Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

3 posters

Page 15 of 16 Previous  1 ... 9 ... 14, 15, 16  Next

Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 15 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu May 30, 2019 11:50 pm

#1291
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன் நெஞ்சே
நீ எமக்கு ஆகாதது

(காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடு புலத்தல் அதிகாரம்)

பலரும் நன்கு அறிந்த ஒரு திரைப்பாடலின் முதல் வரி இந்த அதிகாரத்தின் தலைப்புக்கு மிகப்பொருத்தம் என்பதால் அதை இங்கே குறிப்பிட்டே தீர வேண்டும்:

"நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா?" - இது தான் "நெஞ்சொடு புலத்தல்" என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

அதாவது, நெஞ்சொடு புலத்தல் = தன்னுடைய நெஞ்சோடு / மனதோடு வேறுபடுதல் (பிணங்குதல் / சண்டை போடுதல் / அதன் நிலையை எண்ணித்துன்புறுதல்).

தன்னையும் நெஞ்சையும் வேறு வேறாகப் பிரித்துக்கொள்வது ஒரு வகையான தன்னிரக்கம் / கழிவிரக்கம். (உண்மையில் தானே தான் தனது நெஞ்சும், இரண்டும் வெவ்வேறல்ல, என்றாலும் இப்படி ஒரு பிரிவினை நடத்தித் தன்னையே கவிதை மயமாகத் திட்டிக்கொள்வது.)

"அவனோடு எனக்குச் சினம் / வெறுப்பு - ஆனால், என் மனதுக்கோ அவனோடு கொள்ளை விருப்பம்" என்று சொல்லிக்கொண்டு தனது கையறு நிலையை (விரும்பவில்லை என்று நடிக்க முயன்றாலும் விரும்புகின்ற, தவிர்க்க இயலாத நிலையை) வெளிப்படுத்துதல்!

இந்த அதிகாரத்தின் பத்துப்பாடல்களும் "நினைக்கத்தெரிந்த மனமே" வகை என்று எதிர்பார்க்கலாம். படிக்கத்தொடங்குவோம்!

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும்
அவருடைய நெஞ்சு அவரை மட்டுமே விரும்புகிறது (அதாவது, என்னை விரும்பவில்லை) என்று கண்ட பிறகும்

நீ எமக்கு ஆகாதது எவன் நெஞ்சே
நீ எனக்குத் துணையாக அமையாதது ஏன் நெஞ்சே?
(நீ ஏன் அவர் பின்னாலே ஓடுகிறாய், அடங்கி இருந்து எனக்கு உதவ வேண்டாமா?)

காதலன் காதலியைக் கண்டுகொள்ளாமல் தவிர்த்தாலும் அவளால் அவனை மறக்க இயலவில்லை. மனது அவன் பின்னாலேயே ஓடுகிறது.

இந்த நிலையில் தன்னைக் கட்டுப்படுத்த இயலாத துன்பத்தை இப்படியாக வெளிக்காட்டுகிறாள். அதாவது, தன் நெஞ்சின் மீது பழியைப்போட்டுத் திட்டுவதன் வழியாக!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 15 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri May 31, 2019 5:40 pm

#1292
உறாஅதவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு


சென்ற குறளுக்கும் இதற்கும் பொருள் அளவில் பெரிய வேறுபாடு இல்லை ( "நம் மீது விருப்பம் இல்லாதவர் பின்னால் ஏன் ஓடுகிறாய் என் நெஞ்சே") - என்றாலும், அளபெடை எல்லாம் சேர்த்து (உறாஅ / செறாஅ) இனிமையாகச் சொல்லும் செய்யுள்!

உறாஅதவர்க்கண்ட கண்ணும்
(என் மீது) அன்பு காட்ட மாட்டார் என்று (தெளிவாகக்) கண்டபொழுதும்

அவரைச் செறாஅரெனச் சேறியென் நெஞ்சு
"அவர் என்னை வெறுக்க மாட்டார்" (என்று தவறான நம்பிக்கையில்) அவரிடமே செல்கிறாயே என் நெஞ்சே!

தன்னைத்தான் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதைக் கவிதை நயத்துடன் மீண்டும் சொல்லிப்புலம்புகிறாள்.

காதலர் மீதான "கட்டுப்படுத்த முடியாத அன்பு / ஆவல்" என்பது போன்று பொதுவாக வேறு பலவற்றுக்கும் உள்ளதாக நாம் காண முடியும்.

எடுத்துக்காட்டாக, நாம் ஒருவருடைய நட்பை அல்லது உறவை விரும்பலாம் - ஆனால் அவருக்கு நம் மீது பெரிய விருப்பம் இல்லாதிருக்கலாம்.  அல்லது அது நம்மால் அடைய முடியாத நிலை / வாங்க முடியாத பொருள் - இப்படி ஏதோ ஒன்றாக இருக்கலாம். "மறந்து விட்டு உன் வேலையைப்பார்" என்று எவ்வளவு சொன்னாலும் மனம் கேளாமல் அவர்களை அல்லது அவற்றைக்குறித்தே எண்ணிக்கொண்டிருப்பது அவ்வப்போது நடப்பது தான்.

இந்தப்பெண்ணைப் போன்று கவிதை பாடி அதை ஆற்ற முடியாதவர்கள் என்ன செய்யலாம்?

மனதைக்கட்டுப்படுத்த அவ்வளவு எளிய வழியொன்றும் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை Smile

ஆக உள்ள ஒரே வழி வேறு எங்காவது அதைச்செலுத்த முனைவதே - சிலருக்கு அது இசையாக இருக்கலாம், அல்லது கடினமான வேலை / பயணம் / பிறிதொரு நட்பு / உறவு...

இப்படியெல்லாம் உருப்படியான ஏதாவது மாற்று வழிகளை நாடுவது உடலுக்கும் வாழ்வுக்கும் நல்லது.

அப்படியல்லாமல், கள்ளையோ வேறு மயக்கம் வருத்தும் பொருட்களையோ நாடினால் வாழ்வு பாழாகும்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 15 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri May 31, 2019 10:06 pm

#1293
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்


"அற்ற குளத்தின் அறுநீர்ப்பறவை போல" என்ற பழமொழியும் உவமையும் நாம் பள்ளிக்காலம் முதலே கேட்டிருப்பது. அதாவது, செல்வம் இழந்து வறியவன் ஆனால் ஒருவனுக்கு இனிமேலும் கூட்டாளிகள் இருக்க மாட்டார்கள்.

இது இன்றுவரை இருக்கும் நடைமுறை உண்மை. "வாழ்ந்து கெட்டவர்கள்" என்று சொல்வார்களே, அப்படி! செல்வத்துக்காக அவர்களைச்சுற்றி வரும் போலி நண்பர்கள் எல்லாம் நழுவி ஓடி விடுவார்கள்.

அந்தச்சூழ்நிலை இங்கே உவமையாகிறது! "கெட்டார்க்கு நட்டார் இல்" என்று அழகாக எதுகையுடன் சொல்லி அதையே உவமையாக்குகிறார் வள்ளுவர்.

அது சரி, பெண் தனது நெஞ்சோடு புலப்பதற்கு இப்படி ஒரு உவமை ஏன்?

வாழ்ந்து கெட்டவர்களை  நண்பர்கள் விட்டு விட்டு ஓடி விடுவது போல, இவளுடைய நெஞ்சு இப்போது இவளை விட்டு விட்டு நழுவப்பார்க்கிறதாம். தலைவன் விட்டுப்பிரிந்து விட்டதால் இவள் நிலை கெட, நெஞ்சு விட்டு விட்டு அவன் பின்னால் போக முனைகிறது என்று அதோடு புலக்கிறாள்!

இதில் பொதிந்திருக்கும் இன்னொரு கருத்து இவளது செல்வமெல்லாம் காதலன் தான் என்பது! அவன் விட்டு விட்டுப்போனால் இவள் வாழ்வு செல்வமிழந்து கெடுகிறது!

நெஞ்சே நீ பெட்டாங்கு அவர்பின் செலல்
நெஞ்சே, நீ (என்னை விட்டு விட்டு) அவரை விரும்பிப்பின்னால்  ஓடுவது

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ
(செல்வம் இழந்து) கெட்டவர்களுக்கு நண்பர்கள் இருக்க மாட்டார்கள் என்பது போன்றிருக்கிறதே!

சிறப்பான கவிதை!  தன்னுடைய நெஞ்சு தனக்கிருந்த நட்பு என்று சொல்லிக்கொள்வதும் மிக அழகு!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 15 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Jun 05, 2019 1:54 pm

#1294
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று


"இனி உன்னோடு பேச மாட்டேன், போ" என்று சினந்து கொள்வது மிகவும் நெருக்கமானவர்களிடம் மட்டுமே செய்யத்தக்க ஒன்று.
(அல்லாதவரிடம் அப்படிச்சொன்னால், "சரி, நல்லது - ஒரு தொல்லை விட்டது" என்று மறந்து விடக்கூடும்).

இங்கே தனது நெஞ்சுடன் அப்படி சினந்து கொள்கிறாள் "உன்னை இனிச்சூழ மாட்டேன்" என்று. என்ன காரணம்?

செய்யுளின் பொருள் பார்ப்போம் வாருங்கள்:

இனி அன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே

நெஞ்சே, இனி யார் உன்னோடு இப்படிப்பட்டவை குறித்துக் கலந்து பேசப்போகிறார்கள்?
(உன்னோடு இது பற்றியெல்லாம் இனிமேல் நான் பேசமாட்டேன், போ)

துனி செய்து துவ்வாய் காண்மற்று
(அவரோடு முதலில்) ஊடல் செய்து அதன் பயனை (அதன் பின் கூடலில்) அடையலாம் என்று எண்ண மாட்டேன் என்கிறாயே?
(கண்ட உடனே பாய்ந்து விழுந்து கொஞ்ச நினைக்கிறாயே - அவரோடு சற்றுப்பிணங்கி அதன் பின் நுகர்ந்தால் என்ன)

பொய்யான சினம் என்பதை விளக்க வேண்டியதில்லை. இயலாமை என்பதும் வெளிப்படையாகவே தெரிகிறது (தன்நெஞ்சும் தானும் ஒன்றே).

ஆக மொத்தம், நெடு நாள் பிரிந்திருந்தவன் மீண்டும் வந்தவுடன் ஊடல் காட்டி, "ஏன் இவ்வளவு நாள் என்னைத் தவிக்க விட்டீர்கள்?" என்றெல்லாம் கொஞ்சம் வம்பு செய்து அதன் பின்னர் கூடி இன்பம் அடைவது என்பது எளிதல்ல. Embarassed

மனமும் உடலும் கூடல் ஆவலில் துள்ளும் போது அங்கே அறிவுக்கோ, ஆராய்ச்சிக்கோ இடமில்லை என்று புரிந்து கொள்கிறோம்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 15 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Jun 05, 2019 6:00 pm

#1295
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு


மீண்டும் அளபெடை - ஓசை நயத்துக்கும் வெண்பாவின் தளைக்கட்டுக்கும் வேண்டி இருந்திருக்கலாம். அல்லது, "அறாஅஅஅ அமை" என்று நீண்ட நெடுங்காலம் நீங்காமல் இருக்கும் தன்மையை வெளிக்காட்டச் செய்த அழகியலாகவும் இருக்கலாம்.

அழகான குறள் - காதலுக்கு மட்டுமல்ல, எல்லாச் செல்வங்களுக்கும் சிறப்பாகப் பொருந்தும் கருத்து இங்கே படிக்கிறோம். அதாவது, எப்போதும் பதற்றத்தில் இருக்கும் மானிட மனத்தின் இயல்பு.

அப்படிப்பட்ட "பதற்றமான நெஞ்சோடு" பெண் இங்கு சொல்லும் கருத்து நமது ஆழ்மனதிலும் பல நேரங்களில் வந்திருக்க வழியுண்டு.

பெறாஅமை அஞ்சும்
(காதலர் நெடுநாள் பிரிந்து சென்ற போது) பெற முடியவில்லையே என்று அஞ்சும்

பெறின்பிரிவு அஞ்சும்
(அவர் வந்த பொழுது, அதாவது,) பெற்றவுடன் (மீண்டும் போய் விடுவாரோ என்று) பிரிவுக்கு அஞ்சும்

அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு
(இவ்வாறாக) என் நெஞ்சத்தின் இடும்பை / துன்பம் நீங்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது

காதலன் / காதல் என்ற சூழலுக்கு வெளியில் சென்று பார்ப்போம் Smile  பொருட்செல்வம் இல்லாத வரை அதைப் பெறவேண்டும் என்று ஏங்குவதும் கிட்டியபின் "போய் விடுமோ" என்று அஞ்சுவதும் பொதுவாக நாம் காண்பது. Laughing

தற்போது நான் குடியிருக்கும் நகரில் பெரும்பாலும் செல்வம் மிகுந்தவர்கள் தான், கணக்களவில் குற்றங்கள் குறைவான இடம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. என்றாலும், கண்காணிப்புக்கென்று ஒளிப்படம் உள்ளிட்ட கருவிகள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்குத்தான் மக்களின் மனதில் பாதுகாப்புணர்வு இருக்கிறது.

பெறாமை அஞ்சுவோர் பல இடங்களில், பெறின் பிரிவு அஞ்சுவோர் சில இடங்களில்!

அஞ்சாதோர் எங்குமில்லை (அஞ்சா நெஞ்சர் என்று சொல்லிக்கொள்வோர் உட்பட)  Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 15 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jun 06, 2019 2:00 am

#1296
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு


தனியே - தினியே என்ற எதுகை உட்பட எல்லாமே நம்முடைய நாளில் வரும் திரைப்பாடல்கள் போன்று மிக எளிமையாக இருக்கின்ற பாடல். பொருளும் அவ்வளவு எளிது.
(சொல்லப்போனால், 'தனிமையிலே இனிமை காண முடியுமா' போன்ற திரைப்பாடல்கள் இதைக்காட்டிலும் கூடுதல் உவமை / கவித்துவம் மற்றும் இசையழகும் உள்ளவை எனலாம்).

அதிகாரத்துக்குப் பத்துக்குறள் வேண்டுமே என்று கணக்குக்கு எழுதப்பட்டது போன்றிருக்கிறது Sad

அவர் பிரிந்து போய் விட்டார், இவள் தனிமையில் தன் நெஞ்சோடு வழக்காடுகிறாள்.

தனியே இருந்து நினைத்தக்கால்

தனியாக இருந்து அவரை (பிரிவுக்கொடுமையை) நினைத்த போது

என்னைத் தினிய இருந்ததென் நெஞ்சு
என் நெஞ்சு என்னையே தின்று விடுவது போல் துன்பம் தந்தது

மருத்துவம் சொல்கிற படி நெஞ்சு உண்மையிலேயே "உடைகிற" நோய்க்குறியீடு பெண்களுக்கு உள்ளதாம்.(அவர்களுக்கு மிக நெருக்கமானவர்களின் இறப்பின் போது அல்லது வஞ்சிப்பின் போது  இவ்வாறு நடந்திருக்கிறது என்று வலை சொல்லுகிறது. அரிதாகச் சிலர் இறந்து போனதும் உண்டு).

இவளுக்கு அப்படி நேர்ந்து விடாதிருக்க எண்ணுவோம்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 15 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jun 06, 2019 4:38 pm

#1297
நாணும் மறந்தேன் அவர் மறக்கல்லா என்
மாணா மடநெஞ்சிற் பட்டு


காமம் பொங்கும் நெஞ்சின் தத்தளிப்பினால் நாணம் மறந்த நிலை குறித்துப் பெண் புலம்பும் கவிதை.

சிறப்பில்லாத நெஞ்சு, மட நெஞ்சு என்றெல்லாம் திட்டுகிறாள் - அதாவது, தன்னைத்தானே திட்டிக்கொள்கிறாள்.

நாணம் இழப்பது என்பது அவ்வளவு கொடுமையாகக் கருத்தப்பட்டிருந்த காலம், சமுதாயம் என்பதைக் கருத்தில் கொண்டு படிக்க வேண்டும். அதெல்லாம் தேவையற்ற பண்பு என்பதாக எண்ணிக்கொண்டிருக்கும் புதிய தலைமுறைகள் இதைப்புரிந்து கொள்வது கடினமே!

அவர் மறக்கல்லா
அவரை மறக்க முடியாத
(ஏன் அவரை மறக்க வேண்டும்? பிரிந்து போய் விட்டிருப்பார்)

என் மாணா மடநெஞ்சிற் பட்டு
எனது மாண்பற்ற (சிறப்பில்லாத) மட (முட்டாள்) நெஞ்சோடு கூட்டுச்சேர்ந்து

நாணும் மறந்தேன்
நாணத்தையும் மறந்து விட்டேனே

"நாணம் மறந்தது" என்பது ஊருக்கெல்லாம் தெரிந்த ஒன்றாக இருக்கத்தேவையில்லை. அதாவது, இந்தச்சூழலில். அவனை நினைத்துக்கொண்டிருப்பதை அவள் எல்லோரிடமும் சொல்லித்திரிகிறாள் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.

முன்பு சில பாடல்களில் அப்படி இருந்திருக்கலாம் - தோழியோடு பேசுவது போன்ற சூழலில்.

ஆனால், இங்கோ "நெஞ்சொடு புலத்தல்" தானே? தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கும் போதே அவனை மறக்க இயலாத நிலை "நாணங்கெட்டது" என்று உணருவது வழியே அவள் எவ்வளவு மென்மையான உணர்வுகள் கொண்டவள் என்று காண்கிறோம். (தொட்டால் சிணுங்கி என்றும் வைத்துக்கொள்ளலாம்)

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 15 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jun 06, 2019 7:49 pm

#1298
எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு


மற்றவர்களுடைய குறைகளை நினைத்து இகழாமல், நன்மைகளை மட்டுமே எண்ணுவது நல்ல பண்பு தான். என்றாலும், காதலன் குறைகளை எண்ணி இகழ்ந்தால் "தனக்கே இழிவு" என்று பெண் எண்ணுவது எப்படிப்பட்ட உளவியல்? அதுவும் அவன் என்ன எண்ணுகிறான் / செய்கிறான் என்றெல்லாம் சொல்லப்படாத சூழலில்!

ஒரு வேளை இது நடைமுறை உண்மையாக இருக்கலாம், என்றாலும் குறள் எழுதிய காலத்துச் சமுதாயத்தின் உளவியல் அப்படிப்பட்டதோ என்ற எண்ணமும் தோன்றுகிறது!

எடுத்துக்காட்டாக, இந்த முழு அதிகாரமுமே பெண் நெஞ்சோடு புலப்பதாக இருக்கிறதே ஒழிய ஆணுக்கு ஒரு குறள் கூட இல்லை - அவனுக்கு நெஞ்சே கிடையாதா, அல்லது அங்கே பதற்றமே இருக்காதா? அவ்விதத்தில் நோக்கினால், தமிழ்த்திரைப்படங்களே தேவலாம் போலிருக்கிறது. (தாடியெல்லாம் வைத்துக்கொண்டு புலம்பிப் பாடித்தள்ளுவார்கள் Laughing )

வேறு சொற்களில் சொன்னால் இப்படி :

- பெண் அவளது காதலனின் குறைகளை மனதில் எண்ணி இகழ்வது கூடச் செய்யக்கூடாது - அது அவளுக்கே இழிவு

- பெண் மனது அவளுக்கு அடங்காமல் அவன் பின்னேயே போய்க்கொண்டிருக்கும், அவள் அதைத் தடுக்கமுடியாமல் போராடிக்கொண்டே இருக்க வேண்டும்

- அல்லது, "பெண் என்றால் இப்படித்தான் எண்ண வேண்டும்" என்ற சமுதாய அழுத்தம்

-இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஆணுக்கு இல்லை, அவன் மனதின் கடிவாளம் மிகச்சிறப்பு
rotfl

இப்படிப்பட்ட கண்ணோட்டத்தில் படித்தால், இந்த அதிகாரம் வள்ளுவர் காலத்து ஆணாதிக்க உளவியல் எப்படி இருந்தது என்பது குறித்து எதிர்மறையாகவே நமக்குச்சொல்லுகிறது.

சரி, பொருள் படித்து விட்டுப்போவோம்!

எள்ளின் இளிவாம் என்று எண்ணி
(அவர் குறைகளை எண்ணி ) இகழ்ந்தால் நமக்கு இழிவு என்று நினைத்து

அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு
என்னுடைய உயிர்க்காதல் நெஞ்சு அவரது திறமைகளை / நன்மைகளை மட்டுமே எண்ணிக்கொண்டிருக்கும்
(உயிரான காதல் என்று உருவகமாக எடுத்துக்கொள்ளலாம். அல்லது, சில உரைகள் சொல்லுவது போல், உயிர் மீது காதல் கொண்ட நெஞ்சு என்றும் சொல்லலாம்)!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 15 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jun 06, 2019 8:30 pm

#1299
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி


இடுக்கண் களைவது தான் துணை / நட்பு என்று பலமுறை படித்திருக்கிறோம், அதுவே நடைமுறை உண்மையும் கூட.

இங்கோ, மிகச்சிறந்த நட்பாக இவளுக்கு இருக்க வேண்டிய இவளது நெஞ்சு, துன்பநேரத்தில் கைவிட்டு விடுகிறது. இந்நிலையில், "எனக்கு வேறு என்ன துணை" என்று அழுகின்ற அவலம்.

இங்கே குறிப்பாகத் துன்பம் காதலன் பிரிந்து சென்றது எனப்புரிந்து கொள்ளலாம். என்றாலும், இந்தக்குறளைப் பொதுவாக எந்தச்சூழலுக்கும் பொருத்த முடியும்.

அதாவது, துன்பத்தில் ஒருவர் மனம் தளர்ந்து போனால் அவருக்கு வேறு துணையொன்றும் உதவ முடியாது!

தாமுடைய நெஞ்சந்துணையல் வழி

(நீக்குவதற்கான) வழியைக் கொடுக்க தம்முடைய நெஞ்சமே துணையாக இல்லாத போது

துன்பத்திற்கு யாரே துணையாவார்
துன்ப நிலையில் எனக்கு வேறு யார் துணையாவார்?

பொருளுக்கு அப்பால், இந்தக்குறளில் என்னை மிகவும் ஈர்த்தது "துன்பத்திற்கு யாரே துணையாவார்" என்ற சொற்றொடர்!

பல நூறு ஆண்டுகளுக்கு முன் கவிதையாக எழுதப்பட்டிருந்தாலும், இன்றும் நாம் அன்றாடம் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் மொழி! (கிட்டத்தட்ட). பழைய மொழிகள் பலவற்றில் இது தமிழுக்கும் தமிழருக்கும் உள்ள ஒரு பெருஞ்சிறப்பு என்றே கருதுகிறேன்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்தும் இன்றும் அதே போன்ற பயன்பாட்டில் இளமையாக இருக்கும் அழகான மொழி தமிழ் என்பதற்கு இந்த ஒரு குறளே சிறப்பான சான்று!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 15 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jun 06, 2019 9:18 pm

#1300
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி

"தஞ்சம்" என்ற சொல்லைக்கேட்டவுடனே நமக்கு மனதில் வரும் பொருள் "அடைக்கலம், துணை, பாதுகாப்பு"  என்பது தான். ஆனால், இங்கே அப்படியல்ல பொருள் - "எளிது, கடினமன்று" என்ற பொருளில் வருகிறது.

மற்றபடி தஞ்சமாக(அதாவது, எளிதாக)ப் படித்துப்புரிந்து கொள்ளத்தக்க பாட்டுத்தான் Smile

தாமுடைய நெஞ்சம் தமரல் வழி
தன்னுடைய நெஞ்சமே தமர் (சுற்றத்தார் / உறவினர்) அல்லாத நிலையில்

ஏதிலார் தமரல்லர் தஞ்சம்

மற்றவர்கள் தமக்குச் சுற்றமாக / உறவாக (அல்லது துணையாக) இல்லாமல் போவது எளிது தானே?

எனக்கு உள்ளேயே இருக்கிற என் நெஞ்சு என் கூட்டு இல்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை! தனக்குள் தானே பிளவு பட்டிருக்கும் நிலையில் இந்தப்பெண் (அல்லது ஆண்) இங்கே இருக்கும் நிலை காண்கிறோம்.

மனமொடிந்து / வேறுபட்டுப் போய் விட்டால் வெளியில் இருந்து யாரும் நமக்கு உதவ முடியாது என்ற பெரிய கருத்தையும் இங்கே நாம் படிக்கிறோம் Smile

நம் நெஞ்சு நமது கடிவாளத்தில் இல்லையென்றால், வேறு என்ன முயன்றும் பலனில்லை என்பது வானத்தில் பறப்பதாக நினைத்துக்கொண்டிருப்போரைத் தரையில் அழுத்தமாக அடித்து நிறுத்தும் உண்மை!

வேறுபட்ட / எதிரெதிரான இரண்டு கருத்துக்களே மனதில் வரக்கூடாது என்பதல்ல இதன் பொருள்.

வரலாம், ஆராயலாம், எண்ணலாம் - ஆனால், அலைபாய விடாமல் கட்டுப்பாட்டில் வைத்து, சமநிலையோடு செய்ய வேண்டும்! மேலும், இறுதி முடிவை அறிவின் அடிப்படையில் எடுப்பதில் தான் முன்னேற்றம் / வாழ்வில் தோற்காமல் இருப்பது எல்லாம் அடங்கி இருக்கிறது Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 15 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jun 06, 2019 9:53 pm

குறள் இன்பம் 1300 ஆச்சுSmile

எளிய தமிழில் படிக்கவும் சிறிய அளவில் ஆராயவும் pdf வடிவில் இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம்:
http://www.mediafire.com/file/y9qeggdv4e95u5n/kural_inbam_1300.pdf

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 15 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Sat Jun 08, 2019 2:45 am

#1301
புல்லாதிரா அப்புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது

(காமத்துப்பால்,  கற்பியல், புலவி அதிகாரம்)

சென்ற அதிகாரத்தில் தன் நெஞ்சோடு புலத்து முடித்தாகி விட்டது. இனிமேல் நேரடியாகக் காதலனோடு புலப்பது தான் போலிருக்கிறது.

எனவே, புலவி (ஊடல்/ பிணங்குதல்) என்ற அதிகாரம்.

முதல் குறள் தோழி தரும் அறிவுரை என்பதாகப் பழைய உரையாசிரியர்கள் சொல்லுகிறார்கள். "ரொம்ப நாள் கழித்து வருகிறார் என்று ஓடிப்போய்த்தழுவிக்கொள்ளாதே - கொஞ்சம் ஊடல் காட்டு, அவர் துன்புறும் வேடிக்கையைக் கொஞ்சம் பார்ப்போம்" என்று சொல்வதாக வருகிறது.

தோழித்தொல்லை Smile அவளுக்குப்பொழுது போக இவர்கள் ரெண்டு பெரும் கிடைத்திருக்கிறார்கள். சீண்டல், உறுத்தல் எல்லாம் இருந்தால் தானே நன்றாக இருக்கும் என்று இப்படிப்பட்ட ஒரு அறிவுரை சொல்வது என்ன கணக்கில் வரும் என்று தெரியவில்லை!

அவர் உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது
சற்று நேரத்துக்கு அவர் படுகின்ற அல்லலை / துன்பத்தை நாம் வேடிக்கை பார்ப்போமா?

புல்லாதிரா அப்புலத்தை
(அதற்கு நீ அவரை விரைவாகச் சென்று) தழுவாமல் கொஞ்சம் பிணங்கு!

இயக்குநர் நடிக்கச் சொல்லிக்கொடுப்பது போன்று இங்கே உணர்ச்சி மேலீட்டில் இருக்கும் பெண்ணுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தோழி (அல்லது வீட்டில் உள்ளோர்) சொல்லிக்கொடுப்பதாக வருகிறது.

நாம் இதற்கு முன் படித்த அதிகாரத்தில் அவளது நெஞ்சு கட்டிழந்து இருப்பதும், நாணமெல்லாம் விட்டுப்போய் எப்போது காண்பேன், கூடுவேன் என்ற மனநிலையில் அவள் தவிப்பதும் சுற்றி உள்ளோர் எளிதில் அறியத்தக்கதே. அந்நிலையில், அவளது மதிப்புக்குறையாமல் காப்பதற்கு இவ்விதமாக "அளவான" புலவி ஒரு விதத்தில் நன்மை செய்யும் என்பதற்காக இந்த ஏற்பாடு Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 15 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Sun Jun 09, 2019 6:28 am

#1302
உப்பமைந்தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்


உப்புப்போட்டுச் சாப்பிடுவோரெல்லாம் காதலில் சண்டை போட வேண்டுமாம் Smile

உணவுக்கு உப்புப்போட்டுச் சுவை கூட்டுவது போன்று அளவாக ஊடல் காதலில் வேண்டும் என்று உவமை சொல்லும் கவிதை.

மிகச்சிறப்பு!

புலவி உப்பமைந்தற்றால்
புலவி (ஊடல்) - உணவுக்கு உப்பு எப்படியோ அதே அளவில் காதலில் இருக்க வேண்டும்
(சிறிய பிணங்கல். பொய்யான சினம் போன்ற ஊடல் சிறிய பதற்றத்தை உண்டாக்கும், அது காதலுக்குச் சுவை கூட்டும் என்பது பொதுவான கருத்து, எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்பதில்லை)

நீள விடல்
ஆனால், அது நீண்டு போகும் படி விடுதல்
(கொஞ்ச நேரத்துக்கு மேல் ஊடல் நாடகம் நடத்துவது ஆபத்து, அப்படிச்செய்தால்)

அதுசிறிது மிக்கற்றால்
உணவில் உப்புக்கூடியது போல ஆகி விடும்!
(சுவை கெட்டுப்பாழ் ஆகி விடும்)

குழம்பு / கறி போன்றவற்றில் உப்புக்கூடி விட்டால் தாங்க முடியாது என்பது உண்மை. தவறுதலாக அப்படி நேர்ந்து விட்டால், அதைச் சரி செய்ய உருளைக்கிழங்கு வெட்டிப்போடுவது - அப்படி, இப்படி - என்று சமையலறையில் மெனக்கெடுவதைச் சில நேரங்களில் பார்த்திருக்கிறேன் Smile

காதலுக்கு ஊடல் சிறிய அளவில் சுவை கூட்டலாம் - ஆனால், அதை நீட்டிக்கொண்டு போனால் துன்பம் வரும், வெறுப்பு ஏற்படலாம் - பிரிவுத்துயர் கூட நேரிடலாம்.

வேண்டாமே!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 15 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Jun 10, 2019 6:49 pm

#1303
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்


இது வரை கண்டிருக்கும் பாடல்களிலிருந்து சற்றே மாறுபட்ட குரலில் - அதாவது, காதலனுக்கு அறிவுரை சொல்லும் மொழி இங்கே தென்படுகிறது. அழுது புலம்பிக்கொண்டிருக்கும் மொழிக்கு நடுவே இது சற்றே புதிது Smile

இந்த அறிவுரை பெண் குரலோ அல்லது தோழியோ அல்லது வேறு யாருமோ சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். ஏன், காதலனின் மனதில் தோன்றும் நியாய உணர்வாகக் கூட நாம் கற்பித்துக்கொள்ளலாம்.

ஆக மொத்தம், இது வள்ளுவர் ஆணுக்குச் சொல்லும் அறிவுரை என்று பொருள்

தம்மைப் புலந்தாரை
தம்மோடு ஊடல் கொண்டிருப்போரை (காதலியை)

புல்லா விடல்
(அமைதிப்படுத்தி, அன்பு செலுத்திக்) கட்டித்தழுவாமல் இருப்பது

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால்
(ஏற்கனவே) துன்பத்தில் நொந்து போயிருப்பவருக்கு இன்னும் கூடுதல் துன்பநோய் தருவதற்கு ஒப்பானது

வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது கொடியவர்கள் செயல். அப்படிப்பட்ட கொடுமையான பழிச்செயலை இந்தப்பெண்ணுக்கு நீ செய்யாதே என்று அறிவுறுத்தும் குறள்.

சொல்லப்போனால், அவளுக்கு இப்போது இருக்கும் துன்ப நிலை (அதாவது ஊடலுக்கான காரணம்) நெடுநாள் இவன் விட்டுப் பிரிந்திருந்தது தான். அத்தகைய சூழலில், அவளை ஆற்றி, அமைதிப்படுத்திக் கட்டித்தழுவிக் கொஞ்ச வேண்டியது இவனது பொறுப்பு.

இல்லாவிட்டால், கூடுதல் துன்பம் செய்யும் கொடியவன் என்ற பழிக்கு ஆளாவான்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 15 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Jun 10, 2019 7:45 pm

#1304
ஊடியவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந்தற்று


சென்ற பாடலின் அதே கருத்து & அறிவுரை - இங்கே ஒரு உவமையுடன் அழகு படுத்தப்படுகிறது.

வள்ளி = கொடி, இதற்கு முன்னர் பார்த்திருக்கிறோமா என்று நினைவில்லை. பொதுவாக இந்தச்சொல் கேட்டவுடன் பெண்ணின் பெயராகவோ அல்லது வள்ளிக்கிழங்கோ தான் நினைவுக்கு வரும் Smile என்றாலும், தமிழ் மட்டுமல்ல பிற தென்னிந்திய மொழிகளிலும் இது படரும் கொடிக்குப் பயன்படுத்தப்படும் சொல் தான்.

நீரின்றி வாடி நிற்கும் வள்ளி இங்கே உவமை. அதற்கு நீர் கொடுத்து உயிர்ப்பிக்காமல் அடியிலேயே வெட்டிப்போடுவது எப்பேர்ப்பட்ட கொடுஞ்செயலோ அது போன்றது தான் ஊடி நிற்கும் பெண்ணுக்கு அன்பு தராதது என்று சொல்கிறது இந்தச்செய்யுள்.

ஊடியவரை உணராமை
(பிரிவு வருத்தத்தினால் ஏற்கனவே) ஊடி இருப்பவரின் மனதை உணர்ந்து அன்பு செலுத்தாமல் இருத்தல்

வாடிய வள்ளி முதலரிந்தற்று
வாடிப்போயிருக்கும் கொடியை அடியோடு அறுப்பது போன்ற செயலாகும்

பற்றிக்கொள்ள இடமில்லாமல் ஆடிய முல்லைக்கொடிக்குத் தன் தேரைக்கொடுத்தார் என்று பாரி வள்ளலைத் தமிழர் போற்றுவது தெரிந்த ஒன்று. (வள்ளி என்பது வள்ளலுக்குப் பெண் பால் என்பதையும் எண்ணுவோம்).

அப்படிப்பட்ட நாட்டில், வாடும் கொடியை அடியோடு அறுப்பது என்பது நம் நெஞ்சை அறுக்கும் துன்பம் உண்டாக்கத்தக்க உவமை.

ஊடி நிற்கும் பெண்ணுக்கு அன்பு செலுத்தாமையை உணர்த்த மிகச்சிறந்த காட்சி இது என்பதில் ஐயமில்லை! ஊடிய - வாடிய என்று எதுகை ஓசை நயம் வழக்கம் போல்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 15 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Jun 10, 2019 8:35 pm

#1305
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து

ஏஎர் (அளபெடை, ஏர் என்ற சொல்) - அழகு, தோற்றப்பொலிவு, எழுச்சி - என்றெல்லாம் பொருள் தருகிற சொல். இங்கே, அழகு (சிறப்பு) என்ற பொருளில் வருகிறது.

அதாவது, "நலத்தகை நல்லவர்க்கு" (நன்மைகள் / நற்பண்புகள் கொண்ட நல்லவர்க்கு) எது அழகு என்று படிக்கிறோம்.

உரையாசிரியர்கள் நடுவே "நலத்தகை நல்லவர்" யார் என்பதில் சற்றுக்குழப்பம் இருப்பது போல் தோன்றுகிறது. பெரும்பாலோர், இது நல்ல பண்புகள் உடைய காதலன் / கணவன் என்ற முடிவுக்கு வருகிறார்கள். என்றாலும், சிலர் இதைப் பெண்ணுக்கு (அதுவம் பரத்தையர் என்ற பொருளில்) பொழிப்புரை எழுதுவதும் இருக்கிறது. இப்படியாக, இங்கே சிறிய குழப்பம் நிலவுகிறது.

"பூ அன்ன கண்ணார்" என்ற பகுதியை ஒப்பிட்டு இதைப்புரிந்து கொள்ள முயல்வோம். பூப்போன்ற கண்கள் உடையவர்கள் பெண்கள் என்பது தானே பொதுப்புரிதல். (மட்டுமல்ல, பூ - பூவை -மலர் என்றெல்லாம் தமிழில் பொதுவாகப் பெண்களே அழைக்கப்படுகிறார்கள்.)

ஆகையால், இதில் வரும்  "பூ அன்ன கண்ணார்" என்பது பெண்ணைக்குறிப்பதாக எடுத்துக்கொண்டால், மறுபக்கம் நிற்கும் "நலத்தகை நல்லார்" = ஆண், அதாவது காதலன், என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மற்றபடி, பொருள் இதற்கு முந்தைய குறள்கள் போன்றது தான் - பெரிய மாற்றமில்லை. "ஊடல் வேண்டும், அதை மாற்றுவதில் தான் இனிமை இருக்கிறது" - என்பன.

பூஅன்ன கண்ணார் அகத்து புலத்தகை
பூப்போன்ற கண்கள் உடையவர் உள்ளே தோன்றும் ஊடல்

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர்
நற்பண்புகள் கொண்ட நல்லவனுக்கு அழகு தான்

பெண்ணுக்குள் ஊடல் தோன்றுவது இவனுக்கு எப்படி ஐயா அழகு?  

ரெண்டு விளக்கங்கள் தோன்றுகிறது.

1. நேரடியான பொருள் - இவன் தனது நற்பண்புகளைக் காட்டி, அவளது ஊடலை நீக்கி அன்பு காட்ட இங்கே  வாய்ப்பு - அது இவனுக்கு அழகு சேர்க்கும்.

2. சற்றே சுற்றி வளைத்த பொருள் - இவன் பிரிந்து சற்று நாளாகித் திரும்ப வருகிறான். அப்போது சற்றும் ஊடல் காட்டாமல் அந்தப்பூங்கண்ணி இருந்தால் அவள் படு முட்டாள் என்றாகி விடும்.

அப்பேர்ப்பட்ட ஒரு அறிவற்ற பெண்ணைத் தனது காதலி / மனைவியாகக் கொண்டிருப்பது - ஒருவன் எவ்வளவு நல்லவன் என்றாலும் - அழகு கிடையாது என்கிறாரோ?

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 15 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Jun 11, 2019 9:42 pm

#1306
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று


எத்தனை முறை படித்தாலும் மீண்டும் மீண்டும் "அற்று = போல" என்று நினைவு படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது Smile
(நடைமுறையில் அவ்விதத்தில் நாம் பயன்படுத்துவதில்லை என்பதால்).

இங்கே "கனியும் கருக்காயும் போல (சுவையற்று) இருக்கும் காமம்" என்கிறார். அதாவது, ஊடல் இல்லாத போது!

புரியலையே, இதற்கு என்ன பொருள்?  இங்கு கண்டிப்பாக நமக்கு உரையாசிரியர்கள் தேவை. ஏனென்றால், நமக்குப் பொதுவாகப் புரிந்த பொருள் "கனி" என்றால் சுவையானது, விரும்பத்தக்கது என்பது தானே? ('இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக்காய் கவர்ந்தற்று' என்று சொன்னது இதே வள்ளுவர் தான்).

ஆனால், அதே சொல்லான "கனி" இங்கே விரும்பப்படாத ஒன்றாக வருகிறது. அதனால் தான் குழப்பம்.

உரையாசிரியர்கள் கருத்துப்படி, இங்கே வரும் கனி என்பது ரொம்பவும் முதிர்ந்து, அழுகிக் "கொழக்கொழ" என்று ஆகிப்போன பழம். அதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஊடல் இல்லாத காதல் அப்படித்தான், "கொழக்கொழ"வென்று சுவையற்றுப் போகுமாம்.

அதே போன்று தான், கருக்காய் - என்றால் பிஞ்சு - அது கரிக்கும், கசக்கும், புளிக்கும் - ஆக மொத்தம்  சுவைக்காது / தின்ன முடியாது. (பச்சை வாழைக்காய் கடித்துப்பார்த்தவர்கள் இதை எளிதில் புரிந்து கொள்வர்). ஆதலால், ஊடல் இல்லாத காதல் ஒன்று வெறும் பிஞ்சு அல்லது அழுகிப்போன பழம்.

இங்கே ஊடலுக்குத் துனி என்றும் புலவி என்றும் இரு சொற்கள்.

இவற்றை இப்படி விளக்குகிறார்கள் : தொடக்கத்தில் ஊடல், அதுவே சற்று நீண்டு கொண்டிருந்தால் புலவி, இன்னும் கூடுதலாகி வெறுத்துப்போனால் துனி என்கிறார்கள். சினத்தின் விதவிதமான வடிவங்கள்!

துனியும் புலவியும் இல்லாயின்
நெடிதும் சிறிதுமான ஊடல் இல்லாவிட்டால்

காமம்  கனியும் கருக்காயும் அற்று
காதல் முதிர்ந்து குழைந்து போன பழத்தையோ அல்லது முதிராத பிஞ்சையோ போன்று சுவையற்று இருக்கும்

சுவைக்க உகந்த  பழம் போன்ற காதலுக்கு ஊடல் கட்டாயத்தேவை என்கிறார் வள்ளுவர்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 15 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Jun 11, 2019 10:26 pm

#1307
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவதன்றுகொல் என்று


ஒரு வழியாக, ஊடல் என்பது கட்டாயத்தேவை, அதன் வழியே தான் காதல் இன்பம் / சுவை பெற முடியும் என்று  நிறுவி விட்டார்.

சரி, அதோடு விடுவாரா - மாட்டார். இப்போது ஊடலில் என்ன துன்பம் என்று ஆராய்ச்சி rotfl

"ஊடல் செய்து நேரம் செல்வதால், கூடல் நீளம் குறைந்து விடுமே" என்று புதிய ஒரு துன்பத்தை இந்தக்குறளில் அறிமுகம் செய்கிறார் - எப்படியெல்லாம் கவலைப்படுவது என்று கற்றுக்கொடுக்கிறார் புலவர்.

நாம் முன்னமேயே பலமுறை படித்திருப்பது போல், கவலையில்லாதோர் யாருமில்லை.

இதோ, காதலன் திரும்பி வந்து விட்டான், காதலி தழுவிக்கலக்க ஆயத்தமாக இருக்கிறாள். இதிலே சுவையைக்கூட்டுவதற்குக் கொஞ்சம் சிணுங்கல் / பிணக்கம் என்பவைகளும் இருக்கின்றன.

இப்படி வேண்டிய எல்லாமே  உள்ள போது, சுவைத்து இன்புறாமல் இதிலும் எப்படியாவது ஒரு துன்பத்தைக் கண்டுபிடித்துக் கவலைப்பட வேண்டும் என்று சொல்லுகிறது இந்தப்பாடல் Smile

புணர்வது நீடுவதன்றுகொல் என்று
புணர்ந்து மகிழ்வது நீளாமல் போய் விடுமோ (நீட்டாதோ, நீளம் குறைந்து விடுமோ, நேரம் போதாதோ) என்று

ஊடலின் உண்டாங்கோர் துன்பம்
இந்த ஊடலில் (அல்லது ஊடல் இன்பத்தில்) ஒரு துன்பமும் இருக்கத்தான் செய்கிறது

ஊடல் சுவையும் வேண்டும் ஆனால் அதற்கு நேரம் செலவழித்தால் கூடல் இன்பத்துக்கு நேரம் போதாது என்றும் கவலை. மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை. (ஆங்கிலத்தில், "கேக் இருக்கவும் வேணும், தின்னவும் வேணும்")

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 15 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Jun 12, 2019 5:05 pm

#1308
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி


முட்டாள்தனமாக ஊடல் செய்தல் கூடாது என்று பெண்ணுக்கு அறிவுறுத்தும் (அல்லது பெண் தனக்குத்தானே புலம்பிக்கொள்ளும்) பாடல்.

ஊடல் வேண்டும் தான், அது இருந்தால் காதல் சுவை கூடும் தான் - ஆனால், "இவள் ஊடல் செய்கிறாள், ஐயோ பாவம்" என்று உணர்ந்து அவளைத் தழுவி மாற்றி அன்பு செய்ய ஒரு காதலன் இருந்தால் தான் பயன்.

அவன் அப்படி உணரத்தக்கவன் இல்லையென்றால் ஊடல் நாடகம் முட்டாள்தனம் தானே? Embarassed

நொந்தாரென்று அஃதறியும்  காதலர் இல்லா வழி
(இந்தப்பெண்) மனம் நொந்து போய் ஊடி இருக்கிறாள் என்று புரிந்து கொள்ளும் காதலன் இல்லாத போது

நோதல் எவன்மற்று
எதற்காக மனம் நொந்து துன்பப்படுகிறாய் (பேதைப்பெண்ணே?)

சிறப்பான அறிவுரை!  எல்லாச்சூழலுக்கும் பொருந்தக்கூடியது!

நம்மைத் தேற்றுவதற்கு ஒருவர் இல்லாத நிலையில் சினங்கொண்டு வெம்புவது உடல்நலத்துக்குக்கேடே ஒழிய ஒரு பயனும் தராது.

போராட்டங்களும் அப்படித்தான் - "யாராவது கேட்பார்கள், பயன் இருக்கும், மாற்றம் நடக்கும்" என்றெல்லாம் ஒரு நம்பிக்கையும் இல்லாத நிலையில் சினமும் கொந்தளிப்பும் நடத்தி ஒரு பயனுமில்லை. வேறு என்ன தான் செய்யலாம் என்று அறிவோடு எண்ணவேண்டும்! ஆராய்ச்சி ஏதாவது தீர்வு தரலாம் அல்லது வழி காண்பிக்கலாம் Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 15 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Jun 12, 2019 5:43 pm

#1309
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது

வள்ளுவர் அடிக்கச்செய்வது தான் - முதல் குறளில் நேரடியாக ஒரு கருத்தைச்சொல்லி விட்டு, அடுத்ததில் அதற்கேற்ற ஒரு உவமை சொல்லி அழகு படுத்துவது.

"கேட்க நாதியில்லாத இடத்தில் ஊடல் பயனில்லை" என்ற சென்ற குறளின் கருத்து இங்கே ஒரு உவமையோடு சொல்லப்படுகிறது.

நிழலுள்ள இடத்தில் இருக்கும் நீர் தான் தண்மையாக இருந்து குளிர்ச்சி தரும். வெயிலில் உள்ள நீர் கொதிக்கும், குளிர வைக்காது - இது தான் இங்கே உவமை.

நிழல் = அக்கறை காட்டும் காதலன் / கணவன், அவனில்லையேல் ஊடலுக்கு ஒரு பயனுமில்லை என்று சுருக்கம்!

நீரும் நிழலது இனிதே

தண்ணீர் கூட நிழல் உள்ள இடத்தில் தான் இனிமையாக இருக்கும் (வெயிலில் இருந்தால் சுட்டுக்கொதிக்கும்)

புலவியும் வீழுநர் கண்ணே இனிது
(அது போல) ஊடலும் நம் மீது விருப்பமுள்ளவர் இடத்தில் கொள்வது தான் இனிமை தரும்
(வீழுநர் - வேட்கை உள்ளவர், அன்புள்ளவர், நமக்கு இரங்குபவர் , அக்கறை காட்டுபவர்)

"காற்றில் கையை வீசிச் சண்டை போடாதே" என்று ஒரு அறிவுரை உண்டு. அதனால் வலி வருமே ஒழிய வெற்றி கிடைக்காது. (எனக்கு ஒரு மூடப்பழக்கம் சிறுவயது முதல் உண்டு - காற்றில் எழுதுவது - பயனற்ற வெட்டிச்செயல், பலரும் பலமுறை திட்டியும் இன்னும் மாறாத ஒன்று, அது நினைவுக்கு வருகிறது).

அக்கறையுள்ளவன் இல்லாத போது வெம்மி சினம் காட்டுவது, வெயிலில் கொதிக்கும் நீர் போன்றது - குளிர்விக்கப்படாது, பயன் கொடுக்காது!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 15 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Jun 12, 2019 5:56 pm

#1310
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா


புலம்பல் குறள் Sad

ஊடல் குறித்தும், அதற்கான நல்ல பலன் - பயனில்லாத இடத்தில் ஏன் கொள்ளக்கூடாது என்றெல்லாம் சிறப்பாக இதுவரை சென்ற அதிகாரத்தின் முடிவில், "பயனில்லை என்றாலும் ஊடும் என் முட்டாள் நெஞ்சு" என்று புலம்புவது சலிப்பு உண்டாக்கும் ஒன்று.

பொதுவாகவே காமத்துப்பாலில் கற்பியலில் இப்படிப்பட்ட அழுகையும் புலம்பலும் தான் பெரிய அளவில் நிற்கிறது என்பது என்னுடைய கருத்து. இப்படியிருக்கும் நிலையில் யார் இதை "இன்பத்துப்பால்" என்று சொன்னார்கள் என்று தெரியவில்லை Laughing

ஊடல் உணங்க விடுவாரோடு

ஊடல் செய்கையில் அதைத் தணிக்காமல் துன்புற விடுபவரோடு

என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா
"கூடிக்கலப்போம்" என்று என் நெஞ்சம் எண்ணுவது வெறும் ஆவல் தான்.

"நிறைவேறாத ஆசை" என்று சொல்லாமல் சொல்லிப்புலம்புகிறாள். அல்லது, நேரடியாக அவனிடம் "என் ஊடலை ஏன் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறாய், உன்னிடம் போய் என் நெஞ்சம் ஆவல் கொள்கிறதே" என்று சண்டை போடுகிறாளா தெரியவில்லை.

அதாவது, "எட்டாக்கனிக்குக் கொட்டாவி விடுகிறது என் நெஞ்சம்" என்ற இன்னொரு அவலப்பாடல்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 15 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jun 13, 2019 7:43 pm

#1311
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு

(காமத்துப்பால், கற்பியல், புலவி நுணுக்கம் அதிகாரம்)

கண்டிப்பாகச் சுவை கூடியதாக இருக்கும் இந்த அதிகாரமும் அடுத்ததும் என்று தோன்றுகிறது.

அதாவது, ஊடல் என்பதை எப்படியெல்லாம் விதவிதமாகப் பெண்டிர் மேற்கொள்வார்கள், அதில் என்னவெல்லாம் நுணுக்கமான அணுகுமுறைகளைக் கையாளுவார்கள் என்று வள்ளுவர் சொல்லப்போகிறார். (அல்லது ஆண்களுக்குச் சொல்லித்தரப்போகிறார்).

நாம் காலங்காலமாகக் கேட்டு வரும், படித்திருக்கும், பார்த்திருக்கும் காதல் கதைகள், புதினங்கள், திரைப்படங்கள் எல்லாவற்றிலும் சுவையானவற்றுக்கு இந்த அதிகாரங்களின் தாக்கங்கள் இருந்திருக்கின்றன!

அப்பேர்ப்பட்ட சுவையான தொடக்கங்களை இன்று முதல் காணப்போகிறோம் Smile

இந்த அதிகாரங்களுக்குச் சுவை கூட்டும் இன்னொன்று - தலைவனும் தலைவியும் கூடி இருக்கும் சூழலில் நிகழ்வது. (ஆகவே, "அவனைக்காணோம், அவளைப்பிரிந்தேன்" என்பது போன்ற சூழல்கள் - அதன் விளைவான புலம்பல்கள் இருக்காது என நம்புவோம். சேர்ந்து நடத்தும் சண்டைகள், கூடல்கள் & குறும்புகள்) Smile

முதல் பாடலில் நாம் பொதுவாகத் தமிழ்நாட்டில் தொன்று தொட்டு இருந்து வரும் ஒரு நடைமுறையைக் காணலாம் - அதாவது, ஆடவர் மேலாடை அணியாமல் திரிவது Smile (திருப்பூர் பனியன் துறையில் பேரளவில் வளர்ந்ததால் நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, சிற்றூர்களிலும் இக்காலத்தில் இது குறைந்து வருகிறது. என்றாலும், என்னுடைய பள்ளிக்காலம் வரை எங்கும் கண்டிருந்த ஒன்று இது என்பதை மறக்கலாகாது. தோட்டத்துக்கிணறு / ஆறு / குளம் என்று சென்று குளித்து வருகையில் இடுப்புக்கு மேல் ஒன்றும் அணியாமல் எத்தனையோ முறை வீட்டுக்கு வந்திருப்பது நினைவுக்கு வருகிறது).

முற்காலச்சிற்பங்களும், ஓவியங்களும் இதற்கு இன்னும் கூடுதல் சான்றுகள் என்று எடுத்துக்கொள்ளலாம். அந்தப் புரிதலோடு இங்கு பெண் ஊடல் கொள்வதற்கான நுணுக்கத்தைப் பார்ப்போம்!

பரத்தநின் மார்பு
ஒழுக்கம் கெட்ட உன் மார்பு
(காதலனைப் பரத்தை என்று திட்டுகிறாள், "நாணமில்லாமல் நின் மார்பை ஊர் முழுக்கக் காட்டிக்கொண்டு திரிகிறாய்" என்று எடுத்துக்கொள்ளலாம். இது அக்காலத்தில் பொதுவான வழக்கம் தான், ஆண்கள் மூடி மறைப்பது கிடையாது - மன்னனே அப்படித்தான் ஒருவேளை இருந்திருப்பான்)

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
பெண் இயல்பு உள்ளோர் எல்லோரும் தம் கண்களால் பொதுவாக உண்ணுமாறு இருக்கிறது
(ஊரில் உள்ள பெண்கள் உன் மார்பினைத் தின்று விடுவது போல் பார்ப்பதால் அது இழிந்து விட்டது)

நண்ணேன்
(அப்படி ஆனதால்) அது எனக்கு வேண்டாம், அதை நான் தழுவிச்சேர மாட்டேன்

எப்படியெல்லாம் ஒன்றுமில்லாததைப் பெரிதாக்கி நுணுக்கமாகப் பெண்கள் சண்டை பிடிப்பார்கள் என்று முதல் குறளிலேயே தெரிந்து கொள்கிறோம்.

போகப்போக இன்னும் வேடிக்கை இருக்கிறது!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 15 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jun 13, 2019 10:50 pm

#1312
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து

யாராவது தும்மினால் "இறைவன் உனக்கு ஆசி அளிக்கட்டும்" என்று சொல்லும் வழக்கம் இருப்பது வடஅமெரிக்காவுக்கு வருமுன்னர் எனக்குத்தெரியாது. தொடக்கத்தில் அதைக்கேட்கும்போது எனக்கு வேடிக்கையாய் இருந்தது.

நான் : தும்மல்

அறையிலிருக்கும் வேறொருவர் : உனக்கு ஆசி கிட்டட்டும்!

நான் : நன்றி!

அவர் : உனக்கு நல்வரவு!

ஒரு தும்மலுக்கு இவ்வளவு பாடா என்று எனக்கு வேடிக்கையாய் இருக்கும். இதைக்குறித்து நம் நாட்டுக்காரரோடு பகடி செய்து மகிழ்வது வழக்கமாய் இருந்தது. Laughing

இன்று திருக்குறள் படிக்கும்போது தான் தெரிகிறது, இது நம் நாட்டில் அந்தக்காலத்திலேயே இருந்த பழக்கம் என்பது!  "தும்மினால் செத்துப்போவோம்" என்றோ அல்லது தும்மல் கொடிய ஏதோ நோயின் அடையாளம் என்றோ நம்புவதன் விளைவாக இப்படிப்பட்ட "நீடூழி வாழ்க" என்று வாழ்த்தி ஆசி கூறும் வழக்கம் வந்திருக்கலாம்.

இவற்றையெல்லாம் விடப்பெரிய வேடிக்கை அது பள்ளியறை ஊடல் நுணுக்கத்தின் பாகமாக இங்கே நாம் படிப்பது Smile

ஊடி இருந்தேமாத் தும்மினார்
நாங்கள் ஊடி இருந்த போது (அதாவது, அவரோடு நான் பேசாமல் பிணங்கி இருந்தபோது) அவர் தும்மினார்

யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து
(உடனே பதறியடித்துக்கொண்டு) நான் அவரிடம் "நீங்கள் நீடூழி வாழவேண்டும்" என்று சொல்லி விடுவேன் (அப்படியாக ஊடல் முறிந்து விடும்) என்று எண்ணிக்கொண்டு!

தும்மலை வைத்து இப்படி ஒரு நம்பிக்கையா? நல்ல வேடிக்கை தான் போங்க!
Laughing

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 15 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Jun 14, 2019 5:17 pm

#1313
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று

"அதை யாராவது காதுல பூ வச்சவன் கிட்ட சொல்லு" என்று ஏளனமாகச் சொல்லுவதை நம் காலத்தில் பார்த்திருக்கிறோம். இங்கே "காதுல பூ வைத்தவன்" = ஏமாந்தவன், அறிவிலி!

மொத்தத்தில் ஆண்கள் பூச்சூடுதல் என்பது கிட்டத்தட்ட இழிவாகக் கருதப்படும் ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம் (திருமணம் அல்லது சிறப்பு நிகழ்வு அல்லாமல் ஆண்கள் மாலையிடுவதும் பொருத்தமாகக் கருதப்படுவதில்லை). வெளியில் கோட் அணிவோர் மட்டும் அதில் பூவைக் குத்திக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளப்படலாம் (நேருவுக்கு ரோசாப்பூ குத்திக்கொள்ளப்பிடிக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம்).

அதே நேரத்தில், பெண்கள் தலையில் பூச்சூடிக்கொள்வது தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் இன்றும் நடைமுறையான ஒரு வழக்கம் தான்.

திருக்குறள் போன்ற சங்கநூல்களில் இருந்து நாம் தெரிந்து கொள்ளும் ஒன்று அக்காலத்தில் ஆண்களும் பூச்சூடித் தம்மை அலங்கரித்துக்கொள்ளும் வழக்கம் இருந்தது என்பது Smile  இங்கே "கோட்டுப்பூ" என்று சொல்வதை இரு விதமாகப் பொழிக்கிறார்கள் - கிளையில் பூத்த மலர் என்றும், வளைவாக - அதாவது, கோட்டமாக, மாலையாகக் கோர்க்கப்பட்ட மலர்கள் என்றும். எப்படி எடுத்துக்கொண்டாலும், ஆடவன் பூச்சூடி வந்திருக்கும் அழகான காட்சி. rotfl

அந்த அணி இங்கே ஊடலுக்கான குறைபாடாக ஆகிறது. "யாருக்காக இந்தப்பூவைச் சூடினீர்?" - என்று தனக்கு ஒரு சக்களத்தி இருப்பதாகக் கூறி வம்பிழுக்கிறாள் பெண்.

கோட்டுப்பூச் சூடினும்
(வெறுமென) கிளையில் பூத்த காட்டுமலர்களை (அல்லது வளைவாகக் கட்டிய பூக்களை) நான் சூடி வந்தாலும்

ஒருத்தியைக் காட்டிய சூடினீர்
"வேறு எவளோ ஒருத்திக்குக் காட்டுவதற்காகத்தான் இதைச் சூடி (அழகுபடுத்தி) இருக்கிறீர்கள்"  

என்று காயும்
என்று சொல்லிச்சூடாவாள் (சினத்தோடு ஊடல் கொள்வாள்)

ஒருவேளை இவள் முன்னாள் அழகாகக் காட்சியளிக்கவோ அல்லது நல்ல மணத்தோடு விளங்கவோ அவன் மலர் சூடி இருக்கலாம், ஆனாலும் நுணுக்கமாகக் குறை கண்டுபிடிப்பதற்கு அதுவே ஏதுவாகி விடுகிறது.

நமது நாளுக்கு இதை எப்படிப்பொருத்தலாம்?

பொதுவாக மணக்க வைக்கும் நீர் தெளிக்காதோர் சட்டென்று ஒரு நாள் தெளித்துச்சென்று விடாதீர்கள் - என்ற எச்சரிக்கை என்று கொள்ளலாம். Laughing

மாறாக, இப்படியும் சொல்லலாம் - உனக்குப் பூக்கிடைத்தால், அதைக் கொண்டு போய் உன் காதலிக்குச்சூட்டி விடு, இரட்டைப்பலன் - ஊடல் தவிர்ப்பு & கூடுதல் பிணைப்பு Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 15 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Jun 14, 2019 6:15 pm

#1314
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று


சண்டை பிடிப்பது, வம்பிழுப்பது என்று முடிவு செய்து விட்டால் பெண்கள் எப்படியெல்லாம் நுணுக்கமாகக் குறை கண்டுபிடிப்பார்கள் என்று வள்ளுவர் நன்றாகவே ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்று காட்டும் பாடல் Smile

தெனாலிராமன் கதைகள் ஒன்றில் கிருட்டிணதேவராயர் "இப்போது நீ என்ன கேட்டாலும் அதை மறுப்பேன்" என்று சொல்வாராம் - அது போன்ற ஒரு விடாப்பிடியான மனநிலையில் இருப்பார்கள் - என்ன சொன்னாலும் - அதாவது நல்லதாகச்சொன்னாலும் கூட - அதையே புரட்டிப்போட்டு ஊடல் கொள்ளுவார்கள் Smile

அப்படிப்பட்ட ஒன்று தான் இங்கே. "நம்மைப்போன்ற காதலர் யாருமில்லை" என்ற கருத்தில் "யாருமில்லை" என்கிறானாம். அவளோ, "யாருமில்லை" என்ற சொல்லை மட்டும் பிடித்துக்கொண்டு "என் அளவுக்கு யாருமில்லை என்றால் வேறு யாரையெல்லாம் காதலிக்கிறீர்கள்" என்று வம்பிழுக்கிறாள். ஊடல் அழுகைக்கு இப்படி ஒரு நுணுக்கமான காரணம் rotfl

யாரினும் காதலம் என்றேனா

"யாரையும் விட மிகுந்த (சிறப்பான / கூடுதலான) காதல்" என்றேனா? அதற்கு அவள்,  

யாரினும் யாரினும் என்று ஊடினாள்
"யாரை விட? யாரை விட?" என்று சொல்லி ஊடினாள்!
(நான்வேறு யாரையெல்லாமோ காதலிப்பதாகவும், அவரோடு ஒப்பிடுவதாகவும் குற்றஞ்சாட்டிச் சண்டை போட்டாள்)

சுவையான காட்சி - மனதில் கொண்டு வந்து பார்ப்பதற்கு அவ்வளவு சிறப்பாக இருக்கிறது
Laughing
rotfl

ஆக உள்ள 7 சொற்களில் 'யாரினும்' என்றே ஒரே சொல் மூன்று முறை வருவதையும் உற்று நோக்குங்கள் Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 15 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 15 of 16 Previous  1 ... 9 ... 14, 15, 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum