குறள் இன்பம் - #1155 நீங்கின் அரிதால் புணர்வு (பிரிவாற்றாமை)

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

Go down

Re: குறள் இன்பம் - #1155 நீங்கின் அரிதால் புணர்வு (பிரிவாற்றாமை)

Post  app_engine on Tue Mar 06, 2018 9:19 pm

#1144
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து


சென்ற குறளில் "கௌவை" என்று கண்ட சொல்லை இங்கே "கவ்வை" என்று காண்கிறோம். இப்படி இரண்டு விதமாக எழுதும் முறை தொன்று தொட்டே உள்ளது என்பதற்கான சிறிய சான்று.
(இதற்கென்றே - அதாவது, ஐ-அய் / ஒள-அவ் என்ற பயன்பாடுகள் குறித்து - தொல்காப்பியத்தில் இலக்கண விதி இருக்கிறது).

இங்கே கவ்வை என்ற பயன்பாடு கொண்டு சொல் விளையாட்டும் செய்கிறார் வள்ளுவர். கவ்விது என்கிறார், தவ்வென்னும் என்று எதுகை சேர்க்கிறார். இப்படியெல்லாம் Smile

மற்றபடி, சென்ற செய்யுள் போன்ற அதே பொருள் தான் இங்கும்.

காமம் கவ்வையால் கவ்விது
(எங்கள்) காதல் மற்றவர் அலர் தூற்றுவதால் (ஊரார் புறங்கூறிப் பழி தூற்றுவதால்) வளர்த்து பெருகுகிறது!
(கவ்விது  என்ற சொல் கவ்வை என்பதலில் இருந்து உண்டாக்கப்படுவதாக மணக்குடவர் சொல்கிறார். அதாவது, அலரால் அலர்கிறது - தூற்றுவதால் எங்கும் பரவுவது போல், காதல் மற்றவர் பழிப்பதால் முனைப்புக் கூட்டப்படுகிறது)

அதுவின்றேல் தன்மை இழந்து தவ்வென்னும்
அது (அலர்) மட்டும் இல்லாதிருந்தால், காதலின் தன்மை இழந்து தேய்ந்து (கெட்டு / சிறுத்து) இல்லாமல் போயிருக்கும்

ஆதலினால், காதல் செய்வோர் மற்றவர் எல்லாம் அறியத்தக்க விதத்தில் செய்க! குறிப்பாக, உங்கள் காதலை ஊரார் அலர் தூற்றாவிடில் அது வாடிப்போகும். அதாவது, ரெண்டு பேருக்கும் மையல் இருந்தால் மட்டும் போதாது - அதை ஊராரும் அறிய வேண்டும்!

மனதுக்குள்ளேயே வைத்துப்புதைக்கும் காதல் கொண்டு ஒரு பயனும் இல்லை! (உண்மையோ உண்மை!)


Last edited by app_engine on Mon Mar 12, 2018 11:58 pm; edited 1 time in total

app_engine

Posts : 7957
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1155 நீங்கின் அரிதால் புணர்வு (பிரிவாற்றாமை)

Post  app_engine on Wed Mar 07, 2018 7:17 pm

#1145
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் 
வெளிப்படுந்தோறும் இனிது

கள்ளுண்ணாமை எழுதிய வள்ளுவர் இங்கே கள்ளுண்ணுதலை - அதன் இனிமையை - உவமை ஆக்குகிறார் Smile
(அதாவது, வள்ளுவர் கள்ளுண்டு மயக்கும் இன்பம் உற்றிருக்கிறார் என்று சுருக்கம் - அல்லாமல், இப்படி உறுதியாக அவர் எழுத முடியுமா?)

"அலர் வழியாகக் காமம் எல்லோரும் அறிய வெளிப்படுவது நல்லதே" என்று அறிவுறுத்தும் பாடல்களை இந்த அதிகாரம் முழுவதும் கண்டு வருகிறோம். அது இன்பம் தரும் இனிமையான ஒன்று என்று இந்தப்பாடல் சொல்லுகிறது.

அதாவது, பேசித்திரிவோருக்கு மட்டுமல்ல அது இன்பம் தருவது - பேசப்படும் காதலர்களுக்கும் கள்ளுண்ணுவது போன்று இனிமையான, விரும்பத்தக்க மயக்கம் தரும் ஒன்றே அலர்! 
(தமது "புகழ்" ஊர் முழுக்கப்பரவி இருப்பது குறித்து அவர்கள் இன்புறுவது சரிதான் - "யாரும் வந்து அடித்து உதைப்பார்களோ" என்று அஞ்சி நடக்கும் கோழைகளுக்குக் காதல் தேவையில்லை தானே?)

கள்ளுண்டல் களித்தொறும் வேட்டற்றால்
கள்ளுண்பது களிக்கும் (மயங்கி மகிழும்)  தோறும் விரும்பப்படுவது போன்று

காமம் வெளிப்படுந்தோறும் இனிது
காமம் (ஊரறிய) வெளிப்படும் தோறும் இனிமையானது

காதல் வழி வரும் புகழ் (அல்லது இகழ், எப்படியானாலும் சரி) மயக்கம் தரக்கூடியது என்பதில் ஐயமில்லை! 

இதற்கு வழி செய்வோர் அலர் தூற்றுவோர் என்பதால் அவர்கள் கள் விற்போருக்குச்சமம்!

app_engine

Posts : 7957
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1155 நீங்கின் அரிதால் புணர்வு (பிரிவாற்றாமை)

Post  app_engine on Thu Mar 08, 2018 10:21 pm

#1146
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண்டற்று


இன்று போலவே வள்ளுவர் நாட்களிலும் ஞாயிறும் திங்களும் "மறைக்கப்படும்" நிகழ்வுகள் (சூரிய / சந்திர கிரகணங்கள் என்று பொதுவாக அறியப்படுபவை) பேரளவில்  பேசப்பட்டவை என்று சுட்டிக்காட்டும் குறள்.

அந்நிகழ்வுகளின் விளைவாகத் தோன்றும் நிழல்களை வைத்து அக்காலத்தில் கதிரவனையும் நிலாவையும் பெரிய பாம்புகள் விழுங்குவதாகக் கதைகள் சொல்லப்பட்டன என்றும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

காதலர்கள் குறித்த பழி தூற்றலும் திங்கள் விழுங்கப்படுவது போன்ற அளவில் பரப்பப்பட்டது என்று இந்தக்குறளில் வள்ளுவர் உவமை சொல்கிறார். படிப்பதற்கு மிகுந்த சுவை தான்!

கண்டது மன்னும் ஒருநாள்
(காதலர் ஒருவரை ஒருவர்) சந்தித்துக்கொண்டது என்னவோ ஒரே ஒரு நாள் மட்டும் தான்

அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண்டற்று
(ஆனால்) அது குறித்த அலர் தூற்றியதோ திங்களைப் பாம்பு விழுங்கியது போன்ற அளவில்!

தொடக்க அளவிலான - அதாவது, ஒரே ஒரு நாள் மட்டும் சந்தித்துக்கொண்ட - காதலைக்குறித்து நிலவைப் பாம்பு விழுங்கியது போல் பரபரப்பான செய்தியாகப் பரப்பி விட்டார்கள் என்பதில் இருந்து அன்றைய சமுதாய நிலையும் ஓரளவுக்குப் புரிந்து கொள்ளலாம்.

அதாவது, ஊருக்குள் அதை விடப்பெரிதாக வம்புச்செய்திகள் இல்லாதிருந்த காலம் Smile

app_engine

Posts : 7957
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1155 நீங்கின் அரிதால் புணர்வு (பிரிவாற்றாமை)

Post  app_engine on Fri Mar 09, 2018 6:54 pm

#1147
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும் இந்நோய்


இங்கே "அன்னை சொல்" என்பது பெண்ணுக்கா ஆணுக்கா என்று நேரடியாக இல்லை என்றாலும் பொதுவான தமிழ்ச்சூழல் அடிப்படையில் பெண்ணுக்கு என்று கொள்ள வழியுண்டு. ("காதல் கீதல் எல்லாம் வேண்டாம்" என்று பையனுக்கு அம்மா சொல்வார்களா என்று தெரியவில்லை, பெண்ணுக்குக் கண்டிப்பாகச் சொல்வார்கள் என்பது நம் காலங்களில் நேரில் கண்டது).

காதலை ஒரு பயிராக உருவகப்படுத்தி இங்கே எழுதுகிறார் வள்ளுவர். அன்னையின் சொல் (கடிந்து கொள்ளுதல்) காதலுக்கு நீரூற்றுதல் போலவாம் , ஆக அம்மா சொன்ன பேச்சை காமம் என்பதில் பொதுவாக யாரும் கேட்பதில்லை - எதிர்மறையாகவே செல்கிறார்கள் என்பது வேடிக்கை! மற்றபடி, இந்த அதிகாரத்தின் மையப்பொருளான அலர் தூற்றலை அந்தப்பயிருக்கு எரு என்கிறார்.

ஊரவர் கெளவை எருவாக
ஊரார்கள் அலர் தூற்றுவது எருவாகவும்

அன்னைசொல் நீராக
அன்னையின் (கடிந்துரைக்கும்) சொற்கள் நீராகவும்
(இப்படியாக, காதலை நீக்க வேண்டும் என்று எல்லோரும் எடுக்கும் முயற்சிகள் அதற்கு மாறாக வளர்ப்பதாகவே செயல்பட்டு)

நீளும் இந்நோய்
இந்தக்காதல் நோய் (என்னும் பயிர்) நீண்டு வாழும்

ஆக மொத்தம் தொன்று தொட்டே காதல் என்பது ஒரு எதிரெழுச்சி / புரட்சி / கிளர்ச்சி போன்று தான் வளர்ந்து வந்திருக்கிறது என்று இந்தக்குறள் சொல்லிக்கொடுக்கிறது!

எதிர்க்க எதிர்க்க வளரும் நோய் - எதிர்ப்பையே உரமாக / நீராகக் கொண்டு உயரும் பயிர் - அதற்குப்பெயர் தான் காதல்!

app_engine

Posts : 7957
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1155 நீங்கின் அரிதால் புணர்வு (பிரிவாற்றாமை)

Post  app_engine on Mon Mar 12, 2018 6:24 pm

#1148
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்


"எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுதல்" என்று சொல்வது நாம் அடிக்கடி கேட்கும் ஒன்று. (அதாவது, ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் தீயில் நெய் ஊற்றினால் இன்னும் சீற்றத்துடன் எரியும் - இதை "நடந்து கொண்டிருக்கும் கலவரத்துக்கு இன்னும் கூடுதல் வன்முறை சேர்க்கும் பேச்சு" என்பதற்கு உவமையாகச் சொல்வதுண்டு).

இங்கே அந்த உவமை கொஞ்சம் மாறுபட்ட விதத்தில் வள்ளுவர் கையாண்டிருக்கிறார். அதாவது, " தீயை அணைக்க யாராவது நெய் ஊற்றுவார்களா?" என்று Smile

காதலை அழிக்கும் நோக்கத்தோடு செய்யப்படும் அலரை ஏளனம் செய்கிறார். அலர் தூற்றுவதால் காதல் இன்னும் கூடும் / உறுதிப்படுமே ஒழிய அவிந்து போகாது என்று சொல்லுகிறார்.

உண்மை தான் - எந்த அளவுக்குக் காதலை அவித்துப்போட முயல்கிறார்களோ அந்த அளவுக்குக் காதலர்களும் இன்னும் கூடுதல் உறுதியோடு ஒட்டிக்கொள்வார்களே ஒழியப்பிரிவதில்லை!

கெளவையால் காமம் நுதுப்பேம் எனல்
அலர் தூற்றுவதால் காமத்தை அவித்துப்போடுவோம் என்று சொல்வது

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால்
நெய்யை ஊற்றித் தீயை அணைப்போம் என்று சொல்வதற்கு ஒப்பானது

ஆக, வள்ளுவர் சொல்ல வருவது - ஊரார் நினைப்பது நடக்காது - அதற்கு நேர் மாறானது நடக்கும் !

நெய்யால் தீ கூடுமே ஒழியக் குறையாது - அது போலத்தான் காதல் எனும் நெருப்பும்! கௌவை கொண்டு அதை இன்னும் ஊதிப்பெரிதாக்கலாமே ஒழிய அவித்துப்போட முடியாது!

app_engine

Posts : 7957
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1155 நீங்கின் அரிதால் புணர்வு (பிரிவாற்றாமை)

Post  app_engine on Mon Mar 12, 2018 11:53 pm

#1149
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை


பொருள் சட்டென்று பிடிபடாத குறள் Embarassed
(அதற்கு ஒரு காரணம் எப்போதாவது பாடும் "பெண் குரல்" Laughing - பொது நோக்கிலோ அல்லது ஆணின் நோக்கிலோ 99% செய்யுள்கள் உள்ளதால் நடுவில் பெண்ணின் நோக்கில் ஒன்று வரும்போது புரிந்து கொள்ள நேரம் எடுக்கிறது. மட்டுமல்ல, உரையாசிரியர்களும் ஆளுக்கொரு விதத்தில் விளக்குவதால் தெளிவு இல்லை).

மேலோட்டமான பொருள் உடனே கிடைத்து விடும் தான் - "இந்த அலருக்கெல்லாம் நாணக்கூடாது" - இது தானே இந்த அதிகாரம் முழுவதும் வருகின்ற கருத்து.

என்றாலும், எதற்காக நாணக்கூடாது என்பதில் தான் சிறிய தடுமாற்றம். பெண்ணின் நோக்கில் என்று பார்த்தால் தான் கொஞ்சமாவது விளங்கும். (என்றாலும் முழுமையாகப் பிடிபட மாட்டேன் என்கிறது)

அஞ்சலோம்பு என்றார்
"அஞ்ச வேண்டாம்" என்று சொன்னார் (என் காதலர்)

நீத்தக் கடை பலர்நாண
(என்னைப்) பிரிந்த இடத்தில் பலரும் நாணும்படியாக!

அலர்நாண ஒல்வதோ
(இப்படிப்பட்ட சூழலில்) அலர் தூற்றுதல் கண்டு நாணக்கூடுமோ? ("கூடாது" என்று பொருள்)

இரண்டு வழிகளில் புரிந்து கொள்ள முயல்கிறேன்:

1. பேதைப்பெண்ணாக : "அஞ்சாதே" என்று எல்லோருக்கும் முன்னால் சொல்லிவிட்டுத்தான் அவர் போயிருக்கிறார் (போருக்கோ / வேலைக்கோ / வேறெங்கோ). திரும்ப வந்து என்னைச்சேருவார்! நானெதற்கு ஊரார் பேச்சுக்கு நாணவேண்டும்?

2. தன்னம்பிக்கை உள்ளவளாக : அவர் என்னைப்பிரிந்தாலும் மற்றவர்கள் நாணும்படி "அஞ்சாதே" என்று சொல்லித்தானே சென்றார். (பிரிக்கும்படி சூழ்ச்சி செய்த) அவர்கள் தானே நாண வேண்டும், நான் ஏன் வெட்கப்பட வேண்டும்?

app_engine

Posts : 7957
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1155 நீங்கின் அரிதால் புணர்வு (பிரிவாற்றாமை)

Post  app_engine on Tue Mar 13, 2018 6:52 pm

#1150
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும் இவ்வூர்


களவியலின் கடைசிக்குறள் பெண்ணின் குரலாக அமைந்திருக்கிறது.
(அப்படியாக, இரண்டு பேரும் சேர்ந்து விடுவார்கள், அடுத்து அவர்களது மணவாழ்வு / கற்பியல் தொடங்கும் என்று தெரிவிப்பதாகச் சில விளக்கங்கள் வலையில் காண முடிகிறது. பொருத்தமான ஒன்று தான்!)

மற்றபடி, இதுவரை இந்த அதிகாரத்தில் மீண்டும் மீண்டும் வரும் அதே பொருள் தான் - அதாவது, அலர் நல்லது / கௌவை வேண்டும் என்று தான் நாம் விரும்புகிறோம் / இதன் வழியாக நமது காதல் நிறைவேறும்!

யாம்வேண்டும் கெளவை எடுக்கும் இவ்வூர்
நாம் விரும்புகின்ற அலரை இந்த ஊரார் கையில் எடுத்திருக்கிறார்கள்
(நம்மைக்குறிந்து அலர் தூற்றுதல் நல்லதே)

தாம்வேண்டின் நல்குவர் காதலர்
(அதன் வழியே) அவர்களே விரும்பி என் காதலரை எனக்குத் தருவார்கள்

சில உரைகள் சொல்கிறபடியும் எடுத்துக்கொள்ளலாம் - அதாவது, கௌவை பெருகியதன் விளைவாக நான் விரும்பிய என் காதலர் என்னை விரும்பி வரும்படி இணைக்கும் வேலை நடந்து விட்டது!

எப்படி எடுத்துக்கொண்டாலும், அலர் நல்லதே என்று வள்ளுவர் அறிவுறுத்துகிறார்.

ஒரு வழியாக ஊரார் எல்லாரும் சேர்ந்து இவர்களைக்குறித்துக் கௌவை பேசிப்பேசி முடிவில் இருவரையும் ஒன்று சேர்த்து விடுகிறார்கள் என்று இந்த இயலை முடித்து வைப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

அடுத்து வருவது கற்பியல்!

app_engine

Posts : 7957
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1155 நீங்கின் அரிதால் புணர்வு (பிரிவாற்றாமை)

Post  app_engine on Wed Mar 14, 2018 10:04 pm

#1151
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை

(காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை அதிகாரம்)

கற்பியலைத் தொடங்கும் போதே "பிரிவாற்றாமை" என்று இருப்பது - இனிவரும் குறள்களில் நிறையத்துன்பியல் உண்டாகும் என்று அறிவிப்பதற்கோ?

அதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று அடுத்து வரும் அதிகாரங்களின் பெயர்களைக்கண்டாலே தெரிகிறது.

மட்டுமல்ல, இது வரை மிகக்குறைவாகவே பேசிய / பாடிய பெண் குரல் இனி வரும் குறள்களில் பெரும்பங்கு வகிக்கும். அதாவது, அன்றைய "அகவாழ்வு" நிலையில் பெண்களுக்குப் பொதுவாக இருந்த "வீட்டில் இருந்து கொண்டு புலம்புதல்" என்ற நிலையையே நிறையப்பார்க்கப்போகிறோம் என்று தோன்றுகிறது.

என்றாலும், முன்முடிவு ஒன்றும் இல்லாமல், எப்போதும் போலவே படிப்பதாக இருக்கிறேன் Smile

"நீ என்னைப்பிரிந்து சென்றால் செத்துப்போவேன்" என்று மிரட்டிக்கொண்டு தொடங்குகிறது.

செல்லாமை உண்டேல் எனக்குரை
"பிரிந்து செல்ல மாட்டேன்" என்றால் மட்டுமே என்னிடம் சொல்
(செல்லாத நிலை உண்டு என்றால் மட்டும் என்னிடம் உரை)

மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை
மற்றபடி உனது "விரைவில் திரும்பி வருதல்" குறித்து என்றால், அது வரை வாழுவோரிடம் சொல்லிக்கொள்

சட்டென நம்மைத்தாக்கும் வலிமை கொண்ட கவிதை என்பதை மறுக்க முடியாது! "விரைவில் வருவேன்" போன்ற வாக்குறுதி எல்லாம் எனக்கு வேண்டாம் என்று அச்சுறுத்தும் குரலில் பெண் சொல்கிறாள். அதுவரை உன்னைப்பிரிந்து உயிரோடிருக்க மாட்டேன் என்கிறாள்.

இதிலுள்ள முரணையும் நாம் காணலாம் - அதாவது, சிறிய காலத்துக்குக்கூட காதலனின் பிரிவைப் பொறுக்க இயலாத, இறந்தே போகும் அளவுக்கான மென்மை / முறிந்து போகும் தன்மை. அதே நேரத்தில், அதைத் தன தலைவனிடம் நேரடியாக அடித்துச்சொல்லச் சற்றும் தயங்காத அச்சமின்மை! அவனை அச்சுறுத்தும் வன்மை!

மென்மையான பெண் - ஆனால் தலைவனிடம் மட்டும் மிரட்டும் வன்மை Wink

app_engine

Posts : 7957
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1155 நீங்கின் அரிதால் புணர்வு (பிரிவாற்றாமை)

Post  app_engine on Thu Mar 15, 2018 8:36 pm

#1152
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு


இந்த அதிகாரம் முழுவதுமே பெண் குரல் பாடுவது தானோ என்று தோன்றுகிறது. அதனால, இனிவரும் ஒவ்வொரு குறளிலும் அதைக்குறித்து எண்ண வேண்டியதில்லை. (ஒரு வேளை ஆணாக இருந்தால் மட்டும் குறித்து வைப்போம்).

பார்வல் - என்று ஒரு சொல் இங்கே வருகிறது. அதற்கு அகராதி சொல்லும் பல பொருள்களில் "பார்க்கை" (பார்த்தல்) என்பதே மிகப்பொருத்தம். அங்கே இந்தக்குறளை மேற்கோள் காட்டுகிறார்கள். ("அவர் என்னைப் பார்த்தாலே இன்பம்"  என்று சொல்கிறாள் பெண்).

"இன்கண்" இன்பமென்றால் "புன்கண்" துன்பம் தானே?  அதுவும், பார்வையின் போதல்ல - புணர்வின் (கட்டிப்பிடித்துக்கூடும்) போது!  

ஏனப்படி?

அங்கே தான் அதிகாரத்தின் மையப்பொருள் வருகிறது - பிரிவஞ்சுதல் / பிரிவு ஆற்றாமை!

இன்கண் உடைத்தவர் பார்வல்
அவர் பார்ப்பதே இன்பமாக இருந்தது
(உரையாசிரியர்கள் "முன்பெல்லாம்" என்று சொல்கிறார்கள்)

பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு
(ஆனால் / இப்போதோ) பிரிவுக்கு அஞ்சும் போது புணர்வின் போதும் துன்பம் தோன்றுகிறது

இதிலிருந்து ஆக மொத்தம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு குறிப்பிடத்தக்க உளவியல் உண்மை இருக்கிறது.

மானிட மனம் எப்போதும் அடுத்து வருவதற்காகத் தான் காத்திருக்கிறது! அதோடு ஒப்பிடுகையில், நிகழ் காலத்தின் இன்பத்தைத் துய்ப்பதற்குக்கூட சிறிய அளவிலேயே நாட்டம் இருக்கிறது! இது எப்படிப்பட்ட ஒரு முரண்!

"இன்று, இப்பொழுதில் என் கூட உறவாடுகிறார்" என்று இன்புறுவதில்லை - "ஐயோ, நாளைக்கு இருக்க மாட்டாரே" என்று துன்புறுகிறது அவள் மனம்.

முன்காலத்தில் அவன் பார்வை நேரடியாக உடலுக்கு ஒன்றும் தரவில்லை என்றாலும் எதிர்காலத்தில் வரப்போகிற தழுவலை நினைத்து இன்புற்றாள் என்பது இதனுடைய இன்னொரு புறம், ஆக மொத்தம் இன்பமோ துன்பமோ எதிர்காலம் தான் வாழ்வு என்று நினைக்கிறோம். Laughing

app_engine

Posts : 7957
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1155 நீங்கின் அரிதால் புணர்வு (பிரிவாற்றாமை)

Post  app_engine on Fri Mar 16, 2018 9:22 pm

#1153
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோரிடத்துண்மையான்


சட்டென்று பொருள் பிடிபடாத பாடல்.

சரி மற்ற உரைகள் என்ன தான் சொல்கின்றன என்று பார்க்கப்போனால் "உரைக்கு உரை எழுதும் நிலையில்" போட்டுக்குழப்பி இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் ஆய்ந்து "குறள் திறன்" என்று எழுதும் வலைத்தளம் இந்தக்குறளை சற்றே தெளிவாகக் கற்றுக்கொள்ள உதவுகிறது!

"தேற்றம்"  என்ற சொல்லுக்கு உள்ள பல பொருள்கள் கொண்டு உரைகள் இதைப் பலவிதத்தில் பொழிக்கின்றன.

உறுதி, தெளிவு என்ற பொருட்கள் இந்தச்சொல்லுக்கு இருந்தாலும் அவை அதிகாரத்தலைப்புக்குப் பொருத்தமில்லை. "மனம் கலங்காமை / ஆறுதல்" என்ற பொருளே சேர்கிறது. பிரிவு ஆற்றாமை = மனதுக்கு ஆறுதல் இல்லாத நிலை, தேற்றம் இல்லாத நிலை!. ஆக, அதுவே "அரிதரோ தேற்றம்" - அதாவது, "தேறுவது அரிது / ஆறுதல் கிடைப்பது கடினம்" என்று சொல்லும் குறளோடு ஒத்துப்போகிறது.

இனி பொருளைப்புரிந்து கொள்வது எளிது!

அறிவுடையார் கண்ணும்
(என்னைக்குறித்து) நன்கு அறிந்தவரிடத்திலும்
("நான் பிரிவைத்தாங்க மாட்டேன், செத்தே போய் விடுவேன்" என்றெல்லாம் நன்றாகத் தெரிந்த என் காதலரிடத்திலும்)

பிரிவோரிடத்துண்மையான்
ஒரு கட்டத்தில் பிரிவு ஏற்படும் என்பது உண்மையானால்

தேற்றம் அரிதரோ
தேற்றுவது / ஆற்றுவது அரிதல்லவா?

"நாமெல்லாரும் என்றாவது ஒரு நாள் போக வேண்டியவர்களே" என்ற சிந்தனையோடு இந்தக்குறளைப் பொருத்திப்பார்த்தால் விளங்குவது இன்னும் எளிது. அதாவது, எவ்வளவு நெருங்கியவர்களும் ஏதோ ஒரு சூழலில் அல்லது சாவில் பிரிய நேரிடும் என்னும் அறிவு.

என்ன தான் இந்த உண்மை நன்றாகத் தெரிந்திருந்தாலும், பிரிவு வரும்போது தாங்கவா முடிகிறது?

ஆற்றாமை கொண்டு அழுது, உடைந்து, நொறுங்கித்தானே போகிறோம்?

தேற்றம் அரிது என்பது மெய் தானே?

app_engine

Posts : 7957
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1155 நீங்கின் அரிதால் புணர்வு (பிரிவாற்றாமை)

Post  app_engine on Mon Mar 19, 2018 9:54 pm

#1154
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு


தலைவன் பிரிந்து செல்லும் நிலையில் ஆற்றாமையில் பெண் புலம்பும் செய்யுள்!

"அஞ்சாதே, உன்னைப்பிரியவே மாட்டேன் - அது என் உயிரைப் பிரிவதற்குச்சமம்! நாமிருவரும் ஓருயிர்" என்றெல்லாம் உறுதி சொல்லியவர் பிரிந்து போகிறார்.

புலம்பும் பெண் கேட்கிறாள் "சொன்னதை நம்பியது என் தவறா? ".

ஆற்றாமை என்பதற்கு இதை விடவும் பொருத்தமான எடுத்துக்காட்டு இருக்க முடியுமா? "பேசிப்பேசி மாய்ந்து போதல்" என்று இதைத்தானே சொல்கிறார்கள்?

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின்
கருணையோடு என்ன நோக்கி "அஞ்சவேண்டாம்" என்று சொன்னவர் பிரிந்தால்

தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு
அவ்வாறு சொன்ன உறுதிமொழியை நம்பித் தெளிந்தவளிடமா (அதாவது, என்னிடமா) தவறு இருக்கிறது?

"தவறு உன்னிடம் இல்லை தான்" என்று எல்லோரும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதல்ல இப்படிப்பாடுவதன் நோக்கம். (மற்றவர்கள் ஒத்துக்கொள்வதால் மட்டும் என்ன ஆகி விடப்போகிறது? வேண்டியவர் பிரிந்து விட்டால் மற்றவரது ஒப்புதல் கொண்டு ஒன்றும் கிட்டப்போவதில்லையே).

ஆக மொத்தம் தனது ஆற்றாமையை இப்படியெல்லாம் பாடி வெளிப்படுத்தித் துன்பத்தைத் தணித்துக்கொள்ளுதல் என்பது தான் இங்கே கருத்து என்று நினைக்கிறேன்.

தனக்குத்தானே ஆறுதல் சொல்லும் ஒரு விதமான தன்னிரக்கம்!

app_engine

Posts : 7957
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1155 நீங்கின் அரிதால் புணர்வு (பிரிவாற்றாமை)

Post  app_engine Yesterday at 8:28 pm

#1155
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு

"பிரிந்தவர் சேர்தல் கடினம்" என்ற பொருளில் இருக்கிறது இந்தச்செய்யுள். சண்டையிட்டுப் பிரிந்தாலும் மீண்டும் மீண்டும் சேர்ந்து கொள்வோர் நிறையப்பேரைப் பார்த்திருப்பதால் இக்கருத்தை உட்கொள்ளக் கடினமாக இருக்கிறது.

என்றாலும், சங்ககாலக் காதலர்கள் என்ற சூழலை மனதில் கொண்டு "அப்போதெல்லாம் காதல் என்றால் அவ்விதத்தில்" என்று புரிந்து கொள்ள முயல்கிறேன்.

"பிரிவாற்றாமை" அதிகாரத்துக்கு மிகப்பொருத்தமான குறள் தான் என்பதில் ஐயமில்லை. பிரிந்து விட்டுப்பின்னர் அதைக்குறித்து ஒப்பாரி வைப்பதை விட அது நடக்காமலேயே காத்துக்கொள்ளுதல் நன்று தானே?

சில உரையாசிரியர்கள் இதைப் பெண்குரல் பாடுவதாகப் புரிந்து கொண்டு, "என் உயிரைக்காக்க விரும்பினால்" என்று ஓம்பின் என்ற சொல்லை விளக்குகிறார்கள். அப்படியும் புரிந்து கொள்ளலாம் தான்.

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல்
காக்க வேண்டும் என்றால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும்
(என் உயிரைக் காக்க விரும்பினால், என் காதலர் பிரியாமல் தடுங்கள்)

மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு
அல்லாமல் அவர் பிரிந்து விட்டால் பின்னர் ஒன்று கூடுதல் அரிது

இது வேண்டுகோளா அல்லது எச்சரிக்கையா என்பது யாரிடம் சொல்கிறார் என்பதைப்பொறுத்து இருக்கிறது. (ஒருவேளை காதலனிடம் சொல்கிறார் என்றால், எச்சரிக்கை ஒலி என்று எடுத்துக்கொள்ளலாம் Laughing )

app_engine

Posts : 7957
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1155 நீங்கின் அரிதால் புணர்வு (பிரிவாற்றாமை)

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum