Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 25 of 40 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 32 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 25 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Feb 16, 2016 6:06 pm

#567
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்


அரம் - நீண்ட நாட்களுக்குப்பின் இந்தச்சொல்லைப் பார்க்கிறேன் Smile

பள்ளிக்காலத்தில் தச்சுக்கைவினைக்கூடத்தில் பயன்படுத்திய ஒன்று. அதன் பின்னர் கல்லூரி முதலாண்டியில் எந்திரவியல் பட்டறையில் இதை வைத்துத் தேய் - தேய் எனத்தேய்த்ததும் நினைவுக்கு வருகிறது Smile

தேவையற்ற உலோகத்தைத் தேய்த்து நீக்க உதவும் கருவி.

அதே நேரத்தில், தேவையானதைத் தேய்த்தால் வலிமையற்றுப் போகவும் வைக்கலாம்.

அத்தைகைய வேண்டாத வேலையை இங்கு அழகான உவமை ஆக்குகிறார்!

கடுமொழியும் கையிகந்த தண்டமும்

கடுமையான சொற்களும் அளவுக்கு மீறிய தண்டனையும்
(அப்படியாக மக்களை அச்சுறுத்தி ஆளுவது)

வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்
பகையை வெல்ல வேந்தனிடம் இருக்கும் வலிமையைத் தேய்த்தழிக்கும் அரமாகும்!

கூர்மையான வாளை அரம் வைத்துத் தேய்த்து மழுங்கச் செய்வது என்றும் மனதில் படமாக்கிப் பார்க்கலாம்.

படைத்திறனின் கூர்மை மழுங்கச்செய்ய வேண்டுமா? எல்லோரையும் கடுஞ்சொல்லால் திட்டி, வரம்பு மீறிய தண்டனை கொடு!

அப்படியாக, வெருவந்த செய்தல் தற்கொலை முயற்சி என்கிறார் Laughing

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 25 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Feb 17, 2016 8:16 pm

#568
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு


"சீறின் சிறுகும் திரு" - இசை நயத்துடன் கூடிய அருமையான சொல் தொடர் Smile

பொருள் நயமும் அழகு (அச்சுறுத்தினால் பொருள் வராது, பறிபோகும்) Smile

மற்றபடி முன்னர் ஒரு அதிகாரத்தில் விரிவாகப் பார்த்த "சுற்றந்தழால்" கருத்தை மீண்டும் இங்கே முன்வைக்கிறார். ("இனத்தாற்றி")

இனத்தாற்றி எண்ணாத வேந்தன்
இனத்தாரோடு கலந்து பேசி (நிலைமையை) ஆராயாமல் வேந்தன்
(இங்கே இனம் என்பதை அமைச்சர்கள் என்று பல உரைகளும் சொல்வதைக்காணலாம்)

சினத்தாற்றிச் சீறின்
சினத்தோடு நடந்து கொண்டு சீறினால்
(வெருவந்த செய்து நடந்தால்)

சிறுகும் திரு
(அவனது அல்லது நாட்டின்) செல்வம்  சிறுத்து / குறைந்து அழியும்!

என் நண்பர் ஒருவர் எப்போதும் சொல்லுவார்: "கோபம் வருவது இயலாமையின் வெளிக்காட்டே" Smile

வேண்டிய / தேவையான சினம் என்பது மிக அரிதாக வருவதே. பல நேரங்களிலும் தம் சொந்தக்குறையை மறைக்க / இயலாமையை ஒத்துக்கொள்ள மாட்டாத நிலைகளில் தான் ஆட்சியில் உள்ளோர் சீறுவார்கள்.

அத்தகைய இயலாத சூழ்நிலையில் செய்ய வேண்டியது இன்னும் பலரோடு விவாதித்து நல்ல முடிவுகளை எடுப்பது.

செய்தால் வெற்றி - சினந்து சீறி மட்டும் நடந்தால் தோல்வி!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 25 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Feb 18, 2016 7:02 pm

#569
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்


இந்த அதிகாரத்தில் இது வரை வந்த குறள்களில் கிட்டத்தட்ட எல்லாமே மன்னனின் கொடுங்கோல் விளைவாக மக்களுக்கு வரும் 'வெரு' குறித்தே இருந்தன.

அவ்விதத்தில், இது வேறுபட்ட குறள் Smile

மன்னனுக்கும் வெருவரும் நிலை குறித்து எச்சரிக்கிறார் இங்கே! (அப்படியே முழு நாட்டுக்கும் வெருவரும் நிலைமை தான் - மன்னனே அச்சத்தில் ஆழ்ந்தால் மக்களுக்கு எங்கே நிம்மதி?)

சிறைசெய்யா வேந்தன்
அரண் (அதாவது, பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னமே) செய்யாத வேந்தன்

செருவந்த போழ்தில்
போர் வந்து விட்டால் அப்பொழுது

வெருவந்து வெய்து கெடும்
அச்சம் வந்து (போரின் வெம்மை தாளாமல்) வெந்துஅழிவான்

வெய்து என்பதற்கு உரைகளில் "விரைவில்" என்று சொல்லுகிறார்கள் என்றாலும் அத்தகைய பொருள் அகராதி தருவதில்லை. வெப்பம் என்று தான் அங்கே காண்கிறோம்.

"அச்சமே கொன்று விடும்" என்றும் புரிந்து கொள்ளலாம்.
("புலி அடிக்கு முன்னே கிலி அடிக்கும்").

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 25 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Feb 19, 2016 8:09 pm

#570
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை


"நீயெல்லாம் பூமிக்குப்பாரம்" என்று திட்டுவதைக் கேட்டிருக்கிறோம். அத்தகைய ஒரு சொல்லாடல் இங்கே வள்ளுவர் பயன்படுத்துகிறார் : "நிலக்குப்பொறை" Smile

அதாவது, வெருவந்த செய்யும் மன்னனும் அவனது அறிவுகெட்ட கூட்டாளிகளும் நிலத்துக்குச் சுமை என்கிறார்.

வேறொரு கணக்கில் பார்த்தால், கொடுங்கோல் மன்னனும் அவனது கூட்டாளிகளும் மக்களை வரிப்பணம் கொண்டு கடுமையான சுமைகளைச் சுமத்துவார்கள் என்றும் புரிந்து கொள்ளலாம்.

நாம் முன்னும் கண்டிருப்பது போல, இங்குள்ள "கல்லார்" என்பது "பல்கலைக்கழகம் சென்று கற்காதவர்" என்று பொருள் கொள்ளக்கூடாது Wink

"நூல்கள் சொல்லும் நல்வழி அறியாதோர்" என்று தான் பொருள். (பல்கலைக்கழகப்படிப்பறிவு இல்லாதோரும் கேட்டறிவு வழி நன்கு பயின்றோராக இருக்க முடியும் அல்லவா?)

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல்
கடுமையாக ஆட்சி நடத்துபவன் நெறி அறியாதோரைக் கூட்டிக்கொள்வான்

அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை

இத்தகைய நிலையை (அல்லது, இப்படிப்பட்ட கூட்டத்தை) விடவும் நிலத்துக்கு வேறு பெரிய சுமை இல்லை

அப்படிப்பட்ட ஆட்சியின் கீழ் வாழ்வது எவ்வளவு கடினம் என்று அறியாதோர் உலகில் குறைவே Sad

இன்று பெரும்பாலும் நாம் எல்லோரும் "நிலக்குப்பொறை" என்று சொல்லத்தக்க ஆட்சியாளர்கள் கீழ் தான் உழல வேண்டி இருக்கிறது!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 25 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Feb 22, 2016 5:45 pm

#571
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு

(பொருட்பால், அரசியல், கண்ணோட்டம் அதிகாரம்)

இந்த உலகம் இன்னும் அழிந்து போய்விடாமல் இருப்பதற்கான காரணமே "கண்ணோட்டம்" என்ற இந்தப்பண்பு தான் என்று வள்ளுவர் சொல்லுகிறார்.

அந்த அளவுக்கு மிகச்சிறந்த ஒன்றான இது மன்னனுக்கு எவ்வளவு தேவை என்று இந்த அதிகாரத்தை ஒதுக்கி இருக்கிறார்.

கண்ணோட்டம் என்பதற்கு (என் கருத்தில்​) மிக எளிய சொல் "இரக்கம்" Smile கருணையும் நன்கு பொருந்தும் ஒன்றே! (அகராதி "தாட்சணியம்" என்று சொல்லுகிறது, நல்ல சொல் என்றாலும் வடமொழியோ என்று எனக்கு ஐயம்). அறத்துப்பாலில் வந்த அருளுடைமை இதிலிருந்து மிக வேறுபட்டதல்ல என்றும் கருதுகிறேன்.

தமிழில் "ஒருபொருட்பன்மொழி" என்ற வழக்கம் உண்டு.

கூடுதல் வலியுறுத்துவதற்காக ஒரே பொருளைக்கொண்ட இரு சொற்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்குதல்.

"கழி பெரும்" என்பதைக் கிட்டத்தட்ட அந்த வகையில் சேர்க்கலாம். (மிகுதி / கூடுதல் என்று பொருள் படும் இரு சொற்கள்). காரிகை என்பதற்கு அழகு என்று பொருளாம். (அழகைப் பெண்ணாக உருவகப்படுத்தி அல்லது "அழகான பெண்" என்ற பொருளில் தான் பெண்ணைக் காரிகை என்கிறார்களோ? Smile )

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
இரக்கம் என்னும் மிகச்சிறந்த அழகு (அழகான பண்பு)

உண்மையான் உண்டிவ் வுலகு
உள்ளதால் தான் இந்த உலகம் (நிலைத்து) இருக்கிறது!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 25 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Feb 23, 2016 8:07 pm

#572
கண்ணோட்டத்துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை


மீண்டும் "நிலத்துக்குச் சுமை" என்ற பயன்பாடு Smile

அதாவது "கண்ணோட்டம் இல்லாதவர்கள் நிலத்துக்குச் சுமையே ஒழிய அவர்கள் இருப்பதால் எந்தப்பயனும் உலகுக்கு இல்லை" என்கிறார்.

அதற்கு மாறாக "உலகியல்" - உலகம் இயங்குவது / உலகியல் நடப்பது - 'கண்ணோட்டம் உள்ளதால் தான்' என்ற நேர்மறையான செய்தியுள்ள குறள்

கண்ணோட்டத்துள்ளது உலகியல்
இரக்கம் என்ற பண்பினால் தான் உலகம் இயங்குகிறது

அஃதிலார் உண்மை

அந்தப்பண்பு இல்லாதோர் இருப்பது (உயிரோடு உள்ளது)

நிலக்குப் பொறை
நிலத்துக்குச் சுமை!

கண்டிப்பாக நாம் சுமையாக / வீணாய்ப்போன வெறும் குப்பைகளாக இருக்க விரும்ப மாட்டோம்!

பயனுள்ள குடிமக்களாக அல்லது ஆட்சியாளர்களாக இருக்க விரும்புவோர் "கருணை" என்னும் பண்புடன் (வெறுமென பெயருடன் மட்டும் அல்ல Laughing ) விளங்குவோமாக!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 25 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Feb 24, 2016 6:04 pm

#573
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் 
கண்ணோட்டம் இல்லாத கண்

அழகான உவமையுடன் கருத்து சொல்லும் குறள் Smile

இசை (மெட்டு - பண்)  மற்றும் பாடல் இவற்றின் உறவு தான் உவமை! 

பாடலுக்குப் பொருந்தாத இசை போல் கண்ணோட்டம் இல்லாத கண்ணும்  (அதாவது பயனற்றவை) என்று ஒப்புமை சொல்லி விளக்குகிறார் கவிஞர் Wink

குறைந்தது 1330 வெண்பாக்கள் எழுதியவர் என்ற விதத்தில் பண்ணும் பாட்டும் எப்படி ஒன்ற வேண்டும் என்பதில் வள்ளுவரின் அறிவு நுண்மையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை! "வெண்பாவின் தளைக்கட்டு பண்ணுக்கு வேண்டித்தான்" என்றும் "முற்காலங்களில் பாடலாகப்பாடவே அவை உண்டாயின" என்றும் என் தமிழாசிரியர் சொன்னது நினைவுக்கு வருகிறது!

பாடற்கு இயைபின்றேல் பண்என்னாம்
பாடலுக்குப் பொருந்தாத பண் (இசை / மெட்டு / ராகம்) கொண்டு என்ன பயன்?

கண்ணோட்டம் இல்லாத கண் கண்என்னாம் 
(அது போல) இரக்கம் இல்லாத கண் கொண்டு என்ன பயன்?

அன்பும், கனிவும், மற்றவர்கள் மீது கருணையும் காட்டத்தான் கண் இருக்கிறது - வெறுமென பொருட்களைக் காணுவதும் மற்றவர்கள் மேல் சீறுவதும் மட்டுமல்ல அதன் தொழில்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 25 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Feb 25, 2016 11:04 pm

#574
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்


நேரடியான, எளிதான பொருள் உள்ள குறள்!

"கருணை இல்லாத கண்கள் இருந்து என்ன பயன்" என்று சொல்லழகுடன் எதுகை சேர்த்து நெய்யப்பட்ட செய்யுள்!

அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண்
(வேண்டிய) அளவுக்கு இரக்கம் இல்லாத கண்

உளபோல் முகத்தெவன் செய்யும்

முகத்தில் உள்ளதாகத் தோன்றினாலும் என்ன செய்ய உதவும்?
(ஒன்றுக்கும் உதவாது / பயனற்றது / வெறுமென முகத்தில் தென்படுகிறது என்றெல்லாம் புரிந்து கொள்ளலாம்)

வள்ளுவர் மிகுந்த சினத்துடன் சலித்துக்கொள்வது இங்கே வெளிப்படுகிறது!

"எவன் செய்யும்" என்பது நேரடித்தாக்குதல் Smile

குறிப்பாக இங்கு மன்னனின் கண்ணோட்டம் குறித்த கருத்து என்று மனதில் கொள்ள வேண்டும். "கண்ணிருந்தும் குருடன்" என்று சொல்லுவதை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு தாக்குதல் இங்கே ஆட்சியாளர் மீது நடத்துகிறார்.

தகுந்த அளவில் இரக்கம் / அன்புணர்வு / கருணை / கரிசனை எல்லாம் எல்லாத மன்னன் விழி அற்றவன்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 25 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Feb 26, 2016 6:53 pm

#575
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்

கல்வி அதிகாரத்தில் "முகத்தில் புண்ணுடையோர் கல்லாதவர்" என்று படித்திருக்கிறோம்.

அதே போன்ற ஒரு கோரமான காட்சி இந்தக்குறளில் Embarassed

"கண்ணோட்டம் உள்ளது ஆபரணம், அலங்காரம்" என்றெல்லாம் சொல்லி விட்டுத் தடாலென்று "இல்லாதிருப்பது நோய்" என்று நேர் எதிர்ப்பாதையில் செல்கிறார்.

வன்மையாக கருத்துள்ள குறள் என்றாலும் மன்னருக்கு இத்தகைய அறிவுரை தேவையே என்பதில் ஐயமில்லை!

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்
கண்ணுக்கு (அழகு செய்யும்) அணிகலன் (ஆபரணம்) இரக்கம் தான்

அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும்
அப்பண்பு இல்லாவிட்டால் அதைப் புண் (கண் அல்ல) என்று தான் கருத முடியும்

வரலாறு மிகக்குறைந்த அளவிலான மன்னர்களையே மதிப்புடன் பார்க்கிறது.

பெரும்பாலான மன்னர்களைப் பொறுத்த வரையில் ரெண்டில் ஒன்று உண்மை :

1. அவர்கள் பெயரே இல்லை / நினைவு கூறப்படவில்லை!

2. அவர்கள் மதிக்கத்தக்கவர்கள் அல்ல - மக்களை இரக்கமின்றி நடத்தியவர்கள்!

ஆட்சிப்பொறுப்பில் இருப்போர் சிந்திக்க வேண்டிய ஒன்று Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 25 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Feb 29, 2016 6:01 pm

#576
மண்ணோடியைந்த மரத்தனையர் கண்ணோ 
டியைந்து கண்ணோடாதவர்

"மரம் மாதிரி நிக்கிறான் பாரு" என்று செயலற்று இருப்போரை அல்லது வேண்டிய நடவடிக்கை எடுக்காதவர்களை ஏசுவது வழக்கம்.

அப்படியாக இரக்கம் இல்லாதவர்களை "மரம் போன்று இயக்கமற்றவன்" எனத் திட்டும் குறள்.  (மற்றபடி, மரம் ஓடி நடக்காமல் மண்ணில் நிலைத்திருந்தாலும் அது தரும் நன்மைகள் கொஞ்ச நஞ்சமல்ல!  ஆக, மரத்தை ஒப்புமைப்படுத்துவது "இயக்கமற்ற நிலை" என்று மட்டுமே கொள்ள வேண்டும்.  மரத்தின் நல்ல பண்புகளை மனதில் கொண்டு வந்து குழப்பிக்கொள்ளக்கூடா

கண்ணோடியைந்து கண்ணோடாதவர்
கண்ணுக்குப் பொருத்தமான கண்ணோட்டம் (இரக்கம்) இல்லாதவர்கள்

மண்ணோடியைந்த மரத்தனையர்
மண்ணோடு பொருந்தி (நகராமல்) நிற்கும் மரம் போன்றவர்களே!

அத்தகையோர் மனதில் இயக்கமில்லை - என்ன துன்பமான சூழலில் யார் இருந்தாலும் இவர்கள் மனம் "இளகாது".  

கல் நெஞ்சம் படைத்தவர்கள் என்று சொல்வதற்கு ஒப்பான ஒரு உவமை. (கல்லால் ஆயிரம் நன்மை இருந்தாலும் நெஞ்சம் கல் போல் ஆகலாகாது. மரம் நல்லது ஆனால் நகராது. இளகாத மனம் / இரக்கமில்லாக் கண் அத்தகையதே).

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 25 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Mar 01, 2016 5:53 pm

#577
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்


ஏற்கனவே நாம் சில குறள்களில் படித்த கருத்தை இங்கே கொஞ்சம் சொல் விளையாட்டோடு சொல்கிறார்.

அப்படியாகக் கருத்தளவில் புதிதொன்றுமில்லை என்றாலும் படிக்க இனிமையான செய்யுள் Smile

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்
கண்ணோட்டம் (கனிவான இரக்கம்) இல்லாதவர்கள் கண் இல்லாதவர்களே!

கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்

(உண்மையிலேயே) கண் உள்ளவர்கள் கண்ணோட்டம் இல்லாமல் இருக்க மாட்டார்கள்

இரண்டு வரிகளுமே எதிர்மறையாகச் சொல்லப்பட்டிருந்தாலும் பொருள் நேர்மறையானது Smile கருணை இருந்தால் தான் அவை உண்மையான கண்கள்!

பல நேரங்களிலும் நமது கண்களை ஒளிப்படக்கருவிகளோடு ஒப்பிடுவதைக்காண இயலும். அதிவிரைவில் பல வண்ணங்களில் "இயங்கும்" படத்தை முப்பரிமாணத்தில் (பல பரிமாணங்களில்) எடுக்கும் அதிசயமான ஒரு கருவி நமது கண்கள் என்பதில் ஐயமில்லை.

என்றாலும், அதை மிகச் சிறந்ததாக ஆக்குவது படமெடுக்கும் திறமை மட்டுமல்ல. எடுத்த படத்தை அதிவிரைவில் மூளையோடு சேர்ந்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதில் இணையற்ற, சிக்கலான வேலைப்பாடு இருக்கிறதே, அங்கே தான் உண்மையான அதிசயம் நடக்கிறது!

கல்லூரியில் ஒரு போட்டிக்காக எழுதிய கவிதையின் முதல் இரண்டு வரிகள் நினைவுக்கு வருகின்றன :

"இம்மையில் நாம் பெறுகின்ற ஏற்றமிகு சுவைகளெல்லாம்
எம் விழியில் ஏற்படுத்தும் ஏற்றதொரு பாதிப்பை
" Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 25 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Mar 02, 2016 10:51 pm

#578
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ்வுலகு

பலரும் (குறிப்பாக ஆட்சியாளர்கள் அல்லது அதுபோன்ற உயர்நிலையில் இருப்போர்) கடமையில் தவறாமல் இருக்க முயலுவது வழக்கம். அதன் பலனாகத் தமக்குக்கீழே வேலை செய்வோரிடம் கண்டிப்பாக இருக்க வேண்டிய நிலை வரும். அது நல்லதும் தேவையானதும் தான்.

என்றாலும், அதற்காகக் கருணை / இரக்கம் இல்லாமல் கொடுமை செய்து விடக்கூடாது. இரண்டுக்குமான சமநிலை (குறிப்பாக, கீழே உள்ளோர் எத்தகையோர், வேண்டுமென்றே தவறுகிறார்களா இல்லை சூழ்நிலை கடினமா என்று ஆராயத்தக்க கண்கள் கொண்டிருப்பது) எளிதல்ல!

அப்படிப்பட்ட சமநிலை அடைந்தால் உலகுக்கே உரிமை கொண்டாடலாம் என்கிறார்!

கருமம் சிதையாமல்

வேலைக்கும் கடமைக்கும் கேடு வராமல்

கண்ணோட வல்லார்க்கு
இரக்கமும் காட்ட வல்லவர்களுக்கு

உரிமை உடைத்திவ்வுலகு
உலகே உரிமை ஆகும்!

நாடு அப்படிப்பட்ட மன்னனுக்கு உரியதாகும்!
(வேறு யாரும் அவனை அசைக்க முடியாது)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 25 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Mar 03, 2016 7:02 pm

#579
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப் 
பொறுத்தாற்றும் பண்பே தலை

ஒறுத்தல் என்பதற்கு உடனே நினைவுக்கு வரும் பொருள் "தண்டித்தல்" (எ-டு : இன்னா செய்தாரை ஒறுத்தல்).

அதற்கு இகழ்தல், அழித்தல், வெறுத்தல் என்றெல்லாமும் பொருள் சொல்கிறார்கள்.

ஆக மொத்தம், நம்மை ஏதோ ஒரு வகையில் துன்புறுத்துபவர்கள்!

அவர்களிடத்தும் கண்ணோட்டம் இருக்க வேண்டும் என்று "பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே" வகையிலான குறள் Smile

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்
வெறுப்பு அழிப்பு,. தண்டிப்பு போன்ற பண்புகளுடன் செயல்படுபவர்கள் மீதும் 

கண்ணோடிப்  பொறுத்தாற்றும் பண்பே தலை
கருணை காட்டிப் பொறுமையுடன் நடந்து கொள்வதே சிறப்பானது

"ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு மறுகன்னத்தைக்காட்டு" என்ற உயர்ந்த நிலை நாம் சிறுவயது முதல் படித்திருப்பதே. 

அவ்வண்ணம் செய்வதற்கு அப்படிப்பட்ட ஆளிடத்திலும் நமக்கு அன்பும் இரக்கமும் பொங்க வேண்டும்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 25 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Mar 04, 2016 5:41 pm

#580
பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க 
நாகரிகம் வேண்டுபவர்

கண்ணோட்டம் என்ற சொல்லுடன் நாகரிகம் என்ற சொல்லை இங்கே வள்ளுவர் பொருத்துகிறார். அப்படியும் ஒரு பொருள் இருக்கிறது போலும்!

இந்தக்குறள் கற்பிக்கும் கருத்தில் கண்டிப்பாக கருணை / இரக்கம் இருப்பதாக எனக்குத்தோன்றவில்லை. "பகைவனுக்கருள்வாய்" என்ற கருத்து இருக்கிறது, என்றாலும் "தன்னையே ஒருவன் அழிக்க முயலும் நிலையிலும் நாகரிகம் காப்பது" என்பது எப்படி இரக்கம் / கருணை என்பவற்றோடு இணையும் என்று புரியவில்லை.

நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்
(மற்றவர்கள்) விரும்பத்தகுந்த நாகரிகம் கடைப்பிடிப்பவர் 

பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர்
(தனக்குத்தரும் உணவுப்பண்டத்தில்) நஞ்சு இடுவதைப் பார்த்த பின்னரும், அதை உண்டு பொறுத்துக்கொள்வார்கள்

"நஞ்சு ஆளைக் கொன்றால் என்ன செய்வார்கள்" என்ற கேள்வி வருவது இயல்பே. அவ்வளவு கொடுமையான அளவில் இல்லாமல், "சிறிய துன்பம் செய்யவல்ல ஒன்றை வேண்டுமென்றே இடுவது" என்று புரிந்து கொள்ள வேண்டும்.

சென்ற குறளில் கண்டதன் நீட்சி என்று கொள்ளலாம். 

அதாவது, "தனக்கு நஞ்சு வைக்கும் ஒருவனையும் பொறுக்கும் அளவுக்கு இரக்கம் / கருணை கொண்ட ஆளாக இருங்கள்" என்று சுருக்கலாம். இங்கே நஞ்சு இடுவது அறியாமையினால் அல்ல, தெரிந்தே செய்வது!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 25 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Mar 07, 2016 6:29 pm

#581
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் 
தெற்றென்க மன்னவன் கண்
(பொருட்பால், அரசியல், ஒற்றாடல் அதிகாரம்)

முன்னாட்களில் மன்னனுக்கென்று ஒற்றர்கள் இருந்தது போன்றே இன்றும் அரசுகள் உளவுத்துறை என்ற பெயரில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் திறமை வாய்ந்த ஆட்களைக்கொண்டு ஆராய்வது, சில நேரம் குழப்பம் உண்டாக்குவது என்றெல்லாம் செலவு செய்வதைக் காண இயலும்.

தம் ஆட்சியைக் கவிழ்க்க வரும் முயற்சிகளை முன்னமேயே அறிந்து முறியடிப்பது மற்றும் பகை ஆட்சிகளை உருக்குலைக்க வழிகள் காண்பது என்பவை அன்றும் இன்றும் இவரது பணி எனலாம். பொது மக்களுக்கு இத்தகையோரால் கடைசியில் பலன் இருக்கலாம் என்றாலும், நிறையத்துன்பங்களும் அவதிகளும் உண்டாகவும் வழியிருக்கிறது. Sad

ஆட்சியில் உள்ளோர் ஒற்றர்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று வள்ளுவர் சொல்லுவதை இந்த அதிகாரத்தில் பார்க்கலாம் Smile

உரை சான்ற = சிறந்த பொருள் உள்ள 
தெற்றென்க = தெளிதல் 

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
ஒற்று (உளவுத்துறை), சிறந்த பொருள் கொண்ட நூல் ஆகிய இவ்விரண்டும் 

தெற்றென்க மன்னவன் கண்
மன்னவனின் கண்கள் என்று தெரிந்து தெளியுங்கள்!

நூல்கள் நெறிகளை விளக்கும். 

ஒற்று மக்கள் நிலையை (மேலும் எதிரிகள் நிலை / நாட்டின் சூழ்நிலை எனப்பலவற்றையும்) விளக்கும்.

இவ்விரண்டு கொண்டும் பார்த்தால் தான் உண்மை நிலை மன்னனுக்குத் தெரியும். 

அல்லாவிடில் அவனுக்குப்பார்வை இல்லாத நிலை வந்து விடும்!


Last edited by app_engine on Tue Mar 08, 2016 6:28 pm; edited 1 time in total

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 25 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Mar 08, 2016 6:19 pm

#582
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்

"அறியாமல் தவறு செய்வது"  அறிந்தே செய்வதைக்காட்டிலும் பொறுத்துக்கொள்ள எளிதானது.

குழப்பம் என்னவென்றால், பெரும்பாலும் ஆட்சியாளர்கள் நன்றாக அறிந்தே தவறு இழைப்பது தான் Sad

"அறிந்தே" என்று எப்படிச்சொல்ல முடியும்? 

இந்தக்குறள் காட்டுவது போல, அது தானே அவர்களது தொழிலே!
(நேரடியாக உளவுத்துறையினரால் ஒரு முறை விசாரிக்கப்பட்டவன் என்ற விதத்தில் அவர்கள் எவ்வளவு ஆழமாக அறிந்திருக்கிறார்கள், அரசுக்கு அறிவிக்கிறார்கள் என்பதில் எனக்கு ஐயம் கிடையாது. அதனால் தான் ஆட்சியில் உள்ளோர்  "பெரும்பாலும் அறிந்தே குற்றம் செய்கிறவர்கள்" என்று தயக்கமின்றிச் சொல்ல முடியும்)

எல்லார்க்கும் நிகழ்பவை எல்லாம்
யார் யாருக்கு என்னவெல்லாம் நடக்கிறது என்று

எஞ்ஞான்றும் வல்லறிதல்
எந்தக்காலத்திலும் விரைவாக அறிந்து கொள்ளுதல்

வேந்தன் தொழில்
வேந்தனின் கடமை
(இதற்கு அவன் ஒற்றர்களைப் பயன்படுத்துவான்)

சில சோம்பேறி ஆட்சியாளர்கள் இதில் குறைவு படுவார்கள். என்றாலும், நம் நாளின் அரசியல்வாதிகள் சற்றும் சோம்பேறிகள் அல்லர் என்பதில் ஐயமே இல்லை.

உளவுத்துறை வழியாகக் கிட்டும் அறிவை மக்களின் நன்மைக்குப் பயன்படுத்துகிறார்களா, இல்லையா என்பதில் தான் குழப்பம்!
("அறியாமை" அல்ல கோளாறு)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 25 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Mar 09, 2016 6:12 pm

#583
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் 
கொற்றங் கொளக்கிடந்தது இல்

கொற்றம் என்ற சொல்லின் சரியான பொருள் இன்று படித்தேன். ("மன்னா நீர் வாழ்க! உம் கொற்றம் செழிக்கட்டும்!!" என்றெல்லாம் நாடகவசனங்கள் கேட்டிருக்கிறோம் என்றாலும் சொல்லின் நேரடியான பொருள் குறித்து எண்ணியதில்லை Embarassed )

'வீரம் / வலிமை' என்ற பொருளில் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டாலும் இந்தக்குறளில் அதன் பொருள் "வெற்றி" என்பதாக அகராதி சுட்டுகிறது Smile

மற்றபடி எளிதான பொருள் தான் - ஒற்றர்களைக் கொண்டு ஆராய்ந்து அறியாத மன்னன் (அதாவது தன் "தொழில்" செய்யாத சோம்பேறி மன்னன்) வெற்றி காண வழியில்லை!

ஒற்றினான் ஒற்றி
ஒற்றர்களைக் கொண்டு உளவு செய்து 

பொருள் தெரியா மன்னவன்
(உண்மை) நிலைமை தெரிந்து கொள்ளாமல் இருக்கும் மன்னன் 

கொற்றங் கொளக்கிடந்தது இல்
வெற்றி பெற வழி இல்லை

தங்கள் ஆட்சியைக் களைந்த மன்னர்களின் கதைகள் (சரி, வரலாறுகள்) படித்தால் இது எவ்வளவு உண்மை என்று தெரிந்து கொள்ள இயலும்.

ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, தனது தகப்பனோ பாட்டனோ உழைத்து உண்டாக்கிய நிறுவனங்கள் பலவற்றினை ஒரு அக்கறை / பொறுப்பும் இல்லாமல் இன்பம் துய்த்து அலையும் பிள்ளைகள் உடைத்து நொறுக்குவதை நாம் பார்த்திருக்கிறோம் / பார்க்கிறோம்.

"உண்மை நிலை என்ன?" என்று அறிவதில் இருக்கும் அக்கறை தான் வெற்றிக்கு முதல் படி!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 25 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Mar 11, 2016 1:21 am

#584
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு 
அனைவரையும் ஆராய்வது ஒற்று

ஒரு வழியாக "ஒற்று" என்றால் என்ன என்னும் வரையறை இந்தக்குறளில் சொல்கிறார்.

அதாவது, வேறுபாடின்றி எல்லோரையும் ஆராய்பவனே சிறந்த ஒற்றன்!

வினைசெய்வார்
வேலை செய்பவர்கள் 
(அரசுப்பணியில் உள்ளவர்களை ஒற்று பார்க்க வேண்டும், இங்கே தான் கூடுதல் ஆபத்து வர வாய்ப்பு)

தம் சுற்றம்
ஒற்றனுக்கு உறவினர்கள் 
(அதாவது, வேண்டப்பட்டவர்கள் - அவர்களையும் விட்டு வைக்காமல் உளவு செய்ய வேண்டும் - இந்தத்தொழிலில் "நம்பிக்கை" என்பது ஓரளவுக்கு மட்டுமே இருக்கலாம்)

வேண்டாதார்
ஒற்றனுக்கு வேண்டாதவர்கள் 
(எதிரிகள், பகைவர்கள், பிடிக்காதவர்கள் - அப்படியாக வேண்டியவர் வேண்டாதவர் என்ற வேறுபாடின்றிக் கண்காணிக்க வேண்டும்)

என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று
என்று அனைவரையும் ஆராய்பவன் தான் நல்ல உளவாளி!

முற்காலங்களிலும் (நம் நாளைய அரசியலிலும்) நெருங்கினவர்களே பின்னர் எதிரிகளாக ஆவது நிறையப்படித்திருக்கிறோம். அப்படியாக, ஆட்சிப்பணியில் இருப்போருக்கு எல்லோரையும் ஒற்றுப்பார்த்துக் கண்காணிக்க வேண்டிய தேவை இருக்கிறது. 

அளவில்லாமல் நம்பிக்கை வைப்பது முட்டாள்தனம்.

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 25 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Mar 11, 2016 10:05 pm

#585
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று


கடா என்றால் வினா என்கிறது அகராதி.

அப்படியாக "பார்த்தால் கேள்வி எழும்பாத தோற்றம்" என்று "கடாஅ உரு" என்பதைப் புரிந்து கொள்ளலாம். "ஆளைப்பார்த்தாலே சரியில்லையே" என்று ஐயம் உருவாகும் தோற்றம் உள்ளவன் ஒற்றனாக இயலாது Embarassed

உகுத்தல் என்றால் நிலைகுலைதல் என்று பொருளாம். அப்படியாக, "உகாஅமை" (இங்கேயும் கடாஅ போலவே அளபெடை) என்பது "நிலை குலையாமல் இருத்தல்!

கடாஅ உருவொடு
(கண்டால்) ஐயம் வராத தோற்றத்துடன்

கண்ணஞ்சாது
கண்ணில் அச்சம் இல்லாமல் (உள்ளுக்குள் அச்சம் இருந்தாலும் வெளியில் / கண்ணில் தெரியக்கூடாது)

யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று
எந்தச்சூழலிலும் நிலை குலையாமல் இருக்க வல்லவனே சரியான ஒற்றன்!
(எப்படிப்பட்ட நிலையிலும் தெரிந்தவற்றை உளறி விடாமல் இருக்கப்படித்தவன்)

எளிதில் உடைக்க முடியாத மனவலிமை, மற்றவர்களுக்கு ஐயம் ஏற்படுத்தாத தோற்றம் - இவை இரண்டும் இல்லாவிடில் வேறு வேலை தேடிக்கொள்ள வேண்டியது தான்.

அச்சம் உளவுத்துறைக்கு ஒவ்வாத பண்பு. (சில நேரங்களில் அஞ்சுவது போல நடிக்க வேண்டி வரலாம், அது வேறு, அப்பொழுதும் அறிந்தவற்றை உளறாமல் காக்கப் படிக்க வேண்டும்)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 25 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Mar 14, 2016 9:00 pm

#586
துறந்தார் படிவத்தராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று


கதைகளிலும் திரைப்படங்களிலும் உளவாளிகள் துறவி / சாமியார் வேடங்களில் வருவது இந்தக்குறளின் அடிப்படையில் போலும் Laughing

வேறொரு கணக்கில் பார்த்தால் சாமியார் தோற்றத்தில் இருப்பவர்களை நம்பாமல் இருப்பதற்கு இன்னுமொரு காரணம் இங்கே கிடைக்கிறது Laughing

துறவிகளுக்கு வேற்று நாடுகள் சென்றாலும் பெருமதிப்பு இருந்த முற்காலங்களில் அவர்களை மன்னர்கள் ஒற்றர்களாகப் பயன்படுத்திய வரலாறும் இதிலிருந்து தெரிந்து கொள்ளுகிறோம்

"ஐயம் ஏற்படாமல் எங்கும் நுழையத்தக்க வேடம் அணிந்து" என்று இதைப்புரிந்து கொள்ளலாம்.

துறந்தார் படிவத்தராகி
துறவி போன்ற (ஐயம் உண்டாக்காத) தோற்றம் அணிந்து
(செல்ல முடியாத இடங்களுக்குள்ளும் நுழைந்து)

இறந்தாராய்ந்து
முழுவதுமாக / தீர ஆராய்ந்து

என்செயினும் சோர்விலது ஒற்று
(பிடிக்கப்பட்டால்) என்ன செய்தாலும் சோர்வு இல்லாமல் இருப்பவனே சிறந்த ஒற்றன்

"உயிரே போனாலும் உண்மையைக் கக்கிவிட மாட்டான்" என்று படிப்போம் அல்லவா, அப்படிப்பட்ட சோர்வற்ற / அச்சமற்ற நிலை ஒற்றர்களுக்கு மிகத்தேவை. பகைவர் இடங்களுக்குள் நுழைந்து உளவு செய்கையில் இது கண்டிப்பாக வேண்டி வரலாம்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 25 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Mar 15, 2016 5:01 pm

#587
மறைந்தவை கேட்கவற்றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று


"ஒற்று" என்ற சொல்லில் முடியும் நான்காவது குறள் இந்த அதிகாரத்தில். இவை எல்லாமே உளவுக்கு வரையறைகள். ("இதுவே ஒற்று / அதுவே ஒற்று" என்று பாடம் சொல்லிக்கொடுக்கிறார்).

அவ்விதத்தில், இந்தக்குறள் ஒற்றுத்தொழிலின் அடிப்படையான இரண்டு வேலைகளைப் பட்டியல் இடுகிறது.

1. வெளியில் தெரியாதவற்றை (மறைவாய் இருப்பவை / நடப்பவை) அறிவது
2. தெரிந்திருப்பவற்றை ஐயமில்லாமல் உறுதிப்படுத்துவது

ஆக மொத்தம், தற்போது நம்மில் பலரும் வேலை செய்யும் "தகவல் தொழில்நுட்பத்துறை" இதற்கு நெருங்கிய உறவு Smile

மறைந்தவை கேட்க வற்றாகி
ஒளிந்திருப்பவை தெரிந்து கொள்ளும் திறமையோடு
(வற்று = இயன்ற / முடிந்த / கூடிய)

அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று
தெரிந்திருப்பவை குறித்த ஐயங்களை நீக்கித் தெளிவதே ஒற்றுத்தொழில் ஆகும்!

மக்களின் நிலை, நாட்டின் நிலை, எதிரிகளின் நிலை என்று எல்லாவற்றையும் குறித்த ஐயமற்ற மற்றும் தெளிவான உண்மை விவரங்கள் மன்னனுக்கு மிகத்தேவை.

அதற்கு ஒற்று தான் சிறந்த வழி என்கிறார்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 25 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Mar 16, 2016 9:56 pm

#588
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்


ஒற்றுக்கும் "தரக்கட்டுப்பாடு" வேண்டும் என்று சொல்லும் குறள் Laughing

"ஒற்றனுக்கு ஒற்றன்" என்று விளக்கவும் இடமிருக்கிறது. ("ஒற்றினால் ஒற்றிக்கொளல்")

சுருக்கமாக, "எளிதில் நம்பி விடாதே, உளவு ஒற்று என்று வரும்போது 'நம்பிக்கை' என்ற பண்பு கூடுதல் உதவாது" என்கிறார் Wink

ஒற்றொற்றித் தந்த பொருளையும்
உளவு செய்து கிடைத்த தகவலையும்

மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல்
மற்றுமோர் (வேறொரு) ஒற்றினால் சரிபார்த்த பின்னரே ஏற்றுக்கொள்ள வேண்டும்

ஆக, ஒரே ஒரு வழியாக வரும் செய்தியை அப்படியே உண்மை என்று ஏற்றுக்கொண்டு முடிவுகள் எடுத்தால் தவறுகள் ஏற்பட வழியுண்டு. எவ்வளவு நம்பகமான ஒற்றன் என்றாலும் தவறிழைக்க வழியுண்டு என்பதால் "இன்னும் இரண்டு கண்கள்" கொண்டு அதை ஆராய்வது நல்லது.

இங்கும் தகவல் தொழில்நுட்பத்துறையை ஒப்பிடத் தோன்றுகிறது Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 25 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Mar 17, 2016 9:53 pm

#589
ஒற்றெற்றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப்படும்


மென்பொருளுக்குத் தரக்கட்டுப்பாடு செய்வதில் "தேர்வு" நடக்கும்பொழுது மூன்று பேராவது இருக்க வேண்டும் என்று பல நிறுவனங்களிலும் ஒழுங்குமுறை உண்டு.

அதாவது, "இன்னும் இரு கண்கள்" மட்டுமல்ல, "இன்னும் இரண்டு பேர்" சரியென்றால் தான் அது அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும்.

ஒற்று / உளவுக்கு அதோடு ஒப்புமை இருப்பதை இந்தக்குறளில் காண முடிகிறது. நம் நாளின் எல்லா மேலாண்மைத் துறைகளுக்கும் குறளில் இப்படியாக ஒப்புமைகள் இருக்க வழியுண்டு Smile

ஒற்றெற்றுணராமை ஆள்க
"தன்னை ஒற்றுப்பார்க்கிறார்கள்" என்று உணராத படிக்கு ஆள வேண்டும்
(உரையாசிரியர்கள் இதை ஒற்றனுக்கே பொருத்தி "ஒரு ஒற்றன் அறியாத வண்ணம் அவனை வேறு ஒற்றனைக்கொண்டு உளவு பார்த்து ஆள்க" என்கிறார்கள்.)

உடன்மூவர் சொற்றொக்க தேறப்படும்
மூன்று ஒற்றர்களின் சொல் ஒன்றுக்கொன்று ஒத்திருந்தால், அந்தக்கருத்து (உண்மை என்று) தெரிந்து கொள்ளப்படும்!

மூன்று பேர் எனும்பொழுது ஒரு வட்டமும் முழுமையாக்க முடியும் Wink

#1 = முதல் ஒற்றன்
#2 = முதல் ஒற்றனுக்கு ஒற்றன்
#3 = இரண்டாம் ஒற்றனுக்கு ஒற்றன்
மீண்டும் #1 = மூன்றாம் ஒற்றனுக்கு ஒற்றன்
Laughing

எல்லா இடங்களிலும் "வேவு பார்க்கும் ஒளிக்கருவிகள்" இருக்கும் நம் நாட்களில், ஆட்களும் கருவிகளும் தொழில்நுட்பமும் இந்த மூன்று இடங்களை நிறைவு செய்வதாக எனக்குப்படுகிறது.

(உடுமலைப்பேட்டையில் நடந்த கொடுமை போன்ற நிகழ்வுகளில் ஒளிக்கருவி செய்த வேலை கொலையாளிகள் "ஒற்றெற்றுணராமை" என்பதன் எடுத்துக்காட்டு. என்றாலும், பொறுப்பில் உள்ளோர் இப்படிப்பட்ட செய்திகளைக் கொண்டு என்ன செய்கிறார்கள் என்பது கேள்விக்குறியே Sad தனி மனிதர்களாவது இந்தக்கொடுமை கண்டு பதறி, தன்னளவில் சாதிக்கும் வன்முறைக்கும் எதிராவார்களா?)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 25 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Mar 18, 2016 8:07 pm

#590
சிறப்பறிய ஒற்றின் கண் செய்யற்க செய்யின் 
புறப்படுத்தான் ஆகும் மறை

ஒற்றர்களின் வாழ்க்கை எப்படி மறைவிலேயே இருந்து விடும்  என்று சுட்டும் குறள் Sad

எவ்வளவு திறமை வாய்ந்தவர்கள் என்றாலும் ஒற்றர்களை எல்லோரும் அறியப்புகழ இயலாது (குறிப்பாக முற்காலங்களில்).  அப்படியாக, கடினமான சூழ்நிலைகளில் பெரும் வீரச்செயல்கள் செய்து நாட்டுப்பணி செய்தாலும், பொது மக்கள் முன்னர் அவர்களுக்குப் புகழ் கிட்ட வழியில்லை. 

இரக்கத்துக்குரிய நிலை தாம்!

ஒற்றின் கண் சிறப்பறிய செய்யற்க
ஒற்றர்களின் சிறப்பை எல்லோரும் அறியும் வண்ணம் புகழக்கூடாது 

செய்யின், மறை புறப்படுத்தான் ஆகும்
செய்தால், மறைந்திருக்க வேண்டியதை வெளிப்படுத்தியதாகி விடும்!

மறைவில் செய்தால் தான் ஒற்று!  பாராட்டுதலின் வழியாக வெளிப்பட்டு விட்டால், அவன் இனிமேலும் ஒற்றனாக இருக்க முடியாது. அது கூட ஒரு வகையில் பரவாயில்லை! 

தனிப்பட்ட வாழ்வில் கூட, அவனை எதற்கும் யாரும் நம்பாத கடினமான சூழ்நிலைக்குத் தள்ளப்படுவான். "ஒரு நாள் புகழ், பின்னர் வாழ்நாள் முழுதும் துன்பம்" என்ற நிலையை யார் விரும்புவார்கள்? அப்படியாக, தனிப்பட்ட விதத்தில் மன்னனிடம் இருந்து பரிசுகள் / பாராட்டுகள் பெறலாமே ஒழிய மக்கள் முன் தன் வீரத்தைச் சொல்லி நடக்க இயலாது Sad

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 25 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Mar 21, 2016 5:17 pm

#591
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று

(பொருட்பால், அரசியல், ஊக்கமுடைமை)

மன்னனுக்கு, ஆட்சியாளர்களுக்கு, வீரருக்கு - ஏன் எல்லோருக்குமே மனதில் ஊக்கம் வேண்டும். அது இல்லாவிடில் வேறு என்ன திறமைகள் இருந்தாலும் சிறப்பாகச் செயல்பட இயலாது.

மாறாக, ஊக்கத்துடன் செயல்படுவோர் திறமையில் குறைவு பட்டாலும் மொத்தத்தில் கூடுதல் வெற்றிகளைப் பெற்று நிறைய சாதனைகள் புரிவார்கள் / புரிந்திருக்கிறார்கள்!

அந்தப்பண்பை வலியுறுத்தும் அதிகாரம்!

உடையர் எனப்படுவது ஊக்கம்
ஊக்கம் உள்ளோரே "உடையவர்கள்" எனப்படுவர்
(இன்னொரு விளக்கம் : ஒருவருக்கு உடைமை என்று சொல்லத்தக்கது ஊக்கம் என்ற பண்பு மட்டுமே)

அஃதில்லார் உடையது உடையரோ மற்று
அது இல்லாதவர்கள் வேறு என்ன கொண்டிருந்தாலும் "உடையவர்கள்" என்று சொல்ல முடியாது
(இன்னொரு விளக்கம்: ஊக்கம் இல்லாதாரிடம் உள்ள மற்றவையெல்லாம்  உடைமைகள் ஆகாது / அவை கொண்டு பயனொன்றும் இல்லை)

இந்தக்குறள் எப்படிப்பட்ட "நடைமுறை உண்மை" என்பது வளங்கள், திறமைகள் இருந்தும் புகழ் பெறாமல் (அல்லது தக்க அளவில் சாதிக்காமல்) போன நம்மைச்சுற்றி இருக்கும் யாரையும் பார்த்துப் புரிந்து கொள்ளலாம்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 25 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 25 of 40 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 32 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum