Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 5 of 40 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Nov 01, 2013 4:52 pm

#82
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று


கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் கூட இல்லாத ஒரு புதுக்கருத்தை இந்தக்குறளில் நாம் காண்கிறோம் - "சாவா மருந்து" . (இறை வாழ்த்தில் "நில மிசை நீடு வாழ்வார்" என்றதோடு நிறுத்திக்கொண்டார். இங்கோ சாவாமை குறித்து வருகிறது)

(மறு) பிறவி எடுத்தல், வானகத்தில் உள்ள தெய்வத்தோடு வாழ்தல் என்றெல்லாம் இறப்புக்குப் பின்னான கருத்துகள் நிறைய முன் குறள்களில் நாம் கண்டோம். ஆனால், இங்கு காண்பது முற்றிலும் புதிய கருத்து - இறப்பு இல்லாத வாழ்வு (அதாவது இந்த மண்ணுலகிலேயே, ஒரே பிறவியில்).

என்றும் இளமை போன்ற சில கருத்துகளோடு இதைக்குழப்ப வேண்டியதில்லை  (மார்க்கண்டேயன், அதியமான் நெல்லிக்கனி போன்ற அவை வேறு வகை).

சில உரைகளில், இந்த "சாவா மருந்து" என்பதை அமிழ்தம் (தேவர்களின் உணவு) என்று பெயர்ப்பதையும் நாம் காணலாம்.

பொருள் பார்ப்போம் :

சாவா மருந்தெனினும்
இறப்பை இல்லாமல் செய்யும் அதிசய மருந்தே என்றாலும்

விருந்து புறத்ததாத் தானுண்டல்
அதை விருந்தினரை வெளியேற்றி விட்டுத் தான் மட்டும் உண்ணுவது

வேண்டற்பாற் றன்று
விரும்பத்தக்கது அல்ல!

இதைவிட அழுத்தமாக விருந்தோம்பலின் முதன்மை குறித்துச் சொல்ல முடியுமா தெரியவில்லை!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Nov 04, 2013 6:48 pm

#83
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று


சில சொற்களின் பயன்பாடு இந்தக்குறளில் தனித்தன்மையோடு காணப்படுகிறது. அவற்றின் பொருள் பார்ப்போம்.

1. வைகலும் = நாள் தோறும். (பொதுவாக வைகல் என்பது காலந்தாழ்த்தலுக்கோ அல்லது குறிப்பிட்ட பொழுதுக்கோ பயன்படுத்தப்படும் சொல்).

2. பரு = வறுமை / குறை (நமக்கு நன்கு தெரிந்ததெல்லாம் "முகப்பரு / குரு" மற்றும் பருமன் / பெருத்தல்)

விருந்தோம்புவதால் பொருட்குறை வந்து விடாது என்று சொல்லும் குறள்!

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
தன் இல்லத்துக்கு வரும் விருந்தினரை நாள் தோறும் உபசரிப்பவன் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று
வறுமையோ, பொருட்குறைவோ வந்து பாழ்படுவது கிடையாது!

என்னுடைய சில தோழர்கள் அவர்களுடையது "தின்னே கெட்ட குடும்பம்" என்று பீற்றிக்கொள்வதை சில முறை கேட்டிருக்கிறேன். (அவ்வளவு வகைவகையாகச் சாப்பிடும் பழக்கமாம்!)

ஆனால், மற்றவரை விருந்தோம்பி ஓம்பி அதனால் நலிந்தவர்கள் என்று யாரும் சொல்லி வேடிக்கையாகக் கூடக்கேட்டதில்லை Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Nov 05, 2013 6:27 pm

#84
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்


செய்யாள் என்றால் யார்?

சொல்லின் பொருள் படி, செய்யாள் = செம்மையானவள்  அல்லது  செம்மை நிறத்தவள் / சிவப்பானவள் Smile
இந்தியத்தொன்மை மரபின் படி, இது திருமகளைக் குறிக்கிறது.

"செந்தாமரையில் வீற்றிருப்பவள்" என்றும் கொள்ளலாம். இந்தத்தேவிக்குப் பொது வழக்கில் உள்ளது வடமொழிப்பெயர் - இலக்குமி Smile (இலட்சுமி / லக்ஷ்மி)

திருமகள் = பொருள் செல்வத்தைப் பெண்ணாக உருவகப்படுத்திச் சொல்வது. அதாவது, இலக்குமி என்றால் பொருள் செல்வத்தின் உருவகம் என்றும் கொள்ளலாம். இன்னும் நவீன மொழியில் சொன்னால், பணம் Smile

முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்
மலர்ந்த முகத்துடன் (மகிழ்ச்சியுடன்) நன்றாக விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில்

அகனமர்ந்து செய்யாள் உறையும்
மனமகிழ்வோடு திருமகள் குடி இருப்பாள்!

இதற்கு முந்திய குறளில் வறுமை வந்து பாழ்படாது என்று எதிர்மறையில் சொன்னவர், இங்கு நேர்மறையில் திருமகள் குடி இருப்பாள் என்று சொல்கிறார்.

ஆக மொத்தம், இரண்டு குறள் - ஒரே "பொருள்" Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Nov 06, 2013 7:23 pm

#85
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்


இந்தக் "கொல்" அசைச்சொல்லாம். பொருள் புரியாமல் குழப்ப நமது பழந்தமிழர்கள் செய்த திட்டங்களில் ஒன்று! Embarassed

கொஞ்சம் உயர்வு நவிற்சியான குறள் இது. அதாவது, "இப்படிப்பட்டவர்கள் விதையே போடாமல் விளைச்சல் வரும்" என்கிற அளவுக்கு விருந்தோம்பல் நன்றாகச் செய்வோரை வள்ளுவர் புகழுகிறார்!

விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்
விருந்தினருக்கு முதலில் உணவளித்து விட்டு மிஞ்சி இருப்பதை உண்டு வாழ்பவன் நிலத்தில்

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ
விதை விதைக்க வேண்டிய தேவையும் இருக்கிறதா? (அதாவது, விதை போடாமலேயே விளைச்சல் வந்து விடுமாம்!)

(மு.க. மட்டும் கொஞ்சம் மாற்றி உரை எழுதி இருக்கிறார் - அதாவது, விதை நெல்லையும் விருந்துக்கு இட வேண்டுமாம். பொருந்தவே இல்லை ஐயா! Embarassed)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Nov 07, 2013 7:47 pm

#86
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத்தவர்க்கு


வானத்தவர் மீண்டும் திருக்குறளுக்கு வருகிறார்கள் Smile

விருந்தோம்பலில் சிறந்து விளங்குவோருக்கு வான் உலகில் நல்ல விருந்து கிடைக்கும் என்று சொல்லும் குறள்.

வேறு சொற்களில் சொன்னால், இறைவன் நம்மிடம் கேட்கும் / தேவைப்படுத்தும் ஒரு பண்பு என்று விருந்தோம்பலை வள்ளுவர் சுட்டிக்காட்டுவதாகக் கொள்ளலாம்!

செல்விருந்து ஓம்பி
வந்த விருந்தினரை நன்றாகப்பேணி அனுப்பிவிட்டு

வருவிருந்து பார்த்திருப்பான்
அடுத்த வரவிருக்கும் விருந்தினருக்காக எதிர்பார்ப்போடு இருப்பவன்  (அதாவது அவர்களையும் எப்படியெல்லாம் கவனிக்கலாம் என்று காத்திருப்பவன்)

வானத்தவர்க்கு நல்விருந்து
வானுலகினருக்கு நல்ல விருந்தினன் ஆவான்! (அவனை வரவேற்று வானுலகில் போற்றுவார்கள்!)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Nov 08, 2013 6:04 pm

#87
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்


இந்தக்குறள் வழி இன்று ஒரு புதிய சொல் படித்தேன் - "இனை"- ஆமாம் சரியாகத்தான் எழுதி இருக்கிறேன், ரெண்டு சுழி "ன " Smile

இதன் பொருள் "இன்ன அளவு என்று மதிப்பிடல் / அளத்தல்"

இந்தக்குறளின் இன்னொரு அழகு விருந்தோம்பலை "வேள்வி" எனக்குறிப்பிட்டு ஒரு வழிபாட்டுச்செயல் அளவுக்கு அதற்கு மதிப்புக்கொடுப்பது!

பொருள் பார்ப்போம் .

விருந்தின் வேள்விப் பயன் இனைத்துணைத்தென்பதொன்றில்லை
விருந்தோம்பல் என்ற வேள்வியின் பயம் இன்ன அளவு என்று மதிப்பிட ஒன்றுமில்லை

துணைத்துணை
அது விருந்தினரின் மதிப்பின் அளவே!

வேறு சொற்களில் சொன்னால், நமக்கு விருந்தினர் எந்த அளவுக்கு வேண்டியவரோ, மதிப்பு மிக்கவரோ அந்த அளவுக்கு விருந்தோம்பலும் மதிப்பு மிக்கது. இன்னும் சொல்லப்போனால், எப்படி மனிதரை விலை மதிக்க முடியாதோ அதே போல் விருந்தோம்பலும் விலை மதிப்பற்றது!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Nov 11, 2013 5:59 pm

#88
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படாதார்


பொருட்செல்வம் வரும், போகும். அதைப்போய் "சேர்த்து வைக்கிறேன் பேர்வழி" என்று விருந்தோம்பல் செய்யாமல் இருப்பவர்களின் இறுதிக்கால மனநிலை இந்தக்குறளில் தெளிவாகிறது.

விருந்தோம்பி வேள்வி தலைப்படாதார்
விருந்தினரைப் போற்றிப்பேணும் வேள்வியில் ஈடுபடாதவர்கள்

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர்
"பொருளைப் பேணிக்காத்து இப்போது பயனொன்றும் இல்லாமல் போனோமே" என்று சொல்லி வருந்துவார்கள்.

பொருள் இருந்தாலும் இல்லாமல் போனாலும் அதை உரிய காலத்தில் உரிய விதத்தில் பயன்படுத்தாமல் போனால் பின்னாளில் வருந்துவது உறுதி!

விருந்தோம்புவதை விட பொருளைப் பயன்படுத்த வேறு நல்ல வழி என்ன இருக்கிறது?

ஆதலினால் இந்த சனிக்கிழமை (அல்லது ஞாயிற்றுக்கிழமை) யாராவது ஒரு தகுதியான விருந்தினரை அழையுங்கள் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Nov 12, 2013 4:23 pm

#89
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு


பொருள் இருந்தாலும் விருந்தோம்பல் பண்பு இல்லாதவர்கள் வறுமையில் கிடப்பவர்களே என்று சொல்லும் குறள்.
அதோடு நிறுத்தாமல், அப்படிப்பட்டோர் அறிவில்லாதவர்கள் என்றும் சொல்லுகிறார் Smile

விருந்தோம்பல் ஓம்பா மடமை
விருந்தினரைப்பேணும் தன்மை இல்லாத அறிவில்லாமை

உடைமையுள் இன்மை
பொருளுடைமை இருந்தாலும் வறுமை நிலையில் இருப்பதைக்குறிக்கும்!

மடவார்கண் உண்டு
இத்தகைய தன்மை அறிவில்லாதவர்களிடம் காணப்படும்!

இரண்டு முறை "மடமை" "மடவார்" என்று சொல்லுவதன் மூலம் இத்தகைய அறிவு கெட்ட தனத்தை வள்ளுவர் அழுத்திச் சொல்லுகிறார் என்று எடுத்துக்கொள்ளலாம்.

பணம் இருந்தும் அதைக்கொண்டு விருந்தோம்பல் செய்து மகிழாதோர் மன அளவில் வறுமையில் வாடுகிறார்கள் என்பது எவ்வளவு எளிய உண்மை!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Nov 13, 2013 6:11 pm

#90
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து


அனிச்ச மலர் என்று உண்மையில் ஒரு பூ இருக்கிறதா என்பதில் கருத்தொற்றுமை இல்லை என்று தோன்றுகிறது. விக்கிப்பீடியா அனிச்சை என்ற பூவின் படத்தைத் தருகிறது என்றாலும் இது தான் அந்த "முகர்ந்தால் குழையும்" மலரா என்று சொல்லுவதற்கில்லை.

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Anagal10

தொட்டால் சிணுங்கும் முள்கொடி நமக்கெல்லாம் இன்றும் நல்ல அறிமுகம் என்ற விதத்தில் பார்க்கும் போது, முகர்ந்தால் சுணங்கும் மலரும் வள்ளுவர் காலத்தில் கண்டிப்பாகக் காணப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை Smile

ஆனால், விருந்தினர் அதிலும் மென்மையானவர்கள் என்பது தான் இந்தக்குறளின் பொருள்!

மோப்பக் குழையும் அனிச்சம்
அனிச்ச மலர் முகர்ந்து பார்த்தாலே வாடிவிடும். (அவ்வளவு மென்மையானது)

முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து
விருந்தினரோ அதிலும் மென்மையானவர்கள். அவர்கள் வாடுவதற்கு நாம் சற்றே முகம் கோணினால் போதும். (ஆதலால், விருந்தோம்பல் எப்போதும் முக மலர்வுடம் செய்ய வேண்டும் என்பது இங்குள்ள அறிவுரை).

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Nov 14, 2013 5:39 pm

#91
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

(அறத்துப்பால், இல்லறவியல், இனியவை கூறல் அதிகாரம்)

புதிய அதிகாரம் - தொடக்கத்திலேயே ஒரு புதிய சொல் படிக்கிறேன் Smile

படிறு = பொய், வஞ்சனை, திருட்டு, குறும்பு, அடங்காத்தனம் முதலானவை Smile

இன்சொற்கள் "படிறு இலவாம்" என்று வரையறை செய்கிறார் வள்ளுவர்!

வஞ்சனையான நோக்கம் உள்ள சொற்கள், வெளிப்பேச்சில் கடுமை இல்லாதது போலத் தோன்றினாலும் "இன் சொற்கள்" என்று எப்படிச்சொல்ல முடியும்?

இப்படியாக, இன்சொற்கள் வாயளவில் மட்டுமல்ல உள்ளத்தளவில் இனிமை கொண்டிருக்க வேண்டும் என்பது எனக்கு முதன்மையான பொருளாகத் தோன்றுகிறது!

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
நன்மைகளை அறிந்தவர்கள் வாயிலிருந்து வரும் சொற்கள்

ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
அன்பு கலந்தனவும் வஞ்சனை அற்றவையாகவும் இருப்பனவாதலால்

இன்சொலால்
அவையே இன் சொற்கள்!

ஆக மொத்தம், உள்ளத்தின் இனிமை, நன்மையான சிந்தனைகள் வெளிப்படுவதே "இன் சொற்கள்" என்கிறார் வள்ளுவர்.

உள்ளொன்று வைத்துப்புறத்தில் மட்டும் "என் சர்க்கரையே" என்று சொல்லுவதை அல்ல இந்த அதிகாரம் வலியுறுத்துவது!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Nov 18, 2013 5:46 pm

#92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்


அமர்ந்து என்பதற்கு நமக்கு நன்கு தெரிந்த பொருள் "உட்கார்தல் / இருத்தல்" என்பதே. அதாவது, அமைதியும் நிறைவும் உள்ள ஒரு நிலை! சமநிலை என்றும் சொல்லலாம் Smile

அகராதியில் தேடினால், "விருப்பம்" என்ற மற்றொரு பொருளும் காணலாம்.

மொத்தத்தில், இந்தக்குறளில் எந்தப்பொருள் எடுத்தாலும் அது ஒரு நேர்மறையான நிலையைக் குறிப்பதைக்காணலாம்!
 
முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்
முகத்தில் நல்விருப்பத்துடன் (முக மலர்ச்சியுடன்) இனிமையான சொற்கள் கூறுதல்
 
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே
மன நிறைவுடன் (பொருட்கள்) கொடுப்பதை விடவும் நல்ல ஒன்றாகும்!

சொல்லப்போனால், உண்மையிலேயே நல்ல உள்ளத்துடன் பொருட்கள் கொடுத்தாலும் திட்டிக்கொண்டே கொடுத்தால் அதைப் பெறுபவருக்கு இன்பமாக இருக்காது. கொடுப்பது நல்லது தான், அதினும் நல்லது இன்சொற்கள் கூறுதல்.

அதே நேரத்தில், இதை "வெறுமென முகத்தளவில் / வாயளவில் இனியவராய் இருந்தால் போதும்" எனத்தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது.

சென்ற குறளில் நாம் கண்டபடி இன்சொல் கூறல் மனதிலிருந்து வர வேண்டும். "நல்ல மனதுடன் கொடுப்பதோடு, இன்சொல் முகத்தவராகவும் இருங்கள்" என்றே கொள்ள வேண்டும்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Nov 19, 2013 6:28 pm

#93
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொலினதே அறம்


அறத்துக்கு இன்னொரு வரையறை இந்தக்குறளில் நாம் பார்க்க முடிகிறது.

முகத்தான் அமர்ந்து
விருப்பமுள்ள முகத்தோடு

இனிதுநோக்கி
இனிமையான பார்வையைத் தந்து

அகத்தானாம் இன்சொலினதே அறம்
உள்ளத்திலிருந்து வரும் இனிமையான சொற்களைப் பேசுதல் தான் அறம்!

நன்மையான செயல்கள் போலவே நன்மையான சொற்களும் அறத்தில் உட்படுகின்றன என வள்ளுவர் அழகாகச் சொல்கிறார். அதனோடு, உள்ளத்தையும் சேர்ப்பதால், நன்மையான சிந்தனைகளும் சேர்ந்து விடுகின்றன Smile

ஆக மொத்தம் அறம் = நன்மையான எண்ணங்கள், நன்மையான சொற்கள், நன்மையான செயல்கள்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Nov 20, 2013 8:18 pm

#94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொலவர்க்கு


"துப்பார்க்குத்துப்பாய" குறளில் கண்ட படி, "துப்பு" = உணவு.

"துவ்வாமை" = உண்ணாமை (துப்பாமை)

இதோடு சேர்ந்து வரும் பொருள், உணவு இல்லாமை - அதாவது, "வறுமை" Sad

அந்தப்பொருளில் தான் இந்தக்குறளில் பார்க்கிறோம். கொஞ்சம் அளபெடை எல்லாம் சேர்த்து இனிமை கூட்டி இருக்கிறார் வள்ளுவர்!

யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொலவர்க்கு
எல்லோரிடத்திலும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுவோருக்கு

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும்
ஒருபோதும் துன்பம் தரும் வறுமை இருக்காது!

நன்மையான சொற்கள் பேசுவார் நலிவடைய மாட்டார்கள் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Nov 22, 2013 6:32 pm

#95
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற


பள்ளிக்காலத்தில் இந்தக்குறளை வேடிக்கையாக வாசித்த அனுபவம் உண்டு Smile

அதாவது, "இன்சொலன் ஆதல் ஒருவருக்கு அணியல்ல"  என்று Smile

அணி + அல்ல என்று தனித்தனியாகப் பிரிக்க வேண்டும்.

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணி
பணிவுடனும் இன்சொல் கூறுகிறவர் ஆகவும் இருப்பது தான் ஒருத்தருக்கு அழகு / அணிகலன்!

மற்றுப் பிற அல்ல
அதற்கு மாறான மற்றவைகள் அணிகலன் அல்ல!

இந்த "மற்றுப்பிற" என்பது, பணிவில்லாமை மற்றும் வன்சொல் என்றும் கொள்ளலாம்.

புறத்தே மனிதர் அணியும் அணிகலன்கள் (உடைகள் / நகைகள்) என்றும் கொள்ளலாம்!

உடல் அளவிலான அலங்கரிப்பு என்று கொண்டால், இதே போன்ற ஒரு அறிவுரை விவிலியத்தில் இருப்பதைக் காண முடியும் - "மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது."

இதை அப்படியே நேரடியாக "நகை போடாமல், தலை பின்னாமல், எளிய (வெள்ளை) உடை மட்டும் உடுத்தி வாழவேண்டும்" என்று நம்பி வாழ்வோரையும் நாம் காண முடியும்.

"அப்படித்தான் இருக்கவேண்டும்" என்று என்னிடம் வாதிட்ட சில உறவினர்கள் உண்டு என்பதால் இந்தக்கருத்து எனக்கு நினைவுக்கு வருகிறது Smile

இனிய எண்ணங்கள், சொற்கள், செயல்கள் ஒருவருக்கு அணிகலன் என்பதே உட்பொருள்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Nov 25, 2013 6:35 pm

#96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்


"அல்லவை" என்றால் என்ன என்று தேட வேண்டியதில்லை. அதே சொற்றொடரில் விடை இருக்கிறது. "அறம் பெருகும்" என்று Smile

ஆகவே, அல்லவை = "அறம் அல்லாதவை". அதாவது, தீமையானவை - என்பது தெளிவு!

நல்லவை நாடி இனிய சொலின்
மற்றவர்களுக்கு நன்மையானவற்றை நாடி, இனிமையான சொற்களைப் பேசினால்


அல்லவை தேய அறம்பெருகும்
தீமையானவைகள் இல்லாமல் போய் நன்மை பெருகும்!

"நாடி" என்பதில் நம் உள்ளம் உட்படுவதைக் காண முடியும். நம் நினைப்பிலேயே மற்றவர்களுக்கு நன்மை செய்தல் நிறைந்திருக்க வேண்டும். இது தான் முதல் படி. இதுவே நமது பேச்சையும் செயல்களையும் வழி நடத்துவது.

நல்ல எண்ணங்கள் கொண்டு உள்ளத்தை நிறைத்தல் இதற்கு அடி ஆதாரம்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Nov 26, 2013 6:07 pm

#97
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்


நயன் என்றால் என்ன?

அகராதிப்படி "நயம்" என்ற பொருள் இருக்கிறது (நயம் சரக்கு, நய வஞ்சகம் - அதாவது நல்ல தரத்திலுள்ள, மென்மையான, இனிமையான என்றெல்லாம் பொருள் சொல்லலாம்).

"விரும்பத்தக்க" என்றொரு பொருளும் இருக்கிறது.

மூன்றாவதாக உள்ளது இங்கு கூடுதல் பொருத்தம் என்று எனக்குத்தோன்றுகிறது - அது "உறவு / நல்லுறவு" என்பதே Smile

அப்படி வைத்துக்கொண்டு பொருள் பார்ப்போம்...

பயன் ஈன்று
பிறருக்கு நல்ல பயன் தருவனவும்

பண்பின் தலைப்பிரியாச் சொல்
நற்பண்பில் இருந்து நீங்காதனவுமான சொற்கள்

நயன் ஈன்று
நல்ல உறவுகளைத்தந்து

நன்றி பயக்கும்
(நமக்கும்) நன்மை செய்யும்!

இனிமையாகப்பேசி, மற்றவர்களுக்கு நன்மைகளைச் செய்வதன் மூலம் நாமும்  நல்ல உறவுகளையும் பல நன்மைகளையும் அடையலாம் என்று வள்ளுவர் சொல்லுகிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Nov 27, 2013 4:56 pm

#98
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்


"இருமை" பற்றிய குறளில் முன்னமே நாம் மறுமை குறித்து கவனித்திருக்கிறோம் Smile

இறப்புக்குப்பின் உள்ள மறு வாழ்வு குறித்த பல விதமான நம்பிக்கைகளை ஒட்டு மொத்தமாகக் குறிக்கும் ஒரு அழகிய சொல் Smile

இப்போது அதோடு ஒலியமைப்பில் இசைவாக இருக்கும் "சிறுமை" இந்தக்குறளில் வருகிறது.

சின்னத்தனம், அற்பத்தனம், குறைபாடு, கீழான தன்மை எனப்பல வகையிலும் இதைப்புரிந்து கொள்ள முடியும்.

அப்படியாக, இந்தக்குறளின் பொருள் பின்வருமாறு:

சிறுமையுள் நீங்கிய இன்சொல்
சிறுமைத்தனம் இல்லாத இனிய சொற்கள்

மறுமையும் இம்மையும் இன்பம் தரும்
அவற்றைப்பேசுபவருக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்!

இதில் காணப்படும் இன்னொரு கருத்து "கணக்கில் வைத்துக்கொள்ளுதல்".

அதாவது, இவ்வாழ்வில் சிந்திப்பன, பேசுவன மற்றும் செய்வனவற்றைக்  கணக்கில் வைத்துக்கொண்டு அவற்றுக்கு மறுவாழ்வில் பலன் தரும் ஒரு கணக்காளர் இருக்கிறார் என்ற கருத்து தென்படுகிறது.

மாற்றிச்சிந்தித்தால், "மறுவாழ்விலும் இனிய சொற்கள் தேவை" என்றும் கொள்ளலாம் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Dec 02, 2013 5:44 pm

#99
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்குவது?


"கொலோ" என்பது சுவை தரும் ஒரு பயன்பாடு இந்தக்குறளில் Smile

"கொல்" என்பது சில நேரங்களில் வெறும் செய்யுள் அசைச்சொல்லாக வருகிறது. (எ-டு: "இவன் தந்தை என்னோற்றான் கொல்").

அகராதி இதற்கு "ஐயப்பொருளில் வரும் ஓர் இடைச்சொல்" என்றும் பொருள் சொல்லுகிறது. இந்தக்குறளில், அப்படிப்பட்ட ஒரு ஐயம் உள்ள சூழல் காண்கிறோம்.

பொருள் பார்க்கலாம்...

இன்சொல் இனிதீன்றல் காண்பான்
இனிமையான சொற்கள் நல்ல பலன் தருவதைக் காண்பவன்
 
வன்சொல் வழங்குவது
அதற்கு மாறான வன்மையான சொற்களைப் பேசுவது

எவன் கொலோ?
என்ன பயன் கருதியோ?
(தேவையே இல்லை, வேண்டாத வேலை என்றெல்லாம் புரிந்து கொள்ளலாம்)

ஆக, இங்கு "கொலோ" என்ற இடைச்சொல்லில் ஒரு ஐயம் உள்ளாக இருப்பதைக் காண முடிகிறது Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Dec 03, 2013 8:17 pm

#100
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய் கவர்ந்தற்று


தமிழ் படித்த எல்லோருக்கும் நன்கு அறிமுகமான ஒரு திருக்குறள்!

இனிய உளவாக
நல்ல இனிமையான சொற்கள் இருக்கும்போது

இன்னாத கூறல்
துன்பம் தரும் சொற்களைப் பேசுவது

கனி இருப்பக்
நல்ல பழங்கள் இருக்கும்போது

காய் கவர்ந்தற்று
அவற்றை விட்டுவிட்டுக் காயைப் பறித்துத் தின்னுவது போலாகும்!

எல்லா உரைகளும் சொல்லுவது போல, இங்கே சொல்லப்படும் "காய்", மரத்திலிருந்து பறித்து நேரடியாக உண்ணத்தக்க காய் அல்ல Smile 

சும்மா வீம்புக்காக, "எனக்கு மாம்பழத்தை விட மாங்காய் தான் பிடிக்கும்" என்று வாதிடக்கூடாது என்று பொருள். சமைக்காமல் தின்னவே முடியாத - கசப்பான அல்லது பல்லைக்கெடுக்கும் - காய் என்று தான் பொருள்.

இன்னொன்று - கடுமையான சொற்கள் கேட்பவருக்கு மட்டுமல்ல, பேசுபவருக்கும் நல்லதல்ல என்றும் புரிந்துகொள்ள வேண்டும் Smile

அட, இன்னும் ஒன்று - இது நூறாவது குறள் Smile

அப்படியாக இந்த இழையின் முதல் நூறு!


Last edited by app_engine on Tue Dec 03, 2013 8:59 pm; edited 1 time in total

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Usha Tue Dec 03, 2013 8:28 pm

app,
 indha kuralai indru dhan ninaithen...... Nandri.......

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Dec 04, 2013 6:37 pm

Usha wrote:app,
 indha kuralai indru dhan ninaithen...... Nandri.......
நன்றி உஷாக்கா!

அந்தக்காலத்தில் பள்ளிகளில் நடக்கும் "வினாடி வினா" நிகழ்ச்சிகளில் இந்தக்கேள்வி வருவதுண்டு -"நூறாவது குறள் எது?"
Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Dec 04, 2013 7:45 pm

#101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது

(அறத்துப்பால், இல்லறவியல், செய்ந்நன்றி அறிதல் அதிகாரம்)

மற்ற உரையாளர்களில் இருந்து மு.க. வேறுபாடு காண்பிக்கிறார். "செய்யாமல் செய்த" என்பதை "வராமல் வந்த மாமணி" என்பது போன்ற "அரிதான" என உரை எழுதுகிறார் அவர்.

ஆனால், இந்தக்குறளுக்கு மற்ற உரையாசிரியர்களின் பொருள் தான் எனக்கு ஒத்து வருகிறது Smile

செய்யாமல் செய்த உதவிக்கு
நாம் ஒரு உதவியும் செய்யாத நிலையில் நமக்கு ஒருவர் செய்யும் உதவிக்கு

வையகமும் வானகமும் ஆற்றல் அரிது
வையகமும் வானகமும் தந்தால் கூட இணை ஆகாது!

ஒருவர் செய்த ஏதோ ஒன்றுக்குக் கைம்மாறாக உதவி செய்வது மனித இயல்பு. ("அவுங்க நம்ம கல்யாணத்துக்கு இவ்வளவு மொய் வச்சாங்க, நம்மளும் பதிலுக்கு நல்லா செய்யணும்" என்பது போல, ஈடு செய்யும் வேலை அது).

அப்படி ஈடாக இல்லாமல் செய்வது சிறப்பான ஒன்று. அதிலும், வருங்காலத்தில் எதையாவது எதிர்பார்க்காமல் செய்வது இன்னும் உயர்ந்த ஒன்று.

என்றாலும், அத்தகைய உதவியை மறக்காமல், அதற்கு நன்றி உணர்வு காட்டுவது தான் இந்தக்குறள் உயர்த்திச்சொல்லும் பாடம். (வானமும் நிலமும் ஈடில்லை என்றாலும், நன்றியுணர்வு விடக்கூடாது என்பது உட்பொதிந்திருக்கும் படிப்பினை!)

உயர்வு நவிற்சி அணி என்றும் கொள்ளலாம் Smile
(அதாவது, வானத்தையும் நிலத்தையும் கொடுப்பது நம்மால் ஆகிற ஒன்றா என்ன? Laughing)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Dec 05, 2013 9:16 pm

#102
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது


பலரும் நன்கு அறிந்த குறள்!
 
"காலத்தினால்" என்ற சொல் இதன் முதலும் அடியுமானது Smile

"தேவைப்படும் காலத்தில், உற்ற நேரத்தில், காலந்தவறாமல், வேண்டிய பொழுதில், தக்க தருணத்தில்" - என்றெல்லாம் இதைப்பலதரத்திலும் பொருள் கொள்ள முடியும்.

ஞாலம் என்ற சொல் காலம் என்பதோடு ஒலியிசைவு கொண்டதும் இங்கே உயர்வு நவிற்சியாக வருவதுமாக இருக்கிறது. அதற்கு மண்ணுலகம் (பூமி) என்று பொருள் கொள்ளலாம். அல்லது வெறுமென உலகம் என்றும் சொல்லலாம்.

உலகம் எனும்போது அது நிலத்தையும் கோளத்தையும் மட்டும் குறிக்காமல், இதில் வாழும் மனித இனம் என்றோ, அவர்களது எல்லா உடைமைகள் / அரசுகள் / நிறுவனங்கள் அடங்கிய முழு சமுதாயம் என்றும் குறிக்கலாம்.

மொத்தத்தில், நன்றியின் அளவு எத்தகையது என்று மிக அழகாய் உணர்த்துகிறது இந்த உயர்வு நவிற்சி!

காலத்தினாற் செய்த நன்றி
தக்க காலத்தில் செய்த உதவி

சிறிதெனினும்
அளவில் சின்னது தான் என்றாலும்

ஞாலத்தின் மாணப் பெரிது
அதன் மதிப்பு இந்த உலகை விட மிகப்பெரிதாகும்!

தேவையான பொழுதில் நமக்கு உதவி செய்வோரிடம் எவ்வளவு நன்றியோடு இருக்கவேண்டும் என்று உணர்த்துகிறார் வள்ளுவர்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Dec 06, 2013 5:19 pm

#103
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது


"கடமையைச்செய், பலனை எதிர்பாராதே" என்ற  கீதையின் மொழி எழுதப்பட்டிருப்பதை நாம் பல இடங்களில் காண முடியும்.

"பயன் எதிர்பார்க்காமல் நன்மை செய்தல்" என்பது பல இனக்குழுவினரிடமும் காண இயலும் என்றாலும், இந்தியத்தொன்மையில் அது குறிப்பாக வலியுறுத்தப்படுகிறது என்பது வெளிப்படை.

வள்ளுவரும் இங்கு அப்படிப்பட்ட உதவியின் மேன்மையைப் புகழுகிறார்!

பயன்தூக்கார் செய்த உதவி
பலனொன்றும் எதிர்பாராமல் செய்யப்பட்ட உதவியின்

நயன்தூக்கின்
விரும்பத்தக்க தன்மையை எண்ணினால் (அதன் பின்னால் உள்ள அன்பை என்றும் கொள்ளலாம்)

நன்மை கடலின் பெரிது
அவ்வுதவியின் நன்மை கடலை விடப் பெரியது என்று அறிவோம்!

பெரிய ஒன்றைப் புரிந்து கொள்ள அகன்று விரிந்த கடல் எவ்வளவு அருமையான உவமை! "கடலை விடப்பெரிது" என்பது உயர்வு நவிற்சி என்றும் கொள்ளலாம்.

செய்த நன்மைக்கு நன்றியுணர்வு எவ்வளவு இன்றியமையாதது என்பதை  விதம் விதமாய் இந்த அதிகாரத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Dec 09, 2013 7:33 pm

#104
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரிவார்


"தினை விதைத்தவன்" & "தேனும் தினைமாவும்"  அடிக்கடி தமிழில் பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள். என்றாலும், தற்காலத் தமிழ் மக்களில் எத்தனை பேர் உண்மையில் தினை எனப்படும் தானியத்தைப்பார்த்தோ / உண்டோ இருப்பார்கள் என்பது ஐயத்துக்கு உரிய ஒன்று.

இந்தப்புன்செய் தானியம் குறித்த விவரமும் படமும் விக்கிப்பீடியாவில் இருக்கிறது.

இந்தக்குறளில் தினையின் உருவ அளவு (மிகச்சிறிய தானியம்) உவமைக்காக உதவுகிறது. அதற்கு எதிர்மறையான உருவ அளவு கொண்ட பனை (மிக உயரமான மரம்) ஒலியிசைவு உள்ளதனால் ஒப்பீட்டில் வருகிறது.

தினைத்துணை நன்றி செயினும்
தினை அளவிலான (மிகச்சிறிய) உதவி செய்யப்பட்டாலும்

பயன்தெரிவார்
அதன் பயன்பாட்டின் மதிப்பை உணர்ந்தவர்

பனைத்துணையாக் கொள்வர்
(உயர்ந்ததும் பெரியதுமான) பனை போன்று அதை மதித்து நன்றியுணர்வு கொள்வார்கள்!

உதவியின் அளவைப் பொறுத்ததல்ல வேண்டிய நன்றியுணர்வின் அளவு என்று மிக அழகாகப் படம் தீட்டும் குறள்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 5 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 40 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 22 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum