குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Page 33 of 40 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 36 ... 40  Next

View previous topic View next topic Go down

Re: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Post  app_engine on Mon Oct 03, 2016 5:21 pm

#764
அழிவின்றி அறைபோகாதாகி வழிவந்த
வன்கணதுவே படை


மெல்ல மெல்ல நல்ல படையின் வரையறைக்கு வருகிறார் வள்ளுவர், அதிகாரத்தின் நான்காவது குறளில்.

சிறந்த படைக்கான மூன்று பண்புகள் இங்கே.

1. எளிதில் அழிக்க முடியாதது
2. வஞ்சனைக்கு இடமளிக்காதது
(அறை என்றால் வஞ்சனை என்று முன்னமேயே பார்த்திருக்கிறோம் என்று நினைவு)
3. உறுதியும் வீரமும் வாழையடி வாழையாகத் தொடர்ந்து கொண்டிருப்பது

அவ்விதத்தில், நேரடியான பொருள் உள்ள எளிய குறள்!

அழிவின்றி
அழிவு இல்லாமல்
(வெல்ல முடியாத வலிமை உள்ளதாக என்று கொள்ளலாம்)

அறைபோகாதாகி
வஞ்சிக்க முடியாததாய்

வழிவந்த வன்கணதுவே படை
வழி வழியாக உறுதியுடன் நிற்பது தான் சிறந்த படை
(பல தலைமுறைகளாக / தொன்று தொட்டு என்றெல்லாம் "வழி" என்ற சொல்லுக்குப் பொருள் கொள்ள இயலும்)

app_engine

Posts : 7594
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Post  app_engine on Mon Oct 03, 2016 9:59 pm

#765
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் 
ஆற்றலதுவே படை

கூற்று(வன்) என்ற சொல் இதற்கு முன் பார்த்திருக்கிறோமா என்று நினைவில்லை. (கூற்றுவன் = எமன், உயிரை நீக்கும் கடவுளாகப் புராணங்களில் சொல்லப்படுபவன்)

முன்பு பார்த்திருந்தாலும் இல்லாவிட்டாலும் , இங்கே எமன் இருப்பதால் அத்தகைய நம்பிக்கை வள்ளுவருக்கு (அல்லது அவரது காலத்தவருக்கு) இருந்தது என்பதற்கு இக்குறள் ஒரு சான்று! 

"அவனை எதிர்க்க மானிடரால் இயலாது, எப்படியும் உயிர் போகத்தான் வேண்டும்" என்ற நம்பிக்கையின் அடிப்படையில், அவனையும் எதிர்த்துப் போராடும் மன ஆற்றல் உள்ளது தான் சிறந்த படை என்று அணி நயத்தோடு சொல்கிறார். 
(உயர்வு நவிற்சியா இல்பொருளா என்பது அவரவர் நம்பிக்கை அடிப்படையில்! எமன் என்று ஒருவன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், சாவு என்பது உள்ள ஒன்றல்லவா? அதை எதிர்க்க யாரால் முடியும்?)

கூற்றுடன்று மேல்வரினும்
கூற்றுவன் / எமன் சினமடைந்து தன் மேல் படையெடுத்தாலும் 
(உடன்று = சினந்து)

கூடி எதிர்நிற்கும்
ஒன்று சேர்ந்து எதிர்த்துப்போரிடும் 

ஆற்றலதுவே படை
ஆற்றல் உள்ளது தான் (சிறப்பான) படை 

சாவுக்கு அஞ்சினால் படையில் வேலை செய்ய முடியாது. படையினர் எல்லோரும் ஒன்று கூடி "சாவு"  கொண்டு வரும் எதற்கும் எதிராகப் போராடும் திறன் கொண்டிருக்க வேண்டும் என்கிறார்.

app_engine

Posts : 7594
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Post  app_engine on Tue Oct 04, 2016 7:23 pm

#766
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் 
எனநான்கே ஏமம் படைக்கு

வழிச்செலவு Laughing
(கையில காசு இருக்கா?)

படிக்கத்தெரியாமல் படித்தால் இப்படியெல்லாம் குழப்பம் வரலாம்.

"மாண்ட வழிச்செலவு" = மாட்சிமையான வழியில் செல்வது

ஏமம் என்ற சொல்லுக்குப் பல பொருட்கள் இருந்தாலும், பாதுகாப்பு / காவல் என்பதே இங்கு பொருத்தமாகத் தோன்றுகிறது. 

அப்படியாக, காவல் காக்கும் படைக்கு என்னவெல்லாம் காவல்? 

மறமானம்
மறம் (வீரம்), மானம் (தன்மான உணர்வு)

மாண்ட வழிச்செலவு தேற்றம்
மாட்சிமை பொருந்திய வழியிலான நடத்தை, (நம்பகமான படை என்ற) மன்னனின் தெளிவு 

எனநான்கே ஏமம் படைக்கு
என்ற நான்கு தான் ஒரு படைக்குப் பாதுகாப்பு!

வீரம் / மானம் / தலைவனின் நம்பிக்கை என்ற மற்ற எல்லாம் இருந்தாலும், சிறந்த வழியிலான நடத்தை இல்லாத படை அழிவை அடையும் என்று சொல்ல வருகிறார்.

app_engine

Posts : 7594
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Post  app_engine on Wed Oct 05, 2016 11:19 pm

#767
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த 
போர்தாங்கும் தன்மை அறிந்து

படிக்கக்கடினமான குறள். 

உரைகளும் விதவிதமாக இருப்பதால் குழப்புகின்றன.

ஒவ்வொன்றாக அருஞ்சொற்பொருள் பார்த்துப் பொழிப்புரை செய்து பார்க்கலாம்.

தானை = படை 

போர் தாங்கும் தன்மை = போரில் தற்காக்கும் / தடுக்கும் / தாங்கிக்கொண்டு போராடும் திறமை 

தலைவந்த = மீது வந்த / முன்னால் வந்த

தார் - இங்கே தான் குழப்பம் வருகிறது. இதற்குப்பல பொருட்கள், ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. மாலை, பூ-பூங்கொத்த என்பதில் இருந்து படை, கொடிப்படை என்றெல்லாம்.

அப்படியாக, "தார் தாங்கி" என்பதை "வெற்றி மாலை தாங்கி"  என்று கூட விளக்கம் சொல்கிறார்கள் Smile 

இங்கே இன்னொரு பழைய செய்யுளின் விளக்கம் இருக்கிறது, அதில் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்:
http://www.tamilvu.org/slet/l41C7/l41C7aru.jsp?n=3977
தார்தாங்கி - தார் - தற்காத்தலின் போர்த்துறைக்குரிய காஞ்சி - நொச்சி முதலிய போர்மாலை

குறளின் மீதிப்பகுதியோடு இது நன்கு பொருந்துவதைப் பார்க்க முடிகிறது.

குறிப்பிட்ட மலர்களால் ஆன போர்மாலை அணிந்து செல்லும் படையினர் "தற்காப்பில் சிறந்தவர்" என்ற அடையாளத்தவர்!

தலைவந்த  போர்தாங்கும் தன்மை அறிந்து
முன் வரும் போரினைத் தடுக்கும் தன்மை அறிந்தவரே 

தார்தாங்கிச்செல்வது தானை
(தடுத்தல் / தற்காத்தல் என்பதற்குரிய) போர்மாலை அணிந்து செல்லும் படையினர் ஆவார்கள்

app_engine

Posts : 7594
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Post  app_engine on Thu Oct 06, 2016 7:56 pm

#768
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்


நமக்கு நன்றாகத் தெரிந்த சொற்கள் என்றாலும் சில இங்கே பயன்படுத்தப்பட்டிருப்பது நன்றாகத் தெரியாத பொருளில் Smile

எடுத்துக்காட்டாக, "பாடு" பெயர்ச்சொல்லாக வந்தால் உடனே "பட்ட பாடு / துன்பம்" என்று தோன்றும். வினைச்சொல்லின் பொருள் நமக்குத்தெரியும் என்றாலும் அதனோடு சேர்ந்த "பெருமை" என்ற பொருள் சட்டென நினைவில் வராது. இங்கே, "பாடு பெறும்" என்றால் அந்தப்பொருளில் - அதாவது, பெருமை அடையும் (பாடப்படும் சிறப்புப்பெறும்) - என்று வருகிறது.

அது போல, படை என்றவுடன் "போருக்குச்செல்லும் கூட்டம் / சேனை" என்றே தோன்றும். இந்தக்குறளில், "படைத்தகை" என்பது "அணியாக இருப்பது / ஒருங்கமைப்பு / ஒழுங்கு" என்று புரிந்து கொள்ள வேண்டும்.

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும்
சண்டை போடும் திறனும், அதற்கான ஆற்றலும் இல்லாவிட்டாலும்

தானை படைத்தகையால் பாடு பெறும்
(ஒரு) படை தன்னுடைய அணிவகுப்பால் / ஒழுங்கமைப்பால் பெருமை பெறலாம்

"படை என்றால் சண்டை போடும் ஆற்றல் தானே முதலில் வேண்டியது - அது இல்லாமல் எப்படி"  என்று தோன்றலாம். ஆனால், அது மட்டுமே பெருமை அல்ல என்று இங்கே படிக்கிறோம்.

சொல்லப்போனால், போரில்லாத காலங்களில் ஒரு படை எப்படி நடந்து கொள்கிறது என்பதில் அதன் தனிச்சிறப்பு விளங்க முடியும்.
(போரில்லாததே மிகச்சிறப்பு என்பது கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொன்று).

app_engine

Posts : 7594
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Post  app_engine on Thu Oct 06, 2016 10:31 pm

#769
சிறுமையும் செல்லாத்துனியும் வறுமையும் 
இல்லாயின் வெல்லும் படை

வெல்லும் படைக்கான "கூடாதவைகளின்" பட்டியல் இந்தக்குறளில்.

சிறுமை / வறுமை எளிதில் புரிகின்றன. 
(அதாவது, சொற்களின் பொருள் என்ற அளவில். இவற்றுக்குப் பல பொருட்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, சிறுமை என்பது அளவில் குறைவையோ பண்பில் குறைவையோ எதைக்குறிக்கிறது என்பதில் பலரும் குழம்புவது உண்டு, அது போலத்தான் வறுமையும்)

ஆனால், செல்லாத் துனி? என்ன பொருள்?

செல்லாத = போகாத / நீங்காத 
துனி = வெறுப்பு / துன்பம் / பகை / நோய்  என்று பல பொருட்கள், எல்லாமே எதிர்மறையானவை 

"மன்னன் மீது நீங்காத வெறுப்பு" என்று சில உரையாசிரியர்கள் சொல்லுகிறார்கள்.  பரிமேலழகர், "நீங்காத துன்பம்" என்று சொல்லுவது மட்டுமல்ல, அதற்கான காரணம் "மகளிரை வெளவல், இளிவரவாயின செய்தல்" என்று கூடச் சேர்த்து, "வேண்டாதவை செய்வதால் வரும் நீங்காத துன்பம்" என்று விளக்குகிறார்.

கூட்டிச்சேர்ப்புகளை விலக்கிவிட்டு நேரடிப்பொருள் மட்டும் பார்ப்போம் Smile

சிறுமையும் செல்லாத்துனியும் வறுமையும்
சிறுமையும், நீங்காத வெறுப்பும் (அல்லது துன்பம் / பிணி), வறுமையும்

இல்லாயின் படை வெல்லும்
இல்லாவிட்டால் அந்தப்படை வெற்றி பெறும்

எப்படிப்பட்ட சிறுமை, எத்தகைய வறுமை, யார் மீது மாறாத வெறுப்பு அல்லது எதனால் நீங்காத துன்பம் - இவற்றையெல்லாம் படிப்பவர் தானே சேர்த்துக்கொள்ளலாம் Smile

அது தானே கவிதைக்கு அழகு? 

நம் கற்பனையை வளப்படுத்தும் குறள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது!

app_engine

Posts : 7594
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Post  app_engine on Fri Oct 07, 2016 4:34 pm

#770
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை 
தலைமக்கள் இல்வழி இல்

நிலை-தலை Smile

இங்கே நிலை மக்கள் என்பது "கீழே" உள்ள படையினரைக் குறிப்பிடுகிறது. 

அது வேடிக்கை தான் - "தலைமை அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும், கீழே உள்ளோர் நிலைத்திருப்பர்" என்று சொல்ல வருகிறாரா தெரியவில்லை  Laughing

குறும்பில்லாமல் படித்தால், இங்கே "நிலை" என்பது "உறுதி" என்று புரிந்து கொள்ளலாம். 

"உறுதி மிக்க படைவீரர் நிறைய இருந்தாலும், தலைமை சரியில்லை என்றால் பயனில்லை" என்று ஆக மொத்தப்பொருள்!

தானை நிலைமக்கள் சால உடைத்தெனினும்
படையில் உறுதி வாய்ந்த வீரர் நிறையப்பேர் உண்டு என்றாலும்

தலைமக்கள் இல்வழி இல்
தலைமை தாங்க (நல்ல) ஆட்கள் இல்லையென்றால் அது முன்செல்ல இயலாது

"தலைமை சரியில்லை என்றால் உருப்பட வழியில்லை" என்பது பொதுவாக எல்லா அமைப்புகளுக்கும் பொருந்தும். 

சிறிய குடும்பம் முதல் பெரிய நிறுவனம் வரை. 

ஏன், நம் உடலை மட்டுமே எடுத்துக்கொள்வோம். ஒவ்வோர் நொடியும் அதைத்தாக்கும் கிருமிகள் பேரளவில் இருப்பதும் அவற்றை அழிக்கும் திறன் வாய்ந்த உயிரணுக்கள் குருதியில் உள்ளதும் அறிந்ததே.

அந்தக்குருதி அணுக்களின் "படை" நன்கு செயல்பட வேண்டுமென்றாலும், அல்லது மொத்தத்தில் உடல் முழுதும் சரியாக இயங்க வேண்டுமென்றாலும், தலைமை நிலையம் - மூளை - நல்ல நிலையில் இருக்க வேண்டும் தானே?

இல்லையென்றால் எல்லாம் பாழ் Sad

app_engine

Posts : 7594
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Post  app_engine on Mon Oct 10, 2016 4:08 pm

#771
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை 
முன்நின்று கல்நின்றவர்
(பொருட்பால், படையியல், படைச்செருக்கு அதிகாரம்)

போர் என்று வரும்போது அங்கே "தாழ்மை" என்ற பண்பு பயன் தராது. வாழ்வா சாவா என்ற நிலை, வெற்றி அடைந்தே தீர வேண்டும் என்ற தேவை - இப்படிப்பட்ட ஒரு சூழலில் ஒரு படைக்கும் அதன் உறுப்பினருக்கும் இருக்க வேண்டிய பண்பு "செருக்கு".

அது இல்லையேல் தோற்று மடிந்து போவார்கள். தம்மைப்பற்றியும், தம் படை / தலைமை இவற்றைப்பற்றியும் செருக்கு இல்லாவிடில் வெற்றி கிட்ட வழியில்லை Smile

இந்தக்குறள் வழியாக இன்று படித்த புதிய சொல் "ஐ" Smile

அப்படி ஒரு சொல் இருக்கிறதென்றும், அதன் பொருள் "தலைவன்" என்றும் இப்போது தான் தெரியும். (அகராதி இந்தக்குறளைத் தான் மேற்கோள் காட்டுகிறது).

தெவ்விர் என்னைமுன் நில்லன்மின்
பகைவர்களே, என் தலைவன் முன்பு (எதிர்த்து) நிற்காதீர்கள் 

பலரென்னை முன்நின்று கல்நின்றவர்
(ஏனென்றால், இதற்கு முன்பு) பலர் என் தலைவனை எதிர்த்துக் (கடைசியில்) கல்லாக நிற்கிறார்கள்.
(சிலையாகிப்போயினர் = இப்போது படத்தில் தான் இருக்கிறார்கள், உயிரோடு இல்லை, அழிந்து போனார்கள் என்று சுருக்கம்)

என்ன ஒரு செருக்கு!

app_engine

Posts : 7594
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Post  app_engine on Mon Oct 10, 2016 4:13 pm

இந்த இழையில் அண்மைக்காலத்தில் எனக்குப்பல வியப்புகள் வந்து கொண்டிருக்கின்றன என்று சொன்னேன். 

இன்றும் ஒரு வேடிக்கை.

சனிக்கிழமை தற்செயலாக யூட்யூபில் கொஞ்ச நேரம் ஏதாவது திரைப்படம் பார்க்கலாம் என்று தட்டி "ஐ" என்ற மிகக்கொடுமையான படத்தைப் பார்க்க நேர்ந்தது. (மூன்று மணி நேரப்படத்தை வேகமாக ஓட்டி 1 மணி நேரத்துக்குள்ளேயே முடித்து விட்டோம் என்றாலும், அந்த அளவு நேரமும் பெருங்கொடுமை என்பதைச் சொல்லியாக வேண்டும்).

இதோ, இன்று காலை வந்து ஒரு குறள் படிப்போம் என்று திறந்தால் அதில் படிக்கும் புதுச்சொல் "ஐ". 

இரண்டும் ஒன்றுக்கொன்று ஒரு இணைப்புமில்லாத, திட்டமிடாத நிகழ்வுகள்.

விந்தை தானே?

Smile

app_engine

Posts : 7594
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Post  app_engine on Tue Oct 11, 2016 11:55 pm

#772
கானமுயலெய்த அம்பினில் யானை 
பிழைத்த வேல்ஏந்தல் இனிது

பள்ளிக்காலம் தொட்டே நன்கு அறிமுகமான குறள்!

"வீரம் என்றால் வலியவனுடன் மோதுதல் (தோற்றாலும் சரி) - எளியவனை 

வெல்லுதல் அல்ல" என்று அப்போது சொல்லிக்கொடுக்கப்பட்டது. 

இப்போது தான் தெரிகிறது "படைச்செருக்கு" என்ற அடிப்படையில் அது 

எழுதப்பட்டது என்பது. மெய் தான், பொதுவான சில அறிவுரைகள் எல்லா 

சூழலுக்கும் பொருந்தும் தான்.

முழுக்குறளும் "அடையாளப்பொருள்" வடிவில் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

அதாவது, முயல் / யானை என்பன அடையாளங்கள். 

படைச்செருக்கு = யானை போன்ற பெரிய, வலிய எதிரியோடு மோதுதல். முயல் போல அஞ்சி ஓடும் சிறிய கூட்டத்தை வெல்லுதல் அல்ல.

கானமுயலெய்த அம்பினில்
காட்டில் (அஞ்சி ஓடும்) முயலை எய்து வீழ்த்திய அம்பை விட

யானை பிழைத்த வேல்ஏந்தல் இனிது
யானை மீது எறிந்து, (அதைக்கொல்லாமல்) பிழைக்க விட்ட வேலைக் கையில் ஏந்துவது தான் சிறப்பானது.

கொல்லுவது / அல்லாது விடுவது என்ற விளைவுகளைக்கால் எப்படிப்பட்ட மன உரத்துடன் ஒரு வீரன் இருக்கிறான் என்பதில் தான் சிறப்பு இருக்கிறது என்று நேரடியாகப் புரிந்து கொள்வது எளிதே. 

பிழைத்த யானை வந்து தாக்கினால் என்ன நடக்கும் என்பது தெரிந்ததே. அதை எதிர்கொள்ளும் நெஞ்சுரம் தான் படைச்செருக்கு.

கொஞ்சம் கூட்டிச்சொன்னால், வெற்றி தோல்வி என்பதல்ல ஒரு படையின் செருக்கு. யாரோடு போரிட்டது என்பதில் தான் இருக்கிறது சிறப்பு Smile

app_engine

Posts : 7594
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Post  app_engine on Wed Oct 12, 2016 4:20 pm

#773
பேராண்மை என்பதறுகண் ஒன்றுற்றக்கால் 
ஊராண்மை மற்றதன் எஃகு

எஃகு என்றால் கூர்மை என்று கொஞ்சம் முன்னால் பார்த்தோம். 

ஆண்மைக்கு எது கூர்மை? 
(அதாவது, உச்சம் / சிறப்பு / உயர்வு?) 

குறிப்பாக, படையின் செருக்கு எப்போது உயர்கிறது?

"மற்ற எல்லோரையும் வீழ்த்தி வெற்றி காணும்போது" என்று மறுமொழி சொல்லத்தோன்றும். ஆனால், அப்படி அல்ல என்று இந்தக்குறளில் படிக்கிறோம் Smile

பேராண்மை என்ப தறுகண்
அஞ்சாத வீரம் தான் பெரும் ஆண்மை 
(தறுகண் = அஞ்சாமையாகிய வீரம்)

மற்றதன் எஃகு ஒன்றுற்றக்கால் ஊராண்மை
ஆனால், அதன் கூர்மையோ, (பகைவருக்கு) ஒரு துன்பம் நேரும் போது கருணையோடு உதவி செய்தல் 

பகைவரோடு போர் புரிந்து அழிப்பது தான் படைச்செருக்கு. என்றாலும், அவர் தாழ்ந்து போன நிலையில் உதவிக்காக அழைத்தால் கருணை காட்டுவது அதிலும் பெரும் சிறப்பு / செருக்கு என்று ஆழ்ந்த கருத்துச்சொல்லும் குறள்.

"பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே" Smile

app_engine

Posts : 7594
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Post  app_engine on Thu Oct 13, 2016 6:09 pm

#774
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் 
மெய்வேல் பறியா நகும்

மெய்வேல்  - உடலில் பாய்ந்திருக்கும் வேல் - படிக்கும்போதே அச்சத்தை வரவழைக்கும் ஒன்று.

கையில் உள்ள வேலை எறிந்து விட்டதால், "மெய்வேலை" வெளியில் பிடுங்கியெடுத்து, அதைக்கொண்டு அடுத்த தாக்குதல் நடத்தும் வீரனைப் பற்றி இந்தக்குறள் பாடுகிறது! அதுவும் மகிழ்ச்சியோடு ("நகும்")! Shocked

அதாவது, அப்படிப்பட்ட மனஉறுதி / உரம் தான் படைச்செருக்கு என்று!  
(மனதில் அப்படிப்பட்ட ஒரு காட்சியைக் கொண்டு வந்தால், வெளியேறும் குருதியும் வலியும் இன்ன பிறவும் நமக்கு உணர முடியும். வீரனுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டல்ல, மாறாக மகிழ்ச்சியே என்கிறார் வள்ளுவர்). 

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
கையிலிருந்த வேலை (பகைப்படையின்) யானை மீது எறிந்து விட்டு (தொடர்ந்து போர் புரிய) வருபவன்

மெய்வேல் பறியா நகும்
(இன்னொரு வேல் தேடுகையில்) தன் உடலில் பாய்ந்திருக்கும் வேலை மகிழ்வுடன் பறித்து எடுப்பான்

"உடல் மீது பாய்ந்திருக்கும் வேலை எடுத்து அடுத்த தாக்குதல் மகிழ்வோடு நடத்துதல்"  - மிகக்கடினம் என்றாலும் முற்காலங்களில் போர்க்களத்தில் நடந்திருக்கக் கூடிய ஒன்றே. (சாவு கிட்டத்தட்ட உறுதி என்ற நிலையில், இன்னொரு யானையையும் வீழ்த்திப்பின் மடிவோம் என்ற "செருக்கு" என்று கொள்ளலாம்)

app_engine

Posts : 7594
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Post  app_engine on Mon Oct 17, 2016 5:20 pm

#775
விழித்தகண் வேல்கொண்டெறிய அழித்திமைப்பின் 
ஒட்டன்றோ வன்கணவர்க்கு

"படைவீரன் அச்சத்தில் கண் இமைப்பது தோல்விக்குச் சமம்" என்கிறார் வள்ளுவர். 

என்ன ஒரு படைச்செருக்கு Smile

இந்தக்குறளை மேற்கோள் காண்பித்து "நான் கைதட்டும் போது நீ கண்ணை மூடினால் தோல்வி" என்று சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டைக்குறித்து ஒரு நூலில் எழுதியிருப்பதை வலையில் காண நேர்ந்தது - நானும் இந்த விளையாட்டு பள்ளிக்காலத்தில் ஆடியதுண்டு Smile

மனதில் சிறிதளவேனும் அச்சம் இருந்தால், அதுவே தோல்வி தான் - கிட்டத்தட்ட இந்தக்கருத்தை வலியுறுத்தும் சில சொற்றொடர்கள் அடங்கிய அறிவிப்பு ஒன்றை அண்மையில் பள்ளியொன்றின் விளையாட்டுக்கூடத்திலும் பார்க்க நேர்ந்தது. ("தோற்றுப்போவேன் என்று எண்ணும் போதே நீ தோற்று விட்டாய்").

விழித்தகண்
(எதிரியிடம் சினத்தோடு) விழித்திருக்கும் கண்

வேல்கொண்டெறிய அழித்திமைப்பின்
அவர் வேல் கொண்டு எறியும் போது அச்சத்தால் இமைத்தால்
(கண் மூடுதல் - இமைப்பொழுதே ஆயினும் அச்சத்தின் அறிகுறி)

ஒட்டன்றோ வன்கணவர்க்கு
வீரர் புறங்காட்டியது போன்றதே 
(தோல்விக்குச்சமம்)

எதிர்பாராத நேரத்தில் நடக்கும் மின்னல் / இடிமுழக்கம் போன்ற ஒன்றை இங்கே சொல்லவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். 
("விழித்த கண்" = போர் புரிய சினத்துடன் பார்க்கும் கண், அது அச்சத்தில் இமைக்கலாமா?)

app_engine

Posts : 7594
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Post  app_engine on Mon Oct 17, 2016 8:40 pm

#776
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் 
வைக்கும் தன் நாளை எடுத்து

"என் நாட்களை நான் எப்படிப்பயன்படுத்தினேன்" என்று கணக்கிடுவது ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்று.

நன்றாகவா இல்லை வீணாகவா என்று நாமெல்லோரும் கணக்குப்பார்த்து, வேண்டுமென்றால் திருத்தல்கள் செய்து, இனிவரும் நாட்களையாவது வீணாக்காமல் இருக்க ஆவன செய்ய வேண்டும் Smile

இந்த வாழ்க்கைக்கான அடிப்படைப்பொருள், இங்கே ஒரு படைவீரனுக்கு எப்படிப்பொருந்தும் என்று வள்ளுவர் விளக்குகிறார். அதாவது, செருக்குள்ள ஒரு படையாளிக்கு!

தன் நாளை எடுத்து
(ஒரு வீரன்)  தன் நாட்களை எடுத்து (அவை எப்படிச்சென்றன என்று கணக்கிடும் போது)

விழுப்புண் படாதநாள் எல்லாம்
தன் உடலில் விழுப்புண் (முகம் / மார்பில் போரின் விளைவாய் வரும் புண்) படாத நாட்களை எல்லாம்

வழுக்கினுள் வைக்கும்
"வீணானவை" (தவறியவை / வழுக்கியவை / சறுக்கியவை / பயனற்றவை) என்ற கணக்கில் வைப்பான் 

"படைச்செருக்கு" போன்றே நாம் செய்யும் ஒவ்வொரு பணியிலும் அல்லது முயற்சியிலும் நமக்கு உண்மையான "செருக்கு" இருந்தால், நாம் கண்டிப்பாகச் செய்ய வேண்டியது இதே தான்.

- நம் முயற்சியில் "விழுப்புண்" போன்றது எது என்று முடிவு செய்தல் 

- அது கிட்டாத நாள் எல்லாம் வீணாய்ப்போயிற்று என்று உணருதல் / திருத்தல்கள் செய்தல்

app_engine

Posts : 7594
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Post  app_engine on Fri Oct 21, 2016 8:05 pm

#777
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் 
கழல்யாப்புக் காரிகை நீர்த்து

"யாப்பு" என்ற சொல்லைப்பார்த்த உடனேயே "யாப்பிலக்கணம், செய்யுள், யாப்பருங்கலக் காரிகை" என்றெல்லாம் தோன்றினாலும், இந்தச்சொல்லுக்கு அடிப்படைப்பொருள் என்ன என்று சட்டென்று தெரியவில்லை.

அகராதிக்குப் போனால், முதல் பொருளிலேயே இந்தக்குறள் மேற்கோளாக இருக்கிறது Smile "கட்டுதல்" என்பதே சொல்லின் பொருள். (செய்யுள் = சொற்களைக்கட்டுதல், அதற்கான இலக்கணம் = யாப்பிலக்கணம், தளைகள் குறித்தெல்லாம் பலரும் பள்ளியில் படித்திருக்க வாய்ப்புண்டு)   

காரிகை என்றால் உடனே பெண் என்ற நினைப்புத்தான் வரும். இங்கு அது "அணிகலன்" (அழகு செய்தல் - அலங்கரித்தல்) என்ற பொருளிலாம்.

பிற சொற்கள் முன்னமேயே பார்த்தவை தாம், இனிப்பொருளை அலசுவோம் Wink

சுழலும் இசைவேண்டி
புகழ் (இசை) தம்மைச்சூழ வேண்டும் என்று விரும்பி  

வேண்டா உயிரார்
(அதற்காக) உயிரையும் பொருட்படுத்தாதவர் 
(உயிரைத் துச்சமாகவும், புகழைப்பெரிதாகவும் கருதும் செருக்குடைய வீரர்கள்)

கழல்யாப்புக் காரிகை நீர்த்து
வீரக்கழலை அணியாகக் கட்ட ஏற்ற தன்மையுடையவர் 

தற்காலங்களில் "வீரச்சக்கரம்" போன்ற அந்நாளைய விருது "கழல்" என்று தோன்றுகிறது. (இந்திய அரசால் "பரம வீரச்சக்கரம்" அளிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் இறப்புக்குப் பின்னரே அதைப்பெற்றனர் என்பதைக்கருத்தில் கொள்க)

கழலுக்குத்தகுதியானோர் அச்சமின்றிப் போரிடுவோர் தானே? 

நான் வன்முறையாளர்களைப் போற்றுபவன் அல்ல. என்றாலும், உயிரினும் பெரிதாகப் பெயரையும் புகழையம் கருதுவது ஒரு மிகு உயர்நிலை என்பதில் அதே கருத்து உடையவன். 
(என்ன இழிந்த செயலும் செய்து உயிர் காக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை, அதற்காகத் தற்கொலை எண்ணமுள்ளவனும் அல்ல - இது ஒரு கொள்கை நிலை)

இந்த அடிப்படையில் ஒரு நாட்டின் படையினரைப் புகழுவோர் புரட்சியாளர்கள் மற்றும் போராளிகளை இகழுவது ஒரு வேடிக்கையான நிலை என்பேன். 
(அந்தப்போராளிகள் எதற்காகப் போராடுகிறார்கள் / யாருக்கு எதிராக வன்முறை செய்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் ஒட்டு மொத்தமாகத் திட்டுபவர்கள் அரசுப்படையினரையும் அதே எடைக்கல்லில் வைத்து நோக்குவது தான் நீதியான அணுகுமுறை - செய்வார்களா?)

மற்றபடி, "போர்ப்படை / கொல்லச்சென்று உயிர்விடுதல் என்பவற்றில் செருக்கு இல்லை" என்பது என் தற்போதைய வாழ்க்கை வழி. 

ஏன்  எப்படி என்றெல்லாம் ஒரு பதிவில் இடும் அளவுக்கு எளிதான ஒன்றல்ல இது Smile

app_engine

Posts : 7594
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Post  app_engine on Mon Oct 24, 2016 9:23 pm

#778
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் 
செறினும் சீர்குன்றல் இலர்

கொஞ்சம் குழப்பமான குறள்.

அதாவது, போர் வந்தால் உயிரையும் தர அஞ்சாத வீரரின் படைச்செருக்கு குறித்த குறளில் "மன்னன் அவர்கள் மீது சினம் கொள்வதாக" ஏன் வருகிறது 
என்பது புரியக்கடினம் Embarassed

"எப்படிப்பட்ட மன்னன் அவன்" என்று ஒரு வேளை சிந்திக்கத்தூண்டலாம். 

அவனது சினத்திற்கான காரணங்கள் என்னவாக இருக்கலாம்?

1. "இந்தப்போரே கூடாது, அதை நான் தவிர்த்து விடப்போகிறேன் - அந்த நிலையில் நீங்கள் ஏன் அவசரப்பட்டு சண்டையிட்டு உயிரைப் போக்குகிறீர்கள்" என்று இருக்கலாம்.

2. "ஐயோ, எனக்கு இவ்வளவு உண்மையான வீரர்களின் உயிரை ஏன் வீணடித்தீர்கள், வேறு வழியில் போர் புரிந்திருக்கலாமே" என்று 
படைத்தலைவர்களிடம் சினம் காட்டலாம்.

எப்படி இருந்தாலும், ஏதோ காரணத்தால் படையின் மீது மன்னன் எரிந்து விழுகிறான்.
(மூன்றாவது காரணம் - அவன் ஒரு முட்டாளாகவும் இருக்கலாம் Laughing )

ஆனால், அவனது சினத்தினால் அவ்வீரரின் சீர் ஒன்றும் குறைந்து போய் விடாது என்பது தான் குறளின் பொருள்.

உறின்உயிர் அஞ்சா மறவர்
போர் வந்தால் உயிருக்கு அஞ்சாத வீரர்கள்

இறைவன் செறினும் சீர்குன்றல் இலர்
மன்னனின் சினத்துக்கு ஆளானாலும் சிறப்பு குறைந்து விட மாட்டார்கள்

app_engine

Posts : 7594
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Post  app_engine on Tue Nov 01, 2016 5:29 pm

#779
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற்பவர்


"தான் ஒப்புக்கொடுத்த ஒன்றுக்காக உயிரையும் தருதல்" என்ற கருத்து மீண்டும் இங்கே வருகிறது.

ஒரு படைவீரனுக்கு உண்மையான செருக்கு என்பது "உயிர் போனாலும் கொள்கையில் உறுதி" என்பதே. அப்படிப்பட்டவன் வேறு விதத்தில் பிழை செய்திருந்தாலும், அவனது உண்மை தவறா நிலையை யாரும் குற்றம் சொல்ல இயலாது என்று விளக்கும் செய்யுள்.

இன்னொரு நோக்கில் பார்த்தால், "உயிரையும் பொருட்படுத்தாமல் பாடுபடும் ஒருவனை அற்பமான பிழை கண்டுபிடித்துக் குற்றம் சாட்டமுயல்வது மூடத்தனம்" என்று பொதுமக்களை அறிவுறுத்தும் பாடலாகவும் எடுத்துக்கொள்ளலாம் Wink

இழைத்தது இகவாமைச் சாவாரை
ஏற்றுக்கொண்ட (சூளுரைத்த) ஒன்றை விடாதிருக்க உயிரையும் தர முனைவோரை

பிழைத்தது ஒறுக்கிற்பவர் யாரே
பிழை கண்டுபிடித்துத் தண்டிக்க வல்லவர் யார்?
(யாருமில்லை / கூடாது என்று இருவிதத்தில் புரிந்து கொள்ளலாம்)

சூளுரைக்கேற்ப உயிர்விடும் படையாளி குற்றமே செய்ய மாட்டான் என்பதல்ல இதன் பொருள். அப்படிப்பட்ட உயர்நிலையில் உள்ள ஒருவனை அற்பமான குறை கண்டுபிடிக்கும் தகுதி மற்றவர்களுக்கு இல்லை என்பதே இங்கு முதல்.

app_engine

Posts : 7594
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Post  app_engine on Tue Nov 01, 2016 7:29 pm

#780
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து


"இறப்பு" என்றால் என்ன, அதற்குப்பின் ஏதாவது வாழ்வுக்கான நம்பிக்கை உண்டா போன்ற கேள்விகள் நீண்ட காலமாக மானிடருக்கு உண்டு என்பது தெரிந்ததே.

விதவிதமான விடைகள் இந்தக்கேள்விகளுக்கு உள்ளன என்பதும் அதன் அடிப்படையில் பல நம்பிக்கைகள் உலகெங்கும் உள்ளன என்பதும் எல்லோரும் அறிந்ததே.

இங்கே அவற்றுள் எதன் அடிப்படையில் "சாக்காடு இரந்துகோள்" என்கிறார் என்பது வள்ளுவருக்கே வெளிச்சம்.

என்றாலும், நாம் முன்னர் படித்த வானுலகு, நீத்தார் பெருமை போன்றவற்றின் அடிப்படையில் பார்த்தால், வள்ளுவருக்கோ அல்லது பொதுவாக அந்நாட்களில் வாழ்ந்தோருக்கோ இறப்புக்குப்பின்னான இன்னொரு வாழ்வில் நம்பிக்கை இருந்திருக்க வாய்ப்புண்டு.

எங்கு / எப்படி என்பதில் வேற்றுக்கருத்துகள் இருந்திருக்கலாம், என்றாலும் "இறப்போடு எல்லாம் கழிந்தது" என்ற நம் நாளைய அறிவியல் சார்ந்த கருத்து அன்று பரவலாக நம்பப்பட்டிருக்க வழியில்லை Smile அப்படியே இருந்தாலும், "என்றாவது வரும் சாவை இன்றே பெருமையுடன் அடைவோம்" என்ற கருத்தில் எழுதியதாகக் கொள்ளலாம் Embarassed

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின்
மன்னரின் கண்ணில் நீர் வரவழைக்கும் விதத்தில் சாக நேர்ந்தால்
(வீரமான போர் புரிந்து இறக்கையில் அதைக்கண்டு மன்னனே அழுதால்)

சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து
(அப்பேர்ப்பட்ட) இறப்பை இரந்தாவது (பிச்சை கேட்டாவது) பெற்றுக்கொள்ள வேண்டும்

நாட்டின் தலைமையை உருக்கும் வண்ணம் வீரம், இறப்பு அடைவதைக்கால் ஒரு படைவீரனுக்கு வேறு பெரிய செருக்கு இருக்க முடியாது என்று புரிந்து கொள்கிறோம்.

"இறவாப்புகழ்" என்றும் விளக்கலாம்.

app_engine

Posts : 7594
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Post  app_engine on Wed Nov 02, 2016 6:30 pm

#781
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் 
வினைக்கரிய யாவுள காப்பு
(பொருட்பால், நட்பியல், நட்பு அதிகாரம்)

ஒரு வழியாகப் படை, சண்டை போன்றவை நிறைந்த அதிகாரங்கள் முடிந்து நட்பு தொடங்கியது மனஅமைதி தருகிறது Smile

இந்த அதிகாரத்தில் பாதிக்கு மேல் பள்ளிக்காலத்தில் மீண்டும் மீண்டும் படித்த குறள்கள் என்பதால் பொருள் புரிவதில் மெனக்கெட வேண்டியிருக்காது. அதன் பயன் குறித்து எண்ண நல்ல வாய்ப்பு Smile

முதல் குறள் ஏற்கனவே படித்ததில்லை என்றாலும் கடினமான சொற்கள் ஒன்றும் காணப்படவில்லை, எளிதில் பொருள் விளங்க முடியும்.

நட்பின் செயற்கரிய யாவுள
நட்பை விடவும் செய்வதற்கு (செய்து கொள்ள / சம்பாதிக்க / உண்டாக்க) அருமையானது வேறு என்ன உள்ளது?

அதுபோல் வினைக்கரிய காப்பு யாவுள 
அதைப்போல் (நட்பைப்போல்) நம் செயல்களுக்கு அருமையான பாதுகாவல் வேறு என்ன உள்ளது?

'அரிய' என்பதில் கொஞ்சங்கூட உட்படுகிறது. அதாவது, எளிதல்ல என்ற கருத்தும் விளங்கிக்கொள்ளலாம்.

உண்மையான நட்பு அருமையானது / சிறப்பானது என்றாலும் அதைக்கண்டடைவது எளிதல்ல, அரிது தான் Smile

app_engine

Posts : 7594
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Post  app_engine on Thu Nov 03, 2016 12:02 am

#782
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் 
பின்னீர பேதையார் நட்பு

பள்ளிக்காலக்குறள் #1, இந்த அதிகாரத்தில். 

நட்பின் சிறப்பை வளர்பிறை / தேய்பிறையோடு ஒப்பிடும் எளிய குறள். 

பொதுவாக எல்லாவிதமான வளர் / தேய் பிறை ஒப்பீடுகளும் நம் காட்சியின் அடிப்படையில் மட்டுமே என்று நினைவில் கொள்ள வேண்டும். (ஏனென்றால் நிலவு எப்போதுமே முழுசு தான், நம் கண்ணுக்குப் படுவது தான் அரைகுறை).

ஒன்றுக்கொன்று முரண்பாடான இரண்டை ஒப்பிடும் வகையிலான செய்யுள் என்பதையும் கருத்தில் கொள்வோம். (நீரவர் X  பேதையர்). 

நீரவர் என்றால் அறிவுடையோர் என்றாலும் நீர்மை என்பதற்குத் தன்மை / பண்பு என்று பொருள். (நிறை நீர = நிறை மதி போன்ற தன்மை / பண்பு). அப்படியாக, ஒரே போன்ற சொற்களின் வேறு வேறு பொருள் வைத்து நடத்தும் சின்ன விளையாட்டும் உண்டு Smile

நீரவர் கேண்மை பிறைமதி நிறைநீர
அறிவுடையோரின் நட்பு நிலவின் வளர்பிறை போன்று பெருகும் தன்மையுடையது
(உவமையில் பெருகுவது நிலவின் தோற்ற அளவில் மட்டுமல்ல, ஒளி வெள்ளத்திலும் என்று நினைவில் கொள்வோம், அதாவது சிறப்புக்கூடுதல்) 

பேதையார் நட்பு பின்னீர
பேதையரின் நட்போ சிறப்புக்குன்றி வரும் தேய்பிறை போன்றதே

app_engine

Posts : 7594
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Post  app_engine on Thu Nov 03, 2016 4:42 pm

#783
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் 
பண்புடையாளர் தொடர்பு

பள்ளிக்காலக்குறள் #2, இந்த அதிகாரத்தில்.

நல்லதோ கெட்டதோ எனக்கு ஒரு பழக்கம் - வண்டியில் தனியாகப்பயணிக்கையில் ரொம்பப்பிடித்த பாடலை "மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும்" கேட்டுக்கொண்டே இருப்பது. அதில் அப்படி ஒரு இன்பம் காண்கிறேன்.

வள்ளுவர் அதே போன்ற உவமையுடன் பண்புடையாளர் நட்பை இந்தக்குறளில் அடையாளப்படுத்துகிறார்.

பண்புடையாளர் தொடர்பு பயில்தொறும்
(நல்ல) பண்புடையோரின் நட்பு பழகும் தோறும் 

நவில்தொறும் நூல்நயம் போலும்
(நல்ல) நூலைக் கற்கக்கற்கத்தொடர்ந்து வரும் நன்மை போன்றது 

பல பொருட்கள் உள்ள இரண்டு சொற்கள் கொண்டு சிறிய விளையாட்டும் இங்கே உண்டு.

நவில் - பழகுதல், கற்றல் என்ற இரு பொருட்களும் இந்தச்சொல்லுக்கு உண்டு. அதே இரண்டு பொருட்கள் (பழகுதல் / கற்றல்) பயில் என்ற சொல்லுக்கும் உண்டு Smile அவை இரண்டையும் ஒரே குறளில் பயன்படுத்தி அணி செய்கிறார். 

உவமை அழகும், சொல் அழகும், கருத்துச்செறிவும் நிறைந்த குறள்! 

சிறந்த நூலை எத்தனை முறை படித்தாலும் புதியவை கற்போம் என்பது தெரிந்ததே, கூடுதல் அழுத்தம் தேவையில்லை Smile அது போன்றே பண்புடைய நண்பர்கள் என்பது வாழ்வில் கண்டறிந்த உண்மை!  

சுவையான இசைக்கோர்ப்புகளும் இனிய நண்பர்களே Smile

app_engine

Posts : 7594
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Post  app_engine on Thu Nov 03, 2016 9:23 pm

#784
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் 
மேற்சென்று இடித்தற்பொருட்டு

பள்ளிக்காலக்குறள் #3, இந்த அதிகாரத்தில்.

நட்பிற்கு என்ன இலக்கணம்? கலந்து பேசிச்சிரித்துக் காலம் தள்ளுவதா?

இல்லை என்கிறது குறள். 

நட்டல் நகுதற்பொருட்டன்று
நட்புக்கொள்ளுதல் என்பது (ஒருவரோடு) நகைத்து மகிழுவதற்காக அல்ல

மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற்பொருட்டு
(அவர் வரம்பு) மீறி நடக்கையில் முன் வந்து சுட்டிக்காட்டி இடித்துரைக்கும் பொருட்டுத்தான்!

முற்காலத்திய பல அறிவு நூல்களும் இதே கருத்தைச் சொல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது Smile

எடுத்துக்காட்டாக பைபிளின் நீதிமொழி ஒன்று இங்கே...

வெளிப்படையாகக் கண்டிப்பதே மறைத்து வைக்கப்படும் அன்பைவிட மேலானது.

நண்பன் உண்மையுள்ளவனாக இருப்பதால் காயங்களை ஏற்படுத்துகிறான். ஆனால், எதிரி ஏராளமான முத்தங்களைக் கொடுக்கிறான்.

மீறி நடக்கையில் கொஞ்சுபவனை எதிரி என்றே கொள்ள வேண்டும். திருத்துபவன் தான் சரியான நண்பன்.

நமக்கு அப்படிக்கடிவாளம் போடும் நண்பர்கள் கிடைத்தால் நலமாய் இருக்கலாம்!

app_engine

Posts : 7594
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Post  app_engine on Fri Nov 04, 2016 5:43 pm

#785
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் 
நட்பாங் கிழமை தரும்

பள்ளிக்காலக்குறள் #4, இந்த அதிகாரத்தில்.

நட்பு அதிகாரத்தில் பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் பற்றிச்சொல்லாமல் எப்படி விடுவது?

குறிப்பாக, இந்தக்குறளுக்கு மிகப்பொருத்தம் - அதாவது நேரில் கண்டு பழகுவது நட்புக்குத் தேவை இல்லை, ஒன்றான உணர்வுகளே வேண்டியவை என்று உணர்த்த மிகச்சிறந்த வரலாற்று எடுத்துக்காட்டு. 

இவர்கள் இருவரை நட்புக்கு இலக்கணமாகத் தமிழ் மக்கள் காலங்காலமாகச் சொல்லி வருவது மிகச்சரியானதும் அழகானதுமான ஒன்று!

உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்
ஒத்த உணர்ச்சிகளே நட்பு என்னும் உரிமையை (அல்லது உறவைக்) கொடுக்கும்

புணர்ச்சி பழகுதல் வேண்டா
(அதனால்) நேரில் கண்டு நெருங்கிப் பழக வேண்டியதில்லை 

பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன் குறித்த சில இணைப்புகள்:
பிசிராந்தையார் தமிழ் விக்கிப்பீடியா

பிசிராந்தையார் நட்பு - கதை வடிவில்

என் அப்பாவும் நண்பர்களும் அவர்களது கல்லூரிக்காலத்தில் "பிசிராந்தையார் மன்றம்" நடத்தியதை இங்கே சேர்த்துக்கொள்கிறேன் Smile 

இந்தப்பெயருடன் அந்த மன்றத்தினரின் நிழற்படம் ஒன்று சிறுவயதில் வீட்டில் இருந்தது நினைவுக்கு வருகிறது. அவர்கள் நாட்களில் முற்போக்கும் உயர்ந்ததுமான கொள்கைகளை  ஒன்றாகத் திட்டமிட்டு வாழ்வில் செயல்படுத்தினார்கள் Smile

மன்றத்தில் இருந்த அப்பாவின் நண்பர்களில் ஒருவர் எனக்குப்பெரியப்பா, அதாவது பெரியம்மாவின் கணவராக ஆனார். அவர் செய்த ஏற்பாட்டில் தான் பலவிதங்களிலும் வேறுபட்ட பின்னணி கொண்டிருந்த என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் திருமணம் Smile   

நட்பு பலரின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை நடத்த முடியும் என்பதற்கு நேரில் கண்ட அழகான எடுத்துக்காட்டுகள் இவர்கள்.

app_engine

Posts : 7594
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Post  app_engine on Mon Nov 07, 2016 5:34 pm

#786
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து 
அகநக நட்பது நட்பு

நக / நகுதல் /நகை / நகைத்தல் என்றால் பொருள் "சிரிப்பு" என்பது மட்டுமல்ல என்று பொதுவாக எல்லோருக்கும் தெரியும் (குறிப்பாகப்பெண்களுக்கும் பெண்ணைப் பெற்றோருக்கும் Wink )

இந்தக்குறளில் "மகிழ்ச்சி" என்ற பொருளில் வருகிறது. நட்பின் விளைவு என்னவாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் அழகான குறள்.

பள்ளிக்காலக்குறள் #5, இந்த அதிகாரத்தில்.

ஆகவே, பாதி அதிகாரம் பெரும்பாலும் எல்லோரும் பள்ளியிலேயே படித்து விட்டோம் தான் Smile

முகநக நட்பது நட்பன்று
முகத்தில் (மட்டும்) மகிழ்ச்சி உண்டாக்கும் நட்பு (உண்மையான) நட்பாகாது

நெஞ்சத்து அகநக நட்பது நட்பு
நெஞ்சின் உள்ளே மகிழ்ச்சி உண்டாக்கும் நட்பு தான் (உண்மையில்) நட்பு!

எளிதாகப் பொருள் காண முடியும் என்றாலும், இது உணர்த்தும் பண்பை வாழ்வில் காட்டுவது எளிதல்ல. உண்மையான உள்ளம் மற்றும் கடினமான முயற்சி (கூடவே வேண்டிய அளவில் பொறுமை) எல்லாம் இருந்தால் தான் மற்றவர்களது உள்ளம் மகிழும் படியான நட்பை நாம் கொடுக்க மற்றும் பெற முடியும்.

போலித்தனம், வெறும் வெளிப்பேச்சு (உள்ளே வெறுமை அல்லது வஞ்சனை) எல்லாம் நிறைந்திருக்கும் நம் நாட்களில் உண்மையான நட்பு கிடைப்பது அருமையான ஒன்றே!

app_engine

Posts : 7594
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Post  app_engine on Mon Nov 07, 2016 11:23 pm

#787
அழிவினவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் 
அல்லல் உழப்பதாம் நட்பு

"அழிவின் கண் அல்லல் உழப்பது" என்று இது வரை இந்த அதிகாரத்தில் சொல்லப்படாத ஒரு புதுக்கருத்தை இந்தக்குறளில் அறிமுகம் செய்கிறார்.

அழிவு - இழப்பு / தோல்வி 

அல்லல் - துன்பம் 

உழப்பது - வருந்துவது (உழலுதல்)

நட்பு என்பது அழிவின் வழியில் செல்லாமல் நேர்வழியில் செல்ல உதவுவது என்ற கருத்தை முதலில் சொல்கிறார். இது நாம் முன்னமேயே பார்த்தது தான். (நெறி மீறும்போது தடுப்பதே நட்பு). 

என்ன தான் நண்பன் தடுத்தாலும் / நெறி செய்தாலும், விடாப்பிடியாக ஒருவன் அழிவுக்குச் செல்ல முடியும். அப்படிப்பட்ட தீய வழியில் சென்று அடி வாங்கிய துன்ப நிலையில் நல்ல நட்புள்ளவர் என்ன செய்வார்? "நான் முன்னேமேயே சொன்னேனே கேட்டாயா, இப்போது உனக்கு நன்றாக வேண்டும்" என்று ஏளனம் செய்து மகிழ்வாரா?

இல்லவே இல்லை. தனக்கே அந்தத்துன்பம் வந்ததாய் எண்ணி வருந்துவார். அவர் தான் மெய்யான நண்பர்!

அழிவினவைநீக்கி ஆறுய்த்து
அழிவின் வழியில் செல்லாமல் தடுத்தும் ஒழுக்கமான வழியில் செல்ல ஊக்குவித்தும்

அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு
அழிவு / இழப்பு வருகையில் துன்பத்துக்காக வருந்துவதுமே உண்மையான நட்பு.

app_engine

Posts : 7594
Reputation : 22
Join date : 2012-10-23
Location : MI

View user profile

Back to top Go down

Re: குறள் இன்பம் - #1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் (இரவு)

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 33 of 40 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 36 ... 40  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum