Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 3 of 40 Previous  1, 2, 3, 4 ... 21 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 3 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Sep 02, 2013 10:33 pm

#36
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை


பள்ளிக்காலத்தில் ஒரு மேடைப்பேச்சுக்கென தமிழைய்யா எழுதிக்கொடுத்ததில் இப்படி ஒரு கபிலர் பாடல் வரும்:

ஒன்றே செய்யவும் வேண்டும் ஒன்றும்
நன்றே செய்யவும் வேண்டும் நன்றும்
இன்றே செய்யவும் வேண்டும் இன்றும்
இன்னே செய்யவும் வேண்டும்
என்பதாக வரும் அந்தப்பாடலின் பொருள் "அறத்தினை உடனே செய்க - காலம் தாழ்த்தல் ஆகாது" என்பது தான். வள்ளுவரின் இந்தக்குறள் அந்தக் "கபிலர் அகவல்" எனும் செய்யுளுக்கு ஆதாரமாய் இருந்திருக்க வேண்டும்.

(இதை எழுதியவர் பாரி வள்ளலின் நண்பனான சங்க காலத்துக் கபிலர் அல்லர் - பத்து நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வந்த கபில நாயனார் என்று விக்கிப்பீடியாவில் கண்டேன்.)

குறளின் பொருள் காண்பது எளிது:

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க
"பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்றில்லாமல் உடனடியாக அறம் செய்யுங்கள்!

மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை
அவ்விதம் செய்யும் அறம், நாம் அழியும் போதும் அழியாமல் துணை நிற்கும்!
 
நற்செயல் செய்ய இயலும் என்றால் உடனே செய்து விடுங்கள்!

தள்ளிப்போடாதீர்கள்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 3 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Sep 03, 2013 3:58 pm

#37
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை


பலரது உரைகளையும் படிக்கையில், இதன் சரியான பொருள் உணர்தல் கடினம் என்று தோன்றுகிறது Smile

முதலில், இதன் சொற்கள் அளவிலான பொருள் என்ன என்று பார்க்கலாம், அது அவ்வளவு கடினம் அல்ல.

அறத்தாறு இதுவென வேண்டா
அறத்தின் பயன் (ஆறு) இது தான் என்று சொல்ல வேண்டாம்

சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
பல்லக்கு சுமப்பவன் மற்றும் அதில் உட்கார்ந்து செல்லுபவன் இடையில்!

மு.வ. இத்தோடு நிறுத்திக்கொள்கிறார் - அதாவது "இந்த இருவரிடமும் அறத்தின் பயன் பற்றி சொல்லாதீங்க" என்கிறார்.

மற்ற உரையாளர்கள், இந்த இரண்டு பேரின் நிலையையும் ஒப்பிட்டுப்பார்த்தால் அறத்தின் பயன் அறியலாம் என்று கூட்டுகிறார்கள்.

அதிலும் மு.க. உரையில் மேலே உட்கார்ந்திருப்பவன் அறவழியில் செல்பவன் என்றும் தூக்குபவன் அல்லாதவன் என்றும் இன்னும் கொஞ்சம் கூட்டுகிறார் Smile (வாழ்வின் மேடு பள்ளங்கள் - இன்ப துன்பங்கள் - பாதிக்கும் / பாதிக்காது என்ற அடிப்படையில்).

உழைக்கும் இனத்தின் போராளிகள் அப்படிப்பட்ட விளக்கத்தை ஏற்றுக்கொள்வார்களா தெரியாது.

எப்படியும் கொஞ்சம் குழப்பமான குறள் தான் Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 3 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Sep 04, 2013 3:00 pm

#38
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்


"மீண்டும் மீண்டும் பிறவி எடுத்தல்" என்பது துன்பச்சுழற்சி என்ற நம்பிக்கை வள்ளுவருக்கு இருந்ததை இந்தக்குறளில் காண இயலும். (மு.க. அதை ஒத்துக்கொள்ளாமல் வேறு உரை எழுதி இருக்கிற போதிலும், வள்ளுவரின் நம்பிக்கை அது தான் என்றே எனக்குத் தோன்றுகிறது).

பொருள் பார்ப்போம்:

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின்
ஒரு நாள் கூட விடாமல் நன்மை செய்து வந்தால்

அஃது
அப்படிப்பட்ட அறம்

ஒருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல்
ஒருவன் மீண்டும் பிறவி எடுக்கும் வழியை அடைத்துப்போடும் கல் ஆகும்!

இந்தியாவில் தொடங்கிய பல தத்துவச்சிந்தனைகளிலும் "வீடு பேறு" குறித்த நம்பிக்கை இருந்து வந்திருக்கிறது. (மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கும் சுழற்சியில் இருந்து விடுபடுதல் - முக்தி / பரம்பொருளுடன் சேர்தல் - என்றெல்லாம் எளிய விதத்தில் விளக்கப்படும் கொள்கை).

"அறம் வீடு பயக்கும்" என்ற அந்தச்சிந்தனை இந்தக்குறளில் காண இயலும்.

மட்டுமல்ல, நாம் முதலிலேயே கண்ட "அறம் = நன்மை" என்ற எளிய விளக்கம் இந்தக்குறளால் உறுதிப்படுவதையும் காணலாம் Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 3 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Sep 05, 2013 5:40 pm

#39
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல


திருக்குறளின் மூன்றாவது பால் "காமம்" என்றாலும், அதற்கு "இன்பம்" என்றும் ஒரு பெயர் உண்டு. (சிலருக்குக்காமம் சிற்றின்பம், சிலருக்குப்பேரின்பம், மற்றவர்களுக்கு வெறும் இன்பம்).

இந்தக்குறளில் வள்ளுவர் சொல்லும் இன்பம் எந்த வகையில் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். (அதாவது, மூன்றாம் பால் வகையோ வேறு வகையோ.)

பொருள் பார்ப்போம்:

அறத்தான் வருவதே இன்பம்
அறவழியில் வருவது தான் ஒருத்தருக்கு இன்பம் / மகிழ்வு எல்லாம்

மற்றெல்லாம் புறத்த
அப்படி அல்லாதவை இன்பம் அல்ல

புகழும் இல
புகழும் அல்ல

நன்மையான வழியில் அல்லாமல் இன்பமோ புகழோ பெற விழைதல் முட்டாள்தனம் என்று வள்ளுவர் அடித்துச்சொல்லுகிறார்.

என்ற போதிலும், ஒரு பெருங்கூட்டம் (குறிப்பாக அரசியல்வாதிகள்) தீமையான வழியில் பொருள், இன்பம் தேடும் முயற்சியில் ஓடிக்கொண்டிருப்பது வெளிப்படை அல்லவா? ("குறளோவியம்" எழுதியவர் உள்பட பலரின் வரலாறு நம் கண் முன்னில்).

இன்னொரு குறள் தான் நினைவுக்கு வருகிறது : "சொல்லுதல் யார்க்கும் எளிய" Embarassed

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 3 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Sep 06, 2013 7:49 pm

#40
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி


அறன்வலியுறுத்தல் அதிகாரத்தையும் அதனோடு பாயிரவியலையும்  நிறைவு செய்யும் குறள் இது.

பொருள் கொள்ளக்கொஞ்சம் கடினம் தான்.

ஒருவற்கு
ஒருத்தருக்கு

செயற்பால தோரும் அறனே
ஆய்ந்து செய்யத்தக்கன அறச்செயல்களே!

உயற்பால தோரும் பழி
ஆய்ந்து ஒழிக்கத்தக்கன தீய செயல்களே! (அல்லது, பழி தர வல்ல செயல்களே!)

இரண்டு சொற்கள் பொருள் கொள்ளக்கடினமாய் இருந்தவை.

ஒன்று "உயற்பால" - பொதுவாக மனது உயர்வு என்ற பொருளுக்கு இட்டுச்செல்லும். ஆனால், இது "உயற்" - அல்லது "உயல்" - என்பது கவனிக்கத்தக்கது. அதோடு, இங்கே எதிர்மறையான "பழியோடு" உறவு கொள்கிறது Smile ஆதலினால், உயர்வு அல்ல! என்றாலும், இதற்கு அகராதியில் பொருள் இல்லாததால், "குறள் திறன்" சென்று, "ஒழிதல்" என்று படிக்க வேண்டி இருந்தது!

அங்கு சென்ற போது கிடைத்த இன்னொரு புரிதல் தான் "ஓரும்" என்பது வெறும் அசைச்சொல் அல்ல, ஆராய்ந்து உணர்தல் என்பது.

எல்லாம் சரி, நாம் இங்கு என்ன புதிதாய்க்காண்கிறோம்?

பொதுவாக வழங்கும் ஒரு பழமொழி "பாவம் ஓரிடம் பழி ஓரிடம்" என்பது. (சொக்கன் இது பற்றி எழுதியுள்ள ஒரு இனிய செய்யுள் விளக்கம்  பாருங்கள்.)

ஆனால், இந்தக்குறளில் நாம் காண்பது பாவம் = பழி Smile

அல்லது, வேறு வகையில் சொன்னால், பாவமும் பழியும் ஒரே இடம் Smile

நாம் செல்ல விரும்பாத இடம் என்பதால், அறனே செய்வோம்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 3 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Sep 09, 2013 6:20 pm

#41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை


அடுத்த இயல் - இல்லறவியல் - உள்ளே செல்கிறோம்! (அறத்துப்பாலில் தான் இன்னமும் இருக்கிறோம் Smile)

முதல் குறளே புரியக்கடினமான ஒன்றாக இருக்கிறது. (இல்லறம் குழப்பங்களின் உறைவிடம் என்று சொல்லாமல் சொல்கிறதோ?)

அப்படி என்ன புரியக்கடினம்? குழப்பான சொல் ஒன்றும் இல்லையே என்று ஒரு வேளை தோன்றலாம். உண்மை தான், சொல் அளவில் பொருள் காண்பது எளிதே :

இல்வாழ்வான் என்பான்
இல்லற வாழ்க்கை நடத்துபவன் என்பவன்

இயல்புடைய மூவர்க்கும்
இயல்புடைய (இதை அற இயல்பு என்றோ இயற்கையான உறவு என்றோ எடுத்துக்கொள்ளலாம்) மூன்று பேருக்கும் (அல்லது மூன்று வகையினருக்கும்)

நல்லாற்றின் நின்ற துணை
நல்ல வழியில் துணை நிற்பவன் தான்!

குழப்பம் இந்த மூன்று பேர் (அல்லது மூன்று கூட்டத்தினர்) யார் யார் என்பதில் தான் Smile

இல்வாழ்வான் என்பதால், ஒரு எளிய விளக்கம் தந்தை, தாய், மனைவி என்று சொல்லுகிறது. உடனே வரும் கேள்வி, அப்படியானால் பிள்ளைகள்?

மு.க.வின் விளக்கம் அவர்களையும் உட்படுத்தி, பெற்றோர், துணை, மக்கள் என்று மூன்று கூட்டத்தினரையும் சேர்க்கிறது. மிக எளிய, ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கம் - ஆனால், முற்கால உரைகளில் இருக்கும் நம்பிக்கை சார்ந்த தத்துவங்கள் இதில் இடம் பெறவில்லை என்று சிலர் குறை காணக்கூடும்

வள்ளுவர் சைவம் என்று சொல்லும் பரிமேலழகர், இந்த மூன்று கூட்டமாகச் சொல்லுவது :

1. நாட்டிலேயே திருமணமின்றி வாழுவோர்
2. காட்டில் திருமணமின்றி வாழும் துறவிகள்
3. காட்டில் மனைவியோடு வாழும் முனிவர்கள்
("திருச்சபைகளும்" இக்கருத்தை வைத்து, வள்ளுவர் கிறித்தவர் என்று சொல்லக்கூடும் - மூன்று தரம் பாதிரியார்களும் பரப்பாளர்களும் அங்கு உண்டு - இதுவரை மணம் ஆகாதோர், மணம் செய்யாமலே வாழ்ந்து விட்டோர், மனைவி குடும்பத்தோடு ஊழியம் செய்வோர் என்று மூன்று வகையினரையும் ஆதரிப்பவன் தான் இல்வாழ்வான் என்று அவர்கள் கை தட்ட இயலும்!)

இது சரியல்ல என்று வாதிடும் தமிழ்ச்சமணம் கூறும் கருத்து அருமையானது:


பிரம்மசரியம் ஏற்றவர்கள், சன்யாசம் மேற்றவர்கள் இல்லறத்தார்களை அண்டி வாழவேண்டும். இது இயல்பு. ஆனால், தம்பதி சகிதமாக, நாட்டை விட்டு வெளியேறி, காட்டில் வாழும் வானப்பிரஸ்தார் (காட்டு இல்லறத்தார் என்றுச் சொல்லலாமா??), நாட்டில் வாழும் இல்லறத்தார்களை அண்டி பிழைக்கவேண்டிய அவசியமில்லை. ஏன்னென்றால், அவர்கள் வாழ்க்கைக்கு தேவையானதை அவர்களே காட்டில் பெற்று வாழ்வார்கள். அவர்களை இல்லறத்தார் போற்றவேண்டிய அவசியமே இல்லை.
அப்படியாக, வள்ளுவர் சமணர் என்போர் சொல்லும் மூவர் :

ஆச்சாரியர்கள், உபாதியாயர்கள், சாதுக்கள் (முனிவர்கள்) தற்போதும் இல்லறத்தார்களிடையே வாழ்பவர்கள். இல்லறத்தார் ஆதரவின்றி அவர்கள் தத்தம் கடமைகளை ஆற்ற முடியாது. அவர்களின் உணவு போன்ற தேவைகளுக்கு இல்லறத்தார்களை அண்டியே வாழவேண்டியிருக்கிறது.
வழக்கம் போல, வள்ளுவர் எந்த மூவரை நினைத்தார் என்பது அவருக்கே வெளிச்சம்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 3 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Sep 10, 2013 4:55 pm

#42
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை


மீண்டும் இல்வாழ்வான் மூன்று கூட்டத்தவர்க்குத் துணை இருப்பது பற்றியே வருகிறது Smile

முதல் குறளில் சொன்னதையே இங்கு விளக்கி, அழுத்திச் சொல்கிறார் என்று தமிழ்ச்சமண வலைத்தளம் போல எடுத்துக்கொள்ளலாம். அல்லது, அதில் சொந்தக்குடும்பம் பற்றியும் இதில் அடுத்தவர் பற்றியும் சொல்லுகிறார் என்று வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் Smile

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
துறவிகள், வறுமைப்பட்டவர்கள், இறந்தவர்கள் என்ற மூன்று கூட்டத்தினருக்கு

இல்வாழ்வான் என்பான் துணை
இல்லற வாழ்வில் உள்ளவன் துணையாய் இருக்கிறான்

நமக்கு இதில் வியப்பு "இறந்தார்" என்ற சொல்லின் மீது தான்!

எப்படி அவர்களுக்கு ஒரு இல்லறத்தான் "துணை" நிற்க முடியும்? குழப்பமாய் இருக்கிறதே?

தமிழ்ச்சமண எழுத்தாளர் "ஒரு வேளை இரந்தவர் - பிச்சைக்காரர் - என்பது தான் பிற்காலத்தில் சுவடி மாற்றும்போது பிழையாய் மாறிப்போனதோ" என்று எண்ணுகிறார்.  அதற்கு வாய்ப்பு குறைவு - ஏனென்றால், இரப்போர், துவ்வாதவர் (வறியோர்) என்ற கூட்டத்தின் உப கணம் தானே?

அப்படியானால் யார் இந்த இறந்தவர்?

மு.க : பாதுகாப்பற்றவர்கள் (உறவினர் இறந்ததால் அநாதை ஆனவர்கள்)
மு.வ : தன்னிடத்தே இறந்தவர் (புரியலை)
பரிமேலழகர் / மணக்குடவர் : யாருமில்லாமல் தன்னிடத்தில் வந்து (பிற்பாடு) இறந்தவர்

"யாரும் இல்லாமல் தன்னிடம் வந்து அடைக்கலம் கண்டு, (வயது, நோய் போன்ற காரணங்களால்) சிறிது காலத்துக்குள்ளேயே இறந்து போனவர்கள்"  என்ற விளக்கம் சரியாகவே படுகிறது Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 3 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Sep 11, 2013 6:34 pm

#43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை


இன்னுமொரு "எண்ணிக்கை"க்குறள் Smile

இல்லற வாழ்வின் ஐவகை அறநெறிகள் இந்தக்குறளில் வருகின்றன.

பொருள் பார்ப்போம்:

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
தென் புலத்தார் (இறந்து போனவர்கள் / பிதிரர் என்று பொருள் சொல்லுகிறார்கள்), தெய்வம், விருந்தினர், சுற்றத்தினர் மற்றும் தான் என்ற
 
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
ஐந்து வகைப்பட்டோருடன் நல்வழியில் செயல்படுதல் தலையாய (சிறப்பான) கடமையாகும்.

இங்கு மீண்டும் நாம் இறந்தவருக்கான அறவழி என்பதைக் காண நேரிடுகிறது.

"தன்னிடத்தில் வந்து இறந்தார்" என்ற பொருளா அல்லது முன்னமேயே இறந்து போனவர்களுக்கான சடங்குகளா என்று அவரவருக்குப் பிடித்த விதத்தில் புரிந்து கொள்ளலாம்.

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 3 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Sep 12, 2013 5:23 pm

#44
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்


அருமையான அறநெறிக்குறள்!

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின்
பழிக்கு அஞ்சி வாழ்ந்து, அவ்விதம் கிடைத்த பொருளைப் பகுத்து உண்பானேயானால்

வாழ்க்கை வழி
அப்படிப்பட்டவனுடைய வாழ்க்கை வழியில்

எஞ்சல் எஞ்ஞான்றும் இல்
குறைவுகள் ஒருபோதும் இருப்பதில்லை!

நல்ல வழியில் பொருள் ஈட்டி அதை எல்லோருக்கும் பகிர்ந்தும் வாழ்ந்தால், இல்லறம் செழிக்கும் - குறைவில்லா வாழ்வு மலரும் என்று அறநெறி சொல்லுகிறார் வள்ளுவர்!

"வழி" என்பதை "வழித்தோன்றல்" என்றும் கொண்டு, அவனுடைய சந்ததியும் - பரம்பரையும் செழிக்கும் என்று பொருள் கொள்ளுவோரும் உண்டு!

எஞ்சல் இல்லை என்பதை இறப்பே இல்லை என்று கூறுவோரையும் காணலாம்.

வரும் நற்பலன் எதுவானாலும் சரி, கடைப்பிடிக்க வேண்டிய இரண்டு நெறிகள் மிகத்தெளிவு :

1. பழி அஞ்சி வாழ்தல்
2. பகுத்து உண்ணுதல்

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 3 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Sep 13, 2013 3:23 pm

#45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது


பள்ளிக்காலந்தொட்டே மிகப்பழக்கமான அழகிய குறள்!

அன்பும் அறனும் உடைத்தாயின்
அன்பும் அறமும் உடையது என்றால்

இல்வாழ்க்கை
அப்படிப்பட்ட இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது
பண்புள்ளதாகவும் பயனுள்ளதாகவும் விளங்கும்!

மணவாழ்த்துப்பத்திரங்கள், சொற்பொழிவுகள் எல்லாவற்றிலும் யாராவது ஒருத்தர் மறக்காமல் சொல்லி விடும் குறள் என்ற முறையில் இதனை தமிழ்நாட்டின் "திருமண வாழ்த்துப்பாடல்" என்றே சொல்லிவிடலாம். அவ்வளவு நிறைய சொல்லப்படும், கேட்கப்படும் குறள்!
(அதாவது நான் என் காலத்தைச் சொல்கிறேன் - இப்போதும் உண்டா என்று தெரியாது!)

அறம் - இந்த இழையில் பலமுறை கண்ட / சிந்தித்த பொருள் = நன்மை Smile

அன்பு திருக்குறளிலேயே இப்போது தான் முதன் முதலாய் வருகிறது என்று நினைக்கிறேன்! இது மிக ஆழமான சொல்! நாள் தோறும் எல்லாரும் பயன்படுத்தினாலும் என்ன என்று வரையறுக்கச் சொன்னால் பலரும் திணறும் சொல் Smile

தற்போதைக்கு "இல்லத்தினுள் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் தன்னலமற்ற பாசம்" என்ற அளவில் வைத்துக்கொள்வோம். கூடுதல் ஆழமாய்ச்செல்ல இன்னும் வாய்ப்புகள் உள்ளன தானே Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 3 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Sep 16, 2013 8:48 pm

#46
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்

இல்வாழ்வின் சிறப்பை உயர்த்தும் குறள்!

பொருள் பார்ப்போம் -

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின்
அறத்தின் நெறியில் இல்வாழ்க்கை நடத்த இயலுமானால்

புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன்
அதை விட்டு விட்டு ஒருவன் வேறொரு நெறியில் (அதாவது இல்வாழ்க்கைக்கு வெளியே உள்ள, அல்லது, துறவு வாழ்வில்) போய் வேறு என்ன பெற்று விடுவான்?

சில உரைகள் "அறத்தாற்றின்" என்பதை அறநெறி என்பதோடு "ஆறு" வகை அறங்கள் (அன்பு முதலான) என்றும் சொல்வதைக்காணலாம்.

ஆக மொத்தம், இல்லற வாழ்வில் கிட்டும் இன்பத்தைக்கால் துறவற வாழ்வில் வேறு ஒன்றும் கூடுதல் கிட்டப்போவதில்லை என்பது சுருக்கம்.  

அதாவது, இதற்குள் சரியாக வாழ முடிந்தவனுக்கு.

அப்படி முடியாத பேர்வழிகள் துறவறம் செய்யப்போகலாம் தான் Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 3 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Sep 17, 2013 7:15 pm

#47

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை


ஒரு சின்னக்குழப்பம் தவிர மற்றபடி எளிமையான குறள்!

முதலில் சொற்பொருள் பார்த்து விட்டு என்ன குழப்பம் என ஆராயலாம்.

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
சரியான இயல்புகளின் அடிப்படையில் (சரியான நெறியில்) இல்வாழ்க்கை வாழுகிறவன்

முயல்வாருள் எல்லாம் தலை
முயற்சி செய்வோர் எல்லோருக்குள்ளும் மேலான சிறப்புடன் விளங்குவான்!

சரி, அந்த சின்னக்குழப்பம் என்ன?

"முயல்வோர்" என்பதில் வரும் முயற்சி எதற்கானது?

1. இல்வாழ்க்கான முயற்சி என்று கொள்ளலாம். அப்படியான முயற்சியில் மனிதரில் பெரும்பாலோர் ஈடுபட்டாலும், அதில் சரியான இயல்புகளுடன் ("இயல்பினான்") வாழ்பவனே தலை சிறந்தவன் என்று சொல்லலாம்.

2. ஒட்டு மொத்த வாழ்க்கை முயற்சி என்றும் எடுத்துக்கொள்ளலாம். அதாவது, துறவு வழியில் செல்வோரையும் சேர்த்து. அவர்களை விடவும் இல்வாழ்வான் தலை சிறந்தவன் என்று வரும்.

எப்படி இருந்தாலும், இல்வாழ்வில் ஈடுபடுவோர் சரியான நெறியில் வாழவேண்டும் என்பது தெளிவு!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 3 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Sep 18, 2013 8:11 pm

#48
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து


போன குறளின் விளக்கம் என்றே இதைக் கூறலாம் Smile

ஒரு ஐயமும் இல்லாமல் வள்ளுவர் சொல்ல வருவது : நல்லறம் உள்ள இல்லறம் துறவறத்தை விட மேலானது!

ஆற்றின் ஒழுக்கி
எல்லோரையும் நல்நெறியில் வழிநடத்தி

அறனிழுக்கா இல்வாழ்க்கை
அறவழிக்கு இழுக்கில்லாமல் (நெறி தவறாமல்) வாழும் இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து
தவம் செய்வோரினையும் விட அதிக வலிமை / மேன்மை உடையதாகும்!

நோன்மை என்பதற்கு அகராதி சொல்லும் பொருள் "பொறுமை" என்பதாகும்.

வேறு வகையில் சொன்னால், பொறுமை மிக்கவர் என சொல்லப்படும் துறவிகளையும் விட அதிகப்பொறுமை உள்ளவர்கள் இல்வாழ்க்கையை நெறியோடு வாழ்வோர்!

("ஆமா, ஆமா" என்று தொல்லைகள் நிறைந்த இல்லற வாழ்க்கை உள்ளோர் கை தட்டக்கூடும்!) Laughing

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 3 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Sep 19, 2013 5:14 pm

#49
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று


பார்க்க எளிதாகத் தோன்றினாலும் நமது சிறப்பு மிக்க உரையாசிரியர்கள் குழப்பி விடும் ஒரு குறள் இது Smile

முதலில் ஒரு பாமரன் இதை எப்படிப்படிப்பான் என்று பார்ப்போம்:

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை
அறன் என்று சொல்லப்படுவது இல்வாழ்க்கை தான்!

அஃதும்
அதுவும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று
பிறரது பழிக்கு உள்ளாகாமல் இருந்தால் நல்லது!

மிக எளியது, இல்லையா?

ஆனால், பரிமேலழகர் இதற்குள் துறவறத்தையும் கொண்டு வந்து, "அஃதும்" என்பது துறவு என்றும், பழியில்லாது இருந்தால் துறவறத்தையும் நல்லது என்று சொல்லுவார்கள் என்கிறார்.

எனவே குழப்பம் இது தான் - "அஃதும்" என்பது மீண்டும் இல்லறத்தைத்தான் சொல்கிறதா அல்லது துறவறத்தையா?

என் புரிதல் அளவில் இந்தக்குறளுக்குள் துறவை நுழைக்கத்தேவை இல்லை.

என்றாலும், வள்ளுவரின் மனதில் என்ன இருந்தது என்பது அவருக்கே வெளிச்சம்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 3 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Sep 20, 2013 5:21 pm

#50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

பள்ளிக்காலத்தில் தமிழ் மொழி எல்லோருக்கும் மிகப்பழக்கமான் ஒரு குறள்!

கடினமான சொற்கள் ஒன்றுமில்லை என்பதால் எளிதில் விளங்கும் ஒன்று:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
"இப்படித்தான் வாழவேண்டும்" என்ற நெறிமுறைகளின் படி வையகத்தில் (நிலத்தில், உலகில்) வாழுபவன்

வானுறையும்
வானுலகில் வாழுகின்ற

தெய்வத்துள் வைக்கப்படும்
தேவர்களில் ஒருவனாக வைக்கப்படுவான்! (கருதப்படுவான், பதவி அடைவான் என்றெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்).

"இல்வாழ்க்கைக்கு" என்று தெளிவாகச் சொல்லப்படும் நெறிமுறைகளின் அடிப்படையில் வாழ்வது தான் இந்தக்குறளின்  சூழமைவில் "வாழ்வாங்கு வாழ்தல்" (அதிகாரம் - இல்வாழ்க்கை என்று காண்க!) வேறு வகையில் சொன்னால், "துறவறம் போய் மட்டுமே ஒரு ஆள் தேவர்களில் ஒருவனாக உயரவேண்டும் என்ற தேவை இல்லை" என்றும் வள்ளுவர் நிறுவுகிறார் என்று சொல்லலாம்!

இன்னொரு முக்கியக்கருத்து - "வானுறையும்" Smile

முன்னமேயே மழைச்சிறப்பில், "மழை இல்லாவிடில் வானோருக்குப் பூசனை நிற்கும்" என்று சொன்னதையும் இந்தக்குறளையும் சேர்த்துப்பார்க்கும்போது, வள்ளுவரின் இரு நம்பிக்கைகள் மிகத்தெளிவு:

1. மனிதர் வாழும் இந்த நிலத்துக்கு வெளியே ("வான்") இன்னொரு உயர்ந்த உலகு இருக்கிறது, அங்கும் அறிவுக்கூர்மை உள்ள உயிர்கள் / ஆட்கள் / சமுதாயம் இருக்கிறது!

2. நிலத்தில் இறந்த பின் இந்த "வானுலகு"க்கு மனிதர்கள் செல்ல முடியும்

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 3 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Sep 23, 2013 7:59 pm

#51
மனைத்தக்க  மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

(அறத்துப்பால், இல்லறவியல், அதிகாரம் : வாழ்க்கைத்துணைநலம் )

இல்லத்தாள் முதன் முதலாகத்திருக்குறளில் வரும் அதிகாரம் Smile

நுழையும் வேகத்திலேயே அவருக்கு எக்கச்சக்கமான பொறுப்பு கொடுக்கப்படுவதை நன்கு காண முடிகிறது!

மனைத்தக்க மாண்புடையள் ஆகி
இல்லற வாழ்வுக்குத் தகுந்த மாண்புகள் (குணநலன்கள்) உள்ளவளாக ஆகி

தற்கொண்டான் வளத்தக்காள்
தன்னை ஆட்கொண்டவனின் (அதாவது கணவனின்) வளத்துக்குள் (வருமானத்துக்குள் / பொருள் உடைமைக்குள்) வாழும் திறமையுடையவள்

வாழ்க்கைத் துணை
வாழ்க்கைக்கு நல்ல துணை!

அன்றைய தமிழர் நடுவில் இருந்த மனைவிக்கான எதிர்பார்ப்புகள் மிகத்தெளிவாக, ரெண்டே வரியில் போட்டு உடைக்கிறார்! நல்ல குணம் வேண்டும், உள்ள பணம் கொண்டு வேலை எல்லாம் நடக்கவும் வேண்டும்!

இந்த அதிகாரத்துக்குள் செல்லச்செல்ல இன்னும் கூட நாம் அன்றைய தமிழர் நடுவே மனைவிக்கு இருந்த பொறுப்புகள் குறித்த வெளிச்சம் பெறுவோம்!

இன்னொன்று - முன்காலங்களில் 1. காசு யார் கொண்டு வருவது  2. யார் அதை மேலாண்மை / செலவு / சேமிப்பு எல்லாம் செய்வது என்ற விவரமும் இங்கு புலனாகிறது! Wink

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 3 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Sep 24, 2013 5:07 pm

#52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்


இது கொஞ்சம் எதிர்மறைக்குறள்!

அதோடு, கொஞ்சம் சொல் சித்து விளையாட்டும் இருக்கிறது Smile

"இல்லாள்" என்ற சொல் மனைவி என்ற பொருளில் இருக்கிறது. இல்லாயின் என்ற சொல் இதே போல் வருவது சொற்சுவை கூட்டுகிறது எனலாம். அது இல்லாமலே போனாலும், "இல்லாள்" என்ற சொல்லிலேயே "இல்லாதவள்" என்ற பொருளும் கொண்டு விட முடியும் Smile

இல்லாள்கண் மனைமாட்சி இல்லாயின்
இல்லறத்துணைவியிடம் இல்வாழ்விற்கான நற்பண்புகள் இல்லாமல் போனால்

வாழ்க்கை எனைமாட்சித்தாயினும் இல்
வாழ்க்கையில் வேறு என்ன சிறப்புகள் இருந்தாலும் அதில் பயனில்லை. (வாழ்க்கையே இல்லை என்றும் பொருள் கொள்ளலாம்)

பொருள், பெயர் இன்ன பிற எல்லாம் ஒருத்தனுக்கு இருந்தாலும்,  இல்வாழ்க்கைக்கான நற்பண்புகள் மனைவியிடம் இல்லையென்றால் அவன் வாழ்வில் ஒரு சிறப்பும் இல்லை என்பது நல்ல மனைவி அமைவதன் தேவையை அழகாக சுட்டிக்காட்டுகிறது!

(இதே போல மனைவிக்கும் நல்ல கணவன் அமைவது பற்றி இனி வரும் குறள்களில் எங்காவது வருகிறதா என்று கவனித்துக்கொண்டே இருப்போம். "வள்ளுவரும் பெண்ணியமும்" பற்றிய ஆராய்ச்சிக்கு உதவும்)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 3 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Sep 25, 2013 5:51 pm

#53
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?


ஏதோ ஒன்றையும் அதற்கு எதிரான ஒன்றையும் ஒப்பிடல் தொன்று தொட்டே கவிதைகளில் (அதிலும் குறிப்பாக குறள் போன்ற இரண்டடிக்கவிதைகளில்) வழங்கி வரும் ஒன்று.

இது தமிழில் மட்டுமல்ல, உலகின் பல மொழிகளிலும் உள்ள ஒரு முறை. (எ-டு: உருது மொழியில் நன்கு அறியப்பட்ட இவ்விதமான இரண்டடி "ஷாயரி" வகை)
குறளிலும் இதே போல ஒன்று நீத்தார் பெருமையில் நாம் கண்டிருக்கிறோம். (செயற்கரிய செய்வார் பெரியர்...)

அவ்விதத்தில் உள்ள இந்தக்குறளின் இன்னொரு சிறப்பு, கேள்வி வடிவம் Smile

அதாவது, நாமே நமக்குள்ளே கேள்வி கேட்டு முடிவுக்கு வருதல்.

இல்லவள் மாண்பானால் இல்லதென்?
இல்லத்துணைவி மாண்புகள் (நற்பண்புகள்) உள்ளவள் என்றால் வாழக்கையில் இல்லாதது எதுவும் உண்டோ?

இல்லவள் மாணாக் கடை உள்ளதென்?
அது போல, மனைவியிடம் மாண்பு இல்லையென்றால் வாழ்க்கையில் என்ன சிறப்பு இருக்கிறது?

ரெண்டு கேள்விக்கும் விடை ஒன்றே - "ஒன்றுமில்லை" Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 3 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Sep 26, 2013 3:32 pm

#54
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்


நிறையப்பேசப்படுவதும் ஆனால் அது என்ன என்பதில் கருத்து வேற்றுமைகள் நிறைந்ததுமான ஒரு சொல், திருக்குறளில் முதல்முதலாக இப்போது வருகிறது...

கற்பு!

அவரது காலத்தில் இருந்த பொதுவான சிந்தனை இதில் வெளிப்படுகிறது என்றும் காண முடியும். அதாவது, கற்பு என்பது  பெண்களைப்பற்றியது.

கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்
கற்பு என்னும் உறுதிநிலை பெற்றிருப்பாளே என்றால்

பெண்ணின் பெருந்தக்க யாவுள?
இல்வாழ்க்கையில் அப்படிப்பட்ட பெண்ணை (மனைவியை) விட வேறு என்ன பெருமையுடையது இருக்க முடியும்?

கற்பு என்று இங்கு சொல்லப்படுவது மனதளவிலா, உடல் அளவிலா என்றெல்லாம் கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால், அது பாலுறவு சிந்தனை / ஒழுக்கம் பற்றியது என்பதில் அந்தக்காலத்தில் குழப்பம் இருந்திருக்காது என்றே நினைக்கிறேன்.

அப்படிப்பார்த்தால், இங்கே பெண்ணுக்கு அதில் "திண்மை" நிலை வேண்டுமென்று குறள் தெளிவாகவே சொல்லி விடுகிறது. ஆணுக்கும் அப்படிச்சொல்லுமா என்று போகப்போகப் பார்ப்போம்...

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 3 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Sep 27, 2013 4:17 pm

#55
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை


திருக்குறளிலேயே எக்கச்சக்க சச்சரவுக்குரியவற்றில் ஒன்று இந்தக்குறள் என்று  சொல்லலாம். 
குறிப்பாக, கிட்டத்தட்ட எதிரிகளான ரெண்டு விதக்குழுக்கள்  இதை எதிர்த்தும் குறை சொல்லியும் கண்டிருக்கிறேன்.

ஒன்று "பெண்கள் ஆண்களுக்குக் கீழே தான்" என்று நினைத்தாலும் அதை விடவும்   கடவுள் பயத்துக்கு முதலிடம் கொடுக்கும் சமயவாதிகள்.

இரண்டு கடவுள் பற்றிக்கவலைப்படாத பெண்ணியவாதிகள்!

முதல் குழுவுக்கு எரிச்சல் "தெய்வம் தொழாள்" என்பதில்.
இரண்டாவது குழுவுக்குக்கடுப்பு "கொழுநன் தொழுதெழுவாள்" என்பதில்.

ஆக, இந்தக்குறள் அடிக்கடி சச்சரவில் மாட்டிக்கொள்வதில் வியப்பில்லை!

குறள் திறன் என்ற வலைத்தளம் இதை அலசுவதை இங்கே கவனியுங்கள்:
http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0055.aspx

நேரடியான பொருள் இப்படி வரும் :

தெய்வம் தொழாஅள்
இறைவனை வணங்காமல் (அல்லது இறைவணக்கத்தையும் விட மேலாக)

கொழுநன் தொழுதெழுவாள்
கணவனை வழிபட்டு (உறக்கத்திலிருந்து) எழும் பெண்மணியான மனைவி

பெய்யெனப் பெய்யும் மழை
"பெய்" என்று சொன்னால் உடனே மழை பெய்யும்! (அவளுக்கு மழை போன்ற இயற்கை சக்திகள் மீதே கட்டுப்பாடு இருக்கும் அளவுக்கு சக்தி வந்து விடுமாம்)

உயர்வு நவிற்சி என்பதில் மட்டும் ஐயம் இல்லை (இது வரை மழை பெய்ய வைத்த பெண்களை யாரும் பார்த்ததில்லை என்றே நினைக்கிறேன்)!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 3 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Sat Sep 28, 2013 3:38 pm

#56
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

பெண் அல்லது மனைவிக்கு வரையறை கொடுக்கும் குறள்.

பெரிய ஒரு பட்டியலே கொடுக்கிறது இது, பார்க்கலாம்!

தற்காத்து
தன்னைக்காப்பாற்றிக்கொண்டு (உடல், உள்ளம், கற்பு என்று பல விதத்திலும் இதை உரைகள் விளக்குகின்றன)

தற்கொண்டாற் பேணி
தன்னைக்கொண்டவன் - அதாவது கணவன் - நலன்களைப்பேணி (அவனைக்கவனித்து, அவனையும் காத்து, அவனுடைய தேவைகளை நிறைவேற்றி என்று பல விதத்திலும் இதை விளக்குகிறார்கள்)

தகைசான்ற சொற்காத்து
இல்லறத்துக்கு நல்ல புகழ் தேடி (மேலும் இழுக்குச்சொல் வராமல் காத்து)

சோர்விலாள் பெண்
சோர்வு இல்லாமல் இருப்பவள் (உழைப்பவள்?) தான் பெண்!

திருக்குறளின் வரையறை என்னமோ எதிர்பார்ப்பு என்ற மட்டில் இருந்தாலும், பல வீடுகளிலும் இது நடைமுறையிலும் இருப்பது நாம் காண்கிற ஒன்றே! குறிப்பாகத் தமிழ்நாட்டில் பல பெண்களின் வாழ்க்கையும் இந்த வரையறையின் படி நடப்பது கண்டிப்பாகப் பெண் இனத்துக்குப் பெருமை தான்!

the clap the clap the clap

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 3 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Sep 30, 2013 5:13 pm

#57
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை


முன்காலங்களிலும் - ஏன் இப்போதும் கூட சில நாடுகளில் / பகுதிகளில் - பெண்களுக்கு இருந்த / இருக்கும் ஒரு நிலையை இந்தக்குறள் மூலம் உணர முடியும்.

"வேறு யாரோடும் அவள் உடலளவில் இணைந்து விடக்கூடாது" என்பதற்காக ஆடவர் அடைத்துப்பூட்டிப்பாதுகாத்தல்.

குறிப்பாக, அவளுடைய விருப்பம் இருந்தாலும் அப்படி ஒரு செயல் நடந்து விடக்கூடாது என்று அடைத்துப்பாதுகாப்பது. (விருப்பம் இல்லாமல் எதிரிகள் வந்து வன்முறை செய்வதைப்பற்றி இந்தக்குறள் சொல்லுவதில்லை).

மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை
நற்குணங்கள் கொண்டு தன்னைத்தான் சிறப்பாகக்காக்கும் மகளிருக்கு

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும்
சிறை போன்று அடைத்து வைத்துக்காப்பதன் தேவை என்ன?

இதற்கு எதிர்மறையாகவும் பொருள் கொள்ளலாம்.

அதாவது, நிறையான பண்பு இருந்து மகளிரைப் பாதுகாக்க வேண்டுமேயொழிய வெறுமென அவரை அடைத்து வைத்தெல்லாம் காக்க நினைப்பது வீண் Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 3 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Oct 01, 2013 4:34 pm

#58
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு


புதிய இரு சொற்கள் இந்தக்குறள் மூலம் இன்று படித்தேன்!

1. "புத்தேளிர்" = தேவர்கள்! (புத்தேள் = தெய்வம் என்று அகராதி சொல்லுகிறது). ஒரு வேளை தமிழைய்யா சொல்லிக்கொடுத்திருப்பார் - மறந்து போயாச்சு!

அப்படியாக, மீண்டும் ஒரு முறை வள்ளுவர் இந்த நிலத்துக்கு அப்பால் இருக்கும், அறிவுள்ள உயிர்கள் வசிக்கும், ஒரு வான் உலகு பற்றிக்குறிப்பிடுகிறார்!

2. "பெற்றான்" = கணவன்! (இது முன்னர் கேள்விப்பட்டதே இல்லை! பொதுவில் நாம் தகப்பன் என்றே பொருள் கொள்வோம் அல்லவா?)

இந்தப்"பெறுதல்" என்ற சொல் கொண்டு கொஞ்சம் விளையாட்டும் இருக்கிறது Smile

பெண்டிர் பெற்றாற் பெறின்
நல்ல கணவனைப் பெற்ற பெண்கள் (கணவனை நல்லபடியாக கவனித்துக்கொள்ளும் பெண்கள் என்றும் சில உரைகள் சொல்லுகின்றன - கணவனை வழிபடும் என்று சொல்லும் உரைகளும் உண்டு)

பெருஞ்சிறப்புப் பெறுவர் புத்தேளிர் வாழும் உலகு
தேவர்கள் வாழும் உலகிலும் பெருஞ்சிறப்புப் பெறுவார்கள்!

மேலுலகில் சென்று சிறப்புப்பெற வேண்டுமென்றால் இல்வாழ்வில் நல்ல துணைவன் தேவை என்று வள்ளுவர் சொல்லுகிறார் என்ற அளவில் புரிந்து கொள்ளலாம் Smile

(பெண்கள் வானுலகம் செல்லுவார்கள் என்ற வள்ளுவரின் நம்பிக்கையும் இதில் தெரிகிறது. அங்கு போய் அவர்கள் என்ன விதமான "பெருஞ்சிறப்பு" அடைவார்கள் என்பது குறளில் எங்காவது சொல்லி இருக்கிறதா தெரியவில்லை, பார்க்கலாம்! Wink  )

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 3 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Oct 02, 2013 4:34 pm

#59
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை


"ஏறு போல் நடை"  என்பது சிறு வயது முதலே சிங்கத்தோடு எப்படியோ எண்ணத்தில் சேர்த்து விட்டார்கள். (இந்தக்குறளின் உரையில் கூட அவ்வாறு பரிமேலழகர் குறிப்பிடுகிறார்).

என்றாலும் பின் காலங்களில் அது பொதுவில் காளை என்றே குறிக்கிறது என்பது புரிந்தது - குறிப்பாகக் காளை மாடு! ("ஏறு தழுவுதல்").

மஞ்சி விரட்டின் போது அந்தக்கொம்பன் நடக்கும் நடையின் மிடுக்கு - அட அட அட! சிங்க நடைக்குச் சற்றும் குறைந்ததல்ல.

அதே போல, "பீடு நடை" என்ற சொல் அடிக்கடி நாம் கேட்கும் ஒன்று. அதிலுள்ள, "பீடு" என்பது என்ன? பெருமை / பெருமிதம்.

இந்தக்குறளில், காளை போல மிடுக்குடன் பகைவர் முன் நடக்கும் பெருமிதத்தை ஒரு ஆண் இழக்கும் சூழல் சுட்டப்படுகிறது!

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு
புகழ் வாய்ந்த இல்லத்தாள் இல்லாதோருக்கு

இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை இல்லை
இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நிமிர்ந்து, மிடுக்குடன் நடக்க முடியாது!

Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 3 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Oct 03, 2013 5:49 pm

#60
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு


எல்லா சொற்களும் நன்கு தெரிந்தவை போல இருந்தாலும், இடத்துக்குத்தக்க பொருள் காண்பது அவ்வளவு எளிமையாக இல்லாததால் ஒவ்வொரு உரை ஆசிரியரும் ஒவ்வொரு மாதிரி விளக்குகிறார்கள் :-)

மங்கலம் = பொலிவு, நன்மை, சிறப்பு, சுபம்

மனை = வீடு, இல்லம், மனைவி

மாட்சி = சிறப்பு, நன்மை, நல்ல குணம்

இவற்றை இப்படியும் அப்படியும் மாற்றி மாற்றி உரை எழுத முடியும்.

என்றாலும், மனைவியைக்குறித்த அதிகாரம் - வாழ்க்கைத்துணைநலம் - என்ற அளவில் பார்க்கும்போது, மணக்குடவர் சொல்லும் பொருள் கூடுதல் ஒத்து வருவதாக எனக்குத்தோன்றுகிறது!
(பெண்ணியவாதிகள் வள்ளுவரை இதற்காகத் திட்டலாம்)...

மங்கலம் என்ப மனைமாட்சி
மனைவியின் நல்ல குணங்கள் (மாட்சி) இல்வாழ்வின் பொலிவு, நன்மை, சிறப்பு!

மற்று அதன் நன்கலம்
இதற்கும் மேல் அதற்கு அணிகலனாக விளங்குவது

நன்மக்கட் பேறு
நல்ல பிள்ளைகளைப் பெற்றெடுத்தல்!

இந்நிலை இன்று வரை தொடர்வதைக்காண முடியும்! (திருமணம் ஆன சில மாதங்களிலேயே, "ஏதாவது விசேடம் உண்டா?" என்று பெரியவர்கள் கேட்கத்தொடங்கி விடுவார்கள்!)
Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 3 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 40 Previous  1, 2, 3, 4 ... 21 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum