Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

3 posters

Page 16 of 16 Previous  1 ... 9 ... 14, 15, 16

Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 16 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Jun 14, 2019 8:53 pm

#1315
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண்டனள்


இது கிட்டத்தட்ட நகைச்சுவைப்பாடல் Smile

இன்னதுக்குத்தான் ஊடல் செய்வது என்று கணக்கே இல்லாமல் எதையாவது பிடித்துக்கொண்டு சண்டை செய்வது புலவி நுணுக்கம் என்று சொல்லி வள்ளுவர் சிரிப்பு வரவழைக்கிறார்.

இங்கே காதலன் முற்றிலும் சரியான ஒன்றையே சொல்கிறான் - இந்த வாழ்வு முழுவதும் நாம் பிரியாதிருப்போம் என்று. (சாவு ஒன்றே நம்மைப்பிரிக்க முடியும் என்று பொருள்.) என்றாலும், மறுபிறவி என்ற நம்பிக்கை கொண்ட சூழல்களில் இதுவும் சண்டை போட வாய்ப்பு அளிக்கிறது என்பதே இந்தக்குறள் Smile

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனா
இம்மையில் - இந்தப்பிறப்பில் - இந்த வாழ்வில் நாம் பிரியவே மாட்டேன் என்றேன்

கண்நிறை நீர்கொண்டனள்
(அப்போதும்) அவள் கண் நிறைய நீர் கொண்டாள் / அழுதாள்
(அதாவது, "அப்போ மறுமையில், அல்லது அடுத்த பிறப்பில் பிரிந்து விடுவேன் என்று தானே சொல்கிறீர், இது கொடுமை" என்று திட்டுவது / அழுவது)

அழுதே தீருவேன் என்று முடிவு செய்து அடம் பிடிப்பது என்று இதற்குப்பொருள்.

"வாழ்நாளெல்லாம் உன்னோடு கூடியிருந்து மகிழ்வேன்" என்று சொன்ன அந்த அழகான வாக்குக்கு மகிழக்கூட முடியாத ஒரு வம்புக்காதல் நிலை!

எப்படியெல்லாம் நுணுக்கமான புலவி, அம்மாடி! Laughing

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 16 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Sat Jun 15, 2019 8:06 pm

#1316
உள்ளினேன் என்றேன் மற்றென் மறந்தீர் என்றென்னைப் 
புல்லாள் புலத்தக்கனள்

முன்பே ஒரு முறை இந்தக்குறள் குறித்துப்பேசியதாக நினைவு - மிகச்சிறப்பான பாடல்!

"மறந்தால் தானே நினைப்பதற்கு" என்று அண்மைக்காலங்களில் பாடல் எழுதுவது கேட்டிருக்கிறோம். அது இங்குள்ள புலவி குறித்து அறிந்த ஒரு எச்சரிக்கை வாய்ந்த காதலனின் அறிவு என்று புரிந்து கொள்கிறோம் Smile

உள்ளினேன் என்றேன்
"உன்னை நினைத்தேன்" என்றேன் 
("அடடா, என்னைக் குறித்தல்லவா எண்ணினார்": என்று மகிழ்வாள் என்பதாகக் காதலன் முட்டாள்தனமாக நினைத்துக்கொண்டு அவள் தலையில் பனிக்கட்டி வைக்க முயல்கிறான்)

மற்றென் மறந்தீர் என்று

"அப்படியென்றால் (அதற்கு முன்பு) ஏன் என்னை மறந்தீர்" என்று திட்டி 

என்னைப் புல்லாள் புலத்தக்கனள்
என்னைத் தழுவிக்கொள்ளாமல் (தள்ளி விட்டு) ஊடல் தொடங்கினாள்

புரிகிறதா இப்போது பெண்களின் புலவி நுணுக்கம் எப்படிப்பட்டது என்று?

இனி இதுபோல் அவன் எப்போதாவது முயல்வானா?

ஆதலினால் காதலர்களே - "உறங்கும்போதும் - ஏன் இறக்கும் போதும் - உன்னை மறப்பது எனக்கு இயலாது" என்று சொல்ல முயலுவீர்களாக!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 16 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Jun 17, 2019 6:41 pm

#1317
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று


1312-ஆவது குறளின் தொடர்ச்சி போல இருக்கிறது இந்தப்பாடல்.

அங்கே காதலியின் ஊடலை மாற்றுவதற்குத் தும்மல் வழியே முயற்சி நடப்பதைப்பார்த்தோம். அதன் வழியாக, அவள் "நீடூழி வாழ்க" என்று சொல்லி ஊடலை மாற்ற மாட்டாளா என்று அவன் ஆவல் கொள்ளுவதாக ஒரு சூழல் இருந்தது.

இங்கே அந்தத்தும்மலுக்கு உடனே பலன் கிடைத்ததாகப் படிக்கிறோம்.

கூடவே, இன்னொரு பொதுவான நம்பிக்கையும் இந்தக்கவிதையில் வள்ளுவர் ஆவணப்படுத்துகிறார். அதாவது, ஒருவர் தும்மினால் அவரை யாரோ நினைத்திருக்கிறார்கள் என்பதான ஒரு நம்பிக்கை. (இன்று வரை இதன் ஏதாவது ஒரு வடிவம் இருக்கிறது என்பதை நாம் காண முடியும். என் சிறுவயதில் உணவோ நீரோ புரையேறினால் உடனே "யாரோ ஒன்னய நெனக்கிறாங்க" என்று சொல்லும் வழக்கம் இருந்தது)!

சரி, நாம் இப்போது அவர்களது பள்ளியறைக்குள் செல்வோம். காதலி ஊடலில் "பேச மாட்டேன்" என்று அடம்பிடித்துக்கொண்டிருக்கும் அமைதியான சூழலில், அவளிடம் இருந்து வாழ்த்துப்பெறுவதற்கான காதலனின் முயற்சி :

தும்மினேன் வழுத்தினாள்
(ஊடலை மாற்ற) நான் தும்மினேன், (உடனே பதறியடித்து) அவள் என்னை வாழ்த்தினாள்
(இவன் எதிர்பார்த்தது நடந்தது, "நீங்க நல்லா இருக்கணும்" என்று அவள் வாழ்த்தியதால் பழைய ஊடல் முடிவுக்கு வந்தது. இவன், "நல்லது, இனிமேல் கூடல் தான்" என்று எண்ணி மகிழ்கிறான்)

ஆனால், அடுத்து நடக்கும் புலவி நுணுக்கம் நம்ம பையன் எதிர்பாராத ஒன்று - திடீர்த்தாக்குதல்! Laughing

யாருள்ளித் தும்மினீர் என்று
(உம்மை) யார் நினைத்ததால் தும்மினீர் (அல்லது, எவள் இப்போது உன்னை நினைத்தாள்) என்று கேட்டு

ஆக அழித்தழுதாள்
உடனே முன்னிருந்த நிலையை மாற்றி அழத்தொடங்கினாள்

சண்டை பிடிப்பது என்று முடிவு செய்தால், என்ன நடந்தாலும் அதைக்கொண்டு வம்பு தொடங்குவது என்று இருப்பார்கள் என்கிறார் வள்ளுவர். அவளைக் கொஞ்சுவதற்காக இவன் எடுத்த தும்மல் முயற்சி இங்கே தோல்வியில் முடிவடைகிறது.

"உனக்கு வேறு எவளோ ஒரு காதலி இருக்கிறாள், அவள் இப்போது உன்னை நினைத்ததால் தான் நீ தும்மியிருக்கிறாய்" என்று பழி சொல்லும் வண்ணம் "யார் நினைத்ததால் தும்மினீர்" என்று தாக்குதல் நடக்கிறது!

நொடிக்கு நொடி மாறும் பெண்மனம் என்ற உள்குத்தும் இங்கே இருப்பதைக்காணலாம். (முதலில் வாழ்த்தி உடனே சண்டை பிடிப்பது)!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 16 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Jun 17, 2019 6:58 pm

#1318
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று


வள்ளுவரின் ஆகச்சிறந்த நகைச்சுவைக்குறள் என்று இதை எடுத்துக்கொள்ளலாம் Smile

சென்ற குறளில் தும்மல் எப்படி ஊடலுக்கு வழிநடத்தியது என்று பார்த்தோம். (தும்மினால், "எவள் உம்மை நினைத்ததால் தும்மினீர்?" என்று சண்டை பிடிப்பாள்)

சூடு கண்ட பூனையான காதலன் அடுத்த முறை உண்மையிலேயே தும்மல் வரும் போது வம்பைத்தவிர்ப்பதற்காக அடக்க முயல்கிறான்.  இதற்காக ஊடல் கொள்வாளே என்ற அச்சத்தால்! ஆனால், அப்போதும் அவன் தப்பிக்கப் போவதில்லை Smile

தும்முச் செறுப்ப அழுதாள்
தும்மலை வெளியிடாமல் அடக்கிக்கொள்ள முயன்றேன், அப்போதும் அவள் ஊடல் கொண்டு அழுதாள் rotfl

நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று
"உங்களுடையவர் நினைத்ததை எனக்கு மறைக்கப்பார்க்கிறீர்களா?" என்று சொல்லி!

இங்கே உமர் என்பது உனது வேறு காதலி அல்லது காதலிகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். (மீண்டும் அதே "தும்மல் வந்தால் யாரோ நினைக்கிறார்கள்" என்ற நம்பிக்கை.)

"எனக்குத்தெரியாமல் நீ வேறு பெண்களை வைத்திருக்கிறாய். அவர்கள் உன்னை நினைத்ததால் இப்போது தும்மல் வந்தது. தும்மினால் நான் கண்டுபிடித்து விடுவேன் என்று சொல்லி அதை அடக்கப்பார்க்கிறாயா, கள்வனே" - இப்படி இருக்கிறது அவளது அழுகைக்கும் புலவிக்குமான நுணுக்கம்.

அட, அட!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 16 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Jun 18, 2019 5:30 pm

#1319
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும் நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று


ஊடலின் இன்னொரு வேடிக்கையான வடிவம் இங்கே காண்கிறோம் - அதாவது, "நீ என்ன செய்தாலும் அடிப்பேன்" என்ற விதமான "முசுட்டுத்தனம்" Smile

சினந்து பேசாமல் புலவி செய்யும் பெண்ணை "உணர்த்துவதற்காக" (அதாவது சினம் மாறி மகிழ்ச்சி அடையும் வண்ணமாக) அவன் கெஞ்சி அல்லது கொஞ்சி, புகழ்ந்து, தும்மி அல்லது தும்மலை அடக்கி - இப்படிப்பல விதத்தில் முயலுகிறான்.

உண்மையில் அவள் தணிந்து மகிழ்கிறாள்.

ஆனால், உடனே "நாம் அப்படியெல்லாம் விட்டுக்கொடுத்து விடக்கூடாது" என்று அவளது மனதில் "குரங்கு" வந்து விடுகிறது. அடுத்து இன்னும் புதிதாக ஒன்றை நுணுக்கமாகக் கண்டுபிடித்து வம்பு தொடங்குகிறாள்!

தன்னை உணர்த்தினும் காயும்
(ஊடலில் இருக்கும்போது) அவளை உணர்த்தி மகிழ்வித்தாலும் அதற்கும் எரிச்சலைக்காட்டுவாள்

அதை எப்படிக்காட்டுகிறாள் என்பது தான் வேடிக்கை!

பிறர்க்கும் நீர் இந்நீரர் ஆகுதிர் என்று
"மற்றவர்களுக்கும் (அதாவது, உன் மற்ற காதலிகளுக்கும்) நீர் இப்படிப்பட்ட தன்மையில் தான் கெஞ்சிக்கொஞ்சுவீர் என்று தெரிகிறது" என்று சொல்லி!

அப்படியாக, அவன் பணிந்து போனாலும், மகிழ்விக்க முயன்றாலும் அவளது புலவியில் இருந்து தப்பிக்க முடியாது!

அப்போதும் அடி தான்! Laughing

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 16 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Jun 18, 2019 7:33 pm

#1320
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று


அதிகாரத்தின் கடைசிக்குறளில் நாம் பார்ப்பது பொதுவாக நாட்டுப்புறங்களில் சொல்லப்படும் ஒரு பழமொழியின் "பால் மாறிய" வடிவம் எனலாம் Smile

"வேண்டாத பொண்டாட்டி கைபட்டாக் குத்தம், கால்பட்டாக் குத்தம்" என்று பேச்சுவழக்கில் சொல்வதைக்கேள்விப்பட்டிருப்போம். அதாவது, ஒருவர் மீது நமக்கு எரிச்சல் இருந்தால் அவர்கள் ஒன்றுமே செய்யாமல் இருந்தாலும் (அல்லது நல்லது செய்தாலும்) அதில் குற்றம் கண்டுபிடித்துச் சினம் காட்டுவோம்.

அது தான் இங்கே பள்ளியறையில் நடக்கிறது. ஆனால் இது எரிச்சலில் அல்ல, வேண்டுமென்றே. இங்கே செய்வது ஆணல்ல  பெண் என்பதனால் தான் "பால் மாறிய வடிவம்" என்கிறேன் Smile

தும்மினாலும் தும்மாவிட்டாலும், கெஞ்சினாலும் கொஞ்சினாலும் உணர்த்தினாலும் பேசினாலும் - இப்படி என்ன செய்தாலும் அதற்கு அழுகை / திட்டு என்று புலவி வந்து கொண்டிருப்பதால் இன்று அப்படியொன்றும் செய்யாமல் அமைதியாக நின்று, அவளைப்பார்த்து, அழகைக் கண்களால் மட்டுமே பருகி நிற்போம் என்று முடிவு செய்கிறான்.

அன்று என்ன நடக்கிறது பாருங்கள் :

நினைத்திருந்து நோக்கினும் காயும்
(ஒன்றும் பேசாமல் அவளது அழகை மட்டும்) நினைத்திருந்து பார்த்துக்கொண்டிருந்தாலும் சினமடைவாள்

அனைத்து நீர் யாருள்ளி நோக்கினீர் என்று
"(என் அங்கங்கள்) எல்லாவற்றையும் நீர் யாரை நினைத்துக்கொண்டு (அதாவது வேறு எவளோடு ஒப்பிட்டுக்கொண்டு) பார்க்கிறீர்கள்?" என்று  சொல்லி!

வேடிக்கையான ஊடல்கள் என்று பொதுவாக எடுத்துக்கொள்ளலாம். என்னவாவது செய்து புலவி நுணுக்கமாக உண்டாக்கினால் தான் காதலுக்கு சுவை கூடும் என்று அவள் நினைக்கலாம்.

வேறு விதத்தில் பார்த்தால், அக்காலத்தில் ஆண்களுக்கு ஒன்றை விடக்கூடுதல் காதலிகள் இருப்பது பொதுவாக நடந்த ஒன்றோ என்ற ஐயமும் வருகிறது. Embarassed இங்கே பெரும்பாலான சண்டைகள் வேறொருத்தி இவன் வாழ்வில் உண்டு என்ற ஐயத்தின் அடிப்படையிலேயே எழுதப்பட்டிருப்பது போலக்காண்கிறோம்.

(இது என் காட்சிப்பிழையாகவும் கூட இருக்கலாம் - என்றாலும், சிலப்பதிகாரத்தின் கண்ணகி நினைவுக்கு வருகிறாள். மாதவியோடு சுற்றிவிட்டுப் பிரிந்து வந்த கோவலனோடு அவன் மனைவி இப்படியெல்லாம் ஊடல் செய்திருக்க வழியுண்டு தானே? Embarassed )

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 16 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Jun 19, 2019 12:21 am

#1321
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர் அளிக்குமாறு

(காமத்துப்பால், கற்பியல், ஊடலுவகை அதிகாரம்)

இறுதி அதிகாரத்துக்கு வந்து விட்டோம், இனி மேல் பத்தே பத்துக்குறள்கள் தாம் மிச்சம்.

இவையெல்லாம் மகிழ்ச்சியான சூழலில் இருக்கும், அப்படியாக இன்பத்துப்பாலை இன்பமாக வள்ளுவர் முடித்து வைப்பார் என்று நம்புவோம். (அதன் பெரும்பகுதி புலம்பலாக இருந்தாலும்)

உரையாசிரியர்களின் கருத்துப்படி இந்த முதல் குறள் "ஊடி ஊடி ஏனடி அவரை இப்படிப் பாடாய்ப் படுத்துகிறாய்?" என்று தோழி கேட்பதாகவும் அதற்கு மறுமொழியாகக் காதலி பாடுவதாகவும் இருக்கிறதாம். (மணக்குடவர் முதல் பலரும்).

அவ்வழியே அவள் மனதில் இருக்கும் கள்ளத்தனம் (அல்லது மறைத்து வைத்திருக்கும் உண்மை) வெளியே வருகிறது Smile

தவறவர்க்கு இல்லை
அவரிடம் தவறு ஒன்றுமில்லை என்பது உண்மை தான்
(அடிப்பாவி! தும்முவதற்கும் அடக்குவதற்கும், நயமாய்க் கெஞ்சுவதற்கும். சும்மா பார்ப்பதற்கும் என்று எல்லாவற்றுக்கும் குற்றம் கண்டுபிடித்து அழுது விட்டு இப்போது இப்படி உண்மையை உடைக்கிறாயே?)

ஆயினும் ஊடுதல்
என்றாலும் ஊடுவது (ஏனென்று தெரியுமா?)

அவர் அளிக்குமாறு வல்லது
(அது தான்) அவரை (என் மீது இன்னும் கூடுதல்) அன்பு செலுத்துமாறு வலிமையாக உந்துகிறது!

"அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்" என்ற குழந்தையின் தொழில்நுட்பம் தான் இது.

இப்படி ஊடல் செய்து அழுதால் தான் அவன் இன்னும் கூடுதல் கொஞ்சுவான் என்று கண்டுபிடித்து வைத்திருக்கிறாள் அறிவாளி!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 16 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Jun 19, 2019 5:43 pm

#1322
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்


"பாடு" என்ற சொல்லுக்குள்ள பல பொருட்களில் "பெருமை" என்பதும் ஒன்று என்பதாக முன்னமே ஒருமுறை படித்திருக்கிறோம். (மற்றவர்கள் நம்மைப்புகழ்ந்து "பாடும்படியான" பெருமித நிலை என்று இதை விளக்கலாம்). இங்கும் அதே பொருளில் அந்தச்சொல் வருகிறது என்று உரைகளில் இருந்து புரிந்து கொள்கிறோம். சூழலுக்கும், அதிகாரத்துக்கும் அதுவே பொருத்தமும் கூட!

ஊடல் என்பதில் சிறிதான சினம் / அழுகை எல்லாம் உட்படுகிறது என்பதால் அன்பும் விருப்பமும் குறையுமோ என்று ஒரு ஐயம் வரலாம், அப்படியெல்லாம் அஞ்சத்தேவையில்லை - பெருமைக்குரியதே என்று வலியுறுத்தும் பாடல்.

முன்பு ஊடல் என்பது உப்பு  போன்று என்று படித்திருக்கிறோம், கிட்டத்தட்ட அதே பொருள். காதல் இன்பத்துக்கு அது தேவை, சுவை சேர்க்கும் - தனித்துப்பார்த்தால் அதற்குக் கரிப்புச்சுவை தான் என்றாலும்.

ஊடலின் தோன்றும் சிறுதுனி
ஊடலால் தோன்றக்கூடிய சிறிய துன்பம்

நல்லளி வாடினும்
நல்ல அன்பை (சற்றே) வாடும்படிச் செய்தாலும்
(தற்காலிகமாக அன்பு குறைவுபட்டாலும், அல்லது குறைவது போன்ற காட்சி ஏற்படுத்தினாலும்)

பாடு பெறும்
(மொத்தத்தில்) பெருமை பெறுகின்ற ஒன்று தான்
(காதலின் இன்பம் / உவகை அதன் விளைவாகப் பெருகத்தான் செய்யும்)

சரி என்று ஒத்துக்கொள்வதைத் தவிரத் தற்போதைக்கு வேறு வழியில்லை! Wink

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 16 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Jun 19, 2019 6:55 pm

#1323
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து


"நிலத்தோடு நீர் போல இயைந்த" என்ற அழகான உவமையோடு சொல்லப்படும் கவிதை. (இயைதல் = பொருந்துதல், இசைதல் , இணங்குதல் , கூடுதல், புணருதல் - என்று எல்லாமே பொருத்தமான பொருள்கள் தான், மனமொத்த காதலர்களைக் குறிப்பிட என்ன ஒரு அழகான உவமை!)

ஒன்றோடொன்று ஒட்டாதவைக்குத் தண்ணீரையும் எண்ணெயையும் குறிப்பிடுவார்கள். மாறாக, எளிதில் பிரிக்க முடியாமல் இணைந்திருப்போரை "உடலும் உயிரும்" என்றெல்லாம் சொல்வதுண்டு. அதற்கு இன்னொரு உவமை இங்கே, நிலமும் நீரும் போல!

அப்படிப்பட்டவர்களுக்கு மிகக்கூடுதல் இன்பம் தருவது ஊடல் தான் என்கிறார் புலவர்! அதைவிடக்கூடுதல்  இன்பம் தருவதற்கு இறைவன் வாழும் உலகு அல்லது புதிய உலகு (புத்தேள் நாடு) கூட இல்லை எனப்து அவர் கருத்து!

நாம் யாரும் இதுவரை புத்தேள் கண்டதோ அங்கே வாழ்ந்ததோ இல்லையென்றாலும் அது குறித்துத் தொன்மநூல்கள் தரும் காட்சிகள் அடிப்படையில் இங்கே ஊடலுக்குத் தரப்படும் மேன்மையை உயர்வு நவிற்சி அணி என்று கொள்ளலாம் Smile

நிலத்தொடு நீரியைந்தன்னார் அகத்து
நிலத்தோடு நீரைப்போல (அவ்வளவு நெருக்கமாகப்) பொருந்தி இணங்கியிருக்கும் காதலருக்குள்

புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ
(வரக்கூடிய) ஊடல் தரும் சிறப்பை விட மேலான வாழ்க்கை தரும் விண்ணவர் நாடு ஏதாவது இருக்கிறதா?

"இல்லை" என்று வள்ளுவர் சொல்லாமல் சொல்கிறார், உயர்வு நவிற்சியாக!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 16 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Jun 21, 2019 10:31 pm

#1324
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை


பொருள் கொள்வதற்கு சற்றே குழப்பமான குறள் Sad

"தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை" - இங்கே குழப்பமில்லை. நேரடியான பொருள் தான், எதோ ஒன்றுக்குள் இருந்து பெண்ணின் உள்ளத்தை உடைக்கும் போர்க்கருவி தோன்றுகிறது.  

அதாவது, அவளுடைய மனஉறுதியை உடைத்துப்போடும் (அல்லது, அவளுடைய 'நிறையை அழிக்கும் / நாணத்தை நீக்கும்'  என்றும் எடுத்துக்கொள்ளலாம்) வலிமையான ஒன்று.

என்ன செய்யவேண்டாம் என்று உறுதியாக இருந்தாளோ அதை உடைத்து முன்பு விரும்பாததைச் செய்ய வைப்பது. பொதுவாகவே படைக்கருவி என்றால் அதன் தாக்குதல் நம்மை என்ன செய்யும்? நம்மை அடிமைப்படுத்தி, நாம் விரும்பாத ஒன்றில் வீழ்த்துவது என்று தானே பொருள்? செத்துக்கூடப் போக வைக்கலாம.

இங்கே, பெண்ணின் உள்ளத்தில் என்ன (செய்ய வேண்டும் / வேண்டாம் என்ற) உறுதி முதலில் இருந்தது என்று கண்டுபிடிப்பதில் தான் குழப்பமே! அவனோடு (1) கொஞ்சிக்குலவி மகிழ வேண்டும் என்று இருந்தாளா? அல்லது (2) சண்டை போட வேண்டும் என்று இருந்தாளா?  

ஊடலுவகை என்ற அதிகாரத்தின் அடிப்படையில் பார்த்தால், இப்படி அவளுடைய உறுதி இருந்திருக்கலாம்: "நீண்ட நேரம் ஊடல் நாடகம் நடத்தி, அவனை வறுத்து எடுத்து விட்டு, அவன் கெஞ்சிக்கொஞ்சி நமது காலில் விழுந்த பின், கூடி மகிழலாம்".

இப்படிப்பட்ட மன உறுதியை  உடைக்கும் போர்க்கருவி தான் வந்திருக்க வேண்டும்.

தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை
என் உள்ளத்தின் உறுதியை உடைக்கும் போர்க்கருவி (எதில்) தோன்றுகிறது (தெரியுமா?)

புல்லி விடாஅப் புலவியுள்
கட்டித்தழுவிக்கொண்டு விடாமல் இருக்கும் ஊடலுக்குள் தான்!
(புரியலை, இல்லையா?)

இந்த இரண்டாம் பகுதியின் சொற்களை நாம் இவ்வாறு புரிந்து கொள்ள முயலுவோம்.

-  கொஞ்சம் புலவி நடத்தினால் பின்னர் இன்பம் கூடும் என்று நான் நினைத்தேன் (புலவியுள்)
- அவனோ வந்தவுடன் இறுகக்கட்டித்தழுவிக்கொஞ்ச ஆரம்பித்து விட்டான், விட மாட்டேன் என்கிறான் (புல்லி விடாஅ)
- உடனே என் உள்ளத்தின் உறுதி உடைந்து ஊடல் காணாமல் போனது, நானும் இதோ அவனோடு சேர்கிறேன்

"புலவியுள்" என்ற சொல் தான் குழப்புகிறது. அது எப்படிக்காரணமாகும் என்று...

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 16 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Jun 21, 2019 11:25 pm

#1325
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன்றுடைத்து


பல நூல்களிலும் பொதுவான கருத்துக்களிலும் ஆண்களை "நுகர்வோர்" என்றும் பெண்கள் "நுகரப்படுவோர்" என்றும் படமாக்குவது தமிழ்ச்சமூகத்தில் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ளது தான். (வண்டு / பூ - அன்றாடம் கேட்கும் ஒன்று Laughing )

ஊடல் குறித்த பல பாடல்களிலும் நாம் பொதுவாகக் கண்டிருப்பது அது "நுகர்வோருக்கு" (காதலன்) எரிச்சலை உண்டாக்கி, "தருவோருக்கு" (காதலி) ஒரு விளக்க முடியாத இன்பம் தருவதாகத்தான்.

அப்படிப்பட்ட எண்ணங்களுக்கு நேரெதிரான ஒரு குறள் இப்போது ஆண்குரலில் நாம் படிக்கிறோம். அதாவது, ஊடலில் இவனுக்கும் "என்னவோ ஒரு இன்பம்" இருக்கத்தான் செய்கிறது என்ற கருத்து Laughing

அதுவும் "தப்பே செய்யாத போதும்" என்று ஒரு கூடுதல் சேர்க்கையோடு வருகிறது.

தவறிலர் ஆயினும்
தவறு செய்யாதவன் என்ற நிலையிலும்
(வேறொரு காதலி, நெடுநாள் பிரிவு, கண்டுகொள்ளாமல் இருந்தது போன்றவை பொதுவாக ஊடல் செய்வதற்காகச்சொல்லப்படும் தவறுகள் - இப்படி ஒன்றும் அவன் செய்யவில்லை.
அல்லாமல், "வன்முறை / கொடுமை" போன்ற பெருந்தவறுகளுக்கும் ஊடலுக்கும் தொடர்பில்லை,  இந்தப்பட்டியலில் வராது. அவை வேறு கணக்கு)

தாம்வீழ்வார் மென்றோள் அகறலின்
தனக்கு விருப்பமானவளின் மென்மையான தோளைத் தழுவ முடியாவிட்டால்
(அகறல் - நீங்குதல் / விலகுதல், ஊடலின் விளைவாக)

ஆங்கொன்றுடைத்து
அங்கே ஒன்று (இன்பம்) இருக்கிறது

"ஊடலில் ஒரு வித இன்பம் இருக்கத்தான் செய்கிறது. அது நம்முடைய தவறால் இல்லாவிட்டாலும், அவள் இப்படி சிடுக்கிக்கொண்டு நிற்பது நன்றாகத்தான் இருக்கிறது" என்கிறான் இந்தப்பையன்.

என்னமோ போங்க Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 16 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Jun 21, 2019 11:53 pm

#1326
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது


"ஊடலுவகை" என்ற அதிகாரத்தையே நான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறேன் என்று இப்போது தெளிவாகத்தெரிகிறது. (1324-ஆம் குறளையும் இந்தப்பாடலின் வெளிச்சத்தில் படித்தால் எளிதில் புரியும், குழப்பம் இருக்காது).

அதாவது, "ஊடல் வந்து பின் கூடல் வருவதில் உவகை" என்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்.

உண்மையில் அப்படி அல்ல, "ஊடலில் கிடைக்கும் இன்பம்". அது மட்டும் தான் ஊடல் உவகை! அவ்வளவே!
(இங்கே கூடல் குறித்த எண்ணமே வேண்டியதில்லை, ஊடலிலேயே ஒரு விதமான இன்பம் மனதுக்குள் வருகிறதாம்).

எந்த அளவுக்குப் போகிறார் என்றால், "ஊடலில் கிடைக்கும் மகிழ்ச்சி கூடலில் கிடைப்பதை விடவும் கூடுதல்" என்று ஒப்பீடு செய்து கணக்குப்போடும் அளவுக்கு!
Shocked Embarassed Laughing

உணலினும் உண்டது அறல் இனிது
உணவினைக் காட்டிலும் இனிமையானது உண்டது செரிப்பது தான்
(அப்போது தானே உண்டதற்குப்பலன் என்கிறாரோ? செரிப்பது நல்லது தான், அதில் ஐயமில்லை.  வயிற்றில் கோளாறு வந்தால் உண்ட சுவை ஒன்றும் மனதில் இருக்கப்போவதில்லை)

காமம் புணர்தலின் ஊடல் இனிது
(அது போல) காதலில் கூடுதலை (உடலுறவு கொள்ளுவதை) விடவும் இனிமையானது ஊடல் தான்!

ஆதலால், மக்களே காதல் செய்யும்போது உப்பு அளவுக்கோ (அல்லது உங்களால் எவ்வளவு தாங்கமுடியுமோ அந்த அளவுக்கு) ஊடித்தள்ளுங்கள்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 16 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Jun 24, 2019 7:09 pm

#1327
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப்படும்


பள்ளிக்காலத்தில் ஏதாவது ஒரு போட்டியில் தோற்றால், "தோல்வியே வெற்றிக்கு அறிகுறி" என்று சொல்லித் தேற்றுவார்கள்.

துவளக்கூடாது என்று ஊக்குவிக்கவும், ஒரு தோல்வியின் விளைவாக இன்னும் கூடுதல் பயிற்சி / முயற்சி எல்லாம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் அப்படிச்சொல்லப்பட்டது. என்றாலும், நேரடியான கருத்தில் தோல்வி  எப்படி ஐயா "வெற்றிக்கு அறிகுறி" ஆகும் என்றும் எண்ணியதுண்டு.

இங்கே, நேரடியாகவே  "தோல்வி = வெற்றி" என்று வள்ளுவர் சொல்லுகிறார் Smile கிட்டத்தட்ட இந்தக்கருத்தில் காதல் திரைப்பாடல்களையும் அவ்வப்போது கேட்டிருப்போம்.  

சுருக்கமாகச் சொன்னால், ஊடலை விட்டுக்கொடுப்பது காதலில் தோல்வியல்ல -  அது வெற்றியே (ஏனென்றால், கூடல் நடக்கும்) என்று சொல்லும் எளிமையான குறள்!

ஊடலில் தோற்றவர் வென்றார்
ஊடல் விளையாட்டில் தோற்றவர் (அதாவது விட்டுக்கொடுத்தவர், அல்லது கெஞ்சிக்கொஞ்சியவர்) தான் வெற்றி பெற்றவர்.
(சொல்லப்போனால், இருவருக்குமே வெற்றி தான் - இங்கே யாருக்கும் தோல்வியில்லை)

அதுமன்னும் கூடலிற் காணப்படும்
அந்த உண்மை (அல்லது பெரும்பாலும்) கூடல் இன்பம் துய்க்கும்போது புரியும் Smile
(மன்னும் என்பது அசைச்சொல் என்றோ அல்லது 'பெரும்பாலும்' என்றோ பொருள் கொள்ளப்படலாம்)

ஊடலை ரொம்ப நீடிப்பது ஒருவேளை ஆழ்ந்த மனக்கசப்பை உண்டாக்கலாம் - பிரிவுக்குக்கூட வழிநடத்தலாம்.

ஆகையால், உப்புப்போல சிறிதாகச் சுவைத்து உவகை கொண்டு விட்டுப் பின்னர் "தோல்வி போலத்தோன்றும் வெற்றி"யை அடைந்து,  கூடி இன்பம் காண்பது தான் அறிவாளிகள் செய்வது Wink

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 16 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Jun 25, 2019 6:01 pm

#1328
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு


சில குறள்களுக்கு முன்பு தான் புலவி / ஊடல் உப்புப்போல என்று படித்தோம். தெளிவாகவே அங்கு உப்புச்சுவை / உவர்ப்பு தான் சொல்லப்பட்டிருந்தது. (கடல் நீர் என்ன சுவையோ அது).

இங்கே அதே "உப்பு" என்ற சொல்லுக்கு இன்னொரு பொருள் - இனிப்பு / இனிமை / இன்பம் (அகராதி இந்தக்குறளைத்தான் எடுத்துக்காட்டாகச் சொல்கிறது, "கூடலில் தோன்றிய உப்பு" = உடலுறவில் கிட்டும் இனிமை / இன்பம்).

இப்படி நமது நாக்கைத்தாக்கும் இரண்டு சுவைகளுக்கு ஒரே சொல்லைப்பயன்படுத்தி ஏன் நம்மைகுழப்புகிறார்கள் என்று தெரியவில்லை Smile பல மொழிகளிலும் இப்படிப்பட்ட துன்புறுத்தல்கள் இருக்கின்றன என்பதை இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது!

இங்கே கலவி குறித்து வள்ளுவர் கொஞ்சம் ஆழமாகவே இறங்கி விடுகிறார் - "நெற்றி வியர்க்கும்படியாக உறவு கொள்ளுதல்" என்று படம் வரையும் அளவுக்கு Wink

நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு
நெற்றியில் வியர்க்கும் படியாக உடலுறவு கொண்டபோது தோன்றிய இனிமையை (இன்பத்தை / சுவையை)

ஊடிப் பெறுகுவம் கொல்லோ
(மீண்டும் மீண்டும்) ஊடல் செய்து பெறுவோமா?

இங்கே வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார் என்பது ஆராயத்தக்கது Wink

ஊடலைத் தொடர்ந்து வரும் கலவியில் சீற்றம் கூடுதல் இருக்கும், இன்பமும் கூடும் என்று சொல்ல முயல்கிறாரோ? அதாவது, இருவருக்கும் இப்போது ஆர்வம் கூடுதல் உள்ளதால் வேகமும் வெப்பமும் கூடும் - வியர்வை பொங்கும் என்று சுட்டிக்காட்டுகிறார் என்று நினைக்கிறேன்.
(திரைப்பாடல் ஆசிரியர்களுக்கு மிகவும் பிடித்த சொல் இந்த 'வியர்வை' என்பது தெரிந்ததே Laughing )

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 16 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Jun 25, 2019 8:57 pm

#1329
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா


"ஊடுக" , "நீடுக" என்று எதுகையில் கட்டளை கொடுக்கிறார் வள்ளுவர் Smile

யாருக்கு? இயற்கைக்கா அல்லது காதலன் காதலிக்கா? யாருக்கோ Smile Smile கட்டளை அல்ல மனவிருப்பம் - என்று வைத்துக்கொள்வோம் (இங்கே வள்ளுவரும் தானே காதலன்?)

என்ன நீளவேண்டும்? இரா - அதாவது, இரவுப்பொழுது - அப்போது தானே கூடுதல் நேரம் இன்பம் துய்க்க முடியும்?

உலகுக்கு இரவு நீளாது தான், ஆனால் இவர்கள் இருவருக்கும் அது நீள முடியும் - இங்கே இரவு என்பது உறவு நேரம்,  மற்றபடிக் கதிரவன் இருக்கிறானா இல்லையா என்பது ஒரு பொருட்டல்ல என்று காதலர் அறிவார்கள் Smile

யார் ஊட வேண்டும்? ஒளியிழை - மின்னல் பெண் Smile ஆக, இது ஆண்குரல் பாடும் பாட்டு (அவள் ஊட, இவன் கெஞ்ச - அப்படியே இரவு நீண்டு கொண்டு போக வேண்டும், ஊடலுவகையில் திளைக்க வேண்டும் என்று சொல்கின்ற பாட்டு).

ஊடுக மன்னோ ஒளியிழை
ஒளி மின்னும் அணிகள் பூண்ட (அல்லது ஒளி மின்னும் அழகு முகம் கொண்ட) காதலி ஊடுவாளாக!

யாமிரப்ப
நான் அவளைக் கெஞ்சக்கெஞ்ச

நீடுக மன்னோ இரா
(அப்படியே) இந்த இரவு நீளட்டுமே!

மன் என்பது அசைச்சொல் என்று பலமுறை பார்த்திருக்கிறோம். ("அப்படியே ஆகட்டும்" என்று உணர்ச்சியோடு சொல்வதை இங்கே குறிக்கலாம்)

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 16 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Jun 25, 2019 11:29 pm

#1330
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்


கடைசிக்குறளுக்கு (ஒரு வழியாக) வந்தாகி விட்டது Smile

காமத்துப்பாலைப் பள்ளிக்காலத்தில் படிக்காதவர்களுக்கும் இந்தக்குறள் எப்படியாவது தெரிந்திருக்கும். ஒன்றுமில்லையென்றாலும் அந்த நூலில் இறுதி என்ன என்றாவது எட்டிப்பார்த்திருப்பார்கள்.

தமிழின் முதல் எழுத்தான அகரத்தில் 'அகரமுதல' என்று தொடங்கி, இறுதி எழுத்தான 'ன்'-ல் 'பெறின்'  என முடியும் நூல் என்று ஒருவர் சொன்னபோது தான், "அட, அப்படியா!" என்று இந்தக்குறளை முதன்முதல் படித்தது.

மு.வ. உரையோடு வீட்டில் இருந்த அந்த நூலில் இதைப்படித்த பொழுது உரையும் பொருளும் ஒன்றும் விளங்காத வயது Wink தற்போது 'கிட்டத்தட்ட விளங்குகிறது' என்று - அதுவும் பல ஆண்டுகள் பட்டறிவின் அடிப்படையில் Laughing - சொல்லலாம் Smile

கடினமான சொற்கள் இல்லாததால் பொழிப்புரை எழுதுவது எளிதே - நடைமுறையான பொருள் மட்டும் தான் பட்டு அறிந்து கொள்ள வேண்டும் Smile

ஊடுதல் காமத்திற்கு இன்பம்
காமத்துக்கு இன்பம் தருவது ஊடல்
(நன்றாகக் காமத்தைச் சுவைப்பதற்கு அவ்வப்போது, அளவாக, ஊடல் வேண்டும்)

அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்
அதற்கு (அதாவது ஊடலுக்கு) இன்பமோ (அதைத்தொடர்ந்து) கூடித்தழுவிக்கொள்ள முடிந்தால் தான்!

அவ்வப்போது பொய்யாகவென்றாலும் சினந்து, சிடுக்கிக்கொண்டால் காமத்துக்குச் சுவை கூடும். ஆனால், அதை நீளமாகச் செல்லவிடாமல் முடித்து வைத்துக் கட்டிப்பிடித்துக் கூடி மகிழுங்கள், இன்பம் இரு மடங்காகும் என்கிறார் வள்ளுவர். சில சூழல்களிலாவது இது சரி தான் Smile

எல்லாவற்றுக்கும் மேலாக நிற்கும் ஆதி பகவனின் பெயரைக்கொண்டு தொடங்கிய நூல் இறுதியில் எல்லாவற்றுக்கும் கீழே உள்ள என் பெயரை இரண்டு முறை வழங்கி முடிகிறது (இன்பம் என்ற சொல் இரு முறை கடைசிப்பாடலில் Laughing )

அடுத்து ஒரு "பின்னுரை" எழுதி என் வேலையை முடிக்கிறேன்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 16 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Jun 26, 2019 7:28 pm

பின்னுரை

நூற்றாண்டுகள் பழைய நூல் - அதிலும் மதம் / வழிபாடுகள்  இவற்றோடு தொடர்பற்றது  - இப்படிப்பட்டதைப் படிப்பது பொதுவாக எல்லோருக்கும் ஆர்வத்தைத் தூண்டும் ஒன்றல்ல.

பள்ளி அல்லது கல்லூரிக்கல்விக்காகவோ அல்லது பணம் கிடைக்கும் என்ற நோக்கத்துடன் செய்யும் ஆராய்ச்சிகளுக்கோ / திட்டங்களுக்கோ அத்தகைய நூலைப் பலர் படிக்கலாம். ஆனால், பொருள் சார்ந்த நோக்கம் ஒன்றுமில்லாமல், வெறுமென "சரி படித்துத்தான் பார்ப்போமே" என்று இவ்வளவு பழைய ஒரு நூலை நம் காலத்தில் படிப்போர் வெகு குறைவே என்பது என் கருத்து.

என்றாலும் நான் பல மணி நேரங்களைச் செலவழித்து திருக்குறளைப் படிக்கவும் சிறிய அளவில் என் கருத்துக்களைப் பகிரவும் செய்திருக்கிறேன் என்பது இந்த நூல் இன்றும் தமிழ் மொழியிலும் தமிழர் உள்ளங்களிலும் ஒரு சிறப்பான இடத்தில் வீற்றிருக்கிறது என்பதற்கான தெளிவு!

அத்தோடு, தமிழ் மொழியும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இளமையாக இருக்கிறது என்பதற்கும் இது தெளிவு!

குறளில் உள்ள முக்கால் பங்குச் சொற்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது. அல்லாத சொற்களுக்கும் நான் தெருத்தெருவாக அலைய வேண்டிய தேவை இல்லாத வண்ணம் வலையிலும் தமிழ் வனப்பாகவே இருக்கிறது. படிக்கவும் ஆராயவும் கூடுதல் மெனக்கெட வேண்டியதில்லை என்ற அளவுக்கு இந்த மொழிக்கு நம் காலத்து வளங்களும் தொடர்ந்து பெருகி வருவது மிகச்சிறப்பு!

ஒவ்வொரு குறள் குறித்தும் என் கருத்தை (மிகச்சிறப்பு / சிறப்பு / உவப்பில்லை என்றெல்லாம்) அவ்வப்போது கூறி வந்திருக்கிறேன் என்பதால் அவற்றுக்கும் மேல் மதிப்புரை எல்லாம் தேவையில்லை. (அல்லாவிட்டாலும், இவ்வளவு புகழ் பெற்ற இந்நூல் குறித்து மிகவும் சிறியவன் / எளியவனான என் கருத்துக்கு ஒரு விலையுமில்லை என்பது தான் உண்மை).

என்றாலும், என் மனதில் பட்ட சில :

1. அறத்துப்பால் மிகச்சிறப்பு - இன்னும் கூடுதல் ஆராயத்தக்கது. பொருட்பாலில் நம் காலத்துக்கும் பொருந்தும் பல இருப்பது சிறப்பே. காமத்துப்பால் படிக்கையில் ஆர்வம் குறைவாகத்தான் இருந்தது என்பது உண்மை. அதில் அவலச்சுவை கூடுதல் இருந்ததால் எனக்கு உவப்பில்லையோ என்னவோ தெரியவில்லை.

2. வள்ளுவர் எவ்விதமான வழிபாட்டு முறை கொண்டிருந்தார் / எப்படிப்பட்ட நம்பிக்கைகள் அவருக்கு (அல்லது அக்காலத்தில் பெரும்பாலோருக்கு) இருந்தது என்பது குறித்து அங்கங்கே பல உண்மைகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், அவற்றின் "ஆக மொத்தம்" இன்று பரவலாக இருக்கும் வழிபாட்டு முறைகளில் உண்டா இல்லையா என்று என்னால் அடித்துச்சொல்ல முடியவில்லை. இன்னும் கூடுதல் ஆராய்ச்சி / ஒப்பீடுகள் வேண்டியிருக்கும்.

3. பெண்கள் குறித்த நூலின் பார்வை மிகச்சிறப்பு என்று சொல்ல முடியவில்லை. எழுதியது ஆண் என்பதாலா அல்லது அவரது நம்பிக்கைகள் அடிப்படையிலா அல்லது பொதுவான அன்றைய சூழல் காரணமா என்று தெரியவில்லை. (தெய்வம் தொழாஅள் & பெண்வழிச்சேறல் மட்டுமல்ல இந்தக்கருத்துக்கு அடிப்படை. காமத்துப்பால் முழுவதுமே "ஆண் உயர்வு" எண்ணங்கள் கிடப்பதாக எனக்குப்படுகிறது)

4. என்றாலும், அறம் / ஒழுக்கம் இவை குறித்த கருத்துக்கள் ஆக மொத்தத்தில் இந்நூலில் மிகச்சிறப்பு என்பது உண்மை. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" போன்ற - இன்றும்  தமிழருக்கு மிகத்தேவையான - எவ்வளவோ அறிவுரைகள் கொட்டிக்கிடக்கின்றன! இவற்றைப்படிப்பது மட்டும் போதாது - நடைமுறைப்படுத்தவும், அடுத்த தலைமுறைக்கும் கற்றுக்கொடுக்கவும் வேண்டியது கடமை!

5. "அப்படியெல்லாம் ஆழமான பொருள் எனக்கு வேண்டாம்" என்று சொல்லும் கூட்டமும் இந்த நூலைப் படிக்க வேறொரு அடிப்படைக்காரணம் உண்டு. அது தான் மொழி அழகியல்!

கவிதை நயம், அணிகள், உவமைகள், உருவகங்கள், ஓசை நயத்துக்கான எக்கச்சக்கமான காரணிகள் என்று நூல் முழுவதும் அளவற்றுக் கொட்டிக்கிடக்கிறது!  

ஆதலால், இது வரை திருக்குறள் படிக்காதோர் சற்று நேரம் இதற்காகச் செலவழியுங்கள்!

மனதுக்குள் என்னவோ செழிப்படைந்ததாக உணருவீர்கள்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 16 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jun 27, 2019 3:18 am

இதுவரை பதித்த எல்லாவற்றையும் இங்கே pdf வடிவில் சேமித்திருக்கிறேன்:

http://www.mediafire.com/file/mipdnphw54f41uc/kural_inbam_complete.pdf

தரவிறக்கத் தடைகள் ஒன்றுமில்லை Smile

இதில் 1330 குறள்களுக்குமான என்னுடைய உரை மற்றும் கருத்துக்கள் இருக்கின்றன.

படித்த, படிக்கப்போகிற மற்றும் ஊக்குவித்த எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

ஆதன் likes this post

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 16 Empty பண்புடையார்ப் பட்டுண் டுலகு யதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன். பண்புடையவர்களை பற்றிக் கொண்டு இருந்தால் இந்த உலகம் இயங்கும். இல்லையெனில் இந்த மனித குலம் மண்புழுக்களுக்கு இரையாகி விடும்.

Post  ஆதன் Sun Jul 11, 2021 4:10 am

app_engine wrote:#996
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்


பள்ளியில் படித்த குறள் - இன்று வரை அந்த "மன்" ஏன் என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது Smile

அது ஒரு அசை நிலை  என்று அகராதி சொல்கிறது - அழுத்திச்சொல்லவோ அல்லது திட்டவோ பயன்படுவது ("போ" என்பதை "போய்த்தொலை" என்று சொல்வது போல Laughing )

"ஒழியிசை" என்றும் சொல்கிறார்கள். அதாவது, அடுத்த என்ன வரும் என்பதை நாமே சேர்த்துக்கொள்வதற்காக வைக்கும் ஒரு பொருளற்ற சொல். ஆங்கிலத்தில் மூன்று புள்ளிகள் (...) வைப்பது போன்று தமிழில் மன் என்கிறார்கள்.

குறளின் பொருள் புரியக்கடினம் இல்லை

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்
பண்புடையார்களோடு பொருந்தி இருப்பதால் தான் உலகம் (உயிரோடு) இருக்கிறது

அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்
அப்படி இல்லாவிட்டால் அது மண்ணுக்குள் புகுந்து மாண்டு போவது உறுதி!

"உலகம்" என்பதை மானிடர்களின் சமுதாயம் என்று இங்கே எடுத்துக்கொள்ள வேண்டும்.  உயிரோடு இயங்க, பண்புடையோர் / அவர்களது வழிமுறைகளோடு அந்த உலகம் பொருந்தி நடப்பது தேவை.

பண்புடையார் இல்லாவிடில் அந்தச்சமுதாயம் அழிந்து போகும். மட்டுமல்ல, அப்படிப்பட்டவர்கள் சொல்வதன் படி நடக்காமல் போன உலகமும் தப்ப வழியில்லை - இன்று நாம் வாழும் உலகத்துக்கு இது ஒரு எச்சரிக்கை மணி என்று சொல்லலாம்.

என் காட்சிப்படி, பண்பாளர்கள் எண்ணிக்கை நாள் தோறும் குறைந்து வருகிறது. கொஞ்சம் மிச்சம் மீதி இருப்பவர்கள் சொல்வதையும் வலிமை மீறியவர்கள் கேட்பதாகத்தெரியவில்லை!

அழிவு நெருங்கி வருவதற்கான அடையாளம்!!

ஆதன்

Posts : 1
Reputation : 0
Join date : 2021-07-10
Age : 47
Location : Papanasam

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 16 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 16 of 16 Previous  1 ... 9 ... 14, 15, 16

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum