ப முயன்றாலும் ஏமாறாமல், தவிர்த்து நடப்பது நமக்கு மிக நல்லது Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 35 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jan 04, 2017 6:44 pm

#826
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் 
ஒல்லை உணரப்படும்

மீண்டும் மீண்டும் வரும் கீழ்க்கண்ட கருத்து இங்கும்:
கூடா நட்பு = மனதில் கூடுதல் இல்லாமல் சொல்லில் மட்டும் கூட முயலுதல்!

கூடுதல் என்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் "ஒட்டுதல்" என்ற எளிய, அழகான சொல் இங்கே வருகிறது. "ஒட்டார்" = மனதில் ஒட்டாமல் இருக்கும் ஆட்கள், அவர்களை நண்பர்கள் ஆக்காதே என்கிறார். அந்தச்சொல்லைப் "பகைவர்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

நட்டார்போல் நல்லவை சொல்லினும்
நண்பர்கள் போல நல்லவற்றைப் பேசினாலும் 
(இனிக்க இனிக்கப் பேசினாலும்)

ஒட்டார்சொல்
மனதோடு ஒட்டாத, பகைவரின் சொற்கள் 

ஒல்லை உணரப்படும்
விரைவிலேயே உணரப்படும் 
(சாயம் விரைவில் வெளுத்து விடும்)

ஆக, இது கூடும் நட்பா இல்லையா என்பதைப் புரிந்து கொள்ளக் கூடுதல் காத்திருக்க வேண்டியதில்லை, விரைவிலேயே தெரிந்து விடும் என்கிறார். 

யாருக்கு? 

அதைக் கருத்தாக உற்று நோக்குவோருக்கு மட்டுமே! 

அல்லாத பேதைகள், நீண்ட நாள் வேண்டாதவர்களை நண்பர்களாகக் கருதி, ஏமாந்து, இறந்தும் கூடப் போவார்கள். (வரலாற்றில் இதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் பார்க்கலாம்).

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 35 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jan 06, 2017 6:07 pm

#827
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் 
தீங்கு குறித்தமையான்

அழகான உவமையுடன் எச்சரிக்கை செய்யும் குறள் Smile

வில்லைப்பெண்களின் புருவத்துக்கு உவமையாய்ப்படித்தும் கேட்டும் வளர்ந்த அல்லது வில்லுப்பாட்டு போன்ற பொழுதுபோக்கில் மட்டும் பார்த்து மெலிந்த நோஞ்சான்களான  நமக்கு இது கொஞ்சம் அடிதடியான உவமை எனலாம் - அதாவது, "வில் வணக்கம்".

வணக்கம் சொல்லி வாழ்த்துவது போல நடித்தாலும், வில்லால் செய்யப்படும் வணக்கத்தின் பொருள் வரவிருக்கும் சண்டை என்பதே.

அதே போலப்பகைவரின் சொல்லும் - நட்பாகத் தோன்றினாலும் அது கூடாததே என்கிறார்!

வில்வணக்கம் தீங்கு குறித்தமையான்
வில்லால் ஆன வணக்கம் தீங்கைக்குறிப்பதே (அன்றி நன்மையல்ல)

ஒன்னார்கண் சொல்வணக்கம் கொள்ளற்க
(அதுபோன்றே) பகைவரின் சொல்லில் வரும் வணக்கம் அல்லது இனிமையை விரும்ப வேண்டாம்.

பொருளில் இது முந்தைய குறள்கள் போன்றதே (சொல் மட்டும் கொண்டு நட்புக்கூட வேண்டாம்). ஆனால், அழகான உவமையால் இது அணி பெறுகிறது!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 35 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jan 09, 2017 6:45 pm

#828
தொழுதகையுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் 
அழுதகண்ணீரும் அனைத்து

கடந்த குறளின் நீட்சி - வில்லின் இடத்தில் "கைக்குள் ஒளித்து வைத்திருக்கும்" கொலைக்கருவி.

நம்நாளில் 'படை' என்பதைத் துப்பாக்கி என்று மொழி பெயர்க்கலாம்!

காந்தியடிகளின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இந்தக்குறள் படிக்கையில் கோட்சே நினைவுக்கு வர வழியுண்டு. 
(காந்தியின் இறப்பு குறித்த நூல்கள் / செய்திகள் / ஆவணப்படங்கள் / திரைப்படங்கள் என்றெல்லாம் பலவற்றிலும் "தொழுத கையுள் துப்பாக்கி" பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்)

பகைவர் கண்ணீரோடு நம்மிடம் நடித்தாலும் அதை நட்பு என்று தவறாக நினைத்து விடக்கூடாது என்று எச்சரிக்கும் இந்தப்பாடலில் "கும்பிடும் கைக்குள் துப்பாக்கி" தான் உவமை.

தொழுதகையுள்ளும் படையொடுங்கும்
கும்பிடு போடுவது போல் நடித்துக் கையில் படைக்கருவி ஒளித்து வைத்திருப்பர் 

ஒன்னார் அழுதகண்ணீரும் அனைத்து
பகைவர் அழுது கண்ணீருடன் (நமது நட்புக்காக) வேண்டுவதும் அது போன்றதே.
(அதாவது, நம்மை அழிக்கச் செய்யும் வஞ்சனையோ அல்லாமல் உண்மை நட்பு அல்ல)

ஆக மொத்தம் ஒரே பொருள் - நட்பு வேறு நடிப்பு வேறு Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 35 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jan 09, 2017 8:37 pm

#829
மிகச்செய்து தம்மெள்ளுவாரை நகச்செய்து 
நட்பினுள் சாப்புல்லற்பாற்று

"பழிக்குப்பழி" என்னும் வடிவில் உள்ள குறள் - எனக்கு உவப்பில்லை Sad

அதாவது, நட்பு போல நடித்து நம்மை ஏய்ப்பவரை நாமும் அதே போல நடித்து (நட்பை) ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிறது இந்தச்செய்யுள். 

உலக நடப்பில், பொருட்பாலில், இது நடைமுறையாக வேண்டிய ஒன்றாக  இருக்கலாம். என்றாலும், போலிக்கு விடையாக நாமும் போலியாக வேண்டுமா என்று எண்ணினால் "கூடவே கூடாது" என்று எனக்குத்தோன்றுகிறது.

மிகச்செய்து தம்மெள்ளுவாரை
(வெளியில் நட்பை) மிகுதியாகக் காட்டிக்கொண்டு (உள்ளுக்குள்) நம்மை இகழுபவர்களை

நகச்செய்து நட்பினுள் சாப்புல்லற்பாற்று
நகைக்கும் படி செய்து (நடித்து)  நட்பு கூடாத படி (சாகுமாறு) செயல்பட வேண்டும்

அப்படிப்பட்ட போலிகளின் நட்பைத் தவிர்க்க வேண்டும் என்பது சரியே. அதே நேரத்தில், அவர்களை நகச்செய்ய வேண்டிய தேவை என்ன என்று தோன்றுகிறது.

வேறு விதத்தில் பார்த்தால், "வெட்டி விடும் போதும் இனிமையாக அதைச்செய்யுங்கள்" என்று சொல்ல வருகிறார் என்று எடுத்துக்கொள்ளலாம்.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 35 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jan 09, 2017 8:46 pm

#830
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு 
அகநட்பு ஒரீஇ விடல்

முன் குறளின் இன்னொரு வடிவம். பகைவரோடு பழக வேண்டி வந்தால் எப்படி வெளிப்பூச்சாக நடந்து கொள்ள வேண்டும் என்று நடைமுறை அறிவுரை சொல்லும் இன்னொரு குறள்.

"உள்ளொன்று புறமொன்று" என்றிருக்க ஊக்குவிப்பதால், இதனோடும் எனக்கு உடன்பாடில்லை. அதற்காக 'வெளியிலும் சண்டையிட வேண்டும்' என்றல்ல நான் சொல்ல வருவது. 'வெளியில் சிரிக்கையில், உள்ளேயும் அவனுக்கு அருள் செய்யும் பண்பு வளருங்கள்' என்பதே உயர்ந்த வழி. "பகைவனுக்கருள்வாய்" என்று சொல்லும் வாழ்வுநெறிக்கு "அகநட்பு ஒரீஇ விடல்" சரியல்லவே?

பகைநட்பாம் காலம் வருங்கால்
பகைவர் நட்பில் வரும் சூழ்நிலை வந்தால் 
(பகைவரோடு நெருங்கிப்பழக நேர்ந்தால்)

முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல்
முகத்தில் மட்டும் நட்புக்காட்டி உள்ளே நட்பொன்றும் இல்லாமல் தவிர்த்து விட வேண்டும்

மீண்டும், "கூடா நட்பை எப்படியாவது தவிருங்கள்" என்ற அடிப்படைக்கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு இந்தச்செய்யுளைக் கடந்து செல்வோம் Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 35 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jan 11, 2017 8:08 pm

#831
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு 
ஊதியம் போக விடல்
(பொருட்பால், நட்பியல், பேதைமை அதிகாரம்) 

நட்பு என்ற அளவில் மட்டும் பேதைமையை அணுகும் அதிகாரம் என்று நினைக்கிறேன். (ஒட்டு மொத்தமாகப் பேதைமை என்பதைக் குறித்தும் 
இருக்கலாம், படிக்கப்படிக்கவே அது தெரிய வரும்).

முதல் குறள் நட்பில் வரும் பலன் / நன்மை (அல்லது இல்லாமை) என்ற அளவிலேயே பேதைமையைக் குறித்துச் சொல்கிறது. 

பேதைமை என்பதொன்று யாதெனின்
பேதைமை (முட்டாள் ஆகும் தன்மை) என்னும் ஒன்று என்னவென்றால் 

ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்
குற்றமானதை / தனக்குக்கெடுதல் தருவதை ஏற்றுக்கொண்டு ஊதியமானதை (நன்மை தருவதை) விட்டு விடுதல்

"பணத்தைக் கொடுத்துப் புகையிலைப்பண்டம் புகைக்க வாங்குவது" என்று மிக எளிமையான எடுத்துக்காட்டு கொண்டு பேதைமையை விளக்கலாம். நன்மை தரும் பொருள் வளத்தை அழித்து அதனிடத்தில் துன்பம் தரும் ஒன்றைக்கைக்கொள்ளுதல்.

நட்பிலும் இதே கருத்தைப் பயன்படுத்தலாம் - தீய நண்பர்களைக் கூட்டுச்சேர்த்தால் நல்ல துணைகளைக் கண்டிப்பாய் இழக்க நேரிடும். அதுவல்லவோ பேதைமை?

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 35 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jan 12, 2017 6:14 pm

#832
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை 
கையல்ல தன்கட்செயல்

முன்பு 507-ஆம் குறளில் கண்ட "காதன்மை" என்ற சொல் இங்கே மீண்டும் வருகிறது. அகராதி இந்த இரண்டு குறள்களையும் மேற்கோள் காட்டி இரண்டு வேறு வேறு பொருட்கள் சொல்கிறது. 

507'ல் காதன்மை (காதல்) = அன்பு ; இங்கேயோ, காதல் = ஆசை / விருப்பம் Smile

பேதைமை என்பது வேண்டாத ஏதோ ஒன்றின் மீது விருப்பம் / காதல் கொள்வது. 

எதன் மீது?  "கையல்ல தன்கண்" - அப்படி என்றால் என்ன?

தன்னால் இயலாதது / தனது ஒழுக்கத்துக்கு விலக்கானது /  தனக்கு நன்மை தராதது / தனக்கு (நூல் நெறிகளின் படி) முறையற்றது என்று விதவிதமாக உரைகள் சொல்கின்றன.  இவை எல்லாமே பொருத்தமான விளக்கங்கள் தாம்.

கையல்ல தன்கட்செயல் காதன்மை
தான் செய்வதற்குத் தகாதவற்றைச் செய்ய விரும்புதல்

பேதைமையுள் எல்லாம் பேதைமை
பேதைமைகளிலேயே மிகக்கேடான பேதைமை

நட்பு என்ற அடிப்படையில் பார்த்தால், தனக்குப் பொருத்தமற்ற கூட்டாளிகளை விரும்பிச்சேர்ப்பது பேதைமைகளின் உச்சம் என்று கொள்ளலாம். 

நடைமுறையில் ஒருவரது #1 நண்பர் அவரது "வாழ்க்கைத்துணை" என்பதால், நேரடியாகவே "பொருந்தாத காதல் கொள்தல் பேதைமை" என்றும் எடுத்துக்கொள்ளலாம் Smile 

ஆகவே, திருமணத்துணையை அறிவோடு தேர்ந்தெடுங்கள் Wink

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 35 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jan 12, 2017 6:33 pm

#833
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் 
பேணாமை பேதை தொழில்

ஒரு நிறுவனத்தில் "பேதை" என்ற ஒரு இடம் இருக்கிறது. அதற்கு ஆள் எடுக்க வேண்டும். என்ன "வேலை விவரம்" கொடுத்து விளம்பரம் செய்வார்கள்?

இந்தக்குறள் அவற்றைப் பட்டியல் இடுகிறது Smile  அதாவது, பேதையின் தொழில் என்று நான்கை வரிசைப்படுத்துகிறது.

1. நாணாமை (வெட்கப்படாமல் இருப்பது)
2. நாடாமை (தேடாமல் இருத்தல்)
3. நாரின்மை (அன்பு இல்லாமை)
4. யாதொன்றும் பேணாமை (ஒன்றையும் கட்டிக்காக்காமல் வீணாக்குதல்) 

முதல் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை போலத்தோன்றினாலும், ஒன்றே. 

அதாவது, தீமைக்கு நாணுதல் = நன்மையை நாடுதல் Smile

இப்படிப்பட்ட தன்மைகள் நம்மிடம் இருந்தால், நாம் பேதை என்ற தொழிலுக்குத் தகுந்தவர்கள். அந்த வேலைக்கு நமக்கு வாய்ப்பு இருக்கிறது Laughing

பேதை தொழில்
பேதையின் தொழில் (எனப்படுவன  இவையே : )

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை
(தீமைக்கு) வெட்கப்படாமல் இருத்தல், (நல்லன) நாடாமல் இருத்தல், அன்பின்மை, ஒன்றையும் காக்காமல் இருத்தல்

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 35 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Sat Jan 14, 2017 12:31 am

#834
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்


நெறிகளைப்படித்தவர், மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுப்பவர் - ஆனால், தானோ பின்பற்றாதவர்.

அதாவது, ஊருக்கு மட்டும் அறிவுரை - தனக்கல்ல என்று ஏமாற்றும் ஆள்.

அப்படிப்பட்டவரை விடப்பெரிய பேதை யாரும் கிடையாது என்று கண்டிக்கும் குறள் Smile

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும்
(நெறி நூல்களை) நன்றாகக் கற்று உணர்ந்தும், மற்றவர்களுக்கு உரைத்தும்

தானடங்காப்பேதையின் பேதையார் இல்
(அதே நேரத்தில்) தான் அந்த நெறிகளுக்கு அடங்காமல் வாழும் பேதையை விட முட்டாள் யாரும் இல்லை

மிகத்தெளிவாகவே, அறிவு என்பது கல்வியிலோ கற்பிப்பதிலோ அல்ல - அவ்வழியில் நடப்பதில் தான் என்று அடித்துச் சொல்லும் நன்னெறிக்குறள். மிகச்சிறப்பு!

இன்று படித்தவர் / விற்பன்னர் என்றெல்லாம் பீற்றிக்கொண்டு நடக்கும் பலரும் மற்றவருக்குச்சொல்லும் ஒழுக்கநெறிகளைத் தமக்குப் பொருந்துவதில்லை.
("கற்பிழந்த பெண்" என்று தூற்றும் கூட்டத்தில் உள்ள ஆண்களில் பெரும்பாலோர் தாம் மனதில் / உடலில் கற்போடு இருக்கிறோமா என்று நினைக்காமல் இருப்பது இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு).

'சொல்லுதல் யார்க்கும் எளிய' என்ற குறள் நினைவுக்கு வருகிறதல்லவா? சொல்லுகிறபடி நடக்காதவன் (அதற்காக எந்த முயற்சியும் செய்யாதவன்) பெரும் பேதை!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 35 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jan 17, 2017 9:08 pm

#835
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் 
தான்புக்கழுந்தும் அளறு

மீண்டும் "எழுமை" வருகிறது - ஏழு முறை மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பது என்ற நம்பிக்கை வள்ளுவருக்கு இருந்திருக்கலாம் என்று முன்னமேயே பார்த்த நினைவு. இங்கே நேரடியாக வருகிறது. (அவரது தனிப்பட்ட நம்பிக்கையா அல்லது அன்று வாழ்ந்தோரின் பொதுவான நம்பிக்கையை அவர் உள்ளடக்கினாரா என்று எடுத்துக்கொள்வது அவரவர் விருப்பம் Smile )

அளறு என்ற சொல் கொஞ்சம் வேடிக்கையானது.  பொதுவாக நம்மெல்லாருக்கும் அறிமுகமான பொருள் சேறு / சகதி என்பதே. ஆனால், அகராதியில் நீர், நரகம் (தீ எரியும் துன்பமான இடம்) என்றெல்லாமும் பொருள் சொல்கிறார்கள்.

ஏழு பிறப்பு என்ற அடிப்படையில் சில உரையாசிரியர்கள் "நரகம்" என்ற பொருளையும், அதில் நம்பிக்கை இல்லாத மு.க. சகதி என்றும் சொல்வது குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தம், "சிறிது நேரம் பேதைமை காட்டினால் நெடுங்காலத்துக்குச் சிக்கல்" என்ற அடிப்படைப்பொருளில் எல்லோரும் உடன்படுகிறார்கள். நாம் அதை எடுத்துக்கொள்வோம் Smile

ஒருமைச்செயலாற்றும் பேதை
ஒரு பிறவியில் தான் செய்யும் செயல் வழியாகவே ஒரு பேதை 
(அல்லது தன்னிச்சையாக / ஒரே ஒரு முறை பேதைமை காட்டினால்)

எழுமையும்  தான்புக்கழுந்தும் அளறு
ஏழு பிறவிக்கும் (அல்லது எப்போதைக்கும்) அழுந்திப்போகும் நரகத்தில் (அல்லது துன்பச்சேற்றில்) தன்னைப் புகுத்திவிடுவான்

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 35 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jan 17, 2017 11:58 pm

#836
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் 
பேதை வினைமேற்கொளின்

"ஆழம் தெரியாமல் காலை விடாதே" என்பது பழமொழி. (விட்டால் என்ன நடக்கும் என்பது தெரிந்ததே, அதிலும் நீச்சல் தெரியாதவன் என்றால் உயிரே போகும்).

செயல் செய்யத்தக்க வழிவகை தெரியாதவன் அதைப்பொறுத்த வரையில் பேதை. நான் எப்போதும் சொல்லும் எடுத்துக்காட்டு - என்ன தான் திறமையான பொறியியல் வல்லுநர் என்றாலும் அவரால் அறுவை மருத்துவம் செய்ய இயலாது தானே? அடிப்படையில் அவர் "மருத்துவப்பேதை".

அந்தக்கருத்தை வலியுறுத்தும் குறள் - நெறி தெரியாமல் செயல் செய்யும் பேதை செயலையும் கெடுத்துத் தனக்கும் அழிவு கொண்டு வருவான்.

கையறியாப்பேதை வினைமேற்கொளின்
சரியான வழி / நெறி தெரியாத பேதை ஒரு செயலில் ஈடுபட்டால்

பொய்படும் 
அச்செயல் நடக்காது (பொய்த்துப்போகும் / நடவாமல் போகும்)

ஒன்றோ புனைபூணும்
அது மட்டுமல்ல, அந்தப்பேதையும் மாட்டிக்கொள்வான் 
(ஒன்றோ - செயல் அழிவது ஒன்று மட்டுமா? இன்னும் துன்பம் இருக்கிறது 
 புனை பூணும் - தளை / விலங்கு மாட்ட வேண்டி வரும் - துன்பத்தில் அவனும் சிக்குவான். சிறைச்சாலை செல்வான். அழிவான் - எப்படி வேண்டுமானாலும் விளக்கலாம்)

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 35 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 35 of 40 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum