Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

3 posters

Page 12 of 16 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16  Next

Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 12 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Jul 11, 2018 11:46 pm

#1218
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து


கவிநயம் மிக்க அழகுப்பாடல்.

அதாவது, புலம்புவதையும் மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் நடத்துவது - தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு தான் என்றாலும், அழகாகச் செய்வது Smile

அப்படி என்ன சொல்கிறாள்?

"உறங்கும்போது அவர் என் தோள் மீது பிணைந்து கிடக்கிறார் - ஆனால், நான் விழித்தவுடன் விரைவாக என் நெஞ்சில் புகுந்து கொள்கிறார்" என்று மகிழ்கிறாள். அதாவது, காதலர் கனவில் மட்டும் தான் இருக்கிறார் - நேரில் இல்லை என்ற கசப்பான உண்மையை அவ்வளவு நேர்மறையாகவும் சுவையாகவும் சொல்லுகிறாள்.

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி
தூங்கும் பொழுது என்னுடைய தோள் மேல் கட்டி அணைத்துக்கொண்டு இருப்பார்

விழிக்குங்கால்
நான் உறக்கத்திலிருந்து விழிக்கையில்
(அதாவது, கண்டு கொண்டிருந்த கனவு முடிவுக்கு வரும் போது)

நெஞ்சத்தர் ஆவர் விரைந்து
விரைவாக என் (தோளிலிருந்து மாறி) நெஞ்சின் உள்ளே உள்ளவர் ஆகி விடுவார்
(சற்றும் தாமதியாமல் என் மனசுக்குள் புகுந்து ஒளிந்து கொள்வார்)

நனவில் அவர் இல்லை என்றும், காணாமல் போகிறார் என்றும் எதிர்மறையாகச் சொல்லும் குறள்களையும் படித்தோம் என்றாலும் இதிலுள்ள நேர்மறைத்தன்மையில் "புதைந்திருக்கும் துயரம்" கூடுதல் தாக்கம் தருகிறது Sad

"அவர் வேறெங்கும் போய் விடவில்லை, என் நெஞ்சில் வைத்துப்பாதுகாக்கிறேன்" என்று சொல்வதை நம்மால் அவ்வளவு எளிதாகக் கடக்க முடியவில்லை.

துயரத்தை மறைத்து அவள் வெளியில் காட்டிக்கொள்ளும் (பொய்யான) மகிழ்ச்சி நமது மனதை என்னவோ செய்கிறது, கசக்கிப் பிழிகிறது!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 12 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jul 12, 2018 6:29 pm

#1219
நனவினால் நல்காரை நோவர் கனவினால் 
காதலர்க் காணாதவர்

கனவு நிலையை மெச்சுதல் இங்கே உச்சத்தை அடைகிறது. அதாவது, "கனவு இருக்கையில் நனவு தேவையில்லை" என்றே சொல்லும் அளவுக்கு Smile

அதையும், "எனக்கு நனவு வேண்டும்" என்று சொல்வோரை ஏளனம் செய்து கொண்டு எழுதுவதன் வழியே வள்ளுவர் குறும்பு செய்கிறார். "கனவில் காதலரைக் காண முடியாதவர்கள் தான் அவர் நனவில் வந்து அன்பு செலுத்துவதில்லை என்றல்லாம் நொந்து கொள்வார்கள்" என்று வேடிக்கையாகச் சொல்கிறார்.

ஆக மொத்தம் கனவுக்குப் பாராட்டுக்கள் இந்தப்பாடலில்!

கனவினால் காதலர்க் காணாதவர்
கனவில் தமது காதலரைக் கண்டு இன்புறாதவர்கள் தான் 

நனவினால் நல்காரை நோவர்
(அவர்) நனவில் வந்து அன்பு காட்டவில்லையே என்று திட்டிக்கொண்டிருப்பார்கள் 
(அல்லது நொந்து கொள்வார்கள்)

பிரிவுத்துன்பத்தைப் பேரளவில் தாங்கிக்கொள்ள உதவும் கருவியாகவே தமிழர் பண்பாட்டில் "கனவு" கருதப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு இந்தக்குறள் ஒரு சான்று. அண்மைக்காலம் வரையிலும் திரைப்படங்கள் இதையே காட்டிக்கொண்டு இருந்திருக்கின்றன (கனவுக்காட்சி) என்பது ஒன்று நீண்ட தொடர்ச்சி என்று புரிந்து கொள்ளலாம் Wink

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 12 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Jul 13, 2018 6:41 pm

#1220
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூரவர்


ஒருத்தர் கனவை மற்றவர்கள் எப்படி அம்மா பார்க்க முடியும்? இப்படி எல்லாம் புலம்பலாமா?
(திரைப்படக்கனவுகளின் கதை வேறு, அங்கே கோடிக்கணக்கானோர் மற்றவர் கனவுகளைக் கண்டு மகிழ முடியும்)

நேரடியான பொருளை முதலில் பார்ப்போம் :

நனவினால் நம்நீத்தார் என்பர்
நனவில் அவர் என்னைப்பிரிந்து விட்டார் என்று சொல்லித்திரிகிறார்களே

இவ்வூரவர் கனவினால் காணார்கொல்
இந்த ஊரார் கனவில் (என்னை அவர் எப்போதும் கூடுவதைக்) காண மாட்டார்களா?

கவிதையில் தருக்கம் எல்லாம் பார்க்கக்கூடாது என்பதே இதற்கு மறுமொழி Smile

பிரிவின் துயரம் என்பதே கொடிதானது. அதைக் கூடுதல் கடினமாக ஆக்குவது அதைப்பற்றி மற்றவர்கள் அலர் தூற்றுவது. அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருக்கும் பெண் என்ன செய்ய முடியும்? தன்னுடைய துன்பத்தைத் தணித்துக்கொள்ள இப்படியெல்லாம் பாட வேண்டியது தான்.

எப்போதும் அவர் நினைவாக இருப்பதால், கனவில் அவர் அன்றாடம் வருவதும் கூடுவதும் எல்லாம் நடக்கிறது. அவ்விதமான ஒரு கற்பனை வாழ்க்கை வழியே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அதை மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாள். ஊரார் புரிந்து கொள்ளாததைக் கண்டு எரிச்சல் அடைகிறாள்.

இவற்றையெல்லாம் நமக்கு முன் ஒரு காணொளி போல இந்தக்குறள் கொண்டு வருகிறது! சிறப்பு!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 12 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Jul 16, 2018 8:50 pm

#1221
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது

(காமத்துப்பால், கற்பியல், பொழுது கண்டிரங்கல் அதிகாரம்)

விரைவாக இந்த அதிகாரம் முழுவதும் எல்லாப்பொழுதுகளையும் பற்றிச்சொல்லப்போகிறதா என்று நோக்கியபொழுது, அப்படியெல்லாம் இல்லை - மாலைப்பொழுது மட்டுமே இங்கு இடம் பெறுகிறது என்று புரிந்து கொண்டேன் Smile

அது சரி தானே - காதலர் என்றாலே, நிலவு / மாலை - இப்படியெல்லாம் கூட்டணி அமைத்துத்தானே ஆக வேண்டும்?

என்றாலும், இங்கே "பொழுது கண்டு இரங்கல்" - அதாவது, மாலைப்பொழுது தரும் துயரம் / வலி குறித்துத்தான் இங்கு மிகுதியாகப் பேசப்படும் என்று இந்தத் தலைப்பிலேயே தெரிந்து விடுகிறது. (அதாவது, காதலன் பிரிந்து சென்று விட்டபின் காதலி மாலையில் படும் வருத்தங்கள் / புலம்பல்கள்)! சரி, படிக்கலாம்!

வாழி பொழுது மாலையோ அல்லை
பொழுதே நீ வாழ்க! (உண்மையிலேயே) நீ மாலைப்பொழுது தானா? இல்லையில்லை

மணந்தார் உயிருண்ணும் வேலை நீ
மணந்தவர்கள் உயிரைக் கொல்லும் வேல் (கொலைக்கருவி) தான் நீ!

இங்கே "மணந்தார்" என்று சொல்வதன் அடிப்படையில் கணவனைப்பிரிந்த நிலையில் இருக்கும் மனைவி என்று விளக்கும் உரைகள் உண்டு. போருக்கோ, தொழிலுக்காக நெடு நாள் தொலைவான இடத்துக்கோ சென்ற கணவன் அல்லது இறந்து போன கணவனை நினைத்துப் புலம்பும் பெண் என்றெல்லாம் எடுத்துக்கொள்ள இப்படிப்பட்ட விளக்கங்கள் முயலுகின்றன.

"மாலை" என்பது திருமணச்சடங்கில் பயன்படுத்தப்படுவது என்ற அடிப்படையில் இங்கே இருபொருளாகவும் எடுத்துக்கொண்டு, "நீ திருமண மாலை போன்று இனிமையான பொழுதல்ல, கொல்லும் கொடுமையான பொழுது" என்றும் நாம் கூட்டிச்சேர்க்க வழியுண்டு.

என்றாலும், மணத்தல் என்பது கூடுதல், கலத்தல், கலவி என்று மட்டுமே வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள முடியும் என்று அகராதி காட்டுகிறது. அதனால், சில உரைகள் (முக, முவ) வெறுமென மகளிர் என்று இதற்குப் பொழிப்புரை எழுதுகின்றன.

ஆக மொத்தம், இங்கே "மணந்தார்" என்பது, முன்பு உறவில் இருந்து தற்போது பிரிந்து வாடும் பெண்டிர் என்று நமக்குச் சொல்லுகிறது.

காதலன் / கணவன் உடனில்லாத நிலையில் மாலைப்பொழுது தனிமை / வெறுமை உணர்வைக்கூட்டி அழ வைக்கிறது என்று ஆக மொத்தப்பொருள்.

ஏனென்றால், உடனிருந்த காலங்களில் - அவனது வேலை முடிந்து இருவரும் காதலோடு சந்திக்கும் - அதே மாலைப்பொழுதுகள் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும்! இப்போது அதற்கு நேரெதிர் நிலைமை!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 12 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Jul 17, 2018 9:23 pm

#1222
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ணதோ நின் துணை


ஆழ்ந்த மனஉளைச்சலில் இருப்போருக்கு உலகில் உள்ள எல்லோருமே துன்பத்தில் ஆழ்ந்திருப்பதாகத் தோன்ற வழியுண்டு. அப்படி ஒரு வேளை இந்தப்பாடலில் பெண் உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம்.

இன்னொரு விதத்தில் பார்த்தால், துன்பத்தில் உள்ளோர் அதே போன்ற நிலையில் உள்ளோரைக் கூட்டுச்சேர்க்க முயலுவதுண்டு. ("நீயும் நானும் ஒரே துன்பத்தில்" என்று ஒருவரை ஒருவர் பார்த்து ஆறுதல் அடைய முயலுதல்).

இவையெல்லாம் இல்லாமல் வெறுமென கவித்துவமாகவும் இருக்கலாம் - "மருளும் மாலையே உனக்கு என்ன துன்பம்" என்று கேட்பது கவிதைக்கு அழகு தானே? உண்மையில் மாலை மயங்குவது / மருளுவது எல்லாம் கிடையாது, அதைப்பார்த்து நாம் தான் மயங்கிப்போகிறோம்.

மற்றபடி, மாலைப்பொழுதின் வரையறையே "கதிரவன் மங்கும் நேரம்" என்பதாகும்! அது அன்றாடப்பழக்கமே ஒழியத் துன்பத்தின் விளைவொன்றும் இல்லை என்று எல்லோரும் அறிவர் Smile

புன்கண்ணை வாழி மருள்மாலை
மாலைப்பொழுதே, (நீ ஏன்) துன்பத்தால் மயங்கி வாழ்கிறாய்?

நின் துணை எம்கேள்போல் வன்கண்ணதோ
உன் துணையும் என் காதலர் போல் கொடியவர் (அருளற்றவர்) தானோ?

மனஅழுத்தத்தின் இன்னொரு வெளிப்பாடு மனிதர் அல்லாதவையிடம் பேசத்தொடங்குதல். அப்படியும் எடுத்துக்கொள்ளலாம் Wink

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 12 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Jul 18, 2018 6:44 pm

#1223
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்


இந்தக்குறளுக்கு இரண்டு விதமான விளக்கங்கள் உரையாசிரியர்கள் கொடுப்பதைக்காண முடிகிறது.

ஒன்று - நேரடியான பொருள், அதாவது வெறும் பொழிப்புரை. மாலைப்பொழுதின் பொதுவான தன்மை மற்றும் அது துன்பம் தருகிறது என்ற புலம்பல்.

மற்றது - இங்கே சொல்லப்படுவதை முந்தைய சூழலுடன் ஒப்பிட்டுக் கொஞ்சம் கூட்டிச்சேர்க்கும் முறை. அதாவது, இப்போது துன்பம் தரும் மாலைப்பொழுது முன்பு எப்படியெல்லாம் இருந்தது என்று ஒப்பீடு.

இப்படி வகைவகையான விளக்கங்கள் எழுதும் வண்ணம் பொருள் பொதிந்து எழுதுவது தானே அழகிய கவிதை! அப்படிப் பலவிதத்தில் படிப்போரின் எண்ணங்களைத் தூண்டி விடுவதில் வள்ளுவர் வல்லவர் என்பதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். என்றாலும், இங்கும் அதை நினைவுக்குக் கொண்டு வருவதே முறையானது!

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை
பனி தோன்றிக் குளிர் கொடுக்கின்ற மாலைப்பொழுது
(அல்லது, அச்சத்துடன் நடுநடுங்கும் மாலைப்பொழுது / அஞ்சி நடுங்க வைக்கும் மாலைப்பொழுது - பனி என்பதற்கு மஞ்சு என்றும் அச்சம் / நடுக்கம் என்றும் இரண்டு பொருள்கள். அது போன்றே, பைதல் என்பது குளிருக்கும் நடுக்கத்துக்கும் பயன்படுத்தத்தக்க சொல்)

துனிஅரும்பித் துன்பம் வளர வரும்
(எனக்கு) வெறுப்பு / வருத்தம் தோன்றித் துன்பம் வளருவதற்கென்றே வருகிறது

இரண்டு விளக்கங்களிலும் ஒன்று பொதுவானது : வருகின்ற மாலைப்பொழுது, காதலரைப் பிரிந்திருக்கும் பெண்ணுக்கு வருத்தம் / துன்பம் தருவதற்கென்றே வருகிறது என்ற எண்ணம்.

முதல் விளக்கம் எளியது - நீ தரும் பனியும் குளிரும் வருகையில், உடனிருந்து சூடு தர என்னவர் கூட இல்லையே, எதற்காக நீ வந்து இப்படித் துன்புறுத்துகிறாய் மாலைப்பொழுதே - இப்படி எடுத்துக்கொள்ளலாம்.

இரண்டாவது, மாலைப்பொழுதை ஒரு பகையாக உருவகப்படுத்தும் கூட்டிச்சேர்ப்பு வேலை. அதாவது, என்னவர் கூட இருந்தபோது நீ அஞ்சி நடுங்கிக்கொண்டே வருவாய் மாலைப்பொழுதே. அப்போதெல்லாம் எனக்கு இன்பமாய் இருந்தது. இப்போதோ, எனக்குத் துன்பமும் துயரமும் தருமாறு (அச்சமின்றி) வருகிறாய்.

எப்படிப் புரிந்து கொண்டாலும், அழகான பாடல்!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 12 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jul 19, 2018 6:38 pm

#1224
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்


"கொல்ல வரும் பகை" என்று மாலைப்பொழுதை விவரிக்கும் அளவுக்கு இந்தப்பெண் துயரத்தில் இருக்கிறாள். காதலன் இல்லாத வெறுமை / இழப்பு அவளை உணர்வுகளின் ஆழத்தில் அடித்து வீழ்த்தியிருக்கிறது. கடும் மன அழுத்தத்தில் வரும் சொற்களாக இவற்றைக் கருதலாம்.

காதலர் இல்வழி மாலை
காதலர் இல்லாத இந்தப்பொழுதில் (இந்த வாழ்வில்) மாலை நேரம்

கொலைக்களத்து ஏதிலர் போல வரும்
கொலைக்களத்தில் வரும் பகைவர் போல வருகிறதே!

"மிகைப்படுத்தப்பட்ட உவமை" என்றெல்லாம் இதைச்சொல்லி விட முடியாது. ஏனென்றால், உண்மையிலேயே இப்படிப்பட்ட சூழலில் இறந்து போனவர்கள் (அல்லது தம்மைத்தாமே கொன்று அழித்தவர்கள்) ஏராளம் என்பது கசப்பான உண்மை.

மாலைப்பொழுது அல்ல அதற்கான காரணம் என்றாலும் இங்கே கவிஞர் சொல்ல வருவது, சில குறிப்பிட்ட பொழுதுகள் பிரிவின் வலியை அளவு கடந்து கூட்டி விடும் என்பது. குறிப்பாக, முன்பு என்னவெல்லாம் பொழுதுகளில், சூழல்களில் இன்பத்தின் உச்சத்தில் இருந்தாளோ அவை தாம் பிரிவின் பின் மிகவும் கொடுமையான பொழுதுகளாக / சூழல்களாக மாறி விடுவது.

பிரிவின் விளைவு மட்டுமல்ல, பொதுவாக எந்த ஒரு இழப்பும் கூடுதல் வலி தருவது அதன் "இல்லாமை" கூடுதல் உணரப்படும் பொழுதுகளில் தான்.

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 12 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Jul 20, 2018 3:28 pm

#1225
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை


காதலர் பிரிந்திருந்தாலும் காலைப்பொழுதுகள் அவ்வளவு துயரம் தருவதில்லை (அதாவது ஒப்பீட்டளவில்) என்ற கருத்து இங்கே வருகிறது.

ஒரு வேளை அதற்கு முன்னான உறக்கத்தில் கனவு வழியே பெற்ற இன்பம் இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கிறதோ என்னமோ Smile அல்லது, வாழ்வுக்கு வேண்டிய அன்றாட அலுவல்களில் ஈடுபடுவது காதல் கவலைகளை மறக்கடிக்கிறதோ?

எப்படி இருந்தாலும், துன்புறுத்தல் காலையில் இல்லை என்பது தான் இங்கு சொல்லப்படுவதில் ஒரு பாதி. மறுபாதி என்ன என்பது தெரிந்ததே (மாலைப்பொழுது கண்டு இரங்கல்).

காலைக்குச் செய்தநன்று என்கொல்
நான் காலைப்பொழுதுக்கு அப்படி என்ன நன்மை செய்து விட்டேன்?

எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை
அல்லது, மாலைப்பொழுதுக்கு நான் காட்டிய பகைமை (செய்த தீமை) தான் என்ன?
(ஏனிந்த மாலை மட்டும் எனக்கு இவ்வளவு துன்பம் தருகிறது?)

நாம் முன் குறள்களில் பார்த்த அதே உளவியல் காரணம் இங்கும் பொருந்தும். காதலில் இருந்த பொழுதும் காலையில் இன்பம் துய்த்துக்கொண்டு இருந்திருக்க மாட்டார்கள் (அன்றாட வேலைகள் / அலுவல்களின் தொடக்கம், பிழைப்புக்கான வழி போன்றவை வயலுக்கோ வேறு இடங்களுக்கோ துரத்தி விட்டிருக்கும் Smile )

முன்பு கூடி இன்பம் துய்த்ததெல்லாம் மாலைப்பொழுதுகள் தானே? அந்தப்பொழுதில் / சூழலில் தானே இழப்பு மிகுதியாக உணரப்படும்? துன்பமும் மன அழுத்தமும் அப்போது தானே வரும்?

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 12 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Jul 23, 2018 9:43 pm

#1226
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத 
காலை அறிந்ததிலேன்

மாலை-காலை என்று எதுகைச் சுவையுள்ள பாடல். ஆனால், இது "முரண் தொடை" அல்ல Smile 

ஏனென்றால் இங்கே காலை என்ற சொல்லின் பொருள் பொழுதைக்குறிக்கவில்லை. அப்படி இருந்தால் மாலை X காலை என்று முரண் தொடையாகக் கருதலாம். ஆனால், இங்கே காலை என்பது "அகலாத காலை" என்று சேர்த்துப்பொருள் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது. அதாவது, "அவர் என்னை விட்டுப்பிரியாத காலத்தில்" என்று பொருள், கதிரவன் தோன்றும் காலைப்பொழுது அல்ல! 
 
மணந்தார் அகலாத காலை
என்னைக்கூடியவர் (காதலர் / கணவர் / மணந்தவர்) விட்டுப்பிரியாத காலத்தில்
(அவர் என்னோடு சேர்ந்து இருந்த பொழுது)

மாலை நோய் செய்தல் அறிந்ததிலேன்
(பிரிந்தால்) மாலைப்பொழுது துன்பம் தரும் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லையே! 

எப்படி அம்மா தெரிந்திருக்கும்?

அப்போதெல்லாம் மாலை தானே கூடுதல் இன்பம் தந்து கொண்டிருந்தது? நாள் முழுக்க அவருக்காகக் காத்திருந்து விட்டு, அவரை மாலையில் கண்டதுமே கட்டித்தழுவி இன்பம் அடைந்த அந்தப்பொழுது எப்படித் துன்பமாக இருந்திருக்க முடியும்?

மீண்டும் நமக்கு நினைவுபடுத்தப்படும் கருத்து : நமக்கு எதுவெல்லாம் மிகக்கூடுதல் இன்பம் தருகிறதோ அது இல்லாமை தான் மிகக்கூடுதல் துன்பமும் தருவது / தரப்போவது.

ஆகையினால், ஒன்று உள்ளபோது அதனால் இன்பம் கண்டாலும், அதுவே இல்லாமல் போய்த் துன்பம் தரும் காலம் ஒரு வேளை வரலாம் / வரும் என்ற நடைமுறை உணர்வோடு இருப்போம் Embarassed

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 12 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Jul 24, 2018 10:02 pm

#1227
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி 
மாலை மலரும் இந்நோய்

"இந்நோய்" என்று மட்டுமே வள்ளுவர் எழுதுகிறார் என்றாலும் அது காதல் / காமம் தான் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை. அதைப்பூவாக உருவகப்படுத்துகிறார்.

காலையில் அரும்பிப் பகலில் மொட்டாகி மாலையில் மலரும் நோயாம். 

அதாவது, இதனால் வரும் துன்பம் காலையில் மிகச்சிறிய அளவிலேயே இருக்கும், மாலையில் முழு அளவில் வெடித்துச் சிதறும் என்றும் எடுத்துக்கொள்ளலாம் Wink
 
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி 
காலையில் சிறிய அரும்பாகத் தோன்றிப் பகலெல்லாம் வளர்ந்து (மலரத்தக்க) மொட்டாகி 
(போது = மலரும் பருவத்தில் உள்ள அரும்பு / பேரரும்பு)

மாலை மலரும் இந்நோய்
மாலையில் மலர்ந்து விடுகிறது (காதல் என்னும்) இந்த நோய் (துன்பம்)

அதாவது, மாலையில் தான் நோய் பேரளவில் வெளி வருகிறது என்றாலும் அதற்கு முந்தைய பொழுதுகளில் அது இல்லாமல் இல்லை - என்றும் எடுத்துக்கொள்ளலாம். இதற்கான புறப்பாடு காலையிலேயே தொடங்கி விடுகிறது அல்லவா?

ஆக மொத்தம், காம நோய் படிப்படியாக ஒரு நாளில் வளர்ந்து துன்புறுத்துகிறது என்று சொல்லிக்கொடுக்கும் பாடல் Wink 

உற்று நோக்க வேண்டிய இன்னொன்று - இங்கே சொல்லப்பட்டிருப்பது இரு பாலருக்கும் தான், பெண்ணுக்கு மட்டும் அல்ல Wink

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 12 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jul 26, 2018 2:43 am

#1228
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை


மாலைப்பொழுது இங்கு அழிக்கும் நெருப்போடு ஒப்பிடப்படுகிறது. (காமத்தீ கொண்டு எரிக்கும் மாலை என்றும் எடுத்துக்கொள்ளலாம்).

அதற்கு ஒரு தூதுவனாக "ஆயன் குழல்" சுட்டிக்காட்டப்படுவது இங்கே புதிய தகவல். (வேறொரு வலைத்தளம் இது போன்று "மாலை + ஆயன் குழல்" கூட்டணி வேறு சங்கத்தமிழ் நூல்களிலும் உள்ளதாகச் சொல்கிறது. அப்படியாக, இது அன்றைய நாளின் நடைமுறை. குறிப்பாக, இடையர்கள் நிறைய வாழும் நிலப்பகுதிகளில் மாலை நேரத்தில் குழலூதி ஆடுமாடுகளைக் கூட்டிச்சேர்ப்பது வழக்கமாக இருந்திருக்கலாம்).

ஆக, மாலை வந்து விட்டது என்று அவளுக்கு அறிவிக்கிறது ஆயனின் குழலொலி. தன்னைத் தீபோல் எரிக்கும் பொழுது வந்து விட்டது என்று அந்தக்குழல் அவளுக்கு அறிவிப்பதால் அதை ஒரு படைக்கலன் என்றே கருதுகிறாள் இங்கே Sad

எல்லோருக்கும் இனிமையாக இசைக்கும் குழலொலி இவளுக்குக் கொல்ல வரும் படைக்கருவியாகத்தோன்றும் நிலை விந்தை தானே?
(சொல்லப்போனால், காதலன் உடனிருந்த காலத்தில் இதே குழலொலி இவளுக்கும் அளவற்ற இன்பம் தந்திருக்கும் - இன்றோ மாறி விட்டது!)

அழல்போலும் மாலைக்குத் தூதாகி
(என்னை எரிக்கும்) தீ போன்ற மாலை நேரத்துக்குத் தூதுவனாகி

ஆயன் குழல்போலும் கொல்லும் படை
(ஒலிக்கின்ற) ஆயனின் குழல் போலும் கொல்லும் படைக்கருவி ஆகிவிட்டதே!

பிரிவுத்துயர் மிகும் போது இனிமையானதும் கொடுமையாக மாறும்!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 12 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jul 26, 2018 8:58 pm

#1229
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து


சற்றே குழப்பமான குறள் - பிரிவால் துன்புறும் பெண் எப்படிப்பட்ட குழப்பத்தில் இருக்கிறாள் என்பதை வள்ளுவர் சொல்லாமல் சொல்லுகிறாரோ என்னமோ Smile

அதாவது, "மாலை வந்தால் நான் மட்டுமல்ல, ஊரே மயங்கித் துன்புறும்" என்று பெண் புலம்புவதை ஏன் இங்கே குறிப்பிட வேண்டும் என்பது தான் குழப்பம். என்றாலும், அந்த அளவுக்கு இந்தப்பெண் துயரத்தால் மனம் கலங்கிக்குழம்பிப் போயிருக்கிறாள் என்று சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம்.
(மற்றபடி, ஊர் மாலை நேரத்தில் துன்புற வழியில்லை - மட்டுமல்ல, ஊரின் துன்பத்துக்கும் இங்கே நாம் படிக்கும் காமத்துப்பாலுக்கும் ஒரு உறவும் இல்லை).

மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து
(என்னுடைய) அறிவெல்லாம் கலங்கும் வண்ணம் மாலைப்பொழுது வரும் வேளையில்

பதிமருண்டு பைதல் உழக்கும்
ஊரே மயங்கித் துன்பத்தால் வருந்தும்
(பதி = ஊர் ; எ-டு: நெல்லியம்பதி)

மாலைப்பொழுது பலருக்கும் ஒய்வு, இளைப்பாறுதல், இன்பம் துய்த்தல் என்பனவற்றைக் கொண்டு வருவதால் பொதுவாக இன்பமான பொழுது. என்றாலும், அவர்கள் நடுவில் ஒருத்தி கடும் துன்பத்தில் உழலுகிறாள் எனும்போது மற்றவர்களுடைய இன்பம் துய்த்தலும் நின்று போகும் என்று சொல்ல வருவதாகவும் கொள்ளலாம்.

சிறிய அளவில் என்று பார்த்தால், பெண் வருந்துகையில் அவரது இல்லத்தில் இன்பம் இருக்க வழியில்லை.

அதையே விரிவுபடுத்தி, ஊர் முழுதும் அவளது உறவுகளே என்றாலோ? எல்லோரையும் அந்த மாலைப்பொழுதின் வருத்தம் தொற்றிக்கொள்ளும் என்று எடுத்துக்கொள்ளலாம் Wink

ஆனால், மேம்பட்ட விளக்கம், அவளது மனப்பிறழ்வில் தன்னைப்போல் ஊரே வருந்துவதாகக் கற்பனை செய்கிறாள் என்பதே!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 12 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Jul 27, 2018 5:43 pm

#1230
பொருள் மாலையாளரை உள்ளி மருள்மாலை
மாயும் என் மாயா உயிர்


"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற பழமொழி பலரும் கேள்விப்பட்டிருக்கிறோம். முன்பெல்லாம் இதைச்சொல்லிச்சொல்லி "எப்படியாவது வெளிநாட்டுக்குப்போய் பணம் ஈட்டி வா" என்று இளைஞர்களை ஊக்குவிப்பார்கள்.

தமிழகத்தின் சில பகுதிகளிலும் கேரளத்திலும் இதை அப்படியே பின்பற்றி வளைகுடா நாடுகளுக்கும் சிங்கப்பூர் / மலேசியா போன்றவற்றுக்கும் சென்றவர்கள் ஏராளம். (மென்பொருள் தொழிலுக்காக வெளிநாடு செல்வோர் ஒருவிதத்தில் இந்தக்கணக்கில் தான் என்றாலும் இந்தக்குறளுக்கு அவர்கள் பெரிய அளவில் பொருத்தமாட்டார்கள் என்பதால் விட்டு விடுவோம்).

மேற்சொன்ன "பொருள் ஈட்ட வெளிநாடு செல்லும் ஆண்கள்" என்ற பின்னணியில் அவர்களது மனைவியரும் காதலிகளும் படுகின்ற துன்பம் குறித்து இந்தக்குறள் எழுதப்பட்டிருப்பதாக எண்ணிக்கொள்ளலாம். (அதாவது, "அவர் பிரிந்து சென்ற போது உடனே போகாமல் இருந்த உயிர், இந்த மாலைப்பொழுதுகளில் அவரை எண்ணி எண்ணி நொந்து போவதால் போய்விடுமோ" என்ற பாடல்.)

என் மாயா உயிர்
(அவர் பிரியாவிடை கொடுத்துச்சென்ற போது) மாய்ந்து போகாமல் தப்பித்த என் உயிர்

மருள்மாலை
மயங்கும் மாலையிலோ

பொருள் மாலையாளரை உள்ளி மாயும்
பொருள் ஈட்டுவதையே இயல்பாகக்கொண்டுள்ள அவரை எண்ணி எண்ணி மாய்ந்து போகிறதே!

எனக்கு மணமான புதிதில் நாங்கள் இருந்த வீட்டிற்கு எதிர்வீட்டில் இந்நிலையில் இருந்த பெண்மணி நினைவுக்கு வருகிறார்.

எப்போதும் மூன்று மாதங்கள் வெளிநாட்டிலும் பின்னர் ஒரு மாதம் வீட்டிலும் இருக்கும்படியான வேலை அவரது கணவருக்கு; அதனால் குடும்பத்தைக் கூடக்கொண்டு செல்லமுடியாத நிலை.

"சேட்டன் உள்ள மாசம், ஒரு திவசம் போலப் பட்டென்னு பறந்நு போகும்" (மலையாளம்) என்று அவர் சொன்னது எளிதில் மறக்க முடியாத ஒன்று!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 12 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Jul 30, 2018 9:28 pm

#1231
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்

(காமத்துப்பால், கற்பியல், உறுப்பு நலனழிதல் அதிகாரம்)

"காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்" (இவள் கண்களைப்பார்த்ததும் "நாம் அவ்வளவு அழகில்லையே" என்று வெட்கப்பட்டுக் குவளை மலர் தலை குனியும்) என்று முன்பொரு குறளில் (#1114 ) சிறப்பிக்கப்பட்ட அந்த அழகிய விழிகள்,  இப்போது அதற்கு நேரெதிரான நிலையில் இருப்பதாகச் சொல்லி, இந்த "உறுப்பு நலனழிதல்" அதிகாரம் தொடங்குகிறது!  

அதாவது, நிலைமை இப்போது தலைகீழ் - நறுமலரைப் பார்த்து இங்கே நாணுகின்ற கண்கள் ("நாம் பொலிவிழந்து போனோமே" என்று).

சிறுமை நமக்கொழிய
(பிரிவின் வழியே) நமக்குத்துன்பம் / சிறுமை மிஞ்சும்படி விட்டு விட்டு

சேட்சென்றார் உள்ளி
நெடுந்தொலைவு சென்று விட்டவரை எண்ணி எண்ணி
(சேண் = சேய்மை / நெடுந்தொலைவு)

நறுமலர் நாணின கண்
(பொலிவு இழந்த) கண்கள் நறுமலர்களை விட இழிந்த நிலைக்கு ஆகிவிட்டன (மலர்களைக் காண வெட்கப்படுகின்றன)

மலர்கள் வெட்கப்பட்ட காலம் போய் இப்போது அவற்றை நோக்கத் துணியாமல் அவளது கண்கள் ஆகிவிட்டன. அழகிழந்து விட்டோமே என்று வெட்கப்படுகிறாள்.

மனதில் மகிழ்ச்சி இருந்தால் உடலில் (& கண்களில்) அழகும் மிளிரும். துன்பமும் துயரமும் கூடும்போது உடலின் பொலிவு அழியும் என்று வள்ளுவர் சொல்லுகிறார். அது அறிவியல் & மருத்துவம் சொல்லுகின்ற உண்மையும் கூட என்று நினைக்கிறேன் - சொல்லாவிட்டாலும் நடைமுறையில் காண்பது தான்!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 12 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Jul 31, 2018 10:21 pm

#1232
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் 
பசந்து பனிவாரும் கண்

பசந்து - பசலை நிறமாகி / ஒளியிழந்து / மங்கிப்போய் / காமாலை நோய் பிடித்தது போலாகி - இப்படிப் பலவிதமாக அகராதி விளக்குகிறது.

உடல் உறுப்பு நலம் கெட்டுப்போவதை ஒற்றைச்சொல்லில் இவ்வளவு அழகாக அடித்துச்சொல்லுதல் ஒரு அருங்கலை! 

அவ்வளவு அழகான மொழி தமிழ் / உயர்வான கவி வள்ளுவர்!

காமநோய் கொண்டு உடலின் நிறமழிந்து பசலை பிடிப்பது என்பது நாம் முன்னமேயே கண்டது. இங்கு அது குறிப்பாகக் கண்களுக்குச் சொல்லப்படுகிறது. அதுவும் போதாதென்று கண்ணீரும் சேர்ந்து கொள்ளும் கொடுமையான நிலைய இங்கே நமது முன்னாள் துன்பமான ஒரு ஓவியத்தைத் தீட்டுகிறது!

பசந்து பனிவாரும் கண்
பசலையாக நிறமிழந்து (ஒளி மங்கி) நீர் சொரியும் அவளது கண்கள்

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
தாம் விரும்பிய காதலர் தமக்கு அன்பு செலுத்தாத (அவல) நிலையைச் சொல்லுகின்றன போலும்

காதலைச் சொல்லுவதும், விருப்பத்தை அறிவிப்பதும் கண்களே என்று முன்பு படித்தோம் (நடைமுறை வாழ்க்கையிலும் பலமுறை கண்டிருக்கிறோம்).

அதே போன்று துயரம் / இழப்பு / வலி - இவற்றையும் (சொற்களுக்குத் தேவையே இல்லாமல்) விளக்குவதில் கண்களுக்கு நிகரில்லை!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 12 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Aug 01, 2018 9:04 pm

#1233
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்


தணத்தல் என்பதற்குப் பிரிதல் என்று பொருள் கூற அகராதி சுட்டிக்காட்டுவது இந்தக்குறளை Smile

பெண்ணின் தோள் பி.மு & பி.பி எப்படி இருக்கிறது என்று சொல்லிப்புலம்பும் குறள்.

ஏற்கனவே நாம் கற்பியல் அதிகாரங்களில் கண்டு கொண்டிருக்கும் சூழல் மற்றும் புலம்பல், ஒரே வேற்றுமை (அல்லது புதுமை) இங்கே சொல்லப்படும் உடல் உறுப்பு - தோள். அதன் பொலிவும் மெலிவும் இங்கே ஒப்பிடப்படுகின்றன.

மணந்தநாள் வீங்கிய தோள்
மணந்த (கூடியிருந்த / தழுவியிருந்த) நாட்களில் பொலிவாக இருந்த தோள்

தணந்தமை சால அறிவிப்ப போலும்
(இப்போது மெலிந்து) பிரிந்த நிலையை நன்றாகவே அறிவிப்பது போன்று இருக்கிறது!

பிரிவுத்துயரினால் உணவு / உறக்கம் இன்றி அவள் தவிக்கிறாள். பல நாட்களாக இந்நிலை தொடருகையில் உடல் மெலிகிறது / அழகை இழக்கிறது. மகிழ்வுடன் கூடி இருந்த காலத்தில் மொழு மொழுவெனக் கொழுத்த அழகுடன் பொலிவாகக் காணப்பட்ட தோள்கள் இப்போது மெலிந்து வத்தலும் தொத்தலுமாக ஆகிக்கொண்டிருக்கின்றன.

வெளிப்படையான இந்த மெலிவு, காதலர் பிரிவை அறிவிக்கும் படமாக இருக்கிறது.

துயரமான நிலை!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 12 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Aug 02, 2018 9:07 pm

#1234
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்


சென்ற குறளைப்போன்றே இதிலும் தோள்களின் மெலிவு தான் புலம்பப்படுகிறது. சில புதிய சொற்கள் படிக்கவும் வழி செய்கிறார் வள்ளுவர்.

பணை / பணைத்தல் = பருமனோடு (பொலிவாக / வீக்கத்துடன்) இருத்தல். இங்கே வருவது பணைநீங்கி என்பதால் இளைத்தல் / மெலிதல் என்று கொள்ள வேண்டும்.

பைந்தொடி - தொடி என்றால் வளையல் என்றறிவோம், பைந்தொடி = பொன் வளையல் (பசுமை நிறம் என்றும் கொள்ளலாம், மணக்குடவர் பச்சை மரகத வளையல் என்கிறார். பசும்பொன் / தூய்மையான பொன் வளையல் என்றும் விளக்கலாம். பெண்ணின் கையில் / தோளில் இடும் அணிகலன்)

கவின் - அழகு, அதனால் "தொல் கவின்" = முன்பு இருந்த அழகு

துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள்
துணை(வர்) விட்டுப்பிரிந்ததால் முன்பிருந்த (பழைய) அழகு இல்லாமல் வாடிய தோள்

பணைநீங்கிப் பைந்தொடி சோரும்
இளைத்து / மெலிந்து போனதால் அதிலுள்ள பொன்வளையல் (அல்லது, மரகத வளையல்) கழன்று போகிறதே!

மகிழ்ச்சி இல்லையேல் உடல் இளைத்துப்போகும் - இது நாம் அன்றாடம் காணும் நிகழ்வு! காதலனைப் பிரிந்த காதலிக்கு இந்தச்செய்யுளில் நடக்கிறது!


app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 12 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Aug 03, 2018 6:34 pm

#1235
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்


சென்ற குறளின் தொடர்ச்சி - சொல்லப்போனால், அதே இரண்டாவது அடியை மீண்டும் இந்தக்குறளில் பயன்படுத்துகிறார் (தொல்கவின் வாடிய தோள்).

தோள் மெலிந்து வளை கழலுவதைச் சென்ற குறளில் சுட்டிக்காட்டியவர், இங்கே அது எல்லோருக்கும் சொல்லும் செய்தி என்னவென்று அறிவிக்கிறார். "கொடியார் கொடுமை உரைக்கும்" என்று சொல்லுவது நம் நாளிலும் இருக்கும் உரைநடை போல் அவ்வளவு எளிய தமிழில் தான் இருக்கிறது Smile

பெண்ணைப்பிரிந்து சென்று விட்ட காதலன் எப்படி ஒரு கொடிவனாக அவளுக்குக்கொடுமை செய்கிறான் என்று வளையலும் அழகும் இழந்த தோள் உரக்கச் சொல்லுகிறது. (வாய்ப்பேச்சுத் தேவையில்லை - உடல் மொழி பல விதங்களில் வெளிப்படும் என்றும் வள்ளுவர் கற்றுக்கொடுக்கிறார்).

தொடியொடு தொல்கவின் வாடிய தோள்
(மெலிந்ததனால்) வளையலையும் முன்பிருந்த அழகையும் இழந்து விட்ட தோள்கள்

கொடியார் கொடுமை உரைக்கும்
(இதற்கு யார் காரணம் என்று சுட்டிக்காட்டி அந்தக்) கொடியவரின் கொடுமையை உரக்கச்சொல்லும்!

நீண்ட நாட்கள் கழித்து யாரைப்பார்த்தாலும் அவர்கள் மீது அளவற்ற அன்புள்ளவர்கள் சொல்லும் ஒரு வழக்கம் இது "என்னப்பா / என்னம்மா ரொம்ப மெலிஞ்சு போயிட்டியே" (அம்மாக்கள் வெளியூரில் வேலை செய்யும் மகன்களிடம் எப்போதும் சொல்லுவதுண்டு).

பல நேரங்களிலும் அது உண்மையாக இருக்க வேண்டும் என்றில்லை - அவர்கள் கண்ணுக்கு அப்படிப்படுகிறது என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால், இங்கு நாம் காண்பது அத்தகைய நிலையல்ல. அதற்கான தெளிவாகத்தான் "வளையலே கழன்று விழுந்து விட்டது" என்று கூட்டிச்சேர்ப்பது.

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 12 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Aug 06, 2018 6:50 pm

#1236
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து


"நெஞ்சைத்தொடும்" வகையிலான குறள் Smile

அதாவது, காதலர் பிரிந்து விட்ட துன்பத்தால் தொடர்ந்து வாடுவதால் இவளது உடல் பொலிவிழந்து போயிருக்கிறது. தோள் மெலிந்து வளையல் நெகிழ்ந்து விழுகின்ற நிலை.

இப்படியெல்லாம் தன்னுடைய அழகை இழந்து கொண்டிருக்கும் நிலையில் அதையெல்லாம் விட்டுவிட்டு இவள் வேறொன்றுக்காகக் கவலைப்படுகிறாள். அதாவது, அவளது இந்த நிலைமைக்கு "அவர் தான் காரணம், கொடியவர்" என்று மற்றவர்கள் தன்னுடைய காதலரைத் திட்டுகிறார்களே என்று எண்ணி எண்ணி நொந்து போகிறாளாம். நெஞ்சைத்தொடாமல் என்ன செய்யும்?

தனக்கு வந்திருக்கும் துன்பத்தை விட அதற்குத் தன் காதலர் தான் காரணம் என்று யாரும் திட்டக்கூடாதே என்ற அளவுக்கு அவர் மீதான அன்பு, காதல்! எவ்வளவு பெரிய மனது அவளுக்கு!

தொடியொடு தோள்நெகிழ
(பிரிவுத்துயரால்) வளையல் கழன்று விழுமளவுக்குத் தோள் மெலிந்திருக்க

அவரைக்கொடியர் எனக்கூறல் நொந்து நோவல்
(இதற்குக்காரணமாக) எனது காதலரைக் கொடியவர் என்று (ஊரார்) கூறுவதால் நொந்து வருந்துகிறேன்!

மற்றவர்களது வசவு (தனக்கோ அல்லது தான் விரும்புவோருக்கோ) கிடைப்பது எல்லாவற்றையும் விட மிகப்பெரிய துன்பம் என்று வள்ளுவர் சொல்லாமல் சொல்லுகிறார். (வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுதல் என்று உருவகமாகச் சொல்லுவார்கள்)

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 12 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Aug 07, 2018 11:41 pm

#1237
பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து


பூசல் என்ற சொல்லுக்குப் பல பொருட்கள் இருப்பதால் உரைகளும் பலவிதத்தில் விளக்குகின்றன.

மு.க. எளிமையான பொருளைச்சொல்லி விடுகிறார் - துன்பம் என்று. (வாடு தோட்பூசல் = வாடும் தோள்களின் துன்பம்).

அதற்குள்ள வேறொரு பொருளான "எல்லோருக்கும் தெரிவித்தல் / ஆரவாரம்" என்பதை வேறு சில உரைகள் எடுத்துக்கொள்கின்றன. ("அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்" - என்ற குறளில் அன்பு கண்ணீர் வழியே வெளிப்பட்டு விடும் என்பதற்கு இதே சொல் - பூசல் - பயன்படுத்தப்பட்டிருக்கிறது). அதன் அடிப்படையில், வாடிய தோள் எல்லோருக்கும் வெளிப்படையாக / ஆரவாரமாக உரைப்பதாக அந்த உரைகள் சொல்கின்றன. இதையே இன்னும் கொஞ்சம் கூட்டி , ஊரார் பூசல் செய்வதாக - அதாவது, வெளிப்படையாகப் பேசுவதாகச் சொல்லும் உரையும் இருக்கிறது.

பாடு என்ற சொல்லுக்கு எல்லோருமே "பெருமை" (பாடப்படுவது) என்று பொருத்தமாகச் சொல்லியிருப்பதால் அங்கே குழப்பமில்லை Smile ஆனால், எப்படி இவளுடைய நெஞ்சே இவளுக்காகத் தூது செல்லும் என்பது புரிய மாட்டேன் என்கிறது Smile அவ்விதத்தில் கொஞ்சம் குழப்பம் தான்!

நெஞ்சே
என் நெஞ்சமே!

கொடியார்க்கென் வாடுதோட் பூசல் உரைத்து
(என்னைப் பிரிந்து சென்ற அந்தக்) கொடியவருக்கு வாடுகின்ற என் தோள் வெளிப்படுத்தும் துன்பத்தைச் சொல்லி

பாடுபெறுதியோ
(அதனால்) பெருமை அடைவாயோ?

எப்படிப்பெருமை கிடைக்கும்? தூது செல்வதே ஒரு நல்ல செயல் தான். அதன் வழியே அவர் உணர்ந்து மீண்டும் வந்து சேருவாரானால் இன்னும் மகிழ்ச்சியான சூழல். இப்படியாக, இந்த நெஞ்சு தூது சென்று பெருமை அடைய முடியும் என்று தனக்குத்தானே புலம்பிக்கொள்கிறாள்!

ஆக மொத்தம் நாம் தெரிந்து கொள்வது - எல்லோரும் பார்த்துக் கவலைப்படும் அளவுக்கு இவளது தோள் மெலிந்து உறுப்பு நலன் அழிந்து கிடக்கிறது!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 12 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Aug 09, 2018 11:12 pm

#1238
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது 
பைந்தொடிப் பேதை நுதல்

இந்த அதிகாரத்தில் இது வரை கண்ட குறள்களில் இருந்து மிகவும் வேறுபட்ட செய்யுள். சொல்லப்போனால், கற்பியலில் இது போன்ற கருத்துள்ள குறள் இது வரை கண்டதாக நினைவில்லை. 

என்ன விதத்தில்?

1. இது காதலனின் கண்ணோக்கில் எழுதப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது (உரைகளும் அப்படித்தான் சொல்கின்றன). பொதுவாகக் கற்பியலில் இது வரை காதலியின் புலம்பல் தான் தூக்கல். மட்டுமல்ல, இந்த அதிகாரத்தில் இது வரை அவளது எண்ண ஓட்டங்கள் தான் கண்டோம்.

2. இங்கே காதலர் இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள். (விட்டுப்பிரிந்து நிலை அல்ல).

அவ்விதத்தில், மிகவும் இனிமையான சூழலில் வரும் "உறுப்பு நலன் அழிதல்".  அதாவது, இது துன்பப்பாடல் அல்ல - வேடிக்கையான, நகைச்சுவைப்பாடல் என்றே சொல்லி விடலாம் Smile நிறையக்குறள்களுக்குப்பின் இப்படி ஒரு மகிழ்ச்சியான ஒன்றைப்படிப்பது புத்துணர்வு தருகிறது என்று சொல்லலாம்,

இங்கும் "பிரிவு / விலகல் / உறுப்பு நலன் அழிதல்" இவையெல்லாம் உண்டு, என்றாலும் நகைச்சுவையாக!

முயங்கிய கைகளை ஊக்க
தழுவிக்கொண்டிருக்கும் கைகளை சற்றே தளர்த்த 

பைந்தொடிப்பேதை நுதல்  பசந்தது
பொன்வளையல் அணிந்த பெண்ணின் நெற்றி (அதற்குள்ளேயே) பசலை நிறம் அடைந்து விட்டது
("கொஞ்சமே கொஞ்சம் தாங்க விலகினேன், அதைக்கூடத்தாங்க மாட்டேங்குறாங்க" Laughing )

"மோப்பக்குழையும் அனிச்சம்" வகையான பேதைப்பெண். Smile

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 12 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Aug 09, 2018 11:56 pm

#1239
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்


சென்ற குறளை விடவே இன்னும் தெளிவாக இங்கே காதலன் தான் பாடுகின்றான் என்று உறுதியாகச் சொல்லி விட முடியும் Smile

கிட்டத்தட்ட அதே போன்ற நகைச்சுவை / மிகைச்சுவைப் பொருள் தான். "தழுவிக்கொண்டிருக்கும் பொழுதில் இருவருக்குமிடையே குளிர்ந்த காற்று புகுந்து விட்டதாம் (சிறிய பொழுதுக்கு மட்டுமே ஆக இருக்கலாம்). அதையே "பிரிவு" என்று கருதிக்கொண்டு பசலை அடைந்து விட்டாளாம் :rotfl1:

பெண்ணின் கண்ணுக்கு வரும் அந்த இமைப்பொழுதிலான மாற்றம் வேறு யாரும் கண்டுணர முடியாது என்பதால் காதலனின் குரலில் தான் இந்தப்பாடல் வருகிறது என்று எளிதாகச் சொல்லி விடலாம்.

"பெரு மழைக்கண்" என்ற விவரிப்பைப் பல உரையாசிரியர்களும் விதவிதமாக விளக்குகிறார்கள். (பெரிய மழை போன்ற, அகன்று நீண்ட, குளிர்ச்சியான என்றெல்லாம் விளக்கங்கள். முதலில் இந்தச்சொல்லாடலைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது "பெரிய மழை போல் அழுகிறாளோ, அழுமூஞ்சிக் கண்களோ" என்று - அது தவறான புரிதல் என்பது உறுதி Smile )

முயக்கிடைத் தண்வளி போழ
தழுவலுக்கு இடையில் குளிர்ந்த காற்று புகுந்ததால்
(இறுகத்தழுவிய காதலன் சற்றே இளகிய போது காற்று நடுவில் புகுந்து விட்டதாம் - காற்றும் புகாமல் தழுவிக்கொண்டே 24 மணி நேரமும் இருக்க முடியுமா என்ன Laughing )

பசப்புற்ற பேதை பெருமழைக்கண்
(பிரிவுத்துயரால்) பேதைப்பெண்ணின் பெரிய குளிர்ந்த கண்கள் (வருந்திப்) பசலை நிறமடைந்தன

இன்னொரு "மோப்பக்குழையும்" வகையான மிகைச்சுவை கொண்ட பாடல்!

ஒரு ஆணின் பார்வையில், இவ்வளவு "தொட்டால் சிணுங்கி"யோடு காலம் தள்ளுவது அவ்வளவு எளிதாக இருக்குமோ என்றும் தோன்ற வைக்கும் பாடல் Wink

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 12 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Aug 10, 2018 8:54 pm

#1240
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு


கடந்த இரண்டு குறள்களின் தொடர்ச்சி என்று இதை எடுத்துக்கொள்ளலாம்.

அதாவது, அருகில் காதலன் உள்ளபோதே பெண்ணின் உறுப்பு நலன் அழிதல். அதை அந்தக்காதலனே கண்டு செய்யுளாகப் பாடுதல்.

அதிகாரத்தின் எட்டாம் குறளில் தழுவல் கொஞ்சமே நெகிழ்ந்த போது நெற்றி பசலை அடைந்ததாகச் சொல்லப்பட்டது. அதன் தொடர்ச்சியாகக் கண்ணும் துன்புற்று நலிந்ததாக இங்கே எழுதுகிறார் கவிஞர். அதே போன்று, ஒன்பதாம் குறளில் குளிர் காற்று இடையில் புகவும் கண் நலிந்ததாகச் சொல்கிறார். அதே சூழல், விதவிதமான பார்வைகள் Smile

ஒண்ணுதல் செய்தது கண்டு
ஒளி மிகுந்த (அல்லது அழகிய) நெற்றி (பசலை கொள்ளல்) செய்ததைக் கண்டவுடனே

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
கண்ணின் பசப்பும் (பசலை நிறம் / ஈரம் / வெட்கம்) துன்ப நிலை அடைந்துவிட்டதே!

இந்தக்குறளுக்கு இன்னொரு விளக்கமும் வலையில் கண்டேன், அது கொஞ்சம் வேடிக்கையானது. அதாவது, நெற்றிக்கும் கண்ணுக்கும் இடையில் போட்டி என்ற விளக்கம்.

- தழுவல் மெல்ல இளகிய போதே நெற்றி பசலை அடைந்தது
- கண்ணோ, தழுவல் இளகி இடையே குளிர் காற்று வந்த பின்னர் தான் பசலை அடைந்தது
- ஆக உறுப்பு நலன் அழிவதில் நெற்றி (கண்ணை விட) விரைவாகச் செயல்பட்டு முந்திக்கொண்டு விட்டதாம் Smile

- நெற்றி முந்திக்கொண்டு விட்டதே என்று கண்ணுக்கு (அதாவது, கண்ணின் பசலைக்குத்) துன்பம் வந்ததாம் Smile

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 12 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Aug 13, 2018 8:55 pm

#1241
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து

(காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடு கிளத்தல் அதிகாரம்)

புதிய அதிகாரம் - தன்னுடைய நெஞ்சோடு - அதாவது, தனக்குத்தானே - பேசித்தள்ளுதல் என்று பொருளா? (புலம்புவதற்கு வேறு ஆள் இல்லை போலும்). கிளத்தல் = தெளிவாகக்கூறுதல்.  

'எவ்வம்' என்றால் "ஒன்றினும் தீராத" என்று உரையாசிரியர்கள் சொல்வதன் அடிப்படையில் அகராதியில் பொருள் சொல்கிறார்கள் (1241-ஆம் குறளை மேற்கோள் காட்டுகிறார்கள்).

மற்றபடி, எவ்வம் என்றால் துன்பம் என்று பொருள். துன்பமான நோய் என்றோ, தீரா நோய் என்றோ எடுத்துக்கொள்ளலாம்.

அது என்ன நோய் என்று வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், காமத்துப்பால் என்ற அடிப்படையில் காமநோய் என்று நாம் முடிவுக்கு வருவது எளிதே. அதைத்தான் எந்த விதத்திலும் தீர்க்க முடியாத நோய் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார் Smile

நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும்
நெஞ்சே, என்ன விதத்திலும் தீராத இந்தக்காம நோயைத் தீர்ப்பதற்கு

மருந்து நினைத்தொன்று சொல்லாயோ
மருந்து ஏதாவது ஒன்றை ஆராய்ந்து பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயா?

உறுப்பு நலன் எல்லாம் அழிந்த பின், தனக்குத்தானே பேசிக்கொள்வது தான் அடுத்த படி போலிருக்கிறது.

காதல் நோய் முற்றியால் பைத்தியம் பிடித்து விடும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கே அது தான் நடந்திருப்பதாகத் தோன்றுகிறது Wink

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 12 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Aug 14, 2018 7:13 pm

#1242
காதல் அவரிலர் ஆகநீ நோவது 
பேதைமை வாழியென் நெஞ்சு

வள்ளுவர் நெஞ்சைக்கூப்பிடும் போது அடிக்கடி "வாழி / வாழ்க"  என்று சொல்வது குறிப்பிடத்தக்கது. (இதே போன்ற பயன்பாடு முன்பும் பார்த்திருக்கிறோம் அல்லவா?)

ஏன் அப்படி? இது அந்தக்காலத்து மனிதர்களின் உளவியல் குறித்த ஆராய்ச்சிக்கு உகந்த ஒன்று என்று கருதுகிறேன் Smile

கவிதையின் அமைப்பு / வெண்பாவின் தளைக்கட்டு போன்ற எளிய காரணமாகக்கூட இருக்கலாம். என்றாலும் ஒன்றுக்கு மேல் இப்படிப்பட்ட பயன்பாடு வந்தால் அங்கே வேறேதோ பொருள் இருக்கிறது என்பது தான் சரியான புரிதலாக இருக்க முடியும்.

அது என்ன? தனக்குத்தானே "வாழ்க" என்று வாழ்த்துவதில் என்ன உட்பட்டிருக்கிறது? 

வெறுமென அன்றைய நடைமுறையா அல்லது கடினமான சூழலில் தன்னம்பிக்கை கொள்வதற்காகச் சேர்த்துக்கொள்வது முன்னோரின் வழக்கமா?

வாழியென் நெஞ்சு
என் நெஞ்சே நீ வாழ்க!

காதல் அவரிலர்
அவரிடத்தில் தான் காதல் இல்லையே

ஆகநீ நோவது பேதைமை
அப்படியிருக்க (இதைப்புரிந்து கொள்ளாமல்)  நீ (அவரை நினைத்து நினைத்து) நொந்து கொள்வது பேதைமை 

இந்தப்பெண்ணுக்குத் தான் செய்வது முட்டாள்தனம் என்று தெரிந்து தான் இருக்கிறது. (விரும்பாத ஒருவனை ஒரு தலையாகக் காதலித்துத் துன்புறுவது).

என்றாலும், அதிலேயே தொடருகிறாள். அதற்குத் தானல்ல காரணம் என்றும் சொல்லிக்கொள்கிறாள். ("பாழாப்போன இந்த மனசு தான் கேக்க மாட்டேங்குது" என்று பல சூழல்களிலும் ஆட்கள், குறிப்பாகப் பெண்டிர், பேசுவதை நாம் அடிக்கடி கேட்டிருப்போம்)

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 12 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 16 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum