Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 13 of 40 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 26 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 13 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Sep 04, 2014 6:28 pm

#275
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்


எற்று என்ற சொல்லுக்குப்பல பொருட்கள் இருந்தாலும் இங்கு பொருத்தமானது "வியப்பிரக்கக் குறிப்புச்சொல்". "ஐயோ" என்பது போன்ற வியப்புச்சொல்!

இங்கு இரட்டித்து "எற்றெற்று" என்று வருகிறது. அப்படியாக, "ஐயோ, ஏன் தான் அப்படிச்செய்தோமோ!" என்று புலம்பும் நிலை!

மொத்தத்தில் "கூடா ஒழுக்கம்" என்று அதிகாரத்தின் பெயர் இருந்தாலும், பெரும்பாலும் துறவி வேடம் இட்டுக்கொண்டு செய்யும் படிறு (திருட்டுத்தனம் / பொய் / ஏமாற்று) குறித்தே வள்ளுவர் பாடிக்கொண்டிருக்கிறார்.

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம்
பற்றுகளைத் துறந்து விட்டோம் என்று சொல்லுவோரின் பொய்யான வாழ்க்கை வழி

எற்றெற்றென்று ஏதம் பலவுந்தரும்
"ஐயோ, ஏன் ஏன் (தான் அப்படி ஏமாற்றினோமோ)!" என்று  சொல்லும் வண்ணம் பல துன்பங்களைத் தரும்!

கள்ளத்தனம் முடிவில் வருத்தமும் துயரமும் தரும் என்று அடித்துச்சொல்லும் குறள்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 13 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Sep 05, 2014 2:43 pm

#276
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்


'வன்கணார்' என்றால் 'அருள் அற்றவர்' (இரக்கமில்லாத கொடியவர்) என்று முன்னமேயே பார்த்திருக்கிறோம்.

அந்தக்கூட்டத்திலேயே மிகவும் கொடியவர்கள் யார் என்று சுட்டிக்காட்டும் குறள் இது!

நெஞ்சின் துறவார்
உள்ளத்தில் பற்றுகளைத்துறக்காமல்

துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின்
(வெளியில்) துறந்தவர்களைப் போல வஞ்சனை செய்து (ஏமாற்றி) வாழ்பவர்களை விட

வன்கணார் இல்
(கூடுதல்) கொடியவர்கள் இல்லை!

துறவி போல் நடிப்பவன் தான் கொடியவர்களிலேயே மிகக்கொடுமையானவன்!

வெளிப்படையான கெட்டவனை மக்கள் நம்பாமல் வெறுத்து நடப்பார்கள்.

துறவிகளிடமோ, நம்பிக்கையும் மதிப்பும் வைப்பார்கள். 

அதனால், இவர்கள் செய்யும் கொடுமை, நம்பி வரும் பலரையும் துன்புறுத்தும் அல்லவா?

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 13 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Sep 08, 2014 4:39 pm

#277
புறங்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து

இது நிறவெறி கொண்ட குறள்  எனலாம் Smile

அதாவது, சிவப்பு நல்லதென்றும் கருப்பு கெட்டதென்றும் சொல்லும் குறள். அதற்கு வள்ளுவர் குன்றிமணியை உவமைப்படுத்துவது எளிதில் புரிய வைக்க என்று கொள்ளலாம்.

வெண்மை தூய்மைக்கும் கருமை அழுக்குக்கும் உவமைப்படுத்துவதில் நிறவெறி இருக்காது. இங்கோ, சிவப்பும் கருப்பும் பண்புகளோடு ஒப்பிடப்படுவது கொஞ்சம் உறுத்தல் தான். என்றாலும், சிவப்பு = செம்மை என்று எடுத்துக்கொண்டால் நிறவெறிக்கோணத்துக்குள் செல்லாமல் தப்பிக்கலாம் Smile

குன்றிமணி - எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, சிறு வயதில் இந்தக்கொடியில் இருந்து மணிகள் சேகரிப்பது என் தகப்பனார் மாடு மேய்க்கும்போது உடன் செல்வதில் கிடைக்கும் ஒரு மிகப்பிடித்த பொழுதுபோக்கு Smile

புறங்குன்றி கண்டனையரேனும்
வெளியில் குன்றிமணியின் செம்மை போன்ற தோற்றம் இருந்தாலும்

அகங்குன்றி முக்கிற் கரியார் உடைத்து
உள்ளில் குன்றிமணியின் முக்கின் நிறம் போல அழுக்குள்ளுவர் (உலகில் / ஊரில் / நாட்டில்) உள்ளார்கள்

ஒரே மணியில் இரு வேறுபட்ட நிறங்கள் இருப்பதைக்கொண்டு உவமைப்படுத்த முயன்று வள்ளுவர் தோல்வியடைந்த குறள்  எனலாம்.
(குன்றிமணியில் இரு நிறங்களும் வெளிப்படை, வஞ்சகர்களில் ஒன்று மட்டுமே வெளியில் தெரிவது)

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 13 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Sep 09, 2014 6:51 pm

#278
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்


நீராடி என்ற சொல்லில் மட்டும் உரையாசிரியர்கள் நடுவே கொஞ்சம் குழப்பம் இருப்பது போல் தெரிகிறது.

அச்சொல்லை விட்டுவிட்டுப் பார்த்தாலும் பொருள் தெளிவாய் விளங்கும் என்பது கவனத்துக்குரியது.

அதாவது,

மனத்தது மாசாக
உள்ளத்தில் அழுக்கு நிறைந்திருக்க

மாண்டார் (நீராடி)
மாட்சிமை உள்ளவர்கள் / மாண்பு மிக்கவர்கள் என (நீராடி)

மறைந்தொழுகு மாந்தர் பலர்
ஏமாற்றி வாழும் மனிதர் பலர் உண்டு!

துறவி வேடத்தில் வஞ்சனை செய்யும் கூடா ஒழுக்க மனிதர் பற்றிய இன்னுமொரு குறள்!

நீராடி என்பதற்குச் சொல்லப்படும் விளக்கங்கள்:
-தூய நீரில் குளித்து வருபவர்போல்
-நீரில் மறைந்து நடக்கும்
-நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல
-நீரின் மூழ்கிக் காட்டி
-(மாட்சிமைப் பட்டாரது) நீர்மையைப் பூண்டு


Smile

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 13 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Sep 10, 2014 6:57 pm

#279
கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கன்ன
வினைபடு பாலால் கொளல்


இன்று படித்தது : கோடு என்றால் வளைவு (கோட்டம்) Smile

வெளித்தோற்றத்தில் நேராகக் காணப்பட்டாலும் செயலில் கொடியோராய் இருப்போருக்கு (அதாவது, கூடா ஒழுக்கம் நடத்தும் துறவிகளுக்கு) இந்தக்குறள்  சுவையான உவமை சொல்லுகிறது!

கணை = அம்பு;  நேரான தோற்றம், செய்வதோ கொலை!

நேராகத் தோன்றினாலும் கொல்லும் கணைகளே கூடா ஒழுக்கத்தோர்!

கணைகொடிது
அம்பு கொடுமையானது (வளைவின்றிக் காணப்பட்டாலும்)

யாழ்கோடு செவ்விது
யாழ் வளைவாகக் காணப்பட்டாலும் (இசை தரும்) நன்மையானது!

ஆங்கன்ன வினைபடு பாலால் கொளல்
அவ்வாறே, (துறவிகளையும்)  செயல்வினைகளால் தான் கொள்ளவோ (கொள்ளாதிருக்கவோ) வேண்டும்!  

அம்பு வேணுமா, யாழ் வேணுமா என்று அழகாகக் கேட்கிறார் வள்ளுவர்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 13 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Sep 11, 2014 10:34 pm

#280
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்


நேரடியாகப் பொருள் கொள்ளத்தக்க எளிய, அழகான குறள்!

நம்மில் பலருக்கும் அறிமுகம் உள்ள ஒன்றும் கூட Smile

உலகம் பழித்தது ஒழித்து விடின்
உலகம் பழிக்கின்றவற்றை (அதாவது, எண்ணம் / சொல் / செயல்) ஒழித்து விட்டால்

மழித்தலும் நீட்டலும் வேண்டா
மழித்தலும் (மயிரைச்சிரைத்து மொட்டை அடித்தல்) நீட்டி வளர்த்தலும் (சடை முடி) வேண்டாம்!

துறவி என உலகுக்குக் காட்டிக்கொள்ள மனிதர் பூணும் மொட்டை, சடை போன்ற வெளி அடையாளங்களை வள்ளுவர் எள்ளி நகையாடும் குறள்!

பழியானவற்றை ஒழிக்காமல் தலைமுடி / முக முடி  அளவில் மட்டும் வேடமிடுதல் அன்றும் இன்றும் பரவலாக நடப்பது தான்.

மயிரளவில் துறவு, மனதளவிலோ பழி!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 13 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Sep 12, 2014 7:48 pm

#281
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்க தன் நெஞ்சு

(அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை அதிகாரம்)

கள் என்பதற்கு வஞ்சித்தல் என்றும் களவு செய்தல் (திருடுதல்) என்றும் அகராதி பொருள் சொல்லுகிறது.

அவ்விதத்தில், கள்ளாமை = திருடாமை / வஞ்சியாமை. செயலும் எண்ணமும் இதில் அடக்கம்.

எளிமையாகப் புரிந்து கொள்ளத்தக்க மற்றும் அழகிய எதுகை உள்ள குறள் இது (எள்ளாமை / கள்ளாமை).

எள்ளாமை வேண்டுவான் என்பான்
(பிறரால்) இகழப்படாதிருக்க வேண்டும் என்பவன்  

எனைத்தொன்றும் கள்ளாமை தன் நெஞ்சு காக்க
எதையும் களவு செய்யும் / வஞ்சிக்கும் எண்ணம்  இல்லாமல் தன் நெஞ்சைக் காக்க வேண்டும்!

திருடும்/ ஏமாற்றும் எண்ணம் வந்தால், "எள்ளல் படுதல் மிக அருகில்" என்று உணர வேண்டும்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 13 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Sep 15, 2014 8:03 pm

#282
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்

எளிமையான, நேரடியான பொருள் கொண்ட குறள்!

எண்ணங்களே குற்றம் என்று அடித்துச்சொல்லும் செய்யுள்!

உள்ளம் என்பதன் வினைச்சொல்லாக "உள்ளல்" என்று வருவது அழகு!

நினைத்தல், எண்ணுதல், கருதுதல் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம்.

பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்
பிறன் பொருளை வஞ்சித்துத் திருடிவிடலாம் என்று

உள்ளத்தால் உள்ளலும் தீதே
மனதில் நினைப்பதும் கூடத் தீமையே!

"அழகை ரசி, அடைய நினையாதே" என்று சிலர் புதுமொழி சொல்லுவதைப் படித்திருக்கிறேன். அது இங்கு நினைவுக்கு வருகிறது!

மற்றவரின் உடைமை மீதான விருப்பம் மாபெரும் தவறு, தீமை!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 13 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Sep 16, 2014 6:54 pm

#283
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்

இறத்தல் என்பதற்குக் "கடத்தல்" என்ற பொருளும் உண்டு.

அவ்விதத்தில், அளவிறத்தல் = அளவு கடத்தல் / அளவு கடந்து பெருகுதல், எண்ண முடியாத அளவுக்குக் கூடுதல் என்றெல்லாம் பொருள்.

அப்படி ஆவது போலத்தோன்றினாலும் உண்மையில் அப்படி இல்லை எனத் தெளிய வைக்கும் குறள்!

களவினால் ஆகிய ஆக்கம்
கள்ளத்தனம் செய்வதால் வரும் செல்வம்

அளவிறந்து ஆவது போலக் கெடும்
அளவின்றிப் பெருகுவது போலத்தோன்றினாலும் (உண்மையில் ஒன்றும் இல்லாவண்ணம்) அழியும்!

வஞ்சனையான வழியில் வரும் பொருள் நிலைக்காது என்று பொதுவான பொருள் கொள்ளலாம்.

என்றாலும் அதற்கு மாற்று எடுத்துக்காட்டுகள் நிறைய நாள்தோறும் பார்ப்பவர்களுக்கு "வேறு ஏதும் பொருள் உண்டா?" எனத்தோன்ற வாய்ப்புண்டு.

உண்மையில், "பொருள் நிறைய இருந்தாலும் வாழ்வு (உண்மையான ஆக்கம்) கெடும்" என்று கொண்டால், நடைமுறையிலும் பொருத்தமாக இருக்கும்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 13 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Sep 17, 2014 8:14 pm

#284
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்

பழைய செய்யுள்களில் சில சொற்களைப் படிக்கும்போது "ஏனப்பா இப்படிக்குழப்புகிறீர்கள்?" என்று சொல்லத்தோன்றும்.

அப்படி ஒன்று இங்கே - விழுமம் Sad

பொதுவாக நல்ல பொருளிலேயே இந்தச்சொல் பயன்படுகிறது. "ஒழுக்கம் விழுப்பம் தரலான்" என்று வரும்போது அதற்கு விழுமம் என்ற பொருளில் அகராதி சொல்வதைப்பாருங்கள்:

விழுமம் - அருஞ்சொற்பொருள்


விழுமம் viḻumam
, n. < விழு&sup4;. 1. Excellence, greatness, sublimity, eminence, magnificence, superiority; சிறப்பு. (தொல். சொல். 353.) 2. Good state; சீர்மை. (தொல். சொல். 353.) 3. Purity;

ஆனால், களவு பற்றிய இந்தக்குறளிலோ விழுமத்துக்குப் பொருள் "துன்பம்" என்றாம். (விழுமுறுதல் = விழுமம்+உறுதல் / துன்புறுதல் என்று அகராதியின் அதே பக்கத்தில் காணலாம்)

களவின்கண் கன்றிய காதல்
களவு செய்வதன் மீது உண்டான பெரும் விருப்பம்

விளைவின்கண்
முடிவில் (விளைவுகள் வரும்போது)

வீயா விழுமம் தரும்
தீராத துன்பத்தையே தரும்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 13 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Sep 18, 2014 7:12 pm

#285
அருள்கருதி அன்புடையராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்


நம் அன்றாட மொழியில் பயன்படுத்துவதில்லை என்றாலும் முன்னமே சில குறள்களில் பொச்சாப்பு என்றால் "மறதி" என்று பொருள் கண்டிருக்கிறோம்.

அல்லாமல் பொல்லாங்கு, தீங்கு, தளர்வு, நெகிழ்வு (உறுதி இல்லாமை) என்றும் பொருள் சொல்லப்படுகிறது.

மறந்த / தளர்ந்த / ஏமாந்த நிலை என்பதே இந்தக்குறளுக்கு மிகப்பொருத்தம்

பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண்
பொருள் கவர வேண்டி ஏமாந்த நிலை பார்த்திருப்போரிடம்
("எவன் சிக்குவான்" எனக்காத்திருப்போரிடம்)

அருள்கருதி அன்புடையராதல் இல்
அருளை விரும்பி அன்பு உடையவராகும் பண்பு இருக்காது

திருட அலைபவன் அருள், அன்பு எனும் பண்புகளை மதிக்க மாட்டான் என்றும் சொல்லலாம்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 13 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Sep 19, 2014 6:13 pm

#286
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காதலவர்


'அளவின் கண்' என்பதை "அளவுக்குள்", "பேராசை இன்றி" என்றெல்லாம் சில உரைகள் பொருள் அளவில் சுருக்குவதைக் காண முடிகிறது.

என்றாலும், மணக்குடவர் உடை இதில் எனக்கு விருப்பம். அளவு என்பதை அளவுகோல் என்று புரிந்து கொண்டு, "நேர் / நேர்மை" என்று வகுக்கிறார் அவர்.

அப்படியாக, அளவின் கண் நின்றொழுகல் = நேரிய / சீரிய வாழ்க்கை வழி (வரையறைகளுக்குள் ஒழுகும் முறை, ஒழுக்க எல்லை கடக்காமை)

களவின்கண் கன்றிய காதலவர்
களவு செய்வதில் காதல் நிறைந்தவர்கள் (முழுமையான விருப்பம் உள்ளவர்கள்)

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார்
(ஒழுக்க) எல்லைகளுக்குள் நின்று வாழ மாட்டார்கள்!

அதாவது, நேர்மைக்கும் அவர்களுக்கும் இடைவெளி மிகக்கூடுதல் என்று பொருள்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 13 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Sep 25, 2014 5:07 pm

#287
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்


சென்ற குறளின் இன்னொரு வடிவம் இந்தக்குறள் - அல்லது 
எதிர்மறை வடிவம் என்றும் சொல்லலாம்.

களவு செய்வோரிடம் அளவு இல்லை - போன குறள்!

அளவு அறிந்தோரிடம் களவு இல்லை - இந்தக்குறள் Smile

அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண்
அளவுடன் வாழும் ஆற்றல் (நேர்மையாக அல்லது மீறுதல் 
இல்லாமல் வாழும் முறை) புரிந்தவர்களிடம்

களவென்னும் காரறிவாண்மை இல்
களவு என்னும் இருண்ட (கெட்ட / மயங்கிய / சூது கொண்ட) 
அறிவு இருப்பதில்லை!

'கருத்த' என்று இங்கு வருவதை நம் நாள் வழக்கத்தில் நிறவெறி என்று கொள்ள வாய்ப்பிருக்கிறது.

என்றாலும், களவு, 'இருள் / இருட்டு' என்பனவோடு தொடர்புள்ளது என்று கொண்டு அப்படிப்பொருள் கொள்ளலாம். அவ்வாறு, நிறம் என்றெல்லாம்  பெரிது படுத்தாமல் விட்டுவிடலாம் Smile

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 13 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Sep 26, 2014 8:31 pm

#288
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு


இன்னுமொரு அளவு X களவு குறள்!

அப்படியாக, வள்ளுவர் களவுக்கு எதிர்ச்சொல் அளவு என்று நிறுவியே விடுகிறார்!

ஆக, அவருடைய காலத்து மொழியில் அளவு என்பதற்கு நேர்மை என்றே பொதுவாகப் பொருள் கொண்டிருப்பார்கள் என்று கொள்ளலாம்! இன்றும் அது ஓ'ரளவி'ல் உண்மையே Smile

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல
நேர்மையுள்ளவர்கள் நெஞ்சத்தில் நன்மை (அறம்) நிற்பது போல

களவறிந்தார் நெஞ்சில் கரவு நிற்கும்
களவு அறிந்தவர்கள் நெஞ்சத்தில் வஞ்சனையும் பொய்யும் நிற்கும்!

இந்தக்குறளில் "நெஞ்சத்து" என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ஆள் உள்ளுக்குள் என்னவாக இருக்கிறான் என்பதைக் குறிப்பிடும் சொல் அது!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 13 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Sep 29, 2014 6:28 pm

#289
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றாதவர்


வீதல் என்றால் சாதல். அதாவது அழிந்து போதல்.
வீவர் = சாவார்கள் / அழிவார்கள்!

தேற்றாதவர் = தெளிந்த அறிவு இல்லாதவர்கள்.

இனி இந்தக்குறளைப் படிப்பது எளிது!

களவல்ல மற்றைய தேற்றாதவர்
களவு அல்லாத மற்ற ஒன்றையும் குறித்த தெளிந்த அறிவு இல்லாதவர்கள்
("களவை மட்டுமே விரும்பி நாடுபவர்கள்" என்றும் கொள்ளலாம்)

அளவல்ல செய்தாங்கே வீவர்
மீறுதல்களைச் செய்து அதனால் அழிவார்கள்!
(அளவல்ல = நேர்மையற்ற செயல்கள் / மீறுதல்கள்)

அளவு = வாழ்வு, களவு = வீழ்வு (அழிவு) என்றெல்லாம் கொள்ளலாம்!

"பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்" என்று பொது வழக்கில் சொல்லுவார்கள்.

தற்பொழுது த.நா. முதல்வர் சிறை சென்றிருப்பது களவுக்காக என்பது குறிப்பிடத்தக்கது.

"மனித நீதி கொல்லாவிட்டாலும் இறை நீதி கொல்லும்" என்பது ஒரு குறிப்பிடத்தக்க நம்பிக்கை என்றும் நினைவு கொள்ளலாம்!
(அரசு அன்று கொல்லும் , தெய்வம் நின்று கொல்லும்)

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 13 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Sep 30, 2014 5:29 pm

#290
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு


மீண்டும் "புத்தேள் உலகு" என்ற பயன்பாடு காண்கிறோம் Smile

இந்தச் சொல்வழக்கைப் பலமுறை வள்ளுவர் பயன்படுத்துவதால், அவரது குறிப்பிடத்தக்க நம்பிக்கைகளில் ஒன்றாக இது இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு!

இறைவன் வாழும் உலகு அல்லது புதிய உலகு!

மற்றபடி இக்குறளுக்குப் பொருள் காணல் கடினமல்ல Smile

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை
களவு செய்வோருக்கு உயிர்நிலை விலகிப்போகும்
(இங்கு உயிர்நிலை என்பது அழிவில்லா நிலை அல்லது வானுலகில் வாழும் நிலை என்று கொள்ளலாம்)

கள்ளார்க்குத் தள்ளாது புத்தேள் உலகு
களவு செய்யாதவர்களையோ இறை உலகு (அல்லது புதிய உலகு) விலக்காது!

"கள்ளாமையை இறைவன் வலியுறுத்துகிறார்" என்று சொல்லி, இங்கு துறவறத்தில் இறை நம்பிக்கையை நேரடியாக உட்படுத்துகிறார் வள்ளுவர்.

குழப்பமே இல்லை Smile

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 13 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Oct 01, 2014 4:24 pm

#291
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்
(அறத்துப்பால், துறவறவியல், வாய்மை அதிகாரம்)

"வாய்மையே வெல்லும்" - தமிழக அரசின் (மற்றும் "சத்யமேவ ஜெயதே" என்று இந்திய அரசின்) சின்னங்களில் பொறிக்கப்படும் சிறப்புச்சொற்றொடர்!

நாம் சிறுவயதிலிருந்தே "பொய் சொல்லக்கூடாது பாப்பா" என்றெல்லாம் புகட்டி வளர்ப்பட்டவர்கள் என்பதால் வாய்மை எவ்வளவு தேவை என்று உணர்ந்தவர்கள் தாம்.

அந்தத்தலைப்பில் உள்ள இந்த அதிகாரம் பல முத்துக்களை உள்ளடக்கி இருக்கிறது என்பதில் ஐயமில்லை!

வாய்மை எனப்படுவது யாதெனின்
வாய்மை என்று சொல்லப்படுவது என்ன என்றால்

யாதொன்றும் தீமை இலாத சொலல்
என்ன ஒரு விதத்திலும் தீமை இல்லாத சொற்களைப் பேசுவதாகும்!

என் புரிதல்: "பேசும் சொல் அல்ல விளைவிக்கும் பயன் தான் அது வாய்மையா பொய்மையா என்று தெளிவிக்கிறது" என்கிறார் வள்ளுவர்.

மெய் தான். உண்மை மட்டுமே பேசினால் முடிவில் பலன் நன்மையே! தீமையில் விளைவடையது!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 13 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Oct 02, 2014 9:07 pm

#292
பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்

புரை என்பது குழப்பம் நிறைந்த இன்னொரு சொல் (விழுமம் மாதிரி).

உயர்ச்சி, சிறப்பு, பெருமை, ஒப்பு என்றெல்லாம் இதற்கு அகராதி பொருள் சொல்லுகிறது. ஆனால், அப்படி அல்ல இந்தக்குறளில் பயன்பாடு.

"உள்ளிருக்கும் ஆறாப்புண்" என்றும் ஒரு பொருள் உண்டு ("புரையோடிப்போய் விட்டது, இனி பிழைக்க மாட்டார்").

இங்கு அதோடொத்த ஒரு பொருள் தான். குற்றம், குறை என்றெல்லாம் சொல்லலாம்.

அவ்விதத்தில், இந்தக்குறள் ஒன்று தவறானது அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது.

நேரடியான பொருள் பார்ப்போம்.

புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்
குற்றம் இல்லாத நன்மை மட்டுமே தரும் என்றால்

பொய்மையும் வாய்மையிடத்த
பொய்யும் வாய்மையின் இடத்தைப் பெறும்!

"நாலு பேருக்கு நன்மை என்றால் எதுவும் தப்பு இல்லை" என்று திரைப்படங்களில் சொல்லுவது போல இந்தக்குறளைத் தமிழ் மக்கள் பயன்படுத்துவதைக் காண முடியும். (எ-டு : ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணி வை")

வள்ளுவர் அந்தப்பொருளில் (அதாவது, "நல்லது நடக்கப் பொய் சொல்லுவது சரியே, அதுவும் உண்மை எனப்படும்" என்று ) சொன்னாரா என்று தெரியாது.

என் அளவிலான விளக்கம் - பொய் ஒருபோதும் வாய்மையின் இடத்தில் வராது - ஏனெனில், புரை தீர்ந்த நன்மை ஒருக்காலும் பொய்யிலிருந்து வருவதில்லை!
("அப்படி வந்தால்" என்பது "அத்தைக்கு மீசை முளைத்தால்" என்பதற்குச்சமம்).

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 13 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Oct 03, 2014 7:35 pm

#293
தன்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்


அழகான குறள்!
 
"நெஞ்சு சுடும்" என்று மிக அருமையாக நமக்கு உள்ளே இருக்கும் நீதியரசை வள்ளுவர் சுட்டுகிறார்!

"மனச்சாட்சி" என்ற உள்ளேயே இருந்து நம்மைக் கட்டுப்படுத்தும் அரசுக்குக்கீழ்ப்படிந்து நடந்தால் பொய் சொல்ல மாட்டோம்.

மன அமைதி, நிம்மதி என்று எவ்வளவு பலன்கள்!

தன் நெஞ்சறிவது பொய்யற்க
நமக்குத் தெரிந்ததற்கு மாறாகப் பொய் சொல்லக்கூடாது

பொய்த்தபின்
(அப்படி அறிந்தே) பொய் சொன்னால்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்
தன் நெஞ்சே தன் குற்றத்தை நினைவுபடுத்திச் சுட்டுக்கொண்டே இருக்கும்!

தெரிந்தே பொய் சொன்னவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதேது?


Last edited by app_engine on Thu May 05, 2022 7:33 pm; edited 1 time in total

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 13 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Oct 06, 2014 5:47 pm

#294
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்


பலருக்கும் நன்கு அறிமுகமான, அழகான குறள்!

'பொய் சொன்னால் தன் நெஞ்சே தன்னைச்சுடும்' என்ற எதிர்மறையான கருத்தைத் தொடர்ந்து நேர்மறைத் திசையில் திரும்பி நற்பலன் சொல்லும் கவிதை!

இதில் மிக அழகான ஒன்று "உள்ளத்தால்" என்பதே.

அதாவது, வாயளவில் பொய் சொல்லாமல் இருப்பதற்கும் மேல் - உள்ளத்திலே பொய்யான எண்ணங்கள் இல்லாதிருத்தல்.

உள்ளத்தாற் பொய்யா தொழுகின்
(ஒருவன்) உள்ளத்தில் பொய்மை இல்லாது (வாழ்க்கை வழியில்) நடந்தால்

உலகத்தார் உள்ளத்துளெல்லாம் உளன்
உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் (சிறப்பான இடத்தில்) இருப்பான்!

பொய்மையை சிந்திக்கவும் கூடாது என்று உயர்ந்த பாடம் சொல்லும் குறள்!

அதன் நன்மையான விளைவு எல்லோரிடத்தும் நற்பெயர்!
("அவன் நம்மிடையே வாழும் அரிச்சந்திரன்") Smile

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 13 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Oct 08, 2014 6:28 pm

#295
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய்வாரின் தலை


தவம் செய்பவர்கள் உயர்ந்தோர் என்று எண்ணிய காலத்தில் எழுதப்பட்ட குறள்! ஆதலால் அவரிலும் மேலானோர் வாய்மையாளர் என்று வருகிறது.

இன்று தவத்துக்கு அவ்வளவு முன்னிலை இல்லை என்பதே உண்மை. (தானத்துக்கு இன்றும் நிலை உண்டு தான்).

வாய்மைக்கு என்றுமே மேலான இடம் என்பதில் ஐயமே இல்லை. அதிலும், நெஞ்சத்தில் வாய்மை என்றும் உயர்ந்தது!

மனத்தொடு வாய்மை மொழியின்
மனதறிய உண்மை பேசுபவர்கள்

தவத்தொடு தானஞ்செய்வாரின் தலை
தவமும் அதோடு தானமும் செய்வோரையும் விட மிகச்சிறந்தவர்கள் ஆவர்!

ஒரு விதத்தில் பார்த்தால், தவமும் தானமும் வெளிச்செயல்கள்.

வாய்மையோ, வெளிச்செயல் மட்டுமல்ல, ஒருவனது உள்ளே இருந்து வழிநடத்த வேண்டியது.

அவ்விதத்தில், அது ஒருவனை மிக உயர்ந்தவனாக வாய்மை ஆக்குகிறது என்பது மறுக்க முடியாத ஒன்றே!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 13 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Oct 10, 2014 6:34 pm

#296
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந்தரும்


எய்த்தல் என்பதற்கு "மெய் வருந்துதல்" (கடின உழைப்பு) என்று அகராதி பொருள் சொல்லுகிறது.

அப்படியாக, எய்யாமை என்றால், "மெய் வருந்தாமல் / குறிப்பாக உழைக்காமலேயே" என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். (அகராதி, இந்தக்குறளையே எடுத்துக்காட்டுகிறது).

இனி எளிதில் பொருள் கண்டு விடலாம்

பொய்யாமை அன்ன புகழில்லை
பொய் இல்லாத வழியை ஒத்த புகழ் வேறொன்றுமில்லை (ஏனென்றால்)

எய்யாமை எல்லா அறமுந்தரும்
(குறிப்பிட்ட) மெய் வருத்தமின்றியே எல்லா அறங்களையும் (நன்மைகளையும்) அது தந்து விடும்!

'ஒருவன் அறியாமலேயே' என்றும் சில உரைகள் "எய்யாமை" என்ற சொல்லை விளக்குகின்றன. அதுவும் ஏற்புடையதே.

வாய்மை இருந்தால் போதும், எல்லா அறங்களும் உயர்ந்த புகழும் ஒருவனைத் தானாக வந்து சேரும்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 13 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Oct 13, 2014 7:16 pm

#297
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற 
செய்யாமை செய்யாமை நன்று


ஒரு வழியாகக் கருத்து புரிகிறது என்றாலும், சொல் விளையாட்டு எளிதில் பிடிபடுவதில்லை என்று பல உரைகளையும் படிக்கும்போது தெரிகிறது.

சொல் அளவில் பொருள் காண முயலுவோம்!

முதல் பகுதி எளிது:

பொய்யாமை பொய்யாமை ஆற்றின்
பொய் சொல்லாமை என்ற பண்பைத் தவறாமல் கடைப்பிடித்தால் 
(பொய்யாமைக்கு இரு பொருட்கள். ஒன்று வாய்மை, மற்றது தவறாமை. எ-டு : "மழை பொய்த்தது")


அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று
(செய்வதற்குக் கடினமான) மற்ற அறங்கள் செய்யாவிட்டாலும் நல்லதே (குழப்பம் ஒன்றுமில்லை)!

இப்படியாக, என் புரிதலைச் சொல்லி விட்டேன்.

என்றாலும், "செய்யாமை செய்யாமை" என்பதன் பொருள் பலவிதத்தில் சொல்லப்படுவதை உரைகளில் காணலாம் :

மு.வ.: மற்ற அறங்களைச் செய்தலும்

மு.க. : செய்யக்கூடாததைச் செய்யாததால்

சா.பா : செய்யாமல் இருப்பதுகூட

பரிமேலழகர் : செய்யாமையே செய்யாமையே நன்று (அடுக்கு இரண்டனுள் முதலது இடைவிடாமை மேற்று, ஏனையது துணிவின் மேற்று)

மணக்குடவர் : பொய்யாமையைப் பொய்யாமல் செலுத்துவனாயின் பிற அறங்களைச் செய்தல் நன்றாம்; அல்லது தீதாம்.

Smile

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 13 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Oct 14, 2014 8:44 pm

#298
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப்படும்


தூய்மைக்கும் வாய்மைக்கும் தான் என்ன ஒரு பொருத்தம்!

மிக எளிமையான உவமையுடன் அருமையான உண்மையைச் சொல்லும் குறள்!

புறந்தூய்மை நீரான் அமையும்
(ஒருவருக்கு) வெளிப்புறத்தில் தூய்மை நீரால் அமையும் (கழுவுதல் / குளித்தல்)

அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்
(அதுபோல அல்லது மாறாக) உள்ளே இருக்கும் தூய்மை அவரது வாய்மையினால் தான் உணரப்படும்!

வெளியே உள்ள தூய்மையை விட உள்ளே உள்ள தூய்மை கூடுதல் தேவை என்று வலியுறுத்தவும் வேண்டுமா?

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 13 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Oct 15, 2014 11:33 pm

#299
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு


அழுக்கை அகற்றும் நீருக்கு வாய்மையை ஒப்பிட்ட பின் அதே போன்று உயிர் வாழ மிகத்தேவையான ஒளிக்கு இப்போது உண்மையை ஒப்பிடுகிறார்.

பொருள் புரிய ஒரு இக்கட்டும் இல்லை Smile

சான்றோர்க்கு எல்லா விளக்கும் விளக்கல்ல
(ஒளி தர நாம் பயன்படுத்தும்) எல்லா விளக்குகளும் சான்றோர்களைப் பொருத்த வரை ஒரு பொருட்டே அல்ல! (அவர்களுக்கு)

பொய்யா விளக்கே விளக்கு
வாய்மை என்பது தான் விளக்கு!

புற ஒளி நல்கும் விளக்குகள் வாழ்விற்கு மிகத்தேவை.

என்றாலும் மன இருள் அகற்றும் வாய்மை எனும் விளக்கு இவை எல்லாவற்றையும் விட மிக உயர்ந்தது என்று கொள்ள வேண்டும்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 13 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 40 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 26 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum