Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

3 posters

Page 3 of 16 Previous  1, 2, 3, 4 ... 9 ... 16  Next

Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 3 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Aug 23, 2017 7:04 pm

#999
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும் பாற்பட்டன்று இருள்


சட்டென்று பார்த்தால் இது நட்பு அதிகாரத்தில் தானே வர வேண்டும், இங்கே ஏன் சேர்த்திருக்கிறார் என்று எண்ணத்தோன்றும்.

பண்புடைமையும் நட்பும் ஒன்றோடொன்று எப்படித் தொடர்புடையவை என்று சொல்லாமல் சொல்லுகிறார் Smile சொல்லாமலே புரிந்துகொள்ள வைப்பது செய்யுளின் அழகு தான். (என்ன சூழல் என்று முன்னமேயே தெரிந்திருப்பதால்).

பண்புடைமை இல்லாததால் நட்புறவோடு பழகும் திறன் இழந்து போனவர்களுக்கு வாழ்வில் ஒளி இருக்காது என்பதே இதன் முழுப்பொருள்.

நகல்வல்லர் அல்லார்க்கு
(பண்புடைமை இன்றி) நட்பாய்ப்பழகும் திறன் இல்லாதவர்க்கு

மாயிரு ஞாலம்
மாபெரும் உலகம்

பகலும் இருள் பாற்பட்டன்று
(ஒளி மிகுந்த) பகலிலும் இருள் நிரம்பியது போன்றே இருக்கும்

இங்கே ஒளி / இருள் எல்லாம் உருவகங்களாக ஒருவரது வாழ்வின் உயர்ந்த / தாழ்ந்த நிலைகளைக் குறிப்பிடுகின்றன. மேலும், ஒருவரது மனநிலை எப்படி இன்பம் நிறைந்தோ அல்லது துன்பமயமாகவோ இருக்கும் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

சூழல் முழுதும் ஒளியுடன் (உயர்வாக / இன்பமாக) இருக்கையில் பண்பற்ற இந்தப்பேர்வழி இருளில் (தாழ்ந்து / துன்பத்தில்) கிடப்பார்.

மற்றவர்களோடு பண்புடன் பழகுதல் வாழ்விற்கு எப்படி ஒளி தருகிறது என்று மிக அழகாக, வேண்டிய அறிவுரை சொல்கிறார்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 3 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Aug 23, 2017 10:26 pm

#1000
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமையாற்றிரிந்தற்று

ஆயிரமாவது குறள் ஒரு விண்மீன் செய்யுளாக இருப்பது தனிச்சிறப்பு Smile

நயம் மிகுந்த உவமையுடன் மெச்சத்தக்க வாழ்க்கைக்கருத்தும் அடங்கி மிளிருகிறது!

எளிதில் புரிந்து கொள்ளத்தக்க உவமை - நம்மில் பலரும் நேரடியாகக்கண்டு அறிந்திருக்கும் நிகழ்வு - பால் திரிதல் Smile

"நல்ல பால்" இங்கே பொருட்செல்வத்துக்கு உவமை. பண்பற்றவனுக்கு அழுக்குக்கலமும் Smile

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம்
பண்பில்லாதவன் அடைந்த பெரும் பொருட்செல்வம்

கலந்தீமையால் நன்பால் திரிந்தற்று
கலத்தின் தீமையால் (அழுக்கால்) நல்ல பால் கெட்டுப்போனதற்கு ஒப்பானது

புரிந்து கொள்வது கடினமல்ல.

மிக எளிமையாக விளங்கிக்கொள்ள, தற்காலத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளைப்பார்த்தால் போதும்.

பெரும்பணம் பண்பற்றவர்களின் கையிலிருப்பதால், எப்படியெல்லாம் கெடுதலுக்காகச் செலவழிக்கப்படுகிறது என்று அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள்.

கெட்டுப்போன பாலைக்குடித்து உடல்நலம் சீரழிந்து போவது போலத்தான் நாட்டு மக்களும் சீர்கெட்டு இருக்கிறார்கள் என்பது இன்னொரு உண்மை.

எப்படிப்பார்த்தாலும் மைல்கல் குறள்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 3 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Aug 24, 2017 4:20 am

ஆயிரம் குறள் ஆச்சு :-)

வழக்கம்போல pdf-ல் தரவிறக்கம் செய்ய இங்கே செல்லலாம் :

http://www.mediafire.com/file/ar6or4d4jxrv6w5/kural_inbam_1000.pdf

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 3 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Aug 24, 2017 11:55 pm

#1001
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்

(பொருட்பால், குடியியல், நன்றியில் செல்வம்)

நன்மை செய்யாத (பயனற்ற) செல்வம் என்பது அடுத்த அதிகாரம்.

"நாய் பெற்ற தெங்கம்பழம்" பழமொழி நினைவுக்கு வரலாம். தனக்கும் பயனின்றி, மற்றவர்க்கும் உதவாமல் வீணாகும் கருமியின் செல்வத்தை அழகாக விளக்கும் உவமை மற்றும் பழமொழி.

இந்த அதிகாரம் முழுவதும் அப்படிப்பட்ட மனமுடைய குடியினரைக் குறி வைக்கிறார் வள்ளுவர்.

எடுத்த எடுப்பிலேயே "செத்தான்" என்று ஒரே அடி!

"வாய் சான்ற" என்பதை "வீடு நிறைந்த" "இடம் நிறைய" என்றெல்லாம் உரையாசிரியர்கள் சொன்னாலும், வாய் என்பதற்கு வீடு / இடம் என்ற பொருளை அகராதியில் காண முடியவில்லை. "எல்லோரும் பேசும் அளவுக்கு" என்பது கூடுதல் பொருத்தமாகத்தோன்றுகிறது.

வாய் சான்ற பெரும்பொருள் வைத்தான்
(எல்லோராலும்) பேசப்படும் படியான பெரும்பொருள் கொண்டவன்

அஃதுண்ணான்
அதை உண்ணவில்லை / நுகரவில்லை என்றால்
(அல்லது பயன்படுத்தவில்லை என்றால்)

செயக்கிடந்தது இல்
(அப்பொருளால்) செய்ய முடிந்தது ஒன்றுமில்லை

செத்தான்
(அப்படிப்பட்டவன்) செத்தவனுக்கு ஒப்பானவன்

"செத்த பின்னால் அந்தப்பொருளைக்கொண்டு அவன் என்ன செய்ய முடியும்?" என்பதும் மிகப்பொருத்தமான பொருளே.

வாழும்போது செல்வம் கொண்டு தனக்கும் மற்றவர்க்கும் பயன் தரும் செயல்கள் செய்வோம். கருமியாக இருப்பவன் மற்றும் பணம் / பொருளைப்பதுக்குபவன் செத்தவனுக்கு ஒப்பு!

("கறுப்பை ஒழிக்கிறேன் பேர்வழி" என்று எளிய மக்கள் கைகளிலிருந்து பணத்தைப்பிடுங்கி, வங்கியில் அடைத்து வைத்து, நோட்டுகளுக்குப் பஞ்சம் உண்டாக்கி, அவ்வழியில் ஏழைகளை வஞ்சித்த முட்டாள் இந்திய அரசின் செயல் நினைவுக்கு வந்தால், நீங்கள் தெளிவாகக்குறள் படிக்கிறீர்கள் என்று பொருள்). Embarassed


app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 3 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Aug 29, 2017 9:23 pm

#1002
பொருளானாம் எல்லாம்என்று ஈயாது இவறும்
மருளானா மாணாப் பிறப்பு


முன்னொரு முறை கண்டது போல, இவறு என்றால் பேராசை என்று பொருள். கருமித்தனம் என்ற பொருளும் இருப்பதாக அகராதி சொல்லுகிறது.

அப்படியாக, "இவறும்" என்றால் கருமியாக / பேராசை மிக்கவராக வாழும் என்று புரிந்து கொள்கிறோம்.   அப்படிப்பட்டவரிடம் உள்ள செல்வம் "நன்றியில் செல்வமாக" இருப்பதில் வியப்பில்லையே?

பொருளானாம் எல்லாம்என்று
பொருள் தான் எல்லாம், அதைக்கொண்டு எல்லாம் நடக்கும் என்று

ஈயாது இவறும் மருளானா
யாருக்கும் ஒன்றும் தராமல் பேராசையோடு கருமியாக மயக்கத்தில் இருப்பவர்

மாணாப் பிறப்பு
மாட்சிமை அற்ற (இழிந்த) பிறவி

"இப்படியும் சில இழி பிறவிகள்" என்று சொல்லத்தக்க நிலையில் தான் பொருளை மட்டும் பெரிதாக நினைத்து வாழும் ஆட்கள் இருப்பார்கள். இங்கே குறிப்பிடத்தக்க ஒரு சொல் "மருள்" என்பது. (மயக்கம்).

பொருள் மீது அளவற்ற ஆவல் கொண்டோரிடம் ஒரு மயக்கநிலை இருப்பதைக் கண்கூடாகக் காண முடியும். போதைப்பொருள், கள், முறைகெட்ட பாலியல் ஆர்வம் போன்ற மயக்கங்கள் போலத்தான் இதுவும். முன் சொன்னவற்றால் வாழ்க்கையை சீரழிப்போரை அன்றாடம் காண்கிறோம். பொருள் மயக்கத்தில் கஞ்சத்தனத்தோடு வாழ்வோரும் அத்தகைய சீரழிவுக்கு விலக்கல்ல!

மற்றபடி, பல பிறவிகள் எடுப்பது குறித்த வள்ளுவரின் நம்பிக்கை தெரிந்ததே - இங்கும் அது சிறிய அளவில் ("பிறப்பு" என்ற சொல் வழியாக) வெளிப்படுவதாகச் சில உரையாசிரியர்கள் நினைப்பது தெரிகிறது.

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 3 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Aug 30, 2017 6:08 pm

#1003
ஈட்டம் இவறி இசைவேண்டா வாடவர்
தோற்றம் நிலக்குப் பொறை


"நிலத்துக்குச்சுமை" என்ற கருத்து திருக்குறளில் நாம் அவ்வப்போது காண்பது. பயனொன்றும் அற்ற ஆட்களை இவ்வாறு சொல்லுவார்.

பொருளுக்கான பேராவல் கொண்டு திரியும் கருமிகளுக்கும் அதே அடி இங்கே!

ஈட்டம் இவறி
பொருள் ஈட்டுவது (சேர்த்து வைப்பது) என்பதற்கான பேராசை கொண்டு

இசைவேண்டா வாடவர்
புகழ் வேண்டாம் என்று இருக்கும் மாந்தர்
(ஆடவர் என்கிறார், பெண்டிரும் அடக்கம் என்பது தெரிந்ததே)

தோற்றம் நிலக்குப் பொறை
பிறந்ததே நிலத்துக்குச் சுமை

"பொருள் வேண்டும், புகழ் வேண்டாம்" என்பது மிக இழிவான எண்ணம். அதாவது, அந்தப்பொருள் கொண்டு யாருக்கும் ஒரு பயனும் இல்லை.

நன்றியில் செல்வம்.

அதனை உடையோர் நிலத்துக்குச்சுமை!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 3 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Aug 31, 2017 9:54 pm

#1004
எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்
நச்சப்படாஅதவன்


நச்சப்படுதல் = விரும்பப்படுதல்

ஒருவராலும் விரும்பப்படாத வாழ்வு வாழ்ந்து செத்தால் அந்த வாழ்வின் பொருள் / பயன் தான் என்ன?

கைநிறைய இருக்கும் பொருள் "நன்றியில் செல்வம்" ஆனால், ஒருவனை யார் தான் விரும்புவார்கள்? சாகும்போது என்ன கொண்டு போவான், என்ன மிச்சம் விட்டுப்போவான் - என்றெல்லாம் சிந்திக்கத்தூண்டும் அழகான பாடல்!

ஒருவரால் நச்சப்படாஅதவன்
ஒருவராலும் விரும்பப்படாதவன்
(யாருக்கும் பயன்படாமல் பொருளைக்கட்டி வைத்து வாழும் கருமி)

எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ
(தான் இறந்த பின்) மிஞ்சி இருப்பது என்று எதை எண்ணுவான்?

"காதற்ற ஊசியும் வராது" என்று சொல்லக்கேட்டிருப்போம். செத்துப்போன பின் ஒருவனுக்கு நற்பெயர் / புகழ் அன்றி வேறொன்றும் மிஞ்சுவதில்லை. யாராலும் விரும்பப்படாத பயனற்ற வாழ்க்கை வாழ்ந்தவனுக்கு அது கிடைக்காது.

அந்நிலையில், அவன் ஈட்டிய பொருள் கொண்டு என்ன பயன்? செத்த பிணம் பணத்தைக்கொண்டு என்ன செய்யும்?

இதைக்கொஞ்சம் கூடுதல் ஆராய்ந்தால் இன்னொன்று தெரியும் - சாகும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. மருத்துவர்கள் கைவிடுகின்ற கொடுமையான நோய் வந்த நிலையில் தான் சிலர் "இவ்வளவு நாளும் நான் உருப்படியாக ஒன்றும் செய்யாமல் போனேனே" என்று வருந்துவது நாம் அடிக்கடி காண்பது.

செல்வம் உள்ள போது அதைப் பயனுள்ள வழிகளில் செலவழித்து நண்பர்களையும், நம்மை விரும்புவோரையும், புகழையும், நல்ல பேரையும் ஈட்டுவோம்.

அவை தாம் உண்மையான ஈட்டம்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 3 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Aug 31, 2017 11:06 pm

#1005
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண்டாயினும் இல்


நேரடியான, எளிமையான குறள் - நாம் முன்னமேயே கண்ட "நாய் பெற்ற தெங்கம்பழம்" பழமொழியின் இன்னொரு வடிவம்.

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு
(பொருளை) மற்றவர்களுக்குக் கொடுப்பதும், தாம் நுகர்வதும் என்று (பயன்படல்) இல்லாதவர்களுக்கு

அடுக்கிய கோடிஉண்டாயினும் இல்
கோடிக்கணக்கில் செல்வம் அடுக்கியிருந்தாலும் ஒன்றும் இல்லாதவர்களே

பயனற்ற செல்வம் குறித்த இந்த அதிகாரம் படிக்கும் நேரம் பார்த்து பணத்தாள் நீக்கம் குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை வந்து தொலைத்திருக்கிறது. மீண்டும் மீண்டும் "தலைப்புச்செய்தி + படிக்கும் குறள்" இவற்றுக்கான பொருத்தம் வியக்க வைக்கிறது.

எளிய மக்களின் சேமிப்புப்பணத்தை அவர்களது மருத்துவச்செலவு, திருமணம் போன்றவற்றுக்குப் பயன்படுத்த முடியாமல் போன 2016-ன் நவம்பர் தொடங்கிய சில மாதங்களை யாராலும் - குறிப்பாக அதனால் அடிபட்ட, உயிரையே இழந்த குடும்பங்கள் - மறக்க இயலாது. "கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம்" முடியாத நிலையில் நாட்டின் பெரும்பாலோர் சிக்கிக்கொண்ட நாட்கள்.

வங்கியில் எவ்வளவு கணக்கு இருந்தாலும் வேண்டிய தேவைகளுக்கு இல்லா நிலை.

"அடுக்கிய கோடி உண்டாயினும் இல்" என்பது நாம் கட்டுப்படுத்துவது மட்டும் இல்லை. நம்மை ஆள்வோரும் இப்பேர்ப்பட்ட இடத்துக்கு நம்மைத்தள்ள முடியும். (பெருவெள்ளம் போன்ற நேரங்களில், இயற்கையும் இந்நிலைக்கு நம்மைத்தள்ளலாம்).

திட்டமிட்டு, சரியான விதத்தில் நுகர்வதும், கொடுப்பதும் பயனில் செல்வத்தைக் குறைத்து நன்மைகள் செய்யும்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 3 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Sep 01, 2017 2:11 pm

#1006
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலாதான்


ஏதம் = துன்பம் / குற்றம் / நோய்

நன்றியில் செல்வம் / அதை வைத்திருப்பவன் - இவை ரெண்டுமே உலகில் குற்றம் தான். உரையாசிரியர்கள் இதற்கு இரு விதத்திலும் பொழிப்புரை எழுதுவதைக்காண முடிகிறது.

அதாவது, கருமிக்கு அந்தச்செல்வம் துன்பம்.

அல்லது, செல்வத்துக்கு வந்த நோய் கருமியாய் இருப்பவன்.

எப்படிப்பார்த்தாலும் சமுதாயத்துக்கு உதவாத ரெண்டுமே ஏதம் தான் Wink

தான் துவ்வான்
தானும் நுகராமல்

தக்கார்க்கொன்று ஈதல் இயல்பிலாதான்
தக்கவர்களுக்குக் கொடுத்து உதவும் இயல்பும் இல்லாதவன்

பெருஞ்செல்வம் ஏதம்
(அவனிடம் உள்ள) பெருஞ்செல்வத்தைப் பீடித்த நோய்!
(அல்லது)
(கையில் உள்ள) பெருஞ்செல்வம் அவனுக்குத்துன்பமே

ஆக மொத்தத்தில் இப்படிப்பட்ட கருமிகளை அறிவுறுத்தி ஈகையோடு வாழச்செய்வதே புலவரின் குறிக்கோள். (அல்லாத நிலையில் மன்னன் அவனிடமிருந்து பிடுங்கி அதைப்பயன்படுத்த நேரிடும். உலகின் பல இடங்களில் இது நடந்திருக்கிறது).

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 3 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Sep 01, 2017 3:41 pm

#1007
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள் மூத்தற்று


கண்டிப்பாக உவப்பில்லாத உவமை. மீண்டும் இங்கே வள்ளுவர் பெண்ணையும் பொருளுடைமையையும் ஒரே தட்டில் வைப்பதைக் காண்கிறோம் Sad

என்றாலும், அன்றும் இன்றும் கிட்டத்தட்ட எல்லா சமூகங்களிலும் உள்ள ஒரு கருத்து இங்கே வெளிப்படுவதை ஒத்துக்கொள்ளவேண்டும். அதாவது, மிகவும் முன்னேறியதாகச் சொல்லிக்கொள்ளும் குடிகள் உட்படப்பலரும் இன்றும் "பெண்ணுக்குத்திருமணம் நடக்க வேண்டுமே" என்று கவலைப்படுவதைக் கண்டிருக்கிறேன். "திருமணம் செய்து குழந்தை பெற்றால் தான் ஒரு பெண்ணின் வாழ்வு நிறைவடைகிறது" என்ற பொதுக்கருத்தை இங்கே வள்ளுவர் பதிவு செய்கிறார் / ஆவணப்படுத்துகிறார்.

ஆனாலும், "நன்றியில் செல்வம் = அழகான ஆனால் பயன்படுத்தப்படாமல் முதுமை அடைந்த கன்னி" என்பது ஆணாதிக்க எண்ணம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இவருக்கு வேறு உவமையே கிடைக்கவில்லையா?

பால் வேறுபாடின்றி இதே உவமையை அழகாகப் பயன்படுத்தி இருக்கலாம் Sad

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம்
இல்லாதவர்களுக்கு (நன்மை) செய்யாதவனின் செல்வம்

மிகநலம் பெற்றாள் தமியள் மூத்தற்று
மிகுந்த அழகான பெண் தன்னந்தனியாளாய் முதுமை அடைவதற்கு ஒப்பானது

வள்ளுவரின் கருத்து வாலி வரை நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நீண்டதை "அழகு மலராட" பாடல் நினைவு படுத்தக்கூடும்.

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 3 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Sep 05, 2017 7:59 pm

#1008
நச்சப்படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சுமரம் பழுத்தற்று


'நச்சு' என்பதற்கான இரண்டு பொருட்கள் (விரும்பு / நஞ்சு) கொண்டுள்ள சொல் விளையாட்டு.

அதில் ஒரு சொல்லை உவமை ஆக்குகிறார் Smile

நச்சப்படாதவன் செல்வம்
(கருமி என்பதால்) விரும்பப்படாதவனுடைய செல்வம்

நடுவூருள் நச்சுமரம் பழுத்தற்று
ஊர் நடுவில் நஞ்சு மரம் பழுத்து நிற்பது போலாகும்

நஞ்சுக்கனிகள் மரம் நிறையப்பழுத்துத் தொங்கினாலும் யாருக்கும் அவற்றால் பலனில்லை. அது நஞ்சு விளைவிக்கும் மரம் என்று தெரியாமல் ஒரு வேளை அந்த ஊர்க்காரர்கள் அதை வளர்க்கப்பல செலவுகள் செய்திருக்கலாம். (இடம், நீர், உழைப்பு). அவையெல்லாம் வீண்.

விரும்பப்படாதவன் செல்வமும் அப்படித்தான் - வீணாகக்கிடக்கும், அவ்விதத்தில் அதுவும் நஞ்சே. அதை உருவாக்க அவனுக்கு அந்த சமுதாயம் பல வழிகளில் உதவி இருக்கும் - அவையெல்லாம் வீணாகப்போயின.

நாம் கொண்டிருப்பதெல்லாம் நாம் மட்டுமே உண்டாக்கியவை அல்ல. (சொல்லப்போனால், நாம் பெறாதது என்று ஒன்றுமே இல்லை. இவ்வுலகுக்கு ஒன்றுமில்லாமல் தான் வந்தோம். எல்லாமே பலரும் நமக்கு ஈந்ததே).

நமக்கு உள்ளதையெல்லாம் பலருக்கும் பயன்படுத்தி, உயிர்களைப்பேணி உயிர் வாழ்வோம்.

நஞ்சு மரமாக ஆக வேண்டாம்.

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 3 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Sep 05, 2017 9:12 pm

#1009
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்


அன்பும் ஈகைக்குணமும் இல்லாமல் கருமியாய் இருப்போர் பொருள் கடைசியில் வேறு யாருக்கோ போகும். (இதுவும் போதாதென்று கருமிகள் தங்களையும் துன்புறுத்திக்கொள்ளுவர்).

அப்படியாக, அது இன்னொரு கருத்திலும் "நன்றியில்" செல்வமாகிறது. (நன்மை / பயன் அற்ற செல்வம் என்பது தான் பொருள். வேடிக்கையான ஒரு விதத்தில், "நன்றி கெட்ட" செல்வம் என்றும் சொல்லலாம் Laughing அதாவது, ஈட்டியவனுக்கு அல்ல பலன், அவனறியாத யாருக்கோ!)

இந்த நடைமுறை உண்மை இங்கே சொல்லப்படுகிறது.

அன்பொரீஇ
அன்பை விட்டு விட்டு
(ஓசை நயத்துக்கான அளபெடை காண்க Smile )

தற்செற்று
தன்னையும் துன்புறுத்திக்கொண்டு

அறநோக்காது ஈட்டிய ஒண்பொருள்
நன்மை (செய்ய வேண்டும் என்ற) நோக்கமே இல்லாமல் ஈட்டிச்சேர்த்த பெரும் பொருள்

பிறர் கொள்வார்
வேறு யாரோ கொண்டு போவார்கள்

இதை இப்படியும் புரிந்து கொள்ளலாம் - தானும் தின்னாமல் மற்றவருக்குக்கொடுக்க அன்பு மனமுமில்லாமல் காத்துக்காத்துச் சேர்த்து வைத்தால், செத்துப்போன பின் யார் அதை நுகர்வார்?

அது யாருக்குப்போனாலும் அதன் மீதான கட்டுப்பாடு செத்துப்போனவனுக்கு இல்லை தானே? தனது கட்டுப்பாட்டில் இருக்கையில் அதைக்கொண்டு என்னன்னவோ செய்திருக்கலாமே?

எல்லா வாய்ப்பும் போயே போச்சு அல்லவா?

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 3 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Sep 06, 2017 12:56 am

#1010
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந்தனையது உடைத்து


இது வரை இந்த அதிகாரத்தில் வந்தவற்றில் இருந்து சற்றே மாறுபட்ட கருத்து / குறள்.

இதுவும் பயனற்ற செல்வம் பற்றியதே - என்றாலும் எப்போதும் கருமியாய் இருக்கும் ஆட்களைப்பற்றியதல்ல.

பொதுவாக ஈகையோடு நடந்து புகழ் பெற்றோர், அந்நிலையில் இல்லாமல் இருப்பது குறித்தது.

இங்கே "துனி" என்ற சொல்லுக்கு அகராதி உட்பட எல்லோரும் "வறுமை" என்றே பொருள் சொல்கிறார்கள். ஆனால், அதே அகராதியில் அந்தச்சொல்லுக்கான முதன்மையான பொருள் "வெறுப்பு" என்பதே. இரண்டு விதத்திலும் புரிந்து கொள்ள முயலுவோம்.

சீருடைச் செல்வர் சிறுதுனி
(ஈகையால்) சிறப்பு (புகழ்) உடைய செல்வர்கள் அடையும் சிறிய வறுமை (அல்லது, சிறிய வெறுப்பு)

மாரி வறங்கூர்ந்தனையது உடைத்து
மழை வறண்டு போனது போன்ற தன்மை உடையது

பொதுவாகத் தமது செல்வத்தைப் பயனுறக்கொடுத்து சீருடன் வாழ்வோர் வறுமைப்படுவதை மழை பொய்த்ததற்கு ஒப்பிடுவது பொருத்தமானதே.

என்றாலும், நன்றியில் செல்வம் என்ற தலைப்பில் செய்யுள் இருப்பதால், இங்கு "செல்வம் இருந்தும் ஈகை இல்லாத நிலை" என்று கொள்வதே மிகப்பொருத்தம். (வறுமை = செல்வம் இல்லாத நிலை. இல்லாத செல்வத்தை எப்படி நன்மையில்லாத செல்வம் என்று சொல்வது?)

அப்படிப்பார்த்தால், துனி என்பதை வெறுப்பு என்று கொள்வதே அழகு.

என்றும் சீருடன் வாழும் செல்வர் சட்டென்று மனம் மாறி, வெறுப்புடன் செயல்பட்டால், அந்தச்சிறிய காலத்துக்கு அவரது செல்வம் பயனில் செல்வமாகும். அந்நேரத்தில், அதற்காகக் காத்திருக்கும் நற்செயல்கள் மழைக்குக்காத்திருக்கும் பயிர்கள் போல வாடும்

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 3 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Sep 06, 2017 6:08 pm

#1011
கருமத்தால் நாணுதல் நாணுந்திருநுதல்
நல்லவர் நாணுப்பிற

(பொருட்பால், குடியியல், நாணுடைமை அதிகாரம்)

நாணம் / வெட்கம் என்ற உணர்வுக்கு இரண்டு பொருள் உண்டு.

1. இயல்பாக வரும் வெட்கம் (குறிப்பாகத்தமிழ்ப்பெண்டிருக்கு உயர்ந்த பண்பாகவே இது கருதப்படுகிறது. ஏழை எளியவருக்கும் சில நேரங்களில் தமது உடை, உணவு, வாழ்க்கை நிலை போன்றவை குறித்த தவறான ஒப்பீடுகளால் மனதுக்குள் வரலாம்)

2. குற்றம் செய்வதற்கு வெட்கம் / குற்றம் செய்ததை உணர்வதால் வரும் வெட்கம். ஒரு வேளை தாமாகவே உணரலாம். மற்றொருவரால் உணர்த்தப்பட வேண்டிய நிலை வந்தால், அது வெட்கக்கேடு என்று கருத வேண்டி இருக்கும்

இந்த அதிகாரம் முழுவதும் ரெண்டாவது வகையைக் குறித்தது.

என்றாலும், குழப்பம் வந்து விடக்கூடாது என்பதற்காக வள்ளுவர் இந்த இரண்டையும் இங்கே சொல்லித்தொடங்குகிறார்.

திருநுதல் நல்லவர் நாணுப்பிற
அழகிய நெற்றி உடைய நல்லவர் (நல்ல பெண்கள்) நாணுவது வேறு
(அதாவது, அவற்றைப்பற்றியல்ல நாம் பேசப்போவது)

கருமத்தால் நாணுதல் நாணு
செய்த செயலுக்காக வெட்கப்படுவது நாணம் (அது குறித்தே இங்கே பார்க்கப்போகிறோம்)

குற்றம் / இழிசெயல் புரிந்தவர்கள் அதற்காக நாணப்பட வேண்டி வரும்.

அது குறித்துத் தொடர்ந்து வரும் செய்யுள்களில் எப்படியெல்லாம் வருகிறது என்று பார்ப்போம்.

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 3 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Sep 07, 2017 5:50 pm

#1012
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல 
நாணுடைமை மாந்தர் சிறப்பு

"இன்ன பிற" என்பதற்கு அழகாக "எச்சம்" (மிச்சம்) என்ற சொல்லை வள்ளுவர் இங்கே கையாளுகிறார். 

கிட்டத்தட்ட இதற்கான ஆங்கிலச்சொல்லின் (etc.) அதே ஒலியுள்ள சொல் Smile

"நல்ல மாந்தர் என்றால் தவறு செய்வதற்கு நாணவேண்டும்" என்ற உயரிய கருத்தைச்சொல்ல வருகையில் மற்ற எல்லோரையும் ஏளனமும் செய்கிறார். 

உணவு / உடை / எச்சம் (அதாவது, பொருளியல் தேவைகள்) மட்டுமே போதும், எப்படியும் / என்ன செய்தும் வாழலாம் என்று இருப்போரை "மாந்தர்" கணக்கிலேயே சேர்க்கக்கூடாது என்று சொல்வதன் வழியாக அவரது ஏளனம் வெளிப்படுகிறது. 

இங்கே உடை என்று சொல்லுவதால் மானிடரைத்தான் சுட்டுகிறார் என்பது தெளிவு. (விலங்குகளுத்தான் அது தேவையில்லையே). ஆக, "மானிடர் என்ற பெயரில் வாழும் விலங்குகள் தாம் வெட்கமில்லாமல் இழிசெயல்கள் செய்து வாழும்" என்று புரிந்து கொள்ள வேண்டும். 

அவ்விதம் வாழும் வெட்கங்கெட்ட மானிடர் பலர் இருந்தாலும் தற்பொழுது குறிப்பாக அரசியல்வாதிகள் நினைவுக்கு வந்து தொலைக்கிறார்கள். குறிப்பாக, மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் பணம் / பதவி மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்போர். என்ன இழிசெயலும் நாணமின்றிச் செய்ய ஆயத்தமாய் இருப்போர் - விலங்குகள்!

ஊணுடை எச்சம்
உணவு, உடை, மிச்சமுள்ள தேவைகள் / பழக்கங்கள் 

உயிர்க்கெல்லாம் வேறல்ல 
எல்லா உயிர்களுக்கும் ஒரே போல் தாம் - வேறல்ல

நாணுடைமை மாந்தர் சிறப்பு
ஆனால், (பழிக்கு) நாணுடைமை என்பது (நல்ல) மாந்தர்க்கு மட்டுமே உடைய சிறப்பு

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 3 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Sep 11, 2017 10:21 pm

#1013
ஊனைக்குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு


ஊனை உவமையாக்கியுள்ள செய்யுள்.

தசைக்கும், புலால் உணவுக்கும் ஊன் என்று சொல்வர், உடலுக்கும் ஊன் என்று சொல்வர்.

உணவு என்று கொண்டாலும் உடல் என்று கொண்டாலும் பொருத்தமான உவமை. அதாவது, உடலோ / உணவோ இல்லாமல் உயிருக்குச் செயல்பாடு இல்லை. அது போல, நாணம் என்னும் நற்பண்பாகிய உடல் இல்லாமல் சான்றாண்மை என்னும் உயிர் செயல்படமுடியாது.

அழகான உவமை / குறள்!

இதில் எனக்கு இன்னும் பிடித்தமான ஒன்று "உடல் இன்றி உயிர் என்ன செய்யும்?" என்ற கருத்து பொதிந்திருப்பது.  

உயிரின்றி உடல் வெறும் பிணம் - இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.  ஆனால், உடல் இல்லாத இடத்தில் "உயிர்" என்ற ஒன்றும் செயல்பட வழியில்லை என்பது பொது நம்பிக்கைகளுக்குச் சற்றே வேறுபட்ட அருமையான கருத்து.

உயிராற்றல் என்பதை எளிதில் புரிந்து கொள்ள மின்னாற்றல் நமக்கு உதவும். மின்கருவிகளுக்குள் அந்த ஆற்றல் பாயாதவரை அவை சவங்களே. ஆனால், பயன்படுத்தும் கருவிகள் இல்லாத இடத்தில் மின்னாற்றலுக்கும் வேலை இல்லை தானே?

அதே போலத்தான் உயிராற்றலும் - அது செயல்பட ஏதோ ஒரு வகையான உடல் (அது அமீபாவோ ஆடு மாடோ ஆணோ பெண்ணோ அத்தி மரமோ) கண்டிப்பாய் வேண்டும். அறிவியல் கருத்து Smile
(ஒருவன் செத்த பின் அவனது உடல் மண்ணுக்குள் போக, அந்த உயிர் ("ஆத்மா") எங்கெங்கோ போகிறது, வருகிறது, அலைகிறது, அமைதிக்காக ஏங்குகிறது என்றெல்லாம் பொய்மைகள் இன்று பல நம்பிக்கைகளிலும் உள்ளது தெரிந்ததே)

உயிரெல்லாம் ஊனைக்குறித்த
எல்லா உயிர்களும் செயல்பட உடல் (அல்லது உணவு) அடிப்படை

சால்பு நாண் என்னும் நன்மை குறித்தது
அது போல, சான்றாண்மை வெளிப்படுவதற்கு (பழிக்கு) நாணம் என்னும் நற்பண்பே அடிப்படை

தவறு செய்வதற்கான அச்சம் நாணம் இல்லாமல் ஒருவர் சான்றோர் ஆக முடியாது. இந்த அடிப்படையில் இன்றுள்ள அரசியல்வாதிகள் பெரும்பாலோருக்கும் "சான்றோர்" பட்டம் கிட்டப்போவதில்லை!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 3 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Sep 11, 2017 11:07 pm

#1014
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை


ஒலி நயமும் ஓசை நயமும் நிறைந்த அழகான குறள் - இனிமையான கருத்தும்!

அணிக்குப்பிணி - முரண் தொடை /எதுகை.

இவற்றோடெல்லாம் சேர்ந்து சிறிதான எள்ளல் சுவையும் ("பீடு" நடை Laughing )

சான்றோர்க்கு நாணுடைமை அணிஅன்றோ?
சான்றோர்க்கு அழகு (தீமை செய்ய அஞ்சும்) வெட்கம் அல்லவா?

அஃதின்றேல்
அப்படிப்பட்ட நாணம் இல்லாவிட்டால்

பீடு நடை பிணிஅன்றோ?
(நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு) பெருமிதத்துடன் நடப்பது பிணி இல்லையா?

கொஞ்சமும் வெட்கமின்றி இழிசெயல் செய்பவர்கள், திமிரோடு நடப்பது நோய் தானே? மனநோய் பிடித்தவர்கள், மனப்பிறழ்வு உள்ளோர் என்று இவர்களை அழைப்பதில் என்ன தவறு?

இந்தக்குறள் முதல் முறையாக தமிழ்நாட்டு அரசுப்பேருந்தில் படித்தது என்ற நினைவையும் இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டும். பள்ளிக்காலத்தில் இது கண்டபோது நாணுடைமை என்பதன் பொருள் முழுமையாய் விளங்காவிட்டாலும், பாடல் பதிந்து விட்டது என்பது வேறொரு உண்மையை விளக்குகிறது.

நெடுநாள் நினைவில் ஒன்றைப்பதிக்க வேண்டுமா - இசை நயத்தோடு சொல்லிக்கொடுங்கள் Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 3 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Sep 12, 2017 4:59 pm

#1015
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு


நாணம் என்னும் பண்புக்கு யார் "உறைவிடம்" (வாழும் இடம் / இல்லம்) என்று சுவையாகச்சொல்லும் குறள்.

தம் மீது மட்டுமல்ல, மற்றவர் மீதும் பழி வந்து விடக்கூடாது என்று நாணுவோர் தாம் அத்தகையோர்.

மன்னன் குடியிருக்கும் இடம் கோவில் (கோ + இல்).

நாணம் குடியிருக்கும் இடம் - தமது மற்றும் பிறரது பழி நாணும் சான்றோர்!

நாணுக்கு உறைபதி
நாணம் குடியிருக்கும் இல்லம்

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார்
பிறர் மேலும் தம் மேலும் பழி வரக்கூடாது என்று வெட்கப்படுவோர்

என்னும் உலகு
என்று உலகே சொல்லும்

இது எந்த உலகு என்று இன்று தேடிக்கண்டு பிடிக்க வேண்டி இருக்கிறது. பொறுப்பான நிலைகளில் இருப்போர் பெரும்பாலும் வெட்கங்கெட்டவர்களாக இருக்கிற சமுதாயத்தில் வாழ்கிறோம் (எந்த நாட்டில் இருந்தாலும் இது தான் நிலை). ஒரு வேளை இத்தகையோர் வாக்களித்துத் தேர்தல் வழி வந்தவர்கள் என்றால், அவர்களைத் தெரிவு செய்யும் பொது மக்களும் வெட்கங்கெட்டவர்களே.

இன்றைய உலகில் யாருக்கும் வெட்கம் இல்லை Sad

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 3 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Sep 12, 2017 8:04 pm

#1016
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலாயவர்


நாணவேலி - என்ன அழகான உருவகம்!

பாதுகாப்பான வாழ்க்கை வாழ வெட்கம் ஒருவருக்கு எவ்வளவு தேவை என்பதை ஒரே சொல்லில் இதை விட அழகாக விளக்க முடியுமா? தீங்கு செய்தல், குற்றம் புரிதல், பழிக்கு ஆளாதல், அழிவு - இப்படிப்பல வேண்டாத நிகழ்வுகளில் இருந்து ஒருத்தருக்குப் பாதுகாப்புத்தரும் வேலி நாணம்!

கண்காணா அவ்வித வளையத்துக்குள்ளே இருந்து வாழ்வைப் பேணுபவன் தான் மேலானவன் என்று சொல்லும் அழகான செய்யுள்!

மேலாயவர்
உயர்ந்தவர்கள் / மேன்மையானவர்கள்

நாண்வேலி கொள்ளாது
பழிக்கு நாணம் என்னும் வேலி (மனத்தடை) கொள்ளாமல்

வியன்ஞாலம் பேணலர் மன்னோ
பரந்த உலகில் வாழ்வைப் பேண (போற்ற / பாதுகாக்க) மாட்டார்கள்

இது குடியியல் என்பதால் வாழ்வு என்பதே மிகப்பொருத்தம். அதை வேண்டுமானால் இன்னும் விரிவு படுத்தி, "உலகைப் பேண மாட்டார்கள்" என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

அதாவது, பொறுப்புகளில் உள்ளோர்க்குக் கூடுதல் நாணம் / பழிக்கு அச்சம் தேவை என்றும் புரிந்து கொள்ளலாம். மற்றவர்கள் மீது நமது ஆளுமையைச் செலுத்தும் நிலையில் நாம் கூடுதல் எச்சரிக்கை / நாணத்தோடு செயல்படுவது நமக்கும் மற்றவர்க்கும் பாதுகாப்பு.

நாணவேலி நற்குடி மக்களுக்கும் தலைவர்களுக்கும் பெரிய காவல்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 3 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Sep 12, 2017 8:53 pm

#1017
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள்பவர்


"நாணால் உயிரைத் துறப்பர்" - இதைப்படித்தவுடனே யார் மனதிலும் "யானோ அரசன் யானே கள்வன்" வராதிருக்க வழியில்லை!  கண்ணகியினால் பழி உணர்த்தப்பட்ட அந்த நொடியிலேயே மதுரை மன்னனைத்தாக்கிய பெரும் நாணத்தால் அதிர்ச்சியடைந்து மயங்கி வீழ்ந்து உயிர் இழப்பது காலம் காலமாக நாம் தமிழில் படிப்பது.

வரலாற்று நிகழ்வோ அல்லவோ அந்தப்பெருங்காப்பியத்தின் வழக்கு மன்றத்தில் இருந்து நாம் அறியத்தக்க சில பழந்தமிழர் உண்மைகள் :

1. எந்த ஒரு அபலைப்பெண்ணும் நேரே சென்று மன்னனைக்காணும் சூழல்

2. அந்தப்பெண் மன்னனோடு நேரிட்டு வாதாடும் எளிய நிலைமை

3. உண்மையை உணரும் மன்னன் "நான் தவறிழைத்து விட்டேனே" என்று மெய்யாக வருந்தும் நிலை.

4. அநீதி இழைத்த, பழி கொண்ட நிலையில் "இனி வாழமாட்டேன்" என்ற அளவுக்கு ஆள்பவன் தன்னையே தள்ளும் நிலை.
(கொடுங்கோலனால் இவ்வாறு செய்ய இயலாது. இன்றைய தமிழகத்தில் அநீதியாகப்புகுத்தப்பட்ட புதிய தேர்வினால் விளைந்த அனிதாவின் தற்கொலை பற்றிய செய்தி தான் காண முடியும். அமைச்சனின் நாணம் / வெட்கம் / இழப்பு / சாவு என்றெல்லாம் கனவிலும் நினைத்துப்பார்க்க இயலாது).

நாணாள்பவர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார்
நாண உணர்வுடையவர்கள் (மேலோர்) தங்கள் உயிரைக்காத்துக்கொள்ள நாணத்தைக் கைவிட மாட்டார்கள்
(அதாவது, தம்மைக்காப்பதற்காகப் பழிச்செயல் செய்ய மாட்டார்கள் - வெட்குவார்கள்)

நாணால் உயிரைத் துறப்பர்
(மாறாக) பழிக்கான வெட்கத்தால் தங்கள் உயிரையும் விடுவார்கள்

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 3 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Sep 13, 2017 10:09 pm

#1018
பிறர் நாணத்தக்கது தான் நாணானாயின்
அறம் நாணத்தக்கது உடைத்து


அறத்தை ஒரு ஆளாக உருவகப்படுத்தி அறிவுரை வழங்குகிறார் வள்ளுவர் : "நாணங்கெட்டவனிடம் இருப்பதற்கு வெட்கப்பட்டுக்கொண்டு, "அடச்சீ, இப்படிப்பட்டவனிடம் நான் இருக்கமாட்டேன்" என்று அறம் அவனை விட்டு ஓடி விடும்" Smile

அதாவது, இதை இப்படிப்புரிந்து கொள்ளவேண்டும் : தவறு செய்ய வெட்கப்படாதவனிடம் அறம் இருக்காது!

அழகான கருத்து!

பிறர் நாணத்தக்கது தான் நாணானாயின்
மற்றவர்கள் கண்டு வெட்கப்படும் அளவுக்கான பழிச்செயலுக்குத் தான் நாணாதவன் என்றால்
(பொதுவாக யாரும் வெட்கப்படும் செயலைக் கொஞ்சமும் கூசாமல் செய்பவன்)

அறம் நாணத்தக்கது உடைத்து
(அவனைக்கண்டு) அறம் நாணத்தக்க நிலை உள்ளது

ஒரு எடுத்துக்காட்டாக, சிறுபிள்ளைகள் மீது பாலியல் அழுத்தம் / வன்முறை கொடுக்கும் பேர்வழிகளை எடுத்துக்கொள்வோம். மிகக்கொடியவர்கள் கூடச்செய்ய வெட்கப்படும் அருவருப்பான இந்தச்செயலை இன்று நிறையப்பேர் செய்வதாகச் செய்திகளில் படிக்கிறோம் / கேள்விப்படுகிறோம்.

வழக்குமன்றங்களில் வரும் இத்தகையோர் பலர் குறித்து வந்த செய்திகளில் இருந்து தெரிவது அவர்கள் ஆலயங்களில் அறம் சொல்லித்தரும் வேலைகளில் பணிபுரிந்ததாக Sad
(சிறையில் போடப்பட்டவர்களும் உண்டு).

எடுத்துக்காட்டு:
விக்கிப்பீடியா கட்டுரை ஒன்று

இவர்களைக்கண்டு அறம் வெட்கப்படாமல் என்ன செய்யும்?

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 3 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Sep 13, 2017 10:37 pm

#1019
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக்கடை


எளிமையான பொருள் கொண்ட பாடல், குலம் / நலம் என்று எதுகையும் எளிமை.

"தன்வினை தன்னைச்சுடும்" என்ற பழமொழி "சுடும்" என்ற சொல்லைக்கண்ட்தும் நினைவுக்கு வரலாம். "சுடும்" என்பதை "எரிக்கும் / அழிக்கும்" என்று துப்பாக்கிக்குண்டுகள் இல்லாத அந்நாளில் புரிந்து கொண்டிருப்பார்கள். நம் நாளில் நேரடியாகவே "சுடும்" என்ற சொல் கொலை என்று பொருள்படும்படி ஆகிவிட்டது.

கொள்கை பிழைப்பின் குலஞ்சுடும்
(நாம் கொண்ட) கொள்கையில் தவறினால் அது குலத்தை / குடியை அழிக்கும்

நாணின்மை நின்றக்கடை நலஞ்சுடும்
நாணம் இல்லாத நிலையில் இருந்தால், அது நன்மைகளை அழிக்கும்

இந்த அதிகாரத்தின் முழு நீளமும் நாம் காண்கிறபடி, பழிக்கு அஞ்சுவதே / வெட்குவதே நாணம். அது இல்லாத நிலையை ஒருவன் தொடர்ந்தால் துணிச்சலாகத் தவறுகள் செய்வான் - பழி பாவம் என்று எதற்கும் வெட்கம் இல்லாமல் திரிவான். அவனால் பலருக்கும் தீமைகள் வரும் - வேறு யாருக்கும் அவனால் நன்மைகள் வர வழியில்லை.

அத்தகைய நிலையில் அவனுக்கு நன்மைகள் எங்கே வரும்?
(நம் காலத்தில் இப்படிப்பட்டோருக்குப் பணமும் பொறுப்புகளும் வருகிறது என்பது உண்மை தான் - ஆனால் அவைகளெல்லாம் "நன்மைகள்" ஆகாது. நன்மை என்பது இவை அல்ல என்று உணர வேண்டும்.)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 3 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Sep 14, 2017 7:00 pm

#1020
நாண்அகத்தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று


இன்றைய அரசியலை மிக அழகாகச் சொல்லும் குறள் Wink மரப்பாவை - ஏமாற்றுதல், என்ன அழகான உவமை!

இங்கே நாணுக்குள்ள இன்னொரு பொருள் (நூல் / கயிறு) கொண்டுள்ள சொல் விளையாட்டும் அழகு.

நாணம் இல்லாதவர்கள் மரப்பாவைகள் - ஆட்டுவிக்கப்படுகிறவர்கள் - என்கிறார்!

உயிரோ உணர்வோ அற்ற வெறும் பொம்மைகள். அவர்களை ஆட்டுவிப்பதெல்லாம் ஆசையும் அழிவுக்கான வழிகளும் மட்டுமே.

நாண்அகத்தில்லார் இயக்கம்
உள்ளே நாணம் என்ற பண்பு இல்லாதவர்களின் செயல்பாடுகள்

மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று
மரப்பாவையை நூல் கொண்டு ஆட்டுவித்து, உயிர் உள்ளது போன்று மயக்குவதற்கு ஒப்பானதே

அதாவது, இத்தகையோர் எவ்விதக்குற்ற உணர்வுமின்றி வாழ்வார்கள். என்ன கொடுமை வேண்டுமானாலும் செய்வார்கள். அந்த விதத்தில், உள்ளே ஒன்றுமில்லாதவர்கள்!

மற்றவர்களால், குறிப்பாகப்பணத்தால், ஆட்டுவிக்கப்படும் பொம்மைகள்.

முதலில் சொன்னது போல அரசியல்வாதிகளுக்கு மிகப்பொருத்தம்.

எவ்வித அறஉணர்வுகளும் இன்றியே இவர்களது செயல்பாடுகள் பெரும்பாலும் இருக்கும். அப்படி யாராவது ஒருவனுக்கு அறஉணர்வு வந்தாலும், ஒன்று அவன் நீக்கப்படுவான் / தூக்கப்படுவான். இல்லாவிட்டால், நாணஉணர்வுகளை மழுங்கடித்து விட்டு மற்றவர்களால் ஆட்டப்படுவான்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 3 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Sep 18, 2017 5:09 pm

#1021
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்

(பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை அதிகாரம்)

தெரிந்து செயல்வகை, வினை செயல்வகை, பொருள் செயல்வகை என்றெல்லாம் பல செயல்வகைகளை முன்னமேயே தெளிவாக எழுதி விட்ட வள்ளுவர் மீண்டும் இங்கே குடியியலில் இன்னொரு செயல்வகை குறித்து விளம்ப வருகிறார்.

அதனால், 'இதில் என்ன புதியது?' என்ற கேள்வி வருவது இயல்பே!

ஒரு நல்ல குடிக்குரிய செயல்களை எவ்வளவு ஆர்வமாக, முழு மனதோடும் ஆற்றலோடும் செய்து கொண்டிருக்க வேண்டும் என்று, இங்கே "குடி / குலம் / குடும்பம் / குழு"வுக்கு அழுத்தம் தரப்படும் Wink

அதாவது, ஒரு குழுவுக்கேற்ற கடமைகளை எப்படிச்செய்வது / நிறைவேற்றுவது என்ற செயல்வகை.

பார்க்கலாம்.

முதல் குறள் மிகப்பொதுவானது - கடின உழைப்பைப் போற்றும் குறள். எந்தக்கடமைக்கும் பொருந்தும் ஒன்றே! "அலுக்காமல் என் வேலையைச்செய்து கொண்டே இருப்பேன்" என்ற மனநிலையை உயர்த்தும் செய்யுள்!

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
ஒருவன் தன் (குழுவுக்கான) "கடமையைச் செய்வதில் கைகளைத் தளரவிடமாட்டேன்" என்று சொல்லும்

பெருமையின் பீடுடையது இல்
பெருமையை விடவும் மேலான வேறொரு பெருமை இல்லை

அடுத்தடுத்த குறள்களில் "குழுவுக்கான கடமை" என்பது குறித்த கூடுதல் தெளிவு வருமா என்று பார்ப்போம் Wink

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 3 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Sep 18, 2017 9:48 pm

#1022
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி


ஒரு குடி நீண்டு நிலைத்திருக்க அதற்கான செயல்வகைகள் இரு பண்புகளோடு வேண்டும் என்று இங்கே படிக்கிறோம்.

அவை, ஆள்வினை (முயற்சி) மற்றும் ஆன்ற அறிவு!  அப்படியாக, நாம் முந்தைய குறளில் படித்த கடின உழைப்பு மட்டும் போதாது, அதோடு அறிவும் அது சார்ந்த முயற்சியும் தேவை என்று விளக்குவது அழகு.

இவையெல்லாம் மட்டுமல்ல, நீள்வினை என்று சொல்வது இன்னும் பொருத்தம். ஏனென்றால், அறிவாலும் உழைப்பாலும் சிறிது காலம் சிலர் ஒளிமயமாகத்தெரிவர். ஆனால், நீண்ட கால உழைப்பில்லாமையினால் காணாமல் போய் விடுவார்கள். அப்படியாக, விடாமுயற்சி - பெற்றதை விட்டு விடாமல் தொடருதல் எல்லாம் தேவை.

ஆள்வினையும் ஆன்ற அறிவும்
முயற்சியும் ஆழமான அறிவும்

எனஇரண்டின் நீள்வினையால்
எனப்படும் இரண்டோடு கூடிய நீண்ட (விடாமல் நெடுநாள்) உழைப்பால் தான்

நீளும் குடி
ஒரு குடி உயர்ந்து / நிலைத்து நிற்கும்

புகழ் பெற்ற முந்தைய தலைவர்கள் இறந்தோ (செயலலிதா) / செயலற்றோ (மு.க.) இருக்கும் தமிழ்நாட்டு அரசியலில் தற்போது நிறையப்பேர் முன்னிடத்துக்கு வர உழைப்பது செய்திகளில் அன்றாடம் காண்பதே. பல குறுக்குவழிகள் தற்கால அரசியலில் தூக்கி நிற்கின்றன என்பது மெய் தான். என்றாலும், அவற்றைக்கையாளாதவர்கள் யாருமில்லை என்பதும் அங்கே காணப்படும் உண்மை. அந்நிலையில், இவருள் யார் வருங்காலத்தில் முதலிடம் பெறுவார்கள் என்பது ஆள்வினை, ஆன்ற அறிவு, நீள்வினை என்ற இம்மூன்றையும் சார்ந்தே இருக்கும்.
(நேர்மையற்ற களமே என்றாலும், இதுவே நடைமுறை உண்மை! குறுக்கு வழிகளில் கொஞ்சநாள் உயர்ந்தாலும் இம்மூன்றும் இல்லாமல் நெடுநாளைக்கு முன்னிடத்தில்  நிலைக்க  முடியாது).

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 3 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 16 Previous  1, 2, 3, 4 ... 9 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum