Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

3 posters

Page 4 of 16 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 16  Next

Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 4 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Sep 19, 2017 12:30 pm

#1023
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான் முந்துறும்


இரண்டு சொற்களுக்கு இங்கே பொருந்தும் பொருளைப்பார்த்தால் இந்தக்குறளைப் படித்து விடலாம்.

மடி - இடை / அரை / இடுப்பு (மடிச்சீலை / மடிப்பிச்சை)
தற்றுதல் - இறுக்கிக்கட்டுதல்

குடிக்காக உழைக்கும் ஒருவனுக்குத் தெய்வமே தன் இடுப்பில் இருக்கும் உடையை இறுக்கிக்கட்டிக்கொண்டு வந்து, அவனது குடியை மேம்படுத்த உழைக்குமாம்.

வழக்கம்போல வள்ளுவர் தெய்வம் என்பதை மு.க. இயற்கை என்றும் மு.வ. ஊழ் என்றும் சொல்வது குறிப்பிடத்தக்கது. "தனது குடிக்காக உழைப்பவனுக்கு இறைவனின் உதவி இருக்கும்" என்பதே வள்ளுவர் சொல்ல வரும் கருத்து என்று இறைநம்பிக்கையுள்ள மற்ற உரையாசிரியர்கள் விளக்குகிறார்கள்.

தெய்வத்துக்கு அரை / அரைக்கச்சை என்பதெல்லாம் மானிடர் புரிந்துகொள்ளப் பயன்படுத்தும் சில "உருவாக்கங்கள்". (அதாவது, மதநூல்கள் "கடவுளின் கண் / கை" என்றெல்லாம் சொல்வது போல, இவை நிலத்து மனிதரின் புரிதலுக்குத்தான். அல்லாமல், இறைநம்பிக்கை உள்ளோரும் இம்முழு அண்டத்தையும் உண்டாக்கினவர் உண்மையில் எப்படி இருப்பார் என்று கண்டதில்லை Smile "நெகிழ்ந்திருக்கும் அவரது இடைத்துணியை வரிந்து இறுக்கிக்கட்டி இறங்க வேண்டும்" என்பதெல்லாம் மானிட மொழி மட்டுமே)

குடிசெய்வல் என்னும் ஒருவற்கு
"எனது குடியை உயரச்செய்வேன்" என்று செயல்படும் ஒருவருக்கு

தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும்
தெய்வம் தன் இடையில் உள்ள ஆடையை இறுக்கிக்கட்டிக்கொண்டு முந்தி வந்து உதவும்

தம் கூட்டத்தின் முன்னேற்றத்துக்காக (நேர்மையாக) உழைப்போருக்குத் தெய்வம் பல வழிகளிலும் உதவும் என்ற நம்பிக்கை தமிழருக்குத் தொன்று தொட்டே உள்ளது என்பதற்கு இந்தக்குறள் சிறிய சான்று.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 4 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Sep 20, 2017 2:23 pm

#1024
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்றுபவர்க்கு


சென்ற குறளின் தொடர்ச்சி என்று கொள்ளலாம். தெய்வம் என்ற சொல் இல்லையேயொழிய மற்றபடி அது போன்ற கருத்தே இங்கும் காணப்படுகிறது.

அதாவது, தம் குடிக்கு வேண்டி ஒருவர் காலம் தாழ்த்தாமல் செயல்பட்டால், பெரிய ஆராய்ச்சி ஒன்றும் இல்லாமல் தானாகவே வெற்றிகள் வந்து குவியும் என்ற கருத்து. "மானிட முயற்சிகளையும் மீறிய ஆற்றல் வந்து உதவும்" என்பது போன்ற கருத்து இங்கே காணப்படுவதை உரையாசிரியர்கள் பலரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

உஞற்று என்ற சொல் முன்னர் கண்டது என்றாலும் அடிக்கடி பயன்படுத்தாத ஒன்று என்பதால் மீண்டும் நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது. இதன் பொருள் முயலுதல் / கடின முயற்சி என்றெல்லாம் வருகிறது.

தம்குடியைத்தாழாது உஞற்றுபவர்க்கு
"தாழாமல்" தம் குடிக்கு வேண்டிக் கடின முயற்சி எடுப்போருக்கு
(தாழாமல் என்பதை மற்றவர்கள் "விரைவாக / காலம் தாழ்த்தாது" என்று சொல்ல, மணக்குடவர் "குடியைத் தாழ்ந்து போக விடாமல்" என்கிறார், இரண்டும் பொருத்தமே)

சூழாமல் தானே முடிவெய்தும்
அவர் ஆராயாமலே (எண்ணாமலே), அதாவது தானே, (செயல்கள்) நிறைவேறும்

'முயற்சி திருவினை ஆக்கும்' என்பதன் இன்னொரு வடிவம் என்று கொள்ளலாம். "தானே" என்பது சற்றே மிகைப்படுத்தல், அதைப்பரிமேலழகர் தெய்வம் என்று சொல்லி விளக்குகிறார்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 4 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Sep 25, 2017 4:27 pm

#1025
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு


"நான் உங்களில் ஒருவன், உங்கள் வீட்டுப்பிள்ளை" என்றெல்லாம் மக்களிடம் வாக்குக்கேட்கும் வேட்பாளர்கள் விளம்பரம் செய்வதை நாம் பலமுறை கண்டிருக்கிறோம்.

உண்மையில் பொதுமக்கள் யாருக்கு மிக நெருக்கமாக உணர்கிறார்களோ அப்படிப்பட்ட வேட்பாளருக்கே வாக்களிப்பர் என்பது தேர்தல்களின் அடிப்படை. ("யார் வரவே கூடாது" "யாரைத்தண்டிக்க வேண்டும்" "யார் பணம் தருவார்கள்" "யார் இலவசம் தருவார்கள்" "என்ன சாதி என்ன மதம்" என்றெல்லாம் பார்த்து வாக்களிக்கும் அண்மைக்காலத்தேர்தல்களுக்கு இந்த அடிப்படை பொருந்தாது என்பது வேடிக்கை).

இந்தக்குறளில், உலகத்தார் தமக்கு உறவினன் என்று எப்படிப்பட்டவனைச் சேர்த்துக்கொள்வார்கள் என்பதற்கான வழிமுறையை வள்ளுவர் சொல்லித்தருகிறார்.

குற்றம் இலனாய்
தன்மீது குற்றம் சுமத்தத்தக்க நடவடிக்கை இல்லாதவனாய்
(பழியொன்றும் செய்யாதவனாய்)

குடிசெய்து வாழ்வானை
குடியின் நிலை உயர்வதற்கான செயல்கள் செய்து வாழ்பவனை
(நன்மைகள் செய்து குடியை உயர்த்துபவனை)

சுற்றமாச் சுற்றும் உலகு
உலகே தன் உறவினன் என்று (கொண்டாடிச்) சுற்றிக்கொள்ளும்

இங்கே சொல்லப்பட்டிருக்கும் உலகத்தார் இன்றும் இருக்கிறார்களா என்று தேடித்தான் பார்க்க வேண்டும் Wink

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 4 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Sep 26, 2017 3:39 pm

#1026
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்


தன்னுடைய குடியை நல்ல விதத்தில் வழிநடத்துபவனே நல்ல ஆளுமை உடையவன் என்ற எளிதான கருத்தைச்சொல்லும் குறள். (தனது குடும்பத்தை உயர்த்த இயலாதவன் எப்படி ஊரையும் நாட்டையும் உயர்த்த இயலும் என்றும் புரிந்து கொள்ளலாம்.)

குடிசெயல்வகை என்ற பொருளில் வருவதால், இப்படியும் விளக்கலாம் : "தன் குடியில் உள்ளோர் சிறப்பாகச் செயல்பட வழி செய்பவனே நல்லாண்மை உடைய தலைவன் ; அவருக்கு நல்ல பண்புகளும், பேச்சு-செயல் முறைகளும் கற்றுக்கொடுப்பது தான் முதல் படி".

ஒருவற்கு நல்லாண்மை என்பது
ஒருவருக்கு நல்ல ஆண்மை / ஆளுமை என்பது என்னவென்றால்

தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்
தான் பிறந்த இல்லத்தின் ஆளுமையை சிறப்பாக ஆக்கிக்கொள்வதே

ஒரு ஆள் சொல்வதை அவரது மனைவி (அல்லது கணவன்) மற்றும் மக்களே கேட்கவில்லை / செய்யவில்லை என்றால் அவரால் எப்படி ஊரை ஆள முடியும் - என்றும் புரிந்து கொள்ளலாம்.

குடி என்பது ஒரு சிறிய நிறுவனம். அதன் மேற்பார்வை என்பது குறிப்பிடத்தக்க ஒரு பொறுப்பு. அதை நாம் எல்லோரும் எப்படிச் செயல்படுத்துகிறோம் என்பது ஆராயத்தக்கது!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 4 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Sep 26, 2017 4:14 pm

#1027
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை


போர்க்களத்தை இல்லத்துக்கு உவமையாக்குகிறார் - அவர் காலத்திலோ (அல்லது பின் வரும் காலங்களிலோ) குடிகள் போர்க்களங்கள் ஆகும் என்று சொல்ல வருகிறாரோ?
Laughing

இரு இடத்திலுமே செயல்வீரருக்குத்தான் பொறுப்பு நிறையக்கிடைக்கும் என்பது சொல்ல வரும் கருத்து. (அதாவது, யாரெல்லாம் நன்றாகச் செயல்படுகிறார்களோ அவர்களுக்கு மேலும் மேலும் வேலை தரப்படும் என்கிறார் - வேலை நிறுவனங்களில் கடினமாக உழைப்போருக்கு இது மிக நன்றாகவே புரியும்! Laughing )

அமரகத்து வன்கண்ணர் போல
போர்க்களத்தில் வலிமையான ஆற்றலோடு செயல்படுபவர்கள் போன்றே

தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை
தமது இல்லத்திலும் (குடியிலும்) ஆற்றலோடு செயல்படுவோர் மீதே பொறுப்புகள் (வைக்கப்படும்)

அச்சம் கொண்ட கோழைக்கு யாரும் போரில் பொறுப்பும் முன் நடத்தும் நிலையும் தரமாட்டார்கள். அவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள் / வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.

அதே போலத்தான் குடியிலும்!

ஆற்றல் கொண்ட செயல் வீரர்களுக்குத்தான் பொறுப்பு (வாய்ச்சொல் வீரருக்கு அல்ல!)

எனவே, மக்களை ஆளும் பொறுப்பு வேண்டும் என்ற ஆவல் உள்ளோர் முதலில் தம் குடியை உயர்த்துவதற்கான செயல்களில் ஆற்றல் காட்ட வேண்டும் என்று வள்ளுவர் சொல்கிறார்.

அப்படிப்பட்ட ஆற்றல் வெளிப்படுகையில் பொறுப்புகள் தேடித்தேடி அவர்கள் மீது வைக்கப்படும்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 4 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Sep 27, 2017 12:00 pm

#1028
குடிசெய்வார்க்கில்லை பருவம் மடிசெய்து
மானங்கருதக் கெடும்


சோம்பேறிகள் தங்களது பின்னடைவுகளை "அதுக்கெல்லாம் நேரம் காலம் வரணும், இப்போ சரியில்லை" என்று அலுத்துக்கொள்வது எப்போதும் காண்பதே.

காலங்கருதிச் சிலவற்றைச்செய்ய வேண்டும் என்பது உண்மை ("பருவத்தே பயிர் செய்" ) என்றாலும், தனது மடிக்குக் காலத்தின் மீது பழி போடுவது உகந்ததல்ல.

ஆகவே, தமது குடி உயர்வுக்கான செயல்பாடுகளில் வல்லவர்கள் "நேரம் சரியில்லை" என்று வாளாவிருக்க மாட்டார்கள்.

குடிசெய்வார்க்கில்லை பருவம்
குடி மேம்பட உழைப்பவர்க்கு "ஏற்ற பருவம்" என்று ஒன்றுமில்லை

மடிசெய்து மானங்கருதக் கெடும்
(அப்படிச்சொல்லிக்கொண்டு) சோம்பேறியாக இருந்தாலோ அல்லது வீண் பெருமை கருதிக்கொண்டு (செயலில் இறங்காமல்) இருந்தாலோ அந்தக்குடி கெட்டழியும்

நேரத்தைப்பழிப்போரை மட்டுமல்ல, "மானம் கருத" என்று வேண்டாத பெருமையால் வேண்டிய செயல்களைத் தவிர்ப்போரையும் கண்டிக்கிறார்.

இங்கே பழிச்செயல்கள் செய்ய வேண்டும் என்று அவர் சொல்ல வரவில்லை. (மானம் குறித்தும் பழிக்கு அஞ்சுவது / நாணுவது குறித்தும் ஏற்கனவே நிறைய எழுதி இருக்கிறார்).

செயல்படாமல் இருப்பதற்கு "குடிப்பெருமை" ,"காலநேரம்" என்றெல்லாம் சாக்குப்போக்குச் சொல்வோரை மட்டுமே கண்டிக்கிறார்.

இதை எளிதில் விளக்க, "அடைத்துக்கொண்டிருக்கும் சாக்கடை" என்ற சூழல் உதவும்.
("நாங்க எல்லாம் பெரிய குடி, சாக்கடையைத் தொட மாட்டோம்" என்று பெருமை பேசினால் வீடு நாறிப்போவது உறுதி)


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 4 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Sep 27, 2017 3:25 pm

#1029
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு


குடும்பச்சுமையைத் தாங்கி நடப்பவனுக்கு அதனால் உடலுக்குத் துன்பம் வரும் என்னும் மருத்துவ உண்மையை இங்கே படிக்கிறோம் என்று தோன்றுகிறது. உடம்பு ஓரளவுக்குத்தான் அழுத்தங்களைத் தாங்கும் - மீறிப்போனால் கெட்டுப்போகும் என்று சொல்ல வருகிறாரோ?

அல்லது, குடியின் நன்மைக்காக எல்லோரும் கூட்டாக உழைக்க வேண்டுமேயொழிய ஒரு ஆள் மீது எல்லாச்சுமையையும் இடுதல் மூடத்தனம் என்று அறிவுறுத்துகிறாரோ?

கண்டிப்பாகக் குடி செயல்வகை என்பதுக்கு ஒரு கூட்டு முயற்சியாக இருத்தலே நல்லது. ஆனால், பல இடங்களிலும் அப்படி இருப்பதில்லை. சுமைகள் பேரளவில் ஒருத்தர் மீது ஏற்றி வைத்து விட்டு மற்றவர்கள் இளைப்பாறுவது எப்போதும் காண்பதே. அதிலும் குறிப்பாகத் துன்பங்கள் வருகையில் சமாளிப்பது எப்போதும் ஒரே ஆளிடம் வருவது நடைமுறை.

குடும்பத்தைக் குற்ற மறைப்பான் உடம்பு
குடும்பத்தைத் துன்பங்களில் இருந்து மறைக்கின்றவன் (காக்கின்றவன்) உடம்பு

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ
துன்பங்களுக்கே இருப்பிடம் ஆகிவிட்டதா?

ஆக, துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதன் தேவையை இங்கே வலியுறுத்துகிறார் என்று தோன்றுகிறது,

சில உரையாசிரியர்கள் சொல்லும் இன்னொரு கருத்தும் உவப்பானது - துன்பத்தோடு கொஞ்சம் இன்பமும் கூட்டிக்கொள்ளக்கூடாதா? ஏன் இடும்பைக்கு மட்டுமே கொள்கலம் ஆக வேண்டும், இன்பத்துக்கும் கொஞ்சம் இடம் தரக்கூடாதா?

அழகு!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 4 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Sep 27, 2017 3:53 pm

#1030
இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி


எளிமையாகப் பொருள் புரிந்து கொள்ளத்தக்க குறளோடு அதிகாரத்தை முடிக்கிறார்.

"பொதிந்திருக்கும் உருவகம்" என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். அதாவது, "கால் கொன்றிட" என்ற பயன்பாடு ஒரு மரத்தை உருவகமாகக் குறிப்பதாக விளக்குகிறார்கள். (மரத்தின் கால் = அடிப்பகுதி / வேர்)

"மரத்தில் அடியை வெட்டுகையில் அடுத்து முட்டுக்கொடுக்க ஒன்றும் இல்லையென்றால் விழுவது போல" - என்பது இங்கே உவமை / உருவகம்.

துன்பம் வரும்போது தாங்கிக்காக்க ஒரு குடியில் சரியான ஆள் இல்லை என்றால், அது வீழும் என்பது புரிய வேண்டிய பொருள்.

அவ்வாறு, "ஊன்று கோல்" போன்ற செயல்வகை புரியும் நல்ல ஆள் குடிக்குத்தேவை!

அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி
தாங்கிப்பிடிப்பதற்கு நல்ல ஆள் இல்லாத குடி
(தாக்குப்பிடிக்கும் செயல் வீரன் இல்லாத குடும்பம்)

இடுக்கண் கால் கொன்றிட வீழும்
அதன் காலை (அல்லது அடிமரத்தை / வேரை) இடுக்கண் வந்து வெட்டுகையில் வீழ்ந்து விடும்

துன்பம் வருவது விருப்பமற்ற ஒன்று என்றாலும் மாபெரும் சோதனைக்கருவியும் அது தான். குடும்பமோ அல்லது வேறு எந்த நிறுவனமோ உருப்படுமா இல்லையா என்று தெரிவிப்பது அதற்கு வரும் இடுக்கண் தான்.

கையாள்வதற்குத் தக்க ஆள் இல்லாவிட்டால், இடுக்கண் என்னும் நெருப்பு குடும்பத்தை அழிக்கும்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 4 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Sep 28, 2017 3:04 pm

#1031
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

(பொருட்பால், குடியியல், உழவு அதிகாரம்)

உழவர்கள் பலவித இடுக்கண்களில் வாழும் இந்நேரத்தில் உழவு என்ற அதிகாரம் கண்டவுடனேயே மனதில் ஒரு வலி வருவதைத் தவிர்க்க இயலாது Sad

எத்தனை தற்கொலைகள் Sad

மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு படிப்பைத்தொடரலாம்.

பள்ளிக்காலத்திலேயே நன்கு அறிமுகமான குறள். என்றாலும், அன்றும் இன்றும் "சுழன்றும்" என்றே சொல்லுக்கான விளக்கங்கள் விதவிதமாய் இருப்பது தனிச்சுவையாகத்தான் இருக்கிறது.

"சுழன்று"க்குள்ள பல விளக்கங்கள் :

1. கடினமானது ஏர்த்தொழில்
2. வெவ்வேறு தொழில்களால் சுழன்றாலும்
3. ஒருவர் உழவை விட்டு வேறு தொழில்களில் சென்று சுழன்றாலும்

இரண்டாவதே மிகப்பொருத்தம்!

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்
பலவித தொழில்கள் கொண்டு இயங்கினாலும் ஏரின் பின்னால் தான் உலகம் இருக்கிறது
(உணவு இல்லாவிட்டால் ஒரு தொழிலும் கிடையாது - உலகம் இயங்காது)

அதனால் உழந்தும் உழவே தலை
அதனால், (அதில் உள்ளோரைத்) துன்பங்களில் உழல வைத்தாலும் உழவுத்தொழில் தான் முதன்மையானது

என்ன எண்ணத்தில் "உழந்து" என்று எழுதினாரோ அன்றும் இன்றும் உழவர் பாடு திண்டாட்டம் தான்!

தலையாக இருந்து என்ன பயன், நம் நாளில் அவர்களைக் கொலை செய்யும் சமுதாயம் ஆகி விட்டோமே Sad

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 4 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Sep 29, 2017 12:29 pm

#1032
உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து


உலகம் என்னும் சக்கரம் சுழல்வதற்கான அச்சாணி உழவர் - அவர் தாங்கித்தான் மற்ற எல்லாரும் எழுகின்றனர் என்று உருவகம் பயன்படுத்தி இந்தக்குறளில் விளக்குகிறார்.

நேரடியாக இன்று உழவுத்தொழில் செய்யாத நம் பலருக்கும் இந்த அறிவு மீண்டும் மீண்டும் புகுத்தப்பட வேண்டிய தேவை இருக்கிறது. ஏனென்றால், உழவரை மதிக்காத ஒரு தலைமுறையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணி
உழவுத்தொழில் செய்வோர் தான் இந்த உலகத்துக்கு அச்சாணி

அஃதாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து
(ஏனென்றால்) அந்தத்தொழில் செய்யாமல் (பிற தொழில் செய்து) எழுவோரை எல்லாம் அவர்கள் தாம் தாங்கிப்பிடிக்கிறார்கள்

உணவில்லை என்றால் யார் என்ன செய்ய முடியும் - இது மிக அடிப்படையான புரிதல். பலருக்கும் இன்று இல்லை - எங்கோ வானத்தில் இருந்து நேராக இவர்களது தட்டுக்கு உணவு வந்து உட்காருவதாகக் கனவு காண்கிறார்கள்.

உழவர் செய்யும் கடின உழைப்பு / அவர் நேரிடும் பல துன்பங்கள் மற்றும் பாடுகள் இன்று பெரும்பாலோர் எண்ணாமல் இருப்பது மனதுக்கு வலி உண்டாக்கும் ஒன்று.

உலகத்துக்கு அச்சாணியாக விளங்கும் உழவரை எப்படி மதிக்கலாம்/ என்னென்ன நன்மை செய்யலாம் என்று நாம் எல்லோரும் - குறிப்பாக இளைஞர்கள் - உணர வேண்டிய காலம் இது!

"இதற்காக உழைத்தவர்கள் நலம் பெற வேண்டும்" என்று மனதில் நன்றியோடு எண்ணி விட்டுத்தான் ஒவ்வொரு வேளையும் உண்ணுதல் என் வழக்கம்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 4 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Oct 02, 2017 3:29 pm

#1033
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்


பலருக்கும் நன்கு அறிமுகமான குறள் - பள்ளிக்காலங்களில் படித்திருக்காதவர்கள் குறைவே Smile

எளிமையான சொற்கள், அருமையான பொருள்.

"வாழ்றான்யா" என்று பொருள் / வசதி / வாய்ப்பு உள்ளோரைக்குறித்து மற்றவர்கள் பொறாமையாகச் சொல்வதுண்டு. அப்படியாக, "உண்மையான வாழ்க்கை என்பது வெறுமென உயிரோடு இருப்பது மட்டுமன்று. மேன்மையான வாழ்வை நுகர்வதே" என்பது பொதுக்கருத்து. இது தமிழ் மொழியில் மட்டுமல்ல மற்ற மொழிகள் இனங்களிலும் இருக்கும் ஒரு சொல்லாடல் தான்.

இங்கே வள்ளுவர் உழவர் மட்டுமே மெய்யான / மேன்மையான / உரிமையான வாழ்வு வாழுவோர், மற்ற எல்லாரும் அடிமைகளே என்கிறார். கருத்தளவில் உண்மை என்றாலும் இன்றைய நடைமுறை (குறிப்பாகத் தமிழ் நாட்டில்) தலைகீழாக இருப்பது இயற்கைக்குப் பெரும் முரண்பாடு.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
உழவுத்தொழில் செய்து வாழ்வோர் தான் (உண்மையில்) வாழ்பவர்கள்
(யாரையும் சாராமல் தானே வாழ்பவர்கள் என்றும் கொள்ளலாம்)

மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்
மற்றவர்கள் எல்லோரும் தொழுது கொண்டு (உழவருக்குப்) பின்னால் செல்பவர்கள் தாம்!
(அதாவது, உணவுக்காக உழவரிடம் கையேந்தி நிற்பவர்கள் தாம்).

அடிப்படை உண்மை!

இயற்கையாக உழவுத்தொழில் செய்வோர் வாழ்வுக்காக யாரையும் கெஞ்ச வேண்டியதில்லை! தற்போது இதற்கு மாறான நிலை இருப்பினும், இது கொஞ்சக்காலத்துக்கு மட்டுமே என்று உறுதியாக நம்புகிறேன்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 4 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Oct 03, 2017 1:18 pm

#1034
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழலவர்


அலகு என்ற சொல்லுக்கு இவ்வளவு பொருள்களா?

இந்தக்குறளின் அடிப்படையில் ஒரு பொருள் இன்று படிக்கிறேன் - கதிர்!

நெல் மணி என்ற பொருளும் இந்தச்சொல்லுக்கு இருப்பதால் பல உரையாசிரியர்களும் நெற்கதிர் என்று சொல்கிறார்கள், அது என்னமோ சரியாகப் படவில்லை - நெற்கதிர் நிழல் தரும் என்று தோன்றவில்லை. (வள்ளுவர் காலத்தில் ஒரு வேளை நெற்பயிர் அவ்வளவு உயரமாய் வளர்ந்ததோ தெரியாது.)

பொதுவாகக் கதிர் என்று எடுத்துக்கொண்டால் நிழல் என்பதைப் புரிந்து கொள்தல் எளிது. நெல்லென்று கொண்டாலும், நிழல் என்பதை அடையாளமாக (பாதுகாவல்) என்று மட்டும் எடுத்துக்கொண்டால் பொருத்தம், நேரடியாக எடுக்க இயலாது.

மற்றபடி, இந்த அதிகாரத்தில் இதற்கு முன் கேட்டிராத குறள் இது. Embarassed

குடை என்ற சொல் கொண்டு விளையாட்டு இதில் உண்டு. (அரசு, நிழல் தரும் குடை, கு+உடை என்றெல்லாம் வருகிறது)

அலகுடை நீழலவர்
கதிர்கள் நிறைந்த பயிரைத் தம் நிழலாக உடைய உழவர்கள்

பலகுடை நீழலும் தங்குடைக் கீழ்க்காண்பர்
பல அரசர்களின் வெண்குடைகளும் தமது குடையின் நிழலில் வாழ்வதைக் காண்பார்கள்

மன்னர்களும் அவர்களது அரசுகள், நாடுகள், நாட்டவர்கள் எல்லோரும் உழவரின் தயவில் தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். உழவரின் நிழலில் தான் வாழ்கிறார்கள் என்று அழகாகச் சொல்லும் செய்யுள்.

ஆட்சியில் உள்ளோருக்கு இது புரிந்திருந்தால் நல்லது.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 4 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Oct 03, 2017 2:12 pm

#1035
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலையவர்


கரவு என்ற சொல்லை அழகாக இந்தக்குறளின் நடுவில் வைத்து சிலேடைச்சுவை தருகிறார்.

அதற்குள்ள இரண்டு பொருட்கள் - மறைத்தல் / களவு செய்தல் என்ற இரண்டும் முன்னாலும் பின்னாலும் சேர்க்கத்தக்க வண்ணம் சுவையாக நடுவில் வைக்கிறார்,

கரவாது ஈவர் - மறைத்து வைக்காமல் / இல்லை என்று சொல்லாமல் ஈவார்கள்
கரவாது கை செய்து - மற்றவரிடம் களவாடாமல் தம் கைகள் கொண்டு உழைத்து

இரு விதத்திலும் உழவர்க்கே மிகப்பொருத்தம் என்பதால், அவர்களை நேரடியாகச் சொல்லாமல் குறிப்பால் உணர்த்தவும் செய்கிறார்.

கரவாது கைசெய்தூண் மாலையவர்
களவொன்றும் செய்யாமல் தம் கைகளால் உழைத்து உண்ணும் இயல்புடையவர்கள்
(மாலை = இயல்பு, யாரையும் எதிர்பார்க்காமல் தம் கையால் உழைக்கும் இயல்பு உழவர்க்கே உள்ளது)

இரவார்
இரக்க (பிச்சையெடுக்க / யாரிடமும் கையேந்த) மாட்டார்கள்

இரப்பார்க்கொன்று கரவாது ஈவர்
இல்லை என்று வருவோர்க்குத் தம்மிடம் உள்ளதை மறைத்து வைக்காமல் கொடுக்கவும் செய்வார்கள்

மிக உயர்ந்த வள்ளல்கள் உழவர் பெருமக்கள். அதோடு, தன்னிறைவு மிக்க பெருமையும் உள்ளவர்கள்.

மற்ற எல்லாரும் தொழுதுண்டு பின் செல்வதில் வியப்புண்டோ?

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 4 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Oct 04, 2017 12:24 pm

#1036
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கும் நிலை


"விழைவதூஉம் விட்டேம்" - அளபெடையுடன் கூடிய இந்தச்சொற்றொடர் குறிப்பிடும் ஆட்கள் துறவிகள். ("விருப்பத்தையெல்லாம் விட்டு விட்டவர்கள்").

அப்படிப்பட்டவர்களும் உழவரைச்சார்ந்தே வாழ்கிறார்கள் என்று உணர்த்தும் குறள்.

இதில் துறவிகளை மெல்லிய விதத்தில் எள்ளாடவும் செய்கிறார். ("எல்லாப்பற்றும் துறந்தீர்கள், சரி தான், வயிற்றுக்குச்சாப்பாட்டைத் துறந்தீர்களா?" Laughing )

துறவியானாலும் உணவில்லாமல் வாழ முடியாது, செத்துப்போவார்கள். ஆகவே, அவர்கள் "முற்றும் துறந்தவர்கள்" அல்லர் என்பது வெளிப்படை. ஆக, அவர்களும் உழவருக்கு அடிமைகளே!

உழவினார் கைம்மடங்கின்
உழவர்கள் கைமுடங்கி விட்டால் (வேலை செய்யாமல் இருந்தால்)

விழைவதூஉம் விட்டேம் என்பார்க்கும் நிலை இல்லை
விருப்பங்களை ஒழித்து விட்டோம் என்னும் துறவிகளுக்கும் வாழ்க்கை நிலை இல்லாமல் போகும்

சுருக்கமாகச்சொன்னால், இப்படி :

அரசன் ஆனாலும் ஆண்டி ஆனாலும் உழவனின் காலடியில் தான்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 4 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Oct 05, 2017 3:40 pm

#1037
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப்படும்


இந்தக்குறள் முன்பே கண்டிருக்கிறேன் என்றாலும் பொருள் படித்த நினைவில்லை (பேருந்தில் பார்த்ததாக இருக்கலாம்).

தொடி , கஃசா என்பன புதிதாய்ப்படிக்க வேண்டிய இரண்டு சொற்கள்.

தொடி = எடை அளவு, "பலம்" என்ற அளவு என்பதாக அகராதி சொல்லுகிறது. (ஏறத்தாழ 35 கிராம் என்கிறது ஒரு உரை).
கஃசா = கால் தொடி (பலம்) என்ற எடை அளவு

இவை தவிர்த்து, இந்தக்குறள் இதுவரை வந்த பொருள்களில் இருந்து வேறுபடுகிறது. அதாவது, உழவர் பெருமை சொல்லிக்கொண்டிருப்பதை மாற்றி உழவருக்கு அறிவுரை இங்கே தொடங்கி இருக்கிறது.

நம் நாளைய உழவு முறைகளுக்கும் இங்கே சொல்லப்படுவதற்கும் எந்த அளவு ஒப்புமை / வேற்றுமை உண்டு என்று தெரியவில்லை. வள்ளுவர் காலத்துக்கு ஒத்ததாக இருந்திருக்க வேண்டும்.

தொடிப்புழுதி கஃசா உணக்கின்
ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும்படி காய விட்டால்

பிடித்தெருவும் வேண்டாது சாலப்படும்
ஒரு கைப்பிடி அளவு எருதும் தேவைப்படாமல் நிறைய விளைச்சல் இருக்கும்

புழுதி என்பது பொதுவாகக் காய்ந்த மண்ணைக்குறிக்கிறது - அதில் நீரளவு கூடுதல் இருந்தால் சரிப்படாது என்கிறார். உழுது காயப்போட்டால் அதன் எடை குறைந்து கால் பங்காகும் என்றும் சொல்கிறார்.

உயர்வு நவிற்சி இருக்க வாய்ப்புண்டு Wink

"புழுதி" என்பதே காய்ந்த மண் தான், அதை இன்னும் எங்கே உணக்குவது? ஒரு வேளை வெறும் மண் என்று கொண்டாலும், அதன் எடையோடு மூன்று மடங்கு எடை நீர் சேர முடியுமா என்ன? அப்படிச்சேர்ந்தால் அது ஓடத்தொடங்கி விடாதா?

மற்றபடி, நன்கு உணங்கிய நிலத்துக்கு எரு என்ற ஒன்றே வேண்டாம் என்கிறார் - அது குறித்து இயற்கை உழவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று படிக்க வேண்டும் Embarassed

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 4 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Oct 05, 2017 4:08 pm

#1038
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு


மிக நன்றாக அறிந்த பள்ளிக்காலக்குறள் Smile

உழவுத்தொழிலுக்கு வேண்டிய ஐந்து கூறுகளை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு ஒரே குறளில் செய்முறை சொல்லிக்கொடுக்கிறார்.

விதைத்தல் மற்றும் அறுவடை செய்தல் என்று பயிர் குறித்தவை அல்ல. நிலம் குறித்தவை என்று உணர்கிறோம். அப்படியாக, உழவு என்பது விளைச்சலை விட நிலத்தை நோக்கி இங்கே எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏரினும் நன்றால் எருவிடுதல்
ஏர் கொண்டு உழுவதை விடவும் நல்லது எரு இடுதலாகும்
(உழுதல் தேவையில்லை என்பதல்ல, எருவிடுதல் எவ்வளவு தேவை என்பதை வலியுறுத்த இப்படி)

கட்டபின்
களையெடுத்த பின்

நீரினும் நன்றதன் காப்பு
நீர் பாய்ச்சுவதை விடவும் நல்லது நிலத்தை (அல்லது பயிரைக்) காவல் காப்பது

பல பயிர்களுக்கும் நீர் தொடக்க நாட்களில் கூடுதல் தேவை. குறிப்பாகக் களையெடுக்கும் நாள் வரை. (களையும் அந்நேரம் நன்றாக வளரும்). மணி பிடித்த பின்னர் மற்றும் களையெடுத்த பின்னர், நீர் முதல் தேவை அல்ல - காவல் தான் என்கிறார் வள்ளுவர்.

இதையெல்லாம் பார்த்தும் நீர் மேலாண்மை எப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்று பலரும் மெனக்கிட்டதாகத் தெரியவில்லை. பல இடங்களிலும் அளவுக்கு மிஞ்சி நீர் பயன்படுத்துவதாகவும், அவ்விதம் நிலத்தைப்பாழாக்கி விட்டதாகவும் சொல்லக்கேட்டிருக்கிறேன்.

உழவு, எரு, நீர் - எல்லாமே சரியான அளவில் இல்லையெனில் பலன் குறையும் என்பது பொது அறிவு தானே?

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 4 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Oct 06, 2017 12:04 pm

#1039
செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து
இல்லாளின் ஊடி விடும்


"என்ன இது, சட்டென்று உழவனைக் கிழவன் என்கிறார்" என்று எண்ணத்தேவை இல்லை. கிழவன் என்ற சொல்லுக்குத் "தலைவன்" உட்படப் பல பொருள்கள் இருக்கின்றன. அகராதி விளக்குகின்றபடி, இங்கே பொருந்தி வரும் பொருள் "உரிமை உள்ளவன், உரியவன்" என்பதே. (இல்லக்கிழவன் / இல்லக்கிழத்தி என்பனவும் இவ்வாறான சொற்களே).

ஆக, நிலத்துக்கு உரியவன் - உழவன்.

இங்கே, நிலத்துக்கு மனைவியை உவமையாகப் பயன்படுத்துகிறார். கணவன் "கண்டு கொள்ளாமல்" இருந்தால் மனைவி வெறுப்புறுவாள், ஊடல் கொள்வாள். அது போன்றதே நிலமும், ஒழுங்காக அதை நோக்காவிடில் ஊடல் கொள்ளும் என்கிறார் Smile

செல்லான் கிழவன் இருப்பின்
உரியவன் செல்லாமலும் நோக்காமலும் சோம்பலாய் இருந்தால்

நிலம் புலந்து
நிலம் (அவனை) வெறுத்து
(புலந்து = துன்புற்று / வெறுத்து)

இல்லாளின் ஊடி விடும்
மனைவியைப்போலவே ஊடல் கொண்டு விடும்
(விளைச்சல் கிடைக்காது என்பதை "நிலம் சினம் கொண்டு விடும்" என்று கவிதையாகச் சொல்கிறார்)

சோம்பேறிக்கு நிலம் பலன் தராது.

சோம்பேறித்தனம் மட்டுமல்ல, பிற விதங்களிலும் தொடர்ந்து நிலத்தின் தேவைகளைப் புறக்கணித்தால் அது சினந்து விடும் என்பது வேண்டிய அறிவுரை.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 4 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Oct 09, 2017 4:09 pm

#1040
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்


அசைஇ இருப்பார் = சோம்பலாய் இருப்பவர்கள். அதாவது, அசைதல் என்பதற்கு சோம்புதல் என்றும் அகராதி பொருள் சொல்கிறது.
(சுறுசுறுப்பாய் இயங்க மறுப்பவரை நாட்டுப்புறங்களில் "என்னடா அசைஞ்சு ஆடி வர்ற, வெரசா வரக்கூடாதா?" என்று சொல்வதைக்கேட்டிருக்கலாம்.)

அப்படிப்பட்டவர்களை நிலம் என்னும் நல்லாள் (நிலமகள் என்று பெண் உருவகம்) கண்டு இகழ்ந்து நகைப்பாள் என்று சாடும் குறள்!

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
"என்னிடம் ஒன்றுமில்லையே" என்று சோம்பலுடன் இருப்பவரைக் காணும்போது

நிலமென்னும் நல்லாள் நகும்
நிலம் எனும் நல்ல பெண் இகழ்ந்து நகைப்பாள்

உழவு என்னும் உயர்ந்த தொழில் செய்து உணவு உண்டாக்கும் அரிய வேலைவாய்ப்பு இருக்கையில் "இல்லை" என்று சோம்பேறியாய் இருப்பவனை நிலம் இகழாமல் கொஞ்சவா செய்யும்?

தெளிவான, நேரடியான அறிவுரை!

சிறிதாக உறுத்தும் ஒன்று - நிலத்தை மீண்டும் மீண்டும் பெண்ணாக உருவகம் செய்வது.

கவிதையில் உருவகங்கள் வருவது அழகு தான்! என்றாலும், இரண்டு முறை இல்லாள் / நல்லாள் என்று நிலத்தைப் பெண்ணோடு (மட்டும்) இந்த அதிகாரத்தில் ஒப்பிடுவது திருக்குறள் ஆண்களுக்காக மட்டுமே எழுதப்பட்டதோ என்று எண்ண வைக்கலாம். (அந்தக்காலத்தில் அப்படிப்பட்ட சொல் வழக்கு சமுதாயத்தின் எண்ணத்தின் ஒலியாகவும் இருக்கலாம். பெண்கள் வயலில் எவ்வளவு வேலை செய்தாலும் ஆண்கள் மட்டுமே உழவர் என்று கருதப்படுவரோ?)

பெண்களை "உடைமை"யாகக் கருதின ஆணாதிக்க எண்ணமுள்ளவர் என்று வள்ளுவர் மீது ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அதற்கு இது போன்ற சொல்லாடல்களும் உதவித்தொலைக்குமே Wink

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 4 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Oct 10, 2017 3:34 pm

#1041
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னாதது

(பொருட்பால், குடியியல், நல்குரவு அதிகாரம்)

வறுமை என்ற தலைப்பிலான அதிகாரத்தை அழகான சொல் விளையாட்டோடு தொடங்குகிறார்.

கிட்டத்தட்டத் "துப்பார்க்குத்துப்பாய" வடிவில். ஆனால், மெல்லினத்தில் Wink

இன்மையின் இன்னாதது யாதெனின்
இல்லாமையைப்போல் (அல்லது அதை விடவும்) துன்பமானது என்னவென்றால்
(இன்மை = இல்லாமை, வறுமை, நல்குரவு)

இன்மையின் இன்மையே இன்னாதது
இல்லாமையை விட (அல்லது இல்லாமையைப்போல்) இல்லாமையே துன்பமானது

கொஞ்சம் குழப்புவது போல் தோன்றினாலும், சொல்ல வருவதைப்புரிந்து கொள்ளக்கடினம் இல்லை.

அதாவது, வறுமையை விடவும் துன்பமானது வேறொன்றுமில்லை. (இதைத்தான், "வறுமையை விடத்துன்பமானது வறுமையே" என்று கவிதையாகச் சொல்லுகிறார்.)

வாழ்வில் ஏதாவது / எப்போதாவது ஒரு சூழலில் நாமெல்லாரும் "ஓரளவுக்கு" இல்லாமையை உணர்ந்திருக்கிறோம். கண்டிப்பாக மிகவும் துன்பம் / இன்னல் தரும் நிலை தான்.

ஆனால், உண்ணவே ஒன்றும் இல்லாத வறுமையைக் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்.

ஏதோ சில நாட்களுக்கோ / குறிப்பிட்ட இடத்திலோ சூழலிலோ (இயற்கைச்சீற்றம் போன்ற நிலையில்) அல்ல!

தான் எப்போதும் வாழும் சூழலில், சுற்றியுள்ள பலரும் வேண்டியவைகளோடு இருக்க - நமக்கோ வறுமை / உணவுக்கே இன்னல்படும் நிலை.

அவ்விதமான துன்பம் பன்மடங்கு பெரியது அல்லவா?

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 4 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Oct 10, 2017 4:48 pm

#1042
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்


தீமையைப் "பாவி" என்று ஒரு ஆளாக இங்கே உருவகப்படுத்துகிறார்.  அது உடன் வருகையில், இம்மை மறுமை எல்லாம் மறந்த நிலைக்கு ஒருவன் தள்ளப்படுவான் என்கிறார்.

அதாவது, "இந்த வாழ்வு" "இறப்புக்குப்பின்னான வாழ்வு" என்றெல்லாம் எண்ணுவதற்கு ஒன்றுமில்லாமல் போகும். "வறுமை ஒன்று மட்டுமே மனதையும் வாழ்வையும் நிறைத்து, ஒருவனை உறைந்து போகச்செய்யும்" என்று கோரமான ஒரு நிலையை விவரிக்கும் செய்யுள்.

பசியில் காதடைத்துக் கிடைக்கும் ஒருவனுக்கு இன்றுள்ள வாழ்வின் இன்பங்களோ இறப்புக்குப்பின் வரும் வாழ்வின் எதிர்பார்ப்புகளோ அறிவில் வராது.

வயிற்றுப்பசியின் கூக்குரல் மட்டுமே கேட்கும். அப்படிப்பட்ட பாவி தான் வறுமை Sad

இன்மை எனவொரு பாவி வரும்
இல்லாமை என்னும் தீமை வரும்பொழுது

இம்மையும் மறுமையும் இன்றி
(ஒருவனுக்கு) இம்மையும் மறுமையும் இல்லாதே போகும்

ஒரு நலமும் இல்லாத துன்ப நிலையில் ஒருவனை ஆழ்த்துவதால், இம்மை-மறுமை-அவற்றின் இன்பங்கள்- இப்படி எல்லாமே (எண்ணத்தில்) இல்லாமல் செய்யும் பாவி தான் வறுமை!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 4 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Oct 11, 2017 1:01 pm

#1043
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை


நசை என்பதற்குள்ள பல பொருள்களில் இங்கே "ஆசை" என்பதே பொருந்துவதாகப் பல உரையாசிரியர்களும் எழுதுகிறார்கள்.

அதாவது, வறுமையின் விளைவாக ஒருவருக்கு வரும் "ஆசை". (தவறான வழியில் பொருள் சேர்ப்பதற்கான ஆசை, வறுமையைத் தீமையால் வெல்ல நினைக்கும் ஆசை - "வறுமை எனப்படும் ஆசை" என்றே இங்கே சொல்கிறார்).

அப்படிப்பட்ட ஆசை ஒருவருக்குள்ள குடிப்பெருமையையும் புகழையும் கெடுக்கும் என்று சொல்ல வரும் செய்யுள்.

நல்குரவு என்னும் நசை
வறுமை எனப்படும் ஆசை
(வறுமையினால் விளைவடைந்த தீய ஆசை எனலாம்)

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
தொன்று தொட்டு வரும் பண்புகள் / பெருமைகளையும், புகழையும் ஒருங்கே அழித்து விடும்

இங்கே "தோல்" என்று வருவதை உடலழகு என்று சொல்பவரும் உண்டு.

இந்தச்சொல்லின் பயன்பாடு, மலையாளத்தில் அடிக்கடி கேட்கும் "தொலிக்கட்டி" (கெட்டியான தோல் / உணர்ச்சியற்ற தோல்) என்பதை நினைவுக்குக்கொண்டு வந்தது. இதே பொருள் உள்ள ஆங்கிலச்சொல் பலருக்கும் நன்கு தெரியும்.

அதாவது, வெட்கம் / மானம் / நாணம் ஒன்றும் இல்லாத நிலை தான் "தொலிக்கட்டி". இதற்கு மாறாக, உணர்வுள்ளோர் என்பதற்குத் "தோல் / மெல்லிய தோல்" என்றும் கொள்ளலாம்.

அப்படிப்பார்த்தால், வறுமையின் விளைவாக வரும் பேராசை ஒருவருடைய நாணமானங்களைக் கெடுத்து வெட்கங்கெட்ட செயல்கள் செய்ய வைக்கும் என்று கொள்ளலாம்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 4 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Oct 11, 2017 3:25 pm

#1044
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்


வறுமை வந்தால் நல்ல குடும்பங்களும் சின்னாபின்னம் ஆகிவிடும்.

இகழத்தக்க பேச்சும், வசைகளும் நடக்கும் இடமாக ஆகிப்போகும் என்று எச்சரிக்கும் குறள் Sad

இளிவந்த பேச்சு இருக்கலாம், இல்லாதிருக்கலாம் - மனச்சோர்வு கண்டிப்பாக வந்தே தீரும். சோர்வின் உச்ச நிலையான மனப்பிறழ்வு / மனநோய் வந்தாலும் வியப்பில்லை - ஏனென்றால் நான் வளர்ந்த சிற்றூரில் நேரில் கண்ட ஒன்று Sad

இற்பிறந்தார் கண்ணேயும்
நல்ல இல்லத்தில் பிறந்தவர்களிடமும்
(நற்குடி மக்களிடமும்)

இன்மை சோர்வு தரும்
இல்லாமை / வறுமை மிகுந்த மனச்சோர்வைத்தரும்

இளிவந்த சொற்பிறக்கும்
இகழத்தக்க சொற்கள் / வசைகள் பிறக்க இடையாக்கும்

இளி வந்த சொல் இந்தச்சூழலில் இரத்தல் ("அம்மா தாயே பிச்சை போடுங்கம்மா") ஆக இருக்கலாம் என்கிறார் பரிமேலழகர்.

இதுவும் நான் நேரில் கண்டதே. Sad

அந்தச்சிற்றூரின் மிகப்பெரும் வீடுகளில் ஒன்று பாழடைந்து கிடப்பதை நாங்கள் எப்போதும் காண்பதுண்டு. (பேருந்து நிற்குமிடத்தில் என்பதால் காணாதவர் யாருமிருக்க வழியில்லை). அதே ஊரில் மனநிலை பிறழ்ந்து, மிக அழுக்கான உடைகளுடன் நடந்து திரியும் அண்ணன், தம்பி, தங்கை மூவரையும் அறியாதவரும் இலர்.

இம்மூவரும் அவ்வீட்டின் உரிமையாளர்கள் என்ற உண்மை எனக்கு மிகச்சிறு வயதில் தெரியாது.

"சோடாவில் தான் முகம் கழுவுவார்" (செல்வத்தில் திளைத்த காலத்தில்) என்று அவரைப்பற்றி எல்லோரும் சொல்வதுண்டு.

வறுமை அவர்களுக்குக்கொடுத்த மனச்சோர்வு, இளிச்சொல் , இழிநிலை கொடுமையானது.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 4 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Oct 11, 2017 3:59 pm

#1045
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்


குரை என்பதை "இசை நிறை" என்கிறார்கள். அதாவது, பாடலின் (வெண்பாவின்) இசை நிறைவடைவதற்காகச் சேர்க்கப்படும் அசை.

ஆகவே, இங்கே (பல்)குரை என்பதைக் காணும்போது நாய் குரைப்பதை நினையாமல் அவையில் பாடும் ஒருவரை நினைத்துக்கொள்வோம். ("இரண்டும் இசை தானே" என்றெல்லாம் சொல்லக்கூடாது).

பொருள் எளிதானது - வறுமை என்னும் துன்பம் வந்தால் வேறு பல துன்பங்களும் சேர்ந்தே வரும். அல்லது, பல துன்பங்களும் வறுமைக்குள் அடக்கம்.

பொருள் இல்லாமையால் ஊட்டமுள்ள உணவின்றி நோய்கள் வருவது, நோய்க்கும் மருத்துவம் செய்ய வழியில்லாமல் இறப்பது - இப்படி அடுக்கடுக்காய்ப் பட்ட காலிலே படும் விளைவுகள்.

நல்குரவு என்னும் இடும்பையுள்
வறுமை எனப்படும் துன்பத்தினுள்
(அல்லது, துன்பத்தால்)

பல்குரைத் துன்பங்கள் சென்று படும்
பலவகையான துன்பங்களும் (ஒரு குடிக்கு) வந்து விடும்

சிலப்பதிகாரம் எனும் பெருங்காப்பியம் வறுமையின் வழி வரும் பல துன்பங்களுக்குப் பெரும் எடுத்துக்காட்டு. (வீணான வழிகளில் பொருள் இழந்து கோவலன்-கண்ணகி வறுமை நிலையை அடைந்தது முதல் அவர்க்கும் முழு நாட்டுக்குமே துன்பங்கள் வந்து சேர்ந்தன என்பது இக்காப்பியத்தில் படிக்கும் ஒரு தகவல்).

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 4 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Oct 12, 2017 4:33 pm

#1046
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்


"ஏழையின் சொல் அம்பலம் ஏறாது" என்ற பழமொழியின் திருக்குறள் வடிவம்.

வறுமையில் உள்ள ஒருவன் என்ன தான் அருமையான கருத்துக்களைக் கற்றறிந்து சொன்னாலும் அது யார் காதிலும் ஏறாது - என்ற நடைமுறை உண்மை இங்கே வருகிறது.

நல்கூர்ந்தார் நன்குணர்ந்து நற்பொருள் சொல்லினும்
வறுமையில் உள்ளவர்கள் நன்றாகக் கற்று, உணர்ந்து, நல்ல கருத்துக்களைச் சொன்னாலும்

சொற்பொருள் சோர்வு படும்
அவர்கள் சொல்வதன் பொருள் (யாராலும் கேட்கப்படாமல்) வீணாய்ப்போகும்

அதே நேரத்தில், செல்வந்தர் சொல்லும் முட்டாள் கருத்துக்களையும் "அடேயப்பா" என்று ஆரவாரமாகப் புகழ்ந்து தள்ள ஒரு பெரும் கூட்டம் காத்திருக்கும்.

ஆக மொத்தம், நமது கருத்தை மற்றவர்கள் கேட்டு மதிக்க விரும்பினால் அதற்கு முன்னரே கொஞ்சம் பொருள் ஈட்டி ஓரளவுக்கு வசதியான வாழ்க்கை நிலையில் இருக்க வேண்டும்.

இது தான் உலகின் நடைமுறை!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 4 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Oct 13, 2017 2:16 pm

#1047
அறஞ்சாரா நல்குரவு ஈன்ற தாயானும்
பிறன்போல நோக்கப்படும்


ஒருவன் அறவாழ்க்கை நடத்துகையில் நல்குரவு வரலாம். அதுவும் கொடுமை தான் என்றாலும் நல்லோரால் இகழப்படமாட்டான்.

ஆனால், தீய வழியில் நடந்ததால் வறுமை வந்தால் (அல்லது, வறுமையின் விளைவாகத் தீமை செய்வானேயானால்), அவனை நல்லோர் இகழ்வார்கள்.

அதற்கும் மேலாக ஒருவனது தாயே அவனை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்று இங்கே (கிட்டத்தட்ட) உயர்வு நவிற்சியாகக் காண்கிறோம்!

என்ன சூழலிலும் மகனை வெறுக்காதே தாயே, அவனைப் "பிறன்" என்று சொல்லித்தள்ளிவிடும் நிலையை அறமல்லாத வறுமை தரும்!

அறஞ்சாரா நல்குரவு
அறமல்லாமல் ஒருவனுக்கு வரும் வறுமையால்

ஈன்ற தாயானும்
அவனைப் பெற்றெடுத்த அன்னையே

பிறன்போல நோக்கப்படும்
வேற்று ஆள் போல எண்ணுவாள் (வெறுத்து ஒதுக்குவாள்)

தாயன்பு என்பதற்கு அளவே இல்லை. கொடுமையான நோய், உடல் உறுப்பற்ற நிலை போன்ற சூழல்களிலும் அன்பாகக் காக்கும் உள்ளம் அது! தன்னுயிரையும் தந்து மக்களைக்காக்கும் அன்னையர் குறித்து எவ்வளோ படித்திருக்கிறோம் / கேட்டிருக்கிறோம்!

அப்படிப்பட்டவளே வெறுத்துபோய் , "நீ எனக்குப்பிள்ளை இல்லை" என்று ஒதுக்கினால் அது எப்பேர்ப்பட்ட கொடுமை என்று சற்றே எண்ணிப்பாருங்கள்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 4 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 16 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum