Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

3 posters

Page 13 of 16 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16  Next

Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 13 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Aug 15, 2018 6:23 pm

#1243
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்


"பைதல் நோய்" என்ற பயன்பாடு முன்னமேயே வந்திருக்கிறதா என்று நினைவில்லை. துன்ப நோய் என்று பொருள்.

அப்படிப்பட்ட நோயைத் தந்த காதலரை நினைத்து நினைத்து நீ எதற்கு வருந்துகிறார் என்று நெஞ்சோடு கிளக்கிறாள் பெண்.

பைதல்நோய் செய்தார்கண்
துன்பமான இந்த நோயை எனக்குத்தந்தவரிடத்தில்
(என்னை விட்டுச்சென்ற காதலரிடம்)

பரிந்துள்ளல் இல்
அன்புடன் (பரிவுடன்) என்னை நினைக்கும் தன்மை இல்லையே! (இந்த நிலையில்)

நெஞ்சே இருந்துள்ளி என்பரிதல்
(என்னோடு) இருந்து கொண்டு (அவரை) நினைத்து நினைத்து வருந்துவது ஏன் நெஞ்சே?

புதிதாகப் பொருள் ஒன்றுமில்லை - வழக்கம் போலத் தனக்குத்தானே பேசிப்புலம்புதல் தான் Smile

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 13 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Aug 21, 2018 7:58 pm

#1244
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று


தன்னைப்பிரிந்திருக்கும் தலைவனைக் காணக் கண்கள் தவிப்பதை மிக அழகாகச் சொல்லும் திருக்குறள். இதை அவள் தன் நெஞ்சோடு பேசுகையில் தெரிவிக்கிறாள்.

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே
நெஞ்சே! (நீ அவரிடம் போகும் போது) கண்களையும் கொண்டு செல்வாயாக!

அவர்க்காணல் உற்று
அவரைக் காணவேண்டும் என்று தவித்து

இவையென்னைத் தின்னும்
இவை என்னைத் தின்று கொண்டிருக்கின்றன
(அல்லது, என்னைக் கொன்று கொண்டிருக்கின்றன)

காதலில் கண்கள் ஆற்றும் பங்கினை நாம் காமத்துப்பால் முழுவதுமே கண்டு கொண்டிருக்கிறோம். தொடக்கமே அவற்றில் தான் என்பது பலரும் உற்றறிந்த ஒன்று. அந்நிலையில், காதலரைக் காணாமல் நீண்ட நாள் / பொழுது இருப்பது என்பது மிகவும் துன்புறுத்தும் ஒன்று.

முற்காலங்களில் தொழில் நுட்பம் இல்லை - இன்றோ எவ்வளவு தொலைவில் இருந்தாலும் கைபேசியில் காண இயலும். என்றாலும், மனதளவில் பிரிந்து விட்டால் எத்தனை தொழில் நுட்பம் இருந்தாலும் "தவிர்ப்பு" நடக்கும் - அதனால் தவிப்பு தொடரும்!



app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 13 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Aug 22, 2018 9:07 pm

#1245
செற்றார் எனக்கை விடல் உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅதவர்

"பேதைப்பெண்ணே" என்று சொல்வதற்குப் பொருத்தமான இன்னொரு சூழல் / பாடல்.

அதாவது, இவள் அவனை இன்னும் விரும்புவாளாம், அவனோ அவள் மீது ஒரு விருப்பமும் அன்பும் காட்டாமல் பிரிந்து விடுவானாம். அதற்குப்பின்னும் "நான் எப்படி என் காதலைக் கைவிடுவது, மாட்டேன்" என்று தன நெஞ்சோடு கிளப்பாளாம், இதை முட்டாள்தனம் என்று சொல்லாமல் வேறென்ன செய்வது?

என்றாலும், அது தான் காதல் - காமம்!

யாம் உற்றால் உறாஅதவர்
நான் விரும்பினாலும் தான் (அதே போன்று) விருப்பத்தைக் காட்டாதவரை

செற்றார் எனக்கை விடல் உண்டோ நெஞ்சே
"என்னை வெறுத்து விட்டார்" என்று சொல்லிக் கைவிட்டு விட (மறந்து விட) என்னால் முடியுமா நெஞ்சே?

ஒரு கணக்கில் பார்த்தால், காதலும் மனநோயே.

தான் ஆழ்ந்து விரும்பும் ஒன்றை "அது நமக்கில்லை, இல்லவே இல்லை" என்று தெளிவாகத் தெரிந்த பின்னும் விரும்பித்தேடிக்கொண்டிருப்பது மனநோய் தானே?

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 13 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Aug 27, 2018 7:49 pm

#1246
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தி என் நெஞ்சு


படிக்கக் கொஞ்சம் குழப்பமான குறள் - என்றாலும் பல்வேறு உரைகள் உதவியுடன் ஒரு வழியாகப் புரிந்து கொள்ளலாம்.

இப்போதைய சூழல் இதுவரை கண்ட ஒன்று தான் அதாவது, காதலன் பிரிந்து போய் விட்டதால் வருத்தத்துடன் இருக்கும் பெண் தனது நெஞ்சோடு பேசுகிறாள்.

இங்கே, "நெஞ்சம்" காதலன் மீது சினம் (காய்வு) கொண்டிருக்கிறது - விட்டுவிட்டுப் பிரிந்து போய் விட்டானே என்று. அப்படிப்பட்ட எரிச்சலில் உள்ள நெஞ்சிடம் "உன் சினம் பொய்யானது தான், உண்மையில் அவர் மீது உனக்குக்காய்வு இல்லை" என்று பெண் வாதிடுகிறாளாம்.

இதற்கு அவள் காட்டும் தெளிவு, முன்பெல்லாம் நாங்கள் ஊடலும் அதைத்தொடர்ந்து கூடலும் செய்த போதெல்லாம் இந்த நெஞ்சம் சினம் கொள்ளவில்லை என்பது Smile

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
(முன்பெல்லாம்) ஊடல் நீங்கி விட்டதாக (என்னோடு) கலந்து / கூடி உணர்த்தும் காதலரைக் கண்டால் சினம் கொள்ள மாட்டாய் அல்லவா?

பொய்க்காய்வு காய்தி என் நெஞ்சு
(ஆதலால்) என் நெஞ்சே, இப்போது நீ கொண்டிருப்பது பொய்யான சினம் தானே?

அதாவது, முன்பு சிறிய ஊடல் நீங்கியவுடன் மீண்டும் தன்னோடு கூடுவது போல இப்போதும் வந்து விடுவார் என்று நம்பிக்கொண்டிருக்கிறாள் என்று எடுத்துக்கொள்ளலாம்.

அல்லது, "விட்டு விட்டுப்போனாரே" என்று ஆற்றாமையில் தவிக்கும் நெஞ்சை ஏமாற்றப்பார்க்கிறாள் என்றும் கொள்ளலாம்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 13 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Aug 30, 2018 12:48 am

#1247
காமம் விடு ஒன்றோ நாண் விடு நன்னெஞ்சே
யானோ பொறேன் இவ்விரண்டு


"உரலுக்கு ஒரு புறம் தான் இடி, மத்தளத்துக்கோ இரண்டு புறமும்" என்று ஒரு பழமொழி உண்டு. இதையே பேச்சு வழக்கில் இன்னொரு விதமாகச் சொல்வதையும் கேட்டிருப்போம் "முன்னாடி போனால் கடிக்கும், பின்னாடி போனால் உதைக்கும்" என்று. "மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்" என்ற பயன்பாடும் இதே போன்ற ஒன்று.

அதாவது, இரண்டு விதமான தெரிவுகள் இருக்கும் பொழுது எதைத் தேர்ந்தெடுத்தாலும் ஒரு விதத்தில் துன்பம் வரும் என்று சொல்வதற்காகப் பயன்படுத்தப்படும் வெவ்வேறு மொழி நடைகள்.

அதே போன்ற ஒன்று இங்கே காண்கிறோம்.

காதல் / காமம் கொண்டிருக்கிறாள் பெண். ஆனால், நாணம் அதை வெளிப்படையாகச் சொல்லவிடாமல் தடுக்கிறது.

சொன்னால் வெட்கக்கேடு, சொல்லாவிட்டால் காதலுக்குக் கேடு. இப்படி "இருதலைக் கொள்ளி எறும்பாக" இருக்கிறாள். (இப்படியும் ஒரு சொல் வழக்கு இருக்கிறது Smile )

நன்னெஞ்சே
(என்னுடைய) நல்ல நெஞ்சே!

காமம் விடு ஒன்றோ நாண் விடு
ஒன்று இந்தக்காமத்தை விட்டு விடு, இல்லாவிட்டால் நாணத்தை விட்டு விடு
(காதல் கொள்ளாதே, கொண்டு விட்டால் பின் நாணம் கொள்ளாதே - வெளிப்படையாகச் சொல் / காட்டு என்கிறாள்)

யானோ பொறேன் இவ்விரண்டு
இந்த இரண்டையும் நீ கொண்டிப்பதை என்னால் தாங்க முடியவில்லை

"தாங்க முடியாத" நிலையில் இருப்பது குறித்துத் தனக்குத்தானே புலம்பிக்கொள்கிறாள்.

அதாவது, எந்த வழியில் போனாலும் கடினமாக இருக்கிறது, வழி தெரியாமல் நெஞ்சம் தடுமாறுகிறது என்று பொருள்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 13 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Aug 30, 2018 5:43 pm

#1248
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதை என் நெஞ்சு


சிறுவயதில் பார்த்த திரைப்படம் ஒன்றில் ("வா ராஜா வா" என்று நினைக்கிறேன்) சொல்லப்பட்ட ஒரு பொன்மொழி நினைவுக்கு வருகிறது.

இரண்டு பகுதிகள் கொண்ட அது இப்படி வரும் :
- விரும்பிப்போனால் விலகிப்போகும்
- விலகிப்போனால் விரும்பி வரும்

மானிட உறவுகளிலும் சில நேரங்களில் இது உண்மையிலே நடப்பது போலத்தோன்றும். இந்தக்குறளில் வள்ளுவர் அதைத்தான் சொல்ல வருகிறாரா தெரியவில்லை.

இங்கே, "வேண்டாம்" என்று பிரிந்து விலகிப்போன காதலனின் பின்னாலேயே விரும்பிச்செல்லும் தன் மனதைப் "பேதை நெஞ்சே" என்று பெண் கடிந்துகொள்ளும் காட்சி.

பரிந்தவர் நல்காரென்று ஏங்கி
அவர் பரிவுடன் (அன்பு காட்டி) என்னை விரும்பி நன்மை செய்ய மாட்டாரா என்று ஏங்கி

பிரிந்தவர் பின்செல்வாய் பேதை என் நெஞ்சு
"வேண்டாம்" என்று விட்டுவிட்டுப் பிரிந்தவரின் பின்னாலேயே செல்கிறாயே பேதை நெஞ்சே

இன்றும் அப்படி எண்ணி எங்கும் பேதை நெஞ்சம் கொண்ட பெண்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. கண்டிப்பாக முற்காலங்களில் இருந்தார்கள் (சில பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை நானே கண்டிருக்கிறேன்).

என்றாலும், கல்வியறிவும் சொந்தக்காலில் நிற்கும் பொருளாதாரமும் பெண்களுக்குப் பெருகி வரும் இக்காலத்தில் இதே போன்றே பேதைமை இன்னும் தொடருகிறதா என்பது ஆராயத்தக்கது.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 13 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Sep 04, 2018 8:08 pm

#1249
உள்ளத்தார் காதலவரால் உள்ளி நீ 
யாருழைச் சேறியென் நெஞ்சு

அருமையான குறள் - அதாவது, இதில் பொதிந்திருக்கும் துன்பம் வெளிப்படையாகத் தெரிவதில்லை. என்றாலும், நமக்கு உறுத்தும்.

நேரடிப்பொருள் முதலில் பார்ப்போம் :

உள்ளத்தார் காதலவரால்
காதலர் என் உள்ளத்தில் (அதாவது நெஞ்சத்துள் - அல்லது, உனக்குள் & எனக்குள்) தானே இருக்கிறார், 
அப்படியிருக்க 

உள்ளி நீ யாருழைச் சேறியென் நெஞ்சு
நெஞ்சே, நீ என்ன நினைத்து யாரிடம் போய் அவரைத் தேடுகிறாய்?

பிரிவுத்துன்பம் சேர்க்காமலேயே வேண்டுமென்றாலும் இந்தக்குறளுக்குப் பொழிப்புரை எழுத முடியும். அதாவது, இந்த நேரடிப்பொருளை அப்படியே வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

என்றாலும், உண்மையில் இங்கே பிரிவுத்துன்பம் கடுமையாக இருக்கிறது. (இல்லாவிட்டால், ஏன்  நெஞ்சம் தேடித்திரிய வேண்டும்? விட்டு விட்டுப்போனதால் தானே?) ஆக, நேரடியாகச் சொல்லாமல், படிப்பவர் அதை முதலில் கண்டு கொண்டு அதன் பின்னரே பொருளை உணர்ந்து வருந்த வேண்டும் என்று வள்ளுவர் எழுதி இருக்கிறார்.

இது போன்று உள்ளே புதைத்து வைத்து எழுதும் முறை சிறப்பு & உவப்பு!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 13 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Sep 04, 2018 10:02 pm

#1250
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்


துணிகளைத் தைப்பதற்குள்ள மலையாள மொழிச்சொல் "துன்னுதல்" (தையல்). அதே பொருள் தமிழிலும் இருக்கிறது, கூடவே "நெருங்குதல்" என்ற பொருளும் இருக்கிறது.

"துன்னாமை" இவற்றுக்கு எதிர்ச்சொல் - அதாவது, ஒன்று சேராமை, கூடாமை, கலவாமை , நெருங்காமை - இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். அவ்வழியே, "துன்னாத்துறந்தார்" = இணைந்திருக்க மறுத்துப் பிரிந்து சென்றவர்.

கவின் என்ற சொல் முன்னமேயே கண்டிருக்க வாய்ப்புண்டு, என்றாலும் இங்கே மீண்டும் நினைவு படுத்திக்கொள்வோம் - அழகு என்று பொருள்.

ஆக, இந்தக்குறளின் மொத்தப்பொருள் , பிரிந்து விட்டவரை நெஞ்சம் நினைத்துக்கொண்டே வாடுவதால் உடல் அழகும் இழந்து போகும் நிலையில் பெண் இருப்பதாகப் புலம்புதல். கற்பியல் முழுக்க இந்தக்கருத்து வந்து கொண்டே இருப்பதால், நமக்கு இங்கே ஓரிரு சொற்களைத்தவிர அவ்வளவாகக் கண்டுகொள்வதற்கு இல்லையென்றே தோன்றுகிறது Embarassed

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
நெருங்கிக்கலவாமல் விட்டு விட்டுப்போனவரை எப்போதும் நெஞ்சத்தில் வைத்துக்கொண்டே இருப்பதால் (அவ்வழியே துன்பத்தில் உழலுவதால்)

இன்னும் இழத்தும் கவின்
மெலிந்தும் அழகு இன்னும் இழந்தும் வருகிறேனே
(ஏன் நெஞ்சே என்னை இப்படிப் பாடு படுத்துகிறாய்? என் மனதும் உடலும் அழகிழந்து போகிறதே)

அப்படியாக, இந்த அதிகாரம் முழுவதும் நெஞ்சோடு கிளப்பது பேரளவில் புலம்பல் தான். முடிவாக, "எனது அழகும் பொலிவும் இழந்து கொண்டிருக்கிறேனே" என்று துயரத்தோடு முடிக்கிறாள்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 13 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Sep 05, 2018 10:42 pm

#1251
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு

(காமத்துப்பால், கற்பியல், நிறையழிதல் அதிகாரம்)

முன்பு வாழ்க்கைத்துணை நலம் என்ற அதிகாரத்தில் "மகளிர் நிறை காக்கும் காப்பே தலை" என்று வள்ளுவர் சொன்ன அந்த "நிறை" என்னும் பண்பு இல்லாமல் போவதைத்தான் இங்கே "நிறையழிதல்" என்ற அதிகாரத்தில் சொல்ல வருகிறார்.

அப்படியானால், அந்த நிறை என்பது என்ன?

"நிறுத்துதல்" என்ற வேர்ச்சொல்லில் இருந்து வருவதாகச் சொல்லுகிறார்கள்.  கற்பு நிலையில் அசையாமல் மனதை நிறுத்துதல், மன அடக்கம் (காமத்துக்கு விட்டுக்கொடுத்து ஆடாமல் மனதைப்பிடித்து நிறுத்தும் பண்பு) என்றெல்லாம் இதை விளக்குகிறார்கள். தன்னடக்கம், மனதில் நல்லொழுக்கம் என்றெல்லாம் இதற்குப் பொருள்கள்.

எளிதாக, மனதின் கற்பு என்று சொல்லி விடலாம்.
(அதனால் தான் நாம் முன் சொன்ன 57-ஆம் திருக்குறளில், ஒரு பெண்ணை சிறைக்காவலில் இட்டுக் கற்பைக் காப்பாற்றுவதாக நினைப்பது மூடத்தனம் - அவளது மனதில் உள்ள "நிறை" என்ற பண்பு காப்பது போல சிறை காக்காது என்கிறார்).

ஆனால், இந்த அதிகாரம் முழுவதும் "அப்படிப்பட்ட மன அடக்கம் எப்படி இல்லாமல் போகிறது" என்று சொல்லி,  ஒருவருக்கு இருக்கும் "நிறை"யை அழிக்கும் வல்லமை காமத்துக்கு உண்டா என்று ஆராய்ச்சி செய்கிறார் வள்ளுவர் Smile

நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு
நிறை (மனதின் அடக்கம் / கற்பு) எனப்படும் நாணமாகிய தாழ்ப்பாள் இட்டிருக்கும் கதவை

காமக் கணிச்சி உடைக்கும்
காமம்  என்ற கோடரி / கோடாலி உடைத்து விடும்!

இங்கே அழகான உருவகங்கள் பயன்படுத்தப்படுகின்றன!

நிறை = கதவு (மனதையும் உடலையும் காதல் / பாலுறவு போன்றவற்றில் இருந்து பிரித்து, அடைத்து வைக்கும் பண்பாகிய சிறைக்கதவு)

நாணம் = தாழ்ப்பாள் (இதை விட்டு விட்டாலும் கதவு திறந்து விடும் ; நன்றாகப் பொருந்தி வரும் காதல், திருமணம் போன்றவை மனக்கதவையும், உடல் உறுப்புகளையும் திறக்கும் பொழுது நாணம் நீங்குவது நாமெல்லாரும் பொதுவாகக் காண்பது)

காமம் = கணிச்சி / மழு / கோடரி / குந்தாலி / கோடாலி (நாணம், நிறை இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், அவற்றை உடைத்துப்போட்டு மனதையும் உடலையும் உறவுக்குள் ஆழ்த்தும் வலிமையான உணர்வு)

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 13 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Sep 06, 2018 5:56 pm

#1252
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்


"காதலுக்குக் கண்ணில்லை" என்று சொல்லுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். (அதாவது, ஒரு பின்புலமும் ஆராய்ச்சியும் இல்லாமல் "கண்டமேனிக்கு" வரும் என்று பொருள். ஒரு விதத்தில் பார்த்தால், கண்ணால் காண்பதை - உடல் தோற்றம் / கவர்ச்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தான் பெரும்பாலான காதல்கள் தொடங்குகின்றன என்பது இந்தக்கருத்துக்கு முரண்).

அதே போன்ற ஒரு சொற்றொடர் இங்கே - "காமம் கண்ணின்று" என்கிறார் வள்ளுவர். ஆனால், இதன் பொருள் காமம் ஒரு அடிப்படையுமின்றி, அதாவது "கண்டமேனிக்கு" வருவது என்பதல்ல. இங்கே, கண் என்பது கண்ணோட்டம் - அருள் / இரக்கம் என்ற பொருளில் வருகிறது.

"இந்தக் காமத்துக்கு இரக்கமே இல்லை - உறக்கமும் கொள்ள விடாமல் என்னை ஆளுகிறது" என்று சொல்லும் செய்யுள்.

அப்படியாக, ஒருவரது "நிறை"யை அழிக்கும் வேலையைச் செய்கிறது! இப்படிப்பட்ட தவிப்பில் இருக்கும் ஆண் / பெண், மனதளவில் மற்றும் உடலளவில் கண்மூடித்தனமாக உறவுகளில் வீழ முடியும் என்பது நடைமுறையில் காண்பது!

அவ்விதத்தில், இது ஒரு எச்சரிக்கையும் கூட!

(இல்லறத்துக்கு வெளியிலான காமத்தின் விளைவாகத் தனது இரண்டு குழந்தைகளுக்கு நஞ்சு கொடுத்து ஒரு தாய் கொன்றதாக அண்மையில் ஒரு செய்தி படிக்க நேரிட்டது. பத்துத் திங்கள் சுமந்து பெற்ற குழந்தையைக் கொல்ல எந்தத்தாய்க்கும் எளிதில் மனம் வராது. தன்னுயிரும் கொடுத்துக் காக்கவே முயல்வாள்.

அந்தச்செய்தி மெய்யோ பொய்யோ தெரியாது -  ஆனால், அது போன்ற கொடுமையான நிகழ்வுகள் உலகெங்கும் அவ்வப்போது நடப்பதைக் கேள்விப்படுகிறோம்)


காமம் எனவொன்றோ கண்ணின்று
காமம் எனப்படும் ஒன்று கண்ணோட்டமே (பரிவு / இரக்கம்) இல்லாதது

என் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில்
எனது நெஞ்சத்தை நள்ளிரவிலும் ஆட்சி செய்யும் மன்னனாக இருக்கிறது

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 13 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Sep 25, 2018 2:46 am

#1253
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்
 
மன் என்பது அசைச்சொல் (எரிச்சலோடு திட்டுவதற்கும் பயன்படுத்தப்படுவது) என்று பலமுறை பார்த்திருக்கிறோம். இங்கும் அது வருகிறது. ("கழுதைய ..." என்று பேச்சு வாக்கில் கூட்டிச்சேர்ப்பது போன்ற ஒன்று.)
 
"எப்படியாவது இந்தக்காமத்தை அடக்கி மறைத்து விடலாம் என்றாலும்...கழுதைய...முடியலையே! தும்மல் போல அடக்க முடியாமல் வெளியே வந்து விடுகிறதே" என்று புலம்புவதை அப்படியே வள்ளுவர் ஆவணப்படுத்தி இருக்கிறார் இங்கே Smile
 
மறைப்பேன்மன் காமத்தை யானோ
காமத்தை நான் அடக்கி மறைக்கவே முயல்கிறேன், ஆனால்
 
குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும்
அதுவோ என் குறிப்புக்குள் (கட்டுக்குள்) நிற்காமல் தும்மல் போல வெளியே தோன்றி விடுகிறதே
 
கட்டுக்குள் நிற்காமல் பீறிடும் ஒன்றுக்கு எவ்வளவு அழகான உவமை தும்மல்! (அடக்கிப்பார்த்த கொடுமை நாம் எல்லோரும் வாழ்வில் அவ்வப்போது செய்திருப்பது தான்).
 
அதே போன்றது தான் காமம் / காதல்.

ஒருவர் எவ்வளவு அடக்கமாக இருக்க நினைத்தாலும் முடியாமல் அவரது நிறையை அழிக்கும் வல்லமை கொண்டது. உடலும் மனதும் ஒன்றாகக்கூடி ஒருவரது நிறைக்கு எதிராக வேலை செய்வதற்குப் பெயர் தான் காமம்! எச்சரிக்கையாகக் கையாள வேண்டிய ஒன்று என்று இங்கே அறிவுறுத்துகிறார்.
 
அப்படியானால் இதை எப்படித்தான் கையாளுவது என்று கேட்டால் அதற்கான விடை கண்டிப்பாக வள்ளுவரிடம் இல்லை என்பது தான் உண்மை Smile  (உடனே "எல்லாம் துறந்தவர்" என்று எண்ணி யாராவது சாமியாரிடம் போய்க் கேட்டு விடாதீர்கள் - உடைமைக்கும் நிறைக்கும் அதை விடப்பெரிய அச்சுறுத்தல் வேறில்லை Laughing )

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 13 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Sep 26, 2018 6:11 am

#1254
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்


"எப்படி இருந்த நான்.." என்று ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் புலம்புவதை நினைவு படுத்துகிறது இந்தத்திருக்குறள் Smile

நான் நிறையுடையவனாக இருந்தேனே (அல்லது அப்படி இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்தேனே) - இந்தப்பாழய்ப்போன காமம் எனக்குள் மறைந்திருக்க மாட்டாமல் மன்றத்தில் (எல்லோரும் அறியும் விதத்தில்) வெளிப்பட்டு விட்டதே - என்னுடைய நேரான நிலை மாறிக் கீழே விழுந்தது போல் ஆகிவிட்டதே - இப்படியெல்லாம் புலம்பும் பாடல்.

"தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கக்கடவன்" என்று விவிலியத்தில் ஒரு மொழி இருக்கிறது. இன்றைய உலகில் பெரும் பேரும் புகழும் பெற்றிருந்த பலரும் அவர்களது "நிறை" அழிந்து கீழ்மை அடைய அவர்கள் வெளிக்காட்டிய முறைகேடான காமம் வழிவகுத்தது என்பது தெரிந்ததே.

முறையோ, அல்லாததோ காமம் ஒருவரது நிலைநிற்பை மாற்றி விடும் என்பது தெளிவாகவே இருக்கிறது!

நிறையுடையேன் என்பேன்மன் யானோ
நானோ நிறையுடைவன் (நேராக நிற்பவன்) என்று தான் எண்ணிக்கொண்டிருந்தேன் (சொல்லிக்கொண்டிருந்தேன்)

என் காமம் மறையிறந்து மன்று படும்
என் காமமோ எல்லாரும் காணத்தக்க விதத்தில் மறைந்திருக்காமல் மன்றத்தில் வெளிப்பட்டு விட்டதே!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 13 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Sep 27, 2018 3:00 am

#1255
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று


தன்னை வெறுத்து ஒதுக்கி விட்டுப்போனவனை "சரி தான் போ, எனக்கு இன்னும் வாழ்வதற்கு நிறைய இருக்கிறது" என்று துணிவதற்கு எல்லாராலும் முடிவதில்லை.

குறிப்பாக, இப்படிப்பட்ட மனத்திண்மை காமநோய் அடைந்தவர்களுக்கு இயலாது - மனது மீண்டும் மீண்டும் அவர் பின்னேயே சென்று கொண்டும் உழன்று கொண்டும் இருக்கும்.

இந்த உண்மையை இங்கே வள்ளுவர் சுட்டிக்காட்டுகிறார். நேரடியாக - சுற்றி வளைக்காமல் சொல்கிறார். செற்றார்-உற்றார் என்று வரும் எதுகையைத் தவிர்த்து வேறு நயங்கள் ஒன்றும் கூட்டாமல் (அதாவது, உவமை, அணி இப்படிப்பட்ட அழகூட்டல்கள் இங்கே தவிர்க்கிறார்).

செற்றார் பின் செல்லாப் பெருந்தகைமை
வெறுத்துப் பிரிந்தவர் பின்னாலேயே செல்லும் மனதை அடக்கியாளும் சிறப்பு
(மனதை அலைபாய விடாமல் தடுக்கும் தகைமை)

காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று
காம நோய் பிடித்திருப்பவர்கள் அறிந்த ஒன்று அல்ல
(அவர்களுக்கு இது தெரியாது / முடியாது)

வேறு சொற்களில் சொன்னால், காமநோய் கொண்டவர்கள் மனவலிமை இழந்து போனவர்கள். தங்களைத் தாங்களே அடக்க முடியாதவர்கள். அதாவது, நிறை அழிந்தவர்கள்.

நிறை அழிந்தால் ஒரு கணக்கில் வாழ்வே அழிந்து போகும் என்று அச்சுறுத்தும் பாடல் இது! கொடுமை என்னவென்றால் இந்த நோயால் துன்புறுவோர் தம்மை மட்டுமல்ல, தமக்கு நெருங்கிய மற்றவர்களையும் கவலையில் ஆழ்த்தி விடுவார்கள்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 13 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Oct 10, 2018 6:25 am

#1256
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்
 
"காதலுக்குக்கண்ணில்லை" என்று சொல்லக்கேட்டிருக்கிறோம். அந்தக்கருத்தைச்சொல்லும் திருக்குறள். (காதல் / காமம் என்ற இரண்டு சொற்களும் சமமாகவே இந்தப்பால் முழுக்க நாம் கருதிக்கொள்ளலாம். அதாவது, உடல் - உள்ளம் எல்லாமே இங்கே உட்பட்டிருக்கின்றன. வெறும் மனஅளவில் மட்டுமான காதல் என்பதாக வள்ளுவத்தின் காமத்துப்பாலில்  வருவதாக நான் எண்ணவில்லை).
 
தன்னை வெறுத்து ஒருவர் ஒதுக்கினால், அவர் பின்னால் செல்ல யாரும் விழைய மாட்டார்கள். ஏனென்றால் அது நாணக்கேடு - வெட்கம்! சொல்லப்போனால், முட்டாள்தனம் + குருட்டுத்தனம்! நட்பு, காதல் எல்லாவற்றுக்கும் பொதுவாகப் பொருந்தும் அறிவு சார்ந்த நிலை இது.
 
ஆனால், நடைமுறையில் அப்படி இருப்பதில்லை. தன்னை எந்த அளவுக்கு ஒதுக்கினாலும், பின்னும் பின்னும் விடாப்பிடியாகப் பின்தொடர்ந்து மனது செல்லுவது என்பது அன்று முதல் இன்று வரை நடப்பது தான்.
 
அந்த முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது என்கிறார் வள்ளுவர்!
 
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
என்னை வெறுத்து ஒதுக்கிய (காதலர்) பின்னால் எனது மனது செல்லும் இந்த நிலையை எனக்கு அளித்திருக்கும்
 
எற்றென்னை உற்ற துயர்
என்னைப்பிடித்த இந்தத் துன்பத்தை (அதாவது காமத்தை) நான் என்னவென்று சொல்ல?
(மிகவும் கொடுமை என்று ஒத்துக்கொள்கிறாள்)
 
இப்படியெல்லாம் அறிவோடு ஆராயும் திறன் இருந்தாலும், நடப்பில் அதைச் செயல்படுத்தாமல் உழன்று கொண்டிருப்பது, மானிடத்தின் விந்தைகளில் ஒன்று.
 
மனநோய் வருமளவுக்கு இது பலரையும் ஆட்டிப்படைக்கிறது என்பது வலி தரும் உண்மை.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 13 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Oct 11, 2018 2:20 pm

#1257
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்


காமம் வந்தால் நாணம் போகும் - அவ்வழியே நிறை (அதாவது நிலைநிற்பு) அழியும் - என்று அழுத்தமாக மீண்டும் சொல்லும் குறள்.

இதற்கு ஒரு சூழல் எல்லாம் சேர்த்துப்பரிமேலழகர் உரை எழுதி இருப்பது படிக்கச் சுவை கூட்டும் ஒன்று. (அதாவது, பரத்தையின் பின்னே சென்று தலைவியைப் பிரிந்த காதலன் / கணவன் திரும்பி வந்து அவளைக்கூடுகிறான். அப்போது நாணமே இல்லாமல் அவனை மீண்டும் ஏற்றுக்கொண்டு கொஞ்சும் படி அவளைச் செய்வித்து, அவ்வழியே அவளது "நிறையை அழிப்பது" காமம் என்கிறார்).


பேணியார் பெட்ப செயின்
நான் விரும்பியவர் (எனது காதலர்) எனது விருப்பப்படியே செய்யும்பொழுது
(இங்கே “பிரிந்தவர் மீண்டும் வந்தார்” என்று எண்ணுவதற்கு இதற்கு முன்புள்ள பல அதிகாரங்கள் வாய்ப்பளிக்கின்றன)

காமத்தால்
(என்னுள் பொங்கும்) காம உணர்வால்

நாணென ஒன்றோ அறியலம்
நாணம் என்ற ஒன்று இருப்பதே அறியாமல் போகிறேன்

தான் விரும்பியவர் வேறு பெண்களோடு உறவாடி விட்டு வந்தாலும் அதைப் பொருட்படுத்திச் சீறுவதில்லை. "மற்றவரோடு கலந்த உடல் என்னை அணைக்கிறதே" என்று உடல் கூசவில்லை. ஆக மொத்தம் நாணம் / வெட்கம் என்ற பண்பே இல்லாமல் போய் விட்டது - என்று பெண் சொல்லுகிறாள்.

இதற்கு மாறாக அடித்துத் துரத்தும் மனைவிகளும் உண்டு. என்ன செய்து விட்டு வந்தாலும் "பிழைத்து விட்டேன்" என்று கெஞ்சும்போது அன்போடும் விருப்பத்தோடும் ஏற்றுக்கொள்ளும் கண்ணகிகளும் உண்டு. எல்லாவற்றுக்கும் காமத்தை மட்டும் காரணம் என்று சொல்லிவிட முடியாது.

காதல் / காமம் என்பவை எங்கே உடல் சார்ந்தவை / உணர்ச்சி மட்டும் எப்போது கோலோச்சுகிறது / எங்கே மனமும் அறிவும் உட்படுகிறது - இவையெல்லாம் வெறும் தர்க்கம் மட்டும் கொண்டு விளக்க முடியாதவை. ஒவ்வொரு ஆளுக்கும், ஒவ்வொரு சூழலுக்கும் வேறுபடுகிறது என்பது நடைமுறை உண்மை!

இவற்றையெல்லாம் கையாண்டு நிறையோடு நிற்பது என்பது மிகப்பெரிய ஒன்று!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 13 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Oct 25, 2018 2:26 am

#1258
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை


தாங்கள் வலியோராய் இருக்கும் நிலையைப்பயன்படுத்தி எளியோர் (சிறுவர் / சிறுமிகள் / வேலை அல்லது வாய்ப்புகள் தேடி வரும் பெண்கள் போன்றோர்) மீது பாலியல் அடக்குமுறை செய்யும் கொடியோர், குறிப்பாகப் புகழ் பெற்ற ஆண்கள், தொன்று தொட்டே எல்லா இடங்களிலும் உண்டு. சமூகத்தில் அத்தகையோருக்கு இருக்கும் வலிமையான இடம், சாட்சிகள் இல்லாமை போன்ற காரணங்களால் நீதி அமைப்புக்கு ஒடுக்கப்பட்டோரால் செல்லக்கூட முடியாத நிலையே என்றும் இருந்து வந்தது.

இன்றோ, அந்தக்கொடியோரைப் பொது வெளியில் அம்பலப்படுத்துவதற்காக வலையில் மற்றும் பிற ஊடகங்களில் ஒடுக்கப்பட்டோர் - குறிப்பாகப் பெண்கள் - வெகுண்டெழுந்திருக்கிறார்கள். இது அண்மைக்காலத்தில் நாம் கண்ட நல்ல ஒரு முன்னேற்றம்.

பொதுவெளியில் குற்றம் சாட்டுவோரின் அரசியல், பின்புலம், நோக்கம் என்றெல்லாம் ஆராய்வதற்கு முன்னர் நேர்மையுள்ள யாரும் செய்ய வேண்டியது என்ன?

குற்றவாளியின் பின்னணி எப்படி, குற்றம் நடந்ததா, அப்படியானால் அந்தக்கொடியோருக்கு என்ன தண்டனை என்று தானே முதலில் பார்க்க வேண்டியது! தமிழகத்தில் பலரும் இதில் நேர்மையற்று இருப்பதாகவே செய்திகளைப்பார்த்தால் தோன்றுகிறது. அறம் என்றால் எங்கே இருக்கிறது என்று இன்று தேட வேண்டியிருக்கிறது.

இந்தச்சூழலில் அண்மையில் சாலினி என்ற மனநல மருத்துவரின் நேர்காணல் வலையில் காணும் வாய்ப்புக்கிடைத்தது. மிகச்சிறப்பான அவரது பேச்சின் இடையில் தடதடவென வந்து விழுந்த பல அரிய கருத்துக்களில் ஒன்றை இன்று திருவள்ளுவரும் சொல்லி இருப்பதைப்படிக்கிறோம், இந்தப்பாடலில்!

சுருக்கமாகச் சொன்னால், "பெண்களை வசப்படுத்த ஆண்கள் கையாளும் பெரும் படைக்கருவி அவர்களது பேச்சு - இனிக்க இனிக்கப்பேசிக்கொண்டு ஒருவன் வந்தால் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்" என்று அந்த மனநல வல்லுநர் கூறிய அறிவுரை தான் இந்தக்குறளின் கரு!

நம் பெண்மை உடைக்கும் படை
நமது பெண்மை என்னும் பண்பை (நிறையை, ஒழுக்க நிலையை, அடக்கத்தை) உடைத்துப்போடும் படைக்கருவி

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோ
பல மாயங்கள் செய்ய வல்ல அந்தக் கள்வனின் இனிமையான (அல்லது பணிவான, நைச்சியமான) மொழி அல்லவா?
(அதாவது, மானே / தேனே / உடுக்கையே / கிடக்கையே Laughing )




app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 13 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Oct 25, 2018 5:18 am

மனநல மருத்துவர் சாலினியின் நேர்காணல் - இதில் அவர் கொட்டும் பல அரிய கருத்துக்களுக்கு நடுவில் வள்ளுவரின் இந்தக்கவிதையின் கருவும் வருகிறது!

https://www.youtube.com/watch?v=1az6ePhEktw


"யாப்பு-கீப்பு எல்லாம் மன்னனுக்குப் போட்ட சோப்பு "
rotfl

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 13 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Nov 09, 2018 2:57 am

#1259
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு


காமம் கூடும்போது அங்கே நிறைக்கு வழியில்லை என்று மேலும் வலியுறுத்தும் செய்யுள்!

இங்கே எப்படியெல்லாம் ஒருவர் "தன்னைத்தான் கட்டுப்படுத்தும் வலிமை" இல்லாமல் போகிறார் என்பதை மிக அழகாக வள்ளுவர் படமாகக் காட்டுகிறார். வயப்படுதல், தன்னைத்தான் இழத்தல், கட்டுப்பாடு உடைந்து நொறுங்குதல் - இவையெல்லாம் எப்படி காதல் / காமத்தால் நடத்தப்படுகின்றன என்று பாருங்கள்!

புலப்பல் எனச்சென்றேன்
(அவன் என்னை மீண்டும் காண வந்தபோது) "ஊடல் கொள்ளுவேன்" (பிணங்குவேன் / சேர மாட்டேன்) என்று தான் விலகிச்சென்றேன்
(அல்லது, விலகிச்செல்ல முயன்றேன்; )

(புலவி = ஊடல், புலவல் = வெறுப்பு என்கிறது அகராதி. அப்படியென்றால் புலவன் / புலவியோ? Laughing )

நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு புல்லினேன்
(ஆனால், என் கட்டுக்குள் அடங்காமல்) நெஞ்சம் அவனோடு கலந்து விட வேண்டும் என்று உறுத்தியதைக்கண்டு (வேறு வழியில்லாமல்) தழுவிக்கொண்டேன்

இந்தப் "புல்லுதல்" என்ற சொல்லுக்கு அகராதி சொல்லும் பொருள்கள் எல்லாமே உடலுறவோடு சேர்ந்து வருபவையாக இருக்கின்றன. ஆகவே, இங்கு அவளை நிறையழியச்செய்து அவனோடுள்ள பிணக்கத்தை உடைத்து நொறுக்குவது வெறும் "மனம் அலைபாய்வது மட்டும்" அல்ல என்பது தெளிவாக இருக்கிறது.

இங்கே உடல் அவளை உந்தித்தள்ளுகிறது என்பது வெளிப்படை.

தனிமையில் சந்திப்பது என்பது இருவரது நிறையையும் எளிதில் உடைக்கவல்ல ஒன்று என்பதையும், கட்டுப்பாடு எல்லாம் அங்கே உடைவது எளிது என்பதையும் உடல் சார்ந்த அறிவியல் உணர்த்துகிறது.

வள்ளுவரும் ஒத்துக்கொள்கிறார்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 13 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Nov 14, 2018 4:29 pm

#1260
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்


அருமையான ஒரு உவமையுடன் இந்த அதிகாரத்தை வள்ளுவர் முடித்து வைக்கிறார்!

ஒருவரது நிறையை எப்படிக்காமம் அழிக்கிறது என்பதைப்பத்துக் குறட்பாக்களில் சொல்லியவரது முடிவான உவமை "அனலில் இட்ட கொழுப்பு போன்றதே ஒருவரது மனம்" என்கிறது Smile

அதாவது, மிக்கவருடைய உள்ளங்களும் அப்படித்தான் - அதாவது, உடலில் உருவாகும் (குறிப்பாகச் சில பல சூழல்களில்) வேதி மாற்றங்கள் ஒருவரைக் காமத்தீயால் உருகும்படிச்செய்யும் என்பது அறிவியல்!

அவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி, அடக்கி ஆள்வது எளிதன்று! அது தான் நிறை மாந்தரின் அழகு! என்றாலும், காதலருக்குள் (கணவன்-மனைவிக்குள்) அப்படிப்பட்ட உடல்-மனம்-அடக்குதல் வேண்டுமா இல்லையா என்பது அவரவர் முடிவு செய்ய வேண்டிய ஒன்று Wink

புணர்ந்தூடி நிற்பேம் எனல்
(பிரிந்தவர் மீண்டும் வந்து) தழுவிய பின்னரும் பிணங்கிக்கொண்டே (ஊடலுடன்) நிற்போம் என்று சொல்வது

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
தீயில் இட்ட கொழுப்பு போன்ற நெஞ்சை உடைவர்களுக்கு முடியுமா என்ன?

எப்படியும் நிணத்தை அடுப்பில் ஏற்றியாகி விட்டது - அதோடு இன்னும் கொஞ்சம் உப்பு மிளகாய் எல்லாம் சேர்த்துச் சமைத்து விட வேண்டியது தான் என்று சொல்லுகிறாள்!

"இதற்கு மேல் என்ன நிறையாவது கிறையாவது - ஊடலைத் தூக்கி வீசிவிட்டுக் கூடல் தானே என்னால் முடியும் " என்று ஒத்துக்கொள்கிறாள்!

இன்பமாகக் கூடி வாழ வாழ்த்தி விட்டு அடுத்த அதிகாரத்துக்குப் போவோம்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 13 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Nov 20, 2018 1:59 am

#1261
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்

(காமத்துப்பால், கற்பியல், அவர்வயின் விதும்பல் அதிகாரம்)

அவர் வரும் போது விரைதல் (அல்லது, அவர் வரும் வழிநோக்கி விரைதல்) என்று பொருள் கொள்ளத்தக்க தலைப்பு இந்த அதிகாரத்துக்கு.

அதாவது, நிறை அழிந்த பின்னர் வேறு நடிப்பு / வேடம் எல்லாம் களைந்து ஆவலுடன் அவர் வரவுக்காகக் காத்திருத்தல், விரைந்து ஓடிக்கட்டிக்கொள்ளுதல் என்றெல்லாம் நடப்புகளைப் பற்றி இந்த அதிகாரம் முழுவதும் பார்க்கப்போகிறோம் என்று தோன்றுகிறது!

முதல் குறளிலேயே அதற்கான சுவடு தெள்ளத்தெளிவாக - இதோ பொருள் பார்ப்போம்!

வாளற்றுப் புற்கென்ற கண்ணும்
(அவரும் வரும் வழியை நோக்கி நோக்கி நின்றதால்) ஒளியிழந்து என் கண்கள் நுண்ணியவற்றைக்
காண இயலாதவை ஆகி விட்டன
(வாள் = ஒளி / புற்கெனல் = மங்குதல் / காண மாட்டாமை)

அவர் சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல்
அவர் (பிரிந்து) சென்ற நாட்களை எண்ணி எண்ணித் தேய்ந்தது விரல்

"ஒற்றித்தேய்ந்தது" என்பதை சுவரில் ஒற்றி என்று சில உரைகள் விளக்கங்கள் சொல்லுகின்றார்கள். அதுவும் அழகாகத்தான் இருக்கிறது. ஒரு காட்சிப்படுத்தலை நமக்குத்தருகிறது!

பல காப்பியங்கள், காவியங்களில் சொல்லப்படும் இத்தைகைய "காத்திருப்பு ஓவியம்" -அதன் வழியே உடல் நலமும் குன்றிப்போதல் - எத்தனையாவது முறையாக இங்கு படிக்கிறோம் என்று தெரியவில்லை. எண்ணிக்கை மறக்க வைக்கும் சூழல் மற்றும் கவிதை.

என்றாலும், உள்ளே பொதிந்திருக்கும் துயரம் மறக்கத்தக்கதல்ல Sad

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 13 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  Usha Mon Dec 17, 2018 1:15 pm

Thirukural patri pesum ivar.. yar..

ivarudaiya karuthu nanraga irukriadhu.........

https://twitter.com/JerseyKaaLai/status/1074316292977508357

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 13 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Dec 21, 2018 6:39 am

#1262
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து


இலங்குதல் என்றால் மிளிருதல் / ஒளி தருதல் என்று பொருளாம். இழை என்பது அணிகலன் என்பதால், இலங்கிழாய் என்பதை "ஒளிரும் நகை அணிந்தவளே" என்று உரைகள் விளக்குகின்றன.

முதன் முறையாக இப்படிப்பட்ட விவரிப்பு தோழிக்குக் கிடைக்கிறது என்று நினைக்கிறேன். (இந்தக்குறளின் உரையில் கூட மு.வ. போன்றோர் அந்த விவரிப்பு இல்லாமல் வெறுமென "தோழி" என்று சொல்வதைப் பார்த்தால் "ஐயோ பாவம் இந்தத் தோழிகள்" என்று தோன்றுகிறது).

என்றாலும், அது இங்கே மையப்பொருள் அல்ல என்பதால் தொடர்ந்து படிப்போம்.

விட்டுப்பிரிந்து சென்ற காதலன் நினைவில், அவன் வரும் வழிக்காத்து நின்று விரைந்து ஓடுதல் என்பது தானே இங்கு மையப்பொருள்!

அப்படியாக, "அவனை நினைப்பதை மறந்தால் துயரம் குறையும் என்றாலும், அப்படி மறப்பது என் அழகையும் பொலிவையும் அழித்து விடும்" என்று புலம்பும் செய்யுள்.

இலங்கிழாய்!
ஒளிரும் நகை அணிந்த என் தோழியே!

இன்று மறப்பின் காரிகை நீத்து
(துயரம் போக்க என்று) இன்று அவரை நான் மறந்தால் என் அழகும் பொலிவும் நீங்கிப்போய்

என் தோள்மேல் கலங்கழியும்
என் தோளின் மீதுள்ள அணிகள் கழன்று போகும்

அவரை நினைத்துக்கொண்டிருக்கும் வரையில் தான் நான் அழகாய் இருப்பேன் (அது தான் எனக்கு வாழ்க்கை) - அவரை மறந்தால் நான் இளைத்துப்போய் எல்லாம் இழப்பேன் - என்று புலம்புகிறாள்.

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 13 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Jan 23, 2019 5:57 am

#1263
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்


"உரன்" என்றால் வெற்றி என்று அகராதி சொல்லுகிறது (வழக்கம் போல இந்தக்குறளைத்தான் மேற்கோள் காட்டுகிறார்கள்). ஆக, அழுது புலம்பும் பெண்ணின் காதலன் (அல்லது கணவன்...பொதுவாகச்சொன்னால் "தலைவன்") ஏதோ ஒன்றில் வெற்றியை நாடிச் சென்றிருக்கிறான்.

ஒரு வேளை அது போர்க்களமாக இருக்கலாம். அல்லது வணிகம் / தொழில் - எப்படி இருந்தாலும் வெற்றிக்கனி பறித்துவிட்டுத்தான் வருவது என்று சென்றிருக்கிறான். அந்த நேரத்தில் அவளை விடவும் அந்த வெற்றி மீது தான் அவனுக்குக்கூடுதல் காதல்.

அதற்கு அவனிடம் உள்ள முதலீடு ஊக்கம் என்பதாக இங்கே பாடுகிறாள். ("உள்ளம் துணையாக")

அது சரி, இப்போது இவள் ஏன் அவர்வயின் விதும்பி ஓடிக்கொண்டிருக்கிறாள்? (அல்லது காத்துக்கொண்டிருக்கிறாள்?) அவன் தான் வெற்றி மீது காதல் கொண்டு இவளை விட்டுவிட்டுப் போய் விட்டானே?

"எப்படி இருந்தாலும் ஒரு நாள் அவர் திரும்பி வருவார்" என்ற அந்த விருப்பத்தால் தான் இவள் உயிரே உடலோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று நமது கேள்விக்கு அவள் அடுத்த அடியில் விடை தருகிறாள்.

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வெற்றியை விரும்பி அவர் ஊக்கமே துணையாகச் சென்றார்
(என்னைப்பிரிந்து அன்று அவர் சென்றதற்கு உகந்த காரணம் இருந்தது, என்றாலும் கண்டிப்பாகத் திரும்பி வருவார், அதனால் )

வரல்நசைஇ இன்னும் உளேன்
(அவர் திரும்பி) வருவதை விரும்பி எதிர்பார்த்துக் காத்திருப்பதால் தான் நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்

உண்மைக்காதல் இந்தப்பெண்ணின் உள்ளத்தில் இருக்கிறது என்பது தெளிவு!

இதைப்படித்தவுடன் "அவன் வருவானா, எப்போது வருவான்" என்று நாமும் ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கிவிடுகிறோம்!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 13 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Sun May 05, 2019 1:36 am

#1264
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் 
கோடு கொடேறுமென் நெஞ்சு


முற்காலங்களில் நகரங்களின் பாதுகாப்புக்காகக் கோட்டைச்சுவர் கட்டப்பட்டிருப்பதும் அதன் காவற்கோபுரத்தின் மீது காவல்காரர் நின்று தொலைதூரம் நோக்கிக்கொண்டிருப்பதும் நாம் வரலாற்றில் படித்திருக்கும் ஒன்று. 

அதாவது, எதிரி இங்கே வந்து சேருவதற்கு நெடு நேர முன்பே கண்டு விடுவதற்காக உயரமான இடத்தில் இருந்து தொலைதூரம் நோக்குவது.

அதே போன்ற ஒரு நிலையை இங்கே அவர் வருவதற்காகக் காத்திருந்து ஓடிச்செல்லும் பெண்ணுக்கு வள்ளுவர் சொல்லுகிறார்.

அதாவது, மரத்தின் மீது ஏறி, உச்சாணிக்கொம்பில் நின்று அவர் தொலைவில் வரும்போதே பார்த்து விடவேண்டும் என்று தலைவி விழைவதாக இந்தக்குறள்!

கூடிய காமம் பிரிந்தார்
முன்பு கூடியிருந்து பின்னர் அந்தக்காதலை விட்டுவிட்டுப் பிரிந்து சென்றவர் 

வரவுள்ளி
வருகையை எண்ணி (அல்லது வரவேண்டுமே என்று நினைத்து நினைத்து)

கோடு கொடேறுமென் நெஞ்சு
என் நெஞ்சம் மரத்தின் கிளைகள் (அல்லது உச்சிக்கொம்பின்) மீது ஏறிப் பார்க்கிறது!

இது வரை இந்த அதிகாரத்தில் படித்து வரும் அதே கருத்துத்தான் - "பிரிந்தவர் வருகிறாரா" என்று ஆவலுடன் எதிர்பார்த்து ஓடுதல்.

அதையே "மரத்தின் மீது ஏறிப்பார்ப்பது" என்ற ஓவியம் தீட்டி  வள்ளுவர் பாட்டு எழுதி இருக்கிறார் என்பது மட்டும் தான் இங்கே புதிது!

app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 13 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon May 06, 2019 1:35 am

#1265
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு


கொண்கன் என்ற சொல்லை முன்னமேயே ஒரு குறளில் பார்த்திருக்கிறோம் - கணவன் என்ற பொருள் கொண்ட அச்சொல்லின் மருவிய உருவம் தானோ "கொங்கன்" என்று நகைத்த நினைவு. (பள்ளிக்காலத்தில் இந்தப்பெயருடன் இருந்த ஒருவரை எல்லோரும் ஏளனமாக விளித்தது நினைவுக்கு வருகிறது).

இந்தப்பாட்டில் அவரைக் "கண்ணாரக்" காண வேண்டும் என்று ஆவலுடன் விழைகிறாள் பெண். சில உரையாசிரியர்கள் அப்படியே "கண்ணார" என்று சொல்லுகிறார்கள். ஒருவர் "கண்களின் ஆவல் தீரும் வரையில்" என்கிறார். இன்னொருவர், "கண் நிறைய" என்று எழுதுகிறார். பொது வழக்கில் இப்படிச்சொல்வது இருந்தாலும் இதன் முழுப்பொருளைக் குறித்து இதற்கு முன் நான் எண்ணியதில்லை என்பது உறைக்கிறது Smile

ஆர் என்ற சொல்லுக்கு நிறைவு என்ற பொருள் இருக்கிறது. "கண் நிறைய" என்ற பொருள் பொருத்தமாகத் தோன்றுகிறது.

மன் என்ற அசைச்சொல்லை மீண்டும் பார்க்கிறோம். (காண்க மன் என்பதைக் "காண்பேனாக, காணக்கடவது" என்றெல்லாம் பொழிக்கிறார்கள். "கண்டு தொலைக்கட்டும்" என்று திட்டுவதாகவும் கொள்ளலாம்).

காண்கமன் கொண்கனை
(பிரிந்திருக்கும்) என் கணவனை (மீண்டும்) காண்பேனாக!

கண்ணாரக் கண்டபின்

(அவரைக்) கண் நிறையைக்கண்ட பின்னர் தான்

என் மென்தோள் பசப்பு நீங்கும்

எனது மென்மையான தோளில் படர்ந்திருக்கும் பசலை (மெலிவு / வாடிப்போய்ப் பசுப்பாய் இருப்பது) நீங்கும்

காதலரைக்காணாமல் ஏங்கி நொந்து மெலிந்து பசலை பிடித்துக்கிடக்கும் தலைவிக்கு அவன் வரப்போகிறான் என்ற தகவல் கிடைத்தவுடன் ஆர்வம் மீறுகிறது.

கண்ணாரக்கண்டு இன்புற வேண்டும் என்று விதும்புவதில் வியப்பொன்றுமில்லை!


app_engine

Posts : 10114
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 13 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 16 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15, 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum