Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 10 of 40 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 25 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 10 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed May 14, 2014 8:22 pm

மிக்க நன்றி, வி.எஸ்ஜி & நெர்ட் சார்!

Nerd wrote:
சொல்றதயே திரும்பத் திரும்ப சொல்ற மாதிரி இருக்கு
உண்மை தான்!

குறிப்பாக, இந்த 20-ஆவது அதிகாரத்தில் உவமைகள் / அணிகள் போன்ற ஆர்வம் தூண்டும் பொருட்களும் அவ்வளவாக இல்லை.

அல்லது என் சிற்றறிவுக்கு எட்டவில்லை...Embarassed

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 10 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu May 15, 2014 6:25 pm

#201
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு
(அறத்துப்பால், இல்லறவியல், தீவினையச்சம் அதிகாரம்)

விழுமம் என்றால் நன்மை, விழுமிய = சிறந்த.
அந்த வகையில், விழுமியார் = நல்லவர், சிறந்தவர், ஒழுக்கமுடையவர்.
 
அவருக்கும் தீயோருக்கும் உள்ள முதல் வேறுபாடு இந்தக்குறளில் வருகிறது.

பொருள் புரிதல் எளிது என்றாலும் இதில் பயன்படுத்தியுள்ள ஒரு சொல் கொஞ்சம் ஆர்வம் கொள்ள வைக்கிறது.

செருக்கு! (தீவினை என்னும் செருக்கு).

நமக்குத்தெரிந்த நேரடியான பொருள் "பெருமை, அகந்தை, மண்டைக்கனம்" போன்றவையே.

"தீவினைகள் என்னும் திமிர்" என்று நேரடியாக எடுத்துக்கொள்ள முடியுமா என்ன? கொள்ளலாம் தான் என்றாலும் கொஞ்சம் உதைக்கிறதே...

இந்தச்சொல்லுக்கு அகராதி வேறு பல பொருட்களும் சொல்லுகிறது.

அவற்றுள் ஒன்று "அனுபவித்தல்". மற்றொன்று செல்லம். ("செல்லஞ்செருக்காய் வளர்ந்த பிள்ளை").

இவற்றின் அடிப்படையில் மு.க. உரை, "தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும்" என்று விளக்குகிறது.

இப்படிப் பல விளக்கங்கள் உள்ளதால், நாம் மு.வ. எழுதியுள்ள விதத்திலேயே புரிந்து கொள்ளலாம் Smile

தீவினை என்னும் செருக்கு
தீய செயல்கள் செய்தலாகிய செருக்கினைக் கொள்ள 

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீமை செய்வோர் (தீமை செய்யும் பழக்கமுள்ளோர்?) அஞ்ச மாட்டார்கள். ஆனால், நல்லவர்கள் அஞ்சுவார்கள்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 10 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri May 16, 2014 9:42 pm

#202
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்


தீய தீ என்ற சொல் விளையாட்டு இந்தக்குறளில்!

"கலிஃபோர்னியா மாநிலத்தில் தீ" என்று இன்று செய்தியில் பார்த்த சிறிது நேரத்தில் இந்தக்குறள் Embarassed

உண்மையில் சொல்லப்போனால் இது முழுக்க ஒத்துப்போகும் உவமை அல்ல.

கதிரவனில் உள்ள தீயால் தான் நிலத்தில் வாழ்வு. அடுப்பில் தீ இல்லாவிட்டால் பழம் தின்று தான் உயிர் வாழ நேரிடும். வண்டியில் தீ இல்லாவிடில்...இப்படியே அடுக்கிக்கொண்டு போகலாம்.

என்றாலும், பொதுவாக "அழிவு" என்று அடையாளப்படுத்த நெருப்பு தொன்று தொட்டே உதவி இருக்கிறது.

அந்த விதத்தில், தீமை = அழிவு என்று உருவகப்படுத்துவதாகக் கொள்ளலாம்!

தீயவை தீய பயத்தலால்
தீய செயல்கள் தீமையை விளைவிக்கும் என்பதால்

தீயவை தீயினும் அஞ்சப் படும்
அவை (அழிவை உண்டாக்கும்) தீயை விடவும் கூடுதலாய் அஞ்சப்படும்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 10 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon May 19, 2014 7:13 pm

#203
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்


செறுவார் என்பதற்குத் "தீமை செய்வோர்" என்று உரைகள் சொல்லுகின்றன.

என்றாலும், "செறு" / "செறுதல்"  என்பதற்கு அகராதி பல பொருட்கள் சொல்லுகிறது. அவற்றுள், தீமை என்பது இல்லை Wink

அழித்தல், கொல்லுதல், சினம்,  வேறுபடுதல், அடக்குதல் என்றெல்லாம் இருக்கின்றன.

இவற்றில் பல தீமையானவை என்றாலும், குறிப்பட்ட எதையாவது வள்ளுவர் சொன்னாரா இல்லை ஒட்டு மொத்தமாக்கினாரா என்பது சிந்திக்கத்தக்கதே.

இப்படி வைத்துக்கொள்ளாலாம், செறுவார் = "நமக்கு விரும்பத்தகாத ஒன்றைச் செய்தவர்" Smile

செறுவார்க்கும் தீய செய்யா விடல்
(நம்மைத்) துன்புறுத்தினவருக்கும் தீமை செய்யாமல் விட்டு விடுதல்

அறிவினுள் எல்லாந் தலையென்ப
எல்லா அறிவிலும் உயர்ந்ததாகும்! (அல்லது, தலை சிறந்த அறிவாகும்)

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 10 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue May 20, 2014 5:49 pm

#204
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு


தீவினை என்பதற்கு இன்னொரு சொல் இந்தக்குறளில் வள்ளுவர் பயன்படுத்துகிறார் - "கேடு".

தீமை = கெடுதி / கெட்ட செயல் என்ற கருத்தில் கேடு என்று வருகிறது. கேட்டின் உச்சம் அழிவு எனலாம். (அப்படியாக, ஒட்டு மொத்தமாக அழித்தல், கொல்லுதல் என்றெல்லாம் தீவினைகளின் அளவுகள் பெருகி வரலாம்).

சூழ் என்ற சொல் "சூழ்ச்சி" என்ற பொருளில் இங்கு வருகிறது.

சூழ் = சுற்றுதல் என்பது பொதுவான பொருள் என்றாலும் இங்கு வரும் விதம் "கருதிக்கூட்டி" /  "சூழ்ச்சி செய்து" / "எண்ணி" என்றெல்லாம் தான்!

மறந்தும் பிறன்கேடு சூழற்க
மறந்தும் மற்றவருக்குத் தீமை செய்யக்கருதாதீர்கள்!
(தன்னை மறந்து / தன்னிலை மறந்து என்றெல்லாம் கொள்ளலாம்)

சூழின்
அப்படி சூழ்ச்சி செய்தால்

சூழ்ந்தவன் கேடு அறஞ்சூழும்
உமக்குத்தீமை செய்ய "அறம்" சூழ்ச்சி செய்யும்!

இங்கே "அறம்" என்றால் என்ன?

ஒரு உரையாளர் (சாலமன் பாப்பையா) "அறக்கடவுள்" என்கிறார். அதுவும் நன்றாகத்தானிருக்கிறது.

"மற்றவருக்குக் கேடு செய்ய நினைத்தல் அறவழி அன்று - அதனால் நமக்கே தீங்கு நேரிடும்" என்று கூட்டிக்கழித்துப் புரிந்து கொள்வோம் Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 10 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed May 21, 2014 5:52 pm

#205
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து

இலன் = இல்லாதவன் = வறுமை நிலையில் உள்ளவன்

தன் வறுமையை மாற்றத் தீய செயல்களில் ஈடுபடுவது தவறு என்று அறிவுறுத்தும் குறள்!

இலன்என்று தீயவை செய்யற்க
வறுமை நிலையில் இருந்து விடுபடத் தீய செயல்கள் செய்ய வேண்டாம்!

செய்யின்
அப்படிச்செய்தால்

இலனாகும் மற்றும் பெயர்த்து
மீண்டும் வறியவனாக வேண்டி வரும்!

"பெயர்த்து" என்பதை "இனி வரும் பிறவியிலும்" என்பதாகப் பரிமேலழகர் தம் நம்பிக்கையையும் கூட்டிச்சேர்த்து விளக்குகிறார்.

"பெயர்த்து" என்பதற்குப்பொதுவான பொருள் "பிடுங்கி, மாற்றி, போக்கி" என்றெல்லாம் தான்.

அவ்விதத்தில் பார்த்தால், "தீய வினைகளால் நீ கொஞ்சநாள் செல்வந்தன் ஆனாலும், அந்த நிலை நீடிக்காமல் பிடுங்கி மாற்றப்படும்" என்று கொள்ளலாம்.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 10 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu May 22, 2014 5:19 pm

#206
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்

"அடல்" என்றால் "அடுத்தல்" (நெருங்கி வருதல்) என்று நினைத்தேன்.

அகராதி பார்க்கும்போது அது தவறு என்று புரிந்தது. (மலையாளத்தில் சரி தான், தமிழில் அல்ல)

அடல் = கொல்லுதல் / பகை !

மற்றபடி, இந்தக்குறள் சீன அறிஞர் கன்ஃப்யூசியஸ் சொன்ன "எதிர்மறைப்" பொன்மொழியின் ஒரு வடிவம் தான். (இதன் நேர்மறை வடிவம் இயேசுவின் மலைச் சொற்பொழிவில் உள்ளது, "பொன் விதி" என்றும் சொல்லப்படுகிறது).

நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான்
தீமைகள் தன்னை வந்து ஒடுக்க வேண்டாம் என்பவன்

தான் பிறர்கண் தீப்பால செய்யற்க
தானும் பிறருக்குத் தீமைகள் செய்யக்கூடாது!

பொன்விதி :
மற்றவர் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அவற்றை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்!

(எதிர்மறை) வெள்ளி விதி :
உங்களுக்குச் செய்யப்பட விரும்பாதவற்றை மற்றவர்களுக்குச் செய்யாதிருங்கள்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 10 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri May 23, 2014 6:34 pm

#207
எனைப்பகையுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்

வள்ளுவரின் கடவுள் நம்பிக்கை இந்தக்குறளில் வெளிப்படுவதாகத் தோன்றுகிறது.

அதாவது "வினைப்பகை" எந்தப்பகையையும் விட வலியது என்று சொல்லுவதன் அடிப்படையில் அப்படிக்கருத முடிகிறது.

ஏன்?

மற்ற பகைகள் எப்படிப்பட்டவை என்றாலும் தப்பித்துக்கொள்ளலாம் என்கிறார் - தன்னம்பிக்கையின் உச்சம் என்பதை விட, இதைக் கடவுள் நம்பிக்கை என்றும் விளக்கலாம். ("இறைவன் என் பக்கத்தில் இருந்தால் வேறு எந்தப்பகையும் என்னை நெருங்காது" என்று நம்பிக்கைகள் சொல்லிக்கொடுப்பது தெரிந்ததே!).

தீமை செய்து வரும் "வினைப்பகை" என்பது செய்த தீங்கினால் அவதிப்படுபவரின் பகை என்றல்ல. "தீமை செய்ததால் இறைவனுக்கே பகைவன் ஆகி விட்டான், ஆதலினால் தப்பிக்க வழியே இல்லை" என்று இதை விளக்கலாம்.

(இன்னொரு விதத்திலும் சொல்லலாம் - மனச்சாட்சிக்குத்து. தனக்கே தன்மீது உண்டாகும் பகை. இரவும் பகலும் வாட்டி வதைப்பதால், அதிலிருந்து தப்ப வழியில்லை. )

எனைப்பகையுற்றாரும் உய்வர்
எந்தப்பகை வந்தாலும் தப்ப முடியும்

வினைப்பகை வீயாது பின்சென்று அடும்
தீமை செய்து வந்த பகையோ நீங்காமல் (அழியாமல்) நம்மைப் பின் தொடர்ந்து கொல்லும்!
(வீதல் = நீங்குதல் / அழிதல் ; அடும் = கொல்லும்)

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 10 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue May 27, 2014 6:47 pm

#208
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடி உறைந்தற்று


"காலைச்சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது" என்று ஒரு பழமொழி இருக்கிறது. சில நேரங்களில், ஒருவருக்கு இருக்கும் தீய தன்மையைப் பாம்புக்கு ஒப்பிட்டு இந்தப்பழமொழிக்குப் பொருத்துவதுண்டு!

அதையும் விட அழுத்தமான ஒரு உவமை இங்கு வள்ளுவர் தீவினைக்குக் கொடுக்கிறார்.

தனது நிழல்!

தீவினை செய்தவனின் அழிவு அவனை நிழல் போலப்பின் தொடரும்! (வேறு சொற்களில் சொன்னால் "அழிவில் இருந்து தப்பவே முடியாது"!)

நிழல்தன்னை வீயாது அடி உறைந்தற்று
நீங்காமல் ஒருவரது அடியில் நிழல் தங்குவது போல

தீயவை செய்தார் கெடுதல்
தீய செயல்கள் புரிந்தோருக்கு அழிவு விடாமல் வந்து சேரும்

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 10 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed May 28, 2014 2:33 pm

#209
தன்னைத்தான் காதலனாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்


பால் என்ற சொல்லுக்குப் பல பொருட்கள் தமிழில் உள்ளன என்பது அறிந்ததே. (மாட்டுப்பால், ஆண் பால், அறத்துப்பால்...)

இந்தக்குறளில் அது "பகுதி" என்ற பொருளில் வருவதாக உரையாசிரியர்கள் சொல்லுகிறார்கள்.
(தீவினைப்பால் = தீமை என்னும் பகுதி, அல்லது நன்மைக்கு எதிரான பகுதி)

துன்னுதல் என்பதற்கும் பல பொருட்கள் உள்ளன. (எனக்கு உடனே நினைவில் வந்தது மலையாளத்தில் அடிக்கடி வரும் "தைத்தல்" என்ற பொருள்). இங்கே, "செய்தல்" என்று வருகிறது.

மற்றபடி, இந்தக்குறளில் சிறப்பான பகுதி "தன்னையே காதலிப்பவன்" என்பது Smile
(யார் தான் தன்னைத்தான் விரும்பாமல், தன்மீதே அன்பு செலுத்தாமல் இருப்பார்கள்? மன நோய் உள்ளவர்கள் தவிர?)

தன்னைத்தான் காதலனாயின்
தன்னைத்தான் விரும்பி தன்மீதே அன்பு செலுத்துபவன்

தீவினைப் பால் எனைத்தொன்றும் துன்னற்க
தீமையின் பகுதியில் யாதொன்றும் செய்யாமலிருக்க வேண்டும்

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 10 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu May 29, 2014 6:33 pm

#210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்

அரும் = அருமை = இன்மை (அரிதான என்ற பொருளில்)

அருங்கேடன் = கேடு / அழிவு இல்லாதவன் என்று பொருள்!

"தீய வழியில் செல்லாதவன் அழிவில்லா வாழ்வை அடைவான்" என்ற பொருளில் வரும் நன்னெறிக் குறள்!

"மருங்கோடி" என்பதை நெறி தவறி, வழி தவறி என்றெல்லாம் உரையாசிரியர்கள் பெயர்க்கிறார்கள். ஆக, ஒழுங்கற்ற வாழ்க்கை முறையை அது சுட்டுகிறது!

மருங்கோடித் தீவினை செய்யான் எனின்
ஒருவன் நெறியற்ற விதத்தில் தீமை செய்யாதவன் என்றால்

அருங்கேடன் என்பது அறிக
அவனுக்குக் கேடு வருவதில்லை என்று அறிந்து கொள்ளுங்கள்!

"அறிக" என்பது ஒரு அழகான சொல்.

"நமக்கு நாமே உணர்தல்" என்று பொருள் படுகிறது!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 10 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri May 30, 2014 9:33 pm

#211
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு

(அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்)

"ஒப்புரவு ஒழுகு" என்ற ஆத்திசூடியின் படிப்பார்த்தால், ஒப்புரவு = உலக நடைமுறை.

வள்ளுவரும் அதே பொருளில் தான், அதாவது, "உலக நடைமுறை அறிந்து, அதன் படி வாழ்தல்" என்று இந்த அதிகாரம் எழுதத் தொடங்கி இருக்க வேண்டும்.

ஆனால், குறள்களில் வலியுறுத்தப்படும் பொருளைப் பார்த்தால், ஒப்புரவு = சமம்/ஒற்றுமை என்ற இன்னொரு பொருளும், அதாவது பொதுவுடைமைக் கோட்பாட்டின் ஒரு துளியும் இங்கு வருகிறதோ என்ற ஐயம் எழுகிறது.

முதல் குறளின் பொருள் பார்க்கலாம்.

மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு
மழைக்கு என்ன கைம்மாறு உலகம் செய்ய இயலும்?

கைம்மாறு வேண்டா கடப்பாடு
(மழை போல்) எல்லாருக்கும் உதவுவோரும் கைம்மாறு வேண்டாதவரே!

கடப்பாடு என்பது பொதுவாகக் "கடமை" என்றே பொருள் பட்டாலும், இங்கே "பரோபகாரி" (எதிர்பார்ப்பு இல்லாது உதவி செய்பவர்) என்ற  பொருளில் உள்ளதாக அகராதி சொல்லுகிறது

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 10 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jun 02, 2014 7:22 pm

#212
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு


தாள் ஆற்றி - ஊக்கம் / விடாமுயற்சி இவற்றோடு கூடிய உழைப்பு என்று வருகிறது.
(தாளாண்மை / தாளாளன்)

வேளாண்மை - உதவி / உபகாரம் என்று இங்கே பொருள் படுகிறது. அதாவது, "ஒப்புரவு" என்ற பொருள். நான் முன்னமேயே சொன்னது போல, 'உலக நடைமுறை' என்று பொதுவாக அல்ல,
"மற்றவருக்கு உதவி செய்து ஒற்றுமை / சமம் இவற்றைப் பேணுதல்" என்ற பொருளில் வருகிறது!

பலருக்கும் பள்ளிக்காலத்தில் அறிமுகமான  குறள் தான்.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம்
ஊக்கம் / விடாமுயற்சியால் உண்டாக்கிய பொருள் வளமெல்லாம்

தக்கார்க்கு
(பெறத்) தகுதி உடையவர்களுக்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு
உதவியாகக் கொடுப்பதற்கே (கொடை செய்வதற்கே) ஆகும்!

ஆக, இங்கே ஒப்புரவறிதல் = (தக்கார்க்கு) நன்கொடை கொடுத்தல்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 10 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jun 03, 2014 7:31 pm

#213
புத்தேளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற


புத்தேள் என்பதற்குப் "புதுமை" என்றும் "தெய்வம்" என்றும் இரு பொருட்கள் அகராதியில் காணலாம்.

அப்படியாக, "புத்தேள் உலகம்"  = புதிய உலகம் அல்லது இறைவன் வாழும் உலகம் ("வானுலகம்")  Smile

அவரவர் நம்பிக்கைப்படி இதற்குப் பொருள் கொள்ளலாம் Smile

"உமது அரசு வருக, உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக" என்று விவிலியத்தில் இயேசு தம்மைப் பின்பற்றினோருக்கு வழிபடக் கற்றுக்கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

அதாவது விண்ணரசு மண்ணுக்கு வரும், மண்ணுலகு "புதிய உலகம்" ஆகி விடும்  என்ற இன்னொரு நம்பிக்கை Smile

ஈண்டும் = இவ்விடத்திலும்

ஒப்புரவின் நல்ல பிற
ஒப்புரவு என்ற பண்பினை விட நல்ல வேறொன்றை  

புத்தேளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
இறையுலகிலும் (விண்ணிலும்) இங்கும் (மண்ணிலும்) பெற முடியாதே!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 10 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jun 04, 2014 6:30 pm

#214
ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்


சில வலைத்தளங்கள் "ஒத்ததறவோன்" என்று இந்தக்குறளை எழுதி இருக்கின்றன. அதுவும் பொருத்தமானதே என்றாலும் நமக்கு மிகவும் பழகியது "ஒத்ததறிவான்" என்பது தான் Smile

பொருள் புரிதல் மிக எளிது.

ஒத்ததறிவான் உயிர்வாழ்வான்
ஒப்புரவு என்ற பண்புள்ளவன் தான் உயிர் வாழுவதற்கு அருகதை உள்ளவன்

மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்
அப்படி இல்லாதவன் செத்துப்போனதாகவே (அதாவது, வாழத்தகுதியற்றவனாகக்) கருதப்படுவான்!

"மற்றவர்களுக்கு உதவி அவர்களோடு ஒப்புரவுடன் வாழாதவன் இருந்து என்ன பயன்?" என்று கேட்கிறார் வள்ளுவர்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 10 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jun 05, 2014 4:38 pm

#215
ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
பேரறிவாளன் திரு


அருமையான உவமை உள்ள, நம்மில் பலரும் அறிந்த ஒரு திருக்குறள்!

என்றாலும், இதன் பொருள் விளக்கங்கள் பலவிதமாக உள்ளதைக் காண முடியும் Smile

எல்லோரும் ஒரே விதத்தில் காணும் பகுதி - "ஊருணி நீர் நிறைந்தற்றே". 

எல்லார்க்கும் பொதுவான ஊர்க்குளம் தான் "ஊருணி". (எனக்குத்தெரிந்தே, கடந்த நாற்பது ஆண்டுகளில், எத்தனையோ ஊருணிகள் தமிழ்நாட்டில் "காணாமல் போயிருப்பது" மிகவும் வருந்தத்தக்க ஒன்று.)

இதில் நீர் நிறைந்திருந்தால் ஊரார் எல்லோருக்கும் பயன்! மகிழ்வுடன் அதைப் பயன்படுத்துவார்கள். அது போலத்தான் ஒப்புரவாளனின் செல்வமும் என்று சொல்லும் குறள்!

உலகவாம் என்பதற்குப் பல விளக்கங்கள் இருக்கின்றன. எனக்கு ஏற்புடையது, "உலகு அவாம்" - உலக நலத்தை விரும்புகின்ற, அதாவது "ஒப்புரவு" என்னும் பண்புள்ள Smile

திரு என்பது செல்வம் என்பது தெரிந்ததே. குறிப்பாகச்சொன்னால், பொருட்செல்வம் Smile
இங்கே "பேரறிவாளன் திரு" என்று வருவதால், அறிவுச்செல்வம் என்றும் சில உரைகள் சொல்லுவதைக் காணலாம்.ஆனால், பொருள் என்று புரிவதே தகுந்தது என்று நினைக்கிறேன்.

உலகவாம் பேரறிவாளன் திரு
உலக நலம் விரும்பும் (ஒப்புரவு எனும் பண்புள்ள) பேரறிவாளனின் பொருட்செல்வம்

ஊருணி நீர் நிறைந்தற்றே
ஊருணியில் நீர் நிறைந்திருப்பது போல!
(எல்லோருக்கும் பயன்படும்)

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 10 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jun 06, 2014 8:06 pm

#216
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்


வள்ளுவருக்கு இந்த "நயன்-பயன்" எதுகை ரொம்பப்பிடிக்குமோ என்னமோ Smile

மீண்டும் இங்கே அது வருகிறது.

மற்றபடி, இது முந்தைய குறளின் இன்னொரு வடிவம் தான். அதாவது, ஊருணிக்குப் பதிலாக இங்கே பழ மரம் Smile

'ஒப்புரவு என்னும் நல்ல பண்பு உள்ளவரின் உடைமைகள் ஊருக்குப் பொதுவான மரத்தில் பழங்கள் பழுத்தது போல் எல்லோருக்கும் உதவும்' என்கிறார்.

முன்னதில் நீர், இதிலோ உணவு!

செல்வம் நயனுடையான்கண் படின்
மற்றவருக்கு உதவுபவன் (நயன் = உபகாரி) இடத்து செல்வம் சேர்ந்தால்

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்
ஊரின் உள்ளே, எல்லோருக்கும் பயன் தரும் வண்ணம் உள்ள மரத்தில் நிறையப் பழங்கள் பழுத்தது போன்றதாகும்!

நல்ல உவமை தான்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 10 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jun 09, 2014 8:41 pm

#217
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்


அதே மர உவமை மீண்டும், பழத்தை மாற்றி மருந்து என்று வைக்கிறார் வள்ளுவர் Smile

நான் முன்னமேயே சொன்னது போல, ஒப்புரவு என்பது 'பொதுவான வழிமுறை' என்றல்ல, 'எல்லோருக்கும் உதவி' அல்லது 'பொதுவுடைமை ஆக்கி ஒற்றுமை / சமநிலை உண்டாக்குதல்' என்ற பொருளிலேயே இந்த அதிகாரம் செயல்படுவதைக் காணலாம்.

அப்படியாக உதவுதல் என்ற கருத்தில், ஊருணி மற்றும் பழமரத்தைத் தொடர்ந்து மருந்தளிக்கும் மரம் இந்தக்குறளில்!

செல்வம் பெருந்தகையான் கண் படின்
செல்வம் பெருந்தன்மை உள்ளவனிடம் சேர்ந்தால், அது,
(பெருந்தன்மை உள்ளவன் = ஒப்புரவாளன்)

மருந்தாகித் தப்பா மரத்தற்றால்
(பிணியாளிகளுக்கு) மருந்தாகப் பயன்படுவதிலிருந்து தவறாத மரத்துக்கு ஒப்பானதாகும்!

வள்ளுவர் காலத்தை விட அதிக அளவில் நம் நாளுக்கு இந்த உவமை மிகப்பொருத்தம் (மருந்து தேவைப்படாத மனிதர்கள் இன்று மிகக்குறைவு!)
Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 10 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jun 10, 2014 8:13 pm

#218
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்


இடன் = நல்ல காலம் (வளம் உள்ள நிலை என்று பொருள்)
இடனில் = செல்வம் இல்லாத நிலை / வளம் குன்றிய நிலை / கெட்ட காலம்

ஒல்குதல் = தளர்தல் / மெலிதல் / பின்வாங்குதல் ("ஒல்லி / ஒல்லிப்பிச்சான்" இதிலிருந்து வரும் சொற்கள்) Smile

"கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே" என்ற பொருளை வலியுறுத்தும் குறள்!

கடனறி காட்சி யவர்
(மற்றவருக்கு உதவும்) தமது கடமை குறித்த சிந்தனை உள்ள மேலோர்

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
பொருள் வளம் குறைந்த காலத்திலும் உதவி / ஒப்புரவு செய்வதில் தளரவே மாட்டார்கள்!

மனதைத் தொடும் குறள்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 10 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jun 11, 2014 10:41 pm

#219
நயனுடையான் நல்கூர்ந்தானாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு


நல்கூர்தல் = வறுமை அடைதல்
கொஞ்சம் எதிர்பாராத பொருள் தான், "நல்" என்றவுடன் ஏதோ நேர்மறையான ஒன்று என்று நினைப்போம் Smile

இந்தச்சொல்லின் பொருள் தெரிந்தால் போதும் இக்குறளை விளக்க Smile

என்றாலும், இரு விதங்களில் பொருள் கொள்ள முடியும் என்று உரைகளில் இருந்து தெரிகிறது!

நயனுடையான் நல்கூர்ந்தானாதல்
(ஒப்புரவாகிய) நற்பண்பு உள்ளவன் வறுமை அடைந்தவன் ஆதல் (வறியவனாக உணருதல் / வருந்துதல் என்றும் கொள்ளலாம்)

செயும்நீர செய்யாது அமைகலாவாறு
தான் தவறாமல் செய்வனவற்றை (அதாவது உதவிகள் / ஒப்புரவுகள் போன்றவற்றைச்) செய்யாத நிலையில் இருத்தலே!

என்ன இரு புரிதல்கள்?

1. தவறாது உதவி செய்யும் பண்பாளரால் தற்பொழுது உதவ முடியவில்லை என்றால், அவர் தவிர்க்க இயலாத வறுமையில் உள்ளார் என்று சொல்லாமலேயே அறிந்து கொள்ளலாம்.

2. நற்செயல்கள் தவறாது செய்வோருக்கு அவை செய்ய இயலாத நிலை, கடுமையான வருத்தத்தை (வறுமையில் வாடும் உணர்வைத்) தரும்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 10 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jun 12, 2014 9:16 pm

#220
ஒப்புரவினால் வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கதுடைத்து


"உதவி செய்யப்போகிறாயா? கண்டிப்பாகக் கெட்ட பெயர் கிடைக்கும் என்று நினைவில் வை" என்று வேடிக்கையாகக் கூறுவது என் வழக்கம்.

என்றாலும், உதவுதல் நமக்குள்ளே உண்டாக்கும் மகிழ்ச்சி, என்ன அவப்பெயர் வந்தாலும் துடைத்தழிக்கும் வலிமையுள்ளது - என்றும் கூட்டிச்சொல்வதுண்டு!

ஏறத்தாழ அதே பொருளில் வரும் குறள்!

ஒப்புரவினால் வரும் கேடெனின்
ஒப்புரவு செய்வதால் (நமக்குக்) கேடு வரும் என்றால்

அஃதொருவன் விற்றுக்கோள் தக்கதுடைத்து
அது நம்மையே விற்றாவது அடையத்தகுதியுள்ளதாகும்!

உதவி செய்வதால் வரும் தீமையை, நம்மையே விற்றாவது அடைய வேண்டும்!

எவ்வளவு உயரிய வாழ்க்கை நிலை!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 10 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jun 16, 2014 7:26 pm

#221
வறியார்க்கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து

(அறத்துப்பால், இல்லறவியல், ஈகை அதிகாரம்)

"குறியெதிர்ப்பை" என்பதற்கு அகராதி சொல்லும் பொருள் : "அளவு குறித்துவாங்கி வாங்கியவாறே எதிர் கொடுப்பது". (221-ஆம் குறளை அங்கே மேற்கோளும் காட்டுகிறார்கள்).
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.3:1:4237.tamillex

"மறுபடி எப்போதாவது உதவுவார்கள்" என்ற எதிர்பார்ப்புடன் கொடுப்பது ஈகை அல்ல, வெறும் கடன் என்று போட்டுடைக்கும் குறள்!

அதற்கு மாறாக, "நமக்கு ஒன்றும் திருப்பிச்செய்ய வழியில்லாதவருக்கே கொடை செய்ய வேண்டும்" என்ற உயர்ந்த கருத்தைச்சொல்லும் குறள்.

வறியார்க்கொன்று ஈவதே ஈகை
இல்லாதவர்களுக்கு (ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல்) கொடுப்பது தான் ஈகை

மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து
மற்றதெல்லாம் திருப்பி ஏதாவது (அல்லது, கொடுத்த அளவில் கிடைக்க வேண்டும் என்று) எதிர்பார்த்துச் செய்வதாகும்!

கடன் கொடுப்பதையும் ஈகையையும் குழப்பிக்கொள்ளாதீர்கள் என்கிறார் Smile

"திருப்பித்தர இயலாதவருக்குக் கொடுங்கள். அப்போது உங்களுக்கு இறைவன் பலன் தருவார்" என்பது விவிலியத்தின் கருத்து.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 10 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jun 17, 2014 11:58 pm

#222
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று


"கொளல் தீது" என்பதை உரையாசிரியர்கள் அப்படியே எடுத்துகொள்வதைக் காண முடிகிறது. 

என்றாலும், அதை உயர்வு நவிற்சியாகத் தான் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து. (ஏனென்றால், எதையாவது பெற்றுக்கொள்ளாமல் யாரும் வாழ முடியாது!  குறைந்த அளவில் பார்த்தாலும், பெற்றோர்/ஆசிரியர் இப்படி யாரிடமிருந்தாவது எதையாவது பெறாதவன் யார்? அவையெல்லாம் தீதா என்ன? )

இதை "உயிரே போனாலும்" என்பது போல, வேறுபடுத்திக்காட்டும் ஒப்புமை என்றே கொள்ள வேண்டும்.

அதாவது, ஈகையின் உயர்வைக்காட்ட, பெற்றுக்கொள்வதைத் தீய செயல் என்று சொல்லுவது!

மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று
(கொடுப்பதன் விளைவாக) வானுலகில் இடம் இல்லையென்ற நிலை வந்தாலும், ஈதலே நல்லது!

நல்லாறு எனினும் கொளல்தீது
(அதோடு ஒப்பிடுகையில்) நல்ல வழியில் என்றாலும் பெற்றுக்கொள்ளுதல் உகந்ததல்ல!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 10 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jun 18, 2014 5:14 pm

#223
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள

எவ்வம் என்றால் துன்பம்.

எவ்வம் உரையாமை = துன்ப நிலை (அதாவது, இந்த இடத்தில் "இலன் என்று" அல்லது வறுமை குறித்துச்) சொல்லாமல் இருத்தல்.

வேடிக்கை என்னவென்றால், இதற்கு மூன்று விதமான உரைகளைப் பார்க்க இயலுகிறது!

1.  தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் மற்றவருக்கு ஈதல்

2. வந்திருக்கும் ஆள் தனது வறுமை குறித்துச் சொல்லு முன்னமேயே ஈதல்

3. தன்னிடம் வந்து உதவி பெற்ற ஆளின் வறுமை நிலை குறித்து இன்னொருவரிடம் பேசாமல் ஈதல்


எல்லாமே ஏற்புடையவை என்றாலும், " 'எனக்கே இல்லை'  என்று தன் துன்பம் பற்றிப் புலம்பாமல்" என்ற பொருளே எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.


இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
தன்னுடைய இல்லாமையைக் காட்டிக்கொள்ளாமல் ஈவது

குலனுடையான் கண்ணே யுள
மேன்மையானவர்கள் மட்டும் கொண்டிருக்கும் பண்பாகும்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 10 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jun 20, 2014 4:58 pm

#224
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு

சுவையான மற்றும் நடைமுறை உண்மையைச்சொல்லும் குறள்!

கொடுப்பது என்பது கண்டிப்பாக ஒருவருக்கு இன்பம் தருவது தான்.

என்றாலும், வறுமையும் தேவையும் நிறைந்தவர்கள் - குறிப்பாக இரக்கும் (பிச்சையெடுக்கும்) நிலையில் உள்ளோர் - இன்னும் நிறைய இருக்கிறார்கள் என்பது ஈகையாளரின் மனதுக்குத்துன்பம் தருவதே!
(பாரதி : தனியொருவனுக்குணவிலை எனில்...)

இப்படியாக, துன்பமும் இன்பமும் கலந்த ஒன்று தான் ஈகை என்று அழகாகச் சொல்லும் குறள்!


இன்னாது இரக்கப்படுதல்
இரக்கப்படுதல் (அதாவது தன்னிடம் வந்து இரக்கும் நிலையில் மாந்தர் உள்ளது) துன்பம் தருவதே!

இரந்தவர் இன்முகங் காணும் அளவு
(என்றாலும், அது) இரந்தவரின் மகிழ்வான முகம் காணும் வரை தான்!

தங்கள் தேவை கிடைத்தவுடன் அவர்கள் முகத்தில் வரும் நிறைவு / மகிழ்வு முன்னிருந்த துன்பத்தை ஆற்றி, இன்பமாக மாற்றும் - மற்றவர் குறையாற்றத் தன்னால் ஏதோ கொஞ்சம் செய்ய முடிந்ததே என்பதால்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 10 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 40 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 25 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum