Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 24 of 40 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 32 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 24 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jan 06, 2016 11:01 pm

#542
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் 
கோல் நோக்கி வாழுங் குடி

மன்னனின் ஆட்சியை (செங்கோலை) மழையுடன் ஒப்பிடும் குறள்!

மிக உயர்ந்த உவமை என்பதில் மறுப்பிருக்க வழியில்லை Smile

உலகெல்லாம் வானோக்கி வாழும்
உலகம் முழுவதும் வானத்தைப் பார்த்தே வாழ்கிறது 
("உயிர்கள் யாவும் மழையை நம்பி வாழ்கின்றன" என்றோ, "இறைவனை எதிர்பார்த்தே உயிர்கள் உள்ளன" என்றோ பொருள் கொள்ளலாம். மழை வெள்ளத்தால் அழிவு வந்த, மழை குறித்து அஞ்சி நின்ற நிலையிலும் இது பொருந்தும் Embarassed )

குடி மன்னவன் கோல் நோக்கி வாழும்
(அது போல) குடிமக்கள் மன்னவனின் செங்கோல் நோக்கியே வாழ்வார்கள் 
("மன்னனின் செம்மையான ஆட்சி" என்று இங்கு பொருள் கொள்ளலாம்)

அப்படியாக, மன்னன் ஆட்சியின் மாண்பு உயிர் காக்கும் மழையோடு ஒப்பிடப்படுவது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.

ஆளும் நிலையில் உள்ளவர்கள் எவ்வளவு உயர்ந்த பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு இதனினும் பெரிய உவமை சொல்ல இயலாது என்றே நினைக்கிறேன்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 24 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jan 08, 2016 12:48 am

#543
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் 
நின்றது மன்னவன் கோல்

"அந்தணர் என்போர் அறவோர்" என்று முப்பதாம் குறளில் படித்திருக்கிறோம். 

அப்படியாக,  அந்தணர் நூற்கும் = அறவோர் எழுதும் நூல்களுக்கும்

அவற்றையே மறுபடியும் "அறத்திற்கும்" என்று மீண்டும் வலியுறுத்துகிறார்.

இவையெல்லாம் செங்கோல் சரியில்லை என்றால் எடுபடாது என்று சொல்ல வரும் குறள்.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும்
அறவோர் எழுதி வைத்த நூல்களுக்கும், அறங்களுக்கும் 

ஆதியாய் நின்றது மன்னவன் கோல்
அடிப்படையாய் இருப்பது மன்னனின் ஆட்சி முறை தான் 

மன்னர் கால வழி குறித்து நாம் அறிந்திருக்க வேண்டிய ஒன்று - மன்னன் தான் தலைமை நீதிபதியும். குறிப்பாக வள்ளுவர் வாழ்ந்த நிலத்தில், காலத்தில் அவ்வாறு இருந்திருக்க வழியுண்டு.

அப்படியாக, நீதி நெறியில் நாடு செல்ல வேண்டுமென்றால் அவற்றை அறங்களாக மறைநூல்களில் எழுதி வைத்தால் மட்டும் போதாது. அவற்றின் அடிப்படையில் மன்னன் செங்கோல் செலுத்துவது மிகத்தேவை!

அல்லாவிடில், நாட்டில் அறம் இருக்காது. குடிகள் அல்லல் படுவர்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 24 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jan 08, 2016 11:52 pm

#544
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் 
அடிதழீஇ நிற்கும் உலகு

"தழீஇ" அளபெடை மீண்டும் Smile
(தழுவி என்று பொருள்)

மக்கள் மீது அன்பு காட்டுதல் (தழுவுதல்) மன்னனுக்கு வேண்டிய ஆட்சிப்பண்பு என்று வலியுறுத்தும் குறள்!

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
குடிமக்களை அன்புடன் அணைத்து ஆட்சி நடத்தும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு
அடிச்சுவடுகளில் உலகமக்கள் எல்லாரும் சேர்ந்து நிற்பார்கள்
(ஆட்சிக்கு எல்லோரும் ஒத்துழைப்பு நல்குவார்கள்)

மக்களை அரவணைப்பது ஆட்சியாளனுக்கு வேண்டிய பண்பு. அது இல்லையேல், எதிர்ப்பு / கலகம் / குழப்பம் / மறுபடி அடக்குமுறை என வெவ்வேறு துன்ப நிகழ்வுகளை எதிர்ப்பட நேரிடும். 

விளைவுகள் யாருக்கும் உவப்பானவை அல்ல. 

என்றாலும், வரலாற்றில் பெரும்பாலான மன்னர்களும் மக்களை அணைப்பதில் தவறி இருப்பதாகவே தோன்றுகிறது.  குறிப்பாக நம் நாளைய அரசியல் தலைவர்களில் பெரும்பாலோர் மக்களிடம் இருந்து அகன்றிருப்பதில் முனைப்பாக இருக்கின்றனர்!

எண்ணி ஒரு சிலரைப் பற்றி மட்டுமே நல்ல விதத்தில் வரலாறு நினைவுகூருவதில் இருந்து இதை நாம் உணரலாம் Sad

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 24 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jan 11, 2016 9:37 pm

#545
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட 
பெயலும் விளையுளும் தொக்கு

வெறுமென "தொக்கு" என்று கூகிளில் தேடினால் தின்னும் பண்டம் பற்றியவையே நிறைய வருவது கண்டு நகைக்க நேர்ந்தது. (மாங்காத்தொக்கு / கொள்ளுத்தொக்கு எல்லாம் எனக்கு முன்னமேயே தெரியுமே?) Laughing

இங்கு அது வரும் பொருள் "தொகு" என்று (சேர்ந்து / ஒன்றாக) Smile

அதாவது மழையும் விளைச்சலும் ஒன்றாகச் சேர்ந்து வரும் நல்வரம் கிட்டிய நாடு!

மன்னவன் இயல்புளிக் கோலோச்சும் நாட்ட
மன்னன் நெறிப்படி ஆட்சி நடத்தும் நாட்டில் 
(இயல்புளி = விதிகளின் படி / நெறிகளின் படி / நீதியாக)


பெயலும் விளையுளும் தொக்கு
(மழை) பெய்தலும் விளைச்சல் உண்டாதலும் சேர்ந்து (நன்றாக) நடக்கும் 

"பெய்யெனப் பெய்யும் மழை" நினைவுக்கு வரக்கூடும் Wink

"மன்னவன் நீதியாக நடந்தால் வானும் நிலமும் நற்பலன் தரும்" என்று வள்ளுவர் சொல்லுவது மீண்டும் அவரது இறை நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகக் கொள்ளலாம். (அதாவது, இயற்கையை ஆட்டுவிக்கும் ஒருவன், மன்னவனின் நீதி நெறிக்கு நற்பலனை ஊதியமாக வழங்குகிறான் என்கிறார்).

அதையே இன்னும் கொஞ்சம் நீட்டினால், "நீதி நெறி" என்பது இயற்கையை (அல்லது அதை ஆட்டுபவனை) எதிர்க்காமல், அதோடு ஒட்டி இருக்க வேண்டும் - அப்போது தான் நாட்டில் வளமிருக்கும் என்றும் கொள்ளலாம் Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 24 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jan 12, 2016 7:00 pm

#546
வேலன்று வென்றி தருவது மன்னவன் 
கோலதூஉங் கோடாதெனின்

நெறியோடு ஆட்சி நடத்துவதே ஒரு மன்னனுக்கு வெற்றி - அல்லாமல் படை வலிமை கொண்டுள்ள பெருமை அல்ல என்று விளக்கும் குறள்.

அன்றும் இன்றும் ஆட்சியாளர்களுக்கு இருக்கும் குழப்பம் / குற்றம் இங்கே வெளிச்சத்துக்கு வருவதைக் காணலாம்.

பல நாடுகளும் இன்றும் அவர்களுடைய வரவு-செலவுத்திட்டத்தில் பெரும்பங்கு  படைகளுக்கு ஒதுக்குவது தெரிந்ததே. மேலும், வல்லரசு என்றால் அணுகுண்டு வைத்திருப்பது, அடுத்தவனை அடிக்கும் திறமையில் விஞ்சி நிற்பது என்பதே பொதுவான அறிவு (அல்லது அறியாமை).

வள்ளுவர் அத்தகைய சிந்தனையை அடித்து நொறுக்கும் இடம் இந்தக்குறள்!

வென்றி தருவது மன்னவன் கோல்
மன்னனுக்கு வெற்றி தருவது அவனது செங்கோல் தான் (அதாவது, செம்மையான ஆட்சி முறை)

அதூஉங் கோடாதெனின்
அதுவும் கோணல் ஆகாமல் / வளையாமல் இருக்குமானால் தான்!
(நேர்மை / நெறி சார்ந்து, நீதியை விட்டுக்கொடுக்காமல், சார்பு நிலை இல்லாமல்)

வேலன்று
அல்லாமல் வேல் அன்று (படைவலிமை அல்ல வெற்றி தருவது)

வென்றி = வெற்றி என்பதைக் காண்க!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 24 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jan 13, 2016 10:52 pm

#547
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை 
முறைகாக்கும் முட்டாச் செயின்

புரிந்து கொள்ள எளிமையான குறள் Smile

உள்ளடங்கி இருக்கும் கருத்து மிகவும் வேண்டிய ஒன்று!

வையகம் எல்லாம் இறை காக்கும்
உலகம் எல்லாவற்றையும் (அதாவது, நாட்டில் உள்ள உயிர்களை எல்லாம்) மன்னன் காப்பான் 

முட்டாச்செயின் அவனை முறைகாக்கும்
முறைப்படி நடப்பதை விடாதிருந்தால், அதுவே அவனைக்காக்கும்!

அப்படியாக மற்றவரை எல்லாம் காக்கும் மன்னனை எது காக்கும்? 

அவனது செம்மை, நெறிப்படி நடத்தல், முறையில் பிறழாதிருத்தல் - ஒரு சொல்லில் சொன்னால், "செங்கோல்" (பிடித்தல்) Smile

"முட்டாச்செயின்" என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சில ஆட்சியாளர்கள் தொடக்கத்தில் நன்றாக இருப்பார்கள் (அல்லது அதற்குரிய ஆவலைக் காண முடியும்).

ஆனால், நாள் செல்லச்செல்ல, அவர்கள் கெட்டுப்போவதும், இறுதியில் தாங்கமுடியாத அளவுக்குக் கொடுமையால் நிறைவதும் வரலாற்றிலும் நம் நாளிலும் நிறையக் காண முடியும் Sad

நேர்மையில் தவறாமல், முடங்காமல் இருத்தல் மட்டுமே ஆட்சியாளனுக்குக் காவல்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 24 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jan 14, 2016 10:41 pm

#548
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் 
தண்பதத்தான் தானே கெடும்

எண்பதத்தான் / தண்பதத்தான் என்று எதுகை. 

ரெண்டு சொல்லுக்கும் பொருள் தெரியவில்லை Embarassed கண்டு பிடிக்கலாம்!

எண்பதம் அகராதிப்படி:


, n. < எளி-மை +. Easy accessibility; எளியசெவ்வி. எண்பதத்தா னோரா முறைசெய்யா மன்னவன் (குறள், 548).
 
தண்பதம் அகராதிப்படி:


3. Low condition; தாழ்ந்த நிலை. தண்பதத்தாற் றானே கெடும் (குறள், 548).

ரெண்டுக்குமே இந்தக்குறள் மேற்கோளாகக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது Smile

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
எளிதில் காணத்தக்கவனாய் இல்லாமலும், ஆராய்ந்து முறை செய்யாமலும் இருக்கும் மன்னன்

தண்பதத்தான் தானே கெடும்
தாழ்ந்த நிலையை அடைந்து தானாகவே கெட்டழிவான்

செங்கோன்மை அதிகாரத்தில் எதிர்மறையில் கொடுக்கப்பட்டுள்ள, நல்ல கருத்துள்ள குறள். 

எளிமையும், நெறிமுறையும் இல்லாத அரசனுக்கு வேறு எதிரிகள் வேண்டாம்!  

அத்தகைய பண்பற்ற நிலையே எதிரி! அழிவு உறுதி!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 24 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jan 15, 2016 9:35 pm

#549
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் 
வடுவன்று வேந்தன் தொழில்

"பெருமை இல்லை கடமை" என்று சொல்லும் புகழ் பெற்ற திரை மொழி நாம் பல முறை கேட்டிருப்பது Smile

அதே போன்ற ஒரு வள்ளுவரின் மொழி இங்கே காண்கிறோம் : "வடுவன்று, தொழில்" (குறை இல்லை கடமை Smile )

குடிபுறங் காத்தோம்பி
குடிகளைப் பகைவர்களிடமிருந்து காத்துப்போற்றி
(புறம் என்பதற்கு உடல் என்றும் பொருள் இருப்பதால், சில உரையாசிரியர்கள் மக்களையும் தன்னையும் காத்து என்கிறார்கள்)

குற்றம் கடிதல்
குற்றங்களைத் தண்டிப்பது

வேந்தன் தொழில்
மன்னனின் கடமையாகும் 

வடுவன்று
குறை அல்ல

மக்கள் நலத்தை முன்னிட்டுக் குற்றவாளிகளைக் கடிந்து கொள்வது மன்னனுக்கு அழகே ஒழிய வடு அல்ல Smile 
(சில நேரம் கடுமையான தண்டனையும் "கடிதலில்" வரும்)

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 24 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jan 22, 2016 11:21 pm

#550
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களை கட்டதனொடு நேர்


மு.க. கொலைத் தண்டனைக்கு எதிரானவர் என்பதை இந்தக்குறளுக்கு எழுதும் உரையிலும் காட்டுவது குறிப்பிடத்தக்கது Smile

என்ற போதிலும், வள்ளுவர் "கொலைத்தண்டனை வேண்டும்" என்று சொல்வதாகவே எனக்குப் படுகிறது. (அவ்வாறே மற்ற உரையாசிரியர்கள் கருதுவதைக் காண முடியும். மட்டுமல்ல, உவமையும் அப்படிப்பட்ட கருத்தையே சொல்லுகிறது)

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்
கொடியவர்களை மன்னன் கொலை செய்து தண்டிப்பது
(மு.க : கொலை போன்ற குற்றம் செய்த கொடியோரை மன்னன் தண்டிப்பது)

பைங்கூழ் களை கட்டதனொடு நேர்
இளம்பயிர் (காக்கக்) களைகளை நீக்குவதற்கு ஒப்பானதே.
(வள்ளுவர், "அது கொடிய செயல் இல்லை, காக்கும் செயலே" என்கிறார்)

தீமை செய்வோருக்கு அதற்குரிய தண்டனை வேண்டும் என்று வாதிடுவோர் பலரும் "கொலைத்தண்டனை" என்று வரும்போது "ஐயோ, கூடாது" என்று சொல்லுவதைக் காண முடியும்.

உலக நாடுகள் பலவும் அத்தகைய தண்டனையை நீக்கி விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. (இந்தியாவில் இன்னும் உள்ளது என்பது தெரிந்ததே).
போரிலும் திரையிலும் கொடியோர் கொல்லப்படுகையில் கை தட்டுவோர் கூட,  "அரசு கொலைத்தண்டனை கொடுக்கலாகாது" என்று சொல்லுவது வழக்கம்.

பொய்யர்கள் பலர் அதிகாரிகளாக இருக்கும் நிலையும், வழக்கு மன்றங்களிலும் நீதித் துறையிலும் ஊழல் மலிந்திருக்கும்நிலையும் இதற்கான காரணம் எனலாம்.

அப்படிப்பட்ட பொய்யான சூழலில் ஒரு குற்றமற்றவன் கொலைத்தண்டனையில் உயிர் இழந்தால், உண்மை தெரிய வரும்போது உயிர் திரும்பக்கொடுக்க மனிதர் யாருக்கும் வல்லமை இல்லையே Sad

அதனால், பொதுவாகக் கொலைத்தண்டனையோடு உடன்படும் நான் ("உயிருக்கு உயிர்" என்பது நீதியே), இன்றைய ஆட்சியாளர்களும் / நீதித்துறையும் கொலைத்தண்டனை தரும் தகுதியற்று நிற்பதாகவே உணருகிறேன்.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 24 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jan 25, 2016 8:31 pm

#551
கொலை மேற்கொண்டாரிற் கொடிதே அலை மேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து

(பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை அதிகாரம்)

கொலைக்கு எதுகையாக வரும் "அலை" என்பது இங்கே என்ன பொருளில்?

கடல் அலையோ அல்லது "அலை பாயுதே" என்ற பொருளோ அல்ல Smile

"அங்குமிங்கும் அலைந்து திரிதல்" என்ற விதத்திலும் இல்லை.

"அலைக்கழித்தல்" என்ற பொருளில், அதாவது "வருத்துதல், கொடுமைப்படுத்துதல்" என்ற பொருளில் இங்கே அலை வருகிறது.

அலை மேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து
(மக்களை) வருத்துவதை வழக்கமாகக் கொண்டு தகாதவைகளைச் செய்து நடக்கும் வேந்தன்

கொலை மேற்கொண்டாரிற் கொடிதே
கொலையை வழக்கமாகக் கொண்டவர்களையும் விடக்கொடியவனாவான்
(அல்லது கொலையைத் தொழிலாக நடத்துவோரையும் விடக்கொடியவன்)

மக்களை அலைக்கழிக்கும் வேந்தன் கூலிப்படைக் கொலையாளியை விடக் கொடியவன் என்று சொல்லுவதாகக் கொள்ளலாம்.

கொடுங்கோல்  என்பது செங்கோலுக்கு எதிர்ச்சொல் என்று ஒரே குறளில் அடித்துப் புரியவைத்து விடுகிறார் வள்ளுவர்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 24 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jan 26, 2016 6:15 pm

#552
வேலொடு நின்றான் இடுவென்றது போலும்
கோலொடு நின்றான் இரவு


இரவு (இரத்தல்) என்பதற்கு அகராதி நமக்குத்தெரிந்த பொருள் தான் சொல்கிறது - பிச்சை எடுத்தல். அதோடு, அங்கே குறள் 552 மேற்கோளாக இருக்கிறது. Laughing

ஆக, மன்னன் மக்களிடம் பொருள் கேட்டு இரத்தல் / பிச்சை எடுத்தல் என்ற செயல் கொடுங்கோன்மை வகையில் வருகிறது Smile

ஆட்சி செலுத்துபவன் எடுக்கும் பிச்சைக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள் "வரி" என்று.

பொது நன்மைகள், பாதுகாவல் போன்றவற்றுக்கு இத்தகைய வரி வாங்குதல் தேவை தான். என்றாலும், ஒரு ஆட்சியின் கொடுங்கோன்மை அது கணக்கு வழக்கில்லாமல் மக்களைச் சுரண்டுவதில் வெளிப்படுகிறது.

மன்னன் தனது ஆடம்பரம் / உல்லாசம் போன்றவற்றுக்கு மக்களை மிரட்டிப் பொருள் கேட்பது என்று இந்த "இரவு" சொல்லைப் புரிந்து கொள்ளலாம்.

அதைக் கொள்ளைக்காரன் செய்யும் "மிரட்டிப் பொருள் பிடுங்குதலுக்கு" இணையாக்குகிறார் - மிகச்சரி தான்!

கோலொடு நின்றான் இரவு
ஆட்சியில் உள்ளவன் இரப்பது
(அதாவது, மிரட்டிக் கொடுமையான வரி வாங்குவது)

வேலொடு நின்றான் இடுவென்றது போலும்
வேலோடு நின்று (கொள்ளை அடிப்பவன்) "கொடு" என்று பொருளைப் பிடுங்குவது போலாகும்!

கொடுங்கோல் மன்னன் = கொள்ளைக்காரன்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 24 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jan 27, 2016 5:43 pm

#553
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்


"நாடொறும்" என்ற சொல் இரு முறை பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனைப் பிரித்து எழுதினால் "நாள் தோறும்".

முதல் சொற்றொடருக்கு நேரடியாகவே பொருந்துகிறது. இரண்டாவதற்கு அப்படியே பொருத்தினால் அவ்வளவு நன்றாக இல்லை Embarassed வள்ளுவரும் அப்படிச்சொல்லவில்லை என்றே தோன்றுகிறது. மு.வ. சொல்கிறபடி "மெல்ல மெல்ல" என்ற பொருள் மிகப்பொருத்தம் Smile

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
ஒவ்வொரு நாளும் (நாட்டில் நடக்கும் நிறைகுறைகளை) ஆராய்ந்து நீதிமுறை செய்யாத மன்னன்

நாடொறும் நாடு கெடும்
மெல்ல மெல்ல நாட்டை இழப்பான்
(அல்லது, நாட்டின் மீதுள்ள கட்டுப்பாட்டை நாட்கள் செல்லச்செல்ல இழந்து விடுவான்)

"முறை செய்யா" மன்னன் கொடுங்கோலன். அத்தகையவனது ஆட்சியில் மக்கள் கடும் துன்பத்தில் உழலுவார்கள். "மன்னன் என்று ஒருவன் இருக்கிறானா" என்ற ஐயம் வலுக்கும்போது, அவனவன் தனக்குத் தோன்றினதைச் செய்வான்.

அமைதி, முன்னேற்றம் எல்லாம் இத்தகைய "தலைமை இல்லா" நிலையில் நடைமுறை இல்லை Sad

மன்னன் நாட்டை இழப்பது மட்டுமல்ல - நாடும் சீர்குலைந்து போகும். "தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்" என்னும் கடினநிலையில் மக்கள் உழலுவார்கள் Sad

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 24 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jan 28, 2016 4:59 pm

#554
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு


நாம் முன்பு பார்த்தது போலவே, கோடுதல் = கோட்டம் (கோணல் / வளைவு) அடைதல்; அதாவது ஆட்சி நேர்மையாக இல்லாமல் கோணலாக / கொடுமையாக இருத்தல்.

அப்படியாக, கோல்கோடி = கொடுங்கோல்

சூழுதல் என்றால் ஆராய்தல் என்று முன்னமே கண்டிருக்கிறோம் (சூழல் என்ன என்று பார்த்தல் Smile )

இனி இந்தக்குறள் படிப்பது எளிதே!

கோல்கோடிச்சூழாது செய்யும் அரசு

நேர்மையான ஆட்சி இல்லாமலும் (பின் விளைவுகள்​) ஆராயாமலும் செயல்படும் அரசு

கூழுங்குடியும் ஒருங்கிழக்கும்
பொருள் வளத்தையும் குடிமக்களையும் ஒருங்கே (சேர்ந்து) இழக்கும்

"கூழ்" என்ற சொல் கூழ்த்தல் என்ற பொருளில் வருவதாக அகராதி இந்தக்குறளை மேற்கோள் காட்டிச்சொல்வது குறிப்பிடத்தக்கது. (பொதுவாக நாம் நினைக்கும் "ஏழைகளின் உணவு - கூழானாலும் குளித்துக்குடி" என்ற பொருளில் அல்ல)

கூழ் என்பதற்குப் பொன் என்றும் அங்கே பொருள் பார்க்கிறோம்.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 24 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jan 29, 2016 7:21 pm

#555
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை


கொடுங்கோல் மன்னனின் கீழ் மக்கள் படும் துன்பம் எப்படி அவனைச் சிதைத்து அழிக்கும் என்று எச்சரிக்கை செய்யும் குறள்!

செல்வத்தைத் தேய்க்கும் படை
(கொடுங்கோல் மன்னனின்) செல்வத்தை அழிக்கும் படை

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
(அவன் கீழ்) துன்பப்பட்டு, அதைத்தாங்க முடியாமல் அழுவோரின் கண்ணீர் அல்லவா?

எளியாரின் கண்ணீர் எவ்வளவு வலியது என்று தொன்று தொட்டே மறை நூல்களில் நாம் படிக்கிறோம். யார் அதற்குக் காரணமோ அவர்கள் மீது இறைவன் நடவடிக்கை எடுப்பான் என அவை அடிக்கடி சொல்லுகின்றன.

இங்கே வள்ளுவர் கிட்டத்தட்ட அதே கருத்தில் சொல்லுகிறார் (இறைவன் மன்னனை அழிப்பான் என்று சொல்லவில்லை என்றாலும்).

கண்ணீரின் வலிமை மன்னனையே அழிக்கும் தன்மை வாய்ந்தது என்று அடித்துச் சொல்லுகிறார்! அதாவது, கொடுங்கோல் செய்வது அழிவுக்கு வழி என்பதை நயமாகச் சொல்லுகிறார்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 24 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Feb 01, 2016 6:29 pm

#556
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி


ஒளி என்ற சொல் இங்கே புகழ் என்ற பொருளில் வருவது குறிப்பிடத்தக்கது.

அதோடு, மன்னன் / மன்னுதல் என்று சொற்சிலம்பமும் ஆடுகிறார் Smile

மற்றபடி, எளிதான பொருள் தான்! "கொடுங்கோல் மன்னனுக்கு நிலைத்த புகழ் இருக்காது" என்ற எளிமையான பொருளைச் சொல்லும் குறள்!

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை
நேர்மையான ஆட்சிமுறை தான் மன்னனுக்கு நிலையான புகழைத் தரும்!
(மன்னுதல் = நிலைத்து இருத்தல்)

அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி
அது இல்லாவிட்டால், மன்னனுக்குப் புகழ் நிலைத்து நிற்காது!

கொடுங்கோலன் என்று நேரடியாகச் சொல்லாவிட்டாலும், "செங்கோன்மை இல்லாதவன்" என்று எதிர்ச்சொல் முறையில் அந்தப்பொருளைச் சொல்லுகிறார். பொருள் கொடுப்பதில் இது பொதுவான மொழி உத்தி தான்.

அதாவது, "அட முட்டாளே" என்றும் சொல்லலாம்.

"அறிவு இருக்கா" என்று எதிர்ச்சொல் முறையிலும் அதே கருத்தைச் சொல்லலாம். Laughing

பிந்தையது சற்றே நாகரிகமான, அழகுணர்வுள்ள முறை Wink

அப்படியாக, மன்னனின் கொடுங்கோன்மை என்பதை "செங்கோன்மை இல்லாமை" என்றும் சொல்லலாம் Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 24 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Feb 02, 2016 5:54 pm

#557
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு


அழகான உவமை நயம் உள்ள குறள்!

ஆளுவோர் அன்பும் அருளும் கொண்டிருப்பது மழைக்கு ஒப்பானது என்பதை எதிர்மறையில் சொல்லுகிறார். (அளி = அன்பின் விளைவால் செய்யப்படும் அருள், அழகான சொல்)

பயிர்களும் மற்ற உயிர்களும் மழை இல்லாவிடில் வாடி வதங்கி விடும். மன்னன் கொடுமைக்காரனாக இருந்தால் மக்களுக்கு அதே நிலை தான் Sad

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே
மழை இல்லா நிலை மண்ணுலகுக்கு எத்தகையதோ (எவ்வளவு துன்பம் தருமோ) அது போன்றதே

வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு
வேந்தன் அருள் இல்லாமல் இருத்தல் மக்களுக்கு!

மழையை இங்கே "துளி" என்று சொல்லி "அளி"க்கு எதுகை ஆக்குகிறார் Smile

சொற்சுவையும் பொருட்சுவையும் உவமையும் எல்லாம் கூடிய விருந்து இந்தக்குறள்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 24 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Feb 03, 2016 6:06 pm

#558
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்


கவிதையின் சிறப்புகளில் குறிப்பிடத்தக்க ஒன்று ஒரே வரிக்குப் பல வழிகளில் விளக்கம் தர இயலும் என்பது.

திருக்குறள் ஒரு வகையில் "நீதி நூல்" என்பதால் இந்த விளக்கங்கள் இன்னும் கூடுதல் கோணங்களை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன!

பல குறள்களுக்கும் இத்தகைய வகைவகையான விளக்கங்களை நாம் பல முறை இந்த இழையில் கண்டிருக்கிறோம்.

அப்படிப்பட்ட ஒரு சுவையான குறள் தான் இது Smile

முறைசெய்யா மன்னவன் கோற் கீழ்ப்படின்
(நீதி) முறை செய்யாத மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்தால்

இன்மையின் இன்னாது உடைமை
இல்லாதிருப்பதிலும் கூடுதல் தீமை (பொருள்) உடைமை இருப்பதாகும்

இந்தக்குறளுக்கு இரண்டு வகை விளக்கங்கள் - இரண்டுமே பொருத்தம் மற்றும் சுவையானவை Smile

1. வறுமையாக இருப்பது கொடுமை, அதை விடக்கொடுமை (வளமை இருந்தும்) கொடுங்கோல் மன்னனின் ஆட்சியின் கீழ் இருப்பது.

2. கொடுங்கோல் மன்னனின் ஆட்சியின் கீழ் வறுமை நிலையில் உள்ளோரை விட வளம் உள்ளோருக்குத் தான் கூடுதல் துன்பம் Wink (ஏனென்றால், அவர்களிடம் தானே பிடுங்க முடியும் Laughing )

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 24 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Feb 04, 2016 7:04 pm

#559
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்


கோடி = கோட்டம் ஆகி (கோணல் ஆகி) , அதாவது "தவறி"
உறை = மழை (அகராதி இந்தக்குறளை மேற்கோள் காட்டுகிறது)
ஒல்லாது = இயலாது (நடக்காது / முடியாது)

முறைகோடி மன்னவன் செய்யின்
மன்னனின் ஆட்சி முறை தவறியதாக இருந்தால்
(கொடுங்கோல் ஆட்சி நடக்கும் போது)

உறை கோடி
மழை தவறி / பொய்த்து

வானம் பெயல் ஒல்லாது
வானம் பெய்ய இயலாது

கேள்வி - கொடுங்கோலுக்கும் மழைக்கும் என்ன இணைப்பு?

இறை நம்பிக்கை உள்ள விளக்கம் : மழை இறைவன் அருள், முறையற்ற ஆட்சி நடக்கையில் இறைவன் வானத்தை அடைப்பான், மழை பெய்யாது.

தொன்று தொட்டே மழை இறைவனின் அருள் சார்ந்தது என்ற நம்பிக்கை எல்லா இனங்களிலும் காணலாம். (இதன் இன்னொரு பக்கம், வெள்ளம் / அழிவு என்பனவும் இறைவன் தரும் தண்டனை என்ற நம்பிக்கை).

(இறை நம்பிக்கை அற்ற) மு.க. விளக்கம் : ஆட்சி கேடானால், நீர் நிலைகள் ஒழுங்காக இருக்காது. அவற்றில் தண்ணீர் தேங்காத நிலையில், மழை பெய்தாலும் பலனில்லை Smile

எப்படி இருந்தாலும், "ஆட்சி நன்றாக இல்லை என்றால் நீரினால் மக்கள் துன்புறுவர்" என்று புரிந்து கொள்ளலாம்!

இதை நாம் பல முறை, பல இடங்களில் கண்டிருக்கிறோம்!  (அண்மைக்கால எடுத்துக்காட்டுகள் - சென்னை / கடலூர் / ஃப்ளின்ட் (மிசிகன்) )

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 24 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Feb 05, 2016 5:36 pm

#560
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்


மன்னன் ஒழுங்கற்று நடந்தால் நாட்டிற்கு ஏற்படும் விளைவுகள் எத்தகையன என்று அதிகாரத்தின் இறுதிக்குறள் சொல்லி முடிக்கிறது.

இங்கே மன்னனுக்குக் "காவலன்" என்னும் பட்டம் தருகிறார். நாட்டைக்காப்பவன், மக்களைக்காப்பவன் என்றெல்லாம் பொருள் தரும் ஆழமான சொல். (நம் நாளின் சீருடை அணிந்த காவலர் படையை நினைவுக்குக் கொண்டு வந்தால் நான் பொறுப்பில்லை)

ஆபயன், அறுதொழில் என்று இரு சொற்கள் என்ன பொருளில் (குறிப்பாக அந்த நாட்களில் இவை எவற்றைக் குறித்தன என்பதில்) உரையாசிரியர்கள் வேறுபடுவதைக் காண முடிகிறது.

ஆபயன் என்பதை ஆ + பயன் என்று பிரித்துப் "பால் வளம்" என்று சொல்வதைக் காணலாம். ஆக்கப்பணி என்றும் பொருள் சொல்லலாம் (ஆ = ஆதல், ஆக்கம்).

அறுதொழிலோர் என்பதற்கு அகராதி வேதியர் (பிராமணர்) என்று பொருள் சொல்வதையும் இந்தக்குறளை மேற்கோளாகக் காட்டுவதையும் காணலாம். "நூல் மறப்பர்" என்பதோடு அது பொருந்தவே செய்கிறது. (நூல் = அறநூல்கள், அவற்றைப் பயிற்றுவித்தல் / ஓதுதல் என்பன கொடுங்கோல் நாட்டில் ஒழுங்காய் நடக்காது).

அப்படிப்பொருள் சொல்லாமல் வெறுமென "ஞானிகள்" என்றோ, தொழில் வளம் என்றோ சொல்லும் உரைகளும் உள்ளன (மு.க. / சாலமன் பாப்பையா).

"நூல் மறப்பர்" என்பதன் அடிப்படையில் மு.வ. உரையே கூடுதல் பொருத்தம் என்று தோன்றுகிறது.

காவலன் காவான் எனின்
மன்னன் சரியாக ஆட்சி நடத்தாவிட்டால் (மக்களைக் காக்கா விட்டால்)

ஆபயன் குன்றும்
பசுக்கள் பால்தருதல் எனும் பலன் குன்றும் (அல்லது, ஆக்கப்பணிகள் குன்றும்)

அறுதொழிலோர் நூல்மறப்பர்
வேதியர் அறநூல்களை மறந்து விடுவார்கள்

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 24 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Feb 08, 2016 5:45 pm

#561
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து

(பொருட்பால், அரசியல், வெருவந்த செய்யாமை)

வெரு / வெருவு என்றால் அச்சம் என்று அகராதி பொருள் சொல்கிறது. (எ-டு : மேள ஒலி கேட்டு மாடு "வெருண்டு" ஓடியது )

அப்படியாக, "வெருவந்த செய்யாமை" = அச்சம் வரும்படியான செயல்கள் செய்யாதிருத்தல்.

அரசியலில் இந்த அதிகாரம் வருவதால், " மக்கம் அஞ்சும் படியான செயல்களை அரசன் /  ஆட்சியாளர் செய்யாதிருப்பது" என்று பொருள்படும்.

ஆக, இதற்கு முந்தைய அதிகாரத்தில் வந்த  "கொடுங்கோன்மை"யும் "வெருவந்த செய்தலும்" உடன்பிறப்புகள் எனலாம்.

குடிமக்கம் அச்சம் கொள்ளும் சூழல் நிலவுமானால் அந்த ஆட்சி தோல்வி அடைந்து விட்டது என்றே பொருள்! அவ்வாறு ஆகாதவண்ணம் வேந்தன் நடந்து கொள்ள வேண்டும் எனச்சொல்லும் அதிகாரம்!

தக்காங்கு நாடி
(குற்றங்களைத்) தக்க விதத்தில் ஆராய்ந்து

தலைச்செல்லா வண்ணத்தால்
தொடர்ந்து நடக்காத வண்ணம்

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து
பொருத்தமான விதத்தில் தண்டிப்பவன் தான் வேந்தன்!

குற்றங்கள் தொடர விடும் அரசு பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தும்.

அளவுக்கு மீறிய தண்டனை கொடுக்கும் அரசும் அப்படித்தான்.

சமநிலையோடு ஒறுத்து, மீண்டும் மீண்டும் நடக்காமல், அமைதி ஏற்படுத்தும் ஆட்சியே நல்லாட்சி!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 24 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Feb 09, 2016 6:23 pm

#562
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டுபவர்


கொஞ்சம் குழந்தைத்தனமாகத் தோன்றினாலும், ஆழமான பொருள் உள்ள சொற்றொடர் "கடிதோச்சி மெல்ல எறிக"!

ஏன் குழந்தைத்தனம்? எதிராளியை ஓங்கி அடிப்பது போல் பாவனை செய்து, உண்மையில் மெல்லத்தட்டி, குழந்தைகளை ஏமாற்றிப் பெற்றோர் அமைதிப்படுத்துவது நினைவுக்கு வந்ததால் அப்படிச்சொன்னேன் Laughing

"வழிமுறைகளைப் பின்பற்றுவதில் தவறாமை வேண்டும் / கடினமாக இருக்கவும் வேண்டும். என்றாலும், தண்டிப்பது என்று வரும் போது அளவு மீறக்கூடாது" என்று சொல்லும் குறள்!

பள்ளி குறித்து சிறுவயதில் கட்டுரை எழுதியது நினைவுக்கு வரலாம் ("எங்கள் தலைமை ஆசிரியர் கனிவானவர் ஆனால் கண்டிப்பானவர்" Laughing )

நெடிதாக்கம் நீங்காமை வேண்டுபவர்
ஆக்கம் (வளம்) நெடுங்காலம் நீங்காதிருக்க விரும்புபவர் (குறிப்பாக, ஆட்சியாளர்)

கடிதோச்சி மெல்ல எறிக
கண்டிப்புடன் நடந்து கொண்டு, (அதே நேரம்) தண்டிக்கையில் மெல்ல (அளவுடன்) இருக்க வேண்டும்

ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, தாய்மார்கள் இதை அழகாகப் பயன்படுத்துவதைக் கண்டிருக்கிறேன். ("அப்பாவிடம் சொல்லிடுவேன்" என்று மிரட்டியே பணியவைப்பார்கள். அப்படி உண்மையில் சொல்லி அடிவாங்கித் தந்ததில்லை)

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 24 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Feb 10, 2016 8:46 pm

#563
வெருவந்த செய்தொழுகும் வெங்கோலனாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்


இன்றைய வரவுக்கணக்கில் இரண்டு புதிய சொற்கள்!

இரண்டுக்கும் அகராதி இந்தக்குறளை மேற்கோள் காட்டுவது இன்னும் சிறப்பு Smile

ஒருவந்தம் & ஒல்லை = உறுதியாக & விரைவாக !

மற்றபடி, பொருள் எளிமையானது தான்!

"மக்களை அச்சுறுத்தும் ஆட்சி விரைவில் அழியும் என்பது உறுதி" என்கிறார் வள்ளுவர் Wink

வெருவந்த செய்தொழுகும் வெங்கோலனாயின்
(மக்களை) அச்சுறுத்தும் செயல்களை எப்போதும் செய்யும் கொடுங்கோல் மன்னன்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்
உறுதியாக விரைவில் அழிவான் (ஆட்சி அழியும்)

சற்றே சிந்திப்போம் - எப்படி அந்த மன்னன் அழிவான்?

மக்களாட்சி என்றால் விளக்குவது எளிது - அச்சத்தில் வாழ்ந்த மக்களின் வாக்குகள் கிடைக்காததால் அடுத்த முறை தேர்தலில் தோற்பார்கள் எனலாம். ஆனால், முற்காலங்களில் மக்களாட்சி இல்லை அல்லவா? பின்னர் எப்படி?

"உள்நாட்டுப்போர்" அல்லது "எதிரிகள் படையெடுக்கையில் மக்கள் உடன் இல்லாததால் படைவலிமை இருந்தும் முழு ஆதரவு இல்லாத குழப்பநிலையில் தோற்றுப்போதல்" என்று விளக்க முயலலாம்.

என்றாலும், கொடுங்கோலரில் சிலர் (மக்களைச்சுரண்டினாலும்) கொழுத்த படைவலிமை கொண்டு போர்களில் தொடர்ந்து வென்ற வரலாறுகள் இருக்கவே செய்கின்றன.

கூடுதல் பொருத்தமாக எனக்குப்படும் விளக்கம் :
கொடுங்கோல் மன்னன் மக்களை அச்சுறுத்தி வாழ்ந்தால், அவனுக்குப் புகழ் உண்டாகாது. ஆளுங்காலத்தில் அப்படி ஒன்று இருப்பதாகத் தோன்றினாலும், விரைவாகவும் உறுதியாகவும் அத்தகைய மன்னனின் புகழ் இல்லாமல் போகும்.
(இதில் எனக்குக் கொஞ்சமும் ஐயமில்லை!)

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 24 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Feb 11, 2016 7:19 pm

#564
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்


போன குறள் போலவே இதிலும் "ஒல்லைக்கெடும்" (விரைவில் அழியும்). ஆனால், ஒருவந்தம் என்று சொல்லை மாற்றி "உறை கடுகி" என்கிறார்.

உறை = உள்ள நாள் / வாழ் நாள் / ஆயுள்

கடுகி = சிறுத்து / குறுகி (கடுகு அளவை வைத்துப்புரிந்து கொள்ளலாம்)

மக்களிடம் "கடியன்" என்று பேர் வாங்கின வேந்தன் விரைவில் அழிவான் என்னும் கருத்து இங்கே.

இறைகடியன் என்றுரைக்கும்
"ஆட்சியாளன் கொடுமையானவன்" என்று (குடிகள்) சொல்லும் நிலையில் உள்ள

இன்னாச்சொல் வேந்தன்
கடுமையான சொற்களைப்பேசும் வேந்தன்

உறைகடுகி ஒல்லைக் கெடும்

வாழ்நாள் குன்றி விரைவில் அழிவான்

முன் குறளில் கண்டது போலவே இங்கும் "ஆட்சி அழிவு" என்றும் சொல்லலாம்.

அதை விடவும் கூடுதல் பொருத்தம் "புகழ் அழிவு / நற்பெயர் இல்லாமல் போதல்" என்பது என் கருத்து Smile

மூன்றாவது பொருளும் (இறை நம்பிக்கையின் அடிப்படையில்) சொல்ல இயலும் :
கொடுங்கோலனின் வாழ்நாளை இறைவன் குறைத்து விடுவார்.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 24 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Feb 12, 2016 6:44 pm

#565
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய் கண்டன்னது உடைத்து


பேய் என்ற சொல்லை முதன் முதலாகத் திருக்குறளில் நேரடியாகப் பார்க்கிறோம். (பேஎய் என்று கூடுதல் ஒரு எழுத்து அளபெடையாகச் சேர்க்கிறார் - வெண்பாவின் தளைக்காக என்று நினைக்கிறேன்).

குறிப்பாக கவனிக்க வேண்டிய ஒன்று - பேய் என்பது "வெரு" (அச்சம்) உண்டாக்கும் ஒன்றாக இங்கே வருகிறது.

முதலில் பொருள் பார்ப்போம் :

அருஞ்செவ்வி
சந்திக்க அரிதானவனும் (எளிதில் காணமுடியாதவன்)

இன்னா முகத்தான்
இனிமையற்ற (கடுமையான) முகத்தை உடையவனுமான மன்னனின்

பெருஞ்செல்வம்
செல்வம் பெரிது என்றாலும்

பேஎய் கண்டன்னது உடைத்து
பார்ப்பதற்கு அது பேய் போன்றதே (அச்சுறுத்துவதே)

"முதலாவது ஆளைப்பார்க்கவே முடியாது, பார்த்தாலும் கடு கடு என்பான், அவனிடம் செல்வம் இருந்து என்ன பயன் - நம்மை அச்சுறுத்த மட்டுமே உதவும்" என்று பொருள்.

இதில் நாம் காணும் இன்னொன்று, "பேய் என்றால் அச்சுறுத்தும் ஏதோ ஒன்று" என்ற பொதுவான நம்பிக்கை இங்கே வள்ளுவரின் எழுத்திலும் வெளிப்படுவது Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 24 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Feb 15, 2016 5:35 pm

#566
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்


முந்தைய குறளில் கொடுங்கோல் மன்னனின் செல்வம் பேய் போன்று அச்சுறுத்தும் ஒன்று என்று சொன்ன வள்ளுவர் இக்குறளில் மீண்டும் அதே செல்வம் குறித்து "நிலையற்றது / விரைவில் அழியத்தக்கது" என்று சொல்லுகிறார்.

அப்படியாக, இது ஒரு "தொடர்ச்சிக்குறள்" என்று சொல்லலாம். (அல்லாத மட்டில், இங்கே "வெரு" அல்லது அச்சம் குறித்த நேரடித்தொடர்பு குறைவு).

பொதுவில் பார்த்தால் இங்கும் கொடுங்கோல் மன்னன் - அப்படியாக அச்சம் தருபவன் - என்று கொள்ளலாம்.

எப்படிப்பார்த்தாலும், இது "அச்சம் தரும் வண்ணம் ஆளும் அரசனுக்கு அப்படி இல்லாமல் இருக்க அறிவுரை" என்று தானே வருகிறது?

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின்
(ஆட்சியாளன்) கடுமையாகப் பேசுபவன், கண்ணோட்டம் (கருணை / இரக்கம்) இல்லாதவன் ஆனால்

நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும்
(அவனது) பெரும் செல்வம் நீடிக்காமல் உடனே (அப்போதே) அழிந்து விடும்!

கடுமையாகவும் இரக்கமின்றியும் இருப்போரிடத்துப் பொருள் நிறைய இருப்பது போல் தோன்றினாலும் அது நிலையற்றதே என்று புரிந்து கொள்ளலாம்.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 24 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 24 of 40 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 32 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum