Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 22 of 40 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 31 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 22 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Sep 23, 2015 5:28 pm

#493
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து 
போற்றார்கண் போற்றிச் செயின்

ஆற்றாமை என்பது நாம் அடிக்கடி வழங்கும் சொல். 

"இயலாமை / ஆற்றல் இல்லாமை" என்றெல்லாம் வரும். அவ்விதத்தில், ஆற்றார் = வலிமை இல்லாதவர் & 
ஆற்றும் = செயலைச் செய்ய முடியும். 

இயலாதவரும் இடமறிந்து செயல்பட்டால் ஆற்றலுடன் செயல்படுவர் என்று அறிவுறுத்தும் குறள் Smile

இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின்
இடம் அறிந்து, தமக்குப்பாதுகாப்பான முறையில் செயல்பட்டால்

ஆற்றாரும் ஆற்றி அடுப
வலிமை குறைந்தவரும் போரில் வெல்ல இயலும்!

அடு என்பதற்கு சமையல் (அடுப்பு), நெருங்குதல் (அடுத்த வீடு) உள்ளிட்ட பல பொருட்கள் சொல்லபடுகின்றன. வன்முறையான சண்டை அவற்றில் ஒன்று. (அட்டூழியம், அடாத செயல் போன்ற பயன்பாடுகள்).

அவ்விதத்தில், "அடுப" என்பது மன்னனின் போர் வெற்றியைக் குறிப்பிடுவதாக இந்தச்சூழமைவில் நாம் கொள்ளலாம்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 22 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Sep 24, 2015 10:03 pm

#494
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து 
துன்னியார் துன்னிச் செயின்

பகைவர்களின் எண்ணங்களை எப்படித்தகர்க்கலாம் என்று மன்னருக்கு வள்ளுவர் சொல்லித்தரும் குறள் !

"எண்ணம் இழப்பர்" என்பது மிகவும் அழுத்தமான ஒன்று!

எதிர்த்து செயல்படுவதற்கும் மேல். 

"அந்த சிந்தனை கூட மனதில் வராமல் போகும்" என்னுமளவுக்கு  வலிமையான பாதுகாப்பு நடவடிக்கை இதுவே என்கிறார்.
   
துன்னல் என்பது சிந்தனை, செயல், பொருந்துதல், செறிதல், தைத்தல் என நிறையப் பொருட்களில் வர முடியும். இங்கே, பொருத்தம் என்று எடுத்துகொள்ள வேண்டும்.

இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின்
இடம் அறிந்து (சரியான இடத்தில்) பொருந்தியவராய் உரிய முறையில் செயல் பட்டால்

எண்ணியார் எண்ணம் இழப்பர்
(போரிட, வெல்ல, பகைக்க) எண்ணியவர்கள் அத்தகைய எண்ணத்தை இழப்பார்கள்!

அதன் பின் துணிய மாட்டார்கள், அச்சப்படுவார்கள் என்றெல்லாம் கூட எடுத்துக் கொள்ள முடியும். 

அவர்கள் மனதில் இனி அந்த எண்ணமே இல்லாமற்போகும் என்கிறார் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 22 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Sep 25, 2015 7:09 pm

#495
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் 
நீங்கின் அதனைப் பிற

காலமறிதல் அதிகாரத்தில் காக்கை-கூகை சண்டை. 

அது போல இங்கே முதலைக்கும் மற்ற விலங்குகளுக்கும் இடம் வழியே கிட்டும் "கை ஓங்குதல்" Smile

பள்ளிக்காலம் முதலே பலருக்கும் நன்கு அறிமுகமான குறள்!

நெடும் புனல் = நீண்ட (கரையை உடைய) புனல்  - புனல் என்பது ஆறு என்றும் நீர் என்றும் பொருள் படும்.

அப்படியாக, நெடும் புனல் என்பது ஆறு அல்லது நீண்ட கரையை உடைய நீர்ப்பரப்பு (குளம், ஏரி, கடல் எல்லாம்)

நெடும்புனலுள் வெல்லும் முதலை
நீருக்குள் (இருக்கும் போது) முதலை வெல்லும்

புனலின் நீங்கின் அதனைப் பிற அடும்
நீருக்கு வெளியில் சென்றாலோ, அதை மற்ற விலங்குகள் அடித்து வென்று விடும் 

இடத்தைப் பொறுத்து வலிமை கூடுவதற்கு முதலை மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

சிறுவயதில் படித்த "குரங்கு / முதலை / நாவல்பழம்" கதை மனதில் வந்தது Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 22 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Sep 28, 2015 6:01 pm

#496
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் 
நாவாயும் ஓடா நிலத்து

தேர் & நாவாய் (கப்பல்) இந்தக்குறளில் உவமைகள். 

சென்ற குறளுக்கும் இதற்கும் உள்ள ஒற்றுமை தண்ணீர் பரந்திருக்கும் / இல்லாத இடங்கள் Wink

மற்றபடி, சிறு குழந்தைக்கும் புரியும் அளவிலான எளிய பொருள் உள்ள செய்யுள் Smile

கால் வல் நெடுந்தேர் கடலோடா
வலிமையான கால்கள் (சக்கரங்கள்) இருந்தாலும் உயர்ந்த தேர் கடலில் ஓடாது 
(அமிழ்ந்து விடும், ஆகவே அதற்குரிய இடமான தரையில் மட்டுமே ஓடலாம்)

கடலோடும் நாவாயும் நிலத்து ஓடா
(அதே போல) கடலில் ஓடக்கூடிய கப்பலும் நிலத்தில் ஓடாது!
(வெறுமென நிற்கும் - நீருக்குள் அதைத் தள்ளி விடவேண்டும்)

எவ்வளவு பெரியனவாக, வலிமை வாய்ந்தனவாக இருந்தாலும் இவற்றுக்கு உரிய இடத்தில் மட்டுமே செயல்பட முடியும்!

அல்லாத இடத்தில் செயலற்ற நிலையே! 

நாமும் உரிய இடத்தில் இல்லையென்றால் எவ்வளவு வலிமை, அறிவு, திறமை எல்லாம் இருந்தாலும் வீணாகத்தான் போவோம் Sad

"யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே" - கண்ணதாசன் பாடல் Laughing

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 22 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Sep 29, 2015 6:04 pm

#497
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை 
எண்ணி இடத்தால் செயின்

அஞ்சாமைக்கு எதுகை எஞ்சாமை Smile

என்ன ஒரு இனிமையான சொல் இந்த "எஞ்சாமை" Smile

எஞ்சுதல் = மிச்சம் / மீதம் இருத்தல். 

எஞ்சாமை = மீதி இல்லாமல் இருத்தல்

இந்த இடத்தில் "இன்னும் செய்வதற்கு ஒன்றும் எஞ்சாமல் / மீதி இல்லாமல் இருத்தல், முழுமையாக எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்த நிலை"  Smile

அழகான சொல்லாட்சியுடன் நல்ல பொருளும் கொண்ட செய்யுள்!

எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின்
தேவைகள் ஒன்றும் மீதி வைக்காமல் (குறைவில்லாமல்) சிந்தித்து, இடம் அறிந்து செய்தால் 

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா
(அத்தகைய செயலுக்கு) அஞ்சாமை அல்லாமல் வேறு ஒரு துணையும் வேண்டியதில்லை!

அச்சமின்மை, இடம் அறிதல், குறைவின்மை - இவை இருக்கையில் வேறு துணை எதற்கு என்கிறார் வள்ளுவர்!

உண்மை தான் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 22 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Sep 30, 2015 9:40 pm

#498
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் 
ஊக்கம் அழிந்து விடும்

இடத்தின் அருமையை விளக்க சிறுபடை X உறுபடை நிலைமையை இங்கே பயன்படுத்துகிறார்.

அப்படியாக, நேரடியாக அரசியல் / போர் பற்றிச்சொல்லும் குறள்!

உறு = பெரிய என்பது தெரிந்ததே! 
("ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு") Smile

சிறுபடையான் செல்லிடம் சேரின்
சிறிய படை (அதாவது, வலிமை குறைந்த படை) என்றாலும் உரிய இடத்தில் சேர்ந்திருந்தால்

உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும்
பெரிய படையும் (அதை எதிர்ப்பதற்கான) ஊக்கம் இல்லாமல் ஆகி விடும்!

இடத்தின் அடிப்படையில் வலிமை, ஊக்கம் எல்லாம் பெரும் மாறுதலை அடையும் என்கிறார்.

வரலாற்றில் பல முறை கண்டிருக்கும், படித்திருக்கும் உண்மை தான் இது.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 22 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Sun Oct 04, 2015 3:41 pm

#499
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் 
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது

"பாதுகாப்பான அரண்" என்பதற்கு இங்கே பயன்படும் சொல் "சிறை" Smile 

ஆக, பழந்தமிழில் சிறை என்பது குற்றவாளிகளை அடைத்து வைக்கும் இடத்துக்கு மட்டுமல்ல, நம்மையே பாதுகாப்பாக ஆக்கிக்கொள்ள இடும் அரணுக்கும் பொருந்தும் என்று மனதில் கொள்வோம்.

"ஒட்டல்" என்பதை எல்லா உரையாசிரியர்களும் "தாக்குதல்" என்று பெயர்க்கிறார்கள். அகராதியில் அந்தப்பொருள் காணவில்லை.

"உட்கொள்ளல் / உட்கவர்தல்"  (கைப்பற்றுதல், தனது நாட்டோடு சேர்த்தல்) என்ற பொருளில் வருகிறதோ என்று நினைக்கிறேன்.

அவ்விதத்தில், இது வன்முறையான, வேண்டாத செயல். அதற்கு எதிரான எச்சரிக்கை என்றும் கொள்ளலாம் Smile

மாந்தர் உறைநிலம்  = மனிதர் வாழும் / குடியிருக்கும் நிலம். 

அதை உட்கொள்ள நினைத்தல் நல்லதன்று!

சிறைநலனும் சீரும் இலரெனினும்
பாதுகாப்பான அரணும் மற்ற சிறப்புகளும் இல்லாதோர் என்றாலும்

மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது
மாந்தர் வாழும் இடத்தை உட்கவர்தல் கடினம்

இடம் அறிதல் என்பதில் மன்னனுக்கு மிகச்சிறந்த பாடம் இந்தக்குறள்!

மன்னராட்சி இல்லாத நம் நாட்டிலும் / நம் காலத்திலும் அரசியல்வாதிகள் மற்றவர்களது இடங்களைப் பிடித்தெடுக்க முயலுவதும் வன்முறை செய்வதும் அதனால் அவர்களுக்கும் மற்றோருக்கும் தீய விளைவுகள் வருவதும் தெரிந்ததே! Sad

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 22 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Oct 05, 2015 7:51 pm

#500
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா 
வேலாள் முகத்த களிறு

காலம் அறிதலைப் பறவைகள் கொண்டு விளக்கிய வள்ளுவர் இடம் அறிதலுக்கு விலங்குகளைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது!

முதலை பற்றி முன்னர் ஒரு குறளில் கண்டோம், இங்கு யானை!

"முகத்த" என்பது அருமையான ஒரு சொல்லாடல் Smile

முகத்தல் அளவை என்று பள்ளியில் படித்தது நினைவுக்கு வருகிறது. (மொள்ளுதல் / அள்ளுதல் / தோண்டுதல் என்றெல்லாம் பொருள்).

இங்கு ஆண் யானை தன் கொம்பு கொண்டு வேலேந்திய வீரனைக் குத்தித் தூக்குதலை "முகத்த" என்கிறார்! 
(முவ: கோர்த்தெடுத்த)

கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு
வேலேந்திய வீரர் கண்டு அஞ்சாமல் குத்தித்தூக்கிய ஆண் யானையை

களரில் காலாழ் நரியடும்
(அதன்) கால் சேற்று நிலத்தில் அமிழ்ந்து சிக்கிக்கொண்டால் நரி கூட வென்று விடும்!

தவறான இடத்தில் இருந்தால் உங்கள் வலிமை, அச்சமின்மை எல்லாம் பயனற்றவை என்று அடித்துச் சொல்லும் குறள்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 22 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Oct 05, 2015 11:25 pm

500 என்பது ஒரு சிறிய மைல் கல் என்பதால், பிடிஎஃப் வடிவத்தில் இங்கே:

http://www.mediafire.com/download/2bgfrsqhu9qi7g3/kural_inbam_500.pdf

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 22 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Oct 06, 2015 6:07 pm

#501
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப்படும்

(பொருட்பால், அரசியல், தெரிந்து தெளிதல் அதிகாரம்)

- அந்த ஆள் எப்படி, நல்லவரா கெட்டவரா?

- இந்த வேலைக்கு அவன் தகுதியானவனா இல்லையா?

- நம்ம பெண்ணுக்கு இந்தப்பையன் பொருத்தமாக இருப்பானா?

அடிக்கடி நாம் நேரிடும் கேள்விகள் இவை போன்றவை - ஒரு ஆள் எப்படிப்பட்டவர் என்று "தெரிந்து தெளிய" இந்த அதிகாரத்தில் கொடுத்திருக்கும் வழிமுறைகள் மிகவும் பயனுள்ளவை.

அரசு வேலைக்கு எப்படிப்பட்ட வழியில் ஆள் எடுக்க வேண்டும் என்று சொல்லும் முதல் குறளில் இருந்து இந்த அதிகாரம் முழுவதுமே நாம் சிறந்த அறிவுரைகளைக் காண முடியும்!

அறம்பொருள் இன்பம் உயிரச்சம்
அறம், பொருள், இன்பம், உயிருக்கான அச்சம் -

நான்கின் திறந்தெரிந்து தேறப்படும்
இந்த நான்கிலும் ஒருவரது திறனை (அளவை) ஆராய்ந்தே அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

அறம் = நன்மை செய்வதற்கான திறன்

பொருள் = செல்வத்தைக் கையாளும் திறன்

இன்பம் = இன்பம் துய்ப்பதற்கான விழைவு

மேற்சொன்ன மூன்றும் திருக்குறளின் பால்கள் என்பதை நினைவில் கொள்வோம் Smile

உயிர் அச்சம் = தன்னுயிர் (மற்றும் பிறரது உயிர்) குறித்த அச்சம் (இழப்போமோ,  போய் விடுமோ, கொல்லலாமோ)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 22 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Oct 07, 2015 9:57 pm

#502
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் 
நாணுடையான் கட்டே தெளிவு

முழுக்குறளின் பொருள் எளிதில் பிடிபடும் என்றாலும், ஒவ்வொரு சொல்லாகப் பார்க்கையில் பொருள் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதாக இல்லை.

"வடுப்பரியும்" & "கட்டே தெளிவு" என்ற பகுதிகள் குறிப்பாக எனக்குக் கொஞ்சம் வேலை வைத்தன Smile

வடுப்பரியும் = வடு + பரியும், இங்கே வடு என்பது குற்றம் / பழி என்ற பொருளிலும், பரிதல் என்பது அஞ்சுதல் என்ற பொருளிலும் வருவதாக அகராதி எடுத்துக்காட்டுகிறது

கட்டே - "இடத்தில்" (கண்ணே) என்பதாகத் தோன்றுகிறது.

தெளிவு - தெளிதல் (தெரிந்து கொள்ளுதல், புரிதல், நம்புதல் என்றெல்லாம் சொல்கிறார்கள்)

மற்றபடி, குறளின் பொருள் நேரடியானது. எப்படிப்பட்ட ஆளை அரசுப்பணிக்கு எடுக்க வேண்டும் என்ற முன் குறள் போன்ற அதே இழை கொண்டது. 
("யாருக்கு ஓட்டுப் போட வேண்டும்" என்று அரசியல் ஈடுபாடு உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம் Smile )

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி
சிறந்த குடியில் (குடும்பத்தில்) பிறந்து, குற்றங்கள் இல்லாமல் 

வடுப்பரியும் நாணுடையான்
பழிக்கு அஞ்சி (அதனால் வரக்கூடிய கெட்ட பெயர் குறித்த) நாணம் உடையவன் 

கட்டே தெளிவு
இடத்தில் நம்பிக்கை கொள்க!

வேலைக்கு ஆள் எடுக்கும் போது அவர்களது குடி மற்றும் குற்றப்பின்னணி ஆராய்வதும், பழி குறித்த அவரது மனநிலை அறிவதும் மிகவும் தேவையானவை.

இவற்றைத் தெரிந்து தெளிய வேண்டும் என்று அன்று மன்னனுக்குச் சொன்னது  நமக்கு இன்றும் வழிகாட்டி!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 22 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Oct 08, 2015 6:27 pm

#503
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் 
இன்மை அரிதே வெளிறு

"அறிவில் முழுமை உள்ளவன் என்று யாரும் இல்லை" - இந்தக்கருத்தைக் கொஞ்சம் சுற்றி வளைத்துச் சொல்லும் குறள்.

அதாவது, "நுணுக்கமாக ஆராய்ந்தால் எப்படிப்பட்ட அறிவாளியிடமும் ஏதோ ஒன்றில் அறியாமை இருப்பதைக் காண முடியும்" என்கிறார் வள்ளுவர்.
(வெளிறு = அறியாமை, வெளிறு இன்மை = அறியாமை இன்மை, எதிர்ச்சொல்லுக்கு எதிர்ச்சொல்)

Smile

உண்மை தான்!

தெரியுங்கால்
ஆராயும் பொழுது

அரியகற்று ஆசற்றார் கண்ணும்
அரிய (நூல்களைக்) கற்ற குற்றமற்றவர்களிடத்திலும் 

வெளிறு இன்மை அரிதே
அறியாமை இல்லாத நிலை அரிதே!
(அறியாமை இருந்தே தீரும் என்று பொருள்!)

ஆகவே, அறிவாளிகள் / பெரியோர் / சான்றோர் சில நேரங்களில் பிழையான கருத்தைச் சொன்னால் திடுக்கிட வேண்டியதில்லை. 

இதைப்பற்றி சற்றே ஆழமாக எண்ணினால், குறையற்ற முழுமையான மனிதன் என்று யார் உண்டு? Smile
(அறிவு மட்டுமல்ல, எப்படிப்பார்த்தாலும்)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 22 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Oct 09, 2015 10:49 pm

#504
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் 
மிகைநாடி மிக்க கொளல்

நம் கால மேலாண்மை அறிஞர்கள் சொல்லிக்கொடுக்கும் கோட்பாட்டைப் பலநூறு ஆண்டுகளுக்கு முன் வள்ளுவர் செய்த பதிவு Smile

ஒரு பொறுப்பில் யாரையாவது வைக்கு முன் என்ன பார்க்க வேண்டும் என்று சொல்லும் குறள். 

நம்மில் பலருக்கும் பள்ளியில் படித்தது நினைவுக்கு வரலாம்!

குணம்நாடிக் குற்றமும் நாடி
(ஒருத்தருடைய) நிறைகளையும் குறைகளையும் ஆராய்ந்து

அவற்றுள் மிகைநாடி
அவற்றுள் எவை மிகுதி என எண்ணிப்பார்த்து

மிக்க கொளல்
கூடுதல் உள்ளதன் அடிப்படையில் தேர்ந்தெடுங்கள்!

ஒரு ஐயம் - குணம் தமிழ்ச்சொல்லா, வடமொழியா? ("குண்" என்று இந்தியில் உள்ள சொல்லுக்கும் இதற்கும் ஒரே பொருள்.)

நான் இந்தச்சொல்லை முடிந்த அளவு பயன்படுத்தாமல் "பண்பு" என்றே இதுவரை எழுதி வருகிறேன். 

என்றாலும், வள்ளுவரே குறளில் இடும் போது நானெல்லாம் என்ன பெரிய ஆளா? Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 22 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Oct 12, 2015 7:37 pm

#505
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் 
கருமமே கட்டளைக் கல்

மற்றுமொரு "பள்ளிக்காலத்திலேயே எனக்குப் பழக்கம்" குறள் Smile

நேரடியானதும் எளிமையானதுமான பொருள்!

கட்டளைக்கல் = உரை கல் (உராய்ந்து பார்த்து "இது தங்கமா இல்லையா" என்று கண்டுபிடிக்க உதவும் கல்).

"ஒருவர் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து தெளிய அவரது செயல்களைப் பாருங்கள்" என்று நேரடியாகச் சொல்லுகிறார் வள்ளுவர்.  

தத்தம் கருமமே
அவரவர் செய்யும் செயல்களே 

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்
பெருமைக்குரியவர்களா அல்லது இழிவுக்குத் தகுந்தவர்களா என்று 

கட்டளைக் கல்
மதிப்பிடுவதற்கான உரை கல்

ஒருவிதத்தில் பார்த்தால் "குலைக்கிற நாய் கடியாது" என்பதற்கான மறுபக்கம் Wink

நாய் திறமையுள்ளதா இல்லையா என்று அதன் "கடி"யை வைத்து மதிப்பிட வேண்டும் Laughing

நல்ல சந்தநயம் உள்ள, இனிய எதுகையுடன் அமைந்த குறள்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 22 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Oct 13, 2015 7:54 pm

#506
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் 
பற்றிலர் நாணார் பழி

அழகான பொருள் உள்ள குறள்!

ஆனால் செய்யுள் உத்தி? மீண்டும் எதிர்ச்சொல்லுக்கு எதிர்ச்சொல் என்ற முறையில் சுற்றி வளைத்துச் சொல்லுதல் Embarassed 
(சட்டெனப் பார்த்தால் குழப்பும் என்றாலும் செய்யுளில் இதெல்லாம் அடிக்கடி வருவதே)!

அதாவது "பற்றிலர்" "அற்றார்" என்று எதிருக்கு எதிர்ச்சொல். 

ஆக மொத்தம், "பற்றுள்ளவர்" என்று எடுத்துக்கொள்ள வேண்டும்!

இதைத் தெளிவாக்கி விட்டால் பொருள் புரிதல் எளிது Smile

மற்றவர் பற்றிலர் நாணார் பழி
மற்றவர்கள் மீது பற்றில்லாதவர்கள் பழிக்கு நாண மாட்டார்கள்! 

அற்றாரைத் தேறுதல் ஓம்புக
(ஆதலால், அப்படி) இல்லாதவர்களைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்!

மனிதர் மீது பற்றுள்ளவர்கள் (உறவினர், நண்பர் என்று தொடர்புகளுடன் வாழ்பவர்கள்) கெட்ட செயல் செய்து பழி வருவதைப் பொதுவாக விரும்ப மாட்டார்கள். 

"பேர் கெட்டுப்போகுமே, குடும்ப மானம் என்ன ஆவது, நாலு பேர் நம்மைப்பற்றி நல்லதாக நினைக்க வேண்டுமே" என்றெல்லாம் சிந்திப்பார்கள்!

அப்படிப்பட்ட பற்றில்லாதவர்கள் "யார் என்னை என்ன செய்ய முடியும்" என்று பழிக்கு அஞ்சாத மனநிலையில் திரிவார்கள். "வேலைக்கு அப்படிப்பட்டவர்களை எடுக்காதே" என்கிறார் வள்ளுவர்.
 
உறவு, நட்பு என்ற இணைப்புகளுடன் உள்ளவர்கள் பொறுப்புக்குத் தகுந்தவர்கள்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 22 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Oct 14, 2015 6:59 pm

#507
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் 
பேதைமை எல்லாந்தரும்

இரண்டு புதிய சொற்கள் படிக்க வைத்த குறள் Smile

காதன்மை = காதல் = அன்பு 
கந்தா = கந்து = பற்றுக்கோடு / பற்றுதல் 

"நமக்கு வேண்டியவன் அல்லது பிடித்தமானவள்" என்பது போன்ற உதவாக்கரையான எண்ணங்களால் ஒருத்தரை வேலைக்கு (அல்லது பொறுப்புக்கு) எடுக்கக்கூடாது என்று சொல்லும் குறள்.

மாறாக, "அவருக்கு வேண்டிய அறிவிருக்கிறதா?" என்று தெரிந்து தெளிய வேண்டும்!

"இதென்ன புதுமை, மிக அடிப்படையான ஒன்று தானே, எங்களுக்குத் தெரியாதா?" என்று நம்மில் பலரும் நினைக்கலாம். ஆனால், நடைமுறையில் பல நேரத்திலும் "அறிவு / திறமை" போன்ற அடிப்படைகளை "அன்பு / பற்றுதல்" தகர்த்து விடுவதை நாம் நாளும் பார்க்கலாம் Embarassed

காதன்மை கந்தா
(ஒருவர் மீதுள்ள) அன்பின் பற்றுதலால்

அறிவறியார்த் தேறுதல்
அறியாமை பிடித்தவரை(பொறுப்புக்கு)த் தெரிந்தெடுத்தால்

பேதைமை எல்லாந்தரும்
எல்லா விதத்திலும் மடமையையே கொடுக்கும்!

"முழு / வடிகட்டின முட்டாள்தனம்" என்று வழக்கத்தில் சொல்லுவதைத்தான் "பேதைமை எல்லாம்" என்கிறார் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 22 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Oct 15, 2015 9:12 pm

#508
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்


வழிமுறை என்று இங்கே வரும் சொல்லுக்கு உரையாசிரியர்கள் இரு வகையில் பொருள் சொல்லுவதைக் காண முடிகிறது.

1.  செயல் (அல்லது செய்யும் முறை)
2.  வழித்தோன்றல்கள் (பின் தலைமுறைகள்)

"தரும்" என்ற கடைசிச்சொல்லின் அடிப்படையில் பார்த்தால் முதல் பொருளே எனக்கு உவப்பாகப் படுகிறது.

தலைமுறைகள் என்ற பொருளில் சொல்லி இருந்தால் வள்ளுவர் "இடும்பை வரும் / பெறும்" என்று சொல்லி இருக்கலாம் அல்லவா?

அப்படியாக, நான் முதல் பொருளையே தெரிந்து கொள்கிறேன் Smile

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
ஆராயாமல் ஒருவனைத் தெரிந்து தெளிபவனின் வழிமுறை

தீரா இடும்பை தரும்
தீராத துன்பங்களைத் தரும்!

"போகாத ஊருக்கு வழி" என்று வேடிக்கையாகச் சொல்லுவதுண்டு.  அத்தகைய ஒன்று தான் ஒருவனை ஆராயாமல் தெரிந்தெடுப்பது Smile

என்றாலும், இன்னொரு விதத்தில் பார்த்தால், ஒரேயடியாக ஆராய்ந்து தள்ளுவதும் காலத்தையும் பொருளையும் வீணடிக்க வழியாகும்.

சமநிலை தேவை!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 22 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Oct 16, 2015 9:02 pm

#509
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்


தேறுக (தெளிக) மற்றும் தேருக (ஆராய்க) என்ற சொற்களைக்கொண்டு வள்ளுவர் ஆடும் சொற்சிலம்பம் Wink

மற்றபடி பொருள் காண அவ்வளவு கடினம் இல்லை. என்றாலும், இரண்டாவது பகுதி அவ்வளவு தெளிவாக இல்லை Sad

யாரையும் தேராது தேறற்க
யாரையும் ஆராயாமல் தெளிய / தெரிந்தெடுக்க வேண்டாம்

தேர்ந்தபின்
ஆராய்ந்த பின்

தேறும் பொருள் தேறுக
(அந்த ஆளிடம்) தெளிவான பொருளைத் தேர்ந்தெடுங்கள்

இரண்டாம் பகுதிக்கு இருவிதமான உரைகள் இருக்கின்றன.

1. ஆராய்ந்த பின்னர் அந்த ஆளிடம் நம்பிக்கை வையுங்கள் / ஐயப்படாதீர்கள்.
(இந்தக்கருத்து எனக்கு ஏற்புடையது அல்ல, வள்ளுவர் இப்படிச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால், மறுபடியும் "தேறும் பொருள்" என்கிறார். அதாவது, எல்லாமே தெளிவு என்று சொல்லவில்லை.)

2. ஆராய்ந்து தெளிந்த ஆளிடமும், என்னென்ன பொருட்கள் தேறும் என்று பாருங்கள். (அதாவது, எல்லாவற்றுக்கும் பொறுப்பாக்க வேண்டாம், எதற்குத் தகுதியோ அதற்கு மட்டும்)

இரண்டாவது கருத்து தான் எனக்கு உவப்பு! என்ன தான் நாம் ஆராய்ந்தாலும். யாருமே 100% பொருத்தம் என்று தெளிய முடியாது.

குறைகள் இருக்கவே செய்யும் என்பதால், எந்தப்பொருள் தெளிவோ அதில் மட்டுமே பொறுப்புத் தர முடியும்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 22 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Oct 19, 2015 6:46 pm

#510
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் 
தீரா இடும்பை தரும்

நேரடியான மற்றும் எளிமையான பொருள் உள்ள குறள்!

"ஆராய்ந்து தேர்ந்தெடுங்கள் - அதற்குப்பின் ஐயமின்றி நம்புங்கள்" என்ற கருத்தை முன்வைக்கும் குறள்.

ஆனால், சொல்லும் விதம் எதிர்மறை Wink 
("அவ்விதம் செய்யாவிட்டால் தீராத துன்பம்" என்று மிரட்டல்) 

தேரான் தெளிவும்
ஆராயாமல் தெளிவடைவதும் 
(எப்படிப்பட்டவர் என்று ஆராயாமலே தேர்ந்தெடுப்பது)

தெளிந்தான்கண் ஐயுறவும்
தெளிந்த ஒருவர் மீது அதன் பின்னரும் ஐயம் கொண்டிருப்பதும் 
(ஆராய்ந்து தேர்ந்தெடுத்த ஆளை நம்பாமல் ஐயப்படுவது)

தீரா இடும்பை தரும்
முடிவற்ற துன்பத்தையே தரும்

- ஆராயாமல் தெளிதல் முதிர்ச்சி அற்ற செயல், பலமுறை இந்த அதிகாரத்தில் கண்டதே 

- தேர்ந்தெடுத்த பின்னர் ஐயம் கொண்டு அலைந்தால், செயல் செய்ய விடமாட்டோம். முடிவில், ஆள் இருப்பார். அவருக்கான செலவும் இருக்கும். ஆனால், செயலும் பலனும் இருக்காது. நமக்குத்தான் துன்பம் Sad

மணத்துணைக்கும் இது பொருத்தமானதே!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 22 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Oct 26, 2015 10:32 pm

#511
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த 
தன்மையான் ஆளப்படும்
(பொருட்பால், அரசியல், தெரிந்து வினையாடல் அதிகாரம்)

கடந்த அதிகாரத்துக்கு அடுத்த படி.

தெரிந்து தெளிந்த பின்னர், அடுத்தபடியாக, சரியான செயல்களை அப்படிப்பட்டோர் வசம் தருவதற்கு (= தெரிந்து வினையாட) என்னென்ன பார்க்க வேண்டும் என்று சொல்லும் அதிகாரம்.

குறிப்பாக, தலைமை நிலையில் உள்ளவர்கள் எல்லோரும் கட்டாயம் படிக்க வேண்டிய / சிந்திக்க வேண்டிய கருத்துகள் உள்ள ஒன்று.
(தலைமை நிலை என்பது மன்னன் / நிறுவனங்களின் தலைமை நிலையில் இருப்பவர்கள் மட்டுமல்ல. சிறிய குழுக்கள், குடும்பம் என்று நாம் எல்லோரும் பல நேரங்களில் தலைமைப்பொறுப்பு ஏற்கிறோம்)

எளிய சொற்கள் என்றாலும் ஆக மொத்தப் பொருள் புரியக் குழப்பமான குறள் இது Embarassed

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான்
நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து, நன்மை தருவதன் அடிப்படையில்

ஆளப்படும்
செயல் புரிய வேண்டும் (ஆட்பட வேண்டும்)

சில உரையாசிரியர்கள் இந்தக்குறளை ஆளுக்கும் ("நலம் புரியும் தன்மையுடையவன்" என்று) மற்ற சிலர் செயலுக்கும் பொருத்துகிறார்கள். 

அதையே நான் "குழப்பம்" என்று முதலில் குறிப்பிட்டேன்.

ஆளானாலும் செயலானாலும் நலம் புரிவதையே தெரிந்து கொள்வோமாக Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 22 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Oct 27, 2015 7:44 pm

#512
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை 
ஆராய்வான் செய்க வினை

இந்தக்குறளில் பொருள் குறித்த சரியான சிந்தனை உள்ளவனிடம் செயலை ஒப்படைக்கச் சொல்லுகிறார் வள்ளுவர்.

வாரி என்றால் வருவாய் என்று முன்னமேயே பார்த்திருக்கிறோம் (என்று நினைக்கிறேன்).

எளிய, நேரடியான பொருள் தான்.

வாரி பெருக்கி
வருமானத்தைப் பெருக்கி 

வளம்படுத்து
வளம் நிறையுமாறு செய்து 

உற்றவை ஆராய்வான்
வரக்கூடியவற்றை (இடையூறுகள் / பொருள் அழிக்க வல்லவை) ஆராயத்தக்கவன்

செய்க வினை
செயல்களைச் செய்ய வேண்டும்! 
(அப்படிப்பட்ட திறமை உள்ளவனையே செயலில் பணிக்கவும்)

வரவு / செலவுகள் பற்றிய சரியான பார்வை இல்லாதவனிடம் செயலை ஒப்படைத்தால் பொருள் இழப்பு நேரிடும் எனபது இதன் உட்கருத்து.

நம் நாளில் பல அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் கடினமான நிலைக்குச் செல்ல அங்கே தலைமைப் பொறுப்பில் இருந்தோருக்கு பொருளாதார அறிவு / சிந்தனை இல்லாமற்போன கதைகள் கணக்கில் அடங்காதவை.

வள்ளுவர் அழகாக முன்னமேயே சொல்லி இருக்கிறார். 

எண்ணத்தில் கொள்வோம் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 22 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Oct 28, 2015 8:50 pm

#513
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் 
நன்குடையான் கட்டே தெளிவு

தேற்றம் என்பது "மனம் கலங்காமை" என்ற பொருளில் இந்தக்குறளில் வருவதாக அகராதி .சொல்லுகிறது.

அதே போல நன்கு என்பது "நிலையான" என்ற பொருளில் வருவதாகவும் படிக்கிறோம். 

இதில் வரும் "அவாவின்மை" என்பது கொஞ்சம் ஆராய்ச்சி செய்து புரிந்து கொள்ள வேண்டியது Embarassed

"ஒரு செயலைச் செய்ய விழைவது, ஒரு பொறுப்பு வேண்டும் என்று நினைப்பது - இவையெல்லாம் அவா தானே? இதெல்லாம் இல்லாத ஒருவன் எப்படி வினை ஆற்றுவான்?" என்று சிந்தித்தால் குழப்பம் வரும்!

அப்படியாக, இங்கு வரும் "அவா", எல்லா விழைவுகளையும் அல்ல - வேண்டாத ஆசைகளை மட்டுமே குறிப்பதாகக் கொள்ள வேண்டும். (பொருளைக் கவர்வதற்கான அவா, பேராசை என்றெல்லாம் புரிந்து கொள்ளலாம்).

அன்பறிவு தேற்றம் அவாவின்மை
அன்பு, அறிவு, மனம் கலங்காமை, (தவறான) ஆசை இல்லாமை

இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு
ஆகிய இந்த நான்கு பண்புகளும் நிலையாக உள்ளவனையே (வினை ஆற்றுவதற்குத்) தெரிந்து கொள்ள வேண்டும்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 22 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Oct 29, 2015 9:08 pm

#514
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் 
வேறாகும் மாந்தர் பலர்

"எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்" என்று சொல்லும் குறள்.

பொதுவாக உள்ள நிலையை வலியுறுத்தி, நாம் கணக்குப்போட்ட விதத்தில் எப்போதும் செயல்பாடு இருக்காது என்று நடைமுறை அறிவு நல்கும் செய்யுள்.

எனைவகையான் தேறியக் கண்ணும்
என்னென்ன வகையில் ஆய்ந்து தேர்ந்தெடுத்த போதிலும்

வினைவகையான்
செயல்படும் வகையில் 

வேறாகும் மாந்தர் பலர்
(நம் கணக்கில் இருந்து) பல மனிதரும் வேறுபடுவார்கள்.

அதாவது, தகுதிகள் அடிப்படையில் தெரிந்தெடுத்தாலும், செயல் என்று வரும்போது அதே அளவில் இருக்கும் என்று சொல்ல இயலாது. 

சில நேரங்களில் எதிர்பார்ப்பை விடக்கூடுதல் இருந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தலாம். அல்லது, குறைந்தும் போகலாம். 

எப்படி இருந்தாலும் "நம் கணிப்பு ஒன்று, அவர் செய்யும் செயல் வேறு ஆகலாம்" என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

மட்டுமல்ல, தகுதி அடிப்படையில் ஒரே அளவில் உள்ளவர்களும் செயல் ஆற்றலில் வேறுபடுவர் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 22 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Nov 03, 2015 9:43 pm

#515
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் 
சிறந்தானென்று ஏவற்பாற்றன்று

யாரிடம் பொறுப்புக் கொடுக்க வேண்டும் என்று மட்டுமல்ல, யாரிடம் கொடுக்கக்கூடாது என்றும் இங்கு வள்ளுவர் சொல்லுகிறார்.

வினை அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால்
வேலை அறிந்து, ஆற்றி (இடர்ப்பாடுகளைக் களைந்து) செயல் புரிவோருக்குத் தர வேண்டுமே அல்லாமல்

தான் சிறந்தானென்று ஏவற்பாற்றன்று
தான் சிறந்தவன் என்று (வெறுமென) நினைக்கிறவனிடம் ஏவக்கூடாது!

"இவர் நமக்குத்தெரிந்தவர் / உறவினர் / நண்பர் / சிறந்தவர்" என்றெல்லாம் பல அடிப்படைகளில் நாம் சிலரை மதிப்பிடுவோம்.

ஆனால், செயல் ஆற்றுவதற்கு அவை ஒன்றும் பொருந்தாது.

குறிப்பிட்ட செயலை அறிந்து நடத்தி முடிக்க வல்லவனிடம் தான் ஏவ வேண்டும். 

அல்லாவிடில் வெற்றி உறுதியில்லை. 

பலமுறை சொல்லப்படும் ஒரு உவமை நினைவுக்கு வருகிறது. 

விளையாட்டில் திறமை உள்ளவரை "சிறந்தவர்" என்று கருதுவதில் தவறில்லை. ஆனால், "சிறந்தவர்" என்று பொதுவாக எடுத்துக்கொண்டு அவரை ஒரு பாடலுக்கு இசை அமைக்கச் சொல்ல இயலாது. 

அதற்கான குறிப்பிட்ட செயல்திறன் வேண்டும், இல்லையா?

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 22 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Nov 05, 2015 12:53 am

#516
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு 
எய்த உணர்ந்து செயல்

ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்க என்னென்ன கருத வேண்டும் என்று இங்கே படிக்கிறோம்.

செயலின் தன்மை, செய்யக்கூடியவர் யார், பொருத்தமான நேரம் - இவையெல்லாம் உணர்ந்து செய்தால் வெற்றி நுகரலாம் Smile

செய்வானை நாடி
செயல் புரிபவரை ஆராய்ந்து 
(இவர்  செய்யக்கூடியவரா, செய்வாரா என்றெல்லாம்)

வினை நாடி
(மற்றும்) செயல் எப்படிப்பட்டது என்று ஆராய்ந்து

காலத்தோடு எய்த உணர்ந்து செயல்
பொருத்தமான காலத்தையும் உணர்ந்து வினையாட வேண்டும் 

கிட்டத்தட்ட இந்த அதிகாரத்தின் சுருக்கம் என்று சொல்லத்தக்க குறள்.

செயலுக்குத்தக்க ஆளும் "நேரமும்" வாய்த்தால் எந்தச்செயலும் நன்றாக முடிக்க இயலும். (இங்கே நேரம் / காலம் என்று சொல்லுவது செயலுக்கேற்ற மற்ற வளங்களையும் உட்படுத்தும் என்று கொள்ள வேண்டும்.)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 22 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 40 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 31 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum