குறள் இன்பம் - #1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ (கண்விதுப்பழிதல்)

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

Go down

Re: குறள் இன்பம் - #1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ (கண்விதுப்பழிதல்)

Post  app_engine on Wed Apr 11, 2018 10:28 pm

#1169
கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா


"கழியாத இரவுகள் விடியாத பொழுதுகள்" என்ற சொற்றொடரைக் கல்லூரிக்காலத்தில் எழுதிய ஒரு காதல் கவிதையில் பயன்படுத்தியது நினைவுக்கு வருகிறது.

அது நான் கோர்த்தெடுத்ததோ அல்லது கடன்வாங்கிக் கையாண்டதோ என்பது நினைவில் இல்லை.

இந்தக்குறள் அதே கருத்தில் தலைவி புலம்புவதைச் சொல்கிறது.

இந்நாள் நெடிய கழியும் இரா
(பிரிவில் துன்புறும்) இந்நாட்களில் நீண்டு நெடிதாகக் கழியும் இரவுகள்
(துன்பத்தின் விளைவாக நீண்டதாக / முடிவில்லாததாகத் தோன்றும் இரவுப்பொழுதுகள்)

கொடியார் கொடுமையின் தாம்கொடிய
கொடியவரின் கொடுமையை விடவும் கூடுதல் துன்பம் தருவன
(கொடியவர் = பிரிந்து சென்று துன்பம் தந்த காதலர்)

அவர் பிரிந்து சென்ற கொடுமையை விடவும் கூடுதல் கொடுமை இழு இழுவென்று நீண்டு இழுத்துக்கொண்டிருக்கும் இரவுகளாம்.

உண்மையில் இரவுப்பொழுது யாருக்காகவும் நீளுவதில்லை. கதிர் தோன்றுவதும் மறைவதும் முழு உலகுக்கும் பொதுவானது / ஒரே அளவினது. நம் மனநிலையைப் பொறுத்தே நேரம் குறைவாகவும் நீளுவதாகவும் தோன்றுவதெல்லாம். மிகவும் மகிழ்வு தரும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி விரைவில் முடிந்துவிட்டது போலவும் தாங்க முடியாத அறுவை நிகழ்வோ நெடுநேரம் நடப்பது போலவும் தோற்றம் தரும்.

அது போன்ற கொடுமை தான் இது.

app_engine

Posts : 8071
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ (கண்விதுப்பழிதல்)

Post  app_engine on Thu Apr 12, 2018 8:56 pm

#1170
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தலமன்னோ என் கண்


மனது செல்லும் வேகத்தில் உடல் செல்ல முடியுமா?

குருதிச்சதை கொண்ட உடலால் அது முடியாது என்பது தான் உண்மை. (வேறு விதமான மனங்கள் / உடல்கள் அவ்வாறு செய்யக்கூடும் என்றாலும் அவற்றின் வேகம் நாம் அறிந்திராதது என்பதால் அவை குறித்தெல்லாம் பேச / எண்ண முடியாது).

"நினைத்த உடனே வேறொரு இடத்தில் இருக்க முடிந்தால்" என்பது கனவில் மட்டுமே நடக்கும் என்றாலும், "அப்படி முடிந்தால் நன்றாக இருக்குமே" என்று ஒரு முறையாவது வாழ்வில் எண்ணாதவர் யாருமே இருக்க முடியாது.

அப்படிப்பட்ட ஒரு நிலையில் தலைவனைப்பிரிந்த தலைவி புலம்பும் பாடல்.

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின்
(என்னவர்) உள்ள இடத்துக்கு என் மனதைப்போன்றே நானும் செல்ல முடியுமென்றால்

வெள்ளநீர் நீந்தலமன்னோ என் கண்
என் கண்கள் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டி இருக்காதே?

கடந்த சில குறள்கள் போன்ற கற்பனைச்சிறப்பு இல்லாவிட்டாலும் நொந்து போன உணர்வை அருமையாகவே பதிவு செய்திருக்கிறார் இதிலும்.

குறிப்பாக, நம் எல்லோருக்கும் இருக்கும் "நான் அங்கே இருந்தால்" என்ற அந்த உணர்வினைப் படம் பிடித்ததில் தான் எப்பேர்ப்பட்ட மக்கள் கவிஞன் என்று (ஆயிரத்துக்கும் கூடுதலான முறையாகத்) தெளிவிக்கிறார் Smile

app_engine

Posts : 8071
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ (கண்விதுப்பழிதல்)

Post  app_engine on Fri Apr 13, 2018 11:47 pm

#1171
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம் கண்டது

(காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல் அதிகாரம்)

விதுப்பு  என்பதற்கு நடுக்கம், விரைவு, பரபரப்பு, வேட்கை என்றெல்லாம் அகராதி பொருள் சொல்கிறது.

கண்விதுப்பு என்றாலோ? "கண்கள் காண்டற்கு விரைகை" என்று சொல்கிறது.  அதாவது, பார்ப்பதற்கு ஏங்குதல் என்று பொருள்.

கண் விதுப்பழிதல் என்றால் "காண்பதற்கு ஏங்கி அழுது வருந்துதல்" என்று புரிந்து கொள்ளலாம்.

ஆக, இந்த அதிகாரம் முழுவதும் தலைவனைப்பிரிந்த தலைவி அவனை எப்போது காண்போம் என்று தவியாய்த் தவிக்கும் கண்களைப்பற்றிப் பாடுவதாக வரும் என்று தோன்றுகிறது.
("கண்கள் இரண்டும் என்று உம்மைக்கண்டு பேசுமோ" என்ற திரைப்பாடல் இந்த வகைப்பட்டது என்பது உடனே தோன்றினால் நீங்களும் நானும் ஒரேபோன்று எண்ணுகிறோம் என்று பொருள் Smile )

கண் தண்டாநோய் தாம்காட்ட யாம் கண்டது
ஏ கண்களே! தணியாத இந்தக்காதல் நோய் நீங்கள் அவரை எனக்குக்காட்டியதால் தானே பெற்றேன்?

தாம் கலுழ்வ தெவன்கொலோ
(அப்படியிருக்க, எனக்குத்தானே துன்பம்? செய்வதையும் செய்து விட்டு) நீங்கள் இப்போது ஏன் அழுது கொண்டிருக்கிறீர்கள்?

"அந்த ஆளைப்பார்க்க வைத்ததும், காதல் உணர்வைத்தூண்டியதும், உரையாடி என்னை வலையில் வீழ்த்தியதும் - இப்படி எல்லாவற்றையும் செய்து என்னை இந்த நோயில் தள்ளி விட்ட கண்களே! இவ்வளவு போதாதா? பிரிந்து சென்ற அவரைப் பார்க்கத்துடித்து, அழுது நீர் சுரந்து இன்னும் என்னை ஏன் வருத்துகிறீர்கள்?" - இப்படியெல்லாம் தன் கண்களைத் தானே நொந்து கொள்கிறார்.

மிக அழகான கவிதை!

app_engine

Posts : 8071
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ (கண்விதுப்பழிதல்)

Post  app_engine on Mon Apr 16, 2018 9:28 pm

#1172
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்


உண்கண் என்றால் மையெழுதிய கண் என்று முன்னமே ஒரு பாடலில் பார்த்திருக்கிறோம். "பைதல்" என்ற சொல்லுக்கு வேறு பல பொருள்கள் இருந்தாலும் இங்கே "துன்பம்" என்று வருவதாக இந்தக்குறளை மேற்கோள் காட்டி அகராதி சொல்கிறது.

மொத்தத்தில் "கண் படும் துன்பம்" என்ற அதிகாரத்தின் மையப்பொருளில் அமைந்த குறள். அதிலும் குறிப்பாகப்பெண்ணின் கண், மையழுதிய அந்த அழகான கண்கள் அழுது தவிக்கும் சூழல், தலைவனைப் பிரிந்த தலைவியின் துன்பம் கண்களின் அழுகையில் வெளிப்படும் நிலைமை.

"காதலனை முதன்முதல் கண்டபோது ஆராயாமல் காதல் கொள்ள வழிசெய்தவை இந்தக்கண்களே. பிரிந்து சென்றவுடன் மட்டும் அழுவதேன், இப்போதும் அவனுக்குப் பரிவு காட்டிக்கொண்டிருக்கக் கூடாதா"  - என்று தன் கண்களைத் தானே நொந்து கொள்கிறாள் பெண்.

தெரிந்துணரா நோக்கிய உண்கண்
(எப்படிப்பட்டவன் என்று) தெரிந்து ஆராயாமல் நோக்கிப்பார்த்த (காதலுக்கு வழி செய்த) மையெழுதிய கண்களே!
("கண்டதும் காதல்"  என்ற நடைமுறை உண்மையை இங்கே காண்கிறோம்)

பரிந்துணராப்பைதல் உழப்பது எவன்
(பிரிந்தவுடன்) பரிவோடு உணராமல் துன்பத்தில் உழலுவது ஏனோ?

உண்மையில் "காதலுக்குக்கண்ணில்லை" என்ற இன்னொரு நடைமுறை உண்மையை மறைக்க இங்கே தலைவி கண்களின் மீதே பழி போடப்பார்க்கிறாள் Smile

ஆராய்ந்து காதல் கொள்ளத்தான் கண்களும் அறிவும் வேண்டும். தெரிந்து உணராமல் காதலில் வீழ்வது குருட்டுத்தனம் அல்லவா? கண்கள் தான் காதலின் சாரளங்கள் என்றாலும் அவற்றுக்குப்பின்னால் இருந்து இயக்கம் மூளைக்கு அறிவிருக்க வேண்டாமா?

இல்லாமல் செயல்பட்டால், அந்த "ஐயோ பாவம் கண்கள்" அழும்போது அவற்றின் மீதே பழியைப்போடும் இந்த நிலைமை தான் வரும்!

app_engine

Posts : 8071
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ (கண்விதுப்பழிதல்)

Post  app_engine on Tue Apr 17, 2018 10:30 pm

#1173
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இது நகத்தக்க துடைத்து


"கதுமெனல்"  என்றால் விரைவுக்குறிப்பு என்கிறது அகராதி. ("சட்டென்று / சட்டுனு" என்று பேச்சு வழக்கில் சொல்லுகிறோமே, அதே போன்று).

நாம் ஏற்கனவே பார்த்து வருவது போல், இந்த அதிகாரம் முழுவதும் பெண் தன் கண்களின் அழுகையைக் குறித்து இளக்காரமாகப் பேசும் ஒன்று. அதாவது, தலைவன் பிரிந்த வெறுப்பில் இருக்கும் அவள், கண்களின் மீது குறை கூறி அவ்வாறாகத்தன் துன்பத்துக்கு வடிகால் காண முயல்கிறாள்.

"நீ தானே அவரை விரைவாக நோக்கி எனக்குக்காதல் உண்டாக்கினாய் - இப்போது நீயே அழுவதைப்பார்த்து எனக்கு நகைப்பாக இருக்கிறது" என்று வஞ்சப்புகழ்ச்சி செய்கிறாள். துன்ப நிலையில் நகைப்பு எப்படி வரும்? ஆனால், இது வஞ்சப்புகழ்ச்சியா என்றும் சொல்ல முடியவில்லை - அதாவது இங்கே கண்களைப் பழிப்பது புகழ்வதற்கு அல்லவே...தனது துன்ப நிலையை மறக்க மட்டும் தானே முயல்கிறாள்? மது அருந்துவது போல இங்கே கவிதை Wink

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
தானே விரைவாக நோக்கி (அதனால் காதலுற்று, அதன் பிறகு) தானே அழுகின்ற

இது நகத்தக்க துடைத்து
இந்தக்கண்கள் நகைக்கத்தக்கவை
(இப்படியாப்பட்ட இந்தக்கண்களைப் பார்க்கையில் எனக்குச் சிரிப்பு வருகிறது)

தன் கண்கள் அழுவதைப் பார்த்துத் தானே சிரித்துக்கொள்ளும் இந்தப்பேதைப்பெண்ணைப் பார்த்தால் எனக்கும் தான் நகைப்பு வருகிறது Smile

app_engine

Posts : 8071
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ (கண்விதுப்பழிதல்)

Post  app_engine on Wed Apr 18, 2018 9:30 pm

#1174
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து


"அழக்கண்ணில் நீரில்லை" "அழுது அழுது கண்கள் வற்றி விட்டன" - இப்படிப்பட்ட சொற்றொடர்களை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம். (அப்படிப்பட்ட நிலையில் தான் இன்று உலகில் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது கொடுமையான ஒன்று).

இங்கே தலைவி அதே நிலையில் - தலைவன் விட்டுச்சென்று பிரிவுத்துயரால் அந்நிலை. இந்தச்செய்யுளிலும் அவர் தம் கண்ணைப் பழிப்பதைக் காண முடியும். சென்ற பாடலில் கண்ட நகைக்கும் மனநிலை இங்கே இல்லை என்பது வேற்றுமை.

உயலாற்றா, உய்வில் என்று இரண்டு முறை தப்ப வழியற்ற / நீங்காத என்று தமது காதல் நோயைப்பற்றிச் சொல்லுவது சிறப்பு!

உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து
(அதிலிருந்து) தப்ப வழியில்லாத, நீங்காத இந்தக் காமநோயை எனக்குள் வைத்து விட்டு

பெயலாற்றா நீருலந்த உண்கண்
(பிரிவினால் அழுது அழுது) இனியும் பெய்வதற்கு நீரில்லாமல் உலர்ந்த நிலையில் இருக்கின்றன என் மையெழுதிய கண்கள்!

நோயைத்தந்தவை என்று கண்கள் மீது சினம் உள்ளது போலப் பாடினாலும். அவையும் வற்றிப்போய்த் துன்பத்தில் உள்ளனவே என்று பரிவு கொள்கிறாள் இங்கே. ஐயோ பாவம்!

app_engine

Posts : 8071
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ (கண்விதுப்பழிதல்)

Post  app_engine on Thu Apr 19, 2018 8:57 pm

#1175
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்த என் கண்


மீண்டும் "பைதல் உழக்கும்" என்ற பயன்பாடு (துன்பத்தில் உழலுதல்).

அதே போல, மீண்டும் "கடலை விடவும்" என்ற பயன்பாடும் வருகிறது.

பொருளும் முன்பு கண்டதே - காம நோயை எனக்குத்தந்த கண்களே இப்போது நோயில் பாடுபடுகின்றன - என்பதை இந்த அதிகாரத்தில் மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டிருக்கிறோம்.

"படல்" என்ற சொல்லுக்கு உறக்கம் என்றும் பொருள் இருக்கிறதாம்.

கடலாற்றாக்காமநோய் செய்த என் கண்
கடலினும் பெரிதான (மிக்க / கொள்ளாத) காம நோயை எனக்கு உருவாக்கிய இந்தக்கண்கள்
(கிட்டத்தட்ட "என் கண்களே என் எதிரிகள்" என்பது போன்ற பேச்சு)

படலாற்றா பைதல் உழக்கும்
(தாமும்) உறங்க முடியாமல் துன்பத்தில் (நோயில்) உழன்று கொண்டிருக்கின்றன

நோய்களில் கொடிய நோய் "உறங்க இயலாமல் இருப்பது" என்ற நோய். நம்நாளின் அறிவியல் தெரிவிப்பதன் அடிப்படையில் உறக்கம் ஒழுங்கில்லை என்றால் வேறு பல உடல்நலக் கோளாறுகளும் தொடர்ந்து வரும். அப்படியாக, இது ஒரு நோய் மட்டுமல்ல மற்ற நோய்கள் தரும் காரணமும் ஆகிறது.

அதில் உழலும் நிலை இப்போது தலைவிக்கு. அது தனக்குள்ள நோய் என்று சொல்லாமல், தன்னை இதில் இழுத்து விட்ட கண்களுக்குள்ள நோய் என்று சொல்லி ஆற்றாமையில் புலம்புகிறாள்.

கவிச்சுவையோடு கூடிய துன்பநிலை!

app_engine

Posts : 8071
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ (கண்விதுப்பழிதல்)

Post  app_engine on Fri Apr 20, 2018 6:05 pm

#1176
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட்டது


"ஆகா ஓகோ" என்று மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்போர் பயன்படுத்தும் ஒலியை இங்கே துயரத்தின் உச்சத்தில் இருக்கும் காதலி பயன்படுத்துவது விந்தை தான்.

அதுவும், தனது கண்கள் அழுது துன்பப்படுவதை அவ்வளவு இனிமையான ஒன்றாகப்பாடுகிறாள். "இடுக்கண் வருங்கால் நகுக" செய்யத் தன் பாடலின் தலைவியைப் பயிற்றுவிக்கிறார் போலும் Smile

என்றாலும், இதற்குள் புதைத்து வைத்திருக்கும் "பழிவாங்கல் உணர்ச்சி" அவ்வளவு உவப்பாக இல்லை என்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. (எனக்குத் தொல்லை வர வைத்தாய் தானே, இப்போது உனக்குத்துன்பம் வருவது எனக்கு மகிழ்ச்சியே என்பது தெளிவாகவே பழி தீர்க்கும் உணர்வு)

எமக்கிந்நோய் செய்தகண்
எனக்கு இந்தக்காதல் நோயை உண்டாக்கிய (அதன் விளைவாகத்துன்பம் பிறப்பித்த) கண்கள்

தாஅம் இதற்பட்டது
தாமும் அதற்குள் சிக்கிக்கொண்டது (துன்பத்தில் உழலுவது)

ஓஒ இனிதே
ஓ! எவ்வளவு இனிமை / மகிழ்ச்சி!

தலைவன் பிரிந்து சென்ற ஆற்றாமையில் அழுது கொண்டிருப்பவள் வேறு என்ன தான் செய்ய முடியும்? விதம் விதமாகப் புலம்புவது தான் துயரத்தைக் கையாளுவதற்கான வடிகால்.

இந்த அதிகாரம் முழுவதும் தனக்கு நோய் உண்டாக்கிய கண்களைச் சாடி (அவற்றைக்கண்டு நகைத்து, அழுது, மகிழ்ந்து - இப்படிப்பல உணர்ச்சிகளையும் வெளிக்காட்டி) அவ்வழியே தனது துன்பத்துக்கு வடிகால் தேடுகிறாள்.

app_engine

Posts : 8071
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ (கண்விதுப்பழிதல்)

Post  app_engine on Mon Apr 23, 2018 10:56 pm

#1177
உழந்துழந்துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்


தனது கண்களைத் தலைவி திட்டித்தீர்த்துக்கொண்டிருக்கும் அதிகாரம்.

இந்தக்குறளில் "உன்னிடத்தில் நீர் வற்றிப்போவதாக" என்று சாபம் இடுகிறாள்.
("சாபம்" தமிழ்ச்சொல்லா இல்லையா - இல்லையென்றால் இதற்குரிய சொல் என்ன? "ஒழிக" என்று சொல்வதால் "ஒழிச்சொல்"?)

விழைந்திழைந்து வேண்டி அவர்க்கண்ட கண்
(காதல் தோன்றுவதற்கு) விரும்பி இழைந்து வேண்டி அவரைக்கண்ட கண்களே

உழந்துழந்துள்நீர் அறுக
(அவர் பிரிந்து சென்றுவிட்ட இந்நிலையில்) துன்பத்துள் உழன்று உழன்று உங்களுக்குள்ளே நீர் வற்றி இல்லாமல் போகட்டும்

"தன் கண்ணைத்தானே யாராவது குத்துவார்களா" என்பது அவ்வப்போது சொல்லப்படும் ஒரு உவமை.

"கண்ணைப்போல உன்னைக்காப்பேன்" என்று சொல்வதும் இன்னொரு பொது மொழி.

அப்படியெல்லாம் பொதுவாக இருக்கும் மானிடர்களில் ஒருத்தி தன் கண்களை "நீர் அற்றுப்போகக்கடவாய்" என்று கடுஞ்சொல்லோடு திட்டுவது எப்பேர்ப்பட்ட மன அழுத்தத்தில் இருக்கிறாள் என்று காட்டுகிறது. (கிட்டத்தட்டத் தற்கொலை செய்து கொள்வது போன்ற "தன்னைத்தானே தாக்கும் மனநிலை" அதாவது மனப்பிறழ்வு).

app_engine

Posts : 8071
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ (கண்விதுப்பழிதல்)

Post  app_engine Yesterday at 8:30 pm

#1178
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்


ஒரே போன்ற இரண்டு சொற்கள் (பேணுதல் / பெள்தல்) - இவற்றைக்கொண்டு சிறிய விளையாட்டு.

பேணுதல் என்பது நன்கு தெரிந்த சொல் தான் - போற்றுதல் / பாதுகாத்தல் / வைத்துப்பராமரித்தல் என்பனவெல்லாம் நமக்கு அன்றாடம் பழக்கத்தில் உள்ளவை. இவையல்லாமல், விருப்பம் என்ற பொருளும் இருக்கிறது. அதை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கி, "மனதுக்குள் விருப்பம்" என்று உரையாசிரியர்கள் விளையாடுகிறார்கள்.

பெள் என்ற சொல்லும் விருப்பம் / காதல் என்ற பொருள் கொண்டிருப்பதால், "பேணாது பெட்டார்" என்பது விருப்பமின்றிக் காதலித்தவர் என்று முரணாக வருவது போல் தோன்றலாம். காதல் என்றாலே விருப்பம் தான் - ஆகவே அந்தப்பொருளில் இங்கே "பேண" முடியாது Wink

"பொறுப்பற்ற காதலன்" என்று மட்டுமே கொள்ள முடியும். அதாவது, பெண்ணைப்பார்த்து இளிக்கவும் கொஞ்சவும் கூடவும் எல்லாம் தெரியும். காலங்காலமாக வைத்துக்காப்பாற்றத்தான் - பேணத்தான் - துப்பில்லை. கொஞ்சல் இன்பம் எல்லாம் கழிந்தவுடன் பொறுப்பில்லாமல் பிரிந்து ஓடி விட்டான்.

பேதைப்பெண் ஆற்றாமையை அவன் மீது காட்ட முடியாமல் "இன்னமும் அவனைக்காணத்துடிக்கும்" தனது கண்களைக் குறை சொல்லிக்கொண்டிருக்கிறாள்.

பெட்டார் பேணாது உளர்மன்னோ
காதலித்தவர் (என்னை வைத்துக்)காப்பாற்றாமல் (பிரிந்து, தான் தோன்றியாக) இருக்கிறார்

மற்றவர்க்காணாது அமைவில கண்
மாறாக இந்தக்கண்கள் அவரைக்காணாமல் (தவித்துக்கொண்டு) உறக்கமின்றி இருக்கின்றனவே

பெண்களுக்கு, குறிப்பாக அந்நாளையத் தமிழ்ப்பெண்டிருக்கு இருந்த "கல்லானாலும் கணவன்" என்ற இயலாமை மனநிலையை அழகாகப்படம் பிடிக்கும் பாடல்.

"தன்னைப்பேணாத காதலனையும் மறக்க மாட்டேன்" என்று அடம்பிடிக்கும் பேதைப்பெண் நெஞ்சம் Sad

app_engine

Posts : 8071
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ (கண்விதுப்பழிதல்)

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum