Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 2 of 40 Previous  1, 2, 3 ... 21 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 2 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Aug 06, 2013 12:47 am

ஜெயமோகனின் வலைத்தளத்தில், "மலர் மிசை ஏகினான்" குறித்து நாம் சுட்டிக்காட்டிய அதே சமண மத வலைத்தளத்தின் சுட்டி கொடுத்திருக்கிறார்கள் :

http://www.jeyamohan.in/?p=38072

இதில் என்ன இருக்கிறது என்று கேட்கலாம்?

சும்மா ஒரு த்ரில் தான், ஒரு வேளை நம்மோடு சேர்ந்து ஜெமோவின் நண்பர்கள் சிலரும் குறள் படிக்கிறார்களோ என்று Smile

தமிழ்ச்சமணம் இந்தக்கட்டுரையை எழுதி ஆறு வருடங்கள் ஆகி விட்டன.

http://banukumar_r.blogspot.in/2007/06/blog-post_24.html

நமது இழையில் அதைச்சுட்டியது சூலை 25, 2013-ல்.

ஜெயமோகன் வலைத்தளம் சுட்டி இருப்பது சூலை 27, 2013-ல்!

Smile

அந்த தமிழ்ச்சமண வலைத்தளம் இப்படிப்பட்ட ஒரு பிரபலத்தால் நோக்கப்பட நமது இழை தான் காரணமோ என்ற ஒரு சிறுபிள்ளைத்தனமான குதூகலம் Wink

அவ்வளவே Smile

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 2 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Aug 06, 2013 6:21 pm

#15
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.


"நீ நல்லதும் பண்றே, கெட்டதும் பண்றே"  என்று திரைப்படங்களில் வரும் நகைச்சுவை போன்ற குறள் Smile(கவுண்டர்?)

கெடுப்பதூஉம்
(பெய்யாமல்) கெடுப்பதும்  

கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம்
அவ்வாறு நலிந்து போனோருக்கு சார்பாக(ப்பெய்து) மீண்டெடுப்பெதும்

எல்லாம் மழை
எல்லாம் அதே மழை தான்!

மனிதன் உயிர் வாழ இன்றியமையாதவையான நீர் மற்றும் உணவு இரண்டுமே மழையைச் சார்ந்து இருப்பதால், அது பெய்யாமல் பொய்த்தால் நாம் கெட்டழிந்து போவோம் என்பது தெளிவு.

அப்படி வறண்டு போன இடத்தில் மீண்டும் வளம் வர ஒரே வழி தான் - மழை பெய்தாக வேண்டும்.

அங்கே பெய்யா விட்டாலும், எங்காவது பெய்தால் தான் ஆற்று வழியே நீர் வரும், எப்படியும் மழை தான் மீண்டும் "எடுக்க" வர வேண்டும்.

காடு வெட்டிகள் கூடுதல் சிந்திக்க வேண்டிய ஒன்று!

இந்தக்குறளில் இன்னொரு வேடிக்கை - எளிதாகக் "கெடுப்பதும், எடுப்பதும்" என்று சொல்லாமல் ஏன் நீட்டி,  கெடுப்பதூஉம் / எடுப்பதூஉம் என்கிறார்?

அதாவது (த்+) "ஊ+உ", மூன்று உயிரெழுத்து மாத்திரைகள்!

வெண்பாவின் தளை சரியாக வர இப்படி ஒரு உத்தி என்பதாலா? "ஆமாமா, அப்படித்தான்" என்று சொல்லும்போதே, இந்தத்"தளை" எதற்கு என்றும் சற்று யோசிப்போம்.

இன்னொரு குறளில் இது போல வரும்போது மீண்டும் அலசுவோம் Wink

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 2 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Aug 07, 2013 5:36 pm

#16
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலை காண்பு அரிது


விசும்பு என்ற ஒரு சொல் மட்டுமே இதில் கடினம். மற்ற எல்லாம் இன்று வரை நாம் பயன்படுத்தும் சொற்களே.

விசும்பு என்றால் நம் நினைவுக்கு முதலில் வருவது அழுகை. (எ-டு: "உனக்கு என்னிடம் அன்பே இல்லை" என்று விசும்பினாள்).

இது வான் சிறப்பு ஆதலால், "விசும்பின் துளி" ஒரு வேலை வானம் விசும்பி அழுவதால் வரும் மழைத்துளியோ என்று குறும்பாக நினைத்தேன் Laughing

அகராதி எடுத்துப்பார்த்தால் தான் தெரிகிறது, விசும்பு என்பதற்கு "வானம்" என்றும் பொருள் இருக்கிறது Smile ஆதலினால், இது மழையை "வான் துளி" என்று அழகாகச் சொல்கிறது.

விசும்பின் துளி வீழின் அல்லால்
வானின் துளி (அதாவது, மழை) விழாவிட்டால்

மற்றாங்கே பசும்புல் தலை காண்பு அரிது
பச்சைப்புல்லின் நுனியைக்கூட இங்கே பார்க்க இயலாமல் (அரிதாகிப்) போய்விடும்!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 2 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Aug 08, 2013 2:58 pm

#17
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான் நல்காதாகி விடின்


ஒட்டு மொத்தப்பொருள் சட்டென்று பிடிபட்டாலும் (அதாவது, மழை பெய்யாவிடில் கடலும் சிறுக்கும்) சொற்சுவை காண்பதில் தானே நமது இன்பம்?

இக்குறளில் இரு அருஞ்சொற்களுக்குப் பொருள் முதலில் காண்போம் :

எழிலி:

"எழில்" என்றால் அழகு என்பது தமிழ் படிக்கும் எல்லாருக்கும் பெரும்பாலும் தெரிந்திருக்கும். அந்த அடிப்படையில், "எழிலி" = அழகி. ஆனால், இங்கு அந்தப்பொருளில் இல்லை! ஏன்? கடலுக்கு மழை தர மாட்டேன் என்று சொல்லும் இந்த "எழிலி" அழகி அல்லள்!

இங்கு இந்தச்சொல்லின் பொருள் "மேகம்" / "முகில்" Smile

தடிந்து:

தடித்து என்றால் பருமன் பெருத்து என்று எல்லோருக்கும் தெரியும். சொக்கனின் தந்தானே தத்தானே வலைப்பதிவின் படி, இன்னொருத்தர் செய்தால் "த்" / தானே பட்டால் "ந்". அப்படியானால், இது முகிலினம் தானே பெருத்தல் என்றா பொருள் கொள்கிறது? அல்லவே!

இங்கு, தடிந்து என்பதற்குக் "குறைந்து / குறைத்து " என்றல்லாவா பொருள் வருகிறது? Embarassed

விந்தை தான் Smile

தடிந்தெழிலி தான் நல்காதாகி விடின்
மேகம் குறைத்துக்கொண்டு மழை தராவிட்டால்

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்
நீண்ட கடலும் வற்றிப்போகும்!


Last edited by app_engine on Wed Feb 17, 2021 5:07 pm; edited 1 time in total

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 2 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Aug 09, 2013 5:09 pm

#18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

"வானோர்" என்று முதல் முறையாகப் பன்மையில் குறளில் இங்கு காண்கிறோம்.

கடவுள் வாழ்த்து அதிகாரம் முழுதும் ஒருமை என்பதாகவே என் நினைவு.

சற்றுப்பின் சென்று பார்ப்போம் Smile

ஆதி பகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அந்தணன், எண்குணத்தான், இறைவன்!

இவ்வாறு பத்துக்குறள்களிலும் ஒருமையில் (மரியாதைப்பன்மை கூடக்கிடையாது) கடவுள் வாழ்த்துப்பாடிய வள்ளுவர் இங்கு முதலாவதாக வானில் வாழும் ஆட்கள் என்பதாகத் தெளிவாகப் பன்மையில் எழுதுகிறார். என் கருத்துப்படி, இதில் மரியாதைப்பன்மை இருப்பதாகத்தெரியவில்லை.

பொருள் காணல் எளிது -  சுருக்கமாகச் சொன்னால், 'வறட்சி வந்தால் வழிபாடு, திருவிழா எல்லாம் நடக்காது' என்பதே இதன் கருத்து Smile

வானம் வறக்குமேல்
மழை பெய்யாமல் வறண்டால்

வானோர்க்கும் ஈண்டு
வானில் உள்ளவர்க்கும் இங்கே

சிறப்பொடு பூசனை செல்லாது
வழிபாடும், சிறப்பான விழாவும் நடக்காது!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 2 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Sun Aug 11, 2013 5:16 am

#19

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்


வானம் வழங்கா தெனின்
வானம் வழங்காவிட்டால் (அதாவது மழை பொய்த்துவிட்டால்)

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
இந்த விரிந்த உலகத்தில் தானமும் தவமும் இல்லாமற்போகும்!

வியன் உலகம் என்ற சொற்றொடர் மீண்டும் மீண்டும் வருவதைக்குறளில் காணலாம். அந்த "வியன்" தவிர மற்றபடி எல்லா சொற்களும் பொது வழக்கில் உள்ளவை தான்.

அதன் பொருள் "விரிந்த / பரந்த / அகன்ற / பெரிய" என்றெல்லாம் கொள்கிறார்கள் உரை ஆசிரியர்கள்!

இது அல்லாமல், தானம் / தவம் என்ற இரண்டு செயல்களை ஒன்று மற்றவர் நன்மைக்கும் (தானம்) மற்றது தன் நன்மைக்கும் என்றும் விளக்குவதைக்காண முடிகிறது!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 2 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Sun Aug 11, 2013 6:40 pm

#20

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு


நீர்இன்று அமையாது உலகெனின்
நீர் இல்லாவிட்டால் உலகம் செயல்படாது என்றால் (அல்லது, என்பதனால்)

யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு
எவருக்குமே மழை இல்லாமல் ஒழுங்கான வாழ்வு இருக்காது

இந்தக்குறளில் கடினமான சொற்கள் ஒன்றுமில்லை என்றாலும், உரை ஆசிரியர்கள் கடிமனான பொருள் சொல்லிக்குழப்புவதற்கு என்ன காரணம்?

சில நேரங்களில், திருக்குறளே எளிதாக இருக்கும், அதன் உரைகளை விட...நல்ல எடுத்துக்காட்டு இந்தக்குறள்! 

இதற்கு பரிமேலழகர் உரையைப்பாருங்கள்:


(இதன்பொருள்) யார்யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது = எவ்வகை மேம்பட்டார்க்கும் நீரையின்றி உலகியல் அமையாதாயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது = அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானையின்றி அமையாது.
"மழை பெய்யாட்டி யாருக்குமே வீடு ஒழுகாது" என்பது போல வேடிக்கையாய் இருக்கு இந்த உரை Smile

"ஒழுக்கு" என்ற சொல்லின் பொருள் பலவகையில் இருப்பதால் தான் இத்தகு குழப்பம். நாம் தற்போது, "ஒழுங்கு" என்றே புரிந்து கொள்வோமாக Smile

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 2 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Aug 12, 2013 4:57 pm

#21
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
(அதிகாரம் 3 : நீத்தார் பெருமை, பாயிரவியல், அறத்துப்பால்)

கடவுளையும், மழையையும் புகழும் இரு அதிகாரங்களைத்தொடர்ந்து மனிதருள் உயர்ந்தோர், பெரியோருக்கான புகழ் செய்யும் தொகுப்பாக மூன்றாவது வருகிறது.

இதில் நீத்தார் என்ற சொல் கவனத்துக்குரியது. நீத்தல் என்பது ஏதோ ஒன்றைப்பிரிதல், அகலுதல், துறந்து விடுதல் என்றெல்லாம் பொருள் கொள்கிறது என்பது எளிதில் விளங்கக்கூடியதே. (எ-டு : திரைக்கவிஞர் வாலி என்ற ரங்கராஜன் சில நாட்களுக்கு முன் "உயிர் நீத்தார்" - அதாவது, இறந்து போனார்).

எனவே நீத்தார் பெருமை என்பது, இறந்த சான்றோரின் பெருமை என்று கொள்ளலாம். தமிழ்நாட்டில் இன்று வரை வழக்கிலிருக்கும் "இறந்தோர் வழிபாடு" குறிப்பிடத்தக்கது. (சொல்லப்போனால், இவ்வித வழிபாட்டு முறை உலகின் பல இடங்களிலும் உள்ளது).

இதோடு, அக்காலத்தில் மிகவும் புகழப்பட்ட துறவறம் பூண்டோரையும் "ஆசை நீத்தார்" என்ற பொருளில் இந்த அதிகாரத்தின் சில குறள்கள் சுட்டுவதை நாம் காண முடியும்.

எனவே, நீத்தார் பெருமை = 1. புகழுடன் வாழ்ந்து இறந்தோர் பெருமை 2. துறவறம் பூண்ட பெரியோரின் பெருமை

இந்தக்குறளில் இன்னும் இரு அருஞ்சொற்கள் உள்ளன.

விழுப்பம் =  சிறப்பு (எ-டு: ஒழுக்கம் விழுப்பம் தரலான், விழுப்புண்)
பனுவல்   = நூல்

ஒழுக்கத்து நீத்தார் பெருமை
நல்ல ஒழுக்கத்தில் வாழ்ந்து உயிர் (அல்லது ஆசை) நீத்தவர்களின் பெருமை

விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு
சிறப்பான விதத்தில் நூல்களில் புனையப்படவேண்டும்!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 2 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Aug 13, 2013 5:20 pm

#22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று


கடந்த குறள் படிக்கும்போது நாம் கண்ட இரண்டு "நீத்தார்" கூட்டமும் இதில் வருகிறார்கள் Smile

அதாவது, இறந்து போய் உயிர் நீத்தவர்கள் மற்றும் பற்று துறந்து ஆசை நீத்தவர்கள் Smile

துறந்தார் பெருமை துணைக்கூறின்
பற்று துறந்தோராகிய நீத்தாரின் பெருமையை அளவிட்டுச் சொல்ல வேண்டும் என்றால்

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று
இது வரை மண்ணில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அளப்பது போலாகும்!

"அற்று" என்ற சொல்லின் பொருள் "போல" என்று தமிழ்ச்செய்யுள்களில் அடிக்கடி நாம் காண முடியும். உவமைக்குப் பயன்படுத்தப்படும் சொல். ("அறுந்து / அறுத்து" என்றும் பொருள் உள்ள சொல் என்பதால், இடத்தைப்பொறுத்து விளங்கிக்கொள்ள வேண்டும்)!

எத்தனை பேர் இதுவரை உலகில் பிறந்து இறந்தனர் என்று கணக்கிடுவது எவ்வளவு கடினமோ அந்த அளவுக்குக்கடினம் துறவிகளின் பெருமையை அளப்பதும் - உயர்வு நவிற்சி அணி!
(அப்படிப்பட்ட ஒரு கணக்கு உலகில் இல்லை என்பதால், இல்பொருள் உவமை அணி என்றும் கூடச்சொல்லலாம்)

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 2 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Aug 14, 2013 4:12 pm

சொக்கன் இந்தக்குறள் (#22) "இயல்பு நவிற்சி அணி" என்று ட்விட்டரில் தெளிவாக்கி இருக்கிறார் Smile

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 2 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Aug 14, 2013 5:17 pm

#23
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு


மனித இனத்தில் தொன்று தொட்டு இருந்து வரும் சிந்தனை (கேள்வி?) "மறுமை" பற்றியது Smile

அப்படி ஒன்று இருக்கிறதா?
(இருந்தால் தொடர்ந்து வாழலாமே, சாவோடு எல்லாம் முடியக்கூடாதே என்ற ஒரு ஆவல்)

அப்படி ஒன்று இருந்தால் அதில் நமக்கு எப்படி வாய்க்கும்?
(மறுபடி வேறொரு உயிராய் இந்த மண்ணில் பிறப்போமோ? அல்லது வேறொரு உலகில் இன்பமோ / துன்பமோ எதிர்கொள்வோமோ? அங்குமில்லாமல் இங்குமில்லாமல் ஆவி வடிவில் அலைவோமோ? அல்லது நீண்ட உறக்கத்துக்குப்பின் எழுவது போல இதே புவியில் இதே ஆளாய் மறுபடியும் எழுவோமோ? )

அப்படி ஒன்று இருந்தால் அதில் நம் நிலையை எது / யார் முடிவு செய்வது?
(நாம் இம்மையில் - அதாவது இந்த வாழ்வில் - சிந்திக்கும் / பேசும் / செய்யும் வினைகளா? அல்லது முன்னெழுதிய விதியா? எல்லாமே இறைவனின் திருவிளையாடலா? என்ன செய்தாலும் இறைவன் மன்னித்து ஏற்றுக்கொள்ளுவாரா?)

ஒரு கணக்கில் சொல்லப்போனால், பலரது இறை நம்பிக்கையின் பின்னால் இந்த "மறுமை" குறித்த சிந்தனைகள் பின்னி இருப்பதைக்காண முடியும் Smile

இந்தக்குறளில், இம்மை மறுமை இரண்டும் குறித்த தெளிவு பெற்று வாழ்ந்த (அல்லது வாழுகிற) நீத்தார் பெருமை வருகிறது Smile

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
இம்மை மறுமை என்ற இருமைகளின் முழு விவரம் தெரிந்து இங்கு அறநெறியில் வாழ்ந்தோர்

பெருமை பிறங்கிற்று உலகு
பெருமை உலகில் சிறந்து விளங்குகிறது!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 2 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Aug 15, 2013 6:09 pm

#24
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து


அருஞ்சொற்கள், பல பொருட்சொற்கள் நிறைந்து கிடக்கும் குறள் இது!
மெல்ல மெல்ல ஒவ்வொன்றையும் பார்ப்போம்!

முதலில் நேரடியான எளியவை:

ஓரைந்தும் காப்பான் - ஐம் புலன்களையும் அடக்குபவன் (1 X 5 = 5, வாய்ப்பாடு, "பொறி வாயில் ஐந்தவித்தான்" ஏற்கனவே படித்த குறள்)

வைப்பிற்கோர் வித்து - சேமிக்கத்தக்க விதை (வைப்பு நிதி = PF)

அடுத்து சற்றே குழப்புவன:

தோட்டியான் - நமக்கு உடனே "துப்புரவு செய்பவர்" நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாது Smile  ஆனால், அவரை வைத்து ஐம்புலனையும் அடக்க முடியாது என்பதால், இதற்கு வேறு பொருள் தேடலாம்.
யானையைக் கட்டுப்படுத்த அதன் பாகன் வைத்திருக்கும் "அங்குசம்" என்றும் தோட்டி என்ற சொல்லுக்கு ஒரு பொருள் இருக்கிறதாம். இங்கு அதுவே மிகப்பொருத்தம் என்பது தெளிவு!

"உரன்" என்னும் அங்குசம் - மன வலிமை (நெஞ்சு உரம்), திண்மை, அறிவு என்றெல்லாம் அகராதி சொல்கிறது Smile எல்லாமே பொருத்தம் தான்!

அப்படியானால், வரன்?  கண்டிப்பாக "மாப்பிள்ளை" கிடையாது Smile
சிறந்தவன் என்று ஒரு பொருள் இருக்கிறது, பொருந்துகிறது!

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
மனத்திண்மை எனும் அங்குசம் கொண்டு ஐம்புலன்களையும் அடக்குபவன்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
சிறந்தவனாகத் திகழ விதைக்கிறான்!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 2 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Aug 16, 2013 5:40 pm

#25
ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான்
இந்திரனே சாலுங் கரி


முதன் முதலாக ஒரு தனி ஆளின் பெயர் இங்கே குறளில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது!

திரு.இந்திரன் அவர்கள் Smile

தெளிவாகவே வள்ளுவர், "அகல் விசும்புவோர் கோமான் இந்திரன்" என்று அவனது பதவியையும் சொல்லி விடுகிறார். (அகன்ற வானில் உள்ளோரின் தலைவனான இந்திரன்)!

"சாலுங்கரி" என்பதில் உள்ள கரி = சான்று (எடுத்துக்காட்டு) என்று அகராதிகள் சொல்லுகின்றன.

அதாவது, "ஐம்புலன்களை அடக்கியவன் - ஐந்தவித்தான் - ஆற்றலுக்கு வானோர் தலைவன் இந்திரனே சான்று"  என்கிறார் வள்ளுவர்.

மொத்தத்தில், நேரடியான பொருள் கண்டுபிடிக்க எளிது தான் :

ஐந்தவித்தான் ஆற்றல்
ஐம்புலன்களை அடக்கியவனது ஆற்றலுக்கு

அகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலுங் கரி
அகன்ற வானில் உள்ளோர் தலைவன் இந்திரனே சான்றாய் இருக்கிறான்.

எந்த இந்திரன்? எப்படிச்சான்று?

பழைய நூல்கள் மற்றும் தத்தம் நம்பிக்கைகள் அடிப்படையில் பல கருத்துகள் உள்ளதை குறள் திறன் என்ற இந்த வலைத்தளம் மிக அழகாக விளக்குகிறது Smile

படிக்க நல்ல சுவை!

மற்றபடி எனக்கு ஒட்டு மொத்தத் துறவறத்திலும் இந்திரன் கதைகளிலும் அக்கறை இல்லை என்பதால், "புலன்களை சரியாகக் கையாளுதல் - அவித்தல் - அடக்குதல் - நற்பெயர் கொடுக்கும்" என்று இதன் சாரத்தை எடுத்துக்கொள்கிறேன் Smile

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 2 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Aug 19, 2013 4:21 pm

வார இறுதியில் எழுத இயலவில்லை, 2 நாட்கள் கழிந்து போயின.

என்றாலும், இன்று படிக்கும் குறள் ஒரு விண்மீன்!

இதற்காக சில நாட்கள் காத்திருந்தாலும் குழப்பமில்லை Smile


 

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 2 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Aug 19, 2013 4:36 pm

#26
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்


நான் முன்னமேயே சொன்னது போல, இது ஒரு விண்மீன்! 1330 குறள்களிலும்  பொறுக்கி எடுத்து மிகச்சிறந்தவை என நாம் வகையறுக்க முனைந்தால், அந்தக்கூட்டத்தில் இது கண்டிப்பாக இருக்கும்!

மிக எளிதில் பொருள் கொண்டு விட இயலும்.

செயற்கரிய செய்வார் பெரியர்
மேன்மையானவர்கள் செய்ய அரிதான செயல்களைச்செய்வார்கள்!

சிறியர் செயற்கரிய செய்கலாதார்
ஆனால், சிறுமையானோர் அவ்விதமான அரிய செயல்களைச் செய்ய இயலாதோர் ஆவர்!

இந்தக்குறளின் ஒரு சிறப்பு, நூலின் எந்த இயலில் வேண்டுமானாலும் இதை இடலாம்!

பாயிரம் - நீத்தார் பெருமையில் தான் சொல்ல வேண்டும் என்றில்லை! இல்லறம், துறவறம், அரசு , அமைச்சு, களவு, கற்பு  என்று எங்கு வேண்டுமானாலும் சொல்லலாம். எங்கும், என்றும் பொருந்தும் ஒரு உயர்ந்த கருத்து இது! ஏன், வாழ்க்கை வழி / நெறி என்றே இதைச்சொல்லலாம்!

கன்னத்தில் அறைவது போல் இது நம்மிடம் ஒரு கேள்வி கேட்கிறது:

நீ என்ன செயற்கரிய செயலைச்செய்திருக்கிறாய்?

ஒரு பெரிய ஆளாக முயற்சியாவது செய்கிறாயா?

இன்று முழுவதும் இந்த எண்ணம் நம் மனதில் நிலைக்கட்டும்!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 2 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Aug 20, 2013 5:06 pm

#27
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு


எளிது போல் தோன்றினாலும் ஆழமான பொருள் உள்ள குறள்!

முதலில் ஐம்புலன்கள் யாவை என்று பட்டியல் இட்டு விடுகிறார் ; பின்னர் அதன் "வகை தெரிந்தோரின்" பெருமை சொல்கிறார்.

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான்
சுவை (வாய் / நாக்கு), ஒளி (கண்), ஊறு (தொடு உணர்வு / உடல் / தோல்), ஓசை (செவி), நாற்றம் (நுகர்தல் / மூக்கு) என்ற ஐந்து புலன்கள் / உணர்வுகளின் வகை அறிந்தவர்

கட்டே உலகு
கட்டுப்பாட்டில் உள்ளது உலகம்

ஆழமான் பொருள் உள்ள இரு சொற்களை ஆராய்வோம் :

வகை தெரிவான்:
நீத்தார் பெருமையில் உள்ள குறள் என்ற அடிப்படையில் இதை வரையறுக்க முடியும். வெறுமென  ஐந்து புலன்கள் "இன்ன இன்ன வகை" என்று தெரிந்த ஆளைப்பற்றி இங்கே சொல்வதில்லை என்பது தெளிவு Smile  இந்தப்புலன்களின் தன்மைகள் குறித்த ஆழ்ந்த அறிவும் உணர்வும் மட்டுமல்ல, இவற்றை முழுக்கட்டுப்பாட்டில் வைக்கத்தெரிந்த ஆட்கள் என்று தான் இதைப்புரிந்து கொள்ள வேண்டும்!

உலகு:
முதல் குறளிலேயே உள்ள ஒரு சொல்!

உலகம் என்று எளிதாக அங்கே சொல்லி விட்டோம் - புவி என்றோ முழு மனிதக்கூட்டம் என்றோ முழு அண்டம் என்றோ எப்படி வேண்டுமானாலும் முதல் குறளில் பொருள் கொள்ள முடியும் (மண்ணுலகு, விண்ணுலகு, மனித உலகு எல்லாம் ஆதி பகவன் முதல் தானே?)

ஆனால், இங்கே?

இது மண்ணுலகல்ல, விண்ணுலகுமல்ல என்பது என் கருத்து.
ஐம்புலன்களை அடக்கிய பெரியோரால் மனித உலகினைக் கைப்பற்ற முடியும் என்பதாக வள்ளுவர் சொல்லுகிறார் என்று தோன்றுகிறது!
(மனிதர்கள் = உலகு, "ஆகு பெயர்")

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 2 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Aug 21, 2013 5:25 pm

#28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்


ஒரே ஒரு சொல் தான் இதில் விளங்கிக்கொள்ளக் கடினமானது. அதில் தான் குறளின் பொருளும் இருக்கிறது Smile

முதலில் முழுப்பொருளைப்பார்ப்போம் :

நிலத்து மறைமொழி
நிலத்தில் அதாவது உலகில் சிறந்து விளங்கும், நிலைத்து நிற்கும் "மறைமொழி"

நிறைமொழி மாந்தர் பெருமை காட்டி விடும்
நிறை மொழிகள் சொன்ன மனிதர்களின் பெருமையை எடுத்துக்காட்டி விடும்!

"மறை மொழி" என்றால் என்ன?

சிலர் "மறைந்திருக்கும் மொழி" என்று சொல்லி, மந்திரம் என்று பொருள் சொல்கிறார்கள். "அறவழி நூல்கள்" என்றும் சொல்லப்படுகிறது - அதாவது நெறி நூல்கள் / வேதங்கள் என்றெல்லாம் பொருள் சொல்கிறார்கள்.

அகராதி "மறை" என்ற சொல்லுக்கு ஒளிதல் / ஒளித்தல் தவிர வேறு என்னென்ன பொருள் தருகிறது?

வாலி, வைரமுத்து போன்ற திரை வித்தகர்களை அழைத்தால் "மறைவான இடம்" என்று ஆடைக்குள்ளே தேடக்கூடும் Wink அப்படியும் ஒரு பொருள் இருப்பதாக அகராதி சொல்லத்தான் செய்கிறது!
 
நிறைமொழி சான்றோர் பற்றிய குறள் என்பதால் நாம் தற்கால "சாமியார்கள்" என்று கருதாமல் வேறு பொருள் பார்ப்போம் Smile

தீது வராமல் காத்தல், கேடகம் என்றும் இதற்குப்பொருள் கொள்ள முடியும் Smile

இது தான் எனக்கு சரியாகப்படுகிறது!

உயிர் காக்கும் மறை மொழிகள் தாம் ஒருவர் பெருமைக்குரியவரா  இல்லையா என்று உணர்த்தும் சான்றுகள்!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 2 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Aug 21, 2013 6:36 pm

கொஞ்சம் மாற்றி யோசித்தால், இப்படியும் எடுத்துக்கலாம் - அதாவது "உயிர் நீத்தார் பெருமை" என்று நேரடி சொற்பொருள் கொள்ள முயன்றால்:

"நிலத்து மறைமொழி" = "இறந்து, நிலத்தில் புதைத்து மறைக்கப்படும்போது  ஒருவரைப்பற்றி மற்றவர்கள் சொல்லும் மொழிகள்"

நிறைமொழி மாந்தர் பெருமை காட்டி விடும் = "அவர் நல்ல மொழிகள் நிறைந்த பெரிய ஆள் தான் (அல்லது இல்லை) என்பதை அடையாளம் காட்டி விடும்"

இது தான் "பெட்டிக்கு வெளியில் சிந்தப்பதோ?"

Laughing

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 2 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Aug 22, 2013 3:18 pm

#29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது


பள்ளிப்பருவத்தில் படித்த குறள். அப்போது தமிழாசிரியர் சொல்லிக்கொடுத்த அதே பொருள் மு.வ. சொல்லுகிறார். ஆனால், கலைஞரும் சாலமன் பாப்பையாவும் வேறொரு - கிட்டத்தட்ட எதிர்மறையான - பொருள் சொல்கிறார்கள்.

நேரடிப்பொருள் முதலில் பார்ப்போம். அது மிக எளிது!

குணமென்னும் குன்றேறி நின்றார்
நல்ல குணங்கள் எனும் குன்றில் நிற்பவர்கள் (அதாவது உயர்ந்தவர்கள்)

வெகுளி
கோபம் / சினம் (வெகுளித்தனம் அல்ல)

கணமேயும் காத்தல் அரிது
நொடிப்பொழுது கூடத்தாங்க முடியாது!

இப்போது ரெண்டு வித உரைகள் தம்மில் உள்ள வேறுபாடு என்ன என்று பார்ப்போம்.

சுருக்கமாகச்சொன்னால் "யாரால் காக்க முடியாது?" என்பது தான் Smile

பள்ளிக்கூட விளக்கம் : யார் மீது அவர்கள் கோபம் பாய்கிறதோ, அவர்களால் தாங்க முடியாது (அழிந்து போவார்கள், பெருங்கேடு அடைவார்கள்)!

எதிர்க்கட்சி விளக்கம் : அவர்கள் அவ்வளவு நல்லவர்கள் என்பதால், கோபம் கணப்பொழுதில் காணாமல் போய்விடும். ("அவுங்க கோபத்தை அவுங்களால ரொம்ப நேரம் வச்சுக்க முடியாது" - உடனேயே குளிர்ந்து விடுவார்கள்)

நமது விருப்பப்படி எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 2 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Aug 23, 2013 5:17 pm

#30
அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்


முன்னமேயே நாம் பார்த்தது போல இறைவனுக்கு மரியாதைப்பன்மை தரவேண்டும் என்றெல்லாம் வள்ளுவர் மெனக்கெடவில்லை! அங்கே அறவாழி அந்தணன் என்று தான் சொல்லி இருக்கிறார்.

இங்கு நீத்தார் புகழ் பாடும்போது, அந்தணர் என்று பன்மையில் வருகிறது. (பலர் என்ற பொருளிலோ, மரியாதையாகவோ எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம்) Smile

மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்
மற்ற எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருள் (தண்மை = குளிர்ச்சி, கனிவு, அருள்) கொடுத்துக்கொண்டே வாழ்வதால்

அந்தணர் என்போர் அறவோர்
அப்படிப்பட்ட அறவோர் அந்தணர் எனப்படுவர்!

அருள் புரிதல் இறைவனின் குணம் என்றுள்ள பொதுவான புரிதலின் அடிப்படையில், அருள் நிறைந்த அறவழியில் நடப்போர் இறைவனின் குணத்தை வெளிக்காட்டுகின்றனர் என்பது இதன் உட்பொருள்.

வேறொரு கணக்கில் பார்த்தால், நீத்தார் இறைவனோடு சமன் படுத்தப்படுகிறார்கள் என்றும் கொள்ளலாம். முன்னோர் மற்றும் துறவிகளை வழிபடும் பண்பாடு தமிழக நடைமுறையில் தொன்று தொட்டே இருந்து வருகிறது என்பது தெளிவு!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 2 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Aug 26, 2013 8:06 pm

#31
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
(அறன் வலியுறுத்தல் அதிகாரம், பாயிரவியல், அறத்துப்பால்)

நேரடியான பொருள் கொள்ளுதல் இந்தக்குறளுக்கும் எளிது தான் Smile

சிறப்புஈனும் செல்வமும் ஈனும்
சிறப்பு (அல்லது புகழ்),  அதனுடன் பொருளும் தர வல்லதான

அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு
அறத்தினை விட மேன்மையானது உயிர்களுக்கு வேறென்ன இருக்கிறது? (ஒன்றும் இல்லை என்று பொருள்)

ஆனால், நமக்கு வரும் கேள்வி - "அறம்" என்றால் என்ன? Smile

தமிழகத்தில் இந்தக்குழப்பம் நிறைய இருக்கிறது என்பது அங்குள்ள "கவிப்பேரரசர்" வைரமுத்து எழுத்தாளர் ஜெயகாந்தனின் "அறச்சீற்றம்" என்றால் என்ன என்று விளக்கியதைப் படித்தவர்களுக்கு விளங்கும் Wink

அது கிடக்கட்டும், உருப்படியான பொருள் புரிதல் அவ்வளவு கடினம் ஒன்றுமில்லை! திருக்குறளின் முதல் பாலே அறம் தானே Smile

"நன்மை" "நல்லது" என்பது பேச்சு வழக்கில் உள்ள சொற்கள். இதன் எழுத்து / செய்யுள் வடிவமே "அறம்" Smile

இல்லறம் - இல்லத்தில் உள்ளோரின் நன்மை
அறநெறி = நன்மையான வழி, நல்லது செய்யும் வழி, நல்லவனாக இருக்கும் வாழ்க்கை முறை Smile

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 2 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Aug 27, 2013 7:42 pm

#32
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு


முதலில் இந்தக்குறளின் பொருள் பார்த்து விடுவோம். அதன் பின் ஒரு இலக்கண விவரம் பார்ப்போம்.

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை
அறத்தினை விட மேலாக ஆக்கம் (வளம், நன்மை, வலிமை, செல்வம்) உள்ள ஒன்றுமில்லை. (ஆக்கம் தருவது என்றும் கொள்ளலாம்).

அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு
அதனை மறப்பதை விட மேலான கேடும் ஒன்றுமில்லை!

சென்ற குறளிலும் "னூஉங்கு" என்று வருவதைக்கண்டோம். இதிலும் அதே போல, மூன்று மாத்திரை உள்ள "ஊ+உ" வருவதைக்காண்கிறோம்.

முன்னமேயே மழைச்சிறப்பில் "கெடுப்பதூஉம்" என்ற இடத்திலும் இதே போல் வரும் ஒன்றைக் கண்டிருக்கிறோம். ஒரு வேளை வெண்பாவின் தளைக்காக இவ்விதம் கூட்டியதோ என்று அங்கு ஐயம் கொண்டிருந்த போதிலும், அது மட்டுமல்ல காரணம் என்றும் குறிப்பிடப்பட்டது.

இப்படி ஒலி அளவு கூட்டுதலை "அளபெடை" என்று தமிழில் வரையறுக்கிறார்கள்Smile

முழுமையான தகவலுக்கு அளபெடை குறித்த விக்கிப்பீடியா சென்று படிக்கலாம்.

இப்போதைக்கு இது "உயிரளபெடை" (உயிரெழுத்தின் அளவு கூட்டுதல்) என்பதோடு நிறுத்திக்கொள்வோம்.

இன்னொரு முறை வரும்போது, இன்னும் கொஞ்சம் படிக்கலாம்.

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 2 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Aug 28, 2013 4:52 pm

#33
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்


நிரம்ப அடைத்து வைத்திருக்கும் பெட்டகம் போன்ற குறள்! ஒவ்வொரு சொல்லும் பொருள் வன்மை உடைய ஒன்று.

செல்லும் வாய் எல்லாம்
செல்லும் வழிகள் / இடங்கள் / செயல்களில் எல்லாம்

ஒல்லும் வகையான்
எவ்வளவு இயலுமோ அவ்வளவு (முடிந்த அளவுக்கு)

ஓவாதே
விடாமல் (இடைவிடாமல் என்றும் கொள்ளலாம்)

அறவினை செயல்
அறம் செய்யுங்கள்!

இந்தத்தமிழ் நூல் எப்பேர்ப்பட்ட ஒரு ஊக்குவிப்பு தம் மக்களுக்குக் கொடுத்திருக்கிறது!

அருமை!

என்ற போதிலும், தற்காலத்தில் தமிழகத்தில் இடைவிடாமல் / ஓயாமல்  செய்யப்படும் ஒரே செயல் என்ன என்பது சிந்தனைக்குரியது!

நிறையப்பேரின் வாழ்வில் அது "தொலைக்காட்சி காணல்" தானோ என்ற  (சரியான) ஐயம் சிந்திப்போர் நடுவில் உள்ளது. Embarassed

மட்டுமல்ல, திரையில் காணும் நிகழ்வுகளில் என்ன அளவுக்கு "அறம்" உள்ளது என்பது இன்னொரு கேள்வி!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 2 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Aug 29, 2013 4:21 pm

#34
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற


இந்த அதிகாரத்தின் முதல் குறளில் அறனுக்கான பொருள் குறித்து யோசித்தோம். இங்கு அதற்கான ஒரு வரையறை அழகாக வள்ளுவர் தருகிறார்!

அனைத்தறன்
அறம் எல்லாமும்

மனத்துக்கண் மாசிலன் ஆதல்
மனதில் குற்றம் / அழுக்கு இல்லாமல் (தூய்மையாய்) ஆதல் தான்!

ஆகுல நீர பிற
அப்படி இல்லாத மற்றவை வெறும் ஆரவாரம் (நடிப்பு)  மட்டுமே!

உள்ளத்தில் என்ன உள்ளதோ அதன் அடிப்படையிலேயே பேச்சும், செயல்களும் (நீண்ட கால அளவில்) நெறிப்படுத்தப்படுகின்றன.

அப்படியானால், அதை ஒளித்து நன்மை செய்வது போல் நடிக்க முடியாது என்று பொருள் அல்ல.  கண்டிப்பாக முடியும் என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் தனி மற்றும் பொது வாழ்வில் காண இயலும்.

ஆனால், அப்படிப்பட்டவை அறன் அல்ல! மட்டுமல்ல, நாள் செல்லச்செல்ல வெளிப்பட்டு விடும் என்றே இதைப்புரிந்து கொள்ள வேண்டும்!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 2 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Aug 30, 2013 3:02 pm

#35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்


முன் குறளில் அறம் என்ன என்று வரையறுத்து விட்டு இக்குறளில் அது என்ன அல்ல என்று சொல்லுகிறார்.

செயத்தக்கன / அல்லாதன என்று பட்டியல் இடுதல் உலக வழக்கு Smile"ஒழுக்க நெறி நூல்" என்ற விதத்தில் அதை இங்கு வள்ளுவர் அழகாகவே செய்வது மெச்சத்தக்கது!

பொருள் கொள்ளுதல் எளிதே!

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
பொறாமை, பேராசை, கோபம், தீய சொல் எனப்படும் இந்த நான்கும்

இழுக்கா இயன்றது அறம்
தவிர்த்து நடப்பது தான் அறவழி!

சொல்லுக்கு மட்டுமே "இன்னா" என்று குறிப்பிட்டிருந்தாலும், மற்ற மூன்றுக்கும் அது ஒரு அளவில் பொருந்தும் என்பது நடைமுறை.

எடுத்துக்காட்டாக, அவா - ஆசை / ஆவல் - என்றாலே தீமை என்று கொண்டால் குழப்பம் வரும்.

"அறவழியில் நடக்க வேண்டும்" என்பதே ஒரு ஆசை தானே? Smile அதனால் தானோ என்னமோ, "பேராசை" என்று பல உரைகளும் சொல்லுகின்றன.

அது போலத்தான் "வெகுளி"யும். "தீமை கண்டு பொங்கும்" வெகுளி அறமா இல்லையா என்ற கேள்வி வரும். (மன்னிக்கவும், நான் "அறச்சீற்றம்" பற்றி அல்ல பேசுவது Wink )

ஆக மொத்தம், "இன்னா" வகைப்பட்ட அழுக்காறு, அவா, வெகுளி, சொல் என்பன அறவழிக்கு எதிரிகள்!

app_engine

Posts : 10115
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 2 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 40 Previous  1, 2, 3 ... 21 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum