Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 9 of 40 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 24 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 9 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Apr 11, 2014 7:46 pm

#178
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்


அஃகுதல் என்றால் சுருங்குதல் என்று அகராதி பொருள் சொல்கிறது. (வறுமை என்றும் கூட இன்னொரு பொருள் இருக்கிறது).

அப்படிப்பட்ட ஒரு நிலை ஒருவரது செல்வத்துக்கு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று வழி சொல்லும் குறள்!

"யாதெனின்" என்று வரையறுக்கும் குறள்களில் இதுவும் ஒன்று! ("வாய்மை எனப்படுவது யாதெனின்" என்ற குறள் பலருக்கும் அறிமுகம். அதே நடையில் உள்ள குறள் இது).


செல்வத்திற்கு அஃகாமை யாதெனின்
(ஒருவரது) செல்வம் குறைந்து போகாதிருக்க வேண்டுமென்றால்

பிறன்கைப் பொருள் வெஃகாமை வேண்டும்
(அவர்) பிறரிடம் உள்ள பொருளைக்கவர  விழையாமல் இருக்க வேண்டும்!

"அடுத்தவன் உடைமைக்கு ஆசைப்பட்டால் தன்னுடைமையும் காணாமல் போகும்" என்று தலையில் தட்டிச்சொல்லும் குறள்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 9 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Apr 14, 2014 7:58 pm

#179
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன் அறிந்தாங்கே திரு

திரு(மகள்) வந்து சேர என்னெல்லாம் வேண்டும் என்று பட்டியல் இடும் குறள்!

வெஃகாமை அதிகாரம் என்பதால், "வெஃகா" என்பதற்குத்தான் முதலிடம். இருந்தாலும், பட்டியலில் உள்ள மற்ற மூன்றும் கவனிக்கத்தக்கவை Smile

அதாவது, அறன் / அறிவு / திறன் Smile

அறனறிந்து வெஃகா அறிவுடையார்
நன்மை தெரிந்து பிறர் பொருள் கவரும் ஆசையில்லாத அறிவுடைவர்களிடம்

திறன் அறிந்தாங்கே திரு சேரும்
திறமை (அல்லது இத்தகைய நல்ல தன்மைகள்) தெரிந்து தக்க நேரத்தில் (அல்லது உடனே) செல்வம் வந்து சேரும்!

பொருட்செல்வத்தை வாழ்வின் முதலிடத்தில் வைக்காத அறநெறியில் வாழுவோருக்கும் அதன் தேவை உண்டு என்பது உண்மை நிலையாகும்.

தேவைக்கேற்பத் திருமகள் உதவ வேண்டுமெனில், அறம் , வெஃகாமை, அறிவு எல்லாம் நமக்குத்தேவை!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 9 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Apr 15, 2014 8:19 pm

#180
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு

இறல் என்றால் இறுதி என்று அகராதி கூறுகிறது. (முடிவு / அழிவு / இறப்பு என்றெல்லாம் கொள்ளலாம்)!

இதற்கெதிராக, விறல் என்பதையோ வெற்றி என்று வரையறுக்கிறது.

வெஃகுதல் மற்றும் வெஃகாமை இவற்றை வேறுபடுத்தும் குறள்!

எண்ணாது வெஃகின் இறலீனும்
(விளைவு குறித்து) எண்ணாமல் பிறர் பொருள் கவர ஆசைப்பட்டால், அழிவு தான் கிடைக்கும்!

விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு
(அதற்கு மாறாக) "நமக்குப் பிறர் பொருள் வேண்டாம்" என்னும் (ஆசையற்ற) மேன்மை நிலை, வெற்றியைத்தரும்!

சொல்லப்போனால் இது "வாழ்வா, சாவா" எனும் தீர்மானம்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 9 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Apr 16, 2014 8:14 pm

#181
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது
(அறத்துப்பால், இல்லறவியல், புறங்கூறாமை அதிகாரம்)

"மழைக்குக்கூட இவன் பள்ளிக்கூடம் போனதில்லை" என்று விளையாட்டாகச் சொல்லிக்கேட்டிருக்கிறோம்.

அது போன்ற ஒரு பதம் "அறங்கூறான்" என்பதாக உரை ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள். அதாவது, "அறம்" என்ற சொல்லை வெறும் பேச்சில் கூடப் பயன்படுத்தாதவன் Smile

அவனது நிலையை விடவும் புறங்கூறுபவன் நிலை கீழானது என்று சொல்லி இந்த அதிகாரத்தைத் தொடங்குகிறார்!

அறங்கூறான் அல்ல செயினும்
பேச்சில் "அறம் " என்ற சொல் போலும் கூறாதவன், பாவச்செயல்கள் மட்டுமே செய்து வாழ்பவன் என்றாலும்
 
ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது
"பிறர் குறித்து (அவரது முதுகுக்குப்பின்னால்) அவதூறு பேசாதவன்" என்ற அளவில் அறியப்பட்டாலே  ஒருவனுக்கு அது நல்லது!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 9 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Apr 18, 2014 12:14 am

#182
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை


கடந்த குறளின் அதே பொருள் - ஆனால் எதிர்மறையில், அதாவது மாற்றிப்போட்டு, "இனிது" என்ற இடத்தில் "தீதே" என்று சொல்லும் குறள்.

மற்றபடி, அதே அறனல்ல X புறங்கூறல் தான்.

கூடுதலாக வரும் இன்னொன்று "பொய்த்து நகை".  அதாவது, நயவஞ்சகத்தனம்.

முகத்துக்கு முன்னாள் சிரிப்பதும் முதுகுக்குப் பின்னால் குத்துவதுமான கெட்ட தன்மை

புறனழீஇப் பொய்த்து நகை
முதுகுக்குப்பின்னால் (ஆளில்லாத போது) பழித்துப்பேசுவதும், நேரிலோ பொய்யாக சிரித்துப்பேசுவதும்

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
"நன்மை என்று ஒன்றில்லை" என்று அழித்துப்பேசி, அல்லாதவைகளை மட்டுமே செய்தலை விடவும்  தீயதாகும்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 9 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Apr 22, 2014 1:02 am

#183
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்


வள்ளுவருக்கு "சாவுக்குப்பின்" நம்பிக்கை இருந்திருக்கிறது என்பது முன்னமேயே சில குறள்களில் நாம் கண்டது தான்.

இங்கே அது அப்பட்டமாக வருவதை மீண்டும் காண்கிறோம்.

அதாவது, "வாழ்வை விட சாவு மேல்" என்னும் கோட்பாடு இந்தக்குறளில் காண்கிறோம். (அந்த மட்டில், நேர்மையாக வாழ்ந்து சாவது, அதற்குப்பின் ஏதோ ஒரு விதத்தில் நல்ல ஆக்கம் / பலன் தரும் என்ற நம்பிக்கை வெளிப்படை ஆகிறது).

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின்
உயிர் வாழ்வதற்காகப் பொய்யும் புறமும் சொல்லி நடப்பதை விட

சாதல் அறங்கூற்றும் ஆக்கத் தரும்
செத்துப்போவதே மேல்! (ஏனென்றால்) அது அறநூல்களில் சொல்லப்பட்டிருக்கும் நற்பலனைத் தரும்!

உயர்த்த வாழ்க்கை வழிக்காக உயிரையும் கொடுத்தவர்கள் இங்கே நம் நினைவுக்கு வருகிறார்கள்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 9 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Apr 22, 2014 4:59 pm

#184
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்


கொஞ்சம் சொல் விளையாட்டு இருக்கிறது இந்தக்குறளில் Smile

நின்று (இருந்து) & இன்று (இல்லாமல்) Smile

ஓற்று இரட்டித்தல் என்ற இலக்கண விதியை இந்த விளையாட்டில் வள்ளுவர் கையாளுவது அழகு.

ஒரே போல் தோன்றும் இரு சொற்களைப் பிரிக்கும் விதத்தில் தான் பொருள் பொதியல் நடக்கிறது Smile

கண்ணின்று = கண் + நின்று
முன்னின்று = முன் + இன்று

என்ன ஒரு குறும்பு!

கண் நின்று கண்ணறச் சொல்லினும்
கண்ணுக்கு முன்னால் நின்று, கடுமையான (கண்+அற = கனிவற்ற) சொற்களைச் சொன்னாலும்

முன் இன்று பின்நோக்காச் சொல் சொல்லற்க
முன்னால் இல்லாத போது (முதுகுக்குப்பின்னால்), பின்விளைவு பற்றிய எண்ணமில்லாமல் பழி பேச வேண்டாம்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 9 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Apr 23, 2014 5:51 pm

#185
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்


அன்மை = இன்மை = இல்லாமை என்று முன்னமே ஒரு குறளில் பார்த்திருக்கிறோம்.

"ஒருவன் நெஞ்சம் அறவழியில் இல்லை" என்பதை அடையாளம் காணும் உறை கல் புறங்கூறுதல் என்று இந்தக்குறளில் வலியுறுத்துகிறார்.

புறஞ்சொல்லும் புன்மையால்
மற்றவரைப் பற்றிப் புறங்கூறும் இழிந்த தன்மையால் (புன்மை = இழிவு)

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை காணப்படும்
ஒருவனிடம் அறவழியில் நடக்கும் நெஞ்சம் இல்லை என்று கண்டு கொள்ளலாம்!

"நெஞ்சம்" என்று சொல்லும் போது, உடல் உறுப்பை அல்ல, ஒரு ஆளின் உள்ளான தன்மையை இங்கு சொல்லுகிறார் என்று உணர்வது கடினமல்ல.

"உள்ளுக்குள் ஒருத்தன் எப்படி" என்று அறியும் அதிசயத்திறமை மனிதருக்கு இல்லாத நிலையில், அவர்களது வெளிச்செயல்பாடுகள் மூலமாகத்தான் ஓரளவு கணிக்க முடியும்.

அவ்விதத்தில், இது ஒரு குறிப்பிடத்தக்க குறள்!

இன்னொருத்தரைப் பழி பேசிக்கொண்டு இருக்கும் ஆள், அறவழி நெஞ்சத்தான் அல்ல என்று அடையாளம் கண்டு கொள்ளலாம்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 9 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Apr 24, 2014 4:40 pm

#186
பிறன்பழி கூறுவான் தன்பழியுள்ளும்
திறன்தெரிந்து கூறப்படும்


மற்றவருக்குத் தீங்கு செய்ய நினைத்தால், அதே தீங்கு நமக்கு வரும் என்ற கருத்தை வலியுறுத்தும் குறள்.

புறங்கூறுதல் என்ற தீங்கிற்கு இங்கே பார்க்கிறோம்.

பிறன்பழி கூறுவான்
மற்றவர்கள் மீது (அவர்கள் இல்லாத போது) பழி சொல்லுபவன்

தன்பழியுள்ளும்
என்னவெல்லாம் பழிகள் செய்துள்ளானோ அவற்றுள்

திறன்தெரிந்து கூறப்படும்
தேடிப்பிடித்து, மிகக் கொடுமையான பழிகள் அவன் மீது கூறப்படும்!

அதனால், "என்ன செய்யாதிருக்க வேண்டும்" எனும் எச்சரிக்கையாக இந்தக்குறளைக் கொள்ளலாம்!

உன்னைப்பற்றி யாரும் பழி பேசாதிருக்க வேண்டுமென்றால், நீயும் பழி பேசுவதை விட்டு விடு!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 9 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Apr 25, 2014 7:04 pm

#187
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றாதவர்


'நக' என்ற சொல் நகுதல், நகைத்தல் என்பவற்றோடு சேர்ந்தது. (சிரித்தல், மகிழ்தல்).

நகச்சொல்லி = மற்றவர் இன்புறும் விதத்தில் (சிரித்து மகிழும் விதத்தில்) பேசுதல் Smile

அதே அடிப்படையில் பார்த்தால், 'பக' = பகுத்தல், பகைத்தல் என்பவற்றோடு சேர்ந்ததாய் இருக்க வேண்டும். அகராதிகளில் 'பக' என்று தனித்துக் காண முடியவில்லை. 'பகச்சொல்லி' என்பதைப் 'புறங்கூறி' என்று சில சொல்லுகின்றன, ஆனால் அவை குறளின் வழி வந்த பெயர்ப்புகள் என்று கருதுகிறேன்.

நகச்சொல்லிக்கு எதிர்ப்பதம் என்ற விதத்தில், 'பகச்சொல்லி' = பகை வரும் விதத்தில் பேசுதல் (வெறுப்பு, பழி பேசுதல்)

நகச்சொல்லி நட்பாடல் தேற்றாதவர்
பிறர் மகிழும் வகையில் பேசி நட்பு சேர்க்கும் தன்மை இல்லாதவர்கள்

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர்
பழி பேசி நண்பர்களைப் பிரிக்கும் கொடுமையும் செய்வார்கள்!

(அவர்களது நண்பர்களைத் தூர ஓட்டுதல் மட்டுமல்ல, மற்ற இடங்களிலும் பிரிவினை உண்டாக்கும் கயவர்களாய் இருப்பார்கள்)!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 9 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Apr 28, 2014 7:54 pm

#188
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு


துன்னியார் = நண்பர், நெருங்கியவர்
(துன்னுதல் என்றால் "சேர்த்துத் தைத்தல்" என்று பொருள் - மலையாளத்தில் Smile தமிழில் இருந்து இறக்குமதி என்பதில் ஐயமில்லை)

ஏதிலார் என்பது கிட்டத்தட்ட அதற்கு எதிர்ச்சொல். அந்நியர் / பகைவர் என்றெல்லாம் அதற்கு அகராதி பொருள் சொல்லுகிறது. (இணைப்பு ஏதும் இலார்)

ஆக, நேர்மறையான ஒன்றைச்சொல்லி, "அதற்கே இப்படியென்றால், எதிர்மறைக்கு இன்னும் எவ்வளவு கடுமையாய் இருக்கும்" என்று வலியுறுத்தும் வகையிலான குறள்! 

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
நெருங்கியவர்களின் தவறுகளையே தூற்றிப்பரப்பும் புறங்கூறி இயல்புள்ளவர்கள்

என்னைகொல் ஏதிலார் மாட்டு
அந்நியர்களின் குற்றங்களை இன்னும் கூடுதல் சொல்லி நடப்பார்கள் அல்லவா?

மொத்தத்தில், நண்பனைப் பற்றிப் புறங்கூறத் தயங்காதவன் அந்நியரைப் பற்றி அவதூறு சொல்வதில் அதிசயம் ஒன்றுமில்லை என்று சுருக்கம்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 9 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Apr 29, 2014 5:34 pm

#189
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை


"அவனெல்லாம் பூமிக்கு பாரம் / சுமை" என்று திட்டுவதைக் கேட்டிருப்போம்.

அப்படிப்பட்ட ஒரு "திட்டும்" குறள் Smile

போகிற போக்கில் பொறுமையின் உச்சமாக நிலத்தை அடையாளப்படுத்தவும் செய்கிறார்!

புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான்
ஒருவர் இல்லாத நேரம் பார்த்து (முதுகுக்குப்பின்னால்) அவர் மீது பழிச்சொல் கூறும் தன்மையுடவனையும் 

பொறை
பொறுத்து(ச் சுமந்து)

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம்
"இது தான் எனது அறம்" என்று வையகம் (நிலம்) ஆற்றுகிறதோ?

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 9 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Apr 30, 2014 7:36 pm

#190
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு


"மற்றவனை நோக்கி ஒரு விரல் சுட்டும் போது , உன்னை நோக்கி மூன்று விரல்கள் சுட்டும் என்பதை மறக்காதே" என்று பெரியவர்கள் சொன்னதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

"முதலில் உன் கண்ணில் உள்ள உத்திரத்தை நீக்கு, அதன் பின் உன் சகோதரன் கண்ணில் உள்ள துரும்பை எடுக்க வகை பார்க்கலாம்" என்று இயேசு மலைச்சொற்பொழிவில்  சொன்னது விவிலியத்தில் உள்ள ஒரு உயர்வு நவிற்சி Smile

வள்ளுவர் இங்கே அவ்விதமான கருத்தைப் புறங்கூறாமையை வலியுறுத்தச் சொல்லும் குறள்!
 
பள்ளிக்காலத்திலேயே எல்லோருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று Smile
 
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கில்
மற்றவர்களிடம் பழி காண்பது போல் (புறங்கூறுதல் போன்ற) நமது குற்றங்களையும் உணர்ந்தால்

பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு
அதற்குப்பின், நீடித்திருக்கும் (மன்னும்) உயிர் வாழ என்ன தீங்கு இருக்க முடியும்?

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 9 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu May 01, 2014 9:57 pm

#191
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப்படும்

(அறத்துப்பால், இல்லறவியல், பயனில சொல்லாமை அதிகாரம்)

முனிதல் = வெறுத்தல் (கோபப்படுதல் என்றும் ஒரு பொருள் உண்டு)
(முனிவர் = பொதுவான ஆசைகளை வெறுத்தவர் / துறந்தவர் என்று வந்திருக்கும் என நினைக்கிறேன்)

எள்ளல் என்றால் இகழுதல் / இகழ்ச்சி என்பது தெரிந்ததே Smile

பொருள் புரிதல் மிக எளிதே!

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
பலரும் வெறுக்கும்படி உதவாத பேச்சுப் பேசுகிறவன்

எல்லாரும் எள்ளப்படும்
அனைவரின் இகழ்ச்சிக்கும் ஆளாவான்!

வீண் பேச்சு / வெட்டிப்பேச்சு (தனக்கும் பிறர்க்கும்) ஒரு நன்மையும் தருவதில்லை.

'இகழ்ச்சி மட்டுமே தரும்' என்கிறார் வள்ளுவர்.

உண்மை தான்! Embarassed

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 9 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri May 02, 2014 6:41 pm

#192
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற்றீது


"நயன்" என்பதை  நயம் / நல்ல தரமான / இனிமையான / விரும்பத்தக்க என்றெல்லாம் முன்னமேயே பார்த்திருக்கிறோம் Smile

"பயன்" என்பதோடு அது ஒலியிசைவு கொண்டிருப்பதால் (எதுகை) மீண்டும் இந்த அதிகாரத்தில் சில முறை வள்ளுவர் கையாளுகிறார் Smile

பயனில பல்லார்முன் சொல்லல்
பலருக்கும் முன்னால் பயனற்ற சொற்களைப் பேசுதல்

நயனில நட்டார்கண் செய்தலிற்றீது
நண்பர்களிடம் (அல்லது உறவினரிடம்)  விரும்பத்தகாதவற்றைச் செய்வதை விடவும் தீமையானதாகும்!

கொஞ்சம் உயர்வு நவிற்சி தான் - என்ன செய்ய, இப்படி அடித்துச் சொன்னால் தானே சிலருக்கு உறைக்கும்?

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 9 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon May 05, 2014 7:16 pm

#193
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை


இந்தக்குறளில் வரும் "நயனிலன்" என்ற சொல்லுக்குக் குறைந்தது நால்வகை விளக்கங்கள் உரையாசிரியர்களிடம் காண முடியும் :

மு.க. : பயனற்றவன்

மு.வ. : அறம் இல்லாதவன்

பரிமேலழகர் : நீதி இலன்

மணக்குடவர் : பிறரால் இயம்பப்படான்

இவற்றுள் நாம் இதுவரை "நயன்" என்பதன் பொருளாகக் கண்ட நயம் / நன்மை / விரும்பத்தக்க தரம் என்பவற்றின் அடிப்படையில் எல்லாமே பொருத்தம் தான் எனக்காண முடியும்.

அந்த அடிப்படையிலேயே புரிந்தும் கொள்ளலாம்!

பயனில பாரித்துரைக்கும் உரை
விரிவான  அளவில் பயனற்ற சொற்களைப் பேசுவது (ஒருவனை)

நயனிலன் என்பது சொல்லும்
நன்மையற்றவன் (விரும்பத்தகாதவன்) என்று அடையாளங்காட்டி விடும்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 9 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue May 06, 2014 3:52 pm

#194
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லாரகத்து


மறுபடியும் நயன்-பயன் Smile

இங்கே நயன் மற்றும் நன்மை என்று வருகிறது. அதனால், நயன் என்பதை விரும்பத்தக்க நயம் என்று சுருக்கிக்கொள்ளலாம். (அல்லது நீதி என்ற அளவிலும் புரிந்து கொள்ளலாம்).

பயன்சாராப் பண்பில்சொல் பல்லாரகத்து
பலர் இடையில் பயனற்ற, பண்பில்லாத சொற்கள் பேசுதல்

நயன்சாரா நன்மையின் நீக்கும்
விரும்பத்தக்க நீதியான தன்மைகளை மட்டுமல்ல, நன்மையும் இல்லாமல் செய்து விடும்!

சில நாட்களுக்கு முன் நீதி-நன்மை இரண்டுக்குமான வேறுபாட்டை விளக்க ஒரு பேச்சாளர் சொன்ன எடுத்துக்காட்டு:

- கேக் செய்து கொண்டிருக்கும் போது சர்க்கரை தீர்ந்து விட, பக்கத்து வீட்டில் இருந்து ஒரு கோப்பை சர்க்கரை இரவல் வாங்குகிறீர்கள்
- சுவையான கேக் தயார், விருந்தினர் / குழந்தைகள் அனுபவித்து மகிழுகின்றனர்.
- பக்கத்து வீட்டுக்காரரிடம் நீதியாக நடத்தல் = இரவல் வாங்கிய சர்க்கரையைப் பின்னர் திருப்பித்தருதல்
- பக்கத்து வீட்டுக்காரரிடம் நன்மையாக நடத்தல் = சர்க்கரையைத் திருப்பித்தருவதோடு, ஒரு துண்டு சுவையான கேக்கும் தருதல் Smile

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 9 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed May 07, 2014 11:59 pm

#195
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்


சீர்மை என்பதற்குச் சிறப்பு என்றும் அகராதி பொருள் சொல்லுகிறது Smile

ஒரு பொருட் பன்மொழி என்று வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

மாறாக, அதே சொல்லுக்கு இருக்கும் இன்னொரு பொருள், "புகழ்", அப்படியும் கொள்ளலாம்.

("சீரும், சிறப்புமாக வாழ வாழ்த்துகிறோம்" என்பது நாம் பலமுறை கேட்கும் சொல்லாடல்!)

நீர்மை? இதோடு சேர்ந்த பொருள் தான் - சிறந்த தன்மை, சிறந்த குணம் என்றெல்லாம் கொள்ளலாம்.

நீர்மையுடையார் பயனில சொலின்
சிறந்த தன்மையுடைவர்கள் என்றாலும் பயனற்ற சொற்கள் பேசினால்

சீர்மை சிறப்பொடு நீங்கும்
அவர்களுடைய சீரும் சிறப்பும் நீங்கிப் போய்விடும்!

"வெட்டிப்பேச்சு மதிப்பை அழிக்கும்" என்கிறார் வள்ளுவர்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 9 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri May 09, 2014 12:42 am

#196
பயனில்சொல் பாராட்டுவானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்


பதடி = பதர் Smile

"அற்பப்பதரே" என்று திட்டுவதைப் படித்திருக்கிறோம் - எடுத்துக்காட்டு: நெல்மணி விளையாத பயிர்!

பயனற்ற சொல் பேசுவோரும் அப்படித்தான் என்று உவமை!

பயனில்சொல் பாராட்டுவானை
பயனற்ற சொற்களைக் கொண்டாடி நடப்பவனை

மகன்எனல்
மகன் (மனிதன்) என்று சொல்லக்கூடாது!

மக்கட் பதடி யெனல்
மனிதருள் பதர் என்றே சொல்லவேண்டும்!

மணியை உண்ணுவதற்குச் சேமித்துப் போற்றுவார்கள்!

பதரை? சுட்டெரிப்பார்கள்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 9 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri May 09, 2014 7:09 pm

#197
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று


பயனில சொல்லாமை அதிகாரத்தில் நான்காவது முறையாக "நயன்" Smile

ஏற்கனவே இந்தச்சொல் நன்கு பழக்கமாகி விட்ட படியால், குறளின் பொருள் காண்பது எளிது தான்.

இதில் சான்றோருக்கு அறிவுரை!

நயனில சொல்லினுஞ் சொல்லுக
விரும்பத்தகாத (நயமற்ற) சொற்களை வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள்

சான்றோர் பயனில சொல்லாமை நன்று
(ஆனால்) சான்றோரே, நீங்கள் பயனற்ற சொற்களைப்பேசி விடாமல் இருங்கள்! அது தான் நல்லது!

என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவது நினைவுக்கு வருகிறது - "கெட்டவனை வேணாலும் சேத்துக்கலாம், இந்த வெட்டிப்பேச்சு ஆளெல்லாம் சேத்துக்கவே கூடாது!"

Smile

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 9 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon May 12, 2014 9:41 pm

#198
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்

"அரும்" "பெரும்" என்று எல்லோரும் அடிக்கடி எழுதும் / சொல்லும் அடைமொழிகள் இந்தக்குறளில் காண்கிறோம்.

"அறிவினார்" (அறிஞர்) பற்றிய குறள் என்பதால் இவ்வித அடைமொழிகள் உட்படுத்தினாரோ? இருக்கலாம் Smile

பரிமேலழகர் உரை சொல்வது போல, அறிஞர் சொல் சிறுபயன் தந்தாலும் பயனில்லை Smile

எப்படி இருந்தாலும், இந்தச்செய்யுளுக்குப் பொருள் காண்தல் கடினமல்ல!

அரும்பயன் ஆயும் அறிவினார்
அருமையான பயன்களை ஆராய வல்ல அறிவுள்ளோர்

பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார்
பெரிய அளவில் பயன் தராத சொற்களைப் பேச மாட்டார்கள்!

நாமெல்லாம் அத்தகைய அறிவினாரா இல்லையா என்பது (பேசும் / எழுதும் முன்) நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி Smile

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 9 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue May 13, 2014 11:21 pm

#199
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்


பொச்சாப்பு என்றால் மறதி என்று அகராதி பொருள் சொல்லுகிறது. (பொல்லாப்பு என்ற பொருளும் உண்டு).

"மறந்தும் பொய் பேச மாட்டான்" என்று சொல்லிக் கேட்டிருப்போம் அல்லவா?
அது போல, "மறந்தும் பயனற்றது சொல்ல மாட்டார்கள்" என்று சிலருக்குச் சான்றிதழ் தரும் குறள்!

யார் அந்த சிலர்?

அது அறிய "மருள்" என்ற சொல்லுக்குப் பொருள் காண வேண்டும். மருட்சி என்றால் அச்சம் / வியப்பு என்று தெரியும். (மருண்டான் = அச்சம் கொண்டான், வியந்து போனான் என்றெல்லாம் கண்டிருக்கிறோம்).

"மிரள் / மிரண்டு போதல்" என்பதோடு ஒத்த ஒன்று தான் என்றாலும், சற்றே தரம் கூடிய சொல்.

மயக்கம், குழப்பம் என்பனவெல்லாம் மருள் என்பதன் பொருளாக வருகின்றன.  சொல்லப்போனால், மனநோய் என்றும் கொள்ளலாம். "பேய் பிடித்த" என்ற பொருளிலும் மருள் வருகிறது.

மருள்தீர்ந்த மாசறு காட்சியவர்
மயக்கம் / குழப்பம் இல்லாத தெளிவான அறிவுடையவர்கள்

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார்
மறந்தும் பயனற்ற சொற்களைப் பேச மாட்டார்கள்!

இன்னொரு விதத்தில் பார்த்தால், பயனற்ற பேச்சுப் பேசித்திரிவோர் மயக்கம் / குழப்பம் / அச்சம் உள்ளவர்கள் Smile
(மன நோய் என்றே சொல்லலாம்)

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 9 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed May 14, 2014 5:10 pm

#200
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்


நூறாவது குறள் "இனிய" சொற்கள் பேசுவதை வலியுறுத்தியது.
('கனிஇருப்பக் காய் கவர்ந்தற்று')

இருநூறாவது குறளும் நாவின் செயல் பற்றியதே Smile

ஒருவரது வாழ்வின் குறிப்பிடத்தக்க பங்கு பேச்சுக்கு உண்டு என்று வள்ளுவர் சொல்லுகிறார் என்பது தெரிந்த ஒன்று தான்.

அவரது நூலின் அதிகாரங்களை இப்போதுள்ள நிரலில் வைத்தவர் அவர் தானேயோ அல்லது வேறு யாருமோ தெரியாது. எப்படி இருந்தாலும், 100-ம், 200-ம் பேச்சின் செயல்பாட்டினை ஒழுங்கு படுத்துதல் குறிப்பிடத்தக்க ஒன்று!

பொருள் புரிதல் மிக எளிதே:

சொல்லுக சொல்லிற் பயனுடைய
சொற்களில் பயன் தருவன மட்டுமே பேசுங்கள்!

சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்
பயனற்ற சொற்களைப் பேசுவதை அறவே தவிருங்கள்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 9 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  V_S Wed May 14, 2014 6:14 pm

App ji,
Hearty Congratulations on 200!  applause Hats off to your dedication. the clap I have bookmarked this thread since longtime, but have to find sometime to read. This is really the most valuable thread, it has so much information which many like me does not know. Thanks for sharing this educational and enlightening experience with us.

_________________
Art is a lie that makes us realize the truth - Pablo Picasso
V_S
V_S

Posts : 1842
Reputation : 12
Join date : 2012-10-23

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 9 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  sagi Wed May 14, 2014 7:27 pm

Great going Appji. (Silently) admiring your work in this thread.

Apart from  helping me learn a few new thamizh words, I find a lot of குறள்கள் useless. I mean just take the last 10. சொல்றதயே திரும்பத் திரும்ப சொல்ற மாதிரி இருக்கு. He has established what he wants to say with the heading - பயனில சொல்லாமை. But still, பயனற்ற சொல் பேசாதேன்றத சுத்தி சுத்தி சொல்லிட்டிருக்கார்.

sagi

Posts : 688
Reputation : 2
Join date : 2012-10-23

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 9 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 40 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 24 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum