Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

3 posters

Page 11 of 16 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16  Next

Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 11 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed May 16, 2018 5:36 pm

#1194
வீழப்படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப்படாஅர் எனின்


"கெழீஇய" என்ற சொல்லைக்கண்டவுடன் உடனே நினைவுக்கு வருவது "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி" என்ற பாடல், இல்லையா? (அதாவது, திருவிளையாடல் திரைப்படம் / தருமி போன்றவை Laughing )

அப்படி நினைவுக்கு வரவில்லை என்றால் நீங்கள் தமிழுலக வாழ்வில் குறிப்பிடத்தக்க ஒன்றை இதுவரை பெறவில்லை (அல்லது இழந்திருக்கிறீர்கள்) என்று பொருள். Laughing

உடனடியாக கூகிள் செய்து தெரிந்து கொள்ளவும் Wink

மற்றபடி, இந்தக்குறளிலும் இதுவரை இந்த அதிகாரத்தில் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் "நாம் விரும்பியவர் நம்மை விரும்பாவிட்டால் வாழ்ந்தென்ன பயன்" என்ற அதே புலம்பல் தான்.

வீழப்படுவார்
உலகில் பலராலும் விரும்பப்படுபவர் (என்றாலும்)

தாம்வீழ்வார் வீழப்படாஅர் எனின்
தாம் யாரை விரும்புகிறோமோ அவரால் விரும்பப்படவில்லை என்றால்
(எனக்குப் பிடித்த என் காதலர் என்னை வெறுத்துப் பிரிந்து விட்டால் என்றால்)

கெழீஇயிலர்
நட்பே இல்லாத நிலையில் உள்ளவரே

அதாவது, ஒருத்திக்கு ஆயிரம் தோழியர் / தோழர் இருந்தாலும் - அவர்களெல்லாம் அவளை விரும்பிக் கொஞ்சினாலும் - அவள் விரும்பும் காதலன் ஒருவன் மட்டும் வெறுத்துப் பிரிந்து விட்டால், மற்ற எல்லோரின் நட்பும் கொண்டு ஒரு நன்மையும் அடைய மாட்டாள். (துன்பமே வடிவாகத் துவண்டு விடுவாள் என்று பொருள்).

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 11 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu May 17, 2018 8:23 pm

#1195
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை


நாம்-தாம் என்று எதுகையும் சொற்சிலம்பமும் கொண்டுள்ள எளிய குறள்.

இந்த அதிகாரம் முழுவதும் பொதிந்து நிற்கும் கருத்தை அடிக்கடி திரைப்படங்களில் கேட்க நேர்ந்திருக்கலாம் ("நாம விரும்புறவங்கள விட நம்மள விரும்புறவங்களத்தான் காதலிக்கணும்" போன்ற அறிவுரைகளை நகைச்சுவை நடிகர் / நடிகை அவ்வப்போது உதிர்ப்பது வழக்கம் தானே?)

நாம்காதல் கொண்டார்
நாம் விரும்பும் காதலர்

தாம்காதல் கொள்ளாக் கடை
தாம் காதல் கொள்ளாத நிலையில்
(அவர் நம்மை விரும்பாவிட்டால்)

நமக்கெவன் செய்பவோ
நமக்கு என்ன (நன்மை) செய்யப்போகிறார்
(அதாவது, அவர் நமக்கு நல்லது ஒன்றும் செய்யப்போவதில்லை / ஒருதலையாக நாம் மட்டும் விரும்பிப்பயன் இல்லை)

நேரடியான, தெளிவான கருத்துத்தான். என்றாலும், "தனிப்படர் மிகுதி" என்னும் அதிகாரத்தின் பகுதியாக இது வருவதால் அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது.

இங்கே ஒரு காதல் தோல்வி / பிரிவு நடந்து முடிந்திருக்கிறது. அந்தத் துன்பத்தில் பெண் பேசுகிறாள். இந்தச்சூழலை மனதில் கொண்டு பார்த்தோமென்றால் இது வெறும் கருத்தோ அறிவுரையோ மட்டுமல்ல - மனம் நொந்து புலம்புதல்.

அதாவது, இவளுக்கு இன்னும் அவன் மீது காதல் இருக்கிறது - ஆனால் அவனோ விருப்பமின்றிப் பிரிந்து சென்று விட்டான். அந்தச்சூழலில் நொந்து (பசலை எல்லாம் பிடித்து) பெரும் துயரத்தில் உள்ளவளது அழுகுரல் இது!


app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 11 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri May 18, 2018 8:46 pm

#1196
ஒருதலையான் இன்னாது காமம் காப்போல
இருதலையானும் இனிது


எல்லா உரையாசிரியர்களும் சொல்வது போல இந்தக்குறள் பெண்குரலில் மட்டும் ஒலிப்பதில்லை. அவ்விதத்தில், நிறையக்குறள்களுக்குப்பின் இருபாலாருக்கும் பொதுவான ஒரு பாடல்.

எளிமையான ஒரு உவமையுடன், இருதலைக்காதல் தான் நல்லது, ஒரு தலைக்காதல் துன்பம் மட்டுமே தரும் என்று சொல்லும் இயல்பான செய்யுள்.

காவடி தான் இங்கே உவமை. அதன் இருபுறமும் ஒரே அளவில் பளு இருந்தால் தான் இன்பம். ஒரு பக்கம் எடை கூடிப்போனால் துன்பம்.

காதலும், இருதலையாக இருந்தால் இன்பம் - இல்லாவிடில், துன்பத்தின் எடை ஒரு பக்கத்தில் கூடிப்போகும் என்கிறார் வள்ளுவர்.

காமம் காப்போல
காதல் என்பது (இருபுறமும் ஒரே அளவு எடை உள்ள) காவடி போல

ஒருதலையான் இன்னாது இருதலையானும் இனிது
ஒரு தலையாக இருந்தால் துன்பம் தரும், இரு புறமும் இருந்தால் தான் இன்பம்

ஒருவர் மட்டும் விரும்பி மற்றவர் தள்ளி விட்டால், பேசாமல் மறந்து விட்டு வேறு வாழ்க்கை வழி தேடுவதே அறிவு.

அதை விட்டு விட்டு, "எப்படியும் சாதிப்பேன்" என்று திரிந்தால் துன்பம் இருவருக்கும். இப்படிப்பட்ட ஒருதலைக்காதல்கள் எவ்வளவு இன்னல்களை உண்டாக்குகின்றன! கொலை செய்யும் அளவுக்கு அல்லது அமிலம் வீசும் கொடுமைக்கு எல்லாம் சிலர் செல்லும் நிகழ்வுகள் அவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே துன்பம் தருவன தான்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 11 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Jun 05, 2018 6:22 pm

#1197
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகுவான்


"காமன்" என்ற சொல் இதற்கு முன்னர் திருக்குறளில் பார்த்ததாக நினைவில்லை. ஏற்கனவே எழுதியவற்றை எல்லாம் தேடிப்பார்த்தால் இச்சொல் இல்லை என்றே தோன்றுகிறது.

ஆக, இப்படியொரு பேர்வழி முதல்முதலாக நமக்கு வள்ளுவரால் அறிமுகப்படுத்தப்படுகிறார்.

இதை உருவகம் என்று எடுத்துக்கொள்ளலாம். (காதல் / காமம் என்பதை ஒரு ஆளாக, அதுவும் ஒரு தேவனாக வெறுமென உருவகப்படுத்தி எழுதுவது, கவிதைகளில் இது புதிதல்ல).

அல்லது, பல நாடுகளிலும் / கூட்டங்களிலும் இருக்கும் "காமதேவன்" என்ற நம்பிக்கையை வள்ளுவர் குறிப்பிடுகிறாரோ என்றும் எடுத்துக்கொள்ளலாம். இந்த வழியில் சென்றால் சங்ககாலத்தில் தமிழர்கள் காமத்திற்கென ஒரு தேவனை வைத்துக்கொண்டிருந்தார்கள் (அம்பு விடுவான் என்றெல்லாம் நம்பினார்கள்) என்று நினைக்க வேண்டி வரும்.

எப்படி இருந்தாலும், இங்கே அவனுக்குத் திட்டுத்தான் கிடைக்கிறது. ஓரவஞ்சனை செய்பவன் / ஒரு பக்கம் மட்டும் சாய்ந்து சார்புநிலை கொள்பவன் என்று.

இந்தப்பாடல் பெண்குரலில் வருகிறது. காமன் ஆணுக்கு மட்டும் துணை போகிறான் - பெண்ணை உறுத்துகிறான் என்று குறிப்பிடுகிறது.

காமன் ஒருவர்கண் நின்றொழுகுவான்
காம தேவன் ஒருவர் சார்பாக (மட்டும்) நின்று இயங்குகிறானே

பருவரலும் பைதலும் காணான்கொல்
(நான் படும்) துன்பத்தையும் என் மேனியில் படரும் பசலையையும் காண மாட்டானா?

அதாவது, ஆண் ஒரு தொல்லையுமில்லாமல் இவளை நுகர்ந்து பின்னர் தனித்து விட்டு விட்டுப் பிரிந்து போய்விட்டான். அவனை ஒரு விதத்திலும் துன்புறுத்தாத காமதேவன் பெண்ணின் உடலின் மட்டும் துன்பங்களைக் கொடுத்து அவள் தனிமையில் கொடுமைப்படுவதைக் கண்டும் காணாமல் இருக்கிறானே - என்று திட்டும் செய்யுள்.
(மணக்குடவரின் உரையில் ஒரு படி மேலே சென்று, இவனெல்லாம் தெய்வமாக மாட்டான் என்கிறார்)

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 11 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Jun 06, 2018 6:01 pm

#1198
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து 
வாழ்வாரின் வன்கணார் இல்

வன்கண் - கடினமான நெஞ்சு என்று இங்கே புரிந்துகொள்ளப்பட வேண்டும். (கல் நெஞ்சு).

தான் விரும்பிய காதலர் தன்னிடம் இன்சொல் பேசாத நிலையில் (அதாவது, காதலை ஏற்றுக்கொள்ளாத நிலையில்) இன்னமும் உயிரோடு இருப்பவர் தான் எல்லோரையும் விட மிகக்கடினமான நெஞ்சம் உடையோர் என்கிறார் வள்ளுவர்.

அதாவது, "மனதார நாம் விரும்பும் ஒருவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் செத்துப்போ" என்பது போன்ற ஒரு அறிவுரை. உலகில் இப்போது நாம் காணும் எத்தனையோ கொடுமைகளை ஒப்பிடுகையில் காதலை ஏற்காதது அப்படியொன்றும் பெரிதில்லை என்று எனக்குத்தோன்றுகிறது. (உலகில் வேறு ஆட்களும் உண்டல்லவா என்று வாழ்வது சிறப்பு தானே? அதை எப்படி "வன்கண்" என்று சொல்லலாம்?)

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது
(தான்) விரும்பிய காதலரிடமிருந்து இன்சொல் பெறாமல்

உலகத்து வாழ்வாரின்
(அதற்குப்பிறகும்) உலகத்தில் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்ணை விடவும் 

வன்கணார் இல்
கல் நெஞ்சக்காரர்கள் வேறு யாரும் இல்லை 

மிகைப்படுத்தப்பட்ட எண்ணம் என்றே எத்தனை முறை படித்தாலும் தோன்றுகிறது. சொல்லப்போனால், "விரும்பிய ஆணால் விரும்பப்படாத பெண்களுக்கு அதற்கு மேல் வாழ்க்கையே இல்லை - அவர்கள் வாழுவதே வீண்" என்றெல்லாம் சொல்லும் ஒரு ஆணாதிக்க எண்ணத்தின் வெளிப்பாடு என்றும் இதைக்கருதலாம்.

தனிப்படர்மிகுதி என்ற தலைப்புக்கு வேண்டுமானால் பொருந்தலாம் - வாழக்கைக்குப் பொருத்தமற்றது!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 11 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jun 07, 2018 10:22 pm

#1199
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு


ஒருதலைக்காதலின் முட்டாள்தனங்களை உயர்த்துவது போல் தோன்றும் பாடல்.

தனது பிரிவுத்துயரத்தை மறைத்து விட்டுத் தன்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டுப்போன காதலரின் புகழைக்கேட்டுப் பெண் மகிழ்வதாகச் சொல்கிறது இப்பாடல்.

நம்நாளில் உள்ள பெண்டிர் இக்கருத்தோடு எந்த அளவுக்கு ஒத்துப்போவார்கள் என்று தெரியவில்லை. சங்ககாலத்தில் வேண்டுமானால் இப்படிப்பட்டோர் இருந்திருக்கலாம் Wink

நசைஇயார் நல்கார் எனினும்
நான் விரும்பியவர் என்னிடம் அன்பு செலுத்த மாட்டார் என்றாலும்
(நசை - விருப்பம் / காதல், அளபெடையுடன் நசைஇ)

அவர்மாட்டு இசையும் செவிக்கு இனிய
அவரது புகழ் கேட்கையில் என் செவிக்கு இனிமையாகத்தான் இருக்கிறது

தன்னப்பிரிந்தவர் (அல்லது காதலிக்காதவர்) புகழைக்கேட்கையில் இவளுக்கு என் அவ்வளவு இனிமை? அவர் வெறுத்தாலும் இவள் இன்னமும் விரும்புகிறாள் என்பதாலா? அல்லது, "நான் புகழப்படத்தக்க ஒருவரைத்தானே விரும்பினேன், கிடைக்காவிட்டாலும் என் தேர்வு நல்ல தேர்வே" என்ற தன்னைக்குறித்த சிறிய பெருமிதத்தினாலா?

அல்லது, அந்தக்காலத்தில் பொதுவாகப் பெண்களுக்கு உண்டாக்கப்பட்டிருந்த அடிமை மனநிலையினைக் கவிஞர் வெறுமென சுட்டிக்காட்டுகிறாரா?

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 11 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Jun 08, 2018 9:06 pm

#1200
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு


சிறப்பான உவமை கொண்டுள்ள பாடல்.

நடக்கவே நடக்காத ஒன்றை உவமையாக்கி உணர்த்துவது என்ன வகை அணி என்று எனக்குத்தெரியவில்லை. (இல்பொருள் உவமை போன்றது, ஆனால் இங்கே பெயர்ச்சொல் அல்ல வினை தான் உவமை, ஆழிக்கடலை வற்றச்செய்வது / தூர்ப்பது - நடவாத / இயலாத ஒன்று, அது தான் இங்கே உவமை.).

"என்னை விரும்பாத காதலருக்கு என் துன்பத்தை எப்படிச்சொல்லி விளங்க வைப்பது? அது கடல் நீரை வற்றச்செய்வது போன்ற (முடியவே முடியாத) செயல்" என்று பெண் புலம்பும் செய்யுள்.

வாழிய நெஞ்சு
என் நெஞ்சே, நீ வாழ்க!

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய்
(என்னோடு) அன்போ நட்புறவோ தோன்றாதவருக்கு என் காதல் நோயைச்சொல்வாயோ?

கடலைச்செறாஅஅய்
அது கடலை வற்றச்செய்வது போன்ற (இயலாத) செயல் - வேண்டாமே!

அன்பற்றவர்களிடம் பொதுவாகவே நமது துன்பங்களைச்சொன்னால் புரிந்து கொள்ள மாட்டார்கள். (எல்லாருக்கும் தான் துன்பம் இருக்கு / இதெல்லாம் ஒரு பெரிய துயரமா / ரொம்ப நாடகம் - இப்படியெல்லாம் கல்நெஞ்சர்கள் பேசுவது நாம் அன்றாடம் கேட்பதே).

அப்பேர்ப்பட்ட நிலையில் "காதல் நோய் - அதனால் துன்பம்" என்றெல்லாம் சொன்னால் விளங்கவா போகிறது? அதிலும் உணர்வற்ற ஒரு ஆணுக்கு?

சிறப்பான / பொருத்தமான உவமை!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 11 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Jun 08, 2018 9:20 pm

இன்னும் 130 குறள்கள் தான் மிச்சம் இருக்கின்றன Smile

படித்த 1200 பற்றிய குறிப்புகள் PDF வடிவில் இங்கே சேமித்திருக்கிறேன்.
http://www.mediafire.com/file/24puekj8hygqtys/kural_inbam_1200.pdf/file

தரவிறக்கத் தடையொன்றுமில்லை!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 11 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Jun 11, 2018 6:32 pm

#1201
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது

(காமத்துப்பால், கற்பியல், நினைந்தவர் புலம்பல் அதிகாரம்)

காமத்துப்பாலின் முதல் அதிகாரத்தில், அணங்கினால் உறுத்தப்படும் தலைவன் "கள் உண்டால் தான் மயக்கம், காமமோ கண்டாலே மயக்கம்" என்று பாடியது நினைவிருக்கலாம்.
(களவியல், தகையணங்குறுத்தல், குறள் 1090 - "காமல் போல் கண்டார் மகிழ்").

இங்கு ஒரு புதிய அதிகாரம், அதுவும் "புலம்பல்" என்று தொடங்கியவுடன் அதே உவமையைக் கொஞ்சம் மேம்படுத்திச்சொல்லுகிறார்.

அதாவது, "கண்டால்" அல்ல, "எண்ணினாலே" போதும் என்று. ஏனென்றால், இப்போது பிரிந்து வாழும் நிலை. காண வழியில்லை, எனவே எண்ணி எண்ணி மட்டுமே இன்பம் கொண்டாட முடியும் Smile

மற்றபடி, இங்கே தெளிவாகக் "கள்" என்று சொல்லிவிடுகிறார். ("அடுநறா" என்றெல்லாம் நம்மை "இது என்ன" என்று தேட வைப்பதில்லை! கள்ளுண்ணாமை குறித்துப்பாடிய வள்ளுவர் கள்ளுண்டிருக்கிறார் என்று மீண்டும் உறுதியாகத் தெரிந்து கொள்கிறோம் Wink )

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
நினைத்தாலே போதும், தீராத பெரும் மகிழ்ச்சி தருகிறது என்பதால்

கள்ளினும் காமம் இனிது
கள்ளை விடவும் காமம் இனிதானது
(கள் - குடித்தால் தான் இன்பம் தரும் என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறார் - சொற்களில் சிக்கனம்)

ஆக, இந்த அதிகாரத்தில் "நாங்கள் எப்படி எப்படியெல்லாம் கொஞ்சிக்குலாவினோம்" என்று எண்ணி எண்ணி மகிழ்வார்கள் என்று தோன்றுகிறது.

அதைப் "புலம்பல்" என்று சொல்லுவது ஒரு விதமான முரண் தான் Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 11 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Jun 12, 2018 6:48 pm

#1202
எனைத்தொன்று இனிதேகாண் காமம் தாம் வீழ்வார் 
நினைப்ப வருவதொன்று இல்

"கற்பியல்" என்பதற்கு வலையில் எங்கோ ஓரிடத்தில் "திருமணத்துக்குப் பின்னான காதல் / இன்பம் குறித்த இயல்" என்று விளக்கம் படித்தேன் Wink

அதாவது, இந்த இயலில் வரும் "பிரிவு" பற்றிய செய்யுள்களை அந்த விதத்திலும் படிக்கலாம். (அதாவது, கணவன் போருக்குச்சென்ற நிலையில் வரும் பிரிவு, அல்லது திரை கடலோடித் திரவியம் தேடுவதால் ஏற்பட்ட பிரிவு, ஒருவேளை இறந்தே போயிருக்கலாம் என்ற நிலை - இப்படியெல்லாம்).

மற்ற குறள்கள் எப்படியோ, இந்தக்குறிப்பிட்ட குறள் அவ்விதமான சூழலில் மிகப்பொருத்தம். (மற்றபடி,காதலித்துக் கைவிட்டு விட்டு "ஓடிப்போன / பிரிந்த" காதலரை நினைத்தால் இந்தக்குறளை எழுத முடியுமா என்று தெரியவில்லை).

அதாவது, பிரிவின் புலம்பல் என்றாலும் முற்கால இன்பத்தை மீள்பார்வை செய்து துன்பம் களைந்து கொள்ளலாம் என்று ஆறுதல் சொல்லும் குறள். 

காமம் எனைத்தொன்று இனிதேகாண்
காமம், எப்படிப்பார்த்தாலும் இனிதானதே என்று தெரிந்து கொள் (ஏனென்றால்)

தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று இல்
(பிரிந்திருக்கும் நிலையிலும்) தான் விரும்பியவரை நினைக்கும்போது இன்பம் தான் வருகிறதே அல்லாமல் வேறொன்றுமல்ல!

கூடிக்களித்த நாட்களின் இன்பம் எப்போது நினைத்தாலும் மீண்டும் வரும் என்கிறார் வள்ளுவர். 

பிரிவுத்துயரையும் அது நீக்கி விடும் என்கிறார். அதனால், என்ன கணக்கிலும் காமம் இனிது தானாம் Wink

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 11 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Jun 13, 2018 8:29 pm

#1203
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்


சினை என்ற சொல்லுக்குப் பொதுவாகக் கரு என்ற பொருள் தான் நன்கு தெரிந்தது. (சினை மாடு). அரும்புதல் / தோன்றுதல் என்ற (அதோடு ஒத்த) வேறு பொருள்களும் உண்டு என்று இந்தக்குறள் படிக்கையில் தெரிந்து கொள்கிறோம்.

அப்படியாக, தும்மல் சினைப்பது போன்று = தும்மல் தோன்றுவது போன்று / வருவது போன்று

இப்படிப்பட்ட ஒன்று நமக்கு எல்லோருக்கும் நடந்திருக்கும் - தும்மல் வருவது போன்று தொடங்கிப் பின் நின்று விடுவது Smile

அருமையான "பட்டறிவு" உவமை!

தும்மல் சினைப்பது போன்று கெடும்
(சில நேரங்களில்) தும்மல் வருவது போலத் தொடங்கிப்பின் வராமல் நின்று விடுமல்லவா?

நினைப்பவர் போன்று நினையார்கொல்
(அப்படித்தான் அவர் என்னை) நினைக்கத் தொடங்கினாலும் பின்னர் தொடர்ந்து எண்ணாமல் விட்டு விடுகிறார் போலும்!

"நினைந்தவர் புலம்பல்" என்பதற்கு மிகப்பொருத்தமான செய்யுள் / உவமை எல்லாம்!

சரி, வருவது போல் தொடங்கிய தும்மல் நின்று விடுவது ஏன்?

இது புரிய வேண்டுமென்றால் தும்மல் ஏன் / எப்படி வருகிறது என்று தெரிய வேண்டும். சுருக்கமாகக் கூறினால், காற்று வழியில் வந்த ஏதோவொரு குழப்பத்திலிருந்து நம்மைக்காக்க மூளையின் கட்டளைப்படி உடல் உறுப்புகள் செய்யும் "அதிரடி நடவடிக்கை" தான் தும்மல்.

இதைத் தொடங்கிய காரணி மறைவதாலோ அல்லது செய்து முடிப்பதற்கான வலிமையான உந்துதல் சட்டென இல்லாமல் போவதாலோ தான் அரை வழியில் நின்று போகிறது.

காதலியை நினைப்பதற்கு வேண்டிய உந்துதல் அவனிடம் இல்லை - சட்டென்று பழைய நினைவுகள் தோன்றினாலும் உடனே மறையும் அளவுக்கே உள்ளன - நினைத்து நினைத்துக்கலங்கும் (தும்மித்தள்ளும்) அளவுக்கு வலிமையாக இல்லை.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 11 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jun 14, 2018 6:33 pm

#1204
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து 
ஓஒ உளரே அவர்

"ஓஒ" என்பதற்கு மிகுதிப்பொருள் என்கிறார்கள். "எப்போதும்" என்று அதை விளக்குகிறார்கள்.

அது புரிந்தால் மற்றவை இந்தக்குறளில் எளிதாய் விளங்கும். 

தெளிவாகவே இங்கு தன்னை விட்டுப்பிரிந்த காதலனை (அல்லது கணவனை) நினைத்துப் பெண் புலம்பும் நிலை. "என் நெஞ்சில் எந்நேரமும் அவர் இருக்கிறார் - ஆனால் அவர் நெஞ்சில் நான் இருக்கிறேனா இல்லையா" என்ற கவலையில் புலம்புகிறாள். இது எப்போதும் / எங்கேயும் காணும் ஒன்று தான். (நானறிந்த வரையில் இரு பாலாருக்கும் பொருந்தும்).

என்றென்றும் இதே நிலையில் இருக்கமாட்டார்கள் என்றாலும், பிரிந்தவுடன் சிறிது காலத்துக்காவது இப்படிப்பட்ட மனநிலை காதலருக்குள் காண்பது தான். (அதைத்தொடர்ந்து சிலர் மனப்பிறழ்வு, கள்ளுக்கு அடிமையாதல், தற்கொலை போன்ற கொடுமையான விளைவுகளை அடைவதும் நாம் அவ்வப்போது கேள்விப்படுவது தான்).

இப்படிப்பட்ட ஒரு புலம்பல் ஒருவேளை தலைவி தோழியிடம் (அல்லது உறவினரிடம்) நடத்தினால், அந்நிலையை எளிதாக எண்ணிக் கடந்து விடக்கூடாது. நான் பள்ளியில் ஐந்தாவது படித்த போது செங்காடு என்று விளிக்கப்பட்ட செம்மண் காட்டில் அவ்வப்போது சென்று குளிக்கும் ஒரு பெரிய கிணறு இருந்தது. கிட்டத்தட்ட 50 அடிக்கு 50 அடி என்ற அளவிலான கிணறு. அதிலே 11-ஆவது படித்த ஒரு பெண்ணின் உடலை எடுத்தார்கள் (பெண்ணின் பெயர் நினைவில் இருக்கிறது, சொல்ல விரும்பவில்லை). காதல் பிரிவு / தோல்வி / அதைத்தொடர்ந்த மனஅழுத்தம் என்று பின்னாளில் புரிந்தது.

இத்தகைய புலம்பல் மனநிலையில் உள்ளோருக்கு மருந்து வேண்டி வரலாம் Sad

ஓஒ எந்நெஞ்சத்து உளரே அவர்
எப்போதும் என் நெஞ்சத்தில் அவர் இருக்கிறாரே 
(அவரை என்னால் நொடிப்பொழுதும் மறக்கவே முடியவில்லையே)

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து
(அது போல) நானும் அவர் நெஞ்சத்தில் இருக்கிறேனா?

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 11 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Jun 15, 2018 8:41 pm

#1205
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்


வஞ்சப்புகழ்ச்சி அணி என்று சொல்லத்தக்க பாடல். (பழிப்பது போலப் புகழ்வதும் வஞ்சப்புகழ்ச்சி தானே?)

இங்கே காதலனைக் காதலி பழிப்பது போன்று கவிஞர் பாடுகிறார். வெட்கம் இல்லையா? என்று கேள்வி கேட்கிறாள் - உண்மையில் அவளுக்குத்தான் வெட்கமில்லை.

"வேண்டாம்" என்று விட்டுவிட்டுப் போனவனையே விடாமல் நினைத்துக்கொண்டிருப்பது இவளது குழப்பம் மட்டுமே - அவ்விதத்தில், அவன் "மறக்க முடியாத புகழ்" உள்ளவன் ஆகிறான். அவ்விதத்தில் பழிப்பது போல வெளியில் தெரிந்தாலும் உள்ளே புகழ்தல்!

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார்
தன்னுடைய நெஞ்சத்திலிருந்து என்னை விலக்கி விட்டார்
(என்னை மறந்து விட்டார் - அவர் "வீட்டில்" இருந்து என்னை வெளியேற்றி விட்டார்)

எம்நெஞ்சத்து ஓவா வரல் நாணார்கொல்?
(அந்நிலையில்) என் நெஞ்சத்தில் மட்டும் இடைவிடாமல் வருவதற்கு அவருக்கு வெட்கம் (நாணம் / சூடு / சொரணை) இல்லையா?

நெஞ்சம் என்பதை வீடு போன்று உருவகப்படுத்தி எழுதி இருப்பதையும் காண்கிறோம். "உறவு வேண்டாம்" என்று பிரிந்து விட்டவர்கள் ஒருவர் வீட்டுக்கு மற்றவர் போக மாட்டார்கள். இங்கு பிரிவு நடத்தியது காதலன். சரியான படி பார்த்தால் (வெட்கம் / மானம் இருந்தால்) அவன் காதலி வீட்டின் படியில் காலெடுத்து வைக்கக்கூடாது தானே?

இடைவிடாமல் வந்து கொண்டிருந்தால் இகழாமல் என்ன செய்வார்கள்? Wink

இப்படியெல்லாம் சொல்லி, "உண்மையில் அவனை மறக்க முடியாமல் நான் தவிக்கிறேன்" என்று புலம்புதல்.

உண்மை நிலையை மறைத்தல் தானே கவிதை?

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 11 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Jun 22, 2018 8:18 pm

#1206
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்


"நினைத்து வாழ ஒன்று, மறந்து வாழ ஒன்று" என்ற திரைப்படப்பாடல் வரியை நினைவுக்கு வரவழைத்த திருக்குறள் Smile

காதலர் தற்போது பிரிந்து விட்டாலும், முன்பு சேர்ந்திருந்த பொழுதுகளை எண்ணாமல் இருப்பது இயலாது -என்ற நடைமுறை உண்மையை அடித்துச்சொல்கிறது இந்தச்செய்யுள்.

"அவரையே - அல்லது அவளையே - நினைத்துக்கொண்டு உன் வாழ்வைப்பாழாக்காதே" என்று சொல்லுவது சுற்றும் உள்ளவர்க்கு எளிதாகவும் நடைமுறையானதாகவும் தோன்றலாம். என்றாலும் மானிட உறவுகள் அப்படிப்பட்டவை அல்லவே - சட்டை போன்று நினைத்த நேரத்தில் அணிவதற்கும் கழற்றுவதற்கும்!

இங்கே தலைவி ஒரு படி இன்னும் கூடுதலாகச் சொல்கிறாள் - அந்தப்பழைய நினைவுகள் இருப்பதால் தான் நான் உயிரோடு இருக்கிறேன் - இல்லாவிடில் வாழவே மாட்டேன் என்று!

அவரொடியான் உற்றநாள் உள்ள உளேன்
அவரோடு நான் கூடியிருந்த நாட்களை நினைப்பதால் தான் உயிர் வாழ்கிறேன்

மற்றியான் என்னுளேன் மன்னோ
இல்லாவிட்டால் நான் ஏன் உயிர் வாழவேண்டும்?
(இனியும் வாழுவதில் பொருள் இல்லை என்று அழுத்தமாகச் சொல்கிறாள்)

நாம் முன்னமேயே ஒரு குறளில் பார்த்தது போலக் காதலர் பிரிவு என்பது கடினமான மனஅழுத்தங்களைத் தர வல்ல ஒரு சூழல். மனப்பிறழ்வு / நோய் வருவது பலருக்கும் நடக்கக்கூடிய ஒன்று. எனவே அத்தகைய சூழலில் உள்ளோரிடம் எளிதான மனநிலையோடு தீர்வுகள் சொல்ல முயல்வது அறிவின்மை.

ஆழமான உணர்வுகள் உட்பட்டிருப்பதால் (உடல் அளவில் உறவு இருந்திருந்தாலும் இல்லாவிட்டாலும்) மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டியவர்கள் பிரிவுத்துயரில் உள்ள காதலர்கள்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 11 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Jun 25, 2018 10:36 pm

#1207
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்


"அவரை மறந்தால் நான் உயிர் வாழ மாட்டேன்" என்ற அதே பல்லவி மீண்டும்.

நேரடியாக அப்படிச்சொல்லாமல், "மறந்தால் நான் என்ன ஆவேனோ" என்று சொல்கிறாள் - மன் / கொல் என்று அசைச்சொற்கள் எல்லாம் சேர்த்து அந்த உணர்வினை வெளிக்காட்டுகிறாள்.

"நினைத்து நினைத்துப் புலம்புகிறாயே - அவரை (அல்லது இந்தக்காதல் இழவை) மறந்து தொலைக்கக்கூடாதா?"- என்று கூட உள்ளவர்கள் (தோழி?) கேட்பதற்கு மறுமொழி சொல்வது போன்று எழுதப்பட்டிருப்பதாக உரையாசிரியர்கள் சிலர் சொல்லுகிறார்கள். பொருத்தமாகத்தான் இருக்கிறது.

மறப்பறியேன்
(அவரை) மறப்பதற்கு அறியேன்
(என்னால் அவரை மறக்க இயலாது)

உள்ளினும் உள்ளம் சுடும்
(அவரை அல்லது எங்கள் காதலை) நினைத்தால் உள்ளம் சுடுகிறது
(இன்றைய பிரிவு இன்பமாக இல்லை தான் - என்றாலும் முந்தைய நினைவுகள் தாம் என்னை இன்னும் உயிரோடு வைத்திருக்கிறது, நடமாடிக்கொண்டிருக்க வேண்டிய வலிமை தருகிறது என்கிறாள்)

மறப்பின் எவனாவன் மற்கொல்
மறந்தால் நான் என்ன ஆவேனோ!

காதல் என்று மட்டுமல்ல, ஒரு கணக்கில் பார்த்தால் நாம் எல்லோருமே "நினைவுகள்" என்ற அனல் ஊட்டுவதன் வழியாகத்தான் வாழ்க்கையை ஓட்டுகிறோமோ என்று தோன்றுகிறது. அவை இல்லாவிடில் பொருளற்ற ஒரு பாய்ச்சலாக வாழ்க்கை ஆகி விடக்கூடும்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 11 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Jun 26, 2018 8:32 pm

#1208
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு


"அவரைப்பற்றி நான் எவ்வளவு கூடுதல் வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம் - அதற்காகக் கோபப்படவே மாட்டார்" என்று வேடிக்கையாகச் சொல்லும் குறள் Smile

மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறியும் திறன் நமக்கில்லை. "ஒரு வேளை இப்படித்தான், அப்படித்தான்" என்று ஊகிக்க முயல்வோம், கற்பனை செய்து கொள்வோம் - என்றாலும், உண்மையில் மற்றவர் மனதில் என்ன இருக்கிறது என்று நம்மால் அறிய முடியாது!

அப்படியிருக்க, இந்தப்பேதைப்பெண் என்ன நினைத்துக்கொண்டும் புலம்பிக்கொண்டும் இருக்கிறாள் என்று அவளை விட்டுப் பிரிந்து போனவனுக்கு எங்கே தெரியப்போகிறது?

ஆனால், அவனுக்கு எல்லாமே தெரிவதாகவும் , இருந்தும் சினங்கொள்ளாமல் இவளைப்பொறுப்பதாகவும் கற்பனை செய்து இங்கே பாடுகிறாள் Laughing

எனைத்து நினைப்பினும் காயார்
(அவரைக்குறித்து) நான் எவ்வளவு நினைத்தாலும் அதற்காக சினங்கொள்ள மாட்டார்

காதலர் செய்யும் சிறப்பு அனைத்தன்றோ
என் காதலர் எனக்குச்செய்யும் சிறப்பு அத்தகையது அல்லவா?

யாரைக்குறித்து நாம் நினைத்துக்கொண்டிருந்தாலும் அவர்கள் அதை அறியவோ சினங்கொள்ளவோ போவதில்லை.

இது தான் அறிவியல் உண்மை.

என்றாலும், "காதலுக்குக்கண்ணில்லை" என்பதால், இதையெல்லாம் காதலுக்கே உண்டான ஒரு பெரிய சிறப்பு / நன்மை என்று எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறாள் Smile

வேடிக்கை தான்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 11 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Jun 27, 2018 8:19 pm

#1209
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து


விளி-அளி என்று எதுகை, ஓசை நயமுள்ள இனிய பாடல்!

அளி- எப்போதும் உள்ள பொருளில் தான் (அன்பு காட்டுதல்). ஆனால், விளி நாம் பொதுவாக அறிந்திருக்கும் பொருளில் அல்ல இங்கே வருவது. "அழி" என்ற பொருளில் என்கிறார்கள் உரையாசிரியர்கள்.

அப்படியாக, "அளி" இல்லாததால் "அழி"ந்து கொண்டிருக்கும் பெண்ணின் புலம்பல்!

வேறல்லம் என்பார்
"நீயும் நானும் வேறு வேறல்ல" என்று சொல்லிக்கொண்டிருந்தவர்
("நாமிருவரும் ஓருயிர்" என்று முன்பு சொல்லிய என் காதலர்)

அளியின்மை ஆற்ற நினைந்து
அன்பு காட்டாமல் இருப்பதை மிகவும் நினைத்து
(பிரிந்து / வெறுத்து விட்டதை எண்ணி எண்ணி)

விளியுமென் இன்னுயிர்
எனது இனிமையான உயிர் அழிந்து கொண்டிருக்கிறதே!

இந்த அதிகாரத்துக்கும் சூழலுக்கும் மிகவும் பொருத்தமான குறள்.

நமக்கென்று இருந்த ஒரு சிறிய பொருளை இழந்தாலே ஓரளவுக்குக்கவலை வருகிறது. பொருளின் மதிப்பு கூடக்கூட இழப்பின் வலி மிகுதியாகும்.

இங்கோ, இழந்திருப்பது காதலரின் அன்பு! அவளைப் பொறுத்தவரை விலை மதிக்க முடியாத ஒன்று! அதனால் வரும் தாக்கம். வலி, துன்பம், துயரம் இவையெல்லாம் சொற்களால் விளக்க முடியாதவை!

"விளியுமென் இன்னுயிர்" என்று இரண்டே சொற்கள் கொண்டு வள்ளுவர் அதைச் சுருக்கமாகச் சொல்லி இருக்கிறார்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 11 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jun 28, 2018 6:10 pm

#1210
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி


"நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா, இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா" என்ற திரைப்பாடலை நினைவு படுத்தும் திருக்குறள்.

அங்கே நிலவை "நாளை வா" என்று சொல்லித் தலைவி துரத்தப்பார்ப்பாள். இங்கோ, அதற்கு எதிர்! "போய்விடாதே நிலவே, என்னை விட்டுப்பிரிந்த காதலனைக் கண்ணால் காண நீ உடன் வேண்டும்" என்று வேண்டுகோள் விடுக்கும் காட்சி.

நிலவொளி இல்லாவிடில் இருள் சூழும் - அவரைக்காண முடியாமல் போய்விடுமே என்ற பொருளிலா இல்லை வேறெதுவும் புதைந்திருக்கிறதா என்பது ஆராய வேண்டிய ஒன்று Smile எப்படி இருந்தாலும் காதலர் சந்திப்புக்கும் நிலவுக்கும் என்றுமே நெருங்கிய தொடர்பு என்பது தெளிவு!

விடாஅது சென்றாரை
(முன்பு) விடாமல் இருந்து (இப்போது) சென்று விட்டவரை
(இங்கே "விடாது" என்பது ஒரு காலத்தில் பிரியாமல் ஓட்டிக்கொண்டே இருந்தவர் என்று பொருள் படலாம். அல்லது, இன்னும் இந்தப்பேதைப்பெண்ணின் உள்ளத்தை விடாமல் இருக்கிறார் என்றும் கொள்ளலாம்)

கண்ணினால் காண
(மீண்டும்) என் கண்ணினால் காணத்தக்க விதத்தில்

மதி படாஅதி வாழி
நிலவே, நீ மறையாமல் இருப்பாயாக!

"இங்கே ஏன் கதிரவனைக் கூப்பிடவில்லை, அந்த ஒளியில் பார்த்தால் காதலனைக் கண்ணினால் காண முடியாதா?" என்றெல்லாம் ஏளனம் செய்யக்கூடாது.

காமத்துப்பால் படித்துக்கொண்டிருக்கிறோம் - அங்கே பகலுக்கும் பகலவனுக்கும் வேலையில்லை, இரவுக்கும் நிலவுக்கும் தான் அழைப்பு! Laughing

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 11 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Jun 29, 2018 9:04 pm

#1211
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய்வேன் கொல் விருந்து

(காமத்துப்பால், கற்பியல், கனவு நிலையுரைத்தல் அதிகாரம்)

காதலன் பிரிந்து சென்றதை நினைத்து நினைத்துப்புலம்பி ஓய்ந்து விட்டாள் என்று தோன்றுகிறது. அதனால், கனவு நிலை (அதாவது, உறங்க முடிகிறது / அந்த அளவுக்குக் களைப்பு வந்து விட்டது, என்றாலும் கனவிலும் காதல் தான் முன்னிலை).

ஆக, இந்த அதிகாரத்தில் காதலன் கனவில் வந்து இன்புறுத்தும் / துன்புறுத்தும் காட்சிகள் நிறைய வரலாம். தமிழ்த்திரைப்படங்களில் நிறையவே கனவுப்பாடல்கள் இருக்கும் அல்லவா? அது போன்ற வடிவத்திலான செய்யுள்கள் வருகிறதா பார்ப்போம்!

முதல் பாடலில் "கனவில் அவர் தூது விட்டிருக்கிறார் - அதற்கு என்ன விருந்து தருவேன்" என்று சுற்றும் உள்ளோரிடம் கூறுவதாக வருகிறது (அதாவது தோழி அல்லது வீட்டில் உள்ள உறவுகள்).

மற்றபடி, இது கவிதை என்பதால் "கனவுக்கு எப்படி ஐயா விருந்து தர முடியும்" என்றெல்லாம் தருக்கம் பார்க்கவோ கேட்கவோ கூடாது Wink

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
(பிரிந்து சென்ற எனது) காதலரின் தூதுடன் வந்த கனவுக்கு

யாதுசெய்வேன் கொல் விருந்து
என்ன விருந்து செய்ய முடியும்!

இங்கே "தூது" என்ற சொல் குறிப்பிடத்தக்கது. இரண்டு நாடுகளுக்கு இடையேயான தூதுவர் அவையிரண்டும் பிரியும் போது - அதாவது பகையாய் மாறும் போது - குறிப்பிடத்தக்க மாற்றங்களைக்காணுவார். சொல்லப்போனால், தூதரகத்தையே எடுத்து விடுவார்கள். ஆகவே, தூது என்பதை உறவுக்கான படி என்று கொள்ளலாம். குறிப்பாக, இங்கே ஒருவரையொருவர் பார்க்க இயலாமல் பிரிந்திருக்கும் காதலருக்கு நடுவில் தூது வந்தாலே அங்கே உறவு துளிர்க்கிறது, பசுமையாக இருக்கிறது என்று பொருள் கொள்ளும்.

நேரடியான தூது இல்லை - ஆகையால் உறவு இல்லை என்பது தான் உண்மை நிலை. என்றாலும், அதை ஒத்துக்கொள்ள விரும்பாத மனம் கனவு காணுகிறது. கனவில் தூது வருவதாகக்கண்டு விருந்து தர எண்ணுகிறது.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 11 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Jul 02, 2018 9:07 pm

#1212
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்


தமிழர் அடிக்கடி பயன்படுத்தும் மற்றும் எனக்கு மிகவும் பிடித்ததுமான உவமை (கயல் உண்கண்) இந்தப்பாட்டில் Smile

"மைதீட்டிய கயல் போன்ற விழிகள்" - கேட்கும் போதும் படிக்கும் போதும் உடனே நம் மனதில் (குறிப்பாக ஆடவர் மனதில்) அழகான ஓவியம் வருவது தவிர்க்க முடியாதது Laughing

அவற்றை "உறங்குங்களேன், நான் கொஞ்சம் கனவு காண வேண்டும் - அதில் என் காதலரைப்பார்த்து நான் உயிரோடு தான் இருக்கிறேன் என்று சொல்ல வேண்டும்" என்றெல்லாம் தலைவி கெஞ்சுவதாக வள்ளுவர் கற்பனை செய்கிறார்.

மிகச்சிறப்பு!

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற்
மையெழுதிய என் கயல் விழிகளே, நான் கெஞ்சுவதற்கேற்ப நீங்கள் உறங்கினால்
(கயல் = மீன், கெண்டை மீன் போன்ற வடிவிலான கண்கள் என்றோ, மீன் போலத்துள்ளும் / துடிக்கும் விழிகள் என்றோ, மீன் நீந்துவது போல அழகாகச்சுழலும் என்றோ - பலவிதத்தில் விளக்குவார்கள்; மீனம்மா, கண்கள் மீனம்மா)

கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன் மன்
(கனவில் சந்தித்து) என் காதலருக்கு நான் உயிரோடு இருப்பதைத் தெரிவிப்பேனே!

இவளை விட்டு விட்டுக்காதலர் போய் விட்டார். நினைத்து நினைத்துப்புலம்பி உறக்கம் போலும் வராமல் தவிக்கிறாள்.

அந்த நிலையை சமாளிப்பதற்கு இப்படியெல்லாம் கவிதை சொல்கிறாள். "என் காதலர் நான் செத்துப்போய் விட்டதாக எண்ணிக்கொண்டிருக்கிறார், அதனால் தான் என்னைச் சந்திப்பதில்லை" என்று தனக்குத்தானே ஒரு பொய் சொல்லிக்கொள்கிறாள். தொடர்ந்து, அவரைக் கனவில் சந்தித்து உயிரோடுள்ள உண்மை சொல்வேன் என்றெல்லாம் பிதற்றுகிறாள்.

கனவு என்பதே மெய்யில்லை . அதிலும், ஒருவர் காணும் கனவு இன்னொருவர் அறிவதில்லை - இருவரும் நனவில் சந்தித்துப்பேசினால் தான் கனவு என்ன என்றே பகிர்ந்து கொள்ள முடியும்.

அத்தகைய நிலையில், "கனவில் நான் உண்மை சாற்றுவேன்" என்றெல்லாம் சொல்வது துயரம் பொங்கிக்கொண்டிருக்கும் மனதை என்னவெல்லாம் செய்து அவள் கையாளுகிறாள் என்று நமக்குத் தெரிவிக்கிறது.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 11 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Jul 03, 2018 7:00 pm

#1213
நனவினால் நல்காதவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்


ஒன்று மட்டும் உறுதி - இந்தத்திருக்குறளில் வரும் கனவு, மறைந்த அப்துல் கலாம் இளைஞர்களைக் காணச்சொன்ன கனவு அல்ல Laughing

கண்டிப்பாகத் தமிழ்த்திரைப்படங்களில் ஆயிரக்கணக்கான கதை மாந்தர்கள் கண்ட / கண்டு கொண்டிருக்கும் கனவுக்காட்சிகள் இது போன்றவை தான் - அதாவது, நனவில் கிடைக்காத காதலைக் கனவிலாவது கண்டு இன்புறுதல்.

இங்குள்ள ஒரே வேறுபாடு என்னவென்றால், பிரிவுக்குப் பின் வரும் கனவுகள் இங்கே கடும் மனஅழுத்தத்தில் - கிட்டத்தட்ட சாகும் நிலையில் - தவிக்கும் பெண்ணுக்கு எவ்விதத்தில் தொடர்ந்து உயிர்வாழ உதவுகின்றன என்பது.

நனவினால் நல்காதவரை
நனவில் என்னிடம் அன்பு காட்டாதவரை
(நேரில் வந்து என்னிடம் காதல் செய்யாமல் விட்டு விட்டுப்போனவரை)

கனவினால் காண்டலின்
கனவிலாவது கண்டு கொண்டிருந்தால் தான்

உண்டென் உயிர்
எனக்கு உயிர் இன்னமும் உண்டு
(நான் உயிரோடு இருக்க முடியும் )

எப்படியோ, தற்கொலை செய்து கொள்ளாமல் கனவுகள் கண்டாவது வாழ்வைத்தொடர்வது நல்லதே!

என்றாலும், இந்த நிலையிலிருந்து விடுபட்டு அடுத்த காதலைத் தொடங்குவதே அறிவு என்று நம் காலத்தில் பெரும்பாலோர் (பெண்கள் உட்பட) முன்னேறி விட்டார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது Wink

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 11 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jul 05, 2018 5:38 pm

#1214
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித்தரற்கு

சென்ற குறளின் பொருள் தான் - சற்றே சொற்கள் மாற்றிக் கொடுக்கிறார்.

அதாவது, நனவில் காதல் செய்யாதவரைக் கனவில் "பிடித்து இழுத்து வைத்து"க்காதல் செய்ய முடியும் என்ற அரிய கண்டுபிடிப்பு Laughing

ஆகவே, "கனவினால் உயிர் வாழ்கிறேன்" என்று சென்ற குறளில் சொன்னதை இங்கே "கனவு அழைத்து வந்து தருகிறது" என்று வேறு சொற்கள் கொண்டு எழுதுகிறார். மற்றபடி, ஒரே பொருள்.

நனவினான் நல்காரை நாடித்தரற்கு
நனவில் (நேரில் வந்து) அன்பு செலுத்தாதவரைத் தேடிக்கண்டுபிடித்துக்கொண்டு வரும்

கனவினான் உண்டாகும் காமம்
கனவினால் தான் இப்போது காமம் உண்டாகிறது

வேறு சொற்களில் சொன்னால், "என் காதல் இப்போது வெறும் கனவில் தான் - அங்கே தான் அவரைக் கொண்டு வர முடியும், நேரில் அல்ல"!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 11 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Jul 06, 2018 9:49 pm

#1215
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது


மணக்குடவர் இந்தக்குறளை "கனவில் புணர்ச்சி இன்பம் கிட்டுமா?" என்ற தோழியின் கேள்விக்குத் தலைவி மறுமொழி சொல்வதாக விளக்குகிறார்.

அப்படி நம் மனக்கண்ணில் காட்சிப்படுத்தினால் இதைப்புரிந்து கொள்வது எளிது.

இல்லாவிட்டால், அது என்ன 'நனவிலும் இன்பம், கனவிலும் இன்பம்' என்று - கொஞ்சம் உளறல் போலத்தோன்றலாம் Smile

நனவினால் கண்டதூஉம் இனிது
(காதலரை) நேரில் காண்பது எப்படி இனிமையானதோ

ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது
அதே போன்று அவரைக் கனவில் கண்ட பொழுதே இன்பம் உண்டாகிறது

"பொழுதே" என்ற சொல்லைக்கொண்டு மு.வ. கொஞ்சம் கூடுதல் பொருள் தருகிறார் - அதாவது, நனவிலும் கனவிலும் காதலரைக் காணும் இன்பம் அந்தப்பொழுதுக்கு மட்டுமே என்கிறார், அதுவும் சரிதான். (ஒளிப்பதிவுக்கருவியெல்லாம் இல்லாத காலத்தில் எழுதப்பட்டதல்லவா? இப்போதெல்லாம் ஒளிப்படம், காணொளி என்று கண்டு மீண்டும் மீண்டும் இன்பம் கொள்ள வழியிருக்கிறது).

"கனவில் காணும் இன்பம்" என்பது இங்கே பெண்ணின் வாய்மொழி என்றாலும் இத்தகைய "கனவுக்காதலின்பம் துய்ப்பது" பையன்களுக்கு நன்றாகவே தெரிந்தது தான். சொல்லப்போனால் பதின்ம வயதில் "சிறுவன்" என்ற நிலையிலிருந்து "வயதுக்கு வந்தவன்" என்ற நிலை மாற்றத்தைப் பல ஆண்களும் கனவின் விளைவாக நனைந்த கால்சட்டையால் உணருவதுண்டு Laughing

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 11 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Jul 09, 2018 5:32 pm

#1216
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்


இனிமையான கனவு கண்டு கொண்டிருக்கும்போது சட்டென உறக்கத்துக்கு ஏதாவது இடையூறு வந்து விழித்துக்கொள்வது நம் எல்லோருக்கும் ஒரு முறையாவது நடந்திருக்கும்.

அதிலும் குறிப்பாக யாராவது நம்மை எழுப்பி, அதன் விளைவாகக் கனவு தடைப்பட்டிருந்தால் அந்த ஆள் மீது அப்போதைக்குக் கடும் சினம் கூட வரலாம் Smile

காதலன் பிரிந்து சென்று விட்ட நிலையில் கனவிலாவது அவனைக்கண்டு மகிழும் பெண்ணுக்கு அது தடைப்பட்டு நனவு / உண்மை நிலையில் விழிக்கும்போது அத்தகைய சினம் / வருத்தம் எல்லாம் வருகிறதாம். அதுவே இந்தக்குறள்!

வள்ளுவர் "நனவென ஒன்று" என்று மட்டுமே சொல்லியிருந்தாலும் பல உரையாசிரியர்களும் "நனவு என்னும் ஒரு பாவி / ஒரு கொடுமை" என்றெல்லாம் கூட்டிச்சேர்த்து விளக்குகிறார்கள் Smile

நனவென ஒன்றில்லை ஆயின்
(இந்த) நனவு என்று சொல்லப்படும் ஒன்று (மட்டும்) இல்லையென்றால்

கனவினால் காதலர் நீங்கலர் மன்
கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருப்பாரே!

நாம் முன்னமே பலமுறை பார்த்திருப்பதற்கு ஒப்ப "மன்" என்பது திட்டுவதற்கான ஒரு அசைச்சொல். ஆகவே, "நீங்காமல் இருந்து தொலைத்திருப்பாரே" என்று எரிச்சலில் சொல்லுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

அப்படியாகக் காதலர் பிரிவை "நனவு என்னும் கொடுமை"யின் மீது சுமத்திப் புலம்புகிறாள் - கனவினையோ புகழுகிறாள்.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 11 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Jul 10, 2018 11:31 pm

#1217
நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என் எம்மைப் பீழிப்பது


நேரடியான பொருள் உள்ள குறள் - பல நேரங்களிலும் இது தான் உண்மை நிலை. (காதலுக்கும் காமத்துக்கும் மட்டுமல்ல வேறு பல சூழல்களிலும் கனவு என்பது முடிந்த பின்னர் ஏமாற்றத்தையும் துன்பத்தையுமே தர வல்லது - குறிப்பாக நனவில் அதற்கெதிரான கடும் துன்பமான நிலை இருந்தால்).

கனவில் அவர் வராவிடில் ஏமாற்றம் கொள்ளாமல் இருக்க முடியும். மெல்ல மெல்ல அவரது நினைவுகளில் இருந்தும் மீள முயலலாம். அவ்விதத்தில் கனவு ஒரு எதிரி, புண்ணைச் சுரண்டிச்சுரண்டித் துன்புறுத்தும் கொடுமைக்கருவி எனலாம்.

நனவினால் நல்காக் கொடியார்
நேரில் வந்து அன்பு செலுத்தாத கொடியவரான (என் முன்னாள் காதலர்)

கனவினால் என் எம்மைப் பீழிப்பது
எதற்காகக் கனவில் மட்டும் வந்து வந்து என்னைத் துன்புறுத்துகிறார்
(பீழிப்பது = வருத்துவது)

கனவில் வருவது "அவரது" குற்றம் அல்ல என்பது வேறு. இவளது மனதில் இருக்கும் நீங்காத நினைவுகள் தாம் உறங்கியவுடன் எழுந்து ஆடத் தொடங்கி விடுகின்றன. அதற்கு நினைவுகளைக் களைவதே வழி - அது எப்படி என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை Embarassed

நடைமுறையில் செய்யத்தக்கவை என்று பார்த்தால், ஏதாவது வேறொரு நேர்மறையான செயலில் மிகுந்த ஆர்வத்துடன் முழுப்பாய்ச்சலில் செல்வது ஒன்று.
(எடுத்துக்காட்டாக, இன்னொரு புதிய காதல் rotfl )

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 11 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 16 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum