Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 23 of 40 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 23 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Nov 05, 2015 9:17 pm

#517
இதனை இதனான் இவன்முடிக்கும் என்றாய்ந்து 
அதனை அவன்கண் விடல்

பலரும் நன்கு அறிந்த "மேலாண்மை"க் குறள் Smile

யாருக்கு என்ன வேலை கொடுக்க வேண்டும் என்று அருமையான விளக்கம். 

பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்து இன்றும் மிகப்பொருத்தமான அடிப்படை! 

இதனான் இதனை 
இன்னின்ன காரணங்களால் இந்தச்செயலை 

இவன்முடிக்கும் என்றாய்ந்து 
இவன் (வெற்றிகரமாகச்) செய்து முடிப்பான் என்று ஆராய்ந்தறிந்த பின்னர் 

அதனை அவன்கண் விடல்
அந்தச்செயலை (பொறுப்பை) அவனிடம் கொடுக்க வேண்டும்

இ-இ-இ / அ-அ என்று அழகான மோனை (மற்றும் இதனை / அதனை & இவன் / அவன் என்று எதுகையும்) இருப்பதால் கேட்பதற்கும் படிப்பதற்கும் இனிமையான செய்யுளும் கூட.

அப்படியாக, சொற்சுவையும் பொருட்சுவையும் கூடி வந்த, விண்மீன் போல் மின்னும் குறள்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 23 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Nov 06, 2015 10:26 pm

#518
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை 
அதற்குரியனாகச் செயல்

கொஞ்சம் "சொன்ன கருத்தே திரும்பத்திரும்ப வருகிறதோ" என்று தோன்றினாலும், இனிமையான செய்யுள் Smile

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
(ஒருவன் குறிப்பிட்ட) செயலுக்கு உரியவனா என்று ஆராய்ந்த பின்னரே அவனை 

அதற்குரியனாகச் செயல்
அதற்கு உரியவனாக நியமிக்க வேண்டும்

"திரும்பத்திரும்ப" "மீண்டும் மீண்டும்" ஒன்று சொல்லப்படுவதில் இருந்து நாம் உணர வேண்டிய ஒன்று உண்டு Embarassed

அதாவது, "சொல்லப்படும் கருத்து அவ்வளவு இன்றியமையாத ஒன்று, வேண்டிய ஒன்று" என்பது!

அப்படியாக, பொறுப்புக்கு / செயலுக்குத் தகுந்தவனா என்று ஆராயாமல் அத்தகைய இடத்தில் வைக்கலாகாது!

அப்படிச்செய்யாமல் பொறுப்புக்கொடுத்தால் தீய பின் விளைவுகள் உண்டாகும் என்பது பலரும் வாழ்வில் கண்டதே!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 23 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Nov 09, 2015 6:38 pm

#519
வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக 
நினைப்பானை நீங்கும் திரு

கேண்மை = நட்பு / உறவு என்று பள்ளிக்காலத்தில் படித்தது இன்னும் நினைவில் இருக்கிறது Smile 
(இந்தக்குறளுக்கு முன்னும் ஒருவேளை இந்தச்சொல்லை இங்கே பார்த்திருக்க வழியுண்டு)

அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தாத இது போன்ற அழகான சொற்கள் தமிழில் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன Sad

நட்பு / உறவு இரண்டிலும் "கற்பு" வேண்டும் என்று அவ்வப்போது நாம் கேட்பதுண்டு Wink  (அதாவது, ஒருவருடைய நம்பிக்கைக்கு மாறாக செயல்படுதல் கூடாது என்பது).

இங்கோ, சற்றே வேறுபட்ட விதத்தில், "உறவில் குறை காண முயலாதே" என்று வருகிறது Smile


வினைக்கண் வினையுடையான் கேண்மை
முழு ஈடுபாட்டுடன் செயலில் ஈடுபடுவனின் (அல்லது, செயலில் சரியாகச் செயல்படுபவனின்) உறவை / நட்பை

வேறாக நினைப்பானை 
தவறாக நினைப்பவனை (இவன் நமக்கு உண்மையாக - அதாவது "கற்புடன்" - இருக்கிறானா என்று ஐயத்தில் இருப்பவனை)

நீங்கும் திரு
செல்வம் சேராது 
(அப்படிப்பட்ட ஐயம் பிடித்த ஆளிடம் இருந்து செல்வம் ஓடிவிடும்)

- ஆளை ஆய்ந்து தேர்ந்து வேலை கொடுத்தாகி விட்டது. 
- வேலையும் அவன் நன்கு செய்கிறான்.

இந்நிலையில் அவனது உறவு / நட்பு தவறோ என்று ஐயுறுவது & குழம்புவது அறிவு கெட்ட செயல், மன்னனுக்கு ஆகாது என்கிறார் வள்ளுவர்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 23 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Nov 10, 2015 10:43 pm

#520
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் 
கோடாமை கோடா துலகு

தொழிலாளர் நாளில் பாட வேண்டிய பாடல் Smile
(உழைப்போருக்காக உழைப்பதாகச் சொல்லிக்கொள்ளும் இயக்கங்களுக்கு இந்தக்குறள் தெரிந்திருக்குமா தெரியாதா தெரியவில்லை Laughing )

வினைசெய்வான் கோடாமை கோடா துலகு
செயல் செய்வோர்  / உழைப்போர் கோடாமல் (கோணல் ஆகாமல், வளையாமல், வாடாமல்) இருக்கும் வரை உலகத்துக்கும் கோட்டம் இல்லை!  (ஆகையால் அத்தகையோரின் நிலையை)

மன்னன் நாடோறும் நாடுக
மன்னன் நாள்தோறும்  ஆராய வேண்டும்!

உழைப்போர் நன்றாக இருந்தால் நாடும் நன்றாக இருக்கும். 

"அவர்கள் எப்படி இருக்கிறார்கள்" என்று மன்னன் ஒவ்வொரு நாளும் ஆராய வேண்டும் Smile

(கதைகளிலும் திரைப்படங்களிலும் வரும் மன்னனின் மாறுவேடம் அணிந்த நகர்வலம் நமது மனதில் வரலாம்).

நிறுவனங்கள், மேலாளர்கள் எல்லோருக்கும் மன்னனுக்குள்ள இதே அறிவுரை பொருந்தும்.

உங்களுக்காக உழைப்போர் மனம் கோணாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 23 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Nov 11, 2015 10:46 pm

#521
பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் 
சுற்றத்தார் கண்ணே உள
(பொருட்பால், அரசியல், சுற்றந்தழால் அதிகாரம்)

சுற்றந்தழால் = சுற்றம் + தழுவுகை / தழுவுதல் 
(சுற்றத்தாரோடு சேர்ந்து இருத்தல், உறவினரோடு தழுவி இருத்தல்)

குறிப்பாக மன்னனுக்கும் (அது போன்ற தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும்) சுற்றத்தினரோடு சேர்ந்திருப்பதால் வரும் சிறப்பும் பயன்களும் இந்த அதிகாரத்தில் எதிர்பார்க்கலாம் Smile

பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல்
பொருள் வளங்கள் இழந்த நிலையிலும் ஒருவர் மீது முன்பிருந்த அதே உறவு / நட்பு கொள்ளுதல்

சுற்றத்தார் கண்ணே உள
சுற்றத்தாரிடம் மட்டும் உள்ள பண்பாகும்  
(அல்லது அப்படிப்பட்ட பண்பு உள்ளோர் மட்டுமே உண்மையான சுற்றம்)

நடைமுறையில் சில வேறுபாடுகள் இருக்கின்றன (வசதி கூடிய உறவினருக்குக் குறிப்பிடத்தக்க மதிப்பு, ஏழைக்கு அத்தகைய மரியாதை இல்லாமை). 

என்றாலும், சுற்றம் ஏழ்மையிலும் கூடவே இருப்பது பொதுவாக நம் நாட்டில் காணும் பண்பே!

குறிப்பாக, குடும்ப விழாக்களுக்கு அழைப்புக்கொடுப்பதில் நான் நேரடியாகக் கண்ட உண்மை. 

ஏழை, செல்வந்தன் என்றெல்லாம் பார்க்காமல் "எல்லோருக்கும் அழைப்புக்கொடுத்து விட்டோமா, யாரையும் விட்டு விடவில்லையே" என்று கவலைப்படுவதை எத்தனையோ முறை கண்டிருக்கிறேன்.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 23 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Nov 12, 2015 11:17 pm

#522
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்


விருப்பறா - புரிகிறது
(விருப்பம் அறாத / அன்பு குறையாத)

அது என்ன "அருப்பறா"?

அகராதி என்ன சொல்லுகிறது பார்ப்போம்!

அங்கே "அரு" இருக்கிறது ஆனால் "அருப்பு" காணவில்லை Sad

அருப்புக்கோட்டை என்பது தென் தமிழகத்தில் உள்ள ஒரு நகரம்.
(எம்ஜிஆர் முதல் முறை தமிழ்நாட்டின் முதல்வராக ஆன 1977 தேர்தலில் அருப்புக்கோட்டை சட்டமன்றத்தொகுதியில் தான் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.)

எப்படியோ, மற்ற உரையாசிரியர்கள் இதை "வளர்ச்சி" என்று சொல்லுவது ஏன் என அங்கும் இங்கும் தேடியதில், உவப்பாக இருந்த விளக்கம்:

விருப்பு = விரும்பு என்பது போல, அருப்பு = அரும்பு  Smile

அப்படியாக, அருப்பு = வளர்ச்சி Smile

விருப்பறாச் சுற்றம் இயையின்
விருப்பம் / அன்பு மாறாத சுற்றம் அமைந்தால், அது

அருப்பறா ஆக்கம் பலவும் தரும்
வளர்ச்சி குன்றாத பல நன்மைகளையும் தரும்!

அன்பான சுற்றம் மாபெரும் வலிமை, வளர்ச்சி, ஆக்கம்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 23 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Nov 13, 2015 8:15 pm

#523
அளவளாவில்லாதான் வாழ்க்கை குளவளாக் 
கோடின்றி நீர் நிறைந்தற்று

இல்பொருள் உவமை அணி Smile

"கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்திருப்பது போல" என்கிறார் வள்ளுவர்! 

காட்டாறு தரும் நீரால் நிறைந்து வேளாண்மைக்கு உதவும் குளங்கள் நிறைய இருந்த பகுதியில் பிறந்து வளர்ந்தவன் நான். 

அந்த முறையில் இந்த உவமையின் தாக்கத்தை நன்கு அறிய வாய்ப்புக்கிட்டியது 1977ல் பெரும் மழை பெய்த காலத்தில் Sad  

கரை உடைந்த குளங்களில் இருந்து புறப்பட்ட வெள்ளம் பல சிற்றூர்களை மணல் மேடாக்கியது. ஒரு குளம் உடைந்தால் அதன் பின் விளைவாக இன்னும் பல உடையும் என்பது அப்போது தெரிந்த உண்மை.

கணக்கு வழக்கில்லாமல் மனிதரும், விலங்குகளும் இறந்தும் பொருட்கள் இழந்தும் நடந்த கொடுமைகள் நேரில் கண்டவை. 

கிட்டத்தட்ட எங்கள் ஊருக்கும் அது நடக்கும் என்று அஞ்சி, உறக்கம் வராதிருந்த இரவுகள் உண்டு. நாங்கள் இருந்த வீடு உறங்கும்போது இடிந்து விழக்கூடும் என்று அஞ்சி, வேறொருவர் வீட்டில் பல நாட்கள் உறங்கினது பசுமையாய் நினைவில் இருக்கிறது!

அப்படி, நீரில்லாமல் போகும் கரையற்ற குளம் போல் தான் சுற்றம் இல்லாதான் வாழ்க்கை என்கிறது இந்தக்குறள்.

அளவளாவில்லாதான் வாழ்க்கை
பேசிப்பழகுவதற்கு (சுற்றத்தார்) இல்லாதவனது வாழ்க்கை

குளவளாக்கோடின்றி
குளத்திற்குக் கரையில்லாமல் அதன் பரப்பில்

நீர் நிறைந்தற்று
நீர் நிறைந்திருப்பது போல!

கறையில்லாமல் குளத்தில் நீர் நிறையாது. சுற்றம் இல்லாமல் ஒருவன் வாழ்விலும் நிறைவில்லை. 
(வளம், இன்பம் ஒன்றும் இருக்காது என்று பொருள்)

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 23 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Nov 17, 2015 11:52 pm

#524
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வந்தான் 
பெற்றத்தால் பெற்ற பயன்

எளிதாகப் புரிந்து கொள்ளத்தக்க குறள்!

இனிய பொருள் கொண்டதும் கூட Smile

செல்வம் இருந்தும் கூடிக்களிக்க உறவுகள் இல்லையென்றால் பலன் இல்லை. அப்படிப்பட்ட வாழ்வில் மகிழ்ச்சி இல்லை என்பது உண்மை. அதை இனிய செய்யுளாக வடிவமைத்திருக்கிறார் வள்ளுவர்.

செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன்
பொருட்செல்வம் ஒருவர் பெறுவதால் வரும் பயன்

சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல்
தன்னோடு சுற்றத்தார் சூழ வாழும் வழி தான்!

ஆக, உங்களுக்குப் பொருள் சேரச்சேர சுற்றத்தாரை இன்னும் கூடுதல் அரவணையுங்கள். 

அவர்களோடு கூடி நேரம் செலவழியுங்கள். 

அவர்களோடு உங்கள் அன்பைப்பெருக்கி, வேண்டியவருக்கு நன்மைகள் செய்து மகிழுங்கள்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 23 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Nov 18, 2015 11:51 pm

#525
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய 
சுற்றத்தால் சுற்றப்படும்

கேரளத்தில் என்னோடு பணிபுரிந்த மென்பொருள் விற்பன்னர் அடிக்கடி (மலையாளத்தில்) சொல்வது :
"செப்பு இறங்ஙியில்லெங்கில் பந்து இல்ல" Smile

பொருள்: 
"பொருள் செலவு செய்யாதவனோடு உறவினர் இருக்க மாட்டார்கள்!"

அவர் எதிர்மறையாகச் சொன்ன கருத்தை இங்கே நேர்மறையில் குறளில் படிக்கிறோம்.

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின்
(பொருள்) கொடுத்தலும் இனிமையாகப் பேசுதலும் செய்பவர்

அடுக்கிய சுற்றத்தால் சுற்றப்படும்
அடுக்கடுக்காய்ச் சுற்றத்தாரால் சூழப்படுவார்

என் கருத்தில் "இன்சொல் பேசுதல்" பொருள் செலவழிப்பதைக் காட்டிலும் கூடுதல் இன்றியமையாதது!

உறவினர்கள் நடுவில் இன்சொல் பேசுவோர் தான் என் மனம் கவர்ந்தோர் என்பதை அழுத்திச்சொல்ல வேண்டியதில்லை Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 23 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Nov 20, 2015 12:13 am

#526
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் 
மருங்குடையார் மாநிலத்து இல்

மருங்கு என்ற சொல்லுக்கு உள்ள பல பொருட்களில் "சுற்றம்" என்பதும் ஒன்று என்பதாக அகராதி சொல்லி, இந்தக்குறளை மேற்கோள் காட்டுகிறது Smile

அந்த ஒரு சொல் புரிந்து விட்டால் இந்தக்குறளின் முழுப்பொருள் காண்பது எளிதே!

இங்கும் "பொருள் செலவு செய்பவனுக்கு நிறைய சுற்றத்தார் இருப்பார்" என்ற கருத்து அழுத்தம் திருத்தமாக மீண்டும் சொல்லப்படுகிறது Smile

பெருங்கொடையான்  வெகுளி பேணான் அவனின்
பெரிய கொடை வள்ளலாகவும் சினம் அடையாதவனாகவும் உள்ளவனை விட 

மருங்குடையார் மாநிலத்து இல்
கூடுதல் சுற்றத்தார் உள்ளோர் உலகிலேயே இல்லை

கொஞ்சம் உயர்வு நவிற்சி தான் ("மாநிலத்தில் இல்லை"). 

மற்றபடி, சினம் அடையாமல் இருந்தாலே நிறைய சுற்றத்தவர் அன்புடன் பழகுவார்கள். 

பொருள் நிறையக்கொடுக்கும் பண்பும் இருந்தால் சொல்லவே வேண்டாம் - சுற்றத்தார் சுற்றிச்சுற்றி வர வேறு காரணமும் வேண்டுமோ?

நிறையக்கொடுப்பவனுக்கு நிறையச்சுற்றம்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 23 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Nov 24, 2015 10:35 pm

#527
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் 
அன்ன நீரார்க்கே உள

அழகான உவமை! அருமையான குறள்!

இதுவும் பள்ளிக்காலம் தொட்டே நன்கு அறிமுகமான ஒன்று. பல இடங்களிலும் நாம் மேற்கோளாகப் படித்த ஒன்றும் கூட Smile

மட்டுமல்ல, இதில் பயன்படுத்தப்படும் உவமை அறியாமல் வாழ்பவர் யாரும் தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை! 

அப்படி யாராவது இருந்தால் - அதாவது, காக்கை உணவைத் தனது கூட்டாளிகளுடன் பகிர்ந்து உண்ணக் கரைந்து அழைப்பது கேட்காமல் நம் நாட்டில் வாழ்பவர்கள் இருந்தால் - அவர்கள் வாழ்வில் முழுமை இல்லை என்றே சொல்லுவேன்!

கரவு = மறைவு / மறைத்து வைக்கல் / ஒளித்தல் ; கரவா = மறைத்து வைக்காமல்

காக்கை கரவா கரைந்துண்ணும்
காக்கை மறைத்து வைக்காமல் கரைந்து (சுற்றத்தை அழைத்து) உண்ணும் 

அன்ன நீரார்க்கே ஆக்கமும் உள
அதே போன்ற இயல்பு உள்ளவர்களுக்கே ஆக்கம் (செல்வம் / உயர்வு) உண்டாகும் 

சுற்றத்தாரோடு தங்கள் வளங்களைப் பகிர்ந்து வாழுதல் எவ்வளவு தேவை என்று எளிமையான ஒரு பறவையிடம் பாடம் பயிலச்சொல்லும் குறள்.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 23 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Nov 25, 2015 8:44 pm

#528
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் 
அதுநோக்கி வாழ்வார் பலர்

"மன்னனின் பார்வையில் அனைவரும் ஒரு போல" என்பது பொதுவாக நமக்குச் சொல்லப்பட்ட பாடம்.

ஆனால் இங்கு வள்ளுவர் சொல்ல வரும் கருத்து வேறுபட்ட ஒன்று.

"எல்லாரையும் ஒரே போல் நோக்காமல் அவரவர் தகுதிக்கேற்பப் பார்" என்கிறது இந்தக்குறள் Smile

வேந்தன் பொதுநோக்கான் வரிசையா நோக்கின்
மன்னன் பொதுப்படையாக (எல்லாரையும் ஒரே போல்) நோக்காமல், அவரவர் வரிசையில் (தகுதிக்கேற்ப) நோக்கினால் 

அது நோக்கி வாழ்வார் பலர்
அதன் அடிப்படையில் அவனைச் சுற்றிப் பலரும் வாழ்வார்கள் 

"சுற்றந்தழால்" என்ற அடிப்படையில் இந்தக்கருத்தை நாம் நோக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட இடம் அரசமைப்பில் இருக்கிறது. அதோடு திறமைகள் தகுதிகளும் கணக்கில் எடுக்கப்பட வேண்டும்.

அல்லாமல் செயல்பட்டால் சுற்றத்தினர் விட்டுப்போய் விட வழியுண்டு. அது நன்மையாகாது என்று இந்தக்குறள் சொல்லுகிறது.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 23 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Dec 01, 2015 11:10 pm

#529
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் 
காரணம் இன்றி வரும்

"சுற்றம் பிரிவதற்கு என்ன காரணமோ அதைக்கண்டறிந்து நீக்க வேண்டும்" என்று சொல்லும் செய்யுள் Smile

"அப்படி நீக்கினால், போன சுற்றம் மீண்டும் வரும்" என்று உறுதி அளிப்பதன் வழியாக இந்த அறிவுரை சொல்லப்படுகிறது! 

அதாவது, ஏதோ ஒரு குறிப்பிட்ட காரணத்தால் சுற்றம் இழந்தோர் மனம் தளர வேண்டியதில்லை ; அந்தக்காரணம் நீங்கினால் மீண்டும் உறவு வரும் என்று நம்பிக்கை, வாக்குறுதி எல்லாம் வள்ளுவர் தருகிறார் Smile

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம்
(முன்பு) தம்முடையவராக இருந்து (பின்னர்) தம்மைப் பிரிந்து சென்றவருடைய சுற்றம் / உறவு

அமராமைக்காரணம் இன்றி வரும்
பொருந்தாமைக்கான (பிரிவுக்கான) காரணம் இல்லாமல் போகும் போது (மறுபடியும்) வரும்!

"தமர்" என்று சுற்றத்தவரை விளிப்பது குறிப்பிடத்தக்கது! 

"அவ்வளவு நெருக்கமானவர்கள்" என்று புரிந்து கொள்ளலாம்.

மீண்டும் நெருங்குவது "காரணம் நீங்குதலின்" அடிப்படையில் என்பதை மனதில் கொள்க. 

ஒரு வேளை அதை நீக்குவது நம் கையில் மட்டும் இல்லை என்றால் அதற்கான கூடுதல் முயற்சி எடுப்பது மற்றும் காத்திருப்பது தவிர வேறு வழியில்லை!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 23 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Dec 07, 2015 4:42 pm

#530
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் 
இழைத்திருந்து எண்ணிக் கொளல்

இழைத்து என்பதற்கு "ஆராய்ந்து" என்று முன்னமேயே ஒரு குறளில் (#417) பொருள் பார்த்திருக்கிறோம்.

"உழை"? அதற்கு "இடம்" என்று பொருள் சொல்கிறார்கள். அப்படியாக, "உழைப்பிரிந்து" என்பது "இடத்தை விட்டுப்பிரிந்து", "தன்னை / தனது நாட்டை விட்டு விலகி" என்றெல்லாம் பொருள் படும்.

தன்னை / தன் நாட்டை விட்டுப் பிரிந்த சுற்றத்தான் திரும்ப வரும் போது மன்னன் என்ன செய்ய வேண்டும்?

படிப்போம்!

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை
இடத்தைப் பிரிந்து பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் திரும்பி வந்தவனை

வேந்தன் இழைத்திருந்து எண்ணிக்கொளல்
மன்னன் ஆராய்ந்து பார்த்தே சேர்த்துக்கொள்ள வேண்டும்

இந்தச் சூழ்நிலையில் ஐயம் கொள்வதில் தவறில்லை. 

ஆனால், "முற்றுமாக சேர்த்துக்கொள்ளாமல் ஒதுக்கவும் வேண்டாம்" என்று சமநிலையுடன் கூடிய அறிவுரை சொல்கிறார்!

சுற்றந்தழுவுக, ஆனால் மன்னனுக்குரிய எச்சரிக்கையும் வேண்டும்! Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 23 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Dec 08, 2015 10:53 pm

#531
இறந்த வெகுளியின் தீதே சிறந்த 
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு
(பொருட்பால், அரசியல், பொச்சாவாமை அதிகாரம்)

பொச்சாப்பு என்றால் மறதி, அப்படியாக இந்த அதிகாரத்தின் பொருள் மறக்காமை / மறதியின்மை.

நண்பர் ஒருவர் சென்னை வெள்ளம் கடந்த நிலை குறித்த தன் கட்டுரையில் சில நாட்களுக்கு முன் இருந்த துன்பங்களை முழுவதுமாக மறந்து விட்டு மீண்டும் பரபரப்பாக அதே பழைய வாழ்க்கை வழிக்குத் திரும்பவதைக் குறிப்பிட்டிருந்தார். (அதாவது, முன் செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வதற்கான விதத்தில், பட்ட பாடுகளை விரைவில் மறந்த நிலை)

"வரலாறு தன்னையே மீண்டும் மீண்டும் நிகழ்த்துகிறது" என்ற ஆங்கிலப் பழமொழி நாம் கேட்டிருக்கிறோம். அதற்கான குறிப்பிடத்தக்க காரணம் மறதி. தாம் செய்த பிழைகளின் கெட்ட விளைவுகளை மறந்து விட்டு மீண்டும் அவற்றையே செய்து வாழும் வழி. 

பட்டும் திருந்தாத, ஆர்.கே.நாராயண் எழுதிய "குருட்டு நாய்" கதையில் வரும் நாயின் வாழ்க்கை.

மறதி எவ்வளவு தீமையானது என்று வள்ளுவர் எழுதிச் சொல்லும் ஒரு அதிகாரம். 

தமிழ்நாட்டினர் மிகவும் படிக்க வேண்டிய ஒன்று!  குறிப்பாக இன்று!!

சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு
சிறந்த இன்ப மகிழ்வினால் வரும் மறதி

இறந்த வெகுளியின் தீதே
அளவு கடந்த சினத்தினை விடவும் தீமையானது!

பட்ட துன்பங்களையும், கிடைத்த நன்மைகளையும் மறந்து விடுவதால் தான் பல தீமைகளும்!


Last edited by app_engine on Thu Dec 10, 2015 12:04 am; edited 1 time in total

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 23 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Dec 10, 2015 12:04 am

#532
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை 
நிச்ச நிரப்புக் கொன்றாங்கு

"நிச்ச நிரப்பு" என்றால் என்ன? 
(அது அறிவினைக் கொன்று விடுவதாக இங்கே படிக்கிறோம்)

நிச்சம் = எப்பொழுதும் (எல்லா நாளும், என்றும்)

நிரப்பு = வறுமை 
(இது கொஞ்சம் வேடிக்கையான சொல். நிரப்பு என்பது பொதுவாக, "நிறை / நிறைவு" என்றே நாம் அறிந்திருக்கிறோம். நேரடி எதிர்ச்சொல்லான "குறைவு" என்ற பொருளும் அதற்கு இருக்கிறதாம்! அப்படியாக, வறுமை என்பதற்கு இந்தச்சொல் வருகிறது)

ஆக, நிச்ச நிரப்பு = எப்பொழுதும் வறுமை / தொடர்ந்த பட்டினி என்றெல்லாம் கொள்ளலாம். அந்நிலை தொடரும்போது ஒருவனுடைய அறிவு கொல்லப்படும் Sad

இத்தகைய நிலை இங்கு உவமையாக வருகிறது. 

அறிவினை நிச்ச நிரப்புக் கொன்றாங்கு
எப்பொழுதும் இருக்கும் வறுமை அறிவினைக் கொன்று விடுவது போல 

பொச்சாப்புக் கொல்லும் புகழை
மறதி (ஒருவனது) புகழைக் கொன்று விடும்!

நல்ல எச்சரிக்கை தான்! 

நினைவில் கொள்ள வேண்டியவற்றை மறப்பவன், புகழையும் மறந்து விட வேண்டியது தான்!
(கிடைக்காது / வராது)!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 23 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Dec 11, 2015 12:23 am

#533
பொச்சாப்பார்க்கில்லை புகழ்மை அதுஉலகத்து 
எப்பால் நூலோர்க்கும் துணிவு

கடந்த குறளின் பிற்சேர்க்கை போன்ற செய்யுள்!

அதாவது, "மறதிக்காரர்களுக்குப் புகழ் இல்லை" என்று சொன்னதை ஆதரிப்பதற்கு "நூலோர்" கூட்டத்தை இங்கே இழுக்கிறார் Smile

பொச்சாப்பார்க்கில்லை புகழ்மை
மறதி உள்ளவர்களுக்குப் புகழ் இருக்காது

அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு
அது உலகில் உள்ள எல்லா நூலோர்களும் சொல்லும் முடிவு 

நூலோர் என்பதற்குக்  கற்றோர் என்றும் நூல் ஆசிரியர் என்றும் இரு பொருள்கள் அகராதி சொல்கிறது. 

அப்படியாக, ஏதாவது ஒரு விதத்தில் அறிவு இருப்பவர்கள் எல்லோரும் செய்திருக்கும் முடிவு "மறதிக்காரனுக்குப் புகழ் வாழ்வு இல்லை" என்பதே Smile

மறைமுகமாக நாம் இதை ஒத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம் Laughing

அதாவது, "மறதி இருந்தாலும் புகழ் வரும்" என்று சொன்னால் நாம் அறிவில்லாதவன் (நூலோன் அல்ல) என்று வரும் Wink

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 23 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Dec 11, 2015 10:32 pm

#534
அச்சமுடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை 
பொச்சாப்புடையார்க்கு நன்கு

அச்சமும் பொச்சாப்பும் எதுகையாக வருவதால் முந்தையதை இங்கே உவமை ஆக்கி விட்டார் வள்ளுவர் Wink

மற்றபடி மறதி குறித்துப் புதிய விவரம் ஒன்றும் இல்லை. ("மறதி உள்ளோர்க்கு நன்கு இல்லை" என்று இன்னுமொரு "இல்லை" கணக்கு சேர்த்திருக்கிறார் - அவ்வளவே)

அச்சமுடையார்க்கு அரணில்லை
அச்சம் உடையவர்களுக்குப் பாதுகாப்பில்லை 
("அரண்" என்று ஒன்று இருந்தாலும் பயனில்லை)

ஆங்கில்லை பொச்சாப்புடையார்க்கு நன்கு
அது போலவே, மறதி உள்ளவர்களுக்கு நன்மையோ உயர்வோ இல்லை 
(அல்லது, நன்மைகள் கிடைத்தாலும் பலன் இல்லை)

வள்ளுவர் இங்கே மறதி என்ற மன்னனுக்கு வேண்டாத / கூடாத பண்பு குறித்துத்தான்  சொல்லிக்கொண்டிருக்கிறார். 

என்றாலும், என் தாய்வழிப் பாட்டனாருக்கு வந்த "மறதி" என்ற நோய் குறித்து எண்ணாமல் இருக்க முடியவில்லை.  அவருடைய இறப்புக்குப் பல ஆண்டுகள் முன்னதாகவே இடங்கள், வழி, ஆட்கள் குறித்தெல்லாம் மறதி நோய் வந்து விட்டதால் எங்கும் தனியாகச் செல்ல விடாமல் பாதுகாக்கப்பட வேண்டி வந்தது. 

இறுதி ஆண்டுகளில் மக்கள், பேரப்பிள்ளைகள் என்று நெருங்கினவர்களையும் "யார் நீங்க" என்று கேட்குமளவுக்கு மறதி நோயால் துன்புற்றது காணக்கொடுமையாக இருந்த ஒன்று Sad

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 23 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Dec 14, 2015 10:37 pm

#535
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை 
பின்னூறு இரங்கி விடும்

இழுக்கு என்பதற்கு "மறதி" என்றும் ஒரு பொருள் இருக்கிறதாம்.

அப்படியாக, இந்த அதிகாரத்தில் அந்தச்சொல் இடம் பெறுகிறது Smile

இரங்கி = ஆழ்ந்த வருத்தம், அழுகை என்றெல்லாம் வரும் (எ-டு : இரங்கல் கடிதம்)

மற்றபடி, மறதியால் வரும் துன்பம் குறித்து எச்சரிக்கும் குறள்!

முன்னுறக் காவாது இழுக்கியான்
முன்னமேயே உணர்ந்து காத்துக்கொள்வதை மறந்தவன் 
(பாதுகாப்பு நடவடிக்கைகள் தக்க நேரத்தில் எடுக்க மறந்த நிலை - சென்னை வெள்ளம் போல்)

தன்பிழை பின்னூறு இரங்கி விடும்
(துன்பத்தில் சிக்கிய) பின்னர் தன் பிழையை எண்ணி ஆழ்ந்த வருத்தத்தில் இருப்பான்

இங்கு நாம் குறிப்பாக நோக்குவது மறதி என்ற குழப்பம். 

அல்லாமல், சூழ்நிலை தன்னைப் பாதுகாக்க இயலாத அளவுக்கு அவ்வளவு கடினம் ஒன்றும் அல்ல. தக்க நேரத்தில் செயல்பட மறந்தது மட்டுமே தவறு, இப்போது பெரிய அளவில் அடி கிடைக்கிறது. அழுவதைத்தவிர வேறு வழி இல்லாத நிலை Smile

மன்னன் மறதி எனும்போது அவனை மட்டுமல்ல நாட்டையே காவல் இல்லா சூழ்நிலையில் கொண்டு தள்ளும். எவ்வளவோ பேர் கொடுமையில் உழலுவார்கள்!

மறதி - ஆளுவோருக்கு இருக்கவே கூடாத இயல்பு!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 23 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Dec 16, 2015 10:03 pm

#536
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை 
வாயின் அதுவொப்பது இல்

போன குறளில் நாம் படித்த "இழுக்கு = மறதி" என்பது இந்தக்குறளுக்கும் உதவுகிறது Smile

இங்கே "இழுக்காமை" = மறவாமை (பொச்சாவாமை). 

அதோடு எதுகையாய் வரும் வழுக்காமை (தவறாமை) சேருகிறது!

யார் மாட்டும் இழுக்காமை என்றும் வழுக்காமை வாயின்
யாருக்காவது (அல்லது ஒருவருக்கு) மறவாமை என்னும் பண்பு ஒரு நாளும் தவறாமல் வாய்த்து விட்டால் 
("ஒரு நாளும் எனை மறவாத" பாடல் நினைவுக்கு வருகிறதா? Laughing)

அதுவொப்பது இல்
அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை 

என்றும் மறவாத நிலை = ஈடு இணையற்ற ஒன்று!

அது யாருக்குக் கிடைக்கிறதோ இல்லையோ, அதை நோக்கி நமது முயற்சி இருக்க வேண்டும் என்று சொல்ல வருகிறார்.

("அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை" = இது கொஞ்சம் உயர்வு நவிற்சி தான்; என்றாலும், செய்யுளில் இத்தகைய வியப்புகளை எப்போதும் காணலாம்)

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 23 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Dec 18, 2015 7:27 pm

#537
அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவாக்
கருவியால் போற்றிச் செயின்


"மறதியின்மை ஒரு அரிய கருவி" என்று சொல்லும் குறள்.

சிறு வயதில் நூல்களில் படித்ததும் சில தந்திரக்காட்சிகளில் கண்டதுமான "மந்திரக்கோல்" போன்ற ஒன்று Smile

நேரடியான, எளிய பொருள் உள்ள குறள்!

பொச்சாவாக் கருவியால் போற்றிச் செயின்
மறதி இல்லாமை என்ற கருவியைக் கொண்டு, அக்கறையுடன் செயல்பட்டால்


அரிய என்று ஆகாத இல்லை
"செய்வதற்கு இயலாதது" எனத்தக்க அரியது ஒன்றுமில்லை!

"ஆகாத இல்லை" என்பது உயர்வு நவிற்சி தான். இருந்தாலும், முன்னமேயே கண்டது போல் செய்யுள்களில் இப்படிச்சொல்லித்தான் பொருளுக்கு அழுத்தம் தருவது வழக்கம். (குறள் நூலிலோ தமிழிலோ மட்டுமல்ல, பல மொழிகளிலும் கவிதை என்றாலே இத்தகைய மிகைப்படுத்தல்கள் மூலம் தான் அழுத்தம் தருவது வழக்கம்)

மற்றபடி, அடிப்படைக் கருத்துக்கு எதிர்ப்புச் சொல்ல வழியில்லை!

எந்தச்செயலிலும் வெற்றி பெற மறதியின்மை கண்டிப்பாகத் தேவை!
("சிரைக்கப்போறவனுக்குக் கத்தி தேவை" என்பது போல)

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 23 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Dec 22, 2015 12:02 am

#538
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது 
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்

இகழ்தல் என்றால் திட்டுதல் / அவமதித்தல் என்று நாம் அறிந்திருக்கிறோம். 
(புகழுக்கு எதிர்ச்சொல் மற்றும் எதுகை ; இங்கும் புகழ் / இகழ் என்று வருகிறது )

அதற்கு "மறத்தல்" என்றும் பொருள் இருப்பது இந்தக்குறள் வழியாகத் தெரிகிறது Smile

மட்டுமின்றி, அறத்துப்பாலில் நாம் அடிக்கடி கண்ட "ஏழு பிறப்பு" என்ற வள்ளுவரின் நம்பிக்கை இங்கு மீண்டும் வெளிவருவதைக் காணலாம்!

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும்
(பெரியோர் / முன்னோர்) புகழ்ந்தவற்றை போற்றிச்செய்ய வேண்டும் 

செய்யாது இகழ்ந்தார்க்கு
(அப்படிப் புகழ்ச்சியானவற்றைச்) செய்யாமல் மறந்தவர்களுக்கு 

எழுமையும் இல்
ஏழு பிறப்பிலும் ஒன்றும் இல்லை (ஒரு நன்மையும் கிடையாது)

இங்கே எழுமை என்பதை எழுச்சி / உயர்வு என்றும் பொருள் சொல்கிறார்கள் (மு.க. உரை)

அப்படி எடுத்துக்கொள்வது மறுபிறவி நம்பிக்கை இல்லாதவர்களுக்கு உவப்பாக இருக்கும். மேலும், இந்தக்குறளின் பொருளுக்கும் பொருத்தமே.

புகழத்தக்க செயல்கள் ஒன்றும் செய்யாமல் மறந்தவர்களுக்கு உயர்வு கிடையாது தானே?

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 23 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Dec 22, 2015 7:30 pm

#539
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் 
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

குறள் படிப்பதன் ஒரு குறிப்பிடத்தக்க விளைவாக நான் காண்பது பழந்தமிழ்ச் சொற்கள் சிலவற்றின் பொருள் தரும் வேடிக்கையும் குழப்பமும் Smile

எடுத்துக்காட்டாக இந்தக்குறளில் வரும் "மைந்து" என்ற சொல்லுக்கு அகராதி தரும் பொருளைப் பாருங்கள்:


 n. 1. Might, strength; வலிமை. மைந்து பொருளாக வந்த வேந்தனை (தொல். பொ. 70). 2. cf. mañju. Beauty; அழகு. மைந்தா ரசோக மடலவிழ (சிலப். 8, வெண்பா, 1). 3. Desire; விருப்பம். துறை வேண்டு மைந்தின் (பரிபா. 6, 30). 4. Infatuation of love; காமமயக்கம். மகளிரை மைந்துற் றமர்புற்ற மைந்தர் (பரிபா. 20, 91). 5. Madness; பித்து. (திவா.) 6. Must of an elephant; யானையின் மதம். களிறே . . . மைந்து பட் டன்றே (புறநா. 13). 7. Ignorance, stupidity; அறி யாமை. மைந்துற்றாய் (பரிபா. 20, 69).

அதாவது, ஒரே சொல்லுக்கு வலிமை என்றும் அழகு என்றும் பித்து என்றும் அறியாமை என்றும் விதவிதமாய்ப் பல நிறங்களில் பொருள் காண்கிறோம் Laughing

அருமையான கருத்து உள்ள குறள்!

தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து
ஒருவர் தன் மகிழ்ச்சியான நிலையில் மயங்கி இருக்கும் பொழுது
(அதாவது, இன்பத்தில் துய்த்துக்கொண்டு, செய்ய வேண்டிய தேவையான கடமைகளை மறந்து கிடக்கும் பொழுது)


இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக
(அதே போன்று) மறதியினால் கெட்டழிந்த மற்றவர்களை நினைத்துப்பார்க்க வேண்டும்!

"இந்த மறதி நிலையில் தொடர்ந்தால் நமக்கும் அழிவே" என்று உணர்ந்து மாற்றம் செய்ய வேண்டும் என்பது சொல்லாமல் சொல்லப்படும் கருத்து Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 23 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Dec 23, 2015 9:09 pm

#540
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் 
உள்ளியது உள்ளப் பெறின்

உள் / உள்ளி என்று சொல் விளையாட்டு இங்கே. 

உள்ளுதல் = எண்ணுதல் / நினைத்தல் (உள்ளத்தில் இருத்தல்) , வேறு சொற்களில் சொன்னால் மறதிக்கு எதிர்ச்சொல் Smile

மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின்
தான் நினைத்தை (மறவாமல்) எண்ணிக்கொண்டிருக்கும் பண்பு பெற்றிருப்பவனுக்கு

உள்ளியது எய்தல் எளிதுமன்
நினைத்தவற்றை அடைதல் எளிது

இங்கே "உள்ளப்பெறின்" என்பதை எளிதாக "எண்ணுதல் / மறவாதிருத்தல்" என்றெல்லாம் சொன்னாலும், பொருள் வெறுமென அதை நினைத்தல் மட்டுமல்ல.

"மறவாதிருத்தல்" என்பது, "அதன் பொருட்டு வினையாற்றுதல்" என்றே பொருள் படும். 

அப்போது தானே நினைத்தது வாய்க்கும்?

ஒரு எடுத்துக்காட்டு வழியாக இதைப்புரிந்து கொள்வது எளிது.  

"நீ வேலைக்குப்போய் நல்ல நிலைக்கு வந்தவுடன் பெற்றோரை மறந்து விடாதே" என்றால் அதன் பொருள் "இவர்கள் தாம் என் பெற்றோர் என்று ஞாபகத்தில் வைத்தல்" என்றல்ல. 

மாறாக, "அவர்களுக்குப் பொருளுதவி செய்து, தேவைகளை நிறைவேற்றி, அக்கறையோடு பார்த்துக்கொள்" என்பதாகும்.  

அப்படியாக, "உள்ளுதல்" என்றால், "மறவாமல் செயல்படுதல்" என்றும் புரிந்து கொள்ள வேண்டும்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 23 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jan 05, 2016 9:23 pm

#541
ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார் மாட்டும் 
தேர்ந்து செய்வஃதே முறை
(பொருட்பால், அரசியல், செங்கோன்மை அதிகாரம்)

செங்கோல் என்பது அடிப்படையில் ஒரு அணிகலன் மட்டுமே Smile

ஆனால், அரியணையில் வீற்றிருக்கும் மன்னனின் கையில் அந்த அணிகலன் இருக்கையில் புரிந்து கொள்ளப்படும் பொருள் குறிப்பிடத்தக்கது.

ஆளுமை, ஆட்சி அதிகாரம் இவற்றுக்கான அடையாளமாக அது (முற்கால) உலகெங்கும் கருதப்பட்டு வந்த ஒன்று!

செம்மை என்று வரும்போது, அதில் நீதி இருக்க வேண்டும் என்ற உட்பொருளும் உண்டு.  "நீதியில் உறுதி" (வளைந்து கொடுக்காத கோல்) என்று அந்த அதிகாரம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு இந்த அணிகலன் அடையாளம்.

செங்கோன்மை என்று சொல்லுகையில் நீதியான ஆட்சி என்று கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன். 

குறள்களைப் படித்துப்பார்க்கலாம் Smile

யார் மாட்டும் ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து
யாராயிருந்தாலும் (அவர் செயலை) நன்கு சோதித்து, (நட்பு / உறவு என்று) பக்கம் சாயாமல் நடுநிலை காத்து 

தேர்ந்து செய்வஃதே முறை
ஆராய்ந்து செய்தலே (எ-டு : தீர்ப்பு வழங்குதலே) சரியான முறை ஆகும் 

இறை என்பதற்கு "அரசாட்சி" உட்படப் பல பொருள்கள் இருந்தாலும், இந்தக்குறளில் "நடுநிலைமை" என்பதே பொருத்தமாக இருப்பதால், அகராதி இந்தக்குறளை அங்கே சுட்டுவதைப் பார்க்க முடிகிறது. நல்ல பொருத்தம்!

அப்படியாக, செங்கோன்மையின் முதல் குறளில் "நடுநிலை காத்து, ஆய்ந்து நீதி செய்யும் நெறி" மன்னனுக்குரிய குறிப்பிடத்தக்க ஆளுமையாக வள்ளுவர் சொல்லுகிறார் Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 23 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 23 of 40 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum