Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 7 of 40 Previous  1 ... 6, 7, 8 ... 23 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 7 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jan 29, 2014 6:33 pm

#128
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகாதாகி விடும்


நாவடக்கம் பற்றிய இன்னுமொரு குறள்!

"ஒரு குடம் பாலில் துளி நஞ்சு போல்" என்று மு.க. இதற்கு அழகாக உரை எழுதுகிறார்!

நிறைய நல்ல அறங்கள்  செய்பவரும் ஒரே ஒரு தகாத சொல் வழியாகத் தன் நற்பெயர் எல்லாம் இழப்பது எவ்வளவு துயரமான நிலை!

தீச்சொல் ஒன்றானும்
ஒரே ஒரு தீமையான சொல் தான் என்றாலும்

பொருட்பயன் உண்டாயின்
அதன் பொருட்டுத் தீய விளைவு உண்டாகும் என்றால்

நன்றாகாதாகி விடும்
(ஏற்கனவே செய்திருக்கும்) நன்மைகள் இல்லாமல் போய் விடும்!

நாவைச் சரியான விதத்தில் அடக்கியாள வேண்டியதன் தேவையை வள்ளுவர் மீண்டும் வலியுறுத்துவது கவனிக்கத்தக்க ஒன்று!

நேரடி வாழ்வில் நானே கண்ட உண்மை இது! எத்தனையோ உதவிகளும் நன்மைகளும் செய்தாலும் ஒரே ஒரு கடுஞ்சொல் வழியாக எல்லா மதிப்பையும் இழந்து போனவர்கள் உண்டு!

பைபிள் : சிறிதளவு நெருப்பு காட்டையே கொளுத்த வல்லது - நாவும் நெருப்புத்தான்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 7 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jan 30, 2014 8:39 pm

#129
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு


ஆறுவது / மாறுவது புண்.

மாறாமல் நிற்பது வடு.

இதை வைத்துக்கொண்டு வள்ளுவர் சொல் விளையாட்டு நடத்தி இருக்கும் குறள், பலருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்
தீ சுடுவதால் வரும் புண் உள்ளே ஆறிவிடும். (வெளியில் வடு எப்போதும் இருந்தாலும், உள்ளே வலி இருக்காது)

ஆறாதே நாவினாற் சுட்ட வடு
நாவில் இருந்து வரும் பேச்சால் பட்ட புண், உள்ளே இருந்து எப்போதும் வலித்துக்கொண்டே இருக்கும்! (மாறாத வடு போல).

ஆறிவிடும் தீச்சூட்டை வள்ளுவர் புண் என்றும் ஆறாத நாச்சூட்டை வடு என்றும் அடையாளப்படுத்துவது அழகு!

இந்தக்குறளையும் சேர்த்து மூன்று தொடர்ந்த செய்யுள்கள் நாவடக்கம் பற்றி வருவதையும் நாம் கவனிக்க வேண்டும்.

ஒரு விதத்தில் பார்த்தால், நாவினை அடக்க வேண்டி வள்ளுவர் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தும்  "தொப்பிச்சூது" Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 7 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jan 31, 2014 6:26 pm

#130
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து


இரண்டு புதிய சொற்கள் படிக்கிறேன் இந்தக்குறள் வழியாக!

கதம் = கோபம், சினம்
செவ்வி = காலம் (ஏற்ற காலம் / தக்க தருணம்)

என்ன அழகான சொற்கள்!

இவையெல்லாம் நாம் நாள்தோறும் பயன்படுத்தாமல் ஆங்கிலமோ வடமொழியோ கொண்டு இனிமை இழந்து திரிகிறோமே என்று  மெலிதான வருத்தம் வருகிறது Sad

கதங்காத்துக்கற்று
சினத்தை அடக்கி, கல்வியில் தேர்ந்து 

அடங்கல் ஆற்றுவான் செவ்வி
அடக்கம் என்னும் பண்போடு நடப்பவனைக் காணும் தக்க காலத்துக்காக

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து 
அறம் அவன் வரும் வழியில் நுழைந்து விழி வைத்துக்காத்திருக்கும்!

என்ன அழகான கவிதை!

அறத்தை இங்கு பெண்ணாக உருவகப்படுத்துகிறார் என்றே சொல்லலாம்!

அடக்கமுள்ளவனின் வழியில் அறமெனும் அழகி காத்திருப்பாள்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 7 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Feb 03, 2014 8:59 pm

#131
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
(அறத்துப்பால், ஒழுக்கமுடைமை அதிகாரம்)

ஒழுக்கம் என்றால் என்ன?

ஒழுகு என்ற சொல்லில் இருந்து வருகிறது. செல், நட என்று அதன் பொருள்.

அப்படியாக, "ஒழுக்கம்" = "நடப்பு / நடத்தை / நடக்கும் முறை".

பொதுவாக, நல்நடத்தை என்று கொள்ளலாம்!
(அதாவது, ஒழுக்கம் = நல்லொழுக்கம்! தீயொழுக்கம் என்று சொல்லாத வரை அது நல்ல நடத்தை என்றே பொருள் கொள்ளப்படும் Smile  ).

சரி, அப்போ விழுப்பம் என்றால்?

விழுமம் (சிறப்பு) என்றும் நன்மை என்றும் இரண்டு விதத்திலும் நேர்மறையான பொருள் தரும் ஒரு அழகிய சொல்!

ஒழுக்கம் விழுப்பந் தரலான்
ஒழுக்கம் (நல்ல நடத்தை) சிறப்பு (மற்றும் நன்மை) தருகிறது. எனவே,

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்
ஒழுக்கம் உயிரை விட மேலாகப் போற்றப்படும்!

"உயிரை விட மேலானது" என்று சொல்லுவதை விடக்கூடுதலாக  எதையும் உயர்த்திச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை!

அவ்வளவு உயர்ந்தது!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 7 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Feb 04, 2014 6:37 pm

#132
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை


பரிந்து என்பதற்குச் சில உரைகள் "வருந்தியும்" என்று சொல்லுகின்றன. நமக்கு நன்கு தெரிந்த பொருள் "சார்பாக(ப் பேசுதல்)" என்பதே.

"தேரினும்" என்பது நாள்தோறும் உள்ள உரையாடல்களில் அதிகம் வராத சொல் என்றாலும், "தேர்தல், தேர்ந்தெடுத்தல்" என்பவை நாம் அடிக்கடிப் பயன்படுத்தும் இணைச்சொற்கள் தாம்!

ஆக, இந்தக்குறளின் பொருள் கண்டுபிடித்தல் கடினம் ஒன்றுமில்லை!

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்
நல்ல நடத்தையை விரும்பிப்போற்றி வலியுறுத்திக் காத்துக்கொள்ள வேண்டும்!

தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை
(ஏனென்றால், பல வழிகளைத்) தேடித் தேர்ந்தெடுத்துப் புரிந்து போற்றினாலும், ஒழுக்கம் தான் நமக்குத்துணை!

மொத்தத்தில், ஒருத்தருக்கு இருக்கும் பல தெரிவுகளிலும் நல்நடத்தை என்பதே சிறந்த தேர்வு என்று சொல்கிறார் வள்ளுவர்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 7 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Feb 05, 2014 7:51 pm

#133
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்


குடிமை, இழிந்த பிறப்பு போன்ற பயன்பாடுகள் "வருண"த்தைத் தாங்குவதாகப் பரிமேலழகர் உரை சொல்லுவதைக் காணமுடியும். மற்ற உரைகளும் குலம் / குடிப்பிறப்பு என்கிற விதத்தில் செல்லுகின்றன.

வியப்பொன்றுமில்லை, வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இருந்த (சரி சரி , பெரிய அளவில் இன்றும் நடைமுறையிலும், அரசுப்படிவங்களிலும் இருக்கின்ற) பிறப்பு அடிப்படையிலான உயர்வு / இழிவு படுத்தல்கள் இந்தக்குறளில் எதிரொலிக்கின்றன என்று கொள்ளலாம்.

ஆதலினால், இந்தக்குறளை என் கருத்தைக்கொண்டு விளக்க முயலப்போவதில்லை. (அதாவது, பிறப்பால் அல்ல ஒருவர் உயர்வா இழிவா என்று சொல்வது, இறக்கையில் அவர் விட்டுச்செல்லும் பெயர் தான் கணக்கில் எடுக்கப்பட வேண்டும் என்பது என் கட்சி).

நேரடியான பொருள் மட்டும் பார்ப்போம்...


ஒழுக்கம் உடைமை குடிமை
நல்ல நடத்தை உள்ளவர் தான் உயர்ந்த குடியில் உள்ளவர்

இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்
ஒழுக்கம் தவறுவோர் இழிவான குடியில் பிறந்தவர்களாகி விடுவார்கள்

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 7 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Feb 06, 2014 7:34 pm

#134
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்


மணக்குடவர் அழகாகச் சொல்வது போல், கல்வியை விட ஒழுக்கம் உயர்ந்தது என்று வலியுறுத்தும் குறள் Smile

அப்படியாக, இது வேதம் ஓதும் கல்வி குறித்தது என்றாலும் ("ஓத்து = வேதம் கற்பிக்கும் இடம்" & "பார்ப்பான் = அந்தணன் / பிராமணன்") பெரிய அளவில் பார்த்தால் எல்லாக்கல்விக்கும் பொருந்தும்.

அந்த வழியாக, எல்லா மனிதருக்கும் ("வேதம் ஓத" என்று முற்காலங்களில் தனித்து அடையாளப்படுத்தப்பட்ட பார்ப்பனர் மட்டுமல்ல, அல்லாதோருக்கும்) கல்வி - ஒழுக்கம் பற்றிய ஒப்பீடு பொருத்தமானது. குறிப்பாக, இன்றைய சூழ்நிலையில்!

பார்ப்பான் மறப்பினும் ஓத்துக் கொளலாகும்
(படித்த வேதச்சொற்களை) ஓதுபவன் மறந்து போனாலும் மீண்டும் பள்ளியில் கற்றுக்கொள்ள இயலும்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
ஆனால், நடத்தை கெட்டுப்போனால் பிறப்புக்கே இழுக்காய் மாறும்!

நெறி தவறாமல் வாழுதல் கல்வியிலும் மேன்மையானது!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 7 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Feb 07, 2014 4:45 pm

#135
அழுக்காறுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கமிலான்கண் உயர்வு


அழுக்காறு - அந்தக்காலத்திலிருந்தே எனக்கு மிகவும் வேடிக்கையாகத் தோன்றும் ஒரு சொல் Smile

"பொறாமை" (அசூயை) என்று அதன் பொருள். "மனதில் அழுக்கு ஆறு போல் ஓடுகிறது" என்று அந்தச்சொல்லுக்கு விளக்கமோ என்னவோ Smile

மணக்குடவர் உரை அழுக்காறு என்பதை "மனக்கோட்டம்" என்று சொல்லுகிறது. அதுவும் அருமை தான் Smile

அந்த ஒரு சொல்லுக்குப் பொருள் தெரிந்தால் போதும் இந்தக்குறளை விளங்கிக்கொள்ள!

அழுக்காறுடையான்கண் ஆக்கம்போன்று
பொறாமை பிடித்தவனிடத்தில் எப்படி செல்வம் சேராதோ அது போல

ஒழுக்கமிலான்கண் உயர்வு இல்லை
நல்ல நடத்தை இல்லாதவனுக்கு வாழ்வில் உயர்ந்த நிலை இருக்கவே இருக்காது!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 7 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Feb 10, 2014 6:36 pm

#136
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கறிந்து


நிறைய அருஞ்சொற்கள் இருப்பதால், இந்தக்குறளைப் படிக்க முயற்சி தேவை Smile

முதலில் யார் இந்த "ஒல்கார்"?
ஒல்குதல் = தளர்தல், பின்வாங்குதல் என்று அகராதி சொல்கிறது. ஆகவே, "ஒழுக்கத்தின் ஒல்கார்"  = (ஒரு போதும்) ஒழுக்கத்தில் தளராதவர்.

அடுத்து, "ஏதம்" என்றால் என்ன?
ஏதம் = குற்றம், அப்படியாக ஏதம் படுதல் என்பது "குற்றத்துக்கு உள்ளாதல்" என்று பொருள் படும்.

இறுதியாக, என்ன அது "பாக்கு"? (கண்டிப்பாக வெற்றிலையோடு மெல்லுவது அல்ல)  
பாக்கு = எதிர்கால வினையெச்ச விகுதி என்று நிகண்டு சொல்லுகிறது. அவ்வளவே Smile

அப்படியாக, இந்தக்குறளின் பொருள்:

இழுக்கத்தின் ஏதம் படுபாக்கறிந்து
நல்ல நடத்தை இல்லாவிடில் குற்றத்துக்கு உள்ளாகிவிடும் அபாயம் இருப்பதை அறிந்து

உரவோர் ஒழுக்கத்தின் ஒல்கார்
(மன) உறுதியுடைவர்கள் ஒழுக்கத்தில் தளர / தவற மாட்டார்கள்!

குற்றம் வருமே என்ற அச்சத்தினாலாவது ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று இந்தக்குறள் சொல்லுவதாகவும் கொள்ளலாம் Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 7 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Feb 11, 2014 8:07 pm

#137
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி


"போகாத ஊருக்கு வழி" என்ற ஒரு சொல்லாடல் நாம் அடிக்கடி கேட்கும் ஒன்று. அந்தக்குரலில் ("எய்தாப் பழி") சொல்லப்பட்டுள்ள குறள் - பலருக்கும் நன்கு அறிமுகமான ஒரு செய்யுள் இது.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை
நல்ல நடத்தையால் மேன்மையை அடைவார்கள்!

இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி
தீய நடத்தையாலோ? வேண்டாத பழியையே அடைய நேரிடும்!

நேரடியாக, எளிதாகச் சொல்லப்படும் அறிவுரை!

"எதிர்மறை இரண்டடி" வகையான செய்யுள் என்பதன் அடிப்படையில், பழிக்கு "கீழ்மை" என்ற பொருளும் நாம் கற்றுக்கொள்ளுகிறோம் Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 7 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Feb 12, 2014 7:42 pm

#138
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்


நன்றி என்பதற்கு நன்மை, அறம் என்பனவோடு "நல்ல நிலைமையில் இருத்தல்" என்றும் அகராதி பொருள் சொல்லுகிறது. அது தான் இந்தக்குறளில் மிகவும் பொருத்தம் என்று தோன்றுகிறது.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்
நல்ல நடத்தை நன்மையான நிலைக்கு விதையாக இருக்கும் (அதாவது, நல்லொழுக்கம் நல்ல பலனை விளைவிக்கும்)

தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்
(அதற்கு மாறான) தீய நடத்தையோ, என்றுமே துன்பத்தையே தரும்!

"என்றும்" என்பதையும் இரு வழிகளில் விளக்குகிறார்கள்.

என்றுமே தீய நடத்தை துன்பத்தில் விளைவடையும் என்பது ஒன்று.

தீய நடத்தையால்  வரும் துன்பம் மாறாமல் என்றென்றும் நிற்கும் என்பது இன்னொன்று.

"விடாமல் பிடித்த துன்பம்" என்பது புற்றுநோய் போல, எய்ட்ஸ் போல நிலைத்து நிற்கும் ஒன்று என்று கொள்ளலாம்.

தீய நடத்தை இத்தகைய துன்பங்களுக்கான காரணம் என்பது பலரும் அறிந்ததே Sad

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 7 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Feb 13, 2014 6:58 pm

#139
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்


நாவை அடக்குவதைப்பற்றி மீண்டும் மீண்டும் வள்ளுவர் வலியுறுத்தியது நாம் முன்பே படித்த ஒன்று.

நல்ல நடத்தை குறித்த இந்த அதிகாரத்திலும் நல்ல பேச்சு ஏன் தேவை என எழுதுகிறார்!

தீய வழுக்கியும் வாயாற் சொலல்
தப்பித்தவறிக்கூட தீமையானவற்றைத் தம் வாயால் சொல்லுவது

ஒழுக்கமுடையவர்க்கு ஒல்லாவே
நல்நடத்தை உள்ளவர்களுக்கு இயலாது!
(ஒல்லுதல் = இயலுதல், ஒல்லாவே = முடியாதே)

நல்லொழுக்கம் ஒருவரது ஆளுமையை அந்த அளவுக்கு செம்மைப்படுத்தி இருப்பதால், தீய சொற்கள் அவரது வாயிலிருந்து வருவதற்கான வாய்ப்பே இல்லை!

எவ்வளவு உயர்ந்த ஒரு நிலை!

இங்கு நாம் "சிந்தனை - பேச்சு - செயல்" இவற்றுக்கிடையே உள்ள இணைப்பு எவ்வளவு வலிமையானது என்று மீண்டும் நினைவூட்டப் படுகிறோம்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 7 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Feb 14, 2014 6:11 pm

#140
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
கல்லார் அறிவிலாதார்


"இந்தியாவுலேயே, ஏன் , இந்த உலகத்திலேயே" என்று விளையாட்டாகச் சொல்லுவதை நாம் கேட்டிருக்கிறோம். அந்தச் சொல்லாடலை "உலகம்" என்ற சொல்லுக்கும் பொருத்தலாம்.

அதாவது, உலகத்திலேயே மிகக்குழப்பமாகப் பொருள் சொல்லப்படும் சொற்களில் ஒன்று "உலகம்" என்பது Smile

"உலகத்தோடு ஒட்ட ஒழுகல்" என்ற சொற்றொடருக்கு விதவிதமாய் உரை எழுதி இருப்பது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு Smile

கலைஞர்                : உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழ

மு.வ                      : உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறை

சாலமன் பாப்பையா : முந்திய அறநூல்கள் கூறியவற்றுள் இன்றைக்குப் பொருந்தாதவற்றை விலக்கியும், கூறாதனவற்றுள் பொருந்துவனவற்றை ஏற்றும் வாழ

பரிமேலழகர்           : உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல்

மணக்குடவர்           : உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை

வள்ளுவர் வெறுமென "உலகம்" என்று சொன்ன சொல்லுக்கு "உயர்ந்தோர், உலகத்து உயர்ந்தோர், அறநூல்கள்" என்றெல்லாம் கூட்டிச்சொல்லுவதை நாம் இங்கு காணலாம்.

உண்மையில் அவர் அப்படிக்கூட்டிச்சொன்னாரா என்பது கேள்விக்குரியது!

"உலகத்தோடு ஓட்ட ஒழுகல்" என்று படிக்கையில், "ஊரோடு ஒட்டி வாழ்" என்ற தமிழ்ப் பழமொழி , "ரோமில் உள்ள போது ரோமனாய் இரு" என்ற ஆங்கிலப்பழமொழி, "நாடு ஓடும் போது நடுவே ஓடு" என்ற மலையாளப் பழமொழி என்பனவே எனக்கு நினைவுக்கு வருகிறது!

அப்படிப்பார்த்தால், "நாம் வாழுமிடத்தில், பொதுவாக எல்லோரும் சரியென்று ஏற்றுக்கொண்ட வழி" என்றே இதை விளக்க வேண்டும். அது வேறு ஊரில், நாட்டில், குழுவில் ஒரு வேளை பொருந்தாத ஒன்றாக இருக்கலாம்.  (எ-டு : இந்தியாவில் இடப்புறம் வண்டி ஓட்டுதல் போல அல்ல அமெரிக்காவில், அங்கே வலது)

வேறு சொற்களில் சொன்னால், இது "குழு ஒழுக்கம்" மட்டுமே!
தனியான, கலப்படமில்லாத, தூய, முழுமையான, நிபந்தனையற்ற (ஆங்கிலத்தில் absolute / அப்சொல்யூட்) ஒழுக்கம் அல்ல!

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார்
தாம் வாழுமிடத்தில் பொதுவாக எல்லோரும் சரியென்று ஏற்றுக்கொண்ட வழியில் நடக்கப்படிக்காதவர்கள்

பல கற்றும் அறிவிலாதார்
நிறையப் படித்திருந்தாலும் அறிவு இல்லாதவர்களே!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 7 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Feb 17, 2014 7:34 pm

#141
பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்
(அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை அதிகாரம்)

"புனிதநூல்கள்" என வணக்கமுறைகள் கருதுவன வலியுறுத்தும் ஒன்று தான் பிறனில் விழையாமை!
 
இந்தியாவின் மிகப்பெரும் காப்பியங்களில் ஒன்றான ராமாயணத்தின் ஒரு முக்கிய இழை "பிறனில் விழைந்ததால் அழிந்த ராவணன்" என்பதாகும்.

இந்தியத்தொன்மையின் மற்ற நம்பிக்கைகளும் மனைவி கணவனுக்கு மட்டுமே உரியவள் என்று வலியுறுத்தி வந்திருக்கின்றன. (சொல்லப்போனால், முற்காலங்களில், கணவன் செத்துப்போனாலும் அவளுக்கு இன்னொருவனை மணக்க வழியில்லாமல் இருந்த இனங்கள் இந்தியாவில் உண்டு).

ஆபிரகாமின் வழித்தோன்றல்கள் பின்பற்றும் வணக்கமுறைகள் - யூதம் , கிறித்தவம், இசுலாம் எல்லாமே மூசா / மோசேயிடம் இறைவன் கொடுத்த சட்டங்களை, குறிப்பாக அதன் "பத்துக்கட்டளை"களை, மதிக்கின்றன.
அதில் பத்தாவது சொல்கிறது : "பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே; பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே".

வள்ளுவரும் அது போன்ற நெறி சொல்லும் அதிகாரம் எழுதியதை இத்தகைய சூழமைவில் புரிந்து கொள்ள வேண்டும். அல்லது, இரு பாலாருக்கும் இவை பொருந்தும் என்ற அளவிலும் எடுத்துக் கொள்ளலாம்.

பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை
அடுத்தவன் உடைமையாகிய (அவனது) மனைவியின் மீது விருப்பம் கொண்டு நடக்கும் மூடத்தனம்
(பெட்டு = விருப்பம்)

ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல்
மண்ணுலகில் அறம் குறித்தும் பொருள் குறித்தும் (கற்று) அறிந்தவர்களிடம் இருக்காது!

"இது ஒரு முட்டாள்தனம்" என்று தொடங்குகிறார் வள்ளுவர் Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 7 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Feb 18, 2014 8:14 pm

#142
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்


சென்ற குறளில் அறம் பொருள் அறிந்தவர் பற்றிச்சொன்ன வள்ளுவர், அந்தக்கூட்டத்தில் இல்லாதோர் பற்றி இந்தக்குறளில் சொல்கிறார்.

அதாவது, அறவழியில் செல்லாத தீயோர்.

அவர்களிலும் மிக முட்டாள்களாகத் திகழ்வோர் இந்தப் பிறன் மனை விழைபவர்கள் தான் என்கிறார்.
 
அறன்கடை நின்றாருள் எல்லாம்
அறவழியில் செல்வதை விட்டுவிட்டவர்கள் எல்லாரிலும்
(அதாவது தீய வழியில் செல்லுபவர்கள் எல்லாரிலும்; இங்கே "கடை நின்றார்" என்பது வழியை விட்டு விட்டவர்கள் என்று வருகிறது)

பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்
பிறன் மனைவியை நாடி அவர் வீட்டு வாசலில் நின்றவர்களை விடவும் மூடர்கள் இல்லை!
(இங்கு "கடை நின்றார்" என்பது வாசலில் கள்ளத்தனமாக நிற்பவன் என்று வருகிறது)

ஆக மொத்தம், கெட்டவரிலும் படு கெட்டவர்  / கேடு கெட்டவர்  பிறர் மனை விழைபவர் என்கிறது குறள்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 7 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Feb 19, 2014 7:56 pm

#143
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார்


விளிந்தார் என்றால் இறந்தவர் / செத்துப்போனவர் / பிணம் என்று பொருள்!

நல்லவன் என்று நம்பிக் கள்ளமில்லாமல் பழகுபவனுடைய மனைவியை அடைய நினைப்பவனுக்கு வள்ளுவர் தரும் பதவி இது தான் - "பிணமே அல்லாமல் வேறல்ல" எனபது!

"மன்ற" என்பதற்கும் "தெளிவாக" என்றே அகராதி பொருள் சொல்லுகிறது. அப்படியாக, "மன்ற தெளிந்தார்" என்பது ஒருபொருட்பன்மொழி என்று கொள்ளலாம். கள்ளமில்லாமல், தெளிந்த மனதுடன் என்றும் கொள்ளலாம்.

மன்ற தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார்
கள்ளமின்றித் தெளிந்த மனதுடன் நம்பிப் பழகுபவரின் இல்லத்தாளோடு தீய விதத்தில் உறவு கொள்ளுபவர்

விளிந்தாரின் வேறல்லர்
இறந்தவரே அன்றி வேறல்லர்!

"நீ இப்படி ஒரு அருவருப்பைச் செய்வதை விடச் செத்துப்போகலாம்"  என்று இத்தகைய தீயோரிடம் வள்ளுவர் அறிவுரை சொல்லுவதாக எடுத்துக்கொள்ளலாம்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 7 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Feb 21, 2014 6:29 pm

#144
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்


தேர்தல் என்றால் தெரிந்தெடுத்தல் என்று முன்னொரு குறளில் கண்டோம். இங்கு அதன் இன்னொரு பொருள் வருகிறது : "ஆராய்தல்" (அறிவில் நிறுத்துதல், சிந்தித்தல்)!

அவ்வண்ணம், "தேரான்" என்பவன், "பின்விளைவுகளைப் பற்றிச் சற்றும் சிந்திக்காத மூடன்" என்று ஆகிறான்!

தினைத்துணையும் தேரான் பிறனில் புகல்
தினையளவு கூட (இம்மியளவும்) சிந்திக்காமல் பிறன் இல்லத்துள் புகுந்தால் (அதாவது, பிறன் மனைவியை விழைந்தால்)

எனைத்துணையர் ஆயினும் என்னாம்
அத்தகையவர் எப்பேர்ப்பட்டவர் ஆயிருந்தாலும் என்னவாம்? (ஒன்றுமில்லை, உதவாக்கரை என்று பொருள்)

ஒரு ஆளிடம் என்னென்ன திறமைகள் / சிறப்புகள் எல்லாம் இருந்தாலும், பிறன் மனைவி பின்னால் சென்றால் அவன் ஒன்றுக்கும் உதவாத குப்பையாவான் என்று அடித்துச்சொல்லும் குறள்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 7 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Feb 24, 2014 7:37 pm

#145
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி

 
"இறப்பான்" என்ற சொல் கொஞ்சம் குழப்பியது.
 
எல்லா இடங்களிலும் அதற்கு "சாவான்" என்ற பொருளே இருப்பதால், இந்த "இல்  இறப்பான்" என்பது உரைகளில் "பிறன் மனைவியிடம் நெறி தவறி உறவு கொள்பவன்" என்று சொல்லப்படுவது சொல்லளவில் எப்படி சரியாகும் என்று சின்னக்குழப்பம்.
 
இந்த வலைத்தளம் கொஞ்சம் தெளிவு தருகிறது Smile
 

அருஞ்சொற் பொருள் :
இறப்பான் - நெறி தவறுவான்
விளியாது - இறவாது, மறையாது, அழியாது
 
'நெறி தவறுபவன்' செத்தவன் தானே Smile
 
'மற்றவன் மனைவியிடம் சென்று செத்துக்கிடக்கிறவன்' என்று வள்ளுவர் வெறுப்பை உமிழுவதாக எடுத்துக்கொள்ளலாம்!
 
எளிதென இல்லிறப்பான்
"இவளை அடைதல் எளிது" என்று பிறன் மனைவியிடம் நெறி தவறிச்செல்பவன் (சென்று கிடப்பவன்)
 

எஞ்ஞான்றும் விளியாது நிற்கும் பழி எய்தும்
எந்நாளும் அழியாமல் நிற்கும் பழியை அடைவான்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 7 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Feb 25, 2014 7:36 pm

#146
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்


சென்ற குறளில் வந்த அதே "இல்லிறப்பான்" மீண்டும் இந்தக்குறளில் வருகிறது Smile

"இகவா" என்ற அருஞ்சொல்லும் உண்டு. இக என்பதன் பொருள் "நீங்குதல்" என்று அகராதி சொல்வதால், இகவா = நீங்காத.

மற்றபடி எளிமையான, நேரடியான குறள் இது.

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
பகை, பாவம் (தீங்கு / தீமை), அச்சம், பழி எனப்படும் நான்கு கெடுதல்களும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்
பிறன் மனைவியிடம் நெறி தவறிச்செல்லுபவனை விட்டு நீங்கவே நீங்காது!

நடைமுறை வாழ்விலும் இது புரிந்து கொள்ளக்கடினமான ஒன்றல்ல. வெறுமென நாள்தோறும் செய்தித்தாளை மேலோட்டமாகப் பார்த்தாலே போதும்.

முறை தவறிய பாலுறவுகள் எப்படியெல்லாம் குடும்பங்களை சீரழிக்கின்றன, வன்முறைகளுக்கு வித்திடுகின்றன என்பது அப்பட்டம்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 7 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Feb 26, 2014 7:00 pm

#147
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்


நயத்தல் என்பதற்கு விரும்புதல் (சொல்லப்போனால் "ஏங்குதல்" ) என்று அகராதியில் பொருள்.
 
நேரடியாகப் பொருள் கொள்ளக்கூடிய ஒரு குறள்!

பிறனியலாள் பெண்மை நயவாதவன்
பிறன் மனைவியின் பெண்மைக்காக விரும்பி நடக்காதவன் (ஏங்கித்திரியாதவன்) தான் 

அறனியலான் இல்வாழ்வான் என்பான்
அறவழியில் இல்லறவாழ்வு நடத்துகிறவன் எனப்படுவான்!

ஆக, முற்காலத்தமிழரின் அறவழியில் உட்படும் கட்டளைகளில் ஒன்று "பிறன் மனைவியை விழையாதே".

மிகத்தெளிவாக இருக்கிறது!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 7 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Feb 27, 2014 4:27 pm

#148
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனென்றோ ஆன்ற வொழுக்கு


"ஆன்ற" என்பதற்கு இரண்டு விதத்தில் பொருள் சொல்கிறது அகராதி.

1. ஆல் = சால் = மாட்சிமை. (ஆன்றோர் / சான்றோர், மாட்சிமை வாய்ந்த, புகழ் பெற்ற பெரியோர்)
2. அகன்ற 

இரு விதத்திலும் பொருந்தும் பயன்பாடு தான் "ஆன்ற ஒழுக்கு" என்று இங்கே வள்ளுவர் சொல்லுவது. உயர்ந்த ஒழுக்கம் மற்றும் அகன்ற (அல்லது முழுமையான, விரிந்த) ஒழுக்கம்.

பிறன்மனை நோக்காத பேராண்மை
அடுத்தவன் மனைவியை தகாத விதத்தில் பார்க்கவும் செய்யாத பெருமையுள்ள ஆண்மை

சான்றோர்க்கு அறனென்றோ
சான்றோர்களுக்கு நன்மை மட்டுமல்ல

ஆன்ற வொழுக்கு
உயர்ந்த, அகன்ற வாழ்க்கை வழியுமாகும்!

"ஒரு பெண்ணைத் தகாத விதத்தில் வெறுமனே பார்ப்பதே அவளோடு தவறான உறவு கொள்ளுவதாகி விடும்" என்று ஏசு அவரது புகழ் பெற்ற மலைச்சொற்பொழிவில் சொல்லி இருப்பது வள்ளுவரின் "நோக்காத பேராண்மை" என்பதோடு ஒத்துப்போவதைக் காணலாம்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 7 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Feb 28, 2014 8:42 pm

#149
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயாதார்


"பிறற்குரியாள்" என்று சிலவும் "பிறர்க்குரியாள்" என்று சிலவும் குறிப்பிடுகின்றன.

எழுத்துக்கூட்டல் எப்படி இருந்தாலும் பொருள் ஒன்றே என்பதால் குழப்பமில்லை.

"நாம நீர்" என்பதை, "அச்சத்தைத்தரும் நீர்", அதாவது கடல் என அகராதி விளக்குகிறது.

நாமநீர் வைப்பின் நலக்குரியார் யாரெனின்
அச்சம் தரும் கடல் சூழ்ந்த உலகில் நன்மைக்குரியவர்கள் யாரென்றால்

பிறற்குரியாள் தோள்தோயாதார்
மற்றவனுக்குரியவளாகிய அவன் மனைவியின் தோளில் (தோய்ந்து) சேராதவர்களே!

"நன்மை வேண்டுமெனில் பிறன் மனை விழையாதீர்கள்" என்ற அறிவுரை தரும் குறள்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 7 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Mar 03, 2014 11:55 pm

#150
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று


வரைதல் என்றால் "தனக்குரியதாக்குதல்", "நேர்மையான வழியில் சம்பாதித்தல்" என்றெல்லாம் அகராதி சொல்லுகிறது.

இந்தக்குறளில் இரு இடங்களில் "வரை" வருகிறது.

அறன்வரையான் , பிறன்வரையாள்

பிறன்வரையாள் என்பதைப் "பிறனுக்கு உரியவள், அடுத்தவன் மனைவி" என்று எளிதில் புரிந்து கொள்ளலாம்.

ஆனால்; அறன்வரையான்? சொல்லில் பொருளின் அடிப்படையில் "அறத்தைத் தனக்குரியதாக்கியவன்" என்று கொள்ளலாம். "நன்மைகள் செய்து பெயர் ஈட்டியவன்" என்றும் கூட விளக்கலாம்.

என்ற போதிலும், இந்தக்குறளில் அப்படிப்பட்டவனுக்கு எதிர்நிலையில் உள்ளவனைப்பற்றித்தான் படிக்கிறோம். ("அறன்வரையான் அல்ல") Smile

அறன்வரையான் அல்ல செயினும்
ஒருவன் நன்மையல்லாதவற்றை மட்டுமே செய்பவன் என்றாலும்

பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று
பிறனுக்கு உரியவள் மீது விருப்பம் கொள்ளாதிருந்தால் அது அவனுக்கு நன்மையே!

"வேறு நன்மை ஒன்றும் செய்யாத நிலையிலும் பிறன் இல் விழையாதிருந்தால் அதுவே பெரிய நன்மை" என்று சொல்லுவதிலிருந்து இது எத்தகைய தீச்செயல் என்று குறள் கருதுகிறது என்பது  வெளிப்படை!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 7 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Mar 04, 2014 5:41 pm

#151
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
(அறத்துப்பால், இல்லறவியல், பொறையுடைமை அதிகாரம்)

"பொறுமை" என்ற பண்பை இல்லறவியலில் வைத்திருப்பதிலிருந்து வள்ளுவர் ஒரு குறும்புக்காரர் என்று தெரிகிறது Smile

இல்லறத்தில் பொறுமை காட்டாமல் வெளியில் மட்டும் பொறுமையின் சிகரமாக விளங்குவோர் கோடிக்கணக்கில் உண்டென்பது கசப்பான உண்மை Sad

அது ஒரு புறமிருக்க, இது பலருக்கும் நன்கு அறிமுகமான, எளிய  குறள்!

இங்கே நாம் வாழும் மண்ணுலகை உவமை ஆக்குகிறார் வள்ளுவர்!

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல
தன்னை வெட்டித் தோண்டுவரையும் தாங்கிச்சுமந்து கொண்டிருக்கும் நிலம் போல

தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை
தன்னை இகழ்வோரைப் பொறுத்துக்கொள்ளுதல் தலையாய பண்பாகும்!
(இகழ்தல் = ஏளனம் செய்து பேசுதல், நடத்தல்)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 7 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Mar 05, 2014 6:05 pm

#152
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று


"பொறுத்தல்" என்பது இந்தக்குறளில் "மன்னித்தல்" என்ற பொருளில் வருவதைக்காணலாம்.

"மற்றொருவர் நமக்குச்செய்யும் தீங்கிற்குத் திருப்பித்தீங்கு செய்யாமல் பொறுமை காத்தல்" என்பது "மன்னித்தல்" என்பதில் ஒரு பங்கு தான்.

"ஒரு நாளும் அதற்கு பதிலடி கொடுக்காமல் இருத்தல்" என்பது தான் "மன்னித்தல்" என்பதன் மேலான பங்கு!

சிலர் பொறுமையுடன் காத்திருப்பது, திருப்பி அடி கொடுக்கத் தக்க தருணம் நோக்கி  இருப்பதாக இருக்கலாம். அதை உண்மையான "பொறையுடைமை" என்று சொல்ல முடியாது Sad

இந்தக்கருத்தை அருமையாக வலியுறுத்தும் குறள் தான் இது!

இறப்பு என்பதற்கு "அளவு கடந்த தீங்கு" என்பதாக அகராதி பொருள் சொல்லுகிறது.

"நன்று" என்ற சொல்லை இரட்டித்துப் பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது.

பொறுத்தல் இறப்பினை என்றும் நன்று
மற்றவர் நமக்குச் செய்த கொடும் தீங்கைப் பொறுத்துக் கொள்ளுதல் என்றுமே நன்மையானது தான்!
("என்றென்றும் பொறுத்தல்" என்றும் கொள்ளலாம்)

அதனை மறத்தல் அதனினும் நன்று
அந்தத்தீங்கினை அறவே மறந்து விடுதல் அதை விடவும் நல்லதாகும்!

"மன்னிப்போம், மறப்போம்" என்பது பல மொழிகளிலும் புகழ் பெற்ற சொல்லாடல் Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 7 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 40 Previous  1 ... 6, 7, 8 ... 23 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum