Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 8 of 40 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 24 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 8 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Mar 06, 2014 6:31 pm

#153
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை


இன்மை = இல்லாமை / வறுமை

இன்மையுள் இன்மை = ஒப்பீட்டில் மிகக்கூடிய அளவுக்கு வரும் சொல்லாடல் (எ-டு : "செல்வத்துள் செல்வம்"), மிகக்கொடிய வறுமை என்று பொருள் கொள்ளலாம்!

அதே போல, வன்மை = வலிமை, வன்மையுள் வன்மை = மிகச்சிறந்த வலிமை!

எதிர்மறையான ஒரு நிலையை, நேர்மறையான ஒரு நிலைக்கு உவமை ஆக்குவது அழுத்தம் கூட்ட ஒரு வழி. வள்ளுவர் அத்தகைய முறையை இந்தக்குறளில் கையாளுகிறார்.

இன்மையுள் இன்மை விருந்தொரால்
எல்லாவற்றிலும் மிகக்கொடிய வறுமை விருந்தினரை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் ஒருத்தன் இருப்பது! (அது போல)

வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை
எல்லாவற்றிலும் மிகச்சிறந்த வலிமை அறிவில்லாதவர்களைப் பொறுத்துக் கொள்ளுவது!

மடவார் என்பதை அறிவிலி / அறிவில்லாதார் என்று உரையாசிரியர்கள் பெயர்த்திருப்பதால் நானும் அவ்விதமே எழுதி இருக்கிறேன். அகராதி "மூடர்" என்ற ஒரு பொருள் சொல்லுகிறது என்பது சரியே.

என்றாலும், அகராதி "விளையாட்டுக்கூட்டம்", "மகளிர்" என்றெல்லாமும் பொருள் சொல்லுகிறது.

அவற்றையும் கருத வேண்டுமா இல்லையா என்பது அவரவர் தெரிவு Smile

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 8 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Mar 10, 2014 5:23 pm

#154
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றியொழுகப் படும்


"நிறைவு" என்ற சொல்லில் முழுமை, மகிழ்ச்சி, மேன்மை, மாட்சிமை எல்லாம் உள்ளடங்கி இருக்கின்றன.

எதிர்மறையில் சொன்னால், "குறைவொன்றும் இல்லை" Smile

அத்தகைய நிறைவான நிலையில் தொடர ஒருவருக்கு என்ன தேவை என்று சொல்லும் குறள்!

நிறையுடைமை நீங்காமை வேண்டின்
நிறை உள்ளவராக ஒருவர் தொடர்ந்து இருக்க வேண்டுமென்றால்

பொறையுடைமை போற்றியொழுகப் படும்
அவர் பொறுமை என்ற தன்மையைப் போற்றும் வாழ்க்கை வழியில் நடக்க வேண்டும்!

மீண்டும் எதிர்மறையில் பார்த்தால், பொறுமை இழந்து ஒருவர் செயல்படத் தொடங்கினால் அவருக்கு வாழ்வில் குறைகள் வரும் என்பது உட்பொருள்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 8 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Mar 12, 2014 12:08 am

#155
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து


"அவனெல்லாம் ஒரு ஆளுன்னு வச்சுப் பேசலாமா?" என்று எள்ளுவதைப் பலமுறை பேச்சு வழக்கில் நாம் கேட்டிருக்க முடியும்.

அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் தான் பொறுமையற்ற ஆட்களையும் வைக்க முடியுமாம்.

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே
(பொறுமையில்லாமல்) தண்டனை தருபவரை மதிப்புக்குரிய இடத்தில் வைக்க மாட்டார்கள் ("இவனும் ஒரு ஆள் என்று கூட்ட மாட்டார்கள்")

பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து வைப்பர்
(அதற்கு மாறாக) பொறுத்தருளும் பண்பு உள்ளவர்களை, பொன்னைப்போல மதித்துப் போற்றி வைப்பார்கள்!

மற்ற மனிதர்களோடு கூட்டமாக வாழும் நிலையில் தீமைக்குத்தீமை செய்யாமல் பொறுத்து, மன்னித்து வாழ்பவன் தான் உயர் நிலையில் வைத்துப் போற்றப்படுவான் என்று சுருக்கம்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 8 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Mar 12, 2014 7:09 pm

#156
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்


சென்ற குறளின் தொடர்ச்சி இது என்று கூறலாம்.

அதாவது, தீமைக்குத்தீமை திருப்பிச்செய்வோருக்கும் பொறுத்தருளுவோர்க்கும் இடையிலான வேற்றுமையை விளக்குவன.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்
தீமை செய்தவனுக்கு உடனே தண்டனை தருபவர் அந்த ஒரு நாள் மட்டும் தான் இன்பம் காண்பார் (குறுகிய பலன், நிலைக்காத இன்பம் என்று பொருள்)

பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்
(அதற்கு மாறாக) பொறுமையுடன் மன்னிப்பவருக்கோ (உலகமே) முற்றும் அழியும் வரை புகழ் துணை இருக்கும்!

பொன்றுதல் என்பதற்கு "முற்றும் அழிதல்" என்று பொருள் பார்க்கிறோம்.

வேறு வகையில் சொன்னால், "அப்படிப்பட்டவரின் புகழ் ஒருக்காலும் அழியாமல் நிற்கும்" என்று கொள்ளலாம்!


app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 8 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Mar 13, 2014 4:00 pm

#157
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று


வறுமைப்படுதல் / நொந்த குடி என்று வினைச்சொல்லாகவும், வலி, துன்பம், வியாதி, சிதைவு, பலவீனம் போன்ற பெயர்ச் சொற்களாகவும் பொருள்படும் ஒன்று தான் "நோ".
(நோவு / நோய் என்றெல்லாம் இதன் மருஊ மொழிகள் உள்ளன என்பது தெளிவே).

அப்படியானால், நோ நொந்து? துன்பத்தால் நொந்து போதல் என்று கொள்ளலாம்.

திறனல்ல தற்பிறர் செய்யினும்
தன்னை சிதைக்கும் வண்ணம் கொடுமை பிறர் செய்தாலும்

நோநொந்து
அதனால் வரும் துன்பத்தால் நொந்து போய்

அறனல்ல செய்யாமை நன்று
நன்மை அல்லாதவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது!

பிறர் துன்பம் தரினும் பொறுத்துக்கொள்ளுங்கள், தீமைக்குத்தீமை செய்யாதிருங்கள் என்று சுருக்கம்.

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 8 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Mar 14, 2014 5:12 pm

#158
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்


"வெற்றி" என்ற சொல் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பொருள் தருவதைக் காண முடியும்.

விளையாட்டில் அல்லது பள்ளித்தேர்வில் வெற்றியை வரையறுப்பது போல வாழ்வில் செய்ய முடியாது.  

சிலருக்குப் பணத்தில் வெற்றி, வேறு சிலருக்குப்பதவியில், பிள்ளைகளின் உயர்ச்சியில், வீட்டில் உள்ளோரின் உடல் நலத்தில் - இப்படி வரையறைகள் தனிப்பட்ட விதத்தில் அமைவதும், நாள் தோறும் மாறிக்கொண்டே இருப்பதும் கண்கூடு. ("படிக்கும் போது எப்போதாவது தான் தேர்வு வரும், இப்போது நாள் தோறும்  எனக்குப் பரீட்சை" என்று சில பொழுதுகளில் மனதில் தோன்றும்).

குறிப்பிடத்தக்க ஒரு வெற்றி, மற்றவர்களின் அன்பையும் பிரியத்தையும் பெறுவது (அல்லது தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வது). இல்லற வாழ்வில், கணவன் மனைவிக்கிடையிலும் இது ஒரு போராட்டமாக இருப்பதைப் பல வீடுகளிலும் காண முடியும்.

அத்தகைய வெற்றி பெற ஒரு உயர்ந்த வழி சொல்லித்தரும் குறள்.

மிகுதியான் மிக்கவை செய்தாரை
மேட்டிமையால் (மிஞ்சி மிஞ்சிப்போய்) நமக்குத் தீங்கு செய்தவர்களை

தாந்தம் தகுதியான் வென்று விடல்
நம்முடைய பொறுமையால் வென்று விடலாம்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 8 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Mar 17, 2014 6:33 pm

#159
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற்பவர்


இறப்பு என்பது "அளவு கடந்த தீங்கு" என்று முன்னமேயே பார்த்திருக்கிறோம். அதன் அடிப்படையில், "இறந்தார்" = அளவு கடந்து (வரம்பு மீறித்) தீமை செய்பவர்கள்.

இந்தக்குறளில் அவர்கள் செய்யும் தீமை இன்னாத சொற்களைப் பேசுதல்!

நோற்கிற்பவர் என்பதை "நோக்கு இல் நிற்பவர்" என்றெல்லாம் பிரித்துப் பொருள் காண முயல்வதை சில வலைத்தளங்களில் காண முடியும்.

சுருக்கமாகச்சொன்னால், "பொறுத்துக் கொள்ளுபவர்" எனலாம் Smile

இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்
அளவு கடந்து தீய சொற்களைப் பேசித் தீங்கு செய்வோரைப் பொறுத்து மன்னிப்பவர்கள்

துறந்தாரின் தூய்மை உடையர்
(இல்வாழ்வில் இருந்தாலும்) துறவு வாழ்க்கை நடத்துவோர் போல் தூய்மை உடையவர்களே!

"துறவிகள் தூயவர்கள்" என்பது அக்காலத்தின் ஒரு பொதுக்கருத்து என்பதையும் இங்கு காண முடிகிறது!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 8 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Mar 18, 2014 3:48 pm

#160
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்


நோல்தல் / நோற்றல் என்பதற்குப் "பொறுத்துக் கொள்ளுதல்" என்று அகராதி பொருள் சொல்லுகிறது.

அதே சொல்லை "நோன்பு காத்தல்" என்ற பொருளிலும் பயன் படுத்தலாம் என்பது தெரிந்ததே. (எ-டு : உண்ணா நோன்பு).

இவ்விரண்டு பொருட்களையும் சேர்த்து இங்கே வள்ளுவர் குறள் சமைத்திருக்கிறார் Smile

உண்ணாது நோற்பார் பெரியர்
உண்ணா நோன்பு மூலம் உடல் வருத்தித் தவம் செய்பவர்கள் பெரியோராவர்! (என்றாலும், அவர்கள்)

பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்
மற்றவர்கள் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்ளுபவர்களுக்குப் பின்னால் தான்!

வேறு சொற்களில் சொன்னால், "பொறுமை உள்ளவர்கள், உடல் வருத்தித் தவம் செய்வோரை விடவும் உயர்ந்த பெரியோர்"!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 8 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Mar 19, 2014 8:18 pm

#161
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு
(அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை அதிகாரம்)

பொறமை, அசூயை என்று பேச்சு மொழியில் சொல்லும் தீய தன்மையை "அழுக்காறு" என்றே பழந்தமிழில் பல இடங்களிலும், குறிப்பாகத் திருக்குறளில், நாம் காண்கிறோம்.

"பொறாமையோ எலும்புருக்கி" என்று விவிலியத்தில் உள்ள ஒரு நீதிமொழி சொல்லுகிறது. ஒருத்தருக்கும் நன்மை தராத ஒரு தீய தன்மை. இதனால் இல்லங்களில் வரும் சிக்கல்கள், துன்பங்கள் கணக்கில்லாதவை.

ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு
ஒருத்தனது உள்ளத்தில் பொறாமை இல்லாத இயல்பு தான்

ஒழுக்காறாக் கொள்க
நல்நடத்தை உள்ள வாழ்க்கை வழி எனக்கொள்ள முடியும்!

ஒழுக்கு, ஆறு - இரண்டும் கிட்டத்தட்ட ஒரே பொருள் உள்ள சொற்கள்.

ஒன்றை நடத்தை என்றும் மற்றதை வாழும் வழி (நெறி) என்றும் பொருள் கொண்டிருக்கிறேன். எல்லா உரையாசிரியர்களும் இதே கருத்தில் தான் இருக்கிறார்கள் Smile

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 8 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Mar 20, 2014 5:55 pm

#162
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்


அன்மை = அல்-மை = அல்லாமை = இல்லாமை = இல்-மை = இன்மை Smile
(என்றாலும், அ != இ )
 
யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்
யாரிடத்திலும் பொறாமை இல்லாத தன்மை பெற்றால்
 
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லை
அதற்கு ஒப்பான சிறப்பு / உயர்வு பெறுவதற்கு ஒன்றுமில்லை!

பேறு என்பதற்கு இரண்டு பொருட்கள் உள்ளன என்பதையும் மனதில் கொள்வோம்.

பெறுதல் என்பதன் சுருக்க வடிவம்! யாரிடமிருந்தோ ஒன்றைப் பெற்றுக்கொள்ளுதல் என்ற ஒரு பொருளும், பிள்ளையைப் பெறுதல் என்ற மற்றொரு பொருளும் இந்தச்சொல்லுக்கு உள்ளன.

இந்தக்குறளைப் பொறுத்த மட்டில் "வாழ்க்கைப்பேறு" என்ற பொருளில் வருகிறது.

அதாவது, ஒருவர் வாழ்வில் பெறத்தக்க மிகச்சிறந்த சிறப்பு, "பொறாமை இல்லாத ஆள்" என்பதே!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 8 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Mar 21, 2014 4:57 pm

#163
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப்பான்


"பேணுதல்" என்பது நேரடியாக, அதாவது, "கவனித்துக்கொள்ளுதல்" என்ற பொருளில், இங்கே  கொள்ளப்படக்கூடாது.

அதற்கு மாறாக, மகிழுதல், போற்றுதல், பெருமைப்படுதல் என்றெல்லாம் கருதப்பட வேண்டும் Smile

வேறு சொற்களில் சொன்னால், பொறாமைப்படுவதற்கு எதிர்ப்பதம் Smile

பிறனாக்கம் பேணாது அழுக்கறுப்பான்
பிறரது வளங்களைக் கண்டு மகிழ்ந்து போற்றாமல் பொறாமைப்படுபவன்

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான்
"எனக்கு நன்மைகள் வேண்டாம்" என்று சொல்லுபவனே!
("அறவழியில் செல்ல விரும்பாதவன்" என்றும் இதைச் சொல்லலாம்).

ஆக மொத்தம், பொறாமை என்பது அறத்துக்கு எதிரி!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 8 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Mar 24, 2014 5:53 pm

#164
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து


துன்பம், குற்றம், கேடு என்றெல்லாம் "ஏதம்" என்ற சொல்லுக்கு அகராதியில் பொருள் பார்க்கிறோம்.

வேறு சில குறள்களில் கண்டது போல "பாக்கு" என்பது தொழிற்பெயர் விகுதியாக இங்கு வருகிறது.

அப்படியாக, "ஏதம் படு பாக்கு" என்பது துன்பம், குற்றம், கேடு இவை வந்து படும் இழிவான நிலையைக் குறிக்கிறது.

இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து
(பொறாமை எண்ணத்தால்) பிழைகள் செய்தால், துன்பம், குற்றம், கேடு வந்து படும் இழிவான நிலைக்குள்ளாவோம் என்று அறிந்து

அழுக்காற்றின் அல்லவை செய்யார்
பொறாமை கொண்டு சரியில்லாத செயல்களைச் செய்ய மாட்டார்கள் (சான்றோர்கள்)!

ஒரு உரை சொல்லுகிறது "அறிவுடையோர்" பொறாமை கொண்டு நடக்க மாட்டார்கள் என்று Smile

சரி தான், "தனக்குத் தீங்கு வரவழைக்க வேண்டும்" என்ற முறையில் செயல்படுபவன் அறிவில்லாதவன் தானே?

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 8 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Mar 25, 2014 8:13 pm

#165
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன்பது


சால் என்பதற்கு "நிறைவு" என்று ஒரு பொருள் இருக்கிறது.

"போதும்" என்றும் அதைப்பெயர்க்கலாம் ( "நிறைந்து விட்டது, இனி ஊற்ற வேண்டாம்" என்பது போல...தெலுங்கு மொழியில் "சாலு" என்றால் "போதும்" என்று வரும், ஆந்திரம் செல்லுகையில் உணவகங்களில் பயன்படுத்திய ஒரு சொல் அது Smile )

இந்தக்குறளில் "அது சாலும்" என்பது அவ்விதத்தில் வருகிறது.

"அதுவே போதும், வேற ஒன்றும் தேவையில்லை" Smile

ஒன்னார் கேடீன்பது வழுக்காயும்
பகைவர்கள் கேடு தராமல் தவறி விட்டாலும்
(அல்லது, எதிரிகளிடமிருந்து தப்பித்து விட்டாலும்)

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும்
பொறாமை உள்ளவர்களுக்கு அது ஒன்றே போதும் (ஒழித்துக்கட்ட)!

பொறாமை, ஒருவனது உள்ளேயே இருக்கும் பெரிய பகை என்று பொருள்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 8 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Mar 26, 2014 3:57 pm

#166
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்


நேரடியாகப் புரிந்து கொள்ளத்தக்க எளிய குறள்!

அளபெடை மட்டும் தெரிந்திருந்து, கூடுதலாக இருக்கும் அந்த "ஊ"களைக் களைந்தால் போதும்.

அதாவது, இப்படி எழுதினால், கிட்டத்தட்ட உரைநடை போலப் புரிந்து விடும் :
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக்கெடும் Smile

கொடுப்பது அழுக்கறுப்பான்
பிறருக்குக் கொடுப்பதைப்பார்த்துப் பொறாமைப்படுபவன்

சுற்றம்
மற்றும் அவனது குடும்பம், உறவினர் எல்லோரும்

உடுப்பதும் உண்பதும் இன்றிக்கெடும்
உடையும் உணவும் இல்லாத அளவுக்கு வறுமையில் விழுவார்கள்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 8 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Mar 27, 2014 5:14 pm

#167
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்


போன குறள் படித்துப் புரிந்து கொள்ள அவ்வளவு எளியது என்றால் இந்தக்குறள் நேர் எதிர்!

கடினமான சொற்கள் மட்டுமல்ல, சில பண்பாட்டுக் குறியீடுகளும் தெரியாமல் புரிந்து கொள்ள இயலாது Smile

முதலில் சொற்களைப் பார்ப்போம்  -
அவ்வித்து - அவ்வியம் / ஔவியம் என்ற சொல்லில் இருந்து இது வருகிறது. (ஆத்திசூடியில் இருக்கும் "ஔவியம் பேசேல்" நினைவுக்கு வரலாம்).

பொறாமை, மனக்கோட்டம், வஞ்சகம் என்றெல்லாம் இதற்கு அகராதி பொருள் சொல்கிறது. "அவ்வித்து" என்பதை மொத்தத்தில் "வெறுத்து ஒதுக்கி" என்று இந்தக்குறளில் எடுத்துக்கொள்ள முடியும்.

செய்யவள் : செய்யாள் அல்லது செம்மை நிறமுடையவள், அதாவது திருமகள் (இலக்குமி / லக்ஷ்மி)

தவ்வை : தாய், தமக்கை, செவிலித்தாய் என்றெல்லாம் இதற்கு அகராதி பொருள் சொல்லுகிறது.
இந்த சூழமைவில், இது திருமகளின் தமக்கை (மூத்தாள் / அக்காள்) என்று உரையாசிரியர்கள் சொல்லுகிறார்கள்.

அங்கே தான் ஒரு பண்பாட்டுக்குறியீடு வருகிறது - சீதேவி & மூதேவி.

தங்கை திருமகள் (சீதேவி) செல்வத்தையும், அக்கா "தவ்வை" (மூதேவி) வறுமையையும் சுட்டிக்காட்டுகிறார்கள் என்ற ஒரு தொன்மை வழக்கு தெரிந்தால் தான் இந்தக்குறள் சரிவரப்புரியும்!

அழுக்காறு உடையானைச் செய்யவள் அவ்வித்து
பொறாமை உடையவனைச் செல்வத்திருமகள் பகைத்து நீங்கி

தவ்வையைக் காட்டி விடும்
வறுமை (மூதேவி) வரும்படியாகக் கைகாட்டி விடுவாள்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 8 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Mar 28, 2014 5:38 pm

#168
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்


"செற்று" என்றால் "கொல்லு / அழி" என்று பொருள்.

பேச்சு வழக்கில், "செத்து" என்று சொல்லுவதைக் கேட்டிருக்கிறோம். ("புல்லைச் செத்துடா").

இந்தக்குறளில் அழுக்காறு "பாவி" என்று ஒரு ஆளாக உருவகப்படுத்தப்படுவதை நாம் கவனிக்கலாம்.  "கூட இருந்து குழி பறிக்கும்" ஒரு தீய ஆளாக இங்கு பொறாமை வருகிறது.

அழுக்காறு என ஒரு பாவி
பொறாமை எனப்படும் ஒரு தீமை

திருச்செற்று
ஒருவரது செல்வத்தை எல்லாம் அழித்து

தீயுழி உய்த்து விடும்
தீய வழியிலும் கொண்டு போய் வைத்து விடும்!

செல்வம் போவது மட்டுமல்ல, தீய வாழ்க்கைக்குள்ளும் கொண்டு செல்லும் என்பது பெரிய ஒரு எச்சரிக்கை!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 8 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Mar 31, 2014 5:04 pm

#169
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்


அவ்வியம் என்றால் பொறாமை, மனக்கோட்டம் என்றெல்லாம் முன்னமே பார்த்தோம்.

இங்கே அப்படிப்பட்ட நெஞ்சத்தவன் (அதாவது, தீயவன் / நற்பண்புகள் இல்லாதவன்) செல்வந்தனாக இருக்கும் நிலைமை சுட்டிக்காட்டப்படுகிறது.

சொல்லப்போனால், தற்காலத்துக்கு இது மிகப்பொருத்தமான திருக்குறள்!

நீதி / நேர்மை இல்லாத சூழ்நிலையின் மீது நமது சிந்தனையை ஒருமுகப்படுத்தி, "ஏன் இப்படி?" என்று கேள்வி கேட்கச்செய்யும் குறள். (அதற்கான காரணம் என்ன என்று அது சொல்லாவிட்டாலும், அதன் மீது கவனம் ஈர்ப்பது மிகத்தேவை அல்லவா?)

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்
மனக்கோட்டம் உள்ளவனது செல்வச்செழிப்பும்

செவ்வியான் கேடும்
செம்மையானவனின் (பொருள் அளவில்) வறுமையான நிலைமையும்

நினைக்கப் படும்
ஆராயப்படும் / சிந்திக்கப்படும்! (அல்லது, ஆராயப்பட வேண்டிய ஒன்று!)

பெரும்பாலான மக்கள் இவ்வித சிந்தனைகள் இல்லாமல், தன்னலமான ஒரு வாழ்க்கை வண்டியை இன்று ஓட்டிக்கொண்டிருப்பது தெரிந்த ஒன்றே!

என்றாலும், வாழ்வின் ஏதாவது ஒரு தருணத்தில் இத்தகைய சிந்தனை வராத ஆள் நேர்மையானவன் அல்ல!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 8 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Apr 01, 2014 7:47 pm

#170
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்

எளிய நேரடியான இன்னொரு குறள். ஒன்றோடு மற்றதை வேறுபடுத்திக்காட்டும் இரண்டடிச் செய்யுள்கள் பல மொழிகளிலும்  (குறிப்பாக உருதுவில்) உள்ளதை முன்பே கவனித்திருக்கிறோம்.

அப்படிப்பட்ட இன்னுமொரு செய்யுள்.

அழுக்கற்று அகன்றாரும் இல்லை
பொறாமை என்ற தன்மையோடு உயர்ந்தவர்கள் யாருமில்லை (அகன்று = பெருகி, மேம்பட்டு, உயர்ந்து என்றெல்லாம் கொள்ளலாம்)

அஃது இல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்
அந்தத்தன்மை இல்லாதவர்கள் சிறப்பில்லாமல் போனதும் இல்லை! (பெருக்கம் - மேன்மை, சிறப்பு, வளர்ச்சி, உயர்வு)

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 8 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Apr 02, 2014 8:46 pm

#171
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்

(அறத்துப்பால், இல்லறவியல், வெஃகாமை)

வெஃகு என்பதற்கு மிகு விருப்பம் / பேராசை என்று பொருள் சொல்லும் அகராதி, வெஃகுதல் என்பதற்கு வேறொரு பொருளும் கூட்டுகிறது:

பிறர் பொருள் மீது அவா கொள்ளுதல் / கவர நினைத்தல் / இச்சித்தல் என்பது தான் அது.

அவ்விதத்தில், வெஃகாமை என்பது வெறுத்தல் / விரும்பாமை என்றல்ல, "பிறர் பொருள் மீது ஆசை கொள்ளாதிருத்தல் / கவர விரும்பாதிருத்தல்" என்றே இங்கு வருகிறது Smile

மறுபக்கத்தில், திருடாமை என்றல்ல, திருட விரும்பாமை / திருடும் பேராவல் இல்லாமை என்று இந்த அதிகாரத்துக்கு விளக்கம் தரலாம்.

மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு பண்பு! "பிறனில் விழையாமை" போலவே "பிறன்பொருள் விழையாமை" Smile

நடுவின்றி நன்பொருள் வெஃகின்
நேர்மை இல்லாமல் மற்றவரது நல்ல பொருட்களைக் கவர ஆசைப்பட்டால்

குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்
குடி கெடும். அதனுடன், பழி / குற்றமும் அப்போதே வந்து சேரும்!

ஆசையே துன்பத்துக்குக் காரணம் Smile

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 8 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Apr 03, 2014 7:00 pm

#172
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணுபவர்

சென்ற குறளைப்போன்றே, இதிலும் 'நடு' என்ற சொல் வருவதைக்காணலாம்.  

அதில் செய்தது போன்றே, நேர்மை என்று நான் எடுத்துக்கொள்கிறேன். (நடுவு நிலைமை, நீதி என்பவற்றோடு இது நேரடியான உறவுள்ளது என்ற விதத்தில்).

நடுவன்மை நாணுபவர்
நேர்மைக்கேடு செய்வதற்கு வெட்கப்படுபவர்கள் / விரும்பாதவர்கள்

படுபயன் வெஃகி
பிறன் பொருள் கவர்வதால் வரும் பலனுக்கு ஆசைப்பட்டு

பழிப்படுவ செய்யார்
தீமைக்குள் உள்ளாகும் செயலைச் செய்யமாட்டார்கள்!

பிறன் உடைமை கவர்வதால் பொருள் அளவில் பலன் வரலாம் என்பது கவனிக்கத்தக்கது.

ஆனால், நேர்மை உள்ளமுள்ளோர் அவ்வித ஆசை ஒருபோதும் கொள்ள மாட்டார்கள்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 8 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Apr 04, 2014 5:05 pm

#173
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டுபவர்

மற்றின்பம் Smile

"இது அல்லாத வேறொன்று" என்பதைச் சுருங்கச்சொல்ல உதவும் சொல் "மற்று"  (மாற்று) Smile

அவ்விதத்தில், எதிர்ச்சொல்லாகவும் எளிதில் பயன்படுகிறது, இந்தக்குறளில் உள்ளது போல.

இங்கே மற்றின்பம் என்பது சிற்றின்பத்துக்கு எதிரானது, பேரின்பம், நிலையான இன்பம், நிறைவான இன்பம் என்றெல்லாம் சொல்லலாம்.

மற்றின்பம் வேண்டுபவர்
உண்மையான இன்பம் வேண்டும் என்று ஆசைப்படுவோர்

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
(வெறும்) சிறுமையான இன்பத்துக்காக, நன்மையல்லாதவை செய்யத்தக்க, பேராசை கொள்ள மாட்டார்கள்!

சிற்றின்பம் - நிலையற்றது, அனுபவிக்கையில் நன்றாக இருந்தாலும் இறுதியில் தீங்கைத்தருவது, கொடுக்கும் விலைக்குரிய மதிப்பற்ற வரவு என்றெல்லாம் வரையறுக்கலாம் Smile

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 8 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Apr 07, 2014 9:11 pm

#174
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சியவர்

"யார் வெஃகுதல் செய்ய மாட்டார்கள்"  என்பதையே தொடர்ந்து வள்ளுவர் இன்னொரு குறளிலும் சொல்லுகிறார்.

"புன்மையில்" என்று வரும் அருஞ்சொல்லை "புன்மை+இல்" எனப்பிரித்து அறிய வேண்டும் Smile

அதாவது புன்மை இல்லாத, தெளிவான காட்சியுள்ளவர்கள்.

புன்மை = இழிவு, அழுக்கு, துன்பம், சிறுமை என்றெல்லாம் வருகிறது. மொத்தத்தில், தெளிவான பார்வை / நோக்கம் உள்ளவர்கள். (20/20 பார்வை என்று அமெரிக்க மொழியில் சொல்வது போல் Smile )

புலம் வென்ற புன்மையில் காட்சியவர்
ஐம்புலன்களையும் வென்ற (தன்னடக்கம் உள்ள), தெளிவான நோக்கு உள்ளவர்கள்

இலமென்று வெஃகுதல் செய்யார்
"நம்மிடத்தில் இல்லையே" என்று ஏங்கி, பிறர் பொருள் கவர விழைய மாட்டார்கள்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 8 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Apr 08, 2014 7:10 pm

#175
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்


இந்த சூழமைவில் "என்னாம்" என்பதன் பொருள்  "என்ன பயன்" என்பதாகும்.

"வெறிய" என்ற சொல், குடிவெறி என்பது போன்ற பயன்பாட்டில் வருகிறது. "அறிவு கெட்ட / மதியற்ற / உணர்வற்ற" என்றெல்லாம் கொள்ளலாம்.

அஃகி என்ற சொல், "நுண்ணிய" என்ற பொருளில் வருகிறது.

"அஃகி அகன்ற" என்பது இரு விதத்திலும் சிறப்புடைய அறிவு என்று பொருள் படுகிறது. (நுண்ணிய கூர்மை அதே நேரத்தில் விரிவான புரிதல்)

யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்
யாரிடத்திலாவது உள்ள பொருளைக் கவர ஆசைப்பட்டு, அறிவற்ற செயலைச்செய்தால்

அஃகி அகன்ற அறிவென்னாம்
(ஒருவரிடம்) பரந்து விரிந்த அதே நேரம் நுணுக்கமான அறிவிருந்து என்ன பயன்?

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 8 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Apr 09, 2014 6:23 pm

#176
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்


அருள் - கேட்பதற்கும் சொல்வதற்கும் இன்பமான ஒரு சொல்!
("அருள் புரிவாய் கருணைக்கடலே" என்ற பாடல் எங்கள் பள்ளியில் கடவுள் வாழ்த்தாகப் பாடப்பட்ட ஒன்று).

அதன் பொருளும் அதே போல இன்பமானது : கருணை, பரிவு, இரக்கம் , வரம் என்றெல்லாம் பொருட்சொல்லாகவும் அளித்தல் / கொடுத்தல் என்ற வினைச்சொல்லாகவும் வருகிறது.

இந்தக்குறளில், இறைவனது அருள் என்றும் கொள்ளலாம்.

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான்
அருள் பெற விரும்பி அதற்கான வாழ்க்கை வழியில் செல்லுபவன்

பொருள்வெஃகிப் பொல்லாத சூழ
பொருள் மீது பேராவல் கொண்டு பொல்லாதன செய்தால்

கெடும்
கெட்டு, அழிந்து போவான்!

ஆக, அருளும் கிடைக்காமல் பொருளும் கிடைக்காமல் அழிவே கிடைக்கும் என்று சுருக்கம்!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 8 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Apr 10, 2014 9:12 pm

#177
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற்கரிதாம் பயன்


இந்தக்குறளுக்கு மு.க. எழுதி இருக்கும் உரை வேடிக்கையானது.

என்ன விதத்தில்? அவர் "வேண்டற்க" என்ற சொல்லை மறந்து விட்டார் Laughing
(அரசியல்வாதி ஆச்சே, என்ன மாதிரி வந்தாலும் பொருளை "வேண்டற்க" என்று சொல்ல மாட்டார் இல்லையா?) Laughing

அவர் எழுதி இருப்பது:
மு.க wrote:
பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன் நலம் தருவதாக இருக்காது

சாலமன் பாப்பையா அதை விடவும் வேடிக்கை (குழப்ப மன்னர்):
சா.பா wrote:
பிறர் பொருளை அவர் விரும்பாதிருக்க, நாம் விரும்பிப் பெற்று அனுபவிக்கும்போது அதன் பயன் நல்லதாக இல்லை என்று அறிவதால், பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்ப வேண்டா.
சுற்றி வளைத்தல் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு! Laughing

மற்ற உரைகள் எல்லாம் தெளிவாக இருக்கின்றன.

வெஃகியாம் ஆக்கம் வேண்டற்க
பிறர் பொருள் கவர்ந்து  வரும் வளத்துக்கு ஆசைப்பட வேண்டாம்!

விளைவயின் மாண்டற்கரிதாம் பயன்
(ஏனென்றால், அதனால்) வரும் பயன் நல்ல விளைவாக இருக்காது!

app_engine

Posts : 10102
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 8 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 40 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 24 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum