Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

3 posters

Page 6 of 16 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 16  Next

Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 6 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Nov 02, 2017 11:03 pm

#1073
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுகலான்


எள்ளலும் வஞ்சப்புகழ்ச்சியும் இங்கும் பீறிக்கொண்டு வருகிறது Smile

"தான்தோன்றித்தனமாக நடப்பதால் கயவர் தேவர் போன்றவரே" என்கிறார். அதாவது, வானுலகில் வாழ்வோர் மானிடரின் கட்டுகளுக்குள் இல்லை. அதே போல் நடந்து கொள்வதால் (கட்டுப்பாடுகள் / வரையறைகள் இன்றித் தமக்குத் தோன்றியதையெல்லாம் செய்து நடப்பதால்) இருவரும் ஒன்றே என்று விளக்குகிறார்.

சொல்லப்போனால், பல தொன்மங்களிலும் தேவர் எனப்படுவோர் செய்தவைகளாகச் சொல்லப்படும் கதைகளைப்படித்தால் அவரெல்லாம் நாம் பொதுவில் காணும் மானிடக்கயவரிலும் கீழ் என்று தோன்றலாம். Wink அது ஒரு புறம் இருக்கட்டும்.

பொதுவாக, தேவர் என்றால் இறைவனுக்கருகே உள்ள மேன்மையானோர். "அவரைப்போன்று" என்று சொல்லுவது வஞ்சப்புகழ்ச்சி அணி.

தேவர் அனையர் கயவர்
தேவர்களைப் போன்றோர் தான் கயவரும்

அவருந்தாம் மேவன செய்தொழுகலான்
(ஏனென்றால்) அவர்களும் தாம் விரும்புவதையெல்லாம் செய்து நடக்கிறார்களே!

நன்மை / தீமை என்ற கட்டுப்பாடுகளுக்குள் நேர்மையாக வாழும் எண்ணம் கொஞ்சமும் இல்லாத கயவர்கள் தம்மைத்தாமே தேவர் என்று நினைத்துக்கொள்ளவும் வழியுண்டு.
(யார் என்ன சொன்னாலும் என்னைக்கட்டுப்படுத்தாதே, என் மனம் போன போக்கில் தான் வாழ்வேன்).

என்றாலும், இங்கே அவர்களை வள்ளுவர் புகழ்வதில்லை என்பதைப்புரிந்து கொள்வது எளிதே. அவர்களது இறுதி என்னவென்று தெரிந்தது தானே?

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 6 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Nov 03, 2017 6:22 pm

#1074
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்


இங்கே "அகப்பட்டி" என்ற சொல்லுக்கு ஒவ்வொரு உரையாசிரியரும் ஒவ்வொரு விதத்தில் விளக்கம் சொல்கிறார்கள்.

பட்டி என்ற சொல்லுக்கு அத்தனை பொருள்கள் இருப்பது இதன் காரணமாக இருக்கலாம் Smile சில உரைகள், நாய் என்ற பொருளில் வருவதும் காணலாம். (மலையாளத்தில் ஆண் நாய் = பட்டி, பெண் நாய் = நாய) Laughing

ஆகவே, ஆகச்சரியான பொழிப்புரை தெரிந்து கொள்வது சற்றுக்கடினம் தான். என்றாலும், ஆக மொத்தப்பொருள் புரிவது மிக எளிதே. "தன்னை விடவும் கீழான நிலையில் நடப்பவனைப் பார்த்துக் கயவன் பெருமிதப்பட்டுக்கொள்வான்" என்பதே.

அகப்பட்டி ஆவாரைக் காணின்
மிகவும் கீழ்மையான (நாய் போன்ற) நிலைக்குத்தம்மைத்தாம் தள்ளிக்கொள்வோரைக்கண்டால்

கீழ் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும்
கயவர் (கீழ்மை பிடித்தவர்), "நாம் அவரை விடச்சிறந்தவர்" என்று பெருமிதப்பட்டுக்கொள்வார்கள்

கீழ்மையான எண்ணம் கொண்டோர் தம்மைப்போன்றே மற்றவரும் நெறிகெட்டு நடக்க வேண்டும் என்று விரும்புவார்கள். சொல்லப்போனால், தம்மை விடவும் கீழே யார் செல்வர் என்பது தான் அவர்களது விருப்பப்பாடம்.

அல்லாமல், யார் மேன்மை அடைகிறார்கள் / தாம் எப்படி மேன்மை அடையலாம் என்பதில் எல்லாம் அவருக்கு அக்கறை கிடையாது.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 6 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Nov 07, 2017 12:46 am

#1075
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது


'ஆசாரம்' தமிழ்ச்சொல்லா என்ற ஒரு ஐயம் இருந்ததால், கலாசாரம் போன்ற சொற்கள் பயன்படுத்த அச்சப்பட்டுக்கொண்டிருந்தேன்.

திருவள்ளுவர் இங்கே பயன்படுத்தி இருக்கிறார். மேலும், பின்வரும் இணையப்பக்கம் இது தமிழில் இருந்து வடக்குக்குச்சென்றதாக வகைப்படுத்துகிறது :

இந்திய மொழிகளில் உள்ள தமிழ்ச்சொற்கள் - விக்கிப்பீடியா

"கலை + ஆசாரம்" தான் "கல்ச்சர்" என்ற ஆங்கிலச்சொல்லுக்கே மூலம் என்றும் மேற்கண்ட பக்கத்தில் காண்கிறோம் Smile  

திருத்தம்:
என்றாலும், இந்த விக்கிக்கட்டுரை தவறு என்றும் ஆச்சாரம் - ஆசாரம் வடமொழிச்சொல்லே என்றும் தமிழறிஞர் ஒருவர் கூறுவதை இங்கே காணலாம்:
https://twitter.com/kryes/status/927822445159092224

ஆக, கீழ்மக்களைச் சுட்டவே இந்தச்சொல்லை வள்ளுவர் எடுத்தாடிப்பயன்படுத்தி இருக்கலாம் Smile

எப்படி இருந்தாலும், தமிழனுக்குப்"பண்பாடு" தானே அழகு Wink

அச்சமே கீழ்களது ஆசாரம்
அச்சத்தினால் தான் கயவர் (ஓரளவு) ஒழுக்கத்துடன் நடப்பார்கள்

எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது
அது போக மீதம், ஆசை உண்டானால் (அதற்காகக்) கொஞ்சம் ஒழுங்கு காட்டுவார்கள்

கீழ்மக்கள் அச்சத்தால் மட்டுமே ஒழுங்காய் நடக்க முயல்வர். அதுவல்லாமல் அவர்கள் ஒழுங்காக நடப்பதாகத் தோன்றினால், அது ஏதோ தனிப்பட்ட விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மட்டுமே இருக்கும் (பெரும்பாலும் நடிப்பாக இருக்கவும் வழியுண்டு).

பொதுவாகச் சீரற்றவரே கயவர்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 6 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Nov 07, 2017 6:23 pm

#1076
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்கலான்


கயமைக்குள்ள வரையறைகளில் ஒன்று இங்கே படிக்கிறோம் - மறைபொருளைப் பறையடிப்பது.

மற்றவரைக்குறித்துக் "கிசுகிசு"க்கள் செய்வதில் கயவர் எப்போதும் துடிப்பாக இருப்பர். பல நேரங்களில் இவ்வித வதந்திகளில் பொய்களும் கற்பனைகளும் கலந்தும் இருக்கும்.

தாம் கேட்ட மறை பிறர்க்கு உய்த்துரைக்கலான்
தாம் கேட்ட மறைத்து வைக்க வேண்டிய தகவல்களை மற்றவர்க்கு வலியச்சென்று சொல்லுவதால்

அறைபறை அன்னர் கயவர்
அடிக்கப்படும் பறை (இசைக்கருவி) போன்றவர் கயவர்

பறை அடித்து எல்லோருக்கும் செய்தி சொல்வது தொன்று தொட்டுப் பல சமுதாயங்களில் இருந்து வரும் வழக்கம். தாள ஒலிக்கருவியின் வழியே எல்லோரையும் ஈர்த்த பின்னர் சொல்ல வந்த தகவலை உரக்கச்சொல்வது தூதுவரின் வேலை. (குறிப்பாக, ஆட்சியினர் பொது மக்களுக்குத் தெரிவிக்கப் பயன்படுத்தும் முறை).

அந்த இசைக்கருவியோடு கயவரை ஒப்பிடுகிறார்.

வேறுபாடு - சொல்லக்கூடாத ஒன்றைப் பரப்பவே கயவர் முனைவர். சொல்ல வேண்டியதை அல்ல!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 6 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Nov 08, 2017 9:47 pm

#1077
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லாதவர்க்கு


"ஈரக்கையால் காக்கை ஓட்டாத" கருமித்தனம் கயவரின் இன்னொரு இயல்பு.

கிட்டத்தட்ட அதே சொற்கள் கொண்டு வள்ளுவர் இங்கே வரையறை செய்கிறார் Smile

உண்டபின் கழுவிய கையில் (ஈரக்கையில்) பொதுவாகப் பருக்கைகள் இருக்க வழியில்லை. என்றாலும், அந்தக்கையை உதறினாலும் யாருக்காவது பயன் வந்து விடுமோ என்று அஞ்சுமளவுக்குக் கருமி என்பதற்காக உயர்வு நவிற்சியாக அப்படிச்சொல்லப்படுகிறது.

"எச்சில் கையால்" என்பது இன்னொரு சொல்லாடல் - அதுவும் கருமித்தனத்தின் அடையாளமே.

ஆக, தாம் உண்டு நிறைவடைந்த பின்னர் மிச்சம் மீதி ஒட்டிக்கொண்டு இருப்பதைக்கூட மற்றவருக்கு ஈய மனமில்லாதவரே கயவர்.

கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லாதவர்க்கு
தாடையை (கன்னக்கதுப்பை) உடைக்கும்படி கையை மடக்கிக்கொண்டு வருவோர் அல்லாத மற்றவருக்கு
(முரடர் அல்லாத எளியோருக்கு)

கயவர் ஈர்ங்கை விதிரார்
கயவர் ஈர்க்கையைக்கூட உதற மாட்டார்கள்
(ஒன்றும் கொடுக்க மாட்டார்கள், கருமிகளாக நடந்து கொள்வார்கள்)

முன்னர் படித்த "அச்சத்தால் மட்டும் ஒழுங்கு போல் நடத்தல்" இங்கு மீண்டும் வருவதைக்காணலாம்.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 6 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Nov 08, 2017 11:17 pm

#1078
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்


சான்றோருக்கும் கயவருக்கும் உள்ள வேற்றுமையை முன்னிலைப்படுத்தும் செய்யுள்.

மற்றவருக்கு எந்த அளவுக்கு (அல்லது எப்போது) இந்த இரண்டு கூட்டத்தாராலும் பயன் என்பதை வேற்றுமைப்படுத்தி விளக்குகிறார். பொருள் புரிந்து கொள்வது மிக எளிதே.

சொல்லப் பயன்படுவர் சான்றோர்
சொன்ன உடனேயே சான்றோர் (நமக்குப்)பயன்படுவார்கள்
(வேண்டியது என்னவென்று சான்றோரிடம் சொன்னால் போதும், நடந்து விடும் ; அல்லது, சான்றோர் சொன்ன சொல்லுக்குக்கீழ்ப்படிவார்கள்)

கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்
(ஆலையில் அடிக்கப்படும்) கரும்பு போல நசுக்கிப்பிழிந்தால் தான் கயவர் பயன்படுவார்கள்

அழகான உவமையும் இங்கே - சாறு பிழிவதற்காக நன்றாக அடிக்கப்படும் கரும்பு.

கயவரை நையப்புடைத்தால் ஒழிய வேண்டிய செயல் நடக்காது / ஒழுங்கு இருக்காது.

முன்னர் வந்த "அச்சத்தால் மட்டும் ஆசாரம்" / "கொடிறு உடைக்கும் கைக்கு மட்டும் கொடுத்தல்" என்பனவற்றை இந்தக்குறளோடு பொருத்திக்கொள்ளலாம்.

சான்றோரிடத்தில் சொன்னவுடன் வேலை நடக்கும், பொருள் கிடைக்கும், பயனடைவோம்.

கயவரை அடித்து உதைத்தால் மட்டுமே பயனுள்ள எதுவும் நடக்கும்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 6 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Nov 09, 2017 6:21 pm

#1079
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்


கயமையின் இன்னொரு முகம் இங்கே வெளிவருகிறது - அழுக்காறு / பொறாமை & அதன் விளைவாக அவதூறு பரப்ப முயல்தல்.

யாராவது நன்றாக உண்டு, உடுத்து வாழ்வதைக்கண்டால் கயவருக்குப் பொறுக்காது. உடனே அவர்கள் தோண்டித்துருவி "எப்படி இவர்களுக்கு வாழ்வு வந்தது? ஏதாவது ஏமாற்று / குற்றம் செய்து தான் ஈன்றிருப்பார்கள்" என்று தங்களைப்போன்றே மற்றவரை எண்ணும் அழுக்கான மனநிலை. இதை அழகாகப் படம் பிடித்திருக்கும் திருக்குறள்.

பிறர் உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின்
மற்றவர்கள் (நன்றாக) உடுப்பதையும் உண்பதையும் கண்டால்

மேல் வடுக்காண வற்றாகும் கீழ்
அவர்கள் மீது (ஏதாவது) குற்றம் காண்பதற்குக் கயவர் முனைவார்கள்
(வற்றாகும் - தம் வலிமையை எல்லாம் பயன்படுத்தும்)

மிகக்கொடுமையான கயவர் தான் என்றில்லை. பொதுவாகவே சிறுமையான எண்ணங்கள் தம்மில் வளரவிடும் யாருக்கும் வரக்கூடிய குறைபாடு தான் இது.

"ஒருவன் நன்றாக வாழ்ந்தால் பொறுக்காது" என்ற பொறாமை. மற்றவருக்கு நன்மை வருகையில் கூடச்சேர்ந்து மகிழ்வது அன்பு / நல்ல பண்பு. "அவர் ஏதாவது குற்றம் செய்து நன்மை அடைந்தாரா" என்று எண்ணுவது அழுக்காறு.

உண்மையிலே குற்றவாளி தான் என்று நமக்கு நேரடியாகத் தெரிந்தாலொழிய மற்றவர் அடைந்த நன்மைகளில் அழுக்காறு கொள்தல் கீழ்மை / கயமை!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 6 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Nov 09, 2017 6:56 pm

#1080
எற்றிற்குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து


பொருட்பாலின் கடைசிக்குறள்.

கயவர் தகுதி (அல்லது தகுதி இல்லாமை) குறித்துச்சொல்கிறது. அதாவது, கீழ்மையில் உள்ளோரைக்கொண்டு என்னதான் ஆகும்?

தம்மைத்தாமே விற்று அடிமை ஆக்குவதைத் தவிர?

சாட்டையடிக்குறள்!

எற்றிற்குரியர் கயவர்?
கயவர் எதற்கு உரியவர்கள்?
(என்ன செய்யும் தகுதி படைத்தவர்கள்?)

ஒன்று உற்றக்கால்
ஒரு துன்பம் வந்து தாக்குகையில்

விற்றற்கு உரியர் விரைந்து
விரைந்து (தம்மை அடிமையாக) விற்றுப்போடுவதற்கு உரியவர் தானே?
(அல்லாமல், வேறு என்ன தகுதி இருக்கிறது?)

எந்தவிதமான திறமையோ தகுதியோ இல்லாத கீழ்மக்களுக்குத் தன்னம்பிக்கை என்று ஒன்று இருக்காது. மற்றவரை அண்டிக்காலில் விழுந்து மட்டுமே பிழைக்கும் இப்படிப்பட்டோர் துன்பம் வந்தால் தம்மையே விற்பதற்கும் தயங்க மாட்டார்கள் என்கிறார் வள்ளுவர்.

எடுத்ததெற்கெல்லாம் காலில் விழும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நினைவுக்கு வந்தால் அதற்கு வள்ளுவரோ / உரையாசிரியர்களோ அல்லது படிக்கும் நம் போன்றோரே பொறுப்பல்ல Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 6 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Nov 13, 2017 7:51 pm

#1081
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு

(காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல் அதிகாரம்)

பள்ளிக்காலத்தில் உட்படுத்தப்படாத பால்.

"அறமா, பொருளா, எது பெரிது?" என்று பட்டிமன்றமெல்லாம் நடத்தி இருக்கிறார்கள் என்றாலும் இந்தப்பால் குறித்து அக்காலத்தில் யாரும் பேசினதில்லை Wink

அதன் பின்னரும் படிக்க வாய்ப்பில்லாமல் போன கிட்டத்தட்ட 249 குறள்களை முதல்முறையாகப்படிக்கப்போகிறேன். (250-வது / 1330-வது குறள் நானும் இன்னும் பலரும் கேள்விப்பட்டிருக்கும் ஒன்று, 'ஊடுதல் காமத்திற்கின்பம்' என்று வரும் அதைப்பல இடங்களிலும் மேற்கோளாகக் கேட்டிருப்போம்).

தலைவன் தலைவிக்கிடையிலான உறவு (காமம் / இன்பம்) குறித்த "அகநானூறு" போன்ற செய்யுள்கள் என்று மேம்போக்காகத்தெரியுமே ஒழிய, உள்ளடக்கம் என்ன என்று இன்று முதல் தான் பார்க்கப்போகிறேன் Smile

முதல் அதிகாரத்தலைப்பினைப் புரிந்து கொள்ளவே அகராதிக்கு இருமுறை செல்ல வேண்டி இருக்கிறது.

தகை : பொருத்தம், தகுதி, பண்பு, அழகு என்றெல்லாம் பொருள் உள்ள சொல்

அணங்கு : 918-ஆம் குறளில் கண்ட சொல் - தெய்வமகள், மோகினி, அழகிய பெண் என்றல்லாம் பொருள் உள்ள சொல், துன்பத்தோடும் அழிவோடும் அங்கே தொடர்பு படுத்தப்பட்டது இங்கே இன்பத்தோடு பொருத்தப்படுகிறது.

உறுத்தல் : துன்புறுத்தல், தாக்குதல், பாடுபடுத்துதல் என்றெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்.

ஆக, "அழகான பெண்ணால் (அல்லது பெண்ணின் அழகால்) துன்புறுத்தப்படுதல்" என்பது இந்த அதிகாரத்தின் தலைப்பு Laughing

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ
தெய்வப்பெண்ணோ , அழகிய மயிலோ
("விண்ணில் இருந்து வந்த மோகினியோ, பறந்து வந்த மயிலோ" என்று பாடுகிறார் போலும்)

கனங்குழை மாதர்கொல்
கனமான குழை (காதணி) கொண்ட பெண் அல்லவா?

என் நெஞ்சு மாலும்
என் நெஞ்சு மயங்குகிறதே

முதன் முதலாகத் தலைவியைக் கண்ட தலைவன் அவள் அழகால் தாக்கப்பட்டு மயங்கி நிற்கும் நிலை!

வானில் இருந்து வந்த தேவதை, அழகு மயில் என்றெல்லாம் உவமித்து, காதில் உள்ள அணியை உட்படுத்தி அவன் விவரிக்கும் அழகான குறள்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 6 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Nov 14, 2017 6:14 pm

#1082
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு 
தானைக்கொண்டன்ன துடைத்து

அறம் / பொருளில் இதுவரை படித்த குறள்கள் பெரும்பாலும் "தனிக்கதைகள்" போன்றவை. (அதாவது, ஒரு குறள் அதற்கு முந்தையதன் தொடர்ச்சி என்று சொல்லும் விதத்தில் இருக்கும் தேவை இல்லை).

ஆனால், இந்தப்பாலின் தொடக்கத்திலேயே "தொடர் கதை" வடிவம் காண்கிறோம் Smile

அதாவது, இந்தக்குறள் முந்தையதன் தொடர்ச்சி போன்ற வடிவில் அமைந்திருக்கிறது. 

தலைவியின் முழுத்தோற்றத்தால் தலைவன் தாக்கப்பட்டது முதல் குறளில். அடுத்ததில், அதன் தொடர்ச்சியாக கண்களின் சந்திப்பும் - அதனால் விளையும் கூடுதல் உறுத்தல்களும் Smile

நோக்கு என்ற சொல் கொண்டுள்ள சொல் விளையாட்டு (வழக்கம் போல்) இங்கே நடக்கிறது. தோற்றம் என்ற பொருளிலும் நோட்டம் என்ற பொருளிலும் வள்ளுவர் சித்து நடத்துகிறார்.

நோக்கினாள்
(முன் குறளில் கண்ட) அழகிய தோற்றமுடைய அந்தப்பெண்

நோக்கெதிர் நோக்குதல்
என் நோட்டப்பார்வைக்கு எதிராக என்னைப்பார்த்தது

தாக்கணங்கு
தாக்கும் மோகினி
(அதாவது, தான் ஒருத்தியே ஒருவனைத் தாக்கிக் கொல்லும் வலிமை உள்ள தேவதை)

தானைக்கொண்டன்னதுடைத்து
ஒரு படையோடு வந்து தாக்குவது போன்று இருந்தது

அதிகாரத்தின் தலைப்பே தெரிவிக்கும் உண்மை இந்தக்குறள்கள் ஆணின் நோக்குநிலையில் இருந்து எழுதப்படுகின்றன. 

ஆக, ஒரு ஆடவனின் மனநிலையை அப்படியே எதிரொளிக்கும் / ஒலிக்கும் குறள் Laughing

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 6 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Nov 15, 2017 9:55 pm

#1083
பண்டறியேன் கூற்றென்பதனை இனியறிந்தேன் 
பெண்டகையால் பேரமர்க் கட்டு

கண்களால் பெண் தாக்கியது குறித்த கவிதை இரண்டடிகளில் முடிந்து விடுமா என்ன? 

வள்ளுவனே ஆனாலும் அளவோடு பாடி நிறுத்த இயலாத ஒன்றல்லவா? Laughing

ஆதலினால் அடுத்த குறளிலும் கண்களின் தாக்கம் குறித்தே தொடர்கிறார் :

பண்டறியேன் கூற்றென்பதனை
கூற்றுவனை (சாகடிக்கும் எமன் என்பவனை) முன்பு தெரியாமல் இருந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு
பெண்ணின் தன்மைகளுடன் பெரிய போர் தொடுக்கும் கண்கள் கண்டதும் 
(அல்லது, பெண்மை கொண்ட பெரு விழிகளின் போர்த்தாக்குதலால்) 

இனியறிந்தேன்
இப்போது தெரிந்து கொண்டேன்

ஆக, நூற்றுக்கணக்கில் தமிழ்க்கவிஞர்கள் அன்றும் இன்றும் எழுதும் "கொல்லும் கண்கள் கொண்ட பெண்" என்பது திருக்குறளையும் விட்டு வைக்கவில்லை!

மொத்தத்தில் ஆணின் மனதைக்கொன்றொழிக்கும் வலிமை பெண்ணின் கண்களுக்கு உண்டு என்ற சிறிய உண்மையைப் படம் பிடிக்கும் பாடல்.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 6 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Nov 16, 2017 8:06 pm

#1084
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் 
பேதைக்கு அமர்த்தன கண்

பெண் கண்களின் "உறுத்தல்" அடுத்த குறளிலும் தொடர்கிறது. 

"கண்கள் உள்ளத்தின் சாளரங்கள்" என்பதால் மற்ற உடல் உறுப்புகளை விடவும் மானிட உறவுகளில் அவற்றின் பங்களிப்பு மிகக்கூடுதல். 

குறிப்பாக, ஆண்-பெண் அறிமுகம் நடக்கும் நேரத்தில், இனி வரவிருக்கும் உறவின் மீது பேரளவில் தாக்குதல் செய்வன கண்களே என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

சும்மா அல்ல வள்ளுவர் அவை குறித்து எழுதித் தள்ளிக்கொண்டிருப்பது Smile

தலைவியின் கண்களால் தாக்குண்ட தலைவன் இங்கே குழம்பிப்போகிறான். அதாவது, பெண்மை (அன்பு போன்ற நல்ல தன்மைகள்) மிஞ்சும் அதே கண்கள் உயிரைக் கொல்வனவாக மாறும் மாயம் எப்படி என்று Laughing

பெண்டகைப்பேதைக்கு
பெண்மையின் தன்மைகள் மிகுந்த இந்தப்பேதைப் பெண்ணுக்கு
(அதாவது, யாருக்கும் துன்பம் தராத / அச்சுறுத்தாத தன்மை)

கண் கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால்
கண்களோ பார்ப்பவரின் உயிரை உண்டு விடும் (கொன்று விடும்) ஆற்றல் / தோற்றம் கொண்டிருப்பதால்

அமர்த்தன 
மாறுபாடு செய்தன

பார்ப்பதற்கு இந்தப்பெண் மென்மையாய் இருந்து என்ன செய்ய? அவளது கண்கள் தாம்  வாள் போல் கொல்லுகின்றனவே?

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 6 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Nov 17, 2017 9:16 pm

#1085
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து


பெண் கண்ணின் வழிபாட்டை அடுத்த குறளிலும் வள்ளுவர் தொடர்கிறார் Wink

முன் குறளில் ஒன்றுக்கொன்று மாறுபடும் இரு தன்மைகள் (மென்மை / கொல்லும் வன்மை) குறித்த குழப்பம் கண்டோம். இங்கு இன்னொரு எண்ணைக்கூட்டுகிறார்.

முன்பு பல அதிகாரங்களிலும் செய்து கொண்டிருந்த அதே உத்தி (2, 3, 4 என்று பட்டியல் இடுதல்) இங்கே பெண்களின் கண்களுக்கும் நடக்கிறது Smile

கூற்றமோ
கொல்லும் கூற்றுவனோ?
(எமனோ?)

கண்ணோ
மென்மையான பெண்ணின் கண்ணோ?
(கண்ணோட்டம் / பரிவு கொண்டு என்னைப்பார்க்கும் கண்ணோ?)

பிணையோ
மருட்சியுடன் (அச்சத்துடன்) சுழலும் பெண் மானோ
(மான் விழி என்று பெண் கண்கள் சொல்லப்படுவது தெரியாதவர் யாரும் இதைப்படிக்க வழியில்லை)

மடவரல் நோக்கமிம் மூன்றும் உடைத்து
(இந்தப்) பெண்ணின் பார்வை இந்த மூன்றையும் ஒருங்கே கொண்டிருக்கிறதே!

"மடவரல்" என்றால் பெண் என்கிறது அகராதி. (யாராவது ஒரு பெண்ணை "ஏ மடவரலே" என்று அழைத்துப்பார்க்க வேண்டும் Laughing )

பெண்ணின் கண்களைக் கண்டவுடனே கவிகளுக்குக் கற்பனை புரண்டோடும் என்பது தொன்று தொட்டுக்கண்டு வருவது தான். வள்ளுவர் மட்டும் என்ன விதிவிலக்கா?

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 6 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Nov 20, 2017 9:14 pm

#1086
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் 
செய்யலமன் இவள் கண்

கண் உறுத்தும் ஐந்தாவது குறள்!

அதாவது, "அணங்கு" உறுத்துவதாக எழுத நினைத்த வள்ளுவர் பாதி நேரம் அவளது கண்கள் குறித்தே பாடிக்கொண்டிருக்கிறார் Smile

பெண்ணின் கண்களது வலிமையை இதை விடவும் மேலாகத் தெரிவிக்க முடியுமா?

இந்தச்செய்யுளில் அவளது கண்கள் இவரை நடுநடுங்க வைத்து விட்டதாகப்புலம்புகிறார். அதை எப்படியாவது மறைக்க முயல்கிறார். (வளைந்திருக்கும் புருவங்கள் நேராகி, விழிகள் திறக்க முடியாமல் மறைக்க வேண்டுமாம்! என்ன ஒரு கற்பனை!)

இவள் கொடும்புருவம் கோடா மறைப்பின்
வளைந்திருக்கும் இவளது புருவம் (அப்படி இல்லாமல்) நேராக இருந்து மறைத்தால் 

கண் நடுங்கஞர் செய்யலமன்
அந்தக்கண்கள் நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்ய முடியாதே!
(அஞர் = துன்புறுத்தல்)

பெண்கள் விழிகளைத் திறந்தாலே எதிரில் உள்ள ஆடவருக்கு உறுத்தல் / துன்பம் / தொடை நடுக்கம் தான் Smile

அவளது புருவங்கள் நேராகிக் கண்களைக் கட்டினால் தேவலை...

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 6 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Nov 21, 2017 7:15 pm

#1087
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் 
படாஅ முலைமேல் துகில்


ஐந்து குறள்களில் கண்களைப்படம் பிடித்த பின் வள்ளுவருடைய குறும்புப்பார்வை பெண்ணின் கழுத்துக்குக் கீழே இறங்குகிறது Embarassed

கண்களுக்கு அடுத்துப் பெண்ணைக்கண்டவுடன் ஆணைக்கவரும் உடல் உறுப்பை வள்ளுவர் இந்தக்குறளில் படம் பிடிக்கிறார். 

சொல்லப்போனால் எந்த நாட்டினர் / உடையினர் என்றாலும் ஒருவரைப் பெண் என்று உடனே அடையாளம் காண்பது மார்பு வடிவு கண்டு தான். அதை உவமையோடு சொல்லி வைக்கும் குறள்.

படாஅ / கடாஅ என்று எதுகையோடு அளபெடையும் கூட்டி இங்கே ஓசை நயம் கொண்டு வருகிறார். இந்த இரண்டு சொற்களுக்கும் பொருள் தேடிக்கண்டு பிடிக்க வேண்டி இருக்கிறது.

படாஅ - சாயாத / சரியாத / நிமிர்ந்து நிற்கும் / எடுப்பான (என்றெல்லாம் முலையின் தோற்றம் குறித்த விவரிப்பு)
கடாஅ -  யானையின் மதம்படு துளை / மத நீர் (ஆகவே, கடாஅக்களிறு  = மதங்கொண்ட யானை)

மாதர் படாஅ முலைமேல் துகில்
பெண்ணின் சாயாத முலை மீதிருக்கும் துகில் (ஆடை)

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம்
மதங்கொண்ட (போர்) யானையின் மீதுள்ள கண்ணை மறைக்கும் முகபடாம் போல் (உள்ளது)

மிகவும் வேறுபட்ட ஒரு கற்பனை தான். 

எடுப்பான தோற்றம் என்று சொல்ல வருகிறார் என்று புரிகிறது. என்றாலும் ரெண்டையும் அவரது மூளை எப்படி ஒப்பிட்டது / உவமையாக்கியது என்று புரிந்து கொள்வது கடினமே Laughing

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 6 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Nov 22, 2017 7:32 pm

#1088
ஒண்ணுதற்கோஒ உடைந்ததே ஞாட்பினுள் 
நண்ணாரும் உட்குமென் பீடு

வள்ளுவரை வீழ்த்திய பெண்ணின் நெற்றியழகைச் சொல்லும் பாடல் அடுத்து.

எதிரொளியின் விளைவாகப் பளபளப்பாக மினுங்கும் உடலுறுப்பு நெற்றி என்பதால் "ஒள் நுதல்" (ஒளி மிக்க நெற்றி) என்று வருவதாகக் கொள்ளலாம். ஆக, அணங்கின் அழகான நெற்றி எப்படி ஒரு போர் வீரனையும் வீழ்த்தும் திறனுள்ளது என்று விளக்கும் செய்யுள் Wink

ஒண்ணுதல் / நண்ணார் என்று எதுகைச்சுவை இருந்தாலும் ஆக மொத்தம் கரடுமுரடாக இருப்பதாக எனக்குத்தோன்றுகிறது. ஞாட்பு / உட்கு / பீடு என்று வல்லினங்கள் வருவதால் இருக்கலாம். அல்லது பெண்ணின் நெற்றியிலிருந்து போர்க்களத்துக்குத் தாவியதால் இருக்கலாம்.

ஞாட்பு - போர்க்களம் 
நண்ணார் - எதிரிகள் / பகைவர் 
(இரண்டு சொற்களுக்கும் அகராதி இந்தக்குறளை மேற்கோள் காட்டுவது குறிப்பிடத்தக்கது)

ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு
போர்க்களத்தில் பகைவரும் அஞ்சத்தக்க (உள்ளே கலங்கத்தக்க) என் வலிமை

ஒண்ணுதற்கோஒ உடைந்ததே
ஒளி மிக்க உன் நெற்றியைக்கண்டதும் நீங்கிப்போனதே

"எவ்வளவு வலிமை மிக்கவனும் உன் அழகில் தோற்று விடுவான்" என்று பொருள் Wink

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 6 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Nov 27, 2017 10:16 pm

#1089
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு 
அணியெவனோ ஏதில தந்து

உடல் உறுப்புகளில் இருந்து மீண்டு, முழுத்தோற்றமும் பண்புகளும் குறித்த அக்கறை தலைவனுக்கு மறுபடியும் இந்தக்குறளில் (ஒரு வழியாக) வருகிறது.

அதாவது, தொன்று தொட்டே பெண்களில் விரும்பத்தக்க பண்புகள் எனச்சொல்லப்படும்  "அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு" என்பன இங்கே தலையெடுக்கின்றன.

மானைப்போன்ற மருண்ட பார்வை (மட நோக்கு) என்கிறார். மென்மையான தன்மை என்றும் கொள்ளலாம். அதோடு சேர்த்துச்சொல்லப்படும் பண்பு நாணம் (இயல்பாகத் தோன்றும் வெட்கம் - தீமை செய்வதால் வருவதல்ல).

இந்த அதிகாரத்தில் இதுவரை பார்த்து வியந்து கொண்டிருந்த பெண்ணிடம் இவை இரண்டும்  அணிகலன்கள் போல் குடியிருப்பதாக இங்கே படிக்கிறோம். கூடவே, தேவையில்லாத / வெளிப்படையான நகைகள் (அணிகலன்கள்) இவளுக்கு எதற்கு என்ற கருத்தும். மிக அழகு!

ஒருவருக்கு உண்மையான அணிகள் அவரது பண்புகளே! (பெண்ணென்றாலும் ஆணென்றாலும்! வெளிப்படையான ஆடை / அணிகள் கொண்டு மட்டும் ஒருவருக்கு மதிப்புத்தருவது அறிவீனம்).

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
மான் போன்ற மருண்ட / மென்மையான பார்வையும் நாணமும் கொண்ட இவளுக்கு 

ஏதில அணியெவனோ தந்து
வேண்டாத அணிகளை ஏன் தந்திருக்கிறார்கள்?

அவை தேவையில்லை என்பது மட்டுமல்ல, அவளது அழகுக்கு எதிர் என்பது போன்ற கருத்து இங்கே இருக்கிறது. 

ஏதிலார் என்ற சொல் பகைவருக்கும் பரத்தையருக்கும் பயன்படுத்துவது என்பதை நினைவில் கொள்ளலாம். ஆக, இந்தப்பெண்மணிக்கு மென்மையும் நாணமும் நகைகளாக இருக்கையில் கழுத்து / கை / கால் / காது இங்கெல்லாம் பொன்னும் மணியும் வேண்டியதில்லை.

இது ஒரு விதத்தில் வஞ்சப்புகழ்ச்சி போன்ற முகச்சுளிப்பு Wink

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 6 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Nov 27, 2017 10:54 pm

#1090
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று


"அடு நறா" என்றால் "அடுப்பில் காய்ச்சிய கள்" என்று பொருள் படிக்கிறோம்.

நறா / நறவு என்னும் சொற்களுக்குத் தேன் என்றும் கள் என்றும் அகராதி பொருள் சொல்கிறது.

அதை இங்கே காமத்தோடு ஒப்பிடுகிறார். (அன்றும் இன்றும் இவை இரண்டும் ஒன்றோடொன்று ஒப்பிடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல வகையிலும் அல்லாத வகையிலும் Laughing )

எதனால் கூடுதல் தாக்குதல் என்பது தெரிந்ததே Wink காமம் - அது எங்கும் / எப்போது வேண்டுமானாலும் நம்மைத்தாக்கவல்லது!

கள் அப்படியல்ல, அதை மெனக்கெட்டுப் பருகியால் தான் தாக்குதல். அல்லாதவர்களுக்கு அதனால் எந்த விளைவும் இல்லை - இந்த உண்மையை இங்கே ஒன்றோடொன்று ஒப்பிடல் வழியே நமக்கு நினைவு படுத்துகிறார் வள்ளுவர்!

அடுநறா உண்டார்கண் மகிழ்செய்தல் அல்லது
காய்ச்சிய கள் அதை உண்டவர்க்கு மட்டுமே இன்பம் தரும் - அல்லாமல்

காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று
காமத்தைப்போல் கண்டவர்க்கே இன்பம் தரவல்லது அன்று

இங்கே கண்டார் / காண்பவர் என்பது முகக்கண்ணால் மட்டுமல்ல அகக்கண்ணால் பார்ப்பவருக்கும் தான் என்று நான் சொல்லத்தேவையில்லை Laughing

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 6 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Nov 28, 2017 8:00 pm

#1091
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன்றந்நோய் மருந்து

(காமத்துப்பால், களவியல், குறிப்பறிதல் அதிகாரம்)

குறிப்பறிதல் - இதில் தலைவன் / தலைவி பழகும்போது இரண்டு பகுதிகள் உண்டு Wink

அதாவது 1. வாயால் பேசாமலேயே அறிவித்தல் 2. அதை அறிதல் / புரிந்து கொள்ளுதல்.

அன்றும் இன்றும் காதலர்கள் செய்திகளைப்பகர்ந்து கொள்ள சொற்களைக்காட்டிலும் கண்களின் குறிப்புகளையே பேரளவில் நம்புகிறார்கள் (அப்போது தானே மூன்றாவது ஆளுக்குத் தெரியாமல் பரிமாற்றம் எளிதாக நடத்த முடியும்?)

ஆக, முன் அதிகாரத்தில் பெண்ணைக்கண்டு "உறுத்தப்பட்ட" ஆண் காதலில் வீழ்ந்து விட்டான் என்பது வெளிப்படை. இப்போது, அவளது கண்கள் (அல்லது உடல்மொழி) வெளியிடும் குறிப்புகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறான் Smile

உண்கண் என்றால் மையெழுதிய கண்ணாம். மற்றபடி இந்தக்குறளின் பொருள் நேரடியானது - புரிந்து கொள்ள எளிது.

இருநோக்கு இவளுண்கண் உள்ளது
மையெழுதிய இவளது கண்ணில் இருவகையான நோக்கு / பார்வை உள்ளது

ஒருநோக்கு நோய்நோக்கு
ஒன்று (காதல்) நோயை உண்டாக்கும் நோக்கு
(ஆணை உறுத்தும் / துன்புறுத்தும் நோக்கு என்கிறார்)

ஒன்றந்நோய் மருந்து
இன்னொன்று அந்த நோய்க்கான மருந்து
("கவலைப்படாதே, நான் உன்னை விரும்புகிறேன்" என்று குறிப்பால் உணர்த்தி அந்த நோயைத்தணிக்கும் பார்வை இது)

இரண்டையும் வேறுபடுத்தி, சரியாகப் புரிந்து கொள்ளுதல் தானுங்க "குறிப்பறிதல்"
Laughing

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 6 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Nov 29, 2017 7:19 pm

#1092
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் 
செம்பாகம் அன்று பெரிது

(இந்நாள் மற்றும் முன்னாள்) காதலர்களுக்கு மிகச்சுவையான குறள் Wink

கள்ளத்தனமான சிறு பார்வை (அல்லது உள்ளத்தைக்களவாடும் கூர்மையான நோக்கு)  - இமைப்பொழுதே ஆனாலும் அதன் விலை பெரிது! 

இது (காதல்வயப்பட்டிருக்கும்) ஒருவனுக்கு எவ்வளவு இன்பத்தைக்கொடுக்கும் என்பது சொல்ல வேண்டியதில்லை. அதை வள்ளுவர் அழகாகச் செய்யுள் வடிவில் இங்கே தருகிறார்.

கண் களவு கொள்ளும் சிறுநோக்கம்
கண்ணால் களவு செய்யும் அந்தச் சிறு பார்வை
(அல்லது, கள்ளத்தனமாய் சட்டென்று என்னைப்பார்க்கும் அந்தப்பார்வை)

காமத்தில் பெரிது செம்பாகம் அன்று 
காமத்தில் பெரும்பங்கு கொள்வதாகும் - வெறும் பாதிப்பங்கு அல்ல 

செம்பாகம் - இதை எப்படி அரைப்பங்கு / பாதி என்று சொல்கிறோம்? 

செம்மையான (நேர்மையான) பாகம் - ஒரு பக்கம் கூடுதலோ குறைந்தோ போகாமல் ஒரே போல் இருக்க வேண்டும். அதனால், சரி பாதி Smile

களவு கொள்ளும் பார்வைக்குத் தான் காமத்தில் பெரும்பங்கு. அப்படியிருக்க அதற்கு வெறும் அரைப்பங்கு எப்படிக்கொடுப்பது என்று வள்ளுவர் கணக்குப்போடுகிறார் Laughing

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 6 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Nov 30, 2017 7:43 pm

#1093
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்


உயிர் வாழ நீர் இன்றியமையாத ஒன்று. பயிர் வளரவும் தான்.

அதை உவமையாகக் கொண்டு தலைவன்-தலைவியின் காதல் / அன்பான உறவு எனும் பயிருக்கு என்ன நீர் ஊற்ற வேண்டும் என்று காண்பிக்கும் குறள் Wink

வேறென்ன, கண் பார்வை தான்! "பார்வை ஒன்று போதும், பல்லாயிரம் சொல் வேண்டாம்" என்று திரைப்படப்பாடலில் கவிஞர் மிக அழகாக எழுதினது நினைவுக்கு வரலாம்.

சில புதிய சொற்கள் (அல்லது அறிந்த சொற்களுக்குப் புதுப்பொருள்கள்) இங்கே படிக்கிறோம்.

இறைஞ்சி - தாழ்ந்து, குனிந்து, கீழாகி
யாப்பு - அன்பு (பொதுவாக இது இணைப்பு, சேர்ப்பு என்ற பொருளில். இங்கே உறவு, அன்பு, பிணைப்பு என்றெல்லாம் கொள்ளலாம்)
அட்டுதல் - ஊற்றுதல் / வார்த்தல்

கடந்த செய்யுளில் பார்த்த களவுப்பார்வையின் தொடர்ச்சி இக்குறள் என்றும் சொல்லலாம் Wink

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள்
(கள்ளத்தனமாக என்னை) நோக்கினாள்! பின்னர் (என் கண்கள் அவள் கண்களைச் சந்தித்ததும்) பார்வையைக் கீழே இறக்கினாள்

அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர்
அதுவே அவள் எங்களது அன்பான உறவு(எனும் பயிரு)க்கு ஊற்றிய நீர்

நேரடியாகப் பயிர் என்று சொல்லாமலே யாப்பினை அவ்விதமாக உருவகப்படுத்தி விடுகிறார்.

சொல்லப்போனால், இந்த உறவு சிறிய ஒரு பயிர் அல்ல. (சில மாதங்கள் மட்டும் வளர்ந்து நிறைவடைந்து பின்னர் அழியும் பயிர் போன்றதல்ல). மரம் போல் நெடுநாள் வாழப்போவது.

அப்படியாக, மரத்துக்கு நீர் ஊற்றுதல் இங்கு உவமை என்று கொள்ளலாம்.

நீடூழி வாழப்போகும் அன்பான உறவுக்கு அவளது பார்வையும், அதோடு கூடிய நாணமும் தான் உயிர் கொடுக்கும் தண்ணீர்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 6 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Dec 01, 2017 6:52 pm

#1094
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்


என்ன ஒரு அழகான காட்சி இந்தக்குறளில்!

காதல் வயப்பட்ட இருவர் இக்காட்சியில். இன்னும் பேச்சுப்பரிமாற்றம் அளவுக்கு ஆகவில்லை. அப்படிப்பட்ட சூழலில் கண்களின் மொழி மட்டுமே. சுற்றும் உள்ளவர் அறியாமல் "குறிப்பறிதல்" மொழியில் காதலை வளர்த்துக்கொண்டிருக்கும் இவர்களது நிலை எவ்வளவு அழகாக இங்கே!

(முற்காலத்)தமிழர் பண்பாட்டில் பெண்களுக்கே நாணம். தயங்கித்தயங்கி, ஆண் பார்க்காத போது மட்டும் அவனைப்பார்த்து மகிழ்வது இதன் ஒரு கூறு. (ஆண் அப்படி அல்ல, ஒரு நாணமும் இன்றி விழுங்குவது போல் பார்ப்பவன் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே).

அப்படிப்பட்ட ஒரு அருமையான சூழலை இங்கே ஆணின் (அதாவது, தனது) பார்வையில் எழுதுகிறார் வள்ளுவர்!

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்
நான் அவளைப்பார்க்கையில் அவள் (நாணத்துடன் தலைகுனிந்து) நிலத்தை நோக்குவாள்

நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்
(ஆனால் நான் அவளைப்) பார்க்காத போது என்னைப்பார்த்து மெல்லச் சிரித்து மகிழுவாள்

சொல்லப்போனால் அவள் தன்னைப்பார்ப்பது காதலினால் தான் என்பது இவனது கற்பனையாகக்கூட இருக்கலாம். கண்கள் ஒன்றை ஒன்று சந்திப்பது கூட முழுமையாக இல்லை. மிகச்சிறிது நேரம் மட்டுமே - மின்னல் போல், மின்சாரத்தாக்குதல் போல்.

அவள் குறிப்பறிதல் மொழியில் அல்லாமல் இன்னும் இவனிடம் பேசவில்லை என்பதே தற்போதைய சூழல்.

என்றாலும் மனதில் பட்டாம்பூச்சிகள் இருவருக்கும் பறந்து கொண்டிருக்கின்றன.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 6 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Dec 04, 2017 9:49 pm

#1095
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்


அறிமுகம் இல்லாத எதிர்பாலரை நேருக்கு நேர் கண்களால் ஒருவருக்கொருவர் பார்ப்பது என்பது முற்காலங்களில் (அதாவது நானறிந்து 30 ஆண்டுகளுக்கு முன்னால்) அரிது.

ஆண்கள் சில நேரங்களில் பெண்களைக் கூர்மையாக, விழுங்குவது போல் பார்ப்பது உண்டென்றாலும் பெண்கள் திரும்பிப்பார்ப்பது , முறுவல் செய்வது எல்லாம் அரும்பெரும் பரிசு கிட்டியது போன்ற நிகழ்வுகள்.

கிட்டத்தட்ட அத்தகைய சூழல் வள்ளுவர் காலத்திலும் இருந்திருக்கிறது என்று உணர்த்தும் திருக்குறள் இது Laughing

நேரடியாகப்பார்க்காமல் ஒரு பெண் சுருங்கிய கண்ணால் பார்த்துக் குறுகுறுப்படைகிறாள் (அல்லது அவள் நகுந்து மகிழ்வதாக இவன் எண்ணிக்கொள்கிறான்).

குறிக்கொண்டு நோக்காமை அல்லால்
(என்னை அவள் நேரடியாகக்) குறிக்கொண்டு / கூர்மையாகப் பார்க்கும் தன்மை இல்லாமல்

ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும்
ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக்கொண்டது போல் (என்னைப்பார்த்து) மகிழ்ந்து கொள்வாள்

இரு கண்களும் சந்திக்கும் பொழுதுகள் தான் காதலின் தொடக்கத்தில் சிறகடித்துப் பறக்க வைக்கும் நிகழ்வுகள். அதற்காக இருவரும் தவம் இருப்பார்கள் என்றாலும் இயல்பாக உள்ள தயக்கம் / நாணம் எல்லாம் சேர்ந்து நேருக்கு நேர் பார்க்க விடாமல் செய்யும்!

அந்த உறுத்தல் சிறப்பானதே.

பெண் இங்கே அந்நிலையில் இருந்து அடுத்த நிலைக்குச் செல்ல இருக்கிறாள் - அதாவது, கண்ணைச்சுருக்கிக்கொண்டு பார்ப்பதன் வழியாக இங்கே "நான் உன் ஆள் தான்" என்ற குறிப்பறிவித்தல் நடக்கிறது என்று கொள்ளலாம் Wink


app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 6 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Dec 05, 2017 5:55 pm

#1096
உறாஅதவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப்படும்


வெளியில் உறவில்லாதது போல் காட்டிக்கொள்ளுதல், உள்ளே ஏங்குதல் - காதலில் வீழ்ந்திருக்கும் பெண் இவ்வாறு தான் நடந்து கொள்வாள் என்று சொல்லும் குறள்.

நடைமுறை உண்மை தான் - ஆனால் அப்படிப்பட்ட நிலைமை ஏன் என்று கொஞ்சம் ஆராய வேண்டியிருக்கிறது.

அன்றும் இன்றும் தமிழ்ச்சூழல் காதலர்களுக்குக் கடினமாகவே இருந்து வந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாமா? குறிப்பாகப் பெண்கள் தமது காதலை வெளிப்படையாகச் சொல்லிவிட முடியாமல் அச்சத்துடன் நடிக்க வேண்டிய சூழல் உருவாக்கிய ஆணாதிக்கச் சமுதாயம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

அல்லது இப்படியும் எடுத்துக்கொள்ளலாம் - "ஆண்களுக்குப் போக்குக்காட்டி விளையாடுவது பெண்களுக்கு மிகப்பிடித்தமானது".

இப்படிச் சமுதாயம் குறித்த ஆய்வு செய்யத்தூண்டும் பாடல்!

உறாஅதவர்போல் சொலினும்
உறவில்லாதவர் போன்று ("நான் உன் காதலி அல்ல" என்ற ஒலியில், வெளிப்பார்வைக்குக்) கடுமையான சொல் கூறினாலும்

ஒல்லை செறாஅர் சொல் உணரப்படும்
அது பகைமையுடன் சொல்லப்பட்டதல்ல என்று விரைவிலேயே உணரப்படும்
(செறுத்தல் - அடக்குதல் / தடுத்தல் / பகைத்தல்)

எப்படி ஐயா "ஒல்லை (விரைவில்) உணரப்படும்"? அங்கே தான் "குறிப்பறிதல்" வருகிறது. அதாவது, கண்கள் மற்றும் உடல்மொழி உண்மையைப் பேசி விடும்.

ஆக, வாய்மொழியாக வரும் சொற்கள் "யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?" என்பது போன்று ஓரளவுக்குக் கடுமையும், உறவின்மையும் காட்டினாலும், கண்களில் பொங்கி வரும் காதல் உள்ளத்தில் என்ன உள்ளது என்பதைத் தெரிவித்து விடும் என்கிறார்.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 6 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Dec 06, 2017 11:32 pm

#1097
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு


சென்ற குறளுக்குத் தலைகீழ் இந்தக்குறள் Smile

இதன் வழியாக அவர் சொல்ல வருவது இப்போது தெளிவாகத்தெரிகிறது. நகைச்சுவையாகச் சொல்ல வேண்டுமென்றால், "காதல்வயப்பட்ட பெண் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் வகை" Laughing

பொருள் பார்ப்பது எளிதே :

செற்றார்போல் நோக்கும் செறாஅச் சிறுசொல்லும்
பகைவர் போன்று நோக்கினாலும் (அதோடு வரும்) பகைமை இல்லாத சிறு சொல்லும் (கூட்டினால்)

உறாஅர்போன்று உற்றார் குறிப்பு
உறவில்லாதது போல் நடித்து "உறவு தான்" என்று குறிப்புணர்த்துதல் என்று அறியலாம்

குறைந்தது "அவள் அப்படித்தான்" என்று தலைவன் புரிந்து கொள்கிறான்.

சரியாக இருக்கும் என்று நம்புவோம் Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 6 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 16 Previous  1 ... 5, 6, 7 ... 11 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum