Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - பின்னுரை

Page 8 of 16 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16  Next

Go down

குறள் இன்பம் - பின்னுரை - Page 8 Empty Re: குறள் இன்பம் - பின்னுரை

Post  app_engine on Wed Jan 31, 2018 12:44 am

#1122
உடம்பொடு உயிரிடை என்ன மற்றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு


14 முதல் 19 வயதுக்கிடையே உள்ள பெண்ணே "மடந்தை" என்பதாக அகராதி கூறுகிறது.

நம் நாளில் மடந்தை என்பதைப் "பருவத்துக்கு வராத பெண்" என்று எண்ணாமல் வெறுமெனப் "பெண்" என்று புரிந்து கொள்வதே நல்லது. (சாலமன் பாப்பையா இந்த முழுப்பாலையும் கணவன்-மனைவி உறவாகச் சுருக்கி, இந்தச் செய்யுள்கள் எல்லாவற்றின் உரையிலும் பெண் என்பதை மனைவி என்றே சுட்டுவது குறிப்பிடத்தக்கது).

அப்படிப்பட்ட மடந்தையோடு தனக்குள்ள உறவை மிக அருமையான உவமை கொண்டு வள்ளுவர் விளக்குகிறார்.

உடம்பொடு உயிரிடை என்ன நட்பு
உடலுக்கும் உயிருக்கும் இடையில் என்ன உறவு இருக்கிறதோ

மற்றன்ன மடந்தையொடு எம்மிடை
அதே தான் மடந்தைக்கும் எனக்கும் இடையில் இருப்பது

ஆகச்சிறந்த, வலிமையான உவமை! "ஈருடல் ஓருயிர்" என்றெல்லாம் சொல்லுவதை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம் / படித்திருக்கிறோம். ஆனால், இங்கே "இரண்டு" என்ற எண்ணமே இல்லை. அவன் உடல் என்றால் அவள் உயிர்!

இருவரும் ஒன்றே, பிரிக்க முடியாத உறவு என்று அழுத்திச்சொல்வது அழகு!

இதில் இருக்கும் இன்னொரு கருத்தும் அழகு - உயிரில்லையேல் உடலுக்கு வேலையில்லை, மண்ணுக்குச்செல்லும். அதே போன்று, ஏதாவது ஒரு வகை உடல் இல்லாத நிலையில், "உயிர்" என்ன செய்ய முடியும்? அதன் பயன்பாடு என்ன - என்ற எண்ணமும் தோன்றலாம். மிக ஆழமான எண்ணம்!

ஆக, ஆணும் பெண்ணும் உயிரும் உடலும் போல உறவு கொண்டு வாழ்வதே ஆழமான பிணைப்பு! அதுவே வாழ்வு என்று உணர வைக்கும் குறள் Smile

app_engine

Posts : 9174
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - பின்னுரை - Page 8 Empty Re: குறள் இன்பம் - பின்னுரை

Post  app_engine on Wed Jan 31, 2018 10:15 pm

#1123
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்


பாவைக்கு இடம் கொடுப்பதற்குத் தன் கண்ணின் பாவையை இழக்க என்னும் பித்தனின் எண்ணம் இந்தக்குறளில் - இதைக் காதற்சிறப்பு என்று வள்ளுவர் சொல்லுகிறார். அதையே தான் நம் காலத்தில் "காதலுக்குக்கண்ணில்லை" என்று சொல்லுகிறார்களோ? Laughing

ஐம்புலன்களில் மிகவும் வேண்டியதாகப் பலரும் கருதுவது கண். அதனால் தான் தமக்கு மிகவும் விரும்பியவர்களைக் "கண்ணே, மணியே" என்று அழைத்து உருகுவது வழக்கம். "என் கண்ணைப்போலக் காப்பேன், கண்ணில் வைத்துக்காப்பேன்" என்பதெல்லாம் நாம் எப்போதும் கேட்கும் மொழிகள்.

அப்படிப்பட்ட கண்ணின் மணியில் உள்ள பாவையையே இழக்க ஒருவன் இங்கே விரும்புகிறான் - அந்த இடத்தில் தனது பெண்ணை வைக்க வேண்டும் என்பதற்காக! இவர்களது காதலின் ஆழம், நெருக்கம் சொல்ல என்ன ஒரு அழகான கவிதை!

வீழும் திருநுதற்கு இல்லை இடம்
நான் விரும்பும் அழகிய நெற்றியை உடைய இந்தப்பெண் குடியிருக்க இடமில்லை (அல்லது இடம் போதவில்லை)

கருமணியிற் பாவாய்நீ போதாயாம்
(ஆகையால்) என் கண்ணின் மணியில் உள்ள பாவையே, நீ அகன்று போ (அந்த இடத்தை அவளுக்குக்கொடு)!

நேரடியாக அந்தப்பாவை உள்ள இடத்தில் இந்தப்பாவை இருக்க இயலாது என்பது உண்மை தான். ஆனால், கவித்துவமாக இவர்களது காதலுக்கு எப்பேர்ப்பட்ட உயர்ந்த இடம் அவன் கொடுக்கிறான் என்பதை இது சுட்டுகிறது.

"என் கண்ணையே உனக்கு இடமாகத்தருகிறேன் பெண்ணே" என்று கொஞ்சுவது மிகச்சிறப்பு தானே!

பாவை என்ற சொல் கொண்டுள்ள சிறிய விளையாட்டும் இங்கே இருக்கிறது. "இந்தப்பெண்பாவை என் வாழ்வில் வந்து விட்டாள் - இனிமேல் வேறெந்தப்பாவைக்கும், அதாவது எனது கண்பாவைக்கும் கூட, இடமில்லை" என்ற பொருளும் இங்கே வருகிறது!

app_engine

Posts : 9174
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - பின்னுரை - Page 8 Empty Re: குறள் இன்பம் - பின்னுரை

Post  app_engine on Mon Feb 05, 2018 9:32 pm

#1124
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து


முன்னொரு குறளில் சொன்ன அதே உயிர்-உடல் உவமை தான். என்றாலும், சற்றே மாற்றிய விதத்தில் இங்கே தரப்படுகிறது.

அதாவது, "நீங்கும் இடத்து சாதல்" என்கிறார். (அது சரி தானே? உயிர் நீங்கினால் உடல் சாதல் தானே? அது போல, அவள் நீங்கினால் இவன் சாவான் என்பது புரிந்து கொள்ள எளிது).

கூடுதலாக, "வாழுதல் உயிர்க்கன்னள்" என்று அதற்கு எதிர்மறையும் சொல்கிறார். எல்லா உரையாசிரியர்களும் போலவே இங்கே "வாழுதல்" என்பது "நீங்குதல்" என்பதற்கு எதிராக, அதாவது "சேருதல், புணருதல்" என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும் Smile

ஆயிழை வாழ்தல் உயிர்க்கன்னள்
அணிகள் தாங்கிய இந்தப்பெண் புணருகையில் (உடலான எனக்கு) உயிராக இருக்கிறாள்

நீங்கும் இடத்து சாதல் அதற்கன்னள்
விலகும் போதோ உயிர் நீங்கி உடல் சாவதற்கு ஒப்பாக இருக்கிறாள்

கொஞ்சமெல்லாம் சொற்குழப்பங்கள் இருக்கின்றன என்றாலும் பொருள் தெளிவாகவே இருக்கிறது. இவர்களது காதல் சிறப்பு உடலும் உயிரும் இணைந்தது போன்ற ஒப்பற்ற நிலையில் உள்ளது என்பது தெளிவு.

"நீங்கினால் தூங்க மாட்டேன்" போன்ற சிறுபிள்ளைத்தனமான காதல் அல்ல இது , "நீங்கினால் வாழ மாட்டேன்" என்பது தான் இங்கே உள்ள காதல் நிலை!

app_engine

Posts : 9174
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - பின்னுரை - Page 8 Empty Re: குறள் இன்பம் - பின்னுரை

Post  app_engine on Wed Feb 07, 2018 12:15 am

#1125
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்


"மறந்தால் தானே நினைக்கணும்?" - அவ்வப்போது காதல் பாடல்களில் நாம் காணும் எண்ணம் இது.

சங்ககாலம் தொட்டே இருந்து வரும் கருத்து என்பதற்கு இந்தக்குறள் ஒரு சோறு பதம்.

ஒள்ளமர்க் கண்ணாள் குணம் மறப்பறியேன்
ஒளி நிறைந்த கண்ணுடையாளாகிய என்னவளின் பண்புகளை மறப்பது அறியேன்
(அவள் நற்பண்புகளை மறக்க என்னால் இயலாதே!)

உள்ளுவன்மன் யான் மறப்பின்
அப்படி ஒருவேளை நான் மறந்தால் தானே மீண்டும் நினைக்க வேண்டும்?

பெண்ணின் பேரில் இவனுக்கு இருக்கும் காதலின் சிறப்பை உச்சப்படுத்திக்காட்டும் அழகான செய்யுள் இது. எந்நேரமும் அவளுடைய நினைவிலேயே வாழும் இவனுக்கு அவளது நல்ல இயல்புகள் இமைப்பொழுதும் மறப்பதில்லையே.

முன்னாள் உள்ள குறள்களோடு இதைச்சேர்த்தால் புரிந்து கொள்வது எளிது. "உயிரும் உடலும் போல" இருக்கையில், "மறப்பது" என்பது "இறப்பது" என்பதற்குச்சமம்.

அவளை மறக்க ஒரே வழி - அவன் இறப்பது தான்! அவ்வளது சிறப்பு அவனது காதல்!

app_engine

Posts : 9174
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - பின்னுரை - Page 8 Empty Re: குறள் இன்பம் - பின்னுரை

Post  app_engine on Wed Feb 07, 2018 8:02 pm

#1126
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர்எம் காதலவர்


இந்த நூலிலேயே முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் எண்ணமாக வரும் முதல் பாடல் இது தான் என நினைக்கிறேன்.

அறத்துப்பால் மற்றும் பொருட்பால் எல்லாம் முழுக்க முழுக்க ஆணின் எண்ண ஓட்டங்களாகவே எனக்குத்தோன்றின. இல்லை என்று வைத்துக்கொண்டாலும் அவை "இரு பாலாருக்குமானவை" என்று கொள்ள முடியுமே ஒழிய 100% பெண்ணின் கண்ணோட்டத்தில் என்று எந்தக்குறளையும் சொல்ல வழியில்லை என்றே நினைக்கிறேன். (பிழை / விடுதல் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்).

காமத்துப்பாலிலும் இது வரை வந்த 45 பாடல்கள் ஆணின் எண்ண ஓட்டமாக எனக்குப்பட்டது. இப்போது முதன்முதலாக ஒரு பெண்ணின் எண்ணம் Smile

பொதுவான தமிழ் மரபின் படியே இங்கே பெண் ஆணை மரியாதைப்பன்மையுடன் (அதாவது அவன் என்று அல்ல, அவர் என்று) அழைப்பதை எளிதாக ஒதுக்கிவிட முடியவில்லை. கணவனின் பெயரையே வாய்விட்டுச் சொல்லவிடாமல் வைத்திருந்த சமுதாயம் தானே?

மற்றபடி, இதுவரை எப்படியெல்லாம் தலைவன் தனது காதல் சிறப்பைச் சொன்னானோ கிட்டத்தட்ட அதே மொழியில் இவளும் இங்கே புகழ்கிறாள். செய்யுளின் பொருள் பார்ப்போம்:

கண்ணுள்ளின் போகார்
(என்) கண்களில் இருந்து போய்விட மாட்டார்
(அவரை என் கண்ணுக்குள் வைத்துக் காத்துக்கொள்கிறேன்)

இமைப்பின் பருவரார்
நான் இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார்
(ஆனால் அவருக்கு வலிக்கும் என்று நான் இமைக்காமல் இருக்கவே முயல்கிறேன் என்றும் இதில் பொருள் இருப்பதாகச் சொல்கிறார்கள்)

நுண்ணியர்எம் காதலவர்
அவ்வளவு நுட்பமானவர் அவர், என் காதலர்

எனக்குள்ளே அவர் இருக்கிறார் என்பது அவ்வளவு எளிதில் மற்றவருக்குத் தெரியாது என்ற ஒரு செய்தியும் (நுண்ணியர்) இங்கே ஒளிந்திருக்கத்தான் செய்கிறது Wink

app_engine

Posts : 9174
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - பின்னுரை - Page 8 Empty Re: குறள் இன்பம் - பின்னுரை

Post  app_engine on Thu Feb 08, 2018 9:58 pm

#1127
கண்ணுள்ளார் காதலவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து


பெண்குரல் பாடல் அடுத்த குறளிலும் தொடர்கிறது - சட்டென்று திருக்குறளின் ஓட்டத்தில் என்ன ஒரு மாற்றம் Smile

காதல் சிறப்பு என்ற கருத்தைப் பொறுத்தவரை பெரிய மாற்றம் இல்லை - இங்கேயும் தன் காதலரைக் கண்ணுள் வைத்துக்காக்கும் / மயங்கி நிற்கும் நிலையே காண்கிறோம்.

"கண்ணுள் அவர் இருப்பதால், அவர் மறைந்து விடாதபடி மையெழுதாமல் இருக்கிறேன்" என்பது தான் இந்தச்செய்யுளின் பொருள். "மை கண்ணுக்குள்ளே அல்லவே வெளியே தானே எழுதுவாள், எப்படி அவன் மறைவான்" என்று தோன்றினால் உங்களுடைய கற்பனைத்திறன் குறைவு என்று பொருள்!

இப்படி எண்ண வேண்டும் : "என் கண்ணுக்கு மை எழுத முயலும் போது, உள்ளே மை பட்டுவிடாதிருக்க சில நொடிகள் நான் கண்ணை மூடி விடுவேனே - அப்படி மூடும் நொடிகளில் என்னவர் மறைந்து போய் அவரைக்காண முடியாமல் போய் விடுமே - இமைப்பொழுதும் அவரைக்காணாமல் என்னால் இருக்க முடியாதே" என்றாம் பொருள் rotfl

"என்ன ஒரு கற்பனை" என்று மலைக்க வைக்கிறது!

கண்ணுள்ளார் காதலவராக
காதலர் என் கண்ணுக்குள் இருக்கிறார், (அதனால்)

கண்ணும் எழுதேம்
கண்ணுக்கு மை எழுத மாட்டேன் (ஏனென்றால்)

கரப்பாக்கு அறிந்து
(அந்த நேரத்தில்) அவர் மறைந்து விடுவதை அறிந்து
(கரப்பு = மறைவு / ஒளிவு )

இமைப்பொழுதும் அவரைக்காணாமல் வாழ்கிலேன் - கண்ணுக்குள் வைத்திருக்கிறேன் - அட, அட, இதுவல்லவோ காதல்!


app_engine

Posts : 9174
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - பின்னுரை - Page 8 Empty Re: குறள் இன்பம் - பின்னுரை

Post  app_engine on Fri Feb 09, 2018 8:33 pm

#1128
நெஞ்சத்தார் காதலவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கறிந்து


காதல் புரிவோரின் பித்துக்குளி எண்ணங்களுக்குக் கணக்கில்லை என்பது தெரிந்ததே.

அதைப்பறைசாற்றும் வண்ணம் வள்ளுவர் பெண் குரலில் எழுதி இருக்கும் பாடல். (ஒரு கணக்கில் பார்த்தால், இது பெண்களை நையாண்டி செய்வதோ என்றும் தோன்ற வைக்கலாம்).

வேடிக்கையான கருத்து இது தான் - அம்மணி சூடாக எதையும் உண்ண விரும்பவில்லையாம். ஏனென்றால், அது உடலின் உள்ளே செல்லும்போது நெஞ்சின் வழியாகத்தானே வயிற்றுக்குப் போக வேண்டும்? போகிற வழியில், நெஞ்சில் இருக்கும் காதலரைச் சுட்டுத் துன்புறுத்தி விடுமாம்! அது அவருக்குச்செய்யும் எப்பேர்ப்பட்ட கொடுமை அல்லவா?

சிரித்து மகிழ என்றே எழுதப்பட்ட கவிதை! என்றாலும், காதலில் கிடந்து தவிப்போர் இப்படிப்பட்ட பேதைமையான எண்ணங்களால் அலை பாய்வது அரிதொன்றும் இல்லை - எப்போதும் நடப்பது தான்!

நெஞ்சத்தார் காதலவராக
என் காதலர் நெஞ்சத்தில் இருக்கிறார், (அதனால்)

வெய்துண்டல் அஞ்சுதும்
வெப்பமாக எதையும் உண்ணுவதற்கு அஞ்சுகிறேன்

வேபாக்கறிந்து
(அவரை) அது சுட்டுவிடுமே என்று அறிந்து

எள்ளலை விடுத்து நோக்கினோம் என்றால், "எப்பேர்ப்பட்ட அன்பு, காதலருக்குச் சிறிது துன்பம் கற்பனையில் போலும் வருவதை இப்பெண் தாங்க மாட்டாளே" என்று இவளது அன்பின் ஆழத்தைப் போற்றலாம்!

app_engine

Posts : 9174
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - பின்னுரை - Page 8 Empty Re: குறள் இன்பம் - பின்னுரை

Post  app_engine on Mon Feb 12, 2018 10:52 pm

#1129
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இவ்வூர்


"கண்ணுக்குள் அவர் இருக்கிறார்" என்று முன்னர் ஒரு குறளில் பெண் சொன்னதன் தொடர்ச்சியாக இந்தச்செய்யுள் இருக்கிறது. (அங்கேயே பார்த்தோம், "நான் இமைத்தால் அவருக்கு வலிக்கும், என்றாலும் பொறுத்துக்கொள்வார்" என்று சொல்லுவாள். அதில் ஒளிந்திருக்கும் செய்தி - வலிக்காதிருக்க நான் இமைக்காமல் இருப்பேன் என்பது).

இங்கோ, "நான் கண்ணை மூடினால் அவரை மறைத்து விடுவேனே" என்று அஞ்சிக் கண்ணை இமைக்காமலும், துயில் கொள்ளாமலும் ஒரு பெண் படும் துன்பங்கள் வருகின்றன. அடடா, இந்தக்காதல் என்னவெல்லாம் பாடு படுத்துகிறது!

இவ்வளவும் போதாதென்று, "இவளது துன்பத்துக்கு அவரே காரணம்" என்று மற்றவர்கள் அவரைத்தூற்றுவார்களே என்று குற்ற உணர்வு வேறு! தாங்க முடியவில்லை! Laughing

இமைப்பின் கரப்பாக்கு அறிவல்
(நான் என் கண்ணை) இமைத்தால் (அதன் உள்ளே இருக்கும் என் காதலர்) மறைந்து விடுவார் என்று அறிந்திருக்கிறேன் (அதனால் இமைக்காமல் இருக்கிறேன்)

அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ்வூர்
இதற்கே இவ்வூரில் உள்ளோர் அவரை அன்பில்லாதவர் என்று தூற்றுகிறார்கள்

முழுக்க முழுக்க அறிவார்ந்த தளத்தில் வைத்துப்பார்த்தால் மிகையாகத் தோன்றும் பித்துக்குளித்தனங்கள் என்றாலும், ஆக மொத்தம் சொல்ல வருவது இங்கே பெண்ணின் காதல் சிறப்பை. அது மிக அழகாகவே வெளிப்படுகிறது எனலாம்.

ஆழமான உணர்வுகள் காதலின் அடிப்படை. இங்கே அவை பொங்கி வழிவது வெளிப்படை!

app_engine

Posts : 9174
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - பின்னுரை - Page 8 Empty Re: குறள் இன்பம் - பின்னுரை

Post  app_engine on Mon Feb 12, 2018 11:32 pm

#1130
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும் இவ்வூர்


சென்ற குறளும் இந்தக்குறளும் அதே இரண்டாமடி கொண்டு முடிக்கிறார் ("ஏதிலர் என்னும் இவ்வூர்"). எப்படியாவது இந்த அதிகாரத்தை முடித்தால் போதும் என்று நினைத்தாரோ அல்லது பெண்கள் மீண்டும் மீண்டும் ஒரே போன்ற எண்ணங்களில் உழலுவார்கள் என்ற உள்குத்தோ தெரியாது.

ஆக, மீண்டும் ஒரு சின்னக்குற்ற உணர்வோடு கூடிய புலம்பல் இங்கே காதல் சிறப்புரைத்தலில் வெளிப்படுகிறது.

அதாவது, எங்கள் காதலை ஊரார் புரிந்து கொள்ளவில்லை - அவருக்கு அன்பேயில்லை என்று தவறாகவே சொல்கிறார்கள் என்கிறது பெண் மனம்.

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும்
(என் காதலர்) என் உள்ளத்தில் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார் (குடியிருக்கிறார்)

இகந்துறைவர் ஏதிலர் என்னும் இவ்வூர்
(ஆனால்) இவ்வூரார் அவர் பிரிந்து வாழ்கிறார், அன்பில்லாதவர் என்றெல்லாம் தவறாகச் சொல்கிறார்கள்

கடந்த இரு குறள்களையும் பார்க்கையில் ஒன்று தெரிகிறது - ஏதோ காரணத்தால் இவர்கள் இருவரும் ஒட்டிக்கொண்டும் கட்டிக்கொண்டும் இல்லாத சில நாட்கள் இருந்திருக்கின்றன. வெளியில் உள்ளோர் பார்க்க இவர்கள் இருவரும் கூடிக்கிடக்கவில்லை என்று தோன்றுகிறது.

ஆனாலும், கண்ணுக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் அவன் வாழ்கிறான். இருவரின் காதலும் மிகச்சிறப்பாகவே இருக்கிறது - பார்ப்போர் பழித்தாலும் அதில் உண்மையில்லை என்று இங்கே பெண் அங்கலாய்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்கிறோம்.

app_engine

Posts : 9174
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - பின்னுரை - Page 8 Empty Re: குறள் இன்பம் - பின்னுரை

Post  app_engine on Tue Feb 13, 2018 7:42 pm

#1131
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி

(காமத்துப்பால், களவியல், நாணுத்துறவுரைத்தல் அதிகாரம்)

காதற்சிறப்புரைத்தல் அதிகாரத்தின் இறுதி இரண்டு குறள்கள் படிக்கும் போது காதலர்கள் பிரிந்திருக்கும் சூழல் புலப்பட்டது என்பதை நினைவில் கொண்டு இந்த அதிகாரத்தைப்படிக்க வேண்டும்.

என்ன காரணங்கள் என்று அப்போது தெளிவில்லை என்றாலும் இப்போது புரிகிறது - பெண்ணைக்கொடுக்கப் பெற்றோர் ஒத்துக்கொள்ளவில்லை Smile

இன்று வரை திரைப்படங்களில் நாம் அடிக்கடி காணும் காதல் கதைகளின் அதே நிலை - ரெண்டு பேரும் கொஞ்சிக்குலாவிச் சுற்றும் காலம் முடிந்து திருமணம் முடித்தாக வேண்டும் என்ற நிலை வரும் போது ஒரு வீட்டாரோ அல்லது இரு வீட்டாருமோ அதற்கு முட்டுக்கட்டை இட்டு இருவரையும் பிரிக்கும் சூழல்!

தமிழரின் சங்ககால மரபொன்று இங்கே நாம் படிக்க வேண்டியிருக்கிறது.

"மடல் ஏறுதல்" (அல்லது மடல் ஊர்தல்). அப்படி என்றால் என்ன?

இந்த வலைப்பக்கத்தில் அழகான விளக்கம் இருக்கிறது :
http://www.tamilvu.org/courses/degree/p103/p1033/html/p103323.htm


தலைவன் தலைவியைக் காதலிக்கின்றான். எவ்வளவோ முயன்றும் தலைவனால் தலைவியை அடைய முடியவில்லை. எனவே தலைவன் தலைவியை அடைவதற்கு இறுதி முயற்சியாக மடல் ஏறத் துணிகின்றான். சில சமயம் மடல் ஏறவும் செய்கின்றான்.

பனை மரத்தின் கிளை பனை மட்டை எனப்படும். இது இரண்டு பக்கங்களிலும் கூரிய முள் போன்ற பாகங்களைக் கொண்டிருக்கும். இந்தப் பனைமரத்தின் கிளையால் குதிரை போன்ற உருவம் செய்வர். இதன் மேல் காதல் கொண்ட தலைவன் ஏறி அமர்ந்திருப்பான். இதன் கீழ் உருளை பொருத்தப்பட்டிருக்கும். இதில் கயிற்றைக் கட்டி இழுத்துச் செல்வர். இதுவே மடல் எனப்படும்.

பனை மரக்கிளையால் செய்த குதிரையில் மயில் தோகை (பீலி), பூளைப்பூ, ஆவிரம்பூ, எருக்கம் பூ ஆகிய பூக்களால் தொடுத்த மாலையை அணிவிப்பர். மடல் ஏறும் தலைவன் உடம்பு முழுதும் திருநீற்றைப் பூசியிருப்பான். கையில் ஒரு கிழியைப் பிடித்திருப்பான். (கிழி = ஓவியம் வரையப்பட்ட துணி). ஊரின் நடுவில் உள்ள நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்திற்குச் செல்வான். தான் செய்த மடலின் மேல் ஏறி இருந்து, தன் கையில் உள்ள கிழியின் மேல் பார்வையை வைத்துக் கொண்டிருப்பான். வேறு எந்த உணர்வும் அவனிடம் காணப்படாது. தீயே தன் உடலில் பட்டாலும் அவனுக்குத் தெரியாது. மழை, வெயில், காற்று எதைப் பற்றியும் கவலைப் பட மாட்டான். இவ்வாறு தலைவன் மடலில் ஏறியதும் ஊரார் அதை இழுப்பர். தலைவன் தலைவியைப் பற்றிப் பாடிக் கொண்டிருப்பான். இதுவே மடல் ஏறுதல் என்பதாகும்.

தலைவன் இவ்வாறு மடல் ஏறுவதால் என்ன பயன் உள்ளது? தலைவனின் துன்பத்தை ஊரிலுள்ளவர்கள் பார்ப்பார்கள். அவனுடைய துன்பம் தீர்வதற்காகத் தலைவியைத் தலைவனிடம் சேர்த்து வைக்க முயல்வார்கள். இதனால், தலைவன் தலைவியை அடைய வாய்ப்பு உள்ளது.

மேலும் தலைவனின் காமத்துயரம் நீங்க ஒரே வழி இது என்றும் கருதப்படுகிறது. எனவேதான் மடல் என்பதைக் காமம் ஆகிய கடலை நீந்துவதற்குரிய தெப்பம் என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

ஒரு வேளை பெண்ணுக்கு விருப்பமில்லை என்றால் இந்த மடலூர்தலின் முடிவென்ன?
(இருந்த விருப்பத்தையும் பெற்றோர் பேசியெடுத்து மாற்றிவிட்டனர் - அல்லது வேறொரு ஆண் மீது விருப்பம் பிறந்ததால் மனம் மாறி விட்டாள் என்று வைத்துக்கொள்வோம்.)

அவ்வளவு தான் - அவன் துறவியாவான் அல்லது செத்துப்போவான் Smile வேறென்ன செய்ய? மடல் ஊர்ந்து நாடு முழுவதும் அறிந்த ஒருவனை வேறெந்தப்பெண் விரும்பப்போகிறாள்?

தற்போதைக்கு அந்தப்பெண்ணுக்கும் விருப்பம் உள்ளதாகவே நினைத்துக்கொண்டு குறளைப்படிப்போம்!

காமம் உழந்து வருந்தினார்க்கு
காமத்தால் / காதலால் துன்புற்று வருந்தும் ஒருவனுக்கு

வலி ஏமம் மடலல்லது இல்லை
வலிமையான துணை மடல் (ஊர்தல் / ஏறுதல்) அல்லாமல் வேறொன்றும் இல்லை

அப்படியாக, நாணத்தை ஒருவன் துறக்கும் நிலை இந்த அதிகாரத்தின் பொருள். தொடர்ந்து இந்த "நாணம் துறந்து, தெருவில் வந்து போராடும்" நிலை குறித்தே படிக்க இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

app_engine

Posts : 9174
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - பின்னுரை - Page 8 Empty Re: குறள் இன்பம் - பின்னுரை

Post  app_engine on Wed Feb 14, 2018 7:52 pm

#1132
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து


முந்தைய குறள் படிக்கையில் நாம் கண்டது போல, மடலேறுதல் என்பது கிட்டத்தட்ட "வேறு வழியில்லா நிலையில், கையறு நிலையில் இருந்து செய்யும் முயற்சி" எனலாம். அதுவும் ஊரில் எல்லோரும் பார்க்கும் வண்ணம் வீதியில் வந்து காதலுக்காகப் போராடுதல்.

வெட்கம், மானம், நாணம் எல்லாம் இன்னும் மிச்சம் இருந்தால் அது நடக்காது. அவற்றையெல்லாம் துறந்தால் தான், "இவளுக்காக நான் மடலேறுகிறேன்" என்று எல்லோருக்கும் முன்னால் பனை மட்டையில் குதிரையேற முடியும்.

அந்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் காதலன் பாடும் பாடல்.

நோனா உடம்பும் உயிரும்
(காதலியின் பிரிவைப்) பொறுக்க முடியாத, தாங்க முடியாத என் உடலும் உயிரும்
(நோனாமை - பொறுக்க முடியாத நிலை, நோன்பு - பொறுத்தல்)

மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து
மடல் ஏறுவதற்கான நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டன

வேறு வழியில்லை - தாங்க முடியவில்லை. இன்னும் அழுது கொண்டு, தாடி வளர்த்துக்கொண்டு, பாட்டுப்பாடிக் கொண்டெல்லாம் உட்கார்ந்திருக்க முடியாது.

தெருவில் இறங்கிப்போராடும் நிலை வந்து விட்டது - பொறுத்தது போதும், பொங்கியெழு என்கிறார் Smile

ஆனால் மடலேறுவதும் தோல்வியில் முடிவடைந்தால் பின்னிலைமை கொடுமையாக இருக்குமே? அதைக்குறித்தெல்லாம் எண்ணும் மனநிலையில் இல்லை!


Last edited by app_engine on Tue Mar 13, 2018 7:01 pm; edited 1 time in total

app_engine

Posts : 9174
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - பின்னுரை - Page 8 Empty Re: குறள் இன்பம் - பின்னுரை

Post  app_engine on Thu Feb 15, 2018 10:16 pm

#1133
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்


"எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" என்று காதலன் புலம்பும் பாடல் Smile

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன்
நாணமும் அதோடு நல்ல ஆண்மையும் முன்பு கொண்டிருந்தேன் (ஆனால்)

காமுற்றார் ஏறும் மடல் இன்றுடையேன்
இன்றோ காமத்தில் / காதலில் துன்புறுவதன் விளைவாக மடல் ஏறும் நிலைமையில் இருக்கிறேன்

ஆக, இதன் வழியாக நாம் தெரிந்து கொள்ளும் இன்னொரு தகவல், வள்ளுவரின் நாட்களில் மடல் ஏறுவது ஒரு முறை என்றாலும் அதற்கு அவ்வளவு மதிப்பில்லை என்பது.

அதாவது, "நல்லாண்மை / நாணம்" இவை இரண்டுக்கும் மாறான செயல் என்பதாகவே மடலூர்தல் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஒரு விதத்தில் சொல்லப்போனால், காதலின் விளைவாகத் தான் முன்பு கொண்டிருந்த சமூக நிலையில் இருந்து தாழ்ந்து / இழிந்து ஒருவன் ஆகி விடுகிறான் என்றே தோன்றுகிறது!

குறிப்பாக, நல்லாண்மை என்ற சொல் - இதை எப்படிப்புரிந்து கொள்வது? பெண்ணுக்காகத் தெருவில் வந்து போராடுபவன் ஆண்மை குறைந்தவன் என்று ஒரு வேளை அன்றைய சமூகத்தில் நினைத்திருப்பார்களோ?

ஆண்மை என்றால் ஆளுமை, வீரம், உழைப்பு, வலிமை என்றெல்லாம் புகழப்படும் நிலையில் பொதுவாகப் பெண்களையும் பெற்றவர்களையும் அவனது தகுதிகளே கவர்ந்து இழுத்து விட வேண்டும்! (எடுத்துக்காட்டாக ஏறு தழுவுதலில் மாவீரனாக இருக்கும் ஒருவனுக்குப் பெண் கொடுக்கப் பெற்றவர்கள் வரிசையில் நிற்க வழியுண்டு - கோழைக்கு அப்படிப்பட்ட நிலை இருக்காது).

அப்படியெல்லாம் நடக்காமல், "நல்ல ஆண்மை" உள்ளவன் என்று ஒருவன் தன்னைத்தான் கருதினாலும் பொதுவாக அப்படியெல்லாம் பெரிய ஆள் இல்லை என்ற நிலை இருந்தால் என்ன செய்ய? (நல்ல பண்புகள் - அன்பு, அறிவு, பொறுமை போன்றவை உள்ளவன், உடல் வலிமை அவ்வளவாக இல்லாத கவிஞன்).

அப்படிப்பட்ட சூழலில் ஒருவன் காதலில் விழுந்து தவியாய்த்தவித்தால் கைகூடாத நிலையில் மடலேற முனைந்தால், அவனது "நல்லாண்மை" கொண்டு இது வரை உள்ள மதிப்பெல்லாம் போய் விடுமே என்று கவலை கொள்கிறானோ?

app_engine

Posts : 9174
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - பின்னுரை - Page 8 Empty Re: குறள் இன்பம் - பின்னுரை

Post  app_engine on Fri Feb 16, 2018 9:16 pm

#1134
காமக்கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை


முந்தைய குறளின் அதே கருத்துத்தான் (காமம் ஒருவனது நாணத்தையும் நல்லாண்மையையும் இல்லாமல் செய்யும்). என்றாலும், அதை ஒரு அழகான உவமை கொண்டு சிறப்பிக்கிறார்!

நாணொடு நல்லாண்மை என்னும் புணை
நாணத்தோடு நல்லாண்மை எனப்படும் தோணியை
(புணை - படகு, தோணி, மரக்கலம், கட்டுமரம்)

காமக்கடும்புனல் உய்க்கும்
காமம் எனும் கடுமையான வெள்ளம் அடித்துக்கொண்டு போய்விடும்

வாழ்க்கை என்பதை ஒரு ஆறாக இங்கே உருவகப்படுத்தி இருக்கிறார். அதில் பயணம் செய்ய உதவும் நல்ல பண்புகள் நாணமும் நல்லாண்மையும் - தோணி போன்றவை.

என்றாலும், சட்டென்று வரும் வெள்ளம் போன்ற ஆற்றல் கொண்டது காதல் / காமம். (இதை இருபாலார்க்குக்கும் பொருத்தலாம். என்றாலும், மடல் ஏறுதல் போன்று வெளிப்படையாக நாணம் விட்டு இறங்குவதைப் பெண்கள் செய்வது வழக்கமல்ல என்று சொல்கிறார்கள் - ஆக, நாணம் என்னும் கப்பலைக் கைவிடுவது ஆண்களுக்கு இருந்த குழப்பம்).

தமிழகத்தில் வள்ளுவர் காலத்தில் என்றல்ல, சென்ற நூற்றாண்டு வரைக்கும் (பேரளவில்) பெண்கள் காதல் எனும் வெள்ளத்திலும் அவர்களது நாணம் / அடக்கத்தைக் காத்து நின்றதாகவே தோன்றுகிறது. அண்மையில் இது சற்றே மாறி வருகிறது என்றாலும் அதற்கு எதிரான வன்முறையையும் நாம் காண முடிகிறது.

எப்படி இருந்தாலும், ஆண் - பெண்ணுக்கான ஈர்ப்பு என்பது "கடும்புனல்" என்பதில் ஐயமில்லை! எப்பேர்ப்பட்ட நாணம் / நல்லாண்மை / இன்ன பிற எல்லாம் உள்ளவர்களும் அதில் அடித்துக்கொண்டு போகப்பட்டிருக்கிறார்கள் என்பது வரலாற்று உண்மை!

app_engine

Posts : 9174
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - பின்னுரை - Page 8 Empty Re: குறள் இன்பம் - பின்னுரை

Post  app_engine on Tue Feb 20, 2018 7:30 pm

#1135
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்


"மயக்கும் மாலைப்பொழுது / மாலைப்பொழுதின் மயக்கம்" என்று திரைப்பாடல்களில் நாம் கேட்கும் கருத்தை நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவர் பதிவு செய்து வைத்திருக்கும் செய்யுள் Wink

காமத்தினால் நாணம் துறந்து மடலேறும் காதலன் இங்கே அதோடு துன்பம் தரும் மாலைப்பொழுதையும் பட்டியலில் கூட்டிச் சேர்க்கிறார் (மாலை உழக்கும் துயர்).

நாள் முழுதும் வேலை செய்து களைத்திருப்போருக்குப் பொதுவாக மாலைப்பொழுது என்பது புத்துணர்வு தரும் ஒன்று. சிறிது ஒய்வு, கொஞ்சம் விளையாட்டு (சிறுவர் என்றால் மாலை முழுதும் விளையாட்டு), பொழுது போக்கு என்று பொதுவாக எல்லோரும் எதிர்பார்த்துச் சுவைக்கும் மாலைப்பொழுது!

காதலர்களுக்கும் அவ்வண்ணமே இன்பமானது தான் - அதாவது, காதல் நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் போது! மாலைக்காகக் காத்திருந்து துள்ளி ஓடித்தம் காதலரைச் சந்திப்பது என்பது அதுவே நாளின் சிறந்த பொழுது என்று கருதும் காலங்கள்.

ஆனால், காதலுக்கு இடையூறு வந்து விட்டால் அதுவே ஆகக்கூடுதல் துன்பம் தரும் பொழுதாக ஆகிவிடும்! அந்த உண்மையை இங்கே வள்ளுவர் சொல்லுகிறார் :

மடலொடு மாலை உழக்கும் துயர்
மடலேறுதல் என்ற (நாணம் துறந்த) நிலையோடு, மாலைப்பொழுதில் வருத்தும் துன்பத்தையும்

தொடலைக் குறுந்தொடி தந்தாள்
(பூ)மாலை போன்ற சிறிய வளையல் அணிந்த பெண் எனக்குத்தந்து விட்டாள்

தொடலை - (பூக்களால் செய்த) மாலை - அப்படியாக மாலை, மாலையில் துயர் தருகிறது என்ற சொல் விளையாட்டு
குறுந்தொடி - சின்ன (அல்லது மெல்லிய) வளையல்

app_engine

Posts : 9174
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - பின்னுரை - Page 8 Empty Re: குறள் இன்பம் - பின்னுரை

Post  app_engine on Thu Feb 22, 2018 12:30 am

#1136
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்


மடல் - படல் என்று எதுகை ஓசையுடன் அழகாக வரும் செய்யுள், காதலன் புலம்புவதில் "உறக்கமின்மை" என்ற இன்னொரு கூறு கூட்டப்பட்டு வலிமை ஊட்டப்படுகிறது.

அல்லாமலே காதல் என்றால் உறக்கம் கெடுதல் என்பது பலருக்கும் ஏற்படும் பலன் - இங்கோ, உறவு கைகூடாத நிலையில் உறக்கம் வருமா? அதுவும் மடலேறுதல் என்ற நிலையில் சேருமளவுக்கு மன அழுத்தத்தில் காதலன் உள்ள பொழுது உறக்கம் வரப்பெரும் தடை இருப்பதில் வியப்பில்லை!

"மன்ற" என்பது அசைச்சொல் என்கிறார்கள். அதாவது, அதற்குப்பொருள் இங்கே இல்லை - ஓசை நயத்துக்காக / தளை சேருவதற்காக இப்படிப்பட்ட சில அசைச்சொற்கள் செய்யுள்களில் சேர்க்கப்படும் முறை இருக்கிறது. திருக்குறளில் பொதுவாக இத்தகைய அசைச்சொற்கள் மிகக்குறைவு - ஏழே சொற்களில் ஆழ்ந்த கருத்து வெளிப்படுத்த வேண்டும் என்பதால் ஒரு சொல்லைப்பொதுவாக வீணடிக்க வள்ளுவர் விரும்ப மாட்டார். என்றாலும். அரிதாகச் சில குறள்களில் காணலாம்.

மன்ற பேதைக்கென் கண் படல்ஒல்லா
பெண்ணை நினைத்துக் கண்ணுறக்கம் இயலாமல் தவிக்கிறேன்

யாமத்தும் மடலூர்தல் உள்ளுவேன்
(அதன் விளைவாக) இரவுப்பொழுதிலும் (யாமம் = சாமம்) மடலூர்தல் குறித்தே நினைத்துக்கொண்டிருக்கிறேன்app_engine

Posts : 9174
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - பின்னுரை - Page 8 Empty Re: குறள் இன்பம் - பின்னுரை

Post  app_engine on Fri Feb 23, 2018 10:51 pm

#1137
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்கதில்


திருக்குறளில் பெண்ணின் பெருமை (மட்டும்) பேசும் செய்யுள்கள் அரிதாகவே காண முடியும். (அதிலும் சில "கொழுநன் தொழுது எழுவதனால் சிறப்பு"  என்பது போன்று குழப்பம் விளைவிப்பதும் உண்டு).

இங்கே அப்படிப்பட்ட அரிதான ஒரு குறளைப் பார்க்கிறோம். என்றாலும், இது புகழ்ச்சியா அல்லது "பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்" என்ற அடக்குமுறையா என்பது அவரவர் பார்க்கும் பார்வையின் அடிப்படையில் வேறுபடலாம்.

அதாவது, "இந்த "நாணம் துறத்தல் எல்லாம் ஆண்களுக்குத்தான். எப்பேர்ப்பட்ட காதல் உணர்வு இருந்தாலும் பெண் நாணத்தைத் துறக்கவே மாட்டாள்" என்று சொல்கையில், "துறக்கக்கூடாது" என்ற கட்டளை அங்கே உட்பொதிந்து இருப்பதாகப் பெண்ணியச் சிந்தனை உள்ளோருக்குத் தோன்றலாம்!

என்றாலும், தற்பொழுது நடுநிலையில் (மய்யத்தில்) நிற்பது தான் பலரும் விரும்பும் பாணி என்பதால், "பெண்ணின் பெருந்தக்கதில்" என்பதை அப்படியே எடுத்துக்கொண்டு கடப்போம் Smile

கடலன்ன காமம் உழந்தும் மடலேறா
(அலை அலையாகப் பொங்கும்) கடல் போன்ற காமத்தில் துன்புற்றாலும் மடலேறாமல் இருப்பதால்
(ஆண்களைப்போல அந்நாட்களில் பெண்கள் மடலேறுவதில்லை என்பது மரபு)

பெண்ணின் பெருந்தக்கதில்
பெண்ணை விடவும் பெருமையாக எண்ணத்தக்கது இல்லை
(பெண்ணாகப் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா)

ஆக, கொந்தளிக்கும் / பொங்கி வரும் காதல் உணர்வுகள் கொண்டு துன்புற்றாலும் அதைத் தெருவில் இறங்கிப்போராடிப் பெண்கள் தெரிவித்ததில்லை!

நாணம் துறக்காமல் அடக்கிக்கொண்டு வீட்டிற்குள் (தோழியரிடம்) புலம்பித தள்ளுவது தான் அவர்களது பெருமை / மரபு என்கிறார் வள்ளுவர்!

app_engine

Posts : 9174
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - பின்னுரை - Page 8 Empty Re: குறள் இன்பம் - பின்னுரை

Post  app_engine on Mon Feb 26, 2018 8:57 pm

#1138
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்


காதல் / காமம் பெருகி வரும்போது மற்றபடி மதிப்பு மிக்கவராக வாழ்ந்து கொண்டிருப்பவரும் நாணம் கெட்டுப்போக நேரிடும் என்று அச்சுறுத்தும் பாடல் Smile

அருமையான மாட்சிமை கொண்டவர், மனதில் மற்றவருக்கு இரங்கும் அன்பான தன்மை கொண்டவர் - இப்படியெல்லாம் உள்ளவருக்குப் பொதுவாக எல்லார் முன்னிலையிலும் நல்ல மதிப்பு இருக்கும்.

ஆனால், "அப்படிப்பட்ட மதிப்புள்ளவர் ஆயிற்றே" என்றெல்லாம் பார்த்துக்கொண்டு காதல் வராமல் இருக்குமா? எல்லா மானிடருக்கும் உள்ள அடிப்படை உணர்வு தானே அது? அதனால், பெண் மீதான காதல் உணர்வு பொங்கி வரும்போது ஒருவனுக்குத் தான் சமுதாயத்தில் எத்தகைய மாட்சிமை வாய்ந்த இடத்தில் இருக்கிறோம் என்பதெல்லாம் மறந்து போய் விடும். நாணம் இல்லாமல் வெளிப்படையாகத் தனது காமத்தைக் காட்டுவான் என்கிறார் வள்ளுவர்.

உண்மை தான் - எத்தனையோ புகழ் பெற்றவர்கள் காதல்-காமம் என்று வரும்போது தங்கள் நிலையைக் கருதி அதை அடக்குவதெல்லாம் கிடையாது என்பது வரலாறு!

நிறையரியர் மன்அளியர் என்னாது
அரிய மாண்புகள் கொண்டவர், இளகிய மனது கொண்டவர் என்றெல்லாம் பாராமல்

காமம் மறையிறந்து மன்று படும்
காமம் மறைவில்லாமல் பலர் முன்னிலையில் (மன்றத்தில் / அவையில்) வெளிப்பட்டு விடும்

நாணம் கெடுக்கும் நிலை என்று குறையும் சொல்லலாம் - காதலின் சிறப்பு என்று பெருமையும் பட்டுக்கொள்ளலாம் Smile

app_engine

Posts : 9174
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - பின்னுரை - Page 8 Empty Re: குறள் இன்பம் - பின்னுரை

Post  app_engine on Wed Feb 28, 2018 12:10 am

#1139
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு


நெருப்பை மறைத்து வைக்க முடியாது.

எரிந்தோ புகைந்தோ அது தன்னை வெளிக்காட்டும்.

காமமும் அது போலத்தான். நாணம் கொண்டு மறைத்து வைக்க முயன்றாலும் தக்க சூழலில் அது வெளிப்பட்டு விடும்.

இதை அழகாகச்சொல்லும் குறள். அதற்கென்று காமத்தை ஒரு ஆளாக உருவகப்படுத்தி இங்கே கவிதை சொல்கிறார் வள்ளுவர்.

என் காமம்
என்னுடைய காமம் / காதல் (எனப்படும் ஆள்)

அறிகிலார் எல்லாரும் என்றே மறுகின்
மற்றவர்களுக்குத் தெரியாமல் (இவனுக்குள் மட்டும் ஒளிந்து கொண்டு) இருக்கிறேனே என்று மனம் கலங்கும்போது

மருண்டு மறுகும்
அந்த மயக்கத்தில் தெருவுக்கு வந்து விடும்
(மறுகு = தெரு)

நாணத்தால் ஒருவன் காதலைத் தனக்குள் மறைத்து வைக்க முயல்வது மடியில் நெருப்பை மறைக்கும் முயற்சி - தோல்வி அடைவது உறுதி!

இன்று இல்லாவிட்டால் நாளை காமம் அவனை உந்தித்தள்ளித் தெருவில் இறக்கும்.
(மடலேறுதல் போன்ற செய்கையில் வந்து விளைவடையும்).app_engine

Posts : 9174
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - பின்னுரை - Page 8 Empty Re: குறள் இன்பம் - பின்னுரை

Post  app_engine on Wed Feb 28, 2018 7:51 pm

#1140
யாம் கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம் பட்டதாம் படா ஆறு


வாய்விட்டுச் சிரிப்பது உடல் நலத்துக்கு நல்லது என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

என்றாலும், பொதுவாக ஒருவர் அத்தகைய விதத்தில் நகைப்பது வேறு யாரோ அல்லது ஏதோ ஒன்றின் செலவில் (இழிவில்) தான் என்பதும் பொதுவான உண்மையே.  எள்ளி நகைக்கப்படுபவர் கூடச்சேர்ந்து நகைக்கும் நிலையில் எல்லா சூழல்களிலும் இருப்பார் என்று சொல்ல இயலாது. பல நேரமும், கடுந்துன்பத்திலும் இருக்கலாம்.

அப்படிப்பட்ட சூழல் இங்கே காதலினால் நாணங்கெட்ட ஒருவனுக்கு இருப்பதைப்பார்க்கிறோம். (ஒருவேளை மடலேறித் தெருவில் செல்லும் நிலையில் பலரும் எள்ளி நகையாடும் சூழலை விவரிக்கும் பாடலாக இது இருக்க வழியுண்டு).

யாம் பட்டதாம் படா ஆறு அறிவில்லார்
நான் பட்ட துன்பங்கள் பட்டறியாதவர்கள்  
(காதல் நோயால் பாடு படாத அறிவற்றோர்)

யாம் கண்ணின் காண நகுப
நான் கண்ணால் காண (என்னை இகழ்ந்து) நகைப்பார்கள்

பல நேரங்களிலும் எள்ளி நகைப்போர் நேரடியாகச்செய்ய மாட்டார்கள். (நோகடிக்க வேண்டாமே என்ற நல்லெண்ணமோ அல்லது மற்றவர் முன்னால் தான் பரிவுள்ளவன் எனக்காட்டும் முயற்சியோ - ஏதோ ஒன்றின் விளைவாக, ஆள் இல்லாத போது மறைவாகப் பேசிச்சிரித்துக் கொள்வார்கள்). சில சூழல்களில் தான் இழிவு பட்டவனை நேரடியாகப்பார்த்து, அவன் கண் காண நகைப்பார்கள்.

காமத்தினால் நாணங்கெட்டு வெளியில் வந்து போராடுபவனின் நிலை அப்படிப்பட்ட நகைப்புக்கு ஆளாகும் என்று இங்கே தெரிந்து கொள்கிறோம்.

அதே நேரத்தில், அப்பேர்ப்பட்ட நிலைக்கு அவன் வருவதன் பின்னால் உள்ள வலியையும் புரிந்து கொள்கிறோம் Smile


Last edited by app_engine on Fri Mar 02, 2018 5:15 pm; edited 1 time in total

app_engine

Posts : 9174
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - பின்னுரை - Page 8 Empty Re: குறள் இன்பம் - பின்னுரை

Post  app_engine on Thu Mar 01, 2018 11:21 pm

#1141
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத்தால்

(காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல் அதிகாரம்)

படித்த உடனே தோன்றியது - "அட, வள்ளுவர் பாக்கியம் என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறாரா?" என்ற எண்ணம் தான் Smile

இது வரை அதை ஒரு வேற்றுமொழிச்சொல் என்று கருதி இருந்தேன் (சௌபாக்யம், பாக்யவதி, பாக்யவான் போன்ற சொற்கள் மலையாளம் / இந்தி மொழிகளில் பயன்பாடு கூடுதல், தற்காலத்தமிழில் குறைவு என்பதால் அதை வடமொழிச்சொல் என்று கருதினேன் - இனி ஆராய வேண்டும்).

பொருளில் வேறுபாடு இல்லை - "நல்ல வேளையாக / நல்வினைப்பயனால் / இறைவன் உதவியால் / புண்ணியத்தால்" என்றெல்லாம் உரையாசிரியர்கள் கூறுவதைப்பார்க்க இயலும். பாக்கியம் என்பதற்கு அகராதியும் இது போன்ற பொருட்கள் சொல்கிறது - அல்லாமல் செல்வம் என்றும் பொருள் சொல்வதைக்காண முடியும்.

அலர் தூற்றுதல் - இது தமிழில் அகத்திணை குறித்துள்ள நூல்களில் பொதுவாக வருவது தான். (காதல் குறித்துப் பழி தூற்றுவோர் "அலர்").

அலருக்கு அல்லது அலரைக்குறித்து அறிவுறுத்தல் சொல்லும் அதிகாரம் என்கிறார். "நீங்கள் எங்கள் காதல் குறித்துத் தூற்றிப் பழி பரப்புவது எங்களுக்கு நல்லது தான்" என்று அவர்களுக்கு அறிவுறுத்திக்கொண்டு இந்தக்குறள் தொடங்குகிறது.

அலரெழ ஆருயிர் நிற்கும்
(எங்கள் காதலைப்) பழித்துப்பேசுவோர் எழும்பொழுது எனது அருமையான உயிர் நிலை நிற்கும்

பாக்கியத்தால் அதனைப் பலரறியார்
நல்ல வேளையாக, இந்த உண்மை பலருக்கும் தெரியாது

கொஞ்சம் குழப்பம் தான். விளங்கிக்கொள்ள முயல்வோம்.

காதல் குறித்து ஊரார் பழி தூற்றுவதால் எப்படி இவனது (அல்லது அவளது) உயிர் நிலைக்கும்?

யாரும் அதைக்குறித்துப் பேசாமல் இருந்தால், இவர்களது உறவு என்றென்றும் களவிலேயே இருக்கும். அலர் தூற்றினால் அது குறித்து அனைவரும் - குறிப்பாக இருவரது வீட்டாரும் - எண்ணி ஆராய வேண்டியிருக்கும். அதன் மூலம் தானே இவர்களது காதல் கைகூட / இருவரும் இணைந்து வாழ முடியும். அந்த நம்பிக்கையில் இருவரும் உயிர் வாழ்வார்கள்!

இல்லாவிடில் இவர்களே சென்று அதைக்குறித்துப் பேசலாம் - அவ்வளவு துணிச்சல் அக்காலத்தில் இல்லையோ? அல்லது அது சரியான மரபு இல்லையோ என்றெல்லாம் கேள்விகள் எழுகிறது!

எப்படி இருந்தாலும், அலர் எழுவது இவரது உயிர் காக்கிறது என்ற உண்மை அலருக்கே தெரியாது Smile

அது பாக்கியம் என்கிறார் (அப்படித்தெரிந்தால் அவர்கள் மனமுடைந்து "நான் செய்ய நினைத்தது தீமையா நன்மையா" என்று குழம்பிப்போவார்களே)

app_engine

Posts : 9174
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - பின்னுரை - Page 8 Empty Re: குறள் இன்பம் - பின்னுரை

Post  Usha on Fri Mar 02, 2018 4:28 pm

எல்லி நகையாடும் சூழலை விவரிக்கும் பாடலாக இது இருக்க வழியுண்டு).


chinna spelling mistake..  எள்ளி

Usha

Posts : 2407
Reputation : 14
Join date : 2013-02-14

Back to top Go down

குறள் இன்பம் - பின்னுரை - Page 8 Empty Re: குறள் இன்பம் - பின்னுரை

Post  app_engine on Fri Mar 02, 2018 5:16 pm

Usha wrote: எல்லி நகையாடும் சூழலை விவரிக்கும் பாடலாக இது இருக்க வழியுண்டு).


chinna spelling mistake..  எள்ளி

நன்றி உஷாக்கா!

திருத்தி விட்டேன் (கூகிள் இன்புட் டூல்ஸ் செய்யும் விளையாட்டுக்கள் - பொதுவாகப் பிடித்து விடுவேன், இது தவறி விட்டது) Embarassed

app_engine

Posts : 9174
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - பின்னுரை - Page 8 Empty Re: குறள் இன்பம் - பின்னுரை

Post  app_engine on Fri Mar 02, 2018 6:09 pm

பாக்கியம் குறித்த என் கேள்விக்கு அருமையான விளக்கம் கிடைத்திருக்கிறது - ட்விட்டரில்!

க ர ச அவர்களது விளக்கத்தைக்காண இந்தச்சுட்டிக்குச் செல்லுங்கள் (பாக்கியம் தமிழ்ச்சொல்லே, நலம் என்ற பொருள், மலையாளம் ഭാഗ്യം அல்லது இந்தி भाग्य அல்ல):

https://twitter.com/r_inba/status/969308138557067265

app_engine

Posts : 9174
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - பின்னுரை - Page 8 Empty Re: குறள் இன்பம் - பின்னுரை

Post  app_engine on Fri Mar 02, 2018 10:05 pm

#1142
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ்வூர்


அலர் என்ன நினைத்துச் செய்தாலும் அது காதலருக்கு உதவியாகவே அமையும் சென்று அறிவுறுத்தும் பாடல் Wink

இங்கே அலர் தூற்றுவோரை "ஊர்" என்று வள்ளுவர் சொல்லுவதைக்காண முடியும். (பள்ளிக்காலத்தில் ஆகுபெயர் சொல்லிக்கொடுக்க எப்போதும் பயன்படுத்தும் சொற்றொடர் "ஊர் சிரிக்கிறது" - திருக்குறள் எழுதிய காலம் முதல் இன்று வரை "ஊரே சிரிக்குது" என்பது ஒரு நாணங்கெட்ட நிலையை சுட்டிக்காட்டுவது என்று பொருள் படுகிறது).

"கண்ணாள் அருமை" என்பதற்கு இரு விதமான உரைகளைக் காண முடிகிறது.

1. மிக அருமையான (கிடைத்தற்கரிய) பெண்
2. காண முடியாமல் அரிதாகிப் போய்விட்ட பெண்

எப்படி எடுத்துக்கொண்டாலும், காதலுனுக்கு அருமையாக இருக்கும் பெண்ணைச் சேர்வதற்கு இந்த ஊராரின் அலர் உதவியே செய்கிறது என்கிறான்.

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
மலர் போன்ற கண்களை உடைய என்னவளின் அருமை தெரியாமல்

அலரெமக்கு ஈந்ததிவ்வூர்
இந்த ஊரார் அலர் தூற்றி (அதன் வழியே) அவளை (அல்லது அவளின் காதலை) எனக்குத் தந்திருக்கிறார்கள்

மற்றவர்கள் பேசப்பேசப் பெண்ணுக்கு இவனோடு ஈர்ப்பும் / காதலும் கூடிக்கூடி வருகிறது. ஆக, அலர் கொண்டு எனக்கு நன்மையே என்று மீண்டும் அறிவுறுத்துகிறார் தலைவன்!

app_engine

Posts : 9174
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - பின்னுரை - Page 8 Empty Re: குறள் இன்பம் - பின்னுரை

Post  app_engine on Tue Mar 06, 2018 12:06 am

#1143
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து

சில உரைகள் சொல்வது போன்று இந்த "அலர் அறிவுறுத்தல்" தலைவன் அல்லது தலைவி தமது தோழருக்குச் சொல்வதாகக் கொண்டால் இந்தக்குறளை நாம் நன்றாகப் புரிந்து கொள்ளலாம்.

அதாவது, இப்படிப்பட்ட பழிப்பேச்சு (கௌவை / அலர்) எழுவது குறித்து நாம் ஏன் அஞ்ச வேண்டும் அல்லது வருந்த வேண்டும்? இது நல்லது தானே - என்று அறிவுறுத்தும் அதிகாரம் / செய்யுள்.

இங்கே எந்த அளவுக்குப் போகிறதென்றால் இன்னும் பெறாத ஒன்றைப் பெற்று விட்டது போன்று உணரச்செய்கிறதாம். (அதாவது, காதல் கைகூடி இருவருக்கும் மணம் இன்னும் ஆகாவிட்டாலும், அலர் எழுந்ததே அது நடந்து விட்டது போல இவரை உணரச்செய்கிறதாம்).

அப்படியாக, இப்படிப்பட்ட கலகம் / அலர் நல்லதுக்குத்தான் என்று அறிவுறுத்துகிறார் வள்ளுவர்.

உறாஅதோ ஊரறிந்த கெளவை
ஊரார் எல்லோரையும் அறியச்செய்யும் இந்த அலர் எங்களுக்குப் பொருந்தாதோ? (பொருந்தும் தான், ஏனென்றால்)

அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து
அதை இன்னும் பெறாமலேயே பெற்றது போன்ற நன்மை (அதாவது, எங்கள் காதல் கைகூடாமலேயே கூடிவிட்டது போல் உணரச்) செய்கிறதல்லவா?

ஆக, அலர் என்பது எதிர்மறையான ஒரு சொல் என்றாலும் அதையும் காதலர்கள் தமக்கு நன்மை செய்யும் ஒன்றாகவே கருதுகிறார்கள் என்று அறிவுறுத்தப் படுகிறோம்!

app_engine

Posts : 9174
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - பின்னுரை - Page 8 Empty Re: குறள் இன்பம் - பின்னுரை

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 16 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 12 ... 16  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum